‘நாங்கள் நபித்தோழர்களின் அந்தஸ்தை குறைக்காமலே, சமநிலையுடன் விமர்சிக்கிறோம்’ என்றொரு சிந்தனை வரலாற்றை வாசிக்கிறோம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகிறது. உண்மையில் இது தொடங்கிய காலத்தில் இருந்தே நபித்தோழர்களின் அரசியல் செயல்பாடுகளை விமர்சன கண்ணோட்டத்துடன் அணுகி குறை பேசிய ஒவ்வொரு நூதனச் சிந்தனையாளருக்கும் அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் தொடர்ந்து மறுப்புகளை முன்வைத்து வந்தார்கள். அவை அன்று வகுப்புவாத, பிரிவினை வாதக் கூட்டங்களை அல்லது வரம்பு மீறிய வார்த்தை மனிதர்களை அடையாளம் காட்டின. இன்றும் காட்டுகின்றன.
மறுப்பு - 1
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) கூறினார்கள்:
لا تذكرُ أَحَدًا مِن صحابة الرسول صلى الله عَلَيْهِ وَسَلَّمَ إِلا بخير
எந்த ஒரு நபித்தோழரைப்பற்றியும் நல்லதைத் தவிர எதையும் நாம் பேசமாட்டோம். (அல்ஃபிக்ஹுல் அக்பர், பக்: 43)
'நபித்தோழர்களின் விசயத்தில் நன்மையைத் தவிர வேறு எதையும் நாங்கள் பேச மாட்டோம்' என்று சொன்ன இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) ஏன் அப்படிச் சொன்னார்கள் என்பதைக் கீழே உள்ள கூற்று தெளிவுபடுத்தும்.
மறுப்பு - 2
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) கூறினார்கள்:
لا تتبرأ من أحدٍ مِنْ أَصْحَاب الرسول صل الله عَلَيْهِ وَسَلَّمَ وَلَا تُوَالِي أَحَدًا دُونَ أَحَدٍ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரை விட்டும் விலகிக்கொள்ளமாட்டோம். அவர்களில் ஒருவரை நேசித்து மற்றவரை விட்டுவிட மாட்டோம். (அனைவரையும் நேசிப்போம்.) (அல்ஃபிக்ஹுல் அப்சத், பக்:40)
நபித்தோழர்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களை விமர்சிக்கின்றவர்கள், தங்களின் அறிவுத் திறமையை நம்பியபடி குறைகளை அவர்கள்மீது வீசுகிறார்கள். இது அவர்களின் மீதான நேசத்தைக் குதறித்தள்ளி சமூகத்தில் வெறுப்பை வளர்க்கின்றது. இதற்குக் காரணமாக இருப்பவர்கள், 'எங்கள் நோக்கம் இதுவல்ல' என்று நியாயப்படுத்தினாலும், பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க மாட்டார்கள். அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் அன்றும் இன்றும் இதைத் தெளிவாகப் புரிந்து இருக்கிறார்கள்.
மறுப்பு - 3
இமாம் அஹ்மது (ரஹ்) கூறினார்கள்:
وَمِنَ السُّنَّةِ ذِكْرُ مَحَاسِنِ أَصْحَابِ رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلِّهُمْ أَجْمَعِينَ وَالْكَفُّ عَنْ ذِكْرِ مَسَاوِئِهِمْ وَالْخِلاَفِ الَّذِي شَجَرَ بَيْنَهُمْ فَمَنْ سَبَّ أَصْحَابَ رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ أَحَداً مِنْهُمْ فَهُوَ مُبْتَدِعٌ رَافِضِيٌّ خَبِيثٌ مُجْلِفٌ لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا ، وَلاَ عَدْلاً بَلْ حُبُّهُمْ سُنَّةٌ وَالدُّعَاءُ لَهُمْ قُرْبَةٌ وَالِاقْتِدَاءُ بِهِمْ وَسِيلَةٌ وَالأَخْذُ بِآثَارِهِمْ فَضِيلَةٌ) ثُمَّ قَالَ (ثُمَّ أَصْحَابُ رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الأَرْبَعَةِ خَيْرُ النَّاسِ وَلاَ يَجُوزُ لأَحَدٍ أَنْ يَذْكُرَ شَيْئًا من مَسَاوِئِهِمْ وَلاَ يَطْعُنُ عَلَى أَحَدٍ مِنْهُمْ بِعَيْبٍ وَلاَ بِنَقْصِ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ وَجَبَ عَلَى السُّلْطَانِ تَأْدِيبُهُ وَعُقُوبَتُهُ لَيْسَ لَهُ أَنْ يَعْفُوَ عَنْهُ)
நபித்தோழர்களில் எவரைப் பற்றி இருந்தாலும் அவரின் நற்பண்புகளையே பேச வேண்டும்; அவர்களைக் குறை காண்பது, அவர்களில் சிலரிடையே நடந்த விசயங்களை விமர்சிப்பது அனைத்திலிருந்தும் விலகியிருக்க வேண்டும். இதுதான் நபிவழி. ஒருவன் ஒரே ஒரு நபித்தோழரை ஏசினாலும், அவன் ஒரு பித்அத்வாதி, மோசக்காரன், மூர்க்கமான ராஃபிளீ (அதாவது, நபித்தோழர்களைத் திட்டுகின்ற ஷீஆக்களைச் சேர்ந்தவன்). அல்லாஹ் இவனுடைய எந்த நற்செயலையும் ஏற்கமாட்டான்..
