உலகமயமாக்கல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் உலகம் முழுதிலிருந்தும் அதிகமான செய்திகளை அறிந்து கொண்டிருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, உலக ஊடகங்கள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பற்றி சரியான ஒரு கண்ணோட்டத்தைத் தருவதில்லை. உண்மையைச் சொல்லப்போனால், சில சமயங்களில் நம்முடைய நடத்தையினாலேயே பல மாற்று மதத்தினவரும், ஏன் முஸ்லிம்களும் கூட விலகிச் செல்கிறார்கள்!
இருப்பினும், உண்மை என்னவென்றால், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களைப் பற்றி பல கேள்விகள் கேட்கப் படுகின்றன. சிலசமயங்களில், அக்கேள்விகளுக்கான பதிலை நாம் அறிவதில்லை. சில சமயங்களில், நாம் பதிலை அறிந்திருந்தாலும், அவற்றை சரியான வார்த்தைகளில் சொல்ல அறிவதில்லை. சில சமயங்களில் நாம் தவறான பதில்களைக் கொடுத்து விடுகிறோம். சில சமயங்களில், சரியான பதில்களை சொல்வோம், ஆனால் அதைத் தவறான முறையில் அளித்து விடுவோம்!
உங்களில், இஸ்லாமின் மிக அடிப்படையானவற்றை அறிந்துள்ளவர்கள், இஸ்லாத்தைப் பற்றிய எந்த கேள்விக்கும் பதில் சொல்வதற்கு ஒரு வரைபடமாக இக்கட்டுரை உதவும்.
1. உங்களுடைய நடத்தையில் கவனமாக.
அல்லாஹ் (சுபஹ்) மூஸா (அலை) அவர்களை சர்வாதிகாரியான, சிசுக்கொலை செய்த, நாடு முழுதையும் அடிமையாக்கியிருந்த மிகவும் மோசமான கொடுங்கோலனான ஃபிர்’அவ்னிடம் அனுப்பினான். இருப்பினும், அல்லாஹ் கூறினான்: “…… அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; ….[அல் குர்’ஆன் 20:44].
நீங்கள் ஒரு போதும், மூஸா (அலை) அளவிற்கு இருக்க முடியாது, நீங்கள் இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் நபர் ஃபிர்’அவுன் அளவிற்கு மோசமானவராகவும் இருக்க முடியாது. அதனால், மென்மையாக இருக்க வேண்டுமென்பதை மறக்காதீர்கள். குர்’ஆனில் உள்ள பல சூராக்களில் நல்லோர்களைப் பற்றி கூறப்பட்டுள்ள பல நற்குணங்களில் ஒன்று, அவர்கள் கோபத்தை விழுங்கிக் கொள்வார்கள் என்பது தான்.
ஃபிர்’அவ்னை விட வேறு எவரும் எரிச்சலூட்டுபவராக இருக்க முடியாது. அவன் மூஸா (அலை) அவர்களை கிண்டல் செய்தான், அல்லாஹ்வையும் கிண்டல் செய்தான், விசுவாசிகளையும் கிண்டல் செய்தான், இருப்பினும், மூஸா (அலை) தன்னுடைய நடத்தையை மறக்கவில்லை.
அல்லாஹ் (சுபஹ்) நபி (ஸல்) அவர்களிடம் கூறுகிறான், “அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;…” [அல் குர்’ஆன் 3:159]
நபி (ஸல்) அவர்கள் கடுமையாக இருந்திருந்தால், ஸஹாபாக்கள் (ரலி) அவரை விட்டு ஓடிப்போயிருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். தீய நடத்தை இருந்திருந்தால், மிகச் சிறந்த மனிதர்களிடம், அல்லாஹ்வின் தூதுச்செய்தியுடன் அனுப்பப்பட்ட மிகச் சிறந்த மனிதர் தோற்றிருப்பார்! அதனால், நம் நிலை என்ன என்று சிந்திக்க வேண்டும்.
2. அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் செய்யுங்கள்.
நம்மை நோக்கி ஒரு கேள்வி கேட்கப்படும்போது, நம் மனதில் பல எண்ணங்கள் தோன்றலாம். ஷைத்தான் நமக்கு கோபமூட்டலாம் அல்லது நம்முடைய நோக்கத்தை திசை திருப்பலாம். அவன் நம்மை கோபத்திலாழ்த்தி, கேள்வி கேட்டவர் விலகிப்போகும்படி செய்யலாம். அவன், நம்முடைய அறிவைக் காட்டிக் கொள்வதற்காக, தேவைக்கு அதிகமான செய்திகளை சொல்லி, உரையாடலை சம்பந்தமில்லாததாக ஆக்கிவிடக்கூடும். அதனால், த’வா முயற்சி கடினமாகி விடும்.
ஒருவர் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவுவதற்காக, அல்லாஹ்வுக்காக மட்டுமே பதில் சொல்வதாக, உங்களுக்கும், ஷைத்தானுக்கும் நினைவூட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்வதாக இருந்தால், நீங்கள் பகட்டாக காட்டிக் கொள்ள மாட்டீர்கள். ஒருவருக்கு அல்லாஹ் வழிகாட்ட வேண்டுமென்று விரும்பினால், கேள்வி கேட்டவரை கிண்டல் செய்யவோ, திட்டவோ, அவமதிக்கவோ மாட்டீர்கள்.
3. கேள்வி கேட்பவர் மேல் அனுதாபம் கொள்ளுங்கள்.
பல சமயங்களில், சிலருடைய கேள்வியை மக்கள் கிண்டல் செய்வதைப் பார்க்கலாம். மருத்துவ மாணவர்களாக எங்களுக்கு, ‘முட்டாள்தனமான கேள்வி எதுவும் இல்லை’ என்று சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. அது இஸ்லாத்திற்கும் பொருந்தும்.
பெரும்பாலும், இஸ்லாத்தைப் பற்றி கேள்வி கேட்பவருக்கு இஸ்லாம் என்றால் எந்ன என்று தெரியாது. அவர்கள் கேட்கும் கேள்விகள், மடத்தனமாகவும், தர்மசங்கடமாகவும், வினோதமாகவும், தோன்றலாம். ஆனால், முஸ்லிம்களாகிய நாம், ஒரு கேள்விக்கு எதிர்மறையாக நடந்து கொள்ளக்கூடாது. கேள்வி மோசமான வார்த்தைகளைக் கொண்டதாகவோ, கடுமையானதாகவோ கேள்வி கேட்டவர் மீது அனுதாபத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவருக்கு சந்தர்ப்பம் கொடுத்து, நம்மால் முடிந்த அளவு சிறந்த பதிலைத்தர வேண்டும். அல்லாஹ் (சுபஹ்) நமக்கு அழகிய தீனை அருளியுள்ளான். அதன் அழகை நம்முடைய குணம் மற்றும் நடத்தையின் மூலம் அதை வெளிப்படுத்துவோம்!
4. அவர்கள் முடிக்கும் வரை கவனமாகக் கேளுங்கள்.
கவனமின்றி கேட்பதைப் பற்றி நான் பல முறை உறுத்தலாக உணர்ந்திருக்கிறேன். கேள்வி கேட்பவரை குறுக்கிடாமல் அல்லது அவர்கள் முடிப்பதற்கு முன் பதில் சொல்லத் தொடங்காமல் கவனமாக அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பது எப்போதும் நினைவிருக்கட்டும்.
