மார்க்க அறிஞர்களை சிறுமைப்படுத்துதல்


-உஸ்தாத் SM. இஸ்மாயீல் நத்வி

சமீபமாக எனது மீள் பதிவு ஒன்றை வலைதளத்தில் பகிர்ந்திருந்தேன் அது இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பிரபலமான தப்ஸீர் இப்னு கஸீர் குறித்த செய்தி,

அந்த பதிவுக்கு கீழ் ஒரு சகோதரச் சிறுவர் இமாம் இப்னு கஸீர் யார் அல்லாஹ்வின் தூதரா ?
அவர் தப்ஸீர் செய்தால் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? என்று சிறுமைப்படுத்தும் தோனியில் பேசி இருந்தார் நான் அவரின் பின்னோட்டத்திற்க்கு பதில் அளிக்காமல் கடந்துவிட்டேன்.

இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் ஷைஹுல் இஸ்லாம் இப்னுதைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மாணவர் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் தனது வாழ்க்கையை கழித்தவர் மார்க்க பணிக்காக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர்.

மிக கவலைக்குரிய விடயம் என்னவென்றால் தற்காலத்தில் இஸ்லாமிய விழிப்புணர்வுகள் நமது வாலிபர்களிடத்தில் அதிகமாக இருக்கிறது என்ற சந்தோஷத்தை விட புத்தக வாசிப்பு மிக குறைவாக இருக்கிறது என்ற கவலைக்குரிய விடயத்தை ,கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

இயக்கங்கள் தங்களுக்கு புரோகிராமாக எதை தலையில் செலுத்திருக்கிறார்களோ அதை வேதவாக்காக கருதி அதையே தனது வாழ்வின் மூச்சாக எடுத்துக் கொள்ளும் பல பரிதாபத்திற்குரிய பெயர் தாங்கிய இஸ்லாமிய அழைப்பாளர்கள் இன்று சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கிறார்கள்.

ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் வாசிப்பு வட்டங்களை வைத்துக்கொண்டு அவர்கள் எதை மார்க்கமாக விளங்கி இருக்கிறார்களோ அதை தங்களது குறுகிய பார்வையினால் ,அந்த சிறிய வட்டத்திற்குள் தங்களது அழைப்பாளர்களை உருவாக்குகிறார்கள் இதன் விளைவு குர்ஆன் சுன்னாவை தன் வாழ்வில் உயிர் நாடியாக மதித்து அதற்காக பெரும் தியாகங்கள் செய்து பயணித்த பல அறிஞர் பெருமக்களை சில சிறார்கள் சிறுமைப்படுத்துவதும் மரியாதை குறைவாக பேசுவதும் சர்வ சாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஒருபுறம் இமாம்களின் கருத்துக்கள் என்று கூறிக்கொண்டு குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான பல பொய்யான தகவல்கள் மார்க்கமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது இது எந்த அளவுக்கு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டுமோ அதே போன்று தான்
குர்ஆன் சுன்னாவை தெளிவாக சொல்லும் இமாம்களின் கருத்துக்களை மதிக்காமல் அவர்களை சிறுமைப்படுத்துதல் இழிவு படுத்துதல் என்பதும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

குர்ஆன் சுன்னாவை பின்பற்ற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அதுதான் நாம் பல வருடங்களாக அழைப்பு பணியில் நமது அடிப்படைக் கொள்கையாக , ஓர் அளவுகோலாக வைத்துக் கொண்டு பயணிக்கிறோம், ஆனால் குர்ஆன் சுன்னாவை நமக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தங்களது தோழர்களுக்கு எந்த விதத்தில் போதித்தார்களோ  சத்திய சஹாபாக்கள் அவர்களின் மாணவர்களான தாபியீன்கள் போன்ற சங்கையான இமாம்களின் வழிமுறைகளில் நாம் விளங்கவில்லை என்று சொன்னால் வழிகேடு நிச்சயமே!!

ஏதோ ஒரு சில மார்க்க அறிவை வைத்துக் கொண்டு தன்னை மிகப்பெரும் இமாமாக கருதும் ஒரு சில வழிகேடர்கள் சங்கையான நமது சான்றோர்களான இமாம்களை இழிவுபடுத்த தொடங்கினார்கள் இன்று அவர்கள் இழிவுபடுத்தப்பட்டு சமுதாயத்தில் மிகக் கேவலமாக பார்க்கப்படுகிறார்கள் அவர்கள் இந்த சமுதாயத்திற்கு கற்றுக் கொடுத்ததெல்லாம் வீணான தர்க்கங்களும் இஸ்லாமிய சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைப்பதும் தான் வேற எதுவும் இல்லை.

இன்று பல குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் அடித்துக் கொண்டு குழாய் அடி சண்டை போட்டுக்கொண்டு ஒற்றுமையை இழந்து நிற்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்,அங்கீகாரம் பெற்ற நபி மொழிகளை சந்தேகிப்பது, மறுப்பது மார்க்கத்தில் ஊர்ஜிதமாக சொல்லப்பட்ட கருத்துக்களை தங்கள் சிற்றறிவின் ஊடாக மாற்றி அமைப்பது போன்ற இழிவான செயல்களால் வழி கேட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ் அவர்களுக்கு நேரான பாதையை காட்டி தருவானாக.

