ஷைத்தான் சாராயக்கடை, கள்ளுக்கடை, விபச்சாரம் போன்ற பெரிய பாரதூரமான விசயங்களை வைத்துத் தான் கெடுப்பான் என்று சொல்லமுடியாது. சின்ன விசயத்தில் கூட நம்மை கெடுப்பதற்கு ஆற்றல் பெற்றவன்.
சாப்பிடும்போது கூட நம்மிடம் ஷைத்தான் நுழைந்து விடுகிறான். உணவைப் பார்த்தவுடனே பாய்ந்து எடுத்துச் சாப்பிட வேண்டும் என்கிற புத்தி எல்லா மனிதரிடத்தில் இருந்தாலும் ஒரு முஸ்லிம்
அப்படி பொறுமையில்லாமல் அவசரப்பட்டு பிஸ்மில்லாஹ் சொல்லாமல் சாப்பிடக் கூடாது. அவசரப்பட்டு பிஸ்மில்லாஹ் சொல்லாமல் சாப்பிட்டு விட்டால் அந்த உணவை ஷைத்தான் தனதாக்கிக் கொள்கிறான்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு
அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்க மாட்டோம். ஒரு முறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன்
அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளி விடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப் போனாள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவரைப் போன்று (விரைந்துவந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள். அப்போது, "அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து) விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து) விட்டேன். என்உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக் கொண்டது'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)
நூல் : முஸ்லிம் 4105
வீட்டில் ஷைத்தானைத் தங்க வைக்க வேண்டாம் !!
அதே போன்று ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லவில்லையானால் அவருடைய வீட்டில் ஷைத்தான் தனக்கும் தனது கூட்டாளிகளுக்கும் தங்குவதற்கு இடம் பிடித்துக் கொள்கிறான். மேலும் அவரே சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் சொல்லவில்லையெனில் அவரிடத்திலேயே தனக்கும் தனது வகையறாக்களுக்கும் உணவைப் பரிமாறிக் கொள்கிறான்.
இதுவெல்லாம் ஷைத்தான் நம்மை வீழ்த்துவதற்கான வழிமுறைகள். எனவே நாம் வீட்டில் நுழையும் போதெல்லாம் பிஸ்மில்லாஹ் சொல்லி நுழைந்தால் ஷைத்தான் நம்மிடம் தோற்று விடுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை'' என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூறாவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்து விட்டது'' என்று சொல்கிறான்.
அவர் உணவு உண்ணும் போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்து கொண்டீர்கள்'' என்று சொல்கிறான்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 4106
இடக்கையால் உண்ண வேண்டாம் !!
இன்னும் சாப்பாட்டில் ஷைத்தான் நம்மைப் பல்வேறு வகையில் கெடுக்கிறான். அதாவது நாம் ஷைத்தானை வெற்றி பெறச் செய்கிறோம்.
ஒருவர் இடது கையால் உண்டால் அவரும் ஷைத்தான் செயலைச் செய்து ஷைத்தானின் வெற்றிக்குத் துணை நிற்கிறார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இடக்கையால் உண்ணாதீர்கள். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால் தான் உண்கிறான்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 4107
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக் கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக் கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால் தான் உண்கிறான்; இடக்கையால் தான் பருகுகிறான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம் 4108,4109
சிந்தாமல் சிதறாமல்.
உணவு உண்ணும் போது உணவைக் கீழே சிந்தாமல் சாப்பிட வேண்டும். நம்மையும் அறியாமல் சாப்பிட்டதில் சிறிதளவு கீழே விழுந்தாலும்
அதைச் சுத்தப்படுத்தி சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையெனில் ஷைத்தான் அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான்.
ஷைத்தான் நம்மைப் பெரிய விசயங்களில் நேரடியாகத் தள்ளிவிட மாட்டான். மேலும் சாப்பிட்டு முடித்தவுடன் அப்படியே கையைக் கழுவி விடாமல் தனது கைவிரலைச் சூப்பிவிடுவதின் மூலம் ஷைத்தானுக்கு விட்டுவிடாமலும் இருக்கலாம். அதே நேரத்தில் இறைவனின் அருளையும் பெறமுடியும். இந்த விசயங்களில் நாம் பேணிக்கையாக இல்லையெனில், ஆரம்பத்தில் இதுபோன்ற சின்ன சின்னச் விசயங்களில் நம்மைச் சருகச் செய்து பிறகு மொத்தமாக ஒரேயடியாக நம்மை வீழ்த்திவிடுவான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கிறான். மனிதன் உணவு உண்ணும் போதும் அவன் பங்கேற்கிறான். (உண்ணும் போது) உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக் கவளம் கீழே விழுந்துவிட்டால், அதில் படுவதை சுத்தப்படுத்திவிட்டு, பிறகு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். உண்டு முடித்ததும் அவர் தம் விரல்களை உறிஞ்சிக் கொள்ளட்டும். ஏனெனில், அவரது எந்த உணவில் வளம் (பரக்கத்) இருக்கும் என்பதை அவர் அறிய மாட்டார்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்