உண்மையில், நபித்தோழர்களை நேசிப்பது நபிவழி – ஸுன்னா; அவர்களுக்காகப் பிரார்த்திப்பது அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத் தரும் நற்செயல் – குர்பா; அவர்களை முன்மாதிரிகளாகக் கொள்வது வெற்றிக்கு வழி – வசீலா; அவர்களின் நேர்வழியை எடுத்து நடப்பதே மேன்மை – ஃபளீலா.
... நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்களை அடுத்து நபித்தோழர்களில் அனைவருமே மிகச் சிறந்தவர்கள். அவர்களின் குறைகளை ஆராய்வதும், அவர்களைப் பற்றித் தீயதைப் பேசுவதும், அவர்களைக் குறை கூறுவதும் எவருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல. எவன் இப்படிச் செய்கிறானோ அவனைக் கடுமையாகக் கண்டித்து தண்டிப்பது ஆட்சியாளருக்குக் கட்டாயக் கடமை. அவன் மன்னிக்கப்படக் கூடாது. (இமாம் அஹ்மதின் கிதாபுஸ்ஸுன்னா, பக்:77-78)
நமது கலீஃபாக்கள் உஸ்மான் (ரலி) மற்றும் முஆவியா (ரலி) ஆகியோரை அரசியல் விமர்சனத்திற்கு உட்படுத்துகின்றவர்களும் அலீ (ரலி) அவர்களை இதில் வஞ்சகப் போக்குக் கொண்டவராகச் சித்தரிப்பவர்களும் மிக ஆபத்தானவர்கள். இவர்களை அடையாளம் கண்டு இவர்களுக்கு அல்லாஹ்வின் அச்சத்தைக் கொண்டு எச்சரிக்கை செய்வதும், இவர்களை மக்களிடம் சுட்டிக்காட்டி விலகிக்கொள்ளச் சொல்வதும் ஸுன்னாவை நேசிக்கும் அனைவரின் கடமையாக இருக்கிறது. எனவேதான், நமது இமாம்கள் மிகவும் கடுமையாக இவர்களை விமர்சிக்கிறார்கள்.
இவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாவின் பாதையிலிருந்து தடம்புரண்ட காரணம், தாங்கள் கொண்டிருக்கும் அரசியல் சிந்தனையை மக்களிடம் பரப்பத்தான்; அல்லது அவர்களின் அநீதியான முடிவுகளையும் நிலைப்பாடுகளையும் நியாயப்படுத்திக் கொள்ளத்தான். இதற்கான உத்திகளில் ஒன்றாக இவர்களின் மூளையில் உதிப்பதே இந்த விமர்சனப் புத்தி. இதில் தங்களின் அறிவுக் குறையை உணராமல், நபித்தோழர்களின் ஆட்சி முறையில் குறை கண்டு வெறுப்பை விதைப்பது எவ்வளவு கொடுமையானது! இதற்கும் இவர்கள் அக்காலத்தை நேரடியாகக் கண்டு ஆய்வு செய்கின்ற வாய்ப்பும் அற்றவர்கள்; தீர விசாரித்துத் தீர்ப்பளிக்கின்ற பொறுப்பும் கொடுக்கப்படாதவர்கள்; இருந்தும் இவர்கள் அந்த நல்லோர்களைச் சீண்டிக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு அசட்டுத்தனமான, மடத்தனமான தைரியம் இது!
