1 - பிறை விஷயம் இஜ்திஹாத் என்பது, ஆய்வில் மட்டும் தான்.
நடைமுறைப்படுத்துவதில் இல்லை.
2 - ஊர் பிறை மற்றும் சர்வதேச பிறை ஆகிய இரண்டில், எந்த ஒன்றையும் ஒரு பகுதியிலுள்ள அறிஞர்கள் ஆய்வு செய்து, தனித்து போகாமல் மக்களுடன் சேர்ந்து ஒரு நாளில் நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்களின் ஆய்வு சரியாக இருந்தால், இரண்டு மடங்கு நன்மை. தவறாக இருந்தால் ஒரு நன்மை.
3 - பிறை விஷயம் இஜ்திஹாத் என்பதற்காக, ஒரு பகுதியில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு மாற்றமாக தனித்து செயல்படுவது பாவமாகும். முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்திய குற்றமாக ஆகிவிடும்.
இங்கு நடைமுறைப்படுத்துவதில் இஜ்திஹாத் இல்லை.
4 - அதன் காரணமாக தான் முன்சென்ற நல்லோர்களின் காலத்தில் ஒரே ஊரில் இரண்டு, மூன்று பெருநாட்கள் இருந்ததில்லை.
சர்வதேச பிறையை சரிகாணும் அறிஞர்கள் கூட , நீங்கள் வாழும் பகுதியில் மக்கள் உங்கள் கருத்துக்கு உடன்படவில்லை என்றால், தனித்து போகாதீர்கள். மக்களுடன் சேர்ந்தே கொண்டாடுங்கள் என்கிறார்கள்.
5 - நோன்பையும், பெருநாளையும் நீங்கள் அனைவரும் கூட்டாக நிறைவேற்றுங்கள் என்ற நபி ஸல் அவர்களின் கட்டளையை நாம் பின்பற்ற வேண்டும்.
நம் பகுதியில் பெரும்பான்மையான மக்கள், உள்ளூர் பிறையை தான் பின்பற்றி வருகிறார்கள்.
6 - நம் பகுதியில், பிரிவினை ஏற்பட்டாலும் சர்வதேச பிறை நிலைபாட்டை அவசியம் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்பதற்கு, அது ஒன்றும் வாஜிபான அம்சம் இல்லை.
7 - மார்க்கம் என்றால், இரண்டு குர்ஆன் வசனங்கள், மூன்று ஹதீஸ்களை வைத்து பொது மக்களுக்கு என்ன தோனுகின்றதோ, அது தான் மார்க்கம் என்று விளங்க முற்படுவது தவறாகும்.
அல்லாஹ் கூறுகிறான்,
فَسْــئلوا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ
ஆகவே நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு(த் தெரிந்து)க் கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 16:43)
எனவே மார்க்கத்தின் அடிப்படைகளையும், விதிமுறைகளையும் அறிந்த மூத்த அறிஞர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்பட்டால் தான், மார்க்கத்தை சரியாக விளங்கிக் கொள்ள முடியும்.
8 - இஜ்திஹாத் சார்ந்த விஷயத்தில், ஒருவர் தனது ஆய்வை நடைமுறைப்படுத்தினால், முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினனையும், குழப்பமும் ஏற்படும் என்றால், அவர் தனது கருத்தை செயல்படுத்தாமல் விடுவது தான் நபிவழி மற்றும் மன்ஹஜ் ஸலஃப் ஆகும்.
9 - எனவே சர்வதேச பிறை நிலைபாடு ஆய்வு ரீதியாக சரியானதாக சிலருக்கு இருந்தாலும், அமல் ரீதியாக அதனை நடைமுறைப்படுத்துவது, முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினை உண்டாக்கிய பாவமாகும்.
10 - ஊர் பிறை நிலைபாட்டை சரிகாணும் முஸ்லிம்கள் தான், நம் பகுதியில் உள்ளனர். எனவே அவர்களோடு சேர்ந்து பெருநாளை கொண்டாடுவது தான் சரியான வழிமுறையாகும்.
அன்புடன்
ஹசன் அலி உமரி
15.4.2024