இறைநேசர் என்பது அவர்களின் உள்ளம் சம்பந்தப் பட்டது, ஒருவரின் வெளிப்புற தோற்றத்தை வைத்து யாரையும் இறை நேசர் என்று நம்மால் அறிய முடியாது.....
முஹம்மத் நபி சல் அவர்கள் யாரை இறைநேசர்கள் என்று நமக்கு அறிவித்து தந்தார்களோ அவர்களை தவிர வேறு யாரையும் நாம் இறைநேசர் என்று சொல்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தர்காக்கள் குறித்து கடுமையான எச்சரிக்கை செய்துள்ளனர். தர்காக்கள் இருக்கவே கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். அவ்வாறிருக்க இடிக்க வேண்டிய ஒன்றை ஸியாரத் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்களா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610,
அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் இறைவனின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873,
இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்னத் அல் ஹுமைதி
முதலில் தர்கா என்று கட்டுவதே இஸ்லாத்தில் கிடையாது, ஒரு மனிதர் இறந்து விட்டால் அவர் யாராக இருந்தாலும் பொதுவான மையவாடியில் அடக்கம் செய்வது தான் நபிவழி...
ஜியாரத் என்பது பொது மையவாடியில் தான் செய்ய மார்க்கம் சொல்லி தந்து இருக்கிறது, முஹம்மத் நபி சல் அவர்கள் கூட ஜன்னத்துல் பகீ என்ற பொது மையவாடிக்கே சென்று ஜியாறத் செய்து வந்துள்ளார்கள் ...
(ஆதாரம் : முஸ்லிம் 1619)
இன்றும் நாம் ஸியாரத் என்ற இந்த நபிவழியை நடை முறைப்படுத்துவதற்காக எந்த வெளியூருக்கும் போகத் தேவையில்லை. எந்த ஊராக இருந்தாலும் அங்கே நிச்சயம் பொதுவான அடக்கத்தலம் இருக்கத் தான் செய்யும். அங்கே போய் வந்தால் ஸியாரத் செய்த நன்மையைப் பெற்று விடலாம்.
அடக்கத்தலங்களை ஸியாரத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். அறிந்து கொள்க! இனிமேல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள்! ஏனெனில் அது மறுமையை நினைவு படுத்தும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: திர்மிதி 974
இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால் நல்லடியார்களின் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் எனக் கூறாமல் அடக்கத்தலங்களை ஸியாரத் செய்யுங்கள் என்று பொதுவாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே இந்த அனுமதி பொதுமக்கள் அடக்கப்பட்டுள்ள பொது அடக்கத்தலத்தையே குறிக்கிறது.
தர்கா எனும் கல்லறை கட்டுவதே இஸ்லாமிய மார்க்கத்தில் தடுக்கப் பட்டுள்ளது.