முன்மாதிரி முஸ்லிம்


ஆசிரியர் : முஹம்மது அலீ அல் ஹாஷிமி, ரியாத், 

தமிழில் : தாருல் ஹுதா.


உள்ளடக்கம்:

பதிப்புரை

முஸ்லிம் தனது இரட்சகனுடன்

முஸ்லிம் தனது நஃப்ஸுடன்

முஸ்லிம் தனது பெற்றோருடன்

முஸ்லிம் தனது மனைவியுடன்

முஸ்லிம் தனது பிள்ளைகளுடன்

முஸ்லிம் தனது உறவினர், இரத்த பந்துக்களுடன்

முஸ்லிம் தனது அண்டை வீட்டாருடன்

முஸ்லிம் தனது சகோதரர்கள், நண்பர்களுடன்

முஸ்லிம் தனது சமூகத்துடன்

முடிவுரை


பதிப்புரை

இஸ்லாம் ஓர் இறைமார்க்கமாகும். ஏகத்துவம் இதன் அடிப்படையாகும். வணக்க வழிபாடுகளும், சமூக நற்பண்புகளும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உலக மதங்களில் கூறப்பட்டுள்ள நன்மைகள் அனைத்தும் முழுமையாக இஸ்லாமில் கூறப்பட்டுள்ளன. மனிதனின் வாழ்க்கைக்கு அவசியமான எந்தவொரு வழிகாட்டுதலையும் இஸ்லாம் விட்டுவிடவில்லை.

இஸ்லாமின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இம்மார்க்கத்தை தனது வாழ்வில் கடைப்பிடித்ததுடன் இதைப் பின்பற்றும் ஒரு சிறந்த சமுதாயத்தையும் உருவாக்கிக் காண்பித்தார்கள். அச்சமுதாயம், வாழ்வின் எல்லா நிலைகளிலும் இஸ்லாம் ஒன்றையே தனக்கு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரி சமுதாயமாக விளங்கியது. மேலும், தங்களுக்கு ஏற்பட்ட எல்லா நிகழ்வுகளுக்கும் இஸ்லாம் ஒன்றையே தீர்வாகக் கண்டது. அவர்களது தனிமனித வாழ்விலும், சமுதாய வாழ்விலும், அவர்களது அரசாங்கத்திலும் இஸ்லாம் ஒன்றே ஆட்சி செய்தது.

படிப்பறிவில்லாமல் கால்நடை மேய்ப்பவர்களாக, வியாபாரிகளாக, விவசாயம் செய்பவர்களாக இருந்த ஒரு சமுதாயம் உலகத்தை ஆட்சி செய்து, உலக மக்களுக்கு பகுத்தறிவு என்ற பிரகாசத்தை வழங்கி நேர்வழி காட்டியது. அந்தச் சமுதாயம் முன்னேற்றமடைய காரணம் அது பின்பற்றிய இஸ்லாம் ஒன்றே என்பதைச் சிந்திப்போர் அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் நாடாமல் எவரும் நன்மை செய்ய முடியாது. நமது சமுதாயம் பல சீர்திருத்தப் பயிற்சியின்பால் தேவையுடையதாக இருக்கிறது. ஒவ்வொருவரும் இந்தச் சமுதாய முன்னேற்றத்திற்காக தன்னால் முடிந்த அனைத்து வழியிலும் முயற்சி செய்யவேண்டும். சமுதாயத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள நமது மார்க்கம் அனுமதியளிக்கவில்லை.

மார்க்க சேவைக்கும், சமுதாய பணிக்காகவும் தாருல் ஹுதா என்ற இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. இதன் பிரதான நோக்கம் முஸ்லிம்களுக்கு சரியான மார்க்கக் கல்வியைப் போதிப்பதாகும்.

இன்றைய மீடியாக்களின் தவறான பிரச்சாரங்களாலும், முஸ்லிம்கள் இஸ்லாமை முறையாக அறியாததாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. நடுநிலையுடன் ஆராய்ந்து இஸ்லாமை அதன் தூய வடிவில் விளங்கி ஏற்றுக் கொண்டால் மட்டுமே மனிதகுலம் நேர்வழி அடைந்து நிம்மதியும் சுபிட்சமும் பெற்றுத் திகழ முடியும். அந்த இலக்கை நோக்கிய சிறு முயற்சியே இந்நூல்.

ஆசிரியரின் பத்தாண்டு கால ஆய்வுத் திரட்டே இத்தொகுப்பாகும். முஸ்லிம்கள் கொண்டிருக்க வேண்டிய உயர் பண்புகள் அனைத்தையும் இந்நூல் முழுமையாக விவரிக்கிறது. அல்லாஹ் அவர்களின் இம்முயற்சியை நமக்கு பலனளிப்பதாக ஆக்கி அருள்வதுடன் அவர்களுக்கு ஈருலக நற்பலன்களை செய்தருள்வானாக!

இந்நூலில் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் அரபியுடன் இணைத்து வெளியிட முயற்சிக்கிறோம்.

இந்நூலிலுள்ள திருக்குர்ஆன் வசனங்களின் மொழிபெயர்ப்பு அல்லாமா அ.கா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) அவர்களின் தர்ஜமாவிலிருந்து எடுத்தாளப்பட்டது.

அனைத்து மக்களும் இதைப் படித்துப் பயன்பெற வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்வதுடன், தவறுகள் இருப்பின் எங்களுக்கு சுட்டிக்காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அல்லாஹ் நமது நோக்கங்களை அறிந்தவன். அவனிடம் மனத்தூய்மையும் ஈருலக வெற்றியும் அருளுமாறு வேண்டுகிறோம்.

யா அல்லாஹ்! எங்களின் இச்சிறு முயற்சியை எங்கள் சமுதாய மக்களுக்கு பலனளிக்கக் கூடியதாக ஆக்கி அருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை அங்கீகரிப்போனாகவும் நிகரற்ற அன்புடை யோனாகவும் இருக்கின்றாய்.

இப்படிக்கு, 
மொழிபெயர்ப்பாளர்கள், ஊழியர்கள், 
தாருல் ஹுதா


நூலாசிரியர் முன்னுரை

ஒரு முஸ்லிம் எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறதோ அத்தகைய பண்புகளை தெளிவுபடுத்துவதே இத்தலைப்பின் நோக்கம். இது குறித்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஆய்வு செய்ததில் முஸ்லிம் களிடையே சில செயல்களில் வரம்பு மீறுதல் அல்லது முற்றிலும் புறக்கணித்தல், சில செயல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பது சில கட்டளைகளில் அலட்சியம் செய்வது என்ற நிலை இருப்பதைக் கண்டேன்.

உதாரணமாக சிலர் முதல் வரிசையில் நின்று தொழுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள். ஆனால், அவர்களது வாய் மற்றும் உடலிலிருந்து வெளிப்படும் துர்வாடையை லட்சியம் செய்யமாட்டார்கள். சிலர் அல்லாஹ்வை அஞ்சி, வணங்குவார்கள். ஆனால், இரத்த பந்துக்களுடனான உறவைப் பேணமாட்டார்கள். சிலர் தனது கல்வி மற்றும் வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்தி குழந்தை வளர்ப்பு மற்றும் அவர்களது கல்வி, நட்பு போன்ற அம்சங்களில் அலட்சியம் செய்வார்கள்.

சிலர் தம் பிள்ளைகளுக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்து பெற்றோரைக் கொடுமைப்படுத்துவார்கள். சிலர் பெற்றோருக்கு நல்லவராக இருந்து, மனைவிக்கு அநீதமிழைத்து அவளுடன் பண்பற்ற நடத்தையைக் கொண்டிருப்பார்கள். சிலர் மனைவி மக்களுடன் சிறப்பாக நடந்துகொண்டு அண்டை வீட்டாருக்கு தீங்கிழைப்பார்கள். சிலர் தனக்குப் பலனளிக்கும் விஷயங்களில் ஈடுபாட்டுடன் செயல் படுவார்கள். ஆனால் முஸ்லிம்களின் சமுதாய நலனுக்காக ஒன்றிணைய மாட்டார்கள்.

சிலர் மார்க்கப் பற்றுடன் திகழ்வார்கள். ஆனால் ஸலாம் கூறுவது, உணவு, குடிப்பு மற்றும் சபை ஒழுக்கம், சக மனிதர்களிடம் உரையாடுவது போன்ற அம்சங்களில் இஸ்லாமியப் பண்புகளைப் பேணமாட்டார்கள்.

இதில் வியப்புக்குரிய அம்சம் என்னவெனில், இவ்வாறான குறைபாடுகள் இஸ்லாமிய அழைப்பாளர்களிடமும் காணப்படுவதுதான். இவர்களது அந்தஸ்தை கவனிக்கும் மக்கள் அவர்களை முழுமையான முஸ்லிம்களாகவும், இஸ்லாமிய சட்டங்களுக்கான விளக்கமாகவும், இஸ்லாமிய நெறியின் மொத்த உருவமாகவும் கருதுகின்றனர். ஆனால் அவர்களது அலட்சியம், பொடுபோக்கு அவர்கள் அறிந்தோ அறியாமலோ அவர்களை சில குறைகளில் வீழ்த்திவிடுகிறது.

முஸ்லிமின் பண்புகள் எப்படி அமைந்திருக்க வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறதோ அது குறித்த ஆதாரங்களை ஆய்வு செய்து, நற்பண்புகள் சுடட்டுப் பிரகாசிக்கும் வகையில் முழுமையான போதனையை, அனைத்து முஸ்லிம்களுக்கும் குறிப்பாக அமல் செய்பவர்களுக்கும் சமர்ப்பிக்க வேண்டுமென்ற நோக்குடன் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். இதன்மூலம் சில தன்மைகள், நடைமுறைகள், நற்பண்புகள் குறித்து தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். அது மார்க்கத்தின் சில அம்சங்களில் குறையுடையவர்களுக்கு ஒளியாகி சத்தியமார்க்கம் வலியுறுத்தும் உன்னதமான பண்புகளை அவர்க ளிடையே பரவச் செய்யும்.

இஸ்லாம் முஸ்லிம்களுக்கு விரும்பும் அம்சங்களுக்கும், முஸ்லிம்கள் தங்களுக்கு விரும்பும் அம்சங்களுக்குமிடையே மிகுந்த இடைவெளியை நான் காண்கிறேன். வெகு சிலரே நேரிய கொள்கைகள், தூய இதயம், அழகிய பண்பாடுகள், உற்சாகமான மனநிலையையும் கொண்டிருக்கிறார்கள். அவர்களே தங்களது மார்க்கத்தை உண்மையுடனும் மிகுந்த நேசத்துடனும் அணுகு கிறார்கள். இஸ்லாம் எனும் பரிசுத்தமான நீரூற்றில் தாகம் தீர்த்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் முத்துக்களைப் போன்று பிரகாசிக்கும் இஸ்லாமிய நெறிமுறைகளை தங்களிடையே வளர்த்துக் கொள்கிறார்கள்.

திருக்குர்ஆன், நபிமொழி மூலமாக அல்லாஹ்வும் அவனது தூதரும் அளித்த வழிகாட்டுதலை அறிந்து ஆராய்பவர் ‘மனிதன் தனது இறைவனுடன், பிற மனிதர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்ற போதனைகளும், இன்னும் மனிதகுலத்தின் சிறிய பெரியபிரச்சனைகள் அனைத்துக்குமான முழுமையான தீர்வுகளும் அந்த வழிகாட்டுதலில் இருப்பதைக் கண்டு ஆச்சயப்படுவார்.

அவை முஸ்லிமின் நற்பண்புகளுக்கான அடிப்படையாகவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் அமைந்திருக்கும். இன்னும் அவை தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் ‘முன்மாதிரி முஸ்லிமாக' அவரை திகழச் செய்யும்.

திருக்குர்ஆனும் நபிமொழியுமான இச்சான்றுகள் ‘முஸ்லிம் எப்படி வாழ வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது' என்பதை தெளிவு படுத்துகிறது. தனிச்சிறப்புமிக்க இஸ்லாமிய சமூக அமைப்பு நற்பண்புகளை அடித்தளமாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மகத்துவமிக்க திருமறையாலும் பரிசுத்தமான நபிவழியாலும் அது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் இதன்மூலமே தனது இரட்சகனிடம் நன்மையையும் நற்கூலியையும் தேடிக்கொள்ள முடியும்.

அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை கோர்வை செய்தேன். எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் தலைப்புகள் மற்றும் பிரிவுகளை அமைத்துள்ளேன். அவை கீழ்கண்டவாறு அமைந்துள்ளன.

1. முஸ்லிம் தனது இரட்சகனுடன்.

2. முஸ்லிம் தனது நஃப்ஸுடன்.

3. முஸ்லிம் தனது பெற்றோருடன்.

4. முஸ்லிம் தனது மனைவியுடன்.

5. முஸ்லிம் தனது மக்களுடன்.

6. முஸ்லிம் தனது உறவினர் மற்றும் இரத்த பந்துக்களுடன்.

7. முஸ்லிம் தனது அண்டை வீட்டாருடன்.

8. முஸ்லிம் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன்.

9. முஸ்லிம் தனது சமூகத்துடன்.

இவை சம்பந்தமான சான்றுகளை நான் ஆய்வு செய்தபோது எனக்கு சில விஷயங்கள் தெளிவாயின. அதாவது அடியார்கள் மீதான அல்லாஹ்வின் அருள் மகத்தானது அவன் அழிவுப் படுகுழியில் வீழ்ந்து கிடப்பவர்களை நேர்வழியின் உச்சிக்கு உயர்த்துகிறான். மனிதகுலம் நேர்வழியிலேயே நிலைபெற வேண்டும்; அறியாமை இருளில், குருட்டுத் தனமான வழிகேட்டில் சிக்கி திகைத்துவிடக் கூடாது அவர்களது நடுநிலையான நேரிய பாதையில் எவ்வித இடையூறும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தூதர்களை அனுப்பிவைத்து தூதுத்துவத்தையும் மார்க்க நெறிகளையும் அருளினான்.

ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் நேர்வழி மனிதனுக்கு மிக அவசியமாகும். அதன்மூலமே தனது மானுடத்தன்மையை வளர்த்து, இவ்வுலகில் அல்லாஹ்வின் வாக்குறுதிக்கேற்ப மகத்தான பொறுப்பை அவன் நிறைவேற்ற முடியும். நேர்வழி காட்டும் பரிசுத்தத் தென்றல் அவனை நோக்கி வீசவில்லையென்றால் பேராசை, அகந்தை, மக்களுக்கு இடையூறளிக்கும் தன்மை அவனில் மிகைத்துவிடும். மோசடி, குரோதம், வஞ்சம், பொறாமை, அநீதம் போன்ற இழி குணங்கள் மற்றும் பண்பற்ற செயல்களில் அவன் மூழ்கிவிடுவான்.

இதற்கான உதாரணத்தை சிறுவர்களின் நடத்தையில் நாம் காணலாம். பெற்றோர் முன்னிலையில் இருந்தால் தன்னை தனது ஏனைய சகோதரர்களைவிட நற்பண்புடையவராக தன்னை காட்டிக்கொள்ள விரும்புகிறார். தன்னிடமுள்ள சிறப்புப் பண்புகள் தனது சகோதரர்களிடம் இல்லையென்பதை வெளிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

இவ்வாறு தன்னை உயர்வாக வெளிப்படுத்திக் கொள்வது மனிதனின் இயல்பான குணமாகும். இது நேரியதாக நடுநிலையுடன் அமைந்தால் உலக விஷயங்கள் சீரடைந்து அவரை செம்மைப்படுத்துகிறது. அவை மனிதனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் நற்பண்புகளை வெளிப்படுத்தத் தூண்டுகிறது. ஏனெனில், அந்த நற்பண்புகள் அவரோடு பிணைக்கப் பட்டதாகும்.

தன்னை உயர்வாக கருதும் இப்பண்பு மனிதனிடம் வரம்பு மீறிவிட்டால் அது அவனிடம் ஆபத்தான, வெறுக்கத்தக்க குணங்களை உண்டாக்கிவிடும். இதனால் பாதிக்கப்பட்ட மனிதன் தற்பெருமை உடையவனாக தனது சமூகத்தில் வழிகெட்டுச் சீரழிவான். தன்னிடம் இருப்பதாக அவன் வாதிடும் எத்தனையோ நற்பண்புகளை விட்டும் அவன் மிக தூரமானவனாகவே இருப்பான்.

இவ்விடத்தில் நிலையான மார்க்கத்தின் போதனைகளும், நற்பண்புகளும், இழிபண்புகளால் ஏற்பட்ட நோயைக் குணப்படுத்தும். அவர் பணிவு, அறிவு மற்றும் நடுநிலை சார்ந்த பாதையின்பால் தனது காலடிகளை எடுத்துவைக்கத் தொடங்குவார்.

இம்மார்க்கம் மனித வாழ்வின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பீறிடச் செய்யும் அருள் ஊற்றாகும். அது தனது போதனைகளை நற்பண்புகளின் அடிப்படையில் அமைத்துள்ளது. அவை மிக மேலான வழிமுறைகளாலும் நேரிய நடத்தையாலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த நற்பண்புகள் அல்லாஹ்வின் அல்குர்ஆன் எனும் மதுரமான அருள் ஊற்றிலிருந்து பல நூற்றாண்டுகளாக மனித சமுதாயத்திற்கு வழிந்தோடி வந்து கொண்டிருக்கின்றன.

மனிதனுக்கு கொள்கையில் உறுதியாக இருப்பதைவிட தான்தோன்றித்தனமாக வாழ்வது விருப்பமானதாகும். முன்னேறி செல்வதைவிட பின்னடைவு எளிதானதாகும். ஆகவே வீழ்ச்சியை நோக்கிச் செல்வதும் தான்தோன்றித்தனமாக வாழ்வதும் மனிதர்களுக்கு எளிதாகும். எனவே, அவர்களது இதயங்கள் மறதியினால் துருப்பிடிக்கும் போது அதைத் தூய்மைப்படுத்துபவரும், நேரான பாதையிலிருந்து வழிதவறும்போது அதை நேர்வழிபடுத்துபவரும் அவசியமாகிறார்.

தங்களது பேனா முனையாலும், சீய சிந்தனையாலும் பணியாற்றி வருபவர்கள் இந்த சத்திய மார்க்கத்தைப் பரப்புவதில் ஆர்வம் கொள்ள வேண்டும். இம்மார்க்கத்தின் இலட்சியங்கள் உன்னதமானவை, மனிதர்கள் பின்பற்ற மிக எளிதானவை என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், அல்லாஹ் தனது அடியார்களுக்கு இவ்வுலக வாழ்வில் எத்தகைய மேன்மையான, பிரகாசமாக ஒளிரும் வாழ்வை நேசிக்கிறான் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் மனிதவாழ்வு சீர்பெற்று இனிதாக அமையும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலிருந்து திருக்குர்ஆனை இறக்கி அருள்புரிந்தது, அது குறித்த கருத்துக்களை விவாதித்து இன்பமடைவதற்காக மட்டுமல்ல. மேலும் அதன் அறிவார்ந்தக் கருத்துகளை செயல்படுத்தாது அதனை ஓதி பரக்கத் அடைந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும் அருளப்படவில்லை.

மாறாக, தனிமனித வாழ்வும் குடும்ப வாழ்வும் சீர்பெற்று சமூக வாழ்வுக்கு வழிகாட்டியாகத் திகழ்வதற்காகத்தான் அல்குர்ஆனை அல்லாஹ் அருளினான். மேலும் அதை மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் பிரகாசமான வழிகாட்டியாகவும் அவர்களை இருள்களி லிருந்து பிரகாசத்தின்பால் சேர்ப்பிக்கும் விளக்காகவும் ஆக்கினான்.

நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பிரகாசமும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது.

உங்களில் எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்று கின்றார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகின்றான். அன்றி இருள்களிலிருந்தும் வெளிப்படுத்தி தன் அருளால் பிரகாசத்தின்பால் கொண்டு வருகின்றான். தவிர, அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கின்றான். (அல்குர்ஆன் 5:15,16)

இந்த நேர்வழியின் நிழலில் மனித வாழ்வு செழிப்படைந்து மணம் வீசுகிறது. இதயங்களில் ஆனந்தம் ஊற்றெடுக்கிறது. நேர்வழி பெற்ற சுபிட்சமான வாழ்க்கையை உருவாக்குவதன் முதல் முயற்சி யாதெனில் இஸ்லாமின் பிரகாசமிக்க வடிவத்தை தன்னில் கொண்ட முன்மாதிரி முஸ்லிமை உருவாக்குவதாகும். அவரைக் காண்பவர்கள் இஸ்லாமையே காண்கிறார்கள். அவருடன் கலந்துறவாடுவதால் தங்களது ஈமானை மென்மேலும் அதிகரித்துக் கொண்டு அதன்பால் விரைந்தோடி வருவார்கள்.

இதுதான் நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவ அழைப்பின் ஆரம்ப காலத்தில் செயல்படுத்திய முறையாகும். நீண்ட நெடிய இஸ்லாமின் விசாலமான பாதையில் நபி (ஸல்) அவர்களின் முதல் முயற்சி இஸ்லாமை தன்னிலே உறுதியாகக் கொண்ட மனிதர்களை உருவாக்கியதுதான். அம்மனிதர்கள் பூமியில் நடமாடும் குர்ஆனாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் பரவிச் சென்றார்கள். மனிதர்கள் அவர்களிடம் மனிதகுலத்துக்கான தனித்தன்மை வாய்ந்த முன்மாதியைக் கண்டார்கள். உண்மை முஸ்லிமின் வாழ்வில் முழுமையான மிகச் சிறந்த வாழ்வின் வழிமுறையைக் கண்ட மக்கள், அல்லாஹ்வால் அங்கீகரிக் கப்பட்ட மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைய முன்வந்தார்கள்.

இன்றைய மனிதகுலம், குறிப்பாக முஸ்லிம்கள் இந்த முன்மாதியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதைத்தவிர மனிதகுல மீட்சிக்கு வேறெந்த வழியுமில்லை. அதை பின்பற்றுவதைத் தவிர வேறெந்த முறையிலும் மனிதகுல மாண்புகளைக் காப்பாற்ற முடியாது. அத்தகைய பண்புகளின் மூலமாகத்தான் இஸ்லாமின் உண்மைப் பொருளை விளங்கிக்கொள்ள முடியும்.

‘முன்மாதிரி முஸ்லிமுக்கு' உதாரணமாகத் திகழும் அந்த அழகிய வடிவம் என்ன? இக்கேள்விக்கு பின்வரும் பக்கங்கள் பதிலாக அமைகின்றன.

எனது இந்த முயற்சி மகத்துவமிக்க அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடியதாகவும், பயன்பெறத்தக்கதாகவும், அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அமைய துஆ செய்கிறேன்.

பொருள்களோ மக்களோ பலனளிக்க முடியாது, தூய்மையான இதயத்துடன் அல்லாஹ்விடம் வருபவர்கள்தாம் வெற்றியடைவார்கள் என்று அல்லாஹ் வர்ணித்த அந்த மகத்தான மறுமைநாளின் வெகுமதியாகவும் இதை எனக்கு ஆக்கி அருளவும் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்.

- முஹம்மது அலீ அல் ஹாஷிமி, ரியாத்



முன்மாதிரி முஸ்லிம் - முஸ்லிம் தனது இரட்சகனுடன்

விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்

இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிவார்

தன் அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களிடம் தனது பொறுப்பை அறிவார்

அல்லாஹ்வின் விதித்ததை பொருந்திக் கொள்வார்

அல்லாஹ்வையே எதிர்நோக்குவார்

அல்லாஹ்வின் பொருத்தத்தை இலட்சியமாகக் கொள்வார்

கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை நிறைவேற்றுவார்

அல்லாஹ்விடம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவார்

அதிகமாக குர்ஆன் ஓதுவார்


விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர்

முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான் கொண்டு, அவனுடன் உறுதியான உறவைக் கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன், அல்லாஹ்விடம் உதவியும் தேட வேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும். அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். உலகில் அல்லாஹ்வின் படைப்பினங்களிலுள்ள நுட்பங்களின்பால் அவர் தனது சிந்தனையைச் செலுத்துவார். இதனால் மறைந்திருக்கும் மகத்தான அல்லாஹ்வின் உதவிதான் இப்பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதர்களின் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக்குகிறது என்று உறுதி கொள்வார். இதனால்தான் அல்லாஹ்வை எல்லா நிலையிலும் நினைவுகூற வேண்டியவராக இருக்கிறார். அவர் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை வாழ்வின் அனைத்து சந்தர்ப் பங்களிலும் உணர்கிறார். இது அவரது ஈமானைப்பலப்படுத்துகிறது, அவன் மீதே நம்பிக்கைகொள்ள காரணமாக அமைகிறது.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

இத்தகையோர் (தங்கள்) நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதைச் சிந்தித்து எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக... (அல்குர்ஆன் 3:190,191)


இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிவார்

உண்மை முஸ்லிம் தனது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, அவனைப் பணிந்து அஞ்சி நடக்கிறார். தனது விருப்பத்திற்கு மாறாக இருப்பினும் அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, எந்நிலையிலும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறமாட்டார். மேலும் அவரது விருப்பத்திற்கு மாற்றமாக இருப்பினும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலையே ஏற்பார். அல்லாஹ், அவனது தூதரின் வழிகாட்டுதலிலுள்ள சிறிய, பெரிய ஒவ்வொரு விஷயத்தையும் எந்தவித பாகுபாடுமின்றி பின்பற்றுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் கொண்டு வந்ததற்கேற்ப தனது மனோஇச்சையை மாற்றிக் கொள்ளாதவரை உங்களில் ஒருவரும் விசுவாசியாக மாட்டார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஆனால் உம் இறைவன் மீதும் சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிப்படாத வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகளாக மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)

ஈமான் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளைகளை முழுமையாக ஏற்று பூரணமாக அடிபணிவதாகும். இந்த இரண்டுமின்றி ஈமானும் இல்லை, இஸ்லாமும் இல்லை. உண்மை முஸ்லிமின் வாழ்வில் அல்லாஹ்வின் நேர்வழியைப் புறக்கணிப்பதும், அவனது தூதருக்கு மாறு செய்வதும் இருக்க முடியாது. இது தனி முஸ்லிமிடமும், அவருக்குக் கட்டுப்பட்ட அவரது குடும்பத்தினர் வாழ்விலும் காணப்படும் சிறப்புத் தன்மையாகும்.

தன் அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களிடம் தனது பொறுப்பை அறிவார்

ஒரு முஸ்லிமின் அதிகாரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் கட்டளைகளில் அலட்சியம் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால், அதற்கு அந்த முஸ்லிம் பொறுப்பாளியாகி இறைவனால் விசாரிக்கப்படுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நீங்கள் அனைவரும் பொறுப் பாளர்களே! நீங்கள் அனைவரும் உங்களின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

தனது பொறுப்பை உணர்ந்திருக்கும் முஸ்லிம் தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறுவதைச் சகித்துக்கொள்ள மாட்டார். அவரால் இது விஷயத்தில் பொறுமை காக்கவே முடியாது. அது எத்தகு விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரியே. அந்த தவறை அகற்றுவதில் தீவிரமாக இருப்பார்; கடமையில் அலட்சியம் செய்யமாட்டார். தனது ஈமானில் பலவீனம் கொண்ட, ஆண்மையற்ற கோழை மட்டுமே தனது அதிகாரத்தில் உள்ளவர்களின் வரம்புமீறலை சகித்துக்கொள்ள முடியும்.


அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்வார்

உண்மை முஸ்லிம் தனக்கு அல்லாஹ் விதித்ததை மகிழ்வுடன் ஏற்றுப் பொருந்திக் கொள்வார். அவரது பார்வை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியில் நிலைகொள்ளும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘முஸ்லிமின் அனைத்து விஷயங் களும் ஆச்சரியமானதுதான். அவரது அனைத்து விஷயங்களும் நன்மையானதே. அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு துன்பம் ஏற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைகிறது.'' (ஸஹீஹுல் புகாரி)

இதற்குக் காரணம், முஸ்லிம் அல்லாஹ் விதித்த விதியை ஈமான் கொள்வது ஈமானின் முக்கியமான பகுதி என்பதை உறுதி கொண் டிருப்பதுதான். அவருக்கு எது கிடைக்க வேண்டுமென்ற விதி இருக்கிறதோ அது அவரை விட்டுத் தவறிவிடாது. ஏனெனில், அது அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்டது அதை எதிர்கொள்வதை தவிர்த்திட முடியாது. அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்பவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மகத்தான நற்கூலியைப் பெற்றுக்கொள்கிறார். அல்லாஹ்விடம் ஈடேற்றமடைந்த, அடிபணிந்த முஃமின்களின் பட்டியலில் இடம் பெறுவார்.

இவ்வாறாக அவரது அனைத்து விஷயங்களும் நன்மையாகவே அமைகிறது. மகிழ்ச்சியில் உபகாரியான, மகத்துவமிக்க அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். துன்பத்தில் அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்து பொறுமையைக் கைக்கொள்கிறார். அல்லாஹ் விதித்ததை ஏற்று திருப்தி கொள்கிறார். இந்த இரு நிலைகளும் அவருக்கு மிக்க நன்மையானவையே.


அல்லாஹ்வையே எதிர்நோக்குவார்

சில சந்தர்ப்பங்களில் இறையச்சமும் பணிவும் அறிவாற்றலும் நிறைந்த முஃமினுக்கு மறதியின் நிழல்கள் அவரது இதயத்தை மூடிக் கொள்ளும். அதனால் அவரது பாதங்கள் தடுமாறும், அல்லது இறையச்சமும் அறிவாற்றலும் நிறைந்த முஃமினுக்கு சற்றும் பொருத்தமற்ற குறைகள் ஏதேனும் ஏற்படும். எனினும், அவர் வெகு சீக்கிரத்தில் தனது மறதியிலிருந்து மீண்டு, தடுமாற்றத்தை சரிசெய்து, நிகழ்ந்த தவறுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வார். அஞ்சி மன்னிப்பு கோரியவராக அபயமளிக்கும் தனது இரட்சகனின் பாதுகாப்பின் நிழலில் ஒதுங்கிக் கொள்வார்.

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ அவர்களுள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள். அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள். (அல்குர்ஆன் 7:201)

அல்லாஹ்வின் நேசமும் அவனது அச்சமும் நிரம்பிய இதயத்தில் மறதி நீடிக்காது. அவனது ஏவலையும் நேர்வழியையும் புறக்கணிக்கும் இதயங்களில்தான் மறதி நீடிக்கும். அல்லாஹ்வுக்கு அடிபணிதல், மன்னிப்புக் கோருதல் மற்றும் தவறுகளுக்கு பச்சாதாபப்படுவதற்காக எல்லா நிலைகளிலும் உண்மை முஸ்லிமின் இதயம் வியத் திறந்திருக்கும்.


அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை இலட்சியமாகக் கொள்வார்

முஸ்லிம், தனது செயல்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை தேடவேண்டும். அவரது ஒவ்வொரு அடியும் அவனது திருப்தியை நோக்கியே எடுத்து வைக்கப்பட வேண்டும். மனிதர்களின் திருப்தியை நோக்கமாகக் கொள்ளக்கூடாது. அல்லாஹ்வின் நேர்வழியில் செல்லும்போது சில சமயங்களில் மனிதர்களின் கோபத்திற்கு இலக்காக நேரிட்டாலும் சரியே.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் மனிதர்களின் கோபத்திலும் அல்லாஹ்வின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவருக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன். எவர் அல்லாஹ்வின் கோபத்திலும் மனிதர்களின் திருப்தியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரை அல்லாஹ் மனிதர்களின்பால் சாட்டிவிடுகிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)

இந்நிலையில், முஸ்லிம் தனது செயல்களை அல்லாஹ்வின் திருப்தி எனும் தராசில் நிறுத்துப் பார்க்கிறார். அல்லாஹ்வின் திருப்தியின் தட்டு கனமானால் அதை ஏற்று திருப்தியடைகிறார். தராசின் தட்டு மறுபக்கம் சாய்ந்தால் அதை அலட்சியப்படுத்தி விடுகிறார். இவ்வாறே அவரது நேர்வழியின் அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

அவரது பார்வையில் நேரிய, நடுநிலையான பாதை தென்படுகிறது. எனவே அவர் பலவீனமான, பரிகாசத்திற்குரிய முரண்பாடுகளில் வீழ்ந்துவிட மாட்டார். ஒரு விஷயத்தில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, மற்றொரு விஷயத்தில் முரண்படுதல்; சில நேரங்களில் ஹலாலாக ஆக்கிக் கொண்டதை மற்றொரு நேரத்தில் ஹராமாக்கிக் கொள்வது போன்ற செயல்கள் முஸ்லிமிடம் ஏற்படாது. ஏனெனில், அவர் தெளிவான பாதையைத் தேர்ந்தெடுத்து உறுதியான கொள்கையைக் கொண்டுள்ள வராவார். எனவே அவரிடம் இவ்வாறான முரண்பாடுகளுக்கு இடமில்லை.

சிலர் மஸ்ஜிதுகளில் இறையச்சத்துடன் தொழுவார்கள். ஆனால் அவர்களை கடைவீதியில் வட்டி வாங்குபவர்களாக காணமுடிகிறது. அல்லது குடும்பம், கடைவீதி, கல்விக் கூடங்கள், சங்கங்கள் இவற்றில் எதிலுமே அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்ற மாட்டார்கள். இதற்குக் காரணம் இம்மார்க்கத்தைப் பற்றிய அவர்களின் அறியாமையே.

அவர்கள் ஒவ்வொரு செயலையும் தங்களது திருப்தியின் தராசைக் கொண்டு அளவிடுகிறார்கள். இதனால்தான் அவர்கள் முஸ்லிம் களிடையே காணப்பட்டாலும் பெயரைத் தவிர இஸ்லாமில் அவர்களுக்கு எந்தப் பங்குமிருப்பதில்லை. இது தற்காலத்தில் முஸ்லிம்களை எதிர்நோக்கியுள்ள மாபெரும் சோதனையாகும்.


கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை நிறைவேற்றுவார்

உண்மை முஸ்லிம், இஸ்லாமின் அனைத்து கடமைகளையும் அலட்சியம், மறதி மற்றும் குறைபாடுகள் எதுவுமின்றி பூரணமாக அழகிய முறையில் நிறைவேற்றவேண்டும்.

அவர் ஐந்து நேரத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் நிறை வேற்றுவார். ஏனெனில், தொழுகை மார்க்கத்தின் தூணாகும்; அமல்களில் மிக உன்னதமானதாகும். அதை நிறைவேற்றுபவர் மார்க்கத்தை நிலை நாட்டுகிறார். அதை வீணடிப்பவர் மார்க்கத்தைத் தகர்த்தவராவார்.

இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அமல்களில் சிறந்தது எது?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘தொழுகை, அது உரிய நேரத்தில் (நிறைவேற்றுவது)'' என்று கூறினார்கள். ‘‘பிறகு என்ன?'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘பெற்றோருக்கு உபகாரம் செய்தல்'' என்று கூறினார்கள். ‘‘பிறகு என்ன?'' என்றேன். ‘‘அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

தொழுகை சிறப்படையக் காரணம் அது அடியானுக்கும் அவனது இரட்சகனுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்துகிறது. தொழுபவர் உலகின் அனைத்து ஈடுபாடுகளிலிருந்தும் தன்னை துண்டித்துக் கொள்கிறார். தனக்குரிய அனைத்தையும் இறைவனிடம் சமர்ப்பிக்கிறார். தொழுகையின் மூலம் நேர்வழியையும் உதவியையும் பெற்றுக் கொள்கிறார். நேர்வழியின் மீது உறுதியாக நிலைத்திருப்பதை அல்லாஹ்விடம் வேண்டுகிறார்.

தொழுகை, சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த அமலாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அது முஸ்லிம் தனது மறுமை பயணத்திற்காக இறையச்சம் என்ற கட்டுச் சாதத்தைத் தயார் செய்வதற்குரிய செழிப்பு மிக்க வழியாகும். அது தூய்மையான மதுரமான நீரூற்றாகும். அந்தத் தூய்மையான நீரால் முஸ்லிம் தனது பாவங்களைக் கழுவிக் கொள்கிறார்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்: ‘‘உங்களில் ஒருவரது வீட்டு வாசலில் ஆறு ஓடிக்கொண்டிருந்து, அதில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை அவர் குளிப்பாரானால் அவரது உடலில் ஏதேனும் அழுக்குகள் இருக்குமா? நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். ‘‘எந்த அழுக்கும் (அவர் மீது) இருக்காது'' என நபித்தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அதுதான் ஐந்து நேரத் தொழுகைக்கு உதாரணமாகும். அதைக் கொண்டு அனைத்து பாவங்களையும் அல்லாஹ் அகற்றி விடுகிறான்.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘ஐந்து நேரத் தொழுகையை தொழுபவர், உங்களில் ஒருவன் வீட்டு வாசலில் ஓடும் ஆழமான ஆற்றில் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை குளிப்பவரைப் போன்றவராவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் ஒரு பெண்ணை முத்தமிட்டுவிட்டார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கூறினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கிவைத்தான்:

பகலின் இரு முனைகளாகிய காலை, மாலைகளிலும் இரவின் நிலைகளிலும் நீங்கள் (தவறாது) தொழுது வாருங்கள்! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும். (இறைவனை) நினைவு கூர்வோருக்கு இது ஒரு நல்லுபதேசமாகும். (அல்குர்ஆன் 11:115)

‘‘அம்மனிதர் (இந்த வசனம்) எனக்கு மட்டுமா?'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘எனது உம்மத்தினர் அனைவருக்கும் (பொருந்தும்)'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘பெரும்பாவங்கள் நிகழாதவரை ஐந்து நேரத் தொழுகைகள் அவைகளுக்கு மத்தியில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். அதுபோன்றே ஒரு ஜுமுஆ விலிருந்து மறு ஜுமுஆவரை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்: ‘‘எந்தவொரு முஸ்லிம் அவருக்கு ஃபர்ளான தொழுகை கடமையாகும்போது அழகிய முறையில் உ;ச் செய்து உள்ளச்சத்துடன் அதன் ருகூவுகளைப் பேணித் தொழுவாரானால் அது பெரும்பாவங்களைத் தவிர அவர் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் பரிகாரமாகும். இது எல்லா காலத்திற்கும் உயதாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்புகளை விவரிக்கும் நபிமொழிகளும், சம்பவங்களும், தொழுபவர்கள் அடைந்து கொள்ளும் நன்மைகளும் ஏராளம். அவை அனைத்தையும் குறிப்பிட இங்கே பக்கங்கள் போதாது.

முடிந்தளவு இறையில்லம் செல்ல வாய்ப்பு கிடைத்தால் முதல் ஜமாஅத்தை அடைந்துகொள்ள இறையச்சமுடைய முஸ்லிம் பேராவல் கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத் தொழுவதை விட 27 மடங்கு மேலானதாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உ;ச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) ஒன்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், ‘‘இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!'' என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உ;வுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)

காலை அல்லது மாலை நேரங்களில் மஸ்ஜிதுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுவதில் ஆர்வமுடையவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறியுள்ளார்கள்.

‘‘எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.''

பின் தங்கியவன் (முனாஃபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாஃபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுகளில் ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். நியாயமான காரணமின்றி ஜமாஅத்தை விடுபவரை வீட்டுடன் சேர்த்து எரித்துவிட கருணைக்கடலான நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள்.

‘‘எவனுடைய கரத்தில் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நான் விறகுகளைக் கொண்டுவர உத்தரவிட்டு, பிறகு தொழுகைக்கான ‘அதான்' சொல்ல ஏவி, பிறகு ஒரு மனிதரை இமாமாக நிற்க உத்தரவிட்டபின் நான் ஜமாஅத் தொழுகைக்கு வராதவர்களிடம் சென்று அவர்களை வீட்டுடன் சேர்த்து எத்திட விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதற்குப் பிறகும் இமாம் ஸயீதுப்னுல் முஸய்ம்ப் (ரஹ்) போன்ற வர்களைக் காண்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர்கள் முப்பதாண்டு காலமாக மஸ்ஜிதில் எவருடைய பிடரியையும் பார்த்ததேயில்லை. அவர்கள் பாங்கு சொல்லப்படும் முன்பே முதல் வரிசையில் அமர்ந்திருப் பார்கள். இஸ்லாமிய வரலாறு ஸயீது (ரஹ்) போன்ற பல உதாரணங்களைக் கண்டிருக்கிறது.

'அதான்' சப்தத்தைக் கேட்டவுடன் நபித்தோழர்கள் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்ற, அவர்களது இல்லங்கள் வெகுதூரமாக இருந்தது அவர்களுக்கு தடையாக அமையவில்லை. அவர்கள் ஜமாஅத் தொழுகைக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்கள். அவர்கள் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இறைவனிடம் நன்மையாகக் கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்திருந்ததால் மஸ்ஜிதிலிருந்து தங்களது இல்லங்கள் வெகு தொலைவிலிருப்பது குறித்து மகிழ்ச்சி யடைந்தார்கள்.

உபை இப்னு கஅப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், ‘‘நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெம்லின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!'' என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: ‘‘நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் ஒவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் ஒன்று சேர்த்து அல்லாஹ் அருள்புவானாக!'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

தங்களது இல்லங்கள் மஸ்ஜிதிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதை எண்ணி பள்ளிக்கு அருகிலேயே தங்களது இல்லங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்த வெகுமதியை வழங்கினார்கள். பள்ளியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அவர்களது செயலேட்டில் எழுதப்படும் என்பதையும், பள்ளியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட அதிகமான எட்டுக்கள் வீணடிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஸ்ஜிதுந்நபவியைச் சுற்றியிருந்த இடங்கள் காலியானபோது பனூ ஸலமா குலத்தவர்கள் தங்களது வீடுகளை மஸ்ஜிதுக்கு அருகில் மாற்றிக்கொள்ள விரும்பினார்கள். இது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியவந்தபோது அவர்களிடம், ‘‘நீங்கள் மஸ்ஜிதுக்கு அருகில் வீடுகளை மாற்றிக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என கேள்விப்பட்டேனே'' என்றார்கள். அவர்கள் ‘‘ஆம் இறைத்தூதரே! நாங்கள் விரும்பினோம்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘பனூ ஸலமாவே! உங்கள் (தற்போதுள்ள) வீடுகளையே ஸ்திரப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களது அடிச்சுவடுகள் எழுதப்படு கின்றன, (தற்போதுள்ள) வீடுகளையே ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள்; உங்களது அடிச்சுவடுகள் எழுதப்படுகின்றன'' என்று கூறினார்கள். பனூ ஸலமா குலத்தினர் ‘‘மஸ்ஜிதின் அருகே வீடுகளை மாற்றிக் கொள்வதில் எங்களுக்கு விருப்பமில்லை'' என்று கூறிவிட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) இக்கருத்துள்ள ஹதீஸ் அனஸ் (ரழி) அவர்களின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டு ஸஹீஹுல் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரைவிட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)

ஃபஜ்ரு மற்றும் இஷா தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதை வலியுறுத்தும் எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன. அவைகளில் நபி (ஸல்) அவர்கள் இவ்விரு தொழுகையையும் ஜமா- அத்துடன் நிறைவேற்றுபவர்கள் அடையும் மகத்தான நன்மைகளை விவரித்துள்ளார்கள். அதில் இரண்டை மட்டும் காண்போம்.

1) உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: ‘‘இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். ஃபஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

2) அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நயவஞ்சகர் களுக்கு ஃபஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மறுமை வாழ்வில் மகத்தான வெற்றியை அடைய ஆவல் கொண்ட இறையச்சமுள்ள முஸ்லிம் இரவு பகலில் சந்தர்ப்பம் கிடைக்கும்போ தெல்லாம் நஃபில்கள் தொழுவதைத் தவறவிட மாட்டார். அதிகமாக நஃபில் தொழுவது அடியானை அல்லாஹ்வின் அருகில் இட்டுச் செல்கிறது. அந்த முஸ்லிமை உயர் அந்தஸ்துக்குக் கொண்டு சென்று இரட்சகனின் நேசத்தையும் திருப்பொருத்தத்தையும் பெற்றுத் தருகிறது. அது உண்மையிலேயே மகத்துவமிக்க உன்னதமான அந்தஸ்தாகும். அந்த நிலையை அடைந்தவரை அல்லாஹ் தனது வல்லமையால் அருளுக்குரியவராக தேர்ந்தெடுக்கிறான். அவரது செவிப்புலனாக, அவரது பார்வையாக, அவரது கரமாக மாறி விடுகிறான். இதற்கு ஹதீஸ் குத்ஸி சான்றளிக்கிறது.

‘‘எனது அடியாரின் நஃபில்களின் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான். அவனை நான் நேசிக்கிறேன். அவனை நேசிக்க ஆரம்பித்தால் அவன் கேட்கும் செவியாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக ஆகிவிடுகிறேன். அவன் என்னிடம் எதையேனும் கேட்டால் கொடுக்கிறேன். அவன் தன்னை பாதுகாக்கத் தேடினால் அவனை நான் பாதுகாக்கிறேன்.'' (ஸஹீஹுல் புகாரி)

ஓர் அடியானை அல்லாஹ் நேசித்தால் வானம், பூமியில் உள்ளவர்களும் நேசிக்கத் தொடங்குகிறார்கள். இதற்கு அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் அறிவிப்பு பொருத்தமாக அமையும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ் ஓர் அடியானை நேசித்தால் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து ‘‘நான் இன்ன அடியானை நேசிக்கிறேன்; நீங்களும் நேசிக்க வேண்டும்'' என்று கூறுகிறான். அவர் நேசிக்கிறார். பிறகு வானத்தில் உள்ளவர்களை அழைத்து ‘‘நிச்சயமாக அல்லாஹ் இம்மனிதரை நேசிக்கிறான்; நீங்களும் நேசம் கொள்ளுங்கள்'' என்று கூறுகிறார். பின்பு அந்த அங்கீகாரம் பூமிக்கும் இறக்கப்படுகிறது. அவ்வாறே ஓர் அடியானை அல்லாஹ் வெறுத்தால் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து ‘‘நான் இன்ன மனிதனை வெறுக்கிறேன்; நீங்களும் அவனை வெறுத்துவிடுங்கள்'' என்று கூறுகிறான். அவர் வெறுப்பை வெளிப்படுத்துகிறார். பிறகு வானத்தில் உள்ளவர்களை அழைத்து ‘‘நிச்சயமாக அல்லாஹ் இம்மனிதனை வெறுக்கிறான்; நீங்களும் வெறுத்துவிடுங்கள்!'' என்று கூறுகிறார். வானத்தில் உள்ளவர்களும் வெறுக்கிறார்கள். பிறகு அவன் மீதான வெறுப்பு பூமிக்கு இறக்கப்படுகிறது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது பாதங்கள் வீங்குமளவு இரவு நேரங்களில் நின்று வணங்கினார்கள். அவர்களிடம் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அது குறித்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு தொழுகிறீர்கள்? உங்களது முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டானே'' என்று கேட்டபோது ‘‘நான் நன்றியுள்ள அடியாராக ஆக வேண்டாமா?'' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம் தனது தொழுகையை அழகிய முறையில் அதன் நிபந்தனைகளைப் பூரணப்படுத்தி நிறைவேற்ற ஆர்வம்கொள்ள வேண்டும். சிந்தனைகள் சிதறி மனம் குழம்பிய நிலையில் நிற்பது, உட்காருவது, அசைவது போன்ற செயல்கள் மட்டுமே தொழுகை அல்ல.

முஸ்லிம் தொழுகையை முடித்தவுடன் உலகின் பொருளை அதிகமதிகம் தேடும் வேட்கையில் பள்ளியிலிருந்து விரண்டு வெளியேறிச் சென்றுவிடக்கூடாது. மாறாக, தொழுகைக்குப் பின் பரிசுத்த நபிமொழி வலியுறுத்தும் தஸ்பீஹ், திக்ரு மற்றும் பாவமன்னிப்புக் கோருவதில் ஈடுபடவேண்டும்.

தொழுகைக்குப் பின் இதயத்தின் ஆழத்தில் எழும் இறை அச்சத்துடன் இம்மை மறுமை நலன்களை அருளுமாறும் தனது செயல்களைச் சீராக்கும்படியும் அனைத்தையும் அறிந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவேண்டும். அப்போதுதான் அந்தத் தொழுகை, ஆன்மா பரிசுத்தமாவதற்கும் இதயம் மென்மை பெறவும் காரணமாக அமையும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘‘எனது கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்கிறது.'' (ஸுனனுன் நஸாம்)

இறையச்சமுள்ள தொழுகையாளிகள் அபயமளிக்கும் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் திடுக்கிடவோ, நன்மைகளை அடைந்தால் தடுத்து வைத்துக் கொள்ளவோ மாட்டார்கள். இதையே பின்வரும் வசனம் தெளிவு படுத்துகிறது.

மெய்யாகவே மனிதன் பதட்டக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். ஏனென்றால் அவனை ஒரு தீங்கு அடைந்தால் (திடுக்கிட்டு) நடுங்குகிறான். அவனை யாதொரு நன்மை அடைந்தாலோ அதனை(ப் பிறருக்கும் பகிர்ந்தளிக்காது) தடுத்துக் கொள்கிறான். ஆயினும் தொழுகையாளிகளைத் தவிர. (அல்குர்ஆன் 70:19-22)

முஸ்லிம் ஜகாத்தை நிறைவேற்றுவார். ஜகாத் அவர் மீது கடமை யானால் அதை இறையச்சத்துடனும் நேர்மையுடனும் கணக்கிட்டு, மார்க்க நெறியின்படி உரியவர்களுக்குக் கொடுத்து நிறைவேற்றுவார். தொகை ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் அவர் மீது கடமையானாலும் அதன் ஒரு பகுதியைத் தடுத்து வைத்துக் கொள்வதற்கான எந்த முயற்சியிலும் இறங்காமல் பூரண திருப்தியுடன் அதை நிறைவேற்றுவார்.

ஜகாத் என்பது நிர்ணயிக்கப்பட்ட பொருளாதாரம் சம்பந்தபட்ட ஒரு வணக்கமாகும். உண்மை முஸ்லிம் மார்க்கம் தெளிவுபடுத்தியதைப் போன்று பூரணமாக ஜகாத்தை நிறைவேற்றுவதில் அலட்சியம் செய்யமாட்டார். பலவீனப்பட்ட ஈமானும் குறுகிய இதயமும் உடையவருக்கு மட்டுமே ஜகாத்தைப் பூரணமாக வழங்குவதில் சிரமம் இருக்க முடியும். அத்தகையோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஜகாத்தை பூரணமாக நிறைவேற்றும்வரை அவர்களுடன் போரிட்டு அவர்களது உதிரத்தை பூமியில் ஓட்ட மார்க்கம் அனுமதிக்கிறது.

முதலாவது கலீஃபா அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் மார்க்கத்தை முழுமையாக ஏற்காது தடுமாறிக் கொண்டிருந்தவர்களிடம் கூறியது என்றென்றும் நினைவுகூரத் தக்கதாகும். ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகைக்கும் ஜகாத்துக்குமிடையே பிரித்துப் பார்ப்பவனோடு நிச்சயமாக நான் போரிடுவேன்.''

தொழுகை மற்றும் ஜகாத்துக்குமிடையே உள்ள உறுதியான தொடர்பை மிக ஆழமாக அறிந்ததனால்தான் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் இவ்வாறு சத்தியமிட்டார்கள். திருமறையின் பல வசனங்களில் தொழுகை ஜகாத் இணைத்தே கூறப்பட்டுள்ளன.

இன்னும் எவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தையும் கொடுத்து வருகின்றனரோ.... (அல்குர்ஆன் 5:55)

நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (அல்குர்ஆன் 2:43)

எவர்கள் விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்து தொழுகையைக் கடைப்பிடித்தும் ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ.... (அல்குர்ஆன் 2:277)

உண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அவர் நோன்பின் மாண்புகளைப் புரிந்து நோன்புக்கு பொருத்த மற்ற, நன்மையை அழித்துவிடும்படியான அனைத்து தவறுகளி லிருந்தும் தனது நாவு, கண் மற்றும் அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் அருவருப்பான பேச்சுகளைப் பேசவேண்டாம், கூச்சலிட வேண்டாம். எவரேனும் திட்டினால் அல்லது சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி' என்று அவர் கூறட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் பாவமான சொல், செயலிலிருந்து விலகிக்கொள்ளவில்லையோ அவர் உணவு, பானத்தைத் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தேவையுமில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)

தன்னை நிழலிட்டுள்ள இம்மாதம் ஏனைய மாதங்களைப் போன்றதல்ல. இது நோன்பின் மாதம். நோன்பு அல்லாஹ்வுக்குரியது. அவனே கூலி கொடுக்கிறான். எவ்வித தேவையுமற்ற உபகாரியான அல்லாஹ்வின் கூலி மகத்தானது, பூரணமானது, விசாலமானது என்ற உறுதியான நம்பிக்கை நோன்பாளியின் மனதிலிருந்து மறைந்துவிடக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஆதமுடைய மகனின் அனைத்து நற்செயலுக்கும் பத்திலிருந்து இரட்டிப்பான எழுநூறு மடங்குவரை நன்மையளிக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: ‘‘நோன்பைத் தவிர, அது எனக்குரியது. நானே அதற்கு கூலிக் கொடுக்கிறேன். அவன் மனோ இச்சையையும் உணவையும் எனக்காகவே விலக்கினான்.''

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி; மறுமையில் தனது இறைவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி.

நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூயின் வாசத்தைவிட மணமிக்கது'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால் மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் பரக்கத் பொருந்திய இம்மாதத்தின் நேரங்களை பொன்னாகக் கருதி, அதன் பகல் காலங்களில் நோன்பு, தொழுகை, குர்ஆன் ஓதுதல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களிலும் இரவுகளில் தஹஜ்ஜத் தொழுகை மற்றும் துஆவிலும் ஈடுபடவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் ரமழானில் மற்ற காலங்களைவிட மிக அதிகமாக வணக்கம் புபவர்களாக இருந்தார்கள். அதிலும் ரமழானின் இறுதிப் பத்தில் மிக அதிகமாக வணக்கம் புரிந்து வந்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘‘நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களைவிட ரமழானில் அதிகமாக அமல் செய்வார்கள். குறிப்பாக ரமழானின் ஏனைய நாட்களைவிட பிந்திய பத்து நாட்களில் அதிகம் அமல் செய்வார்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்தில் நுழைந்துவிட்டால் முழு இரவும் வணங்குவார்கள், குடும்பத்தினரையும் விழிக்கச் செய்வார்கள், தங்களது ஆடையை இறுக்கக் கட்டி உற்சாகத்துடன் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு ஏவுவார்கள். ‘‘ரமழானின் கடைசிப் பத்தில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

என்று கூறி அந்த இரவில் நின்று வணங்க ஆர்வமூட்டுவார்கள்.

மேலும் கூறினார்கள்: ‘‘ரமழானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

மேலும் கூறினார்கள்: ‘‘எவர் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குவாரோ அவரது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் மகத்துவமிக்க இம்மாதம் தூய்மையான வணக்கங்கள் புவதற்கு ஏற்ற மாதமாகத் திகழ்கிறது. இம்மாத இரவுகளில் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, ஃபஜ்ரு நேரம் உதயமாவதற்கு சற்றுமுன் சில கவளங்களைச் சாப்பிட்டுவிட்டு, படுக்கைக்குச் சென்று ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி, ஃபஜ்ருத் தொழுகையைத் தவறவிடுவது முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற செயலாகும்.

இறையச்சமுள்ள, மார்க்க நெறிகளை அறிந்த முஸ்லிம் தராவீஹ் தொழுகையை முடித்துவிட்டால் விழித்திருக்காது உறங்கச் செல்ல வேண்டும். சிறிது நேர தூக்கத்திற்குப் பிறகு இரவுத் தொழுகைக்காக எழுந்து தொழுதுவிட்டு ஸஹருடைய உணவை உண்ண வேண்டும். பின்னர் ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்ற பள்ளியை நோக்கிச் செல்ல வேண்டும்.

ஸஹர் உணவில் மிக அதிகமான நன்மைகள் இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை வலியுறுத்தி, ‘‘ஸஹர் செய்யுங்கள்! நிச்சயமாக ஸஹர் உணவில் பரக்கத் இருக்கிறது'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

காரணம் என்னவெனில், ஸஹர் நேரத்தில் விழித்தெழுவது இரவில் நின்று வணங்க வாய்ப்பை ஏற்படுத்தும். ஃபஜ்ரு தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் பள்ளியை நோக்கி நடக்கச் செய்வதுடன், நோன்பு நோற்க உடல் வலிமையையும் தருகிறது. இதை நபி (ஸல்) அவர்கள் தானும் செய்து தனது தோழர்களுக்கும் பயிற்சியளித்தார்கள்.

ஜைது இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் ‘‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹர் உணவை உண்டோம். பிறகு தொழுகைக்குச் சென்றோம்'' என்று கூறினார்கள். ஒருவர் ‘‘அந்த இரண்டுக்கும் மத்தியில் எவ்வளவு நேரம் (இடைவெளி) இருந்தது?'' என்று கேட்டார். ‘‘50 ஆயத்துகள் (ஓதும் நேரம்)'' என ஜைது (ரழி) பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இறையச்சமுடைய முஸ்லிம் ரமழான் அல்லாத மாதங்களிலுள்ள நஃபிலான நோன்புகளைத் தவறவிடக்கூடாது. அரஃபா நாள் (துல்ஹஜ் பிறை 9) மற்றும் முஹர்ரம் பிறை 9,10 போன்ற காலங்களில் நோன்பு நோற்பது பாவங்களைத் துடைத்தெறியும் சிறந்த அமலாகும்.

இது குறித்த நபிமொழிகள்:

அபூ கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் அரஃபா நாளின் நோன்பைப்பற்றி கேட்கப்பட்டபோது, ‘‘அது கடந்த ஒரு வருடம் மற்றும் வரக்கூடிய ஒரு வருடப் பாவங்களுக்கு பரிகாரமாகும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளின் நோன்பை நோற்றார்கள்; அதைப் பிறருக்கும் ஏவினார்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஆஷுரா நாளின் நோன்பைப் பற்றி கேட்கப்பட்ட போது: ‘‘அது சென்றுபோன வருடத்துக்கு பரிகாரமாகும்'' எனக் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நான் வரும் ஆண்டு உயிருடன் இருந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அவ்வாறே ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதும் சிறந்த அமலாகும். அந்த நோன்பின் மாண்பைப்பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் தொடர்ச்சியாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது முஸ்தஹபாகும். இது குறித்து அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரக்அத் ளுஹா தொழுவது மற்றும் தூங்கச் செல்லுமுன் வித்ரு தொழுவது என்ற மூன்று விஷயங்களை எனது நேசராகிய நபி (ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத் செய்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூதர்தா (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘‘எனது நேசர் எனக்கு மூன்று விஷயங்களை உபதேசம் செய்தார்கள். நான் மரணிக்கும்வரை அதை விடவே மாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ளுஹா தொழுவது இன்னும் வித்ரு தொழாதவரை நான் தூங்காமலிருப்பது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வருடம் முழுவதும் நோற்பது போன்றாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்ட மூன்று நாள்கள் என்பது ஒவ்வொரு மாதத்தின் பிறை 13, 14, 15வது நாட்களைக் குறிக்கும். அதனை அய்யாமுல் பீழ் என்று கூறப்படும். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் எந்த நாட்களையும் மூன்று நோன்புக்காக குறிப்பாக்காமல் நோற்றதற்கான ஆதாரங்களும் உள்ளன.

முஆதத்துல் அதவிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் ‘‘நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பிருந்தார்களா?'' என்று கேட்டேன். அன்னையவர்கள் ‘‘ஆம்!'' என்றார்கள். ‘‘மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்றார்கள்?'' எனக் கேட்டேன். ‘‘மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்பது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை'' என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

மார்க்கத்தின் நெறிகளைப் பேணிக்கொள்ளும் முஸ்லிம், ஹஜ்ஜுக்குச் சென்றுவரும் வசதியைப் பெற்றிருந்தால் அதன் மீது தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். அந்தப் பரிசுத்த ஆலயத்துக்குச் செல்லும்முன் ஹஜ்ஜின் சிறிய, பெரியஅனைத்து சட்டங்களையும் முழுமையாக அறிந்து, இந்த மகத்தான கடமையின் தத்துவமென்ன என்று விளங்கி அதன் கிரியைகளைப் பூரணமாக நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் மனதின் சலனங்களிலிருந்து அகன்று, ஈமானின் நிம்மதியைப் பெற்று, இஸ்லாமின் மறுமலர்ச்சியை உணர்ந்து கொள்வார்.

இந்த அங்கீகரிப்பட்ட ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு தனது ஊர் மற்றும் குடும்பத்தனரிடம் திரும்புகிறவர் அவன் தாய் அவரை பெற்றெடுத்த தினத்தில் இருந்ததுபோல் பாவங்கள் நீங்கியவராக திரும்புகிறார். பைத்துல்லாஹ்வை மையமாகக்கொண்டு உலகின் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த மகத்தான மார்க்கத்தின் மாண்புகளைப் புரிந்து, தனது இதயத்தை ஈமானால் நிரப்புகிறார்.

ஏனெனில், ஹஜ் என்பது முஸ்லிம்களின் உலகளாவிய மாநாடாகும். ஹஜ்ஜைத் தவிர வேறு எங்கும் இம்மாதியான மாநாட்டை உலகம் கண்டிராது. ஹாஜிகள் பல்வேறு இனம், நிறம், மொழியுடையவர்களாக இருந்தும் எவ்வித ஏற்றத் தாழ்வுமின்றி மிகப் பெயரிவனான ஏக இறைவனாம் அல்லாஹ்வைப் புகழ்ந்து தஸ்பீஹ், தக்பீர், தஹ்லீல் மற்றும் தல்பியாவை முழங்குகிறார்கள்.


அல்லாஹ்விடம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவார்

இவ்வுலகில் தனக்கு அருளப்பட்ட அனைத்தும் தனது இரட்சகனை வணங்குவதற்காகத்தான் என்பதில் முஸ்லிம் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பார்.

(எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)

இப்பிரபஞ்சத்தைச் செழிப்பாக்குவதிலும், புவியில் அல்லாஹ்வின் ஏகத்துவ கலிமாவை உறுதிப்படுத்துவதிலும், வாழ்வில் இஸ்லாமிய நெறிமுறையைக் கொண்டுவருவதிலும் அவன் எடுக்கக்கூடிய ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான முயற்சியிலும் அல்லாஹ்வை வணங்குவதே அவனது நோக்கமாக இருக்க வேண்டும். நாம் அல்லாஹ்வை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்க வேண்டும். அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்விடம் மனிதன் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தி தனது அனைத்து செயலிலும் அவனது திருப்தியையே நோக்கமாகக் கொள்ள வேண்டும். இறைவழியிலேயே தனது செயல்கள் அனைத்தும் அமைந்துள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம் செய்யும் இறைவணக்கங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இப்புவியில் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதும் அவனது வழிமுறையை வாழ்வில் பின்பற்றுவதும்தான். இவ்வாறு, தனிமனிதன் குடும்பம், சமூகம், நாடு என வாழ்க்கையின் அனைத்திலும் அல்லாஹ்வின் மார்க்கமே ஆட்சி செய்யவேண்டும்.

மனிதஇனம் மற்றும் ஜின் வர்க்கத்தை எந்த இலட்சியத்துக்காக அல்லாஹ் படைத்தானோ, அந்த மகத்தான இலட்சியத்தை உறுதிப் படுத்துவதில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் தனது இறைவணக்கங்கள் குறையற்றதாக அமையும் என்பதை முஸ்லிம் உணர்ந்துகொள்ள வேண்டும். மனித, ஜின் வர்க்கத்தை அல்லாஹ் படைத்தது (ம்இஃலாவு கலிமதில்லாஹ்') புவியில் அல்லாஹ்வின் கலிமாவை உயர்ந்தோங்கச் செய்வதற்காகத்தான். ஏனெனில் அதன்மூலமே மனிதகுலம் அல்லாஹ்வை வணங்குகிறது என்பதை உறுதிப்படுத்த முடியும்.

(எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)

இதுதான் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைப் பற்றிய நேரான பார்வையாகும். இக்கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும்போது முஸ்லிம் இறைத்தூதைச் சுமந்தவன் என்று விளங்கிக் கொள்ளலாம். மேலும் முஸ்லிம், வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து நடக்க வேண்டும். அந்தத் தூதுத்துவத்தையும், அவனது கட்டளைகளையும் ஏற்காதவரை அவனுடைய இஸ்லாம் பூரணத்துவம் பெறாது. தனது நடைமுறை வாழ்வில் அதை உறுதிப்படுத்தி மனத்தூய்மையுடன் செயல்படுத்தாத வரை அவனது வணக்கங்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக செய்யப்பட்டதல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இந்தத் தூதுத்துவம்தான் முஸ்லிம் தன்னை இஸ்லாமைச் சேர்ந்தவன் என்று சொல்வதற்குரிய சரியான அடையாளமாகும். அதுமட்டுமே அல்லாஹ்வின் பாதையில் போராடும் வாய்மைமிக்க முஸ்லிம்களின் அந்தஸ்தில் அவரை சேர்ப்பிக்கிறது. அதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகோலுகிறது. மேலும் மனிதன் இப்புவியில் படைக்கப்பட்டதற்கான, ஏனைய படைப்பினங் களைவிட மேன்மை பெற்றதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்துகிறது.

ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தாம் அவர்களைச் சுமந்து செல்லும்படி செய்கிறோம். நல்ல ஆகாரங்களையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற ஜீவராசிகளில்) அநேகவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம். (அல்குர்ஆன் 17:70)

வசந்தகால தென்றலை எதிர்கொள்வதுபோல் உண்மை முஸ்லிம் இந்தத் தூதுத்துவத்தை மனமகிழ்வோடு ஏற்றுக் கொள்வதில் எவ்வித புதுமையும் இல்லை. அதன் உயர்வுக்காக தனது அனைத்து முயற்சி களையும் செல்வங்களையும் நேரத்தையும் அர்ப்பணிப்பார். அதுதான் அவரது தனித்தன்மையான வாழ்வுக்கும் அல்லாஹ்வை நெருங்கி இருப்பதற்கும் அடையாளமாகும். அதைத்தவிர வாழ்வில் எந்த சுவையும் கிடையாது. அதுவன்றி வாழ்வதில் அர்த்தமேயில்லை. அதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்து முன்னேறிச் செல்வதைத் தவிர அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்கான வழி ஏதுமில்லை.

மார்க்க அழைப்புப் பணியே உண்மை முஸ்லிம் நிலைநாட்ட வேண்டிய அமல்களில் மகத்தானதாகும். அல்லாஹ்வின்பால் நெருக்கி வைக்கும், அவனது திருப்பொருத்தத்தைப் பெற்றுத்தரும் உன்னத மான நற்செயலாகும். எனவே உண்மை முஸ்லிம் இந்த அழைப்புப் பணிக்கு உதவுவதிலும் இதன் மகத்தான இலட்சியங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதிலும் தொடர்ந்து முயலவேண்டும். அதைத் தவிர வேறெந்த இலட்சியத்தையும் நோக்கமாக கொள்ளக்கூடாது.


அதிகமாக குர்ஆன் ஓதுவார்

ஈமான் என்ற இந்த உயரிய அந்தஸ்தை அடைவதற்காக முஸ்லிம் பரிசுத்த திருக்குர்ஆனின் நிழலில் இளைப்பாறுவதை வழமையாக்கி, நேர்வழியின் தென்றலை சுவாசித்து நன்மையின் உச்சத்தை அடைவார். அதன் வசனங்களை இறையச்சத்துடன் இரவு பகலில் அதிகமதிகம் ஓதி அவைகளை ஆழ்ந்து சிந்திப்பார். அதற்காக குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்குவார். தனது இரட்சகனுடன் உரையாடி, அவனின் வேத கருத்துக்களை ஏற்று, இதயத்தைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு தனது ஈமானையும் மன நிம்மதியையும் அறிவாற்றலையும் அதிகரித்துக் கொள்வார்.

அல்லாஹ்வின் திருநாமத்தை நினைவு கூர்வதால் (உண்மை விசுவாசிகளின்) இதயங்கள் நிச்சயமாக நிம்மதியடையும் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்ளும். (அல்குர்ஆன் 13:28)

இறையச்சமுள்ள முஸ்லிம், நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அழகிய முறையில் குர்ஆனை அணுக வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘திருக்குர்ஆனை ஓதுகின்ற முஃமினின் நிலை ஆரஞ்சுப் பழத்தைப் போன்றதாகும். அதன் சுவையும் நன்று. வாசனையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்துகொண்டு) குர்ஆன் ஓதாத முஃமின் பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று. (ஆனால்) அதற்கு வாசனை கிடையாது. நயவஞ்சகனாக இருந்து கொண்டு, குர்ஆனையும் ஓதி வருகிறவனின் நிலையானது துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று, சுவையோ கசப்பு. நயவஞ்சகனாக இருந்து கொண்டு குர்ஆனை ஓதாமலிருப் பவனின் நிலையானது குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘‘நீங்கள் குர்ஆனை (அதிகமதிகம்) ஓதுங்கள். அது அதை ஓதியோருக்கு மறுமை நாளில் சிபாரிசு செய்யும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ‘‘குர்ஆனை நன்கறிந்து ஓதுபவர் மறுமை நாளில் மிக கண்ணியமான நல்லோர்களுடன் இருப்பார். குர்ஆனை ஓதும்போது சிரமத்துடன் திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதற்குப் பிறகும் ஓர் உண்மையான முஸ்லிம் திருக்குர்ஆனை ஓதி அதன் கருத்துகளைச் சிந்திப்பதிலிருந்து அலட்சியமாக இருந்துவிட முடியுமா என்ன?

ஆழ்ந்த இறைநம்பிக்கை, நிரந்தரமான நற்செயல்கள், எப்போதும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்நோக்கல், அல்லாஹ்விடம் தனது அடிமைத்தனத்தையும் உறுதிப்படுத்துதல் ஆகியவையே ஒரு முஸ்லிம் தனது இரட்சகனுடன் கொள்ளவேண்டிய தொடர்பாகும்.

(எனக்கு வழிப்பட்டு என்னை) வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)

முஸ்லிம்கள் மனிதர்களில் சிறந்தவர்களாகத் திகழ வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. தங்களது நடை, உடை, பாவனையில், கொடுக்கல், வாங்கல் மற்றும் ஏனைய செயல்களில் தனித்தன்மைமிக்க அழகிய வழிகாட்டிகளாகத் திகழவேண்டும். அப்போதுதான் மனிதர்களுக்கான தூதுத்துவத்தை சுமந்துகொள்வதற்கான சக்தியை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இப்னு ஹன்ளலிய்யா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை பிரயாணத்திலிருந்து தங்களது தோழர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது கூறினார்கள்: ‘‘நீங்கள் உங்கள் சகோதரர்களை சந்திக்கச் செல்கிறீர்கள். உங்களது வாகனத்தின் சேணங்களை சரிசெய்து, ஆடைகளை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் மனிதர்களில் தனித்தன்மை கொண்டவர்களாக காட்சியளிக்க முடியும். நிச்சயமாக அல்லாஹ் அசிங்கமானதையும் அருவருப்பானதையும் நேசிப்பதில்லை.'' (ஸுனன் அபூதாவூத்)

இங்கு நபி (ஸல்) அவர்கள் பதாபத் தோற்றம், கிழிந்த ஆடைகள் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய நிலையை இஸ்லாம் வெறுக்கிறது.

உண்மை முஸ்லிம் இவ்வுலகின் மாபெரும் கடமைகளைச் சுமக்கும் நிலையிலும் தன்னை மறந்துவிடமாட்டார். ஏனெனில், ஒரு முஸ்லிமின் வெளிரங்கம் அவரது உள்ரங்கத்திலிருந்து மாறுபட்டிருக்கக் கூடாது.

உண்மை முஸ்லிம் தனது உடல், அறிவு, ஆன்மாவுக்கு மத்தியில் சமத்துவத்தைப் பேண வேண்டும். ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய உரிமையைக் கொடுக்க வேண்டும். ஒன்றைவிட மற்றொன்றை உயர்த்தி விடக்கூடாது. இதுபற்றி நடுநிலையை வலியுறுத்திய நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியைக் காண்போம்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எனது அளவுக்கதிகமான வணக்கங்களைப்பற்றி அறிந்து, என்னிடம் ‘‘நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குவதாக நான் கேள்விப்பட்டேனே?'' என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம் இறைத்தூதரே!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘அவ்வாறு செய்யாதீர்கள். நோன்பு வையுங்கள்; நோன்பின்றியும் இருங்கள். தொழவும் செய்யுங்கள்; தூங்கவும் செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் உடலுக்கும், உங்கள் இரு கண்களுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களை சந்திக்க வருபவர்களுக்கும் நீங்கள் செலுத்தவேண்டிய கடமைகள் உள்ளன'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)


முன்மாதிரி முஸ்லிம் - முஸ்லிம் தனது நஃப்ஸுடன் 

உண்பது குடிப்பதில் நடுநிலையானவர்

உடற்பயிற்சி செய்து வருவார்

உடல், உடையில் தூய்மையானவர்

அழகிய தோற்றமுடையவர்

மரணிக்கும்வரை கற்பார்

முஸ்லிம் தெளிவாக அறிய வேண்டியவை

குறிப்பிட்ட ஒரு துறையில் ஆழ்ந்த அறிவு பெற்றிருப்பார்

தனது சிந்தனையை விரிவுபடுத்துவார்

பிறமொழியை ஆழ்ந்து அறிவார்

வணக்கங்களால் ஆன்மாவைப் பிரகாசிக்கச் செய்வார்

ஈமானின் சபைகளையும் சான்றோர்களையும் நெருங்கியிருப்பார்

ஹதீஸில் கூறப்பட்ட துஆக்களை அதிகமாக ஓதி வருவார்


முஸ்லிம் தனது உடல், அறிவு, ஆன்மா ஆகியவற்றுக்கிடையே சமத்துவத்தைப் பேணுவார்

அ - அவரது உடல் நலம்


உண்பது, குடிப்பதில் நடுநிலையானவர்

முஸ்லிம் தனது உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உண்பது, குடிப்பதில் நடுநிலையைப் பேணுவார். உணவை பேராசையுடன் அணுகவும் மாட்டார், முற்றிலும் குறைக்கவும் மாட்டார். அவரது முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கவேண்டும், அவரது வலிமையும், ஆரோக்கியமும் உற்சாகமும் காக்கப்பட வேண்டும். இதுவே உணவுக்கான அளவுகோலாகும்.

(இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள் பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அளவு கடந்து (வீண்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7:31)

உண்பது, குடிப்பதில் நடுநிலையை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஆதமுடைய மகன் நிரப்பும் பைகளில் மிகக் கெட்டது அவனது வயிறாகும். சாப்பிடுவதாக இருந்தால் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியைக் குடிப்பதற்கும் மூன்றாவது பகுதியை மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்.'' (ஸுனனுத் திர்மிதி)

உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘வயிறு நிரம்ப உண்பது மற்றும் குடிப்பதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். ஏனெனில் அது ஆரோக்கியத்தைப் பாதித்து நோய்களை உருவாக்கும் தொழுகையில் சோம்பலை ஏற்படுத்தும். அந்த இரண்டிலும் நடுநிலையை மேற் கொள்ளுங்கள். அது உடலை சீர்படுத்தி வீண் விரயத்தைத் தவிர்க்கும். நிச்சயமாக அல்லாஹ் கொழுத்த உடல்களை முற்றிலும் வெறுக்கிறான். நிச்சயமாக மனிதன் மார்க்கத்தைவிட தனது மனோ இச்சையைத் தேர்ந்தெடுத்தால் அழிந்து விடுவான்.'' (அல் கன்ஜ்)

முஸ்லிம் போதைப் பொருட்களையும், செயற்கை உற்சாகத்தை அளிக்கும் மருந்துகளையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அவைகளில் ஹராமானவைகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். விரைவாக உறங்கி விரைவாக எழுந்திட வேண்டும். நோய்க் காலங்களில் மட்டுமே மருந்து சாப்பிட வேண்டும். அவரது வாழ்க்கை முறையே இயற்கையான உற்சாகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் காரணமாக அமைய வேண்டும்.

உடல் வலிமைமிக்க முஃமின் பலவீனமான முஃமினைவிட அல்லாஹ்வுக்கு மிக உவப்பானவர் என்பதை உண்மை முஸ்லிம் விளங்கிக் கொள்ளவேண்டும். இதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப் படுத்தியுள்ளார்கள். எனவே உடல் வலிமையைப் பேண தனது வாழ்வில் ஆரோக்கிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.


உடற்பயிற்சி செய்து வருவார்

முஸ்லிம் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட இன்னும் உடலுக்குத் தீங்கிழைக்கும் அனைத்து வகையான உணவு, பானங்களை ஒதுக்கி விடுவார். இரவில் வீணாக விழித்திருப்பது போன்ற உடலையும் உள்ளத்தையும் பலவீனப்படுத்தும் தீய பழக்கங்களிலிருந்து தவிர்ந்திருப்பார். இதனால் அவர் வலிமையும் ஆரோக்கியமும் உடையவராக இருப்பார். மேலும் தனது உடலுக்கு அதிக வலிமை சேர்க்க முயற்சி செய்து வருவார். தனக்குத் தானே ஓர் ஆரோக்கிய வழிமுறையை வகுத்துக் கொண்டு அதுவே போதுமென்று இருக்கமாட்டார். அவரது சமூக அமைப்பு, வயது, உடல் நலனுக்கேற்ப உடற்பயிற்சியைக் கற்று ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்ளவேண்டும்.

முறையான உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது அழகிய உடலமைப்பைப் பெற்றுத்தரும். உடற்பயிற்சிக்கான நேரங்களை குறிப்பாக்கிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் உடற்பயிற்சியின் முழுப்பலனையும் அடைந்துகொள்ள முடியும். இது அனைத்தும் எல்லாக் காலங்களிலும் நடுநிலையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பதன் மூலமே சாத்தியமாகும்.


உடல், உடையில் தூய்மையானவர்

இஸ்லாம் விரும்பும் உண்மை முஸ்லிம், மக்களிடையே மிகத் தூய்மையானவராக இருக்க வேண்டும். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் சிறந்த முறையில் குளித்து மணம் பூசிக்கொள்ள வேண்டுமெனவும், குறிப்பாக ஜுமுஆ நாளில் அதைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்கள்.

‘‘நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இல்லையென்றாலும் ஜுமுஆ நாளில் குளித்து, தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்! மணம் பூசிக் கொள்ளுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குளித்து தூய்மையாக இருப்பதைப் பற்றி மிகவும் வலியுறுத்தியதால் சில இமாம்கள் ஜுமுஆ தொழுகைக்காக குளிப்பது வாஜிப் எனக் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒவ்வொரு முஸ்லிமும் வாரத்தின் ஏழு நாட்களில் ஒரு நாள் குளித்துக்கொள்வது கடமையாகும். அப்போது தனது தலையையும் உடலையும் கழுவிக் கொள்வாராக!'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம் தனது ஆடை, காலுறைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கால்கள் மற்றும் உடலில் வெறுக்கத்தக்க துர்நாற்றம் வருவதை அவர் விரும்பமாட்டார். நறுமணத்தின் துணையுடன் அதை தவிர்த்துக் கொள்வார்.

அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்கள் ‘‘ஒருவர் தன் செல்வத்தின் மூன்றில் ஒரு பகுதியை வாசனைத் திரவியங்களுக்காகச் செலவிட்டாலும் அவர் வீண் விரயம் செய்தவராகமாட்டார்'' என்று கூறி அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்.

பேணுதலான முஸ்லிம் ஒவ்வொரு நாளும் மிஸ்வாக், பிரஷ் போன்ற சாதனங்களின் மூலம் தனது வாயைத் தூய்மைப்படுத்தி பிறருக்கு நோவினை தரும் வாயின் துர்நாற்றத்தை அகற்றிடவேண்டும். வருடத்தில் ஒருமுறையேனும் பல் மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும். அவ்வாறே தேவை ஏற்பட்டால் காது, மூக்கு, தொண்டை மருத்துவடமும் சிகிச்சை பெறவேண்டும்.

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் இரவிலோ பகலிலோ தூங்கினால் விழித்த உடன் உளுவுக்கு முன் மிஸ்வாக் செய்வார்கள்.'' (ஸுனன் அபூதாவூத்)

வாயை தூய்மையாக வைத்திருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மிகுந்த முக்கியத்துவமளித்துக் கூறினார்கள்: ‘‘எனது உம்மத்தினருக்கு சிரமம் ஏற்படாது என்றிருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கும் மிஸ்வாக் செய்யும்படி அவர்களை நான் ஏவியிருப்பேன்.'' (ஸஹீஹுல் புகாரி)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் ‘‘நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் எந்தக் காரியத்தை முதன் முதலாகச் செய்வார்கள்?'' என்று கேட்கப்பட்டபோது, அன்னையவர்கள் ‘மிஸ்வாக்' என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

மிஸ்வாக் என்பது இஸ்லாமின் கௌரவச் சின்னமாக இருந்தும் சில முஸ்லிம்கள் இது விஷயத்தில் அலட்சியம் காட்டுவது வருந்தத்தக்கதாகும். அவர்கள் தங்களது, உடல், ஆடை மற்றும் வாயின் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால் அவர்கள் இறையில்லங்கள் மற்றும் மார்க்க உபதேச சபைகள், கல்வி மற்றும் ஆலோசனை அரங்குகளில் பங்கேற்கிறார்கள். அவர்களிடமிருந்து வெளிப்படும் துர்நாற்றம் சபையோரைத் துன்புறுத்துகிறது. இறையருள் இறங்கும் இவ்வாறான சபைகளில் சூழ்ந்துகொள்ளும் மலக்குகளையும் வெறுப்படைய செய்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பூண்டு, வெங்காயத்தை சாப்பிட்டுவிட்டு மஸ்ஜிதுக்குள் நுழையக் கூடாது அது மனிதர்கள், மலக்குகளுக்கு நோவினை ஏற்படுத்தும் என்ற நபிமொழியை அன்றாடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘வெங்காயம், பூண்டு, உள்ளியை சாப்பிட்டவர் நமது மஸ்ஜிதை நெருங்க வேண்டாம். ஏனென்றால், மனிதர்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் விஷயங்களால் மலக்குகளும் சங்கடம் அடைகிறார்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கெட்ட வாடையுடைய சில காய்களை சாப்பிட்டவர்கள் மஸ்ஜிதுக்குள் நுழையத் தடை விதித்தார்கள். அவர்களது துர்நாற்றமுள்ள வாடையால் மனிதர்கள், மலக்குகள் நோவினை அடையக்கூடாது என்பதுதான் தடைக்குக் காரணமாகும்.

பொடுபோக்கும், அலட்சியமும் உடைய சிலரின் வாய்நாற்றம் அருவருப்பை ஏற்படுத்துகிறது. உடல் மற்றும் அழுக்கடைந்த ஆடைகள், காலுறைகள் இவைகளிலிருந்து வெளிப்படும் கெட்ட வாடையாலும் பலர் பாதிப்படைகின்றனர்.

அஹ்மது மற்றும் நஸாஈ (ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரழி) அவர்களிடமிருந்து ஒரு நபிமொழியை அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எங்களைச் சந்திக்க வந்தபோது அழுக்கடைந்த ஆடை அணிந்திருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘‘தனது ஆடையைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் (சாதனம்) எதுவும் இம்மனிதருக்குக் கிடைக்கவில்லையா?'' என்று கேட்டார்கள்.

தனது ஆடையைத் தூய்மையாக வைத்திருப்பதற்கான வசதியைப் பெற்றிருந்தும் அழுக்கடைந்த ஆடைகளுடன் மக்களிடையே வருபவர்களை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள். முஸ்லிம்கள் தூய்மையான ஆடை, அழகிய, கம்பீரமான தோற்றத்துடனேயே எப்போதும் காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒருவர் தான் வழமையாக அணியும் கீழாடை, மேலாடையைத் தவிர முடிந்தால் ஜுமுஆ நாளுக்காக மற்றொரு ஆடையைத் தயார் செய்து கொள்ளட்டும்.'' (ஸுனன் அபூதாவூத்)

இஸ்லாம் மனிதர்களை எல்லா நிலையிலும் தூய்மையைப் பேணி நடக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. தூய்மையான நறுமணப் பொருட்களின் மூலம் உடலில் நறுமணம் கமழச் செய்வது அவசியமாகும். இதுவே நபி (ஸல்) அவர்களின் நடைமுறையாக இருந்தது.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களின் உடலிலிருந்து வெளியான நறுமணத்தைவிட அதிக நறுமணமுடைய கஸ்தூரியையோ அம்பரையோ வேறெந்த நறுமணப் பொருளையோ நான் நுகர்ந்ததேயில்லை.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் உடல் மற்றும் ஆடைகளின் தூய்மை குறித்தும், அவர்களது வியர்வையின் நறுமணம் குறித்தும் பல சான்றுகள் காணக் கிடைக்கின்றன. அன்னார் எவரையேனும் முஸாஃபஹா (கைலாகு) செய்தால் அன்றைய நாள் முழுவதும் அவரது கரத்தில் நறுமணம் கமழும். அவர்கள் குழந்தைகளின் தலைமீது அன்புடன் தடவிக்கொடுத்தால் அக்குழந்தைகளிடமிருந்து நறுமணம் வீசும்.

ஜாபிர் (ரழி) அவர்கள் வழியாக இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது ‘தாரீகுல் கபீர்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் ஒரு வீதியில் நடந்து சென்றால் அதற்குப்பின் அந்த வீதியில் நடப்பவர் அங்கு எழும் நறுமணத்தைக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றதை அறிந்து கொள்வார்.''

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரழி) அவர்களின் இல்லத்தில் உறங்கினார்கள். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறியது. அனஸ் (ரழி) அவர்களின் அன்னையார் ஒரு பாட்டிலைக் கொண்டுவந்து அதில் அந்த வியர்வையை சேகத்தார்கள். அதுபற்றி நபி (ஸல்) அவர்கள் வினவியபோது அவர் ‘‘இது உங்களது வியர்வை; இதை நாங்கள் எங்களது வாசனைத் திரவியங்களில் சேர்த்துக் கொள்வோம்'' என்றார்கள். அந்த அளவு அது மிகச் சிறந்த வாசனைத் திரவியமாக இருந்தது. (ஸஹீஹ் முஸ்லிம்)

தலைமுடி பற்றியும் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல் உண்டு. அதை சீர்செய்து இஸ்லாம் கற்பித்த நெறியின் அடிப்படையில் அழகுபடுத்திக் கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘எவருக்கு முடி இருக்கிறதோ அதற்கு அவர் கண்ணியமளிக்கட்டும்.'' (ஸுனன் அபூதாவூது)

இஸ்லாமியப் பார்வையில் முடியைக் கண்ணியப்படுத்துவது என்றால் அதைத் தூய்மைபடுத்துவது, எண்ணெய் தேய்ப்பது, சீவிக் கொள்வது மற்றும் அழகிய வடிவில் அதைப் பேணுவதைக் குறிக்கும்.

தலைவிரி கோலமாக வரண்டுபோன தலைமுடியைத் தொங்கவிட்டுக் கொண்டு மக்களிடையே வருவது சபிக்கப்பட்ட ஷைத்தானின் உருவத்துக்கு ஒப்பாகிவிடும் என்ற காரணத்தால் நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள்.

அதா இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாக இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தனது முவத்தாவில் குறிப்பிடுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் தலைவிரி கோலமாக ஒழுங்கற்ற தாடியுடன் உள்ளே நுழைந்தார். அவரை நோக்கிய நபி (ஸல்) அவர்கள் அவரது தலைமுடியையும் தாடியையும் சீர்செய்து கொள்ளும்படி தனது திருக்கரத்தால் சைக்கினை செய்தார்கள். அவர் சீர்செய்துவிட்டுத் திரும்பினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்களில் ஒருவர் ஷைத்தானைப் போன்று தலைவிரிகோலமாக வருவதைவிட இப்படி வருவது சிறந்ததல்லவா?'' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தலைவிரிகோலமாக இருப்பதை சபிக்கப்பட்ட ஷைத்தானுடன் ஒப்பிட்டது, முஸ்லிம் அழகும் கம்பீரமும் உடையவராக தோற்றமளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவதும், அசிங்கமாக, அருவருப்பாக தோற்றமளிப்பதை வெறுத்ததும்தான் காரணமாகும்.

மனிதன் தனது தோற்றத்தில் அழகையும் கம்பீரத்தையும் வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்துவதை நபி (ஸல்) அவர்கள் வழமையாகக் கொண்டிருந்தார்கள். எவரேனும் தலைமுடியை சீர்செய்து கொள்ளாமல் அலட்சியமாக இருந்தால் அவர்மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை எங்களை சந்திக்க வந்தார்கள். அப்போது தலைமுடி கலைந்து தலைவிரிகோலமான ஒரு மனிதரைக் கண்டார்கள். அப்போது ‘‘இம்மனிதருக்கு தனது தலைமுடியை சீர்படுத்திக் கொள்ளும் (சாதனம்) எதுவும் கிட்டவில்லையா?'' என்று கேட்டார்கள். (முஸ்னத் அஹ்மத்)


அழகிய தோற்றமுடையவர்

உண்மை முஸ்லிம் ஆடம்பரமோ வீண்விரயமோ இல்லாமல் தனது ஆடைகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் அழகிய வடிவுடன் தூய்மையுடன் தோற்றமளிக்கவேண்டும். அப்போதுதான் அவரைக் காண்பவர்களின் கண்கள் குளிர்ச்சியடையும் இதயங்கள் அவரை நேசிக்கும். மக்களிடையே வரும்போது இழிந்த தோற்றத்தில் இல்லாமல் தன்னை முறையாக அழகுபடுத்திக்கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தங்களின் குடும்பத்திற்காக தங்களை அழகுபடுத்திக் கொள்வதைவிட தோழர்களைச் சந்திக்கச் சென்றால் அதிகமாக அழகுபடுத்திக் கொள்வார்கள்.

(நபியே!) கூறுங்கள். அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும் பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்? (அல்குர்ஆன் 7:32)

இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கான விரிவுரையில் குறிப்பிடுகிறார்கள்: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களைக் காண சில தோழர்கள் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரத்தயாரானபோது வீட்டில் நீர்நிரம்பிய குவளையைக் கண்டார்கள். அந்த தண்ணீல் முகம்பார்த்துக் கொண்டு தனது தலைமுடியையும் தாடியையும் சீர்செய்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘நபி (ஸல்) அவர்களே! நீங்களா இதைச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்! ஒரு மனிதர் தன் சகோதரர்களை சந்திக்கச் சென்றால் தன்னை சீர்படுத்திக் கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகையே நேசிக்கிறான்'' என்று கூறினார்கள்.

முஸ்லிம் தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் நடுநிலையான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொள்வார். நடுநிலையான கொள்கை என்பது வரம்புமீறி அதிகப்படுத்தவும் கூடாது எல்லை மீறி குறைக்கவும் கூடாது.

அன்றி அவர்கள் செலவு செய்தால், அளவைக் கடந்துவிட மாட்டார்கள், உலோபித்தனமும் செய்ய மாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் இருப்பார்கள். (அல்குர்ஆன் 25:67)

இஸ்லாம் தனது உறுப்பினர்கள், குறிப்பாக அழைப்புப்பணி செய்பவர்கள் பிறரால் நேசிக்கப்படும் தோற்றத்தில் திகழ வேண்டு மென்றும் வெறுப்படையச் செய்யும் தோற்றத்தைக் கொண்டிருக்கக் கூடாது எனவும் விரும்புகிறது. எவரும் பற்றற்றவன், பணிவுடையவன் என்று கூறிக்கொண்டு தன்னை மிக இழிவான அழகற்ற தோற்றத்தில் காட்டிக்கொள்வதை இஸ்லாம் ஏற்பதில்லை.

ஏனெனில் பற்றற்றவர்கள் மற்றும் பணிவுடையவர்களின் தலைவரான நபி (ஸல்) அவர்கள் அழகிய ஆடைகளை அணிந்தார்கள். தனது தோழர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக தங்களை அழகுபடுத்திக் கொண்டார்கள். இந்த அழகு, அலங்காரம் அல்லாஹ்வின் அருட் கொடைகளை வெளிப்படுத்தும் செயலெனக் கருதினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நிச்சயமாக அல்லாஹ் தனது அடியானிடம் தனது அருட்கொடையின் அடையாளம் வெளிப்படுவதை விரும்புகிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)

ஜுன்து இப்னு மகீஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஏதேனும் ஒரு கூட்டத்தினர் தன்னை சந்திக்க வந்தால் நபி (ஸல்) அவர்கள் அழகிய ஆடையை அணிந்து, தனது நெருங்கிய தோழர்களையும் அணிந்து கொள்ள ஏவுவார்கள். கின்தா என்ற கூட்டத்தினரை சந்தித்தபோது நபி (ஸல்) அவர்களை நான் கண்டேன் அவர்கள் மீது எமன் தேச ஆடை இருந்தது. அதுபோன்ற ஆடையே அபூபக்கர் ஸித்தீக் (ரழி), உமர் (ரழி) அவர்கள் மீதும் இருந்தது.'' (தபகாத் இப்னு ஸஃது)

உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் புதிய ஆடையை வரவழைத்ததைக் கண்டேன். பின்பு அதை அணிந்து கொண்டார்கள். ஆடை தங்களது கழுத்தை அடைந்தபோது கூறினார்கள்: ‘‘எனது மானத்தை மறைத்து, எனது வாழ்வில் என்னை அழகுபடுத்திக் கொள்ளும் ஆடையை அணிவித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.'' (அத்தர்ஹீப்)

வரம்பு மீறாத வகையில் அழகுபடுத்திக்கொள்ளுமாறு அல்லாஹ் தனது அடியார்களுக்கு கட்டளையிடுகிறான்.

‘‘ஆதமுடைய மக்களே! தொழும் இடத்திலெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள், பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் அளவுகடந்து (வீண்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை.''

(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும் பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் (ஆகாதவை யென்று) தடுப்பவர் யார்? என்று கேட்டு, ‘‘அது இவ்வுலக வாழ்வில் விசுவாசம் கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது'' என்றும் கூறுவீராக! அறியக்கூடிய ஜனங்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம். (அல்குர்ஆன் 7:32,33)

இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘எவனது இதயத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவன் சுவனம் புக மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, ஒரு மனிதர் ‘‘ஒருவர் ஆடை, காலணி அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார் (அது பெருமையில் சேருமா?)'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘‘நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகாக இருப்பதையே நேசிக்கிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுத்து, மனிதர்களை இழிவுபடுத்துவதுதான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இப்படித்தான் நபித்தோழர்களும் அவர்களை நற்செயல்களால் பின்தொடர்ந்தவர்களும் விளங்கிக் கொண்டிருந்தார்கள். இதனால்தான் இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் கம்பீரமான தோற்றத்தையும் அழகிய ஆடையையும் நறுமணத்தையும் உடையவர்களாக இருந்தார்கள். ஆடைகள் தூய்மையாக இருப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். தோற்றத்தை சீர்செய்து கொள்ளுமாறு பிறரையும் தூண்டினார்கள்.

ஒருமுறை தனது சபையில் ஒருவர் கிழிந்த ஆடையை அணிந்திருப்பதைக் கண்டு அவரை தனியாக அழைத்து அவரது தோற்றத்தை சரிசெய்துக்கொள்ள ஆயிரம் திர்ஹத்தைக் கொடுத்தார்கள். வாங்க மறுத்த அம்மனிதர் ‘‘நான் செல்வந்தன் எனக்கு இது தேவை ‘ல்லை'' என்றார். இமாமவர்கள் அம்மனிதரை கண்டிக்கும் விதமாக ‘‘அல்லாஹ் தனது அடியார்கள் மீது தனது அருட்கொடையின் அடையாளத்தைக் காணவிரும்புகிறான்'' என்ற ஹதீஸ் உன்னை எட்டவில்லையா? எனவே, உனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உன் நண்பர்கள் உன்னைப்பற்றி கவலையற்றிருப்பார்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் அழைப்பாளர்கள் இத்தகைய அழகிய தோற்றமும் பரிபூரணத் தூய்மையும் பிறரை ஈர்க்கும் தன்மையும் கொண்டிருப்பது அவசியமாகும். அப்போதுதான் அழைப்புப் பணியின் மூலம் பிறரது உள்ளங்களில் ஊடுருவ முடியும்.

அழைப்பாளர் எல்லா நிலையிலும் இத்தகைய தன்மைகளை கைக்கொள்ளவேண்டும். அல்லாஹ்வின்பால் அழைப்பவர் தனது தோற்றப் பொலிவை கவனிக்கவேண்டும். உடல், ஆடை, நகம், தலை மற்றும் தாடிமுடியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேரிய போதனைக்கு செவிசாய்க்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஐந்து விஷயங்கள் இயற்கையான பண்புகளாகும். கத்னா (விருத்த சேதனம்) செய்வது, அபத்தின் முடியை சிரைப்பது, அக்குள் முடியைப் பிடுங்குவது, நகங்களை வெட்டுவது மற்றும் மீசையைக் குறைப்பது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மனிதனுக்குரிய இயற்கைப் பண்புகளைப் பேணுவதன் காரண மாகவே இம்மார்க்கம் நேசிக்கப்படுகிறது. சீரான சிந்தனை உடையவர்கள் இப்பண்புகளைப் பேணுவதில் ஆர்வம் கொள்கின்றனர்.

முஸ்லிம் தனது தோற்றத்துக்கு முக்கியத்துவமளிக்க வேண்டிய அதே நேரத்தில் அவர் தன்னை அழகுபடுத்தி, தூய்மைப்படுத்திக் கொள்வதில் இஸ்லாம் அமைத்துள்ள நடுநிலைத் தன்மைக்கு பங்கம் ஏற்படுமளவுக்கு எல்லை மீறிவிடக்கூடாது. பேணுதலான முஸ்லிம், வாழ்வுத்தராசின் ஒரு தட்டு மற்றொரு தட்டைவிடத் தாழ்ந்துவிடாத வகையில் எல்லா நிலைகளிலும் நடுநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.

அழகுபடுத்தி, தோற்றப் பொலிவுக்கு முக்கியத்துவமளித்து தொழும் இடங்களிலெல்லாம் ஆடைகளால் தங்களை அலங்கரித்துக் கொள்ளுமாறு இஸ்லாம் வலியுறுத்தும் அதே சமயம், அலங்காரத்தில் வரம்புமீறி, சதாவும் உலக அலங்காரங்களில் மூழ்கிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘தீனார், திர்ஹம் மற்றும் ஆடை, அணிகலன்களின் அடிமை நாசமாகட்டும்! அவன் கிடைத்தால் திருப்தியடைவான் கிடைக்கவில்லையெனில் ஆத்திரமடைவான்.'' (ஸஹீஹுல் புகாரி)

இஸ்லாமிய அழைப்பாளர்கள் இஸ்லாம் கூறும் நடுநிலையை உறுதியாகப் பின்பற்றுவதாலும் இம்மார்க்கத்தின் நேரிய கொள்கையை கடைபிடிப்பதாலும் இதுபோன்ற வழிகேடுகளிலிருந்தும் தடுமாற்றங்களி லிருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்வார்கள்.


ஆ - அவரது அறிவு

கல்வி என்பது முஸ்லிமின் சிறப்பும் கட்டாயக் கடமையுமாகும். கல்வியின் மூலமே அறிவு மேலோங்கும் என்பதை முஸ்லிம் உறுதி கொள்ளவேண்டும். உலகிலுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகளை அறிந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்வது கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயக் கடமையாகும்.'' (ஸுனன் இப்னு மாஜா)

கல்வி மற்றும் ஞானத்தின் மூலம்தான் மனிதன் தனது அறிவை சீர்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் கல்வி கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். இறுதி மூச்சுவரை முஸ்லிம் கல்வியைத் தேடவேண்டும்.

கல்வியைத் தேடுவதில் முஸ்லிம் ஆர்வம்கொள்ள போதுமான காரணம், அல்லாஹ் அறிஞர்களின் அந்தஸ்தை உயர்த்தி, இறை அச்சத்தை அவர்களுக்கே சொந்தமாக்கி உள்ளான், இச்சிறப்புகளை ஏனைய மனிதர்களைவிட அறிஞர்களுக்கே வழங்கியுள்ளான் என்பதாகும்.

நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுவதெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தாம். (அல்குர்ஆன் 35:28)

பிரகாசமான சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே உரிய முறையில் அல்லாஹ்வை அஞ்ச முடியும். அவர்கள்தான் இப்பிரபஞ்சத்தை படைத்து வாழவைத்து பிறகு (மறுமையில்) உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஆற்றலையும் புரிந்து கொள்ளமுடியும். அல்லாஹ் அந்த அறிஞர்களை அகிலத்தார் அனைவரையும்விட மேன்மைப் படுத்துகிறான்.

(நபியே) நீர் கேளும்! அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? (இந்த குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோறெல்லோரும் (கல்வி) அறிவுடையோரே. (அல்குர்ஆன் 39:9)

ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் அல் முராதி (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் இருந்தார்கள். அவர் ‘‘இறைத்தூதரே! நான் கல்வியைத் தேடி வந்துள்ளேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘‘கல்வியைத் தேடுபவரை நான் வரவேற்கிறேன். கல்வியைத் தேடுபவர்களை மலக்குகள் தங்களது இறக்கைகளால் சூழ்ந்து கொண்டு ஒருவர் பின் ஒருவராக வானம்வரை கூடிவிடுகின்றார்கள். வானவர்கள் அவர் தேடும் கல்வியின்மீது கொண்ட அன்பினால் இப்படி சூழ்ந்து கொள்கிறார்கள்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத், முஸ்தத்ரகுல்ஹாகிம்)

கல்வியின் மாண்புகள் மற்றும் அதைத்தேடுவதில் ஆர்வமூட்டும் சான்றுகள் பல உள்ளன. உண்மை முஸ்லிம் கற்பவராக அல்லது கற்றுக்கொடுப்பவராக இருப்பார். மூன்றாமவராக இருக்கமாட்டார்.


மரணிக்கும் வரை கற்பார்

உயய பட்டங்களைப் பெற்று, பொருளாதாரத்தை வளப்படுத்தி, நிம்மதியான வாழ்வுக்கு உத்தரவாதமாக ஆக்கிக் கொண்டு அத்தோடு மட்டுமே விட்டுவிடுவது உண்மையான கல்வியல்ல. மாறாக, ஞானத்தின் பொக்கிஷங்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காக ஆய்வுகளைச் செய்துவர வேண்டும். கல்வியை ஆய்வு செய்வதை நிரந்தரமாக்கிக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதை நடைமுறைப்படுத்தி கல்வியை அதிகரித்துக் கொள்ளவேண்டும்.

...... ‘‘என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தைப் அதிகப்படுத்து'' என்று நீர் பிரார்த்தனை செய்வீராக!. (அல்குர்ஆன் 20:114)

நற்பண்புகளுடைய நமது முன்னோர்கள் கல்வியில் உயரிய அந்தஸ்தை அடைந்திருந்தும் தங்களது வாழ்வின் இறுதிவரை கல்வியைத் தேடி ஞானத்தை அதிகப்படுத்திக்கொள்வதில் தொடர்ந்து பாடுபட்டு வந்தார்கள். அதைத் தொடர்வதன் மூலமே கல்வி உயிர்பெற்று, வளர்ச்சியடையும் என்றும் கல்வியில் ஆய்வு செய்யாமல் புறக்கணிப்பதால் அது ஜீவனற்றுப் போய்விடுமென்றும் கருதினார்கள். கல்வி கற்பதிலும் ஆய்வு செய்வதிலும் அவர்கள் கொண்டிருந்த முக்கியத்துவமும் அதை செயல்படுத்துவதில் அவர்கள் கொண்டிருந்த ஆவலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கின்றன.

இமாம் இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு அபீ கஸ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், ‘‘நீ கல்வி கற்கும் காலமெல்லாமல் அறிஞனாக இருப்பாய். தேவையில்லையென நினைத்து ஒதுங்கிவிட்டால் மூடனாகி விடுவாய்.''

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘‘கல்வி உடையவர் கற்றுக்கொள்வதை நிறுத்திவிடுவது முறையற்ற செயலாகும்.''

இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் ‘‘எதுவரை கல்வி கற்பீர்கள்?'' என்று கேட்கப்பட்டபோது இமாமவர்கள் ‘‘மரணம்வரை'' என்று பதிலளித்து, ‘‘எனக்கு பயனளிக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தை இதுவரை நான் எழுதிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் அல்லவா?'' என்று கூறினார்கள்.

இமாம் அபூ அம்ரு இப்னு அலா (ரஹ்) அவர்களிடம், ‘‘மனிதன் கல்வி கற்றுக்கொள்ள உகந்த காலம் எது?'' என்று கேட்கப்பட்டபோது இமாமவர்கள் ‘‘அவன் வாழ்வதற்கு உகந்த காலமனைத்தும்'' என பதிலளித்தார்கள்.

இமாம் ஸுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் அளித்த பதில் மிகவும் அற்புதமானது. அவர்களிடம் கல்வியைத் தேடுவது யாருக்கு மிக அவசியம்? என்று கேட்டபோது இமாமவர்கள் ‘‘மக்களில் மிக அறிந்தவர்களுக்கு மிக அவசியம்'' என்று கூறினார்கள். ஏன்? (அறிஞர் கல்வியைத் தேடியே ஆகவேண்டும்) என்று கேட்டபோது இமாமவர்கள் ‘‘அறிஞனிடம் தவறு ஏற்படுவது மிகவும் வெறுக்கத்தக்கது'' என்று கூறினார்கள்.

இமாம் ஃபக்ருத்தீன் ராஜி (ரஹ்) பிரபல குர்ஆன் விரிவுரையாளர் ஆவார்கள். எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்கள். தர்க்கவாதம், தத்துவம் போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அக்கால அறிஞர்களில் தலைசிறந்தவராகத் திகழ்ந்து ஹிஜ்ரி 606ல் மரணமடைந் தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கல்வித்துறையில் மிகப்பெரியபிரபலத்தை அளித்திருந்தான். அவர்கள் செல்லும் ஊர்கள், நுழையும் நகரங்கள் அனைத்திலும் அறிஞர்கள் தங்களது கல்வித் தாகத்தைத் தணித்துக்கொள்ள அவர்களை நோக்கி வந்தார்கள். இமாமவர்கள் ஒரு சமயம் ‘மர்வ' என்னும் நகருக்கு வந்தபோது அறிஞர்களும் மாணவர்களும் திரளாக வந்து சந்தித்தார்கள். அவர்களிடம் கற்றுக் கொள்வதை பெருமையாகக் கருதினர்.

அங்கு வந்திருந்த மாணவர்கள் கூட்டத்தில், பரம்பரை பற்றிய கல்வியை நன்கறிந்த ஒரு மாணவரும் இருந்தார். அவர் இருபது வயதைத் தாண்டாதவர். இமாமவர்கள் அக்கலையை திறம்பட அறியாதவர்களாக இருந்ததால் அம்மாணவடமிருந்து அதை கற்றுக்கொள்ள விரும்பினார்கள். எவ்விதத் தயக்கமுமின்றி அம்மாணவரிடம் தனக்கு கற்றுத் தருமாறு கோரினார்கள். அவரை ஆசிரியரின் ஸ்தானத்தில் அமர்த்தி அவருக்கு முன் மாணவராக அமர்ந்தார்கள். அக்காலத்தில் சிறந்த இமாமாக இருந்தும் அந்நிகழ்ச்சி அவர்களது அந்தஸ்தை எவ்வகையிலும் குறைத்துவிடவில்லை. மாறாக, இமாமவர்களின் பணிவையும் மாண்பையும் சுட்டிக்காட்டும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகிவிட்டது.

இந்த அறிஞர்களின் இதயங்கள் கல்வியை எந்தளவு நேசித்திருக்கின்றன! கல்வி அவர்களது பார்வையில் எவ்வளவு உயர்ந்துள்ளது பாருங்கள்! இம்மகத்தான முன்னோர்களைப் பின்பற்றுவது பின்னுள் ளோருக்கு எவ்வளவு அவசியமானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

முஸ்லிம் தெளிவாக அறிய வேண்டியவை

கல்வியின் மூலம் முஸ்லிம் அறிந்துகொள்ள வேண்டியவைகளில் முதலாவது அல்லாஹ்வின் வேதம் குர்ஆன் ஆகும். அதை ஓதும் முறைகளையும் மற்றும் அதன் விளக்கங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பின்பு (நபிமொழி) ஹதீஸைப் பற்றிய கல்வி, வரலாறுகள், நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்களைப் பற்றிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளவேண்டும். இன்னும் வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல் ஆகியவைகளை சரியாக நிறைவேற்றும் அளவிற்கு மார்க்க சட்டங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட விஷயம் மார்க்கக்கல்வி அல்லாத வேறு கல்வியையும் கற்றுக்கொள்ளும் முஸ்லிமுக்குரியதாகும். மார்க்கக் கல்வியை மட்டும் கற்றுக் கொள்பவராக இருந்தால் முஸ்லிமுக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் நுட்பமாக கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அரபிமொழியை திரம்பட கற்பதும் அவசியமாகும்.