இந்த விமர்சனத் தோரணைக்குத் தங்கள் நாவையும் எழுத்தையும் துணைக்கு இழுத்துக்கொள்ளும்படி அல்லாஹ்வின் கட்டளை இவர்களுக்கு இருக்கிறதா? ‘தனக்குத் தேவையற்ற விவகாரத்தைவிட்டு விலகிக்கொள்வது ஒருவரின் இஸ்லாமியப் பண்புகளில் உள்ளது’ என்ற நபிமொழிக்கு எதிராக இவர்கள் மிகத் தீய குணம் கொண்டவர்கள். இதைத் தாங்கள் பின்பற்றுவதோடு, மற்றவர்களிலும் தூண்டிவிட்டு நோயை வளர்க்கிறார்கள். இதன் விளைவைச் சமூகத்தில் பார்க்கும்போது ‘நாங்கள் இந்த எல்லையுடன் நின்றுகொண்டோம்; மற்றவர்களின் போக்குகள் விசயத்தில் நாங்கள் பொறுப்பல்ல’ என்று நழுவிக்கொள்கிறார்கள். இதுதான் பித்அத்வாதிகளின் அடையாளம். பித்அத்வாதிகள் ஒரு புதுமையான கொள்கையை, வழிபாட்டை அல்லது வழிமுறையை உருவாக்கிப் பரப்புரை செய்வார்கள். இவ்வுலகில் அது ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்; அவர்களுக்கு மறுமையில் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் பயப்பட மாட்டார்கள்.
மறுப்பு - 4
(قَالَ مَالِكُ بْنُ أَنَسٍ مَنْ تَنَقَّصَ أَحَداً مِنْ أَصْحَابِ رَسُوْلِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ كَانَ فِي قَلْبِهِ عَلَيْهِمْ غِلٌّ فَلَيْسَ لَهُ حَقٌّ فِي فَىْءِ الْمُسْلِمِينَ ثُمَّ تَلاَ قَوْلَهُ تَعَالَى (وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا)
இமாம் மாலிக் (ரஹ்) கூறினார்கள்: நபித்தோழர்களில் ஒருவரைப் பற்றி எவன் குறை பேசுகிறானோ, தன் உள்ளத்தில் அவர்கள் மீது குரோதம்கொள்கிறானோ, அவனுக்கு முஸ்லிம்களின் வெற்றிப்
பொருளில் (கனீமத்) எந்தப் பங்கும் இல்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ
எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் ‘எங்கள் இறைவனே! எங்களையும் மன்னித்திடு! எங்களுக்கு முன் நம்பிக்கைகொண்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்திடு! நம்பிக்கையாளர்களைப் பற்றி எங்கள் உள்ளங்களில் குரோதங்களை உண்டுபண்ணாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிகக் கருணையுடையவன்; இரக்கமுடையவன்’ என்று பிரார்த்தனை செய்தபடி இருக்கின்றனர். (குர்ஆன் 59:10) (அல்ஹில்யா 6/327)
இன்று நபித்தோழர்களை விமர்சிக்கின்ற எந்தக் கூட்டத்தினராக இருந்தாலும், அவர்கள் அதற்கு என்ன நியாயம் கற்பித்தாலும், அது இஸ்லாமியக் கொள்கைக்கும் ஒழுக்கத்திற்கும் எதிரானப் போக்கே. இமாம் மாலிக் (ரஹ்) தம்முடைய தீர்ப்பில் இவர்களுக்கு கனீமத் எனும் ஜிஹாதின் வெற்றிப் பொருளில் பங்கு இல்லை என்று சொன்னதின் மூலம் இவர்களைச் சமூகம் புறக்கணிக்க வேண்டும் என்கிறார்கள். எதற்காக இந்தப் புறக்கணிப்பு என்பதற்கு அல்லாஹ்வின் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். அதாவது, எங்களுக்கு முன்சென்ற நம்பிக்கையாளர்கள்மீது குரோதத்தை உண்டுபண்ணிவிடாதே என்ற பிரார்த்தனைக்கு எதிரானவர்கள் இந்த வெறுப்புப் பிரச்சாரகர்கள்.
