அல்குர்ஆனில் ஸுரா தத்பீப் எனும் அத்தியாயம் இப்படி ஆரம்பிக்கின்றது.
"அளவை நிறுவையில் மோசடி செய்வோருக்குக் கேடுதான்"
அவர்கள் மனிதர்களிடம் பொருட்களை கொள்வனவின் போது தாராளமாக அளந்து பெறுவார்கள். தாம் அவர்களுக்கு அளக்கும் நிறுக்கும் போது அதில் குறைபாடு செய்வர்.
அவர்கள் மகத்தானதொரு மறுமை நாளில் விசாரணைக்காக எழுப்பப்பட இருக்கின்றார்கள் என்பதை நினைத்துப் பார்க்க மாட்டார்களா? என்று இடம்பெறுகின்றது.
தத்பீப் என்ற சொல்லின் மொழிரீதியான பொருள் சிறு மோசடி , சிறிய ஏமாற்று வேலை என்று அர்த்தமாகும். இமாம் இப்னுகதீர்(றஹ்) குறிப்பிடுகையில் தத்பீப் என்பது ஒருவர் தனக்குப் பிறரிடமிருந்து கிடைக்க வேண்டியவற்றை பெறும்போது பரிபூரணமாக எவ்வித குறையுமின்றி எடுக்கும் அதேவேளை தான் பிறருக்குச் செய்யும் கடமைகளில் சிறிது குறைபாடு செய்வதைக் குறிக்கும் என்று விளக்குகின்றார்கள்.
இதன்படி பார்க்கும்போது தத்பீப் எனும் இச்சொல் அளவை நிறுவைகளில் சிறிது குறைபாடு செய்யும் வியாபாரிகளை மட்டும் உள்ளடக்காது . மாறாக தனது கடமையில் குறைபாடு ,மோசடி, ஏமாற்றம் செய்யும் அனைவரையும் இவ்வெச்சரிக்கை உள்ளடக்கும்.
மோசடிக்காரர்கள் பட்டியல்...
1:தன் மனைவிடமிருந்து தனக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு தான் மனைவிக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் குறைபாடு செய்பவர்கள். தன்னால் முடியாததை செய்யுமாறு பலவந்தம் படுத்துபவர்கள்..
2: மாத முடிவில் சம்பளத்தை சுளையாகப் பெற்றுக் கொண்டு மாணர்களுக்கான கற்பித்தலில் குறைபாடு செய்யும், அந்த நேரத்தில் அரட்டையடிக்கும், சொந்த வேலை செய்யும், மாணவர்களை சொந்த வேலைக்கு பயன்படுத்தும் ஆசிரியர்கள்..
3: முழுச் சம்பளத்தையும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டு கடமை நேரத்தில் தனி டிஸ்பென்சரியில் இருக்கும் மருத்துவர்கள், அங்கு வரும் நோயாளர்களை விருந்தினராகவும், அருமருத்யுவமனைக்கு வருவோரை அடிமைகளாகவும்
நடத்தும், நோயாளிகளிடம் பாய்ந்து எரிந்துவிழும் சில மருத்துவர்கள்.
3:அரச அலுவலகங்களில் கடமை செய்யாதிருக்கும், மக்களின் வேலைகளை வேண்டுமென்று இழுத்தடிக்கும், பந்தா காட்டும், லஞ்சம் கோரும் சில அரச உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தினர், பொலிஸ் அதிகாரிகள்.
4: விசாரணை, தீர்ப்பு விடயத்தில் ஒருதலைப் பட்சமாக செயற்படும் , சம்திங் எதிர்பார்க்கும் சில அதிகாரிகள் ,நீதிபதிகள், காழிகள்.
5: தன் கடையின் சிற்றூழியர்களிடம் அதீத வேலைகளை வாங்கிவிட்டு கூலியில் குறைபாடு செய்யும் , விலைகளில் மாற்றம் செய்து ஏமாற்றும், பொறித்த விலையைவிட அதிக விலைக்கு விற்கும், பழைய விலை பொருட்களை கொள்ளை லாபத்திற்கு விற்கும் வியாபாரிகள், பதுக்கல்செய்து , சந்தர்ப்பம் பார்த்து காரணமின்றி விலையேற்றம் செய்வோர்.
6: கூலியை நிறைவாகச் பெற்று வேலையில் இழுத்தடிக்கும் , குறை வைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர்.
அப்பப்பா!!!
அடுக்கிக் கொண்டே போகலாம்...
இப்படி இதெல்லாம் ஒருதவறா? என நினைத்து அசால்டாக செய்யும் ஏராளமானோர் எம் மத்தியி்ல் இருக்கின்றனர்.
அவர்கள்
இவ்வுலகில் திருந்தி வாழ்ந்தால் அவருக்கும் நல்லது மற்றவர்களுக்கும் நல்லது. இல்லாவிடில் மறுமையில் யாநப்ஸீ யாநப்ஸீ தான்.
சிந்திப்பீர்.
அல்லாஹ்வை அஞ்சி வாழ்வீர்.
எடுத்துரைப்பதே என் கடமை.