குறிப்பிட்ட ஒரு துறையில் ஆழ்ந்த அறிவு பெற்றிருப்பார்

இதன் பிறகு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் ஒரு குறிப்பிட்ட துறையில் தனது கவனத்தைச் செலுத்தி அதில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருப்பது தனது கடமை என்ற இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அதை எதிர்கொள்வார். அது மார்க்கக் கல்விகளின் ஒரு துறையானாலும் ச, அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல், பொறியியல், வானவியல், மருத்துவம், தொழில், வியாபாரம் போன்ற உலகவியல் கல்வியின் ஒரு துறையாயினும் ச. அதில் முழுமையான தேர்ச்சியைப் பெற்று ஆழ்ந்து அறிந்திருப்பது கடமையாகும். வாய்ப்பு கிடைத்தால் அத்துறைகுறித்து பல்வேறு மொழிகளில் எழுதப்படும் அனைத்து நூல்களையும் ஆய்வு செய்யவேண்டும். அத்துறையில் தொடர்ச்சியான இடைவிடாத ஆய்வின் மூலம் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படும் விஷயங்களை அறிந்து தனது அறிவை விசாலபடுத்திக் கொள்ளவேண்டும்.

நற்சிந்தனையுடைய முஸ்லிம் தற்காலத்திய கல்வி ஞானத்தில் மிக உறுதியான, வெற்றிகரமான உயர்வை அடைய வேண்டும். அதன்மூலம் மக்களிடையே மதிப்பையும் மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். அது அவருக்கு மிக உயரிய சிறப்பையும் கண்ணியத்தையும் அளிக்கும். கல்வியில் இஸ்லாம் பரவச்செய்துள்ள உயிரோட்டமான நடைமுறையைப் பின்தொடர்ந்து தனது இலட்சியம், முயற்சி மற்றும் மனத்தூய்மையை பிரதிபலித்துக் காட்டும்போது அவரது அந்தஸ்து மென்மேலும் உயர்வடைகிறது.

ஏனெனில், இஸ்லாம் கல்வியை கடமையாக ஆக்கியிருக்கிறது. அக்கடமையை நிறைவேற்றுவது அல்லாஹ்வின் நெருக்கத்தை ஏற்படுத்தித் தருகிறது. முஸ்லிம் தனது கல்வியை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்கான காரணியாக அமைத்துக் கொள்கிறார்.

நமது முன்னோர்களான அறிஞர்கள் தமது நூலின் முன்னுரையில் முக்கியத்துவம் வாய்ந்த இக்கருத்தை மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள். தங்களது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு அறிந்த கல்வியின் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தேடிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையே அக்கல்வியின் இலட்சியமாகக் கொண்டிருந்தார்கள்.


தனது சிந்தனையை விரிவுபடுத்துவார்

விழிப்புணர்வுடைய முஸ்லிம் தனக்கு அவசியமானதை மட்டுமே அறிந்தவராக இருக்கக்கூடாது. மாறாக, அறிவு மற்றும் சிந்தனையின் கதவுகளை அகலத் திறந்துவைத்திருக்க வேண்டும். கலாச்சாரம், பண்பாடுகள், இலக்கியம் மற்றும் பயனுள்ள கலைகள், பலதரப்பட்ட கல்வி ஞானங்களை உள்ளடக்கிய நூல்களையும் படிக்கவேண்டும். குறிப்பாக, தான் சார்ந்திருக்கும் துறை சம்பந்தமான விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் பலதரப்புகளிலிருந்தும் மனதுக்கு உற்சாகமளித்து ஞானத்தை விரிவுபடுத்தும் விஷயங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் சிந்தனைத்திறனும் அதிகக்கும்.


பிறமொழியை ஆழ்ந்து அறிவார்

சில சந்தர்ப்பங்களில் அந்நிய மொழிகளின் தேவை ஏற்படுவதால் அதற்கென்று உள்ள முக்கியத்துவத்தை மறந்துவிடக்கூடாது. தற்காலிக இஸ்லாமிய வாழ்வின் தேவைகளை நன்கு விளங்கிய முஸ்லிமுக்கு கல்வி ரீதியாக மற்றொரு மொழியை அறிந்துகொள்வது மிக அவசியமாகும்.

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிமுக்கு பரிசுத்த மார்க்கத்தின் வழிகாட்டுதல்களில் பிறமொழிகளை அறிந்துகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் என்பதும் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள், பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே அந்நிய மொழிகளைக் கற்றுக்கொள்ள தனது தோழர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்கள். முஸ்லிம்கள் அகிலத்தார் அனைவரையும் நேர்வழியின்பால் அழைக்க வேண்டுமென்ற அல்லாஹ்வின் ஆணையை செயல்படுத்துவதில் பிறமொழிகளைக் கற்பது உதவியாக அமையும். இதன் முன்மாதிரியை வரலாற்றில் காண்கிறோம்.

ஜைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ‘‘ஜைதே! நீர் யூதர்களின் மொழியை கற்றுக் கொள்ளும்!. அல்லாஹ்வின் மீதாணையாக யூதர்கள் எனக்காக கடிதம் எழுதுவதை நான் நம்பமாட்டேன்'' என்றார்கள். நான் பதினைந்து நாட்களில் அதைக் கற்று மிகவும் தேர்ச்சி பெற்றுவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு ஏதேனும் கடிதம் எழுத வேண்டியதிருந்தால் அதை நான் எழுதுவேன். நபி (ஸல்) அவர்களுக்கு யூதர்கள் கடிதம் எழுதினால் நான் படித்துக் காட்டுவேன்.'' (ஸுனனுத் திர்மிதி)

இதனால்தான் இப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் அரபி மொழியைத் தவிர பிறமொழிகளையும் அறிந்திருந்தார்கள். இத்தனை மொழிகளை கற்றுக்கொள்வது மார்க்க விஷயத்தில் கவனம் செலுத்துவதில் இருந்து அவர்களைத் தடுக்கவில்லை. அவர்களிடம் நூறு அடிமைகள் இருந்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் மற்றொரு மொழியையும் அறிந்திருந்தனர். இப்னு ஜுபைர் (ரழி) அவர்கள் அடிமைகள் ஒவ்வொருவரிடமும் அவரது தாய்மொழியில் உரையாடுவார்கள். ‘‘நீ அவர்களது உலக காரியங்களைக் கவனித்தால் இவர் ஒரு வினாடியும் அல்லாஹ்வை நினைக்கமாட்டார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் அவர்களது மறுமை சம்பந்தமான செயல்களைக் கண்டால் இவர் ஒரு வினாடியும் உலகை விரும்பாதவர் என்ற எண்ணம் தோன்றும்'' என ஹாகிம் (ரஹ்) அவர்கள் இந்த சம்பவத்தை தனது நூலில் குறிப்பிடுகிறார்கள்.

தற்கால முஸ்லிம், தான் வாழும் சூழலுக்கேற்ப வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் சில அந்நிய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான தேவை தற்காலத்தில் முந்திய காலத்தைவிட அதிகம் உள்ளது. தனது சமுதாயம், கலாச்சாரம், சம்பந்தபட்ட ஏற்றதாழ்வு குறித்து பிறமொழி புத்தகங்களை படித்து ஆராய்ச்சி செய்யவேண்டும். அதன் மூலமே அவர் இந்த சமுதாயத்தை தீங்கிலிருந்து பாதுகாக்கும் கோட்டையாகவும் அதற்கு நன்மை பயக்கும் பேச்சாளராகவும் இருப்பார்.


இ - அவரது ஆன்மா

உண்மை முஸ்லிம் தனது ஆன்மாவுக்கும் பொறுப்பாளி என்பதை மறந்துவிடக்கூடாது. அவர் உடல், அறிவை கொண்டு மட்டும் படைக்கப் படவில்லை. மாறாக, தன்னிடமுள்ள உள்ளம், உயிர், ஆன்மாவையும் அறிந்திருப்பார். ஆன்மாவை பரிசுத்தப்படுத்த வேண்டுமென்ற ஆசைதான் வணக்க வழிபாட்டிற்கு தூண்டுகோலாகவும் அல்லாஹ்வின் அருளை அடைய வழிகாட்டியாகவும் அவனது வேதனையிலிருந்து தப்பிக்க கேடயமாகவும் அமைகின்றன.


வணக்கங்களால் ஆன்மாவை பிரகாசிக்கச் செய்வார்

முஸ்லிம் தனது ஆன்மாவை கவனிக்க வேண்டும். இரவு பகலின் பல பகுதிகளில் வணங்குவதன் மூலமும் இறைதியானத்தின் மூலமும் ஆன்மாவை பிரகாசிக்கச் செய்யவேண்டும். ஷைத்தானின் சூழ்ச்சிகளையும், அழிவை உண்டாக்கும் அவனது ஊசலாட்டங்களையும் பயந்து அது குறித்து எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தனது பலவீனமான சந்தர்ப்பங்களின் ஏதேனும் ஒரு வினாடியில் ஷைத்தானின் தீண்டல்கள் ஏற்பட்டு, நினைவுகள் தடுமாறினால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும்.

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ அவர்களுள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள். அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்துவிடுகிறார்கள். (அல்குர்ஆன் 7:201)

இது குறித்து நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் ‘‘உங்களது ஈமானை புதுப்பித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறியபோது தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எவ்வாறு எங்களது ஈமானை புதுப்பித்துக் கொள்வது?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை (கூறுவதை) அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

முஸ்லிம் தனது ஆன்மாவை பலப்படுத்துவதற்கும், சீர்படுத்து வதற்கும் பல வணக்க வழிபாடுகளை மேற்கொள்வார். திருமறையை நிதானமாக சிந்தித்து இறையச்சத்துடன் ஓதுவார். உளஓர்மையுடன், பணிவுடன் அல்லாஹ்வை திக்ருசெய்வார். அதுபோல் நிபந்தனைகளைப் பேணி உள்ளச்சத்துடன் தொழுகைகளை நிறைவேற்றுவார். இதுபோன்ற ஏனைய ஆன்ம பயிற்சிகளையும் மேற்கொள்வார்.

இதன்மூலம் வணக்க வழிபாடுகள் பிறவிக் குணங்களாகவும் பிரிக்க முடியாத இயற்கை பண்புகளாகவும் இவரிடம் வேரூன்றிக் கொள்ளும். எந்நேரமும் தனிமையிலும் கூட்டத்திலும் அல்லாஹ்வை நினைத்த வராகவும் அல்லாஹ்வை அஞ்சியவராகவும் காட்சியளிப்பார்.


ஈமானின் சபைகளையும் சான்றோர்களையும் நெருங்கியிருப்பார்

முஸ்லிம், தனது உன்னத இலட்சியத்தை அடைந்து கொள்வதற்காக உண்மையாகவே நலம்நாடும் நற்குணமுடைய நண்பர்களை துணையாகக் கொள்வதுடன் அல்லாஹ்வைப் பற்றி பேசப்படும் உயிரோட்டமுள்ள ஈமானின் சபைகளுக்கு செல்வதையும் அதிகரித்திட வேண்டும். அந்த சபைகளில் சமூகம், குடும்பம் மற்றும் தனிமனித வாழ்வை சீர்படுத்துவதில் இஸ்லாமின் மகத்தான பங்கு குறித்து விவாதிக்கப்பட வேண்டும். வானம், பூமியின் எந்தவொரு சக்தியாலும் பலவீனப்படுத்திட முடியாத, அடக்கி ஆளும் வல்லமை பெற்ற அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனையால் சபையோர்களின் இதயங்கள் நிறைந்திட வேண்டும். அதில் மனிதனையும் இப்பிரபஞ்சத்தையும் அல்லாஹ் படைத்ததிலுள்ள நுட்பங்கள் விவாதிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற சபைகளால் ஆன்மா தூய்மையடைகிறது. உள்ளம் பிரகாசிக்கிறது. மனதிற்குள் ஈமான் எனும் இறைவிசுவாசத்தின் புத்துணர்ச்சி ஊடுருவுகிறது.

இதனால்தான் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) என்ற நபித்தோழர் எவரையேனும் சந்தித்தால் ‘‘வாருங்கள்! சிறிதுநேரம் நம்மைப்படைத்த இரட்சகனை விசுவாசம் கொள்வோம். (ஈமானிய விஷயங்களைப் பற்றி உரையாடுவோம்)'' என்று கூறுவார்கள். இந்த செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டியபோது ‘‘ரவாஹாவின் மகனுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்! நிச்சயமாக அவர் மலக்குகள் சூழ்ந்து கொள்ளும் சபைகளை நேசிக்கிறார்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

கலீஃபா உமர் (ரழி) அவர்கள் சில நேரங்களில் அரசு அலுவல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓரண்டு நபர்களின் கரங்களைப் பற்றியவர்களாக ‘‘எழுந்து வாருங்கள்! ஈமானை அதிகப்படுத்திக் கொள்வோம்'' என்று கூறுவார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்.

உமர் (ரழி) அவர்கள் இறையச்சத்திலும் வணக்க வழிபாட்டிலும் உயர்ந்தவர்களாக திகழ்ந்திருந்தும் தனது உள்ளத்தை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்ததின் காரணமாகத்தான் தனது வாழ்க்கையின் அத்தியாவசிய வேலைகளிலிருந்து வெளியேறி ஆன்மாவையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்த நேரத்தை ஒதுக்கிக் கொண்டார்கள்.

அவ்வாறே முஆது இப்னு ஜபல் (ரழி) அவர்கள் தங்களது தோழர்களிடம் ‘‘நம்முடன் அமருங்கள்! ஈமான் (பற்றிய) விஷயங்களை உரையாடிக் கொள்வோம்'' என்று கூறுவார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

நிச்சயமாக முஸ்லிம் தனது இறையச்சம் பற்றியும் மனத்தூய்மை பற்றியும் விசாரிக்கப்படுவார். எனவே அவர் கீழ்த்தரமான செயல்களி லிருந்து தன்னை எல்லா நிலையிலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஆத்மாவின் மீதும் அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும் அதன் நன்மை, தீமைகளை அதற்கு அறிவித்தவன் மீதும் சத்தியமாக, எவன் (பாவங்களை விட்டும்) தன்னை பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன் நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டான். எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான். (அல்குர்ஆன் 91:7-10)

முஸ்லிம் தனது இறையச்சத்தையும் நற்பண்புகளையும் ஈமானையும் அதிகப்படுத்தும் சிறந்த நண்பர்களையும் சபைகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். மனித ஷைத்தான்களின் தீய நட்பையும் இதயம் கடினமாகி ஆத்மாவுக்கு அநீதி இழைக்கப்படும் பாவங்கள் நிறைந்த சபைகளையும் புறக்கணித்து விடவேண்டும்.

(நபியே) எவர்கள் தங்கள் இறைவனின் பொருத்தத்தை நாடி, அவனையே காலையிலும் மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கி றார்களோ அவர்களுடன் நீரும் (உம் கஷ்டங்களை சகித்துப்) பொறுத்திருப்பீராக! இவ்வுலக வாழ்வின் அலங்காரத்தை நீர் விரும்பி, அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உம் கண்களைத் திருப்பிவிடாதீர்! அன்றி, எவன் தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக அவனுடைய இருதயத்தை நம்மைத் தியானிப்பதி லிருந்து நாம் திருப்பிவிட்டோமோ அவனுக்கும் நீர் வழிப்படாதீர். அவனுடைய காரியம் எல்லை கடந்ததாகும். (அல்குர்ஆன் 18:28)


ஹதீஸில் கூறப்பட்ட துஆக்களை அதிகமாக ஓதி வருவார்

அல்லாஹ்வுடன் தனது இதயத்தை இணைத்து தனது ஆத்மாவைப் பலப்படுத்திக்கொள்ள விரும்பும் முஸ்லிம், ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த துஆக்களை (பிரார்த்தனைகளை) அதிகமதிகம் ஓதிக்கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து வெளியேறும்போது, உள்ளே நுழையும்போது, பிரயாணியை வழியனுப்பி வைக்கும்போது, அவரை வரவேற்கும்போது, புத்தாடையை அணியும்போது, படுக்கைக்கு செல்லும்போது, தூக்கத்திலிருந்து விழிக்கும்போது என ஒவ்வொரு செயலுக்கும் நபி (ஸல்) அவர்கள் துஆக்களை கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

இந்த துஆக்களின் மூலமாக நபி (ஸல்) அவர்கள் தனது உள்ளத்தில் ‘அல்லாஹ் நடுநிலையை உதிக்கச் செய்து, வழிதவறுவதிலிருந்து பாதுகாத்து, தனக்கு நன்மையை தரவேண்டும்' எனப் பிரார்த்தித்து எல்லா நிலையிலும் அல்லாஹ்வையே முன்னோக்கியவர்களாக இருந்தார்கள்.

இது குறித்த விரிவான விளக்கங்கள் ஸஹீஹான ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு இந்த துஆக்களை கற்றுக்கொடுத்து அவைகளுக்குரிய நேரங்களில் ஓதி வருமாறு ஏவினார்கள்.

இறையச்சமுள்ள முஸ்லிம் நபி (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் பின்பற்றும் வகையில் இவ்வாறான துஆக்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். இயன்றளவு அதனை ஓதிவர வேண்டும். அதன்மூலம் இதயம் பரிசுத்தமடைகிறது. ஆன்மா தெளிவடைகிறது. அல்லாஹ்வுடன் எல்லா நிலைகளிலும் இதயம் இணைந்து கொள்கிறது.

இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைக் கொண்டுதான் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி னார்கள். ஆகவே அவர்களது இதயங்கள் தூய்மையாகவும் மாசு மருவற்றதாகவும் இருந்தன. அதில் அசுத்தங்களோ, அழுக்குகளோ, கசடுகளோ இருக்கவில்லை. மனிதகுலத்தில் தனித்தன்மைவாய்ந்த ஒரு தலைமுறையை உருவாக்குவதில் மகத்தான இஸ்லாமின் அற்புத ஆற்றல் அந்த நபித்தோழர்கள் மூலம் வெளிப்பட்டது.

கடந்த காலங்களைவிட தற்காலத்தில் உண்மை முஸ்லிம்கள் இதுபோன்ற ஆன்ம பயிற்சியில் ஈடுபடுவது மிக அவசியம். அப்போது தான் அவர்கள் தங்களது அழைப்புப் பணியில் ஈடுபடும்போது அவர்களை எதிர்கொள்ளும் பெரும் பொறுப்புகளையும் கடமைகளையும் சிறப்பாக நிறைவேற்ற முடியும்.


முன்மாதிரி முஸ்லிம் - முஸ்லிம் தனது பெற்றோருடன்

உபகாரியாக இருப்பார்

அவர்களது அந்தஸ்தையும் கடமையையும் அறிவார்

முஸ்லிமாக இல்லையெனினும் உபகாரம் செய்வார்

அவர்களை நோவினை செய்வது பற்றி அச்சம் கொண்டிருப்பார்

முதலில் தாய்க்கும் அடுத்து தந்தைக்கும் உபகாரம் செய்வார்

பெற்றோரின் நண்பர்களுக்கும் உபகாரம் செய்வார்

பெற்றோருக்கு உபகாரம் செய்யும் முறை


உபகாரியாக இருப்பார்

உண்மை முஸ்லிமின் தலையாயப் பண்புகளில் பெற்றோருடன் உபகாரமாகவும் நன்றியுடனும் நடந்து கொள்வதும் ஒன்றாகும். இஸ்லாம் வலியுறுத்தும் மிக முக்கியக் கடமைகளில் பெற்றோருக்கு உபகாரம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்த உறுதியான ஆதாரங்கள் உள்ளன. மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் அல்லாஹ்வின் வேதம் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களை வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும். அவையனைத்தும் பெற்றோருடன் உபகாரமாகவும் அழகிய உறவுடனும் நடந்துகொள்ள வலியுறுத்துகின்றன


அவர்களது அந்தஸ்தையும், அவர்களுக்கான கடமையையும் அறிவார்

வேறெந்த மதத்திலும் இல்லாத, மனிதகுலம் கண்டிராத உயரிய அந்தஸ்தை பெற்றோருக்கு இஸ்லாம் மட்டுமே வழங்கியுள்ளது. அல்லாஹ்வை ஈமான்கொள்வதற்கும், அவனை வணங்குவதற்கும் அடுத்ததாக பெற்றோருக்கு உபகாரம் செய்வதை இஸ்லாம் அமைத்துள்ளது. அல்லாஹ்வின் திருப்திக்குப் பிறகு பெற்றோரின் பொருத்தத்தை இணைத்து திருக்குர்ஆனின் பல வசனங்கள் காணக்கிடைக்கின்றன.

அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள். (அல்குர்ஆன் 4:36)

உலகின் அனைவரையும்விட பெற்றோருக்கு அதிக உபகாரம் செய்ய வேண்டியது உண்மை முஸ்லிமின் கடமை என்பதை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகிறது.

பெற்றோரின் மாண்புகளைத் தெளிவுபடுத்தி பெற்றோரின் விஷயத்தில் முஸ்லிம் பின்பற்றவேண்டிய நடைமுறைகளை திருக் குர்ஆன் விவரிக்கிறது. அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ இருந்து, வயோதிகத்தின் பலவீனத்திற்கு இலக்காகி இருந்தால் அவர்களுக்கு மனிதகுலம் கண்டிராத கௌரவத்தை இஸ்லாம் வழங்குகிறது.

(நபியே!) உமதிறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ, அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை (நிந்தனையாக)ச் ‘சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 17:23,24)

இவ்வசனம் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனின் உறுதியான கட்டளையாகும்.

‘‘உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றொருவரையும்) வணங்கக் கூடாதென்றும் தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியும் கட்டளையிட்டிருக்கிறான்'' என்பது திருமறையின் கூற்றாகும்.

இதில் அல்லாஹ்வை வணங்குவது மற்றும் பெற்றோருக்கு உபகாரம் செய்வதற்குமிடையே உறுதியான தொடர்பு அமைக்கப்பட்டுள்ளது. மனிதப் பண்புகளை ஆய்வு செய்பவர்கள், சீர்திருத்தவாதிகள், மேதைகள் ஆகியோரின் சிந்தனைக்கு எட்டாத அளவு இதில் பெற்றோரின் அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திருவசனத்தின் உள்ளார்ந்த கருத்தைக் கவனிக்கும்போது பெற்றோருக்கு உபகாரம் செய்வது என்ற உயரிய நோக்கம் மட்டும் வெளிப்படவில்லை. மாறாக அன்பு, நேசம், உபகாரம் போன்ற செயல்களின் உள்ளுணர்வை மக்களின் இதயங்களில் ஊடுருவச் செய்து, தங்களது பெற்றோரின் மீது கருணை மழையை பொழியவும் தூண்டுகிறது.

‘‘அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடமிருந்து, முதுமையை அடைந்துவிட்ட போதிலும்''

இந்த திருவசனத்தில் உள்ள ‘உம்மிடமிருந்து' என்ற வார்த்தையின் பொருள் உமது பாதுகாப்பில், உமது அரவணைப்பில், உமது பராமரிப்பில் என்பதாகும்.

‘‘அவர்களை வெருட்டவும் வேண்டாம். அவர்களை (நிந்தனையாக)ச் ‘சீ' என்று சொல்லவும் வேண்டாம்'' என்ற வசனம், இருவரும் முதுமையடைந்து பலவீனமடைந்துவிட்டால் அவர்களிடம் நிந்தனையான மனநெருக்கடியை ஏற்படுத்தும் எந்தவொரு வார்த்தையையும் எந்த நிலையிலும் கூறிவிடாதே. அவர்களது உள்ளமும் கண்களும் குளிரும்படியான நல்ல வார்த்தைகளையே பேசவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

‘‘அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) புஜம் தாழ்த்தி மிக்க மரியாதையாக(வும் அன்பாக)வுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக'' என்ற வசனம் அவர்களுக்கு முன்பாக நிற்கும் போது மரியாதையுடனும், பணிவுடனும், தாழ்வுடனும் நிற்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

அவர்கள் உனக்குச் செய்த உபகாரங்களையும் நீ குழந்தைப் பருவத்தில் பலவீனமாக இருந்தபோது அவர்கள் பரிபாலித்து வளர்த்ததையும் நினைவில் வைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்பதை பின்வரும் வசனம் சுட்டிக்காட்டுகிறது.

‘‘நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து, போஷித்த பிரகாரமே நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக.''

பரந்த மனமும் பிரகாசிக்கும் அறிவாற்றலும் கொண்ட முஸ்லிம் அல்லாஹ்வின் இவ்வாறான அழகிய கட்டளைகளை பல திருவசனங்களில் அதிகமதிகம் கற்று தனது பெற்றோருக்கு அதிக கண்ணியமும் உபகாரமும் செய்பவராக இருப்பார்.

அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள்..... (அல்குர்ஆன் 4:36)

தாய் தந்தைக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம்... (அல்குர்ஆன் 29:8)

தமது தாய் தந்தை(க்கு நன்றி செய்வது)பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள்... (அல்குர்ஆன் 31:14)

பெற்றோருக்கு உபகாரம் செய்வதைப்பற்றி வந்துள்ள ஆதாரங்களை சிந்திப்பவர் இறைவசனங்களைத் தொடர்ந்து பல நபிமொழிகளையும் காணமுடியும். அவர்களுக்கு உபகாரம் செய்யத் தூண்டியும் எக்காரணமாக இருப்பினும் நோவினையையும் மாறுசெய்வதையும் தவிர்க்குமாறு அவை வலியுறுத்துகின்றன.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வுக்கு உவப்பான அமல் எது?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது'' என்றார்கள். ‘‘பின்பு என்ன?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘பெற்றோருக்கு உபகாரம் செய்வது'' என்றார்கள். ‘‘பின்பு என்ன?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘(ஜிஹாது) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் பெற்றோருக்கு உபகாரம் செய்வதை, தொழுகை மற்றும் இறைவழியில் போரிடுவது என்ற இரு மகத்தான கடமைகளுக்கு மத்தியில் குறிப்பிட்டார்கள். தொழுகை மார்க்கத்தின் தூணாகும். ‘ஜிஹாது' இஸ்லாமின் பெருமைமிகு அமலாகும்.

ஆகவே நபி (ஸல்) அவர்கள் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்வதை இவ்விரண்டிற்கும் இடையில் கூறியதிலிருந்து அதற்கு எத்தகு உயரிய அந்தஸ்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்!

ஒரு மனிதர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஹிஜ்ரத் மற்றும் ஜிஹாது செய்வதற்கு ‘பைஅத்' (வாக்குபிரமானம்) செய்ய விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் அனுமதிகோரி நின்றார். நபி (ஸல்) அவர்கள் அவரை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கி அவரிடத்தில் ‘‘உமது பெற்றோரில் எவரேனும் ஒருவர் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘‘ஆம்! இருவரும் இருக்கிறார்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர் அல்லாஹ்விடம் நற்கூலியை விரும்புகிறீரா?'' என்று கேட்டார்கள். அம்மனிதர் ‘‘ஆம்'' என பதிலளித்தார். கருணைமிகு நபி (ஸல்) அவர்கள் ‘‘உமது பெற்றோரிடமே நீர் திரும்பிச் சென்று அவ்விருவர்களிடமும் உபகாரமாக நடந்துகொள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் போருக்காக படைகளைத் திரட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் வாளெடுத்து போர்புரியும் வீரர் தேவையென்றிருந்தும் தமது மென்மையான இதயத்தில் பெற்றோரின் பலவீனமும் மகனிடம் அவர்கள் தேவைப்படுவதையும் நினைக்கத் தவறவில்லை.

நஃபிலான ஜிஹாதைவிட பெற்றோருக்கு பணிவிடை செய்து அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கு முன்னுரிமை அளித்தார்கள். மனிதனின் வெற்றிக்காக அல்லாஹ் அமைத்துள்ள நடுநிலையான இஸ்லாமின் நெறிகளில் பெற்றோருக்கு உபகாரம் செய்து அழகிய முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்ற பண்பை உறுதிப்படுத்து வதற்காக இவ்வாறு அவருக்கு உபதேசித்தார்கள்.

ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் இஸ்லாமை தழுவியதை அவர்களது தாயார் ஏற்க மறுத்து ‘‘நீ இஸ்லாமைவிட்டு விலகி வரவேண்டும். இல்லையென்றால் நான் மரணிக்கும்வரை உணவருந்த மாட்டேன் தாயைக் கொன்றவன் என்ற அரபிகளின் அவச்சொல்லுக்கும் கோபத்துக்கும் நீ இலக்காகுவாய்'' என்று கூறினார். அவருக்கு ஸஃது (ரழி) அவர்கள் ‘‘அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு நூறு உயிர்கள் இருந்து அது ஒவ்வொன்றாகப் பிரிந்தாலும் (நூறுமுறை மரணமடைந்தாலும்) எனது மார்க்கத்திலிருந்து விலகமாட்டேன்'' என்று பதிலளித்தார். தாய் ஓரு தினங்களாக சாப்பிடாமல் இருந்துவிட்டு மூன்றாவது நாள் பசியை பொறுத்துக்கொள்ள முடியாமல் உணவருந்தி விட்டார். அப்போது ஒரு திருவசனத்தை இறக்கி அதை முஸ்லிம்களுக்கு ஓதிக்காட்டுமாறு தனது தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். அதில் ஸஃது (ரழி) அவர்கள் தனது தாயிடம் கடுமையான முறையில் பதிலளித்ததைக் கண்டித்திருந்தான்.

எனினும் (இறைவன் என்று) நீ அறியாததை, எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால், (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம். ஆயினும் இவ்வுலகத்தில் (நன்மையான காரியங்களில்) நீ அவ்விருவருடனும் அன்புடன் ஒத்துவாழ்.... (அல்குர்ஆன் 31:15)

ஜுரைஜ் என்ற வணக்கசாலியின் சம்பவத்தில் பெற்றோருக்கு வழிப்படுவதன் முக்கியத்துவம் குறித்த அற்புதமான படிப்பினை உண்டு. ஒரு நாள் ஜுரைஜ் தொழுது கொண்டிருக்கும்போது அவரது தாயார் அழைத்தார். ஜுரைஜ் ‘இறைவனே! எனது தாயா? எனது தொழுகையா?' என்று எண்ணிவிட்டுத் தொழுகையைத் தேர்ந்தெடுத்தார். இரண்டாவதாக அழைத்தபோதும் பதிலளிக்காமல் தொழுது கொண் டிருந்தார். மூன்றாவதாக அழைத்தபோதும் அவர் பதிலளிக்காததால் அவரது தாய் அவர் மீது கோபமாக ‘‘விபச்சாரியின் முகத்தைப் பார்க்காத வரை அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யாதிருக்கட்டும்'' என்று சாபமிட்டுவிட்டார்.

சில காலங்களுக்குப் பின் ஒரு பெண், ஆட்டிடையரின் ஒருவனுடன் விபச்சாரம் செய்து கர்ப்பமடைந்தாள். தனது தவறு வெளியாகி விடுமென்று அவள் அஞ்சியபோது அந்த ஆட்டிடையன் அவளிடம் ‘‘உன்னிடம் எவரேனும் குழந்தைக்குத் தந்தை யாரென்று கேட்டால், வணக்கசாலியான ஜுரைஜ் என்று கூறிவிடு'' என்றான். அவளும் அவ்வாறே கூறிவிட்டாள். இதையறிந்த மக்கள் ஜுரைஜின் வணக்கஸ்தலத்தை உடைத்தெரிந்தனர். அதிகாரிகள் அவரைக் கைது செய்து தண்டனை நிறைவேற்றப்படும் மைதானத்திற்கு இழுத்து வந்தனர். வரும் வழியில் தனது தாயின் துஆ நினைவுக்கு வந்து அவர் சிரித்தார். தண்டனைக்காகத் தயாரானபோது இரண்டு ரக்அத்துகள் தொழ அனுமதி கேட்டார்.

பின்பு அந்தக் குழந்தையை வாங்கி காதின் அருகில் மெதுவாக ‘‘உன் தந்தை யார்?'' என்று கேட்டார். குழந்தை ‘‘எனது தந்தை இன்ன ஆட்டிடையன்'' என்று கூறியது. உடனே கூடியிருந்த மக்கள் தக்பீர், தஹ்லீல் கூறி ‘‘நாங்கள் உங்களது வணக்கஸ்தலத்தை தங்கத்தாலும் வெள்ளியாலும், கட்டித் தருகிறோம்'' என்றார்கள். அவர் ‘‘வேண்டாம்! முன் போலவே மண்ணால் அமைத்துக்கொடுங்கள்'' என்று கூறிவிட்டார்.

நபி (ஸல்) அவர்கள் ‘‘ஜுரைஜ் மார்க்கத்தை விளங்கியவராக இருந்திருந்தால் தொழுகையை நீண்ட நேரம் தொடர்வதைவிட தாய்க்கு பதிலளிப்பது அவசியம் என்பதை அறிந்திருப்பார்'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இதனால்தான் அறிஞர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் நஃபில் (உபரியாக) தொழும்போது பெற்றோர்களில் ஒருவர் அழைத்தால் தொழுகையை முறித்துவிட்டு அவர்களது அழைப்பை ஏற்கவேண்டும்.


முஸ்லிம்களாக இல்லையெனினும் அவ்விருவருக்கும் உபகாரம் செய்வார்

நபி (ஸல்) தனது சங்கைமிக்க நல்லுபதேசங்களால் மனித நேயத்தின் உச்சநிலையை சுட்டிக்காட்டினார்கள். அதாவது பெற்றோர்கள் முஸ்லிம்களாக இல்லையெனினும் அவர்களுடன் உபகாரமாகவும் நன்றியுடனும் நடந்துகொள்ள உபதேசித்துள்ளார்கள்.

அஸ்மா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் அன்னை ஒருமுறை என்னிடம் வந்திருந்தார். இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் சென்று ‘‘எனது தாய் மிக ஆவலுடன் (உதவி கேட்டு) என்னிடம் வந்திருக்கிறார். எனது அன்னைக்கு உபகாரம் செய்யலாமா?'' என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்! உன் அன்னைக்கு உபகாரம் செய்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் இவ்வாறான கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ளும் முஸ்லிம் அல்லாஹ்வின் படைப்புகளில் உபகாரத்திற்கு பெற்றோர்களே மிகத் தகுதியானவர்கள் என்பதைக் கண்டுகொள்வார். அவர்களுடன் அழகிய முறையிலான உறவை அனைத்து நிலைகளிலும் அனைத்துக் காலங்களிலும் பேணவேண்டும். இதுதான் நபித்தோழர்கள் மற்றும் நன்மையால் அவர்களைப் பின்பற்றிய சான்றோர்களின் நடைமுறையாகும்.

ஒருவர் ஸயீது இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்களிடம் ‘‘நான் பெற்றோருக்கு உபகாரம் செய்வது பற்றிய அனைத்து வசனங்களையும் புரிந்து கொண்டேன். ஆனால், அவர்களிடம் மிக்க கண்ணியமாக பேசுவீராக! என்ற திருவசனத்தின் பொருள் மட்டும் விளங்கவில்லை'' என்றார். ஸயீது (ரஹ்) அவருக்கு ‘‘அவ்விருவருடன் உரையாடும்போது ஒரு அடிமை தனது எஜமானரிடம் பேசுவது போன்று உரையாட வேண்டும்'' என்று விளக்கமளித்தார்கள்.

இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் தனது தாயுடன் உரையாடும்போது கண்ணியப்படுத்தும் விதமாக மிக மெல்லிய குரலில் பேசுவார்கள். அப்போது அவர்களது குரல் ஒரு நோயாளியின் குரலைப் போன்று இருக்கும்.


அவர்களை நோவினை செய்வதுபற்றி அச்சம் கொண்டிருப்பார்

பெற்றோருக்கு உபகாரம் செய்வது பற்றிய ஆர்வமூட்டும் தெளிவான ஆதாரங்களை நாம் கண்டுணர்ந்தபின், வரும் பக்கங்களில் அவர்களை நோவினை செய்வது பற்றிய எச்சரிக்கைகளைக் காண்போம்! அதைப் படிக்கும்போதே பெற்றோரை நோவினை செய்யும் கடினசித்தம் கொண்ட பிள்ளைகளின் இதயம் திடுக்கிடவேண்டும். அவர்களது மனம் அஞ்சி நடுங்கவேண்டும்.

பெற்றோருக்கு உபகாரம் செய்வதும் அல்லாஹ்வை ஈமான் கொள்வதும் இணைத்துக் கூறப்பட்டதுபோல, பெற்றோருக்கு நோவினை யளிப்பதை அல்லாஹ்வுக்கு இணைவைப்பதுடன் சேர்க்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியதாகும். அது உண்மை முஸ்லிமின் இதயத்தை திடுக்கிடச் செய்யும் கொடூரமான தீமையாகும். அதை சரிசெய்துகொள்ள இதயம் துடிக்கும். ஏனெனில், அது பாவம் மற்றும் குற்றங்களில் மிகக் கொடூரமானதாகும்.

அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘உங்களுக்கு பாவங்களிலெல்லாம் மிகப்பெரியபாவத்தை அறிவிக்கட்டுமா?'' என நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். நாங்கள் ‘‘அறிவித்துத் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்கு நோவினை செய்தல்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


முதலில் தாய்க்கும் அடுத்து தந்தைக்கும் உபகாரம் செய்வார்

பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் உபகாரத்தில் சமநிலையை தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இஸ்லாம் இருவருக்கும் ஏற்றவாறும் தாய்க்கெனத் தனியாகவும் தந்தைக்கெனத் தனியாகவும் அழகிய வழிகாட்டுதல்களை அளித்திருக்கிறது.

தன்னிடம் ஜிஹாது செய்வதற்கான அனுமதி கேட்டவரிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன் பெற்றோரில் ஒருவராவது உயிருடன் இருக்கிறாரா? என்று கேட்டதிலிருந்து ‘அவ்விருவரும் சமமாக கவனிக்கத் தகுந்தவர்களே; இருவருக்குமே உபகாரம் செய்வது கடமை' என தெரியவருகிறது.

அவ்வாறே அஸ்மா (ரழி) அவர்களை இணைவைக்கும் தாயுடன் இணக்கமாக இருக்க நபி (ஸல்) உத்தரவிட்டதையும் கண்டோம். நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் ‘‘இறைத்தூதரே! நான் அழகிய முறையில் நடந்துகொள்ள மிகவும் தகுதியானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘உமது தாய்'' என்றார்கள். ‘‘பிறகு யார்?'' என்று கேட்டார். ‘‘உமது தாய்'' என்றார்கள். ‘‘பிறகு யார்?'' என்று கேட்டார். ‘‘உமது தந்தை'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்த நபிமொழிகளில் நபி (ஸல்) அவர்கள் தந்தைக்கு உபகாரம் செய்வதைவிட தாயின் உபகாரத்திற்கு முதன்மை அளித்துள்ளார்கள். இதையே நபி (ஸல்) அவர்களுக்குப்பின் நபித்தோழர்களும் வலியுறுத்தினார்கள்.

தலைசிறந்த மேதையான இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் தாய்க்கு உபகாரம் செய்வதை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும் நற்செயலாகக் கருதினார்கள். அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘நான் ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்பினேன், அவள் மறுத்து விட்டாள். மற்றொருவர் விரும்பியபோது அவள் சம்மதித்துவிட்டாள். இதனால் ரோஷம் கொண்ட நான் அவளைக் கொலை செய்துவிட்டேன். எனக்கு ஏதேனும் பரிகாரம் உண்டா?'' என்று கேட்டார். இப்னு அப்பாஸ் (ரழி) ‘‘உமக்கு தாய் இருக்கிறாரா?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘இல்லை'' என்றார். ‘‘அல்லாஹ்விடம் தௌபா செய்து, முடிந்தளவு அல்லாஹ்வின் நெருக்கத்தை தேடிக்கொள்'' என்றார்கள்.

இதை அறிவித்த அதா இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் ‘‘ஏன் அவரது தாய் உயிருடன் இருக்கிறாரா என வினவினீர்கள்?'' என்று கேட்டேன். அவர்கள் ‘‘அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக ஆவதற்கு தாய்க்கு உபகாரம் செய்வதைவிட சிறந்த அமல் எதையும் நான் அறியவில்லை.'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது அல் அதபுல் முஃப்ரத் என்ற நூலில் ‘தந்தைக்கு உபகாரம் செய்வது' என்ற தலைப்பைவிட ‘தாய்க்கு உபகாரம் செய்வது' என்ற தலைப்பை முற்படுத்தி நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை உறுதிபடுத்தினார்கள்.

அல்குர்ஆன் மக்களின் இதயங்களில் பெற்றோருக்கு உபகாரம் செய்யும் உணர்வை வளர்க்கிறது. அதிலும் குறிப்பாக தாய்க்கு உபகாரம் செய்யவேண்டுமென்று வலியுறுத்துகிறது. கர்ப்பம், பாலூட்டல் என்ற இந்த இரண்டு நிலைகளும் அவளது வாழ்வின் மிகச்சிரமமான காலகட்டமாக இருப்பதால் தாயின் அந்தஸ்தை முன்னிலைப்படுத்தி அவளிடம் மிக மென்மையாக நடந்து கொள்ளுமாறு உத்தரவிடுகிறது.

தமது தாய் தந்தை(க்கு நன்றி செய்வது) பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகு இரண்டு வருடங்களுக்குப் பின்னரே அவனுக்குப்பால் மறக்கடித்தாள். (ஆகவே மனிதனே!) எனக்கும் உனது தாய் தந்தைக்கும் நன்றி செலுத்தி வா. (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (அல்குர்ஆன் 31:14)

எத்தனை அற்புதமான போதனை! மனித நேயத்தின் எத்தகு அபூர்வமான கண்ணோட்டம்! (நீ எனக்கும் உனது தாய் தந்தைக்கும் நன்றி செலுத்திவா) மகன் பெற்றோருக்கு செய்யவேண்டிய நன்றியை அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய நன்றியின் தொடர்ச்சியாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நன்றி, நற்செயல்கள் அனைத்திலும் தலையாய தாகும். இந்த மார்க்கம் பெற்றோருக்கு எவ்வளவு உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது என்பதைப் பாருங்கள்.

பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வசதிகள் ஏற்பட்டு, செல்வச் செழிப்பும் உண்டாகி, அழகிய மனைவியும் அன்பு குழந்தையும் அவனை அதிகம் கவர்ந்து, பெற்றோருக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்திலிருந்து அவனை விலக்கிவிடலாம். தந்தையையும் அவர் அவனுக்காகச் செய்த செலவுகளையும் மறந்து, அவருக்கு உதவி செய்யாமல் கரங்களை மடக்கிக்கொண்டவன் அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகிறான்.

ஆனால் உண்மை முஸ்லிம் இது அனைத்திலிருந்தும் விலகி இருப்பார். ஏனெனில், அவர் எல்லாக் காலங்களிலும் ஞானமிக்க, இஸ்லாமின் உயரிய கண்ணோட்டத்தை கொண்டிருப்பவர். அவர் நபி (ஸல்) அவர்கள் கூறிய ‘நீயும், உனது செல்வங்களும் உனது தந்தைக்குரியது' (முஸ்னத் அஹ்மத், ஸுனன் அபூ தாவூத்) என்ற உயரிய வழிகாட்டுதலை அறிந்திருப்பார்.

இந்த நபிமொழி முஸ்லிமின் இதயத்தில் பதிந்து, பெற்றோருடன் தாராளமாக நடந்துகொள்ள அவரை தூண்டுகிறது. அதனால் அவர் செலவு செய்யாமல் கையை சுருக்கிக்கொண்டு தந்தைக்கு நோவினை தருவதிலிருந்தும், தந்தையை சிரமப்படுத்துவதிலிருந்தும் விலகி இருப்பார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதுபோல அவர் தன்னையும் தனது செல்வங்களையும் தந்தைக்கு உரிமையாக்கி விடுவார்.


பெற்றோரின் நண்பர்களுக்கும் உபகாரம் செய்வார்

பெற்றோருக்கு உபகாரம் செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அவர்களால் நேசிக்கப்பட்டவர்களிடமும் தூய்மையான அன்பை வெளிப்படுத்த வேண்டுமென மார்க்கம் கட்டளையிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘உபகாரத்திலெல்லாம் மிகப்பெரியஉபகாரம் ஒருவர் தமது தந்தையின் நேசத்திற்குரியவரையும் நேசிப்பதாகும்.'' மற்றோர் அறிவிப்பில், ‘‘நிச்சயமாக உபகாரத்திலெல்லாம் மிகப்பெரியஉபகாரம் ஒருவர் தமது தந்தை நேசித்தவரை, தந்தையின் மரணத்திற்குப் பிறகும் நேசிப்பது'' என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் தமது தந்தை உமர் (ரழி) அவர்களுடைய தோழர் ஒருவரை சந்திக்க நேட்டது. அவருக்கு அதிக மரியாதையும் உபகாரமும் செய்தார்கள். இப்னு உமர் (ரழி) அவர்களிடம் உடனிருந்தவர் இம்மனிதருக்கு இரண்டு திர்ஹம் கொடுத்திருந்தால் போதுமாகாதா? என்று கேட்டார். இப்னு உமர் (ரழி) அவர்கள் ‘‘உன் தந்தையின் நண்பர்களை பேணிக்கொள் அவர்களது உறவை துண்டித்து விடாதே அப்படி துண்டித்தால் அல்லாஹ் உனது பிரகாசத்தை அணைத்துவிடுவான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோர்களுக்குரிய உபகாரங்களில் அவர்கள் மரணமடைந்த பிறகும் நான் அவர்களுக்கு செய்யவேண்டிய உபகாரம் ஏதேனு மிருக்கிறதா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்! நான்கு விஷயங்கள் உள்ளன. 1) அவர்களுக்கு துஆ செய்வது அவ்விரு வருக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவது 2) அவர்கள் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுவது 3) அவர்களது நண்பர்களை கண்ணியப்படுத்துவது 4) இரத்த பந்துக்களுடன் இணைந்திருத்தல். இரத்த பந்தம் என்ற உறவுமுறை அவ்விருவரின் மூலமே தவிர ஏற்பட முடியாது'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

பெற்றோருக்கு கண்ணியம், உபகாரம், நேசம் கொள்வதின் உன்னதமான அம்சம் என்னவெனில் பிள்ளைகள் தமது பெற்றோர்கள் இருக்கும்போதும் இறந்த பின்னும் அவர்களுடைய தோழர்களுடன் இணைந்திருக்கவேண்டும் என்பதுதான்.

உண்மை முஸ்லிம் அவ்விருவரின் தோழர்களோடு தோழமையையும் அன்பையும் எல்லா நிலையிலும் உறுதிப்படுத்திக் கொள்வார். பெற்றோரின் மரணத்திற்குப் பின்னும் அவர்களின் பழமையான நட்பை மறந்து விடமாட்டார். தனது அன்பிற்குரிய பெற்றோர் அமைத்துக் கொண்ட நட்பை துண்டித்து விடமாட்டார். இவ்வாறான மனிதநேய வெளிப்பாடுகளும் தூய நேசமும் வாழ்வை அழகுபடுத்தி மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. இவையனைத்தும் இவ்வுலகில் உண்மையான முஸ்லிம்களால் மட்டுமே ஏற்படும் நன்மையாகும்.

மேற்கத்திய நாடுகளில் குழந்தைகள் வளர்ந்து சுயமாக இயங்க ஆரம்பித்துவிட்டால் தங்களது பெற்றோரிடமிருந்து பிரிந்து, பிள்ளை என்ற உறவை முற்றிலும் சிதைத்து விடுகின்றனர். அதன் பிறகு அவர்களுக்கு பெற்றோருடன் சந்திப்பே ஏற்படுவதில்லை. அவர்களிடையே அன்பும், பாசமும் காணப்படுவதில்லை. அவர்கள் தனிப்பாதைகளை அமைத்துக் கொள்கின்றனர்.

வயது முதிர்ந்து பலவீனமடைந்துவிட்டபின் தம் மக்களிடம் உபகாரம், அன்பு போன்ற எவ்விதமான நற்பண்புகளையும் பெற்றோர்கள் எதிர்பார்க்க முடியாது. ஆனால் பெற்றோர்களோ இதே மக்களுக்காக வாழ்நாள் முழுவதிலும் தங்களது ஆற்றல்களை செலவு செய்தார்கள்.

மேற்கத்திய நாடுகளில் மக்கள் தமது பெற்றோருக்கு செய்யும் வேதனையும், கடினசித்தத்துடன் நடந்துகொள்ளும் மனிதத் தன்மையற்ற செயல்பாடுகள் எங்கே! முஸ்லிம் தனது பெற்றோர் மீது காட்டும் பாசமும் உபகாரமும், இன்னும் அவர்களது மரணத்திற்குப் பின்னும் அவர்களுடைய உறவினர் மீதும் காட்டும் அன்பும் பரிவும் எங்கே! இவ்விரண்டிற்கும் எவ்வளவு பெரியவேறுபாடுகள் உள்ளன! ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் தனித்தன்மை வாய்ந்த தெளிவான இலக்கைக் கொண்ட இஸ்லாம் மட்டுமே மனிதநேயத்தை உறுதிப்படுத்தி, மனிதகுலத்தை கண்ணியப்படுத்த முடியும். இந்த இலக்கை வேறெந்த சட்ட அமைப்பும் நெருங்க முடியாது.


பெற்றோருக்கு உபகாரம் செய்யும் முறை

பெற்றோருக்கு உபகாரம் செய்வதை கடமையாகக் கொண்ட முஸ்லிம் மிக அழகிய முறையில் கௌரவத்துடன் அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும். அவரிடம் பெற்றோர் வந்தால் எழுந்து நிற்க வேண்டும். அவர்களது கரங்களைப் பற்றி முத்தமிட வேண்டும். அவ்விருவருக்கும் மரியாதை செய்யும் விதமாக அவர்களுக்கு முன் மிக மென்மையாகப் பேசவேண்டும். புஜங்களைத் தாழ்த்தி இனிமையாகவும் மரியாதையுடனும் உரையாட வேண்டும். அவர்களுடன் பேசும்போது உள்ளத்தில் காயத்தை உண்டாக்கும் கடுமையான வார்த்தைகளை எந்நிலையிலும் பேசிடக்கூடாது. அவர்களது கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் அவர்களது முன்னிலையில் செய்திடக்கூடாது. எப்போதும் பின்வரும் வசனத்தை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடம் முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம். அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக (வும் அன்பாக)வுமே பேசும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக? அன்றி ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 17:23,24)

சில சமயங்களில் பெற்றோர் நேர்வழியிலிருந்து விலகியிருக்கலாம். இவ்வாறான சூழ்நிலையிலும் உபகாரியான முஸ்லிம் தனது பெற்றோரிடம் மென்மையாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் நிலைத்திருக்கும் தவறான கொள்கையிலிருந்து அவர்களை அகற்றுவதற்காக கடினமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மென்மையாக நடந்துகொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் அவர்களது கவனம் சத்திய மார்க்கத்தின்பால் திரும்புவதற்குக் காரணமாக அமையும். பலமான ஆதாரங்களின் மூலமாக, நுட்பமாகவும் அறிவுப்பூர்வமாகவும் அவர்களை திருப்திபடுத்தி, நேர்வழியின்பால் திருப்ப முயற்சித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

முஸ்லிம் தனது பெற்றோர் இணை வைப்பவர்களாக இருப்பினும் அவர்களுடன் நல்லுறவைப் பேண வேண்டும். இணைவைத்தல் என்பது மகத்தான குற்றம் என்பதை உறுதிகொள்வதுடன் அவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்திட வேண்டும்.

தமது தாய் தந்தைக்கு நன்றி செய்வதுபற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். (அவன் பிறந்த) பிறகும் இரண்டு வருடங்களுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள் (ஆகவே, மனிதனே!) நீ எனக்கும் உன்னுடைய தாய் தந்தைக்கும் நன்றி செலுத்திவா. (முடிவில் நீ), என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது.

எனினும் (இறைவன் என்று) நீ அறியாததை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவ்விருவருக்கும் வழிப்பட வேண்டாம். ஆயினும் இவ்வுலகத்தில் (நன்மையான காரியங்களில்) நீ அவ்விருவருடனும் அன்புடன் ஒத்துவாழ். (எவ்விஷயத்திலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியை நீ பின்பற்றி நடந்துவா. பின்னர் நீங்கள் (யாவரும் என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது. நீங்கள் செய்துகொண்டிருந்த வைகளைப் பற்றி (அது சமயம்) நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன். (அல்குர்ஆன் 31:14,15)

தாய் தந்தையர் மனித உறவுகளில் மிக நெருக்கமானவர்கள், நேசிக்கப்படுவதற்கு முதல் தகுதி பெற்றவர்கள். எனினும் அவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கொள்கைக்கு அளிக்கப்படும் முக்கியத்து வத்திற்குப் பிறகுதான். அவர்கள் இணைவைப்பவர்களாக இருந்து மகனையும் அதற்குத் தூண்டினால் அவர்களுக்கு கட்டுப்படக்கூடாது. ஏனெனில் ‘படைத்தவனுக்கு முரணாக படைப்பினங்களுக்கு வழிப்படுதல்' என்பது இஸ்லாமில் இல்லை. கொள்கை கோட்பாடு என்பது மற்றெந்த உறவுகளை விடவும் உயர்ந்தது. கொள்கை சார்ந்த கட்டளை ஏனைய கட்டளைகளைவிட மேலானதாகும். இருப்பினும் பெற்றோருக்கு செய்யும் உதவியும், உபகாரமும், பராமரிப்பும் பிள்ளைகளிடமிருந்து தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

உண்மை முஸ்லிம் எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, பெற்றோருக்கு உபகாரம் செய்து, இயன்றளவு அவர்களுக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும். அவர்களுக்கு உபகாரமாகவும், மரியாதையுடனும் நடந்துகொள்வதுடன் சிறந்த உணவு, ஆடை, இருப்பிடம் போன்ற ஏற்பாடுகளையும் செய்து தரவேண்டும். வாழும் சூழலுக்கும், சமூகச் சூழலுக்கும் ஏற்றவகையில் மார்க்கத்தில் ஆகுமாக்கப் பட்ட வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக அழகிய வார்த்தைகளை உபயோகிப்பதும், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களை முன்னோக்குவதும், அவர்கள் செய்த உபகாரத்தை எண்ணி உள்ளத்தால் அவர்களை நேசிப்பதும் மிக முக்கியமானதாகும்.

உண்மை முஸ்லிம் பெற்றோருக்குச் செய்யவேண்டிய உபகாரங்கள் அவர்களுடைய மரணத்துடன் நின்றுவிடாது. மாறாக அவர்களுக்காக தர்மம் செய்வதாலும், அதிகமதிகம் துஆச் செய்வதாலும் அவர்களது மரணத்திற்குப் பிறகும் முஸ்லிமான பிள்ளையின் உபகாரம் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும், அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 17:24)

இவை பெற்றோருக்கு உபகாரம் செய்வது பற்றிய இஸ்லாமின் வழிகாட்டுதலாகும். இதன் அடிப்படையில் செயல்படுபவரே நேர்வழி பெற்றவராவார். உலகாதாய வாழ்வில் மூழ்கி, நவீன அநாகரீகத்தால் கண் குருடாகிவிட்ட முஸ்லிம்கள் இத்தகைய நேர்வழியைப் பின்பற்றுகிறார்களா?

இன்றைய நமது வாழ்வில் மனைவியும் மக்களும்தான் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளார்கள். இவர்களுக்குப் பிறகுதான் பெற்றோர்களுக்கு உதவிகிட்டுகிறது. பிள்ளைகள் இறையச்சமுடைய நல்லோர்களாக இல்லையென்றால் அப்பிள்ளைகள் மூலம் சிறிதளவு உதவி, உபகாரம்கூட அப்பெற்றோருக்கு கிடைப்பது அரிதாகி விடுகிறது.

நவீன நாகரீகம் என்ற மேற்கத்திய சமூக அமைப்பு பெரும்பாலான முஸ்லிம்களின் இதயங்களை ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் பெற்றோரைப் பேணுவதிலும், முதுமையில் அவர்களைக் காப்பதிலும் எவ்விதப் பலனும் இல்லையென நினைக்கிறார்கள். இவ்வாறான சிந்தனையுடைய சமூகத்தைச் சார்ந்தவன் தனது மனைவி மக்களைப் பற்றி மட்டுமே கவலை கொள்வான். அதற்கு அப்பால் அவன் சிந்திக்கவும் மாட்டான். அவனை பெற்றெடுத்து வளர்த்தவர்களை நேசத்துடனும் நீதத்துடனும் அணுகமாட்டான்.

ஆனால் அவனது பெற்றோர்களோ அவனை வளர்ப்பதற்காக பல இரவுகள் தூங்காமல் கழித்திருப்பார்கள். வாழ்வை எதிர்கொள்ள அவனைத் தயார் செய்வதில் தங்களது அநேக செல்வங்களை இழந்திருப்பார்கள். அவர்கள்மூலம் அவன் அழகிய வீடு, பெருமைமிகு ஆடைகள், உயர்தர உணவுகள், சுகமான வாகனம் போன்ற வசதிகளை அடைந்து கொண்டபின் அவனது உள்ளம் மனைவி, மக்களிடம் சென்று விடுகிறது. தனது வளங்கள் அனைத்துக்கும் காரணமான பெற்றோரின் பங்கை மறந்துவிடுகிறான். அம்முதியவர்கள் நேசம் மிகுந்த தனது மகனின் கரங்களை பற்றிக்கொள்ளத் துடிக்கிறார்கள். ஆனால் அவனோ பலவீனமான தனது பெற்றோரை உதறித் தள்ளுகிறான்.

பெற்றோருக்கு உபகாரம் செய்வது என்பது கருணையுடன் அவர்களை நோக்குவது, திறந்த மனதுடன் செலவிடுவது, ஆதரவான அழகிய வார்த்தைகளால் உரையாடுவது, மற்றும் நேசம் மிகுந்த புன்னகையாகும். இவைதான் முஸ்லிமின் இயற்கைப் பண்புகளாகும். இவற்றை பெற்றோரிடம் வெளிப்படுத்துவது முஸ்லிமின் கடமையாகும்.

எவ்வளவுதான் வாழ்க்கை சிரமமானாலும், எவ்வளவுதான் வசதி ஏற்பட்டாலும் எவ்வளவுதான் அந்நியக்கலாச்சாரங்கள் ஊடுருவினாலும் முஸ்லிம்கள் இப்பண்புகளை கடைப்பிடிக்கத் தவறக்கூடாது. இந்த நற்குணங்கள் உள்ளங்கள் கல்லாகாமல் பாதுகாக்கின்றன. தற்பெருமை கொண்ட நடத்தையிலிருந்து காப்பாற்றுகின்றன. மனிதநேயம், நன்றி அறிதல் போன்ற தூய அடிப்படைக்கு வழிவகுக்கின்றன. இப்பண்புகளே முஸ்லிம்களுக்கு சுவன வாயில்களைத் திறந்து கொடுக்கின்றன. இப்பண்பில்லாதவர்கள் சுயநலம், செய்நன்றி மறத்தல் என்ற அழிவில் வீழ்ந்து விடுகின்றனர்.


முன்மாதிரி முஸ்லிம் - முஸ்லிம் தனது மனைவியுடன்

இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும்

முஸ்லிம் விரும்பும் மனைவி

மணவாழ்வில் இஸ்லாமிய வழிகாட்டுதலைப் பின்பற்றுவார்

சிறந்த கணவர்

வெற்றிகரமான கணவர்

மனைவியிடம் விவேகத்துடன் நடந்து கொள்வார்

மனைவியின் குறைகளை சீராக்குவார்

பெற்றோர் மனைவிக்கிடையே சமத்துவம் பேணுவார்

மனைவியைச் செம்மையாக நிர்வகிப்பார்


இஸ்லாமியப் பார்வையில் திருமணமும் மனைவியும்

இஸ்லாமியப் பார்வையில் திருமணமென்பது மனதில் அமைதியையும் இதயத்தில் உறுதியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகும். அது ஆண், பெண்ணிடையே அன்பையும், நேசத்தையும், கருணையையும் நிலைத்தோங்கச் செய்கிறது. இதன்மூலம் கணவன் மனைவிக்கிடையில் அன்பான, அமைதியான குடும்ப வாழ்வு ஏற்பட்டு ஒரு தூய்மையான இஸ்லாமிய சந்ததி உருவாக வழி பிறக்கிறது.

ஆண், பெண்ணிடையே அமைந்த இந்த இயற்கையான தொடர்பை மிக அழகிய முறையில் திருமறை குர்ஆன் வர்ணித்துக் காட்டுகிறது. இருவருக்குமிடையே புரிந்துணர்வையும் பரஸ்பர அன்பையும் மன அமைதியையும் திருமண உறவு ஏற்படுத்துகிறது என்று அருள்மறை கூறுகிறது.

(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை, நீங்கள் அவர்களிடம் மனநிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய ஜனங்களுக்கு, இதிலும் (ஒன்றல்ல) நிச்சயமாக (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 30:21)

திருமணம் என்பது இருவடையே ஏற்படும் ஒரு பலமான உறவாகும். இவ்வுறவின் மூலமாக ஆண், பெண்ணை அல்லாஹ் உறுதியுடன் ஒன்றிணைக்கிறான். கருணையும், அன்பும், பாசமும் நிறைந்த இந்த இல்லறத்தில் இவ்விருவரும் முழுமையான நிம்மதியும், மகிழ்ச்சியும் பெறுகிறார்கள்.

இஸ்லாமிய பார்வையில் நற்குணமுள்ள மனைவி இவ்வுலக வாழ்வில் இனிமை சேர்ப்பவளாகவும் அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகவும் இருக்கிறாள். ஏனெனில், வாழ்வில் துன்பத்தையும் சோதனைகளையும் சந்திக்கும் கணவன் இல்லம் திரும்பும்போது அவளிடம் நிம்மதியையும் மனஆறுதலையும் மகிழ்ச்சியையும் அடைகிறான். இம்மகிழ்ச்சிக்கு இணையாக உலகில் வேறெதுவும் இருக்க முடியாது.

இதுபற்றி நபி (ஸல்) அவர்களின் கூற்று எவ்வளவு உண்மையானது! ‘‘உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இதுதான் தொலைநோக்குப் பார்வை கொண்ட இஸ்லாமின் திருமணம் பற்றிய உயர்ந்த கண்ணோட்டமாகும். பெண்மையின் மாண்பை இஸ்லாம் இவ்வாறே உயர்த்திக் காட்டுகிறது.


முஸ்லிம் விரும்பும் மனைவி

பெண் மற்றும் திருமணம் குறித்த இஸ்லாமின் உயர்வான கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் முஸ்லிமை இக்காலத்தில் வெளிப்பகட்டு அலங்காரங்களைக் கொண்ட இளம் பெண்கள் கவர்ந்திட முடியாது. மாறாக, மார்க்கப் பற்றுள்ள பெண்கள்தான் அவரை ஈர்க்க முடியும். தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் நிதானத்துடன், நிம்மதியான மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வுக்கு வழிவகுக்கும் இஸ்லாமிய நற்பண்புகளைப் பெற்ற பெண்ணையே தேர்ந்தெடுப்பார். தான்தோன்றித்தனமான இளைஞர்களைப் போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சியையும் மட்டுமே அவர் நோக்கமாகக் கொள்ளமாட்டார். இதற்கெல்லாம் மேலாக மார்க்கப்பற்று, சிறந்த அறிவு, நன்னடத்தை உடையவளையே அவர் விரும்புவார். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்பார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்ப பாரம்பரியத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கப் பற்றுக்காக. மார்க்கப் பற்றுடையவளை (மணந்து) வெற்றி அடைந்துகொள்! உன் இருகரங்களும் மண்ணாகட்டும்!'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு மார்க்கப் பேணுதல் உடைய பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு உபதேசித்தது, அழகான பெண்ணை விரும்பக்கூடாது என்ற கருத்தில் அல்ல. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் திருமணத்துக்கு முன் அப்பெண்ணை பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கது என்றார்கள். முஸ்லிம் தனது மனதுக்குப் பிடிக்காத, அவனது கண்களுக்கு மகிழ்ச்சியளிக்காத பெண்ணை மணந்து சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துக்கொள்ள நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள்.

முகீரா இப்னு ஷுஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நான் திருமணம் செய்ய பெண் பேசினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘அந்தப் பெண்ணைப் பார்த்தீரா?'' என்று கேட்டார்கள். நான் ‘‘இல்லை'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘அவளைப் பார்த்துக்கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிகச்சிறந்ததாகும்'' என்று கூறினார்கள். (ஸுனனுன் நஸாயீ)

அன்சாரிப் பெண்ணை பெண் பேசியிருந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் அப்பெண்ணைப் பார்த்தாயா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அப்பெண்ணை பார்த்துக்கொள் என அவரை ஏவினார்கள். (ஸுனனுன் நஸாயீ)

நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் நற்குணமுடைய பெண்ணிடம் அழகும் விரும்பத்தகுந்த பண்புகளில் ஒன்று என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்பது கருத்தல்ல.

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு கூறினார்கள்: ‘‘மனிதன் பொக்கிஷமாகக் கருதுவதில் மிகச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நற்குணமுடைய பெண். கணவன் அவளைப் பார்த்தால் அவனை மகிழ்விப்பாள். அவன் ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவன் இல்லையென்றால் அவனை பாதுகாத்துக் கொள்வாள். (இவ்விடத்தில் மனைவி தனது கற்பை பாதுகாப்பதை கணவனை பாதுகாப்பதென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்). (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். ‘‘பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?'' நபி (ஸல்) அவர்கள், ‘‘கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

இது கணவனுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் தன்மைகொண்ட மனைவி பற்றிய நபி (ஸல்) அவர்கள் கூறிய உயர்ந்த கண்ணோட்டமாகும். இத்தகைய பெண்ணே இல்லறத்தின் சிரமங்களை சகித்துக் கொள்வாள். இல்லத்தில் திருப்தி, அமைதி மற்றும் உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்வாள். சந்ததியை சிறந்த முறையில் பேணிக் கொள்வாள். வீரமிக்க மக்களாகவும் சிறந்த அறிஞர்களாகவும் அவர்களை உருவாக்குவாள்.

மனம், உடல், ஆன்மா, அறிவின் தேட்டங்களுக்கு ஏற்ப உறுதிமிக்க, சமநிலை பெற்ற அஸ்திவாரத்தின் மீதே திருமணம் என்ற மாளிகை நிர்ணயிக்கப்பட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதுதான் திருமணஉறவு உறுதியாக அமைந்து வெறுப்புணர்வும் மனஸ்தாபமும் தலைதூக்காதிருக்கும். உண்மையான முஸ்லிம் எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தையே பின்பற்றுவார். அவர் தீயகுணமுள்ள அழகிய பெண்ணின் வலையில் சிக்கிவிடமாட்டார்.


மணவாழ்வில் இஸ்லாமிய வழிகாட்டுதலை பின்பற்றுவார்

உண்மை முஸ்லிம் தனது இல்லறத்தில் மனைவியுடனான உறவுகளைப் பேணுவதில் இஸ்லாமிய நெறியை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் குறித்தும், அவளுடனான நல்லுறவு குறித்தும் இஸ்லாமிய வழிகாட்டுதலை நாம் அறியும்போது ஆச்சயத்தில் ஆழ்ந்துவிடுவோம்.

இஸ்லாம் பெண்ணைப்பற்றி நிறைய உபதேசித்துள்ளது. அவளுக்கு உலகின் எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதோ பெண்களைப் பற்றி அருட்தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய உபதேசங்களில் சில பின்வருமாறு:

‘‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! ஏனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘பெண், விலா எலும்பைப் போன்றவள், அவளை நீ நிமிர்த்த நினைத்தால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் குறையுள்ள நிலையிலேயே அவளிடம் இன்பத்தை அடைந்து கொள்வாய்.

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் வந்துள்ளது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் குறையுள்ள நிலையிலேயே அவளிடம் இன்பத்தை அடைந்து கொள்வாய். அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்துவிடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை தலாக் விடுவதாகும்''.

நபி (ஸல்) அவர்களின் இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கையான தன்மைகளை, பண்புகளை மிகத் துல்லியமாக விவரித்துள்ளார்கள். கணவன் விரும்புவது போன்று மனைவி ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகள் இயல்பாகவே அமைந்திருக்கும் என்பதை கணவன் விளங்கிக்கொள்ள வேண்டும். பூரணமானது, சரியானது என தான் நினைக்கும் பாதையின்பால் அவளைத் திருப்புவதில் வன்மையான முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளை கவனத்தில் கொள்ளவேண்டும். அவளை அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அவளது சில குணங்கள் தனது விருப்பத்திற்கேற்ப இருக்காது. இதனால் தான் விரும்புவதுபோல அவளை மாற்றிட வேண்டுமென நினைப்பது தனது விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக்கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன் என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல்பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே கணவன் மனைவியை தான் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் தலாக்கில் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

பெண்ணின் இயற்கையை ஆழமாக விளங்கி விவரித்த நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை உள்ளத்தில் கொண்டுள்ள உண்மை முஸ்லிம் தனது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களை பொருட்படுத்த மாட்டார். அப்போதுதான் இல்லம் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இல்லாத நிம்மதியளிக்கும் அமைதிப் பூங்காவாகத் திகழும்.

இந்த நபிமொழியை ஆய்வு செய்பவர்கள் ஓர் அம்சத்தைப் புரிந்துகொள்ள முடியும். நபி (ஸல்) அவர்கள், ‘பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று ஆரம்பித்துவிட்டு பிறகு அவளது இயல்புகளை விவரித்தபின், ஆரம்பித்த அதே வார்த்தையைக் கூறிமுடிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் பெண்ணுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள்!

அவளது இயல்பைப் பற்றி எவ்வளவு ஆழிய சிந்தனை! எல்லா நிலைகளிலும் நபி (ஸல்) அவர்களின் இந்த மேலான வழிகாட்டுதல்களை முன்மாதிரியாக அமைத்துக் கொள்வதைத்தவிர முஸ்லிமுக்கு வேறு ஏதேனும் வழியுண்டோ!

பெண்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்ததால்தான் தனது இறுதி ஹஜ்ஜின் பேருரையிலும் பெண்களைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் உபதேசிக்க மறந்துவிடவில்லை. முஸ்லிம்களுக்கு எவையெல்லாம் சொல்ல வேண்டுமோ அவை அனைத்தையும் கூறுவதற்கான கடைசி வாய்ப்பாக இறுதி ஹஜ்ஜுப் பேருரையை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள். அந்த நபிமொழியின் ஆரம்பமே பெண்களைப் பற்றியதாக அமைந்திருப்பது அதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அறிந்து கொள்ளுங்கள்! பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் உங்களிடத்திலே உதவியாளர்களாகவே இருக்கிறார்கள். ‘அதை'த்தவிர வேறெதையும் நீங்கள் உரிமையாக்கிக்கொள்ள முடியாது, அவர்கள் பகிரங்கமான மானக்கேடான விஷயங்களில் ஈடுபட்டாலே தவிர. அவ்வாறு அவர்கள் ஈடுபட்டால் படுக்கையிலிருந்து அவர்களை ஒதுக்கிவையுங்கள். அவர்களை காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள் மீது எந்த மாற்று வழியையும் தேடாதீர்கள்.

அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமையாகிறது உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது படுக்கையை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமையாகிறது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.'' (ஸுனனுத் திர்மிதி)

இந்த உபதேசத்தை கேட்கும் உண்மை முஸ்லிம் நிச்சயமாக மனைவியின்மீது விதியாகும் கடமைகளை நிர்ணம்ப்பதிலும் மனைவியுடன் கருணையாக நடந்துகொள்வதிலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வார். அதனால் முஸ்லிமின் இல்லறத்தில் மனைவிக்கு அநீதி இழைக்கப்படுவதற்கான அல்லது இடையூறு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்காது.

பெண்ணைப் பற்றி நபி (ஸல்) அவர்களின் உபதேசங்கள் எண்ணற்றவை. அதில் ‘தனது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்துகொள்பவரே உம்மத்தில் சிறந்தவர்' என வர்ணிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியடத்தில் சிறந்தவரே.'' (ஸுனனுத் திர்மிதி)

இந்த நபிமொழியின் கருத்து: பரிபூரண ஈமான் உள்ளவர் மிக அழகிய குணத்தை கொண்டிருக்க வேண்டும். அழகிய குணமில்லாமல் பரிபூரண ஈமானை அடைய முடியாது. நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர் தன் மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும். நம்மிடத்தில் சிறந்தவராக இருந்து மனைவியிடத்தில் சிறந்தவராக இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவரல்லர்.

சில பெண்கள் தங்களுடைய கணவர்களைப்பற்றி முறையிடு வதற்காக நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆண்களுக்கு கேட்கும் விதமாக பின்வருமாறு கூறினார்கள்: ‘‘முஹம்மதின் குடும்பத்தாரிடம் பல பெண்கள் தங்களது கணவர்களைப்பற்றி முறையிட வருகிறார்கள். அக்கணவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர்.'' (ஸுனன் அபூ தாவுத்)

நேரிய மார்க்கமான இஸ்லாம் பெண்ணுக்கு நீதி செலுத்தி அவளைக் கண்ணியப்படுத்துவதில் மேலோங்கி நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் அவளுடன் அழகிய முறையிலேயே நடந்துகொள்ள உபதேசிக்கிறது. பெண்மையின் வரலாற்றில் வேறெங்கும் இக்கண்ணியத்தை அடைந்துகொள்ள முடியாது.

.....மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள்! அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் அநேக நன்மைகளை வைத்திருக்கலாம். (அல்குர்ஆன் 4:19)

இத்திருவசனம் முஸ்லிமின் உள்ளுணர்வை தட்டியெழுப்புகிறது அவரது கோபத்தை தணிக்கிறது அவள் மீதான வெறுப்பை அகற்றுகிறது. இதன்மூலம் திருமண உறவு அறுந்துவிடாமல் பலப்படுத்தப்படுகிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும், மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் இத்தூய்மையான திருமண உறவில் பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுறது.

தன் மனைவியை வெறுப்பதால் அவளை தலாக் கூறப்போவதாக தெரிவித்த மனிதருக்கு உமர் (ரழி) அவர்கள் ‘‘நீ நாசமடைவாயாக! இல்லறம் அன்பின் மீதுதான் அமைக்கப்படுகிறது. அதில் பராமரிப்பும் புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்'' என்று கூறினார்கள்.

இஸ்லாமில் திருமண ஒப்பந்தம் என்பது அற்பமான உணர்வுகளின் வெளிப்பாடோ அல்லது இயற்கை ஆசையை தனித்துக் கொள்வதற் குண்டான வழியோ அல்ல. மாறாக இதற்கெல்லாம் மேலாக தூய்மை யானதும் மிக கண்ணியமானதுமாகும்.

உண்மை முஸ்லிமிடம் மனித நேயமும், அறிவும், நற்குணமும், சகிப்புத் தன்மையும், விசாலமான இதயமும் அமைந்திருக்கும். அப்பண்புகள் தனது மனைவியிடம் காணப்படும் வெறுக்கத்தகுந்த குணங்களை சகித்துக்கொள்ளும் பக்குவத்தை அவருக்கு அளிக்கும்.

இந்நிலையில் அவரிடம் மிருகத்தனமான செயல்பாடோ, வியாபாயின் பேராசையோ, வீணர்களின் பொடுபோக்கோ வெளிப்படாது.

மாறாக, உண்மை முஸ்லிம் தனது இரட்சகனின் வழிகாட்டுதலையே பின்பற்றுவார். மனைவி மீது வெறுப்பிருந்தாலும் நல்லுறவையே கடைபிடிப்பார். தனது இறைவனின் கூற்றுக்கிணங்க தன்னை அமைத்துக் கொள்வார். ஏனெனில், மனிதன் சில விஷயங்களை வெறுத்து அதிலிருந்து விலகியிருக்க விரும்புகிறான். ஆனால் உண்மையில் அவை நலவுகளால் சூழப்பட்டதாகவும், நன்மைகளை உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கும்.

எனவே உண்மை முஸ்லிம், எவ்வாறு நேசிக்க வேண்டும் எவ்வாறு வெறுக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பார். நேசிப்பவர் மீது குருட்டுத்தனமான நேசத்தைக் கொண்டிருக்கவும் மாட்டார். அவ்வாறே வெறுப்பவர்மீது கல்நெஞ்சம் கொண்ட, பிடிவாதமான, அடிப்படையற்ற கோபத்தை வெளிப்படுத்தவும் மாட்டார். நேசிப்பிலும் வெறுப்பிலும் நிதானமான, நீதமான நடுநிலையைக் கொண்டிருப்பார்.

முஸ்லிமான பெண்ணை அவளது கணவன் வெறுத்தாலும் அவளிடம் விரும்பத்தகுந்த பல நற்குணங்கள் இருந்தே தீரும். எனவே அக்கணவன் தன்னை திருப்திபடுத்தும் நற்குணங்களை மறந்துவிடக்கூடாது. அவளிடம் உள்ள வெறுக்கத்தகுந்த குணங்களை சுட்டிக் காட்டவும் தவறக்கூடாது என்பதை மகத்தான இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)


சிறந்த கணவர்

இந்த ஆதாரங்கள், மனைவியிடம் நீதமாக அழகிய நடத்தையைக் கொண்டிருக்க வேண்டுமென வலியுறுத்துவதை முஸ்லிம் அறிந்திருப்பார். எனவே நிச்சயமாக அவர் சிறந்த கணவராகத் திகழ்வார். காலமும் வயதும் எவ்வளவு நீண்டாலும் அவன் மிருதுவான குடும்ப வாழ்க்கையில் இன்புற்று அவன் உன்னதமான உயர்ந்த தோழமையில் வாழ்வதை அவரது மனைவி பாக்கியமாகக் கருதுவாள்.

அவர் வீட்டினுள் நுழைந்தால் தனது மனைவி, மக்களை முகமலர்ச்சியுடன் அணுகுவார். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். அல்லாஹ் ஏவிய பிரகாரம் மகத்துவமிக்க அழகிய முகமனைக் கூறியபடி அவர்களை எதிர்கொள்வார். அது இஸ்லாமுக்கே உரிய தனித்துவமிக்க முகமனாகும்.

..... ஆனால் நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வால் உங்களுக்கு கற்பிக்கப்பட்ட, மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான (ஸலாமுன் என்னும்) வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக்கொள்ளவும். இவ்வாறே அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக! (அல்குர்ஆன் 24:61)

இந்த முகமனை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள்.

அனஸ் (ரழி) அவர்களிடம் கூறினார்கள். ‘‘எனதருமை மகனே நீ உனது குடும்பத்தாரிடம் சென்றால் ஸலாம் கூறிக்கொள். அது உனக்கும் உனது குடும்பத்தாருக்கும் அருளாகும்.'' (ஸுனனுத் திர்மிதி)

ஒரு மனிதர் தனது குடும்பத்தாரை ஸலாம் கூறி சந்திப்பது எவ்வளவு பரக்கத் பொருந்திய காரியம்! அவர்களது வாழ்வை மகிழ்ச்சியும் குதூகலமும் நிம்மதியும் உடையதாக ஆக்கி இல்லத்தில் அன்பையும் அருளையும் திருப்தியையும் ஏற்படுத்துவார். தனது மனைவிக்கு ஏதேனும் ஒரு தேவை ஏற்பட்டால் உதவிக்கரம் நீட்டுவார். வேலை பளுவின் காரணமாக அவளுக்கு களைப்பு, சடைவு, சஞ்சலம் ஏற்பட்டால் மென்மையாகப் பேசி அவளுக்கு ஆறுதலும் ஆனந்தமும் அளிப்பார்.

தன் மனைவியின் உள்ளத்தில் ‘தான் ஒரு சங்கைமிக்க உயர்ந்த குணமுடைய, கண்ணியமும் வலிமையும் கொண்ட கணவன் நிழலில் இருக்கிறோம்' என்ற உணர்வை ஏற்படுத்துவார். அவளைப் பாதுகாத்து, பராமரித்து அவளது காரியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார். தனது சக்திக்கு ஏற்ப அவளது முறையான தேவைகளை நிறைவேற்றித் தருவார். நேரிய மார்க்கம் அனுமதியளித்த பிரகாரம் தன்னை அழகுபடுத்திக் கொண்டு அவளது பெண்மையை திருப்திப்படுத்துவார். தனது தேவைகள், அல்லது நண்பர்கள் அல்லது சொந்த வேலைகள் அல்லது படிப்புகள் என்று தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நேரமனைத்தையும் செலவிட்டுவிடாமல் அவளது தேவைக்கெனவும் நேரங்களை ஒதுக்குவார்.

கணவனின் மூலம் சுகமனுபவித்துக்கொள்ளும் விஷயத்தில் மனைவியின் உரிமைக்கு இஸ்லாம் பொறுப்பேற்றுள்ளது. எனவேதான் அவர் தனது அனைத்து நேரங்களையும் தொழுகை, நோன்பு, திக்ரு போன்ற வணக்க வழிபாடுகளில் செலவிடுவதைகூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஏனெனில் இது இம்மகத்தான மார்க்கம் நிர்ணயித்துள்ள சமத்துவ அடிப்படைக்கு எதிராகும். இக்கருத்தை அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழியில் காணுகிறோம்.

அப்துல்லாஹ் (ரழி) அவர்களின் அளவுக்கதிகமான வணக்கங்களைப் பற்றி அறிந்த நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் நின்று வணங்குவதாக நான் கேள்விப்பட்டேனே?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘ஆம்! இறைத்தூதரே!'' என்றார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘‘அவ்வாறு செய்யாதீர்கள். நோன்பு வையுங்கள். நோன்பின்றியும் இருங்கள். தொழவும் செய்யுங்கள், தூங்கவும் செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் உடலுக்கும், உங்கள் இரு கண்களுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களை சந்திக்க வருபவர்களுக்கும் நீங்கள் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உஸ்மான் இப்னு மள்வூன் (ரழி) அவர்களின் மனைவி கவ்லா பின்த் ஹகீம் (ரழி), நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் அழுக்கடைந்த ஆடையுடன், அலங்கோல நிலையில் வந்தார். அன்னையர்கள் ‘‘உனக்கு என்ன நேர்ந்தது? (ஏன் இந்தக் கோலத்தில் இருக்கிறாய்)'' என்று கேட்டார்கள். கவ்லா (ரழி) அவர்கள் தனது கணவரைப் பற்றி ‘‘இரவு நேரங்களில் நின்று வணங்குகிறார். பகல் காலங்களில் நோன்பு வைக்கிறார்'' என்று கூறினார். அன்னையர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களைக் கண்டித்தவர்களாக ‘‘என்னிடத்தில் உமக்கு முன்மாதிரி இல்லையா?'' என்றார்கள். அவர் ‘‘ஆம்! இருக்கிறது! அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்'' என்றார்கள். அதற்குப் பிறகு கவ்லா (ரழி) மணம் பூசி அலங்காரமாக வந்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் ‘‘உஸ்மானே! நமக்கு துறவறம் விதிக்கப்படவில்லை, என்னிடம் உமக்கு முன்மாதிரி கிட்டவில்லையா? அல்லாஹ் மீது ஆணையாக! நான் உங்களைவிட அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் கட்டளைகளை உங்களைவிட அதிகம் பேணுகிறேன்'' என்று கூறினார்கள். (தபகாத் இப்னு ஸஅத்)

சங்கைமிகு ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தங்களது அழகிய வழிமுறையை தோழர்களுக்கு கற்றுக்கொடுத்து குடும்ப வாழ்க்கையிலும் வணக்க வழிபாட்டிலும் எவ்வாறு நடுநிலையுடன் நடக்கவேண்டும் என்று வழிகாட்டினார்கள். ஆகவேதான் மார்க்கத்தில் நடுநிலையை கையாளும் குணம் நபித்தோழர்களின் இயற்கை பண்பாகவே மாறிவிட்டது. அவர்களில் ஒருவர் இதற்கு மாறுசெய்யும்போது மற்றவர் அதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவார்கள்.

அபூ ஜுஹைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்களுக்கும் அபூதர்தா (ரழி) அவர்களுக்குமிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். அபூதர்தா (ரழி) அவர்களை சந்திக்க ஸல்மான் (ரழி) சென்றிருந்தார்கள். அங்கு அவர்களது மனைவி அலங்காரமற்றவராக இருந்தார். ஸல்மான் (ரழி) ‘‘உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘உமது சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எதுவும் தேவையில்லை'' என்றார்.

அபூதர்தா (ரழி) வந்தவுடன் ஸல்மான் (ரழி) அவர்களுக்கு உணவு தயார் செய்து ‘‘நீங்கள் சாப்பிடுங்கள், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்'' என்றார். ஸல்மான் (ரழி) அவர்கள் ‘‘நீர் சாப்பிடாதவரை நானும் சாப்பிடமாட்டேன்'' என்று மறுத்துவிட்டார். பின்னர் அபூதர்தா (ரழி) அவர்களும் சேர்ந்து சாப்பிட்டார். இரவானபோது அபூதர்தா (ரழி) நின்று வணங்க ஆயத்தமானார். ஸல்மான் (ரழி) ‘‘தூங்குங்கள்'' என்று கூறியவுடன் தூங்கினார். பின்பும் அபூதர்தா (ரழி) தொழ முயன்றபோது ‘‘தூங்குங்கள்'' என ஸல்மான் (ரழி) கூறினார்கள்.

இரவின் கடைசிப் பகுதியானதும் ஸல்மான் (ரழி) அவர்கள் ‘‘இப்போது எழுந்திருங்கள்'' என்று கூறி இருவரும் தொழுதார்கள். அபூதர்தா (ரழி) அவர்களிடம் ‘‘உமது இறைவனுக்கு உம்மீது கடமை உண்டு. உமது ஆன்மாவுக்கு உம்மீது கடமை உண்டு. உமது குடும்பத்தாருக்கு உம்மீது கடமை உண்டு. ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கடமையை நிறைவேற்றுங்கள்'' என்று ஸல்மான் (ரழி) கூறினார்கள்.

ஸல்மான் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஸல்மான் உண்மையே உரைத்தார்'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அறிவும் இறையச்சமும் நன்னடத்தையும் கொண்ட முஸ்லிம் தனது மனைவியுடனான இல்லறத்தின் பசுமைகள் வாடிட அனுமதிக்கக் கூடாது. இன்பமூட்டும் விளையாட்டினாலும் ஆனந்தமூட்டும் வார்த்தைகளாலும் தனது மனைவிக்கு அவ்வப்போது மகிழ்ச்சியூட்டி, தங்கள் இருவடையே உள்ள உறவை செழிப்பாக்குவார். இதுவிஷயத்தில் நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மார்க்கத்தை நிலை நிறுத்துவது, முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்குவது, அறப்போருக்காக ராணுவத்தை தயார்படுத்துவது, இன்னும் இதுபோன்ற எத்தனையோ பல முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தும் இப்பொறுப்புகள் எல்லாம் அவர்களை ஒரு முன்மாதிரியான கணவராக, தனது மனைவிகளுடன் அழகிய பண்புகளுடனும் பரந்த மனத்துடனும் பழகி, அவர்களுடன் கொஞ்சி விளையாடுவதிலிருந்து அவர்களை தடுக்கவில்லை.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தெரிவிப்பதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்காக ஹரீர் என்ற உணவை சமைத்தேன். நான் ஸவ்தா (ரழி) அவர்களிடம் ‘‘சாப்பிடுங்கள்!'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கும் ஸவ்தா (ரழி) அவர்களுக்கும் மத்தியில் அமர்ந்திருந்தார்கள். ஆனால் ஸவ்தா (ரழி) மறுத்துவிட்டார். ‘‘கண்டிப்பாக அதை சாப்பிட்டே ஆகவேண்டும் அல்லது அதை உங்களது முகத்தில் பூசிவிடுவேன்'' என்று கூறினேன். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். நான் ஹரீராவில் எனது கையை வைத்து அவரது முகத்தில் பூசிவிட்டேன். இதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் சிரித்தவர்களாக ஹரீராவில் ஸவ்தாவிற்காக தனது கரத்தை வைத்து ஸவ்தாவிடம் ‘‘ஆயிஷாவின் முகத்தில் நீ இதை பூசிவிடு'' என்று கூறினார்கள். (அல் ஹைஸமி)

மனைவியின் இதயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அழகிய நடத்தையுடன் இனிமைதரும் விதமாக செயல்பட்டதிலிருந்து அவர்களது விசாலமான உள்ளத்தையும் பரந்த மனப்பான்மையையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தார்கள். இருவரும் ஓட்டப்பந்தயம் வைத்தபோது ஆயிஷா (ரழி) அவர்கள் முந்திவிட்டார்கள். கொஞ்சம் சதைபோட்ட பிறகு இருவரும் ஓடினார்கள். அப்போது நபி (ஸல்) முந்திவிட்டார்கள். ‘‘இது அந்தப் பந்தயத்திற்கு பதிலாகிவிட்டது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸுனன் அபூ தாவுத், முஸ்னத் அஹ்மத்)

தனது நேசமிகு இளம் மனைவியின் இதயம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அவர்களை அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளைக் காண்பித்து அதை அவர்கள் பார்த்து ரசித்ததைக் கண்டு நபி (ஸல்) அவர்களும் மகிழ்ந்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது சிறுவர்கள், பெரியவர்களின் ஆரவாரத்தை செவியுற்றார்கள். அங்கு சில ஹபஷிகள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் அவர்களை சூழ்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆயிஷாவே! இங்குவந்து பார்'' என்றார்கள். எனது கன்னங்களை அவர்களது தோளின் மீது வைத்துக்கொண்டு, நான் அவர்களது புஜத்துக்கும் தலைக்கும் மத்தியிலிருந்து பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆயிஷாவே உனக்கு திருப்தியா? ஆயிஷாவே உனக்கு திருப்தியா?'' என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். என்மீது அவர்களுக்கு இருந்த நேசத்தை அறிந்துகொள்வதற்காக நான் ‘‘இல்லை'' என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன், தங்களது இருபாதங்களையும் (வலியின் காரணமாக) மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தார்கள். (ஸுனனுன் நஸயீ)

மற்றோர் அறிவிப்பில், அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் நபி (ஸல்) அவர்களை என்னுடைய அறையின் வாசலில் நிற்கக் கண்டேன். ஹபஷிகள் சிலர் மஸ்ஜிதில் ஈட்டியைக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களின் காதுக்கும் தோளுக்கிடையிலிருந்து அந்த விளையாட்டைக் காண்பதற்காக நபி (ஸல்) அவர்கள் என்னை தனது மேலாடையால் மறைத்துக் கொண்டார்கள். நானாக திரும்பிச் செல்லும்வரை எனக்காக நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். விளையாட்டில் ஆர்வமுள்ள இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுப் பாருங்கள்!'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியரிடம் கொண்டிருந்த நல்லுறவு, நகைச்சுவை போன்ற பண்புகளைக் காணும் உண்மை முஸ்லிம், தனது மனைவியுடன் நல்லவராகவும் அவளுக்கு உறுதுணையாகவும் அவளுடன் அன்பான குணமுடையவராகவும் மிருதுவானவராகவும் நடந்துகொள்வார்.

உண்மை முஸ்லிம் அற்பமான காரணங்களுக்கெல்லாம் கோப நெருப்பை வெளிப்படுத்தும் மூடக்கணவர்களைப் போன்று நடந்து கொள்ளமாட்டார். விருப்பத்திற்கேற்ப உணவு தயார் செய்யவில்லை அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு சமைக்கவில்லை என்பது போன்ற அற்பமான காரணங்களுக்கெல்லாம் சிலர் வீட்டில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தி விடுகிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களை அடியொற்றி நடப்பவர் தனது ஒவ்வொரு நிலையிலும் நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகளை நினைவில் நிறுத்தி அன்பும் நேசமும் பரந்த மனப்பான்மையும் கொண்ட கணவராகத் திகழ்வார்.

உண்மை முஸ்லிம் நபி (ஸல்) அவர்களின் நடத்தையை நினைவு கூர்வார். நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு உணவையும் குறை கூறியதேயில்லை. அதை விரும்பினால் சாப்பிடுவார்கள். பிடிக்கவில்லை என்றால் அதை விட்டுவிடுவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியிடம் ஆணத்தைக் கொண்டு வருமாறு கேட்டார்கள். குடும்பத்தினர் ‘‘எங்களிடம் காடி (வினிகர்) மட்டும்தான் இருக்கிறது'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதைக் கொண்டு வருமாறு கூறி சாப்பிட்டார்கள். மேலும் ‘‘காடி மிகச்சிறந்த ஆணம். காடி மிகச்சிறந்த ஆணம்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

தங்களது மனைவியிடம் ஏற்படும் சிறிய குறைகளைப் பார்த்து கோபித்துக் கொள்பவர்கள் சற்று நிதானிக்கவேண்டும். உணவு தாமதமாகுதல், தான் விரும்பிய ருசியின்மை போன்ற காரணங்களுக்காக கோபப்படும்போது அந்த பலவீனமான பெண்ணிடம் அக்குறை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், சில சந்தர்ப்பங்களில் அவள் இதுபோன்ற தவறை செய்ததற்குரிய காரணங்கள் இருக்கலாம். அதை தெரிந்துகொள்வதற்கு முன்பே சில ஆண்கள் கோபப்பட்டு விடுகிறார்கள். பெண்களைவிட ஆண்கள் வலிமையானவர்கள் அல்லவா? ஆண்கள்தான் சகித்துக் கொள்ளவேண்டும்.

உண்மை முஸ்லிம் மனைவியிடம் மட்டுமல்லாது அவளது உறவினர், தோழியர்களிடமும் நல்லுறவைக் கடைபிடிக்கவேண்டும். இதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் ஆதாரம் உண்டு.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு வயோதிகப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து செல்வார்கள். நபி (ஸல்) அவர்கள் அம்மூதாட்டியிடம் பரிவுடனும் கண்ணியத்துடனும் நடந்து, அவர்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் நிலை எப்படி இருக்கிறது? நமது சந்திப்பிற்கு பிறகு எப்படி இருந்தீர்கள்?'' என்று விசாரிப்பார்கள். அப்பெண்மணி ‘‘நலமாக இருக்கிறேன். என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறுவார்கள்.

அம்மூதாட்டி சென்றபிறகு அன்னை ஆயிஷா (ரழி) ‘‘இந்த மூதாட்டியை இந்தளவிற்கு நீங்கள் வரவேற்கிறீர்களே! நீங்கள் யாருக்குமே செய்யாத சில காரியங்களையெல்லாம் அவர்களுக்கு செய்கிறீர்களே!'' என்றபோது நபி (ஸல்) அவர்கள் ‘‘இந்தப் பெண்மணி நாங்கள் கதீஜா (ரழி) அவர்களின் வீட்டில் இருக்கும்போது எங்களை சந்திப்பவராக இருந்தார்கள். நேசிப்பவர்களை கண்ணியப்படுத்துவது ஈமானில் கட்டுப்பட்டது என்பது உனக்குத் தெரியுமா?'' என்று கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

சில சமயங்களில் கணவன்மீது மனைவிக்கு கோபம் ஏற்படலாம். ஏதேனும் ஒரு காரணத்தால் ஆத்திரத்தை வெளிப்படுத்துவாள். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் முஸ்லிம், பெண்ணின் குண இயல்புகளை ஆழ்ந்து அறிந்தவராக இருப்பதால் மிகுந்த சகிப்புத் தன்மையுடன் அதை எதிர்கொள்ளவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியர் கோபித்தால் அமைதி காப்பார்கள். மனைவியரில் சிலர் இரவுவரை நபி (ஸல்) அவர்களுடன் பேசாதிருப்பார்கள்.

உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘குரைஷி குலத்தைச் சேர்ந்த நாங்கள், பெண்கள்மீது ஆதிக்கம் செலுத்தி வந்தோம். நாங்கள் மதீனா வந்தபோது அந்நகரப் பெண்கள், ஆண்கள்மீது ஆதிக்கம் கொண்டிருந்தார்கள். எங்களது குடும்பப் பெண்கள் அப்பெண்களிடம் பாடம் கற்றுக் கொண்டார்கள். நான் மதீனாவின் மேட்டுப் பகுதியில் உமய்யா இப்னு ஜைத் கோத்திரத்தாருடன் வசித்துவந்தேன்.

ஒரு நாள் என் மனைவி என்மீது கோபப்பட்டு, என்னை அவர் எதிர்த்துப் பேசியது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அதற்கவர் ‘‘நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் என்னை வெறுக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் துணைவியர்கள் கூட நபி (ஸல்) அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பகலிலிருந்து இரவுவரை பேசுவதில்லை'' என்று கூறினார்.

பின்பு நான் எனது மகள் ஹஃப்ஸாவிடம் சென்றேன். ‘‘ஹஃப்ஸாவே! நீ நபி (ஸல்) அவர்களை எதிர்த்துப் பேசுகிறாயா?'' என்று கேட்டேன், ‘‘ஆம்'' என்றார். ‘‘உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலிலிருந்து இரவுவரை கோபமாக இருக்கிறார்களா?'' என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா ‘‘ஆம்'' என்றார். நான் கூறினேன்: ‘‘உங்களில் எவரேனும் அவ்வாறு செய்தால் நஷ்டமும் தோல்வியும் அடைந்து விடுவார். உங்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்கு கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் கோபமடைந்து அழிந்துவிடுவோம் என்ற அச்சம் அவருக்கு இல்லையா? நீ இறைத்தூதரிடம் எதிர்த்துப் பேசாதே, அவர்களிடம் எதையும் கேட்காதே, உனக்குத் தேவையானதை என்னிடமே கேள்'' என்று கூறினேன்.

பிறகு உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கும் தனது மகள் ஹஃப்ஸாவுக்குமிடையே நடைபெற்ற உரையாடலைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களை நற்பண்புகளிலும் செயல்பாடு களிலும் பின்பற்ற நினைக்கும் முஸ்லிம் இதுபோன்ற நற்குணங்களை தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் இஸ்லாம் என்பது உயர்ந்த சமூக வாழ்க்கைக்குரிய மார்க்கம் என்பதை ஆதாரப்பூர்வமாக நிலைநாட்டியவராவார். மேலும் இன்று தனிமனிதர் அல்லது குடும்பம் அல்லது சமூகத்தில் ஏற்படுகின்ற அதிகமான பிரச்சனைகள், பிரிவினைகள், நெருக்கடிகள், குழப்பங்கள் அனைத்திற்கும் காரணம், இஸ்லாம் போதிக்கும் உயர்ந்த பண்புகளை விட்டு தூரமாக இருப்பதுதான் என்பதை மக்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துச்சொல்ல முடியும். உண்மையில் நற்பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ளும் குடும்பமே ஈடேற்றம், நற்பாக்கியம், நிம்மதி ஆகியவற்றை அடைந்துகொள்ள முடியும்.


வெற்றிகரமான கணவர்

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிமே சமூகத்தின் வெற்றிகரமான கணவராகவும் நல்ல மனைவியின் நேசத்திற்குரியவராகவும் திகழமுடியும். இஸ்லாமின் நேரிய வழிகாட்டுதலின் காரணமாக மனைவியிடம் மென்மையாகவும், மிருதுவாகவும் நடந்துகொள்வார். நற்குணங்களால் பின்னப்பட்டுள்ள இஸ்லாமிய வாழ்வியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார். மனைவியின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து, அவளது நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை நிறைவேற்றுவதில் தனது முழு ஆற்றலையையும் வெளிப்படுத்துவார். இதற்கிடையில் பெண் கோணலான எலும்பினால் படைக்கப்பட்டவள், அவளை முழுமையாக சீர்படுத்துவது அறவே சாத்தியமற்றது என்பதையும் மறந்துவிடமாட்டார்.


மனைவியிடம் விவேகத்துடன் நடந்துகொள்வார்

உண்மை முஸ்லிம், மனைவியிடம் அறிவுப்பூர்வமாகவும் கவனமாகவும் நடந்துகொள்ள வேண்டும். மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவளது குடும்பத்தார் எவரையும் அவளுக்கு முன் தவறாகப் பேசக்கூடாது. அவளது உறவினர்பற்றி அவளது இதயத்தைக் காயப்படுத்தும்படியான எந்த வார்த்தையையும் பேசிடக்கூடாது என்பதில் கணவன் கவனமாக இருக்கவேண்டும். அம்மனைவியும் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவருக்கு நோவினைதரும் எந்தக் காரியத்தையும் செய்துவிடாமல், அவரது குடும்பத்தாருக்கு எவ்வகையிலும் தீங்கிழைத்து விடாமல் நடந்துகொள்ள வேண்டும்.

கணவர் தன்னிடம் மனைவி வெளிப்படுத்திய ரகசியங்கள் எதையும் பகிரங்கப்படுத்தக் கூடாது. இதில் ஏற்படும் கவனக்குறைவும் அலட்சியமும் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பிரச்சனைகளின் எமலையை வெடிக்கச்செய்து அவர்களிடையே நிலவும் அன்பொளியை அணைத்துவிடுகிறது. புத்திசாலியான முஸ்லிம் இவ்வாறான சூழல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். எல்லா நிலையிலும் இஸ்லாமின் தூய ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டும்.


மனைவியின் குறைகளை சீராக்குவார்

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் தனது மனைவியின் கல்வியறிவிலோ நடத்தையிலோ ஏதேனும் குறைகளைக் கண்டால் அவளிடம் அறிவார்ந்த முறையில் மென்மையாக நடந்து, அவளது குறைகளைக் களைந்து, அவளைப் செம்மைப்படுத்துவதில் ஆர்வம் கொள்ளவேண்டும். அவளைப் பண்படுத்தும் முயற்சியில் அவளிடம் ஆர்வக்குறைவோ வெறுப்போ வெளிப்பட்டால் அதை மென்மையாகவும் புத்திக் கூர்மையுடனும் எதிர்கொள்ள வேண்டும்.

எக்காரணத்தை முன்னிட்டும் பிறருக்கு மத்தியில் அவளைக் கண்டிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெண்ணை கடுமையாகப் பாதிக்கும் விஷயம் என்னவெனில், அவளைத் தண்டிப்பதை பிறர் பார்ப்பதும், அவளைக் கண்டிப்பதை பிறர் கேட்பதும்தான். இறையச்சமுள்ள முஸ்லிம் பிற மனிதர்களை விட உணர்வால் மிக நுட்பமானவர். அவ்வாறே மற்றவர்களின் உணர்வுகளையும் மிக அதிகமாக மதிப்பார்.


பெற்றோர், மனைவிக்கிடையே சமத்துவம் பேணுவார்

நற்பண்புள்ள முஸ்லிம் தனது பெற்றோர் மற்றும் மனைவியிடையே சமநிலைப் பேணுவதை நன்கறிவார். இருவரில் எவருக்கும் அநீதி இழைத்துவிடாமல், அவ்விருவருடனான உறவில் சமநிலை பேணி, பெற்றோருக்கு நோவினையளிக்காமலும், மனைவிக்கு அநீதியிழைத்து விடாமலும் விவேகத்துடன் நடந்து கொள்வார்.

பெற்றோர்களிடம் நல்ல முறையில் நடந்து, உபகாரம் புரிந்து அவர்களது கடமையை நிறைவேற்றுவார். அவ்வாறே மனைவியின் கடமைகளையும் பூரணமாக நிறைவேற்றுவார். பெற்றோருக்கு உபகாரம் செய்வதாலும் அவர்களைப் பேணுவதாலும் மனைவியை புறக்கணித்துவிடக்கூடாது.

உண்மை முஸ்லிம் இறையச்சமுடையவராக இருப்பதால் இவ்வாறு சமநிலை மேற்கொள்வதில் அவருக்கு சிரமம் ஏதுமில்லை. மேலும் அவர் இஸ்லாமின் மேன்மையான நற்பண்புகளைக் கொண்டிருப்பார். அவரது மார்க்கம் பெற்றோர், மனைவியிடையே எவ்வாறு நீதமாக நடந்து, அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய சரியான அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்பதை அவருக்குப் போதித்துள்ளது. எனவே அதைப் பேணி நடப்பார்.


மனைவியை செம்மையாக நிர்வகிப்பார்

இவ்வாறான உயரிய பண்புகள் மற்றும் நல்லுறவின் மூலம் முஸ்லிம், மனைவியின் இதயத்தில் ஆட்சி செய்வார். அவளும் அவருக்குப் பணிந்து, அவரது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்யமாட்டாள்.

முஸ்லிமான கணவருக்கு மார்க்கம் நற்பண்புகளை கற்றுக் கொடுத்து, பல தகுதிகளையும் அளித்து, பல சட்டங்களையும் வகுத்துக் கொடுத்திருப்பதினால் அவரே பெண்ணை நிர்வகிப்பவராக இருக்கிறார்.

(ஆண், பெண், இரு பாலரில்) ஆண் பாலாரை (ப் பெண் பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன், (ஆண் பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.... (அல்குர்ஆன் 4:34)

இந்த நிர்வகிக்கும் அதிகாரத்திற்கென சில கடமைகள் உள்ளன. கணவர் அந்தக் கடமைகள் குறித்து விசாரிக்கப்படுவார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவன் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இவ்வாறு சமுதாயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியாக இருக்கிறார். ஒவ்வொருவரும் சமுதாயத்தைப் பற்றி ஏதேனும் ஒரு வகையில் விசாரிக்கப்படுவார். ஏனெனில் இஸ்லாமியப் பார்வையில் வாழ்க்கை என்பது உயர்வான அடிப்படையும், நற்செயலும் இணைந்த ஆக்கப்பூர்வமான ஒன்றாகும். அது வீண்விளையாட்டும், பரிகாசத்திற் குரியதுமல்ல. மனித வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் இறைவனின் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.

இஸ்லாம் பெண்ணுக்கு உயரிய அந்தஸ்து வழங்கியிருக்கும் அதே நேரத்தில் வாழ்வில் அவள் தனது பங்கை அறிந்து, மார்க்கம் அவளுக்கென ஏற்படுத்தியுள்ள வரம்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் கட்டளையிடுகிறது. அப்போதுதான் அவள் சமூகத்தில் தனது கடமைகளை சிறப்பாக நிறைவு செய்வாள். அவள் குழந்தைகளின் பராமரிப்பில் கணவனுடன் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாகவும் அழகும் கம்பீரமும் நிறைந்ததாகவும் அமைத்துக் கொள்ள முடியும்.

கணவன் மனைவியிடம் சிறந்த முறையில் நடக்க வேண்டுமென இஸ்லாம் விரும்பும் அதே நேரத்தில் பெண் அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட நேர்மையான விஷயங்களில் ஆணுக்குக் கட்டுப்பட வேண்டுமென மிக உறுதியான கட்டளையைப் பிறப்பிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் ஒருவரை ஒருவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டுமென ஏவுவதாக இருந்தால் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு மனைவியை ஏவியிருப்பேன்.'' (ஸுனனுத் திர்மிதி)

மேலும் கணவன் திருப்தி கொள்வதை மனைவி சுவனம் நுழைவதற்கான காரணமாக இஸ்லாம் அமைத்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘கணவன் தன் மீது திருப்தி கொண்ட நிலையில் மரணம் அடையும் பெண் சுவனம் நுழைவாள்.'' (ஸுனன் இப்னு மாஜா)

கணவனுக்குக் கட்டுப்படாத பெண் மீது அவள் திருந்தி தனது கணவனுடன் இணக்கமாக நடந்து கொள்ளும் வரை மலக்குகள் சாபமிடுகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு பெண் தனது கணவனின் படுக்கையை வெறுத்த நிலையில் இரவைக் கழித்தால் விடியும் வரை மலக்குகள் அவளை சபிக்கிறார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஆணுக்குப் பெண் மீது அதிகாரம் உள்ளது, கணவனுக்குக் கட்டுப் பட்டு அவனை திருப்திப்படுத்த வேண்டும் என்ற காரணத்தால் ரமழான் அல்லாத காலங்களில் கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்கக் கூடாது என்றும், அவனது அனுமதியின்றி எந்தவொரு விருந்தினரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘கணவன் தன்னுடன் இருக்கும்போது அவனது அனுமதியின்றி நோன்பு நோற்க பெண்ணுக்கு அனுமதியில்லை. கணவனின் வீட்டில் அவனது அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கலாகாது.'' (ஸஹீஹுல் புகாரி)

குடும்பத்தைப் பாதுகாத்து, நேர்வழியின்பால் அழைத்துச் செல்வார் என்பதால்தான் இஸ்லாம் ஆணுக்கு பெண்ணை நிர்வகிக்கும் உரிமையைக் கொடுத்திருக்கிறது. மேலும் பெண்களால் ஏற்படும் குழப்பங்களுக்கு ஆண்கள் ஆளாகிவிடக்கூடாது எனக் கடுமையாக இஸ்லாம் எச்சரிக்கிறது. அப்படி அவர்கள் பெண்களின் குழப்பங்களுக்கு ஆளாகும்போது அவர்களது கண்கள் குருடாகி, வீரத்தை இழந்து, மார்க்கத்தில் பலவீனமடைந்து, நேரிய பாதையிலிருந்து தவறி விடுகிறார்கள். இறுதியில் கடிவாளம் அவர்களது கை நழுவி, வழி தவறிய பெண்ணின் கட்டுப்பாட்டுக்குள் குடும்பம் சிக்குண்டு விடுகிறது. பின்பு அவளது பேச்சை மறுக்க முடியாத, அவளது கட்டளையை மீற முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுவிடுகிறது. இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக முன்னுரைத்தார்கள்:

‘‘எனது மரணத்திற்குப் பின் பெண்களால் ஏற்படும் சோதனைதான் ஆண்களுக்கு மிக இடையூறாக இருக்கும்.'' (ஸஹீஹுல் புகாரி)

முஸ்லிம் தனது வழி தவறிய மனைவியின் எந்தவொரு குழப்பத்திற்கும் அடிபணிந்திடமாட்டார். அவள் குழப்பத்தை ஏற்படுத்தினால் அறிவுநுட்பத்துடன் அதை எதிர்கொண்டு அன்பு மனைவியின் தீமையைக் கண்டிப்பார். ஏனெனில், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கே அவர் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு மனிதன் தனது மனைவியை எவ்வளவுதான் நேசித்தாலும் அந்த நேசம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பதற்கு அடுத்ததாகத்தான் அமைய வேண்டும்.

