"சமநிலை", தவறும் பொழுது நிகழும் தவறுகள்


-உஸ்தாத் SM.இஸ்மாயீல் நத்வி

ஏற்றத்தாழ்வு என்பது மனிதனின் இயல்பான செயல் என்று ஏற்றுக்கொண்டாலும், மார்க்க விடயங்களில் சமநிலையற்ற இந்த ஏற்றத்தாழ்வுகள்  மிகப்பெரிய பாதிப்பை சில நேரங்களில் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்படுத்தும்,

அரபு மொழியில் إفراط و تفريط
 "இப்ஃரஆத் வ தபஃரீத்",
 என்பதாக சமநிலையற்ற ஏற்றத்தாழ்வுக்கு சொல்வார்கள்.

இந்த ஒரு நிலை நமது பொது வாழ்விலும் சரி !!
தனி நபர் ஒழுக்கத்திலும் சரி !!
கொஞ்சம் கொஞ்சமாக நமது அறிவை மழுகங்கச் செய்து அகல பாதாளத்தில் நம்மை அதில் தள்ளிவிடும்.

என்ன கொடுமை என்று சொன்னால் நம்மால் அப்பொழுது உணர்ந்து கொள்ள முடியாது!!

நாம் சரி காண்கிற மார்க்க விடயமாக இருந்தாலும் உலக விடயமாக இருந்தாலும் அது சமநிலை சிந்தனை பெற்றுள்ளதா அல்லது ஏற்றத்தாழ்வு உள்ளதா என்ற பக்குவத்தை நம்மால் எட்ட முடியாது.

இதன் இறுதிநிலை நாமும் அறியாமையில் மூழ்கி சமூகத்தையும் அறியாமையில் தள்ளி விடுவோம்.

அல்லாஹ் திருமறையிலே சமநிலை சிந்தனையை பற்றி சொல்லும் பொழுது இவ்வாறு கூறுகிறான்....

وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا 
 நடு நிலையான சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம்
(அல்குர்ஆன் : 2:143)
தப்ஃஸீர் இப்னு கதீரில் "நடுநிலையான சமுதாயத்தினராக ", என்பதற்கு நீதமான சமுதாயத்தினராக என்ற விளக்கம் தரப்பட்டுள்ளது.

நடுநிலையான சமுதாயம் என்பவர்கள் நீதமானவர்களே , நீதமானவர்கள்  நடுநிலையான ,சமநிலை சிந்தனை கொண்டவர்களே என்பதை நம்மால் விளங்க முடிகிறது.

"விடயங்களில் நடுநிலையானதே சிறந்தது", 
خير الامور اوسطها 
என்ற நபிமொழி பொதுவாக நடுநிலை சிந்தனைக்கு ஆதாரமாக சொல்லப்படுகிறது ஆனால் இது ஆதாரப்பூர்வமான நபிமொழி அல்ல என்று
ஹாபிழ் இராகி இஹ்யாவின் விரிவுரையிலும், இப்னு அப்துல் பர்  இஸ்தித்காரிலும் கூறியுள்ளார்கள்.

அது அறிஞர் பெருமக்களின் ஹிக்மதான ஒரு சொல், நபிமொழி அல்ல.

ஆக அடியேன் இங்கு சொல்ல வரும் நோக்கம் மார்க்கத்தை முறையாக பின்பற்ற வேண்டும் அல்லாஹ் நமது அமல்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு முஸ்லிமான இறை நம்பிக்கையாளரின் கனவாகும்.

ஆனால் நாம் புரிந்து வைத்திருக்கும் மார்க்கத்தை முறையாக அல்லாஹ்வும் தூதரும் சொல்லி இருக்கிறார்களா ? அதை சத்திய சஹாபாக்கள் எவ்வாறு நமக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்கள் என்ற விடயத்தை கவனிக்க தவறும் பொழுது சமநிலை தவறக்கூடிய ஒரு சூழல் ஏற்படுகிறது.

அதே நேரத்தில் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் அமல் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் சில சமயம் நாம் செய்ய வேண்டிய கடமைகளையும் அது தீவிரமாக செயல்பட செய்து வழிதவறச் செய்கிறது.

உதாரணமாக 

துஆவில் சலவாத்து ஓத வேண்டும்
என்ற பல சிறப்புகள் ஆதாரப்பூர்வமான 
நபி மொழிகளில் இடம் பெற்றிருக்கிறது.