நபி (ஸல்) அவர்களுடைய குணநலன்களில் ஒன்று, யாராவது பேசும்போது அவர்கள் குறிக்கிட மாட்டார்கள். நிராகரிப்பாளர்கள் வந்து அவரிடம் மோசமான விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பார்கள், இருப்பினும் அவர்கள் கவனமாகக் கேட்டு அவர்கள் சொல்வதை முடித்த பின் தான் பதில் சொல்வார்கள். எப்போதும் கவனமாகக் கேளுங்கள்; இது கேள்வி கேட்பவருக்கு உண்மையிலேயே நீங்கள் அக்கறையுடன் கேட்கிறீர்கள் என்ற உணர்வையும் அவர்களுக்கு ஒழுங்காக பதில் சொல்ல விரும்புகிறீர்கள் என்பதையும் உணர்த்தும். மேலும், அவர்களுக்கு சுமுகமான ஒரு உணர்வையும் தரும்.
5. உங்களுடைய தான் என்ற அகங்காரத்தையும் அடக்கி வையுங்கள்
இன வாதம் அல்லது இஸ்லாமிய அச்சத்தை வெளிப்படுத்தும் கருத்துக்களை பேசும் மக்கள் இருக்கக்கூடும். இன்னும் சிலர் நபி (ஸல்) அவர்கள் அல்லது குர்’ஆனை அவமதிக்கக்கூடும். சிலர் முஸ்லிம் பெண்களைப்பற்றி கடுமையாக விமரிசிப்பவர்களாக இருக்கலாம். இன்னும் இது போல பலவிதமான மக்கள் இருப்பார்கள்.
இம்மாதிரி சமயங்களில் கடுமையாகவோ, தற்காப்பு எண்ணத்துடனோ நடந்து கொள்ளத் தோன்றும். இது நாம் இன்னும் நம்முடைய நம்பிக்கையை வெகுவாக மதிக்கிறோம் என்பதற்கு சான்று. இருப்பினும், நம்முடைய அகந்தையை அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நினைவிருக்க வேண்டும். நம்மை அவர்கள் புண்படுத்தினார்கள் என்பதற்காக நாம் அவர்களை தாழ்வாக நினைக்கவோ, புரக்கணிக்கவோ கூடாது.
அவர்களுடைய நடத்தையை நாம் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும், அவர்கள் என்ன சொன்னாலும், அவர்களை அல்லாஹ்வின் பக்கம் சரியான முறையில் அழைக்க வேண்டுமென்பதை நினைவு வைத்திருக்க வேண்டும். இதை மூஸா (அலை) மற்றும் ஃபிர்’அவ்னுடைய உரையாடலில் காணலாம் – ஃபிர்’அவ்ன் தனிப்பட்ட முறையில் மூஸா (அலை) அவர்களைத் தாக்கியதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவனை அல்லாஹ்வின் பக்கம் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார்.
6. அல்லாஹ்வைப் பற்றியும், நம்முடைய தீனின் அடிப்படைகள் பற்றியும் பேசத் தொடங்குங்கள்.
நம்முடைய த’வாவின் பெரும் பிரச்சினைகளில் ஒன்று, கேள்விகளைச் சந்திக்கும்போது நம்முடைய கவனம் சிதறிவிடக்கூடும். ஹிஜாபைப் பற்றி யாராவது கேட்கும்போது, அது எப்படி “பெண்களைப் பாதுகாக்கிறது” அல்லது அது “அவர்களுடைய தேர்ந்தெடுக்கும் உரிமை” என்றெல்லாம் பொரிந்து கொட்ட ஆரம்பித்து விடுகிறோம். யாராவது இஸ்லாமிய சட்டத்தைப் பற்றி பேசினால், அது எப்படி நீதியானது, சரியானது என்பது போன்ற விஷயங்களைப் பேசுகிறோம்.
நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று, இஸ்லாம் முழுதும் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பது தான். ஒருவர் அதைப் புரிந்து கொள்ளாதவரை, எது பேசினாலும் அதில் அர்த்தம் இருக்காது.