(நபியே! விசுவாசிகளை நோக்கி) நீர் கூறும்: உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய மக்களும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் உங்கள் பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து மிக எச்சரிக்கையுடன் செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள உங்கள் வீடுகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவதை விடவும் உங்களுக்கு மிக விருப்பமானவைகளாயிருந்தால் நீங்கள் உண்மை விசுவாசிகளல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்பார்த்திருங்கள். இது போன்ற பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 9:24)

தங்களை முஸ்லிம்களென வாதிக்கும் பலருடைய இல்லங்களில் காணப்படுவது போன்று முரண்டு பிடிக்கும் பெண்களை உண்மை முஸ்லிமின் இல்லங்களில் காண இயலாது.

ஒருவர் தனது மனைவியை அல்லது சகோதரியை அல்லது மகளை அரைகுறை ஆடையுடன் தலையைத் திறந்து போட்டவளாக, நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் வெளியேறிச் செல்வதைக் காணுகிறார். இஸ்லாமின் ஒழுக்கப் பண்புகளும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலை மாற்றுவதற்குரிய முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் ஆணுக்குரிய வீரத்தை இழந்து மார்க்கத்திலிருந்து விலகி அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகி விட்டார் என்பதுதான் பொருளாகும். கண்டிக்காமலிருந்த குற்றத்திற்காக உண்மையான பாவமன்னிப்புக் கோருதலைத் தவிர வேறெந்த பரிகாரமும் அவருக்கு இருக்க முடியாது.

இஸ்லாம் பெண்களுக்கென சில ஒழுக்க மாண்புகளையும் தனித் தன்மையான தோற்ற அமைப்பையும் அமைத்துள்ளது. மஹ்ரம் அல்லாத அன்னிய ஆண்களிடையே செல்வதற்கோ அல்லது வீட்டிலிருந்து வீதிக்கு வருவதற்கோ அவள் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகளை நிர்ணயித்துள்ளது. அதுதான் முஸ்லிம் பெண்களுக்குரிய ‘ஹிஜாப்' பர்தா என்று சொல்லப்படும் ஆடையாகும்.

முஸ்லிம் பெண்மணி இஸ்லாமிய அமுதுண்டவள் இஸ்லாமெனும் நீண்ட நிழலில் இளைப்பாறியவள். எனவே இஸ்லாமின் ஹிஜாபை திருப்தி கொண்ட நிம்மதியான இதயத்துடனும், ஆழிய விருப்பத்துடனும் ஏற்றுக் கொள்வாள். இது இரட்சகனாகிய அல்லாஹ்வின் கட்டளையாகும். ஹிஜாப் அணிவது ஆணின் வற்புறுத்தலுக்காக இல்லை ஆணின் அகம்பாவத்தை திருப்திப்படுத்துவதற்காகவும் இல்லை. எவ்வித ஆதாரமுமின்றி அருள்மறையின் வழிகாட்டுதலின் மேன்மையை விளங்கிக் கொள்ளாத வெட்கமற்ற சில பெண்கள் ஹிஜாபைப் பேணாமல் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) கூறினார்கள்: ‘‘முதலாவதாக ஹிஜ்ரத் செய்த பெண்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக....! தங்களது ஆடை ஆபரணம் போன்ற அலங்காரத்தை வெளிக் காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்... என்ற பொருள் கொண்ட திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டபோது தங்களது போர்வைகளைக் கிழித்து மறைத்துக் கொண்டனர்.''

ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில், ‘‘அப்பெண்கள் தங்களது போர்வைகளை ஓரப்பகுதியில் கிழித்து தங்களை மறைத்துக் கொண்டனர்'' என்று காணப்படுகிறது.

ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஆயிஷா (ரழி) அவர்களிடம் ஒரு சமயம் இருந்தபோது குறைஷிப் பெண்களையும் அவர்களது மேன்மைகளையும் நினைவு கூர்ந்தோம். அப்போது ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக குறைஷிப் பெண்களுக்கு சில சிறப்புகள் உள்ளன. அல்லாஹ்வின் வேதத்தை உண்மைப்படுத்துவதில் காட்டும் உறுதி, அருளப்பட்டதை ஈமான் கொள்வது போன்ற விஷயங்களில் அன்சாரிப் பெண்களை விட சிறந்த பெண்களை நான் பார்த்ததில்லை.

(....தங்கள் அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பை மறைத்துக் கொள்ளவும்...) என்ற பொருளுடைய வசனம் அருளப்பட்டபோது அப்பெண்களிடம் ஆண்கள் இது விஷயத்தில் அருளப்பட்ட வசனங்களை ஒதிக்காட்டச் சென்றார்கள். ஒவ்வொரு ஆணும் தனது மனைவி, மகள், சகோதரியிடமும் நெருங்கிய ஒவ்வொரு உறவினரிடமும் ஓதிக்காட்டினார்கள். உடனே அனைத்துப் பெண்களும் தங்களது கம்பளி ஆடைகளை எடுத்து தங்கள் மீது சுற்றிக் கொண்டனர். இவ்வாறு அல்லாஹ் அருளியதை விசுவாசித்து உண்மைப் படுத்தினார்கள். ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தங்களது தலையில் துணி போர்த்தியவர்களாக ஸுப்ஹுத் தொழுகைக்கு வந்தார்கள். அது பார்ப்பதற்கு, காகம் தலையில் உட்கார்ந்திருந்ததைப் போன்று இருந்தது. (ஃபத்ஹுல் பாரி)

அல்லாஹ் அந்த அன்சாரிப் பெண்கள் மீது அருள் பொழியட்டும்! அவர்களது இறைவிசுவாசத்தில்தான் எவ்வளவு உறுதி! அவர்கள் அல்லாஹ்விற்குப் பணிவதில் எவ்வளவு நேர்மை! அருளப்பட்ட சத்திய வசனங்களை ஒப்புக் கொள்வதில் எவ்வளவு அழகு! அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விசுவாசித்த ஒவ்வொரு பெண்ணும் அந்த அன்சாரிப் பெண்களை அடியொற்றி நடப்பது ஆச்சரியமல்ல. அப்போது தனித்தன்மையான இஸ்லாமிய கலாச்சார ஆடையை அணிந்து, தங்களது அழகு அலங்காரங்களை மறைத்துக் கொள்வது அவர்களுக்கு சிரமமாகத் தோன்றாது.

இந்த இடத்தில் பல்கலைக் கழகத்தில் பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணை நினைவு கூர்கிறேன். அப்பெண்மணியிடம் அன்சாரிப் பெண்களிடம் காணப்பட்டதற்கு சற்றும் குறையாத ரோஷ உணர்வு வெளிப்பட்டது. டமாஸ்கஸ் பல்கலைக் கழகத்தில் பர்தா அணிந்திருந்த அந்த இளம் பெண்ணிடம் ‘‘இந்தக் கடுமையான கோடை காலத்தில் பர்தா அணிவது சிரமமாக இல்லையா?'' என ஒரு தினசரி பத்திரிகையின் நிருபர் கேட்டபோது அப்பெண்மணி அருள்மறையின் திருவசனத்தையே பதிலாகக் கூறினார்: (நபியே!) கூறுவீராக! நரக நெருப்பு மிகக் கடுமையான வெப்பமுடையது...

இவ்வாறான பரிசுத்தப் பெண்கள் இன்றும் இஸ்லாமிய இல்லங்களை அலங்கரித்து மிகச் சிறப்பான முறையில் குழந்தைகளைப் பராமரித்து வருகிறார்கள். சமூகத்தில் இத்தகைய பெண்கள் இன்னும் அதிகமாக இருக்கத்தான் செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

தனது பெண்கள், வீட்டிலிருந்து வெளியேறும்போது இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பின்பற்றி வெளியே செல்கிறார்களா? ஹிஜாபைக் கடைப்பிடிக்கிறார்களா? என்று கண்காணிப்பது உண்மை முஸ்லிமின் பொறுப்பாகும். மனைவியோ அல்லது சூழ்நிலையோ மிகைத்து, மார்க்கத்தை மீறுவதற்கு தூண்டும்போது கணவன் திருத்த முடியாமல் பலவீனப்பட்டு நிற்பானேயானால் அது அவனது மார்க்கமும் ஆண்மையும் அவனிடமிருந்து அகற்றப்பட்டுவிட்டதன் அடையாளமாகும்.

தனது மனைவியின் நடத்தை பற்றி அல்லாஹ்விடம் விசாரிக்கப்படும் கணவர், அவளது வெளித்தோற்றங்களுக்கு மட்டுமல்லாது அவளது வணக்க வழிபாடுகளுக்கும் பொறுப்பாளி ஆவார். மனைவி அதில் குறை செய்து அலட்சியத்துடன் வரம்பு மீறியிருந்தால் அதுகுறித்தும் விசாரிக்கப்படுவார். மேலும் அவள் தனது கடமைகளை நிறைவேற்றிய விதம் குறித்தும் அவளின் குணங்கள், பழக்க வழக்கங்கள் பற்றியும் விசாரிக்கப்படுவார். இவ்விஷயங்களில் எந்த ஒன்றிலும் அவளிடம் குறைவு ஏற்பட்டால் அது கணவனின் ஆண்மைக்கு பாதகமாகவும், அவனது இஸ்லாமியத் தன்மைக்கு பங்கம் விளைவிப்பதாகவும், அல்லாஹ் அருளிய நிர்வகிக்கும் தகுதிக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் அமையும்.

இதற்குக் காரணம் என்னவெனில் இஸ்லாம் பெண்ணை ஆணிடம் அமானிதமாக ஒப்படைத்துள்ளது. பெரும்பாலான மனைவி கணவனின் வழியை அடியொற்றி நடப்பவளாகத்தான் இருக்கிறாள். அவன் அவளைத் தன்னுடன் சுவனத்திற்கு அழைத்துச் செல்வான் அல்லது நரகிற்கு இழுத்துச் செல்வான். அதனால்தான் முஃமின்களுக்கு அல்லாஹ் தங்களையும் தங்களது குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு உத்தரவிடுகிறான். இது பற்றிய அல்லாஹ்வின் கட்டளையை ஆய்வு செய்தால் இதயங்கள் நடுங்கிவிடும். ஆனால் பலர் தங்களது மனைவி, மக்கள் விஷயத்தில் மிகுந்த அலட்சியத்துடன் இருக்கிறார்கள். அவர்களை நேர்வழிக்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

விசுவாசிகளே! நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான மலக்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறு செய்யமாட்டார்கள். அவர்கள் (வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள். (அல்குர்ஆன் 66:6)

முஸ்லிம் தனது குடும்பத்தை வழிநடத்துவதில் முழுமையான வெற்றி பெறும்போதுதான் பெண் மீது தனக்கிருக்கும் நிர்வகிக்கும் உரிமையை இஸ்லாம் விரும்பியபடி நிலைநாட்டியவராவார். முஸ்லிம் கணவர் கடின இதயமும், கீரிக் கிழிக்கும் நாவும், அடக்குமுறையும் கொண்ட பிடிவாதக்காரராக இருக்கக் கூடாது. ஏனெனில், இது அறியாமைக்கால ஆண்மையாகும். இஸ்லாமில் ஆண்மை என்பது இதுவல்ல.

இஸ்லாமில் ஆண்மையின் இலக்கணம் என்னவெனில் வலிமை, நேசம், உயர்குணம், சிறிய தவறுகளை மறந்து மன்னித்தல், அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பில் மிக உறுதியாக இருத்தல், அல்லாஹ்வின் கட்டளைகளை குடும்ப உறுப்பினர் அனைவர் மீதும் சமமாகப் பேணுதல், நன்மையின்பால் அழைத்துச் செல்வது, வீண் விரயமும் கஞ்சத்தனமும் இல்லாத கொடைத்தன்மை, இம்மை மறுமையின் கடமைகளை ஆழ்ந்து அறிதல், முன்மாதிரியான முஸ்லிமின் குடும்பம் எப்படியிருக்க வேண்டுமென்பதை விளங்கியிருத்தல். இதுவே இஸ்லாம் விரும்பும் முஸ்லிமின் தன்மைகளாகும்.


முன்மாதிரி முஸ்லிம் - முஸ்லிம் தனது பிள்ளைகளுடன்

மகத்தான கடமைகளை அறிவார்

விவேகமான வழிமுறைகளைக் கையாள்வார்

அன்பை உணரச் செய்வார்

தாராளமாகச் செலவிடுவார்

ஆண், பெண்ணிடையே வேறுபாடு காட்டமாட்டார்

சிந்தனை, செயலில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பார்

சமத்துவம் பேணுவார்

உயர் பண்புகளை வளர்ப்பார்


குழந்தைகள் மனிதனுக்கு கண்குளிர்ச்சியாவார்கள். அவர்களால் தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அல்லாஹ்வுக்குப் பின் அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. அவர்கள் மீது இறங்கும் அல்லாஹ்வின் அருள் பெற்றோருக்கும் கிடைக்கிறது. பிள்ளைகளால் அல்லாஹ் உணவில் பரக்கத் செய்கிறான்.

மேற்கூறிய அனைத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமே சாத்தியமாகும். அழகிய முறையில் அவர்களை வளர்க்கும்போது அவர்களது இதயங்களில் நற்சிந்தனைகள் பிரகாசிக்கின்றன. உள்ளங்கள் நற்பண்புகளின் ஊற்றாகத் திகழ்கின்றன. அவர்கள் நற்பாக்கியத்தின் பிறப்பிடமாக அமைவார்கள். இவ்வாறான தன்மைகளைக் கொண்ட குழந்தைகள்தாம் உண்மையில் மனித வாழ்வின் அலங்காரமாகத் திகழ முடியும்.

அல்லாஹ் அவர்களைப் பற்றி தனது திருமறையில் வர்ணிக்கிறான்:

பொருளும் மக்களும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே. (அல்குர்ஆன் 18:46)

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தனது பிரியத்திற்குரியவருக்கு பின்வருமாறு துஆ செய்தார்கள்:

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களும் அவர்களது தாயும், தாயின் சகோதரியும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு தொழ வைத்த பின் எல்லா நலவுகளையும் வேண்டி அவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள். அனஸ் (ரழி) அவர்களின் தாயார் கூறினார்கள்: ‘‘இறைத்தூதரே! உங்களது குட்டி பணியாளருக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.'' நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரழி) அவர்களுக்காக எல்லா நலவுகளையும் வேண்டி துஆச் செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையின் இறுதியில் ‘‘யா அல்லாஹ்! அவருடைய செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கி அவருக்கு பரக்கத் செய்வாயாக!'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

பெற்றோர், குழந்தை வளர்ப்பிலும் அவர்களைச் சிறந்த முறையில் கண்காணித்து கவனம் செலுத்துவதிலும் அசட்டையாக இருந்தால் அக்குழந்தைகள் சோதனையாக, கவலையாக உருவெடுத்து விடுவார்கள். அதற்குப் பின் அந்தப் பெற்றோருக்கு தூக்கமற்ற இரவுகளும் துன்பமான பகல்களும்தான் பரிசாகக் கிடைக்கும்.


மகத்தான கடமைகளை அறிவார்

அருள்மறை குர்ஆனின் கம்பீரமான எச்சரிக்கைக் குரலை செவியேற்கும் முஸ்லிம், குழந்தை வளர்ப்பு எனும் மகத்தான பொறுப்பை அறிந்து கொள்வார்.

விசுவாசிகளே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை மனிதர்களும் கற்களுமாகும். (அல்குர்ஆன் 66:6)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவன் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளிகளே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இஸ்லாம், இந்த முழுமையான பொறுப்பை உலகில் வாழும் அனைவரின் கழுத்திலும் பிணைத்துள்ளது. அதிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது. இஸ்லாம் கற்றுக் கொடுத்த முறையில் குழந்தைகளை வளர்ப்பதும், அதன் அழகிய நற்பண்புகளை அவர்களிடம் உருவாக்குவதும் பெற்றோர்களின் பொறுப்பாகும். நற்பண்புகளைப் பூரணமாக்கி, மக்களிடையே அதை உறுதிப்படுத்தவே ரஸுலுல்லா (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் நற்பண்புகளை பரிபூரணப்படுத்தவே அனுப்பப்பட்டேன்.'' (முவத்தா மாலிக்)

பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை அல்லாஹ், அவனது ரஸுல் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக வளர்க்க வேண்டும் என்பதற்குப் பின்வரும் நபிமொழி மிகப்பெரியஓர் ஆதாரம் என அறிஞர்கள் பலர் உறுதி செய்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும்போது அவர்களை தொழுகைக்கு ஏவுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள்''..... (ஸுனன் அபூதாவூத்)

ஒருவர் இந்த ஹதீஸை செவியேற்ற பின்னரும் தனது குழந்தைகளுக்கு ஏழு வயதாகியும் அவர்களைத் தொழுகைக்கு ஏவவில்லையானால், பத்து வயதாகியும் தொழாமலிருக்கும் பிள்ளைகளை அடிக்கவில்லையானால் அவரது இல்லம் அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய, குறைபாடுகளுடைய இல்லமாகும். இதற்காக பெற்றோர் இருவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளியாக நிற்பார்கள்.

சிறந்த இல்லம் ஒரு நற்பண்புள்ள தாயின் மடியைப் போன்றதாகும். அதில்தான் பிள்ளைகள் வளரத் துவங்குகிறார்கள். அது குழந்தைகள் நற்பண்புகளுடன் மலர்வதற்கான முதல் கட்டமாகும். அவர்களது ஆசைகளும், ஆர்வங்களும், பண்புகளும் உருப்பெறும் மையமாகும். எனவே இக்காலகட்டத்தில் அப்பிஞ்சு இதயங்களைப் பண்படுத்துவதில் பெற்றோரின் பங்கு மகத்தானது. அவர்களது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் உடல், அறிவு, ஆன்மா என அனைத்தும் பூரணத்துவம் பெற்றுத் திகழ பெற்றோர்கள் பாடுபட வேண்டும்.


விவேகமான வழிமுறைகளைக் கையாள்வார்

குழந்தையின் தாயும் தந்தையும் அதன் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும். அதன் தூய்மையான, மென்மையான உள்ளத்தினுள் ஊடுருவிச் சென்று அக்குழந்தையின்பால் நேசத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்த அணுகுமுறையில் மிக நுட்பமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

முஸ்லிம் தனது குழந்தைகளிடம் பல வழிகளிலும் அன்பைத் தேட வேண்டும். அவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களது வயது, அறிவிற்கேற்ப அவர்களுடன் விளையாடி, சிரிப்பூட்டி அவர்களை இன்புறச் செய்து அக்குழந்தைகளின் இதயங்களுக்கு மகிழ்வான அன்பான வார்த்தைகளைக் கூறவேண்டும். நேசம் மற்றும், மரியாதையின் காரணமாக கட்டுப்படுவதற்கும், மிரட்டல், நெருக்கடி, நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் கட்டுப்படுவதற்குமிடையே மிகுந்த வேறுபாடுண்டு. முந்தியது நிரந்தரமான அடிபணிதல். இரண்டாவது கண்டிப்பும் மிரட்டலும் இல்லாதபோது நீங்கிவிடும் தன்மை உடைய தற்காலிக அடிபணிதலாகும்.

சிலர், பெற்றோர் பிள்ளைகளுடன் எளிமையான முறையில் கலந்துறவாடினால் அது தங்களின் ஸ்தானத்துக்கே பெரும் இழுக்காகிவிடும் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள். இது முற்றிலும் தவறானதாகும். பிள்ளைகளுடன் நற்பண்பு மிக்க அழகிய நடத்தையை மேற்கொள்வது, அறிவார்ந்த பெற்றோரின் வெற்றிகரமான வழிமுறை எனத் தற்கால குழந்தை வளர்ப்புத் திட்டங்களும் ஏற்றுக் கொள்கின்றன. இதை நபி (ஸல்) அவர்கள் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே தனது சொல்லாலும் செயலாலும் வலியுறுத்தியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரழி) அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், குஸய்ம்ர் (ரழி) ஆகிய மூவரையும் அணிவகுக்கச் செய்து ‘‘எவர் என்னிடம் முந்தி வருகிறாரோ அவருக்கு இன்னின்ன கிடைக்கும்'' என்று கூறுவார்கள். சிறுவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஓடி வந்து அவர்களது முதுகிலும் நெஞ்சிலும் விழுவார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவர்களை முத்தமிடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது ‘அல் அதபுல் முஃப்ரத்' என்ற நூலிலும் இமாம் தப்ரானி (ரஹ்) தனது ‘முஃஜம்' என்ற நூலிலும் அபூஹுரைரா (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் அல்லது ஹுஸைன் (ரழி) அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களது பாதங்களை தனது பாதத்தின் மீது வைத்து பிறகு ‘‘நீ மேலே ஏறு'' என்று கூறினார்கள்.

மகத்தான போதனையாளரான நபி (ஸல்) அவர்கள் ஹஸன்- ஹுஸைன் (ரழி) அவர்களைச் சுமப்பதிலும் பாசத்தைப் பொழிவதிலும் நேசிப்பதிலும் காட்டிய நடைமுறைகள், பெற்றோர்களுக்கும் பாட்டனார்களுக்கும் எல்லாக் காலத்திற்குமான அழகிய முன்மாதிரியாக அமைந்துள்ளது. அந்த மென்மையான இளம் நாற்றுகளுடன் நற்குணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தாங்கள் எவ்வளவு பெரியஅந்தஸ்துடனும் மதிப்புடனும் இருந்தாலும் அது சிறுவர் சிறுமியரிடம் நேசத்தை வெளிப்படுத்துவதற்கு தடையாகி விடக்கூடாது என்ற விஷயம் பின்வரும் ஹதீஸிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது:

ஷத்தாத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் அல்லது ஹுஸைனைச் சுமந்தவாறு வந்தார்கள். முன்னால் வந்து நின்று கீழே இறக்கிவிட்டு பின்பு தொழுகைக்காக தக்பீர் கட்டினார்கள். தொழுகையில் நீண்ட நேரம் ஸஜ்தாவில் இருந்தார்கள். சந்தேகத்தில் நான் தலையை உயர்த்திப் பார்த்தபோது சிறுவர் நபி (ஸல்) அவர்களின் முதுகில் இருந்தார். உடன் நான் ஸஜ்தாவுக்குத் திரும்பி விட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவு செய்தபோது நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் வினவினர். ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நீண்ட ஸஜ்தா செய்தீர்களே (காரணமென்ன?)'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எனது மகன் என் மீது சவாரி செய்து கொண்டிருந்தார். அவர் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்குள் நான் அவசரப்பட விரும்பவில்லை.'' (ஸுனனுன் நஸாயீ)

முஸ்லிம் தங்களது பிள்ளைகளுடன் இம்மாதிரி நடந்து கொள்வது அவசியமாகும். அவர்களுடன் கலந்துறவாடி அன்பை வெளிப்படுத்த வேண்டும். வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் அப்பிஞ்சு இதயங்களில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டவேண்டும்.


அன்பை உணரச் செய்வார்

பெற்றோரின் தலையாயக் கடமைகளில், அவர்கள் பிள்ளைகளிடம் தங்களது அன்பையும் நேசத்தையும் உணரச் செய்வதும் ஒன்றாகும். அப்போதுதான் பிள்ளைகள் மன ஆரோக்கியத்துடன் வளர்வார்கள். அவர்களது உள்ளங்களில் உறுதியும் தெளிவும் நிறைந்திருக்கும்.

கருணை இஸ்லாமின் அடிப்படைப் பண்பாகும். அது நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட மிகச் சிறந்த பண்பாக இருந்தது. அவர்களது நடைமுறைகள் அனைத்திலும் கருணை வெளிப்பட்டது.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களை விட குடும்பத்தாரிடம் கருணை கொண்ட எவரையும் நான் கண்டதில்லை.'' மேலும் கூறினார்கள்: ‘‘மதீனாவின் மேடான பகுதியிலிருந்த ஒரு வீட்டில் நபி (ஸல்) அவர்களின் மகனார் இப்ராஹீம் (ரழி) அவர்களுக்கு பாலூட்டப்பட்டு வந்தது. நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று வருவார்கள், நாங்களும் உடனிருப்போம். வீட்டினுள் நுழைந்து அவரைத் தூக்கி முத்தமிடுவார்கள். பின்பு திரும்பி வருவார்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சிறு குழந்தைகள் மீது மட்டும் அன்புடன் இருக்கவில்லை. மாறாக, விளையாடிக் கொண்டிருக்கும் இளம் சிறார்களைக் காணும்போது அவர்களிடமும் பாசத்தையும் வெளிப் படுத்துபவர்களாக இருந்தார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கண்டால் அன்பை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களது பொன்மொழிகளில் ஒன்று: ‘‘நம்முடைய சிறுவர்கள் மீது அன்பு செலுத்தாதவரும் பெரியவர்களின் கடமைகளை அறியாதவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.'' (முஸ்னத் அஹ்மத்)

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் ‘‘எனக்கு 10 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்க ளில் ஒருவரையும் நான் முத்தமிட்டதில்லை'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் எப்போதும் மனிதர்களின் இதயங்களில் அன்பையும் கருணையையும் வளர்த்து வந்தார்கள். அதுவே மனிதத் தன்மைகளில் மிக விசேஷமான தன்மை என்பதை வலியுறுத்தினார்கள்.

ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா (ரழி) வந்தால் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று வரவேற்று முத்தமிடுவார்கள். அவரைத் தங்களது இருக்கையில் அமரச் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரழி) அவர்களிடம் சென்றால் அவர்கள் எழுந்து நபி (ஸல்) அவர்களை மகிழ்வுடன் வரவேற்று கரத்தைப் பிடித்து முத்தமிடுவார்கள். இன்னும் தங்கள் இருக்கையில் அமரச் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது ஃபாத்திமா (ரழி) வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களை வரவேற்று முத்தமிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உண்மை முஸ்லிம் இந்த உயரிய வழிகாட்டுதலைப் புறக்கணித்துவிட முடியாது. தங்களது இதயங்கள் பசுமையற்று வறண்டதாக, கடின சித்தம் உடையதாக இருந்தாலும் சிறுவர்களுடன் பழகும்போது வன்மையாக நடந்து கொள்ளக்கூடாது. ஏனெனில், இம்மார்க்கம் பிரகாசமான நேர்வழியைக் காட்டித் தருகிறது இதயத்தை மென்மைப்படுத்துகிறது அன்பின் ஊற்றுகளைப் பீறிடச் செய்கிறது.


தாராளமாகச் செலவிடுவார்

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது இயற்கையாகக் காட்டும் அன்பும் பரிவும் மட்டும் போதுமானதல்ல. சில நேரத்தில் வாழ்வில் சிரமமும் நெருக்கடியும் வறுமையும் ஏற்படும்போது பிள்ளைகளை மறந்து விடலாம். அவர்களுக்கு ஏற்படும் செலவினங்களை எண்ணி மனம் சோர்வடையலாம். இக்காரணத்தை முன்னிட்டுத்தான் பெற்றோர்கள் செய்யும் தியாகத்திற்கு மகத்தான நன்மை உண்டு என்று இஸ்லாம் உற்சாகமூட்டுகிறது. அல்லாஹ் வழங்கும் நன்மையை எண்ணும்போது பிள்ளைகளுக்காக சிரமத்தை சகித்துக் கொள்வதும், தியாகம் செய்வதும், அதனால் ஏற்படும் சோதனையும் பெற்றோர்களுக்கு சுலபமாகிவிடுகின்றன.

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஸலமாவின் பிள்ளைகளுக்கு நான் செலவிடுவதற்கு எனக்கு நற்கூலி உண்டா? நான் அவர்களை இவ்வாறு (வீணாக) விட்டுவிட முடியாது. ஏனென்றால் அவர்கள் எனக்கும் குழந்தைகள்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்! நீ அவர்களுக்குச் செலவிடுவதில் உனக்கு நற்கூலி உண்டு'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ மஸ்வூத் அல்பத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘ஒரு மனிதர் தனது குடும்பத்தாருக்கு அல்லாஹ்வின் திருப்தியை நாடி செலவிடுவாரானால் அது அவருக்கு தர்மமாகும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் ஒருவர் தனது குடும்பத்தினருக்காகச் செலவிடுவதை செலவுகளிலெல்லாம் மிகச் சிறந்த செலவாக இஸ்லாம் கூறுகிறது. இதற்கான முன்னுதாரணத்தை நபிமொழியில் காண்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நீ அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட தீனார், அடிமையை உரிமை விடுவதற்காகச் செலவிட்ட தீனார், ஏழை ஒருவனுக்காகச் செலவிட்ட தீனார், உனது குடும்பத்துக்காகச் செலவிட்ட தீனார், இவை அனைத்திலும் மிக மகத்தான நன்மை பெற்றது உனது குடும்பத்தினருக்காகச் செலவிட்ட தீனார் ஆகும்.'' (ஸஹீஹுல் புகாரி)

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மனிதன் செலவிடும் தீனார்களில் மிகச் சிறந்தது தனது குடும்பத்தினருக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் வாகனத்துக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் தனது தோழர்களுக்காகச் செலவு செய்யும் தீனாரும் ஆகும்.''

முஸ்லிம் தனது குடும்பத்தினருக்குச் செலவிடுவதில் அளவற்ற ஆனந்தம் அடைவார். தனது குடும்பத்தினருக்காகவோ அல்லது பிறருக்காகவோ அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி செலவிடும்போது அதற்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை வழங்குவான். எந்தளவுக்கென்றால் ஒரு மனிதர் பாசத்துடன் தனது மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவை ஊட்டுவாரானால் அதிலும் அவருக்கு நற்கூலி உண்டு.

ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீர் ஒன்றை செலவிட்டால் நிச்சயமாக அதற்கு நற்கூலியைப் பெறுவீர். உமது மனைவியின் வாயில் ஊட்டிவிடும் ஒரு கவள உணவிற்காகவும் நன்மை அளிக்கப்படுவீர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம் தனது குடும்பத்தினரை விட்டு விலகி அவர்களை துன்பத்திலும் பசியிலும் வாடும் நிலையில் விட்டு விடக்கூடாது. குடும்பத்தினரின் நியாயமான தேவைகளைப் புறக்கணிக்கும் ஆண்களை கடுமையான தண்டனையைக் கொண்டு எச்சரித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘தான் உணவளிக்க வேண்டியவர்களை வீணடிப்பது ஒரு மனிதனுக்கு பாவத்தால் போதுமானதாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

கருத்து:- தன்னுடைய பிள்ளைகள், குடும்பம் என்று தனது ஆதரவில் வாழ்ந்து வருபவர்களை அலட்சியப்படுத்தி, அவர்களை சிரமத்தில் விட்டுவிடுவது ஒரு பெரும் குற்றமாகும். ‘‘பாவத்தால் போதுமானது'' என்பதற்கு பொருள், அல்லாஹ்வின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக இந்தப் பாவமே போதுமானது என்பதாகும்.


ஆண், பெண்ணிடையே வேறுபாடு காட்டமாட்டார்

பெண் குழந்தைகள் பிறந்தால் சிலர் சஞ்சலமடைந்து, பிள்ளை களெல்லாம் ஆண் குழந்தைகளாக பிறந்திருக்க வேண்டுமே என்று ஆதங்கப்படுகின்றனர். பெண் குழந்தைகளைப் பெற்று அவர்கள் மீது அன்பும் பரிவும் காட்டி, முறையாக வளர்த்து ஆளாக்குபவர்களுக்கு அல்லாஹ் தரும் வெகுமதியை இவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அப்படி அறிந்திருந்தால், அந்த நன்மையை அடைய பெண் குழந்தைகள் வேண்டுமென ஆசை கொண்டிருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்கள் மீது பொறுமை காத்து, நல்ல முறையில் தனது உழைப்பிலிருந்து அவர்களுக்கு உணவு, பானம், உடையளித்து வருகிறாரோ அவருக்கு அப்பெண் மறுமை நாளில் நரக நெருப்பிலிருந்து காக்கும் திரையாக ஆவார்கள்.'' (முஸ்னத் அஹ்மத்)

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள், ‘‘எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து, தேவைகளை நிறைவேற்றி, கருணை காட்டி வருவாரோ அவருக்கு நிச்சயமாக சுவனம் உறுதியாகிவிட்டது'' என்று கூறியபோது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் கேட்டார்: ‘‘இரு பெண் மக்கள் இருந்தாலுமா இறைத்தூதரே?'' நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்! இரு பெண் மக்கள் இருந்தாலும்'' என்றார்கள்.

அல்லாஹ்விடமுள்ள மகத்தான நற்கூலியை தெரிந்த பின்னும் தனது பெண் மக்களை பராமரிப்பதில் யார்தான் அசட்டை செய்ய முடியும்?

இஸ்லாம் மிக நுட்பமான மார்க்கம். மனித வாழ்வின் எல்லாக் காலங்களிலும் சூழ்நிலைகளிலும் அவனுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு சரியான, அறிவுப்பூர்வமான தீர்வை அளிக்கிறது. சில சமயங்களில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண் பிள்ளை ‘தலாக்' கூறப்பட்டு தாய் வீடு திரும்புவாள். அப்போது வீட்டில் குழந்தைகள் அதிகமாக இருப்பதாலோ அல்லது வருமானக் குறைவினாலோ தந்தை மிகுந்த சிரமத்திலும் நெருக்கடியிலும் இருப்பார். இந்நேரத்தில் இஸ்லாம் தந்தையின் புண்பட்ட உள்ளத்திற்கு ஆறுதல் அளித்து, பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பத்தையும் களைகிறது. தலாக் விடப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பெண்ணுக்கு செலவு செய்வதும் அவளைப் பராமரிப்பதும் மிக உயர்ந்த தர்மத்தைச் சேர்ந்தது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள், சுராகா இப்னு ஜுஃஷும் (ரழி) அவர்களிடம் ‘‘நான் உமக்கு மகத்தான தர்மத்தை அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘ஆம் இறைத்தூதரே!'' என்றபோது நபி (ஸல்) கூறினார்கள்: ‘‘(கணவன் வீட்டிலிருந்து) திருப்பி அனுப்பப்பட்ட உமது மகள். உம்மைத் தவிர அவளுக்கு சம்பாதித்து தரக்கூடியவர் ஒருவருமில்லை'' (இந்நிலையில் அப்பெண்ணை பராமரித்துக் காப்பது தர்மங்களில் மகத்தான தர்மமாகும்.) (அல் அதபுல் முஃப்ரத்)

நேசம் மிகுந்த இஸ்லாமிய உலகில் குழந்தைகள் அடையும் இத்தகைய பராமரிப்பு எங்கே! பொருளியலை மையமாகக் கொண்ட மேற்கத்திய உலகில் குழந்தைகள் அனுபவிக்கும் துன்பங்கள் எங்கே! இரண்டும் நிச்சயமாக சமமாக முடியாது. அங்கு ஆணோ பெண்ணோ பதினெட்டு வயதை அடைந்துவிட்டால் பெற்றோரின் கண்காணிப்பி லிருந்து விலகிச் சென்று விடுகிறார்கள். கடுமையான பொருளாதார வாழ்க்கையைச் சந்தித்து, பொருளீட்டுவதில் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பெற்றோரின் அரவணைப்புக்கு திரும்புவதோ, அவர்களின் அன்பை அடைவதோ மிகச் சிரமமான ஒன்றாகி விடுகிறது.

மனிதனின் வெற்றிக்காகவும் நற்பாக்கியத்திற்காகவும் அல்லாஹ் வினால் அருளப்பட்ட மார்க்கத்துக்கும், குறையுள்ள மனிதனின் கேடு விளைவிக்கும் வாழ்க்கை நெறிக்குமிடையேதான் எத்துனை தூரம்!

மேற்கத்திய நாடுகளில் பொருளியல் சார்ந்த வாழ்க்கை நெறியின் விளைவாக - கட்டுப்பாடற்ற, ஒழுங்கீனம் நிறைந்த வாலிபர்களும், திருமணம் செய்துகொள்ளாமல் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்வை அழித்துக் கொள்ளும் இளம் பெண்களும் நிறைந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இவ்வாறான ஆண் பெண்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.


சிந்தனை, செயலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பார்

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் தனது மக்களைக் கண்காணித்து, எதைப் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கென எப்படிப்பட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதையும், அவர்கள் தங்களை அறியாமலேயே எப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். தமது மக்களுடன் எல்லா நேரங்களிலும் அல்லது பெரும்பாலான நேரங்களில் இணைந்திருக்கும் அவர்களது நண்பர்களைப் பற்றியும், ஓய்வு நேரங்களில் எப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வதற்காக அவர்கள் அறியாத வகையில் கண்காணிக்க வேண்டும்.

அந்நிலையில் அவர்களது படிப்பில், விருப்பங்களில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் அல்லது தீய நண்பர்களுடனான தொடர்பு அல்லது சந்தேகத்திற்கிடமான இடங்களுக்குச் செல்வது அல்லது புகைபிடித்தல், சூதாடுவது போன்ற தீய பழக்கங்களைக் கொண்டிருந்தால் அல்லது நேரத்தை வீணாக்கி, உடலை பலவீனப்படுத்தும் வீண் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினால் அம்மக்களை மென்மையான, அறிவுப்பூர்வமான அணுகுமுறையின் மூலம் தடுத்து நேர்வழியின் பக்கம் அவர்களைத் திருப்ப வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாம் என்ற இயற்கையிலேயே பிறக்கின்றது. அதன் பெற்றோர்களே அக்குழந்தையை யூதர்களாக அல்லது கிருஸ்துவர்களாக அல்லது நெருப்பை வணங்குபவர்களாக மாற்றி விடுகிறார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

பிள்ளைகளின் அறிவை வளர்த்து, நற்பயிற்சிகளால் அவர்களை சிறந்தவர்களாக உருவாக்குவது பெற்றோர்களின் கடமையாகும்.

படிப்பதற்கென தமது மக்கள் தேர்ந்தெடுக்கும் நூல்கள், அவர்களது அறிவுக் கண்களைத் திறப்பதாகவும் உயரிய பண்புகளை அவர்களிடம் உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும். அந்நூல்கள் அறிவை அழித்து, நல்லியல்புகளைச் சிதைத்து, மனதில் நன்மையின் மீதான ஆர்வத்தை அணைக்கக் கூடியதாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அவர்களது பழக்க வழக்கங்கள் அவர்களிடம் நன்மையை வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் தீமையை அல்ல. சத்தியத்தின் பிரகாசத்தைத் தூண்ட வேண்டும் அசத்தியத்தின் நெருப்புக் கங்குகளை அல்ல. நற்குணங்களை வளர்க்க வேண்டும் கெட்ட குணங்களை அல்ல.

நண்பன் சுவனத்தின்பால் அழைத்துச் செல்பவராக இருக்க வேண்டும் நரகத்தின்பால் அல்ல. சத்தியத்தின்பால் வழிகாட்ட வேண்டும் அசத்தியத்தின்பால் அல்ல. நேர்மை, வெற்றி, நன்மை, உயர்வுக்கு வழிகாட்ட வேண்டும் வழிகேடு, அழிவு, நஷ்டம், பிறருக்கு நோவினை யளித்தல் போன்ற தீய செயல்களுக்கு அல்ல.

எத்தனையோ நண்பர்களின் நட்பு அவர்களை தீமையில் வழுக்கி விழச் செய்கிறது, தீமைப் படுகுழியினுள் வீழ்த்திவிடுகிறது. இழிவான சிந்தனைகளை இதயத்தினுள் திணித்து விடுகிறது. ஆனால் இதைக் கவனிக்க வேண்டிய அவர்களது பெற்றோர்களோ அலட்சியத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இவ்வாறு முஸ்லிம் தனது பிள்ளைகளை வளர்த்து பரிபாலிப்பதில் அவர்களுக்குரிய நூல்கள், நாளிதழ்கள், நண்பர்கள், பொழுதுபோக்குகள், கல்விக்கூடம், ஆசிரியர்கள், சபைகள், செய்தி ஊடகங்கள் ஆகியவைகளைக் கண்காணிக்க வேண்டும். அவைகளைத் தேர்வு செய்வதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அவர்களது பண்புகளில் அல்லது கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.

அவசியம் ஏற்படும்போது அப்பிள்ளைகள் விரும்பினாலும் வெறுத்தாலும் அவர்களது காரியங்களில் தலையிட்டு அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றியடைவதின் ரகசியத்தையும் சில குடும்பங்கள் தோல்வி யடைவதின் ரகசியத்தையும் மேற்கூறிய விளக்கத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

பிள்ளை வளர்ப்பு விஷயத்தில் தங்களது பொறுப்பை உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்த பெற்றோர்களின் பிள்ளைகள் அவர்களுக்கும் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கும் நற்பயன் அளிப்பவர்களாகத் திகழ்கிறார்கள். இவ்வாறு பொறுப்பை உணராமல் இக்கடமையை பாழாக்கியவர்களின் பிள்ளைகள் அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் கேடாக அமைந்து, இவ்வுலக, மறு உலக வாழ்வின் சோதனையாக மாறிவிடுகிறார்கள்.

‘‘விசுவாசிகளே! உங்கள் மனைவிகளிலும் உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு விரோதிகளும் இருக்கின்றனர்''. ஆகவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்... (அல்குர்ஆன் 65:14)

பெற்றோர்கள் நேரான வழியில் உறுதியாக இருந்து, பிள்ளை வளர்ப்பில் தங்களது கடமைகளை அறிந்து, முறையாக அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றினால் பிள்ளைகள் ஒருபோதும் அவர்களுக்கு விரோதியாக மாட்டார்கள்.


சமத்துவம் பேணுவார்

முஸ்லிம் தந்தையின் அறிவார்ந்த நடைமுறைகளில் ஒன்று அவர் தனது மக்களிடையே சமத்துவம் பேணுவதாகும். எல்லா விஷயங்களிலும் அவர்களில் ஒருவரை விட மற்றவருக்கு தனிச்சிறப்பு வழங்கக்கூடாது. ஏனெனில், தமக்கும் பிற சகோதரர்களுக்குமிடையே காட்டப்படும் சமத்துவத்தையும், நீதத்தையும் உணரும் பிள்ளை சீரான சிந்தனையைக் கொண்டிருப்பார். குறைபாடுகளிலிருந்து நீங்கி, ஏனைய சகோதரர்கள் மீது பொறாமை கொள்ளாமல் இருப்பார்.

சமத்துவமாக வளர்க்கப்படும் பிள்ளைகளிடத்தில் பிறரை நேசித்தல், தன்னைவிட பிறரைத் தேர்ந்தெடுத்தல், பிறருக்கு உபகாரம் செய்தல் போன்ற நற்குணங்கள் குடிகொள்ளும். அதனால்தான் பிள்ளைகளிடையே சமத்துவத்தைப் பேணுமாறு இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நுஃமான் இப்னு பஷீர் (ரழி) அவர்களின் தந்தை நுஃமான் (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து கூறினார்கள்: ‘‘எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்பாக தந்துள்ளேன்.'' நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: ‘‘உங்களது அனைத்து பிள்ளைகளுக்கும் இது போன்ற அன்பளிப்புச் செய்தீரா? அவர் ‘இல்லை' என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அந்த அடிமையைத் திரும்ப வாங்கிக் கொள்' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் ‘‘இதை உமது அனைத்து பிள்ளைகளுக்கும் செய்தீரா?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘இல்லை'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களது பிள்ளைகளிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். நுஃமான் (ரழி) கூறினார்கள்: உடனே எனது தந்தை இல்லத்திற்கு வந்து அந்த அன்பளிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள்: ‘‘பிஷ்ரே! உமக்கு இவரைத் தவிர வேறு குழந்தைகள் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘ஆம்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘உமது எல்லா மக்களுக்கும் இவ்வாறு அன்பளிப்புச் செய்தீரா?'' என்று கேட்டார்கள். அவர் ‘‘இல்லை'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘என்னை சாட்சியாக்காதீர்கள். நான் ஒரு குற்றச்செயலுக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்'' என்றார்கள். பின்பு கேட்டார்கள்: ‘‘உம்மக்கள் அனைவரும் உமக்கு உபகாரம் செய்வதில் சமமாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறீரா?'' அவர் ‘‘ஆம்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘அப்படியானால் அதைச் செய்யாதீர்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உண்மை முஸ்லிம் தமது பிள்ளைகளுக்கு செலவிடுதல், அன்பளிப்பு செய்தல் போன்ற எல்லா விஷயங்களிலும் ஒருவரைவிட மற்றவருக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது. அப்போதுதான் பிள்ளைகள் அனைவரும் பெற்றோருக்காக துஆ செய்து உண்மையான அன்பையும், கண்ணியத்தையும் வெளிப்படுத்துவார்கள்.


உயர்பண்புகளை வளர்ப்பார்

உபகாரம், மகிழ்ச்சி, போதுமென்ற தன்மை ஆகிய குணங்களால் அலங்காரம் பெற்ற உள்ளங்களைக் கொண்டுதான் பிள்ளைகளை மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு பெற்றோர்களால் கொண்டுபோக முடியும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நற்பாக்கியம் அல்லாஹ் விடமிருந்து கிடைக்கிறது. ஒழுக்கம் பெற்றோரிடமிருந்து கிடைக்கிறது.'' (அல் அதபுல் முஃப்ரத்)

மார்க்க அறிவுள்ள முஸ்லிம் தமது பிள்ளையின் உள்ளத்தினுள் நுட்பமான வழிகளைக் கொண்டு ஊடுருவி உயர் பண்புகளையும் நல்லறிவையும் எப்படி விதைப்பது என்று அறிந்திருப்பார்.

குழந்தை வளர்ப்பின் நுட்பமான வழிமுறைகள்:

1. பெற்றோர் தன்னை அழகிய முன்மாதிரியாக ஆக்க வேண்டும்.

2. பிள்ளைகளுடன் மனம் விட்டு கலந்து பழக வேண்டும்.

3. அவர்களை முகமலர்ச்சியுடன் அரவணைத்து அன்பு காட்ட வேண்டும்.

4. அவர்களுக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்ட வேண்டும்.

5. அனைத்து பிள்ளைகளுடனும் அன்புடன் நடந்து நீதத்தையும் சமத்துவத்தையும் பேணவேண்டும்.

6. முற்றிலும் பலவீனமடைந்துவிடாமல் நளினமாகவும், கொயூரத்தனமின்றி சற்று கடினமாகவும் அவர்களுக்கு உபதேசித்து நேர்வழிகாட்டி செம்மைப்படுத்த வேண்டும்.

நேர்மையான, திறந்த சிந்தனையுள்ள, பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு தகுதியான, தயாளத்தன்மை பெற்ற நல்ல பிள்ளைகளை இதுபோன்ற சூழ்நிலைதான் உருவாக்க முடியும்.

இஸ்லாமிய அடிப்படையையும் குர்ஆனின் கட்டளைகளையும் பின்பற்றும் நல்ல குடும்பங்களில் இவ்விஷயத்தை தெளிவாகக் காணலாம்.

அல்லாஹ்வின் மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வை விட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? நாம் அவனையே வணங்குவோம் என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:138)


முன்மாதிரி முஸ்லிம் - முஸ்லிம் தனது உறவினர், இரத்த பந்துக்களுடன்

இரத்த பந்துக்கள்

இரத்த பந்துக்களுக்கு இஸ்லாம் தரும் கண்ணியம்

உறவினருடன் இணைந்திருப்பார்

முஸ்லிமல்லாத இரத்த பந்துக்களுடனும் இணக்கமாக இருப்பார்

இரத்த பந்தத்தை இணைத்து வாழ்வதன் விசாலமான பொருளை விளங்கிக் கொள்வார்

உறவைப் பேணுவார்


இரத்த பந்துக்கள்

உண்மை முஸ்லிமின் உதவியும் உபகாரமும் தனது பெற்றோர், மனைவி, மக்களுடன் சுருங்கிவிடாமல் உறவினர் மற்றும் இரத்த பந்துக்களையும் உள்ளடக்கிக் கொள்ளவேண்டும். அவர்களுடன் உதவியும் உபகாரமும் நல்லுறவும் பேணப்பட வேண்டும். ‘அர்ஹாம்' என்பவர்கள், மனிதனுடன் பரம்பரை உறவின் மூலம் இணைக் கப்பட்டவர்கள். அவர்களில் சிலர் வாரிசுரிமையைப் பெறுவார்கள், சிலர் பெறமாட்டார்கள்.


இரத்த பந்துக்களுக்கு இஸ்லாம் தரும் கண்ணியம்

இஸ்லாம் இரத்த பந்துக்களுக்கு அளிக்கும் கண்ணியமும் கௌரவமும் மனிதகுலம் எந்த மதங்களிலும் அறிந்திராத ஒன்றாகும். ஆகவே இரத்த பந்துக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தி, இரத்த பந்துக்களை துண்டிப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

இரத்த பந்துக்களைப் பேணுவதைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்று இதற்கு மிகச் சிறந்த ஆதாரமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘அல்லாஹு தஆலா படைப்பினங்களைப் படைத்தான். அவைகளைப் படைத்து முடித்தபோது அல்லாஹ்விடம் இரத்த பந்தம் நின்று, ‘‘இது உறவை துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருபவர் நிற்கும் சமயமாகும்'' என்று கூறி மன்றாடியது. அல்லாஹ் ‘‘ஆம்! உன்னை சேர்த்துக் கொள்பவர்களை நான் சேர்த்துக் கொள்வேன் உன்னைத் துண்டிப்பவர்களை நான் துண்டித்துக் கொள்வேன் என்பதை நீ பொருந்திக் கொள்கிறாயல்லவா?'' என்று கூறினான். அதற்கு இரத்த பந்தம் ‘‘ஆம்! '' (நான் பொருந்திக் கொண்டேன்) என்றது. அல்லாஹ் ‘‘அது உனக்குரியதாகும்'' என்று கூறினான்.

பின்பு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள். ‘‘நயவஞ்சகர்களே! நீங்கள் (யுத்தத்திற்கு வராது) விலகிக்கொண்டதன் பின்னர் நீங்கள் பூமியில் சென்று விஷமம் செய்து உங்கள் இரத்த பந்துக்களைத் துண்டித்துவிடப் பார்க்கின்றீர்களா?'' இத்தகையோரை அல்லாஹ் சபித்து அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வைகளையும் போக்கி குருடர்களாக்கிவிட்டான். (அல்குர்ஆன் 47:22,23) (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இரத்த பந்துக்களின் அந்தஸ்தை உறுதிப்படுத்தும் பல வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. அவர்களுக்கு உபகாரம் செய்வது, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும், அந்தக் கடமைகளில் குறைகளை ஏற்படுத்தி உறவினருக்கு அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டுமெனவும் திருக்குர்ஆன் வலியுறுத்தி கூறுகிறது.

...ஆகவே, அந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே (நீங்கள் உங்களுக்குள்) ஒருவருக்கொருவர் (வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக்கலப்பு பந்தத்துவத்திற்கும் (மதிப்பளியுங்கள்)... (அல்குர்ஆன் 4:1)

இரத்த பந்தத்தின் மகத்துவத்தை உணர்த்தவும் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவும் அதை இறையச்சத்துடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வை விசுவாசிப்பது, பெற்றோருக்கு உபகாரம் செய்வது ஆகிய இவ்விரண்டு கடமைகளுக்குப் பின் இரத்த பந்துக்களுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆனின் பெரும்பாலான வசனங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான்.... (அல்குர்ஆன் 17:23)

இதை அடுத்து சில வசனங்களுக்குப் பின்,

பந்துக்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்துவரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம். (அல்குர்ஆன் 17:26)

அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினருக்கும், அண்டை வீட்டினரான அந்நியருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்கள் ஆதிக்கத்திலிருப்போருக்கும் (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை, நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36)

இத்திருவசனத்தில் பெற்றோருக்கு உபகாரம் செய்வதற்கு அடுத்ததாக உறவினர்களின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மனித உறவுகளை சீர்படுத்துவதில் மேலிருந்து படிப்படியாக கீழே கொண்டுவரும் திருக்குர்ஆனின் கண்ணோட்டமாகும். பெற்றோருக்கும், நெருங்கிய உறவினருக்கும் உபகாரம் செய்து, பின்பு மகத்தான மனித வாழ்வில் தேவையுடைய அனைத்து அங்கத்தினருக்கும் உபகாரம் செய்ய வேண்டுமென ஏவப்பட்டுள்ளது. முதலில் மிக நெருங்கியவர்களுக்கு உபகாரம் செய்வதையே மனம் விரும்பும் என்ற மனித இயல்புக்கேற்ப இவ்வாறு வரிசைபடுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சமூக அமைப்புக்குள் ஒவ்வொருவரும் வரிசையாக கொண்டு வரப்பட்டுள்ளார்கள். சமூகத்திற்கான உதவியை, முதலில் குடும்ப வட்டத்தினுள் இருப்பவர்களுக்கும், பிறகு உறவு வட்டத்தினுள் இருப்பவர்களுக்கும், பிறகு சமூகத்தில் உள்ளவர்களுக்கும் செய்யவேண்டுமென விரிவாக்கப்படுகிறது. மனித வாழ்வை இன்பமானதாகவும் அழகானதாகவும் இவ்வரிசைமுறை அமைத்துத் தருகிறது.

இரத்த பந்துக்களை நேசிப்பது மிக முக்கியமான இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவ பிரசாரத்தை ஆரம்பித்து, இப்புனித மார்க்கத்தை உலகில் பரவச் செய்த காலத்திலிருந்தே இதுபெரும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அது மார்க்கத்தின் மாண்புகளை வெளிப்படுத்துவதாகவும், சிறந்த போதனையாகவும் அமைந்துள்ளது.

இதற்கு அபூ சுஃப்யான் (ரழி) அவர்களிடம் மன்னன் ஹிர்கல் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் ஆதாரமாகும். அவர் அபூ ஸுஃப்யானிடம் ‘‘உங்கள் நபி எதை ஏவுகிறார்?'' என்று கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனுக்கு யாதொரு இணையும் வைக்கக்கூடாது, எங்கள் மூதாதைகள் சொல்லிக் கொண்டிருந்ததை விட்டுவிட வேண்டுமென்றும், தொழுகை, வாய்மை, ஒழுக்கம், உறவினரோடு இணைந்து வாழ்வது ஆகிய நற்குணங்களையும் எங்களுக்கு ஏவுகிறார்'' என அபூ ஸுஃப்யான் (ரழி) பதிலளித்தார்கள்.

உறவுகளைப் பேணுவது இம்மார்க்கத்தின் மகத்தான அடையாளங்களில் ஒன்றாகும். அல்லாஹ்வின் ஏகத்துவம், தொழுகையை நிலைநாட்டுதல், ஒழுக்கத்தையும் தர்மத்தையும் பற்றிப்பிடித்தல் போன்ற பண்புகளுடன் உறவுகளோடு சேர்ந்திருப்பதும் மார்க்கத்தின் மிக முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது.

அம்ரு இப்னு அன்பஸா (ரழி) அவர்களின் நீண்ட ஒரு அறிவிப்பில் இஸ்லாமின் அடிப்படைகளும் ஒழுக்கப் பண்புகளும் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறுகிறார்கள்: மக்காவில் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது அவர்களை சந்திக்கச் சென்றேன். அதாவது நபித்துவத்தின் ஆரம்ப காலத்தில் அவர்களிடம் நான் கேட்டேன்: ‘‘நீங்கள் யார்? அவர்கள் ‘‘நபி'' என்று கூறினார்கள். நான் ‘‘நபி என்றால் யார்?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள்: ‘‘அல்லாஹ் என்னை தூதராக்கி அனுப்பி இருக்கிறான்'' என்றார்கள். நான் கேட்டேன்: ‘‘எந்த விஷயத்தைக் கொண்டு உங்களை அனுப்பி வைத்தான்?'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘இரத்த பந்துக்களோடு இணைந்து வாழுமாறும், சிலைகளை உடைத்தெறியுமாறும், அல்லாஹ்வை ஏகனாக ஏற்று, அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது என்பதைக்கொண்டும் அல்லாஹ் என்னை அனுப்பி வைத்தான்...'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் இந்த சுருக்கமான விளக்கத்தில் இஸ்லாமின் அடிப்படைகளை தெளிவுபடுத்தி இரத்த பந்தத்தை முன்னிலைப் படுத்தியுள்ளார்கள். அல்லாஹ், அகிலத்தார் அனைவருக்கும் அருட் கொடையாக இறக்கிய இம்மார்க்கத்தில் உறவைப் பேணுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள மகத்தான அந்தஸ்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.

இரத்த பந்துக்களை இணைத்து வாழ்வதன் அவசியம் குறித்தும், அதை துண்டித்து வாழ்பவர்களை எச்சரித்தும் ஏராளமான ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன.

அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஓர் அமலை எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்வதை அல்லாஹ்வை வணங்குவது, அவனை ஏகத்துவப்படுத்துவது, தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது என்ற கட்டாயக் கடமைகளுடன் இணைத்து ஒரே வரிசையில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இரத்த பந்துக்களுடன் இணைந்திருப்பது அதைச் செய்பவர்களுக்கு சுவனத்தையும், நரகத்திலிருந்து பாதுகாப்பையும் அளிக்கும் ஸாலிஹான அமல்களில் உள்ள ஒன்றாகிவிடுகிறது.

அனஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் தன்னுடைய இரணம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும், ஆயுள் நீளமாக்கப்பட வேண்டுமெனவும் விரும்புகிறாரோ அவர் தனது இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்வது அவரது ஆகாரத்திலும் ஆயுளிலும் அபிவிருத்தியை அருளச் செய்கிறது.

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘தனது இரட்சகனை அஞ்சி, இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்பவருடைய ஆயுள் நீளமாக்கப்படும், செல்வங்கள் பெருகும், அவரை அவரது குடும்பத்தினர் நேசிப்பார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பவன் செல்வம் அதிகரிக்கிறது, ஆயுள் கூடுகிறது, இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருள் அவரை மூடிக்கொள்கிறது, அவருக்கு மனிதர்களின் நேசத்தை ஏற்படுத்தித் தருகிறது என்று மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து விளங்கிக் கொண்டோம்.

அதுபோலவே பல நபிமொழிகள் உறவுகளைத் துண்டிப்பவருக்கு அது தீமையாகவும், மனிதர்களின் வெறுப்பையும், அல்லாஹ்வின் கோபத்தையும் ஏற்படுத்தி, மறுமையில் சுவனத்திலிருந்து அவரை தூரமாக்கி வைக்கவும் காரணமாக அமைகிறது என்பதை வலியுறுத்துகிறது.

உறவுகளைத் துண்டித்து வாழ்பவனின் அழிவுக்கும் இழிவுக்கும் பின்வரும் நபிமொழியே சான்றாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘இரத்த பந்துத்துவத்தை துண்டிப்பவன் சுவனம் புகமாட்டான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அது மட்டுமல்ல. அத்தீயவன் இருக்கும் சபைகளுக்குக் கூட அல்லாஹ்வின் அருள் கிட்டாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு கூட்டத்தில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் இருந்தால் அந்தச் சமுதாயத்தினர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்காது.'' (ஷும்ஃ புல் ஈமான்-அல் பைஹகி)

இதனால்தான் பிரபல நபித்தோழரான அபூஹுரைரா (ரழி) அவர்கள் தங்களது சபையில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவர் இருக்கும்போது துஆச் செய்ய விரும்பமாட்டார்கள். ஏனெனில் அம்மனிதர் அந்த சபையில் இருப்பது அல்லாஹ்வின் அருள் இறங்குவதையும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதையும் தடுத்து விடும் என்பதுதான் காரணமாகும்.

ஒவ்வொரு ஜுமுஆ இரவிலும் நடைபெறும் அவர்களது சபையில் ஒரு நாள் ‘‘உறவுகளைத் துண்டித்து வாழ்பவர் நம்மிடம் அமர வேண்டாம், வெளியேறிவிடட்டும்!'' என்று மூன்று முறை சொன்னார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு வாலிபர் மட்டும் தான் இரண்டு வருடமாக பேசாதிருந்த தனது தந்தையின் சகோதரியை (மாமியை) சந்திக்க வந்தார். அப்போது அவரது மாமி ‘‘உன்னை இங்கே வரத் தூண்டியதற்குரிய காரணம் என்ன?'' என்று வினவினார். அதற்கு அவர் அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் சபையில் நடந்த சம்பவத்தை விவரித்து கூறினார். இதனைக் கேட்ட அவரது மாமி அதற்கான காரணத்தை விசாரித்து வருமாறு அவரிடம் கூறினார். அவர் அபூ ஹுரைரா (ரழி) அவர்களிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். அப்போது அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் கூறச் செவியுற்றுள்ளேன். நிச்சயமாக மனிதர்களின் செயல்கள் அல்லாஹ்விடம் வியாழன் மாலை வெள்ளி இரவு சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்போது உறவைத் துண்டித்தவனின் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை. (முஸ்னத் அஹ்மத்)

அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் மறுமையின் வெற்றியையும் ஆசிக்கும் முஸ்லிமின் இதயம் இச்சான்றுகளைக் கண்டால் திடுக்கிட்டுவிடும். ஏனெனில், உறவுகளைத் துண்டிப்பது அல்லாஹ்வின் அருளுக்குத் திரையிடுகிறது. பிரார்த்தனைகள் மறுக்கப்படவும் நற்செயல்கள் வீணடிக்கப்படவும் காரணமாகிறது. உண்மையிலேயே இது மனிதனைச் சூழ்ந்துகொள்ளும் மாபெரும் சோதனையாகும். இவ்வாறான தண்டனைகளை அறிந்துணரும் முஸ்லிம் ஒருபோதும் உறவுகளைத் துண்டிக்கமாட்டார்.

அல்லாஹ்விற்கு வழிப்பட்டு அவனது பொருத்தத்தைத் தேடும் முஸ்லிம் ஒருபோதும் உறவைத் துண்டிக்கும் குற்றத்தை செய்யமாட்டார். இக்குற்றத்தை செய்பவன் மிகத் துதமாக தண்டிக்கப்படுவான். இக்குற்றவாளிகளை மறுமையில் தண்டிப்பதற்கு முன்பாகவே உலகிலும் அல்லாஹ் தண்டித்துவிடுவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மறு உலகில் அல்லாஹ் தண்டிப்பதுடன் இவ்வுலகிலும் தண்டனை தருவதற்கு மிகத் தகுதியான குற்றம் உறவுகளைத் துண்டிப்பதை விடவும், அக்கிரமம் செய்வதை விடவும் வேறொன்றுமில்லை.'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)

உறவைத் துண்டிப்பது, அக்கிரமம் செய்வது ஆகிய இரண்டும் இரு வகையான குற்றமாகும். அன்பின் கயிற்றை அறுத்து பாச ஊற்றுகளை வறண்டு போக வைப்பதை விட பெரும் அநீதம் எதுவாக இருக்க முடியும்? எனவே தான் இரண்டையும் நபி (ஸல்) அவர்கள் ஒன்றிணைத்துக் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரத்த பந்துத்துவம் அல்லாஹ்விடம் இணைக்கப்பட்டதாயிருக்கும். அது ‘‘இறைவனே! நிச்சயமாக நான் அநீதி இழைக்கப்பட்டுள்ளேன். இறைவனே! நான் துண்டிக்கப்பட்டுள்ளேன்....'' என்று கூறுகிறது. அல்லாஹ் அதற்கு ‘‘உன்னைத் துண்டித்தவனை நான் துண்டித்துவிடுகிறேன். உன்னை சேர்த்துக்கொள்பவரை நான் சேர்த்துக்கொள்கிறேன் என்பதை நீ திருப்தி கொள்ளவில்லையா?'' என்று பதில் கூறுகிறான். (அல் அதபுல் முஃப்ரத்)

அல்லாஹ் ‘ரம்' என்ற இரத்த பந்தத்தை மிகவும் உயர்த்தியுள்ளான். அதை தனது ரஹ்மான் என்ற பெயரிலிருந்து பிரித்தெடுத்துள்ளான்.

அல்லாஹ் அருளியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நானே ரஹ்மான். நான் ‘ரமை' (இரத்த பந்தத்தை)ப் படைத்தேன். அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன். யார் அதைச் சேர்த்துக் கொள்கிறார்களோ நானும் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன். எவர் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன்.'' (ஸுனன் அபூதாவூத்)

இதில் முஸ்லிமுக்கு ஒரு சான்று உள்ளது. இரத்த பந்துக்களுடன் இணைந்திருந்தால் அவரை அல்லாஹ் தனது அருட்கொடையின் இன்பமான நிழலில் வீற்றிருக்கச் செய்கிறான். உறவைத் துண்டித்து வாழ்பவன் அம்மாபெரும் அருட்கொடையிலிருந்து தூக்கி எறியப்படும் துர்பாக்கியவனாவான்.


உறவினருடன் இணைந்திருப்பார்

உறவினரோடு இணைந்திருக்கும் முஸ்லிமை உலகாதாயங்களோ, சொத்துகளோ, மனைவி, மக்களோ அந்த உறவினர்களுக்கு செலவிடுவதையும் உபகாரம் செய்து கண்ணியப்படுத்துவதையும் தடுத்துவிடக்கூடாது. அவர் இது விஷயத்தில் இஸ்லாமின் வழிகாட்டுதலை துணையாகக் கொள்வார். அந்த உறவுகளுக்கு உபகாரம் செய்வதில் முக்கியத்துவம் மற்றும் நெருக்கத்தை வைத்து வரிசைப் படுத்துவார். முதலில் தாய், பின்பு தந்தை, அடுத்து நெருக்கமான உறவினர்கள் என அந்த வரிசை நீண்டு செல்லும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் தனது உறவினருக்கு உதவி செய்தால் இரட்டைக் கூலியைப் பெற்றுக் கொள்கிறார். உறவினருக்கு உதவியதின் நன்மையும், தர்மத்தின் நன்மையும் கிடைக்கிறது. அதனால் உறவினர்கள் தேவையுடையவர்களாக இருந்து பொருளாதார நெருக்கடிக்கு ஆளானால் அதிகமதிகம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதனால் அல்லாஹ்விடம் அவர் நற்கூலியையும், உறவினர்களிடம் நேசத்தையும் பெற்றுக் கொள்கிறார். இதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் விரும்பி, வலியுறுத்தியுள்ளார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்களின் மனைவி ஜைனப் (ரழி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். எனவே என் கணவரிடம், ‘‘நீங்கள் மிகக் குறைந்த செல்வம் உடையவர்களாக இருக்கிறீர். ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எங்களை தர்மம் செய்யுமாறு ஏவினார்கள். நான் உங்களுக்கு தர்மம் செய்வது ஆகுமானதாக இருப்பின் அந்தத் தர்மத்தை உங்களுக்கே செய்துவிடுகிறேன். இல்லையென்றால் பிறருக்குக் கொடுத்து விடுகிறேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டு வாருங்கள்'' என்று கூறினேன். அதற்கு என் கணவர், ‘‘நீயே சென்று கேள்'' என்று கூறிவிட்டார்கள்.

அப்போது நான் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றேன். என்னைப் போலவே இதே தேவையை முன்னிட்டு இன்னொரு அன்சாரிப் பெண்ணும் நபி (ஸல்) அவர்களின் வாசலில் காத்திருந்தார். ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மீது எங்களுக்கு கண்ணியம் கலந்த பயம் இருந்தது.

அந்நேரத்தில் எங்களுக்கு அருகில் பிலால் (ரழி) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் எங்களுக்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்று நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: ‘‘உங்களது வீட்டின் வாம்லில் நின்று கொண்டிருக்கும் இரண்டு பெண்கள் ‘கணவனுக்கும், தங்களது அரவணைப்பில் வாழும் அநாதைகளுக்கும் தர்மம் அளிப்பது அவர்களுக்கு நன்மையைப் பெற்றுத் தரப் போதுமானதா?' என்று கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் யார் என்று நீங்கள் கூறாதீர்கள்'' என்று கூறி அனுப்பினோம்.

பிலால் (ரழி) ரஸுலுல்லா (ஸல்) அவர்களிடம் வந்து இக் கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு ரஸுலுல்லா (ஸல்) அவர்கள் ‘‘அவ்விருவரும் யார்?'' என்று கேட்க பிலால் (ரழி) அவர்கள் ‘‘ஒருவர் அன்சாரிப் பெண், மற்றொருவர் ஜைனப்'' என்று கூறினார்கள். அதற்கு ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ‘‘அவர் எந்த ஜைனப்?'' என்று கேட்டார்கள். ‘‘அப்துல்லாஹ்வின் மனைவி ஜைனப்'' என்று பிலால் (ரழி) அவர்கள் பதில் கூறினார்கள். பின்பு ரஸுலுல்லா (ஸல்) அவர்கள் ‘‘அவ்விருவருக்கும் இரண்டு கூலிகள் இருக்கின்றன. ஒன்று உறவின் கூலி. மற்றொன்று தர்மத்தின் கூலி'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஏழைகளுக்கு தர்மம் செய்வது தர்மமாக மட்டும் இருக்கும். ஆனால் உறவினருக்கு தர்மம் செய்வதில் இரண்டு நன்மை கிடைக்கும். ஒன்று தர்மத்தின் நன்மை. இரண்டாவது உறவினருக்கு உபகாரம் செய்த நன்மை.'' (ஸுனனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் சந்தர்ப்பம் கிட்டியபோதெல்லாம் நெருங்கிய உறவினருக்கு உபகாரம் செய்வதன் மாண்புகளை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

‘‘தானம் செய்தால் உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில், நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்...'' (அல்குர்ஆன் 3:92) என்ற திருவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, ‘‘தானம் செய்தால் உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில், நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்...'' எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் ‘பைருஹா' என்னும் தோட்டமாகும். நான் அதை அல்லாஹ்விற்காக தர்மம் செய்து விடுகிறேன். அது எனக்கு அல்லாஹ்விடம் நன்மையாகவும் சேமிப்பாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். எனவே, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' எனக் கூறி, நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்றுவிட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொருத்தமாகக் கருதுகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா (ரழி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!'' எனக் கூறிவிட்டு அத்தோட்டத்தை தமது நெருங்கிய உறவினர்களுக்கும், தமது தந்தையுடன் பிறந்தவன் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் எத்தனையோ காலங்களுக்கு முன் ஏற்பட்ட உறவுகளை நினைவுபடுத்தி தற்காலத்திலும் அதற்குரிய மரியாதை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் தற்காலத்திலும் மிஸ்ரு தேசத்தவரை நேசிக்குமாறு ஏவி, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நீங்கள் விரைவில் மிஸ்ரை வெற்றி கொள்ளப் போகிறீர்கள். அப்படி வெற்றி கொண்டால் அம்மக்களிடம் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், அவர்களுக்கு நம்முடன் பாதுகாவலும் இரத்த பந்தமும் இருக்கிறது''. மற்றோர் அறிவிப்பில் ‘‘பாதுகாவலும் திருமண உறவும் இருக்கிறது'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அறிஞர்கள் இதன் விரிவுரையில் இரத்த பந்தம் என்று கூறியது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ‘ஹாஜர்' மிஸ்ர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதனாலாகும். திருமண பந்தம் என்பது நபி (ஸல்) அவர்களின் மகனார் இப்ராஹீமின் தாய் ‘மாயா' (ரழி) அந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பதாகும்.

உறவைப் பேணுவதிலும் உபகாரம் புரிவதிலும் இஸ்லாமின் அணுகுமுறை எவ்வளவு உயர்ந்தது! காலங்கள் பல கடந்து தலைமுறைகள் பல உருவானாலும் இரத்த உறவையும் திருமண உறவையும் பேண வேண்டும் என்று எவ்வளவு அழகாக இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இத்தகைய அழகிய மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம் தனது முழு முயற்சியையும் இரத்த பந்தத்தைப் பேணி அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கு செலவழிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.


முஸ்லிமல்லாத இரத்த பந்துக்களுடனும் இணக்கமாக இருப்பார்

இஸ்லாம் மனித நேயத்தில் மேலோங்கி நிற்கிறது. இரத்த பந்துக்கள் முஸ்லிம்களாக இல்லையென்றாலும் அவர்களுடன் இணைந்திருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது.

அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘‘இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் நேசர்கள் அல்லர். என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறைநம்பிக்கையாளர்களும்தான். ஆயினும் அக்குடும்பத்தாருடன் எனக்கு இரத்த பந்தம் உண்டு. அதை நான் உபகாரத்தால் பசுமையாக்குவேன்'' என நபி (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நீர் உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்... (அல்குர்ஆன் 27:214) என்ற இந்த இறைவசனம் அருளப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளை அழைத்தார்கள். சிலரைக் குறிப்பிட்டும் சிலரைப் பொதுவாகவும் அழைத்துக் கூறினார்கள்: ‘‘அப்து ஷம்ஸ் கிளையார்களே! கஅப் இப்னு லுவய்ம் கிளையார்களே! உங்களை நரகிலிருந்து பாதுகாத் துக் கொள்ளுங்கள். முர்ரா இப்னு கஅபின் கிளையார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்து முனாஃப் கிளையார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஹாஷிம் கிளை யார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிப் கிளையார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள். நிச்சயமாக உனக்கு அல்லாஹ்விடமிருந்து நான் எதையும் செய்வதற்கு உரிமையற்றிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு (என்னுடன்) இரத்த பந்தம் என்ற உறவு இருக்கிறது. அதை நான் உபகாரத்தால் ஈரமாக்குவேன்'' என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

உறவினருடனான மனித நேயமானது முஸ்லிமின் இதயத்திலிருந்து எந்த நிலையிலும் நீங்கிவிடாது. உறவினர்கள் முஸ்லிம்களாக இல்லையெனினும் சரியே! நபி (ஸல்) அவர்களுடைய பொன்மொழிகள் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன.

நபி (ஸல்) அவர்கள் இரத்த பந்தத்தை பூமியுடன் ஒப்பிட்டார்கள். இந்த இரத்த பந்தம், ‘உபகாரம் செய்தல்' என்ற நீர் ஊற்றப்படும்போது அன்பு, தூய்மையெனும் கனியை அது தருகிறது, துண்டித்து வாழ்வதால் அது காய்ந்து கோபத்தையும் வெறுப்பையும் வளரச் செய்கிறது. உண்மை முஸ்லிம் பிறரை நேசிப்பவரும் மற்றவர்களால் நேசிக்கத் தகுந்தவருமாவார். அவரிடம் குடிகொண்டுள்ள நற்பண்புகளின் காரணமாக அனைத்து மக்களும் அவரை மிகவும் நேசிப்பார்கள்.

இதனால்தான் உமர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்களுக்குக் கொடுத்த ஆடையைத் தனது தாய் வழி சகோதரர் முஷ்ரிக்காக இருந்தும் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இஸ்லாம் முஸ்லிமல்லாத பெற்றோருக்கு உபகாரம் செய்யுமாறு கட்டளையிட்டதை முன்புள்ள பாடத்தில் படித்தோம். இங்கு முஸ்லிமல்லாத உறவினருக்கும் உபகாரம் செய்யக் கட்டளையிடுகிறது. இது இம்மார்க்கத்தின் மனிதநேய வெளிப்பாடாகும். ஆனால் இது இஸ்லாமைப் பொறுத்தவரை ஆச்சரியத்திற்குரியதல்ல. ஏனெனில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் கூறுகிறான்.

(நபியே!) நாம் உம்மை உலகத்தார் யாவருக்கும் ஓர் அருளாகவே அனுப்பியிருக்கிறோம். (அல்குர்ஆன் 22:107)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றிக் கூறினார்கள்: ‘‘நான் அனுப்பப்பட்டதெல்லாம் நற்குணங்களைப் பரிபூரணப்படுத்தவே.'' (அல் முவத்தா)

இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்வதன் விசாலமான பொருளை விளங்கிக்கொள்வார்

பொருளை உறவினர்களுக்காக செலவு செய்வது மட்டும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதாகாது. சேர்ந்து வாழ்வதற்கு பல வழிகள் உண்டு. உதாரணமாக உறவினர்களில் ஏழையாக இருப்பவர்களுக்கு பொருளைச் செலவு செய்வது, (இது அன்பையும் நேசத்தையும் அதிகரித்து உறவைப் பலப்படுத்தும்) அவர்களைச் சந்திக்கச் செல்வது, அவர்களுக்கு உபதேசம் செய்வது, உதவி, ஒத்தாசை புரிவது, விட்டுக் கொடுப்பது, அழகிய வார்த்தை பேசுவது, மலர்ந்த முகத்துடன் பார்ப்பது போன்றவையாகும்.

மற்றும் இவைகள் அல்லாத பல நல்வழிகளின் மூலமாகவும் உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாகக் கூறினார்கள்: ‘‘ஸலாமைக் கொண்டாவது உங்களுடைய இரத்த பந்துக்களை ஈரமாக (பசுமையாக) வைத்திருங்கள்.'' (இந்த ஹதீஸை இமாம் பஸ்ஸார் (டீயணணயயச) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலமாக பல வழிகளில் அறிவித்துள்ளார்கள். அவைகளில் ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்துகிறது. (முஸ்னத் பஸ்ஸார்)


உறவைப் பேணுவார்

உண்மை முஸ்லிம் தமது இரத்த பந்துக்கள் தன்னுடைய உறவைப் பேணாமல் விலகிச் சென்றாலும் அவர்களுடன் உறவைப் பேண வேண்டும். உறவைப் பேணுவதின் மூலம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும், மேன்மைக்குரிய இஸ்லாமியப் பண்புகளையும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பும் முஸ்லிம், தன்னைப் போன்றே அவர்களும் உறவைப் பேணுபவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கக் கூடாது. இஸ்லாமின் மனிதநேயப் பண்புகளை வெளிக் காட்டும் விதமாக அந்த முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் இரத்த பந்துக்கள் மற்றும் ஏனைய உறவினர்களின் உறவைப் பேணி நடப்பார்.

நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள். ‘‘பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக, உறவினர்கள் உறவை துண்டித்து வாழ்ந்தாலும் அவர்களுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.'' (ஸஹீஹுல் புகாரி)

தீமையையும், வன்நெஞ்சத்தையும் கொண்டு உறவுகளைத் துண்டித்து வாழும் இரத்த பந்துக்களுடன் மேன்மையையும், மன்னிப்பையும், பொறுமையையும், நிதானத்தையும் வெளிப்படுத்தி இணைந்திருப்பவர்களை நபி (ஸல்) அவர்கள் மிகவும் புகழ்ந்தார்கள். இரத்த பந்துக்கள் இணைந்து வாழ மறுத்தாலும் அவர்களைச் சேர்ந்து வாழ்பவர்களுடன்தான் அல்லாஹ் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்தினார்கள். இரத்த பந்தத்தைத் துண்டித்து நன்மையை மறக்கும் கல்நெஞ்சக்காரர்கள் எவ்வளவு பெரியபாவத்தைச் செய்தவர்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் சிரித்தத்துக் காட்டினார்கள்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்: ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து கொள்கின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) கூறினார்கள்: ‘‘நீ சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலை சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

கவனித்துப் பாருங்கள்! உறவுகளைத் துண்டித்து வாழும் கல்நெஞ்சக்காரர்களுடன் பொறுமையை மேற்கொண்டு, இணக்கமாக இருப்பவருக்கு அவர்களுக்கு எதிராக அல்லாஹ் உதவி செய்கிறான். அவர்களால் ஏற்படும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் ஆற்றலையும் வழங்குகிறான். அந்த மனிதநேயமிக்க உயர்வான பண்புகளில் அவரை ஸ்திரப்படுத்துகிறான். நபி (ஸல்) அவர்கள் பாவத்தில் மூழ்கிய அந்த வன்நெஞ்சக்காரர்களைச் சுடும் சாம்பலைத் தின்பவர்களுடன் ஒப்பிட்டுக் கூறியது எவ்வளவு அற்புதமான உவமானம்?

உண்மை முஸ்லிம் எல்லா நிலையிலும் தனது உறவினர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும். இந்த இணக்கத்தின் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். உறவினரிடமிருந்து அவ்வப்போது நிகழும் தவறுகள், மூடத்தனங்களை பொருட்படுத்தாதிருக்க வேண்டும். அவர்களிடம் ஏற்படும் அலட்சியம் மற்றும் சிறு குறைகளைப் புறக்கணித்துவிட வேண்டும்.

ஏனெனில், ‘‘இரத்த பந்தம் என்பது அர்ஷுடன் இணைத்துக் கட்டப்பட்டதாயிருக்கும். ‘எவர் என்னைச் சேர்த்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அவரைச் சேர்த்துக் கொள்கிறான். எவர் என்னைத் துண்டிக்கிறாரோ அல்லாஹ் அவரைத் துண்டித்து விடுகிறான்' என்று அது கூறுகிறது'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் செவியுறும் உண்மை முஸ்லிம் உறவினர்களின் இதுபோன்ற மூடத்தனமான, அற்பத்தனமான செயல்களைப் பொருட்படுத்தாமல் அவர்களுடன் நேசமாக நடந்து கொள்ள வேண்டும்.


முன்மாதிரி முஸ்லிம் - முஸ்லிம் தனது அண்டை வீட்டாருடன் 

அண்டை வீட்டாருடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்வார்

உபகாரம் செய்வதில் இஸ்லாமிய வழிமுறையைப் பேணுவார்

அண்டை வீட்டாருடன் பெருந்தன்மையாக நடப்பார்

தனக்கு விரும்புவதையே அண்டை வீட்டாருக்கும் விரும்புவார்

நற்பண்புள்ள முஸ்லிம் மறைந்ததால் மனித நேயத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு

இயன்றளவு அண்டை வீட்டாருக்கு உதவுவார்

முஸ்லிமல்லாத அண்டை வீட்டாருக்கும் உபகாரம் செய்வார்

அருகிலிருக்கும் அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிப்பார்

சிறந்த அண்டை வீட்டுக்காரராகத் திகழ்வார்

தீய அண்டை வீட்டானும் அவனது கருப்புப் பக்கமும்

தீய அண்டை வீட்டானின் நற்செயல்கள் அழிந்து விடும்

அண்டை வீட்டாரிடம் முறைகேடாக நடக்க மாட்டார்

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் தாராளத்தைக் கடைபிடிப்பார்

அண்டை வீட்டான் இடையூறுகளைச் சகித்துக் கொள்வார்

அண்டை வீட்டார் செய்த தீமைக்கு பழிவாங்க மாட்டார்

அண்டை வீட்டாரின் உரிமைகளை அறிவார்


அண்டை வீட்டாருடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்வார்

மார்க்க நெறிகளைப் பேணி வரும் உண்மை முஸ்லிம், தனது அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் உறவைப் பேணி அதிகமான உபகாரங்களையும் செய்து வருவார்.


உபகாரம் செய்வதில் இஸ்லாமிய வழிமுறையைப் பேணுவார்

முஸ்லிம் அண்டை வீட்டாருடன் சிறப்பான உறவைக் கொண்டிருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாமுக்கு முந்திய எந்தவொரு மதமும் இஸ்லாமிய வருகைக்குப் பின் உருவான எந்தவொரு அமைப்பும், சித்தாந்தமும் அறிந்திராத உன்னதமான வழியில் மனித உறவுகளைச் சீரமைப்பதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது. அண்டை வீட்டாருடன் நடந்து கொள்ளும் முறையைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது:

அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய சிநேகிதர்களுக்கும், பிரயாணிகளுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் (அன்புடன்) நன்றி செய்யுங்கள். எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36)

விளக்கம்:

‘அண்டை வீட்டிலுள்ள உறவினர்' என்பது முஸ்லிமான அண்டை வீட்டார் அல்லது உறவினரான அண்டை வீட்டாரைக் குறிக்கும். ‘அந்நிய அண்டை வீட்டார்' என்பது முஸ்லிமல்லாத அல்லது உறவினரல்லாத அண்டை வீட்டுக்காரரைக் குறிக்கும். ‘உங்களுடன் இருக்கும் சிநேகிதர்களுக்கு' என்பது நன்மையான விஷயங்களில் ஒன்றிணைந்திருக்கும் நண்பர்களைக் குறிக்கும்.

தனது இல்லத்திற்கு அருகில் இருப்பவருக்கு அண்டை வீட்டார் என்ற உரிமை உண்டு. அவர் உறவினராகவோ, முஸ்லிமாகவோ இல்லையென்றாலும் சரியே. அண்டை வீட்டாருக்கான இந்த கௌரவம் மனித நேயமிக்க இஸ்லாமின் அடிப்படையாகும்.

நபி (ஸல்) அவர்கள் இரத்த பந்தம் உள்ளதா, எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் பொதுப்படையாக அண்டை வீட்டாரைப் பற்றி உபதேசித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘வாசுமையைக் கடமையாக்கி விடுவாரோ என்று நான் எண்ணுமளவு அண்டை வீட்டாரைப் பற்றி ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு உபதேசித்துக்கொண்டே இருந்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இவ்வாறு உயர்ந்த அந்தஸ்தை வழங்கி ஜிப்ரீல் (அலை) அவர்களின் நாவின் வழியாக அண்டை வீட்டாரை இஸ்லாம் கண்ணியப் படுத்தியுள்ளது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்த விஷயத்தைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களுக்கு வலியுறுத்தி வந்ததால் நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்கள் அண்டை வீட்டாரை ‘சொத்தில் வாசாவார்' என நிர்ணயித்து விடுவாரோ என்று எண்ணினார்கள்.

முஸ்லிம்களுக்கு மிக அவசியமான விஷயங்கள் குறித்து உரையாற்றிய இறுதி ஹஜ்ஜுப் பேருரையின்போதும் அண்டை வீட்டான் உரிமைகளைப் பற்றி எடுத்துரைத்தார்கள். அபூ உமாமா (ரழி) கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாஃவில் தங்களது ஒட்டகையின் மீது அமர்ந்திருந்து கூறியதை நான் கேட்டேன். அப்போது ‘‘அண்டை வீட்டாரைப் பற்றி உங்களுக்கு நான் உபதேசிக்கிறேன்'' எனப் பலமுறை கூறினார்கள். அப்போது நான் அண்டை வீட்டாரை ‘வாசாக ஆக்கிவிடுவார்களோ' என எண்ணினேன்.

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதும் அவர்களுக்கு இடையூறு செய்யாமலிருப்பதும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டதற்கான அடையாளமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் அண்டை வீட்டாருடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளட்டும். எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் பேசினால் நல்லது பேசட்டும் அல்லது மௌனம் காக்கட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

புகாரி (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் வருவதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டாரோ அவர் அண்டை வீட்டாருக்கு நோவினையளிக்க வேண்டாம்.''


அண்டை வீட்டாருடன் பெருந்தன்மையாக நடப்பார்

இம்மகத்தான மார்க்கத்தின் பிரகாசத்தை தனது இதயத்தில் ஏந்திக் கொண்டிருக்கும் உண்மை முஸ்லிம், தனது அண்டை வீட்டாருடன் பெருந்தன்மையுடனும் நல்லுறவுடனும் நடந்து கொள்ள வேண்டும், அவருக்கு ஏதேனும் தேவைப்பட்டால் அதைக் கொடுக்க வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒருவர் தனது அண்டை வீட்டார் தனது வீட்டின் சுவல் கட்டை ஒன்றை ஊன்றுவதைத் தடை செய்ய வேண்டாம்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


தனக்கு விரும்புவதையே அண்டை வீட்டாருக்கும் விரும்புவார்

உண்மை முஸ்லிம் தனது அறிவுக் கண்ணை நன்கு திறந்து வைத்திருப்பார். மேலான மார்க்கத்தின் நேர்வழியைப் பெற்றவராகவும், மென்மையான உள்ளமும், மலர்ந்த சிந்தனையும் உடையவராகத் திகழ்வார். தனது அண்டை வீட்டான் உணர்வுகளைப் புரிந்து அவரது மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்து அவரது துன்பம் கண்டு வேதனையும் அடைவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இமாம் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘என் ஆன்மாவை தன் கைவசம் வைத்திருப்பவனின் மீது ஆணையாக! எந்தவொரு அடியானும் தனக்கு விரும்புவதையே தனது அண்டை வீட்டாருக்கு விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.'' (அல்லது நபி (ஸல்) அவர்கள் ‘சகோதரருக்கு' என்று கூறினார்கள்).

உண்மை முஸ்லிம் தனது வீட்டின் சமையலறையிலிருந்து உணவின் மணம் வெளியேறும்போதெல்லாம் சிரமத்திலும் வறுமையிலும் வாடிக் கொண்டிருக்கும் தனது அண்டை வீட்டாரை நினைவில் கொள்வார். அந்த வாசனை தமது அண்டை வீட்டாரை வேதனைப்படுத்தி அவர்களுக்கு அந்த உணவைச் சாப்பிட ஆவலைத் தூண்டும். ஆனால் சமைக்க வசதியற்றவர்களாக இருப்பார்கள். அவர்களில் சிறுவர்களும், அநாதைகளும், வறியவர்களும், முதியவர்களும் இருப்பார்கள் என்பதையும் முஸ்லிம் கவனத்தில் கொள்வார். இது பற்றி முஸ்லிம்களின் இதயத்தில் நபி (ஸல்) அவர்கள் விதைத்த சமூக உணர்வு கொண்ட நற்பண்பு இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் வெளிப்படும்.

நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: ‘‘அபூதர்ரே! நீர் ஆணம் சமைத்தால் அதில் கொஞ்சம் தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்ளும். உமது அண்டை வீட்டாரையும் விசாரித்துக் கொள்ளும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில், ‘‘நீர் ஆணம் சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக் கொண்டு பிறகு உமது அண்டை வீட்டாரை கவனித்து நல்லவிதமாக அவர்களுக்கும் சிறிது கொடுங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

தனது அண்டை வீட்டார் வறுமையிலும் சிரமத்திலும் இருக்கும் நிலையில் தான் மட்டும் வளமையும், வசதியுமாக ஆடம்பரத்துடன் இருப்பதை உண்மை முஸ்லிமின் மனசாட்சி ஒப்புக் கொள்ளாது. எப்படி ஒப்புக் கொள்ளும்? அவரது அடிமனதில் அண்டை வீட்டாருடன் இனிய நேசத்தையல்லவா இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக (இறை விசுவாசியாக) மாட்டார்.'' (முஸ்னத் அபூ யஃலா)

மேலும் கூறினார்கள்: ‘‘தனது அண்டை வீட்டார் பசித்திருப்பது தெரிந்தும் தான் மட்டும் வயிறு நிரம்ப உண்டு இரவு கழிப்பவர் என்னை விசுவாசித்தவராக மாட்டார்.'' (முஸ்னத் அல் பஸ்ஸார்)

நற்பண்புள்ள முஸ்லிம் மறைந்ததால் மனித நேயத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு

இக்காலத்தில் மனித சமூகத்தில் அவலங்களும் அலங்கோலங்களும் சூழ்ந்து நிற்கின்றன. இதற்கெல்லாம் வாழ்வின் சவால்களைச் சமாளிக்கும் ஆற்றல் பெற்ற உண்மை முஸ்லிம்கள் அந்தந்த இடங்களில் இல்லை என்பதுதான் காரணமாகும். பிற்போக்குத்தனமான சிந்தனைகளின் அணிவகுப்புக்குப் பின்னே நீதமான, மனித நேயமிக்க இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாடுகள் மறைக்கப்படுகின்றன. அந்தப் பிற்போக்குச் சிந்தனைகளால் மனித குலத்துக்குப் பசி, பஞ்சம், பட்டினி, வறுமைதான் பரிசாகக் கிடைக்கிறது. அதுவும் விண்வெளியில் ராக்கெட்டுகளும் செயற்கைக் கோள்களும் பறந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் இவ்வாறு நடைபெறுகின்றன.

மனிதன், சந்திரனைத் தொட்டுவிட்ட இந்த யுகத்தில் 1975ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலக விவசாயம் மற்றும் உணவுக் கழகம் வெளியிட்ட அறிக்கை; ஆசியா, ஆப்க்கா கண்டத்தில் 2 கோடியிலிருந்து 10 கோடி மக்கள் வரை வரவிருக்கும் சில ஆண்டுகளில் பஞ்சத்தால் மரணமடையும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கிறது.

இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு வாரமும் 30 லட்சம் பட்டினிச் சாவுகள் நிகழும் என்றும், அந்நாடுகளில் 46 கோடியிலிருந்து 100 கோடி மக்கள் வரை சத்துணவின்றி தவித்து வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

செய்தி நிறுவனங்கள் அதே ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டன. உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட ஒரு ஆப்பிக்கப் பகுதிக்கு நர்ஸாகப் பணிபுரிய ஓர் ஐரோப்பிய இளம்பெண் சென்றாள். இறுதியாக அவள் மனநோயாளியாகி விட்டாள். அதற்குக் காரணம் அவள் அங்கு ஓர் இரத்தக் களயைக் கண்டதுதான்.

அதன் விவரம்: பசியினால் பாதிக்கப்பட்ட சில ஆப்பிக்க சிறுவர்கள் தங்களது பசியைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு துண்டு மாம்பழத்தைப் பெற்று விட வேண்டுமென்ற வேட்கையில் கொயூரமான ஓர் இரத்தக் களயை நடத்தினார்கள். அதன் விளைவாக அவர்களில் ஒரு சிறுவனின் கண் குருடாக்கப்பட்டது. அதன் பிறகுதான் சண்டை நின்றது. இதில் வருந்தத்தக்கது என்னவெனில் அந்தச் சிறுவர்களில் மிகப் பெயரிவன் எட்டு வயதைத் தண்டாதவன் என்பதுதான். இந்தக் கொயூரப் பசியால் அச்சிறுவர்கள் உடல் பலவீனப்பட்டு உருக்குலைந்து போய்விடுகிறார்கள். நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, மரணத்தின் பற்களிடையே சிக்கிக் கொள்கிறார்கள்.

ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பசியின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகி வரும் நிலையில், இதற்கு மாறாக உலகின் மற்றொரு பகுதியும் உண்டு. அதுதான் மேற்கத்திய நாடுகள். உலகின் 20 சதவீத மக்கள் மட்டுமே வாழும் அந்நாடுகள் உலகின் மொத்த வளங்களில் 80 சதவீத வளங்களை அனுபவிக்கின்றன.

1975ம் ஆண்டில் காபி விலை சர்வதேசச் சந்தையில் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக பிரேஸில் நாடு ஆயிரக்கணக்கான டன் காப்பிக் கொட்டைகளை எரித்து அழித்தது. ஐரோப்பிய வர்த்தக ஒன்றிய நாடுகள் தங்களது சந்தைகளில் உணவு தானிய விலை குறைந்து விடாமலிருப்பதற்காக தங்களது சந்தைத் தேவைகளுக்கு அதிகமான உணவுத் தானியங்களை அழிப்பதற்காக 5 கோடி டாலர்களைச் செலவழித்தன.

உணவு தானிய விலைகள் குறைந்துவிடாமலிருக்கும் நோக்கில் உணவு உற்பத்தியைக் குறைப்பதற்காக அமெரிக்கா வருடம் தோறும் 300 கோடி டாலர்களை செலவிட்டு வருகிறது. அமெரிக்க விவசாயிகள் சந்தையில் இறைச்சி விலை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக பல்லாயிரம் மாடுகளை, கன்றுகளைக் கொன்று பூமியில் புதைக்கின்றனர். அதே நேரத்தில் தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்க்க நாடுகளில் இலட்சக்கணக்கான பட்டினிச்சாவுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தனது வீட்டின் சமையலறையிலிருந்து வெளியேறும் வாசனையால் வசதியற்ற தனது அண்டை வீட்டாருக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்ற சிந்தனையைக் கொண்ட மனித நேயமிக்க இஸ்லாமியக் கலாச்சாரத்துக்கும், பல கோடி மக்களை பட்டினிச்சாவை நோக்கித் தள்ளிவிடும் பொருளியலுக்கு அடிமையான மேற்கத்திய கலாச்சாரத்திற்குமிடையேதான் எவ்வளவு பெரியஇடைவெளி!

கிழக்கத்திய நாடுகளானாலும் சரி, மேற்கத்திய நாடுகளானாலும் சரி, பொருளாதார அடிமைச் சிந்தனைகள் கொண்ட நாடுகளில் மனித நேயம் எவ்வளவு தூரம் இழிவாக்கப்படுகிறது? அறியாமை எவ்வளவு தூரம் கொடிகட்டிப் பறக்கிறது?

இஸ்லாமியப் பிரகாசத்தைச் சுமந்து நிற்கும் முஸ்லிம்களின் கடமையுணர்வு அபாரமானதாகும். அந்தப் பிரகாசத்தைக் கொண்டு மட்டுமே மடமை இருளை விரட்டியடிக்க முடியும், இதயங்களையும் சிந்தனைகளையும் பிரகாசிக்கச் செய்ய முடியும். மனிதகுலத்தை நேர்மையும், நிம்மதியும், இன்பமும் நிறைந்த மகிழ்ச்சிப் பாதையின்பால் அழைத்துச் செல்ல முடியும்.


இயன்றளவு அண்டை வீட்டாருக்கு உதவுவார்

நேரிய மார்க்கத்தால் வழிகாட்டப் பெற்ற முஸ்லிம் தன்னால் இயன்ற அளவு அண்டை வீட்டாருக்கு உதவியும் உபகாரமும் செய்வார். சிறிய அன்பளிப்பாக இருந்தாலும் அதை அற்பமாகக் கருதாமல் தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உதவுவார். ஏனெனில் அதை அற்பமாகக் கருதி அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உதவவில்லையென்றால் தானும் நன்மையை இழந்து அண்டை வீட்டாரையும் இழக்க வைத்துவிடுகிறார். இதை நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கும் உபதேசித்தார்கள். பெரும்பாலான பெண்கள் சிறியதாகக் கருதும் பொருட்களை அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதற்கு மிகவும் தயங்குகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதை அற்பமாகக் கருத வேண்டாம். அது ஆட்டின் குளம்பாக இருப்பினும் சரியே.'' (ஸஹீஹுல் புகாரி)

ஆட்டின் குளம்பு என்பது சிறிய, மதிப்பற்ற பொருள் என்பதைக் குறிக்கும். அதாவது ‘தன்னிடமிருப்பது மிகக் குறைவான மதிப்புடைய தாயிற்றே, இதை எப்படி அண்டை வீட்டாருக்குக் கொடுப்பது?' என்று தயங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டுமெனவும் அவ்வாறே ‘தனது அண்டை வீட்டார் கொடுத்தது அற்பமானது' என்று கருதாமல் மனமகிழ்வுடன் அதை ஏற்றுக் கொள்வது அவசியம் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். ஏனெனில் உயர்ந்த பொருளை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் கொடுக்காமல் இருப்பதைவிட சிறிதளவேனும் கொடுப்பது சிறந்ததல்லவா?

எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் (அங்கு) அதனையும் கண்டு கொள்வார். (அல்குர்ஆன் 99:7)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘பேரீத்தங்கனியின் ஒரு துண்டைக் கொண்டேனும் நரக நெருப்பிலிருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

இந்த நபிமொழி விரிவான பொருளைக் கொண்டுள்ளது. அதாவது தனக்கு அண்டை வீட்டிலிருந்து வரும் பொருளை அற்பமாகக் கருதக் கூடாது. அது ஆட்டின் குளம்பைப் போன்றதாக இருப்பினும் சரியே. மாறாக அந்தப் பொருளுக்காக அண்டை வீட்டாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்போதுதான் இரு குடும்பத்தாடையே நேசம் வளரும். ஒருவருக்கொருவர் கருணையை வெளிப்படுத்தி பாசத்தை பரிமாறிக் கொள்ள முடியும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மனிதருக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவராக மாட்டார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)


முஸ்லிமல்லாத அண்டை வீட்டாருக்கும் பிரத்தியேக உபகாரம் செய்வார்

முஸ்லிம் தனது அருகிலிருக்கும் முஸ்லிம் குடும்பத்திற்கு உபகாரம் செய்வதுடன் தனது உபகாரத்தை நிறுத்திக் கொள்ளாமல் முஸ்லிமல்லாத குடும்பத்துக்கும் அதை விரிவுபடுத்த வேண்டும். ஏனெனில், இஸ்லாமின் மாண்புகள் உலகளாவியது. அது மத, வேறுபாடின்றி உலகின் அனைவரையும் தனது நற்செயல்களால் சூழ்ந்து கொள்ளும் தன்மை பெற்றது.

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரழி) அவர்களின் வீட்டில் ஆடு அறுக்கப்படும்போது தனது அடிமையிடம், ‘‘நமது அண்டை வீட்டாரான யூதருக்கு (ஆட்டிறைச்சியை) அன்பளிப்புச் செய்தாயா? நமது அண்டை வீட்டாரான யூதருக்கு அன்பளிப்புச் செய்து விட்டாயா?'' என (இருமுறை) கேட்பார்கள். ‘‘ஏனெனில் நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக் கிறேன்: ‘‘ஜிப்ரீல் எனக்கு அண்டை வீட்டாரைப் பற்றி உபதேசித்துக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு வாரிசுரிமையை ஏற்படுத்தி விடுவார்களோ என்று நான் எண்ணுமளவு (உபதேசித்தார்கள்)'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

தற்காலத்திலும் எத்தனையோ முஸ்லிமல்லாத வேதக்காரர்கள் முஸ்லிம்களுக்கு அருகில் அவர்கள் உயிர், பொருள், கொள்கை, கௌரவம் காக்கப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் நகரங்களில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமது ஆலயங்களை அமைத்து கொண்டு நிம்மதியாக வாழ்வது இதற்குச் சான்றாகும். குர்ஆன் முஸ்லிம்களுக்குக் கற்பித்த நெறியின்படி பிற மதத்தவர் பாதுகாப்பும், உதவியும், உபகாரமும் பெற்று நிம்மதியாக வாழ்கின்றனர்.

விசுவாசிகளே! மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து யுத்தம் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளிப்படுத்தாதவர்களுக்கும் நீங்கள் நன்றி செய்ய வேண்டாமென்றும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளக் கூடாதென்றும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 60:8)


அருகிலிருக்கும் அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிப்பார்

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற இஸ்லாமின் சமூக அமைப்பைப் புரிந்துகொண்ட முஸ்லிம் அண்டை வீட்டால் மிக நெருக்கமாக இருப்பவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் இருக்கின்றனர். அந்த இருவரில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்?'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த இருவரில் யாருடைய வாசல் (உம் வீட்டுக்கு) நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்களின் இந்த மேன்மையான வழிகாட்டுதலை நபித்தோழர்கள் பின்பற்றினார்கள். இது குறித்து அபூஹுரைரா (ரழி) கூறினார்கள்: ‘‘தனது அண்டை வீட்டால் அருகிலிருப்பவரை விட தூரத்திலிருப்பவருக்கு முன்னுரிமையளிக்க வேண்டாம். முதலில் நெருங்கி இருப்பவருக்கும், அடுத்து தூரத்திலிருப்பவருக்கும் உபகாரத்தைச் செய்ய வேண்டும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வது பற்றிய இவ்வரிசை முறை முஸ்லிமை தனது தூரமான அண்டை வீட்டாரை கவனிப்பதிலிருந்து முகத்தைத் திருப்பிவிடாது. அவரது வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அண்டை வீட்டார் என்ற உரிமையைப் பெறுவார்கள். முஸ்லிம், அவர்களுக்கு உபகாரம் செய்ய கடமைபட்டிருக்கிறார். நெருங்கிய அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிக்க வேண்டு மென்பது மனித இயல்பை கவனித்து அமைக்கப்பட்டதாகும். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிக நெருங்கிய அண்டை வீட்டான் மனநிலையைக் கவனித்தார்கள்.


சிறந்த அண்டை வீட்டுக்காரராகத் திகழ்வார்

அண்டை வீட்டாருக்கு உதவியும், உபகாரமும் செய்வது முஸ்லிமின் இயல்போடு ஒன்றிவிட்ட ஓர் உணர்வாகும். இது அல்லாஹ்விடமும் மனிதர்களிடமும் அவருக்குரிய சிறப்புத் தன்மையாகும். ஏனெனில், அவர் இஸ்லாமிய அமுதத்தை அருந்தியவர். அவரது இதயம் இஸ்லாமின் மேன்மையான பயிற்சியினால் மலர்ந்திருக்கும். இந்நிலையில் அவர் சிறந்த தோழராக, சிறந்த அண்டை வீட்டாராகவே திகழ்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ்வின் பார்வையில் தோழமையால் மிகச் சிறந்தவர் தமது தோழர்களிடமும் சிறந்து விளங்குபவரே. அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே.'' (ஸுனனுத் திர்மிதி)

சிறந்த அண்டை வீட்டார் அமைவதும் ஒரு முஸ்லிமுக்கு கிடைக்கும் நற்பாக்கியங்களில் ஒன்றாகும். அவர்கள் மூலம் மனநிம்மதி, சந்தோஷம் போன்ற நற்பாக்கியங்களை அடைகிறார். பின்வரும் ஹதீஸில் நல்ல அண்டை வீட்டார் அமைவதை ஒரு நற்பாக்கியம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் உயர்வுபடுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஸாலிஹான அண்டை வீட்டார் அமைவதும், விசாலமான வீடும், சிறந்த வாகனமும் உலகில் ஒரு முஸ்லிமின் வாழ்வு ஈடேற்றம் பெற்றதற்கான அடையாளமாகும்.'' (முஸ்னத் அஹ்மத்)

நமது முன்னோர்கள் நற்பண்புள்ள அண்டை வீட்டாரை விலை மதிக்க முடியாத அருட்கொடையாகக் கருதினார்கள். ஸயீது பின் ஆஸ் (ரழி) அவர்களின் அண்டை வீட்டுக்காரர் தனது வீட்டை ஒரு இலட்சம் திர்ஹத்துக்கு விலை பேசினார். அதை வாங்குபவரிடம் ‘‘இது இந்த வீட்டின் விலையாகும். ஆனால், ஸயீது (ரழி) அவர்களின் பக்கத்து வீடு என்ற சிறப்புத் தன்மையை அடைந்து கொள்ள எவ்வளவு கொடுப்பாய்?'' என்று கேட்டார். இதையறிந்த ஸயீது (ரழி) அந்த வீட்டுக்காரருக்கு ஓர் இலட்சம் திர்ஹத்தை அனுப்பி அவரையே குடியிருக்கச் செய்தார்கள்.

இதுவரை நல்ல அண்டைவீட்டார் சம்பந்தப்பட்ட அழகிய உபதேசங்களைக் கண்டோம். இதோ இப்போது கெட்ட அண்டை வீட்டார் பற்றிய விஷயங்களைக் காண்போம்.


தீய அண்டை வீட்டானும் அவனது கருப்புப் பக்கமும்

தீய அண்டை வீட்டான் இவ்வுலக வாழ்வின் பாக்கியங்களில் ஈமான் என்ற மிகச் சிறந்த பாக்கியத்தை இழந்தவனாவான். இதை நபி (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, தோழர்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே அவர் யார்?'' என வினவினர். நபி (ஸல்) அவர்கள் ‘‘எவருடைய தீங்குகளிலிருந்து அண்டைவீட்டார் நிம்மதி பெறவில்லையோ அவர்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவருடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் நிம்மதியடைய மாட்டார்களோ அவர் சுவனம் புகமாட்டார்.''

இது எவ்வளவு பெரியபாவம்? தனது அண்டை வீட்டாரிடம் தீய முறையில் நடந்து கொள்பவர் எவ்வளவு பெரியஅருட்கொடையை இழந்துவிட்டார்? ‘ஈமான்' என்ற மகத்தான அருட்கொடை அவரிடமிருந்து நீங்கி விடுகிறது. சுவனத்தில் நுழையும் பாக்கியத்தையும் இழந்து ஈடு செய்ய முடியாத நஷ்டத்தில் வீழ்ந்து விடுகிறார்.

உண்மை முஸ்லிம் திறந்த மனதுடன் மேற்கண்ட சான்றுகளைப் புரிந்துகொண்டு தனது அண்டை வீட்டாரிடம் எந்த நிலையிலும் சண்டை, சச்சரவு இல்லாமல் அவர்களைத் துன்புறுத்திவிடாத வகையில் செயல்படுவார். அவ்வாறு இல்லையென்றால் அவருடைய ஈமான் பறி போய்விடும் மறுமை வாழ்வில் தோல்வியடைந்து விடுவார். இதைவிட பெரியதுரதிஷ்டம் என்னவாக இருக்க முடியும்? அதை நினைத்தாலே அவரது உடல் நடுங்கி இதயம் திடுக்கிட்டுவிடும்.


தீய அண்டை வீட்டானின் நற்செயல்கள் அழிந்து விடும்

தீய குணமுடைய அண்டை வீட்டான் நற்செயல்கள் அழிக்கப்பட்டு விடும். அண்டை வீட்டாருக்கு நோவினையளிப்பவன் நற்கருமங்களுக்கு எப்பலனுமில்லை. ஏனெனில் நற்செயல்கள் அனைத்தும் ஈமான் என்ற தூணின் மீதுதான் நிர்மாணிக்கப்படுகிறது. மேற்கண்ட சான்றுகள் அவனுக்கு ஈமான் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஈமானற்றவனின் எந்த நற்செயலையும் அல்லாஹ் ஒப்புக்கொள்ளாமல் அழித்துவிடுவான் என்பது மிகத் தெளிவான விஷயமாகும். அந்த நற்செயல்களுக்காக அவன் வாழ்வனைத்தையும் செலவிட்டிருந்தாலும் சரியே.

நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண்மணி இரவு நேரங்களில் நின்று வணங்குகிறார். பகலில் நோன்பு நோற்கிறார். தர்மமும் செய்கிறார். ஆனால் தனது நாவால் அண்டை வீட்டாருக்கு நோவினையளிக்கிறார்.'' நபி (ஸல்) அவர்கள், ‘‘அவளிடத்தில் எந்த நன்மையுமில்லை, அவள் நரகவாதி'' என்றார்கள். நபித்தோழர்கள், ‘‘இன்ன பெண்மணி ஃபர்ளான தொழுகையை மட்டும் தொழுகிறாள். பாலாடைக் கட்டியை (மட்டும்) தர்மம் செய்கிறாள் ஆனால் எவருக்கும் நோவினையளிப்பதில்லை'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் சுவனவாசி'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

தீய குணமுடைய அண்டை வீட்டானை ‘மலடன்' என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மூன்று நபர்கள் மலடர்களாவர். 1) ஒரு தலைவன். நீ அவனுக்கு நன்மை செய்தால் நன்றி செலுத்தமாட்டான் (அந்த நன்மைக்குப் பிரதிபலனை அவனிடம் எதிர்பார்க்க முடியாது.) நீ தீங்கிழைத்தால் மன்னிக்கமாட்டான் 2) தீய குணமுடைய அண்டை வீட்டான். உன்னிடம் நன்மையைக் கண்டால் மறைத்து விடுவான் தீமையைக் கண்டால் பகிரங்கப்படுத்துவான் 3) மனைவி, நீ இருக்கும்போது உனக்கு நோவினையளிப்பாள். நீ அவளிடம் இல்லாதபோது உமக்கு மோசம் செய்வாள்.'' (முஃஜமுத் தப்ரானி)

இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் விவரித்தது போன்று கெட்ட அண்டை வீட்டான் அருவருப்பான உருவம் இறையச்சமுள்ள முஸ்லிமின் சிந்தனையில் தோன்றியிருக்கும். எனவே அவர் தனது அண்டை வீட்டாருக்கு தீமை செய்வதிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார்.


அண்டை வீட்டாரிடம் முறைகேடாக நடக்க மாட்டார்

முஸ்லிம் தனது அண்டை வீட்டாருடன் மிகக் கவனமாக விலகிக் கொள்வார். ஏனெனில் அது பெரும் பாவமாகும். இதை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி தெளிவுபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் விபச்சாரத்தைப் பற்றி வினவினார்கள். தோழர்கள் ‘‘ஹராம் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கியுள்ளார்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஒரு மனிதன் தனது அண்டை வீட்டுப் பெண்ணிடம் விபச்சாரம் செய்வதைவிட பத்துப் பெண்களிடம் விபச்சாரம் செய்வது பாவத்தால் இலகுவானதாகும்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் திருட்டைப் பற்றி கேட்டார்கள். தோழர்கள் ‘‘அது ஹராம். அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் ஹராமாக்கியுள்ளார்கள்'' என்று கூறினார்கள். அப்போது ‘‘ஒருவன் தனது அண்டை வீட்டில் திருடுவதைவிட வேறு பத்து வீடுகளில் திருடுவது பாவத்தால் இலகுவானதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

இஸ்லாம் அண்டை வீட்டாருக்கு கௌரவமான அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதை மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களாலும் அவர்களது பண்பாட்டு நெறிகளாலும் அறிந்துகொள்ள முடியாது. மாறாக இச்சட்டங்கள் அண்டை வீட்டான் கண்ணியத்தையும் கௌரவத்தையும் மதிக்காமல் வீணடிக்கின்றன. ஆம்! பெரும்பாலும் இவர்கள் அண்டை வீட்டான் கௌரவத்தில் விளையாடுவதை மிக இலேசாகக் கருதுகிறார்கள். அதை நல்ல வாய்ப்பாக நினைக்கிறார்கள்.

நமது இஸ்லாமின் நற்பண்புகள் நம்மை விட்டு விலகியபோது ஆபாசப் பாடல்கள் நம்மில் பரவ ஆரம்பித்தன. அதில் அண்டை வீட்டான் ஜன்னல் காட்சிகளைச் சித்தரிக்கிறார்கள். அது மட்டுமா? கலாச்சார ரீதியாகவும் இவர்களின் கொள்கைப் போரின் அலைகள் நம்மைச் சூழ ஆரம்பித்துவிட்டன.

இதோ வெட்கம் கெட்ட ஒரு அற்பத்தனமான வாலிபன் தனது அண்டை வீட்டுப் பெண்ணை பாட்டில் அமைத்து காதல் தூது விடுகிறான். சீ! இப்படிப்பட்ட அசிங்கத்தை இஸ்லாமுக்கு முந்திய அறியாமைக் காலத்தில் கூட நாம் காணவில்லை. அப்படியிருக்க இஸ்லாமில் அதை எப்படிப் பார்க்க முடியும்?

அண்டை வீட்டான் கண்ணியத்தைக் காப்பது, அவரது கௌரவத்தைப் பேணுவது, அவருக்கு உதவிகள் புரிவது மற்றும் அவரது குறைகளை மறைப்பது, தேவைகளை நிறைவேற்றுவது, அவரது குடும்பப் பெண்கள் விஷயத்தில் பார்வையைத் தாழ்த்திக் கொள்வது, அவருக்குத் தீங்கிழைப்பதிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பது போன்ற விஷயங்களை வலியுறுத்தும் பல சான்றுகள் காணக் கிடைக்கின்றன.

இந்நிலையில் முஸ்லிம் எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் மனித சமூகத்தில் மிகச்சிறந்த அண்டை வீட்டுக்காரராக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஏனெனில், அவர் திறந்த மனதுடையவராக, சமூகத்தில் அண்டை வீட்டான் நிலை குறித்த இஸ்லாமின் கண்ணோட்டத்தை அறிந்தவராக இருப்பார். தனக்கும் அவருக்குமிடையே ஏதேனும் பிரச்சனைகள் தோன்றினால் அதில் ஈடுபடுவதற்கு முன் பலமுறை யோசிப்பார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மறுமை நாளில் முதன் முதலாக தர்க்கம் செய்து கொள்ளும் இருவர் அண்டை வீட்டார்கள்தான்.'' (முஸ்னத் அஹ்மத்)


அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் தாராளத்தைக் கடைபிடிப்பார்

இஸ்லாமின் மாண்புகளைப் புரிந்த முஸ்லிம் தனது அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதில் மிக தாராளமாக நடந்து கொள்வார். அவருக்கு உபகாரத்தின் கதவுகளைத் திறந்து, தீமையின் வாயில்களை மூடிவிடுவார். அவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் குறைவு ஏற்படுவதை அஞ்சிக் கொள்வார்.

நன்றியற்ற அண்டை வீட்டார்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எத்தனையோ நபர்கள் மறுமை நாளில் தமது அண்டை வீட்டாரை பிடித்துக் கொள்வார்கள். ‘‘இறைவனே! என்னைத் தவிர்ப்பதற்காக அவர் தனது வாசலை மூடிவிட்டார் அதன் மூலம் தனது உபகாரத்தைத் தடுத்துக் கொண்டார்'' என்று கூறுவார். (அல் அதபுல் முஃப்ரத்)

இந்நிலையைச் சந்திப்பது எவ்வளவு பெரியதுரதிஷ்டம்? எல்லோருக்கும் முன்பாக மறுமையில் தனது கஞ்சத்தனத்தால் வெட்கித் தலைகுனிய வேண்டுமே!

இஸ்லாமியப் பார்வையில் முஸ்லிம்கள் உறுதியாக கட்டப்பட்ட கட்டிடமாவார்கள். இந்த உம்மத்தினர்தான் அதன் கற்கள். ஒவ்வொரு கல்லும் ஒன்றோடொன்று சமமானதாக மற்றோர் கல்லுடன் உறுதியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அக்கட்டிடம் உறுதியானதாகத் திகழும். இல்லையென்றால் அக்கட்டிடம் பலவீனப்பட்டுவிடும்.

இவ்விடத்தில் இஸ்லாம் தனது உறுப்பினடையே உயிரோட்டமான இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இஸ்லாம் என்ற அக்கட்டிடம் உறுதியாக நிலைத்து நிற்கிறது.

கால ஓட்டங்களில் ஏற்படும் அதிர்ச்சிகளும், சோதனைகளும் அக்கட்டிடத்தை அசைத்துவிட முடியாது. நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி மிகச் சிறந்த உதாரணம் ஒன்றைக் கூறினார்கள்:
‘‘ஒரு முஃமின், மற்றொரு முஃமினுக்கு உதாரணம் ஒரு கட்டிடத்தைப் போன்றதாகும். அதில் ஒன்று மற்றொன்றை பலப்படுத்துகிறது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ‘‘முஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும், கருணைகொள்வதற்கும், இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது, ஓர் உடலைப் போன்றதாகும். அதில் ஏதேனும் ஓர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலைக் கொண்டும் தூக்கமின்மையைக் கொண்டும் முறையிடுகின்றன.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஈமான் எனும் இந்த அற்புதமான இணைப்பின் மூலம் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களையும் இணைப்பதில் இஸ்லாம் ஆர்வம் காட்டுகிறது. அதில் ஓர் அங்கமே அண்டை வீட்டினருடன் உறுதியான உறவை ஏற்படுத்தியதாகும்.


அண்டை வீட்டான் இடையூறுகளை சகித்துக் கொள்வார்

மாண்புமிக்க மார்க்கத்தால் பிரகாசமான நேர்வழியைப் பெற்றுள்ள முஸ்லிம், தனது அண்டை வீட்டான் நடவடிக்கைகளில் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் அது விஷயத்தில் கோபம் கொள்ளாமல் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் நோக்கில் அக்குறைகளை மறந்து மன்னித்துவிட வேண்டும். இவ்வாறு மன்னிப்பது என்ற நற்செயலை அல்லாஹ் வீணடித்துவிட மாட்டான் அது அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுத்தரும் என்பதை உறுதி கொள்ள வேண்டும்.

இதற்குச் சான்றாக அபூதர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் நீண்ட ஒரு பொன்மொழியை அறிவிக்கிறார்கள். அதில் வருவதாவது ‘‘மூன்று நபர்களை அல்லாஹ் நேசிக்கிறான். அவர்களில் ஒருவர் தனது கெட்ட அண்டை வீட்டான் நோவினையை சகித்து வாழ்பவர்.'' (முஸ்னத் அஹ்மத், முஃஜமுத் தப்ரானி)


அண்டை வீட்டார் செய்த தீமைக்கு பழிவாங்கமாட்டார்

நபி (ஸல்) கற்றுத் தந்த நற்பண்புகளில் ஒன்று அண்டை வீட்டான் தீமைக்கு பழிவாங்காமல் முடிந்த அளவு பொறுமைகாக்க வேண்டும் என்பதாகும். தான் இடையூறு செய்தும் தனது அண்டை வீட்டார் எவ்வித எதிர்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை தீமைபுபவர் உணர்ந்து கொண்டால் மனம்மாறி தவறுகளிலிருந்து திருந்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். எனவே பொறுமையுடனும் நிதானத்துடனும் அதை எதிர்கொள்ள வேண்டும். இதுவே ஒழுக்கப் பயிற்சிக்கான சிறந்த வழிமுறையாகும்.

முஹம்மது இப்னு அப்துல்லாஹ் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்: ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு துன்பமிழைக்கிறார்'' நபி (ஸல்) அவர்கள் ‘‘பொறுமையாக இரு'' என்றார்கள். அவர் மீண்டும் வந்து கூறினார்: ‘‘எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினை தருகிறார்.'' நபி (ஸல்) அவர்கள்: ‘‘பொறுமையாக இரு'' என்று கூறினார்கள். அவர் மீண்டும் மூன்றாவது முறையாக கூறினார்: ‘‘எனது அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினையளிக்கிறார்.'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘(வீட்டிலுள்ள) உமது சாமான்களை எடுத்து வீதியிலே வைத்துவிடு. உம்மிடம் எவரேனும் வந்து காரணத்தை விசாரித்தால் என்னுடைய அண்டை வீட்டுக்காரர் எனக்கு நோவினை தருகிறார் என்று கூறும். (மக்கள் அனைவரும் அவனை ஏசுவார்கள் அதனால்) அவர் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டுவிடும். எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் அண்டை வீட்டுக்காரரைக் கண்ணியப்படுத்தட்டும்'' என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)


அண்டை வீட்டாரின் உரிமைகளை அறிவார்

நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் மூலம் ஒவ்வொரு நிலையிலும் தான் அண்டை வீட்டாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முஸ்லிம் அறிந்து கொள்ள வேண்டும். அண்டை வீட்டார் சிரமப்படும்போது அவர்களுக்கு உதவுதல், அவரது வளமையில் மகிழ்வது, அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களில் தானும் மகிழ்ந்திருத்தல், தேவைப்பட்ட உதவிகளைச் செய்வது மற்றும் அவர் நோய்வாய்ப்பட்டால் நலன் விசாரித்து ஆறுதல் கூறி உற்சாகப்படுத்துவது போன்ற நற்குணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், அண்டை வீட்டார் மரணித்தால் மையித்துக்கான கடமைகளை நிறைவேற்றி அவருக்குப் பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவேண்டும். அண்டை வீட்டான் உணர்வுகளை, அவரது குடும்பத்தாரின் உணர்வுகளை மதிப்பதில் ஒருபோதும் தவறிழைத்துவிடக் கூடாது. 

இந்நிலையில் ஒரு முஃமின் தனது அண்டை வீட்டாருக்கு இடையூறு செய்வதென்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட விஷயமாகும்.
இதுதான் அண்டை வீட்டார் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமாகும். இந்த உன்னதமான பண்புகளைக் கற்றுத் தேர்ந்த முஸ்லிமே இஸ்லாமின் கோட்பாடுகளைப் புரிந்தவராவார். அந்தப் பிரகாசமான நேர்வழியை அடைந்து, தன்னையும் தனது குடும்பத்தினரையும் இஸ்லாமிய சட்டங்களோடு பொருத்திக் கொள்வார்.

இந்நிலையில் உண்மை முஸ்லிம், மனித சமுதாயத்தில் தனித்தன்மை வாய்ந்தவராக இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?


முன்மாதிரி முஸ்லிம் - முஸ்லிம் தனது சகோதரர்கள், நண்பர்களுடன்

அல்லாஹ்வுக்காக நேசிப்பார்

அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களின் அந்தஸ்து

அல்லாஹ்வுக்காக நேசிப்பதால் முஸ்லிமின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்

துண்டிக்கவோ வெறுக்கவோ மாட்டார்

பெருந்தன்மையுடையவர், மன்னிப்பவர்

மலர்ந்த முகத்துடன் எதிர்கொள்வார்

சகோதரர்கள், நண்பர்களுக்கு நன்மை நாடுவார்

நேர்மையையும் உபகாரத்தையும் இயல்பாகக் கொண்டிருப்பார்

மென்மையாக நடப்பார்

புறம் பேச மாட்டார்

தர்க்கம், துன்புறுத்தும் வகையில் பரிகாசம், வாக்கு மாறுதல் ஆகியவற்றைத் தவிர்ப்பார்

தன்னைவிட தனது சகோதரரைத் தேர்ந்தெடுக்கும் உயர்ந்த மனிதர்

சகோதரர்களுக்காக மறைவில் பிரார்த்திப்பார்


அல்லாஹ்வுக்காக நேசிப்பார்

தனது சகோதரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்று நேசித்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின் தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும். இஸ்லாம் உண்மையான சகோதரத்துவ அமைப்பாகும். இது அல்லாஹ், அவனது தூதரால் மனித உறவில் ஏற்படுத்தப்பட்ட சங்கிலிப் பிணைப்பாகும். மனித வரலாற்றில் சகோதரத்துவத்தைப் பேணுவதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது.

ஒருவரது இனம், மொழி, நிறம் போன்ற பேதமைகளுக்கு அப்பாற்பட்டு ‘லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற திருக்கலிமாவின் கீழ் இஸ்லாம் மனிதர்களை சகோதரத்துவத்தால் பிணைக்கிறது.
விசுவாசிகள் (யாவரும்) நிச்சயமாகச் சகோதரர்களே! (அல்குர்ஆன் 49:10)

ஈமானிய சகோதரத்துவம் இதயங்களை இணைப்பதில் மிக உறுதியானதாகும். அது ஆன்மாவையும் அறிவையும் இணைக்கிறது.

இந்தச் சகோதரத்துவம் உன்னதமான ஏற்பாடாகும். இதற்கு இஸ்லாம் ‘அல்லாஹ்வுக்காக நேசித்தல்' என்று பெயடுகிறது. இதில்தான் உண்மை முஸ்லிம் ஈமானின் இன்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துள்ளதோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். அவை: 
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது,
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது,
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதுபோல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பதுமாகும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களின் அந்தஸ்து
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மறுமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உன்னத அந்தஸ்து பற்றியும் விவரித்துக் கூறும் அநேக நபிமொழிகள் உள்ளன.

இது விஷயத்தில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் நிழல் தரும் ஏழு நபர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
1. நீதமான அரசன்
2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர்
3. இதயத்தால் மஸ்ஜிதுடன் இணைந்திருக்கும் மனிதர்
4. அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள், அல்லாஹ்வுக்காகவே ஒன்று சேர்ந்திருந்தார்கள் அல்லாஹ்வுக்காகவே பிந்தார்கள்
5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள் அவர் ‘‘நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்'' என்று கூறி (மறுத்து) விட்டார்
6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர் 
7. தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வின் நிழல் மட்டுமே உள்ள மறுமை நாளில் அந்த நிழலுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களுக்கும் இடமுண்டு என்பதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு பெரியகௌரவம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவர்களை சிறப்பித்துக் கூறும் முகமாக மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ் கூறுவான்: ‘‘என்னுடைய மகத்துவத்துக்காக தங்களிடையே நேசித்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில் என்னுடைய நிழலில் அவர்களுக்கு இடமளிக்கிறேன்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
துன்பமும், துயரமும், சிரமங்களும் நிறைந்த கடுமையான நாளில் அல்லாஹ்வுக்காகவே நேசித்தவர்களுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் பேரருள் எவ்வளவு மகத்தானது!

‘அல்லாஹ்வுக்காகவே நேசித்தல்' என்பது அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொண்ட நட்பாகும். உலக ஆசாபாசங்கள், பலன்களை எதிர்பார்ப்பது அல்லது துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வது போன்ற வேறு நோக்கங்கள் இருக்கக் கூடாது. ஆனால் பரிசுத்த ஆன்மாவும், தூய இதயமும் கொண்டு அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னால் உலக இன்பங்களை அற்பமாகக் கருதும் இயல்புடையவர்களுக்குத்தான் இது சாத்தியமாகும். இத்தகையோருக்கு ஈருலகில் அல்லாஹ் அந்தஸ்தையும் அருட்கொடைகளையும் வாரி வழங்குவது தூரமான விஷயமல்ல.

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர் கூற நான் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான்: ‘‘என்னுடைய மகத்துவத்திற்காக ஒருவருக்கொருவர் நேசித்துக் கொண்டவர்களுக்கு ஒளியினாலான மேடைகள் உண்டு. அதில் நபிமார்களும் ஷுஹதாக்களும் அவரைக் கண்டு ஆசை கொள்வார்கள்.'' (ஸுனனுத் திர்மிதி)

தனக்காகவே நேசித்துக் கொள்ளும் தனது அடியார்களை அல்லாஹ் நேசிப்பதிலும், மேற்கூறப்பட்டதைவிட மிக உயரிய அருட்கொடைகளை வழங்குவதிலும் ஆச்சரியம் ஏதுமில்லை. அந்த அருட்கொடைதான் அவனது அன்பாகும். இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் மற்றொரு ஊரில் உள்ள சகோதரரை சந்திக்கச் சென்றபோது அவரது பாதையில் அல்லாஹ் ஒரு வானவரை எதிர்பார்த்திருக்க வைத்தான். அம்மனிதர் அந்த வானவரைக் கடந்த போது அவர், ‘‘எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டார். அவர் ‘‘இந்த ஊரிலுள்ள எனது சகோதரரை சந்திக்கச் செல்கிறேன்'' என்று கூறினார். அம்மலக்கு ‘‘அவர் உமக்கு ஏதேனும் உபகாரம் செய்ய வேண்டுமென்ப தற்காகவா (செல்கிறாய்?)'' என்று கேட்டார். அவர் ‘‘இல்லை, எனினும் நான் அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்'' என்று கூறினார். ‘‘நான் அல்லாஹ்விடமிருந்து உம்மிடம் அனுப்பபட்ட தூதர். நீ அல்லாஹ்வுக்காக உமது சகோதரரை நேசித்தது போல நிச்சயமாக அல்லாஹ் உம்மை நேசிக்கிறான்'' என்று அம்மலக்கு கூறினார். (ஸஹீஹ் முஸ்லீம்)
மனிதனை அல்லாஹ் நேசிக்கும் அளவுக்கு உயர்த்தும் இந்த அன்பு எவ்வளவு மகத்தானது? இந்த மேன்மையான விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் பெரிதும் கவனத்தைச் செலுத்தினார்கள். 

அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இருவரில் சிறந்தவர் யாரெனில் தனது சகோதரரை எவர் மிக அதிகமாக நேசிக்கிறாரோ அவரே என நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘(அல்லாஹ்வுக்காக) நேசிக்கும் இரு சகோதரர்களில் மிகச் சிறந்தவர் யாரெனில் அவர்களில் மற்றவரை மிக அதிகமாக நேசிப்பவரே.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நேர்வழி பெற்ற முஸ்லிம், சமுதாயத்தில் நேசத்தை பரவச்செய்ய வேண்டுமென்பதற்காக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு மனிதர் தனது சகோதரரை (முஸ்லிமை) நேசித்தால் அவரை நேசிப்பது பற்றி அவருக்கு அறிவித்து விடட்டும்.'' (ஸுனன் அபூ தாவூது)

சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காப்பதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் உறுதியான நேசத்தை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும், நேசம் கொள்வதின்பால் முஸ்லிம்களை அழைத்தார்கள். அந்த நேசத்தை வெளிப்படையாக அறிவித்து விடுமாறும் ஏவினார்கள். அப்போது இதயக் கதவுகள் திறந்து விடும். அன்பும் நேசமும் மனிதர்களிடையே ஊடுருவிச் செல்லும்.

அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடத்தில் அமர்ந்திருந்தார். அவரை ஒருவர் கடந்து சென்றபோது நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதரை நான் நேசிக்கிறேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். ‘‘அதை நீ அவருக்கு அறிவித்து வீட்டீரா?'' அவர் ‘‘இல்லை'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘(உமது நேசத்தை) அவரிடம் அறிவித்து விடும்'' என்றார்கள். அவர் தனது நண்பரிடம் சென்று, ‘‘நான் அல்லாஹ்வுக்காக உம்மை நேசிக்கிறேன்'' என்றார். அம்மனிதர் ‘‘ அல்லாஹ்வுக்காக என்னை நீர் நேசித்தீர், அல்லாஹ்வும் உம்மை நேசிக்கட்டும்'' என்று கூறினார். (ஸுனன் அபூ தாவூது)

நபி (ஸல்) அவர்கள் இதைச் செயல்படுத்திக் காட்டி, சமூகத்திடையே அன்பையும் சகோதரத்துவத்தையும் முஸ்லிம்கள் எவ்வாறு நிலைநாட்ட வேண்டுமென்பதைக் கற்றுத் தந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களின் கரம் பற்றியவர்களாக, ‘‘முஆதே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உம்மை நேசிக்கிறேன் பின்பு நான் உமக்கு உபதேசிக்கிறேன். முஆதே! ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் ‘யாஅல்லாஹ்! உன்னை திக்ரு செய்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உனக்கு அழகிய முறையில் வழிபடுவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக!' என்ற துஆ ஓதுவதை விட்டு விடாதீர்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

இந்தத் தூய நேசத்தை நெஞ்சத்தில் சுமந்த முஆத் (ரழி) அவர்கள் முஸ்லிம்களிடையே அதைப் பரப்பினார். அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தியுள்ளது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் அறிந்ததை முஸ்லிம்களிடையே எடுத்துரைத்தார்.

அபூ இத்ரீஸ் கவ்லானி (ரஹ்) அவர்கள் கூறியதாக இமாம் மாலிக் அவர்கள் தனது முவத்தாவில் அறிவிக்கிறார்கள்: ‘‘நான் திமஷ்க் பள்ளியினுள் நுழைந்தேன். அங்கு ஒரு வாலிபர் முத்து போன்ற பற்களுடன் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி மக்கள் அமர்ந்திருந்தனர். தங்களின் கருத்துவேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அவரிடத்தில் வருகிறார்கள் அவரது ஆலோசனையை மனமுவந்து ஒப்புக் கொள்கிறார்கள். அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் முஆத் இப்னு ஜபல் (ரழி) என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த நாள் வெகு சீக்கிரமாகவே எழுந்தேன். ஆனால் முஆத் (ரழி) என்னைவிட சீக்கிரமாக எழுந்து தொழுது கொண்டிருந்தார். தொழுகையை முடிக்கும் வரை நான் காத்திருந்து விட்டு பிறகு அவருக்கு முன்னால் சென்று அமர்ந்து ஸலாம் சொல்லி, ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை நான் நேசிக்கிறேன்'' என்றேன். அவர் ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாகவா?'' என்றார். நான் ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக!'' என்றேன். அவர் ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாகவா?'' என்றார். நான் ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக!'' என்று கூறினேன். எனது ஆடையின் நுனியைப் பிடித்து அவன் பக்கம் என்னை இழுத்துக் கூறினார். உமக்கோர் நற்செய்தி! நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்: ‘‘எனது திருப்திக்காக நேசிப்பவர் மீதும் எனது திருப்திக்காக சபையில் அமர்பவர் மீதும் எனது திருப்திக்காக சந்தித்துக் கொள்பவர் மீதும் எனது திருப்திக்காக செலவு செய்பவர் மீதும் எனது நேசம் கட்டாயமாகிவிட்டது'' என்று அல்லாஹு தஆலா கூறுகிறான்.


அல்லாஹ்வுக்காக நேசிப்பதால் முஸ்லிமின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்

அல்லாஹ்வுக்காக நேசிப்பது முஸ்லிமை சுவனத்தில் நுழைய வைக்கும் ஈமானின் நிபந்தனைகளில் மிக முக்கியமானதென நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: ‘‘யாருடைய கைவசம் என்னுடைய ஆன்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனத்தில் நுழைய மாட்டீர்கள். உங்களிடையே நேசித்துக் கொள்ளாதவரை நீங்கள் ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத் தரட்டுமா? அதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்வீர்கள். (அந்த விஷயம்) உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் பின்வரும் விஷயத்தை நன்கு உணர்ந்திருந்தார்கள். அதாவது உள்ளத்தின் குரோதங்களை அழித்து, போட்டி, பொறாமை என்ற அழுக்குகளை தூய்மைப்படுத்தும் ஒரே சாதனம் உன்னதமான சகோதரத்துவம்தான். இதுதான் முஸ்லிம்களின் வாழ்க்கையை சூழ்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சமுதாய வாழ்க்கை பரஸ்பர அன்பு, ஒற்றுமை என்ற உறுதியான அடித்தளத்தின் மீது அமையும். இன்னும் இதன் மூலமே சமுதாய கட்டிடம் சூழ்ச்சி, வஞ்சம், பொறாமை, அநீதம் போன்ற விசல்களிலிருந்து பாதுகாப்பு பெறும். இதை முன்னிட்டு சகோதரர்களுக்கிடையே ஸலாமைப் பரப்புமாறு நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள். அதன்மூலம் இதயங்கள் விரிவடைந்து நன்மைகள் பொங்கி வழியும்.

நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை தனது தோழர்களிடம் வலியுறுத்தி அவர்களது இதயங்களில் சகோதரத்துவத்தின் நேச வித்துகளை விதைத்தார்கள். அதைப் பராமரித்து மென்மேலும் வளர்க்க வேண்டுமெனவும் உபதேசித்தார்கள். அப்போதுதான் இஸ்லாம் முஸ்லிம்களிடம் விரும்பும் பிரகாசமிக்க சகோதரத்துவக் கனிகளை சுவைக்க முடியும்.

நபி (ஸல்) அவர்கள் இந்த நேசத்தை, இஸ்லாமியப் பேரொளியை இவ்வுலகம் முழுவதும் பரவச் செய்த தனது தோழர்களிடம் உருவாக்கினார்கள். அவர்கள் இஸ்லாமியக் கோட்டையின் அடித்தளமாக அமைந்தார்கள்.

இஸ்லாம் முஸ்லிம்களின் இதயங்களில் இந்தத் தூய்மையான நேசத்தை விதைத்திருக்கவில்லையெனில் ஆரம்பகால முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிரான போராட்டங்களையும் சித்திரவதைகளையும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. முஸ்லிம் நாடுகளைக் கட்டமைப்பதில் அவர்கள் மகத்தான தியாகங்களைச் செய்திருக்க முடியாது.

இந்த உன்னதமான நேசத்தின் மூலமே நபி (ஸல்) அவர்கள் மனிதகுல வரலாறு கண்டிராத இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கினார்கள்.

நபி (ஸல்) கூறினார்கள்: ‘‘ஒரு முஃமின், மற்றொரு முஃமினுக்கு கட்டிடத்தைப் போன்றவராவார். அதில் ஒரு பாகம் மற்றொரு பாகத்திற்கு வலுச் சேர்க்கிறது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ‘‘முஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும், கருணை காட்டுவதற்கும், இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது ஓர் உடலைப் போன்றதாகும். அதில் ஏதேனும் ஓர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலையும் தூக்கமின்மையும் முறையிடுகின்றன.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘முஸ்லிம்கள் ஒரே உடலைப் போன்றவர்கள். கண் ‘வலி'யை முறையிட்டால் அனைத்து உறுப்புகளும் முறையிடுகின்றன. தலை ‘வலி'யை முறையிட்டால் அனைத்து உறுப்புகளும் முறையிடுகின்றன.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் இந்த உன்னத வழிகாட்டலை அறிந்த முஸ்லிம் தனது இதயத்தை மென்மையாக்கி சகோதரர்களையும் நண்பர்களையும் நேசிப்பதைத் தவிர வேறு வழியைக் காணமாட்டார். இதனால் அவர் இவ்வுலகில் நன்மைகளை விதைக்கிறார். அதன் பலனாக மறுமையில் அல்லாஹ்வின் நேசத்தையும், திருப் பொருத்தத்தையும், வெற்றியையும் அறுவடை செய்து கொள்கிறார்.

துண்டிக்கவோ, வெறுக்கவோ மாட்டார்
மார்க்கச் சட்டங்களை அறிந்த முஸ்லிம், இஸ்லாம் மனித குலத்தை, அன்பின்பால் அழைக்கிறது என்பதையும், கோபத்தையும், வெறுப்பையும், பிரிவினையையும் தடை செய்துள்ளது என்பதையும் அறிந்திருப்பார். இடையில் ஏற்படும் சில பிரச்னைகள் இரு உண்மையான நண்பர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி விடாது. ஏனெனில், அல்லாஹ்வுக்காக நேசித்தல் என்ற கயிறு மிக உறுதியானது அது சிறு பிரச்னைகளிலெல்லாம் அறுந்துவிடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘இரு நண்பர்களில் ஒருவன் தவறு, அவ்விருவருக்குமிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்க்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

இஸ்லாம் மனிதனின் இயற்கைப் பண்புகளை புறக்கணிக்கவில்லை. கோபத்தின் காயங்களையும் சில வினாடிகளில் நட்பில் ஏற்படும் தடுமாற்றங்களையும் மறந்துவிடவில்லை. அச்சூழலில் கோப நெருப்பு அணைந்து போவதற்கான கால அவகாசத்தை நிர்ணயித்துள்ளது. முரண்பட்டு நிற்கும் இரண்டு முஸ்லிம்களிடையே அந்த அவகாசம் கடந்து விடக்கூடாது. அவ்விருவரோ அல்லது ஒருவரோ ஒன்று சேர்வதிலிருந்து விலகி நிற்கக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். ஆனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உறுதியான சான்றுகளைக் காணும் உண்மை முஸ்லிம் எந்த நிலையிலும் தனது சகோதரருடன் சண்டையிடுவதோ, தர்க்கமோ செய்யாமல் இணக்கத்துடன் நடந்து கொள்வார். சிறந்தவர் முந்திக்கொண்டு ஸலாம் சொல்பவர்தான். மற்றவர் அந்த ஸலாமுக்கு பதில் கூறிவிட்டால் இணைந்ததற்கான கூலியை இருவரும் பெற்றுக்கொள்வார்கள். அவர் பதிலளிக்கவில்லையெனில் ஸலாமைக் கூறியவர் சகோதரனை வெறுத்த பாவத்திலிருந்து நீங்கி விடுவார். ஸலாம் கூற மறுத்தவர் மட்டுமே சகோதரத்துவத்தைத் துண்டித்த பாவத்திற்கு பொறுப்பாளியாவார்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: ‘‘முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களாகி விட்டால் அவரைச் சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலிருந்து நீங்கிவிட்டார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

அவர்களுக்கிடையேயான வெறுப்பும் முரண்பாடும் தொடரும் காலமெல்லாம் பாவமும் குற்றமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) கூறினார்கள்: ‘‘ஒருவர் தனது சகோதரரை ஒரு வருடம் வெறுத்திருந்தால் அந்தச் சகோதரன் இரத்தத்தை சிந்தியவர் போலாவார். (அதாவது இச்செயல் கொலைக்கு ஒப்பானதாகும்).'' (அல் அதபுல் முஃப்ரத்)

மனித இதயங்களைப் பண்படுத்துவதற்கான இஸ்லாமிய வழிகாட்டல், நேசம் மற்றும் அன்பின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் உண்மை முஸ்லிமின் வாழ்வில் கோபமும் பொறாமையும் காணப்படாது. அவரது வாழ்வில் இத்தகைய கீழ்த்தரமான குணங்கள் எப்படி இடம் பெற முடியும்!''
மனித குலம் அறிந்திருந்த அனைத்து நற்பண்புகளை விடவும் மிக உன்னதமான பண்புகளைக் கற்றுக் கொடுத்த நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி அவரது காதில் எதிரொலிக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். கோபப்படாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களை ஏவியவாறு சகோதரர்களாக இருங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரியபொய்யாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ‘‘ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாங்கும் நோக்கமில்லாமல் பிறரைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே விலையை அதிகப்படுத்தாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவரது வியாபாரத்தில் மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்யாதீர்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களாக, சகோதரர்களாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநீதி இழைக்கமாட்டார். மோசடி செய்யமாட்டார். அவரை அற்பமாகக் கருதமாட்டார். இறையச்சம் என்பது இந்த இடத்தில் என்று - தனது நெஞ்சின் பக்கம் மூன்று முறை சைக்கினை செய்தார்கள் - ஒருவர் தமது சகோதரரை இழிவாகக் கருதுவது அவரது கெடுதிக்குப் போதுமானதாயிருக்கும். ஒரு முஸ்லிமுக்கு பிற முஸ்லிமின் இரத்தம், அவரது சொத்து, அவரது கௌரவம் ஹராமாகும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் உயிர், பொருள், கண்ணியம் ஆகியவற்றில் பங்கம் விளைவிப்பது கடுமையான குற்றமாகும் என்பது இதன் பொருளாகும்.
நேர்வழி பெற்ற முஸ்லிம் இந்த நபிமொழியை ஆழ்ந்து சிந்தித்தால் பரஸ்பர நேசம், அன்பு, சகோதரத்துவத்தைப் பேணி நடப்பார். இதயத்தில் நோயுள்ள, கல்நெஞ்சம் உடையவரே இத்தகைய பண்புகளைப் புறக்கணிப்பார்.

இவ்விடத்தில் அந்தக் கல்நெஞ்சக்காரர்களுக்கும், இஸ்லாமின் நற்பண்புகளைப் புறக்கணிப்பவர்களுக்கும், பிறர் மீதான கண்ணியத்தை மறுப்பவர்களுக்கும், வெறுப்பின் மீதே நிலை கொண்டிருப்பவர்களுக்கும் மிகக் கடினமான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அவர்கள் தங்களது மறுமைப் பேற்றைத் தகர்த்தெறிந்து விடுகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் தடுக்கப்பட்டு விடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணை வைக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மன்னிக்கப்படமாட்டான். அப்போது சொல்லப்படும் ‘‘இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நோன்பு நோற்பதை விட, தர்மம் செய்வதை விட சிறந்தவொரு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவடையே இணக்கத்தை ஏற்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக் கூடியதாகும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

இது நேசம் மற்றும் சகோதரத்துவத்தின் மீது நிர்மாணிக்கப்பட்ட இம்மார்க்கத்தின் உயிரோட்டம் எத்தகையது என்பதைப் பற்றி பிரபல நபித்தோழன் கண்ணோட்டமாகும். பகைமை கொள்வது நற்செயல்களை அழித்து நற்கூலியை வீணாக்கிவிடும். இதனால்தான் பிந்திருக்கும் இரு சகோதரர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துவது நோன்பு, தர்மத்தை விட சிறந்தது.

பெருந்தன்மையுடைவர், மன்னிப்பவர்
முஸ்லிம் தனது சகோதரன் மீது கோபப்பட்டால் அதைக் கட்டுப்படுத்தி அவரைத் தாமதமின்றி மன்னித்து விடுவார். தனது சகோதரரை மன்னிப்பதை தனக்குக் குறையாகவோ, இழிவாகவோ கருதமாட்டார். மாறாக, அதை அல்லாஹ்வின்பால் தன்னை நெருக்கி வைக்கும் ஒரு நன்மையாகவே கருதுவார். அல்லாஹ் தனது நல்லடியார்களுக்கு மட்டும் சொந்தமாக்கிய அவனது நேசத்தை அடைந்து கொள்ள அம்மன்னிப்பைக் காரணமாக்கிக் கொள்வார். 

இது பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகிறான்:
...அவர்கள் கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)

சில நேரங்களில் மனிதன் தனது கோபத்தை அடக்கும்போது அது உள்ளுக்குள் குரோதமாக உருவெடுக்கலாம். ஆகவே கோபத்தை வெளிப்படுத்தி விடுவது குரோதத்தை விட சிறந்ததாகும்.

ஆனால் உண்மை முஸ்லிம் பகைமையோ வஞ்சமோ கொள்ளாமல், மறந்து மன்னித்து, நன்மையாளராகி விடுவார். கோபத்தை அடக்குவது உண்மையில் மிகச் சிரமமான காரியமாகும். இதயத்தில் நெருப்பை மூட்டி விடும். அதைப் புறக்கணித்து மன்னித்துவிட்டால், அந்தச் சுமை நீங்கி மனதில் குளிர்ச்சியும் அமைதியும் ஏற்படுகிறது. தனது சகோதரனை மறந்து மன்னித்து விடுவது முஸ்லிமின் இயல்பான உணர்வாகும்.
உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுக்காகவே தனது சகோதரரை மறந்து மன்னித்து விடுவார்.

அல்லாஹ்வுக்காகவே தனது சகோதரனிடம் பணிந்துமிருப்பார். அதன் மூலம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கண்ணியத்தையும் கௌரவத்தையும் தேடிக் கொள்வார்.

நபி (ஸல்) கூறினார்கள்: ‘‘ஒருவர் அல்லாஹ்விற்காகப் பணிந்து நடந்தால் அல்லாஹ் அவரை உயர்த்தியே தீருவான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

உண்மை முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமின் தவறுகளை மறந்து, மன்னித்து கௌரவப்படுத்துவதால் அல்லாஹ் இத்தகைய உயர்வை அளிக்கிறான். அதன் மூலம் அவர் மனிதர்களால் நேசிக்கப்படுபவராகவும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற நல்லடியாராகவும் ஆகிறார்.

தனது மார்க்கத்தின் இலட்சியங்களை அறிந்த முஸ்லிமின் இதயத்தில் வஞ்சத்திற்கு சிறிதும் இடமில்லை. அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெறுவதற்கு மனத்தூய்மையும் மன்னிக்கும் மனப்பான்மையும் அவசியம் என்பதை அவர் அறிந்திருப்பார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மூன்று பாவங்களைத் தவிர மற்ற பாவங்கள் செய்தவர்களில் அல்லாஹ், தான் விரும்பியவர்களை மன்னித்து விடுகிறான். அம்மூன்று பாவங்களாவன: அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் மரணமடைவது, சூனியத்தைத் தேடிச் செல்வது, தனது சகோதரர் மீது வஞ்சம் கொள்வது.'' (அல் அதபுல் முஃப்ரத்)

மலர்ந்த முகத்துடன் எதிர்கொள்வார்
முஸ்லிம் நற்குணமும் தூய இதயமும் புன்னகையால் மலர்ந்த முகமும் உடையவராக இருப்பார். எனவே தனது சகோதரர்களைச் சந்திக்கும்போது புன்னகையால் பிரகாசிக்கும் முகத்துடன் அணுகுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நன்மையான காரியங்களில் எதையும் அற்பமாகக் கருதிவிடாதீர். அது உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

மலர்ந்த முகம் என்பது இஸ்லாம் வலியுறுத்தும் அழகிய பண்புகளில் ஒன்றாகும். அதைச் செய்பவருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது பரிசுத்தமான இதயத்தின் பிரதிபலிப்பாகும். அந்தத் தூய்மையைத்தான் இஸ்லாம் உள்ளேயும் வெளியேயும் முஸ்லிம்களுக்கு மிகவும் வலியுறுத்தி வருகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உம்முடைய சகோதரன் முகத்தை நீர் புன்னகையோடு பார்ப்பதும் தர்மமாகும்.'' (ஸுனனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் எப்போதும் மலர்ச்சியாகவே காணப்பட்டார்கள். எவரையேனும் கண்டால் உடனே புன்னகைப்பார்கள். இதுபற்றி பிரபல நபித்தோழர் ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் இஸ்லாத்தைத் தழுவிய பின் தன்னைச் சந்திப்பதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை புன்னகை செய்யாமல் என்னைப் பார்த்ததில்லை.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அலீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து உரையாடினால் அவர்களில் மிக அதிகமான முகமலர்ச்சி உடையவரை அல்லாஹ் மன்னிக்கிறான்.''

இதனால்தான் நபித்தோழர்கள், எவரேனும் பிரயாணத்திலிருந்து திரும்பினால் மகிழ்ச்சியுடன் முஆனகா (அணைத்துக் கொள்வது) செய்வார்கள். சந்தித்துக் கொண்டால் முஸாஃபஹா (கைலாகு) செய்து கொள்வார்கள். இதன் மூலம் சகோதரர்களிடையே அன்பும் நேசமும் அதிகரிக்கிறது.

இப்னு ஸஃது (ரஹ்) அவர்களின் தபகாத் என்ற நூலில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபரிலிருந்து வந்தபோது நபி (ஸல்) அவர்களை ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) சந்தித்தார்கள். அவரை நபி (ஸல்) அவர்கள் இறுகப் பற்றிக் கொண்டு அவரது இரு கண்களிடையே முத்தமிட்டார்கள். மேலும் ‘‘கைபர் வெற்றியடைந்தது, ஜஅஃபர் வருகை தந்தது என்ற இந்த இரண்டில் எது பற்றி நான் மிக அதிகம் மகிழ்ச்சி அடைவது என்று எனக்குத் தெரியவில்லை'' என்றார்கள்.

மற்றொரு அறிவிப்பில்: நபி (ஸல்) அவர்கள் ஜஅஃபர் (ரழி) அவர்களைத் தங்களுடன் அணைத்து, ‘முஆனகா' செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்லாம், சகோதரர்கள் சந்தித்துக் கொள்ளும்போது ஸலாம் கூறுவதையும், முஸாஃபஹா, முஆனகா செய்வதையும் வலியுறுத்துகிறது. முஃமின்களின் சகோதரத்துவப் பிணைப்பு உறுதியாகவும், இதயங்களிடையே நேசம் நிரந்தரமாகவும் இருக்க இது துணை செய்யும். அதன் மூலம் தனது வாழ்வில் இஸ்லாமின் அழைப்புப் பணியை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்வதற்கான வலிமையும் முஸ்லிம் சமூகத்திற்குக் கிடைக்கும்.
சகோதரர்கள், நண்பர்களுக்கு நன்மை நாடுவார்
உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்மை நாடுபவராக இருப்பார்.

நபி (ஸல்) அவர்கள் ‘‘மார்க்கம் என்பது நன்மையை நாடுவது'' என்று கூறியபோது, நாங்கள் கேட்டோம்: ‘‘யாருக்கு?'' நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

பிறர் நலம் பேணுதல் என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் தலையாயதாகும். ஆரம்ப கால முஸ்லிம்கள் இறைத்தூதருடன் செய்து கொண்ட வாக்குப் பிரமாணங்களில் ஒன்றாக இது இருந்தது.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது, அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவது ஆகியவற்றிற்கு உறுதிப் பிரமாணம் செய்துகொண்டேன்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

முந்திய நபிமொழியில் மார்க்கம் ‘தீன்' என்றால் பிறர் நலம் பேணுதல் என்று பொருள் கூறியிருப்பதன் மூலம் இது மார்க்கத்தின் அடிப்படை என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் அது இல்லாமல் எவரது ஈமானும் இஸ்லாமும் சீரடையாது. இதுவே பின்வரும் நபிமொழியின் கருத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

பிறர் நலம் நாடுபவராக இருந்தால்தான், தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்புவார். ஆனால் இது மிகவும் சிரமமானது என்பதில் சந்தேகமில்லை. தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டுமென்பது ஈமானின் மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும். 

மார்க்கம் என்பதே ‘பிறர்நலன் பேணல்' என்ற அடிப்படை, முஸ்லிமின் உணர்வுடன் ஒன்றிவிட்டால் இதைச் செயல்படுத்துவது சிரமமல்ல.
இஸ்லாமிய மறுமலர்ச்சி இதயத்தினுள் கலந்துவிட்ட முஸ்லிமின் இயல்பு, பிறர் நலம் பேணுவதாக இருப்பதில் ஆச்சரியமில்லை. தான் விரும்பியதையே தனது சகோதரர்களுக்கும் விரும்பிய நமது முன்னோர்களின் சத்திரங்கள் வரலாற்றுப் பக்கங்களில் நிரம்பி வழிகின்றன.

இந்த இடத்தில் ‘ஷாம்' (சிரியா) நகரின் வியாபாகளைப் பற்றி முந்திய தலைமுறைப் பெரியவர் கூறிய விஷயம் என் நினைவுக்கு வருகிறது. அந்நகரில் அத்தர் கடைகள், துணிக் கடைகள், தையற் கடைகளென ஒவ்வொன்றுக்குமான கடைத் தெருக்கள் இருந்து வந்தன. அவற்றில் ஒரு கடையில் ஒருவர் ஏதேனும் பொருட்களை வாங்கிச் சென்று விட்ட பின் அதே கடைக்கு வேறு எவரேனும் பொருள் வாங்க வந்தால் அக்கடைக்காரர் மென்மையாக ‘‘நான் வியாபாரம் செய்து விட்டேன். உங்களுக்குத் தேவையானதை பக்கத்திலிருக்கும் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்! அவருக்கு இன்னும் வியாபாரம் நடக்கவில்லை'' என்று உறுதியாகக் கூறிவிடுவார் அவரிடம் வியாபாரம் செய்யமாட்டார்.
இந்தச் சகோதரத்துவ நிழலில் அனுபவிக்கும் வாழ்வின் மகிழ்ச்சியும் சந்தோஷங்களும் எவ்வளவு அற்புதமானது! இஸ்லாமின் ஆன்மா அவர்களை ஊடுருவிச் சென்றவுடன் அவர்களது வாழ்வுதான் எவ்வளவு இன்பமயமானது! ‘மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுதல்' என்ற தத்துவத்தின் கீழ்தான் மனிதன் இத்தகைய இன்பங்களை அனுபவிக்க முடியும்.
இது குறித்து அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘முஃமின் தனது சகோதரருக்கு கண்ணாடியாவார். அதில் ஏதேனும் ஒரு குறையைக் கண்டால் அதைச் சீர் செய்து விடுவார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் மேற்கண்ட கூற்று பின்வரும் நபிமொழியின் பிரதிபலிப்பாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘முஃமின் தனது சகோதரருக்கு கண்ணாடியாவார். முஃமின் மற்றொரு முஃமினுக்கு சகோதரர் ஆவார். அவரைச் சுற்றி நின்று பாதுகாத்து அவரது அழிவைத் தடுப்பார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

இது முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமிடம் வெளிப்படுத்த வேண்டிய இயற்கைப் பண்பாகும். இதற்கு முரணாக ஓர் உண்மை முஸ்லிமால் செயல்பட இயலாது. இத்தகைய உயர்ந்த அந்தஸ்தில் வாழும் முஸ்லிம் சுயநலம், அகம்பாவம் போன்ற கீழ்த்தரமான காரியங்களில் இறங்க மாட்டார். ஆம்! பாத்திரத்தில் இருப்பதுதான் அகப்பையில் வரும்! மலர்கள் நறுமணத்தைத்தான் பரப்பும்! செழுமையான பூமி நல்ல மரங்களைத்தான் வளர்க்கும்!
நேர்மையையும் உபகாரத்தையும் இயல்பாகக் கொண்டிருப்பார்.

உண்மை முஸ்லிம், நண்பர்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்று வதையும், உபகாரம் செய்வதையும் இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். ‘முஸ்லிம் தனது பெற்றோருடன்' என்ற தலைப்பில் முன்பு குறிப்பிட்டது போன்று தனது பெற்றோர்களின் நண்பர்களையும் தனது நட்பு வட்டத்துக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும். சகோதரத்துவம் மற்றும் நட்பின் கயிறுகளைப் பலப்படுத்தும் விதமாக உபகாரத்தை தனது இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தங்களது வாழ்வில் வெளிப்படுத்திய நற்பண்புகளே அவர்களை உலக மனிதர்களில் சிறந்தவர்களாக்கியது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘உபகாரத்திலெல்லாம் மிகப் பெரியஉபகாரம் ஒருவர் தனது தந்தையின் நேசத்திற்குரியவர்களோடு இணக்கமாக இருப்பதுதான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அப்துல்லாஹ் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு உமர் (ரழி) அவர்களை ஒரு கிராமவாசி மக்கா நகரின் வழியில் சந்தித்தார். அவருக்கு இப்னு உமர் (ரழி) ஸலாம் கூறி, தான் ஏறி வந்த கழுதையின் மீது அவரை அமரச் செய்து தனது தலையிலிருந்த தலைப்பாகையை அவருக்குக் கொடுத்தார்கள். இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அவர்களிடம் ‘‘அல்லாஹ் உங்களது காரியங்களைச் சீர்படுத்துவானாக!. அவர்கள் கிராமவாசிகள், குறைவான கண்ணியத்தைக் கொண்டே திருப்தி அடைவார்கள்'' என்று கூறினோம். அப்போது இப்னு உமர் (ரழி) அவர்கள், ‘‘இவருடைய தந்தை எனது தந்தை உமர் (ரழி) அவர்களுக்கு மிகப் பிரியமானவராக இருந்தார். ‘‘உபகாரத்திலெல்லாம் மிகப் பெரியஉபகாரம் ஒருவர் தனது தந்தையின் நேசத்திற்குரியவர்களோடு இணைந்திருப்பது'' என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் முஸ்லிம்களின் இதயங்களில் உபகாரம் செய்ய வேண்டுமென ஆர்வத்தை வளர்த்தார்கள். பனூ ஸலமாவைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு நான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய உபகாரங்கள் ஏதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்! அவ்விருவருக்காகவும் துஆச் செய்வது, அவர்களுக்குப் பின் அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களால் மட்டுமே உமக்கு ஏற்பட்ட இரத்த பந்துக்களிடம் இணைந்திருப்பது, அவ்விருவரின் நண்பர்களுக்கு கண்ணியமளிப்பது'' என்று கூறினார்கள். (ஸுனன் அபூ தாவூத்)

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான நட்பை மதிப்பது பற்றி மிக அதிகமாக வலியுறுத்தினார்கள். அது சில வேளைகளில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ரோஷத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அன்னை கதீஜாவின் (ரழி) தோழியர்களுக்கு மிக அதிகமாக உபகாரம் செய்து வந்தார்கள்.

இதோ அன்னை ஆயிஷா (ரழி) அவர்களே கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் கதீஜா (ரழி) அவர்கள் மீது ரோஷப்பட்டதுபோல வேறெந்த மனைவியர் மீதும் ரோஷப்படவில்லை. நான் அவரைப் பார்த்ததில்லை. எனினும் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரழி) அவர்களை அடிக்கடி நினைவு கூர்வார்கள். சில வேளைகளில் நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து அதை பல பங்குகளாகப் பிரித்து கதீஜா (ரழி) அவர்களின் தோழியருக்கு அனுப்பி வைப்பார்கள். நான் சில வேளைகளில் ‘‘உலகத்தில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லையா?'' என்று கூறுவேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘கதீஜா இப்படி இப்படியெல்லாம் இருந்தார்கள் அவர் மூலமாக எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில்: ‘‘நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்தால் கதீஜா (ரழி) அவர்களுடைய தோழியர்களுக்குத் தேவையான அளவு (இறைச்சியை) அனுப்பிவைப்பார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதோ இந்த இஸ்லாமிய நேர்மையை விட உயர்ந்த வேறு நேர்மை இருக்க முடியுமா? பெற்றோர்கள் அல்லது மனைவி இறந்துவிட்ட பின்னரும் அவர்களின் தூரமான தோழர், தோழியர்களுக்கும் உபகாரம் செய்யப் பணிக்கப்பட்டுள்ளோம். அப்படியிருக்க நாம் நமது வாழ்வில் நமது நெருங்கிய தோழர்களுடன் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இஸ்லாம் கற்றுக் கொடுத்த நேர்மை, உபகாரம், பிறர் நலம் பேணுதல், நேசம் கொள்வது என்பது போன்ற பண்புகளின் நோக்கம் என்னவெனில் ஒருவர் தனது சகோதரருக்கு எல்லா நிலைகளிலும் உதவி செய்தாக வேண்டும். அதாவது தனது சகோதரர் சத்தியப் பாதையில் இருந்தால் அவருக்கு உதவி, ஒத்தாசை செய்து அவரைப் பலப்படுத்த வேண்டும். அவர் அசத்தியத்தில் இருந்தால் அவரைத் தடுத்து அவருக்கு நல்வழி காட்டி, வழிகேட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும். 

இதையே பின்வரும் நபிமொழி நமக்கு போதிக்கிறது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு மனிதர் தனது சகோதரருக்கு உதவி செய்யட்டும்! அவர் அநீதியிழைப்பவராக, அல்லது அநீதியிழைக் கப்படுபவராக இருந்தாலும் சரியே. அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், அவரைத் தடுக்கட்டும். அது அவருக்கு உதவியாகும். அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால் அவருக்கு உதவி செய்யட்டும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

உண்மை முஸ்லிம் தனது சகோதரன் அநீதம் செய்பவனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனைப் பிரியமாட்டார். ஏனெனில் தான் விரும்புவதையே தமது சகோதரனுக்கும் விரும்பவேண்டுமென்கிறது இஸ்லாம். எந்தவொரு முஸ்லிமும் தான் பிறருக்கு அநீதி இழைப்பதையோ பிறர் தனக்கு அநீதி இழைப்பதையோ விரும்பமாட்டார். அவ்வாறே தனது சகோதரருக்கும் அதை விரும்பமாட்டார். அதனால் சகோதரன் அநீதிக்குள்ளாக்கப்பட்டால் அவருடைய தோளோடு ஒட்டி நின்று அநியாயத்தைத் தடுத்து உதவி செய்வார். அநீதி செய்பவராக இருந்தாலும் தோளோடு ஒட்டி நின்று அவரை அநியாயம் செய்வதிலிருந்து தடுப்பார். இதுதான் உண்மையான உபகாரம். இதுதான் தூய்மையான பிறர் நலம் பேணுதலாகும். இதுதான் ஒரு முஸ்லிம் எங்கும், எப்போதும் மேற்கொள்ள வேண்டிய அழகிய பண்பாகும்.


மென்மையாக நடப்பார்

முன்மாதிரியாகத் திகழும் உண்மை முஸ்லிம், தனது சகோதரர்களுடன் மென்மையாகவும், அவர்களை நேசிப்பவராகவும், அவர்களால் நேசிக்கப்படுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் உயர் பண்புகளை வலியுறுத்தும் இஸ்லாமின் கண்ணோட்டத்தை ஆய்வு செய்வார்.

அல்லாஹ் தனது திருமறையில் முஃமின்களை வர்ணிக்கும்போது:
....அவர்கள் விசுவாசம் கொண்டவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள் இறைநிராகரிப்பாளர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 5:54)

இத்திருவசனத்தில் முஃமினான சகோதரர்களுடன் நல்லிணக்கம் பேணி, மென்மையுடன் பழக வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
அடுத்து இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மென்மை, அது இருக்கும் அனைத்தையும் அலங்கரிக்கும். அது அகற்றப்பட்டதை விகாரமாக்கி விடும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நற்பண்புகளின் இலக்கணமாகத் திகழ்ந்த நபி (ஸல்) அவர்களின் நடைமுறை முஸ்லிமின் கண்களில் பிரகாசிக்கும். நபி (ஸல்) அவர்களின் அனைத்து பண்புகளும் மென்மையாக அமைந்திருந்தது. அவர்களது நாவில் ஒருபோதும் ஆபாச வார்த்தை வெளியானதில்லை. எவரையும் திட்டியதோ, சபித்ததோ கிடையாது.

நபி (ஸல்) அவர்களுடனே இருந்து அவர்களுக்கு ஊழியம் செய்து வந்த அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ இருக்க வில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட ‘‘அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்'' என்றே கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நெற்றி மண்ணில் படட்டும் என்பதற்கு பொருள் அதிகமாக ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதாகும்.


புறம் பேச மாட்டார்

உண்மை முஸ்லிம் தனது சகோதரர்கள், நண்பர்களின் கௌரவத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வார். அவர்களைப் பற்றி புறம் பேச மாட்டார். ஏனெனில் புறம் பேசுவது ஹராம் என்பது அவருக்குத் தெரியும். அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகிறான்:
உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களின் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே). அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுவோரை அங்கீகரிப்போனாகவும் கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 49:12)

இறையச்சமுள்ள முஸ்லிம் இஸ்லாமிய நற்பண்புகளைப் பின்பற்றுபவர். புறம் பேசுபவருக்கு திருமறை காட்டும் உதாரணத்தைக் கண்டவுடன் அவரது மேனி சிலிர்த்துவிடும். ஆம்! இறந்துவிட்ட சகோதரனின் இறைச்சியை உண்ணும் தைரியம் அவருக்கு எப்படி வரும்? அதனால் அல்லாஹ், புறம் பேசுவது பற்றிய வசனத்தின் கீழ் குறிப்பிடுவது போன்று அல்லாஹ்வின் அச்சத்தால் தௌபாவின் பக்கம் விரைந்தோடுவார். தவறுகள் ஏற்பட்டிருந்தால் தூய்மையான தௌபாவின் மூலம் பரிகாரம் தேடிக்கொண்டு தனது நாவையும் கட்டுப்படுத்திக் கொள்வார். தனது சகோதரர்களைப் பற்றி நல்லதைத் தவிர வேறெதையும் பேசத் துணியமாட்டார்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘புறம் பேசுதல் என்றால் என்னவென்பதை அறிவீர்களா?'' என்று வினவினார்கள். தோழர்கள் கூறினர்: ‘‘அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிந்தவர்கள்.'' நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது சகோதரர் வெறுக்கும்படியான ஒன்றை நீ பேசுவது'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் சொல்வது என் சகோதரரிடம் இருந்தால் (அதுபற்றி) என்ன கருதுகிறீர்கள்?'' என்று ஒருவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் சொல்வது உம்முடைய சகோதரரிடமிருந்தால் நீர் புறம் பேசிவிட்டீர். அது அவரிடம் இல்லை யென்றால் அவரைப் பற்றி அவதூறு கூறிவிட்டீர்.'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இறையச்சமுள்ள முஸ்லிம் மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ புறம் பேசுவதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தனது இறந்த சகோதரனின் இறைச்சியைத் தின்று தனது நாவு தன்னை நரகில் தள்ளிவிடுவதை அஞ்சி, தவிர்ந்து கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களிடம் தமது நாவைப் பிடித்தவர்களாகக் கூறினார்கள்: ‘‘இதை உம் மீது தடுத்துக் கொள்வீராக!'' முஆத் (ரழி), ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசும் பேச்சின் காரணமாக தண்டிக்கப்படுவோமா?'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது தாய் உன்னை இழக்கட்டும்! மனிதர்களை முகம் குப்புற நரகில் தள்ளுவதெல் லாம் அவர்களது நாவுகள் அறுவடை செய்ததைத் தவிர வேறெதுவாக இருக்க முடியும்'' என்று கூறினார்கள். (ஸுனன் இப்னு மாஜா)

புறம் பேசுவது கீழ்த்தரமான குணமாகும். இது இரட்டை நாவுடைய இழி மக்களின் பண்பாகும். 

இரட்டை நாவு உடையவன் மக்களுக்கிடையே தனது சகோதரர்களைப் பற்றியும், நண்பர்களைப் பற்றியும் புறம் பேசுவான். அவர்களைச் சந்தித்தால் முகமலர்ச்சியுடனும், நேசத்துடனும் அன்பை வெளிப்படுத்தி உரையாடுவான். எனவே உண்மை முஸ்லிம், புறம் பேசுவதிலிருந்தும் இரட்டை வேடத்திலிருந்தும் முற்றிலும் விலகியிருப்பார். 

இஸ்லாம் அவருக்கு வீரத்தையும், மன உறுதியையும் கற்றுக் கொடுத்து சொல்லிலும் செயலிலும் தக்வாவை (இறையச்சத்தை) வலியுறுத்தி, நயவஞ்சகத்தையும் இரட்டை நாவையும் வெறுப்புக்குரியதாக ஆக்கியுள்ளது. எனவே இவ்வாறான இழி செயல்களிலிருந்து முஸ்லிம் வெருண்டோடுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகக் கெட்ட மனிதன் இரட்டை முகமுடையவன். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும், அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் வருவான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உண்மை முஸ்லிம் இரட்டை முகமுடையவர் அல்லர். அவர் ஒரே முகமுடையவர். அவரது முகம் தெளிவான பிரகாசம் உடையது. ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு முகத்தைக் காட்டாமல் மனிதர்கள் அனைவருக்கும் ஒரே முகத்தைக் காட்டுவார். ஏனெனில் இரட்டை வேடம் போடுவதுதான் நயவஞ்சகத்தனம் என்பதை அவர் அறிவார். இஸ்லாமும் நயவஞ்சகத்தனமும் ஒருபோதும் ஒன்றிணையாது. இரட்டை நாவு உடையவன் நயவஞ்சகனாவான். நயவஞ்சகர்கள் நரகின் கீழ்த்தட்டில் வீசப்படுவார்கள்.

தர்க்கம், துன்புறுத்தும் வகையில் பரிகாசம், வாக்கு மாறுதல் ஆகியவற்றைத் தவிர்ப்பார்
தனது சகோதரர்களையும், நண்பர்களையும் வீண் தர்க்கத்தாலும், பரிகாசங்களாலும் துன்புறுத்துவது உண்மை முஸ்லிமின் பண்பல்ல. அவ்வாறே கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தலும் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உமது சகோதரருடன் தர்க்கம் செய்யாதீர் பரிகாசம் செய்யாதீர் ஒரு வாக்குறுதியை அளித்துவிட்டு அதற்கு மாறு செய்யாதீர்.'' (அல் அதபுல் ஃமுப்ரத்)

தர்க்கம் செய்வது நன்மையைத் தராது. அவ்வாறே மனதைக் காயப்படுத்தும் பரிகாசம் பெரும்பாலும் வெறுப்பை ஏற்படுத்திவிடும். வாக்குறுதி அளித்துவிட்டு அதற்கு மாறு செய்வது இதயத்தில் சஞ்சலத்தை ஏற்படுத்தி அன்பை அகற்றிவிடும். உண்மை முஸ்லிம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்க வேண்டும்.


தன்னை விட தனது சகோதரரைத் தேர்ந்தெடுக்கும் உயர்ந்த மனிதர்

உண்மை முஸ்லிம் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்வார். தனது தோழர்களுக்கும் சகோதரர்களுக்கும் உதவுவதற்கு கரங்களை எப்போதும் திறந்து வைத்திருப்பார். இறையச்சமுள்ள முஃமின்களே அவருடைய நண்பர்களாக இருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘முஃமினைத் தவிர வேறு எவருடனும் தோழமை கொள்ளாதே! உமது வீட்டு உணவை இறையச்சமுடையவரைத் தவிர வேறு எவரும் உண்ண வேண்டாம்.'' (ஸுனன் அபூதாவூத்)

முஸ்லிம் அவசியத்திற்கேற்பவும் சூழ்நிலைகேற்பவும் தனது கொடைத் தன்மையை வெளிப்படுத்துவார். அதற்கு எந்தவொரு வரம்பையும் நிர்ணயித்துக் கொள்ளமாட்டார். அதில் தனது சகோதரர்களையும் தோழர்களையும் கவனத்தில் கொள்வார்.

அநியாயக்காரர்களின் வரம்பு மீறுதலுக்கும், தீமைகளுக்கும் அஞ்சியோ அல்லது அவர்களது அதிகாரத்துக்குப் பயந்து, அவர்களது நேசத்தை விரும்பியோ எதையும் கொடுப்பதற்கு ஒப்பமாட்டார். தகுதியற்ற இடங்களில் செலவழித்து தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதையும் அல்லது பிறரால் பாராட்டப்படுவதையும் ஏற்கமாட்டார்.

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் வாரி வழங்கும் வள்ளலாக இருப்பதுடன் உரிய வகையில் செலவிடவும் அறிந்திருக்க வேண்டும். கொடைத்தன்மை இஸ்லாமின் அடிப்படைப் பண்பாகும். அது முஸ்லிமை உயர்வடையச் செய்து அவரை அழகுபடுத்துகிறது. மக்களுக்கு அவர் மீது நேசம் உண்டாகி, அவர்களை அவரிடம் நெருங்கி வரச் செய்கிறது.

சங்கைமிகு நபித்தோழர்கள் இத்தன்மையைக் கொண்டிருந்தனர். இது அவர்களுக்கு மிகவும் விருப்பமான நற்செயலாகவும் இருந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் எனது சகோதரர்களில் சில நபர்களை ஒன்று அல்லது இரண்டு படி உணவுக்காக ஒன்று சேர்ப்பதாகிறது (விருந்தளிப்பது) நான் உங்கள் கடைவீதிக்கு வந்து ஓர் அடிமையை வாங்கி உரிமை விடுவதை விட எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.

விருந்துக்காக ஏற்படுத்தப்படும் சந்திப்புகள் சகோதரர்கள், நண்பர்களுக்கிடையே நேச உறவுகளை வளர்க்கிறது. நவீன கலாச்சாரத்தின் விளைவாக மனிதகுலம் இழந்து நிற்கும் அன்பை வாழ்வில் மலரச் செய்கிறது.

இந்நவீனகால கலாச்சாரத்தில் மனிதன் தனது முன்னேற்றத்தையும், சுயநலத்தையும் தவிர வேறெதனையும் இலட்சியம் செய்வதில்லை. இக்கலாச்சாரம் வாடிப்போன ஆன்மாவையும், வறண்டு போன உள்ளத்தையும் உருவாக்குகிறது. 
தூய்மையானவர்களின் நட்பை அலட்சியம் செய்யும் போக்கை வளர்த்துவிடுகிறது.
இது பொருளாதாரத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்ட குறுகிய மனிதநேயத்தின் அடையாளமாகும். அதனால்தான் மேற்கத்திய குடும்பங்களில் நாய்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரான்ஸ் நாட்டைப் பற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதில் 5.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பிரான்ஸில் நாய்களின் எண்ணிக்கை 70 லட்சம். அங்கு நாய்கள் அம்மக்களுடன் நெருங்கிய உறவினரைப் போன்று வாழ்கின்றன. பாரீஸ் நகர ஓட்டல்களில் நாயும் அதன் எஜமானனும் ஒரே தட்டில் உணவருந்துவது சாதாரண காட்சியாகும். பாரிஸில் உள்ள பிராணிகள் வளர்ப்போர் சங்கத்தாரிடம் ‘‘பிரான்ஸ் தேச மக்கள் நாய்களை தங்களுக்கு இணையாக பராமரிக்கிறார்களே காரணமென்ன?'' என்று வினவப்பட்டபோது, அதற்கு கிடைத்த பதில் பின்வருமாறு: ‘‘அந்நாட்டு மக்கள் தாங்கள் பிறரால் நேசிக்கப்படுவதை விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களில் தங்களை உண்மையாக நேசிப்பவர் யாரென்பதைக் கண்டறிய முடியவில்லை.''
கிழக்காயினும் மேற்காயினும் உலகாதாய வாழ்வைக் கொண்டுள்ள மனிதன் தனது சமூகத்தில் தூய அன்பையும் நேசத்தையும் தம் மீது பொழியும் மனிதர் எவரையும் கண்டுகொள்ள முடியாது. அதனால் அம்மனிதனுக்கு தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களை விட நேசமாக நடந்து கொள்ளும் விலங்கினங்களுடன் இணைந்து போக முடிகிறது.
ஈமான் என்ற அருட்கொடையையும், நேர்வழி என்ற பிரகாசத்தையும் இழந்திருப்பதின் காரணத்தால் இவன் மிருகங்களின் நண்பனாகிவிடுகிறான்.
மேற்கத்திய மனிதனை ஆட்கொண்டு அவனது மனிதநேய உணர்வின் ஊற்றுகளை காயவைத்த இறுகிய இந்த உணர்வு, அனைத்து அறிஞர்களையும் சிந்திக்கத் தூண்டியது. உயர்வான மேற்கத்திய பொருளாதார வாழ்க்கை மனிதனை அவனது சமூகத்தில் இயந்திரமாக மாற்றிவிட்டது. அம்மனிதன் பொருளீட்டுவதற்காக எடுத்துக் கொள்ளும் மூர்க்கத்தனமான போட்டியில் தன்னை மாய்த்துக் கொள்கிறான். நண்பர்களால் உற்சாகம் அடைவதோ அவர்களிடம் புன்னகைத்துப் பேசுவதோ அவனுக்குத் தெரியாது.

அவன் வேகம், பரபரப்பு, இயந்திரங்கள், ஜன நெருக்கடி ஆகியவைகளால் மனம் பேதலித்தவனாகி விடுகிறான். இதுவே அக்கலாச்சாரத்தைப் பற்றிய அனைத்து அறிஞர்களின் கருத்தாகும்.
இஸ்லாமிய நாடுகளில் பிறந்து, பரிசுத்தமான ஆன்மீகச் சூழ்நிலையில் வளர்ந்து அன்பு, நேசம், என்ற கனியை உண்டவர்கள், தங்களது கவிதை, கட்டுரை மூலமாக மேற்கத்தியவர்களுக்கு அன்பு, நேசம், மற்றும் சகோதரத்துவத்தின்பால் அழைப்பு விடுத்தார்கள்.
சகோதரர்கள் சந்தித்துக் கொள்வதை இஸ்லாம் விரும்புவது போலவே அவர்களிடையே சகோதரத்துவத்தின் பிணைப்பு உறுதியாக்கப்பட வேண்டுமென விரும்புகிறது.

இதற்காக கொடைத் தன்மையையும், விசாலமான மனதையும் கொண்டிருக்க வேண்டுமெனவும், அவர்களுக்காகச் செலவிடுவது முஸ்லிமின் அடிப்படைக் கடமை எனவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதனால்தான் விருந்துக்கான அழைப்பை ஏற்பதை இஸ்லாம் அவசிய மாக்கியிருக்கிறது. அதில் எவ்விதக் குறைவும் செய்திடக்கூடாது.

அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் சகோதரத்துவத்தின் அவசியத்தை உணர்ந்து தனது சகோதரனின் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள். ‘அதை ஏற்பது கட்டாயக் கடமை என்றும் அதில் குறைவு செய்தால் பாவியாகிவிடுவோம்' என்றும் கருதினார்கள்.

ஸியாது இப்னு அன்அம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் முஆவியா (ரழி) அவர்களின் காலத்தில் ஜிஹாதுக்காக கடலில் பயணித்துக் கொண்டிருந்தோம். எங்களது படகு அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்களின் படகுடன் இணைந்து நின்றது. எங்களுக்கு மதிய உணவு தயாரானபோது அவர்களை அழைத்தோம். எங்களிடம் வந்து கூறினார்: நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் என்னை அழைத்துள்ளீர்கள். எனினும் நான் அழைப்பை ஏற்பது கட்டாயமாகும். நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், ‘‘ஒரு முஸ்லிம் ஆறு குணங்களை தனது சகோதரரிடம் கடைப்பிடிக்க வேண்டும். அதில் ஒன்றை விடுவாரேயானால் தன் மீது தனது சகோதரருக்குரிய ஒரு கடமையை கைவிட்டவராவார். அவரைச் சந்தித்தால் ஸலாம் சொல்வது, (உணவுக்கு) அழைத்தால் ஏற்றுக்கொள்வது, தும்மினால் (யர்ஹமுக் கல்லாஹ் என) துஆச் செய்வது, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரிப்பது, மரணமடைந்தால் அங்கு ஆஜராவது, அவர் உபதேசம் கேட்டு வந்தால் அவருக்கு நல்லதைக் கூறுவது.'' (அல் அதபுல் முஃப்ரத்)

மேலும் அவர்கள் தமது முஸ்லிம் சகோதரன் அழைப்பைத் தகுந்த காரணமின்றி மறுப்பது பாவம் எனக் கருதினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘வருபவர்கள் தடுக்கப்பட்டு, வர விருப்பமற்றவர்கள் அழைக்கப்படும் வலீமா (திருமண) விருந்தே விருந்துகளில் மிகக் கெட்டது. எவர் அழைப்பை ஏற்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தவராவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஈமானிய சகோதரத்துவம் வெற்றுச் சடங்கும், விளம்பரமுமல்ல. மாறாக அது கடமைகளும் உரிமைகளும் நிறைந்த பரிசுத்தமான இணைப்புப் பாலமாகும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உரிய முறையில் விசுவாசித்து இஸ்லாமின் கடமைகளை சரியான முறையில் அறிந்திருப்பவரே இந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். இதை நாம் மதீனாவாசிகளான அன்சாரித் தோழர்களின் செயல்களில் காண்கிறோம்.

முஸ்லிம்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து அவர்களிடம் வந்தபோது அவர்களைத் தங்களைவிட மேலாக நேசித்து உயர்ந்த முன்மாதிரிகளை வெளிப்படுத்தினார்கள். அவர்களிடம் அன்சாரித் தோழர்கள் தங்களது அனைத்து சொத்துகளையும் அர்ப்பணிக்கத் தயாரானார்கள்.

எந்தளவுக்கென்றால் ஓர் அன்சாரித் தோழர் தனது முஹாஜிர் சகோதரரிடம், ‘‘இதோ எனது செல்வம், இதில் பாதியை எடுத்துக் கொள்ளுங்கள். இதோ எனது இரு மனைவிகள், இந்த இருவரில் உமக்குப் பிடித்தவரை குறிப்பிடுங்கள் நான் தலாக் சொல்கிறேன். இத்தா முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார். ஆனால் அந்த முஹாஜிர் தனது சகோதரன் அளவு கடந்த நேசத்துக்கு அழகிய முறையில் பதிலளித்தார். ‘‘அல்லாஹ் உமது செல்வத்திலும் குடும்பத்திலும் பரக்கத் செய்யட்டும். எனக்கு இவைகளில் எதுவும் தேவையில்லை. எனக்கு கடைவீதியைக் காட்டுங்கள்! நான் வேலை செய்து கொள்கிறேன்'' எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஓர் அன்சாரித் தோழர் தனது முஹாஜிர் சகோதரர் ஒருவரை உணவுக்கு அழைத்திருந்தார். அவரது வீட்டில் குழந்தைகளுக்கு மட்டுமே உணவு இருந்தது. எனினும், தன்னைவிட தனது குடும்பத்தாரைவிட அந்த முஹாஜிருக்கு முன்னுரிமையளித்து தனது மனைவியிடம் ‘‘நமது குழந்தைகளை தூங்க வைத்துவிடு. விளக்கை அணைத்து விட்டு உன்னிடமுள்ள உணவை விருந்தாளியின் முன் வைத்துவிடு. அவருடைய உணவுத் தட்டின் அருகே நாமும் அமர்வோம். நாம் சாப்பிடாத நிலையில் அவர் நாம் சாப்பிடுவதாக எண்ணிக் கொள்ளட்டும்'' என்று கூறினார்.

அவ்வாறே உணவுத் தட்டில் மூவரும் அமர்ந்தார்கள். விருந்தாளி மட்டும் சாப்பிட்டார். அந்தக் குடும்பமே பசியுடன் இரவைக் கழித்தது. அவர் காலையில் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘இரவில் நீங்கள் இருவரும் விருந்தளித்ததில் நடந்து கொண்ட முறையைப் பற்றி அல்லாஹ் மகிழ்ச்சியடைந்தான்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மதீனாவாசிகளான அன்சாரிகள் ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர்களுக்கு தங்களது செல்வங்களில் பங்களிக்க ஆர்வம் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் ‘‘நபி (ஸல்) அவர்களே! எங்களுக்கும் எங்களது சகோதர்களுக்குமிடையே இந்தப் பேரீச்சை மரங்களை பங்கிட்டுத் தாருங்கள்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘வேண்டாம்'' என மறுத்தார்கள். அன்சாரிகள் ‘‘முஹாஜிர்களான நீங்கள் எங்களுக்கு விவசாயத்தில் உதவி செய்யுங்கள். நாங்கள் அதன் பலனில் உங்களையும் கூட்டாக்கிக் கொள்வோம்'' என்றார்கள். முஹாஜிர்கள் ‘‘செவியேற்றோம் அடிப்பணிந்தோம்'' என்று கூறி அதை ஏற்றுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

முஹாஜிர்கள் தங்களது சகோதரர்களான அன்சாரிகளின் செயல்களைப் பெரிதாகக் கருதி நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்: ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சந்தித்த மக்களில் அற்பமான விஷயங்களில் கூட சமத்துவத்தை வெளிப்படுத்தும் இவர்களைப் போன்ற மனிதர்களை நாங்கள் சந்தித்ததேயில்லை. இவ்வாறே அதிகமான பொருளில் அழகிய முறையில் பிரதி உபகாரம் செய்பவர்களையும் நாங்கள் கண்டதில்லை. சிரமத்தை அவர்கள் அனுபவித்துக் கொண்டு பலனில் எங்களைக் கூட்டாக்கிக் கொள்கிறார்கள். அதனால் அனைத்து நன்மைகளையும் அவர்களே கொண்டு சென்று விடுவார்களோ என நாங்கள் அஞ்சுகிறோம் என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘நீங்கள் அவர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் நிலையில் அவ்வாறு ஆகாது'' என்று கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)

அன்சாரித் தோழர்களை அல்லாஹ் புகழ்ந்து அவர்களது நற்செயல்களைப் பாராட்டி திருவசனங்களை இறக்கி வைத்தான். அவர்கள் தங்களை விட பிறரை நேசித்ததை இறுதிநாள் வரை முஸ்லிம்களுக்கு ஒரு முன்மாதிரியான நிகழ்ச்சியாகக் குறிப்பிடுகிறான்.

முஹாஜிர்கள் தங்களிடம் வருவதற்கு முன்னதாகவே (மதீனாவில்) வீட்டையும் அமைத்துக் கொண்டு விசுவாசத்தையும் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களுக்கும் அதில் பங்குண்டு. இவர்கள் ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வருவோரை அன்பாக நேசித்து வருவதுடன் (எவரும் தங்களுக்குக் கொடுக்காது) அவர்களுக்கு (மட்டும்) கொடுப்பதைப் பற்றி தங்கள் மனதில் ஒரு சிறிதும் பொறாமை கொள்ளாது தங்களுக்கு அவசியம் இருந்த போதிலும், தங்களுடைய பொருளை அவர்களுக்குக் கொடுத்து, உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் தங்கள் கஞ்சத்தனத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றார்களோ அத்தகையோர்தாம் வெற்றி பெற்றோர்கள். (அல்குர்ஆன் 59:9)

திருமறையில் அன்சாரித் தோழர்களின் அற்புதத் தன்மையைக் குறிப்பிடுவதன் மூலம் மனிதநேயத்தைத் தகர்க்கும் உலோபித்தனத்தைக் கண்டித்து தர்ம சிந்தனையை இஸ்லாம் வளர்க்கிறது.

அன்சாரித் தோழர்கள் தங்களுக்கும் முஹாஜிர்களுக்குமிடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தியபோது ஈமானிய சகோதரத்துவத்தின் நோக்கத்தையும், இலட்சியத்தையும் அறிந்து கொண்டார்கள்.

அவர்கள் உண்மையான முஃமின்களாகத் திகழ்ந்து, நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப தாங்கள் விரும்புவதையே தங்களது சகோதரர்களுக்கும் விரும்பினார்கள். தங்களுக்கென அழிந்து போகும் உலக சாதனங்கள் எதையும் வைத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி தாங்கள் ஈட்டிய செல்வங்களின் ஒரு பகுதியை சகோதரர்களுக்கென ஒதுக்கி, மலர்ந்த இதயத்துடன் வழங்கினார்கள்.

ஹிஜ்ரத்தின் ஆரம்ப காலத்தில் இரத்த பந்துக்களைவிட முஹாஜிர்களையே வாரிசுரிமை பெற்றவர்களாக்கினார்கள். இதன்மூலம் ரஸுலுல்லா (ஸல்) அவர்கள் எந்தச் சகோதரத்துவக் கொடியை உயர்த்தினார்களோ அந்தச் சகோதரத்துவத்தின் கடமைகளை நிறைவு செய்தார்கள்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய இஸ்லாமிய சகோதரத்துவத்தின் காரணமாக அன்சாரித் தோழர்களுக்கு அவர்களது உறவினர்களன்றி இவர்களே வாரிசுகளாகத் திகழ்ந்தனர். ஆனால் திருமறையில்:
...(விசுவாசம் கொண்ட ஒருவனுடைய சொத்தை அடைய) மற்ற விசுவாசிகளை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களை விடவும் (விசுவாசிகளான) அவனுடைய சொந்த உறவினர்தாம் அல்லாஹ்வினுடைய இவ்வேதத்திலுள்ள பிரகாரம் உரிமை உடையவர்களாக ஆவார்கள்... (அல்குர்ஆன் 33:6)

இந்த வசனம் அருளப்பட்டபோது அந்த வாரிசுரிமை ரத்து செய்யப்பட்டது. ஆனால் அன்பும், நேசமும், பெருந்தன்மையும், உபகார மனப்பான்மையும் நிரந்தரமாக அவர்களிடம் காணப்பட்டது.
சகோதரர்களுக்காக மறைவில் பிரார்த்திப்பார்
தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பும் உண்மை முஸ்லிம், சகோதரர் தன் சமூகத்தில் இல்லையென்றாலும் அவருக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்வார். அவன் நன்மைக்கு பிரார்த்திக்கும்போது அன்பு உறுதியாகி, தூய்மையான சகோதரத்துவம் பலமடைகிறது. இவ்வாறு பிரார்த்திப்பதில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு மட்டுமே இருப்பதால் அது அல்லாஹ்விடம் தாமதமின்றி விரைவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘விரைவாக அங்கீகரிக்கப்படும் பிரார்த்தனை, மறைவானவர் மறைவானவருக்குச் செய்யும் பிரார்த்தனையாகும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

அதனால்தான் நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரழி) அவர்கள் உம்ராவுக்கு அனுமதி கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், தனக்காக துஆச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் உம்ராவுக்காக அனுமதி கோரினேன். அவர்கள் அனுமதியளித்து, ‘‘எனது சகோதரரே! உமது பிரார்த்தனையில் நம்மை மறந்து விடாதீர்'' என்று கூறினார்கள். உமர் (ரழி) கூறினார்கள்: ‘‘அந்த வார்த்தைக்குப் பகரமாக இவ்வுலகம் முழுமையும் எனக்குக் கிடைப்பது அதிக மகிழ்ச்சியளிக்காது.'' (ஸுனனுத் திர்மிதி)

கண்ணியமிகு ஸஹாபாக்களின் இதயங்களில் இக்கருத்து ஆழமாக பதிந்திருந்தது. துஆ அங்கீகரிக்கப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தங்களுக்காக துஆச் செய்யுமாறு தமது சகோதரர்களைக் கேட்டுக் கொண்டார்கள். இது விஷயத்தில் அவர்களிடம் ஆண், பெண் என்ற வேறுபாடு காணப்படவில்லை. இந்த உன்னதப் பண்பில் சமூகம் அனைத்தும் மேன்மை பெற்றிருந்ததற்கு நமது வரலாறு சான்றளிக்கிறது.

ஸஃப்வான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள், (அபூ தர்தாவின் மகள் ‘தர்தா' இவர்களின் மனைவியாவார்): ‘‘நான் ஷாம் தேசத்துக்குச் சென்றேன். அங்கு வீட்டில் உம்மு தர்தா (ரழி) மட்டுமிருந்தார்கள். அபூ தர்தாவைக் காணவில்லை. அவர் என்னிடம் ‘‘ஹஜ் செய்யப் போகிறீர்களா?'' என்று கேட்டார். நான் ‘‘ஆம்'' என்றேன். அவர், ‘‘எங்கள் நலவுக்காக துஆச் செய்யுங்கள். ஏனெனில், மறைவாக உள்ள தனது சகோதரருக்காக ஒரு முஸ்லிம் செய்யும் துஆ ஒப்புக் கொள்ளப்படும். அவருடைய தலையருகில் ஒரு மலக்கு நியமிக்கப்பட்டிருப்பார். எப்போதெல்லாம் தனது சகோதரருக்கு நலவைக் கொண்டு துஆச் செய்கிறாரோ அப்போது அம்மலக்கு ஆமீன்! உனக்கும் அதே போன்றது (கிட்டட்டும்) என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்'' என்றார்.

ஸஃப்வான் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் கடைவீதியில் அபூ தர்தா (ரழி) அவர்களைச் சந்தித்தேன். அவரும் அவ்வாறே கூறி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார். (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடையே உயிரோட்டமான ஒற்றுமையை வளர்ப்பவர்களாக இருந்தர்கள். அதனால் முழுமையான சகோதரத்துவ உணர்வுகள் அவர்களிடம் எப்போதும் வெளிப்பட்டு வந்தது. ஆன்மாக்கள் துருப்பிடித்து, இதயங்கள் முத்திரையிடப்பட்டு, பார்வைகளைக் குருடாக்கும்படியான சுயநலச் சிந்தனைகள் அவர்களிடம் தோன்றவில்லை.

இஸ்லாமின் சகோதரத்துவ சிந்தனை, உயர்வான பண்புகளை வளரச் செய்கிறது. சுயநல சிந்தனையை அகற்றி விடுகிறது. ஒரு மனிதர் சப்தமாக ‘‘யா அல்லாஹ்! என்னையும் முஹம்மதையும் மன்னிப்பாயாக!'' என்று பிரார்த்தித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘மிக அதிகமான மக்களுக்கு மன்னிப்பைத் தடுத்து விட்டாயே'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

இதன்மூலம் தனக்கு மட்டும் நன்மையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதை இஸ்லாம் கண்டிக்கிறது என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள்.

மேற்கூறப்பட்டவர்தான் உண்மை முஸ்லிம். தனது சகோதரர்களையும் நண்பர்களையும் நேசிப்பார். அவர் மனத்தூய்மை உடையவர். அவர்களுக்கு நன்மையை மட்டுமே நாடுவார். அவர்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் அவர்களது கௌரவத்தையும் செல்வங்களையும் பாதுகாப்பார். தன்னைவிட அவர்களைத் தேர்ந்தெடுப்பார்.

அவர்களது குறைகளை மறந்து மன்னித்து விடுவார். மென்மையான அணுகுமுறையை மேற்கொண்டிருப்பார். நாவு, கரங்கள், உறுப்புகள் பரிசுத்தமானவராக, வாரி வழங்கும் வள்ளலாக, பொய் பேசாத உண்மையாளராக, கடுமை காட்டாத மென்மையானவராக, மோசடி செய்யாத நம்பிக்கையாளராக, இரட்டை முகமில்லாத தூய மனதுடையவராகத் திகழ்வார்.

அவர் இப்பண்புகள் அனைத்தையும் கொண்டிருப்பது அதிசயமல்ல. ஏனெனில் இது உயர்ந்த மனிதனை வடிவமைப்பதில் இஸ்லாம் வெளிப்படுத்திய அற்புதமாகும். இவர்தான் இஸ்லாம் விரும்பும் முன்மாதிரி முஸ்லிமாவார்.
 

முன்மாதிரி முஸ்லிம் - முஸ்லிம் தனது சமூகத்துடன்

வாய்மையாளர்

ஏமாற்றுபவராக, நேர்மையற்றவராக, மோசடிக்காரராக இருக்க மாட்டார்

பொறாமை கொள்ள மாட்டார்

பிறர் நலம் விரும்புவார்

வாக்குறுதியை நிறைவேற்றுவார்

நற்குணமுடையவர்

நாணமுடையவர்

மென்மையானவர்

கருணையாளர்

மன்னிக்கும் மாண்பாளர்

பெருந்தன்மையாளர்

மலர்ந்த முகமுடையவர்

நகைச்சுவையாளர்

சகிப்புத் தன்மையுடையவர்

ஏசுவதையும் கெட்ட வார்த்தைகளையும் தவிர்த்துக் கொள்வார்

உறுதியான ஆதாரமின்றி எவரையும் இறைமறுப்பாளர், பெரும்பாவி என்று கூறமாட்டார்

பிறர் குறைகளை மறைப்பவர்

தனக்குத் தேவையற்றதில் ஈடுபடமாட்டார்

புறம், கோள் சொல்வதிலிருந்து விலகியிருப்பார்

பொய்யைத் தவிர்ப்பார்

தீய எண்ணங்களைத் தவிர்ப்பார்

ரகசியம் காப்பார்

மூன்றாமவர் இருக்க இருவர் ரகசியம் பேசுவது

பெருமை கொள்ளாதவர்

பணிவுடையவர்

பரிகாசம் செய்ய மாட்டார்

முதியோர், சான்றோர்களுக்கு கண்ணியமளிப்பார்

நல்லோருடன் இணைந்திருப்பார்

மக்களுக்கு பயனளித்து இடையூறுகளை 

அகற்றுவதில் ஆர்வம் கொள்வார்

முஸ்லிம்களை ஒன்றிணைக்கப் பாடுபடுவார்

சத்தியத்தின்பால் அழைப்பார்

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார்

அழைப்புப் பணியில் மிருதுவாகவும் விவேகமாகவும் நடந்து கொள்வார்

நயவஞ்சகம் கொள்ள மாட்டார்

முகஸ்துதியிலிருந்து விலகியிருப்பார்

உறுதிமிக்கவர்

நோயாளியிடம் நலம் விசாரிப்பார்

ஜனாஸாவில் பங்கெடுத்துக் கொள்வார்

உபகாரத்திற்கு நன்றியும் பிரதியுபகாரமும் செய்வார்

மக்களுடன் கலந்துறவாடுவார், சிரமங்களைச் சகித்துக் கொள்வார்

இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புவார்

நன்மைக்கு வழிகாட்டுவார்

இலகுபடுத்துவார்

நீதமானவர்

அநீதமிழைக்க மாட்டார்

உயர்ந்த விஷயங்களை விரும்புவார்

அடுக்குமொழியைத் தவிர்ப்பார்

பிறர் துன்பத்தில் மகிழ மாட்டார்

கண்ணியமிக்க கொடைவள்ளல்

உபகாரத்தை சொல்லிக் காட்டமாட்டார்

விருந்தளிப்பவர்

தன்னைவிட பிறருக்கு முன்னுரிமையளிப்பார்

கடன் சுமையை அகற்றுவார்

மனதாலும் யாசிக்கமாட்டார்

நேசிப்பவர், நேசிக்கப்படுவார்

இஸ்லாமை அளவு கோலாகக் கொண்டு தனது பழக்கங்களை சீர்படுத்திக் கொள்வார்

உண்பது, குடிப்பதில் இஸ்லாமிய ஒழுக்க முறைகளைப் பேணுவார்

ஸலாமைப் பரப்புவார்

அனுமதியின்றி அன்னியர் வீட்டில் பிரவேசிக்கமாட்டார்

அன்னியர் வீட்டினுள் பார்வையைச் செலுத்தமாட்டார்

சபையின் ஓரத்தில் அமர்வார்

சபைகளில் இயன்றளவு கொட்டாவியைத் தவிர்ப்பார்

தும்மலின்போது இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பேணுவார்

பெண்களுக்கு ஒப்பாக மாட்டார்
 

மார்க்கச் சட்டங்களைப் பின்பற்றும் முஸ்லிம் இயல்பிலேயே சமூக சிந்தனை உடையவராகத்தான் இருப்பார். உலக வாழ்வில் இஸ்லாமிய தூதுத்துவத்தின் சொந்தக்காரரான அவர் மனிதர்களோடு இணைந்திருப்பது அவசியமாகும். 

அவர்களுடன் கலந்துறவாடி அவர்களோடு கொடுக்கல் வாங்கலைப் பரிமாறிக் கொள்வார்.

முஸ்லிம் உயரிய பண்புகளையுடைய சமூக சேவகராக இருப்பார். அவர் உயரிய மனிதநேய குணங்களைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் சமூகத்தோடு உறவாடும்போது அந்தக் குணங்களை வெளிப்படுத்த வேண்டுமெனவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

சமூக உணர்வுடைய முஸ்லிமின் பண்புகள், திருக்குர்ஆனின் ஒளிமயமான வழிகாட்டுதலையும், பரிசுத்தமான நபித்துவ நடைமுறைகளையும் கொண்ட தனித்தன்மை வாய்ந்த பண்புகளாகும். 

அவை மனித மூளைகளால் உருவாக்கப்பட்ட சமூகவியல் சட்டங்களுடன் ஒப்பிட முடியாதவை. சிந்தனையாளர்களாலும், தத்துவ மேதைகளாலும் மிகுந்த சிரமத்துடன் உருவாக்கப்பட்ட நெறிகளுடனும் ஒப்பிட முடியாதவையாகும்.

இஸ்லாம் வலியுறுத்தும் சமூக அமைப்பு மிகவும் உயர்வானதாகும். அது நற்பண்புகளின் ஒட்டுமொத்த இணைப்பாகும். அப்பண்புகளை கைக்கொள்பவர் நன்மையளிக்கப்படுவார் அவைகளை விடுபவர் அல்லாஹ்வின் சமூகத்தில் குற்றவாளியாவார். எனவே, உண்மை முஸ்லிமின் நடத்தையில் மேம்பட்ட சமூக வாழ்வுக்கான முன்மாதிரியை மனிதகுலம் பெற்றுக்கொள்ள முடியும்.

திருக்குர்ஆன், நபிமொழிச் சான்றுகளை ஆழ்ந்து நோக்குபவர் அவைகளின் விசாலத்தையும் நுட்பத்தையும் கண்டு திகைத்துப்போவார். ஏனெனில் அச்சான்றுகள் சமூக வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் தொட்டு நிற்கின்றன. எல்லா விஷயங்களிலும் தனித் தன்மையான கருத்துகளைக் கொண்டுள்ளன. ஒரு முஸ்லிம் எவ்வாறு வாழ வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறதோ அத்தகைய பரிசுத்தமான உயர்வின்பால் வழிகாட்டுகின்றன. 

எவரது இதயத்தில் இஸ்லாமின் அடிப்படைகள் உறுதியாகிவிட்டனவோ அவர் நிச்சயமாக இந்த உயரிய நிலையை அடைந்தே தீருவார்.

இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பின் அடிப்படை என்னவென்றால் சமூக ரீதியான தொடர்புகளிலும், தனி மனித உறவுகளிலும் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளுக்குக் கட்டுப்பட வேண்டும். இறையச்சமுள்ள முஸ்லிம் தனது வாழ்வில் சமூகத்துடன் இணைந்து வாழும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை நன்கறிவார். வாய்மையாளரான முஸ்லிம் இந்த உறுதியான அடிப்படையின் மீதே தனது சமூக உறவை அமைத்துக் கொள்வார்.


வாய்மையாளர்

உண்மை முஸ்லிம் எல்லா மனிதர்களுக்கும் உண்மையானவராக இருப்பார். இஸ்லாம் உண்மை பேசுவது நற்குணங்களில் அடிப்படையானது எனக் கற்றுத் தருகிறது. ‘உண்மை' அதன் சொந்தக் காரரை சுவனத்தின்பால் சேர்த்து வைக்கும் நன்மைகளைச் செய்யத் தூண்டுகிறது. அவ்வாறே ‘பொய்' நரகத்தின்பால் சேர்த்து வைக்கும் பாவங்களைச் செய்யத் தூண்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நிச்சயமாக உண்மை நற்செயலின்பால் வழிகாட்டும். நற்செயல் சுவனத்தில் சேர்த்துவிடும். நிச்சயமாக உண்மையே பேசுகிறவர் அல்லாஹ்விடம் அவர் உண்மையாளர் என எழுதப்படுகிறார். பொய் பாவங்களின்பால் வழிகாட்டும். ஒரு மனிதன் பொய்யுரைத்தால் இறுதியில் அல்லாஹ்விடம் அவன் பொய்யன் என எழுதப்படுகிறான்.'' (ஸஹீஹுல் புகாரி)

இதனால் முஸ்லிம் வாய்மையாளராகத்தான் இருப்பார். தனது சொல், செயலில் உண்மையை மட்டுமே உரைப்பார். அம்மனிதர் அல்லாஹ்வின் சமூகத்தில் உண்மையாளர் என எழுதப்படுவது மிக உயரிய அந்தஸ்தாகும்.


ஏமாற்றுபவராக, நேர்மையற்றவராக, மோசடிக்காரராக இருக்கமாட்டார்

முஸ்லிம், நேர்மையற்றவராகவோ மோசடிக்காரராகவோ இருக்கமாட்டார். ஏனெனில் அவர் வாய்மையாளராக இருப்பதால் பிறர் நலம் நாடுவது, மனத்தூய்மை, நீதி, நேர்மை போன்ற நற்பண்புகளையே விரும்புவார். மோசடி, வஞ்சம், நேர்மையின்மை போன்ற குணங்களை விரும்பமாட்டார்.

உண்மை முஸ்லிமின் மனசாட்சி மோசடித்தனத்தைச் சகித்துக் கொள்ளாது. அதிலிருந்து விலகிச் செல்லவே அவரைத் தூண்டும். அக்காரியங்களை செய்தால் இஸ்லாமிலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவோம் என அவர் அஞ்சுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் நமக்கு எதிராக வாளை ஏந்துகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர். எவர் நம்மை மோசடி செய்கிறாரோ அவரும் நம்மைச் சார்ந்தவரல்லர்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தின் மற்றொரு அறிவிப்பில் காணப்படுவதாவது: நபி (ஸல்) அவர்கள் ஓர் உணவு தானியக் குவியலை கடந்து சென்றபோது தனது கரத்தை அதனுள் நுழைத்தார்கள். தனது விரல்களில் ஈரத்தைக் கண்டபோது ‘‘உணவு தானியத்தின் உரிமையாளரே! இது என்ன?'' என்று கேட்டார்கள். 

அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! மழைதான் காரணம்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘அந்த ஈரமானதை மக்கள் பார்க்கும் வகையில் மேல் பகுதியில் வைத்திருக்க வேண்டாமா? மோசடித்தனம் செய்பவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.

இஸ்லாமிய சமுதாயம் நேசம், பிறர்நலம் பேணுவது என்ற அடிப்படையின் மீது நிர்மாணிக்கப்பட்டதாகும். இஸ்லாம் நேர்மை, உண்மை மற்றும் உபகாரம் செய்வதை தனது உறுப்பினர் மீது விதியாக்கியுள்ளது. 

அதனால்தான் நன்றி மறப்பவன், ஏமாற்றுக்காரன், வஞ்சகன் போன்றவர்களுக்கு அதில் இடமில்லை.
நபி (ஸல்) அவர்கள் மோசடி செய்பவன் விஷயத்தில் மிகக்கடினமான நிலையைக் கொண்டிருந்தார்கள். அவனை சமுதாயத்திலிருந்து நீக்கிவைப்பதுடன், உலக முஸ்லிம்களின் கூட்டமைப்பிலிருந்தும் விலக்கி வைத்தார்கள். மேலும், அவன் மனிதர்கள் ஒன்று சேர்க்கப்படும் மறுமை நாளில் தனது மோசடித்தனத்திற்கு அடையாளமாக ஒரு கொடியை கரத்திலேந்தி வருவான். அவனது மோசடித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் மலக்குகள் சப்தமிட்டு அதைக் கூறுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மறுமை நாளில் ஒவ்வொரு மோசடிக்காரனிடமும் ஒரு கொடி இருக்கும், இது அவனது மோசடித்தனம் என அறிவிக்கப்படும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அவன், தான் செய்த மோசடித்தனங்கள் கால ஓட்டத்தால் அழிந்திருக்கும் என்று எண்ணியிருக்க, படைப்பினங்கள் அனைவரின் முன்னிலையிலும் மோசடித்தனத்திற்குரிய என்ற கொடியை கையிலேந்தி வருவது எத்தகு அவமானம்?

மோசடிப் பேர்வழிகளின் துரதிஷ்டமும் கவலையும் மறுமை நாளில் அதிகரித்துக்கொண்டே செல்லும். நபி (ஸல்) அவர்கள் ஷஃபாஅத் செய்யும் அந்த அரிய சந்தர்ப்பத்தில் ‘‘அல்லாஹு தஆலா அந்த மோசடிக்காரர்களுக்கு எதிராக வாதிடப்போகிறான்'' என்று அறிவிக்கப்படும். ஏனெனில், அது அல்லாஹ்வின் அருளைத் தடுத்துவிடும் மாபெரும் குற்றச் செயலாகும். அதனால் மறுமை நாளில் கருணை நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் என்ற மகத்தான பாக்கியத்திலிருந்து அகற்றப்படுவார்கள்.

அல்லாஹு தஆலா அருளியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மூன்று நபர்களுடன் நான் மறுமை நாளில் வாதிடுவேன். 1. என் பெயரால் சத்தியம் செய்து பின்பு மோசடி செய்தவன் 2. சுதந்திரமான ஒருவரை அடிமையெனக் கூறி விற்று அவன் கிரயத்தை சாப்பிட்டவன் 3. தனது வேலைக்கு கூலிக்காரரை அமர்த்தி அவரிடம் முழுமையாக வேலை வாங்கிக் கொண்டு அவருக்கு கூலி கொடுக்காதவன்.'' (ஸஹீஹுல் புகாரி)

முஸ்லிமின் உணர்வுகளை இஸ்லாம் மதிக்கிறது. சிந்தித்து செயல்படுவதற்கான வழிகளைத் திறந்து வைத்துள்ளது. அவர் பொருளீட்டும்போது பொய், மோசடி, அநீதம் போன்ற குணங்கள் தலைதூக்கிவிடாமல் கவனமாக இருப்பார். அதனால் அவருக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் சரியே. ஏனெனில் இந்த குணங்கள் உடையவனை இஸ்லாம் நயவஞ்சகர்களின் பட்டியலில் சேர்க்கிறது. 

நயவஞ்சகர்களுக்கு மறுமையில் உதவுவார் ஒருவருமில்லை. அவனுக்கு நரகின் அடித்தளமே நிரந்தரமாக்கப்படும்.

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்பாகத்தில்தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீர் காண மாட்டீர் (அல்குர்ஆன் 4:145)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவனிடத்தில் நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் முழுமையான நயவஞ்சகனாவான். எவனிடத்தில் அதில் ஏதேனும் ஒன்று இருக்கிறதோ அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத்தின் ஒருகுணம் அவனிடத்தில் இருக்கும். 1. அவன்மீது நம்பிக்கை வைத்தால் மோசடி செய்வான் 2. பேசினால் பொய்யுரைப்பான் 3. ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான் 4. விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


பொறாமை கொள்ளமாட்டார்

பொறாமை கொள்வது இறையச்சமுடைய முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற குணமாகும். 

நபி (ஸல்) அவர்கள் பொறாமை என்ற இழிகுணத்தைப்பற்றி வன்மையாகக் கண்டித்துக் கூறினார்கள்: ‘‘ஓர் அடியானின் இதயத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேராது.'' (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ழமுரா இப்னு ஸஃலபா (ரழி) அறிவிக்கிறார்கள்: ‘‘மனிதர்கள் தங்களுக்குள் பொறாமை கொள்ளாத காலமெல்லாம் நன்மையின் மீதே நிலைத்திருப்பார்கள்.'' (முஃஜமுத் தப்ரானி)

உண்மை முஸ்லிமின் அடையாளம், அவரது இதயம் மோசடி, பொறாமை, வஞ்சம் போன்ற தீய குணங்களிலிருந்து பரிசுத்தமானதாக இருப்பதாகும். அந்த மனத்தூய்மையே அவரை சுவனத்தில் சேர்ப்பிக்கும். அவர் பகல் முழுவதும் நோன்பிருந்து இராக்காலங்களில் நின்று வணங்கவில்லை என்றாலும் சரியே.

அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் ‘‘இப்போது உங்களிடத்தில் ஒரு சுவனவாசி வருகை தருவார்'' என்றார்கள். அப்போது ஒரு அன்சாரித் தோழர் உளுச்செய்த தண்ணீர் தாடியில் சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் வந்தார். 
இடக்கரத்தில் செருப்பைப் பற்றியிருந்தார். மறுநாள் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம்மனிதர் அதே கோலத்தில் வந்தார். மூன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே கூறினார்கள். அம்மனிதரும் முதல் நாளைப் போன்றே வந்தார். நபி (ஸல்) அவர்கள் சபையிலிருந்து எழுந்தபோது அம்மனிதரை அப்துல்லாஹ்பின் அம்ரு இப்னு ஆஸ் (ரழி) பின் தொடர்ந்து சென்று அம்மனிதரிடம் ‘‘நான் என் தந்தையிடம் வாக்குவாதம் செய்தேன். மூன்று நாட்களுக்கு அவரிடம் வரமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேன். அந்தக்காலம் முடியும்வரை உம்முடன் தங்கிக் கொள்ள அனுமதிப்பீரா?'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித்தோழர் ‘சரி' என பதிலளித்தார்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் அம் மனிதரிடம் மூன்று இரவுகள் தங்கினார். அம்மனிதர் இரவில் எழுந்து வணங்கவில்லை. ஆனாலும் தூக்கத்தில் விழிப்பேற்பட்டு படுக்கையில் புரண்டபோது அல்லாஹ்வை திக்ரு செய்து தக்பீர் சொல்லிக் கொள்வார். இறுதியில் ஃபஜ்ருத் தொழுகைக்கு எழுவார். அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அவர் நன்மையான விஷயங்களை மட்டுமே பேசக் கேட்டேன். மூன்று இரவுகள் கடந்தபின் அவரது அமல்கள் மிகக் குறைவானது எனக்கருதி அவரிடம் நான் கூறினேன் ‘‘அல்லாஹ்வின் அடியாரே! எனக்கும் எனது தந்தைக்குமிடையே கோபமோ வெறுப்போ கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக ‘‘உங்களிடத்தில் சுவனவாசி ஒருவர் வருகிறார்'' என்று கூறினார்கள். மூன்று நாட்களும் நீங்கள்தான் வந்தீர்கள். நான் உங்களது அமல்களை கவனித்து உம்மைப் பின்பற்ற எண்ணி தொடர்ந்து வந்தேன். ஆனால் உமது அமல்கள் பெரிதாகத் தோன்றவில்லையே! பிறகு எப்படி நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்தஸ்தை அடைந்தீர்?'' என்று கேட்டேன். அவர் ‘‘நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை'' என்றார். நான் திரும்பிச் செல்ல முயன்றபோது என்னை அழைத்து ‘‘நீங்கள் கண்டதைத் தவிர வேறொன்றுமில்லை. எனினும் நான் எந்த முஸ்லிமையும் மோசடி செய்ய வேண்டும் என்று எண்ணியதில்லை. அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளைக் கண்டு எவர்மீதும் பொறாமை கொண்டதில்லை'' எனக்கூறினார். அப்துல்லாஹ் (ரழி) ‘‘அதனால்தான் இத்தகைய உயர் அந்தஸ்தை அடைந்தீர்கள். அதற்கு நாங்கள் சக்தி பெறவில்லை'' என்று கூறினார்கள். (ஸுனனுன் நஸயீ)

முஸ்லிம் தனது மறுமையை நோக்கிய பயணத்தில் போட்டி, பொறாமை, மோசடி போன்ற பாவச்சுமைகளுக்கு இதயத்தில் இடமளிக் காமல் தூய மனதுடன் இருந்தால், மிகக் குறைவான வணக்கமாக இருந்தாலும் அல்லாஹ் அதை அங்கீகரித்து உயர் அந்தஸ்தை வழங்குகிறான் என்பது இச்சம்பவத்தின் மூலம் தெரிய வருகிறது. நபி (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட மனிதர் குறைவான வணக்கத்தையே கொண்டிருந்தாலும் பிறர் மனம் புண்படாதவகையில் மனதை செம்மைப் படுத்தியதால் சுவனம் செல்கிறார்.

ஒரு பெண் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நாம் கண்டோம். அதாவது, அப்பெண் இரவு முழுவதும் நின்று வணங்கி பகல் காலங்களில் நோன்பு வைக்கிறாள். ஆனால் அண்டை வீட்டாருக்கு இடையூறு தருகிறாள் என்று கூறப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் ‘‘அவளிடத்தில் எந்த நன்மையும் கிடையாது அவள் நரகவாசி'' என்றார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

இஸ்லாமியத் தராசில் தன்னை எப்போதும் எடை போட்டுப் பார்ப்பவர் தனது வணக்கங்கள் குறைவாக இருப்பினும் தனது இதயம், பொறாமை, மோசடி போன்ற குணங்களிலிருந்து தூய்மையாக இருப்பது அவசியம் என்பதைப் புரிந்து கொள்வார். அவர் இஸ்லாமிய சமூகம் என்ற கட்டிடத்தில் பதிக்கப்பட்டுள்ள தூய்மையான கற்களைப் போன்றவர்.

