பாங்கிற்கு முன் ஸலவாத்தும் பாங்கு துஆவும்

 மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-

மக்கள் சரியான வழிமுறைகளை தன் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்காகவே நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் என்ன, என்ன அமல்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை மிக அழகான முறையில் அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளான்.

“அந்த துாதர் இடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது. என்றும் அவர் கொண்டு வந்ததை பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்றும், அவர் (துாதர்) தடுத்ததை தவிர்ந்து கொள்ளுங்கள் என்றும் அல்லாஹ் கூறியுள்ளான்.

இந்த அடிப்படையில் மக்களை பள்ளிக்கு அழைப்பதற்காக நபியவர்கள் இந்த அதானை (பாங்கை) நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். ஒவ்வொரு பர்ளான தொழுகைக்காகவும் அதான் சொல்வது முக்கியமான சுன்னாவாகும்.

நபியவர்கள் காலத்தில் பிலால் (ரலி) அவர்களோ, அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்துாம் அவர்களோ, அதான் சொல்வதற்கு முன் ஸலவாத்தோ, அல்லது வேறு கலிமாக்களோ சொன்னது கிடையாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

பாங்கிற்கு முன் ஸலவாத் சொல்லக் கூடாது நபியவர்கள் அப்படி காட்டித் தரவில்லை என்று நாம் எடுத்துக் கூறும் போது நபியவர்கள் காலத்தில் சொல்லாவிட்டால் பராவாயில்லை, நாம் ஏன் சொல்லக் கூடாது?
சொன்னால் என்ன தப்பா? என்று கேள்வி கேட்க கூடிய நிலையை நாம் காண்கிறோம்.

நபியவர்கள் காட்டித்தராத எந்த செயல்பாடாக இருந்தாலும் அதை நாம் அமல்களாக செய்வோம் என்றால் அந்த அமல் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது மட்டுமல்ல, மறுமையில் அதற்கு தண்டனையும் கிடைக்கும் என்று இஸ்லாம் பல வழிகளில் நமக்கு எச்சரிப்பதை இறுதியில் எடுத்துக் காட்ட உள்ளேன்.

நபியவர்கள் கற்ற தந்த அதானின் வாசகங்கள்…

“அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார். (முஸ்லிம் 629)

மேலும் ‘ நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 628)

இந்த இரண்டு ஹதீஸ்கள் மூலம் பாங்குடைய ஆரம்பத்தையும், அதற்கான பதிலையும் எப்படி சொல்ல வேண்டும் என்பதை நபியவர்கள் மிக அழகாக நமக்கு தெளிவுப் படுத்துகிறார்கள்.

பாங்கிற்கு உரிய பதிலை சொல்லி விட்டு தான், நபியவர்கள் மீது ஸலவாத்து சொல்ல வேண்டும். அதன் பிறகு வஸீலா என்ற பாங்கு துஆவை ஓத வேண்டும். அப்படி செய்தால் அவருக்காக நபியவர்கள் மறுமை நாளில் ஷபாஅத் செய்வார்கள்.

எனவே முதலில் பாங்கை சொல்ல வேண்டும். இரண்டாவது முஅத்தின் சொல்வதைப் போல பதில் சொல்ல வேண்டும். மூன்றாவது பாங்கு துஆ ஓதுவதற்கு முன் நபியின் மீது ஸலவாத் சொல்ல வேண்டும். நான்காவது நபியவர்கள் கற்று தந்த பாங்கு துஆவை ஓத வேண்டும்.

பாங்கு (அதான்) துஆ…

،நாம் ஆரம்பத்தில் சொன்னதை போல மார்க்கம் என்பது நபியவர்களால் சொல்லித்தரப்பட்டதாகும். நபியவர்கள் சொல்லித்தராத எந்த ஒன்றையும் நாம் மார்க்கமாக செய்யக் கூடாது.

பாங்கு துஆ எப்படி ஓத வேண்டும் என்பதையும் நபியவர்கள் நமக்கு மிக அழகாக கற்றுத் தந்துள்ளார்கள். இருந்தாலும் அந்த பாங்கு துஆவிலும் நபியவர்கள் கற்றுத் தராத சில வாசகங்களையும் இடைச் செருகல் செய்துள்ளார்கள்.

முதலில் நபியவர்களால் கற்று தந்த பாங்கு துஆவை கவனியுங்கள்.

துஆ

 

اَللّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّة وَالصَّلاَةِ القَائِمَة آتِ مُحَمَّداً الوَسِيلَةَ وَالفَضِيْلَةَ وَابْعَثَهُ  مَقَاماً مَحْمُوداً الَّذِي وَعَدتَّه
இந்த துஆ வில் ஸையதினா என்ற வாசகமும், வத்தரஜத்த, ரபீfஅத்த, ஆலியத்த, ஷரீபத்த ஆகிய இந்த ஐந்து வாசகங்களும் ஹதீஸில் நபியவர்களால் சொல்லித் தரப்பட வில்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்

நபியவர்கள் சொல்லி தராத எந்த அமல்களும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது என்று சொல்லும் போது சொன்னால் என்ன தப்பா? என்று கேள்வி கேட்டு விதண்டா வாதம் புரிவதை காணலாம்.

நபியவர்கள் மார்க்கமாக கற்றுத்தந்த எந்த அமல்களிலும் நல்லது தானே என்று நாமாக எதையும் சேர்க்க கூடாது. அப்படி சேர்ப்பதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள் என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

“ நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்’ என்று என்னிடம் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்

நான் நபி(ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்’ என பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். பரஃ இப்னு ஆஸிப் ஹதீஸ் (புகாரி 247)

இந்த ஹதீஸில் அந்த தோழர் நபி என்ற சொல்லை எடுத்து விட்டு ரஸூல் என்ற சொல்லை சொன்னவுடன் நபி என்று சொல்லுங்கள் என்று நபியவர்கள் திருத்திக் கொடுப்பபதை காணலாம். எனவே மார்க்த்தில் சொல்லித்தரப்பட்டதில் நல்லது தானே என்று நாம் நினைத்த மாதிரி வாசகங்களை மாற்றக் கூடாது.

மார்க்கத்தில் சொல்லித்தரப்பட்டதை எவர் மாற்றுகிறாரோ அப்படி பட்டவர்களை பின் வரும் குர்ஆன் வசனம் கடுமையாக எச்சரிக்கின்றது.

“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33-36)

இந்த குர்ஆன் வசனத்தின் படி நபியவர்களால் சொல்லித்தரப்பட்ட பாங்கு துஆவை நாம் ஓதுகிறோமா அல்லது மக்களால் சில வாசகங்களை சேர்த்த பாங்கு துஆவை ஓதுகிறோமா என்பதை கவனியுங்கள். ஹதீஸில் உள்ளதை நாம் மிகத் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டோம். இதை எடுத்து நடப்பது அல்லது எடுத்து நடக்காமல் இருப்பது உங்கள் விருப்பம். நீங்களும் அல்லாஹ்வும் மறுமை நாளில் பார்த்துக் கொள்ளுங்கள்.
أحدث أقدم