அபுதாவூத் கிரந்தத்தில் பதியப்பட்டிருக்கிற அதிகாரப்பூர்வமான நபிமொழி ஒன்றில் ஒரு நபர் துவா செய்யும் பொழுது அல்லாஹ்வை கண்ணியப்படுத்தாமல் நபி அவர்கள் மீது ஸலவாத் சொல்லாமல் ஓதுகிறார் நபியவர்கள் அவரை அழைத்து அவசரப்பட்டு விட்டார், உங்களில் ஒருவர் துவா செய்தால் தனது ரப்பை கண்ணியப்படுத்தி கொள்ளட்டும் அவனைப் புகழ்ந்து கொள்ளட்டும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது ஸலவாத் சொல்லட்டும் பிறகு அவர் விரும்பிய விஷயத்தை துவா செய்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.

سمعَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ رجلًا يَدعو في صلاتِهِ لم يُمجِّدِ اللَّهَ تعالى ولم يُصلِّ علَى النَّبيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ فقالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ عجِلَ هذا ثمَّ دعاهُ فقالَ لَهُ أو لغيرِهِ إذا صلَّى أحدُكُم فليَبدَأ بتَمجيدِ ربِّهِ جلَّ وعزَّ والثَّناءِ علَيهِ ثمَّ يصلِّي علَى النَّبيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ ثمَّ يَدعو بَعدُ بما شاءَ
الراوي : فضالة بن عبيد | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 1481 | خلاصة حكم المحدث : صحيح
التخريج : أخرجه أبو داود (1481)

இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது சிலர் ஸலவாத்தை ஓத வேண்டும் என்று விரும்புபவர்கள் சற்று அதிகமாக நபி அவர்கள் மீது நேசம் கொள்கிறோம் என்ற பெயரில் மார்க்கம் சொல்லாத விதத்தில்
துஆவிற்கு பிறகு சப்த்தமாக மூன்று தடவை   ஓதுவதை நாம் பள்ளிகளில்
பார்க்கின்றோம்.

நபி மொழிகளில் வந்திருக்கும் துஆவில் சலவாத்தை ஓத வேண்டும் என்பதை தவறாக விளங்கிக் கொண்டு துவாவிற்கு பின்பு சப்தமாக ஓதுகிறார்கள் , இவ்வாறு சப்த்தமாக ஓதுவது அவர்கள் மிக முக்கியத்துவம் அளித்து பின்பற்றும் ஹனபி மத்ஹபுக்கு எதிரானது என்பதையும் அவர்கள் அறிவதில்லை!!

இது ஒரு புறம் இருக்க, குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் ஸலவாத்து ஓத வேண்டும் என்று ஆழமாக புரிந்து கொண்டவர்கள் கூட சப்த்தமாக ஓதப்படுகிற ஸலவாத்து பித்அத் அதை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து ஸலவாத் ஓதி துஆ செய்யும் பழக்கத்தையே அடியோடு மறந்தே விட்டனர்,

மௌலிது, ஸலாத்துன்னாரியா பித்அத் என்பதில் தெளிவாக இருப்பவர்கள் கூட தங்களுது துஆவில் ஸலவாத் முறையாக ஓத வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

ஆக ஸலவாத் சொல்வதில் சமநிலை & நடுநிலையான சிந்தனையை பேணாததால் சமூகம் இரண்டாக பிரிந்து நின்று ஏற்றத் தாழ்வை மார்க்கமாக கருதுகின்றனர்.

இது ஒரு உதாரணம் இது போன்று
கூட்டு துவா ஐந்து நேர தொழுகைக்கு பின்பு ஓதுவது பித்அத் என்பதை ஏற்றுக் கொண்டவர்கள் தங்களது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்ற சிந்தனையில் ஐந்து நேர தொழுகைக்குப் பின்பு தனியாக அமர்ந்து பொறுமையாக துவா செய்யும் பழக்கத்தை அறவே விட்டுவிட்டு பாய்ந்து எழுந்து சென்று விடுகின்றனர்,

இன்னும் பல உதாரணங்கள் நம்மால் சொல்ல முடியும்.

ஆக சமநிலை பேணுவோம் மார்கத்தை முறையாக பின்பற்றி நடைமுறை படுத்துவோம் வாருங்கள்!!!
أحدث أقدم