பிற மனிதர்களை ஏமாற்றுவது, அவர்களுக்கு இடையூறளிப்பது, பொறாமை, கோபம் போன்ற இழி குணங்களால் இதயம் இருண்டுபோன மனிதர், பெரியவணக்கசாலியாக இருப்பினும் இஸ்லாமின் தராசில் அவரது நன்மையின் தட்டு கனமற்றுப் போய்விடும். அவர் சமூகம் என்னும் மாளிகையில் பதிக்கப்பட்ட உடைந்துபோன செங்கலைப் போன்றவராவார்.

முன்மாதிரியான முஸ்லிம், சமூக நல்லிணக்கம் பேணி, தூய மனதையும், சிறந்த இறைவணக்கத்தையும் ஒருங்கே கொண்டிருப்ப வராவார். அவரது உள்ளும் புறமும் சமமானதாகவும், அவரது சொல்லும் செயலும் உண்மையானதாகவும் இருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இத்தகைய பண்புகளைக் கொண்ட முஸ்லிம்களால் சமூகக் கோட்டை உறுதியடையும். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் கட்டிடத்தில் ஒன்றுக்கொன்று வலுசேர்க்கும் கற்களைப் போன்றவர்கள் எனக் கூறினார்கள்.


பிறர் நலம் விரும்புவார்

உண்மை முஸ்லிம் இத்தகைய இழிகுணங்களிலிருந்து விலகியிருப்பதுடன் சமூக மக்கள் அனைவடமும் நன்மையை நாடுவது போன்ற ஆக்கப்பூர்வமான பண்புகளால் தன்னை அலங்கரித்துக் கொள்வார். ஏனெனில் மார்க்கம் என்பதே பிறர் நலம் பேணுவதுதான். நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தையே வலியுறுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மார்க்கம் என்பது பிறர்நலம் பேணுவதாகும்'' நாங்கள் கேட்டோம் ‘‘யாருக்கு அல்லாஹ்வின் தூதரே?'' நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களின் பொதுமக்களுக்கும்'' என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

கண்ணியமிகு ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவது ஜகாத் கொடுப்பது, முஸ்லிம்கள் அனைவருக்கும் நலம் நாடுவது ஆகியவைகளுக்காக வாக்குப் பிரமாணம் செய்தார்கள்.

ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நாங்கள் தொழுகையை நிலை நாட்டுவதற்கும், ஜகாத் கொடுப்பதற்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவதற்கும் நபி (ஸல்) அவர்களிடம் வாக்குப் பிரமாணம் செய்தோம்.'' (ஸஹீஹுல் புகாரி)

தொழுகை மற்றும் நோன்புடன் பிறருக்கு நன்மை நாடுவதையும் இணைத்ததன் மூலம் அதற்கு இஸ்லாமில் எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மறுமை நாளில் நல்ல முடிவை விரும்பும் இறையச்சமுடைய முஸ்லிமின் பண்புகளில் இது குறிப்பிடத் தக்கதாகும். ஒரு முஸ்லிம் ஏனைய முஸ்லிம்களின் பொறுப்பை நிர்வகிக்கும்போது இந்த நற்குணம் அவல் மிகைத்து நிற்க வேண்டும். இதுதான் அவரது மறுமையின் மீளுமிடத்தை உறுதி செய்கிறது. இதுதான் சுவனம் புகுவதற்கான திறவு கோலாகும். உலக வாழ்வில் இப்பண்புகளைப் பேணாதவர் மறுமையில் சுவனம் புகுவது தடையாகிவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு அடியானை அல்லாஹ் சிலருக்கு அதிகாரியாக ஆக்கியிருந்தான். அவன் தனது அதிகாரத்தின் கீழ் இருந்தவர்களுக்கு மோசடி செய்த நிலையில் மரணமடைந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விடுகிறான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில்: ‘‘தனது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் மீது முழுமையாக நன்மையை நாடாதவன் சுவனத்தின் வாடையைக்கூட நுகரமாட்டான்'' என்று கூறப்பட்டுள்ளது.

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில்: ‘‘முஸ்லிம்களின் காரியங்களுக்கு பொறுப்பேற்றுள்ள தலைவன் அவர்களுக்காக உழைக்காமலும், அவர்களுக்கு நலம் நாடாமலும் இருந்தால் அவன் அம்மக்களுடன் சுவனம் புகமாட்டான்.''
அதிகாரம் பெற்றவருக்கும், முஸ்லிம்களின் விஷயங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளவருக்கும் மகத்தான கடமையை இஸ்லாம் விதித்துள்ளது. 

‘‘நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப்பற்றி விசாரிக்கப்படுவீர்கள்'' என்ற நபிமொழி சமூகத்தில் ஒவ்வொரு மனிதரும் கடமையைக் கொண்டிருக்கிறார் என்பதை வலியுறுத்துகிறது. அல்லாஹ்வின் நியதிக்கேற்ப மேற்கூறிய அடிப்படைகளை இஸ்லாமிய சமூகம் பின்பற்றி வரவேண்டும். அப்போதுதான் மனிதகுலம் உயர்வடையும். உலகில் நிம்மதியும் சுபிட்சமும் பெருகும்.


வாக்குறுதியை நிறைவேற்றுவார்

இஸ்லாமிய நேர்வழியை முற்றிலும் கடைபிடிக்கும் முஸ்லிம் ஒப்பந்தத்தைப் பேணி, வாக்குறுதியை நிறைவேற்றுவார். வாக்கை நிறைவேற்றுவது முஸ்லிமின் சமுதாய வெற்றிக்கான அடிப்படையும் மனிதகுலத்தின் உயர்வுக்கான வழியுமாகும்.
முஸ்லிம் வாக்குறுதியைப் பேணுவதில் முதன்மையானவராக இருப்பார். வாக்குறுதியை நிறைவேற்றுவது இஸ்லாமிய நற்பண்புகளில் தலையாயதாகும். ஒருவருடைய ஈமான் சீரானது என்பதற்கும், அவரது இஸ்லாம் அழகானது என்பதற்கும் இப்பண்பே சான்றாகும். அதை கடைபிடிப்பது ஈமானின் அடையாளமாகும். அதைப் புறக்கணிப்பது நயவஞ்சகத்தனத்தின் அடையாளமாகும்.

விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்... (அல்குர்ஆன் 5:1)

....உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும். (அல்குர்ஆன் 17:34)

இன்றைய காலகட்டத்தில் பல முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது போல ஒப்பந்தம், வாக்குறுதி என்பது காற்றில் பறக்கவிடப்படும் வார்த்தையல்ல. அல்லாஹ்விடம் விசாரணை செய்யப்படும் மிகப்பெரியபொறுப்பாகும்.

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்.... (அல்குர்ஆன் 16:91)

இவ்விடத்தில் மனிதர்களிடம் செய்யப்படும் உடன்படிக்கையை அல்லாஹ்வுடன் செய்யப்படும் உடன்படிக்கையைப் போன்று கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணம் உடன்படிக்கையின் முக்கியத்து வத்தையும், அதன் கண்ணியத்தையும், அது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதையும் வலியுறுத்துவதேயாகும்.

விசுவாசிகளே! நீங்கள் செய்யாத காரியங்களை (ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும்பாவமாக இருக்கின்றது. (அல்குர்ஆன் 61:2,3)

வாக்குறுதிக்கு மாறுசெய்வதும் அதை நிறைவேற்றாமலிருப்பதும் அல்லாஹ் தனது அடியார்களிடம் மிகவும் வெறுக்கும் பெரும்பாவமாகும். 

அல்லாஹ் மேற்கூறிய திருவசனத்தின் ஆரம்பத்தில் கேள்வி எழுப்புவது அல்லாஹ்வின் கண்டனத்தை வெளிப்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். 1) பேசினால் பொய்யுரைப்பான் 2) வாக்களித்தால் மாறு செய்வான் 3) நம்பினால் மோசடி செய்வான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிமின் ஓர் அறிவிப்பில்: ‘‘அவன் நோன்பிருந்தாலும் தொழுதாலும் அவன் தன்னை முஸ்லிம் எனக் கருதினாலும் சரியே'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முஸ்லிமின் இஸ்லாம் சீரடைவது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைக் கொண்டு மட்டுமல்ல. மாறாக, இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதன் மூலமே சீரடைகிறது. அப்போதுதான் உயர்ந்த நற்பண்புகளும், உன்னதமான நடைமுறைகளும் அவரிடம் பிரதிபலிக்கும். அல்லாஹ்வின் வரம்புக்குள் நின்று, ஏவலை செயல்படுத்தி, விலக்கலைத் தவிர்த்து வாழ்பவராகவும், அல்லாஹ்வின் நேர்வழியை எல்லா நிலையிலும் பின்பற்றுபவராகவும் இருப்பார்.
எனவே உண்மை முஸ்லிமின் வாழ்வில் பொய்யும், வாக்குறுதிக்கு மாறு செய்வதும் ஒப்பந்தங்களில் மோசடி செய்வதும் நிகழாது.

இந்த கசப்பான உண்மையை வியாபாகளும் தொழிலாளர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் மக்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துத் தருவதாக வாக்களித்து, பிறகு அதை நிறைவேற்றுவதில்லை. அவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஒப்பந்தம் செய்து, பிறகு அந்த ஒப்பந்தத்தை முறித்து விடுகிறார்கள்.

பொருள், ரகசியம், வாரிசுரிமை போன்ற விஷயங்களில் வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு மோசடி செய்து விடுகிறார்கள். இது போன்ற குணமுடைய வர்கள் நயவஞ்சகர்களாவர். அவர்கள் தொழுதாலும், நோன்பிருந்தாலும், தங்களை முஸ்லிம்களாக எண்ணிக் கொண்டாலும் சரியே.

‘‘நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்பாகத்தில்தான் இருப்பார்கள்.'' (அல்குர்ஆன் 4:145)


நற்குணமுடையவர்

உண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு உண்டு. நபி (ஸல்) அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல, நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை மிகைப்படுத்திக் கூறத் தூண்டவுமில்லை. நபி (ஸல்) அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு சுட்டிக்காட்டினார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் நபி (ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் ‘சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)

மேலும் கூறினார்கள்: ‘‘உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற் குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)

அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நற்பண்புமிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது கண்களால் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக் கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் ‘‘என் தேவைகளில் சில நிறைவேறவில்லை (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக் கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில், அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக இருந்தார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டு மென்ற கருத்தையும் உறுதிப்படுத்தினார்கள்.
முஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு முறைகளும், உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம் காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான். மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது.

முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின் தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)

நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸாமா இப்னு ஷுரைக் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும். 

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல் அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்களின் சபையில் எங்களில் எவரும் பேசமாட்டார். அப்போது சிலர் வந்து நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?' என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக் கூறினார்கள்.

நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும். நாம் முன்பு கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும் மிகக் கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை, நோன்புக்கு இணையானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)

மற்றோர் அறிவிப்பில்: ‘‘ஒரு அடியாரின் தனது நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவன் அந்தஸ்தை அடைந்து கொள்வார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தங்களது சொல், செயலால் நபி (ஸல்) அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தூண்டினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும்விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள். அபூதர் (ரழி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நற்குணத்தையும் நீண்ட மௌனத்தையும் பற்றிப் பிடித்துகொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)

மேலும் கூறினார்கள்: ‘‘நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள்: ‘‘யா அல்லாஹ் எனது தோற்றத்தை நீயே அழகுபடுத்தினாய். எனது குணத்தையும் அழகுபடுத்துவாயாக'' என்ற துஆவை வழமையாகக் கூறி வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத்)

....(நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர். (அல்குர்ஆன் 68:4)

அல்லாஹு தஆலா தனது திருமறையில் இவ்வாறு கூறியிருந்த போதும் நபி (ஸல்) அவர்கள் தனது குணத்தை அழகுபடுத்துமாறு துஆ செய்ததிலிருந்து நற்குணத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளலாம். 

நற்குணம் என்பது முழுமையானதொரு வார்த்தையாகும். அதனுள் மனிதனை பரிசுத்தப்படுத்தும் குணங்களான வெட்கம், விவேகம், மென்மை, மன்னிப்பு, தர்மம், உண்மை, நேர்மை, பிறர்நலம் நாடுவது, நன்மையில் உறுதி, உளத்தூய்மை, முகமலர்ச்சி போன்ற பல நற்பண்புகள் உள்ளடங்கியுள்ளன.

இஸ்லாமின் சமூகக் கண்ணோட்டத்தைப் பற்றி ஆராய்பவர் அச்சமூகத்தை மேன்மைப்படுத்தும்படியான நற்பண்புகளை வலியுறுத்தும் ஏராளமான சான்றுகளை கண்டுகொள்வார். சமூகத்தில் முஸ்லிம் தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு இஸ்லாம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. பொதுப்படையானதாக இல்லாமல் சமுதாயத்தின் ஒவ்வொரு நபர்களின் ஒவ்வொரு செயலிலும் அப்பண்புகளை இஸ்லாம் வளரச் செய்திருக்கிறது. சமூகம் அனைத்தையும் நற்பண்புகளால் அலங்கத்த சாதனையை இஸ்லாமை தவிர வேறெந்த கொள்கையாலும் சாதிக்கமுடியவில்லை.

இறையச்சமுள்ள முஸ்லிம் சமூகத்தில் தனித்தன்மை பெற்றுத் திகழ்வதற்காக, இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள மார்க்க நெறிகளைப் பின்பற்றுவது சிரமமானதல்ல என்பதை அதன் சான்றுகளை ஆராய்பவர்கள் அறிந்துகொள்வர்.

இறைவன் ஏற்படுத்திய வரம்புக்குள் நின்று, அவனது விலக்கலைத் தவிர்த்து, மார்க்க நெறிகளை முழுமையாக ஏற்று, முஸ்லிமின் இலக்கணமாகத் திகழ்பவன் ஒவ்வொரு செயலிலும் நற்பண்புகள் பிரகாசிக்கின்றன. முஸ்லிம் மோசடிக்காரராக, வஞ்சகராக, ஏமாற்றுபவராக, பொறாமைக்காரராக இல்லாமல் அனைத்து மக்களிடமும் நற்குணத்துடன் நடந்துகொள்வார்.
 

நாணமுடையவர்

வெட்கம் என்ற பண்பில் முன்மாதிரியான நபி (ஸல்) அவர்களையே உண்மை முஸ்லிம் பின்பற்றுவார். அபூஸயீதுல் குத்ய்ம் (ரழி) கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பிடிக்காத ஏதேனும் ஒரு காரியத்தைக் கண்டால் அதை அவர்களது முகத்தில் நாம் தெரிந்து கொள்வோம்.'' (ஸஹீஹுல் புகாரி)

வெட்கமென்பது மனிதனை இழிவான செயல்களிலிருந்தும் கடமைகளில் குறைவு செய்வதிலிருந்தும் தடுக்கும் உயரிய பண்பாகும். வெட்கம், மனிதனுக்கும் அவன் வாழும் சமூகத்திற்கும் நன்மையையே ஏற்படுத்தும். அதனால்தான் வெட்கத்தைப் பற்றி பல நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நபி (ஸல்) அவர்கள் அருளியதாக இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) அறிவிக்கிறார்கள்: ‘‘வெட்கம் நன்மையைத்தான் தரும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது: ‘‘வெட்கம் முற்றிலும் நன்மையே'' அல்லது ‘‘வெட்கம் முழுமையும் நன்மையே'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘ஈமான் எழுபதுக்கும் மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். அதில் சிறப்பானது ‘லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற கலிமாவாகும். அதில் தாழ்ந்தது பாதையில் இடையூறு தருபவற்றை அகற்றுவதாகும். வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)

முஸ்லிம் வெட்க உணர்வுடையவர். மக்களை சிரமப்படுத்தும் அருவருப்பான எந்தச் செயலும் அவரிடம் காணப்படாது. பிறரின் எந்தவொரு உரிமையிலும் குறைவு செய்யமாட்டார். ஏனெனில், வெட்கம் இவ்வாறான செயல்களுக்குத் திரையாகிறது. அவர் அல்லாஹ்வுக்காகவே வெட்கம் கொள்கிறார். தனது ஈமானில் அநீதி கலந்துவிடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பார்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்ளத் தூண்டும் இப்பண்புகள் ஏனைய மனிதர்களிடமிருந்து முஸ்லிமை பிரித்துக் காட்டுகிறது. இந்த வெட்கமே எல்லாக் காலங்களிலும், எல்லா சூழ்நிலையிலும் முஸ்லிமிடம் ஆழப்பதிந்திருக்கும். தனது செயல்களின் வெளிரங்கத்தைப் பார்த்து மனிதர்கள் விமர்சனம் செய்வார்கள் என்பதைவிட, தனது ரகசியங்களை அல்லாஹ் முற்றிலும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வால் ஏற்படுவதே முஸ்லிமின் வெட்கம். இதுவே முஸ்லிம்களின் பண்புகளுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களின் பண்புகளுக்குமிடைய உள்ள வித்தியாசமாகும்.


மென்மையானவர்

உண்மை முஸ்லிம், மனிதர்களிடம் மென்மையாக, நிதானமாக, நளினமாக நடந்து கொள்வார். அவரது மென்மை நேசிக்கப்படும் அவரது நளினம் போற்றப்படும் அவரது நிதானம் புகழப்படும். ஏனெனில், இவை புகழத்தக்க நற்பண்புகளாகும். அதன்மூலம் மனிதர்களை நெருங்கி அவர்களது நேசத்திற்குரியவராகத் திகழ முடியும். அல்லாஹ் தனது அடியார்களான முஃமின்களிடம் அப்பண்புகளை விரும்புகிறான்.

நன்மையும் தீமையும் சமமாகி விடாது. ஆதலால் தீமையை நீர் நன்மையைக்கொண்டே தடுத்துக்கொள்ளும். அவ்வாறாயின் உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சிநேகிதனைப் போல் காண்பீர். பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும்பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்ஆன் 41:34,35)


மென்மையை வலியுறுத்தும் சான்றுகள், முஸ்லிமின் சமுதாய வாழ்வில் பிரதிபலிக்க வேண்டிய உயரிய பண்பு என்பதை உறுதிப் படுத்துகிறது. நளினம் என்பது அல்லாஹ்வின் உயரிய பண்புகளில் ஒன்றாகும். அது தனது அடியார்களிடம் பிரதிபலிப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.

நபி (ஸல்) கூறினார்கள்: ‘‘அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நளினம் மிகவும் உயரிய பண்பாகும். வேறெந்த பண்புக்கும் அளிக்காத நற்கூலியை அல்லாஹ் அதற்கு வழங்குகிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)

மென்மை அனைத்துக் காரியங்களையும் அலங்கரிக்கக் கூடியது, அதை அனைத்து இதயங்களும் நேசிக்கும். மென்மை அகற்றப்பட்டால் வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

பிற மனிதர்களுடன் பழகும்போது மென்மையை கைக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் போதித்தார்கள். அடியார்களிடம் மென்மையை வெளிப்படுத்தும் கிருபையாளனான அல்லாஹ்வின் மார்க்கத்தின்பால் அழைக்கும் முஸ்லிம், மனிதர்களிடம் மலர்ந்த முகத்துடனும் மென்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வளவுதான் கோபத்தைத் தூண்டுவதாக இருந்தாலும் மென்iiயை விட்டுவிடக் கூடாது.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு கிராமவாசி மஸ்ஜிது (நபவி)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார் அவரைத் தடுப்பதற்கு மக்கள் ஆவேசமடைந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள்! அவரது சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் இலகுபடுத்தவே அனுப்பப்பட்டீர்கள். சிரமப்படுத்த அனுப்பப்படவில்லை'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மென்மையும், நளினமும், பெருந்தன்மையும் மூடிக்கிடக்கும் இதயங்களைத் திறக்கும் திறவுகோல்களாகும். முரட்டுத்தனத்தாலும், சிரமப்படுத்துவதாலும், மிரட்டுவதாலும் எதனையும் சாதித்துவிட முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நற்செய்தி கூறுங்கள்! வெறுப்படைய செய்யாதீர்கள், எளிதாக நடந்து கொள்ளுங்கள், சிரமப்படுத்தாதீர்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மென்மையையும், நளினத்தையும், முகமலர்ச்சியையும் மக்கள் நேசிப்பார்கள். கடுமையையும், முரட்டுத்தனத்தையும் மக்கள் வெறுப்பார்கள் என்பதுதான் நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றுக்குக் காரணமாகும்.

.... கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள்... (அல்குர்ஆன் 3:159)

இது ஒரு நிரந்தர உபதேசமாகும். உறுதி செய்யப்பட்ட நிலையான வழிமுறையாகும். நேர்வழியின்பால் மனிதர்களை அழைப்பதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு அழைப்பாளருக்குமான அவசியப் பண்பாகும். அப்பண்பின் மூலம் அவர்களது இதயங்களை வெல்ல முடியும். அம்மனிதர்கள் அழிச்சாட்டியம் செய்யும் வம்பர்களாக இருப்பினும் அவர்களிடமும் மென்மையான அணுகுமுறையையே மேற்கொள்ள வேண்டும்.

இக்கருத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களையும் ஃபிர்அவ்னிடம் அனுப்பிவைத்தபோது கூறினான்.

‘‘நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான். நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் பயந்து நல்லுணர்ச்சி பெறலாம்'' என்றும் கூறினோம். (அல்குர்ஆன் 20:43,44)

இம்மார்க்கத்தின் வழிகாட்டுதலில் மென்மை என்பது நன்மையின் சங்கமமாகும். எவர் அதனை அருளப்பட்டாரோ அவர் நன்மை அனைத்தையும் அருளப்பட்டவராவார் அதனை அருளப்பெறாதவர் நன்மையிலிருந்து அகற்றப்பட்டவராவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

தனி மனிதர், குடும்பம், மற்றும் சமுதாயம் இந்த மென்மையை கடைபிடிக்கும்போது நன்மை அவர்களை சூழ்ந்து கொள்ளும். இத்தன்மை கொண்டவர்கள் மக்களில் தனித்தன்மை வாய்ந்தவர்களாக காட்சியளிப்பார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.'' மற்றோர் அறிவிப்பில்: ‘‘ஒரு குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: ‘‘ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)

மனிதனிடம் அமைய வேண்டிய பண்புகளில் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தன்மையுடைய பண்பைவிட வேறெந்த பண்பு மகத்தானது?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நரகத்திற்கு ஹராமாக்கப்பட்ட ஒருவரைப் பற்றி அல்லது எவர் மீது நரகம் ஹராமாக்கப்படுமோ அவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மக்களை நெருங்கியிருக்கும் மென்மையான, இலகுவான, நளினமான ஒவ்வொருவர் மீதும் நரகம் ஹராமாக்கப்படும்.'' (ஸுனனுத் திர்மிதி)

மனிதனுக்கு நற்பண்புகளை வழிகாட்டும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகள், அறுக்கப்படும் மிருகங்களிடம் கூட மென்மையாக நடக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. இறையச்சமுள்ள நல்லோர்கள் அடையப் போகும் ‘அல் இஹ்ஸான்' என்ற உயர்ந்த தன்மையில் இந்த மென்மையை இஸ்லாம் குறிப்பிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ் எல்லா விஷயங்களிலும் உபகாரத்தை விதித்திருக்கிறான். நீங்கள் கொலைத் தண்டனையை நிறைவேற்றினால் அழகிய முறையில் நிறைவேற்றுங்கள். பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுத்துக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவர் கத்தியை நன்கு தீட்டிக் கொள்ளட்டும். அதனால் பிராணிகளுக்கு (சிரமத்தை) இலேசாக்குங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அறுக்கப்படும் பிராணியிடம் மென்மையாக நடந்துகொள்வது அறுப்பவன் உள்ளத்திலுள்ள மென்மையைக் காட்டுகிறது. மிருகங்களிடமும் மென்மையாக நடந்துகொள்பவர் மனிதர்களிடம் மிக மென்மையாகவும் மிருதுவாகவும் நடந்துகொள்வார் என்பதில் சந்தேகமில்லை. 

இத்தொலைநோக்குடன்தான் மிருகங்களிடம்கூட மிருதுவாக நடக்க வேண்டுமென இஸ்லாம் வழிகாட்டுகிறது.


கருணையாளர்

தனது மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை ஏற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதை அறிவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.'' மேலும் கூறினார்கள்: ‘‘மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.'' (முஃஜமுத் தப்ரானி)

மற்றோர் ஹதீஸில் வந்துள்ளது: ‘‘துர்பாக்கியவானிடமிருந்துதான் இரக்ககுணம் அகற்றப்படும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.

அபூ மூஸா அல் அஷ்அ (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: ‘‘நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்'' என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)

இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதன் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், ஆழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஓயாது அடித்துகொண்டே இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். ‘குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே' என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின் அழுகையால் அதன் தாய்க்கு ஏற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) ‘‘எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள் நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை'' என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் ‘‘எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல ‘குழந்தைகளை முத்தமிடமாட்டேன்' என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: ‘‘உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்கு வதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் ஏற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் ‘எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது' என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் ‘‘விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?'' என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘‘உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் ஓர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு'' என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)

இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டும் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்துகொள்ள மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘பூமியில் உள்ளோர் மீது இரக்கம் காட்டுங்கள். வானிலுள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்.'' (முஃஜமுத் தப்ரானி)
 

மன்னிக்கும் மாண்பாளர்

தனது மார்க்கத்தின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட உண்மை முஸ்லிம், மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்வார். மன்னிப்பது மனிதனின் உயர் பண்பாகும். அது குறித்து வலியுறுத்தும் திருக்குர்ஆனின் வசனங்கள் ஏராளம். அந்தப் பண்புகளைப் பெற்றவர்களை இஸ்லாம் ‘இறையச்சமுள்ள சிறந்த முன்மாதிரியான முஸ்லிம்' என்றும் ‘அல்லாஹ்வின் அன்பையும் திருப்பொருத்தத்தையும் அடைந்தவர்கள்' என்றும் கூறுகிறது.

அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)

இதன் காரணமாவது அவர்கள் தங்களது கோபத்தை தடுத்துக் கொள்வார்கள். போட்டி, பொறாமை கொள்ளாமல், பகைமை, பொறாமையின் நெருப்புக் கங்குகளை ‘மறந்து மன்னித்துப் புறக்கணித்தல்' என்ற தண்ணீரால் அணைத்து விடுவார்கள். பரிசுத்த மனதுடன் நிம்மதிப் பெருங்கடலில் நீந்தி அல்லாஹ்வின் திருப்பொருத்தம், அல்லாஹ்வின் அன்பு என்ற கரையைத் தொடுவார்கள்.
எவரது உள்ளங்கள் இஸ்லாம் என்ற நேர்வழியின் திறவுகோல் மூலம் திறக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டுமே மன்னிப்பின் உச்சத்துக்கு செல்ல முடியும். அவர்களது மனம் நற்குணத்தால் மலர்ந்திருக்கும். அவர்கள் தங்களது நீதம் செலுத்துதல், உதவி செய்தல், பிறர் தவற்றை மன்னித்தல் போன்ற நற்பண்புகளால் அல்லாஹ்விடமுள்ள மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் அடைந்து கொள்வார்கள்.
மிக உன்னதமான உயர்வின்பால் இட்டுச் செல்லும் மன்னித்தல் என்ற அந்த சிரமமான பாதையில் மனித மனங்களைத் திருப்புவதற்கு குர்ஆன் ஓர் எளிய வழிமுறையை கற்றுத் தந்துள்ளது.

ஒரு குற்றத்திற்கு அதற்குரிய தண்டனை என்ற சட்டத்தின்படி அநியாயம் இழைக்கப்பட்டவன் பழிதீர்த்துக் கொள்ள மார்க்கம் அனுமதிக்கிறது. ஆனால் அநியாயம் இழைக்கப்பட்டவர் பழிவாங்கும் உணர்ச்சிக்கு செவிசாய்க்காமல் மன்னித்து சகித்துக் கொண்டால் அவருக்கு உயரிய அந்தஸ்து கிடைக்குமென்று கூறி அவன் மனதில் மன்னிக்கும் ஆசையை இஸ்லாம் வளர்க்கிறது.

அவர்களில் எவரையும் (எவரும்) அக்கிரமம் செய்தால் அதற்கு அவர்கள் (சரியான) பழிவாங்கியும் விடுவார்கள்.

தீமைக்குக் கூலியாக அதைப் போன்ற தீமையையே. (அதற்கு அதிகமாக அல்ல) எவரேனும் (பிறரின் அக்கிரமத்தை) மன்னித்து அவருடன் சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) வரம்பு மீறுவோர்களை நேசிப்பதில்லை.

எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அக்கிரமத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால் அதனால் அவன் மீது யாதொரு குற்றமுமில்லை.

குற்றமெல்லாம் அளவுமீறி மனிதர்கள் மீது அக்கிரமம் செய்து நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோர்மீதுதான். இத்தகையோருக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.

எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியமாகும். (அல்குர்ஆன் 42:39-43)

அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் தங்களது மகளாரான ஆயிஷா (ரழி) அவர்களை சில பாவ நாவுகள் அவதூறு கூறி காயப்படுத்தியபோது அபூபக்கர் (ரழி) அவர்களின் இதயத்தில் கவலைகள் அலைமோதின. அவதூறு கூறியவர்களுக்கு தான் செய்துவந்த உதவியை துண்டித்து விடுவதாக சத்தியம் செய்தார்கள். 

அப்போது அல்லாஹ் தனது அருள் வசனத்தை இறக்கி வைத்தான்:
உங்களில் செல்வந்தரும், (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையோரும் தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 24:22)

இஸ்லாம், தனது உறுப்பினர்கள் தண்டிப்பது, கண்டிப்பது, சிறிய விஷயங்களுக்கெல்லாம் நீதி தேடி செல்வது, பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்காது. மாறாக பொறுமையும், மன்னிப்பும், பெருந்தன்மையுமான நடைமுறைகளையே மேற் கொள்ளும்படி வலியுறுத்துகிறது.

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால் நபியே! தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளும். அவ்வாறாயின், உம்முடைய கொடிய விரோதியை அதே சமயத்தில் உம்முடைய மெய்யான, மிக்க நெருங்கிய சினேகிதனைப்போல் காண்பீர்.

பொறுமையுடையோர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி பெரும் பாக்கியம் உடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள். (அல்குர்ஆன் 41:34,35)

ஒரு தீமையை எப்போதும் தீமையால் எதிர்கொண்டால் மனித மனங்கள் குரோதங்களுக்கும், பகைமைக்கும் ஆளாகிவிடும். அதே தீமையை நன்மையால் எதிர்கொண்டால் கோப ஜுவாலைகள் அணைந்து, மனம் கொதிப்படைவதிலிருந்து அமைதியாகி, குரோதமெனும் அழுக்குகளிலிருந்து தூய்மையாகிவிடும். அதன்மூலம் கொடும் விரோதிகளான இருவர் ஒருவரையொருவர் நேசிக்கும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். இது தீமைகளைத் தடுத்துக்கொள்ள மிக அழகிய வழியாகும். ஆனால் இப்பண்பு பெரும் பாக்கியசாலிக்கே சாத்தியமாகும். அதையே அல்குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.
இது இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு முஃமினிடம் அமைந்திருக்க வேண்டிய பண்பாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஃமின் தனது கோப உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அழகிய முறையில் மறந்து, மன்னித்துவிட வேண்டும்.
...நீர் கண்ணியமான முறையில் புறக்கணித்து வாரும். (அல்குர்ஆன் 15:85)

இந்த மனிதநேயப் பண்பை வலியுறுத்தி அது முஸ்லிம்களின் இதயத்தில் குடிகொள்ள வேண்டுமெனக்கூறும் ஏராளமான வசனங்கள் திருமறையில் காணக்கிடைக்கின்றன. முஸ்லிம்களின் வழிகாட்டியும் தலைவருமான நபி (ஸல்) அவர்களும் இப்பண்புகளைக் கைக்கொண்டு பிறரையும் தூண்டினார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடும்போதே தவிர (தனிப்பட்ட முறையில்) தங்கள் கரத்தால் எவரையும் அடித்ததில்லை. எந்தவொரு பெண்ணையும் ஊழியரையும் அடித்ததேயில்லை. அவர்களுக்கு ஏதேனும் துன்பம் விளைவித்ததற்காக எவரையும் பழிவாங்கியதில்லை. அல்லாஹ்வின் கட்டளைகள் தகர்க்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அல்லாஹ்வுக்காக பழி வாங்கியுள்ளார்கள்''. (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கீழ்காணும் அல்லாஹ்வின் கட்டளைக்கு செவிசாய்த்தார்கள்.
நபியே! இந்த அறிவீனர் (களின் செயல்)களை நீர் மன்னித்துப் புறக்கணித்துவிட்டு (பொறுமையையும் கைகொண்டு, மற்றவர்கள்) நன்மையை (ச் செய்யும்படி) ஏவி வருவீராக! (அல்குர்ஆன் 7:199)

..... (நபியே! தீமையை) நீர் நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளும்... (அல்குர்ஆன்: 41:34)

மன்னித்தல் என்பது அகிலங்களைப் படைத்து பரிபாலிப்பவனின் தன்மையாகும். அதை மனிதர்களிடையேயும் விசாலப்படுத்த வேண்டும். 

அவர்கள் தீமையை தீமையால் எதிர்கொள்ளாமல் அறிவீனர்களை மன்னிப்பதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களோடு நடந்து சென்று கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரானி போர்வை ஒன்றை அணிந்திருந்தார்கள். அதை ஒரு கிராமவாசி பிடித்துக்கொண்டு மிகக்கடுமையாக இழுத்தார். நான் நபி (ஸல்) அவர்களின் புஜத்தைப் பார்த்தேன். கடுமையாக இழுத்ததன் காரணத்தால் அதில் போர்வையின் ஓரத்தின் அடையாளம் பதிந்திருந்தது. பின்பு அந்த கிராமவாசி ‘‘முஹம்மதே! உம்மிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்க உத்தரவிடுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பி சிரித்தவர்களாக அவருக்கு சில அன்பளிப்புகளைக் கொடுக்க உத்தரவிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் மன்னிக்கும் மாண்பு மிக ஆழமானதாகும். தனக்கு விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொடுத்தனுப்பிய யூதப் பெண்ணையும் மன்னித்தார்கள்.
அதன் விபரமாவது: ஒரு யூதப்பெண் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்து சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக அனுப்பி வைத்தாள். 

அதை நபி (ஸல்) அவர்களும் சில நபித் தோழர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடம் ‘‘அதை சாப்பிடாதீர்கள் அதில் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது'' என்றார்கள்.

பிறகு அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாள். அவளிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் ‘‘நீ இவ்வாறு செய்யக் காரணமென்ன?'' அவள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரா என்பதை அறிய விரும்பினேன். நீங்கள் நபியாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுத்துவிடுவான் விஷம் உங்களுக்குத் தீங்களிக்காது. நீங்கள் நபியாக இல்லையென்றால் உம்மிடமிருந்து நாங்கள் நிம்மதி அடைந்து விடுவோம்'' என்றாள். அப்போது நபித்தோழர்கள் ‘‘அவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘வேண்டாம்'' என்று கூறி மன்னித்து விட்டார்கள்.

தௌஸ் என்ற கூட்டத்தினர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து கொண்டிருந்தனர். அந்தக் குலத்தைச் சேர்ந்த துஃபைல் இப்னு அம்ரு (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், ‘‘தௌஸ் கூட்டத்தினர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து, சத்தியத்திற்குக் கட்டுப்பட மறுத்து விட்டனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்'' என வேண்டிக்கொண்டார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை நோக்கி அமர்ந்தவர்களாக தனது திருக்கரத்தை உயர்த்தினார்கள். அங்கிருந்தவர்கள், ‘‘அந்த தௌஸ் கூட்டத்தினர் அழிந்து விட்டார்கள்'' என்று கூறினார்கள். எனினும் அல்லாஹ்வின் அடியார்கள் மீது கருணையும், பரிவும் கொண்ட காருண்ய நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத்தினர் அல்லாஹ்வின் தண்டனைக்கு இலக்காவதை விரும்பாமல், ‘‘யா அல்லாஹ்! தௌஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ்! தௌஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக. யா அல்லாஹ்! தௌஸ் கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டி என்னிடம் வரச்செய்வாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உறவை முறித்தல், புறக்கணித்தல், நேர்வழியைத் தடுத்தல் போன்ற இழி குணங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அதை மன்னிப்பு, மற்றும் பெருந்தன்மையின் மூலம் எதிர்கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை முஸ்லிம்களின் இதயங்களில் நபி (ஸல்) அவர்கள் விதைத்தார்கள். 

மனிதர்கள் கடினத்தன்மைக்கு கட்டுப்படுவதைவிட மிக அதிகமாக அன்பிற்கு கட்டுப்படுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளங்கி இருந்தார்கள்.

எனவேதான் உக்பா இப்னு ஆமிர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் மிகச் சிறப்பானதை எனக்கு அறிவித்துத் தாருங்கள்'' என வேண்டிக்கொண்டபோது, நபி (ஸல்) அவர்கள், ‘‘உக்பாவே! உம்மைத் துண்டிப்பவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து, உமக்குக் கொடுக்காதவர்களுக்குக் கொடுத்து வருவீராக! உமக்கு அநீதமிழைத்தவர்களைப் புறக்கணித்து விடுவீராக!'' என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில், ‘‘உமக்கு அநீதமிழைப்பவரை மன்னித்து விடுவீராக!'' என்று வந்துள்ளது. (முஸ்னத் அஹ்மத்)


பெருந்தன்மையாளர்

தனது மார்க்கக் கட்டளைகளை ஏற்று நடக்கும் உண்மை முஸ்லிம், மனிதர்களுடன் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார். ஏனெனில் இம்மை மறுமையின் நலன்களைக் கொண்டு வருவதில் பெருந் தன்மைக்கு நிகரான பண்பு வேறில்லை. பெருந்தன்மையான, மென்மையான நடத்தை மனிதமனங்களை மிக ஆழமாக ஊடுருவிச் செல்லும் என்பது நபி (ஸல்) அவர்களின் போதனையாகும். இப்பண்புகளின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியையும், மன்னிப்பையும் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘விற்கும் போதும், வாங்கும்போதும், கடன் வசூலிக்கும்போதும் பெருந்தன்மை யுடன் நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!'' (ஸஹீஹுல் புகாரி)

அபூ மஸ்வூத் அல் அன்சாரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘உங்களுக்கு முன்னிருந்தவர்களில் ஒரு மனிதர் விசாரணை செய்யப்பட்டார். அவரிடம் எந்த நன்மையும் இல்லை. எனினும் அவர் மனிதர்களிடம் பழகும் ஒரு செல்வந்தராக இருந்தார். வறியவர் களிடமிருந்து வரவேண்டிய கடன்களை ரத்து செய்து விடுமாறு தனது அடிமைகளுக்கு உத்தரவிடுபவராக இருந்தார். அல்லாஹு தஆலா அவ்வாறு மன்னிப்பதற்கு அவரைவிட நானே மிகத் தகுதியானவன். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இந்தப் பண்பு மனிதனின் நற்செயல்களை நிறுத்துப் பார்க்கும் தராசில் எவ்வளவு கனமானது! மறுமையின் மிகச் சிரமமான நேரத்தில் இந்த நற்பண்பு மனிதனுக்கு எவ்வளவு அவசியமானது!


மலர்ந்த முகமுடையவர்

மென்மையாக, தாராளத்தன்மையுடன் நடந்து கொள்ளும் முஸ்லிம் மக்களிடையே மலர்ந்த முகத்துடன் பழகவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நற்செயல்களில் எதையும் அற்பமாகக் கருதாதே. அது உமது சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

பிரபல ஸஹாபியான ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு என்னை அவர்கள் தடுத்ததில்லை. மேலும் அவர்கள் புன்னகை செய்யாமல் என்னைப் பார்த்ததே இல்லை.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

எந்தச் சமூகம் பெருந்தன்மையையும் நேசத்தையும், மலர்ந்த முகத்தையும் வலியுறுத்துகிறதோ அதுதான் உயர்ந்த, உறுதியான, பரஸ்பர அன்பு கொண்ட மனித சமுதாயமாகத் திகழும். அதில் மனிதர் கௌரவிக்கப்படுவார். உயர் பண்புகள் மதிக்கப்படும். 

மனிதநேயம் உறுதி அடையும். அதுதான் உறுதியான இஸ்லாமிய சமூக அமைப்பாகும்.
அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தச் சமூகத்திற்கும், வன்னெஞ்சமுள்ள உலகாதாயத்தையே நோக்கமாகக் கொண்ட சமூகத்திற்குமிடையே மிகப் பெரியஇடைவெளியை நாம் காண்கிறோம். அச்சமூகத்தில் வாழ்பவர் அண்டை வீட்டாரையோ உறவினரையோ இலட்சியம் செய்வதில்லை. நெருங்கிய நண்பரையும் புன்னகையுடன் வரவேற்காமல் எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் பொருளைத் தேடி ஓடுவதே வாழ்வின் இலட்சியம் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறார்.


நகைச்சுவையாளர்

பற்றுள்ள முஸ்லிம் சக மனிதர்களிடம் நேச உணர்வுடனும், மென்மையான நகைச்சுவையுடனும் நடந்துகொள்ள வேண்டும். அப்பண்புகள் கடுமையோ வன்மையோ இல்லாமல் பிறரை பாதிக்காத வகையில் முகமலர்ச்சியுடன் அமைய வேண்டும். அந்த நகைச்சுவை உண்மையின் வட்டத்தைத் தாண்டி விடாமல் இஸ்லாம் வகுத்த உண்மையின் எல்லைக்குள் அமைந்திருக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் நகைச்சுவை உணர்வு கொண்டிருந்தார்கள். திருத்தூதரிடம் அந்தப் பண்பைக் கண்ட நபித்தோழர்கள் ஆச்சரியத்துடன், ‘‘இறைத்தூதரே! நீங்கள் எங்களுடன் நகைச்சுவையாக நடந்து கொள்கிறீர்களே!'' என வினவினர். அப்போது திருநபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உண்மையைத் தவிர வெறெதனையும் கூற மாட்டேன்'' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நகைச்சுவை இயல்பைப் பெற்றிருந்தார்கள். ஆனால் விளையாட்டாகக் கூட அதில் பொய்யைக் கலந்துவிடாமல் உண்மையையே கூறி வந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் அடிச்சுவட்டில் நபித்தோழர்களும் அந்த இயல்பைக் கொண்டிருந்தார்கள்.

இது குறித்து ஹதீஸ் நூல்களிலும், நபி (ஸல்) அவர்களின் வரலாற்று நூல்களிலும் பல்வேறு நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. நபி (ஸல்) அவர்கள் தமது தோழன் மகனான ‘அபூ உமைர்' என்ற சிறுவரிடம் விளையாட்டாக நடந்து கொண்டு பரிகாசம் செய்திருக்கிறார்கள். அந்தச் சிறுவர் குருவி ஒன்றை வளர்த்து வந்தார். அது ஒரு நாள் இறந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரைக் கவலை தோய்ந்த முகத்துடன் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘‘அபூ உமைரே! உன்னைக் கவலையானவராகக் காண்கிறேனே?'' என்றார்கள். அங்கிருந்தோர், ‘‘அவர் விளையாடிக் கொண்டிருந்த குருவி இறந்து விட்டது அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினார்கள். அதிலிருந்து அவரைக் காணும் போதெல்லாம் நகைச்சுவையாக, ‘‘அபூ உமைரே! உமது நுஹைர் (குட்டிக் குருவி) என்னவாயிற்று?'' என்று கேட்பார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

ஒரு மனிதர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் பயணிப்பதற்கு ஒரு ஒட்டகம் தாருங்கள்'' எனக் கேட்டுக்கொண்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கேலியாக, ‘‘நான் உமக்கு ஒரு பெண் ஒட்டகையின் குட்டியைத் தருகிறேன்'' என்று கூறினார்கள். அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! குட்டியை வைத்து நான் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீர் கேட்கும் ஒட்டகமும் ஒரு பெண் ஒட்டகத்தின் குட்டிதானே...'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘ஜார் என்ற கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு தனது கிராமத்திலிருந்து அன்பளிப்புகளை எடுத்து வருவார். அவர் திரும்பும்போது நபி (ஸல்) அவர்களும் அவருக்கென பிரயாண தேவைகளைத் தயார் செய்து தருவார்கள். நபி (ஸல்) அவர்கள், ஜார் நமக்கு கிராமத்துத் தோழர் நாம் அவருக்கு பட்டணத்துத் தோழர்கள் என்றார்கள். அவரை மிகவும் நேசிப்பார்கள். அவர் அம்மை நோயால் முகம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தனது பொருள்களை விற்றுக்கொண்டிருந்த பொழுது நபி (ஸல்) அவர்கள் பின்னால் வந்து அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். அவரால் யாரென்று திரும்பிப்பார்க்க முடியவில்லை. அவர், ‘‘யாரது? என்னை விடுங்கள்'' என்று கூறிவிட்டு, திரும்பிப் பார்த்தபொழுது நபி (ஸல்) அவர்கள் என அறிந்து கொண்டார். உடனே நபி (ஸல்) அவர்களிட மிருந்து விலகாமல் அவர்களது நெஞ்சுடன் தனது முதுகைச் சேர்த்துக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த அடிமையை வாங்கிக் கொள்பவர் யார்?'' என்று கூறத் தொடங்கினார்கள். அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! விற்பதாக இருந்தால் என்னை மிகவும் விலைமதிப்பு குறைந்தவனாகக் கருதுகிறேன்'' என்று கூறினார். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள், ‘‘என்றாலும் நீர் அல்லாஹ்விடம் குறைந்த மதிப்புடையவர் அல்லர்'' என்றோ, ‘‘எனினும் அல்லாஹ்விடம் நீர் மிகுந்த மதிப்புடையவர்'' என்றோ கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ஒரு வயோதிகப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் சுவனம் செல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் கேலியாக, ‘‘இன்னாரின் தாயே! கிழவிகள் சுவனம் புகமாட்டார்கள்'' என்றார்கள். அம்மூதாட்டி அழுதவளாக திரும்பிச் சென்றாள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவள் கிழவியாக இருக்கும் நிலையில் சுவனம் செல்லமாட்டாள் என்பதை அவளிடம் தெரிவித்து விடுங்கள்!'' என்று கூறினார்கள். பின்பு பின்வரும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்: ‘நிச்சயமாக நாம் அவர்களைப் புதிதாகவே படைத்திருக்கின்றோம். இன்னும் நாம் அவர்களைக் கன்னியர்களாகவே ஆக்கியிருக்கின்றோம்' (அல்குர்ஆன் 56:35, 36). (ஸுனனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் எளிமையாகவும், நகைச்சுவைப் பண்புடையவர் களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் காணப் படுகின்றன. 

அதில் ஒன்றை இமாம் அஹ்மத் (ரஹ்) அறிவிக்கிறார்கள்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சென்றிருந்தேன். அப்போது நான் உடல் பெருக்காத மெலிந்த பெண்ணாக இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ‘‘முன்னே சென்றுவிடுங்கள்'' என்று கூறிவிட்டு, பின்பு என்னிடம் ‘‘வா! நாம் ஓட்டப் பந்தயம் வைத்துக் கொள்வோம்'' என்றார்கள். அவ்வாறு நாங்கள் ஓடினோம். நபி (ஸல்) அவர்களை நான் முந்திவிட்டேன். அவர்கள் அமைதியாக இருந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சியை நான் மறந்துவிட்டேன். பின்பு நான் உடல் பருத்துவிட்டேன். நபி (ஸல்) அவர்களுடன் இன்னுமொரு பயணத்தில் நானும் சென்றி ருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ‘‘முன்னே சென்றுவிடுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு என்னிடம் ‘‘வா நாம் ஓடுவோம்'' என்றார்கள். நாங்கள் ஓடினோம். ஆனால் அவர்கள் என்னை முந்திவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் சிரித்தவர்களாக, ‘‘அதற்கு இது (சமமாகி விட்டது)'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

இதனால்தான் நபித்தோழர்கள் இவ்வாறு கேலி செய்வதை தவறாகக் கருதவில்லை. ஏனெனில் அவர்களது வழிகாட்டியான நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் கேலி செய்திருக்கிறார்கள். இது முந்திய இஸ்லாமிய சமூகத்தின் உயர்ந்த பண்பையும், சிறந்த நகைச்சுவை உணர்வையும் எடுத்துக்காட்டுகிறது, இன்னும் அவர்களிடத்தில் கடுகடுத்த, இறுக்கமான தன்மை காணப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
‘‘நபித்தோழர்கள் ஒருவருக்கொருவர் தர்பூசணிப் பழத்தைத் தூக்கி எறிந்து விளையாடினார்கள். ஆனால் எதார்த்தம் என்று வந்துவிட்டால் அவர்கள் வீரர்களாகி விடுவார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

இஸ்லாம் அனுமதிக்கும் இந்த நகைச்சுவை உணர்வு நேர்மையானதும் நடுநிலையானதுமாகும். இதைச் செய்பவர் சத்தியத்திலிருந்து பிறழமாட்டார். அது அவரது வீரத்தின் ஜுவாலையை அணைத்து விடாது. அது மனங்களை விசாலப்படுத்தி இதயங்களை உற்சாகப் படுத்துவதாக இருக்கும்.

நபி (ஸல்) அவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்திய ஒரு நிகழ்ச்சியும் வரலாற்றில் நடந்துள்ளது. உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்கர் (ரழி) அவர்கள் புஸ்ரா நகரத்திற்கு வியாபார நிமித்தமாகச் சென்றார்கள். பத்ருப் போரில் பங்கேற்ற ‘நுஅய்மான்' மற்றும் ‘ஸுவைபித் இப்னு ஹர்மலா' (ரழி) அவர்களையும் உடன் அழைத்துச் சென்றார்கள். அதில் ஸுவைபித் (ரழி) பிரயாண உணவுக்கு பொறுப்பாளராக இருந்தார். அவரிடம் நுஅய்மான் (ரழி) ‘‘உணவு கொடுங்கள்'' என்றார். அவர் ‘‘அபூபக்கர் (ரழி) வரட்டும்'' என்று மறுத்துவிட்டார். நுஅய்மான் (ரழி) நகைச்சுவையாளராகவும், கிண்டல் செய்பவராகவும் இருந்தார். அவர் ஒட்டகங்களை இழுத்து வந்து கொண்டிருந்த சில மனிதர்களிடம் சென்று, ‘‘என்னிடம் சுறுசுறுப்பான அரபு அடிமை ஒருவர் இருக்கிறார். அவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்கிறீர்களா?'' என்றார். அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். நுஅய்மான் (ரழி) கூறினார் ‘‘அந்த அடிமை நாவன்மை உடையவர். அவர் தன்னை சுதந்திரமானவன் எனக் கூறலாம். நீங்கள் அதை நம்பி அவரை வாங்க மறுப்பதாக இருந்தால் இப்போதே என்னை விட்டுவிடுங்கள். அவர் விஷயத்தில் எனக்கு இடையூறு செய்யாதீர்கள்'' என்றார். அம்மனிதர்கள் இல்லை, அவரை வாங்கிக் கொள்கிறோம் என்றார்கள். ஸுவைபித் (ரழி) அவர்களை அம்மனிதர்கள் 10 பெண் ஒட்டைகைகளைக் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.
நுஅய்மான் (ரழி) 10 ஒட்டகைகளையும் அம்மனிதர்களையும் அழைத்து வந்து ‘‘இதோ இவர்தான் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்றார். ஸுவைபித் (ரழி) ‘‘இவர் பொய்யர், நான் சுதந்திரமனிதன் அடிமையில்லை'' என்றார். வந்தவர்கள் ‘‘உம்மைப் பற்றிய எல்லா விஷயத்தையும் இவர் (நுஅய்மான்) கூறிவிட்டார்'' என்று கூறி அவரது கழுத்தில் கயிற்றைப் பிணைத்து அழைத்துச் சென்று விட்டார்கள். அப்போது அபூபக்கர் ஸித்தீக் (ரழி) வந்தார்கள். அவர்களிடம் நடந்த விஷயத்தைக் கூறப்பட்டது. அவர்கள் தமது தோழருடன் சென்று அவர்களது ஒட்டகைகளைக் கொடுத்துவிட்டு அவரை மீட்டு வந்தார்கள். பிறகு இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. சுற்றிலும் தோழர்கள் அமர்ந்திருந்த நிலையில் தோழர்களும் நபி (ஸல்) அவர்களும் ஒரு வருடமாக இதைப் பேசி சிரித்துக் கொண்டார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். மஸ்ஜிதுக்குள் நுழைந்து அதன் முற்றத்தில் தனது ஒட்டகையை அமரச் செய்தார். சில நபித்தோழர்கள் நுஅய்மான் (ரழி) அவர்களிடம் ‘‘நாம் இறைச்சி சாப்பிட்டு வெகுநாட்களாகி விட்டது. மிகவும் ஆவலாக இருக்கிறது. நீர் இதை அறுத்தால் நாம் சாப்பிடலாம், இறுதியில் நபி (ஸல்) அவர்கள் அதற்கான விலையை பொறுப்பேற்றுக் கொள்வார்கள்'' என்று கூறினார்கள். அப்போது நுஅய்மான் (ரழி) அதை அறுத்துவிட்டார்.
பின்பு அந்தக் கிராமவாசி தனது ஒட்டகையைப் பார்த்துவிட்டு ‘‘முஹம்மதே! அறுத்து விட்டார்களே!'' என்று கூச்சலிட்டார். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து ‘‘இதைச் செய்தது யார்?'' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘‘நுஅய்மான்'' என்று கூறினார்கள். அவர் எங்கே இருக்கிறார் என நபி (ஸல்) அவர்கள் தேடிச் சென்றபோது அவர் ளுபாஆ பின்த் ஜுபைர் (ரழி) அவர்களின் வீட்டில் ஒரு குழியினுள் ஒளிந்துக் கொண்டார். அவர் பேரீச்ச மட்டைகளாலும் கீற்றுகளாலும் தன்னை மறைத்துக் கொண்டிருந்தார்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சப்தமாக ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் நுஅய்மானைப் பார்க்கவில்லை'' என்று கூறியவராக நுஅய்மானின் பக்கம் சைக்கினை செய்தார். நபி (ஸல்) அவர்கள் அவரை வெளியேறி வரச் செய்தார்கள். அவர்மீது கிடந்த கட்டைகள் முகத்தில் அழுத்தியதால் அவரது முகம் நிறம்மாறி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவரிடம் ‘‘உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியவர் யார்?'' என்று கேட்டார்கள். நுஅய்மான் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைப்பற்றி உங்களிடம் கூறினார்களே அவர்கள் தான் என்னைத் தூண்டினார்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரது முகத்தை தடவிக் கொடுத்து சிரித்தார்கள். பின்பு அந்த ஒட்டகைக்கான விலையைக் கொடுத்தனுப்பினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

இவைகளே இஸ்லாம் தனது உறுப்பினர்களிடம் விரும்பும் கேலியும், நகைச்சுவையாகும். இதன்மூலம் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது. இத்தன்மை உடையவர் நேசிக்கும் பண்பைப் பெறுகிறார். மனம் சஞ்சலமடைவதி லிருந்து விடுதலை பெறுகிறார். அல்லாஹ்வின் பாதையில் ஏகத்துவ அழைப்புப்பணி செய்வோருக்கு இது மிக அவசியமான பண்பாகும்.
 

சகிப்புத்தன்மையுடையவர்

ஒளிமயமான இஸ்லாமிய நெறிம்யை பின்பற்றிவரும் இறை அச்சமுள்ள முஸ்லிம், அனைத்து சந்தர்ப்பங்களிலும் சகிப்புத் தன்மையையும், கோபத்தைக் கட்டுப்படுத்துவதையும் வழமையாகக் கொள்ளவேண்டும்.

... அவர்கள் கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர் (களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லோரை நேசிக்கிறான்.
(அல்குர்ஆன் 3:134)

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வலிமையானவர் யாரெனில், தனது உடல்பலத்தால் மனிதர்களைத் தாக்கி வெற்றி கொள்பவரல்ல. மாறாக, கோபத்தை அடக்கும் ஆற்றல் பெற்று நிதானத்தைக் கடைபிடிப்பவரே வலிமையானவர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘வலிமை என்பது தாக்குவதைக் கொண்டல்ல. வலிமையானவர் யாரெனில் கோபம் ஏற்படும் சமயத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்துபவரே.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது ஆண்மையின் அடையாளமாகும். கோபத்தை மிகத் தீவிரமாக வெளிப் படுத்திவிட்ட பிறகு தணித்துக் கொள்வது வீரமல்ல. மாறாக, கோபம் ஏற்படும்போது மென்மையைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு மனிதன் தனது உணர்வுகள் வெடித்துக் கிளம்பும்போது அதைக் கட்டுப்படுத்தி உறுதியாக இருந்து கொண்டால் தர்க்கம், குழப்பம் போன்றவற்றை தவிர்க்க முடியும். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் மனிதர்களின் அன்பையும் பெற்று இலட்சியத்தை எளிதாக அடையமுடியும்.
இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களின் உபதேசத்தை குறிப்பிட்டாக வேண்டும். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்ப ‘‘எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ‘‘கோபப்படாதே'' என்ற ஒரே வார்த்தையைக் கூறிக்கொண்டிருந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இவ்வுபதேசம் ஒட்டுமொத்த நற்பண்புகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ‘அஷஜ் அப்த கைஸ்'க்குக் கூறினார்கள்: உம்மிடத்தில் அல்லாஹ் நேசிக்கும் இரு பண்புகள் இருக்கின்றன. அவை சகிப்புத் தன்மை, நிதானமுமாகும். (ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம் சில சந்தர்ப்பங்களில் கோபப்படுபவராக இருக்கவேண்டும். எனினும் அது தனக்காக இல்லாமல் அல்லாஹ்வுக்காக கோபப்பட வேண்டும். 

அல்லாஹ்வின் கட்டளைகள் புறக்கணிக்கப்படும்போதும், மார்க்கத்தின் மகத்துவங்கள் அவமதிக்கப்படும்போதும் கோபப்பட வேண்டும். அந்நேரத்தில் உண்மை முஸ்லிம் அல்லாஹ்வின் கட்டளைகளை அவமதித்து வரம்பு மீறி அவனது மார்க்கத்துடனும் அவனுடைய சட்டங்களுடனும் விளையாடும் பாவிகளுக்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.

‘‘நபி (ஸல்) அவர்கள் தனக்காக எவரையும் பழிவாங்கியதில்லை. எனினும் அல்லாஹ்வின் கட்டளைகள் தகர்க்கப்பட்டால் அல்லாஹ் வுக்காக பழி வாங்குவார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் கோபம் கொண்டுள்ளார்கள். மார்க்கக் கட்டளைகள் அலட்சியப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களிலும், அதன் சட்டங்களை முறையாக நிறைவேற்றவில்லை என்றாலும் நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் சிவந்துவிடும்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் ‘‘நான் ஃபஜ்ருத் தொழுகைக்கு தாமதமாகவே செல்கிறேன். எங்களுக்கு தொழவைப்பவர் தொழுகையை மிகவும் நீளமாக்குகிறார்'' என்று முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தது போல வேறு எப்போதும் கோபமடைந்ததே இல்லை. மேலும் கூறினார்கள், ‘‘மனிதர்களே! நிச்சயமாக உங்களில் வெறுப்பை ஏற்படுத்தக் கூடியவர்கள் இருக்கிறார்கள். உங்களில் யார் மக்களுக்கு தொழவைக்கிறாரோ அவர் தொழுகையை சுருக்கிக் கொள்ளட்டும். அவருக்குப் பின்னால் பெரியவர்களும், சிறியவர்களும், தேவையுடையோரும் நிற்பார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை பிரயாணத்திலிருந்து திரும்பி அன்னை ஆயிஷா (ரழி) அவர்களது வீட்டுக்கு வந்தபோது வீட்டில் உருவங்கள் உள்ள மெல்லிய திரையைக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களின் திருமுகம் சிவந்து விட்டது. அதை கிழித்தெறிந்து விட்டு ‘‘ஆயிஷாவே! அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகவும் கோபத்துக்குரியவர் யாரெனில் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாக செய்பவர்களே'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மக்ஜும் கிளையைச் சேர்ந்த பெண் திருடிவிட்டதற்காக நபி (ஸல்) அவர்கள் தண்டனையை உறுதிபடுத்தினார்கள். அப்போது உஸாமா இப்னு ஜைது (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் சிபாரிசு செய்ய முயன்றபோது கடுங்கோபம் கொண்டார்கள்.
அப்பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் தண்டனையை உறுதி செய்த போது அக்குலத்தவர் இதுபற்றிப் பேச நபி (ஸல்) அவர்களிடம் யாரை அனுப்பலாம் என்று ஆலோசித்தார்கள். அப்போது சிலர் ‘‘அதைப் பற்றி பேச நபி (ஸல்) அவர்களின் நேசத்திற்குரிய உஸாமா இப்னு ஜைதைத் தவிர வேறு எவருக்குத் துணிச்சல் வரும்?'' என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். அவர் அது குறித்துப் பேச, நபி (ஸல்) அவர்கள் கோபமாக ‘‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையிலா நீ சிபாரிசு செய்கிறாய்?'' என்று கூறிவிட்டு எழுந்து நின்று மக்களிடையே உரையாற்றினார்கள். ‘‘உங்களுக்கு முன்னிருந்த சமுதாயங்கள் அழிந்த தெல்லாம் அவர்களில் வசதியானவர் திருடினால் விட்டு விடுவார்கள். (வசதியற்ற) பலவீனமானவர் திருடினால் அவர் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். அல்லாஹ்வின்மீது ஆணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கரத்தைத் துண்டிப்பேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களின் கோபம் வெளிப்பட்டது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் இஸ்லாம் கோபத்தை அனுமதிக்கிறது. அதாவது கோபம் சுயநலனுக்காக அல்லாமல் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.


ஏசுவதையும், கெட்ட வார்த்தைகளையும் தவிர்த்துக் கொள்வார்

ஒரு முஸ்லிம் கோபப்படுவது அல்லாஹ்வுக்காகத்தான் என்றானபோது அந்தக் கோபத்தின் நேரத்தில் வெறுப்பான சொற்களைக் கொட்டுவது, அசிங்கமாகத் திட்டுவது போன்ற செயல்கள் அவரிடம் வெளிப்படாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு முஸ்லிம் இயல்பாகவே அருவருப்பாக பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், சபித்தல் போன்ற பிறரிடம் வெறுப்பை ஏற்படுத்தும் குணங்களைத் தவிர்த்து, இது குறித்த இஸ்லாமின் வழிமுறையைப் பின்பற்றுவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவருடன் போர் செய்வது குஃப்ராகும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

‘‘அசிங்கமான செயல்களைச் செய்பவரையும், அசிங்கமான சொற்களைப் பேசுபவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.'' (முஃஜமுத் தப்ரானி, முஸ்னத் அஹ்மத்)

‘‘மடத்தனமான செயல்களை செய்பவரையும், ஆபாசமான செயல்களை செய்பவர்களையும் அல்லாஹ் கோபிக்கிறான்.'' (முஃஜமுத் தப்ரானி)

‘‘முஃமின் (அல்லாஹ்வை விசுவாசித்தவர்) குத்திக் காட்டுபவராகவோ, சபிப்பவராகவோ, மூடத்தனமான செயலை செய்பவராகவோ, ஆபாசமாகப் பேசுபவராகவோ இருக்கமாட்டார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

இவை மணம் வீசும் இஸ்லாமியத் தென்றலை சுவாசித்து வரும் முஸ்லிமின் தகுதிக்கு ஏற்றபண்பல்ல. அவரது இதயத்தில் இஸ்லாம் மலர்ந்து மணம் வீசும். இதனால் மனிதர்களை குத்திக் கிழித்து உணர்வுகளைக் காயப்படுத்தும் வார்த்தைகள் அவரிடம் வெளிப்படாது. அழகிய முன்மாதிரியான நபி (ஸல்) அவர்களின் செயல்களைப் பிரதி பலிக்கும் அவரிடம், நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் வெளிப் பட்டிராத வார்த்தைகள் வெளிப்படுவது முற்றிலும் சாத்தியமற்றதாகும்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அருவருப்பான செயலை செய்பவராகவோ, சபிப்பவராகவோ, ஏசுபவராகவோ இருக்கவில்லை. மிகவும் கோபமான சந்தர்ப்பங்களில் ‘‘அவருக்கென்ன நேர்ந்தது. அவரது நெற்றி மண்ணாகட்டும்'' என்று சொல்பவர்களாக இருந்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மேலும் ஏகத்துவ அழைப்பை ஏற்க மறுத்த காஃபிர்களை சபிப்பதிலிருந்தும் நபி (ஸல்) அவர்கள் தவிர்ந்து கொண்டார்கள். அவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளைக் கூறியதில்லை.

இது பற்றி பிரபல நபித்தோழர் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இணை வைப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்'' என்று கூறப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘‘நான் சபிப்பவராக அனுப்பப்படவில்லை அருட்கொடையாகவே அனுப்பப்பட்டுள்ளேன்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் ‘‘அவரை அடியுங்கள்'' என்று கூறினார்கள். எங்களில் சிலர் கைகளைக் கொண்டும், சிலர் செருப்புகளைக் கொண்டும், சிலர் துணியைக் கொண்டும் அவரை அடித்தார்கள். அடித்து முடித்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் ‘‘அல்லாஹ் உன்னை இழிவுபடுத்தட்டும்'' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘‘அவ்வாறு சொல்லாதீர்! அவருக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவி செய்யாதீர்!'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

பாவமும், வழிகேடும், வரம்பு மீறுதலுமே வழமையாகக் கொண்டவடமும் கருணை காட்டும் இஸ்லாமின் கண்ணோட்டம்தான் எவ்வளவு அற்புதமானது!
நபி (ஸல்) அவர்கள் மக்களின் உள்ளங்களிலிருந்து குரோதம், விரோதம் ஆகியவற்றைக் களைந்தார்கள். மக்களின் கண்ணியத்தை தகர்க்கும் விதமாக தனது நாவை பயன்படுத்தியவனின் முடிவு எப்படி இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நியாயமற்ற அவதூறுகளையும் வரம்பு மீறிய குற்றச்சாட்டுகளையும் அருவருப்பான வார்த்தைகளையும் பிறர்மீது வீசி எறிபவன் மறுமை நாளில் எண்ணற்ற நன்மைகளைச் சுமந்து வந்தும், அவனது தீய செயல்கள் அனைத்து நன்மைகளையும் சூறையாடிவிடும். தன்னை நரகிலிருந்து காக்கும் எவ்வித சாதனமுமின்றி சபிக்கப்பட்டவனாக நரகில் வீசப்படுவான் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்: ‘‘பரம ஏழை யாரென்பதை நீங்கள் அறிவீர்களா?'' நபித்தோழர்கள் ‘‘எவரிடம் ஒரு திர்ஹம் கூட இல்லையோ, இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவரையே நாங்கள் பரம ஏழையாகக் கருதுவோம்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘‘எனது உம்மத்தில் பரம ஏழை யாரெனில், அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்தைக் கொண்டு வருவார். அதே சமயத்தில் ஒருவரை திட்டியிருப்பார், ஒருவரை அவதூறு பேசியிருப்பார், ஒருவருடைய பொருளை அபகத்திருப்பார், ஒருவரை கொலை செய்திருப்பார், ஒருவரை அடித்திருப்பார். அவருடைய நன்மைகளை அவர்களில் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். அவர் மீதுள்ள குற்றங்கள் முடிவதற்கு முன்னால் அவரது நன்மைகள் தீர்ந்துவிடும்போது பாதிக்கப்பட்டவர்களின் பாவங்களை எடுத்து அவர்மீது சுமத்தப்பட்டு அவர் நரகில் வீசி எறியப்படுவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நற்பண்புகளைக் கொண்ட இஸ்லாமிய சமூகத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வில் இதுபோன்ற அர்த்தமற்ற, வீணான காரியங்கள் இருக்க முடியாது. அதுபோல அசிங்கமான, தவறான வார்த்தைகளை பயன்படுத்தக் காரணமாக அமையும் சண்டை, சச்சரவுகளும் இருக்க முடியாது.

உண்மையான இஸ்லாமிய சமூகத்தில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் இறைசமூகத்தில் விசாரிக்கப்படும் என்பதை ஆழமாக உணர்ந்திருப்பார். வீண் விவாதம், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதிலிருந்து தன்னை தற்காத்து கொள்வார்.

இவ்விடத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒருவரையொருவர் திட்டிக் கொண்டால் மற்றவர் வரம்பு மீறாதிருக்கும் வரை அதன் பாவங்கள் அனைத்தும் அதை ஆரம்பித்தவருக்கே உயதாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் பாவத்தில் வீழ்ந்து வரம்பு மீறிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தகுந்த காரணங்கள் இருப்பினும் பிறரைத் திட்டுவதிலிருந்து உண்மை முஸ்லிம் தனது நாவைப்பேணி, கொழுந்து விட்டெயும் கோப ஜுவாலையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் தனது வாழ்வில் இறந்தவர்கள் உட்பட பிறரை நாவால் காயப்படுத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்வார். ஆம்! சில மூடர்கள் தங்களது நாவுகளால் உயிருள்ளவர்களை மட்டுமின்றி மரணித்தவர்களை பற்றியும் தவறாக பேசி வருகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மரணித்தவர்களைத் திட்டாதீர்கள்! நிச்சயமாக அவர்கள் தாங்கள் முற்படுத்தியதை அடைந்து கொண்டார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

உறுதியான ஆதாரமின்றி எவரையும் இறை மறுப்பாளர், பெரும்பாவி என்று கூறமாட்டார்
உண்மை முஸ்லிம் ஏசுவது, திட்டுவது, அருவருப்பாக பேசுவது போன்ற இழி செயல்களிலிருந்து தனது நாவை காத்துக்கொள்வது போல அதைவிட மிக அதிர்ச்சியையும், கசப்பையும் ஏற்படுத்தும் வகையில் மக்களை ஃபாஸிக் (பெரும்பாவி) என்றும், காஃபிர் (இறை மறுப்பாளர்) என்றும் அவதூறு கூறுவதிலிருந்தும் விலகிக்கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு மனிதர் மற்றவரை காஃபிர், அல்லது ஃபாஸிக் என்ற வார்த்தைகளை கூறி, அம்மனிதர் அதற்குரியவராக இல்லையென்றால் அத்தன்மை கூறியவடமே திரும்பிவிடும்.'' (ஸஹீஹுல் புகாரி)


பிறர் குறைகளை மறைப்பவர்

உண்மை முஸ்லிமின் நற்பண்புகளில் ஒன்று பிறரது குற்றங்குறைகளை மறைத்தலாகும். இஸ்லாமிய சமூகத்தில் கீழ்த்தரமான விஷயங்கள் பரவுவதை அவர் விரும்பமாட்டார். திருமறையும், நபிமொழியும் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தூண்டித்துருவி ஆராய்ந்து அவர்களது கௌரவத்துக்கு பங்கம் விளைவிக்கும் குழப்பவாதிகளை வன்மையாகக் கண்டிக்கிறது.

எவர்கள் (இதற்குப்பின்னரும்) விசுவாசிகளுக்கிடையில் இத்தகைய மானக்கேடான வார்த்தைகளைப் பரப்ப விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அல்குர்ஆன் 24:19)

யார் சமூகத்தில் மானக்கேடான விஷயங்களைப் பரப்புவதில் ஈடுபடுகிறாரோ அவரும் அந்தச் செயலை செய்தவரைப் போன்ற பாவியாவார். அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள் ‘‘மானக்கேடானதைப் பேசுபவனும் அதைப் பரப்புபவனும் பாவத்தில் சமமாவார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

இஸ்லாமிய சமூகத்தில் வாழ்பவர் இழிவான, கீழ்த்தரமான விஷயங்களில் ஈடுபடுவதிலிருந்து மிகவும் வெட்கி விலகியிருப்பார். நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ‘பிறரது அந்தரங்கத்தில் தலையிடாமை' என்ற பண்பை ஏற்று பாவங்களை பகிரங்கப்படுத்துவதிலிருந்து தனது நாவை காத்துக்கொள்வார். தன்னுடைய பாவத்தையும் அல்லது பிறரின் பாவத்தையும் அதை அவரே பார்த்திருந்தாலும் சரியே அல்லது பிறர் கூற கேட்டிருந்தாலும் சரியே, அதை வெளிப்படுத்தக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எனது உம்மத்தினர் அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். அந்தரங்கத்தை பகிரங்கப் படுத்துபவனைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு செயலைச் செய்கின்றான். அல்லாஹ் அவனது செயலை மறைத்துவிட்ட நிலையில் காலையில் அவன் ‘‘ஓ! நேற்றிரவு நான் இன்னின்ன காரியத்தைச் செய்தேன்'' என்று கூறுகிறான். அல்லாஹ் அவனது குறையை நேற்றிரவு மறைத்திருந்தான், அல்லாஹ் மறைத்ததை இவன் காலையில் பகிரங்கப்படுத்துகிறான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ‘‘ஓர் அடியானின் குறையை மற்றொரு அடியாரின் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்கிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்களிடம் ஒரு கூட்டத்தினர் ‘‘எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள அண்டை வீட்டார் மது அருந்து கிறார்கள், சில தீயசெயல்களையும் செய்கிறார்கள். நாங்கள் இதைப் பற்றி ஆட்சியாளடம் தெரிவிக்கலாமா?'' என்று கேட்டனர். உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் கூறினார்கள் வேண்டாம்!. நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: ‘‘எந்த ஒரு மனிதர் முஸ்லிமிடம் ஒரு குறையைக் கண்டு மறைத்து விடுகிறாரோ அவர் உயிருடன் புதைக்கப் பட்ட குழந்தையை கப்லிருந்து உயிரோடு மீட்டவராவார்'' என்று கூறினார்கள். (அல்அதபுல் முஃப்ரத்)

மனிதனின் பலவீனங்கள் என்ற நோய்களுக்கான மருந்தாகிறது அவர்களது குறைகளை ஆய்வுசெய்து அதை பகிரங்கப்படுத்தி அவர்களை இழிவுபடுத்துவதல்ல. இது எவ்வகையிலும் நிவாரணமாகாது. உண்மை நிவாரணம் என்னவெனில், இம்மனிதர்களிடம் சத்தியத்தை எடுத்துரைத்து, நன்மைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, தீய செயல்களின் மீது அவர்களுக்கு வெறுப்பை ஊட்ட வேண்டும். சண்டை, சச்சரவுகளை பகிரங்கப்படுத்தக் கூடாது. நேசமும் மென்மையும் கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளால்தான் மூடிய இதயங்களைத் திறந்து, தூய்மைப்படுத்த முடியும். இதனால்தான் முஸ்லிம்களின் குற்றம் குறைகளை தேடித்துருவி ஆராய வேண்டாமென இஸ்லாம் தடை செய்துள்ளது.
(எவருடைய குற்றத்தையும்) நீங்கள் துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அல்குர்ஆன் 49:12)

இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களிடம் ஒரு மனிதர் இழுத்துக் கொண்டு வரப்பட்டார். இழுத்து வந்தவர்கள், ‘‘இவருடைய தாடியிலிருந்து மது சொட்டுகிறது'' என்று கூறினார்கள். இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் குற்றங்களை துருவித்துருவி ஆராய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளோம். எனினும் ஏதேனும் தவறுகள் வெளிப்பட்டால் நாங்கள் தண்டிப்போம்'' என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூத்)

அதாவது முஸ்லிம்களின் குறைகளை துருவிப் பார்ப்பதும், அவர்களது பலவீனமான செயல்களையும் குறைகளையும் கண்டறிந்து பகிரங்கப்படுத்துவதும், அது சம்பந்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அவர்கள் வாழும் சமுதாயத்தையும் பாதிக்கும். ஒரு சமுதாயத்தில் மானக்கேடான காரியங்கள் பெருகி அவர்களுக்கு மத்தியில் புனையப் பட்ட பேச்சுகள் பரவிவிட்டால் அந்த சமுதாயத்தில் ஒற்றுமைக்கேடு உருவாகி பாவங்கள் இலேசாகி குரோதமும், வஞ்சமும், சூழ்ச்சியும் வேரூன்றி அச்சமுதாயத்தையே குழப்பங்கள் சூழ்ந்து கொள்ளும்.

இது குறித்து நபி (ஸல்) அவர்கள் ‘‘நிச்சயமாக நீ முஸ்லிம்களின் குறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தால் அவர்களை நீ பாழாக்கி விட்டாய்! அல்லது பாழ்படுத்த நெருங்கிவிட்டாய்'' என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூத்)

இவ்விடத்தில் மக்களின் கௌரவத்தைக் குலைக்கும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதற்கு நபி (ஸல்) அவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்கள். அவ்வாறு ஈடுபடுபவர்களை அவர்களது வீட்டிலேயே அல்லாஹ் அவமானப்படுத்திவிடுவான் என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.'' (முஸ்னத் அஹ்மத்)

மக்களின் குறைகளை தேடித்தியும் வீணர்களைக் கண்டிப்பதில் நபி (ஸல்) அவர்களின் நடவடிக்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பது பற்றி அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரசங்கம் நிகழ்த்தினார்கள். 

வீட்டுக்குள்ளிலிருந்த பெண்கள்கூட செவியயேற்கக்கூடிய பிரசங்கமாக அது இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் ‘‘நாவால் ஈமான் கொண்டு இதயத்தில் ஈமான் நுழையாதவர்களே! இறைவிசுவாசிகளை நோவினை செய்யாதீர்கள், அவர்களது குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள். எவன் தனது சகோதர முஸ்லிமின் குறைகளை துருவித் துருவி ஆராய்கிறானோ அவனது கௌரவத்தை அல்லாஹ் அழித்துவிடுவான். எவன் தனது சகோதரனின் குற்றம் குறைகளை ஆராய்கிறானோ அவன் தனது வீட்டுக்கு மத்தியில் இருந்தபோதும் அல்லாஹ் அவனை கேவலப்படுத்தி விடுவான்.'' என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)

நபி (ஸல்) அவர்கள் தங்களது இதயத்தில் ஈமான் நுழையாமல் நாவினால் மட்டும் ஈமான் கொண்டவர்களே! என்று கூறியது எவ்வளவு கடுமையான வார்த்தை? இது பிறர் குற்றங்குறைகளை தூண்டித் துருவி ஆராய்பவர்கள் உண்மையில் நாவினால் மட்டுமே ஈமான் கொண்டிருக்கி றார்கள் அவர்களது இதயத்தில் ஈமான் நுழைந்திருந்தால் இத்தகைய காரியத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்ற பொருளைத் தருகிறது.

இந்த இழிவான குணமுடையோர் பிறரை குறை காணுவதை மிக எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்விடம் அது மகத்தான குற்றமாக உள்ளது.

தனக்குத் தேவையற்றதில் ஈடுபடமாட்டார்
தனது இரட்சகனின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு தனது ஈமானை வலுப்படுத்துவதில் ஆர்வமுடைய முஸ்லிம் தனக்குத் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடமாட்டார். தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் தனது மூக்கை நுழைக்காமல் பிறரைப் பற்றி பேசப்படும் வதந்திகளில் ஆர்வம் காட்டாமல் விலகி நிற்பார். இவ்வாறான இழி குணங்களிலிருந்து மனிதனை மேம்படுத்தி வைத்திருக்கும் இஸ்லாமிய நற்பண்புகளை பற்றிப் பிடித்துக் கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘தனக்குத் தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகியிருப்பது ஒருவன் அழகிய இஸ்லாமியப் பண்பில் உள்ளதாகும்.'' (ஸுனனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மூன்று குணங்களை விரும்புகிறான், மூன்று குணங்களை வெறுக்கிறான். உங்களிடம் அவன் விரும்பும் மூன்று குணங்கள்:
1. அவனையே நீங்கள் வணங்க வேண்டும் 2. அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது 3. நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும், நீங்கள் பிரிந்துவிடக் கூடாது.

அல்லாஹ் உங்களிடம் வெறுக்கும் மூன்று குணங்கள்: 1. ‘அவர் சொன்னார். (இவ்வாறு) சொல்லப்பட்டது' என்பது போன்ற வதந்திகளில் ஈடுபடுவது 2. அதிகமாக கேள்விகள் கேட்பது 3. செல்வத்தை வீணடிப்பது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தை ஏற்றுள்ள சமூகத்தில் ‘அவர் சொன்னார், இவ்வாறு சொல்லப்படுகிறது' என்பது போன்ற வதந்திகளுக்கும், அதிகமதிகம் சந்தேகித்து கேள்விகளை எழுப்பிக் கொண்டு மனிதனின் அந்தரங்கத்தினுள் மூக்கை நுழைப்பதற்கும் இடமில்லை.

அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தின் உறுப்பினர் பூமியில் அல்லாஹ்வின் ஏகத்துவக் கலிமாவை உறுதிப்படுத்துவது மற்றும் அதைப் பரப்புவது போன்ற உன்னதமான செயல்களுக்காக தங்களை அர்ப்பணித்து, நாலா திசைகளிலும் ஏகத்துவக் கொடியை உயர்த்திக் கொண்டிருப்பார். மக்களிடையே ஏகத்துவத்தை ஸ்திரப்படுத்துவதில் தனது நேரங்களைச் செலவிடுவார்.

ஒரு முஸ்லிம் இத்தகைய மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும்போது பிறர்குறையை ஆராய்வதற்கு அவருக்கு அவசாசமிருக்காது.

புறம், கோள் சொல்வதிலிருந்து விலகியிருப்பார்
உண்மை முஸ்லிம் புறம்பேசுவது, கோள்சொல்வது போன்ற காரியங்களிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். அவர் இஸ்லாமிய பண்புகளிலும் அதன் கலாச்சாரத்திலும் வளர்ந்தவர். எனவே இத்தகைய செயல்களுக்கு தனது வாழ்வில் இடமளிக்கமாட்டார். அல்லாஹ்வின் வேதத்தையும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும் அறிந்து கொள்வதில் மூழ்கியிருப்பார். அந்த வழிமுறைகள் ஏவியதை ஏற்று நடப்பார், விலக்கியதை தடுத்துக் கொள்வார்.

உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுவோரை அங்கீகரிப்போனாகவும் கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 49:12)

இத்திருவசனத்தைக் காணும் முஸ்லிமின் இதயத்தில் புறம் பேசுவதன்மீது அளவில்லா கோபமும், வெறுப்பும் உண்டாகிவிடும். அவர் புறம் பேசுபவரை இறந்துவிட்ட தனது சகோதரனின் மாமிசத்தை சாப்பிடுபவர் போன்று கருதுவதால், அல்லாஹ்விடம் தௌபாவை நோக்கி விரைந்தோடுவார். ஏனெனில் புறம் பேசியதற்கு அல்லாஹ் தௌபாவைத் தான் பரிகாரமாகக் கூறுகிறான்.

ஒரு மனிதன் கேள்விக்குப் பதிலளித்த நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் கவனத்தில் கொள்வார். ஒருவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ‘‘எவரது நாவிலிருந்தும் கையிலிருந்தும் முஸ்லிம்கள் நிம்மதி பெறுகிறார்களோ அவரே முஸ்லிம்களில் சிறந்தவர்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இத்தகைய அறிவார்ந்த உபதேசத்தையும், உயரிய வழிகாட்டு தலையும் பெற்றுள்ள முஸ்லிம் புறம்பேசத் துணியமாட்டார். சமூகத்தில் எவருக்கும் தனது நாவாலும் நோவினை செய்யமாட்டார். அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். வரம்பு மீறும் சிலரது நாவுகள், ஒரு முஸ்லிம் சகோதரரைப் பற்றி அவர் இல்லாதபோது தவறாகப் பேசினால் அதைத் தடுத்து நிறுத்தி அவரது கௌரவத்தைக் காப்பார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் தனது சகோதரர் இல்லாத போது அவரது கௌரவத்தைக் காக்கின்றாரோ அவரை நரகிலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் கடமையாகும்.'' (முஸ்னத் அஹ்மத்)

குறைகூறிப் புறம் பேசித்திவோருக்கெல்லாம் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)

உண்மை முஸ்லிம் கோள்சொல்லித் தியமாட்டார். ஏனெனில் கோள் சொல்வது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதையும், நண்பர்களிடையே உறவைத் துண்டிப்பதையும் நோக்கமாக கொண்ட தீயவர்களுடன் தன்னைச் சேர்த்துவிடும் என்பதை அவர் அறிவார்.

நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்: ‘‘உங்களில் சிறந்தவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' நபித்தோழர்கள், ‘‘அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘‘அவர்களைப் பார்த்தால் (பார்ப்பவருக்கு) அல்லாஹ்வின் நினைவு ஏற்படும்.'' பின்பு கூறினார்கள் ‘‘உங்களில் மிகக் கெட்டவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அவர்கள் யாரெனில் கோள் சொல்லித் திரிபவர்கள், நேசர்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள், நிரபராதிகளிடம் குறைகளைத் தேடித்திரிபவர்கள்.'' (முஸ்னத் அஹ்மத்)

கோள் சொல்லும் குழப்பவாதிகளுக்கு உலகில் இழிவும், மறுமையில் கொடிய முடிவும் ஏற்படும். அவன் தனது தவறை தொடர்ந்து கொண்டிருந்தால் வெற்றிக்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டுவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘கோள் சொல்லித்திரிபவன் சுவனம் நுழையமாட்டான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கோள் சொல்லித் திரிபவனை கப்ல் வைக்கப்பட்டதிலிருந்து அல்லாஹ்வின் கடுமையான தண்டனை தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்பதை அறியும்போது உள்ளத்தில் அச்சமும் நடுக்கமும் ஏற்பட்டுவிடும்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருக்கு அருகாமையில் கடந்து சென்றபோது கூறினார்கள் ‘‘அறிந்து கொள்ளுங்கள்! இந்த இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். இவர்கள் வேதனை செய்யப்படுவது வெளித் தோற்றத்தில் கடுமையாகத் தெரியும் ஒன்றுக்காக அல்ல. அறிந்து கொள்ளுங்கள்! அந்த இருவரில் ஒருவர் கோள்சொல்லித் திரிந்து கொண்டிருந்தார், மற்றொருவர் சிறுநீர் கழித்தபின் தூய்மைபடுத்திக் கொள்ளவில்லை.''
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் ஈரமான மரக்கிளை ஒன்றை கொண்டுவரச்செய்து, அதை இரண்டாகப் பிளந்து இந்தக் கப்ல் ஒன்றும் அந்தக் கப்ல் ஒன்றுமாக நட்டினார்கள். பின்பு, இந்த மரக்கட்டைகள் காயும்வரை அவர்களது வேதனை இலேசாக்கப்படலாம் என்று கூறினார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


பொய்யைத் தவிர்ப்பார்

உண்மை முஸ்லிமின் பண்புகளில் அவர் பொய்யான சொல்லிலிருந்து விலகியிருப்பதும் ஒன்றாகும். ஏனெனில் அது அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்டதாகும்.

...அன்றி பொய்யான வார்த்தைகளிலிருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 22:30)

பொய்ச்சொல் விலக்கப்பட்டதாக இருப்பதுடன், அது நம்பிக் கையைக் காயப்படுத்தும், கௌரவத்தைத் தகர்க்கும் செயலாகவும் உள்ளது. ஆகவே இது முஸ்லிமின் பண்புகளில் இடம்பெற முடியாது. அல்லாஹ் தனது நல்லடியார்களைப்பற்றி கூறும்போது இவ்வாறான செயல்களில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்று புகழ்ந்து கூறுகிறான்.

... அன்றி எவர்கள் பொய் சாட்சி சொல்லாமலும் (வீணான காரியங்கள் நடைபெறும் இடத்திற்குச் செல்லாமலும்) ஒருக்கால் (அத்தகைய இடத்திற்குச்) செல்லும்படி ஏற்பட்டுவிட்ட போதிலும் (அதில் சம்பந்தப்படாது) கண்ணியமான முறையில் (அதனைக் கடந்து) சென்றுவிடுகின்றார்களோ அவர்களும்... (அல்குர்ஆன் 25:72)

இது எத்தகைய கொடுமையான பாவம் என்பதற்கு பாவப்பட்டியலில் இரண்டு பெரியபாவங்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் இதைக் குறிப்பிட்டதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இக்குற்றத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பலமுறை எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ‘‘பெரும்பாவங்களிலெல்லாம் மிகப் பெரியபாவத்தை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?'' என வினவினார்கள். நாங்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! அறிவித்துத் தாருங்கள்'' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்கு நோவினை செய்வது'' என்று கூறினார்கள். அப்போது சாய்ந்து அமர்ந்திருந்த அவர்கள் எழுந்து உட்கார்ந்து கூறினார்கள், ‘‘அறிந்து கொள்ளுங்கள்! பொய்ச்சொல், பொய்சாட்சியம்.'' நபி (ஸல்) அவர்கள் இதைத் திரும்பத்திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்கள். அப்போது நாங்கள் ‘நபி (ஸல்) அவர்கள் அமைதியாக வேண்டுமே' என்று நினைத்தோம். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


தீய எண்ணங்களைத் தவிர்ப்பார்

மனிதர்கள் பற்றி தீய எண்ணம் கொள்ளாதிருப்பதும் உண்மை முஸ்லிமின் பண்புகளில் ஒன்றாகும். அவர் நிரபராதிகளைப்பற்றி தனது கற்பனைக்கு ஏற்றவாறு தவறாக பேசவோ, அல்லது அபாண்டமான பழி சுமத்தவோ மனதில்கூட எண்ணம் கொள்ளமாட்டார்.
விசுவாசிகளே அநேகமான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ஏனென்றால் நிச்சயமாக சந்தேகங்களில் சில பாவமானவைகளே.... (அல்குர்ஆன் 49:12)

சந்தேகிப்பதையும் மக்கள்மீது அவதூறு சொல்வதையும் நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களை நான் எச்சரிக்கிறேன்! நீங்கள் சந்தேகங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சந்தேகமான பேச்சு, வார்த்தைகளில் மிகப்பொய்யானதாகும்.''

நபி (ஸல்) அவர்கள் சந்தேகத்தை மிகவும் பொய்யான வார்த்தை என்பதாகக் கூறியுள்ளார்கள். உண்மை முஸ்லிமின் நாவில் பொய்யின் வாடைகூட வராது. பிறகு மிகப்பொய்யான வார்த்தைகள் எப்படி வரமுடியும்?

நபிமொழி, சந்தேகிப்பதிலிருந்து எச்சரித்து அதை மிகப் பொய்யானதொரு பேச்சென்று கூறும் அதே நேரத்தில், மனிதர்களின் வெளிப்படையான செயல்களைக் கொண்டுதான் முஸ்லிம் தீர்மானிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. அவர்களைப் பற்றி யூகம், சந்தேகம், தீய எண்ணம் கொள்வதிலிருந்து அவர் விலகியிருக்க வேண்டும். மக்களின் ரகசியங்களை ஆராய்வதும், அவர்களது அந்தரங்கத்தில் தலையிடுவதும், அவர்களது கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படுத்துவதும் முஸ்லிமின் பண்பல்ல.

அனைத்து ரகசியத்தையும் பரகசியத்தையும் நன்கறிந்த அல்லாஹ்வே மனிதனின் அந்தரங்கத்தை நன்கறிந்தவன். ஆகவே, அதை அவனே விசாரித்துக் கொள்வான். மனிதன் தனது சகோதரனின் வெளிப்படையான செயல்களை மட்டுமே அறிந்துகொள்ள முடியும். தனது சகோதரனைப் பற்றி தீய எண்ணம் கொள்ளாது, நபித்தோழர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் காட்டித் தந்த நெறியை ஏற்று நடக்க வேண்டும்.

உமர் (ரழி) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உத்பாபின் மஸ்வூத் (ரழி) கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சில மனிதர்கள் வரியின் மூலம் தண்டிக்கப்பட்டார்கள். இன்று வரி நின்றுவிட்டது. நாம் உங்களது வெளிப்படையான செயல்களைக் கொண்டே உங்களைத் தண்டிப்போம். எவர் நன்மை செய்வதாக நமக்குத் தெரிகிறதோ நாம் அவர் மீது நம்பிக்கைக் கொண்டு அவரை நெருக்க மாக்கிக் கொள்வோம். அவருடைய அந்தரங்கம் பற்றி நமக்கொன்றும் தெரியாது. அல்லாஹ் அவருடைய அந்தரங்கத்தைப் பற்றி விசாரிப்பான். எவரேனும் தீமை செய்வதாக நமக்குத் தெரிந்தால் நாம் அவர் சொல்வதை உண்மைப்படுத்த மாட்டோம், அவர் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்போம். அவர் ‘தனது மனம் தூய்மையானது' என்று வாதிட்டாலும் சரியே.'' (ஹயாத்துஸ் ஸஹாபா)

முஸ்லிம், இவ்வாறான விஷயங்களைப் பேசுவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவரது உணர்விலும் சிந்தனையிலும் அல்லாஹ்வின் திருவசனம் மறைந்துவிடாது.

(நபியே!) நீர் அறியாத யாதொரு விஷயத்தையும் நீர் பின்தொடராதீர்! ஏனென்றால் நிச்சயமாக கண், காது, இருதயம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் 17:36)

உண்மை முஸ்லிம் ஞானமிக்க இறைவனின் இத்தடையை அறிந்து கொண்டு, தான் அறியாத விஷயங்களைப் பேச மாட்டார், உறுதியாகாதவரை எந்த விஷயத்தையும் தீர்மானிக்கவும் மாட்டார்.

அவர் சந்தேகங்களின் காரணமாக பிறர் கண்ணியத்தைப் பாழ்படுத்துவதிலிருந்து அஞ்சி விலகிக்கொள்வார். தான் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் எழுதி பாதுகாக்கக்கூடிய ஒரு வானவர் தன்னுடன் சாட்டப்பட்டுள்ளார் என்பதை அவர் நினைவில் கொள்வார்.

(மனிதன்) எதைக் கூறிய போதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.) (அல்குர்ஆன் 50:18)

இத்திருவசனத்தின் பொருளை நன்கறிந்த முஸ்லிம் தம்மிடமிருந்து வெளியாகும் ஒவ்வொரு வார்த்தையும் அல்லாஹ்வின் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பதைப் புரிந்து கொள்வார். ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக பலமுறை சிந்தித்தே வெளியிடுவார். ஏனெனில் ஒவ்வொரு வார்த்தையும் அல்லாஹ்வின் அருளை அல்லது அவனது கோபத்தை பெற்றுத் தரும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு மனிதர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவார் ஆனால் இந்த வார்த்தை எத்தகைய நிலையை அடைந்தது என்பதை அறிய மாட்டார். அல்லாஹ் மறுமை நாள்வரை அவருக்கு தனது திருப் பொருத்தத்தை எழுதுகிறான். ஒருவர் அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளைக் கூறுவார் அதன் விளைவைப் பற்றி சிந்திக்கமாட்டார். இதனால் அல்லாஹ் மறுமை நாள்வரை அவருக்கு தனது கோபத்தை எழுதுகிறான்.'' (அல் முவத்தா)

நாவுகளால் பேசப்படும் வீணான வார்த்தைகள் எவ்வளவு விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன?

அகம் தூய்மையான முஸ்லிம், மனிதர்களின் வீண் பேச்சுகளிலிருந்து விலகி, நமது சமுதாயத்தில் காணப்படும் சந்தேகங்கள், யூகங்கள், கட்டுக் கதைகளை அலட்சியப்படுத்தி விடுவார். பிறரிடமிருந்து தான் செவியேற்ற செய்தி உண்மையா? என்று உறுதி செய்யாமல் பிறருக்குக் கூறுவதைத் தவிர்த்துக்கொள்வார். இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் பொய் என்று கூறுகிறார்கள். பொய் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு மனிதன் பொய்யன் என்பதற்கு அவன் (பிறரிடம்) கேட்டதையெல்லாம் பேசுவதே போதுமாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
 

ரகசியம் காப்பார்

ரகசியம் காப்பது முஸ்லிமின் பண்புகளில் ஒன்றாகும். அவர்மீது நம்பிக்கை வைத்து சொல்லப்படும் ரகசியத்தை வெளிப்படுத்தமாட்டார். ரகசியம் காப்பது ஆண்மையின் அடையாளமாகும். அவரது உறுதிமிக்க நற்குணத்தின் வெளிப்பாடாகும். இது நபி (ஸல்) அவர்களின் தூய நெறியைப் பின்பற்றி நடக்கும் முஸ்லிம்களின் புகழுக்குரிய நற்பண்புமாகும்.
உமர் (ரழி) அவர்கள் தனது விதவை மகளான ஹஃப்ஸா (ரழி) அவர்களை மணந்து கொள்ளுமாறு அபூபக்கர் ஸித்தீக் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோடத்தில் கேட்டுக்கொண்டபோது அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பேணியது, அவர்கள் ரகசியம் பேணுவதில் எத்தகு சிறப்பைப் பெற்றிருந்தார்கள் என்பதற்குச் சான்றாகும்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் (ரழி) அவர்கள், தனது மகள் ஹஃப்ஸா (ரழி) விதவையானபோது கூறுகிறார்கள்: நான் உஸ்மான் (ரழி) அவர்களைச் சந்தித்து அவரிடம், ‘‘நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவை மணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். உஸ்மான் (ரழி) ‘‘என் விஷயத்தில் நான் யோசனை செய்து கொள்கிறேன்'' என்றார். சில நாட்கள்வரை நான் எதிர்பார்த்திருந்த பின், உஸ்மான் (ரழி) என்னைச் சந்தித்து, ‘‘இப்போது எனக்கு திருமணம் செய்து கொள்ளும் நோக்கமில்லை'' என்று கூறிவிட்டார். பின்பு அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களை சந்தித்து, ‘‘நீங்கள் விரும்பினால் ஹஃப்ஸாவை உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன்'' என்று கூறினேன். அபூபக்கர் (ரழி) எதுவும் பதில் கூறாமல் மௌனமாக இருந்தார். அப்போது நான் உஸ்மான் (ரழி) மீது கோபம் கொண்டதைவிட அதிகமாகக் கோபமடைந்தேன்.
சில நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள் மணமுடித்துக் கொடுத்தேன். அப்போது அபூபக்கர் (ரழி) என்னைச் சந்தித்து, ‘‘நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவை மணந்து கொள்ளுமாறு கேட்டதற்கு நான் எந்தப் பதிலையும் சொல்லவில்லை என்பதற்காக என் மீது கோபமடைந்தீர்கள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்'' என்றேன். ‘‘நீங்கள் என்னிடம் கூறியபோது என்னை பதில்கூறத் தடுத்த காரணம் நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பற்றி (விசாரித்ததை) நினைவுகூர்ந்ததை நான் அறிந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்யாமல் விட்டிருந்தால் நான் ஹஃப்ஸாவை ஏற்றுக் கொண்டிருப்பேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ரகசியம் பேணுவது, நமது முன்னோர்களான ஆண்களிடம் மட்டுமல்லாமல் பெண்கள், சிறுவர்கள் என அனைவரிடமும் இருந்தது.
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். எங்களுக்கு ஸலாம் கூறினார்கள். என்னை அழைத்து ஒரு வேலைக்காக அனுப்பி வைத்தார்கள். என் தாயிடம் நான் தாமதமாகச் சென்றபோது, ‘‘ஏன் தாமதம்?'' என்று என் தாய் கேட்டார். நான், ‘‘நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வேலையாக அனுப்பி வைத்தார்கள்'' என்றேன். என் தாயார், ‘‘என்ன வேலை?'' என்று கேட்டார். நான் ‘‘அது ரகசியம்'' என்றேன். தாயார், ‘‘நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பற்றி எவரிடமும் சொல்லிவிடாதே...'' என்று கூறினார்.
அனஸ் (ரழி) அவர்களின் மாணவர் ஸாபித் (ரஹ்) அவர்களிடம், ‘‘ஸாபித்தே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த ரகசியத்தை யாரிடமாவது நான் சொல்வதாயிருந்தால் அதை உம்மிடம் சொல்லி இருப்பேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் (ரழி) அவர்களின் தாயார் நபி (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பேணுவதில் தனது மகன் கொண்டுள்ள ஆர்வத்தைப் பார்த்து அதற்கு மதிப்பளிக்கிறார்கள். அவர் யாரிடமும் சொல்லிவிடாதே என்று கூறியதால் அந்த ஹதீஸை அறிவிக்கும் ஸாபித்துல் புனானி (ரஹ்) அவர்களிடமும் கூறவில்லை. அந்தத் தாய் தனது சிறிய மகன் தன்னிடம் மறைக்கும் ரகசியத்தைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. 

இதுதான் இஸ்லாமிய ஒழுக்கப் பயிற்சியாகும். அது ஆண், பெண், சிறுவர் என அனைவரையும் உயர்வை நோக்கி இட்டுச் செல்வதற்கான வழிமுறையாகும்.
ரகசியத்தை வெளியிடுவது மனிதனை பெரிதும் பாதிக்கும் இழிவான செயலாகும். வாழ்வில் தானறிந்த அனைத்தையும் வெளியிடுவது என்பது முறையற்ற செயலாகும். பல விஷயங்களை மறைப்பதில் மனிதனின் ஆண்மை, கம்பீரம், கௌரவம், கண்ணியம் போன்றவை காக்கப்படு கின்றன. அதிலும் குறிப்பாக இல்லறம் சம்பந்தமான விஷயங்களில் ரகசியம் பெரிதும் பேணப்பட வேண்டும். அறியாமையும் மூடத்தனமும் நிறைந்த பைத்தியக்காரனே அதை வெளிப்படுத்துவான். அவன் அல்லாஹ்விடம் இழிமக்களில் ஒருவனாக கருதப்படுவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மறுமைநாளில் அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகக் கீழ்த்தரமானவன் யாரெனில் அவன் தனது மனைவியை நெருங்குகிறான். அவளும் கணவனுடன் இணைகிறாள். பின்பு அவளது அந்தரங்கத்தை பிறரிடம் வெளிப்படுத்துகிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

மூன்றாமவர் இருக்க இருவர் ரகசியம் பேசுவது
மார்க்க சட்டங்களை நன்கறிந்த முஸ்லிம் நுண்ணறிவு மிக்கவராகவும் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராகவும் அவர்களுக்கு தீமை செய்வதிலிருந்து விலகியுமிருப்பார். அவர் உரையாடும் கலையை நன்கறிவார். அதில் சிறந்த பண்பு, மூன்றாமவர் இருக்க இருவர் ரகசியம் பேசாமல் இருப்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உணர்வுள்ள முஸ்லிம் மேன்மையான அணுகுமுறையும், சிறந்த அறிவுடையவராகவும் இருப்பார். சபையில் மூன்று நபர் மட்டும் இருக்கும் நிலையில் ரகசியமாகவும் கிசுகிசுப்பாகவும் பேசுவது அவருக்குத் தகுதியல்ல. அதனால் அங்கு இருக்கும் மூன்றாம் நபன் உணர்வுகள் பாதிக்கப்பட்டு அவருக்கு மனநெருக்கடியும் வெறுப்பும் தோன்றிவிடும். 

ஒருவரிடம் மட்டும் பேசியே தீரவேண்டும் என்ற நிலையிருந்தால் அந்த மூன்றாம் நபரிடம் அனுமதி பெற்று, அவரிடம் தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு, சுருக்கமாகப் பேசிட வேண்டும்.

உள்ளங்களில் இஸ்லாம் ஊடுருவி, இஸ்லாமியப் பண்புகளும் போதனைகளும் உதிரத்தில் கலந்து நின்ற நபித்தோழர்கள் மக்களோடு பழகும் சூழ்நிலைகளில் அவர்களது உணர்வுகளுக்கு மரியாதை அளிப்பதிலிருந்து எப்போதும் பின்தங்கியதில்லை.

அவர்களது உன்னதமான சமூக வாழ்க்கையைப் பற்றியும், மனித உணர்வுகளுக்கு அவர்கள் அளித்த மதிப்பைப் பற்றியும் அறிவிக்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

அப்துல்லாஹ் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நானும் இப்னு உமர் (ரழி) அவர்களும் கடைவீதியிலுள்ள காலித் பின் உக்பாவின் வீட்டின் அருகிலிருந்தோம். அப்போது ஒரு மனிதர் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் ரகசியம் பேச விரும்பினார். 
அது சமயம் இப்னு உமர் (ரழி) அவர்களுடன் என்னைத் தவிர வேறு எவருமில்லை. அதனால் இப்னு உமர் (ரழி) மற்றொரு மனிதரையும் அழைத்துக்கொண்டார்கள்.
இப்போது நான்கு நபர்களானோம். என்னிடமும், தான் அழைத்த மூன்றாவது நபரிடமும், ‘‘நீங்கள் இருவரும் சிறிது நேரம் தாமதியுங்கள். ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்'' என்றார்கள். (அல் முவத்தா)

இப்னு உமர் (ரழி) அவர்கள் ஒருவர் தன்னை வழியில் சந்தித்து ரகசியம் பேச விரும்பியபோது மூன்றாம் நபருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்த்து விட்டார்கள். நான்காமவரை அழைத்ததன் மூலம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கற்றுத் தந்து விட்டார்கள்.


பெருமை கொள்ளாதவர்

உண்மை முஸ்லிம் பெருமையடித்து மக்களிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டார், ஆணவம் கொள்ள மாட்டார். ஏனெனில் அருள்மறையின் வழிகாட்டல் அவரது இதயத்திலும், உயிரிலும் கலந்துள்ளது. இந்த அழியும் உலகில் பெருமையும் ஆணவமும் அகம்பாவமும் கொண்டிருப்பவர் என்றென்றும் நிரந்தரமான மறுமை நாளில் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார் என அல் குர்ஆன் எச்சரிக்கை விடுக்கிறது.

(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால் முடிவான நற்பாக்கியம் பயபக்தி உடையவர்களுக்குத்தான். (அல் குர்ஆன் 28:83)

கர்வம் கொண்டு தற்பெருமை அடிப்பவர்களையும் மக்களிடம் தங்கள் முகத்தை சுருக்கிக் கொள்பவர்களையும் பூமியில் அகந்தையுடன் நடந்து செல்பவர்களையும் அல்லாஹ் விரும்ப மாட்டான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக்கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் யாவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 31:18)

நபி (ஸல்) அவர்களின் பரிசுத்த வழிமுறையை ஆராய்ச்சி செய்பவர் பெருமையை மனதிலிருந்து வேரோடு துண்டித்தெறிய வேண்டும். இது பற்றிய எச்சரிக்கைகளைப் பார்க்கும்போது நிச்சயமாக அவர் திகைத்து விடுவார்.

நபி (ஸல்) அவர்கள், பெருமையடிப்பவர்களை கண்டித்தது மட்டு மல்லாமல், அது அணுவளவு உள்ளத்தில் குடிகொண்டாலும் சுவன பாக்கியத்தை இழந்து மறுமையில் மிகப் பெரியநஷ்டத்திற்குள்ளாகி விடுவார்கள் என எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவருடைய இதயத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவர் சுவனம் புகமாட்டார்.'' ஒரு மனிதர் கேட்டார், ஒருவர் தனது ஆடைகள், பாதணிகள் அழகாக இருக்க வேண்டுமென விரும்புகிறார். (அது பெருமையடிப்பதாகுமா?) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அழகானவன். அழகாக இருப்பதையே விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும், மனிதர்களை இழிவாக எண்ணுவதுமாகும். (ஸஹீஹ் முஸ்லிம்)

ஹாஸா இப்னு வஹப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் ‘‘உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.'' (ஸஹீஹுல் புகாரி)

ஆணவம் கொண்டோரை அல்லாஹ் மறுமைநாளில் பார்க்க மாட்டான் என்பதே அவர்களை இழிவுபடுத்தப் போதுமானதாகும். பூமியில் அவர்கள் பெருமையடித்துத் திரிந்து மக்களிடம் ஆணவமாக நடந்து கொண்டதன் காரணமாக அவர்களோடு பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். இது மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கும் உணர்வுப் பூர்வமான இழிவாகும். இது நரகில் வீசி எறியப்பட்டு வேதனை செய்யப்படும் உடல் ரீதியான துன்பத்தைவிட சற்றும் குறைந்ததல்ல.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமைநாளில் பார்க்க மாட்டான்.'' (ஸஹீஹுல் புகாரி)

மேலும் கூறினார்கள்: ‘‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஏனெனில், பெருமை என்பது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்றாகும். அது பலவீனமான மனிதனுக்குத் தகுதியானதல்ல. பெருமையடித்துத் திரிபவர்கள் அல்லாஹ்வின் இறைமைத் தன்மையினுள் வரம்பு மீறுபவர்கள் ஆவர். மகத்தான படைப்பாளனின் மேன்மைமிகு பண்புடன் மோதக் கூடியவர்களாவர். இதனால்தான் நோவினை தரும் வேதனைக்கு உரியவர்களாகிறார்கள்.

‘‘கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்'' என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் நபி (ஸல்) அவர்களின் பரிசுத்த வழிமுறையில் இதுகுறித்த எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வந்துள்ளன. பலவீனமான மனித இயல்புக்கு ஏற்ப ஏதேனும் ஒரு வினாடியில் கூட அகந்தை எனும் நோய் உள்ளத்திற்குள் புகுந்துவிடாமல் முஃமின்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வை சந்திக்கும் நாளில் அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)


பணிவுடையவர்

பெருமையடிப்பவர்களைப் பற்றியும், அவர்கள் மறுமையில் அடையவிருக்கும் இழிவு, வேதனை குறித்த பல சான்றுகள் உள்ளன. அதுபோன்றே பணிவைப் பற்றி ஆர்வமூட்டும் சான்றுகளும் உள்ளன. பணிவுடையவர்கள் அல்லாஹ்வின் ஏவலை ஏற்று பணியும்போதெல்லாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் உயர்வும் மேன்மையும் அடைகிறார்கள்.