நபித்தோழர்கள்மீது குரோதத்தைப் பரப்பும் இவர்கள் இச்சமூகத்திற்கே எதிரானவர்கள்; எவர்கள் வழியாக இந்த மார்க்கம் வந்துசேர்ந்ததோ, அவர்களையே விமர்சிப்பதின் மூலம் மறைமுகமாக இந்த மார்க்கத்தையே விமர்சிக்கின்றார்கள் இந்த எதிரிகள். ஒருவன் நபியை விமர்சித்துக்கொண்டே, நபியின் மார்க்கத்தை ஏற்றிருப்பதாகச் சொன்னால் எப்படி இருக்கும்? ஆனால், இங்கு நபித்தோழர்களை விமர்சித்துக்கொண்டே அவர்கள் வழியாக வந்த மார்க்கத்தை ஏற்பதாகப் பேசுகிறவருக்கு ஆதரவு தரப்படுகிறது. ‘விமர்சிக்கவும் செய்வோம்; அதே நேரம் அவர்களை நம்பிக்கைக்குரியவர்களாக ஏற்கவும் செய்கிறோம்’ என்று சொல்வது எவ்வளவு முரணானது? இது உண்மையில் இந்தச் சமூகத்தை வஞ்சிப்பது; ஏமாற்றுவது. இது ஒரு பெரிய மோசடித்தனம். ‘நமக்கு மோசடி செய்கின்றவன் நம்மைச் சேர்ந்தவன் அல்ல’ என்ற நபிமொழிப்படி, இந்த விமர்சனப் புத்திக்காரர்கள் நம்மிலிருந்து விலகியவர்கள். இவர்கள் பாவமன்னிப்புக் கேட்டு இந்தப் போக்கை விடாத வரை இவர்களைப் புறக்கணிப்பது முஸ்லிம்கள்மீது கடமையாகும். இஸ்லாமிய ஆட்சியாளர் தங்களுக்குப் போரில் கிடைத்த கனீமத்திலிருந்து ஒரு துளிப் பங்கையும் இவர்களுக்குத் தரக்கூடாது. மாறாக, தண்டிக்க வேண்டும்.
மறுப்பு - 5
நபித்தோழர்களின் குறைகளைத் தேடுவதே வழக்கமாகக்கொண்ட ஒரு மனிதரைப் பற்றி இமாம் மாலிக்கிடம் கூறப்பட்டது. அப்போது, அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்:
مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ
முஹம்மது, அல்லாஹ்வின் தூதர். (அவரும்) அவருடன் இருப்பவர்களும் நிராகரிப்பவர்கள் விசயத்தில் கண்டிப்பானவர்களாகவும், தங்களுக்குள் மிக்க அன்புடையவர்களாகவும் இருப்பார்கள். குனிந்து சிரம்பணிந்து வணங்குபவர்களாக அவர்களை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ்வின் அருளையும், அவனுடைய திருப்தியையும் (எந்நேரமும்) விரும்பியவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் சிரம்பணி(ந்து வணங்கு)வதின் அடையாளமிருக்கும். இதுவே தவ்றாத் (வேதத்)தில் அவர்களின் வர்ணிப்பு. இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது: ஒரு பயிரை ஒத்திருக்கின்றது. அப்பயிர் (பசுமையாகி) உறுதிப்படுகின்றது. பின்னர், அது தடித்துக் கனமாகின்றது. பின்னர், விவசாயிக்கு ஆச்சரியம் கொடுக்கும் விதத்தில் (வளர்ந்து), அது தன்னுடைய தண்டின்மீது நிமிர்ந்து நிற்கின்றது. நிராகரிப்பவர்களை இவர்கள் மூலம் கோபமூட்டும் பொருட்டு (இவ்வாறு அல்லாஹ் படிப்படியாக இவர்களை உருவாக்குகிறான்) (குர்ஆன் 48:29)
பின்னர் கூறினார்கள்:
எவன் நபித்தோழர்கள்மீது குரோதம் காட்டுகிறானோ அவனுக்குத்தான் இந்த வசனம் இறங்கியுள்ளது. (அல்ஹில்யா 6/327)
நபித்தோழர்களை விமர்சிக்கின்றவர்கள் வரலாற்று புத்தகங்களை ஆதாரம் காட்டுவார்கள். இங்கு அல்லாஹ் அவன் இறக்கிய முந்திய வேதங்களை ஆதாரம் காட்டி அவர்களை மெச்சிப் பேசுகின்றான்; போற்றுகின்றான். நபித்தோழர்களை அல்லாஹ் அணுகுவதற்கும் இந்த விமர்சகர்கள் அணுகுவதற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடு!
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின் ஒரு சில ஆண்டுகளில் நபித்தோழர்களின் உள்ளங்களில் மாற்றங்கள் வந்தன என்றும், அவர்களின் குறைகளைப் பேசுவது வரலாற்றில் இருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினைகள் என்றும் இந்த விமர்சனப் புத்தி கொண்ட வழிகேடர்கள் வாதம் செய்கிறார்கள். அல்லாஹ்வோ நபித்தோழர்களின் பிறப்புக்கும் முந்திய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பே அவர்களின் உயர்ந்த தன்மைகளையும் மார்க்கத்தில் அவர்களுக்கு இருக்கின்ற அந்தஸ்தையும் அவனது வேதங்களிலேயே பேசிவிட்டான். நபித்தோழர்கள் வழிதவறிவிடுவார்கள் என்றால் எல்லாக் காலங்களையும் அறிந்த அல்லாஹ் முந்திய வேதங்களிலேயே புகழ்ந்திருப்பானா?
- உஸ்தாத் MF அலீ