ஒருவர் இஸ்லாத்தைப் பற்றி என்ன கேள்வி கேட்டாலும், நாம் முதலில் கேட்க வேண்டியது, “நான் உங்கள் கேள்விக்கு வருகிறேன், அதற்கு முன்னால், இஸ்லாத்தின் அடிப்படைகளை உங்களுக்கு நான் விளக்கலாமா?” என்பது தான். இது இஸ்லாத்தைப் பற்றிய உலகப் பார்வையை அவர்களுக்கு விளக்க நமக்கு ஒரு வாய்ப்பு. மக்கள் பல்வேறு பின்ணணியிலிருந்து வருகிறார்கள். பின் வருபவற்றின் அடிப்படையில் தான் முதலில் எந்த பதிலும் இருக்க வேண்டும்.”
a. அல்லாஹ்(சுபஹ்) வைப் பற்றி விளக்குங்கள், பிறகு அவன் தான் படைத்தவன் என்றும், இறுதியாக, அவன் படைத்தவன் என்பதால், அவனுக்கு மட்டுமே சட்டங்கள் இயற்ற முடியும், அல்லது மனித வாழ்வுக்கான நிபந்தனைகளை விதிக்க முடியும் என்று விளக்குங்கள்.
b. அல்லாஹ்(சுபஹ்) வை நெருங்குவது தான் மனித வாழ்வின் இறுதி லட்சியம், மேலும், முஸ்லிம்களாகிய நாம் செய்பவை அனைத்தும் அல்லாஹ்(சுபஹ்) அவ்வாறு செய்யும்படி கட்டளையிட்டிருப்பதால் என்றும் விளக்குங்கள்.
c. அல்லாஹ்(சுபஹ்)வுடைய கட்டளைகளும், தடுத்தவைகளும் குர்’ஆனிலும், நபி (ஸல்) அவர்களுடைய வாக்குகளின் வழியாகவும் நம்மிடம் உள்ளன என்று விளக்குங்கள்.
முதலில் நாம் இந்த அடிப்படையை அமைக்கா விட்டால், வேறெதெற்கும் தர்க்கரீதியான பதில் அளிப்பது முடியாத காரியமாகிவிடும். ஒருவர் இந்த கொள்கைகளைப் புரிந்து கொண்டபின், நாம் அவருடைய முதல் கேள்விக்கு பதிலளிக்க தொடங்கலாம்.
7. “எனக்குத் தெரியாது” என்று சொல்ல கற்றுக் கொள்ளுங்கள்
ஆனால், முதல் கேள்விக்கு பதில் தெரியாவிட்டால் நாம் என்ன செய்வது? எனக்குத் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். இந்த கொள்கைகளை விளக்குவதன் முக்கியத்துவம் என்னவென்றால், இது கேள்வி கேட்டவருக்கு இஸ்லாத்தைப் பற்றி கொஞ்சமாவது புரிய வைக்க உதவுகிறது.
எல்லாவற்றிற்கும் நமக்கு பதில் தெரியாது, ஆனால், நாம் அல்லாஹ் என்றால் யார் என்றும், இஸ்லாத்தின் அடிப்படையையும் விளக்க முடியும். தெரியாதவற்றை தெரியாது என்று தயங்காமல் சொல்ல வேண்டும்.
அல்லது, “உங்களுடைய கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது, ஆனால், இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படையான விஷயங்களை உங்களுக்கு நான் தர முடியும். உங்களுடைய கேள்விக்கு பிறகு வருகிறேன், சரி தானே?” என்று கேட்கலாம்.
இமாம் மாலில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், “’எனக்குத் தெரியாது என்று சொல்வது பாதி அறிவு’ என்று கூறினார்கள். மேலும், பொய் சொல்வது பாவம், அதிலும், மார்க்க விஷயத்தில் பொய் சொல்வது இன்னும் மோசமானது!
அல்லாஹ் (சுபஹ்) உங்கள் மூலமாக பலருக்கும் வழி காட்டி, நம்முடைய மார்க்கம் எதிர்பார்க்கும் தரத்தில் ஒரு சமுதாயமாக வாழ வைப்பானாக. ஆமீன்.