அதற்கான நபிமொழிகளில் சில:
‘‘எவரேனும் அல்லாஹ்விற்காகப் பணிந்தால் அவரது அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்தியே தீருவான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

‘‘பணிவாக இருங்கள். நீங்கள் ஒருவர் மற்றவர்மீது அகந்தை கொள்ள வேண்டாம், அநியாயம் செய்ய வேண்டாம்'' என அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்தான். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைமுறை பணிவிலும், அடக்கத்திலும், மென்மையிலும், பரந்த மனப்பான்மையிலும் அழகிய முன்மாதிரியாகத் திகழ்கிறது. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களைக் கண்டால்கூட அந்தச் சிறுவர்களுக்கு ஸலாம் சொல்லி, அவர்களை மகிழ்வூட்டி, புன்னகை புரிவதற்கு அவர்களின் நபி என்ற அந்தஸ்து தடையாக அமையவில்லை.

அனஸ் (ரழி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றால் அவர்களுக்கு ஸலாம் உரைப்பார்கள். மேலும் கூறினார்கள் ‘‘நபி (ஸல்) அவர்களும் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் பணிவைப் பற்றி அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘மதீனாவின் அடிமைப் பெண்களில் ஓர் அடிமைப் பெண் நபி (ஸல்) அவர்களின் கரம்பற்றி தான் விரும்பிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வாள். நபி (ஸல்) அவர்கள் அவளது தேவையை நிறைவேற்றித் தருவார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

இஸ்லாமிய சட்டங்களைக் கேட்டறிய தமீம் இப்னு உஸைத் (ரழி) மதீனாவுக்கு வருகிறார். அந்தப் புதியவர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைவரான நபி (ஸல்) அவர்களுக்கும் தனக்குமிடையே தடையாக எவரும் இல்லாமல் மிம்பரில் நின்று நபி (ஸல்) மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே விளக்கம் கேட்கத் துணிந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பணிவோடும், அன்போடும் அவரை முன்னோக்கி அவன் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். அது குறித்து தமீமே கூறுகிறார் கேட்போம்:
‘‘நபி (ஸல்) அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் நான் அவர்களைச் சென்றடைந்தேன். ‘அல்லாஹ்வின் தூதரே! மார்க்கம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக வந்த புதிய மனிதர் (நான்)' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் உடனே என் பக்கம் திரும்பினார்கள். தனது பிரசங்கத்தை விட்டுவிட்டு என்னருகே வந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. அதன்மீது அமர்ந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததை எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். பிறகு பிரசங்கம் செய்யத் தொடங்கி அதைப் பூர்த்தி செய்தார்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்கு எளிமையும், பெருந்தன்மையும் கூடிய பணிவையும் கற்றுக் கொடுத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஓர் ஆட்டுக் கால் அல்லது அதன் கீழ்ப்பகுதியை விருந்தாக்கி அந்த விருந்துக்கு நான் அழைக்கப் பட்டாலும் நிச்சயம் நான் ஏற்றுக் கொள்வேன். ஆட்டுக் கால் அல்லது அதன் கீழ்ப்பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.'' (ஸஹீஹுல் புகாரி)

என்னே அவர்களது பணிவு...! எளியோரையும் அவர்கள் மதித்த பாங்குதான் என்னே...!


பரிகாசம் செய்யமாட்டார்

பணிவை விரும்பவேண்டும் என்று போதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியக் கலாச்சாரத்தில் பிறரை கேவலமாகக் கருதுவது, பரிகாசம் செய்வது என்பதெல்லாம் வெகுதூரமான விஷயமாகும். பணிவை விரும்ப வேண்டும், பெருமையடிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் பிறரைப் பரிகாசம் செய்யக் கூடாது, கேவலமாகக் கருதக் கூடாது என்றும் திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

விசுவாசிகளே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் (அல்லாஹ்வினிடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்). அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறைகூற வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு (தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். விசுவாசம் கொண்டதன் பின்னர் கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான) தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அக்கிரமக்காரர்கள். (அல் குர்ஆன் 49:11)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒருவன் தனது முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருதுவதே அவன் தீயவன் என்பதற்குப் போதுமாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

முதியோர், சான்றோருக்கு கண்ணியமளிப்பார்
மனிதர்களை இழிவாகக் கருதாமல் அவர்களுக்கு கண்ணியம் அளிக்க வேண்டுமென்று இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. குறிப்பாக தகுதி உடையவர்களுக்கு கௌரவமளிக்க வேண்டும். வயது முதிர்ந்தவர்கள், கல்வியாளர்கள், சான்றோர்களுக்கு மரியாதை செய்யவேண்டும். இப்பண்புதான் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதற்கான அடையாளமாகும். இப்பண்பை இழந்தவர் இச்சமுதாய உறுப்பினர் என்று சொல்வதற்கே அருகதையற்றவர். இக்கருத்தைப் பின்வரும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நம்மில் முதியவருக்கு மரியாதை செய்யாதவனும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதவனும், நமது (சமுதாய) அறிஞன் உரிமையை அறிந்திராதவனும் என் உம்மத்தைச் சார்ந்தவன் அல்லன்.'' (ஸுனன் அஹ்மத், முஃஜமுத் தப்ரானி)

முதியோர் மதிக்கப்படுவதும், சிறியவரைவிட அவரை முன்னிலைப் படுத்துவதும் இச்சமூக மேன்மையின் அடையாளமாகும். மேலும் அது இச்சமூகத்தவர்கள், மனிதநேயப் பண்புகள் குறித்து, அறிந்தவர்கள், ஒழுக்கசீலர்கள் என்பதற்கான ஆதாரமாகும். 

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை முஸ்லிம்களின் உள்ளத்தில் உறுதிப்படுத்தி அப்பண்புகளின் அவசியத்தை உணர்த்தினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் சிலர் வந்திருந்தபோது அவர்களில் சிறிய வயதுடைய அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் (ரழி) பேச ஆரம்பித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘பெரியவர்களுக்கு மரியாதை கொடு'' என்றார்கள். அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்கள் மௌனமானார். பிறகு வயதில் மூத்தவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசினர்.
நபி (ஸல்) அவர்கள் வயது முதிர்ந்தவர்களையும், சான்றோர்களையும் கண்ணியப்படுத்துவதை மிக அதிகமாக வலியுறுத்தி, அவ்வாறு கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வை கண்ணியப் படுத்துவதில் கட்டுப்பட்டது என்று விவரித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘முஸ்லிமான வயோதிகரையும், குர்ஆனை அறிந்து அதில் வரம்பு மீறாமல், அதைப் புறக்கணிக்காமல் இருப்பவரையும், நீதம் செலுத்தும் அதிகாயையும் கண்ணியப் படுத்துவது அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்துவதில் கட்டுப்பட்டதாகும்.'' (ஸுனன் அபூதாவூத்)

இந்தப் போதனைகள் முஸ்லிம்களின் முந்திய தலைமுறைக்கு நற்பலன்களை அளித்தன் மேன்மைக்குரிய குணங்களை தங்களுக்குள் கொண்ட உயர்ந்த மனிதர்களை உருவாக்கின. 

முதியோரையும் சான்றோரையும் மதிப்பதில் அவர்கள் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். சில உதாரணங்களை நாம் இங்கு குறிப்பிடுகிறோம்:
ஸமுரா இப்னு ஜுன்துப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறுவனாக இருந்தேன். அவர்களிடமிருந்து (ஹதீஸ்களை) மனனமிட்டிருந்தேன். அதைநான் வெளியே சொல்லத் தடையாக இருந்ததெல்லாம் அங்கு என்னைவிட வயதில் மூத்த பெரியவர்கள் இருந்தார்கள் என்பதுதான்''. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இங்கு மற்றோர் அழகிய முன்மாதிரியைக் காண்போம்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சபையில் இருந்தார்கள். அங்கு அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்திருந்தும் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) அவர்களை கண்ணியப்படுத்தும் விதமாக இப்னு உமர் (ரழி) மௌனமாக இருந்து விட்டார்கள்.
இது பற்றி இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘எனக்கு ஒரு மரத்தைப்பற்றி அறிவியுங்கள். அது முஸ்லிமுக்கு உதாரணமாகும். இரட்சகனின் உத்தரவுப்படி எல்லா நேரங்களிலும் கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் இலைகள் உதிர்வதில்லை (அது என்ன மரம்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். என் மனதில் அது ‘பேரீச்ச மரம்' என்று தோன்றியது. அந்த இடத்தில் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) இருந்ததால் அதைக் கூறத் தயங்கினேன். அந்த இருவரும் பேசாமலிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் ‘‘அது பேரீச்ச மரம்'' என்று கூறினார்கள். என் தந்தையுடன் வெளியே வந்தபோது ‘‘எனது தந்தையே என் மனதில் ‘பேரீச்சமரம்' என்று தோன்றியது'' என்றேன். அவர்கள் ‘‘அதைச் சொல்லாமல் உன்னைத் தடுத்தது எது?'' அதை நீ கூறியிருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமே'' என்றார்கள். ‘‘உங்களையும், அபூபக்கர் (ரழி) அவர்களையும் பேசாமலிருக்கக் கண்டேன். எனவே நான் அதைக் கூற விரும்பவில்லை என்று கூறினேன்'' என இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இஸ்லாம், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமென தனித்தனி அந்தஸ்தை வழங்கியுள்ளது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் மனிதர்களை அவர்களுக்குரிய அந்தஸ்தில் வைக்குமாறு எங்களை ஏவினார்கள்.'' இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம் அவர்கள் தனது முன்னுரையில் எழுதியிருக்கிறார்கள்.

ஒருவரை அவரது அந்தஸ்துக்கேற்ப மதிக்க வேண்டுமெனில், அவர்களது அந்தஸ்தை அறிந்திருக்க வேண்டும். முதலில் மார்க்க அறிஞர்கள், குர்ஆனை இதயத்திலும் செயலிலும் சுமந்திருப்போர், மேதைகள் மற்றும் சான்றோர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்.

அல்லாஹ்வின் மார்க்க நெறியில் நம்பிக்கையாளர்களாக இருந்து, சத்தியத்தை உரக்கச் சொல்லி, இஸ்லாமிய அடையாளங்களை பாதுகாப்பதை பணியாகக் கொண்டிருக்கும் அறிஞர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தில் பெரும் அந்தஸ்தும் உயர்வும் உண்டு.

.... (நபியே) நீர் கேளும்: கல்வி அறிவுடையோனும் கல்வி அறிவில்லா தோனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் எல்லாம் (கல்வி) அறிவுடையோர்தாம். (அல்குர்ஆன் 39:9)

இஸ்லாமிய சமூகத்தில் குர்ஆனை நெஞ்சில் சுமந்து கொண்டிருப்பவர்களுக்கும் உயரிய அந்தஸ்து உண்டு. அவர்களை சபைகளிலும் தொழுகைக்கு இமாமாகவும் முன்னிலைப்படுத்த வேண்டுமென நபிமொழி வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு கூட்டத்தாருக்கு அல்லாஹ்வின் வேதத்தை அதிகம் ஓதத் தெரிந்தவர் இமாமாக நிற்கட்டும். அவர்கள் குர்ஆன் ஓதுவதில் சமமானவர்களாயிருந்தால் சுன்னத்தை நன்கறிந்தவரும், அவர்கள் சுன்னத்தை அறிவதில் சமமானவர்களாக இருந்தால் ஹிஜ்ரத் செய்வதில் முந்தியவரும், ஹிஜ்ரத்தில் சமமானவர்களாக இருந்தால், வயதில் அதிகமானவரும் இமாமாக நிற்கட்டும். ஒரு மனிதர் மற்றொரு மனிதருக்கு உரிமையுள்ள இடத்தில் அவரது அனுமதியின்றி தொழவைக்க வேண்டாம். மற்றவருடைய வீட்டில் அனுமதி இல்லாமல் அவருக்குரிய இருக்கையில் அமர வேண்டாம்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

சற்று முன்சென்ற ஒரு நபிமொழியை நினைவு கூர்வோம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘முஸ்லிமான வயோதிகரையும், குர்ஆனை அறிந்து அதில் வரம்பு மீறாமலும், அதைப் புறக்கணிக்காமலும் இருப்பவரையும், நீதம் செலுத்தும் அதிகாயையும் கண்ணியப் படுத்துவது அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்துவதில் கட்டுப்பட்டதாகும்.'' (ஸுனன் அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போர்க்களத்தில் ஷஹீதானவர்களின் உடல்களை இரண்டிரண்டாக கப்ல் வைத்தபோது ‘‘குர்ஆனை அதிகமாக மனனமிட்டவர் இந்த இருவரில் யார்?'' என்று கேட்டார்கள். அப்போது எவரை சுட்டிக்காட்டப்பட்டதோ, அவரை முதலில் கப்ன் பக்கவாட்டில் வைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களின் அந்தஸ்திற்கேற்ப மதிப்பளிக்க வேண்டுமென்பதை தொழுகைக்கான அணிவகுப்பை சரிசெய்தபோது அவர்கள் கூறியதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘‘எனக்குப் பின் வரிசையில் உங்களிலுள்ள சான்றோர்களும் கல்விமான்களும் நிற்கட்டும்.'' (ஸஸீஹ் முஸ்லிம்)

மேற்கூறப்பட்ட நபிமொழி, மனிதர்கள் அந்தஸ்த்துக்கேற்ப மதிக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கண்ணோட்டத்தை மிகத்தெளிவாக விவரிக்கிறது. அறிவுடையோர்களும், சான்றோர்களும் தங்களது அந்தஸ்த்திற்கேற்ப முஸ்லிம்களின் பல்வேறு காரியங்களுக்குப் பொறுப்பேற்பவர்கள் என்ற காரணத்தினால் நபி (ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தினார்கள்.
‘‘ரஸுலுல்லா (ஸல்) அவர்கள் சான்றோர்களுக்கு கண்ணியத்தில் முதலிடம் அளித்தார்கள். மார்க்கப் பற்றில் உள்ள அந்தஸ்த்திற்கேற்ப கண்ணியமளித்தார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் சங்கைக் குரியவராக இருப்பவரை சங்கை செய்தார்கள், அவரையே அக்கூட்டத்தின் தலைவராகவும் ஆக்கினார்கள். அவர்களது சபை நேர்மையான நடத்தையுள்ள சிறந்த இறைவிசுவாசிகளால் செழிப்படைந்து இருந்தது. அவர்களுக்கு மத்தியில் இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டே ஏற்றத் தாழ்வு இருந்தது. நபித்தோழர்கள் முதியோர்களை கௌரவிப்பார்கள், சிறியோர்கள் மீது கருணை காட்டுவார்கள், தேவையுள்ளோரை தங்களின் உபகாரத்திற்கு தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள், தங்களிடம் பயணித்து வந்தவர்களை பாதுகாப்பார்கள்'' என ஹஸன் (ரழி) தனது தந்தை அலீ (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

முஸ்லிம் இந்த உண்மைகளை அறிந்து சமூகத்தின் அனைத்து மக்களுடனும் முன்மாதிரியாக நடந்து கொள்வதுடன் குறிப்பாக அறிஞர்கள் இறையச்சமுடையவர்கள் சான்றோர்களிடம் அவர்களது அந்தஸ்திற்கேற்ப நடந்துகொள்வார்.
நல்லோருடன் இணைந்திருப்பார்
முஸ்லிமின் பண்புகளில் ஒன்று நல்லோருடன் இணைந்திருப்பதாகும். அவர்களுடன் நெருங்கி அவர்களிடம் துஆவை கேட்டுப் பெற வேண்டும். அவர் எவ்வளவுதான் உயர் அந்தஸ்தில் இருந்தாலும் தயக்க மில்லாமல் அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.

(நபியே!) எவர்கள் கஷ்டங்களைச் சகித்து, தங்கள் இறைவனின் திருமுகத்தையே நாடி, அவனையே காலையிலும் மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உம்மையும் நீர் ஆக்கிக் கொள்ளும். இவ்வுலக அலங்காரத்தை நீர் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உம் கண்களைத் திருப்பிவிடாதீர். அன்றி, தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய இருதயத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பிவிட்டோமோ அவனுக்கும் நீர் வழிப்படாதீர். அவனுடைய காரியம் எல்லை கடந்துவிட்டது. (அல்குர்ஆன் 18:28)

நல்லோர்களுடன் சேர்ந்திருப்பது இறையச்சத்தையும், சத்தியத்தை அடைந்து கொள்வதற்குரிய தேட்டத்தையும், நற்பண்புகளையும், மார்க்க அறிவையும் வளரச் செய்யும். இந்த நற்பண்புகளைக் கொண்டே நாமும் நல்லவர்களாக முடியும்.
நபி மூஸா (அலை) அவர்கள் கல்வி கற்றுக் கொள்வதற்காக நல்லடியாரைத் தேடிச் சென்றபோது ஒழுக்கத்துடனும் பணிவுடனும் கூறுகிறார்கள்.
மூஸா அவரை நோக்கி, ‘‘உமக்கு கற்பிக்கப்பட்ட கல்வியில் பயனளிக்கக் கூடியதை நீர் எனக்கு கற்பிக்கும் நிபந்தனை மீது நான் உம்மைப் பின்பற்றலாமா?'' என்று கேட்டார். (அல்குர்ஆன் 18:66)

அதற்கு அந்த நல்லடியார் பதில் கூறுகிறார்:
அதற்கவர் என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக நீர் சக்தி பெறமாட்டீர். (அல்குர்ஆன் 18:67)

அப்போது நபி மூஸா (அலை) அவர்கள் மிக பணிவோடும் அன்போடும் கூறுகிறார்கள்:

‘‘அதற்கு மூஸா இறைவனருளால் (எவ்விஷயத்தையும்) சகித்திருப்பவனாகவே நீர் என்னைக் காண்பீர் எவ்விஷயத்திலும் நான் உமக்கு மாறு செய்யமாட்டேன்'' என்று கூறினார். (அல்குர்ஆன் 18:69)

உண்மை முஸ்லிம் நல்லோர்களுடன் மட்டுமே இணைந்திருப்பார். ஏனெனில் மனிதர்கள் சுரங்கத்தைப் போன்றவர்கள். அதில் உயர்ந்ததும் இருக்கும், அற்ப்பமானதும் இருக்கும் என்பதை மார்க்க போதனை ‘லிருந்து அறிந்திருப்பார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மனிதர்கள் தங்கம், வெள்ளி சுரங்கத்தைப் போன்ற சுரங்கமாவர். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் மார்க்க அறிவை அடைந்து கொண்டால் இஸ்லாமிலும் அவர்களே சிறந்தவர்கள். ஆன்மாக்கள் (ஆலமுல் அர்வால்) ஒன்று திரட்டப்பட்டதாயிருக்கும். (அங்கு) அறிமுகமானது (இங்கு) நேசித்துக் கொள்கிறது. (அங்கு) அறிமுகமாகாதது (இங்கு) முரண்படுகிறது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நண்பர்கள் இருவகையாவர். நல்ல நண்பர், கெட்ட நண்பர். நல்ல நண்பருக்கு உதாரணம் கஸ்தூரியை வைத்திருப்பவர் போல. அவருடன் அமர்வதால் நல்ல நறுமணத்தையும் மனதிற்கு மகிழ்ச்சியையும் அடைந்து கொள்ளலாம். கெட்ட நண்பருக்கு உதாரணம் கொல்லனைப்போல. அவனிடம் அமர்வதால் நெருப்பின் ஜுவாலையையும், புகையையும், கயையும்தான் அடைந்து கொள்ள முடியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பருக்கும் கெட்ட நண்பருக்கும் உதாரணம் கஸ்தூரியை வைத்திருப்பவனுக்கும் கொல்லனுக்கும் ஒத்ததாகும். கஸ்தூரியை வைத்திருப்பவன் உனக்கு தடவி விடலாம் அல்லது அதிலிருந்து கொஞ்சம் நீ வாங்கிக் கொள்ளலாம் அல்லது நறுமணத்தையாவது நீ நுகரலாம். கொல்லன் உனது ஆடையை எரித்துவிடுவான் அல்லது அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகர்வாய். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கண்ணியமிகு நபித்தோழர்கள் நல்லோர்களை சந்திப்பதில் பேராவல் கொண்டிருந்தனர். அந்நல்லோர்கள் அல்லாஹ்வை நினைவூட்டி, உள்ளங்களை மென்மையாக்கி, அல்லாஹ்வின் அச்சத்தால் கண்களை அழவைத்தனர்.

உம்மு அய்மன் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை சிறு வயதில் வளர்த்தவர்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு மிக அதிகம் சங்கை செய்வார்கள். உம்மு அய்மன் எனது தாய் என்றும் கூறுவார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களிடம் ‘‘உம்மு அய்மன் (ரழி) அவர்களை நபி (ஸல்)அவர்கள் சந்தித்து வந்ததுபோல் நாமும் சந்திக்கச் செல்வோம்'' என்று கூறினார்கள். உம்மு அய்மன் (ரழி) அவர்களிடம் அவ்விருவரும் சென்றபோது அழுதார்கள். இருவரும் ‘‘ஏன் அழுகின்றீர்கள்? அல்லாஹ்விடத்தில் உள்ளது அல்லாஹ்வின் தூதருக்கு மிகச் சிறந்ததாகும்'' என்றார்கள்.
அப்போது, உம்மு அய்மன் (ரழி) அவர்கள் ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்விடமுள்ள(பாக்கியமான)து மிகச் சிறந்தது என்பதைப்பற்றி தெரியாமல் நான் அழவில்லை. என்றாலும், வானத்திலிருந்து வஹீ வருவது நின்றுவிட்டதே! என்பதற்காக அழுகின்றேன்'' என்றார்கள். இந்த வார்த்தையின் மூலம் அவர்கள் அவ்விருவரையும் அழத்தூண்டி விட்டார்கள். அவருடன் சேர்ந்து அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) அழ ஆரம்பித்து விட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இம்மாதிரியான சபைகளை மலக்குகள் சூழ்ந்து கொள்கிறார்கள். அதை அல்லாஹ் தனது கருணையால் மூடிக்கொள்கிறான். ஈமான் உறுதி அடைகிறது. ஆன்மா தூய்மையடைந்து இதயம் பிரகாசிக்கிறது. எனவே அவர் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும், தான் சார்ந்துள்ள சமுதாயத்துக்கும் நன்மை பயப்பவராகிறார். இதுதான் தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் இஸ்லாமின் வழிகாட்டுதலாகும்.
 

மக்களுக்குப் பயனளித்து, இடையூறுகளை அகற்றுவதில் ஆர்வம் கொள்வார்

இஸ்லாமின் வழிகாட்டுதலால் வளர்க்கப்பட்டு அதன் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் நன்கறிந்த முஸ்லிம், சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் பலனளிப்பவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த வகையிலும் துன்பமிழைத்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சத்தியத்தையும் நன்மையையும் அடிப்படையாகக் கொண்டு அவர் வளர்க்கப்பட்டதால் மக்களுக்கு பலனளிப்பது என்பது இயல்பாகும். மக்களுக்குப் பயனளிப்பதற்கான வாய்ப்பு ஏதேனும் கிட்டினால் அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். ஏனெனில் அது வெற்றியின்பால் அழைத்துச் செல்லும் என்பதை அவர் அறிவார்.

விசுவாசிகளே! நீங்கள் குனிந்து சிரம்பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றி அடையலாம். (அல்குர்ஆன் 22:77)

பிறருக்கு நன்மைபுரியும் நோக்குடன் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அல்லாஹ்வின் மகத்தான நற்கூலியை பெற்றுத் தருகிறது என்ற உறுதியுடன் நற்செயலை நோக்கி விரைந்து செல்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும், இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்துவைப்பது தர்மமாகும். ஒருவரை அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன்மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும். நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும். தொழுகைக்கு செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். இடையூறு அளிப்பவைகளை பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம், சமூகத்திற்கு செய்ய வேண்டிய சேவைகளையும் தொழுகைக்காக நடந்து செல்வதையும் ஒருங்கே இணைத்துக் கூறியிருக்கும் அமைப்புதான் என்னே அற்புதம்!

தீன், துன்யா என பிரிக்காமலும், சமூக வாழ்வு ஆன்மீக வாழ்வு என வேறுபடுத்திக் காட்டாமலும் ஒருங்கிணைத்தே நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது மார்க்கம் என்பது மனிதனின் அனைத்து காரியங்களையும் சீர்படுத்தவே அருளப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

நேரிய வழியை நன்கு விளங்கிய முஸ்லிமின் பார்வையில், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் அனைத்து செயல்களும் இறைவணக்கமாகும்.

இறையச்சமுள்ள முஸ்லிமுக்கு முன்னால் நன்மையின் அனைத்து வாசல்களும் வியத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடைகளையும் அல்லாஹ்வின் விசாலமான கருணையையும் வேண்டி, விரும்பிய போதெல்லாம் நன்மையை அடைந்துகொள்வார்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: ‘‘அனைத்து நற்செயல்களும் தர்மமாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: ‘‘நல்ல வார்த்தை(யால் உரையாடுவது) தர்மமாகும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு தனது எண்ணத்தை தூய்மைப்படுத்திய மனிதன், தீமையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு ஒரு நற்காரியத்தை செய்ய நினைத்தாலே நன்மையுண்டு.
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் கடமையாக இருக்கிறது'' என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் வினவினர், ‘‘அவர் வசதியை பெற்றிருக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டுமென கருதுகிறீர்கள்?'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘‘அவரது இருகரத்தால் உழைத்து தானும் பலனடைந்து பிறருக்கும் தர்மம் செய்ய வேண்டும்.'' தோழர்கள் வினவினார்கள் ‘‘அதற்கும் சக்தி பெறவில்லையானால்?'' நபி (ஸல்) அவர்கள் ‘‘தேவை உடைய பலவீனமானவருக்கு உதவி செய்யட்டும்'' என்று கூறினார்கள். தோழர்கள் கேட்டார்கள் ‘‘அதையும் செய்ய முடியவில்லையென்றால்?'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நன்மையை ஏவட்டும்.'' தோழர்கள் வினவினார்கள் ‘‘அதுவும் செய்ய (முடிய)வில்லையென்றால்?'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘பிறருக்கு கெடுதி விளைவிப்பதிலிருந்து தன்னை தடுத்துக் கொள்ளட்டும். அது அவருக்கு தர்மமாகும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் கடமையாக இருக்கிறது என்று ஆரம்பித்து படிப்படியாக நன்மைகளின் வகைகளை வரிசைப்படுத்தினார்கள்.

தனது சக்திக்கேற்ப ஒவ்வொரு முஸ்லிமும் தர்மம் செய்யவேண்டியது கடமையாகும். அதாவது தனது சமுதாயத்தில் ஆக்கப்பூர்வமான நற்காரியங்களை செய்துவர வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தினால் இயலாமல் ஆகிவிட்டாலோ அல்லது செய்யவில்லை என்றாலோ, ஆகக் குறைந்தது தனது நாவாலோ, உறுப்புகளாலோ பிறருக்கு தீங்கு செய்யாமலிருக்க வேண்டும். இதுவும் தர்மம்தான். ஒரு முஸ்லிமின் அசைவும் அமைதியும் சத்திய மார்க்கத்திற்கு பணிசெய்வதாகவே அமைய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவருடைய நாவு, கரத்திலிருந்து முஸ்லிம்கள் நிம்மதி அடைகின்றார்களோ அவரே முஸ்லிமாவார்.'' (ஸஹீஹுல் புகாரி)

‘‘எவருடைய தீமையிலிருந்து அச்சமற்று அவரது நன்மையின் மீது ஆதரவு வைக்கப்படுகிறதோ அவரே சமூகத்தில் சிறந்தவர்'' என நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அமர்ந்து கொண்டிருந்த சில மனிதர்களருகே நின்று ‘‘நான் உங்களில் தீயவர்களிலிருந்து உங்களில் நல்லவர்களைப் பற்றி அறிவித்துத்தரட்டுமா?'' என்றார்கள். கூட்டத்தினர் மௌனமாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றுமுறை அவ்வாறு கேட்டார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! அறிவித்துத் தாருங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘எவன் நன்மை ஆதரவு வைக்கப்பட்டு அவரது தீமையிலிருந்து மக்கள் அச்சமற்று இருக்கிறார்களோ அவரே உங்களில் சிறந்தவர். உங்களில் எவரிடமிருந்து நன்மை நாடப்பட்டு, ஆனால் தீமையிலிருந்து மக்கள் நிம்மதி அடையவில்லையோ அவரே உங்களில் மிகக் கெட்டவர்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ஒரு முஸ்லிம் தனது சமூகத்தாருக்கு நன்மையை மட்டுமே முன்வைப்பார். அது இயலாதபோது தீமை செய்வதிலிருந்து தன்னை தடுத்துக்கொள்வார். உண்மை முஸ்லிம் எப்போதும் நன்மையை செய்வார் அவரிடமிருந்து தீமை வெளிப்படாது என்பதே நபிமொழியின் கருத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார்.'' (ஸஹீஹுல் புகாரி)

தான் விரும்புவதையே சகோதர முஸ்லிம்களுக்கும் விரும்ப வேண்டும் என்பதன் பொருள், அவர்களுக்கு உதவுவதிலும் அவர்களது துன்பங்களைத் தடுப்பதிலும் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதாகும். அத்துடன் இஸ்லாமிய சமூகத்தின் தனித் தன்மையை வெளிப்படுத்தும் மற்றொரு கடமையும் உண்டு. ஆம்! அது தனது உழைப்பாலும், உற்சாகத் தாலும் தனது முஸ்லிம் சகோதரர்களுக்குப் பணிவிடை செய்வதே.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஓர் அடியார் தனது சகோதரன் தேவையை நிறைவேற்றும் காலமெல்லாம் அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றுகிறான்.'' (முஃஜமுத் தப்ரானி)

மேலும் கூறினார்கள்: ‘‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவருக்கு அநீதி இழைக்கமாட்டார் அவரை விரோதியிடம் ஒப்படைக்கவும் மாட்டார். எவர் தனது சகோதரன் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறான். எவர் முஸ்லிமின் ஒரு துன்பத்தைப் போக்கினால் (அதற்கு கூலியாக) அல்லாஹ் அவரது மறுமையின் துன்பங்களில் ஒரு துன்பத்தை அகற்றுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அல்லாஹ் மறுமைநாளில் அவரது குறைகளை மறைக்கிறான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ‘‘எவர் முஃமினின் ஒரு துன்பத்தைப் போக்கினால் (அதற்கு கூலியாக) அல்லாஹ் அவரது மறுமையின் துன்பங்களில் ஒரு துன்பத்தை அகற்றுகிறான். ஒரு வறியவன் கடன் சுமையை எளிதாக்கினால் அல்லாஹ் அவருக்கு இம்மை மறுமையின் காரியங்களை எளிதாக்குகிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

சமூகத்தில் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற மனப் பான்மையை வளர்க்கும் இஸ்லாம், இஃதிகாஃப் இருப்பதைவிட தனது சகோதரனின் தேவையை நிறைவேற்றுவதற்காக சில எட்டுகள் நடப்பதை சிறந்ததாக்கியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘எவர் தனது சகோதரனின் தேவையை நிறைவு செய்வதற்காக நடக்கிறாரோ அது அவர் பத்து ஆண்டுகள் இஃதிகாஃப் இருப்பதைவிட மேலானதாகும். எவர் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஒருநாள் இஃதிகாஃப் இருக்கிறாரோ அவருக்கும் நரக நெருப்புக்குமிடையே அல்லாஹ் மூன்று குழிகளை ஏற்படுத்து கிறான். அந்த ஒவ்வொரு குழியும் கிழக்கு மற்றும் மேற்குக்கு இடையே உள்ள தூரத்தைவிட அதிக தூரமுடையதாயிருக்கும்.'' (முஃஜமுத் தப்ரானி)

அவ்வாறே மக்களுக்கு உதவி செய்ய வசதி வாய்ப்புகள் இருந்தும் அதில் அலட்சியமாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் நீங்கி விடும் என்று எச்சரித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ் ஓர் அடியானுக்கு அதிகமாக அருள் செய்கிறான். பின்பு மக்களின் தேவைகளில் சிலவற்றை அவனளவில் சாட்டுகிறான். அப்போது அந்த மனிதன் சலிப்படைந்தால் அவன் அல்லாஹ்வின் அந்த அருளை நீங்கவைத்து விட்டான்.'' (முஃஜமுத் தப்ரானி)

சுவனவாசிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் மனிதர்கள் வந்து போகும் பாதையில் இடையூறளித்த மரமொன்றை அகற்றிய ஒருவனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ‘‘உலகில் முஸ்லிம்களுக்கு இடையூறாகப் பாதை நடுவிலிருந்த மரத்தை வெட்டி அகற்றிய நன்மையின் காரணமாக சொர்க்கத்தில் மிக சந்தோஷமாகப் புரண்டு கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டேன்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

மக்களுக்குப் பயனளித்தல் என்பதில் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக்களைவதும் சேரும். எவர் மக்களின் சிரமங்களை அகற்றுகிறாரோ அவர் மக்களுக்கு நன்மை செய்தவராவார். இந்த இரு வகையான செயல்களினாலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய முடியும்.

இதனால் முஸ்லிம்களுக்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறை இரு பக்கங்களையும் எடுத்துக் கொள்கிறது. அவை அவர்களுக்கு பயனளிக்கும் காரியங்களைச் செய்வதும், தீமையளிக்கும் விஷயங்களைத் தடுப்பதுமாகும். இவை இரண்டின் மூலமும் சமூகம் மேன்மை அடைகிறது.
அபூ பர்ஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் பயன்பெறும்படியான விஷயங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘முஸ்லிம்கள் நடக்கும் பாதையிலிருந்து இடையூறு தருபவைகளை அகற்றுங்கள்'' எனக் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில்: ‘‘என்னை சுவனத்தினுள் நுழைய வைக்கும் அமலை எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என்றபோது, நபி (ஸல்) அவர்கள் ‘‘பாதையிலிருந்து இடையூறு அளிப்பவற்றை நீர் அகற்றிவிடும். அது உமக்கு தர்மமாகும்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

இஸ்லாம் அமைத்துள்ள சமூகக் கட்டமைப்பு உலகின் மற்றெல்லா சமூக அமைப்பையும்விட மேம்பட்டதாகும். அல்லாஹ்வின்பால் நெருக்கத்தை உண்டாக்கி சுவனத்தில் சேர்க்கும் நல் அமல்களில், மக்கள் நடக்கும் பாதையிலிருந்து அவர்களுக்கு இடையூறு தருபவற்றை அகற்றுவதும் ஒன்று என ஒவ்வொரு தனி மனிதன் உணர்விலும் இஸ்லாம் சமூக சேவையை ஆழப்பதிக்கிறது.

இன்றைய காலத்தில் மனிதர்கள் நடக்கும் பாதைகளில் அருவருப்பான துர்நாற்றமடிக்கும் பொருட்களும், கட்டிட இடிபாடுகளும், கழிவுப் பெருட்களும் குவிந்துகிடக்கின்றன. இதனால் அரசாங்கம் மக்களைக் கண்டிக்கும் விதமாக அபராதங்களை விதிக்கிறது.

அல்லாஹ்வின் கட்டளைக்குச் செவிசாய்க்கும் விதமாக பாதையில் மக்களுக்கு இடையூறளிக்கும் பொருட்கள் கிடந்தால் விரைந்து சென்று அதை அகற்றவேண்டுமென நேர்வழி காட்டப்பெற்ற சமூக அமைப்புக்கும் அல்லாஹ்வின் நேர்வழி அருளப் பெறாத சமூகத்துக்கு மிடையே எவ்வளவு பெரியவேறுபாடு? அந்தச் சமூக உறுப்பினர்கள் அவர்களது கழிவுப் பொருட்களை வீடுகளின் உச்சியிலிருந்தும் பால்கனியிலிருந்தும் ஜன்னல் வழியாகவும் மிக அலட்சியமாக வீசி எறிகிறார்கள். யார் யார் தலைகளில் அந்தக் குப்பைகள் விழுமோ!
நவீன நாகரிகம் கொண்ட மேற்கத்திய நாடுகள் இதுபோன்ற பழக்கவழக்கங்களில் தனது மக்களுக்கு சட்டத்தை மதித்து நடப்பதற்கு பயிற்சி அளித்து ஒரு மேலான நிலையை அடைந்திருக்கின்றன. என்றாலும், அம்மக்கள் இஸ்லாமிய சமூகத்திற்கு ஈடாகமாட்டார்கள்.

ஏனெனில், தனி மனித ஒழுக்கத்தில் இஸ்லாம் அமைத்துள்ள ஒழுக்கவியல் பண்புகள் சமூகச் சீரமைப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த நேரிய அமைப்பிலிருந்து விலகிச் சென்றால் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தவராகி, மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத்துக்குரியவராகி விடுவோம் என்பதை முஸ்லிம் கொள்கையாகக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ஒரு மேற்கத்தியர் தனது சமூக அமைப்புக்கு முரண்படுவதை ஒரு சாதாரண குற்றமாகவே கருதுவார். அவரது இதயத்தில் சில சமயங்களில் குற்ற உணர்வு ஏற்படும். தான் செய்யும் குற்றங்களை அரசால் கண்டுபிடிக்க இயலாது என்றால் அவர் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விடுவார்.
முஸ்லிம்களை ஒன்றிணைக்கப் பாடுபடுவார்
முஸ்லிம்களின் பிரச்சனைகளில் ஈடுபடுவது, அவர்களுக்குப் பயனளிக்கும் செயல்களில் ஆர்வம் காட்டுவது, அவர்களுக்கு இடையூறளிக்கும் விஷயங்களை அகற்றுவது போன்றே, தனது முஸ்லிம் சகோதரடையே பிணக்குகள் இருந்தால் அதை அகற்றி அவர்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டப் பாடுபட வேண்டும். சகோதரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து ஏராளமான சான்றுகள் உள்ளன.

விசுவாசிகளிலுள்ள இரு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்து கொண்டால், அவர்களுக்கிடையே சமாதானப்படுத்தி விடுங்கள். அவர்களில் ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பான் மீது வரம்பு மீறி அக்கிரமம் செய்தால் அக்கிரமம் செய்தவர்கள் அல்லாஹ்வினுடைய கட்டளையின்பால் வரும் வரையில் அவர்களுடன் நீங்கள் போர் செய்யுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின்பால் திரும்பிவிட்டால் நியாயமான முறையில் அவ்விரு வகுப்பாருக்கிடையே சமாதானம் செய்து நீதமாகத் தீர்ப்பளியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதிசெய்வோரை நேசிக்கின்றான். (அல் குர்ஆன் 49:9)

சண்டையிட்டுக் கொள்ளும் இரு கூட்டங்களிடையே சமாதானம் செய்துவைக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் வரம்புமீறும் கூட்டத்தினர் மீது தாக்குதல் நடத்த அவசியம் ஏற்பட்டாலும் சரியே. முஃமின்களிடையே நீதி நிலைநாட்டப் பெறவேண்டும், இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம் பேணப்பட வேண்டும் என்பதுதான் இக்கட்டளைக்குக் காரணமாகும்.

நிச்சயமாக விசுவாசிகள் யாவரும் சகோதரர்களே! ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தை)யும் நிலை நிறுத்துங்கள். (இதில்) அல்லாஹ்வுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள். (அல் குர்ஆன் 49:10)

நபி (ஸல்) அவர்கள் முரண்பட்டு நிற்பவர்களிடையே ஒற்றுமையையும் நேசத்தையும் ஏற்படுத்துவதற்கு தங்களது பல பணிகளுக்கிடையிலும் பெரும் முயற்சி செய்தார்கள்.

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அம்ருப்னு அவ்ஃப் கூட்டத்தாடையே சண்டை சச்சரவு ஏற்பட்ட தகவல் நபி (ஸல்) அவர்களுக்குக் கிட்டியது. அவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த தனது தோழர்களுடன் சென்றார்கள்.

முஃமின்களிடையே சகோதரத்துவம் நிலவவேண்டும் அவர்களது வாழ்வில் அன்பும் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் காணப்பட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். அதனால் இது குறித்த போதனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவமளித்து கோபத் தீ மூளும்போது அதை அணைத்து விடுவதற்கான வழிமுறையை கற்றுத் தந்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் வாசலில் நின்று கொண்டு உரத்த குரலில் சப்தமிட்டுக் கொண்டிருந்த இரு மனிதர்களின் சப்தத்தை செவியேற்றார்கள். ஒருவர் மற்றவரிடம் அவருக்குக் கொடுக்க வேண்டிய கடனில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்யுமாறு கேட்க, மற்றவர், ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் செய்யமாட்டேன்'' என்று கூறினார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து ‘‘உபகாரம் செய்ய மாட்டேன் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர் எங்கே?'' என்றார்கள். வெறுப்பும் கண்டிப்பும் நிறைந்த நபி (ஸல்) அவர்களின் சப்தத்தைக் கேட்ட அம்மனிதர் வெட்கத்தால் குறுகிப்போய் தனது உரிமை விஷயத்திலிருந்து இறங்கி வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான்தான் சத்தியம் செய்தேன். இப்பொழுது அவர் எதை விரும்புகிறாரோ அதையே செய்து கொள்ளட்டும்'' என்றார். (ஸஹீஹுல் புகாரி)

மனிதர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், வெறுப்புக்குள்ளான இதயங்களுக்கிடையில் பிரியத்தை ஏற்படுத்தவும் மிகைப்படுத்திப் பேசுவது பொய்யாக கருதப்படாது, பேசுபவரும் பொய்யராக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
உம்மு குல்ஸும் பின்த் உக்பா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: ‘‘மனிதர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தி நன்மையை வளர்ப்பவர் பொய்யராக மாட்டார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தின் மற்றோர் அறிவிப்பில் இந்த ஹதீஸ் அதிக விளக்கத்துடன் கூறப்பட்டுள்ளது. ‘‘மூன்று விஷயத்தில் மட்டும் மனிதர்கள் பொய் பேசுவதில் நபி (ஸல்) அவர்கள் சலுகை காட்டினார்கள். 1) போரில் 2) மனிதர்களிடையே இணக்கத்தை உண்டு பண்ணுவதில் 3) ஒரு கணவன் தனது மனைவியிடம் பேசுவதில், மனைவி தனது கணவனிடம் பேசுவதில்.''


சத்தியத்தின்பால் அழைப்பார்

உண்மை முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தனது அழைப்புப் பணியில் உற்சாகத்துடனும் உறுதியுடனும் செயல்படுவார். நன்மையைச் செய்ய ஏதேனும் தகுந்த சூழ்நிலை ஏற்படுமா என எதிர்பார்க்காமல் மனிதர்களை சத்தியத்தின்பால் அழைப்பதற்கு விரைந்து செல்வார். மனத்தூய்மையுடன் அழைப்புப் பணிபுபவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தி வைத்துள்ள அருட்கொடைகளை பெரிதும் விரும்புவார்.

அலீ (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஒரு மனிதருக்கு உம்மூலமாக அல்லாஹ் நேர்வழி கிடைக்கச் செய்வது உமக்கு உயர்ரக செந்நிற ஒட்டகைகளைவிட மேலானதாகும்.'' (ஸஹீஹுல் புகாரி)

வழிதவறி திகைத்து நிற்கும் ஒரு மனிதனின் செவியில் சத்திய அழைப்பாளர் ஒரு நல்ல வார்த்தையை போடுவதன் மூலம் அவரது இதயத்தில் நேர்வழியின் விளக்கேற்றுகிறார். அப்போது அவர் அரபுகளின் செல்வங்களில் மிக உயரியதாக கருதப்பட்ட செந்நிற ஒட்டகைகள் அவருக்கு கிடைப்பதைவிட பன்மடங்கு அதிகமான நன்மைகளை அடைந்து கொள்கிறார். இவர் மூலமாக நேர்வழி பெற்றவன் நன்மைகளைப் போன்று இவருக்கும் கிடைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
நேர்வழியிலிருந்து விலகியிருப்பவர்களை ஏகத்துவத்தின்பால் அழைப்பதில் தங்களது செல்வங்களையும் நேரங்களையும் செலவிட்டு அறிவீனர்களிடமிருந்து வரும் தீமைகளை இன்முகத்துடன் சகித்துக் கொள்ளும் அழைப்பாளர் மீது பொறாமை ஏற்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
விரும்பத் தகுந்த இப்பொறாமை குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘இரண்டு விஷயத்திலே தவிர பொறாமை (கொள்ள அனுமதி) கிடையாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தான். சத்தியத்திற்காக அதை அவர் செலவு செய்கிறார். மற்றொருவருக்கு அல்லாஹ் கல்வி ஞானங்களைக் கொடுத்தான். அவர் அதன்படி மக்களுக்குத் தீர்ப்பளித்து மற்றவருக்கும் கற்றுக் கொடுக்கிறார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ்வின்பால் அழைப்புப் பணிபுரியும் முஸ்லிம் தன்னிடமுள்ள ஞானத்தை அற்பமாக நினைக்காமல் சத்திய வார்த்தைகளில் தனக்கு எது தெரியுமோ அது அல்லாஹ்வுடைய வேதத்தின் ஒரே ஒரு வசனமாயிருப்பினும் எவ்விதத் தயக்கமுமின்றி அதை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் கூறினார்கள்: ‘‘...என்னிடமிருந்து (நீங்கள் அறிந்து கொண்டது) ஒரே ஒரு வசனமாயிருப்பினும் அதை எத்திவைத்து விடுங்கள்...'' (ஸஹீஹுல் புகாரி)

ஏனெனில், ஒரு வசனம் கூட மனித இதயத்தினுள் ஊடுருவி அவன் நேர்வழிபெற போதுமானதாகி விடலாம். அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அவனது இதயத்தில் ஈமான் இடம்பெற ஒரு வசனம் போதும். அந்த ஒரு வசனம் அவனது ஆன்மாவில் ஒளியேற்றி, வாழ்வில் பெயதொரு மாற்றத்தை உண்டு பண்ணி அவனை புதியதொரு மனிதனாக மாற்றிவிட முடியும்.
நபிமொழி கூறுவதுபோல உண்மை முஸ்லிம் தனக்கு விரும்பு வதையே தமது சகோதரருக்கும் விரும்புவார். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவருக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மையே நாடுவார். அதனால் பிரகாசமான நேர்வழி தன்னிலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களிலும் குறுகிப் போய்விடாமல் உலகம் முழுவதும் பரவவேண்டுமென விரும்புவார்.
தனக்கும் தனது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி உலகமக்கள் அனைவருக்கும் சுவனத்தை விரும்புவார். அதனால் நரகத்தை தூரமாக்கி சுவனத்தில் சேர்ப்பிக்கும் நேர்வழியின்பால் எல்லாக் காலங்களிலும் எல்லோரையும் அழைத்துக் கொண்டேயிருப்பார். இது அழைப்பாளர்களின் பண்பாகும். இப்பண்பைக் கடைபிடிப்பதால் அல்லாஹ்வின் தூதரின் வாழ்த்தையும் துஆவையும் பெற்றுக் கொள்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நம்மிடமிருந்து ஒரு விஷயத்தைக் கேட்டு அதைக் கேட்டவாறே பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதரை அல்லாஹ் செழிப்பாக்குவானாக! எத்தி வைக்கப்பட்ட எத்தனையோ மனிதர்கள் அதைக் கேட்டவரைவிட நன்கு புரிந்துகொள்கிறார்கள்.'' (ஸுனனுத் திர்மிதி)
இஸ்லாமிய சமூகம், பொறுப்புகளை சுமந்து நிற்கும் சமூகமாகும். இஸ்லாம் அந்த பொறுப்புகளை தனது உறுப்பினர் ஒவ்வொருவன் மனதிலும் ஆழப்பதித்துள்ளது. ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விற்கு முன் தங்களது பொறுப்புகளை நன்கறிந்து அழைப்புப் பணியை திறம்பட செய்திருந்தால் இன்று இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கி பலவீனப் பட்டிருப்பதை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும்.

ஏகத்துவ அழைப்புப் பணிக்கான வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தும் அதில் குறை செய்து, கல்வி ஞானமிருந்தும் அதை மறைத்து, பதவியையும் பொருளையும் அடைந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்பவர்களை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒருவர், அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தரும் கல்வியை உலகாதாயத்தை பெறுவதற்காக மட்டுமே கற்றுக் கொள்வாரேயானால் அவர் மறுமை நாளில் சுவனத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்.'' (ஸுனன் அபூதாவூத்)

மேலும் கூறினார்கள்: ‘‘தான் அறிந்த ஒரு விஷயத்தைப் பற்றி கேட்கும்போது அதை மறைப்பவர் மறுமைநாளில் நரக நெருப்பினாலான கடிவாளம் அணிவிக்கப்படுவார்.'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி)


நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார்

அல்லாஹ்வின்பால் அழைப்பதன் அவசியப் பணிகளில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் ஒன்றாகும். அழைப்பாளர் அறிவுடனும், நிதானத்துடனும் அழகிய முறையில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார். கரத்தால் தடுப்பதில் கடுமையான குழப்பங்கள் எதுவும் ஏற்படாது என்றால் அத்தீமையை தனது கரத்தால் மாற்றுவார். அது இயலவில்லையென்றால் தனது நாவின்மூலம் சத்தியத்தை எடுத்துரைத்து தீமையை நன்மையாக மாற்றப் போராடுவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்ததைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்துவிடட்டும். இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களின் நலம் நாடி நல்லதை ஏவி, தீமையைத் தடுப்பார். ஏனெனில், மார்க்கம் என்பது பிறர்நலம் நாடுவதுதான். இதை உண்மைப்படுத்த வேண்டுமெனில் அவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தேயாக வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவது'' என்று கூறியபோது நாங்கள் கேட்டோம் ‘‘யாருக்கு?'' நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும்'' என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

பிறர் நலம் நாடுவதும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் அநீதியிழைப்பவனின் முகத்துக்கு நேராக சத்தியத்தை உரக்கச் சொல்வதற்கான துணிவை முஸ்லிமுக்கு ஏற்படுத்தித் தரும்.

சுதந்திரமாகவும், கண்ணியமாகவும், கௌரவத்துடனும் இச்சமூகம் நிலைபெறுவதென்பது அநியாயக்காரனுக்கு முன் ‘நீ அநியாயக்காரன்' என்று அச்சமின்றி சொல்லும் ஆற்றல் பெற்ற வீரர்களால் மட்டுமே சாத்தியமாகும். இச்சமூகத்தில் எப்போது அச்சமின்றி சத்தியத்தை எடுத்துரைக்கும் ஒரு கூட்டம் இல்லையோ அப்போது ஒட்டுமொத்த சமுதாயமும் வீழ்ச்சியை சந்திக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அநியாயக்காரனிடம் ‘நீ அநியாயக்காரன்' என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத் தினரைக் கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள்.''
(முஸ்னத் அஹ்மத்)

அசத்தியத்தை எதிர்ப்பதில் வீரத்தை கடைபிடிக்க வேண்டும், அநியாயக்காரனை எதிர்ப்பது உணவையோ வாழ்வையோ குறைத்துவிட முடியாது என்று அறிவுறுத்தும் அதிகமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மனிதரைப் பற்றிய அச்சம் நீங்கள் சத்தியத்தைக் கூறுவதிலிருந்தோ, மகத்தானதை (அல்லாஹ், மறுமைநாளை) நினைவுபடுத்துவதிலிருந்தோ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது நிச்சயமாக உங்களது ஆயுளைக் குறைத்துவிடவோ, உணவை தூரமாக்கிவிடவோ முடியாது.'' (ஸுனனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்தபோது ஒரு மனிதர் எழுந்து வினவினார்: ‘‘அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்?'' நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதர்களில் சிறந்தவர் அவர்களில் நன்கு குர்ஆன் ஓதுபவர், மிகுந்த இறையச்சமுடையவர், அவர்களில் மிக அதிகம் நன்மையை ஏவி தீமையை தடுப்பவர், அவர்களில் மிக அதிகமாக இரத்தபந்துக்களோடு இணைந்திருப்பவர்'' என்று கூறினார்கள் (முஸ்னத் அஹ்மத்)

இஸ்லாமிய சமூகத்தில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது முஸ்லிம்களின் வீரத்தையும், துணிச்சலையும் அடிப்படையாகக் கொண்ட தாகும். தீமைகளை எதிர்கொள்வதிலும், அநீதி இழைக்கப்பட்டோருக்கு உதவி புரிவதிலும், வீரத்தை வெளிப்படுத்த வேண்டும்.
சத்தியத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளதென்றும், சத்தியத்தை எடுத்துரைக்காமல் வாய் மூடியிருக்கும் கோழைகளுக்கு இழிவு உள்ளதென்றும் விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு முஸ்லிமை கேவலப் படுத்துகிறார்கள் அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள் அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லையென்றால் அல்லாஹ்வுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ் அவனை கைவிட்டு விடுவான். ஒரு முஸ்லிம் கேவலப்படுத்தப்படும்போது, அவனுடைய கண்ணியம் தாக்கப்படும் போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அவன் ‘அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதா' என்று ஏங்கும் தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.'' (ஸுனன் அபூதாவூத்)

முஸ்லிம் அசத்தியத்தை சகித்துக்கொள்ள மாட்டார். சத்தியத்திற்கு உதவி செய்வதில் சோர்வடைய மாட்டார். தனது சமூகத்தில் அநீதம் பரவுவதையும், சபைகளில் தீமைகள் பரவுவதையும் ஒருபோதும் விரும்பமாட்டார். எப்போதும் தீமைகளை தடுத்துக் கொண்டேயிருப்பார். ஏனெனில் தீமையைத் தடுக்காதிருந்தால் அல்லாஹ்வின் வேதனை வாய்மூடி கோழையாக இருப்பவர்களையும் சூழ்ந்து கொள்ளும்.
அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிம்பரில் ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்த பின் கூறினார்கள்: மனிதர்களே நீங்கள் அல்லாஹ்வின் திருவசனமான, ‘‘விசுவாசிகளே! நீங்கள் (தவறான வழியில் செல்லாது) உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேரான வழியில் சென்றால் வழிதவறிய எவனுடைய தீங்கும் உங்களை பாதிக்காது...'' (அல்குர்ஆன் 5:105) என்ற திருவசனத்தை ஓதுகிறீர்கள். நீங்கள் அந்த திருவசனத்திற்கான பொருளை உரிய வகையில் விளங்கிக்கொள்வ தில்லை. நிச்சயமாக நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் ‘‘மனிதர்கள் தீமைகளைக் காணும்போது அதை தடுக்காமல் இருந்தால் வெகுவிரைவில் அல்லாஹ்வின் வேதனை அவர்கள் அனைவரையும் சூழ்ந்துகொள்ளும்.'' (ஸுனன் அபூதாவூத்)

ஒரு முஸ்லிமின் மார்க்கப் பற்று உண்மையாக இருந்து, அவரது ஈமான் உயிரோட்டமுடையதாக இருந்தால் நன்மையை ஏவுவதில் தீவிரமாகவும், தீமையை எதிர்கொள்வதில் வீரத்துடனும் இருப்பார். தீமைகளை அகற்ற முடிந்தளவு போராடுவார். ஏனெனில் மார்க்கத்தின் எல்லா அம்சங்களும் முக்கியமானவைதான். அதன் எந்தப் பகுதியிலும் அலட்சியம் கூடாது. அதன் கொள்கைகள் அனைத்தும் உறுதியானவை; சந்தேகமற்றவை.

தங்களது மார்க்க விஷயங்களில் யூதர்கள் அலட்சியம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்கானதுபோல, முஸ்லிம்களும் பலியாகிவிடக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகமான பனூ இஸ்ராயீல்களில் ஒருவர் தவறு செய்தால் அதைத் தடுத்து கண்டிக்க வேண்டியவர் தடுப்பார். அதற்கு அடுத்த நாள் அந்த நபருடன் அமர்ந்து சாப்பிடவும், குடிக்கவும் செய்வார். அவர் நேற்று எந்த தவறுமே செய்யாதது போன்று நடந்துகொள்வார். இதை அல்லாஹ் அவர்களிடையே கண்டபோது அவர்கள் மாறுசெய்து, வரம்பு மீறியதன் காரணமாக தாவூது (அலை), ஈஸா (அலை) அவர்களின் நாவினால் சபித்து அம்மனிதர்கள் சிலரின் உள்ளங்களை வேறு சிலரின் உள்ளங்களோடு கலந்துவிட்டான்.

எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள். தவறிழைப்பவனின் கரங்களைப் பிடித்து அவனை சத்தியத்தின்பால் திருப்பிவிடுங்கள். அவ்வாறு செய்யவில்லையானால் அல்லாஹ் உங்களது இதயங்களை ஒன்றோடொன்று இணைத்து விடுவான். (தீமைகளோடு ஒத்துப் போய் விடுவீர்கள்) அந்த இஸ்ர வேலர்களை சபித்ததுபோல உங்களையும் சபித்து விடுவான்.'' (முஃஜமுத் தப்ரானி)


அழைப்புப் பணியில் மிருதுவாகவும், விவேகமாகவும் நடந்து கொள்வார்

முஸ்லிம் அழைப்பாளர் தனது ஏகத்துவ அழைப்புப் பணியில் விவேகத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
(நபியே!) நீர் (மனிதர்களை) நளினமாகவும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக!......(அல்குர்ஆன் 16:125)
அல்லாஹ்வின்பால் அழைப்பவர் இதயங்களை ஊடுருவும் ஆற்றல் பெற்று, அதில் ஈமான் மீதான நேசத்தைப் பதிய வைத்து, மார்க்கத்தின் பால் மக்கள் விரைந்துவரும் ஆர்வத்தைத் தூண்டுபவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு சிரமத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது. எனவே அவர் மனிதர்களிடம் தன்னிடமுள்ள கல்வி, ஞானங்களை ஒரே நேரத்தில் கொட்டிவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக முன் வைத்து அவர்களது உணர்வுகளையும் இதயங்களையும் அவ்வப்போது தொடவேண்டும். அந்தச் சந்தர்ப்பங்களில் சிரமப்படுத்தும் நீண்ட உபதேசங்களை தவிர்த்திட வேண்டும். இதுதான் நபி (ஸல்) அவர்கள் மனிதர்களிடையே நடந்து கொண்ட முறையாகும்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் ஒவ்வொரு வியாழனன்றும் மக்களுக்கு உபதேசம் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒருவர் ‘‘அபூ அப்துர் ரஹ்மானே! நீங்கள் தினந்தோறும் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டுமென விரும்புகிறோம்'' என்றார்.
இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் ‘‘உங்களுக்கு சடைவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமே தினந்தோறும் உபதேசிப்பதிலிருந்து என்னைத் தடுக்கிறது. எங்களுக்கு சடைவு ஏற்படக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் எப்படி நாட்களை நிர்ணயித்தார்களோ அவ்வாறே நானும் உங்களுக்கு உபதேசம் செய்ய நாட்களை நிர்ணயித்துள்ளேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அழைப்புப் பணியில் நீண்ட பிரசங்கத்தை தவிர்த்துக் கொள்வது விவேகமான அணுகுமுறையாகும். அதிலும் மிகப்பெரியகூட்டங்களில் உரையாற்றும்போது அதில் வயோதிகர்கள், பலவீனர்கள், நோயாளிகள் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு சுருக்கமாக உரையாற்றுவது பிரசங்கம் செய்பவர் அழைப்புப்பணியை நன்கறிந்தவர் என்பதையும் மக்களின் மனநிலையை விளங்கியவர் என்பதையும் வெளிப்படுத்துவதாகும்.

அம்மார் இப்னு யாஸிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நிச்சயமாக ஒரு மனிதன் நீண்ட தொழுகையும், சுருக்கமான குத்பாவும் அவர் அறிவாளி என்பதற்கான அடையாளமாகும். தொழுகையை நீளமாக்குங்கள், குத்பாவை சுருக்கிக் கொள்ளுங்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். (ஸஹீஹ் முஸ்லிம்)

அறிவும், விவேகமும் கொண்ட அழைப்பாளர் பிறரை சத்தியத்தின்பால் மென்மையாக அழைப்பார். மக்களின் அறியாமையையும், அவர்களுக்கு விளங்குவதில் ஏற்படும் தாமதத்தையும், அவரை சோர்வடையச் செய்யும் மிக அதிகமான கேள்விகளையும், தவறுகளையும், பொறுமையுடன் சகித்துக் கொள்ளவேண்டும்.

இது விஷயத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு தனது இதயத்தை விரிவாக்கி அவர்களுக்கு பதிலளிப்பதிலும், போதனை செய்வதிலும் விவேகத்தைக் கடைபிடித்த நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

முஆவியா இப்னு ஹகம் அஸ்ஸலமி (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு மனிதர் தும்மினார். நான் ‘யர்ஹமுக்கல்லாஹ்' என்று கூறினேன். உடனே மக்கள் என்னைப் பார்வையால் துளைத்தார்கள். நான் ‘‘உங்களது தாய் உங்களை இழக்கட்டும்! என்னை இவ்வாறு பார்க்கின்றீர்களே. உங்களுக்கு என்னவாயிற்று?'' என்று கேட்டேன். அம்மக்கள் கரங்களால் தங்களது தொடைகளைத் தட்ட ஆரம்பித்தனர். அவர்கள் என்னை மௌனமாக இருக்கச் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு நான் மௌனம் காத்தேன்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது, -எனது தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்-. அதற்கு முன்னாலும் அதற்குப் பிறகும் அவர்களைப் போன்ற ஓர் அழகிய போதனையாளரை நான் கண்டதில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! என்னை கடுகடுப் போடு பார்க்கவில்லை திட்டவுமில்லை அடிக்கவுமில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘‘இது தொழுகை. இதில் உலகப் பேச்சு பேசுவது முறையாகாது, தொழுகை என்பது தஸ்பீஹும், தக்பீரும், குர்ஆனை ஓதுவதும்தான்'' என்றோ அல்லது இதைப் போன்ற வார்த்தைகளையோ கூறினார்கள்.
நான் கேட்டேன்: ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்துக்கு சமீபமானவன் (நான் சமீபத்தில்தான் இஸ்லாமை ஏற்றேன்). இப்போது அல்லாஹ்வே இஸ்லாமைத் தந்தான். எங்களில் சிலமனிதர்கள் சோதிடக்காரனிடம் செல்கிறார்கள்!'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘‘நீர் அவர்களிடம் செல்லாதீர்.'' நான், ‘‘எங்களில் சிலர் சகுனம் பார்க்கிறார்கள்'' என்றேன். நபி (ஸல்) அவர்கள்,‘‘அது அவர்களுடைய உள்ளங்களில் ஏற்படும் ஓர் உணர்வாகும். அது அவர்களைத் தடுத்து விடவேண்டாம்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

(அது அவர்களை தடுத்துவிட வேண்டாம் என்பதின் பொருள்: மனதில் ஏற்படும் தடுமாற்றத்தால் எந்த காரியத்தையும் நிறுத்திட வேண்டாம் என்பதே.)

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களை நன்மையின்பால் அழைக்கும் போது தீங்கிழைத்தவரை நேரடியாக கண்டிக்க மாட்டார்கள். அதற்கு காரணம் இவ்வழிமுறையால் அவரது உணர்வுகளும் கண்ணியமும் பாதுகாக்கப்படும். மேலும் இவ்வழிமுறை உள்ளங்களில் கருத்துக்களை ஆழமாக பதியவைத்து, தவறுகளைக் களைவதில் வெற்றிகரமான அணுகுமுறையாகும்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு மனிதரைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தால் ‘அம்மனிதர் இப்படிச் சொல்கிறாரே!' என்று கூறமாட்டார்கள். மாறாக ‘சிலர் இப்படி, இப்படிக் கூறுகிறார்களே!' என்றே கூறுவார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

வெற்றிகரமான அழைப்பாளனுக்கு வேண்டிய பண்புகளில் ஒன்று தனது பேச்சை தெளிவாக, விரிவாக எடுத்துரைப்பதாகும். முக்கியமான கருத்துக்களை பலமுறை கூறவேண்டும்.
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் பேசினால் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக வார்த்தைகளை மூன்றுமுறை கூறுவார்கள். ஏதேனும் ஒரு கூட்டத்தாரிடம் வந்து ஸலாம் கூறினால் அவர்களுக்கு மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களின் பேச்சு தெளிவான பேச்சாக அமைந்திருக்கும், அதை கேட்கும் அனைவரும் புரிந்துகொள்வார்கள்.'' (ஸுனன் அபூதாவூத்)
 

நயவஞ்சகம் கொள்ளமாட்டார்

உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக் கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் பனூ ஆமிர் என்ற கூட்டத்தினர் புகழ்ச்சியாகக் கூறினர்: ‘‘நீங்கள் எங்களது தலைவர்.'' உடனே நபி (ஸல்) அவர்கள் ‘‘தலைவன் அல்லாஹ் மட்டுமே'' என்று கூறினார்கள். அக்கூட்டத்தினர், ‘‘நீங்கள் எங்களில் மிகவும் சிறப்புக்குரியவர், மகத்தான அந்தஸ்துடையவர்'' என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்களது இந்த வார்த்தைகளை முழுமையாகவோ, அதன் ஒரு பகுதியையோ கூறிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஷைத்தானுக்கு துணை போகாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் என்னை எந்த அந்தஸ்தில் படைத்துள்ளானோ அதைவிட மேலாக நீங்கள் என்னை உயர்த்துவதை நான் விரும்பவில்லை. நான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ், அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவேன்'' என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

நபி (ஸல்) அவர்கள்தான் முஸ்லிம்களின் தலைவர், அவர்களில் சிறப்பானவர் என்பது சந்தேகத்துக்கிடமின்றி இருந்தாலும் புகழ்வதை அனுமதித்தால் மக்கள் வரம்பு மீறிச் சென்று புகழுக்குத் தகுதியற்றவர்களை மேன்மைக்குரியவர், தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து விடுவார்கள் என்பதால்தான், தன்னைப் புகழ்ந்தவர்களை தடுத்தார்கள். மேலும், இம்மாதிரியான புகழ்ச்சிக்கு இடமளித்தால் அது மக்களை நயவஞ்சகத்தனம் என்ற அழிவின்பால் சேர்த்துவிடும். இவ்வாறு புகழ்வது பரிசுத்தமான இஸ்லாமின் அடிப்படைக்கு முரண்பட்டதாகும்.

புகழ்பாடுவது, புகழ்பவனை நயவஞ்சகத் தன்மையை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். அவ்வாறே புகழப்படுபவனை பெருமைக்கு ஆளாக்கிவிடும் என்பதால்தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்கள் மனிதர்களின் முகத்துக்கு எதிரே புகழ்வதை தடுப்பவர்களாக இருந்தார்கள்.

அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர் நாசமடைவீராக! உமது தோழன் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழன் கழுத்தை அறுத்து விட்டீர்'' என மூன்றுமுறை கூறினார்கள். பிறகு, ‘‘எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கண்டிப்பாக புகழவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்தப் புகழ், புகழப்படுபவனுக்கு உண்மையில் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். வரம்பு மீறாமல் கூடுதல் குறைவின்றி நடுநிலையுடன் அமைய வேண்டும். அதன்மூலமே சமூகத்தை பொய், நயவஞ்சகம், ஏமாற்றுதல், முகஸ்துதி போன்ற இழி குணங்களிலிருந்து தூய்மைப்படுத்த முடியும்.
ரஜா (ரஹ்) அவர்கள் மிஹ்ஜன் (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களும் மிஹ்ஜனும் மஸ்ஜிதில் இருந்தபோது தொழுது ருகூவு, ஸுஜூது செய்து கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவர் குறித்து இவர் யார்? என வினவினார்கள். மிஹ்ஜன் (ரழி) அவரை அதிகம் புகழ ஆரம்பித்து ‘‘இவர் இப்படி, இப்படி சிறப்புக்குரியவர்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘‘போதும். நிறுத்திக்கொள்! அவர் கேட்கும்படி கூறாதே. அவரை அழித்து விடுவாய்'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

முஸ்னத் அஹ்மத் கிரந்தத்தின் ஓர் அறிவிப்பில் கூறப்படுவதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதரே! இம்மனிதர் மதீனா வாசிகளில் மிக அழகியவர் என்றோ மதீனாவாசிகளில் மிக அதிகமாகத் தொழுபவர்'' என்றோ கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ‘‘அவர் கேட்கும்படி புகழாதே. அவரை நீ அழித்துவிடுவாய்'' என இரண்டு அல்லது மூன்றுமுறை கூறிவிட்டு நீங்கள் (எல்லா விஷயங்களிலும்) இலகுவானதையே நாடப்பட்ட சமுதாயத்தினர்.'' என்றும் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவன் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்' என்று கூறினார்கள். ஏனெனில் அவ்வாறு தன்னை புகழ்வதைக் கேட்கும்போது மனித மனம் அதை மிகவும் விரும்பும். அதைக் கேட்பவர் அகந்தையும், ஆணவமும் கொண்டு மக்களிடமிருந்து தனது முகத்தை திருப்பிக் கொள்வார்.

புகழ்பவர்களில் சிலர் ஏமாற்றுபவர்களாகவும், பொய்யர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் புகழும்போது புகழைக் கேட்பவர்கள் அதில் இன்பமடைய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் வரம்பு மீறிய புகழைத் தவிர அறிவுரையையும், விமர்சனத்தையும் விரும்பமாட்டார்கள். அப்போது அவர்களது அதிகாரத்தில் சத்தியம் வீணடிக்கப்படும், நீதம் அழிக்கப்படும், மாண்புகள் குழி தோண்டிப் புதைக்கப்படும், சமூகம் சீரழிவைச் சந்திக்கும். இவ்வாறு ஆட்சி அதிகாரங்கள் உடையவர்களை சுற்றி நின்று புகழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
நயவஞ்சகமாகப் புகழ்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் அதிகரித்து, நயவஞ்சகமும் முகஸ்துதியும் அதிகரித்துவிடக் கூடாது என்பதால் நபி (ஸல்) அவர்கள் புகழ்பவனின் முகத்தில் மண்ணை வீசுமாறு தங்களது தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
ஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் (ரழி) அவர்கள் அம்மனிதன் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்: ‘‘அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபித்தோழர்கள் இவ்வாறு புகழ்ப்படுவதைக் கேட்டு மிகவும் வெறுப்படைந்தார்கள். தாம் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில் அந்தப் புகழ் வார்த்தைகளுக்கு தகுதியுடையவர்களாக இருந்தும் அதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களி லிருந்து விலகி இஸ்லாமின் தூய பண்புகளைப் பெற்றிருந்தார்கள்.
நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களை ‘‘மனிதர்களில் மிகச் சிறந்தவரே! அல்லது மனிதர்களில் மிகச் சிறந்தவன் மகனே!'' என்று அழைத்தார். இப்னு உமர் (ரழி) அவர்கள் ‘‘நான் மனிதர்களில் சிறந்தவனுமல்ல, மிகச் சிறந்த மனிதன் மகனுமல்ல. அல்லாஹ்வின் அடிமைகளில் ஒருவன். அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு மனிதனை அழிக்காதவரை நீங்கள் ஓயமாட்டீர்கள்'' என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

இது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் அவர்களது வழிமுறையை முழுமையாக பின்பற்றிய பிரபல நபித்தோழன் விவேகமான பதிலாகும்.

நயவஞ்சகத் தன்மையை வெற்றி கொள்வதற்கென நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேர்வழியைப் பின்பற்றிய நபித்தோழர்கள் இது விஷயத்தில் மிகக் கவனமாக இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக மனத்தூய்மையுடன் செய்யப்படும் அமல்களுக்கும், நயவஞ்சகத்தனத்துடன் செய்யப்படும் செயல்களுக்கு மிடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்திருந்தார்கள்.

இப்னு உமர் (ரழி) அவர்களிடம் சிலர்: ‘‘அதிகாரத்தில் உள்ளவர் களிடம் நாங்கள் செல்லும்போது அவர்களிடமிருந்து வெளியேறிய பின் எதைக் கூறுவோமோ அதற்கு மாற்றமாக அவர்களிடம் பேசுகிறோம்'' என்றார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் ‘‘நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இதை நயவஞ்சகத்தனம் எனக் கருதினோம்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)


முகஸ்துதியிலிருந்து விலகியிருப்பார்

உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும்.

இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.

ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)

எந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

(எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து அல்லாஹ் ஒருவனையே வணங்கி தொழுகையையும் கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறேயன்றி (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)

தங்களது பொருளை ஏழைகளுக்கு செலவு செய்யும்போது அதை சொல்லிக் காண்பித்து ஏழைகளின் கண்ணியத்தை காயப்படுத்து பவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான். முகஸ்துதி கலந்துவிட்டால் அவ்வணக்கம் வீணாகிவிடும்.

விசுவாசிகளே! நீங்கள் உங்களுடைய தர்மத்தை (ப்பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள். அவ்வாறு (செய்பவன்) அல்லாஹ்வையும் கடைசி நாளையும் விசுவாசம் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தன் பொருளை செலவு செய்து (வீணாக்கி) விட்டவனுக்கு ஒப்பாவான். அவனுடைய உதாரணம் ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன்மீது மண் படிந்தது. எனினும் ஒரு பெரும் மழை பொழிந்து அதை (க் கழுவி) வெறும் பாறையாக்கிவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்). ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:264)

ஏழைகளுக்கு தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது, அந்த தர்மத்தின் நற்பலன்களை வழுக்குப் பாறையில் ஒட்டியிருந்த மணலை பெரும் மழை அடித்துச் சென்றுவிடுவதுபோல அழித்து விடுகிறது.
புகழுக்காக தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் நேர்வழிக்குத் தகுதியற்றவர், அவர் நிராகரிப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு விடுவார் என்பதை இந்த வசனத்தின் பிற்பகுதி சுட்டிக் காட்டுகிறது.
‘‘மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் ஜனங்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.''
முகஸ்துதிக்காரர்கள், மனிதர்கள் தங்களைப் புகழவேண்டும் என்பதற்காக நல் அமல்களைச் செய்வார்கள். மகத்தான இரட்சகனின் திருப்பொருத்தத்தை நாடமாட்டார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்...
அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே அன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:142)

அவர்கள் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கிதன் காரணமாக அவர்களது அமல்கள் மறுக்கப்படும். தனது திருப்தியை நாடி, தூயமனதுடன் செய்யப்படும் அமல்களை மட்டுமே அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான், ‘‘நான் இணைவைப்பவர்களின் இணையை விட்டும் தேவையற்றவன். ஒருவன் ஏதேனும் அமல் செய்து என்னுடன் மற்றெவரையும் கூட்டாக்கினால் நான் அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

தூய இதயத்துடன் வருவது தவிர வேறெந்த செல்வமும் மக்களும் பலனளிக்காத அந்நாளில் முகஸ்துதிக்காரர்கள் சந்திக்கும் இழிவையும் வேதனையையும் நபி (ஸல்) அவர்கள் விவரித்துக் கூறினார்கள்:
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். ‘‘மறுமை நாளில் முதன் முதலாக தீர்ப்பளிக்கப் படுபவர்களில் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட தியாகி. அவன் கொண்டு வரப்பட்டு அவனுக்கு உலகில் அருளப்பட்ட அருட்கொடைகள் எடுத்துரைக்கப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் அதைக் கொண்டு என்ன அமல்களைச் செய்தாய் என்று கேட்கப்படும். ‘‘அவன் உனக்காக போர் செய்து ஷஹீதாக்கப்பட்டேன்'' என்று கூறுவான். அல்லாஹ் ‘‘நீ பொய் சொல்கிறாய். நீ வீரன் என்று புகழப்படுவதற்காக போர் செய்தாய். அவ்வாறு உலகில் சொல்லப்பட்டு விட்டது'' என்று கூறிவிடுவான். பிறகு, முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.
மற்றொரு மனிதன் கல்வியைக் கற்று பிறருக்கு கற்றுக் கொடுத்தான். குர்ஆனை ஓதியிருந்தான். அவன் கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அதை ஒப்புக் கொள்வான். அல்லாஹ் ‘‘அதன்மூலம் என்ன அமல்களைச் செய்தாய்?'' என்று கேட்பான். அவன் ‘‘நான் கல்வியை கற்று பிறருக்குக் கற்றுக் கொடுத்தேன். உன் திருப்திக்காகவே குர்ஆனை ஓதினேன்'' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் ‘‘நீ பொய் சொல்கிறாய். நீ ஆலிம் என்று புகழப்படுவதற்காக கல்வி கற்றாய், கா என்று புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது'' என்று சொல்வான். பிறகு அவனை முகம்குப்புற நரகில் வீசி எறியுமாறு உத்தரவிடப்படும்.
இன்னொரு மனிதன், அல்லாஹ் அவனுக்கு உலகில் பல்வேறு அருட்கொடைகளை வழங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தியிருந்தான். அவனைக் கொண்டு வரப்படும். அவனுக்கு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் ‘‘அதைக்கொண்டு என்ன அமல்களைச் செய்தாய்?'' என்று கேட்கப்படும். அவன் ‘‘எந்த வழிகளில் செலவு செய்வது உனக்குப் பிரியமானதோ அந்த அனைத்து வழிகளிலும் நான் செலவு செய்தேன்'' என்று கூறுவான். ‘‘அல்லாஹ் நீ பொய் சொல்கிறாய், நீ கொடைவள்ளல் என புகழப்படுவதற்காக செய்தாய், அவ்வாறு உலகில் சொல்லப்பட்டுவிட்டது'' என்று கூறுவான். பிறகு அவனை முகம்குப்புற இழுத்துச்சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த நபிமொழி தர்மம், வீரம், ஞானம் போன்ற நல் அமல்களில் தீய எண்ணங்களைக் கலந்து விடுவதால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது.
தீய எண்ணத்துடன் அமல் செய்வதால் மகத்தான அந்நாளில் அகில உலக மக்களுக்கு முன்னால் அகிலங்களின் இரட்சகனால் கடும் தண்டனை வழங்கப்படுவது எவ்வளவு பெரிய இழிவு?
அவர்கள் செய்த அமல்கள் தூய எண்ணத்துடன் அமைந்திருந்தால் எத்தகு நன்மைகளைப் பெற்று சுவனத்தில் நுழைவிக்கப்படுவர்களோ! அந்த அனைத்து நன்மைகளும் உயப்பட்டு மாபெரும் இழிவும், கேவலமும் சூழ்ந்த நிலையில் முகங்குப்புற நரகில் வீசி எறியப்படுவ தென்பது ஈடுசெய்யவே இயலாத மகத்தான இழப்பல்லவா?

மார்க்கச் சட்டங்களை அறிந்த பேணுதலுள்ள முஸ்லிம் தனது அனைத்து செயலிலும் முகஸ்துதியிலிருந்து விலகி, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் பெருமைக்காக அமல் செய்கிறாரோ அல்லாஹ் அவரை மறுமையில் இழிவுபடுத்துவான். எவர் முகஸ்துதிக்காக அமல் செய்வாரோ மறுமை நாளில் அல்லாஹ் அவரது குற்றங்களை பகிரங்கப்படுத்துவான்.'' (ஸஹீஹுல் புகாரி)


உறுதிமிக்கவர்

உண்மை முஸ்லிம் நேர்வழி பெற்றவராக, தெளிவான சிந்தனை உடையவராக இருப்பார். 

சத்தியத்தைவிட்டும் முகம் திருப்புவதை, சத்தியத்தை மறைப்பதை, பொய் கூறி மக்களை ஏமாற்றுவதை அவர் விரும்பமாட்டார். சத்தியத்தின் மீது நிலைத்திருப்பதில் ஏற்படும் சிரமங்கள், துன்பங்களின் காரணமாக சங்கடமோ, சஞ்சலமோ, தடுமாற்றமோ இல்லாமல் சமூக வாழ்வில் அதை எளிதாக எதிர்கொள்வார்.

சத்தியத்தில் நிலைத்திருப்பது, அவரது வாழ்வில் விரும்பினால் கைக்கொள்வது, விரும்பாவிட்டால் விட்டுவிடுவது என்பது போன்ற சடங்கல்ல. மாறாக, ஈமானுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெற்ற, அல்லாஹ் இன்னும் அவனது தூதரால் கட்டளையிடப்பட்ட மிக அவசியமான பண்பாகும்.
எனினும் எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள் கவலைப்படாதீர்கள் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும்,
‘‘நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாக இருந்தோம் மறுமையிலும் (உங்களுக்கு உதவியாளர்களே) சுவனபதியில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்'' என்றும் ‘‘பாவங்களை மன்னித்து கிருபை செய்வோனின் விருந்தாளியாக அதில் (தங்கி) இருங்கள்'' என்றும் (மலக்குகள்) கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:30,31,32)


உறுதியுடன் நிலைத்திருக்கும் 

இறைவிசுவாசிகளுக்குத்தான் எவ்வளவு மகத்தான நற்கூலி! மறுமை நாளில் அவர்களின் அந்தஸ்து எவ்வளவு மகத்தானது! அவர்களுக்கு மலக்குகள் அளிக்கும் வரவேற்பும் நற்செய்தியும் எவ்வளவு அழகானது என்பதைப் பாருங்கள்!

ஏனெனில் உறுதியாக நிலைத்திருப்பது கடினமான காரியமாகும். இது அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாகக் கொண்ட இறையச்சமுள்ள உண்மை முஃமின்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். அவர்கள் தீமைகளுக்கு அடிபணியமாட்டார்கள். இவ்வுலகில் மனிதனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இன்பங்கள், ஆட்சி அதிகாரங்கள், பட்டம் பதவி, செல்வங்களுக்கும் அடிபணிய மாட்டார்கள். இதன் காரணமாகத்தான் அவர்கள் அல்லாஹ்விடம் மகத்தான நன்மைகளை அடைந்து கொள்வார்கள்.

‘‘நிலையாக இருப்பது'' என்பதன் பொருளை நபி (ஸல்) அவர்கள் மிக ஆழ்ந்து அறிந்ததன் காரணமாகத்தான் அது அவர்களை மிகவும் பாதித்தது. இதுவே நிலையாக இருப்பதென்பது சிரமமானது என்பதற்கு ஆதாரமாகும்.

(நபியே!) உமக்கு ஏவப்பட்ட பிரகாரம் நீரும், உம்முடன் இருக்கும் இணைவைத்து வணங்குவதிலிருந்து விலகியவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள்... (அல்குர்ஆன் 11:112)

இந்த திருவசனத்தின் விரிவுரையில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ‘‘திருகுர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இந்த வசனத்தைப் போன்று நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த கடினத்தையும், சிரமத்தையும் அளித்த வேறெந்த வசனமும் கிடையாது'' என்று குறிப்பிடுகிறார்கள். அதனால்தான் நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் தலைமுடி விரைவாக நரைத்துவிட்டதன் காரணத்தை விசாரித்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை ஹுது (என்ற சூராவு)ம் அது போன்ற கருத்துடைய சூராக்களும் எனக்கு நரையை ஏற்படுத்திவிட்டது'' என்று கூறி மேற்கண்ட வசனத்தை சுட்டிக்காட்டினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

எனினும் எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ... (அல்குர்ஆன் 41:30)

அல்லாஹ்வின் இந்த சொல்லுக்கு ஒப்பாகவே ரசூலுல்லா (ஸல்) அவர்கள் ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்களுக்கு உபதேசித்தார்கள்.
ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) ‘‘அல்லாஹ்வின் தூதரே! இனிமேல் இஸ்லாமைப் பற்றி யாரிடமும் கேட்கத் தேவைப்படாத வகையில் எனக்கு ஓர் உபதேசத்தைக் கூறுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆமன்த்து பில்லாஹ் (அல்லாஹ்வை விசுவாசித்தேன்) என்று சொல்லி அதில் உறுதியாக இரு'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தனது தொகுப்பில் ‘உறுதியாக இருப்பது' என்று தலைப்பிடுவதற்குப் பதிலாக ‘இஸ்லாமியப் பண்புகளை ஒருங்கிணைக்கும் தன்மை' எனத் தலைப்பிட்டு, அதன் கீழ் இந்நபி மொழியைக் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் ‘உறுதியாக இருப்பது' என்பதில்தான் பல்வேறு மாண்புகளும், நற்குணங்களும் ஒன்றிணைந்துள்ளன.

‘ம்இஸ்திகாமத்' உறுதியாயிருப்பதில் முதன்மையான பண்பாகிறது முஸ்லிம் ஒரே முகத்துடன் மனிதர்களை சந்திப்பவராக இருக்க வேண்டும். வஞ்சகர்கள், மோசடிக்காரர்களைப் போன்று நிறம் மாறக்கூடாது என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் அருளியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘மனிதர்களிலேயே மிகக் கெட்டவன் இரட்டை முகமுடையவன். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


நோயாளியிடம் நலம் விசாரிப்பார்

உண்மை முஸ்லிம் நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்ல வேண்டுமென இந்நேய மார்க்கம் மிகவும் வலியுறுத்துகிறது. எனவே நோய் விசாரிக்கச் செல்வது கடமையாகும். நோயாளியிடம் சென்று ஆறுதல் கூறும்போது நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நிறை வேற்றுகிறோம் என்று மனம் நிறைவடைய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘பசித்தவருக்கு உணவளியுங்கள் நோயாளிகளை நலம் விசாரியுங்கள் கைதிகளை விடுவியுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி (ஸல்) அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் போதனைகள் இஸ்லாமிய சமூகத்தில் வெகு ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாழ்வில் ‘தான் நோய்வாய்ப்பட்டால் தனது சகோதரன் தன்னை நலம் விசாரிக்க வர வேண்டும், அது அவனது கடமை' என்று எண்ணுமளவு இப்பண்பு வலுப்பெற்றுள்ளது. அதை மறந்துவிட்டால் அல்லது அதில் குறை ஏதும் செய்துவிட்டால் அவன் தனது சகோதரனின் கடமையை மறந்தவன். அல்லது சகோதரனின் கடமைகளில் குறை செய்தவனாகிறான். அவன் இஸ்லாமின் மேலான பார்வையில் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட பாவியாகிறான்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து'' என கூறியபோது நபி (ஸல்) அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘‘அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசா, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.'' (ஸஹீஹுல் புகாரி)

ஒரு முஸ்லிம் தனது சகோதரனை நோய் விசாரித்தால் அவர் ஏதோவொரு கடமையைச் செய்து முடித்தோம் என்று எண்ணிவிடக் கூடாது. மாறாக, தனது செயலுக்காக அவர் ஆனந்தமடைய வேண்டும். 

பின்வரும் நபிமொழியின் கருத்தைக் கவனிக்கும்போது நலம் விசாரிப்பதன் மேன்மையை அறிந்துக் கொள்ளலாம்.
நபி (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் ‘‘ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டேன். நீ நலம் விசாரிக்க வரவில்லை'' என்று கூறுவான். மனிதன், எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ‘‘உனக்குத் தெரியுமா? எனது இன்ன அடியாரின் நோயுற்றான். நீ நலம் விசாரிக்கச் செல்லவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அந்த இடத்தில் என்னை பெற்றிருப்பாய்'' என்று கூறுவான்.
‘‘ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ‘‘நீ அறிவாயா? எனது இன்ன அடியாரின் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான்.
‘‘ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை'' என்று கூறுவான். அம்மனிதன் ‘‘எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ‘‘எனது இன்ன அடியாரின் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)

நோயாளியை நலம் விசாரிப்பது எவ்வளவு பரக்கத் பொருந்திய நற்செயல்! பலவீனப்பட்ட நோயாளியான தமது சகோதரனின் விருப்பத்தை நிறைவு செய்வது எவ்வளவு உயர்ந்தது! நலம் விசாரிப்பவன் அந்த சந்தர்ப்பத்தில் மகத்துவமிக்க தனது இரட்சகனிடம் நிற்கிறான். அல்லாஹ் அவனது நற்செயலுக்கு சாட்சியாகி மாபெரும் அருட் கொடையை வாரி வழங்குகிறான். இதன்மூலம் நலம் விசாரிப்பதை பரக்கத்தானதாகவும் மிக உயர்ந்த செயலாகவும் அல்லாஹ் நிர்ணயித்து அதனை செய்யத் தூண்டுகிறான்.

இவ்வாறு நலம் விசாரிக்காதவன் எவ்வளவு பெரியநஷ்டவாளி, மாபெரும் இழிவும் வேதனையும் அவனை மறுமையில் சூழ்ந்து கொள்கிறது. உலகப் படைப்புகள் அனைத்தின் முன்னிலையில் அவனிடம் ‘‘ஆதமின் மகனே! நான் நோயுற்றபோது நலம் விசாரிக்க ஏன் வரவில்லை? எனது இன்ன அடியாரின் நோயுற்றபோது நீ நலம் விசாரிக்கவில்லை. அவனை நலம் விசாரித்திருந்தால் அங்கு என்னை நீ பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?'' என்று அல்லாஹ் கூறுவது அவனுக்கு மாபெரும் கேவலமாகும்.

தனது சகோதரனை நலம் விசாரிக்காமல் தவறிழைத்த மனிதன் அடையப்போகும் சஞ்சலம், கைசேதம் பற்றி இப்போதே சிந்திப்போம். ஏனெனில் மறுமை நாள் வந்தபின் உலகிற்கு மீண்டு வரமுடியுமா?

இஸ்லாமிய சமூகத்தில் நோயாளி என்பவன் தனது துன்பத்திலும் சிரமத்திலும் உழன்று கொண்டிருக்கும் நிலையிலும் ‘தான் ஆதரவற்ற அனாதையல்ல, தன்னை இந்தச் சிரமத்திலிருந்து மீட்பதற்கு அல்லாஹ்வின் துணையுடன் உதவியாளர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள்' என்ற உணர்வு அவனது உள்ளத்தில் தோன்ற வேண்டும். இது மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இஸ்லாமின் உன்னதப் பண்பாகும். இது முஸ்லிம்களிடையே தவிர வேறெங்கும் காணமுடியாத அற்புதப் பண்பாகும்.
மேற்கத்திய நாடுகளில் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளும், திறமையான மருத்துவர்களும், உயர்ந்த மருந்துகளும் உள்ளன. எனினும் உறவினர்கள், நண்பர்களின் கனிவான அணுகுமுறை, ஆறுதலான வார்த்தைகள், மலர்ந்த புன்னகை, தூய்மையான பிரார்த்தனைகள் என்பது அந்த நோயாளிகளுக்கு மிகக் குறைவாகவே கிட்டுகின்றன.
பொருளியலை அடிப்படையாகக் கொண்ட சிந்தனை மேற்கத்தியரை ஏமாற்றிவிட்டதுதான் இதற்குக் காரணமாகும். அது மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் அழித்து உலகில் பலன் கிடைக்காத நற்செயல்கள் செய்வதிலிருந்து அவர்களைத் தடுத்துவிட்டது.

மேற்கத்திய மனிதன் நோயாளியை சந்தித்து ஆறுதல் சொல்வதால் விளையும் நன்மைகளை உணரமாட்டான். ஒருவரை தான் சந்தித்து, அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமெனில் அவரிடமிருந்து தனக்கு உடனடியாகவோ, பிற்காலத்திலோ ஏதேனும் பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் அவனது அணுகுமுறை அமைந்திருக்கும்.

ஆனால் ஒரு முஸ்லிமுக்கு நோயாளியை சந்தித்து, ஆறுதல் கூற தூண்டுகோலாக அமைவதெல்லாம் இந்த நேரிய பாதையில் செல்பவர்களுக்கென அல்லாஹ் தயார் செய்துள்ள நன்மைகள்தான்.
இதற்கான சான்றுகள் ஏராளமானவை. இவை சகோதரத்துவ உணர்வை வளர்த்து நோயாளியை சந்திக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை நோய் விசாரிக்கச் சென்று திரும்பும்வரை சுவனத்தின் கனிகளை பறித்துக் கொண்டிருக்கிறார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.'' (ஸுனனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள், நோய் விசாரிப்பதால் நோயாளியின் மனதிலும் அவரது குடும்பத்தினடையேயும் மனிதநேயச் சிந்தனைகள் வளர்வதை அறிந்திருந்தார்கள்.

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளின் நலம் விசாரிப்பதில் ஒருபோதும் சடைந்ததில்லை. அவர்கள் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி பிரார்த்தனையும் செய்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனக்கு பணிவிடை செய்து வந்த யூதச் சிறுவனைக் கூட நலம் விசாரிக்கச் சென்றதிலிருந்து நபி (ஸல்) அவர்களின் மேலான வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி (ஸல்) அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் ‘நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்' என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ‘‘நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!'' என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்'' என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரை நோய் விசாரிக்கச் சென்ற சந்தர்ப்பத்திலும் அவரை இஸ்லாமின்பால் அழைக்கத் தவறவில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரை நோய் விசாரிக்கச் சென்றது, அச்சிறுவர் மனதிலும் அவரது தந்தையின் மனதிலும் நபி (ஸல்) அவர்களின் கருணையையும், மேன்மையையும் ஆழப்பதியச் செய்தது.
எனவே அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகை அவர்களுக்கு நேர்வழியை அருளியது. நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறும்போது அவர்கள் அச்சிறுவரை நரகிலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் தான் எத்தகு மகத்தான மனிதர்! அவர்களது இறையழைப்புதான் எவ்வளவு விவேகமானது!

நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளை நலம் விசாரிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவமளித்ததுடன் அது விஷயத்தில் தங்களது தோழர்களுக்கு சில அடிப்படைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். அதில் ஒன்றுதான் நோயாளியின் தலைமாட்டில் அமர்ந்து நலம் விசாரிப்பதும்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ‘‘உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒழுக்கங்களில் ஒன்றுதான் தங்களது வலது கரத்தால் நோயாளியை தடவிக் கொடுத்து, அவருக்காக துஆச் செய்வதும்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹும்ம ரப்பன்னாஸ், அத்பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ‘‘யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ‘‘கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நோயாளிகளை நலம் விசாரிப்பதில் முஸ்லிம்கள், தலைமுறை தலைமுறையாக இப்புகழுக்குரிய நபிவழியைப் பின்பற்றி வருகிறார்கள். 

ஒருவருக்கொருவர் கருணையிலும் அன்பிலும் உதவி செய்து கொள்வதிலும் எடுத்துக்காட்டாகத் திகழும் இப்பண்பு முஸ்லிம்களின் தனித் தன்மையான அடையாளமாகவே நிலைபெற்றுத் திகழ்கிறது.
இப்பண்பு வாழ்க்கை சுமையால் அழுந்திப்போன முதுகை நிமிர்த்துகிறது கவலையில் வீழ்ந்தவனின் கண்ணீரைத் துடைக்கிறது துன்பங்களால் சூழப்பட்டவனை விடுவிக்கிறது நிராசையடைந்த வனுக்கு நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிறது சகோதரத்துவ அன்பை உறுதிப்படுத்துகிறது வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வலிமையைத் தருகிறது.

ஜனாஸாவில் பங்கெடுத்துக் கொள்வார்
உண்மை முஸ்லிம் சமூகத்தில் நிகழும் மரணங்களின்போது பங்கெடுத்துக் கொண்டு கப்ருவரை பின்தொடர வேண்டும். இதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். ‘‘முஸ்லிமின் மீது மற்ற முஸ்லிமுக் குரிய கடமைகள் ஐந்து. ஸலாமுக்கு பதிலுரைத்தல், நோயாளியை நலம் விசாரித்தல், ஜனாஸாவைப் பின்தொடர்தல், அழைப்பை ஏற்றல், தும்மியவருக்கு (அவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னால் யர்ஹமுகல்லாஹ் என) பதிலளித்தல்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உண்மையான இஸ்லாமிய போதனைகளை எடுத்துக்கூற வேண்டும். அந்நேரத்தில் கூச்சலிடுவது, ஒப்பாரி வைப்பது, தொழுகையை விடுவது போன்ற பரவிவரும் வழிகேடுகளை தடுக்க வேண்டும். அவர்களுக்கு மய்யித்தை குளிப்பாட்டி, விரைவில் அடக்கம் செய்ய வழிகாட்டுவதுடன் மரணமடைந்தவன் உறவினர்களுக்கு ஆறுதலும் கூறவேண்டும்.

ஒருவர் மீது மரணத்தின் அடையாளங்கள் தென்பட ஆரம்பித்தால், ‘லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற ஏகத்துவ கலிமாவை முஸ்லிம் அவருக்கு நினைவுபடுத்துவார். இதையே பின்வரும் நபிமொழி சுட்டிக்காட்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் மரணம் நெருங்கியவர் மீது ‘லாஇலாஹ இல்லல்லாஹ்'வை நினைவூட்டுங்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அம்மனிதர் மரணமடைந்து விட்டால், நபி (ஸல்) அவர்கள் அபூ ஸலமா (ரழி) மரணமடைந்த போது ஓதிய துஆவை ஓத வேண்டும். ‘‘யாஅல்லாஹ்! அபூஸலமாவை மன்னித்தருள்வாயாக! நேர்வழி பெற்றவர்களில் அவரது அந்தஸ்தை உயர்த்துவாயாக, அவருக்குப்பின் அவரது குடும்பத்தாருக்கு பிரதிநிதியாக இருப்பாயாக. அகிலங்களின் இரட்சகனே! எங்களையும் அவரையும் மன்னித்தருள்வாயாக. அவரது கப்ரை விசாலமாகவும் பிரகாசமாகவும் ஆக்கி அருள்வாயாக.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அதன்பின் அக்குடும்பத்தாருக்கு ஆறுதலளிக்கும் விதமாக, உறவினரை இழந்து நிற்கும்போது பொறுமைகாத்து நன்மையை நாடுபவருக்கு அல்லாஹ் வழங்கும் நற்கூலியை நினைவூட்ட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘உலகத்தார்களில் எனது முஃமினான அடியாருக்குப் பிரியமானவரை நான் கைப்பற்றிக் கொள்ளும்போது அந்த அடியார் நன்மையை நாடினால் (பொறுமை காத்தால்) அவருக்கு சுவனத்தையே அளிக்கிறேன்'' என அல்லாஹ் கூறுகிறான். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கடைபிடித்த ஒழுக்கங்களை முஃமின்கள் பின்பற்ற வேண்டுமென முஸ்லிம் நினைவூட்டுவார்.

உஸாமா இப்னு ஜைது (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களின் மகளார் ஒருவர் ‘தனது மகன் மரண தருவாயில் இருக்கிறார்' என நபி (ஸல்) அவர்களுக்கு செய்தி அனுப்பினார். வந்தவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘நீர் அவரிடம் சென்று, ‘கொடுத்ததும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது, எடுத்ததும் அவனுக்குச் சொந்தமானது, அனைத்து விஷயங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் குறிப்பிட்டதோர் தவணை இருக்கிறது' என்று கூறி, அவரை பொறுமையாக இருந்து நன்மையை ஆதரவு வைக்கச் சொல்லுங்கள்'' என்று கூறி அனுப்பினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உண்மை முஸ்லிம் இத்தகு வேதனையான சந்தர்ப்பங்களில் துணிகளை கிழித்துக் கொண்டு, முகத்தில் அறைந்து, ஒப்பாயும் கூச்சலுமாக அழுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்த வேண்டும். ஏனெனில் இவ்வாறான அறியாமைக்கால செயல்கள் மரணித்தவருக்கு கப்ல் நோவினையை ஏற்படுத்தும். அவ்வாறு செய்பவர்களும் கடுமையான குற்றச் செயல்களைப் புரிந்தவர்களாகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மரணத்தின்போது ஒப்பாரி வைத்து அழுவதால் அந்த மய்யித் கப்ல் வேதனை செய்யப்படுகிறது.''
மற்றோர் அறிவிப்பில், ‘‘ஒப்பாரி வைத்து அழும் காலமெல்லாம் மய்யித் வேதனை செய்யப்படுகிறது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கன்னத்தில் அறைந்து கொள்பவர்களும், துணிகளை கிழித்துக் கொள்வோரும், அறியாமைக் கால (குலப்பெருமை) அழைப்பை விடுப்போரும் நம்மைச் சார்ந்தவரர் அல்ல. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒப்பாரி வைத்து அழுபவர்களை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கண்டித்தார்கள்.
உம்மு அதிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வாக்குப் பிரமாணம் (பைஅத்) செய்தபோது நாங்கள் ‘ஒப்பாரி வைத்து அழக்கூடாது' என்றும் வாக்குகுறுதி பெற்றார்கள்''. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒப்பாரி வைப்பவள் தனது மரணத்துக்கு முன் தௌபா (பாவ மன்னிப்பு) செய்யவில்லை யென்றால் கியாம நாளில் அவள் கொண்டு வரப்படும்போது அவளுக்கு தானால் ஆன கீழாடையும் உருக்கினாலான சட்டையும் அணிவிக்கப்படும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

கண்களிலிருந்து கண்ணீர் வழிவது இதயம் துயரத்தால் காயமடைந்திருப்பதன் அடையாளமாகும். கூச்சல், ஒப்பாரி போன்ற விலக்கப்பட்ட செயல்கள் இல்லாமல் அழுவதில் எவ்விதக் குற்றமும் கிடையாது.

இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஸஃது இப்னு உபாதா (ரழி) அவர்களின் மரணதருவாயில் நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்றார்கள். நபி (ஸல்) அவர்களுடன் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி), ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரழி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்களும் சென்றனர். அங்கு நபி (ஸல்) அவர்கள் அழ ஆரம்பித்தார்கள். அதைக் கண்ட கூட்டத்தினரும் அழுதார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நீங்கள் அறிவீர்களா? கண்ணீர் விடுவதாலோ, மனதில் கவலை கொள்வதாலோ அல்லாஹ் வேதனை செய்வதில்லை. எனினும், அல்லாஹ் வேதனை செய்வது அல்லது மன்னித்து விடுவது இதன் காரணத்தால்தான் என்று கூறி தனது நாவை சுட்டிக் காட்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உஸாமா இப்னு ஜைது (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களிடம் மரணதருவாயிலிருந்த அவர்களது பேரர் ஒருவரை கொடுக்கப்பட்டபோது அவர்களது இரு கண்களும் கண்ணீரைச் சொந்தன. அப்போது ஸஃது (ரழி) அவர்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதுவென்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘இது அல்லாஹ்தனது அடியார்களின் இதயத்தில் ஏற்படுத்தியுள்ள கருணையாகும். (பிறரிடம்) கருணை காட்டும் அடியார்கள் மீதுதான் அல்லாஹ் கருணை காட்டுகிறான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தனது மகனார் இப்றாஹீம் (ரழி) மரணதருவாயில் இருந்தபோது அங்கு சென்றார்கள். அவர்களது இருகண்களும் கண்ணீரைச் சொந்தன. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி), நபி (ஸல்) அவர்களிடம் ‘நீங்களுமா அல்லாஹ்வின் தூதரே? (அழுகின்றீர்கள்) என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவ்ஃபின் மகனே! இது கருணையாகும்.'' என்று கூறி பின்வரும் வாசகத்தைக் கூறினார்கள்.
‘‘எங்களது கண்கள் கண்ணீரைச் சொகின்றன. இதயம் கவலையில் ஆழ்ந்துவிட்டது, எங்களது இரட்சகன் பொருந்திக் கொள்ளாத எதையும் நாங்கள் கூறமாட்டோம். இப்றாஹீமே உமது பிரிவால் நாங்கள் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறோம்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இறையச்சமுடைய முஸ்லிம் அடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்க வேண்டும். அதில் மகத்தான நற்கூலி உண்டு.

நபி (ஸல்) அவர்கள், ‘‘எவர் ஜனாஸா தொழவைக்கப்படும்வரை ஜனாஸாவில் பங்கெடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மை கிடைக்கும், எவர் அடக்கம் செய்யப்படும்வரை பங்கெடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மை கிடைக்கும்'' என்று கூறினார்கள் அப்போது, ‘‘இரண்டு கீராத் என்றால் என்ன? என்று தோழர்கள் வினவினர். நபி (ஸல்) அவர்கள் ‘‘அது இரண்டு பெரியமலைகளுக்கு ஒப்பானது'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மரணித்தவர் அடக்கம் செய்யப்படும்வரை உடனிருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதன்மூலம் முஸ்லிம் களிடையே சகோதரத்துவ சிந்தனைகள் நிலைபெறும், நம்பிக்கை உணர்வுகள் உறுதிபெறும், பாதிக்கப்பட்டவர் அழகிய முறையில் பொறுமையை மேற்கொள்ள வழி ஏற்படும், அக்குடும்பத்தாரின் மனதில் இவ்வாறான அணுகுமுறை ஆறுதலை அளிக்கும். இது மட்டுமின்றி மரணமடைந்தவன் ஜனாஸா தொழுகைக்காக அணிவகுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாவது அல்லாஹ்விடம் அவருக்கு ஷஃபா அத்தாகவும் அமையும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு முஸ்லிம் மரணமடைந்து, அவரது ஜனாஸா தொழுகைக்காக அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காத உண்மை முஃமின்களான நாற்பது நபர்கள் நின்றால் அந்த மய்யித்தின் விஷயத்தில் அவர்களது துஆவை அல்லாஹ் ஒப்புக்கொள்கிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

உண்மை முஸ்லிம் ஜனாஸா தொழுகைக்கான சட்டங்களையும் அதில் ஓதப்பட வேண்டிய நபிவழி துஆக்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.

ம்மய்யித்' முன்னால் வைக்கப்பட்டு, மக்கள் தொழுகைக்கான வரிசையில் நின்றவுடன் இமாம் முதல் தக்பீரைக் கூறி அவூது, பிஸ்மில்லாஹ்வுக்குப் பின் ஃபாத்திஹா சூராவை ஓதுவார். பிறகு இரண்டாவது தக்பீர் சொல்லி, (அத்தய்யாத்தில் ஓதப்படும்) ‘தருதே இப்றாஹீம்' ஓத வேண்டும். மூன்றாவது தக்பீருக்குப்பின் மரணித்த வருக்கும் உலக முஸ்லிம்களுக்கும் துஆச் செய்ய வேண்டும். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அவ்ஃ இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்த துஆ மிகச் சிறப்பானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவுக்கு தொழுகை நடத்தினார்கள். நான் அவர்களின் துஆவை மனனமிட்டுக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘யா அல்லாஹ்! இவரை மன்னித்துக் கிருபை செய்வாயாக! அவரைப் பாதுகாப்பாயாக! அவரது தவறுகளைப் பொருத்தருள்வாயாக! அவருடைய அந்தஸ்தை உயர்த்துவாயாக! அவரது கப்ரை விசாலமாக்குவாயாக! அவரை தண்ணீராலும் பனிக்கட்டியாலும் பனித்துளியாலும் குளிப்பாட்டுவாயாக! (அவரது மறதி, குற்றத்துக்குப் பகரமாக அருளும் கருணையும் புரிவாயாக!) வெள்ளை ஆடையை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல அவரை குற்றங்களிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! அவருக்கு இவ்வுலக வீட்டைவிட சிறந்த வீட்டையும் அவரது குடும்பத்தைவிட சிறந்த குடும்பத்தையும் அவரது மனைவியைவிட சிறந்த மனைவியையும் அளித்து, அவரை சுவனத்தினுள் நுழையச் செய்வாயாக! அவரை கப்ருடைய வேதனையிலிருந்தும், நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!'' என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அப்போது அந்த மய்யித்தாக நான் இருந்திருக்கலாமே என்று ஆசைப்பட்டேன். (ஸஹீஹ் முஸ்லிம்)

நான்காவது தக்பீருக்குப் பிறகு பின்வரும் துஆவை ஓத வேண்டும். யா அல்லாஹ்! அவரது நற்கூலியை நாங்கள் இழக்கச் செய்துவிடாதே! அவருக்குப் பின் எங்களை சோதித்து விடாதே! எங்களையும் அவரையும் மன்னித்தருள்வாயாக!
தொழுகை முடிந்த பின் மய்யித் கப்ல் வைக்கப்படும்வரை அதைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும். அடக்கம் செய்யப்பட்ட பின் அவருக்காக பாவமன்னிப்பு கோயும், அவர் உறுதியுடன் இருப்பதற்கும் துஆச் செய்ய வேண்டும். இதையே நபி (ஸல்) அவர்கள் தானும் செய்து தங்களது தோழர்களுக்கும் ஏவினார்கள்.
உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு நின்று கூறுவார்கள்: ‘‘உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்.'' (ஸுனன் அபூதாவூத்)

அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் என்னை அடக்கம் செய்தால் ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம்வரை எனது கப்ரைச் சுற்றி நில்லுங்கள். உங்களைக் கொண்டு நான் ஆறுதல் அடையவும், எனது இரட்சகனின் தூதுவருக்கு எதைக் கூறவேண்டுமென்பதை நான் அறிந்து கொள்வதற்காகவும் (கப்ரைச்சுற்றி நில்லுங்கள்) எனக் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் இணைந்திருப்பது இஸ்லாமிய சமூக வாழ்வு பூரணத்துவம் அடைந்ததற்கான அடையாளமாகும். ஏனெனில் வாழ்க்கை என்பது வெறும் சந்தோஷம் மட்டுமல்ல. மகிழ்ச்சியும் துயரமும், சந்தோஷமும் கவலையும், இன்பமும் துன்பமும், வளமையும் நெருக்கடியும், கண்ணீரும் வசந்தமும் என மாறி மாறி வரக்கூடியதாகும்.

இறையச்சமுள்ள உண்மை முஸ்லிம், வாழ்வின் இருபகுதிகளில் ஒன்றை ஏற்று மற்றொன்றைப் புறக்கணித்து விடக்கூடாது. ஏனெனில் முஸ்லிமுக்கு வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பூர்த்தி செய்ய வேண்டிய பணிகளும், சொல்ல வேண்டிய வார்த்தைகளும், நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் உள்ளன.
 

