குர்’ஆன் ஓதக் கற்றுக் கொள்ளத் தொடங்கும்போது, மிகவும் சிரமமாகத் தோன்றும், பெரு முயற்சி எடுத்தாலும், குறைவாகவே பலன் இருப்பது போலிருக்கும். அதனால் தான் நம்மில் பலர் ஓதக் கற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடுகிறோம், அல்லது விட்டு விடுகிறோம்.
நமக்கு சோர்வு போனவுடன், மீண்டும் கற்றுக் கொள்ளத் தோன்றும், ஆனால் இன்னும் சில முயற்சிகளுக்குப்பின், மீண்டும் அதே சுழற்சி. அடிக்கடி நாம் தொடங்குவதும், விட்டு விடுவதுமாக இருக்கிறோம். அதனால், இந்த முயற்சிகளுக்குப்பின், முழுதும் கற்றுக் கொள்ளாமலும், முன்னேறாமலும் இருக்கிறோம்.
மிக உயர்ந்த நோக்கத்துடனும், உற்சாகத்துடனும், ஒருவர் குர்’ஆன் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். ‘கடைசியில், என்னால் அல்லாஹ்வுடைய சொற்களை ஓத முடியும், இன் ஷா அல்லாஹ்!’ என்பது உள்ளத்தில் இருக்கும் உறுதியான நம்பிக்கை. சில வார படிப்புகளுக்குப் பின்னும் அவரால் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை. குர்’ஆனுடைய ஒரு பக்கத்தைப் படிப்பது கூட அவரால் முடியாத காரியமாக இருக்கிறது. சொற்கள் ஏதோ சீன வார்த்தைகள் போல் கடினமாகத் தோன்றுகின்றன.
மெதுவாக, உற்சாகம் குன்றத் தொடங்குகிறது, நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்படுகிறது. இறுதியில், ஒரு மாதத்திற்குப் பின், அவர் விட்டு விடுகிறார். ஆனால், மீண்டும் மூன்று மாதங்களுக்குப்பின் தொடங்குகிறார், மீண்டும் ஒரு மாத போராட்டத்திற்குப் பின் விட்டு விடுகிறார். இந்த சுழற்சி சுமார் இரண்டு வருடங்கள் மீண்டும் மீண்டும் நடக்கிறது. அந்த இரு வருடங்களில், அவர் மொத்தம் ஆறு மாதங்கள் குர்’ஆன் ஓதக் கற்றுக் கொள்கிறார், ஆனாலும் ஒரு பக்கத்தைக் கூட அவரால் ஓத முடியவில்லை.
இப்போது, அவருடைய உறுதி முதல் முயற்சியில் முறியவில்லை. அவர் எத்தனை கடினமாக இருந்தாலும், தொடர்ந்தார். அவர் ஊசலாட்டம் இல்லாமல் தொடர்ந்து ஆறு மாதங்கள் படித்திருந்தால் என்ன நடந்திருக்கு என நினைக்கிறீர்கள்? அவருடைய எண்ணம் சரியானதாக இருந்திருந்தால், அவருக்கு கொஞ்சமாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், அல்லாஹ்வின் உதவியால் அவர் சரளமாக ஓதக்கூடியவராக இருந்திருப்பார்.
ஏன்? ஏனென்றால், ஒரு புதிதாக எதைக் கற்றுக் கொண்டாலும், மிகவும் சிரம்மானது முதல் கட்டம் தான். ஒரு குழந்தை தவழுவதற்கு சிறிது காலம் எடுத்துக் கொள்கிறது, ஆனால், அப்போதிலிருந்து, விரைவில் தானாக எழுந்து நிற்கவும், தன் இரு கால்களால் நடக்கவும், விரைவில் ஓடவும் கற்றுக் கொள்கிறது.
இந்த விதி எல்லாவிதமான இயக்கத்திற்கும் இது பொருந்தும் என்பதை இயற்பியல் மாணவர்கள் நன்றாக அறிவார்கள். எது ஒன்றையும் நகர வைப்பதற்குத் தான் மிகவும் அதிகமான சக்தி தேவைப்படுகிறது, நகர ஆரம்பித்த பிறகு, அதைத் தொடர்ந்து நகர வைப்பதற்கு நாம் அதிக முயற்சி எடுக்கத் தேவையிருக்காது.
ஆனால், அரபி படிக்கத் தொடங்கும்போது, இது நமக்கு நினைவிருக்கிறதா? நாம் அந்த முயற்சியில் இறங்கும்போது ஷைத்தான் மிகவும் சுறுசுறுப்பாகி விடுகிறான். அவனுக்கு வெறுப்பாக இருக்கிறது. உங்களை எப்படியாவது தடுப்பதற்கு வெறியாக முயல்கிறான். அவன் உங்களுக்கு அதை மிக சிரமமாகத் தோன்றும்படி செய்து, எல்லா நம்பிக்கைகளையும் இழக்க வைக்கிறான். அதனால் தான், குர்’ஆனை ஓதத்தொடங்குமுன், நாம் – ‘அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்’ என்று சொல்கிறோம்.
அல்லாஹ்வின் வேதத்தை ஓதுபவராக ஆகக்கூடிய பெரும் கௌரவமிக்க மிக அருமையான பரிசை பெற்றுள்ள நாம் அதற்கு நாம் தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
உங்களுடைய பொறுமை, நேர்மை, அர்ப்பணிப்பு இவற்றை நிரூபித்த பிறகு அது உங்களுக்கு கொடுக்கப்படும், உங்களுக்கு அது எளிதாக்கப்படும், ஏனென்றால், அல்லாஹ் (சுபஹ்) குர்’ஆனில் கூறுகிறான்: “நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?” [அல் குர்’ஆன் 54:17]