இமாம் இப்னு அஸாகிர் ரஹீமஹுல்லாஹ் 
" அறிஞர்களின் மாமிசம் விஷம் தோய்கபட்டிருக்கிறது ," என்று கூறி அறிஞர்களை இழிவுபடுத்தும் பொழுது அவர்கள் மாமிசத்தை புசிக்க நினைக்கும் கயவர்கள் விஷத்தால் மடிந்து விடுவார்கள் என்று எச்சரித்தது நினைவுக்கு வருகிறது.

ஒருமுறை இந்தியாவைச் சேர்ந்த அஷ்ஷைக் ஜியாவுர் ரஹ்மான் அல்ஆஷமி ரஹிமஹுல்லாஹ் (இவரின் ஹதீஸ் துறை சேவையின் காரணத்தினால் இவருக்கு சவுதி அரசாங்கம் சவுதி குடியுரிமை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

"الجامع الكامل في الحديث الصحيح الشامل"
"அல்ஜாமிஃ அல்காமில் ஃபில் ஹதீஸ் அஷ்ஷஹீஹ் அஷ்ஷாமில் "

என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவர் பல புத்தகங்களுக்கு விளக்க உரைகளும் ஆய்வையும் செய்த ஒரு அறிஞர்.

அவர் மக்காவில் உள்ள சர்வதேச இஸ்லாமிய லீக் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்த பொழுது அவருடைய நண்பர் எகிப்தைச் சேர்ந்த அஷ்ஷைக் அப்துல் ஹக்கீம் ஹம்மாதா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஒரு ஆச்சரியமான சம்பவத்தை கூறுகிறார்கள்.

எகிப்து நாட்டின் பிரபலமான அறிஞரான மஹ்மூத் அபூ ரய்யா என்பவர் நபி தோழரான ஸய்யதுனா அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை இழிவுபடுத்தி அரபு மொழியில் ஒரு புத்தகம் எழுதி இருந்தார் ,

"أضواء على السنة المحمدية"

"அழ்வா அலஸ் ஸுன்னா அல்முஹம்மதிய்யா"

أبو هريرة شيخ المضيرة

"அபூஹுரைரா ஷைஹுல் முலீரா"

என்ற புத்தகங்களில் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி அவர்களுடன் ஒரு வருடம் 9 மாதங்கள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார்.

ஆனால் மார்க்கத்தில் அதிகப்படியான நபிமொழிகளை இவர் அறிவித்திருக்கிறார் இது சாத்தியமானதா என்ற சந்தேகத்தை எழுப்பி சில நபித்தோழர்களை பரிகாசம் செய்திருக்கிறார்.

எமன் நாட்டைச் சேர்ந்த முஅல்லிமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அந்த காலத்திலே இவருக்கு எதிராக அல்அன்வாருல் காஷிபஃஆ

الأنوار الكاشفة لما في كتاب أضواء على السنة من الزلل والتضليل

என்ற புத்தகத்தை மறுப்பாக எழுதி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.

ஆக  மஹ்மூத் அபூ ரய்யா  என்பவரை 
அப்துல் ஹக்கீம் ஹம்மாதா சந்திப்பதற்காக எகிப்து நாட்டிற்கு செல்கிறார் அவரின் குடும்பத்தினர் அவரை சந்திக்க விடாமல் தடுக்க முயல்கின்றனர் அவரோ சந்தித்து தான் செல்வேன் என்று பிடிவாதமாக சந்தித்து விடுகிறார்.

மூடப்பட்ட அறைக்குள் மஹ்மூத் அபூ ரய்யா
(மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில்) இருந்தார் அவரின் முகம் நிலக்கரி போன்று கருத்துப் போய் இருந்தது கண்கள் வெளியே தொங்கிக் கொண்டிருந்தன பார்ப்பதற்கே பரிதாபமான ஒரு நிலையில் இருந்தார் சுவற்றைப் பார்த்துக் கொண்டு அபூஹூரைரா வந்து விட்டார் என்று புலம்பி கொண்டே இருந்தார்.

இந்த காட்சியை காண முடியாமல் அங்கிருந்து சென்று விட்டேன்.

நபித்தோழர்களை இழிவாக பேசும் நபர்களுக்கு உலகத்திலே அல்லாஹ் கொடுக்கும் தண்டனை தான் என்பதை நான் ஆழமாக உணர்ந்தேன் என்கிறார்.

இந்த சம்பவத்தை எனக்கு அறிவித்தார் நான் இதை ஆதாரத்துடன் குறிப்பிடுகிறேன் என்று சங்கிலி தொடரில் இந்த சம்பவத்தை அஷ்ஷைக் ஜியாவுர் ரஹ்மான் அல்ஆஷமி ரஹிமஹுல்லாஹ் தனது கையொப்பத்துடன் எழுதி இருக்கும் ஒரு பதிவு எனக்கு கிடைத்தது அதையும் இந்த பதிவின் கீழ் இணைத்திருக்கிறேன்.

அன்பானவர்களே நபித்தோழர்களை பரிகாசம் செய்வதும் மார்க்க  அறிஞர்களை இழிவு படுத்துவதும் அபாயகரமான ஒன்று என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!!



أحدث أقدم