உபகாரத்துக்கு நன்றியும் பிரதியுபகாரமும் செய்வார்

முஸ்லிமின் பண்புகளில் மேன்மையானது உபகாரத்தை ஏற்று அதை மறந்துவிடாமல் பிரதியுபகாரம் செய்வதும், நன்றி கூறுவதுமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருக்கேனும் உபகாரம் செய்யப் பட்டால் அவர் உபகாரம் செய்தவரிடம் ‘‘ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக)'' என்று கூறினால் அவர் மிக மேலான வகையில் புகழ்ந்துவிட்டார். (ஸுனனுத் திர்மிதி)

மேலும் கூறினார்கள்: ‘‘எவரேனும் அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் பாதுகாப்புக் கோரினால் அவருக்கு நீங்கள் பாதுகாப்பு அளியுங்கள். உங்களுக்கு எவரேனும் உபகாரம் செய்தால் அதற்குப் பிரதியுபகாரம் செய்யுங்கள்.'' (ஸுனன் அபூ தாவூத், ஸுனனுன் நஸாயீ)

உபகாரத்துக்கு நன்றி செலுத்துவது முஸ்லிமுக்கு கடனைப் போன்றதாகும். இதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்தினார்கள். இது சமூகத்தின் வழக்கங்களில் உள்ளது போன்ற வெற்றுச் சடங்கல்ல, அதில் பல்வேறு நலன்களும் சீர்திருத்தங்களும் அமைந்துள்ளன.

இது விஷயத்தில் இஸ்லாமின் போதனை என்னவென்றால், தான் அடைந்த உதவிகளுக்கு அல்லாஹ்வுக்கு மட்டும் நன்றி செலுத்துவதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அது எவன் மூலம் தனக்குக் கிடைத்ததோ அவருக்கும் நன்றி செலுத்த வேண்டும். அப்போதுதான் முறையாக நன்றி செலுத்தியதாகக் கருதப்படும்.

ஒருவன் மனிதர்களுக்கு அவர்கள் செய்த உபகாரத்திற்காக நன்றி செலுத்தவில்லையெனில், உபகாரம் செய்தவன் மனிதாபிமானத்தைத் தூண்டி, அவரை மகிழ்ச்சிப்படுத்தும் வார்த்தைகள் அவனிடமிருந்து வெளிப்படவில்லையாயின் அவன் நன்றிகெட்ட வன்னெஞ்சம் கொண்ட மனிதனாவான். அவன் உபகாரத்தின் மதிப்பையும், அதன் மாண்புகளையும் அறியாத காரணத்தால் நன்றி செலுத்தத் தவறியவனாவான். எனவே அவன் நன்மைகளையும் சிறப்புகளையும் அருளும் அல்லாஹ்வுக்கு நன்றி கூறத் தகுதியற்றவனாகிறான்.
இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவராக மாட்டார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

உபகாரம் செய்தவருக்கு நன்றி செலுத்துவது, அந்த நற்செயலைச் செய்தவருக்கு ஆர்வமூட்டுகிறது. இன்னும் உபகாரத்தைப் பெற்றவர் அந்த உபகாரத்தை பாதுகாத்து, மதித்து, அழகிய முறையில் அதை அங்கீக்க வேண்டுமென்ற நடைமுறையை ஏற்படுத்துகிறது. இப்பண்பினால் சமூக உறுப்பினடையே பாச உறவுகள் உறுதி அடைகின்றன. இதுதான் இஸ்லாம், சமூகத்தில் ஊன்ற விரும்பிய பண்பாகும்.


மக்களுடன் கலந்துறவாடுவார், சிரமங்களைச் சகித்துக் கொள்வார்

மார்க்கத்தைப் பேணிவரும் முஸ்லிம், மக்களுடன் கலந்துறவாடி அவர்களால் ஏற்படும் துன்பங்களை பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் பல்வேறு கடமைகளைச் சுமந்து, அழைப்புப் பணிபுரியும் இஸ்லாமிய வழிகாட்டியாவார். இந்த மகத்தான, முக்கியத்துவம் வாய்ந்த இலட்சியத்தைக் கொண்டிருப்பதால் அவர் இறைவழியில் தியாகம் செய்ய தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அழைப்புப் பணியை செய்யும்போது எதிர்வரும் சிரமங்களையும், துன்பங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும். மனிதர்களின் தீய சிந்தனைகளால் ஏற்படும் ஆபத்துகள், தீய நடத்தைகள், சத்தியத்தை ஒப்புக்கொள்வதில் ஏற்படும் தயக்கம் போன்ற இடையூறுகளை பொறுமையுடன் எதிர்கொண்டு தன்னையும் சமூகத்தையும் சீரமைப்பதில் ஆர்வம்கொள்ள வேண்டும்.

உண்மையில் அழைப்பாளரை இவ்வாறான கசப்பான அனுபவங்கள் சோர்வடையச் செய்யும்போது அவர் மக்களிடமிருந்து விலகி ஒதுங்கிப் போய்விடுமளவு மன நெருக்கடிக்கு ஆளாகிறார்.

இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் முஃமின் களின் மனஉறுதியை பலப்படுத்துவதாக, அவர்களது பாதங்களை ஸ்திரப்படுத்துவதாக அமைந்துள்ளது. அழைப்புப் பணியின் நீண்ட பாதையில் செல்லும்போது அதன் சிரமங்களை சகித்துக்கொள்பவர் சிரமங்களை எதிர்கொள்ளாமல் ஒடி ஒளிபவரைவிட மிகச் சிறந்தவர் என நபிமொழி பறைசாற்றுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுடன் கலந்துறவாடி அவர்கள் தரும் துன்பங்களை சகித்துக்கொள்ளும் முஃமின், மக்களுடன் கலந்துறவாடாமல் ஒதுங்கி, அவர்கள் தரும் துன்பங்களை சகித்துக் கொள்ளாதவரைவிட சிறந்தவராவார். (அல் அதபுல் முஃப்ரத்)
நபி (ஸல்) அவர்களும், அவர்களுக்கு முன்னிருந்த இறைத் தூதர்களும் அம்மக்களின் மூடத்தனங்களையும், அவதூறுகளையும், முரட்டுத்தனங்களையும், பொறுமையுடன் சகித்துக்கொண்டதில் நமக்கு முன்மாதிரிகளாகத் திகழ்கின்றனர். ஒவ்வொரு ஏகத்துவ அழைப்பாளரும் இதை அறிந்து கொண்டால் பகைமைகளும், கொடுமைகளும் அவர்களை சூழ்ந்துகொள்ளும்போது பொறுமைம்ழந்து விடாமலிருக்க மிகவும் உதவிகரமாக அமையும்.

மகத்தான பொறுமைக்கான சான்றுகளில் ஒன்று, ஒரு சமயம் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடையே சில பொருட்களை பங்கிட்ட போது அன்சாரி ஒருவர் ‘‘இது அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடாத பங்கீடாகும்'' என்று கூறினார்.

இந்த அநீதமான வார்த்தை நபி (ஸல்) அவர்களின் செவியை எட்டி, மிகுந்த கஷ்டத்தைக் கொடுத்தது. கோபத்தால் முகம் மாறியது. பிறகு கூறினார்கள் ‘‘இதைவிட அதிகமான நோவினை மூஸாவுக்கு கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த சிறிய வார்த்தையுடன் நபி (ஸல்) அவர்களின் கோபம் தணிந்து, ஆவேசம் அகன்றது. வள்ளல் தன்மை கொண்ட விசாலமான அவர்களது மனமும் அமைதியடைந்து விட்டது.
இதுதான் இறைத்தூதர்கள், சத்திய அழைப்பாளர்கள் எல்லாக் காலங்களிலும் எல்லாநிலைகளிலும் வெளிப்படுத்திய பண்பாகும். மனிதர்களின் அவதூறுகள் மற்றும் வசைச்சொற்களால் ஏற்படும் துன்பங்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள். இக்குணத்தினால்தான் அழைப்பாளர்கள் தங்களது அழைப்புப் பணியை உறுதியாகவும் தொடர்ச்சியாகவும் செய்துவர முடியும்.
நேரிய சிந்தனையுடைய முஸ்லிம், மனிதர்களை நேசித்து, அவர்களுடன் நல்லுறவை மேற்கொண்டு, அவர்களது தீமைகளைச் சகித்துக் கொள்வதுடன் அவர்கள் அறிவீனர்களாக இருந்தாலும், முகமலர்ச்சியுடன் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்.
முஃமின், மனிதர்களுடன் கலந்துறவாடுவதில் விவேகத்துடன் நடந்து கொண்டு, அவர்களது கெடுதிகளிலிருந்தும் கீழ்த்தரமான செயல்களி லிருந்தும் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரியபோது நபி (ஸல்) ‘‘அவருக்கு அனுமதி அளியுங்கள், அவன் மிகக் கெட்டவன்'' என்று கூறினார்கள். ஆனால் அம்மனிதர் வந்தவுடன் மென்மையாக உரையாடினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘‘(அவரைப்பற்றி) ஏதேதோ சொன்னீர்கள். பின்பு அவரிடம் மென்மையாக உரையாடினீர்கள்!'' என்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆயிஷாவே! எவனுடைய கீழ்த்தரமான நடத்தையை அஞ்சி மக்கள் அவனைப் புறக்கணித்து விடுகிறார்களோ அவனே அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகக்கெட்டவன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அபூ தர்தா (ரழி) அவர்கள் ‘‘சில சமூகத்தாரின் முகத்துக்கு முன் நாங்கள் பல்லைக் காட்டுகிறோம், ஆனால் எங்கள் இதயங்கள் அவர்களை சபித்துக் கொண்டிருக்கின்றன'' என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மனிதர்களின் நடைமுறை எல்லா நேரத்திலும் அழைப்பாளன் விருப்பத்திற்கேற்ப அமைந்திருக்காது. முரண்பட்ட சிந்தனையுடைய மனிதர்கள் அதிகம் உள்ளனர். அதனால் அழைப்பாளர் இம்மாதிரி யானவர்களை சந்திக்கும்போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும், மனிதர்களை சத்தியத்தின்பால் அழைப்பதற்காக அவர்களுடன் கலந்துறவாடும்போது மென்மையான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும்.
இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புவார்
பிரகாசமான இதயமுள்ள முஸ்லிம் சமூகத்தாடையே மகிழ்ச்சியை பரவச்செய்ய வேண்டும். இவ்வாறு அல்லாஹ் அனுமதித்த வழிகளில் மகிழ்ச்சியூட்டுவதை மார்க்கம் விரும்புகிறது, அச்செயலுக்கு ஊக்கமளிக்கிறது. ஏனெனில், அதனால் இஸ்லாமிய சபைகளும், முஸ்லிம்களின் இல்லங்களும் நேசத்தை எதிரொலிக்கும். இவ்வாறு முஸ்லிம்களின் இதயங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவரை அல்லாஹ் மறுமையில் மகிழ்விக்கிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒருவர் அல்லாஹ் விரும்பியபடி தனது முஸ்லிமான சகோதரரை சந்தித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினால் மறுமை நாளில் அல்லாஹ் அவரை மகிழ்ச்சிப்படுத்துவான்.'' (முஃஜமுத் தப்ரானி)

இஸ்லாம் அனுமதித்த எத்தனையோ மகிழ்ச்சிகளை முஸ்லிம் தனது சகோதரர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும். அழகிய வார்த்தைகள், மகிழ்வூட்டும் முகமலர்ச்சி, ஆறுதல் தரும் அன்பு, மனத்தூய்மையான சந்திப்பு, உண்மையான உதவி மற்றும் இவ்வாறான செயல்களால் இதயங்கள் திறக்கப்படுகின்றன. வெறுப்பு, கோபம், பொறாமை போன்ற தீய குணங்கள் நீங்குகின்றன.

முஸ்லிமின் வளர்ப்பும் மற்றும் அவருக்கு கற்பிக்கப்பட்ட ஒழுக்கமுறைகளும் அவருக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தை ஏற்படுத்தி. மனிதர்களின் நேசத்திற்குரியவராகவும் அவரை ஆக்கிவிடும்.


நன்மைக்கு வழிகாட்டுவார்

இறையச்சமுள்ள முஸ்லிமின் நற்செயல்களில் ஒன்றுதான் நன்மையின்பால் வழிகாட்டுவது. எவருக்கும் எந்தவொரு நன்மையையும் தடுத்து விடக்கூடாது. மனிதர்களுக்குப் பலனளிக்கும் எந்தவொரு விஷயத்தையும் மறைக்கக்கூடாது. ஏனெனில் நன்மையை அறிவித்துக் கொடுப்பவருக்கும் அந்த நன்மையைச் செய்தவன் நற்கூலியுண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒருவர் நன்மையை பிறருக்கு அறிவித்துக் கொடுத்தால் அவருக்கு செய்தவன் நன்மையைப் போன்று கிடைக்கும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நன்மையான விஷயங்களை தனக்கு மட்டுமே தடுத்து கொள்வது உண்மை முஸ்லிமுக்குத் தகுதியான செயலல்ல. ஒரு நற்செயலை அவர் செயல்படுத்தினாலும் பிறருக்கு அறிவித்துக் கொடுத்தாலும் அவருக்கு இரண்டும் ஒன்றுதான், இரண்டு நிலையிலும் அவருக்கு நன்மை கிடைக்கிறது. இதனால் சமூகத்தில் நன்மையைப் பரப்புவதற்கு எல்லோருக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
சில நேரங்களில் சமூகத்திற்கு நன்மைகள் சென்றடைவதை தடுக்கக்கூடிய உளரீதியான ஆபத்துகள் நிகழ்கின்றன. அதாவது சிலர் தங்களைத் தவிர பிறர் இந்த நற்செயலை செய்துவிடக்கூடாது என விரும்புகின்றனர். அதே நேரத்தில் சில சூழ்நிலை காரணங்களால் அவர்களும் அச்செயலை செய்யாமல் அந்த நன்மை புதைக்கப்பட்டு, நற்பலன்கள் வீணடிக்கப்படுகின்றன. சில நபர்களிடம் மட்டும் சுற்றிவரும் அந்த நன்மையிலிருந்து சமூகம் நிராகரிக்கப்படுகிறது. அந்த நபர்கள், தாம் மட்டுமே செய்யவேண்டும் என்று குறுகிய நோக்குடன் வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள். அந்த வாய்ப்பு கிடைக்காமல் ஆயுள் முடிந்துவிடும். அத்துடன் அந்த நற்செயலும் அழிந்துவிடும்.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும் நற்கூலியையும் விரும்பும் முஸ்லிம் இவ்வாறான நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பார். தான் ஒரு நன்மையை அறிந்தால் உடனே பிறருக்கு எடுத்துரைப்பார். அதனால் நற்செயலை செய்தவருக்குச் சமமாக தனது இரட்சகனிடம் நன்மையை பெற்றுக்கொள்வார்.


இலகுபடுத்துவார்

இறையச்சமுள்ள முஸ்லிம், மார்க்கத்தை இலகுவானதாகக் காட்டுவார். ஏனெனில் எல்லா விஷயங்களிலும் இலகுவாக்குவது முஃமினின் பண்பாகும். இலகுவானதையே அல்லாஹ் தனது அடியார்களுக்கு விரும்புகிறான்.

.... அல்லாஹ் உங்களுக்கு இலகுவா (ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர உங்களுக்குக் கஷ்டத்தை (க் கொடுக்க) விரும்பவில்லை... (அல்குர்ஆன் 2:185)

முஸ்லிம்கள் இலகுவானதையே தேர்ந்தெடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், சிரமப்படுத்துவதைத் தடுத்தும் நபிமொழிகள் வந்துள்ளன.

‘‘கற்றுக்கொடுங்கள், இலகுவாக்குங்கள், சிரமப்படுத்தாதீர்கள்! உங்களில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவர் மௌனமாக இருக்கட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

வளர்க்கப்பட்ட முறையில் குறைபாடுகளும், இயல்பில் கடினத்தன்மையும் கொண்டவர்கள் மட்டுமே எல்லா விஷயங்களிலும் கடின நிலையை மேற்கொள்வார்கள். இஸ்லாமியப் பண்பாட்டின் போதனைகளைப் பெற்ற மனிதர் சிரமப்படுத்துவதை ஒப்புக் கொள்ளவே மாட்டார், வன்மையை விரும்பவும் மாட்டார். நபி (ஸல்) அவர்களின் நேரிய வழியைப் பின்பற்றும் அவர் சமூகச் சூழலை சிதைப்பதற்கும், நன்மைகளை அழிப்பதற்கும் ஒருபோதும் துணைபோக மாட்டார்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டால் அந்த இரண்டில் இலகுவானது, பாவமாக இல்லையெனில் அதையே தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமானதாக இருந்தால் அதிலிருந்து மக்கள் அனைவரையும்விட வெகுதூரம் விலகிச் சென்றுவிடுவார்கள். எந்த நிலையிலும் நபி (ஸல்) அவர்கள் தனக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை. ஆனால் அல்லாஹ்வின் கட்டளைகள் தகர்க்கப்பட்டால் அல்லாஹ்வுக்காக பழிவாங்குவார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இந்நபிமொழி பொறுமை, உயர்வு போன்றவற்றை அடைவதில் மனிதர்களின் ஏற்ற தாழ்வுகளையும் பலவீனங்களையும் நன்கறிந்த நபி (ஸல்) அவர்களின் உயர்வான கண்ணோட்டமாகும். மனிதர்களின் பார்வையில் இலகுவாக்குவது போன்ற விருப்பமான செயலும் கடினமாக்குவது போன்ற வெறுப்பான செயலும் வேறெதுவுமில்லை.

இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் இலகுவானதையே தேர்ந்தெடுத்தார்கள். மனித வாழ்வு கடுமையான நிலையிலிருந்து விடுதலை பெறவும் மனங்களில் நெருக்கடி உணர்வு தோன்றாமலிருக்கவும் நபி (ஸல்) அவர்கள் இலகுவாக்குவதை தனது வழிமுறையாக கற்றுத் தந்தார்கள்.


நீதமானவர்

நேர்வழி பெற்ற முஸ்லிம் தனது தீர்ப்பில் நீதமாக நடந்து கொள்வார். எந்த சூழ்நிலையிலும் சத்தியத்திலிருந்து அடிபிறழவோ, வரம்பு மீறவோ மாட்டார். அநீதத்தைத் தவிர்ந்து நீதியை நிலைநாட்டுவது அவரது மார்க்கத்தின வழிகாட்டுதலும் கொள்கையுமாகும். இந்த இரண்டையும் அல்குர்ஆனின் வசனங்களும் சிறப்புமிக்க நபிமொழிகளும் வலியுறுத்துகின்றன. எவ்வித சமரசமோ, சலுகையோ இல்லாமல் அவை கட்டளையாகவே கூறப்பட்டுள்ளன.

விசுவாசிகளே! (உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்துவிடும் படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பு கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்... (அல்குர்ஆன் 4:58)

இஸ்லாமிய சமூகத்திற்கும் அதன் தனிமனிதருக்கும் இஸ்லாம் போதிக்கும் நீதமென்பது, பகைமை மற்றும் நேசத்தால் அதன் தட்டுகள் சாய்ந்து விடாத, தூய்மையான, நுட்பமான நீதமாகும். அதை செயல்படுத்தும்போது உறவுகள் நடுநிலையை தவறச் செய்துவிடக்கூடாது.

விசுவாசிகளே! நீதத்தை நிலைநாட்டுவதில் அல்லாஹ்வுக்காக நீங்கள் உறுதியான சாட்சிகளாக இருங்கள். மக்களில் ஒரு சாரார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் (அவர்களுக்கு) அக்கிரமம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (எவ்வளவு குரோதம் இருந்தபோதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. எத்தகைய சந்தர்ப்பங்களிலும் நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 5:8)

....நீங்கள் எதைக் கூறிய போதிலும் (அதனால் பாதிக்கப்படுவோர்) உங்கள் உறவினராயினும் (சரியே) நீதத்தையே கூறுங்கள்... (அல்குர்ஆன் 6:152)

மக்ஜூம் கிளையைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள். அப்பெண்ணுக்காக உஸாமா இப்னு ஜைது (ரழி) அவர்கள் சிபாரிசுக்காக வந்தபோது நபி (ஸல்) அவர்கள் மிக உயரிய முன்னுதாரணத்தை செயல்படுத்திக் காட்டினார்கள். அப்பெண்ணின் கரத்தைத் துண்டிப்பதில் உறுதிகாட்டிய நபி (ஸல்) அவர்கள், உஸாமா (ரழி) அவர்களிடம் ‘‘அல்லாஹ் விதித்த தண்டனை விஷயத்தில் நீ சிபாரிசு செய்கிறாயா? அல்லாஹ் மீது ஆணையாக முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கரத்தைத் துண்டிப்பேன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

சிறியோர், பெரியோர், தலைவர், குடிமகன், முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் என அனைவருக்கும் இஸ்லாமிய நீதி சமமாக நிலை நாட்டப்படும். அதன் பிடியிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது. இதுதான் இஸ்லாமிய சமூக நீதிக்கும் பிற சமூகங்கள் வழங்கும் நீதிக்கு மிடையேயான வேறுபாடாகும்.

உலகம் முழுவதிலும் பல தலைமுறைகளுக்கு படிப்பினை தரும் பல நிகழ்ச்சிகளை இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்கள் பதிவு செய்துள்ளன. அதில் ஒன்றுதான் அமீருல் முஃமின் அலீ (ரழி) அவர்கள் தனது உருக்குச் சட்டையைத் திருடிய யூதனுடன் நீதிபதியாக இருந்த ஷுரைஹ் (ரஹ்) அவர்களுக்கு முன்னால் நின்ற சம்பவம். அலீ (ரழி) கலீஃபா என்ற அந்தஸ்தில் இருந்தது யூதன் திருடியதற்கான சாட்சியத்தை அவர்களிடம் கோருவதிலிருந்து நீதிபதியைத் தடுக்கவில்லை. கலீஃபாவால் சாட்சியைக் கொண்டுவர முடியவில்லை என்றானபோது நீதிபதி அந்த உருக்குச் சட்டை யூதனுக்குரியது என தீர்ப்பளித்தார்.

இஸ்லாமைப் பின்பற்றுபவர் தனது சொல்லிலும், செயலிலும் நீதத்தைக் கடைபிடித்து உண்மையை பாதுகாப்பார்.


அநீதமிழைக்கமாட்டார்

உண்மை முஸ்லிம் நீதத்தைப் பேணி அநீதத்திலிருந்து விலகியிருப்பார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அநீதமிழைப்பதை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அநீதமென்பது மறுமை நாளின் இருள்களாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

பின்வரும் தூய இறைமொழி அநீதம் செய்வதை எவ்வளவு அழகாகத் தடை செய்கிறது. 

அநீதியிழைப்பது மிகப்பெரியகுற்றம் என்ற அல்லாஹ்வின் உறுதியான உத்தரவு, அது விஷயத்தில் எவ்வித ஆய்வுக்கோ, சமரசத்துக்கோ இடமில்லாமல் செய்துவிட்டது.

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘எனது அடியார்களே! நான் அநீதமிழைப்பதை எனக்கு நானே தடைவிதித்துக் கொண்டேன், அதை உங்களுக்கு மத்தியிலும் விலக்கப்பட்டதாகவே ஆக்கியிருக்கிறேன். நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அநீதியிழைப்பது அல்லாஹ் தன்மீது தடுத்துக்கொண்ட ஓர் விஷயமாகும். அல்லாஹ் படைத்தவன், அரசன், மிகத்தூயவன், யாவரையும் மிகைத்தவன், அடக்கி ஆளும் ஆற்றலுள்ளவன், பெருமைக்குரியவன் என்றிருக்கும் நிலையிலும் அநீதமிழைப்பதை தன்மீது ஹராமாக்கி தனது அடியார்கள் மீதும் ஹராமாக்கியுள்ளான். தனது மார்க்கத்தின் பலம் வாய்ந்த கயிற்றை உறுதியாகப் பற்றியிருக்கும் முஸ்லிமிடம் அநீதம் நிகழ்வதை கற்பனையும் செய்யமுடியாது.

சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் எப்படி அமைந்திருந்தாலும் முஸ்லிமிடம் அநீதி வெளிப்படாது. உண்மை முஸ்லிமின் பண்புகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநீதமிழைக்கவும் மாட்டார். விரோதிகளிடம் ஒப்படைக்கவும் மாட்டார். அவர் தனது சகோதரன் தேவையை நிறைவேற்றும் காலமெல்லாம் அல்லாஹ் அவரது தேவையை நிறைவேற்றுகிறான். எவர் முஸ்லிமின் ஒரு துன்பத்தை அகற்றுகிறாரோ அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களிலிருந்து ஒரு துன்பத்தை அவரை விட்டும் அகற்றுவான். எவர் முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அல்லாஹ் மறுமைநாளில் அவரது குறையை மறைக்கிறான்.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமிடம் அநீதம் என்ற தன்மை காணப்படாது என்பதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. அவரிடம் அநீதம் நிகழ்வது பற்றி கற்பனை கூட செய்ய முடியாது என்பதையும், தனது சகோதரருக்கு உதவி செய்யாமல் கைவிட்டுவிடும் தன்மை முஸ்லிமிடம் இருக்காது என்றும் தெளிவுபடுத்தினார்கள். அதன் பிறகு தனது சகோதரன் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அவரது துன்பத்தை அகற்றுவதற்கும் குறைகளை மறைப்பதற்கும் ஆர்வமூட்டினார்கள். மேலும் இவ்வாறான சிறப்பியல்புகளிலிருந்து பின்வாங்குபவன் இஸ்லாமிய சகோதரத்துவக் கடமைகளில் குறை செய்து அநீதியிழைத்த வனாவான் என்ற கருத்தையும் சுட்டிக் காட்டினார்கள்.
சற்று முந்திய பகுதிகளில் நீதத்தை நிலைநாட்டத் தூண்டும் பல்வேறு சான்றுகளைக் கண்டோம். பகைமை, நேசம், சொந்தம், பந்தம் போன்ற எக்காரணத்தாலும் அந்தத் தராசு அநீதியின் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது. மேலும் அநீதி செய்வதைத் தடை செய்யும் சான்றுகளையும் கண்டோம். இதன் கருத்தாவது:- அனைத்து மனிதர்கள் மீதும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும், அனைத்து மக்களையும் அநீதியிலிருந்து காக்கவேண்டும், அவர்கள் முஸ்லிம்களாக இல்லையானாலும் சரியே!
அல்லாஹு தஆலா முஸ்லிமல்லாதவர்களுக்கும் நீதம் செலுத்துமாறும், உபகாரம் செய்யுமாறும் ஏவுகிறான். தீமையையும் அநீதத்தையும் தடுக்கின்றான்.
(விசுவாசிகளே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து யுத்தம் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 60:8)


உயர்ந்த விஷயங்களை விரும்புவார்

உண்மை முஸ்லிம் சமூகத்துடனான தொடர்புகளில் எப்போதும் உயர்ந்த விஷயங்களையே விரும்ப வேண்டும். அந்தத் தொடர்புகள் கீழ்த்தரமான நோக்கங்களையோ அற்ப நலன்களையோ அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது.
ஏனெனில் மட்டமான நோக்கங்கள், கீழ்த்தரமான சிந்தனைகளில் ஈடுபட முஸ்லிமின் மனம் விரும்பாது. அவர் அல்லாஹ்வின் வேதம், நபி (ஸல்) அவர்களின் தூய வழிமுறையால் நேர்வழிகாட்டப் பெற்றவர். அவர் உண்மையை நேசித்து வீண் விளையாட்டை வெறுப்பவர். அவர் வீழ்ச்சியையும் தாழ்வையும் வெறுத்தொதுக்கி, மேன்மையையும் உயர்வையும் நேசிப்பார். இதுதான் அல்லாஹ் வீரமானவர்களிடம் விரும்பும் குணமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நிச்சயமாக, அல்லாஹ் கண்ணியமானவன். கண்ணியமானவர்களையே நேசிக்கிறான். மேலும் உயர்ந்த விஷயங்களையே விரும்புகிறான். கீழ்த்தரமானதை வெறுக்கிறான்.'' (முஃஜமுத் தப்ரானி)


அடுக்குமொழியைத் தவிர்ப்பார்

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் தனது பேச்சுக்களில் அடுக்கு மொழியைத் தவிர்த்துக் கொள்வார். பிறர் கவனத்தை தன்னளவில் ஈர்த்து பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கில் அடுக்கு மொழியில் பேசுவது, நற்குணமுள்ள முஸ்லிமின் செயலாக இருக்கமுடியாது. அது பகட்டையும் பிரபலத்தையும் விரும்பும் வீணர்களின் வேலையாகும். இதனால்தான் நபி (ஸல்) அவர்களும் அவர்களைப் பின் தொடர்ந்த உத்தமத் தோழர்களான அபூபக்கர் ஸித்தீக் (ரழி), உமர் (ரழி) போன்றவர்களும் அடுக்குமொழி பேசுபவர்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டார்கள்.

இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘வணக்கத்திற்குரிய ஏகனான, அல்லாஹ்வின் மீதாணையாக! அடுக்குமொழி பேசுவோடம் நபி (ஸல்) அவர்களைவிட மிகக் கடுமையான எவரையும் நான் கண்டதில்லை. அவர்களுக்குப் பிறகு அபூபக்கர் (ரழி) அவர்களைவிட அடுக்குமொழி பேசுவோடம் மிகக் கடுமையானவரை நான் கண்டதில்லை. அவ்வாறு பேசுவோருக்கு இப்புவியில் உமர் (ரழி), அவர்களைவிட மிக அச்சமூட்டக் கூடியவர் எவருமில்லை என நான் நம்புகிறேன்.'' (முஃஜமுத் தப்ரானி)


பிறர் துன்பத்தில் மகிழமாட்டார்

பிறர் துன்பத்தில் மகிழ்வது முஸ்லிமின் பண்பல்ல. ஏனெனில் பிறர் துன்பத்தில் மகிழ்வது மனதைக் காயப்படுத்தும் இழிகுணமாகும். இதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டுமென இஸ்லாம் கட்டளை இடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உமது சகோதரன் துன்பத்தில் மகிழ்ச்சியடையாதே! அல்லாஹ் அவருக்கு அருள்புரிந்து உம்மை சோதித்து விடுவான்.'' (ஸுனனுத் திர்மிதி)

இஸ்லாமின் வழிகாட்டுதலின் கீழ் ஆன்மாவின் தாகத்தை தணித்துக் கொண்ட முஸ்லிமின் மனதில் பிறரது துன்பத்தில் மகிழ்வதற்கு இடமில்லை. சகோதரர் பாதிக்கப்படும் நேரத்தில் அவரது துன்பத்தை அகற்றி துயரத்தைக் குறைக்க முயலவேண்டும். அவர் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும்போது மகிழ்வதும், பரிகாசம் செய்வதும் மனதில் நோய் உள்ளவர்களிடம் காணப்படும் செயல்களாகும். நேர்வழி பெற்ற முஸ்லிமிடம் இவ்வாறான செயல்கள் உண்டாகாது.
 

கண்ணியமிக்க கொடைவள்ளல்

மார்க்கத்தின் பிரகாசமிக்க போதனையால் வழிகாட்டப்பட்ட முஸ்லிம் தர்மச் சிந்தனை உடையவராக இருப்பார். எல்லா சூழ்நிலைகளிலும் அவரது இருகரங்களும் விந்த நிலையில் சமூகத்தின்மீது நன்மைகளைப் பொழிந்துகொண்டே இருக்கும்.

அவர் செலவிடும்போது ‘அச்செல்வங்கள் வீணடிக்கப் படுவதில்லை, அனைத்தையும் அறிந்த மகத்தான இரட்சகனிடம் அவை பாதுகாக்கப் படுகின்றன' என்ற உணர்வு அவருக்கு ஏற்படும்.

.... நீங்கள் நல்லதிலிருந்து எதை செலவு செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான்.
(அல்குர்ஆன் 2:273)

மேலும் அவர் தனது செல்வத்திலிருந்து வாரி வழங்கும்போது இதைவிடச் சிறப்பான முறையில் பன்மடங்காக திருப்பி அளிக்கப்படும் என்ற உறுதியைக் கொண்டிருப்பார்.

(நபியே!) அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய பொருளைச் செலவு செய்கின்றவர்களுடைய (பொருளின்) உதாரணம் ஒரு வித்தின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அ(ந்த வித்)து ஏழு கதிர்களைத் தந்தது. ஒவ்வொரு கதிலும் நூறு வித்துக்கள். (ஆக எழுநூறு வித்துக்கள் அந்த ஒருவித்திலிருந்து உற்பத்தியாயின) அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு (இதை பின்னும்) இரட்டிப்பாக்குகிறான். ஏனெனில் அல்லாஹ் (கொடையில்) மிக்க விசாலமானவனும் அறிபவனுமாக இருக்கிறான். (அல்குர்ஆன் 2:261)

...நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் அவன் அதற்குப் பிரதி கொடுத்தே தீருவான். அவன் கொடையளிப்போல் மிக்க மேலானவன். (அல்குர்ஆன் 34:39)

.... (விசுவாசிகளே!) நல்லதிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்த போதிலும் அது உங்களுக்கே (நன்மை). அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தேடுவதற்கன்றி (பெருமைக்காக) நீங்கள் செலவு செய்யாதீர்கள். (பெருமையை நாடாமல் நன்மைக்காக) எதைச் செலவு செய்தபோதிலும் அதன் கூலியை நீங்கள் பூரணமாக அடைவீர்களே தவிர (அதில்) நஷ்டப்படுத்தப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:272)

சத்திய முஸ்லிம் தனது செல்வத்தை செலவிடும்போது நிச்சயமாக அல்லாஹ் இவ்வுலகில் அதற்கு பிரதிபலனாக வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் அளிப்பான் என்பதையும், செலவு செய்யாமல் கையை இறுக மூடிக்கொண்டால் அச்செல்வத்தில் அல்லாஹ் நஷ்டத்தையும் அழிவையும் ஏற்படுத்திவிடுவான் என்பதையும் உறுதிகொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியார்கள் மீது விடியும் ஒவ்வொரு நாளிலும் காலையில் இரண்டு மலக்குகள் இறங்குகிறார்கள். அவ்விருவல் ஒருவர் கூறுகிறார்: ‘‘யா அல்லாஹ் (நற்காரியங்களில்) செலவிடுவோருக்கு பிரதிபலனைத் தந்தருள்வாயாக!'' மற்றொருவர் கூறுகிறார், ‘‘யா அல்லாஹ் (தர்மம் செய்யாமல்) தடுத்துக் கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக!'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அல்லாஹ் ஹதீஸ் குத்ஸியில் குறிப்பிடுகிறான், ‘‘ஆதமின் மகனே! செலவு செய், நீ அருளப்படுவாய்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

தர்மம் செய்யும்போது முஸ்லிமின் இதயத்தில் சிறிதும் சலனம் ஏற்படாது. அல்லாஹ்வின் வழியில் செலவிடுவதால் தனது செல்வத்தில் சிறிதும் குறைவு ஏற்பட்டுவிடாது, மாறாக, தர்மம் செல்வத்தில் வளர்ச்சியைத்தான் ஏற்படுத்தும் என்பதை முஸ்லிம் உறுதியாக நம்புவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘தர்மம் செய்வது செல்வத்தைக் குறைக்காது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இறைதிருப்தியை நாடிச்செய்யும் தர்மத்தின் நற்கூலியின் அளவு வர்ணிப்புக்கு அப்பாற்பட்டதாகும். அல்லாஹ் அதைப் பன்மடங்காகப் பெருக்குகிறான். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இறைவழியில் செலவிட்டதே அவனுக்குரிய நிரந்தரமான செல்வம் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வீட்டில் ஆடு ஒன்று அறுக்கப்பட்டது. அதன் முன் சப்பையைத் தவிர அனைத்தும் தர்மம் செய்யப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களிடம் ‘‘இந்த ஆட்டில் எது மிஞ்சியது?'' என்று வினவினார்கள். ஆயிஷா (ரழி) ‘‘அதன் முன்கால் சப்பை மட்டுமே மீதமிருக்கிறது'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘அந்த முன்சப்பையைத் தவிர (அந்த ஆட்டின்) அனைத்தும் மீதமாகி விட்டது'' என்று கூறினார்கள். (தர்மம் செய்யப்பட்டது அனைத்தும் அல்லாஹ்விடம் நிரந்தர நன்மையாகிவிட்டது). (ஸுனனுத் திர்மிதி)

முஸ்லிம்களின் இதயங்களில் தர்மத்தின் மாண்புகளை விதைப்பதில் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். மேலும் முஸ்லிம்கள் அப்பண்புகளை கடைபிடித்து, நன்மையில் முன்னேறிச் செல்ல வேண்டுமெனவும் வலியுறுத்தினார்கள். இதற்கு பின்வரும் நபிமொழி சான்றளிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘பொறாமை கொள்வது இரண்டு விஷயங்களில் மட்டுமே (அனுமதிக்கப்பட்டுள்ளது). ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர் நேர்வழியில் செலவு செய்தார். மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் கல்வி ஞானத்தை வழங்கினான். அவர் அதன்படி தீர்ப்பளித்து அதை மற்றவருக்கும் கற்றுக்கொடுத்தார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் செல்வங்களை நல்வழியில் செலவிடுவதையும், கல்வியை கற்று அதன்படி நடந்து பிறருக்கு போதிப்பதையும் சமமாகக் கூறினார்கள். இந்த இரண்டு பண்புகளில் போட்டியும் ஆர்வமும் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த இரண்டின் மூலம் இஸ்லாமிய சமூகத்துக்கு மிகப்பெரியநற்பலன்கள் விளைகின்றன. உலக வாழ்வின் அடிப்படைத் தேவையான செல்வத்தை அறவழியில் செலவிடுவது மகத்தான நற்காரியமாகும். தனது கல்வியறிவை வாரி வழங்குவதால் அவரது புத்திக் கூர்மையில் எவ்வித குறைபாடும் ஏற்பட்டுவிடாது மாறாக அதிகரிக்கவே செய்யும். அவ்வாறே செல்வமும்.

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் ஒரு விஷயத்தில் தனது செல்வங்களை செலவிடும்போது அது நன்மையும், நற்கூலியும் அளிக்கக்கூடியதா என்பதையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அவ்வாறு செலவு செய்யும்போது அவனது வாரிசுகள் பாதிக்கப்படக்கூடாது. நன்மையான விஷயங்களில் செலவு செய்வதிலிருந்து ஒரேயடியாக விலகிக் கொள்ளக்கூடாது. இவ்வாறான சூழ்நிலைகளில் மார்க்கம் வலியுறுத்தும் நடுநிலையை மேற்கொள்ள வேண்டும்.

அதிகமாக இறைவழியில் செலவிடுவதைவிட வாரிசுகளுக்கு செல்வம் சேர்த்து வைப்பது அவருக்கு விருப்பமானதாக இருக்கக் கூடாது. மாறாக வாரிசுகளுக்காக விட்டுச் செல்வதைவிட இறைவழியில் செலவிடுவது அவருக்கு விருப்பமுடையதாக இருக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டதே அவரது செயலேட்டில் பதியப்படும் சொத்தாகும்.
நபி (ஸல்) அவர்கள், உங்களில் எவர் தனது செல்வத்தைவிட தனது வாரிசுகளின் செல்வத்தை அதிகம் விரும்புவார்? என வினவினார்கள். தோழர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவரும் தங்களது செல்வத்தையே அதிகம் விரும்புவார்கள்.'' நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரது செல்வம் (நற்காரியங்களில் செலவிட்டு) அவர் முற்படுத்தியது மட்டுமே, அவரது வாரிசுகளின் செல்வம் என்பது அவர் (இவ்வுலகத்தில்) விட்டுச் செல்வது'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

தர்மம், இஸ்லாமிய சமூகத்தின் அழகிய அடையாளமும் முஸ்லிமின் சிறந்த நற்பண்புமாகும். இவ்விடத்தில் ஒரு மனிதன் இஸ்லாமில் சிறந்தது எது? என்ற கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த ‘‘நீர் (ஏழைகளுக்கு) உணவளிப்பது, அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவது'' என்ற பதில் குறிப்பிடத் தகுந்தது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம் தனது வாரிசுகளுக்குக்கென்று எதையும் விட்டு வைக்காமல் வரம்பு மீறி அனைத்தையும் வாரி வழங்கிவிடுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. இஸ்லாமின் அனைத்து சட்டங்களும் எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நடுநிலையுடனும், பூரணத்துடனும் அமைக்கப்பட்டுள்ள வாழ்க்கை நெறியாகும். நற்காரியங்களில் செலவிடுவது அவசியமாகவும், கடமையாகவும் இருப்பதுபோல தனது சந்ததியினர் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு பிறரிடம் கையேந்தித்தியும் நிலை ஏற்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, அவர்களது கௌரவத்தைப் பேணுவதும் கட்டாயக் கடமையாகும்.

ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் மரணமடைவதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஸஃது (ரழி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏராளமான செல்வங்கள் உள்ளன. அதற்கு எனது ஒரு மகள் மட்டுமே வாசாக இருக்கிறார். எனது சொத்தில் மூன்றில் இருபாகத்தை நான் தர்மம் செய்து விடட்டுமா?'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘வேண்டாம்' என்றார்கள். அவர் ‘அதில் பாதி தர்மம் செய்து விடட்டுமா?' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் ‘வேண்டாம்' என்றார்கள். அவர் ‘மூன்றில் ஒரு பகுதி?' என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘மூன்றில் ஒரு பகுதியை நீர் தர்மம் செய்யலாம், மூன்றில் ஒன்றும் அதிகமானதே. (போதுமானதே)' என்றார்கள். அதற்குப்பின் நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள், ‘‘நீர் உமது மக்களை பிறரிடம் கையேந்தித் தியும் வறியவர்களாக விட்டுச் செல்வதைவிட செல்வந்தர்களாக விட்டுச் செல்வது சிறந்ததாகும். நீர் உமது மனைவியின் வாயில் வைத்துவிடும் ஒரு கவளம் உணவு உட்பட குடும்பத்தினருக்காகச் செய்யும் ஒவ்வொரு செலவுக்காகவும் நற்கூலி வழங்கப்படுவீர்.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கொடைத் தன்மையில் மகத்தான முன் மாதிரியாகத் திகழ்ந்தார்கள். தனக்கென்று எதையும் தடுத்து வைத்துக் கொண்டதில்லை. யாசித்தவரை வெறும் கையுடன் திருப்பி அனுப்பியதும் இல்லை.

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களிடம் எந்தவொரு பொருளை கேட்டபோதும் அவர்கள் ‘இல்லை' என்ற வார்த்தையைக் கூறியதேயில்லை.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மனித மனங்களிலுள்ள செல்வத்தின் மதிப்பை நபி (ஸல்) அவர்கள் நன்கறிந்திருந்தார்கள். இதயங்களை இணைக்கவும், இஸ்லாமின்பால் ஆர்வமூட்டவும், நேர்வழி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகப்பதற் காகவும் அதிகமாக செலவு செய்வதை ஒரு பொருட்டாகவே கருதிய தில்லை. 

வழிதவறியிருந்தவர்கள் முதலில் செல்வத்தின் மீது ஆர்வம் கொண்டு இஸ்லாமியக் கோட்டையினுள் நுழைந்தனர். பிறகு அவர்களை இஸ்லாமியப் பேரொளி பூரணமாக மூடிக்கொண்டது. பிறகு மிக உறுதியான ஈமான் உடையவர்களாகவும் சிறந்த முஸ்லிம்களாகவும் ஆனார்கள். இது குறித்த ஹதீஸைக் காண்போம்.

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘இஸ்லாமுக்காக ஏதேனும் ஒன்றை நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டால் நிச்சயமாகக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்தபோது இரண்டு மலைகளுக்கிடையே இருந்த ஆட்டு மந்தையைக் கொடுத்தார்கள். அவர் தனது கூட்டத்தாரிடம் சென்று ‘‘எனது கூட்டத்தினரே முஸ்லிம்களாகிவிடுங்கள்! வறுமையைப் பற்றி சிறிதும் அச்சமற்றவர் தர்மம் செய்வதுபோல முஹம்மது வாரி வழங்குகிறார்'' என்று கூறினார். ஆரம்பத்தில் இஸ்லாமை ஏற்கும் போது உலகாதாயத்தை விரும்பி ஏற்றிருந்தாலும் குறுகிய காலத்திலேயே இஸ்லாம் அவர்களது உள்ளத்தில் உலகம் மற்றும் உலகின் அனைத்தையும்விட மிக விருப்பத்திற்குரியதாக ஆகிவிட்டது'' என அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தங்களது கரத்திற்கு கிடைத்த அனைத்தையும் செலவிட்டு விடுவார்கள். தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ தேவைப்படுமென்று எதையும் சேமித்து வைத்ததில்லை. தனது உதவிகள் உரியவரைச் சென்றடைய வேண்டும், அப்போதுதான் வறண்ட இதயங்கள் குளிர்ச்சியடைந்து நற்சிந்தனைகள் வளரும் என எண்ணினார்கள்.

ஜுபைர் இப்னு முத்இம் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அவர் ஹுனைன் போரிலிருந்து நபி (ஸல்) அவர்களுடன் திரும்பி வந்தபோது, கிராமவாசிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் உதவி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் போர்வையைப் பற்றியவர்களாக ஒரு மரத்தருகே இழுத்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் போர்வையை பறித்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘எனது போர்வைக் கொடுத்து விடுங்கள்! என்னிடம் இந்த மரங்களின் எண்ணிக்கையளவு வசதியிருந்தால் அதை உங்களிடையே பங்கிட்டு விடுவேன். அதன் பிறகு கஞ்சத்தனம் உடையவராகவோ, பொய்யராகவோ, கோழையாகவோ நீங்கள் என்னைக் கருதமாட்டீர்கள்.'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் தர்ம சிந்தனையில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். தர்மம் செய்வதில் சலனமோ, சங்கடமோ இன்றி தூயமனதுடன் மனித குலத்துக்கான முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். உள்ளத்தில் உண்மையான ஈமான் நிலைபெற்று விட்டால் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவதும், அவர்களின் வழியில் சென்று உயர்ந்த நிலைகளை அடைவதும் இலகுவாகிவிடும்.
மனிதன் அல்லாஹ்வை நெருங்க நெருங்க அவன் மனதில் தர்மச் சிந்தனை வளர்ந்துகொண்டே செல்கிறது. இறைவழியில் செலவிடுபவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தியுள்ள மகத்தான அருட் கொடைகளை அறியும் மனிதன் மென்மேலும் வாரி வழங்குகிறான். மனிதனுக்கு அல்லாஹ்வின் தொடர்பு உறுதியாகும்போது அவனது மனதில் தர்மச் சிந்தனைகள் மிக ஆழமாக பதிந்துவிடுகின்றன. அவர் பிறருக்கு செய்யும் உதவிகளும் விசாலமடைகின்றன.
ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்களிடம் தர்ம சிந்தனை மிகைத்திருந்தது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்திக்கும்போது நன்மையால் தன்னை அலங்கரித்து தர்மத்தை மென்மேலும் அதிகரித்து வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார்கள்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், மனிதர்களில் செல்வத்தை வாரி வழங்கும் மிகப்பெரியவள்ளலாகத் திகழ்ந்தார்கள். ரமழான் மாதத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது நபி (ஸல்) அவர்கள் மிக அதிகமாக தர்மம் செய்வார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வோர் இரவும் நபி (ஸல்) அவர்களை சந்திப்பார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். நபி (ஸல்) அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும்போது நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் காற்றைவிட மிக அதிகமாக தர்மங்களை வாரி வழங்குவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த முந்திய தலைமுறையினரும் தர்மத்தின் இவ்வுயர்ந்த அளவை நெருங்கும் வகையில் அறவழியில் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் தனது செல்வங்கள் அனைத்தையும் இறைவழியில் அர்ப்பணித்த அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள், தனது செல்வங்களில் பாதியை வாரி வழங்கிய உமர் (ரழி) அவர்கள், ஒரு போர் படைக்குத் தேவையான அனைத்தையும் முழுமையாக தயார் செய்து கொடுத்த உஸ்மான் (ரழி) அவர்கள், தனக்கு மிக நேசத்திற்குரிய செல்வமாகத் திகழ்ந்த தோட்டங்களை அறவழியில் அர்ப்பணித்த அபூ தஹ்தாஹ் (ரழி) அவர்களைப் போன்றவர்களையும் இஸ்லாமிய வரலாறு கண்டிருக்கிறது. தனது கணவரான அபூதஹ்தாஹ் (ரழி) அவர்கள் தோட்டத்தை அறப்பணிக்கு அர்ப்பணித்துவிட்டார் என்பதை அறிந்த அவரது மனைவி மகிழ்ச்சிப் பெருக்கால் உற்சாகக் குரலில் கூறினார் ‘‘அபூதஹ்தாஹே! மிக இலாபம் தரும் வியாபாரம் செய்துவிட்டீர்கள்.''
இதைப்போன்ற பலர், அழியும் உலகின் இலாபத்தைவிட அழியாத மறுமை வாழ்வை தேர்ந்தெடுத்துக் கொண்டு தங்களது செல்வங்களையும் உயிர்களையும் இறைவழியில் அர்ப்பணித்தார்கள். அவர்கள் அல்லாஹ்வை நேசித்து அவனை நெருங்கியிருந்தார்கள். எனவேதான் இந்த உன்னத காரியத்தை செயல்படுத்தத் துணிந்தார்கள். அவர்களது மனங்களில் உலகச் செல்வங்கள் மதிப்பு பெற்றிருக்கவில்லை. தற்காலத்திய செல்வந்தர்களைப் போன்று அதற்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கவில்லை. தர்மம் செய்யும்போது அவர்களது மனதில் சிறு சலனமும் ஏற்படவில்லை.

தற்காலத்தில் லட்சங்களுக்கும் கோடிகளுக்கும் அதிபதியான செல்வந்தர்கள் உபரியான தர்மம் இல்லாமல், தங்களுக்குக் கடமையான ஜகாத்தை மட்டும் முறையாக நிறைவேற்றினாலே சமுதாயத்திலிருந்து வறுமை முற்றிலும் துடைத்தெறியப்பட்டுவிடும். எனினும் அச் செல்வந்தர்கள் தங்கள் மீது இஸ்லாம் ஜகாத்தை கடமையாக்கியுள்ளது, அது இஸ்லாமின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று என்பதை நன்கறிந்தும் தங்களது கரங்களை இறுகமூடிக் கொள்கின்றனர்.
பெருநாள் போன்ற நாட்களில் ஏழைகள் வாழும் பகுதிகளில் சில ரொட்டித் துண்டுகளையும் உணவுப் பொட்டலங்களையும் சில சில்லறைக் காசுகளையுமே பங்கிடுகின்றனர். அது சமயம் இச்செல்வந்தர்களின் வீட்டு வாசலில் ஒட்டிய வயிறும், ஒடுங்கிய கண்களுமாக ஏழைகள் தங்களுக்குரியதைக் கேட்டு நின்றால் அற்பமாகக் கொடுத்துவிட்டு ‘மிக அதிகமாக வாரி வழங்கிவிட்டோம், தங்களைப் போன்ற வள்ளல் எவருமில்லை' எனப் பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் இந்த அப்பாவி ஏழைகளுக்கு அவர்கள் கொடுக்கும் தர்மம், அவர்களின் மீது கடமையானதிலிருந்து மிக சொற்பமானதாகும்.
இலட்சங்களுக்கும் கோடிகளுகளுக்கும் அதிபதியாக இருந்து கொண்டு தங்களுக்குக் கடமையானதில் கண்களில் விழும் தூசியைப் போன்ற மிக அற்பமானதை மட்டுமே கொடுத்து விளம்பரம் தேடிக் கொள்வதுடன், தங்களை அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது கட்டளைக்கு அடிபணிபவர்களாகவும், வாரி வழங்குபவர்களாகவும் வெளிக்காட்டி கொள்கிறார்கள்.
ஏழைகள் மற்றும் செல்வந்தர்களின் ஏக இரட்சகனான அல்லாஹ், இவர்களது செயல்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான், அவனது தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. அவர்கள் பின்வரும் வசனத்துக்கு இலக்காகிறார்கள்.

... (இவர்களுக்கும், இன்னும் எவர்கள்) பொன்னையும் வெள்ளியையும் சேகரித்துக் வைத்துக் கொண்டு அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே!) நீர் துன்புறுத்தும் வேதனையை நன்மாறாயம் கூறுவீராக!.
(பொன், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைதான். ஆகவே நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுகித்துப் பாருங்கள் என்று கூறப்படும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டும்). (அல்குர்ஆன் 9:34,35)

இக்கூட்டம் இஸ்லாமுக்கு முரணான பொருளாதார அமைப்பில் பொருளீட்டி செல்வத்தை சேர்த்து செழிப்படைந்த கூட்டமாகும். இவர்களே தங்களது கஞ்சத்தனம், அல்லாஹ்வின் வழிகாட்டுதலுக்கு முரண்படுவது போன்ற தீய நடத்தைகளால் இடதுசா கம்யூனிச சிந்தனைகள் முஸ்லிம் நாடுகளில் ஊடுருவக் காரணமானார்கள். இவர்கள் தங்களது செல்வங்களில் அல்லாஹ்வின் கடமைகளை அறிந்து, குறைவின்றி நிறைவேற்றியிருந்தால் முஸ்லிம் சமுதாயத்தை கம்யூனிசத்தின் பக்கம் அழைக்க எவரும் துணிந்திருக்க மாட்டார்கள்.

இன்னும் கம்யூனிசக் கூட்டங்கள் ஏற்படுத்திய பிரிவினைவாத குரோத உணர்வுகளும் முளைத்திருக்காது. மேலும் கம்யூனிச அரசுகள் அந்த முஸ்லிம் முதலாளிகளின் தொழிற்சாலைகளையும் வியாபார நிறுவனங்களையும் கைப்பற்றி அவர்களின் செல்வங்களையெல்லாம் சூறையாடி கஜானாக்களை காலியாக்கி விட்டனர். ஆனால் அந்த முஸ்லிம் முதலாளிகளில் இலட்சங்களுக்கும் கோடிகளுக்கும் அதிபதியானவர்கள், தங்களது தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் கூலித் தொழிலாளர்களுக்கு வாரம் அல்லது மாதம் ஒருமுறை அற்பமான சில சில்லறைக் காசுகளை சேர்த்துக் கொடுப்பதற்கு கஞ்சத்தனம் செய்தார்கள், தங்களது இலாபங்கள் குறைந்துவிடுமென்று அஞ்சினார்கள்.

அது மட்டுமா? இதற்காக பூகம்பங்களையே ஏற்படுத்தினார்கள். ஆனால் அதே சமயம் தங்களின் பிள்ளைகள் கிளப்களிலும், நாட்டிய அரங்குகளிலும், ஆயிரக்கணக்கில் விபச்சாகளுக்குச் செலவு செய்வதை இலட்சியம் செய்யவில்லை. அது மட்டுமா? இந்த செல்வந்தர்களில் சிலர் நாட்டிய அரங்குகளை முழுமையாக தனக்கென்றே ஒதுக்கி, அங்கு ஆபாச நாட்டியமாடும் பெண்களை தான் மட்டுமே கண்டு களித்து வந்தார்கள்.

இதைக் கவனித்த இந்த கம்யூனிச இயக்கங்கள் இஸ்லாமிய நாடுகளில் ஊடுருவி அவர்களது சொத்துகளையும், தொழிற் சாலைகளையும், வங்கி இருப்புகளையும் கைப்பற்றிக் கொண்டன. செல்வச் செழிப்பில் கொடிகட்டிப் பறந்த இவர்களின் கருவூலங்கள் காலியாகி, வறுமைப் படுகுழியினுள் வீழ்ந்தார்கள். (இதற்கு இன்று உதாரணமாக எகிப்து, சிரியா, எமன், துனீஷியா, அல்ஜீயா, மொராக்கோ, லிபியா, இராக், துருக்கி போன்ற நாடுகளை குறிப்பிடலாம்).

வலிமையான இஸ்லாமிய சமூக அமைப்பில் செல்வந்தர் ஏழைக்கு அநீதியிழைப்பதையும், செல்வந்தர் மீது ஏழை பொறாமைப்படு வதையும் காணமுடியாது. ஏனெனில் செல்வந்தர் தனது செல்வத்தில் ஏழையின் உரிமையை அறிந்து, அதை எவ்விதக் குறைவுமின்றி அவருக்கு கௌரவத்துடனும் மரியாதையுடனும் நிறைவேற்றி விடுவார். அந்த ஏழைக்கு நீதம் செலுத்தி, உதவி, ஒத்தாசை செய்வதை மறந்து விடமாட்டார்.

அவ்வாறே ஏழை, ‘செல்வந்தர் வளமாக அதிக செல்வத்துடன் இருக்கிறாரே' என்ற எண்ணத்தில் வெறுப்பு, பகைமை மற்றும் பொறாமைக் கண்கொண்டு பார்க்கமாட்டார். அதற்குக் காரணம் இஸ்லாமிய சமூகத்தின் செல்வந்தர், அனுமதிக்கப்படாத வழிகளில் பொருளீட்டாமல் மார்க்கம் அனுமதித்த வழிகளில் தனது உழைப்பையும் வியர்வையையும் சிந்தி, மிகுந்த சிரமத்துடன் பொருளீட்டுகிறார்.

செல்வந்தருக்குக் கிடைத்த இந்த பொருளீட்டும் வாய்ப்பு இஸ்லாமின் பிரகாசத்துக்குள் நுழைந்துள்ள சமூகத்தின் அனைவருக்கும் பங்கிடப்படுகிறது. ஏழை விரும்பினால் தனது உழைப்பையும், முயற்சியையும் கொண்டு செல்வந்தராவதற்கான வாய்ப்புகளை இஸ்லாம் ஏற்படுத்தித் தருகிறது.

முன்னேற வேண்டுமென விரும்பும் முயற்சியும், ஊக்கமும், உற்சாகம் உடைய அனைவரும் நுழைந்து கொள்வதற்கான வாசலை இஸ்லாம் திறந்து வைத்துள்ளது. அதனால் பழிவாங்குவதற்கு அல்லது செல்வந்தன் வீழ்ச்சியை எதிர்பார்த்து பகைமை, பொறாமையை வெளிப்படுத்து வதற்குரிய எந்தக் காரணமும் இஸ்லாமிய சமூக அமைப்பில் இல்லை. நேசமும் சகோதரத்துவமும் பூத்துக் குலுங்கும் இஸ்லாமிய சமூகத்தில் பழிவாங்கத் துடிப்பவருக்கும் பகைமை, பொறாமை கொள்பவருக்கும் அறவே இடமில்லை.

நபி (ஸல்) அவர்கள் அறப்பணிகளில் செலவிடுவது பற்றி தோழர்களுக்கு போதனை செய்ததுடன் சதாவும் அவர்களை தூண்டிக் கொண்டிருந்தார்கள். பொருட்களை சேமித்து வைக்கும் ஆசையை அவர்களது மனங்களிலிருந்து அகற்றினார்கள். மனிதர்களின் வாழ்வில் வளத்தை பரவச்செய்து அவர்களிடையே மறுமலர்ச்சியை உருவாக்கி னார்கள். மறுமையில் அச்செல்வங்கள் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு தண்டனையாகவும் சோதனையாகவும் ஆகிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் ‘பகீஃக்கு' சென்று கொண்டிருந்தபோது அபூதர் (ரழி) அவர்களும் இணைந்து கொண்டார்கள். அவ்விருவரும் நடந்து கொண்டிருந்தபோது அபூதர் (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘அதிகமதிகம் சேமிப்பவர்கள் மறுமையில் (நன்மையால்) மிகக் குறைந்தவர்களாக இருப்பார்கள். சத்தியத்திற்காக இப்படி இப்படி சொன்னவர்களைத் (தர்மம் செய்தவர்களை) தவிர'' என்றார்கள். பின்பு உஹுது மலையை இருவரும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அபூதர்ரே!'' என்று அழைத்தார்கள். அவர் ‘‘அல்லாஹ்வின் தூதரே உங்களுக்கு அடிபணிந்தேன். நான் உங்களுக்கு அர்ப்பணமாகி விட்டேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த உஹுது மலை முஹம்மதின் குடும்பத்தாருக்கு தங்கமாகி (அனைத்தும் தர்மம் செய்யப்பட்ட பின்) மாலையில் அவர்களிடம் ஒரு தீனார் அல்லது ஒரு மிஸ்கால் மிஞ்சி இருப்பதும் எனக்கு மகிழ்ச்சியளிக்காது'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இதைத்தான் உமர் (ரழி) அவர்களின் நிலை தெளிவுப்படுத்துகிறது. குரைஷி செல்வந்தர்கள் போர்களிலிருந்து ஓய்வு பெற்றபோது வியாபாரங்களில் ஈடுபட்டு அதிகமதிகம் பொருள் சேர்த்து பெரும் செல்வந்தர்களானார்கள். அதைக் கண்ட உமர் (ரழி) அவர்கள் கண்டித்துக் கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக குரைஷிகள் அல்லாஹ்வின் செல்வத்தை தங்களுக்கு மத்தியில் மட்டும் சுற்றிவர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! கத்தாபின் மகன் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது. நிச்சயமாக நான் மதீனாவின் வெளியே நின்று அவர்களைக் கண்காணிப்பேன். அந்த குரைஷிகளின் இடுப்பைப் பிடித்துக் கொண்டு நரகில் வீழ்வதிலிருந்து அவர்களைத் தடுப்பேன்.'' என்று கூறினார்கள்.

உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு கூறியதற்கான காரணங்கள்:

1) பொருளாதார வளங்கள் அனைத்தும் குறிப்பிட்ட சிலரது கரங்களில் முடங்கிப்போவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. அவ்வாறு சிலருடைய கரங்களில் செல்வங்கள் குவிந்திருப்பது, சமூகத்தில் அநேகரின் வளங்கள் சுரண்டப்பட்டுள்ளன, பெரும்பான்மையோர் வறுமையில் சிக்குண்டுள்ளனர் என்பதன் அடையாளமாகும். அப்போது சமூகத்தில் பிரிவினைவாதமும், மேலாதிக்க உணர்வும், இன்னல்களும், ஏற்றத்தாழ்வும், மோசடித்தனமும், அநீதங்களும் உருவாகிவிடும். ஆனால் இஸ்லாமிய சமூகத்தில் இவையனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.

2) ‘அந்தக் குரைஷியரின் கரங்களைப் பற்றிக் கொள்வதற்காக மதீனாவின் வெளிகளில் நின்றிருப்பேன்' என கலீஃபா உமர் (ரழி) அவர்கள் சூளுரைத்தது, அம்மக்கள் வியாபாரப் பொருட்களை பதுக்கி வைத்து பின்பு விலையேற்றி நியாயமற்ற வர்த்தகம் செய்வதை தடுக்கவேயாகும். அதுபோன்றே ஜகாத் கொடுக்காமல் பொருள் சேர்ப்பதைத் தடுத்து அம்மக்களை நரக நெருப்பில் வீழ்வதிலிருந்து காப்பாற்ற முடியும். உமர் (ரழி) அவர்களின் நோக்கம் அம்மக்களைப் பழிவாங்குவதோ அல்லது அவர்களின் செல்வத்தைக் கண்டு பொறாமைப்படுவதோ அல்ல.
ஆனால் பொருளியலை அடிப்படையாளக் கொண்டுள்ளவர்களின் சமூகத்தில், புறக்கணிக்கப்படும் ஏழைகளின் மனங்களில் செல்வந்தர்கள் மீது பகைமையும், பொறாமையும் தோன்றி, பழிவாங்கும் வெறியை உருவாக்கி விடுகிறது. இஸ்லாம் வலியுறுத்தும் சமூக நீதி என்பது ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் சமமானதாகும்.
சமூகம் சீர்குலைவதையும், சமத்துவம் பாதிக்கப்படுவதையும், மனித மனங்களில் பொறாமை நிரம்பி வழிவதையும் இஸ்லாமிய சமூக அமைப்பு தடுக்கிறது. இதுவே ஏழை மற்றும் செல்வந்தர்களின் இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும். இம்மை மறுமை வாழ்விற்கிடையே இவ்வாறான தொடர்பை இஸ்லாமியப் பொருளியல் அமைப்பைத் தவிர வேறெந்த பொருளாதார அமைப்பாலும் நிர்மாணிக்க இயலவில்லை.

முஸ்லிம், ஏழையாக இருந்தாலும் அவரது வருமானம் மிகக்குறைவாக இருந்தாலும் சங்கைமிக்கவராகவே இருப்பார். தன்னைவிட வறியோரைக் காணும்போது அவரது இதயத்தில் கருணை சுரக்கும், அவர் பிறருடைய வேதனையையும் வலியையும் உணர்ந்து உதவுவார். ஏழை எளியவர்கள் தங்களது சக்திக்கேற்ப பிறருக்கு உதவ வேண்டுமென வலியுறுத்தும் ஏராளமான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. அதன்மூலம் அவர்களிடம் சகோதரத்துவம் உருவாகும்.
தங்களது வறுமையிலும் அறப்பணியில் செலவிடுவோருக்கு அல்லாஹ் அந்த தர்மத்தை மென்மேலும் வளர்த்து மாபெரும் மலை போன்ற நற்கூலியை வழங்குவதாக வாக்களிக்கின்றான். இதற்கான ஒரே நிபந்தனை தர்மம் செய்யப்படும் பொருள் அனுமதிக்கப்பட்ட ஹலாலான சம்பாத்தியத்தில் உள்ளதாக இருக்கவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் தனது ஹலாலான சம்பாத்தியத்திலிருந்து ஒரு பேரீச்சம்பழ மதிப்புடையதை தர்மம் செய்கிறாரோ-அல்லாஹ் பரிசுத்தமானதையே ஏற்றுக் கொள்வான்.- அல்லாஹ் அதை தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொள்கிறான். பிறகு நீங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பதுபோல அந்த தர்மத்தை மென்மேலும் வளரச் செய்கிறான். இறுதியில் அது மலை போன்று வளர்ந்து விடுகிறது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

தர்மத்தால் உள்ளம் பண்பட்டு சமூக ஒற்றுமையில் அனைவரும் பங்கு பெற வேண்டுமென்பதற்காக நபி (ஸல்) அவர்கள் வறுமையில் இருப்போரும் தங்களது சக்திக்கேற்ப தர்மம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தினார்கள். அது மிகக் குறைவாக இருப்பினும் சரியே. தர்மம் செய்யாமல் அனைத்தையும் தனக்கென வைத்துக் கொள்வது சோதனையாகவும் அழிவாகவும் ஆகிவிடுமென எச்சரித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘பேரீச்சம் பழத்தின் ஒரு பகுதியைக் கொண்டேனும் நரக நெருப்பிலிருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

முஸ்லிம் தன் சமூகத்திற்கு நன்மையளிப்பவராகவும், பலனளிப்பவ ராகவும், உதவியாளராகவும் இருக்க வேண்டுமென அல்லாஹ் விரும்புகிறான். அவர் ஏழையாக இருந்தாலும் சரியே. அவர் மனிதர்கள் மீது சதாவும் நன்மையைப் பொழிந்து கொண்டே இருக்க வேண்டும். இதனால்தான் முஸ்லிம்கள் தங்களது வசதி வாய்ப்புக்கேற்ப நற்செயல்களை அதிகமதிகம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தும் நபிமொழிகள் மிகுதமாக காணப்படுகின்றன. ‘முஸ்லிமின் ஒவ்வொரு செயலிலும் தர்மம் உண்டு' எனவும் நபிவழி தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், ‘‘தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்'' என்று கூறியபோது நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்கவில்லையானால்...?'' எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘ஏதேனும் கைத்தொழில் செய்து தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மமும் செய்ய வேண்டும்'' என்றார்கள். தோழர்கள் ‘‘அதுவும் முடியவில்லையாயின்...'' எனக் கேட்டதற்கு, ‘‘தேவையுடைய, பலவீனருக்கு உதவ வேண்டும்'' என்று பதிலளித்தார்கள். தோழர்கள் ‘‘அதுவும் இயலவில்லையாயின்...'' என்றபோது, ‘‘நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ளட்டும்! நிச்சயமாக இது அவருக்கு தர்மமாகும்'' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அனைத்து முஸ்லிம்களும் நுழைந்து கொள்ளும் வகையில் இஸ்லாம் நன்மையின் வட்டத்தை விசாலமாக்கியுள்ளது. வறுமையின் கோரப் பிடியில் சிக்குண்ட ஏழையின் மனதில் ‘என்னிடம் ஒன்றுமில்லாததால், கூட்டான சமூக நற்காரியங்களில் பங்குபெற முடியவில்லையே' என்ற ஏக்க உணர்வு தோன்றாத வகையில் தர்மத்தின் நன்மைகளைப் பெறுவதற்கான வாசல் அவருக்கும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது. அவர் செய்யும் ஒவ்வொரு நற்செயலும் தர்மமாகி விடுகிறது. செல்வந்தர் நற்காரியங்களில் செலவிட்டு நற்கூலியைப் பெற்றுக் கொள்வதைப் போல் ஏழையும் தனது நற்செயல்களால் நற்கூலியைப் பெற்றுக் கொள்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அனைத்து நற்செயலும் தர்மமாகும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதன் மூலம் சமூகத்தின் ஒவ்வொருவரும் சமுதாயத்தைச் சீரமைப்பதிலும், அதற்கு ஊழியம் செய்வதிலும் பங்கு பெறும் வாய்ப்பை நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள். இவ்வாறு பங்கு பெறுவதன் மூலம் அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தினார்கள். இதனால் ஒவ்வொரு மனிதருக்கும் தனது கண்ணியத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
இஸ்லாம் முஸ்லிம்கள் மீது இயல்பாகவே கருணையை வெளிப்படுத்துகிறது. அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டதை அவர்களுக்கு விதியாக்கவில்லை. தங்களது அவசியத் தேவைகள் போக மிஞ்சுவதையே தர்மம் செய்ய உத்தரவிடுகிறது. தங்களது அவசியத் தேவைகள் கருதி செல்வங்களை வைத்துக்கொள்வதில் குறையொன்றும் இல்லை. அனைத்தையும் தர்மம் செய்து விட்டு பிறரிடம் கையேந்தி நிற்பது முறையல்ல. ஏனெனில், வாங்குவதற்காக தாழ்ந்து நிற்கும் கரத்தை விட கொடுப்பதற்காக உயர்ந்து நிற்கும் கரமே மேலானது. தனது அவசியத் தேவைக்கு மேல் அதிகமாக உள்ள செல்வமே தர்மம் செய்வதற்கு ஏற்றதாகும். முஸ்லிம் நன்மை செய்வதற்கான எந்த வாய்ப்பையும் நழுவ விடமாட்டார். ஏனெனில் அவர் செலவிடுவதில் நன்மை உண்டு எனவும், கஞ்சத்தனம் செய்வதில் தீமை உண்டு எனவும் நேரிய மார்க்கத்தால் போதிக்கப்பட்டுள்ளார்.
அல்லாஹ் ஹதீஸ் குத்ஸிய்யில் கூறுகிறான்: ‘‘ஆதமின் மகனே! நீ (உனக்கும் உனது குடும்பத்தினரின் அவசியத் தேவைக்கும் போக) மிஞ்சியதை தர்மம் செய்வது உனக்கு நன்மையாகும். அதைத் தடுத்துக் கொள்வது உனக்கு தீங்களிக்கும். உன் அவசியத் தேவை கருதி வைத்துக் கொள்வதில் நீ பழிக்கப்பட மாட்டாய். (தர்மம் செய்வதை) உன் குடும்பத்தாரிடமிருந்து ஆரம்பித்துக்கொள். தாழ்ந்த கரத்தைவிட உயர்ந்த கரமே சிறந்தது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

தனக்கு மற்றும் குடும்பத்தினரின் அவசியத் தேவைக்கு எஞ்சியதை தர்மம் செய்யவும், வாரி வழங்கவும் மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் தயங்கமாட்டார். எஞ்சிய அச்செல்வம், வறுமைக்கு அஞ்சி மக்கள் சேமித்து வைக்கும் வகையில் இருந்தாலும் அல்லது மென்மேலும் செல்வத்தைப் பெருக்கி, வசதி வாய்ப்பை வளர்த்துக் கொள்வதற்காக இருந்தாலும் சரியே. மாறாக, நெருக்கடியான நிலைகளில் தர்மம் செய்வதுதான் தர்மத்தின் வகைகளிலேயே மிகச் சிறந்ததும், மகத்தான நற்கூலியை பெற்றுத் தரக் கூடியதும் என்பதை அறிவார்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மிகுந்த நற்கூலியைப் பெற்றுத் தரும் தர்மம் எது?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பொருள் மீது ஆசையும், வறுமையின் அச்சமும், கஞ்சத்தனமும் உம் மனதில் இருக்க, நீர் சுகமாக உள்ள நிலையில் செய்யும் தர்மமே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக்குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்தாதீர். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவாய். அப்போது உமது பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்கும்!'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உண்மை முஸ்லிம் தனது தானதர்மங்களுக்கு உதவி, உபகாரத்தின் பால் தேவைப்படுபவர்களைத் தேர்ந்தெடுப்பார். கடுமையான வறுமையிலும் பிறரிடம் கையேந்தத் தயங்கி வெட்கப்பட்டு நிற்பவர்களைக் கண்டறிவார். அவர்கள், தங்களது வறுமைச் சூழலை பிறரிடம் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களை செல்வந்தர்கள் என்று எண்ணி அவர்களுக்கு எவரும் உதவி செய்ய மாட்டார்கள். முஸ்லிம் இத்தகையோரைக் கண்டறிந்து, அவர்களது வாசலைத் தட்டித் திறந்து, அவர்களது தேவைகளை நிறைவேற்றி, அவர்களது கௌரவத்தைக் காக்கவேண்டும்.

இவ்வாறு யாசகத்திலிருந்து தங்களைப் பேணி வரும் ஏழைகளே உதவிகள் செய்யப்பெற மிகத் தகுதியானவர்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மிகுந்த முக்கியத்துவமளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஓரு பேரீச்சம் பழத்துக்காக, ஓரு கவளம் உணவுக்காக அலைபவன் ஏழையல்ல. நிச்சயமாக வறுமையிலிருந்தும் பிறரிடம் கேட்காமல் தன்னைப் பேணிக் கொள்பவனே ஏழையாவான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: ‘‘ஓரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன் ஏழை யாரெனில், அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான் பிறரும் அவனது நிலையை அறிந்து தர்மம் செய்யமாட்டார்கள். தானும் வலியச் சென்று மக்களிடம் கேட்கமாட்டான். இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இரக்கமும் கருணையுள்ளமும் கொண்ட முஸ்லிம் தனது தர்மங்களில் அனாதைகளுக்கு முக்கியத்துவமளிப்பார். தன்னால் இயன்றளவு அவர்களது காரியங்களுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்காக செலவிடுவார். அந்த அனாதை, நெருங்கிய உறவினராக இல்லை என்றாலும் சரியே. அனாதைகளைப் பராமரிப்பவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தியுள்ள மகத்தான நற்கூலியை எதிர்பார்த்து இறை திருப்திக்காக செலவிடுவார். அதன்மூலம் சுவனத்தில் அல்லாஹ்வின் தூதருக்கு அண்டை வீட்டாராகவும் ஆகிவிடுகிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருளியதாக ஸஹ்ல் இப்னு ஸஃது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நானும் அனாதைகளை பராமரிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம்'' (என்று கூறி) தனது ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் சுட்டிக்காட்டி, இரண்டு விரல்களையும் சிறிது விரித்துக் காட்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

வள்ளல் தன்மையுள்ள, இறையச்சமுள்ள முஸ்லிம் தனது நேரிய மார்க்கத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி தனது இரட்சகனின் திருப்பொருத்தத்தை நாடி, ஏழைகளுக்கும் விதவைகளுக்கும் உதவி செய்வார். அதன்மூலம் அல்லாஹ், ஏழைகள் மற்றும் விதவைகளின் உதவியாளர்களுக்கு சித்தப்படுத்தியுள்ள மகத்தான நன்மையை ஆதரவு வைப்பார். அதன்மூலம் இரவெல்லாம் நின்று வணங்கி பகலெல்லாம் நோன்பு நோற்பவரை விடவும், இறைவழியில் புனிதப்போர் புரிபவரை விடவும் அதிகமான நன்மைகளை அடைந்து கொள்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஏழைகளுக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும் உதவி செய்பவர் இறைவழியில் போராடுபவரைப் போன்றாவார்.'' அறிவிப்பாளர் கூறுகிறார், நபி (ஸல்) அவர்கள் ‘‘இரவு தூங்காமல் நின்று வணங்கியவரைப் போன்றும் தொடர்ச்சியாக நோன்பு வைத்தவரைப் போன்றுமாவார்'' என்றும் கூறியதாக எண்ணுகிறேன். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேற்கூறப்பட்ட வழிகளே தர்ம சிந்தனையுள்ள முஸ்லிம் செல்வதற்கு ஏற்ற வழிகளாகும். இதன்மூலம் அல்லாஹ்வின் பொருத்தத்தையும், நெருக்கத்தையும் அடைய முடியும். இதுவன்றி பிரபல்யத்திற்காக, பதவிக்காக அல்லது வருமானத்தைக் கருதி பெரும் செலவுடன் ஆடம்பரமாக நடத்தப்படும் விருந்துகள் ஒரு முஸ்லிம் செலவு செய்வதற்கு தகுதியானவைகள் அல்ல. இது போன்ற விருந்துகளை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். இவைகளில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடப்படுவதில்லை என்பதுதான் காரணமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா (மணவிருந்து) உணவே உணவுகளில் மிகக் கெட்டதாகும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஏழைகள், விதவைகளுக்கு உதவி செய்து, அனாதைகளைப் பராமரித்து உபகாரம் செய்பவர் மகத்தான நற்கூலியைப் பெற்றுக் கொள்கிறார். மேலும் அத்தன்மை அவரது இதயத்தை மென்மையாக்கி, மனிதநேய உணர்வுகளை வளர்த்து, அவரது மனதை பரிசுத்தப் படுத்துகிறது. அவர் தர்மத்தின் இன்பத்தை நுகர்ந்து வாரி வழங்குவதில் ஆனந்தமடைகிறார். நற்செயல்களைச் செய்வதில் முன்னேறிச் செல்கிறார்.

இதனால்தான் கடின சித்தமுடையவர்களை அனாதைகளுடன் பழகுமாறும் அவர்களுக்கு உபகாரம் செய்யுமாறும் நபி (ஸல்) அவர்கள் தூண்டினார்கள்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தன்னுடைய வந்நெஞ்சத்தைப் பற்றி முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அனாதைகளின் தலையைத் தடவிக் கொடுங்கள் ஏழைகளுக்கு உணவளியுங்கள்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)


உபகாரத்தை சொல்லிக் காட்டமாட்டார்

பேணுதலும், இறையச்சமும் உள்ள முஸ்லிமுக்கு இறைவழியில் தர்மம் செய்யவும், வாரி வழங்கவும் அல்லாஹ் அருள் புரிந்தால், தான் செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்ட மாட்டார். இது விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவார்.
எவர்கள் தங்களுடைய பொருள்களை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்து (அப்பொருளை வாங்கியவனுக்குத்) தாங்கள் அதைக் கொடுத்ததற்காக இகழ்ச்சியையாவது, துன்பத்தையாவது (அதனோடு) சேர்க்கவில்லையோ, அவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை அவர்கள் துக்கிக்கவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:262)

தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டி நோவினை செய்வது தர்மத்தின் அனைத்து நன்மைகளையும் வீணடித்து அழித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. சொல்லிக்காட்டினால் தர்மம் அழிந்து நன்மைகள் வீணாகிவிடும் என அல்லாஹ் எச்சரித்து, அதைத் தடை செய்துள்ளான். அல்லாஹ்வின் இத்திருவசனம் முஸ்லிமின் செவிப்புலனில் பாய்ந்து இதயத்தை அசைக்கிறது தர்மத்தை சொல்லிக் காட்டுவதிலிருந்து அவரைத் தடுத்து விடுகிறது.

விசுவாசிகளே! நீங்கள் உங்கள் தர்மத்தை (ப் பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும் துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள். (அல்குர்ஆன் 2:264)

தேவைகளால் நிர்ப்பந்திக்கப்பட்டு உதவி பெற்ற மனிதரிடம் தான் செய்த உபகாரத்தை சொல்லிக்காட்டுவது அவரது மனிதத் தன்மையை இழிவுபடுத்துவதும் அவரது அந்தஸ்தைத் தாழ்த்தி, அவரது கண்ணியத்தைத் தகர்ப்பதுமாகும். வாங்குபவரையும் கொடுப்பவரையும் சகோதரர்கள் எனவும், அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் என்பது இறையச்சத்தையும் நற்செயலையும் கொண்டு மட்டுமே என நிர்ணயித்துள்ள இஸ்லாமிய மார்க்கத்தில் இவையனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.

ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனிடம் தான் செய்த உபகாரத்தை சொல்லிக்காட்டி, அவரது மனதில் வேதனையை விதைக்க மாட்டார் அவரது கௌரவத்தையும் கண்ணியத்தையும் சிதைக்க மாட்டார்.

செய்த தர்மத்தை சொல்லிக்காட்டும் இழிகுணம் உடையவர்களை மிக வன்மையாகக் கண்டிக்கும் நபிமொழிகள் வந்துள்ளன. அத்தகையோர் குறித்து ‘அவர்கள் இறைவெறுப்புக்குள்ளானவர்கள், கேவலத்திற்குரியவர்கள், மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான். அவர்களைப் பாவத்திலிருந்து பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு' என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அருளியதாக அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களுக்கு நோவினையளிக்கும் வேதனையும் இருக்கிறது'' என நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். அபூதர் (ரழி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இத்தகையவர்கள் தோல்வியடைந்து விட்டார்கள், நஷ்டப்பட்டு விட்டார்கள். அவர்கள் யார்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘தனது கீழாடையை கரண்டைக் காலுக்குக் கீழே இழுத்துச் செல்பவன், செய்த தர்மத்தை சொல்லிக் காட்டுபவன், பொய் சத்தியம் செய்து பொருள்களை விற்பவன்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
விருந்தளிப்பவர்
தர்ம சிந்தனையுடைய முஸ்லிமிடம் விருந்தோம்பல் என்ற பண்பு ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். விருந்தினரை வரவேற்பதில் மகிழ்ந்து, அவர்களை கௌரவிக்க ஆவல் கொள்வார். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொண்ட அவரது மனதின் ஆழத்தில் ஊன்றப்பட்ட இஸ்லாமிய நற்பண்புகள் அவரை இவ்வாறு செயல்படத் தூண்டுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

விருந்தினரை கண்ணியப்படுத்தும் முஸ்லிமின் இப்பண்பு அவர் அல்லாஹ்வையும் மறுமையையும் ஈமான் கொண்டவர் என்பதன் அடையாளமாகும். இந்த இடத்தில் விருந்தனரிடம் வெளிப்படுத்தும் கண்ணியம் அவரது இறைநம்பிக்கைக்கான சான்றாகத் திகழ்கிறது. அவர் விருந்தினரை கண்ணியப்படுத்தும்போது அவரால் தனக்கு இறைவனிடம் கிடைத்த உயர்வுக்கு நன்றியை வெளிப்படுத்தியவரைப் போன்றாகிறார். ஏனெனில், அந்த விருந்தினருக்கு பணிவிடை செய்வதின் மூலமே அவரது ஈமான் உறுதியடைகிறது இரட்சகனின் திருப்பொருத்தமும் கிடைக்கிறது.

‘‘அல்லாஹ்வையும் மறுமையையும் விசுவாசிப்பவர் தனது விருந்தாளிக்கு அன்பளிப்பு அளிப்பதை கண்ணியமாகச் செய்யட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, தோழர்கள் கேட்டனர் ‘‘அல்லாஹ்வின் தூதரே! விருந்தாளிக்கு அளிக்கும் அன்பளிப்பு என்ன?'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘விருந்தினருக்கு அளிக்கும் அன்பளிப்பு என்பது ஒரு பகல் ஓர் இரவு செய்யும் விருந்தோம்பலாகும். பொதுவான விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேலுள்ள (உபசரிப்பான)து தர்மமாக அமையும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

விருந்தினரை கௌரவிப்பது முஸ்லிமுக்கு விருப்பமான உயரிய நற்செயலாகும். அதில் முஸ்லிம் நன்மையளிக்கப்படுகிறார். விருந்தோம்பலுக்கென இஸ்லாம் சில கட்டுப்பாடுகளையும், வரம்புகளையும் நிர்ணயித்துள்ளது. விருந்தின் அன்பளிப்புக் காலம் ஒரு நாளாகும். பிறகு கடமையான விருந்தோம்பல் மூன்று நாளாகும். அதற்கதிகமாக அளிக்கப்படும் நாட்கள் தர்மமாகி, விருந்தளித்தவன் செயலேட்டில் நன்மைகளாக பதியப்படுகின்றன.

இஸ்லாமில் விருந்தினரை கௌரவிப்பது அவரது விருப்பத்திற்கு உட்பட்டதல்ல. மாறாக, இறைத்தூதரின் கட்டளையாகும். அவரது இல்லத்திற்கு விருந்தினர் எவரேனும் வந்தால், விரைந்து சென்று அவருக்குரிய ஏற்பாடுகளைச் செய்து கண்ணியப்படுத்துவது முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘விருந்தினரை இரவு தங்க வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். அவரது முற்றத்தில் அந்த விருந்தினர் காலையிலும் இருந்தால் அந்த விருந்தாளியை உபசரிப்பது முஸ்லிமின் மீது கடனாக ஆகும். விருந்தாளி விரும்பினால் அதைப் பெற்றுக்கொள்வார். விரும்பினால் அதை விட்டு விடுவார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

விருந்தினரின் வருகையால் தனது இதயம் சுருங்கிப்போய் மன நெருக்கடிக்கு உள்ளாகி, அவர்களைத் தவிர்க்க தனது வாசலை மூடிக்கொள்பவனிடத்தில் எவ்வித நன்மையும் இருக்காது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘விருந்தளிக்காதவனிடம் எந்த நன்மையுமில்லை.'' (முஸ்னத் அஹ்மத்)

விருந்தோம்பலை இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாக்கி, அது விருந்தினருக்கான உரிமை எனவும் பறைசாற்றுகிறது. அதைக் குறைவின்றி நிறைவேற்றுவது முஸ்லிமின் கடமையாகும். கருமித் தனத்தின் கோரப் பிடியில் சிக்குண்ட ஒரு சமூகம் விருந்தினர்களின் உரிமையை நிறைவேற்றவில்லையெனில் அம்மனிதர்களிடமிருந்து விருந்தாளி தனக்குரிய உரிமையைத் தானே எடுத்துக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதிக்கிறது.

உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களை ஒரு கூட்டத்தனரிடம் அனுப்பி வைக்கிறீர்கள். அவர்களிடம் செல்கிறோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு விருந்தளிப்பதில்லை. இவர்கள் விஷயத்தில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நீங்கள் ஒரு சமுதாயத்தவரிடம் சென்று விருந்தினருக்குரிய கடமைகள் உங்களுக்கு நிறைவேற்றப்பட்டால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அதை அவர்கள் செய்யவில்லையெனில், அவர்களது தகுதிக்கேற்றவாறு விருந்தினருக்குரிய உரிமைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

விருந்தோம்பல் முஸ்லிமின் இயற்கைப் பண்பாகும். சிறந்த முஸ்லிமி டம் விருந்தோம்பலில் கஞ்சத்தனத்தைக் காண முடியாது. அவர் எத்த கைய சூழ்நிலையில் இருப்பினும் சரியே. ஏனெனில் இருவருடைய உணவு மூவருக்குவும், மூவரின் உணவு நால்வருக்கும் போதுமானதெனவும் இஸ்லாம் அவருக்கு போதித்துள்ளது. எனவே திடீரென விருந்தினர் வருகை தருவது அவருக்குக் கொஞ்சமும் சிரமமாகத் தோன்றாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமான தாகும். இருவருடைய உணவு நால்வருக்குப் போதுமாகும். நால்வருடைய உணவு எட்டு நபருக்குப் போதுமானதாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

முஸ்லிம், தனது உணவை அதிகமான கரங்கள் எடுத்து உண்பதைப் பற்றி சிறிதும் அச்சம் கொள்ளமாட்டார். ஆனால் மேற்கத்திய நிலை அவ்வாறல்ல. அவன் திடீரென எந்தவொரு விருந்தினரையும் வரவேற்கமாட்டான். முன்கூட்டியே அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தால்தான் விருந்தினரை வரவேற்கும் துணிச்சல் அவனுக்கு ஏற்படும். முஸ்லிமோ திடீர் விருந்தினரையும் மகிழ்வுடன் வரவேற்று தனது உணவில் அவரையும் கூட்டாக்கி ஆனந்தமடைவார். தான் சாப்பிட வேண்டிய சில கவளங்கள் குறைந்து போவது அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. அல்லாஹ்வும், அவனது தூதரும் கௌரவிக்குமாறு உத்தரவிட்ட விருந்தினரைப் புறக்கணிப்பதைவிட, தான் பசியோடு இருந்து விடுவதே அவருக்கு மிக எளிதாகத் தோன்றும்.
மேலும் அல்லாஹ் அவரது உணவில் அபிவிருத்தியை அருள்கிறான். அதன் காரணமாக ஒருவருடைய உணவு இருவரை திருப்திப்படுத்துகிறது. மகத்துவமிக்க கருணையாளனான அல்லாஹ் இருவருக்குரிய உணவில் அபிவிருத்தியை அருள்கிறான். அதன் காரணமாக அது நால்வருக்கு மன நிறைவை அளிக்கிறது. இதனால் மனம் குறுகிப்போன மேற்கத்திய மனிதனைப் போன்று முஸ்லிமின் மனம் சுருங்கிப் போகாது. இந்தக் குறுகிய மனப்பான்மை பொருளியலை மையமாகக் கொண்ட அனை வருக்கும் பொதுவானதாகும். அது கிழக்கத்தியராக இருந்தாலென்ன, மேற்கத்தியராக இருந்தாலென்ன?
நமது மேன்மைக்குரிய முன்னோர்கள் விருந்தினரை உபசரிப்பதில் அழகிய முன்மாதிரியைக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் விருந்தினரை கண்ணியப்படுத்துவதற்கு கையாண்ட முறைகளைக் கண்டு அல்லாஹ் ஆச்சரியமடைந்தான். இது விஷயத்தில் நாம் ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தங்களிலுள்ள ஹதீஸ் ஒன்றைக் காண்போம்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியரிடம் ஆளனுப்பி (உணவு இருக்கிறதா என) விசாரித்து வரச் சொன்னார்கள். அவர்கள் அனைவரும் வீட்டில் தண்ணீர் மட்டுமே இருக்கிறது என்று கூறிவிட்டனர். அப்போது சபையிலிருந்தோரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் இவருக்கு உணவளிப்பவர் யார்?'' என்றார்கள். அப்போது ஓர் அன்சாரித் தோழர் எழுந்து ‘‘நான் உணவளிக்கிறேன்'' என்று கூறி (அவருடன்) தனது இல்லம் வந்தார்.
தனது மனைவியிடம் ‘‘நபி (ஸல்) அவர்களின் விருந்தாளியை கண்ணியப்படுத்து'' என்றார். அவரது மனைவி ‘‘நமது இரு பிள்ளைகளுக்கு மட்டுமே உணவிருக்கிறது'' என்றார். அவர் ‘‘அந்த உணவை எடுத்து வைத்துவிட்டு, குழந்தைகள் உணவைக் கேட்டால் அவர்களை தூங்கச் செய்துவிடு'' என்றார். அப்பெண்மணி உணவைத் தயார் செய்து விளக்கேற்றி வைத்தார். குழந்தைகளை உறங்க வைத்துவிட்டு அந்த விளக்கை சரிசெய்வது போல அணைத்து விட்டார். இருட்டில் அந்த விருந்தினருக்கு உணவை வைத்துவிட்டு கணவரும் மனைவியும் சாப்பிடுவது போன்று பாவனை செய்தார்கள். விருந்தினர் திருப்தியாகப் பசியாற இருவரும் பசியுடன் உறங்கச் சென்றனர். அவர் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள் கூறினார்கள்: ‘‘இரவில் உங்கள் விருந்தினர் விஷயத்தில் நீங்கள் இருவரும் நடந்துகொண்ட முறையைக் கண்டு அல்லாஹ் ஆச்சரியமடைந்தான். மேலும் அல்லாஹ் அருளினான்:
...தங்களுக்கு அவசியம் இருந்த போதிலும் தங்களுடைய பொருளை அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றார்களோ அத்தகையோர்தாம் வெற்றி பெற்றோர்கள்.'' (அல்குர்ஆன் 59:9)
என்ற இந்த வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.
முஸ்லிம் அறிவாளியாகவும் விவேகமானவராகவும் இருப்பார். அவர் தனது சகோதரரிடம் விருந்தாளியாகச் சென்றால் அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தி அவர் விருந்தினரை சுமையாகக் கருதும் வகையில் நடந்து கொள்ளமாட்டார்.

இஸ்லாமின் உயிரோட்டம் அவரது உதிரத்தில் ஓடிக் கொண்டிருப் பதால் இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியை, அவர்கள் கற்றுக் கொடுத்த கட்டுப்பாடுகளை மனதில் ஏற்று தன்னை சீர்படுத்திக் கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள்: ‘‘ஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் அவரை பாவத்தில் ஆழ்த்திவிடுமளவு (விருந்தாளியாக) தங்கக் கூடாது'' என்று கூறினார்கள். நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவரை எவ்வாறு பாவத்தில் ஆழ்த்துவார்?'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரிடத்தில் (விருந்தாளியாகத்) தங்குவார். இவருக்கு விருந்தளிக்கக்கூடிய எந்தவொரு வசதியும் அவரிடம் இருக்காது'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘தனது சகோதரரிடம் அவரை சிரமப்படுத்துமளவு தங்குவது முஸ்லிமுக்கு ஆகுமானதல்ல.'' (ஸஹீஹுல் புகாரி)

பாவமாக இருந்தாலென்ன, சிரமப்படுத்துவதாக இருந்தாலென்ன? உண்மை முஸ்லிம் தனக்கு விருந்தளிக்கும் சகோதரரை அதில் வீழ்த்துவதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.
விருந்தாளியாகச் செல்லும் முஸ்லிம் நற்பண்புடையவராக இருப்பார். அவர் விருந்தாளியாகச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்புகளை அவருக்கு இஸ்லாம் போதித்துள்ளது. அதனால் விருந்தளிப் பவரிடம் மிகக் கவனமாக, விவேகத்துடன் நடந்து, சிரமமளிக்காமல், அவன் விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்வார்.
 

தன்னைவிட பிறருக்கு முன்னுரிமையளிப்பார்

இஸ்லாமின் புனித நீருற்றுகளில் தாகம் தீர்த்துக் கொள்ளும் உண்மை முஸ்லிம், தனது வறுமையிலும் தன்னைவிடப் பிறரை முன்னிலைப் படுத்துவார். இஸ்லாம் தனது உறுப்பினர்களின் உள்ளங்களில் பிறரைத் தேர்ந்தெடுக்கும் பண்பை விதைத்துள்ளது. அது முஸ்லிமின் இயல்பான பண்பாகக் பணமிக்கிறது. அப்பண்பின் மூலமே பிற மனிதர்களைவிட முஸ்லிம் தனித்தன்மை பெற்றவராகிறார்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின், மதீனாவாசிகளான அன்சாரிகள் இப்பண்பில் தலைசிறந்தவர்களாகத் திகழ்ந்தனர். அவர்களது விஷயத்தில் இறைவசனங்கள் அருளப்பெற்றன. அதனால் மனிதகுல வரலாற்றில் என்றென்றும் ஒளிவீசும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந் தார்கள். அவர்கள் தர்மம் என்றால் என்ன, தன்னைவிட பிறரைத் தேர்ந் தெடுப்பது எப்படி என்பதையும் மனிதகுலத்துக்குக் கற்றுக்கொடுக்கும் போதனையாளர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடைய சகோதரர்களான முஹாஜிர்கள் தங்களது தாயகத்தைத் துறந்து அகதிகளாக வந்தபோது இப்பண்புகள் அன்சாரிகளிடம் வெளிப்பட்டது. தங்களிடமிருந்த அனைத்தையும் முஹாஜிர்களுக்குக் கொடுப்பதில் பேரானந்தம் அடைந்தார்கள்.

முஹாஜிர்கள் தங்களிடம் வருவதற்கு முன்னதாகவே (மதீனாவில்) வீட்டையும் அமைத்துக்கொண்டு விசுவாசத்தையும் ஏற்றுக் கொண்டார்களோ அவர்களுக்கும் அதில் பங்குண்டு. இவர்கள் ‘ஜ்ரத்' செய்து தங்களிடம் வருவோரை அன்பாக நேசித்து வருவதுடன் (எவரும் தங்களுக்குக் கொடுக்காது) அவர்களுக்கு (மட்டும்) கொடுப்பதைப் பற்றி தங்கள் மனதில் ஒரு சிறிதும் பொறாமை கொள்ளாதும், தங்களுக்கு அவசியம் இருந்த போதிலும் தங்களுடைய பொருளை அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றார்களோ அத்தகையோர்தாம் வெற்றி பெற்றோர்கள். (அல்குர்ஆன் 59:9)

நபி (ஸல்) அவர்களின் வாழ்வு முழுவதும் பிறரைத் தேர்ந்தெடுப்பதாகவே இருந்தது. முஸ்லிம்களின் முதல் தலைமுறையின் இதயங்களில் இக்கருத்தை ஆழப் பதித்திருந்தார்கள். அவர்களது பழக்க வழக்கங்களில் அப்பண்பை ஊடுருவச் செய்தார்கள்.
ஸஹ்ல் இப்னு ஸஃது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கையினால் நெய்யப்பட்ட ஒரு போர்வையைக் கொண்டு வந்து, ‘‘இந்த ஆடையை உங்களுக்கு அணிவிக்க வேண்டும் என்பதற்காக எனது கரங்களால் நெய்தேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்களும் தங்களது தேவையைக் கருதி அதைப் பெற்றுக் கொண்டார்கள். எங்களிடம் வந்தபோது அதைத் தனது கீழாடையாக அணிந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘எவ்வளவு அழகாக இருக்கிறது. எனக்கு அதைத் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘சரி'' என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சபையில் அமர்ந்திருந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று அதைக் கழற்றி மடித்து அம்மனிதரிடம் அனுப்பி வைத்தார்கள். மற்றவர்கள் அம்மனிதரிடம், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு அந்த ஆடை தேவையாக இருந்தது. அவர்கள் எதைக் கேட்டாலும் மறுக்க மாட்டார்கள் என்பதை நன்கறிந்த நிலையில் நீ செய்தது அழகல்ல'' என்று கூறிக் கண்டித்தார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அணிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அதைக் கேட்கவில்லை. எனக்கு கஃபனாக இருக்கவே அதைக் கேட்டேன்'' என்று கூறினார். ஸஹ்ல் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘அந்த ஆடை அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் காணப்பட்ட பிறரைத் தேர்ந்தெடுக்கும் மனப்பான்மையைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். பசி, பஞ்சம் ஏற்படும் காலங்களிலும் அந்த நபித்தோழர்களிடம் இந்த மகத்தான பண்பு வெளிப்பட்டது.

இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அஷ்அ கிளையைச் சேர்ந்தவர்கள் போரினால் பாதிக்கப்பட்டாலோ உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டாலோ மதீனாவில் அவர்கள் அனைவரும் தங்களிடமுள்ள உணவுகளை ஒரு துணியில் கொண்டு வந்து கொட்டு வார்கள். பிறகு அனைவரும் ஒரே வகையான பாத்திரத்தின் மூலம் சமமாகப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னில் உள்ளவர்கள். நான் அவர்களில் ஒருவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) 


கடன் சுமையை அகற்றுவார்

உண்மை முஸ்லிம் தர்ம சிந்தனையும், நற்பண்பையும் பின்பற்றி அழகிய முறையில் பிறரிடம் கொடுக்கல்-வாங்கல் வைத்துக் கொள்வார். கடன் பெற்று வறுமையில் இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைக் கேற்ப உதவி செய்வார்.

அன்றி (கடன் பெற்றவன் அதனைத் தவணைப்படி தீர்க்க முடியாமல்) அவன் கஷ்டத்திலிருந்தால் (அவனுக்கு) வசதி ஏற்படும் வரையில் எதிர் பார்த்திருங்கள். (அல்குர்ஆன் 2:280)

தனக்குரியதை வசூல் செய்வதற்கு முன்னால் முஸ்லிம், மனித குலத்துக்குப் பயன்படும் சிறந்த மனிதராகத் திகழ வேண்டும் என்பதைத் தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது. தன்னிடம் கடன் வாங்கியவர் சிரமத்தால் குறித்த தவணையில் திருப்பித் தர முடியாமல் தவணையை நீட்டிக்கும்படி அல்லது கடன் தொகையில் ஒரு பகுதியைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டால் தனது இரட்சகனின் உத்தரவுக்கு அடிபணிந்தவராக அக்கோரிக்கையை மனமுவந்து ஒப்புக் கொள்வார். அதன்மூலம் மறுமை நாளின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்று, அல்லாஹு தஆலாவின் நிழலில் ஒதுங்கிக் கொள்ளும் பாக்கியத்தைப் பெறுவார். அந்நாளில் அர்ஷின் நிழலைத் தவிர வேறு எந்நிழலும் இருக்காது.

அபூ கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: ‘‘மறுமை நாளின் துன்பங்களிலிருந்து அல்லாஹ் தன்னைக் காப்பாற்ற வேண்டுமென ஆசைப்படுபவர் கடனால் சிரமப்படுபவன் கடனை நீக்கிவிடட்டும் அல்லது குறைத்துக் கொள்ளட்டும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்) 
(அதாவது இவரது கடனாக இருந்தால் அதை முற்றிலும் அல்லது சிறிதளவையாவது மன்னித்து விடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அது பிறரின் கடனாகயிருந்தால் கடன்பட்டவருக்கு கடனை அடைக்க தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருளியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘ஒருவர், கடனால் சிரமப்படுபவருக்கு (கடனை நிறைவேற்ற) அவகாசம் அளித்தால், அல்லது அதைக் குறைத்தால் அல்லாஹ் தனது அர்ஷின் நிழலில் அவருக்கு இடமளிப்பான். அந்த நாளில் அர்ஷின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இருக்காது.'' (ஸுனனுத் திர்மிதி)

இக்கருத்தை வலியுறுத்தும் ஏராளமான சான்றுகள் ஹதீஸ் கிரந்தங்களில் காணக்கிடைக்கின்றன. கடனால் துன்பப்படுவோரின் சிரமங்களை அகற்றுவோரின் நற்செயலை அல்லாஹ் வீணாக்கிவிடாமல் அவர்களது பதிவேட்டில் பதிந்து, மகத்தான பிரதிபலனை வழங்குகிறான். அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறான். சிரமங்களை அகற்றுகிறான், மகத்தான இரட்சகனின் முன்னிலையில் அனைத்து மக்களும் நிறுத்தப்படும் அந்நாளில் அம்மனிதனை திடுக்கத்திலிருந்து பாதுகாக்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் அருளியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘(முற்காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து வந்தார். அவர் தனது ஊழியரிடம், ‘‘நீ சிரமப்படுவோடம் செல்லும்போது (அவர்கள் கடனை திரும்பச் செலுத்தாமல் தாமதம் செய்தால்) மன்னித்து விட்டுவிடு! அல்லாஹ் நமது குற்றங்களை மன்னித்து விடலாம்'' என்று கூறுபவராக இருந்தார். அவர் (மரண மடைந்து) அல்லாஹ்வை சந்தித்தபோது அல்லாஹ் அவரது குற்றங்களை மன்னித்தான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் அருளியதாக அபூ மஸ்வூது அல் பத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னாலிருந்த சமுதாயத்தில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் சமூகத்தில் விசாரணை செய்யப்பட்டார். அவரிடம் எந்த நன்மையும் இருக்கவில்லை. ஆனால் அவர் செல்வந்தராகவும் மனிதர்களுடன் (கடன், மற்றும் வியாபாரத்தில்) கலந்துறவாடி வந்தார். (கடன் வசூலிக்கச் செல்லும்) தனது ஊழியரிடம் துன்பப்படுவோரின் கடன்களை தள்ளுபடி செய்துவிடுமாறு உத்தரவிடுபவராக இருந்தார். அல்லாஹ் ‘‘சிரமப்படுவோரின் துன்பங்களை அகற்றுவதில் அவரைவிட நான் மிக தகுதியானவன் என்று கூறி, அவரது பாவங்களை நீக்கிவிடுங்கள்'' என மலக்குகளுக்கு கட்டளையிட்டான். (ஸஹீஹ் முஸ்லிம்)

ஹுதைஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் செல்வங்களைக் கொடுத்திருந்த ஒரு அடியார் அல்லாஹ்வின் சமூகத்திற்கு கொண்டுவரப்பட்டார். அல்லாஹ் அவரிடம், ‘‘உலகில் என்ன அமல்களைச் செய்தாய்?'' என்று கேட்டான். -ஜனங்கள் எதையும் அல்லாஹ்விடம் மறைக்க முடியாது- அவர் ‘‘எனது இரட்சகனே! எனக்கு உனது செல்வத்தை கொடுத்திருந்தாய். நான் மக்களிடம் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். மன்னித்து விட்டுக் கொடுத்தல் எனது பண்பாக இருந்தது. வசதியானவரிடம் மென்மையாக நடந்து கொண்டேன் (கடன் பெற்று) சிரமப்படுவோருக்கு அவகாசமளித்தேன்'' என்று கூறினார். மகத்துவமிக்க அல்லாஹ் கூறினான்: ‘‘அப்பண்புகளுக்கு உன்னைவிட நான் மிக உரித்தானவன். எனது அடியாரிடமிருந்து (பாவங்களை) அகற்றிவிடுங்கள்'' (என மலக்குகளுக்கு உத்தரவிட்டான்). உக்பா இப்னு ஆமிர் (ரழி), அபூமஸ்வூத் அல் அன்சாரி (ரழி) ஆகிய இருவரும் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் நாங்கள் கேட்டிருக்கிறோம் என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)


மனதாலும் யாசிக்க மாட்டார்

உண்மை முஸ்லிம் மனநிறைவுடன் வாழ்வார். பிறரிடம் கையேந்தாமல் தன்னைப் பேணிக் கொள்வார். அவரைத் துன்பமும் நெருக்கடியும் சூழ்ந்து கொண்ட நிலையிலும் தனக்கு உபகாரம் செய்பவர்களைத் தேடி அவர்களது வாசல் முன் நிற்காமல் மன உறுதியுடன் பொறுமையைக் கைக்கொள்வார்.

ஏனெனில், இவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொண்டு பொறுமை யுடனும், சகிப்புத் தன்மையுடனும் தன்னைப் பேணி கொள்ள வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. அப்போது அவருக்கு அல்லாஹ் செல்வத்தையும், பொறுமையையும், பேணுதலையும் வழங்குபவனாக இருக்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவர் பாவத்திலிருந்து தன்னைப் பாதுகாக்க முயற்சிக்கிறாரோ அல்லாஹ் அவரை பாதுகாக்கிறான். எவர் மனநிறைவடைகிறாரோ அல்லாஹ் அவரை சுபிட்சப்படுத்துகிறான். எவர் பொறுமையை மேற்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் அதன் நற்கூலியைத் தருகிறான். பொறுமையைவிட விசாலமான அல்லது சிறந்த அருட்கொடை எந்த மனிதருக்கும் அருளப்படவில்லை.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இஸ்லாம் வசதி படைத்தவர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிமையை வழங்கியுள்ளது. அதை அவர்கள் சொல்லிக் காட்டாமலும், நோவினை தரும் வார்த்தைகளைக் கூறாமலும், தயங்காமல் நிறைவேற்றும் அதே நேரத்தில், ஏழைகள் அந்த உரிமையை எதிர்பார்த்து, ஏங்கி, கையேந்தி நிற்காமல், தங்களைப் பேணிக்கொள்ள வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. தாழ்ந்திருக்கும் கரத்தைவிட உயர்ந்து நிற்கும் கரமே மேலானது என இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது. உண்மை முஸ்லிம் எந்த நிலையிலும் தனது கரம் தாழ்ந்து விடக்கூடாது என்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவதுதான் அவருக்குத் தகுதியானதும், அவரது கௌரவத்துக்கு மிக ஏற்றமானதுமாகும். குறைவான வசதியை உடையவர்கள் பிறரின் தர்மத்தை எதிர் பார்க்காமலும், அதைச் சார்ந்திருக்காமலும் தங்களது உழைப்பை அதிகப்படுத்தி தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். இப்போதனையின் மூலம் இஸ்லாம் மனிதர்களின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்கிறது.

நபி (ஸல்) அவர்கள், மிம்பரில் நின்றவர்களாக தான, தர்மத்தையும் பிறரிடம் தேவையாகாமல் இருப்பது பற்றியும் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தபோது பின்வரும் அறிவிப்பைச் செய்தார்கள். ‘‘தாழ்ந்து நிற்கும் கரத்தைவிட உயர்ந்த கரமே மேலானது. உயர்ந்த கரம் என்பது (தான தர்மத்தில்) செலவிடக்கூடியது. தாழ்ந்த கரம் என்பது யாசிக்கும் கரம்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)


நேசிப்பார், நேசிக்கப்படுவார்

மார்க்க நேர்வழியின் பிரகாசத்தைப் பெற்றுள்ள முஸ்லிம் மென்மையானவராகவும், நேசிப்பவராகவும், நேசத்திற்கு உரியவராகவும் இருப்பார். அவர் பிறரை நேசித்து இணைந்திருந்து அவர்களிடம் அன்பையும் பரிவையும் வெளிப்படுத்துவார். பிறரும் அவரை நேசித்து அவருடன் நல்லுறவு கொண்டு அவர் மீது அன்பையும் பரிவையும் வெளிப்படுத்துவார்கள். இதுதான் தனது மார்க்கத்தின் தூதுத்துவத்தைப் பேணி வரும் முஸ்லிம்களின் சமுதாய அமைப்பின் தனித் தன்மையாகும். சமூகத்தில் மக்களுடன் இணைந்து அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றிருப்பது முஸ்லிமின் தலையாயக் கடமைகளில் ஒன்றாகும். அதுவே அம்மக்களை சத்திய வார்த்தையையும் அதன் மேலான மாண்புகளையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான உறுதியான வழிமுறையாகும்.

ஏனெனில், மனிதர்கள் தங்களது நம்பிக்கைக்கும் நேசத்திற்கும் உரியவர்களின் வார்த்தைகளுக்கே செவிசாய்ப்பார்கள் ஒப்புக் கொள்வார்கள். அவ்வாறே தாங்கள் நேசிக்காத, அன்பு செலுத்தாத வர்களின் வார்த்தைகளை நம்பமாட்டார்கள். நேசிப்பதையும், நேசிக்கப்படுவதையும் வலியுறுத்தும் நபிவழிச் சான்றுகள் ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன. 

இப்பண்புடையவர்கள், சிறந்த கூட்டத்தினர், மறுமையில் நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமானவர்கள், நெருக்க மானவர்கள் என்பதை அச்சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன.

நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு உங்களில் மிகவும் நேசத்திற்குரியவரும் மறுமை நாளில் எனது சபையில் உங்களில் மிக நெருங்கியவருமான மனிதரைப் பற்றி உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?'' என்று இரண்டு அல்லது மூன்று முறை கேட்டார்கள். தோழர்கள், ‘‘அறிவித்துத் தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் நற்குணமுடையவர்'' எனக் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், ‘‘பிறரை நேசிக்கும், பிறரால் நேசிக்கப்படும் மென்மையான பண்புடையவர்கள்'' என்று கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (முஸ்னத் அஹ்மத்)

பிறரை நேசித்து பிறரால் நேசிக்கப்படுவது முஸ்லிமின் பண்பாகும். மனிதர்களை அவர் விரும்புவார். மனிதர்களும் அவரை விரும்புவார்கள். அவர் மனிதர்களைப் புறக்கணிக்கமாட்டார். அவர்களும் அவரைப் புறக்கணிக்கமாட்டார்கள். முஸ்லிம் இத்தன்மைகளை உடையவராக இல்லையெனில், அவர் அழைப்புப் பணியை நிறைவாகச் செய்ய இயலாது. அவரது கட்டளைகள் மதிக்கப்படாமல் அலட்சியம் செய்யப்படும். அவரால் சமூகத்திற்கு எந்தவொரு நன்மையும் கிடைக்காமல் போய்விடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘முஃமின் நேசிப்பவராக, நேசிக்கப்படுபவராக இருப்பார். நேசிக்காத, நேசிக்கப்படாத மனிதரிடம் எந்தவொரு நலவும் கிடையாது.'' (முஸ்னத் அஹ்மத்)

பிற மனிதர்களுடன் நன்னடத்தையை மேற்கொள்வதிலும் இதயங்களை வெற்றி கொள்வதிலும் நபி (ஸல்) அவர்கள் அழகியதோர் முன்மாதிரியைக் காட்டித் தந்துள்ளார்கள். பிறரிடம் சொல், செயல், நடத்தையில் மென்மையைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தினார்கள். 

நேசத்தாலும், அன்பாலும் மனிதர்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கான எளிதான அணுகுமுறைகளை வகுத்தளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் மலர்ந்த முகமும் மென்மையான அணுகுமுறையும் கொண்டு எளிமையாகத் திகழ்ந்தார்கள். எந்த நிலையிலும் கடுமையை வெளிப்படுத்தியதே இல்லை. ஒரு சபைக்குச் சென்றால் அதன் ஓரத்தில் அமர்ந்து கொள்வார்கள். இவ்வாறே அமருமாறு பிறரையும் ஏவுவார்கள். சபைம்லிருப்பவர்கள் ஒவ்வொரு வருக்கும் அவர்களுக்குரிய அந்தஸ்தை வழங்குவார்கள். சபையோல் ஒவ்வொருவர் மனதிலும் தன்னைவிட அதிகமாக வேறெவரையும் நபி (ஸல்) அவர்கள் மதிக்கவில்லை என்ற எண்ணத்தை விதைத்திடுவார்கள். தன்னிடம் உதவி கேட்போருக்கு உதவி செய்வார்கள். அல்லது மென்மையான வார்த்தைகளால் ஆறுதல் கூறுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனது நற்பண்புகளாலும், விசால மனதாலும் மனிதர்களைக் கவர்ந்து அம்மக்களின் தந்தையாகத் திகழ்ந்தார்கள். அம்மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரே மாதிரியான சமத்துவ உரிமையைப் பெற்றிருந்தார்கள். இறையச்சத்தால் மட்டுமே ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களிடையே நீதம் செலுத்துபவர்களாக, பணிவுடையவர்களாக, முதியோரை மதித்து சிறியோருக்கு அன்பு செலுத்துபவர்களாக, வறியோரைப் பாதுகாத்து, தேவையின்போது தம்மை விட பிறரைத் தேர்ந்தெடுக்கும் பண்புடையவர்களாகவும் திகழ்ந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் ஆதரவு தேடியவர்களை நிராசையடையச் செய்ததில்லை. அவர்கள் தர்க்கம் செய்வது, அதிகம் பேசுவது, தனக்குத் தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது என்ற இம்மூன்று செயல்களிலிருந்தும் விலகியிருந்தார்கள். அவர்கள் பிறர் விஷயத்தில் மூன்று விஷயங்களை தவிர்ந்திருந்தார்கள். எவரையும் இழிவுபடுத்தியதில்லை. குறை கூறியதில்லை. எவருடைய குற்றம் குறைகளையும் தோண்டித் துருவி ஆராய்ந்ததில்லை. நன்மையான விஷயங்களை மட்டுமே பேசுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பேசத் தொடங்கினால் தங்களது தலை மீது பறவை அமர்ந்திருப்பது போன்று தோழர்கள் அமர்ந்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் மௌனம் காத்தால் பேசத் தொடங்குவார்கள். நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் தர்க்கம் செய்யமாட்டார்கள். தோழர்கள் சிக்கும் விஷயங்களில் தானும் சித்து அவர்களது ஆச்சரியத்தில் தானும் பங்கெடுத்துக் கொள்வார்கள். அறிமுகமற்றவர்களின் கடினத் தன்மையை சகித்துக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்: ‘‘நீங்கள் தேவை உடையவரைக் கண்டால் அவருக்கு உதவி செய்யுங்கள்.'' நபி (ஸல்) அவர்கள் பிரதியுபகாரம் செய்பவரைத் தவிர பிறர் பாராட்டினால் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தன்னிடம் உரையாடுபவன் பேச்சை அவரே நிறுத்திக் கொள்ளாதவரை அல்லது அவர் எழுந்து செல்லாதவரை அந்த உரையாடலை நிறுத்திக் கொள்ளமாட்டார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் தீயவர்களிடமிருந்து விலகிக் கொள்வார்கள். அவர்களை தங்களது மென்மையான வார்த்தைகளாலும் நன்னடத்தையாலும் ஈர்ப்பார்கள். நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க ஒரு மனிதர் அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவருக்கு அனுமதி அளியுங்கள்! இவன் குடும்பத்தில் மிகக் கெட்டவன்'' என்றார்கள்.
அம்மனிதர் உள்ளே நுழைந்தபோது அவரிடம் மென்மையாக உரையாடினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (அவரைப் பற்றி) ஏதேதோ கூறினீர்கள். பின்பு அவருடன் மென்மையாக உரையாடி னீர்களே!'' என்று கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆயிஷாவே! மனிதர்களில் மிகக் கெட்டவன் அவனது கீழ்த்தரமான நடத்தைக்கு அஞ்சி மக்களால் புறக்கணிக்கப்படுபவனே'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இதன் கருத்து: எந்தத் தீயவரையும் நாம் ஒதுக்கி வைத்திடக்கூடாது. அவரை அணுகி அவருக்கும் நல்வழி காட்ட வேண்டும்.

முஸ்லிம் நல்லவர், கெட்டவர் எனப் பிற மனிதர்களுடன் உறவாடும் விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையைப் பின்பற்றுவார். மக்கள் அனைவராலும் நேசிக்கப்படும் நல்லவராகத் திகழ்வார்.

இஸ்லாமை அளவுகோலாகக் கொண்டு தனது பழக்கங்களை சீர்படுத்திக் கொள்வார்
மார்க்கப் பற்றுள்ள உண்மை முஸ்லிமைப் பிரித்துக் காட்டும் மிக முக்கியமான பண்பு என்னவெனில், தான் சமூகத்தில் காணும் அனைத்து பழக்க வழக்கங்களையும் இஸ்லாமென்னும் அளவுகோலால் நிறுத்துப் பார்ப்பதாகும். இதன் காரணமாகத்தான் அவன் சமூகப் பண்புகள் அனைத்தும் இஸ்லாமின் கொள்கைகளையும் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம் தங்க மோதிரம் அணியமாட்டார். ஏனெனில் ஆண்கள் தங்க மோதிரம் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். அவர்கள் தங்க மோதிரம் அணிந்த ஒரு மனிதரைக் கண்டபோது, ‘‘தகிக்கும் நெருப்புக் கங்கை தனது கரத்தில் வைக்க உங்களில் ஒருவர் விரும்புவாரா?'' என்று கூறி கண்டித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

பின்பு நபி (ஸல்) அவர்கள் அந்த மோதிரத்தை அவரது விரலிலிருந்து கழற்றி தரையில் வீசி எறிந்தார்கள். அந்த இடத்தில் அல்லாஹ் மற்றும் அவனது தூதருக்குக் வழிப்படுவதற்கான ஆர்வம் அம்மனிதரிடம் வெளிப்பட்டது. அவரது தோழர்கள் அவரிடம் ‘‘உன் மோதிரத்தை எடுத்துக்கொள். அதை விற்றுப் பலனடையலாமே'' என்று கூறியபோது அவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறு செய்ய மாட்டேன். அல்லாஹ்வின் தூதர் வீசி எறிந்த அந்த மோதிரத்தை எனது கரத்தால் தொடமாட்டேன்'' என்று கூறினார். (ஸஹீஹ் முஸ்லிம்)

உண்மை முஸ்லிம் தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. பட்டுத் துணிகளை அணியக்கூடாது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதைத் தடை செய்துள்ளார்கள்.

ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஆண்கள்) சாதாரணப் பட்டையும், அலங்காரப் பட்டையும் அணிவதி லிருந்தும் தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவதிலிருந்தும் எங்களைத் தடுத்தார்கள். மேலும் ‘‘அவை இந்த உலகில் அவர் (காஃபிர்)களுக்கு உயன. அவை மறுமையில் உங்களுக்கு உயனவாகும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘வெள்ளிப் பாத்திரத்தில் பானங்களைக் குடிப்பவன் அவனது வயிற்றினுள் மிடறு மிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் காணப்படும் ஓர் அறிவிப்பில் வருவதாவது: ‘‘தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் சாப்பிடுபவர் அல்லது குடிப்பவர்'' (மற்றொரு அறிவிப்பில்) ‘‘தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் பானம் அருந்துபவர் தனது வயிற்றில் நரக நெருப்பையே விழுங்குகிறார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டதாக உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘எவருக்கு மறுமையில் எவ்வித பாக்கியமும் இல்லையோ அவரே (உலகில்) பட்டாடை அணிவார்.'' (ஸஹீஹுல் புகாரி)

அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் பட்டாடையை எடுத்தார்கள். அதைத் தனது வலக்கரத்திலும், பின்பு தங்கத்தை எடுத்து அதை இடக்கரத்திலும் வைத்துக் கொண்டதை நான் கண்டேன். பிறகு கூறினார்கள் ‘‘இந்த இரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்கு விலக்கப்பட்டதாகும்.'' (ஸுனன் அபூதாவூத்)

அபூமூஸா அல் அஷ்அ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘பட்டாடை அணிவதும், தங்கமும் எனது உம்மத்தவல் ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெண்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)

ஹுதைஃபா (ரழி) கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் சாப்பிடுவதையும், குடிப்பதையும் சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டாடை அணிவதையும், அவைகளின் மீது நாங்கள் அமர்வதையும் எங்களுக்குத் தடை செய்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

உண்மை முஸ்லிம் கண்ணியத் தூதரின் உத்தரவுக்குக் கட்டுப்படும் வகையில் இவ்வாறான செயல்களிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்வார். விலக்கப்பட்டதற்கான காரணம் என்ன? அது பொருளியல் சார்ந்ததா? ஆன்மீக ரீதியானதா? எனத் தெரிந்து கொள்வதற்கு முன்பே நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து விடுவார்.

..... ஆகவே (நம்முடைய) தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை உங்களுக்குத் தடுத்துக் கொண்டாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்... (அல்குர்ஆன் 59:7)

மேற்கத்தியர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றும் விதமாக பெண் பேசும் போதும், திருமணத்தின் போதும் நடத்தப்படும் சடங்குகளிலிருந்து முஸ்லிம் முற்றிலும் விலகிக் கொள்வார். 

நிச்சயதார்த்தத்தின்போது வலக்கரத்தில் அணிவிக்கப்பட்ட மோதிரத்தை முதலிரவின்போது இடது கரத்துக்கு மாற்றிக்கொள்வது, திருமண ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வதற்காக அந்நிய ஆண்களை புகைப்படம் எடுக்க அனுமதிப்பது போன்ற மார்க்கத்துக்கு முற்றிலும் எதிரான சடங்குகளிலிருந்தும் உண்மை முஸ்லிம் விலகிக் கொள்வார். இவ்வாறான மேற்கத்தியரின் சமூக அமைப்பில் பெரிதும் மதிக்கப்படும் ஏராளமான சடங்குகள் தற்காலத்தில் முஸ்லிம்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன. இன்றைய நமது சமுதாயம் மேற்கத்திய சமுதாயத்தின் பிரதிபலிப்பாக மாறிவிட்டது.

பாதுகாப்பு நோக்கமின்றி வீடுகளில் நாய் வளர்ப்பது, உருவச் சிலைகளை வீட்டில் வைப்பது, உருவப் படங்களை தொங்க விடுவது போன்ற அனைத்து பழக்க வழக்கங்களிலிருந்தும் மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் தவிர்ந்து கொள்வார். ஏனெனில் இவ்வாறான நடைமுறைகளிலிருந்து முஸ்லிம்கள் முற்றிலும் விலகியிருக்க வேண்டுமென உறுதியாகக் கட்டளையிடும் ஆதாரங்கள் முஸ்லிம்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இப்னு உமர் (ரழி) அறிவிப்பதாவது: ‘‘உருவங்களை வரைபவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடத்தில் ‘நீங்கள் படைத்ததற்கு உயிர் கொடுங்கள்!' என்று கூறப்படும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தார்கள். (வீட்டில்) உருவப்படங்கள் உள்ள ஒரு திரையைக் கொண்டு வீட்டின் ஜன்னலை மறைத்திருந்தேன். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்களின் முகம் சிவந்துவிட்டது. கூறினார்கள்: ‘‘ஆயிஷாவே! மறுமையில் அல்லாஹ்விடம் மிகக் கடுமையான வேதனைக்குரியவர் யாரெனில் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாக வரைபவரே!'' அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அதைக் கிழித்து ஓரண்டு தலையணைகளைச் செய்து கொண்டோம்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டேன்: ‘‘உருவ(ப் பட)ங்களை வரையும் அனைவரும் நரகவாசிகளே! அவன் வரைந்த அனைத்து உருவங்களுக்கும் உயிர் கொடுக்கப்படும். அவை அவனை நரகில் வேதனை செய்யும்'' எனக் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரழி), ‘‘அவ்வாறு ஏதேனும் நீ வரைய விரும்பினால் மரங்களையும் உயிரற்றவைகளையும் வரைந்து கொள்'' எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நாயோ, உருவப்படமோ இருக்கும் வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒருமுறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சந்திக்க வருவதாக நபி (ஸல்) அவர்களுக்கு வாக்களித்திருந்தார்கள். அந்த நேரத்தில் ஜிப்ரீல் (அலை) வரவில்லை. தங்களது கரத்திலிருந்த தடியைத் தூக்கியெறிந்த நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ்வும் அவனது தூதர்களும் தங்களது வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டார்கள்.'' பின்பு திரும்பிப் பார்த்தபோது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டி ஒன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த நாய் எப்போது நுழைந்தது?'' எனக் கேட்டார்கள். நான், ‘‘எனக்குத் தெரியாது'' என்றேன். பிறகு அதை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அப்போது அங்கு ஜிப்ரீல் (அலை) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உமக்காக அமர்ந்திருந்தேன். நீர் எனக்கு வாக்களித்தபடி வரவில்லையே...'' என்றார்கள். ஜிப்ரீல் (அலை), ‘‘உங்களது வீட்டிலிருந்த நாய் என்னைத் தடுத்துவிட்டது. நிச்சயமாக நாங்கள் உருவ(ப்பட)மோ, நாயோ இருக்கும் வீடுகளுக்குள் நுழைய மாட்டோம்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

சிலைகளை நாட்டி வைப்பது, உருவப் படங்களை தொங்க விடுவது ஆகியவற்றைத் தடை செய்யும் ஏராளமான சான்றுகள் நபிவழியில் காணக் கிடைக்கின்றன. அவ்வாறு தடை செய்ததற்கான தத்துவத்தை தற்காலச் சூழல்கள் தெளிவுபடுத்துகின்றன. தற்காலத்தில் நயவஞ்ச கர்களும், மனோ இச்சைக்கு அடிமையாகி வழி தவறிவிட்டவர்களும் இவ்வாறான விஷயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டு வரம்பு மீறிய ஆட்சியாளர்கள் வாழும் காலத்தில் அல்லது அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களது சிலையை நிறுவி, அச்சிலைகளை கடவுளாகவோ, கடவுள் அவதாரமாகவோ ஆக்கிக் கொள்கிறார்கள்.

இஸ்லாம் ஏகத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பதினைந்து நூற்றாண்டுகளாக சிலை வணக்கத்தையும், மூடநம்பிக்கைகளையும் தகர்த்து வருகிறது. இந்நிலையில் ஒரு தலைவன் நினைவுக்காக அல்லது அறிஞர், கவிஞர், இலக்கிய மேதை ஆகியோரை கண்ணியப்படுத்த அவர்களின் சிலைகளை நிறுவுகிறார்கள். முஸ்லிம்களின் வாழ்வில் இவ்வாறான சிலை வணக்கம் எனும் மூடத்தனம் திரும்பி வருவதை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. ஏனெனில் இஸ்லாமிய சமூக அமைப்பு ஏகத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அது அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் கண்ணியப்படுத்தாது மகிமைப்படுத்தாது உயர்வுபடுத்தாது. எனவே உருவப் படங்களை தொங்கவிடுவதோ, சிலைகளை நிறுவிக்கொள்வதோ இஸ்லாமில் அறவே அனுமதிக்கப்பட்டதல்ல.
நாய் வளர்ப்பதன் நோக்கம் வேட்டைக்காகவோ அல்லது கால்நடை, நிலத்தைப் பாதுகாப்பதாகவோ இருந்தால் அதில் எவ்விதத் தடையுமில்லை.

இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்: ‘‘வேட்டையாடுவதற்காக அல்லது கால்நடைகளைப் பராமரிப்பதற்காகவன்றி ஒருவர் நாய் வளர்ப்பாரேயானால் ஒவ்வொரு நாளும் அவரது நன்மையில் இரண்டு கீராத் அளவு குறைந்து விடும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேற்கத்திய பாணியில் இல்லங்களில் நாய் வளர்ப்பது, அதைப் பராமரிப்பது, அதற்கென பிரத்தியேக உணவு, சோப், ஷாம்புகளை பயன்படுத்துவது, நாய்களுக்கான பிரத்தியேகக் குளியலறைகளை அமைத்தல் போன்ற செயல்களுக்காக அமெரிக்கா போன்ற மேலை(?) நாடுகள் வருடந்தோறும் பல கோடி டாலர்களை செலவிட்டு வருகின்றன. இவ்வாறான நடைமுறைகளுக்கு இஸ்லாமில் அறவே இடமில்லை.
மனோ இச்சைகளுக்கு அடிமையாகி, பொருளியல் சார்ந்த வாழ்க்கை முறைக்குப் பலியானவர்களிடையே நாய் வளர்ப்புக் கலாச்சாரம் வளர்ந்தோங்கி வருகிறது. சமூகத்தில் தனக்குக் கிடைக்காப் பொருளாகிவிட்ட அன்பை நாயின் மூலமாக அடைந்து கொள்ளத் துடிக்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய சமூகத்தின் வாழ்க்கை அமைப்பு மனித நேயமிக்க நேசத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இவ்வாறான மூடத்தனங்களுக்கு முஸ்லிமின் வாழ்வில் இடமுமில்லை, தேவையுமில்லை.


உண்பது, குடிப்பதில் இஸ்லாமிய ஒழுக்க முறைகளைப் பேணுவார்

முன்மாதிரி முஸ்லிமின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் அம்சங்களில் அவரது உணவு பற்றிய ஒழுக்கப் பண்புகள் குறிப்பிடத்தக்கதாகும். 

சபைகளில் உணவருந்த வேண்டிய சந்தர்ப்பங்களில் உண்பது, குடிப்பது குறித்த நபிவழியை முழுமையாகப் பின்பற்றி ஏனைய முஸ்லிம்களையும் பின்பற்றத் தூண்ட வேண்டும்.

உணவருந்தத் தொடங்கும்போது ‘பிஸ்மில்லாஹ்' கூற வேண்டும். (நடுவிலிருந்து எடுக்காமல்) கைக்கு அருகிலிருக்கும் உணவை வலது கரத்தால் எடுத்துச் சாப்பிட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் போதனை செய்துள்ளார்கள்.

(சாப்பிடுவதற்கு முன்) ‘‘அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள். உனது வலது கரத்தால் சாப்பிடு. (தட்டின் நடுவிலிருப்பதை எடுக்காமல்) கைக்கு அருகிலிருப்பதை எடுத்து சாப்பிட்டுக் கொள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உணவு உண்ணத் தொடங்கும்போது ‘பிஸ்மில்லாஹ்' சொல்ல மறந்து விட்டால் இடையில் நினைவு வந்தவுடன் ‘பிஸ்மில்லா அவ்வலஹு வஆஃகிரஹு' என்பதைக் கூறிக்கொள்ள வேண்டும். இதை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒருவர் சாப்பிடத் தொடங்கினால் அல்லாஹ்வின் பெயரை சொல்லிக் கொள்ளட்டும். ஆரம்பமாக அல்லாஹ்வின் பெயரைச் சொல்ல மறந்துவிட்டால் அவர் ‘பிஸ்மில்லா அவ்வலஹு வஆஃகிரஹு (உணவின் துவக்கத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் பெயர் கூறி சாப்பிடுகிறேன்)' என்று சொல்லட்டும்.'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் உணவின்போது அல்லாஹ்வின் திருப்பெயர் நினைவு கூறப்பட வேண்டுமென்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந் தார்கள். இவ்வாறு நினைவு கூர்வது உணவருந்துபவருக்கு மிக அதிகமான நன்மைகளை அள்ளித் தரும் நற்செயலாகும் என்பதாலும் உணவில் ஷைத்தானின் தீண்டல்களிலிருந்தும் நோவினைகளிலிருந்தும் பாதுகாக்கும் என்பதாலும் இது விஷயத்தில் தனது தோழர்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.

ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் எங்கேனும் உணவருந்தச் சென்றால் நபி (ஸல்) அவர்கள் உணவில் கைவைத்து சாப்பிடாதவரை நாங்கள் கை வைக்க மாட்டோம். நபி (ஸல்) அவர்களுடன் ஒரு முறை உணவருந்தச் சென்றிருந்தோம். அப்போது ஒரு சிறுமி (அவளைப் பின்னாலிருந்து தள்ளுவது போல) அருகே வந்து, உணவில் தனது கரத்தை வைக்க முயன்றாள். நபி (ஸல்) அவர்கள் அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டார்கள். பின்பு ஒரு கிராமவாசி (அவரைப் பின்னாலிருந்து தள்ளுவது போல) உணவருகே வந்து உணவை எடுக்க முயன்றார். நபி (ஸல்) அவர்கள் அம்மனிதன் கரத்தைப் பற்றிக் கொண்டார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நிச்சயமாக ஷைத்தான் அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படாத உணவைத் தனதாக்கிக் கொள்கிறான். அவன் இந்தச் சிறுமியின் மூலம் வந்து உணவை தனக்கு ஆகுமாக்கிக் கொள்ள விரும்பினான். நான் அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டேன். பின்பு இந்தக் கிராமவாசியின் மூலம் உணவை தனக்கு ஆகுமாக்கிக் கொள்ள முயன்றான். நான் அவரது கரத்தைப் பிடித்துக் கொண்டேன். எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! எனது கரத்தில் அவ்விருவரின் கரத்துடன் ஷைத்தானின் கரமும் இருக்கிறது'' என்று கூறி விட்டு, அல்லாஹ்வின் பெயரைக் கூறினார்கள். பிறகு உணவருந்தத் தொடங்கினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

உணவு ஒழுக்கங்களில் இரண்டாவது, அதை வலக்கரத்தால் உண்ணுவதாகும். இஸ்லாமிய ஒழுக்கத்தைப் பேணும் முஸ்லிம் வலக்கரத்தால் மட்டுமே உண்ணுவார். எந்த நிலையிலும் இடக்கரத்தால் உணவருந்த மாட்டார். ஏனெனில் இஸ்லாம் வலக்கரத்தால் உண்ண உத்தரவிட்டு இடக்கரத்தால் உண்பதைத் தடுத்துள்ளது. இதுபற்றிய தெளிவான நபிவழிச் சான்றுகள் நிறைந்துள்ளன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒருவர் உணவருந் தினால் வலக்கரத்தால் உண்ணட்டும். குடிப்பதாக இருந்தால் வலக்கரத்தால் குடிக்கட்டும். ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் இடக்கரத்தால் உண்ணுகிறான். இடக்கரத்தால் குடிக்கிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்: ‘‘உங்களில் எவரும் இடக்கரத்தால் உண்ண வேண்டாம். இடக்கரத்தால் குடிக்க வேண்டாம். நிச்சயமாக ஷைத்தான் இடக்கரத்தால் உண்ணுகிறான். இடக்கரத்தால் குடிக்கிறான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இதே நபிமொழி நாஃபிரிவு (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் சற்று அதிகமாக, ‘‘இடக்கரத்தால் எதையும் வாங்கவும் வேண்டாம். கொடுக்கவும் வேண்டாம்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் எவரேனும் இடக்கரத்தால் உண்பதைக் கண்டால் அதைத் தடுத்து, உபதேசித்து, ஒழுக்கம் கற்பிப்பார்கள். அவரது செயலில் ஆணவமும், அகம்பாவமும் வெளிப்பட்டால் கோபமடைந்து அவருக்கு எதிராக துஆச் செய்து விடுவார்கள்.

ஸலமா இப்னுல் அக்வஃ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் அருகில் ஒரு மனிதர் இடக்கரத்தால் உணவருந்திக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது வலக்கரத்தால் சாப்பிடு'' என்றார்கள். அம்மனிதர், ‘‘என்னால் இயலாது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்! உன்னால் இயலாதுதான்'' என்றார்கள். அவரது ஆணவமே அவரை நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படத் தடுத்தது. அதன் பிறகு அவர் தனது வலக்கரத்தை வாயளவில் கொண்டு செல்ல இயலாதவராகி விட்டார். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் அனைத்து காரியங்களிலும் வலப்பக்கத்தையே விரும்பினார்கள். இது குறித்து அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களிடம் கிணற்று நீர் கலந்த பால் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு வலப்புறத்தில் ஒரு கிராமவாசியும் இடப்புறத்தில் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் சிறிது அருந்திவிட்டு கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பின்பு ‘‘வலப் பக்கத்துக்கே முன்னுரிமை'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் கொண்டு வரப்பட்டபோது நபி (ஸல்) அவர்களின் வலப்புறத்தில் ஒரு சிறுவரும் இடப்புறத்தில் பல முதியவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அப்பானத்தைச் சிறிது அருந்திவிட்டு சிறுவரிடம் (அவர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்) ‘‘இது உமக்குரிய பங்கு. ஆனால் அதை இம்முதியவர்களுக்கு விட்டுத் தர முடியுமா?'' எனக் கேட்க, அச்சிறுவர் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களின் எச்சில் பட்ட பானத்தை எவருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது அல்லாஹ்வின் தூதரே!'' என மறுத்து விட்டார்.
ஸஹ்ல் இப்னு ஸஃது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அவர்களுக்கு வலப்பக்கத்தில் ஒரு சிறுவரும் இடப்புறம் சில முதியவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரிடம், ‘‘(இந்த பானத்தை) இவர்களுக்குக் கொடுக்க எனக்கு அனுமதி தருவாயா?'' எனக் கேட்டார்கள். ‘‘அச்சிறுவர் அல்லாஹ்வின் மீதாணையாக! அனுமதிக்க மாட்டேன். உங்களிடமிருந்து எனக்குரிய பங்கை எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் பானத்தை அவரது கரத்தில் கொடுத்துவிட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

வலப்பக்கத்தை விரும்புவது இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளில் தலையாயது என்பதை வலியுறுத்தும் உதாரணங்களும் சான்றுகளும் இஸ்லாமிய வரலாற்றில் நிறைந்துள்ளன. நபித்தோழர்களும், அவர்களின் மாணவர்களும் ஒருவல்லாமல் அனைவரும் பின்பற்றிய இப்பண்பை ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்று நடக்க வேண்டும்.

உமர் (ரழி) அவர்கள் வலப்புறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர்களாகவும் அதை அலட்சியப்படுத்துவதை சகித்துக் கொள்ளாதவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் தங்களது குடிமக்களின் நிலையைக் கவனித்து வர நகர்வலம் வந்து கொண்டிருந்தபோது ஒரு மனிதர் இடக்கரத்தால் சாப்பிடுவதைக் கண்டார்கள். அவரிடம் ‘‘அல்லாஹ்வின் அடியாரே! உம் வலக்கரத்தால் சாப்பிடு'' என்றார்கள். இரண்டாவது முறையும் அவர் இடக்கரத்தால் உணவருந்துவதைக் கண்டார்கள். அவரை இலேசாக அடித்து ‘‘அல்லாஹ்வின் அடியாரே! உமது வலக்கரத்தால் சாப்பிடு'' என்றார்கள். மூன்றாவது முறையாகவும் அவர் இடக்கரத்தால் உணவருந்துவதைக் கண்டு, மீண்டும் இலேசாக அடித்து, ‘‘அல்லாஹ்வின் அடியாரே உமது வலக்கரத்தால் சாப்பிடு'' என்று கடினமாகக் கூறினார்கள்.

அப்போது அம்மனிதர், ‘‘அமீருல் முஃமினீன் அவர்களே அது வேலையில் ஈடுபட்டிருக்கிறது'' என்றார். உமர் (ரழி), ‘‘அது என்ன வேலையில் இருக்கிறது?'' என வினவியதற்கு, அம்மனிதர் ‘மூத்தா' போர் அதைப் பயன்படுத்திக் கொண்டது. (அதாவது அப்போல் துண்டிக்கப்பட்டது) என்றார்கள். அதைக் கேட்ட உமர் (ரழி) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. அம்மனிதரிடம் தனது செயலைப் பொறுத்துக் கொள்ளுமாறு கூறி, ‘‘உமக்கு உளுச் செய்து வைப்பவர் யார்? உமது தேவைகளை நிறைவேற்றுபவர் யார்? உமக்கு உதவி செய்பவர் யார்?'' என்றெல்லாம் கேள்விகளைக் கேட்ட பின் அவருக்கு நீதி வழங்கவும், பராமரிக்கவும் உரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

இச்சம்பவத்தின் மூலம் உமர் (ரழி) அவர்கள் இந்தச் செயலுக்குக் கொடுத்த முக்கியத்துவமும், அவர்கள் இதை முஸ்லிம்களின் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கு எடுத்துக் கொண்ட ஆர்வமும் நமக்குத் தெரிய வருகிறது. எனவே இதில் அலட்சியம் கூடாது.

இவ்விடத்தில் முஸ்லிம்களுக்கு ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். முஸ்லிம்களில் சிலர் உணவு மேசையில் அந்நியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். அந்நியர்களைப் போல இடது கையில் முள்கரண்டியை வைத்துக் கொண்டு வலது கையிலுள்ள கத்தியால் உணவை வெட்டி இடது கையால் அந்நியர்கள் சாப்பிடுவது போலவே இந்த முஸ்லிம்களும் சாப்பிட்டு மார்க்கத்துக்கு மாறு செய்கிறார்கள். மேற்கத்திய கலாச்சாரம் சிதைந்துவிடக் கூடாதென்ற எண்ணத்தில் முள்கரண்டியை வலது கரத்திலும் கத்தியை இடது கரத்திலும் பிடித்துக் கொண்டு வலக்கையால் சாப்பிடுவதற்கு இவர்கள் தயாராக இல்லை.
அந்நியக் கலாச்சாரத்துக்கு அடிமையாகி, இவ்வாறான செயல்களுக்கு நாகரிகம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு, மனிதகுலச் சீரமைப்பிற்கென இஸ்லாம் வகுத்தளித்த மகத்தான நெறிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள். இஸ்லாமின் உறுதியான அடித்தளத்தையும், தனித் தன்மையையும் தகர்த்துவிடத் துணிகிறார்கள். உண்மை முஸ்லிம் இவ்வாறான சீரழிவுச் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும்.

தனது நேரிய மார்க்கத்தின் வழிகாட்டுதலாலும் அதன் முழுமையான ஒழுக்கப் பண்புகளாலும் தன்னைச் சீரமைத்துக் கொண்ட முஸ்லிம் வலக் கரத்தாலேயே சாப்பிடுவார். அதற்கு மற்றவர்களையும் ஏவுவார்.
மேற்கத்திய கலாச்சார அடிமைகள் தங்களது பெருமையையும் ஆணவத்தையும் வெளிப்படுத்தும் சபைகளிலும், விழாக்களிலும் பங்கேற்கும் நிலை அவருக்கு ஏற்பட்டால் அவர்களுக்கு இஸ்லாமிய பண்பாட்டை உணர்த்திக் காட்டும் விதமாக வலக்கரத்தால் உண்பது, குடிப்பதை மிகப் பெருமிதத்தோடு வெளிப்படுத்துவார். அதை உரக்கச் சொல்வதில் அவருக்கு எவ்விதத் தயக்கமும் ஏற்படாது. அவர் தூய நபிவழியைப் பின்பற்றி நேர்வழியையும், நன்மையையும் அம்மனிதர்கள் அடைந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவார்.

உணவருந்துவதில் மூன்றாவது அம்சம்: உணவை எடுப்பதில் இஸ்லாமின் வழியைப் பின்பற்றி தனது கரத்துக்கு அருகில் இருப்பதை எடுத்து உண்பதாகும். ‘பிஸ்மில்லாஹ்' சொல்வது, வலக்கரத்தால் உண்பது, அருகிலிருக்கும் உணவையே எடுத்து உண்பதையும் வலியுறுத்தும் ஏராளமான நபிமொழிகள் காணப்படுகின்றன.

உமர் இப்னு அபீ ஸலமா (ரழி) அவர்கள் கூறியதாவது: நான் சிறுவனாக இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வளர்ப்பில் இருந்தேன். ஒருமுறை எனது கரம் உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக்கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!'' என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் தனது உணவை எடுக்கும்போது மென்மையாகவும் முறையாகவும் எடுத்து உண்ண வேண்டும். நபி (ஸல்) அவர்கள் உணவை மூன்று விரல்களால் எடுப்பார்கள். காண்போர் அருவருப்படையும் வகையில் உணவில் அனைத்து விரல்களையும் போடமாட்டார்கள்.

கஅப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் தங்களது மூன்று விரல்களால் சாப்பிடுவதை நான் கண்டேன். சாப்பிட்ட பின் அந்த விரல்களை சூப்பினார்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் உணவின் போது விரல்களை சூப்பி, உணவுத் தட்டை வழித்துச் சாப்பிட வேண்டுமென ஏவினார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உணவுத் தட்டை வழித்து சாப்பிடவும், விரல்களை சூப்பவும் ஏவினார்கள். மேலும், ‘‘உங்கள் உணவில் பரக்கத் (அபிவிருத்தி) எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் உணவருந்தினால் மூன்று விரல்களையும் சூப்புவார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களது உணவில் ஒரு பகுதி கீழே விழுந்து விட்டால் அதை அவர் எடுத்து, அதன் தூசிகளை அகற்றி அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்காக விட்டு விட வேண்டாம்.'' உணவுத் தட்டை வழிக்குமாறும் எங்களை ஏவினார்கள். ‘‘உங்கள் உணவில் அபிவிருத்தி எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்'' என்றும் கூறினார்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இந்நபிமொழியில், பரக்கத்தை (அபிவிருத்தியை) தேடுவது மட்டுமின்றி, கரங்களையும் பாத்திரங்களையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும், உணவுத் தட்டை வழித்து சாப்பிடுவது ஏற்றமானது என்ற செய்தியும் அடங்கியுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களின் தூய்மையும், ஒழுங்குமுறையும் தெளிவுபடுத்தப்படுகிறது.

15 நூற்றாண்டுக்கு முன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இப்பண்பாட்டை இன்றுதான் மேற்கத்தியர் பின்பற்றத் துவங்கியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் ஐரோப்பியர் தங்களது உணவுத் தட்டுகளில் எதையும் மிச்சம் வைத்து விடாமல் வழித்துச் சாப்பிடும் வழமையை மேற்கொண்டு வருகிறார்கள்.

விழிப்புணர்வுள்ள முஸ்லிம் உணவின்போது சப்தமிடாமல் மென்மையான முறையில் மென்று சாப்பிடுவார். அவ்வாறு மெல்லும் போது பிறர் அருவருப்படையும் வகையில் பெருமூச்சு விட்டுக் கொண்டிராமல், கவளங்களைப் பெரிதாக்காமல் சிறிது சிறிதாக எடுத்து உண்ணுவார்.
சாப்பிட்டு முடித்த பின் கண்ணியமிகு தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வாசகங்களால் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திப் புகழ்வார். இதன் மூலம் நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் மகத்தான நன்மைகளையும், நற்கூலியையும் அடைந்து கொள்கிறார்.

அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது, ‘‘அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உயது. இரட்சகனே! இப்புகழ் முற்றுப்பெறாதது, கைவிடப்படக் கூடாதது, தவிர்க்க முடியாதது ஆகும்'' என்று பிரார்த்தனை செய்வார்கள். (ஸஹீஹுல் புகாரி)

முஆத் இப்னு அனஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘‘எவர் சாப்பிட்டபின், ‘‘எனக்கு எவ்வித ஆற்றலோ வலிமையோ இல்லாத நிலையில் இந்த உணவை எனக்களித்து, உண்ண வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'' என்ற துஆவை ஓதினால், அவரது முன், பின் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸுனன் அபூதாவூத்)

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றும் வகையில் உணவு எந்தத் தரமுடையதாக இருப்பினும் அதைக் குறை கூறமாட்டார்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதில்லை. விரும்பினால் அதைச் சாப்பிடுவார்கள். விருப்பமில்லையெனில் அதை ஒதுக்கி விடுவார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நீர் அருந்துவதற்கான ஒழுக்கப் பண்புகளையும் இஸ்லாம் மனிதனுக்குக் கற்றுத் தந்துள்ளது. இது இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான வழிகாட்டி என்பதற்கான சான்றாகும்.

நீரருந்தும்போது அல்லாஹ்வின் பெயர் சொல்லி, பாத்திரத்தினுள் மூச்சு விடாமல் இரண்டு அல்லது மூன்று மிடறாக அருந்த வேண்டும். பானத்தை ஊதிக் குடிக்கக்கூடாது. அமர்ந்த நிலையிலேயே அருந்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

குடிபானங்களை இரண்டு அல்லது மூன்று மிடறுகளாக குடிப்பது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.

அனஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘‘நபி (ஸல்) அவர்கள் நீரருந்தினால் மூன்று மிடறாக அருந்துவார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரே மூச்சில் நீரருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ‘‘ஒட்டகைகள் குடிப்பது போன்று ஒரே மூச்சில் நீங்கள் குடிக்காதீர்கள். மாறாக இரண்டு அல்லது மூன்று முறை (மூச்சு விட்டுப்) பருகுங்கள். நீரருந்துமுன் அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அருந்தி முடித்தால் அல்லாஹ்வைப் புகழுங்கள்'' என்றார்கள். (ஸுனனுத் திர்மிதி)

ஊதிக் குடிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அபூ ஸயீது அல் குத் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: பானங்களில் ஊதுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அப்போது ஒரு மனிதர் ‘‘அதில் தூசியிருந்தால் என்ன செய்வது?'' என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதை ஊற்றி விடு!'' என்றார்கள். அவர், ‘‘எனது தாகம் ஒரே மூச்சில் தீர்ந்து விடாது'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமது வாயிலிருந்து பாத்திரத்தை எடுத்துவிட்டு பிறகு மூச்சு விட்டுக் கொள்'' என்று கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)

நபிவழியைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் இயன்றளவு அமர்ந்த நிலையிலேயே நீர் அருந்த வேண்டும். இதுவே அவர் மேன்மை மற்றும் பூரணத்துவம் பெற்றதற்கான அடையாளமாகும். எனினும் நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் பாத்திரத்தினுள் வாய் வைத்துக் குடிப்பதும், நின்ற நிலையில் குடிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும்.
 

ஸலாமைப் பரப்புவார்

இஸ்லாமிய சமூகத்தின் தனித்தன்மையான பண்பாடுகளில் ஸலாமைப் பரப்புவதும் ஒன்றாகும். 

ஸலாம் என்பது பல்வேறு காலங்களில் மனிதர்களிடையே தற்செயலாக உருவாகி கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படும் சடங்கைப் போன்ற சடங்கல்ல.

மாறாக, உறுதியான அடிப்படைகளால் கட்டமைக்கப்பட்ட உயர்ந்த ஒழுக்கப் பண்பாகும். புகழுக்குரிய இரட்சகன் தனது திருமறையில் இது குறித்து உத்தரவிடுகிறான். இது விஷயத்தில் ஹதீஸுக் கலை நிபுணர்கள் ‘கிதாபுஸ் ஸலாம்' என்ற பெயரில் ஸலாமைப் பற்றிய நபிமொழிகளை தொகுக்குமளவு நபிமொழிகள் நிறைந்து காணப்படுகின்றன.
திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்:
விசுவாசிகளே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறாத வரையில் நுழையாதீர்கள்... (அல்குர்ஆன் 24:27)

மேலும் ஸலாம் கூறப்பட்டால் அதைப் போன்றோ அல்லது அதைவிட அழகிய முறையிலோ பதில் கூற வேண்டுமென அல்லாஹ் உத்தரவிடுகிறான்:
(எவராலும்) உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்பெற்றால் (அதற்குப் பிரதியாக) அதை விட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள் அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். (அல்குர்ஆன் 4:86)

நாம் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறி அதைப் பரப்ப வேண்டுமென்பதை வலியுறுத்தும் ஏராளமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.

அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னு ஆஸ் (ரழி) அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர், ‘‘இஸ்லாமில் சிறந்தது எது?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஏழைகளுக்கு) உணவளித்தல், நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவது'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸலாம் கூறுவது என்பது நபி (ஸல்) அவர்கள், தங்களது தோழர்கள் சமூக வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டுமெனவும், அவர்களுக்குப் பின் ஏனைய முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமெனவும் உபதேசித்த ஏழு அம்சங்களில் ஒன்றாக இருந்தது.

இது குறித்து நபித்தோழர் பராஃ இப்னு ஆஸிஃப் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை ஏவினார்கள். அவையாவன: 1) நோயாளியை நலன் விசாரிப்பது. 2) ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது. 3) தும்மியவருக்கு (அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் ‘யர்ஹ முக்கல்லாஹ்' எனப்) பதிலளிப்பது. 4) பலவீனருக்கு உதவுவது. 5) அநீதி இழைக்கப்பட்டவருக்கு ஆதரவளிப்பது. 6) ஸலாமைப் பரப்புவது. 7) சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்வது.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் ஸலாமின் முக்கியத்துவம் கருதி அதைக் கடைப்பிடிக்க வேண்டுமென ஆர்வமூட்டினார்கள். அந்த ஸலாமின் மூலம் இதயங்கள் இணைகின்றன. மனித மனங்களில் நேச ஊற்றுகள் பொங்குகின்றன. அது தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் மனத் தூய்மையையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

எனவேதான் ‘‘ஸலாம் கூறுவதால் அன்பு ஏற்படுகிறது. அது சுவனத்தினுள் சேர்ப்பிக்கும் ஈமானை மனித இதயங்களில் பதிக்கிறது'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனம் புகமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசம் கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத் தரட்டுமா? அதை நீங்கள் செய்தால் உங்களிடையே நேசம் உண்டாகும். உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஸலாமை முந்திச் சொல்பவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத் திற்கும், அருளுக்கும், நற்கூலிக்கும் மிகத் தகுதியானவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ்விடம் மனிதர்களில் சிறந்தவர் யாரெனில் அவர்களில் ஸலாமை முந்திச் சொல்பவரே!'' (ஸுனன் அபூதாவூத்)

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கடைவீதிக்குச் சென்று தன்னைக் கடந்து செல்லும் அனைவருக்கும் ஸலாம் கூறுவார்கள். ஒருவர் அவர்களிடம், ‘‘நீங்கள் எதையும் விற்பதுமில்லை நீங்கள் பொருள்களின் விலையையும் விசாரிப்பதில்லை அதை வாங்குவதுமில்லை கடை வீதியின் கும்பல்களில் எங்கும் அமர்வதுமில்லை. பிறகு கடைவீதியில் என்ன செய்கிறீர்கள்?'' என்றபோது இப்னு உமர் (ரழி), ‘‘நான் கடைவீதிக்கு வருவது சந்திப்பவர்களுக்கு ஸலாம் கூற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

ஸலாம் கூறுவதற்காக சமூகம் அனைத்திற்கும் இஸ்லாம் ஒரே வாக்கியத்தை வகுத்தளித்துள்ளது. மார்க்கத்தின் ஒழுக்கங்களை அறிந்த முஸ்லிம் அதைப் பின்பற்றி, ஏனைய சமூகங்களிலிருந்து தனித் தன்மையான இஸ்லாமிய கலாச்சாரத்தை செயல்படுத்துவார். அந்த வாக்கியம் ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லா வபரக்காதுஹு' என்பதாகும். ஸலாம் கூறப்படுபவர் ஒருவராயிருந்தாலும் இந்தப் பன்மையான வாக்கியத்தைக் கொண்டே ஸலாம் உரைக்கலாம். அதற்கு ‘வஅலைகுமுஸ் ஸலாம். வரஹ்மத்துல்லா வபரகாத்துஹு' என்று பதிலளிப்பார்.

இந்த வாசக அமைப்பின் மூலம், முற்காலத்தில் அரபியில் சொல்லப்பட்டு வந்த ‘இம் ஸபாஹா' என்ற வார்த்தையோ தற்காலத்தில் சொல்வதுபோல ‘ஸபாஹல் ஃகைர்' என்பது போன்ற வாக்கியங்களோ அவசியமற்றுப் போகின்றன. ஏனெனில் இவை 'ஏர்ர்க் ஙர்ழ்ய்ண்ய்ஞ்' என்ற ஆங்கில முகமன், 'இர்ய்த்ர்ன்ழ்' என்ற பிரெஞ்சு முகமனின் மொழிமாற்றம் செய்யப்பட்ட வாக்கியமாகும். நேரிய மார்க்கத்தின் வழிகாட்டுதலைப் பெறாத, பிற்போக்குச் சிந்தனையுடைய பெயர்தாங்கி முஸ்லிம்கள் மட்டுமே இவ்வார்த்தைகளுக்கு முக்கியத்துவமளிக்கிறார்கள்.
இஸ்லாமின் முகமன்தான் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்த தினத்திலிருந்து தனது அடியார்களுக்கெனத் தேர்ந்தெடுத்த முகமனாகும். அதை ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்து மலக்குகளுக்கு முகமன் கூறுமாறு கட்டளையிட்டான். அது மனித குலத்துக்கு அவசியமான (ஸலாம்) சாந்தியை உள்ளடக்கியுள்ளதால் காலங்காலமாக அவர்களுடைய சந்ததியினர் பின்பற்றி வரவேண்டுமென்பது இரட்சகனின் விருப்பமாக இருந்தது.

இரட்சகன் அருள்புரிந்த தொன்மை வாய்ந்த முகமன் நேரிய சமுதாயமான இஸ்லாமைத் தவிர வேறெந்த மதத்திலும் நிலைபெறவில்லை. ஆதம் (அலை) அவர்கள் காலம் தொட்டு இன்று வரை அந்த வாசகம் மாற்றப்படவில்லை. அதன் நேர்வழியிலிருந்து எவரும் திரும்பிடவில்லை. அது எவரையும் சோர்வடையச் செய்ததில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ் ஆதமைப் படைத்த போது, ‘‘நீங்கள் சென்று அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் அதுதான் உங்களது முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்'' என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘‘அஸ்ஸலாமு அலைக்கும்'' (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார். ‘‘அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மத்துல்லா'' (‘‘சாந்தியும் இறைவனின் கருணையும் உங்கள் மீது நிலவட்டும்!)'' என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதிலில்) ‘வரஹ்மத்துல்லா' என்பதை அதிகப்படுத்திக் கூறினார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இது பரிசுத்தமான அருள் நிறைந்தது என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இது மகத்துவமிக்க இரட்சகனால் அருளப்பெற்றது, அதையே முகமனாக எடுத்துக்கொள்ள வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். அதைத் தவிர வேறு எந்த வாக்கியங்களையும் பயன்படுத்தக் கூடாது.
நீங்கள் எந்த வீட்டில் நுழைந்த போதிலும் அல்லாஹ்வால் உங்களுக்கு கற்பிக்கப்பட்ட, மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான (அஸ்ஸலாமு அலைக்கும் என்னும்) வாக்கியத்தை நீங்கள் உங்களுக்கு (ஒருவர்க்கொருவர்) கூறிக் கொள்ளவும். (அல்குர்ஆன் 24:61)

இதன் காரணமாகவே ஜிப்ரீல் (அலை) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ஸலாம் சொன்னபோது இதே வாக்கியத்தைக் கூறினார்கள். அவ்வாறே அன்னை ஆயிஷா (ரழி) அவர்களும் பதிலளித்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், ‘‘இதோ ஜிப்ரீல் (அலை) உம் மீது ஸலாம் கூறுகிறார்'' என்றார்கள். நான் ‘‘வஅலைஸ்ஸலாம் வரஹ்மத்துல்லா வபரக்கத்துஹு'' (அவர் மீதும் அல்லாஹ்வின் அருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டும்) என்று கூறினேன். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இஸ்லாமில் ஸலாம் கூறுவதற்கென சில விதிமுறைகள் உள்ளன. முஸ்லிம் தனது சமூக வாழ்வில் மிகுந்த கவனத்துடன் அதை நிறைவேற்றிட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: ‘‘வாகனத்திலிருப்பவர் நடந்து செல்பவன் மீதும், நடந்து செல்பவர் உட்கார்ந்திருப்பவர் மீதும், குறைவான எண்ணிக்கை உடையவர் பெருங்கூட்டத்தினர் மீதும் ஸலாம் சொல்லட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில், ‘‘சிறியவர் பெரியவர் மீதும் (ஸலாம் கூறட்டும்)'' என வந்துள்ளது.
அவ்வாறே ஸலாம் என்பது ஆண், பெண் இருவருக்கும் உயதாகும். இதற்கு அஸ்மா பின்த் யஜீது (ரழி) அவர்களின் அறிவிப்பு சான்றளிக்கிறது. ‘‘நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை மஸ்ஜிதுக்குச் சென்று கொண்டிருந்தபோது அமர்ந்திருந்த பெண்களின் கூட்டத்தைக் கடந்தார்கள். அப்போது ஸலாம் கூறி கைகளைக் கொண்டு சைக்கினை செய்தார்கள்.'' (ஸுனனுத் திர்மிதி)

ஸலாமின் முறைகளைக் கற்றுக் கொடுக்கும் விதமாக சிறுவர்கள் மீதும் ஸலாம் கூறவேண்டும். அனஸ் (ரழி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள். மேலும், ‘‘நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்பவர்களாக இருந்தார்கள்'' என்றும் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இஸ்லாமில் ஸலாம் கூறுவதற்கான ஒழுக்கம் மற்றும் சட்ட முறைகளில் ஒன்று, இரவு காலங்களில் மென்மையான முறையில் தாழ்ந்த குரலில் ஸலாம் கூறுவதாகும். விழித்திருப்பவர் அதைக் கேட்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர் விழித்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள்.

நபித்தோழர் மிக்தாத் (ரழி) அவர்கள் ஒரு நீண்ட ஹதீஸின் தொடர்ச்சியில் குறிப்பிடுகிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குரிய பாலைக் கொடுத்து வந்தோம். அதற்காக நபி (ஸல்) அவர்கள் இரவு நேரங்களில் வந்து ஸலாம் கூறுவார்கள். அது தூங்குபவர்களை விழிக்கச் செய்யாது. விழித்திருப்பவர்களுக்குக் கேட்கும். (ஸஹீஹ் முஸ்லிம்)

சபைக்குள் நுழையும்போதும் அதிலிருந்து எழும்போதும் ஸலாம் கூறவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒருவர் சபைக்கு வந்தால் ஸலாம் சொல்லட்டும். அதிலிருந்து எழுந்து செல்ல நாடினால் அப்போதும் ஸலாம் சொல்லட்டும். முந்திய ஸலாம் பிந்தியதைவிட மிக முக்கியமானதல்ல.'' (ஸுனன் அபூதாவூத்)


அனுமதியின்றி அன்னியர் வீட்டில் பிரவேசிக்கமாட்டார்

பேணுதலுள்ள முஸ்லிம் அன்னியர் வீட்டினுள் அனுமதியின்றி நுழையமாட்டார். அனுமதி கோரி நுழைவது இரட்சகனின் கட்டளை யாகும். அதில் அலட்சியமோ புறக்கணிப்போ இருக்கக் கூடாது.
விசுவாசிகளே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறாத வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதனை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக.

அவ்வீட்டில் (இருப்பவல்) எவரையுமே நீங்கள் காணாவிடில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரையில் அதில் நுழையாதீர்கள். (தவிர, இது சமயம் வீட்டில் நுழையாது) நீங்கள் திரும்பிவிடுங்கள் என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் முதலிய எவராலும்) உங்களுக்கு கூறப்பெற்றால் அவ்வாறே நீங்கள் திரும்பிவிடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்து கொள்வான். (அல்குர்ஆன் 24:27,28)

உங்கள் குழந்தைகள் பிராயமடைந்துவிடும் பட்சத்தில் அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதிகோர வேண்டிய பிரகாரம் அனுமதி கோர வேண்டும்... (அல்குர்ஆன் 24:59)

அன்னியர் வீட்டினுள் அனுமதியின்றி நுழைவது சந்தேகங்களுக்கு வழிவகுக்கும். ஆகவே திருடர்களைப் போன்று உள்ளே நுழைவதற்கோ, வீட்டிள் உள்ளவர்கள் கவனக்குறைவாக இருக்கும் நேரத்தில் நுழைவதற்கோ இஸ்லாமில் அனுமதியில்லை. இதுதான் சந்திப்பவர்களுக்கு நன்மையாக அமையும். இதையே அல்லாஹ் முஃமின்களுக்கு விரும்புகிறான்.

அனுமதி கோருவதற்கான இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை ஒவ்வொரு முஸ்லிமும் வெளிப்படுத்த வேண்டுமெனவும், மனிதர்களைச் சந்திக்க தனது பாதங்களை எடுத்து வைக்கும்போது அந்த ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் இஸ்லாம் விரும்புகிறது.

முதலாவது: வாசலுக்கு முன்னால் நிற்காமல் அதன் வலது அல்லது இடது ஓரத்தில் நிற்க வேண்டும். இதுவே நபி (ஸல்) அவர்களின் வழமையாக இருந்தது.
அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘‘நபி (ஸல்) அவர்கள் ஒரு வீட்டுக்கு வந்தால் அனுமதி கோருவதற்காக வாசலுக்கு நேராக நிற்காமல் வலது அல்லது இடப்புறத்தில் நிற்பார்கள். அனுமதி கிடைத்தால் நுழைவார்கள். இல்லையென்றால் திரும்பி விடுவார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

பார்க்கத் தகாததை வீட்டினுள் பார்க்க நேரிடும் என்பதன் காரணமாகத்தான் அனுமதி கோர வலியுறுத்தப்படுகிறது. இதுபற்றி ஸஹ்ல் பின் ஸஃது (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘‘அனுமதி கோருவது விதிக்கப்பட்டதெல்லாம் பார்வையின் காரணமாகத்தான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் அனுமதி கோரி நிற்பவர் வாசலுக்கு நேராக நிற்கக்கூடாது. அவ்வாறு நின்றால் கதவு திறக்கப்பட்டவுடன் பார்வை வீட்டினுள் பாய்ந்துவிடும்.

இரண்டாவது: ஸலாம் கூறி அனுமதி கோருவது. ஸலாம் கூறாமல் அனுமதி கேட்பது முறையற்ற செயலாகும். இது விஷயத்தில் ப்ம்ய்யீ இப்னு ராஷ் (ரழி) அவர்களின் நபிமொழி சான்றாகும். அவர்கள் கூறினார்கள்: பனு ஆமிர் கிளையைச் சேர்ந்த ஒருவர் எங்களுக்கு அறிவித்தார். அதாவது வீட்டுக்குள் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது அவர் அனுமதி கோ, ‘‘நான் உள்ளே நுழையலாமா?'' என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், தங்களது பணியாளடம் ‘‘அவரிடம் சென்று அனுமதி கோருவதற்கான ஒழுக்கத்தைக் கற்றுக் கொடு. ‘அஸ்ஸலாமு அலைக்கும்' நான் உள்ளே வரலாமா? என்று கூறுமாறு அவருக்குச் சொல்லிக் கொடு'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதை அம்மனிதர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் ‘‘அஸ்ஸலாமு அலைக்கும். நான் உள்ளே வரலாமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க, அவர் வீட்டினுள் நுழைந்தார். (அல் அதபுல் முஃப்ரத்)

மூன்றாவது: தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தும் தெளிவான பெயர் அல்லது புனைப்பெயரைச் சொல்வது. நீங்கள் யாரென்று கேட்கும்போது ‘நான்தான்' என்பது போன்ற தெளிவற்ற வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. மனிதனின் தனித் தன்மையை வெளிக்காட்டாத இவ்வாறான பதிலை நபி (ஸல்) அவர்கள் மிகவும் வெறுத்தார்கள். கேட்கும்போது தெளிவான பெயரைக் கூறவேண்டுமென்பதை வலியுறுத்தினார்கள்.
நபித்தோழர் ஜாபிர் (ரழி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (வீட்டின்) கதவைத் தட்டினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘யாரது?'' என்றார்கள். அப்போது ‘‘நான்'' என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (என்ன) நான்?'' என்றார்கள். பெயரைக் கூறாமல் நான் என்று கூறியதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தது போன்று தோன்றியது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இதன்மூலம் நபி (ஸல்) அவர்கள் அனுமதி கோருபவர் தனது பெயரைத் தெளிவாகக் கூறுவது தனது வழிமுறை என்பதைத் தெளிவுபடுத்தினார்கள். இதுவே நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் நடந்து கொண்ட முறையாகும்.
அபூதர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘‘நான் ஓரவில் சென்று கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் தனியாக நடந்து செல்வதைக் கண்டேன். நான் சந்திரனின் நிழலில் நடந்து கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது ‘‘யாரது?'' என்று வினவினார்கள். நான், ‘‘அபூதர்'' என்று விடையளித்தேன்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

உம்முஹானி (ரழி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களைக் காண வந்தபோது ஃபாத்திமா (ரழி) அவர்கள் மறைத்துக் கொண்டிருக்க நபி (ஸல்) அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘யாரது?'' என்று கேட்டார்கள். ‘‘நான் உம்முஹானி'' என்று கூறினேன். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நான்காவது: அனுமதியளிக்கப்படாமல் திரும்பிச் செல்லுமாறு கூறப்பட்டால் திரும்பி விட வேண்டும். அது குறித்து மனதில் எவ்விதச் சலனமும் கொள்ளக் கூடாது. இது பற்றி அல்லாஹ் கட்டளையிடுகிறான்:
'நீங்கள் திரும்பி விடுங்கள்' என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் முதலிய எவராலும்) கூறப்பெற்றால் அவ்வாறே நீங்கள் திரும்பி விடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 24:28)

மூன்று முறை அனுமதி கேட்க வேண்டும். அனுமதி கிடைத்தால் நுழைய வேண்டும். இல்லையென்றால் திரும்பிவிட வேண்டும் என வலியுறுத்தும் நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.

அபூமூஸா அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘‘அனுமதி கோருவது மூன்று தடவையாகும். (அந்த மூன்று தடவைக்குள்) உனக்கு அனுமதி அளிக்கப்பட்டால் (உள்ளே செல்). இல்லையெனில் திரும்பி விடு'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஒருமுறை அபூ மூஸா அல் அஷ்அரீ (ரழி) அவர்கள், உமர் (ரழி) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கோரினார். உமர் (ரழி) அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை. எனவே அவர்கள் திரும்பிவிட்டார்கள். அவர்களிடம் உமர் (ரழி) ஆளனுப்பி அழைத்தார்கள்... என்று தொடரும் இந்த ஹதீஸை இவ்விடத்தில் கொண்டு வருவதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவதில் கண்ணியமிகு நபித்தோழர்களின் நுண்ணறிவும், பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதைப் பயன்படுத்த வேண்டுமென்பதில் கொண்டிருந்த ஆர்வமும் வெளிப்படுகிறது.

அபூமூஸா அல் அஷ்அரீ (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘‘நான் உமர் (ரழி) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி அளிக்கப் படவில்லை. ஆகவே நான் திரும்பிவிட்டேன். பின்பு ஒருவரை என்னிடம் அனுப்பி (அழைத்து)க் கேட்டார்கள்: ‘‘அப்துல்லாஹ்வே! நீர் எனது வீட்டு வாசலில் நின்றது உமக்குச் சிரமமாக இருக்கிறதா? அவ்வாறுதான் உமது வீட்டின் வாம்லில் காத்து நிற்கும் மனிதர்களுக்கும் சிரமம் ஏற்படும் என்பதை அறிந்து கொள்!'' என்றார்கள். அதற்கு நான், ‘‘இல்லை, (தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே நான் திரும்பி வந்து விட்டேன். இவ்வாறுதான் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது'' என்று கூறினேன். அதற்கு உமர் (ரழி) அவர்கள், ‘‘இதை யாரிடமிருந்து கேட்டீர்?'' என்றார்கள். நான், ‘‘அதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்'' என்று கூறினேன். உமர் (ரழி) அவர்கள், ‘‘நாங்கள் கேட்காததை நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீர் கேட்டீரா? இதற்கான சாட்சியத்தை என்னிடம் நீர் கொண்டு வரவில்லையானால் நிச்சயமாக உம்மைத் தண்டிப்பேன்'' என்று கூறினார்கள்.
அங்கிருந்து வெளியேறி பள்ளிவாசலில் அமர்ந்திருந்த சில அன்சாரிகளிடம் வந்து (சாட்சியம் பற்றி) அவர்களிடம் வினவினேன். அதற்கவர்கள், ‘‘இது விஷயத்தில் எவரேனும் சந்தேகப்படுவாரா?'' என்றார்கள். நான் உமர் (ரழி) அவர்கள் கூறியதைத் தெரிவித்தேன். அதற்கவர்கள், ‘‘எங்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்'' என்றார்கள்.
அப்போது அவர்களில் வயது குறைந்தவரான அபூ ஸயீதுல் குத் (ரழி) அவர்கள் என்னுடன் சாட்சி கூற உமர் (ரழி) அவர்களிடம் வந்தார். அவர் கூறினார்: ‘‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். நபி (ஸல்) அவர்கள் ஸஃது இப்னு உபாதா (ரழி) அவர்களைச் சந்திக்க விரும்பினார்கள். அவரிடம் வந்து ஸலாம் கூறினார்கள். அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இரண்டாவது, மூன்றாவது முறையாகவும் ஸலாம் சொன்னார்கள். அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘நமக்கு உயதை நாம் நிறைவேற்றி விட்டோம்'' என்று கூறிவிட்டுத் திரும்பி விட்டார்கள். அப்போது ஸஃது (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஓடி வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களை சத்தியத்தின் மீது அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! நீங்கள் ஸலாம் கூறிய ஒவ்வொரு முறையும் அதைச் செவியேற்று உங்களுக்கு பதில் கூறிக்கொண்டுதான் இருந்தேன். எனினும், என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் ஸலாம் அதிகமதிகம் கூறவேண்டுமென விரும்பினேன்'' என்று கூறினார்கள்.
அபூஸயீது (ரழி) அவர்கள் இதைக் கூறியவுடன் அபூ மூஸா (ரழி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் விஷயத்தில் மிகுந்த நம்பிக்கைக்குரியவனாக இருக்கிறேன்'' என்றார். உமர் (ரழி) அவர்கள், ‘‘ஆம்! எனினும் அதை உறுதிப் படுத்திக்கொள்ள விரும்பினேன்'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தின் மற்றோர் அறிவிப்பில், ‘‘நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ் உண்மை என்பது உறுதியானபோது தன்னையே நொந்தவர்களாக ‘‘அல்லாஹ்வின் தூதரின் இந்தச் செய்தி எனக்குத் தெரியாமலாகிவிட்டதே! இதற்குக் காரணம் நான் கடை வீதிகளில் வியாபாரம் செய்ததுதான் என உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னியர் வீட்டினுள் பார்வையைச் செலுத்தமாட்டார்
மார்க்கம் கற்றுத் தந்த சபை ஒழுக்கங்களைப் பேணும் முஸ்லிம் தான் அமர்ந்திருக்கும் வீட்டின் உட்புறங்களில் பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் காணத் தகாதவைகளிலிருந்து கண்களைப் பேணிக் கொள்ள முடியும். இதுவே வெட்க உணர்வும், உயர் பண்புகளுமுடைய முஸ்லிமின் சிறப்புத் தன்மையாகும். அனுமதிக்கப்படாத இலக்குகளில் பார்த்து, பிறரது குறைகளை ஆராய்ந்து, அன்னியரின் அந்தரங்கங்களை ஆய்வு செய்பவர்களின் கண்களைக் குத்திக் குருடாக்கி விடவேண்டுமென நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒரு சமுதாயத்தவன் வீட்டினுள் அவர்களது அனுமதியின்றி எவரேனும் பார்த்தால் அவனது கண்களைத் தோண்டிவிடுவது அந்தச் சமுதாயத்தவருக்கு அனுமதிக்கப்பட்டதாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)


சபையின் ஓரத்தில் அமர்வார்

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம், சபை ஒழுக்கங்களைப் பேண வேண்டும். இது நபி (ஸல்) அவர்களின் சொல்லையும், செயலையும் பின்பற்றுபவர்கள் கைக்கொள்ள வேண்டிய உன்னதப் பண்பாகும். அப்பண்புகளை ஏற்று நடப்பது சமூக மேம்பாட்டுக்கும். உயர்பண்புகள் செழித்தோங்குவதற்குமான அடையாளமாகும்.

சபை ஒழுக்கங்களில் முஸ்லிம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் ஒழுக்கம், மக்கள் சபையில் அமர்ந்திருக்கும்போது அவர் இடையில் வந்தால் அதன் ஓரத்தில் அமரவேண்டும் என்பதாகும். பிடரிகளைத் தாண்டிச் செல்லக் கூடாது. சபை நடுவே உட்காருவதற்காக மக்களை விலக்கிக் கொண்டு செல்லக்கூடாது. இது நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்குக் கற்றுக்கொடுத்த வழிமுறையாகும்.
ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘‘நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தால் சபையின் இறுதிப் பகுதியில் அமர்பவர்களாக இருந்தோம்.'' (ஸுனன் அபூதாவூத்)

இந்த மேம்பட்ட ஒழுக்கப் பண்புகள் அருளப்பெற்ற முஸ்லிம், சபையில் அமர்ந்து கொண்டிருக்கும் இரு மனிதர்களிடையே அனுமதியின்றி அவர்களைப் பிரித்து பலவந்தமாகச் சென்று அமர்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துக் கூறினார்கள்: ‘‘(அமர்ந்திருக்கும்) இரு மனிதர்களை அவர்களது அனுமதியின்றி பிரித்துவிட எவருக்கும் அனுமதியில்லை.'' (ஸுனனுத் திர்மிதி)

சபையாக இருந்தாலும், இல்லையென்றாலும் இரு மனிதர்களிடையே தன்னைத் திணித்துக் கொள்வது மிக வெறுக்கத்தக்க செயலாகும். இதில் ஏற்படும் அருவருப்பை இஸ்லாம் வன்மையாகக் கண்டித்து அதைத் தவிர்த்து கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறது.

ஸயீதுல் மக்ப (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரழி) அவர்களைக் கடந்தபோது அவர்களுடன் ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார். நான் அவ்விருவருக்குமிடையே நின்றேன். இப்னு உமர் (ரழி) எனது நெஞ்சில் தட்டியவர்களாக, ‘‘இரண்டு நபர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டால் அனுமதியின்றி அவ்விருவருடன் நிற்காதே, அவர்களோடு அமராதே'' என்றார்கள். நான், ‘‘அபூ அப்துர் ரஹ்மானே! அல்லாஹ் உங்களது காரியங்களைச் சீர்படுத்தட்டும். உங்கள் இருவரிடமிருந்து நன்மையான விஷயங்களைக் கேட்டறிந்து கொள்ளலாம் என்றே நான் விரும்பினேன்'' என்று கூறினேன். (அல் அதபுல் முஃப்ரத்)

தன்னைக் கண்டவுடன் சபையில் அமர்ந்திருக்கும் எவரேனும் எழுந்து தன் இடத்தை அளித்தால் அதை ஒப்புக்கொள்ளக் கூடாது. இதுதான் இறையருள் பெற்ற கண்ணியமிகு நபித்தோழர்களின் நடைமுறையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்களில் எவரும் சபையில் அமர்ந்திருப்பவரை எழுப்பிவிட்டு பின்பு அந்த இடத்தில் அமர வேண்டாம். மாறாக நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒருவர் தம்முடைய இடத்திலிருந்து எழுந்து கொண்டு தமக்கு இடமளித்தால் இப்னு உமர் (ரழி) அவர்கள் அந்த இடத்தில் அமரமாட்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கேற்ப மக்கள் கூடும் சபைகள் அமைக்கப் பெறவேண்டும். 
ஒவ்வொருவரும் அதைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொள்ள வேண்டும். குறிப்பாக இவரைச் சுற்றி மக்கள் கூடியிருந்தால் நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த சபை ஒழுக்கங்களைப் பேண வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தங்களது சபையில் அமர்ந்திருப்பவர்களின் அந்தஸ்தை உரிய முறையில் அளித்து வந்தார்கள். சபையிலுள்ள ஒவ்வொருவருக்கும், ‘நபி (ஸல்) அவர்கள், நம்மை விட அதிகமாக வேறெவரையும் கண்ணியப்படுத்தவில்லை' என்ற எண்ணம் ஏற்படும். எவரையும் குறை கூறவோ, இழிவு படுத்தவோ, எவரது குறையையும் ஆராயவோ மாட்டார்கள். நன்மையான விஷயங்களையே பேசுவார்கள். பிறரின் பேச்சை அவரே முடிக்காதவரை நபி (ஸல்) அவர்கள் முடித்துக் கொள்ள மாட்டார்கள். (ஹயாதுஸ் ஸஹாபா)

சபைகளில் இயன்றளவு கொட்டாவியைத் தவிர்ப்பார்
இஸ்லாம் கூறும் சபை ஒழுக்கங்களை அறிந்து, அதைப் பேணி வரும் முஸ்லிம், சபைகளில் கொட்டாவி விடுவதிலிருந்து இயன்றளவு தன்னைத் தடுத்துக்கொள்ள வேண்டும். கொட்டாவி வரும்போது அதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இது பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒருவருக்கு கொட்டாவி வந்தால் இயன்றளவு அதைக் கட்டுப்படுத்திக் கொள்ளட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கொட்டாவி கட்டுப்படுத்த இயலாத அளவில் வெளிப்பட்டால் வாயில் கைவைத்து மூடிக்கொள்ள வேண்டுமென்பதும் நபி (ஸல்) அவர்களின் தூய வழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒருவருக்கு கொட்டாவி வந்தால் அவர் தனது கரத்தால் வாயை மூடிக்கொள்ளட்டும். (இல்லையெனில்) நிச்சயமாக ஷைத்தான் நுழைந்து விடுவான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

சபைகளில் கொட்டாவி விடுவது பண்புள்ள மனிதருக்குப் பொருத்தமற்ற செயலாகும். எனவே அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இயலாதபோது கரத்தால் வாயை மூடி பிறரின் பார்வையிலிருந்து மறைத்துக் கொள்வார். அதன் மூலம் சபையோருக்கு அருவருப்பு ஏற்படுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியும்.


தும்மலின் போது இஸ்லாமிய ஒழுக்கங்களைப் பேணுவார்

சபைகளில் கொட்டாவி விடுவதற்கான நியதிகளை வகுத்தளித்தது போல் தும்முவதற்கான ஒழுக்க நியதிகளையும் இஸ்லாம் வகுத்தளித்துள்ளது. தும்மல் வரும்போது முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், என்ன கூறவேண்டும், தும்மியவருக்கு எவ்வாறு பதிலளித்து துஆச் செய்ய வேண்டுமென்பதை இஸ்லாம் கற்பிக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் அருளியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘‘நிச்சயமாக அல்லாஹ் தும்முவதை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் ஒருவர் தும்மிவிட்டு அல்லாஹ்வைப் புகழ்ந்தால், அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் ‘யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உன் மீது அருள் புரியட்டும்) என்று பிரார்த்திப்பது அவர் மீது கடமையாகும். அறிந்து கொள்ளுங்கள்! கொட்டாவி என்பது ஷைத்தானின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும். உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி வந்தால் இயன்றளவு அவர் அதைத் தடுக்கட்டும். ஏனெனில் நிச்சயமாக உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால் அதைக் கண்டு ஷைத்தான் சிரிக்கிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

முஸ்லிமின் ஒவ்வொரு அசைவிற்கும் இஸ்லாம் வகுத்துத் தந்த சட்டங்களை எண்ணிப் பார்க்கும் முஸ்லிம், மார்க்கம் நன்மையை நாடியே அனைத்தையும் தனக்கு விதியாக்கி உள்ளது என்று உறுதிகொள்வார். இன்னும் அதன் நோக்கம் தன்னை அல்லாஹ்வுடன் தொடர்புடையவராக ஆக்கவேண்டும் என்பதுதான் என விளங்கிக் கொள்வார்.

ஒருவர் தும்மினால் அவர் ‘அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறவேண்டும். அதைக் கேட்பவர் ‘யர்ஹமுகல்லாஹ்' என்று கூற வேண்டும். தும்மியவர் இதற்கு நன்றி கூறும் விதமாக ‘யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும்' (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி உங்களது உள்ளத்தை சீராக்குவானாக!) என்ற துஆவைக் கூறவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்களில் ஒருவர் தும்மினால் அவர் ‘அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறட்டும்! (அதைக் கேட்கும்) அவரது சகோதரர் அல்லது தோழர் ‘யர்ஹமுகல்லாஹ்' என்று கூறட்டும்!. அவர் ‘யர்ஹமுக்கல்லாஹ்' என்று கூறினால் (தும்மியவர்) ‘யஹ்தீக்கு முல்லாஹு வயுஸ்லிஹு பாலகும்' என்று சொல்லட்டும்.''(ஸஹீஹுல் புகாரி)

இந்த துஆவில் உள்ள ‘யர்ஹமுக்கல்லாஹ்' என்ற வாக்கியம் அரபியில் ‘தஷ்மீத்' என்று கூறப்படும். தும்மியவர் அல்லாஹ்வைப் புகழ்ந்ததை ஆமோதித்து அதை வெளிப்படுத்தும் விதமாக அதனைக் கூறவேண்டும். அவர் அல்லாஹ்வைப் புகழவில்லையெனில் அதைச் சொல்லக்கூடாது.

இது பற்றி கருணை நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்களில் ஒருவர் தும்மிவிட்டு ‘அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறினால் ‘தஷ்மீத்'தைக் கூறுங்கள். அவர் அல்லாஹ்வைப் புகழவில்லையெனில் ‘தஷ்மீத்'தைக் கூறாதீர்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடமிருந்த இரு மனிதர்கள் தும்மினர். நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்குத் ‘தஷ்மீத்'தைக் கூறினார்கள். மற்றவருக்குக் கூறவில்லை. தஷ்மீத் கூறப்படாத மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அம்மனிதர் தும்மியபோது ‘தஷ்மீத்'தைக் கூறினீர்கள். எனக்குக் கூறவில்லையே?'' என்றபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்தார். நீர் புகழ வில்லையே'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

தும்மலின்போது சொல்லப்பட வேண்டிய இந்த வாக்கியத்திற்கு நபி (ஸல்) அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்ததன் காரணம் என்னவெனில், அது மனித வாழ்வின் இலட்சியமான அல்லாஹ்வை திக்ரு செய்து அவனைப் புகழ்வதை உள்ளடக்கியதுடன், முஸ்லிம்களிடையே தூய அன்பையும், சகோதரத்துவ உணர்வுகளையும் வளரச் செய்கிறது என்பதாகும்.

தும்மியவர் தனது உணர்வுகளும், உடல் இயக்கமும் சீராகச் செயல்பட்டு வருவதற்கு நன்றி செலுத்தும் விதமாக அல்லாஹ்வைப் புகழ்கிறார். அதைக் கேட்பவர் அல்லாஹ்வைப் புகழ்வதை செவியேற்கச் செய்ததற்கு நன்றி சொல்லும் விதமாக தும்மியவருக்கு அல்லாஹ்வின் அருளைக் கோரி பிரார்த்திக்கிறார். அல்லாஹ்வைப் புகழ்பவர் என்றென்றும் அல்லாஹ்வின் அருளுக்குரியவராகிறார். எனவே தும்மியவர் ‘தஷ்மீத்' கூறியவருக்கு அதைவிட அழகிய நீண்ட பிரார்த்தனையைச் செய்கிறார். அந்த இடத்தில் பரஸ்பர அன்பும், நன்மையும் பொங்கி உருவாகின்றன.
இவ்வாறே, முஸ்லிம்களின் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வையும் இஸ்லாம் எதிர்கொள்கிறது. அந்தச் சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் தங்களது இரட்சகனைத் துதிக்க வேண்டும். அல்லாஹ்வைப் புகழ்வதில் அவர்களது நாவுகள் திளைக்க வேண்டும். அன்பும், கருணையும், சகோதரத்துவமும் அவர்களிடையே நிலைபெற வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது.

தும்மலின்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள் என்னவெனில் தும்முபவர் தனது கரத்தால் வாயை மூடி, இயன்றளவு அதன் சப்தத்தைக் குறைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இதையே வழமையாகக் கொண்டிருந்தார்கள்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘‘நபி (ஸல்) அவர்கள் தும்மும்போது தனது வாயின் மீது கரத்தையோ துணியையோ வைப்பார்கள். அதன் மூலம் சப்தத்தைக் குறைத்துக் கொள்வார்கள்.'' (ஸுனன் அபூதாவூத்)


பெண்களுக்கு ஒப்பாகமாட்டார்

சன்மார்க்கமான இஸ்லாமிய சமூகத்தில் ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாகக்கூடாது. அவ்வாறு ஓர் இனம் மற்றொரு இனத்தவரைப் போன்று உருமாறிக் கொள்வது மார்க்கத்தால் விலக்கப்பட்டதாகும். இஸ்லாமிய சமூகத்தில் ஆணுக்கென சில பண்புகளும், தனித் தன்மையும், முக்கியத்துவமும் உள்ளன. அவ்வாறே பெண்ணுக்கென சில பண்புகளும், தனித்தன்மையும், முக்கியத்துவமும் உள்ளன. அந்த வேறுபாடுகள் அவ்விருவடையே தெளிவான முறையில் வெளிப்பட வேண்டும். எனவே பெண்களைப் போன்று தோற்றமளிக்கும் ஆண்களையும், ஆண்களைப் போன்று தோற்றமளிக்கும் பெண்களையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘பெண்ணைப் போன்று நடந்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று நடந்துகொள்ளும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.''

மற்றோர் அறிவிப்பில், ‘‘ஆண்களில் பெண்களுக்கு ஒப்பாகு பவர்களையும், பெண்களில் ஆண்களுக்கு ஒப்பாகுபவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்'' என வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி)
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களின் ஆடையை அணியும் ஆண்களையும், ஆண்களின் ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.'' (ஸுனன் அபூதாவூத்)

ஆனால், இன்று இஸ்லாமிய சமூகத்தில் சில வாலிபர்களைக் காணும்போது நெஞ்சமெல்லாம் குமுறுகிறது. இவர்கள் ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளச் சிரமம் ஏற்படும் வகையில் பெண்களைப் போன்று நீளமான முடிகளைத் தொங்க விட்டிருக்கிறார்கள். அவ்வாறே கழுத்துகளில் தங்கச் சங்கிலிகளைத் தொங்க விட்டுக் கொண்டு அதை வெளிக்காட்ட சட்டை பொத்தான்களை கழற்றிவிடுகிறார்கள்.

அவ்வாறே சில பெண்கள் உடலுறுப்புகளை வெளிக்காட்டும் இறுக்கமான ‘பேண்ட்'களை அணிந்து கொண்டு, ஆண், பெண் இருவரும் அணியும் சட்டைகளை அணிந்து கொள்கிறார்கள். தலைகளைத் திறந்து விட்டவர்களாக, சட்டைக் கைகளை மடித்து விட்டுக் கொண்டு வாலிபர்களைப் போன்று காட்சியளிக்கிறார்கள்.

இவ்வாறான கலாச்சாரங்கள் முஸ்லிம் சமூகத்தின் கேவலமாகும். இதை மேற்கத்திய பாவிகளும், கிழக்கத்திய காஃபிர்களும் சம அளவில் சமுதாயத்தினுள் புகுத்தி விட்டனர். வீண் விளையாட்டுகள், ஆபாசமான கேளிக்கைகள் என மனிதனை அழிக்கும் அனைத்து வழிகேடுகளும் இளைய சமுதாயத்தவரிடம் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் மனித இயல்புக்கேற்ற செயல்களிலிருந்து விலகிச் செல்கிறார்கள். இதன் விளைவாக இளமைப் பருவத்திலுள்ள ஆண், பெண் இருவரும் இலக்கின்றிப் பயணம் செய்து தட்டுத்தடுமாறி நிற்கும்படியான கசப்பான அனுபவங்களையும் இழிவான முடிவையும் வெகுமதியாகப் பெறுகிறார்கள். இந்த வழிகேடுகளின் நெருப்பு நமது சமுதாயத்தையும் தீண்டிவிட்டது.
அந்நிய கலாச்சார போதையூட்டப்பட்ட முஸ்லிம் ஆண்களும், பெண்களும் இஸ்லாமிய சமுதாயத்திற்குள் அந்தக் கீழ்த்தரமான கலாச்சாரத்தைப் புகுத்திவிட்டார்கள். அவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் எவ்விதத் தகுதியுமின்றி திருட்டுத்தனமாக நுழைந்து கொண்டவர்கள்.
இச்சமுதாயத்திற்குள் இவர்களின் கெடுதிகளை விட்டும் நமது சமுதாய ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
 


முன்மாதிரி முஸ்லிம் - முடிவுரை

இதுவரை நாம் கண்ட பாடங்களில் இஸ்லாம் விரும்பும் முன்மாதிரி முஸ்லிமின் இலக்கணம் என்ன என்பதையும் அதுகுறித்த தெளிவான இறைவசனங்கள், ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் எனப் பல்வேறு சான்றுகளையும் கண்டோம். அவையனைத்தும் முஸ்லிக்கு தனது இரட்சகனுடனான தொடர்பையும், தனது ஆன்மா, அறிவு, உடலுக்கிடையே விவேகமான சமநிலையைப் பேணுவது பற்றியும் தெளிவுப்படுத்துகின்றன.
அவ்வாறே அச்சான்றுகள் பெற்றோர், மனைவி, மக்கள், இரத்த பந்துக்கள், அண்டை வீட்டார், சகோதரர்கள், தோழர்கள், சமூக உறுப்பினர்கள் அனைவரின் தொடர்புகளையும், உரிமைகளையும் விவரிக்கின்றன.

மேற்கண்ட பாடங்களிலிருந்து நமக்குத் தெரிய வரும் விஷயம் என்னவெனில், இஸ்லாமிய வாழ்க்கை நெறியைக் கற்பிக்கும் போதனைகளைப் பெற்ற மனிதர்தான் தனது தனி மனித வாழ்வு, சமூகத்துடனான தொடர்புகள் என இரண்டிலும் தனித்தன்மை வாய்ந்த பண்புகளை ஏற்று மேன்மைக்குரிய மனிதராகத் திகழ முடியும்.
வரலாற்றின் நீண்ட நெடுங்காலமாகவே மனிதகுலத்தைப் பண்படுத்தி, மேன்மைப்படுத்தும் வழிமுறைகள் மனிதனுக்குக் கிடைக்காமல் இருந்தன. ஆனால் இறைவேதமான அல்குர்ஆனின் வசனங்களாலும், கருணை நபியின் ஒளிமிகு வழிமுறையாலும் முஸ்லிம் வாழ்க்கையில் மிக பாக்கியம் பெற்றவராகிறார்.

காரணம் என்னவெனில், யூனான் தேசத்தவரைப் போன்று தத்துவ இயலை மட்டுமோ, இந்தியர்களைப் போன்று கற்பனை ஆன்மீகத்தை மட்டுமோ, ரோமர்களைப் போன்று உடல் வலிமையை வளர்த்துக் கொள்வதை மட்டுமோ இஸ்லாம் மனிதர்களிடம் வலியுறுத்தவில்லை. அவ்வாறே இன்றைய காலக் கட்டத்தில் கிழக்கத்திய, மேற்கத்திய நாடுகள் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் பொருளாதாய வாழ்வுக்கு அளிக்கும் அளவுக்கதிகமான முக்கியத்துவத்தையும் இஸ்லாம் விரும்புவ தில்லை.
மனிதகுல மேம்பாட்டில் இஸ்லாமியக் கண்ணோட்டமெல்லாம் அவர்களது ஆன்மா, அறிவு, உடல் ரீதியிலான அனைத்துத் தரப்பிலும் நடுநிலையான பூரணத்துவத்தை நோக்கி இட்டுச் செல்வதாகும். இது விஷயத்தில் மனிதனின் ஆன்மா, அறிவு, உடலின் இயல்பான உணர்வுகளையும் ஆற்றல்களையும் ஆராய்ந்து, அதற்கேற்ற நேரிய, நிலையான கண்ணோட்டங்களை இஸ்லாம் கொண்டிருக்கிறது.

முஸ்லிமின் தனித்தன்மை சமத்துவமும், உயர்வும், பூரணத்துவமும் கொண்டதாக வெளிப்படுகிறது. உடல், அறிவு, ஆன்மா என்ற மூன்றில் ஒன்று மற்றொன்றை மிஞ்சாது. ஆனால், வழிகேடும், அறிவீனமும், மூடத்தனமும், மனோ இச்சைகளும் ஆட்சி செய்யும் சமூகங்களில் இம்மூன்றுக்கிடையே சமத்துவம் பேணப்படாமல் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நாம் முன்சென்ற பக்கங்களில் கண்டதுபோல முஸ்லிம், அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணிந்தவராக, இறை வழிகாட்டலை ஏற்றவராக, அவனது பாதுகாவலில் அடைக்கலம் புகுந்தவராக, அவனது விதியைப் பொருந்திக் கொண்டவராக, எல்லா நிலைகளிலும் இரட்சகனின் திருப்பொருத்தத்தை மட்டுமே நாடியவராக இருப்பார்.

முஸ்லிம் தனது உடலுக்கு அளிக்க வேண்டிய உரிமைகளை நடுநிலையோடு அளிப்பார். வானம், பூமியை வசப்படுத்தித் தந்து, வானவர்களை ஸஜ்தா செய்யுமாறு உத்தரவிட்டதன் மூலம் தனக்கு இரட்சகன் அளித்த கௌரவத்தைப் பேணிக்கொள்ளும் வகையில் உள்ளத்திற்கும் உயிருக்கும் முக்கியத்துவம் அளிப்பார். அல்லாஹ் அளித்த இந்த கண்ணியம் வெறும் உடலுக்கானதல்ல. மாறாக அந்த உடல், நுட்பமான அறிவையும், நேரிய சிந்தனையையும், அனைத்து வஸ்துக்களின் எதார்த்தங்களை விசாலமாக அறிந்து கொள்ளும் ஆற்றலையும் உள்ளடக்கியுள்ளது என்ற காரணத்தினால்தான்.

மேலும் மனிதன் வெறும் உடலாலும் அறிவாலும் மட்டும் உருவாக்கப்பட்டவனல்ல. அவனுக்கு துடிக்கும் இதயமும், மலர்ந்த ஆன்மாவும், உணர்வுடைய மனமும் உண்டு. இந்த உலகாதாய வாழ்விலிருந்து மேலோங்கிச் செல்வதற்கான ஆர்வம் அவனிடம் குடிகொண்டிருக்கும். இதன் காரணமாக உடல் மற்றும் அறிவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றே ஆன்ம வளர்ச்சிக்கும் இஸ்லாம் சமமாக முக்கியத்துவமளிக்கிறது. இரண்டில் ஒன்று மற்றொன்றை மிகைத்துவிட அனுமதிப்பதில்லை.
பெற்றோருடன் உண்மையான உபகாரத்துக்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்து, அவர்களுடன் மிகுந்த அன்புடனும், ஆழ்ந்த கருணையுடனும், பூரண ஒழுக்கத்துடனும் நடந்துகொள்வது அவரது தனித்தன்மையாகும்.

அவரது தனித்தன்மை மனைவியுடன் முன்னுதாரணமான நல்லுறவை மேற்கொள்ளத் தூண்டும். மேலும் மனைவியுடன் மென்மையான அணுகுமுறையும் விவேகமான நடத்தையும் மேற்கொண்டு அவளது விருப்பங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கான அறிவாற்றலைக் கொண்டிருக்கத் தூண்டும்.
அந்தத் தனித்தன்மை பிள்ளைகளிடம் அவருக்குரிய மகத்தான பொறுப்புகளை நிறைவேற்றத் தூண்டும். அவர்களை நேசத்துடன் அரவணைத்து, அவர்கள் மீதான கண்காணிப்பிலும், ஒழுக்கப் பண்புகளைக் கற்றுக் கொடுப்பதிலும், அலட்சியம் செய்யாமல் இஸ்லாம் வலியுறுத்தும் நற்பண்புகளை அவர்களில் பிரகாசிக்கச் செய்வதும் முஸ்லிமுடைய தனித்தன்மையின் வெளிப்பாடாகும்.
அந்தத் தனித்தன்மை, இரத்த பந்தமுடைய உறவினருடன் உறுதியான பிணைப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கான கடமைகளை நிறைவேற்றி, அவர்களது அந்தஸ்தைப் பேணி எல்லாக் காலங்களிலும், சூழ்நிலைகளிலும் முஸ்லிமை அவர்களுடன் இணைந்திருக்கத் தூண்டும்.
உண்மை முஸ்லிமின் தனித்தன்மை, அவர் அண்டை வீட்டாருடன் முன்னுதாரணமான நன்னடத்தையை மேற்கொள்ளத் தூண்டும். மேலும் அவர்களுடன் நல்லுறவைக் கடைப்பிடித்தல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், நோவினை செய்வதிலிருந்து விலகியிருத்தல், இறைத்தூதரால் உபதேசிக்கப்பட்ட பண்புகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றுக்கு அவரது தனித்தன்மை வழிகாட்டும்.
அண்டை வீட்டாருக்கு எவ்விதமான தீங்கும் செய்யலாகாது. அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் எவ்விதக் குறைவும் செய்துவிடாமல், அவர்களுக்கு உதவியும், உபகாரமும் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டும். அவர்களுக்குச் செய்யும் உபகாரங்களுக்கு பிரதியுபகாரமோ, நன்றியோ எதிர்பார்க்கக் கூடாது. இப்பண்புகள் அனைத்தையும் அவரது தனித்தன்மை வெளிப்படுத்தும்.

சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடனான அவரது தொடர்புகள் பரிசுத்தமானதாகும். அவை அல்லாஹ்வின் நேசத்தால் ஏற்பட்ட தொடர்பாகும். அவை நபிவழி என்ற ஒளிமிகுந்த பாதையால் உருவாக்கப்பட்ட தூய்மையான சகோதரத்துவ உறவாகும்.

உறுதியான உறவுகளும், மகத்தான நேசமும் பண்புள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கியது. அவை மனித குலத்துக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் முன்னுதாரணமான மனிதர்களாக முஸ்லிம்களை திகழச் செய்தது. அவர்களில் இஸ்லாமியப் பண்புகள் நிலை பெற்று பிரகாசித்தன. அதனால் அவர்கள் தங்களது சகோதரர்களுடன் கடின சிந்தையற்ற நேசர்களாக, மோசடியற்ற நம்பிக்கையாளர்களாக, ஏமாற்றாத நலம் நாடுபவர்களாக, வன்மையற்ற மென்மையானவர்களாக, கபடு சூதற்ற மன்னிக்கும் மாண்பாளர்களாகத் திகழ்ந்தார்கள். மேலும் தங்களைவிட தங்கள் சகோதரர்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளல்களாக, அவர்களின் மறைவில் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் சிறந்த உள்ளம் படைத்தவர்களாகவும் திகழ்ந்தார்கள்.
அவர் சமூகத்தின் அனைத்து மக்களிடமும் கொண்டுள்ள உறவு, இஸ்லாம் வலியுறுத்தும் ஒட்டுமொத்த நற்குணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். அப்பண்புகள் ஏதேனும் ஒரு தேவைக்காக, இலட்சியத்துக்காக வெளிப்பட்டு அந்த இலட்சியத்தை அடைந்த பின் ஓடி மறையும் தற்காலிகப் பண்புகளல்ல. மாறாக இறைமறையாலும், நபிவழியாலும் போதிக்கப்பட்ட என்றென்றும் நிலைத்து நிற்கும் நற்பண்புகளாகும். இப்பண்புகளை உறுதியாகக் கடைபிடிப்பது முஸ்லிமின் கடமையாகும். அதில் குறை செய்தால் இறைவனால் விசாரிக்கப்படுவார்.

உண்மை முஸ்லிம் அனைத்து மனிதர்களுக்கும் உண்மையான வராகத் திகழ்வார் அவரிடம் ஏமாற்றுதலோ, வஞ்சமோ, மோசடியோ இருக்காது ஒரு போதும் பொறாமைப்பட மாட்டார் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் மன்னிக்கும் மாண்பு கொண்டிருப்பார் வெட்க உணர்வும், மென்மையான நடத்தையும் கொண்டு விவேகத்துடன் நடந்துகொள்வார் அருவருப்பான, ஆபாசமான பேச்சுகளையும் பிறரை ஏசுவதையும் தவிர்த்துக் கொள்வார் முறையற்ற வகையில் ‘காஃபிர், ஃபாஸிக்' என எவர் மீதும் விஷ அம்புகளை எய்யமாட்டார் அவல் நாண உணர்வு மிகைத்திருக்கும் தனக்குத் தேவையற்றதில் ஈடுபடமாட்டார் மனிதர்களைப் பற்றி புறம் பேசுவதிலிருந்தும், அவர்களிடையே கோள் சொல்லித் திவதிலிருந்தும் விலகியிருப்பார் அபாண்டமான வார்த்தைகளையும், தீய எண்ணங்களையும் தவிர்த்திடுவார். ஏதேனும் ரகசியம் அவரிடம் கூறப்பட்டால் பகிரங்கப்படுத்தாமல் அதைப் பாதுகாப்பார் எவரிடமும் ஆணவமோ, பெருமையோ இன்றி பணிந்து நடப்பார் முதியோரையும் சான்றோர்களையும் மதித்து கண்ணியப்படுத்துவார் நல்லோர்களையே சார்ந்திருப்பார்.
மனிதர்களுக்கு எல்லா வகையிலும் உபகாரம் செய்வதிலும், அவர்களது துன்பங்களை அகற்றுவதிலும் ஆர்வம் கொள்வார் முஸ்லிம்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தப் பாடுபடுவார், விவேகத்துடன், அழகிய உபதேசத்தால் தனது இரட்சகனின் வழியை நோக்கி அழைத்துக் கொண்டிருப்பார் நோயாளிகளை நலம் விசாரிப்பார் ஜனாஸாவைப் பின்தொடர்வார் உபகாரத்துக்கு பிரதியுபகாரம் செய்து அதற்கு நன்றி செலுத்துவார் மனிதர்களோடு கலந்துறவாடி அவர்களால் ஏற்படும் இன்னல்களை சகித்துக்கொள்வார் தன்னால் இயன்ற அளவு மனித இதயங்களில் மகிழ்ச்சியை நிரப்புவார்.
நன்மைக்கு வழிகாட்டுவார் எல்லாக் காரியங்களிலும் இலகுவானதையே தேர்ந்தெடுத்து, சிரமமானவைகளைத் தவிர்த்திடுவார் தனது தீர்ப்புகளில் நீதத்தை நிலைநாட்டுவார் எவருக்கும் அநீதமிழைக்காமல், நயவஞ்சகத்தனமின்றி செயல்படுவதுடன் முகஸ்துதிக்காக எச்செயலையும் செய்யமாட்டார் தனது கடமைகளை அலட்சியம் செய்யமாட்டார் எந்த நிலையிலும் நேர்வழியிலிருந்து தடம் புரளாமல், நிறம் மாற்றிக் கொள்ளாமல் நடந்து கொள்வார் உயர்வானதையே நேசித்து கீழ்த்தரமான காரியங்களைப் புறக்கணிப்பார் குத்தலாகப் பேசமாட்டார்.

மனிதர்களிடமிருந்து ஆணவத்துடன் தனது முகத்தைத் திருப்பிக் கொள்ளமாட்டார் கொடைவள்ளலாகத் திகழ்வார் தன்னிடம் உபகாரம் பெற்றவர்களிடம் அதைச் சொல்லிக்காட்டி நோவினை செய்யமாட்டார் விருந்தினரைக் கண்ணியப்படுத்துவார் அவர்களால் ஏற்படும் சிரமங்களால் மனம் சுருங்கிப் போகாமல் பொறுமையுடன் சகித்துக் கொள்வார் இயன்றளவு தன்னைவிட பிறரைத் தேர்ந்தெடுப்பார் துன்பப்படுவோரின் துன்பத்தை அகற்றுவார் பிறரிடம் கையேந்தித் திவதிலிருந்து தன்னைப் பேணிக் கொள்வார்.

அவர் பிறரை நேசிப்பவர், பிறரால் நேசிக்கப்படுபவர் தனது அனைத்து பழக்கவழக்கங்களையும் இஸ்லாம் எனும் அளவுகோலால் சீர்படுத்திக்கொள்வார் உண்பது, குடிப்பது, ஸலாம் கூறுவது, மனிதர்களைச் சந்திப்பது, அவர்களிடம் சென்று இணைந்து அமர்வது போன்ற அனைத்து வகையான காரியங்களிலும் இஸ்லாமின் ஒழுக்கப் பண்புகளைப் பேணிக்கொள்வார்.

இவையனைத்தும் இஸ்லாம் வலியுறுத்தும் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கொண்டுள்ள முன்மாதிரி முஸ்லிமின் உருவமாகும். இந்த மதுரமான ஊற்றில் தாகம் தீர்த்துக் கொள்ளும் அவரது அறிவும், ஆன்மாவும், இதயமும் ஈமானியப் பேரொளியால் பிரகாசிக்கும்.

நிச்சயமாக மனிதனை நற்பண்புகளின் மிக உயர்ந்த மட்டத்திற்கு இட்டுச்செல்வதும், அவைகளை அவனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வைப்பதுதான் மிகப் பெரியஒரு புரட்சியும், இலட்சியமுமாகும். இதை நடைமுறைப்படுத்தவே எத்தனையோ அமைப்புகளும், மதங்களும், தத்துவங்களும் முயற்சி செய்தாலும் அவைகளால் அதை எட்டிப் பிடிக்கவும் இயலவில்லை. இன்று உலகில் எத்தனையோ அறிவியல் புரட்சிகளும், அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டு நம்மை ஆச்சரியமூட்டினாலும் அது இஸ்லாமின் இந்தப் புரட்சிக்கு சமமாக முடியாது.

ஏனெனில், படைப்பினங்களில் மனிதனே மிக உயர்ந்தவன். மாபெரும் முயற்சிகளும், கலாச்சாரங்களும் அவனின் ஈடேற்றத்திற்காகவே பல்லாயிரம் ஆண்டுகளாக உழைத்து வருகின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் மனிதனின் ஆசைகளை நிறைவேற்றுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. ஆகவே, அவைகள் அனைத்தும் குறையுள்ளவைகளாகவே நிற்கின்றன.
மனிதனின் ஈடேற்றம் அவனது மனிதநேயத்தில் மறைந்திருக்கிறது. தற்காலத்தின் மனிதக் கண்டுபிடிப்புகள், உதாரணமாக பீரங்கிகள், ராக்கெட்டுகள், செயற்கைக் கோள்கள், தொலைக்காட்சிகள், கணிணிகள் மேலும் இதுவல்லாத மற்றவைகள் மனிதனின் மனிதநேயத்தைப் பண்படுத்த முடியாது.

ஆத்மாவின் மீதும், அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை-தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! எவன் (பாவங்களை விட்டும்) தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டானோ அவன் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான். எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். (அல்குர்ஆன் 91:7-10)

சமூக உயர்வென்பது விஞ்ஞான வளர்ச்சியை அளவுகோலாகக் கொண்டதல்ல. விஞ்ஞானம் பொருளாதாய உலகிற்கு சில வசதிகளைத் தந்துள்ளது, அவ்வளவுதான். மனிதகுல மேம்பாடு என்பது அதைவிடச் சிறந்ததைக் கொண்டு அமைக்கப்படவேண்டும். அன்பு, அர்ப்பணிப்பு, பிறரைத் தேர்ந்தெடுத்தல், சொல், செயல், சிந்தனைகளில் தூய்மை என அது சமூகத்தில் மனிதநேயச் சிந்தனைகளை மலரச் செய்வதாகும். இதுவே உண்மையான சமூக உயர்வாகும்.
ஏனெனில், தனிமனிதர்கள்தான் சமூகங்களின் அஸ்திவாரம். தனி மனிதர்களே சமூகம் எனும் மாளிகையின் தூண்களாவர். தனி மனிதர்களுக்கான போதனைகளைக் கொண்டுதான் நேர்வழி பெற்ற, மனிதநேயமிக்க சமூகம் உயர்வடைகிறது நன்மைகளின் திசைகள் விவடைகின்றன் அழிவுச் சிந்தனையும் தீமை உணர்வுகளும் மனதிலிருந்து அகற்றப்படுகின்றன் அதன் மூலம் மனிதன் சிறந்த குடிமகனாகத் திகழ்கிறான். சிறந்த குடிமக்கள் சேருவதன் மூலம்தான் ஒழுக்கம் மிகுந்த, பரிசுத்தமான, உறுதியான சமூகம் உருவாகிறது.
இஸ்லாமிய சமூகம்தான் பூரணத்துவம் பெற்ற முதன்மையான சமூகமாகும். முஸ்லிம், அச்சமூகத்தில் மேம்பட்ட முறையில் சங்கமிக்கிறார். சத்திய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை ஏற்றுக் கொள்கிறார். அந்தச் சட்டங்கள் வலியுறுத்தும் அறிவார்ந்த, உன்னதமான, மனிதநேயப் பண்புகளைப் பிரதிபலிக்கிறார். சமூகத்துடனான உறவின்போது அப்பண்புகளைப் பிறரும் கடைப்பிடிக்கத் தூண்டுகிறார்.

முஸ்லிம்களின் அணிகளிடையே தனிமனிதன், சமூகம், நாடுகள் தழுவிய மட்டத்தில் தற்காலத்தில் நாம் காணும் பின்னடைவும், பிரிவும், வேறுபாடுகளும் அல்லாஹ்வின் உறுதியான கயிற்றைப் பற்றிப் பிடிப்பதிலிருந்து முஸ்லிம்கள் வெகுதூரம் விலகிச் சென்றுள்ளார்கள் மேலும் அவர்கள் உறுதியான ஈமானியப் பிணைப்பை புறக்கணித்துள்ளார்கள் வலிமையான சகோதரத்துவத்தை தகர்த்திருக்கிறார்கள் என்பதற்கான தெளிவான சான்றுகளாகும்.

இதன் விளைவாக அவர்களது பிரதேசங்களில் வழிகெட்ட அறியாமையின் அழைப்புக் குரல்கள் ஒலிக்கின்றன் இறக்குமதி செய்யப்பட்ட அந்நியத் தத்துவங்கள் அவர்களை ஆக்கிரமித்துள்ளன் முஸ்லிம்களின் மைதானங்களில் அந்நியக் கொடிகள் உயர்த்தப்படுகின்றன் அவர்களது சமூகத்தினுள் நச்சுக்களும், ஆபத்துகளும் ஊடுருவியுள்ளன் அவர்கள் புயலில் அகப்பட்ட தூசியைப் போன்று சிதறடிக்கப்படுகிறார்கள்.

ஆனால் முஸ்லிமின் அடித்தளமான அவரது தனித்தன்மை சீர் பெற்று, சிந்தனை மற்றும் ஆன்மிக ஊற்றுகள் தூய்மையடைந்தால் முஸ்லிமின் வாழ்வில் மேற்கண்ட விபத்துக்கள் நிகழ்வதைத் தவிர்த்திட முடியும்.

இஸ்லாமிய உலகின் மீது நடத்தப்பட்ட போர்கள் முஸ்லிமின் தனித் தன்மையை இலக்காகக் கொண்டதாகும். அவ்வாறே சிந்தனை, ஆன்மிக ஊற்றுகளை வறண்டு போகச் செய்வதற்குமாகும். இஸ்லாமுடனும், முஸ்லிம்களுடனும் போர் புரியும் எதிரிகள், முஸ்லிமின் உறுதியான தனித் தன்மையைத் தகர்த்தெறிவது, ஆன்மா, சிந்தனைகளின் திசைகளைக் களங்கப்படுத்துவது அல்லது அதற்கு முரணான எதிர்த் திசையில் திருப்பி விடுவது என்ற இரண்டு வழிகளில் செயல்படுகிறார்கள்.
இந்த எதிரிகள் முஸ்லிம் நாடுகளுக்குள் ஊடுருவி, அவனது தனித் தன்மையைத் தகர்த்தெறிந்து, எந்த நற்பண்புகள் மற்றும் மேலான மார்க்கத்தின் கோட்பாடுகள் மூலம் இஸ்லாமிய சமூகம் முன்மாதிரியாகத் திகழ்ந்ததோ அவை அனைத்திலிருந்தும் சமூகத்தை நிர்வாணமாக்கி விட்டார்கள்.

முஸ்லிமை அவனது தனித் தன்மையை நோக்கி திருப்பிக் கொண்டு வருவதற்கு ஒரே வழி அவன் அல்லாஹ்வின் மார்க்கத்தின்பால் திரும்பி, இஸ்லாமிய தூதுத்துவத்தின் உண்மையை ஆழமாக விளங்கிக் கொள்வதாகும். அதன் மூலம்தான் முஸ்லிம் இந்த மகத்தான தூதுத்துவத்திற்கான கடமைகளைச் சரிவர நிறைவேற்றி, கொள்கை, வணக்கம், நற்பண்பு என்ற அனைத்திலும் அவைகளைப் பிரதிபலிக்க முடியும்.
அறியாமையின் வழிகளில் தவித்துக்கொண்டும், மூடப் பழக்க வழக்கங்களில் மூழ்கி குலப்பெருமை, பிடிவாதம் என்ற குருட்டுத்தனத்துடன் வாழ்ந்து வரும் நமது சமுதாயம், என்று அடர்ந்த நிழலுடைய அல்லாஹ்வின் மார்க்கத்தின்பால் திரும்புகிறதோ அன்றுதான் முன்பிருந்ததுபோல் உறுதி மிக்க, வீரமிக்க ஒரு சமுதாயமாகத் திகழ முடியும்.

அன்றைய தினத்தில்தான் இச்சமுதாயத்திற்கு முன் எவரும் வாளை உருவமுடியாது, அதன் கொடியைத் தாழ்த்த முடியாது, அதன் படைகளை எவராலும் தோற்கடிக்க முடியாது, ‘உம்மத்துல் ஈமான்' என்று பெயர் கொண்ட ஈமானிய சமுதாயமாகத் திகழும். அல்லாஹ் நிச்சயமாக இந்த ஈமானிய சமுதாயத்திற்கு உதவி செய்வேன் என்று உறுதி கூறுகிறான்.

.... விசுவாசிகளுக்கு உதவி செய்வது நம் மீது கடமையாகும். (அல்குர்ஆன் 30:47)
Previous Post Next Post