- AGM ஜெலீல் மதனி
தவ்ஹீத் என்றால் என்ன.?
ஸுன்னா என்றால் என்ன?
ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் என்றால் யார் ?
ஸலபிக் கொள்கை என்றால் என்ன?
ஸலபிகள் - ஸலபு மன்ஹஜ் என்றால் என்ன?
இலங்கை, தென்னிந்திய தவ்ஹீத் அமைப்புக்கள் அனைத்துமே ஸலப் வழிமுறையை ஏற்றுள்ளார்களா?
இல்லையெனில் அவ்விரு தரப்பினரும் எவற்றில் முரண்படுகின்றனர்?
முரண்பாட்டின் காரணம் யாது? ,
ஸலபு சிந்தனையாளர்களின் பண்புகளும் சிறப்பிக்கும் யாவை?
இவை ஓவ்ஹொன்றைப் பற்றியும் சில தெளிவுகளை குர்ஆன் ஹதீஸின்டிப்படையில் நடக்க விரும்பும் சகோதரர்களுக்கு ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துவது எனது மார்க்க கடமை என நம்புகின்றேன்.
இலங்கையி்ல் தவ்ஹீத் சிந்தனையின் தோற்றம்:
(எனது குறுகிய அறிவுக்கு எட்டிய வகையில்)
நாம் மார்க்கக் கல்வி கற்க1988 ல் மதரஸாவில் சேர்க்கப் பட்டேன். பத்து வருடங்களில் ஹாபிழ், மௌலவிப்பட்டங்களைப் பெற்றதன் பின் நபிகளாரின் மண்ணாகிய மதீனத்து மண்ணில் பத்து வருடங்கள் தூய குர்ஆன்- ஸுன்னாவின் மார்க்க அறிவை ஸலபுஸ் ஸாலிஹீன்களான ஸஹாபாக்களின் புரிதலுக்கேட்ப கற்கும் பாக்கியத்தையும் அதன் வழியில் அழைப்புப்பணி செய்யும் பாக்கியத்தையும் என்னைவிட தகுதியானோர் பலரிருக்க வல்ல அல்லாஹ் தகுதியற்றவனான எனக்குத் தந்தான். அல்ஹம்து லிஸ்லாஹ்.
1950-1960 காலப்பகுதியில் நாட்டின் சில பாகங்களில் அக்கால உலமாக்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் தூய தவ்ஹீத் வழியில் இஸ்லாத்தை எடுத்துக் கூறி வந்ததாகவும் எனினும் அவர்கள் பெரும்பாலான உலமாக்களால் புறக்கணிக்கப்பட்டதால் அவர்களின் சிந்தனைகளுக்கு மக்களிடம் ஆதரவு இல்லாமல் போயிருந்தது.
மத்ரஸாவில் நான் கற்ற 1988-1998 காலப்பகுதி தென்னிந்தியாவில் தமிழ் மொழி தவ்ஹீத் பிரச்சாரம் சூடுபிடித்து அதன் சுவாலை இலங்கைக்கும் வந்துகொண்டிருந்த காலம்.
அதற்கு முற்பட்ட 1975-1985 காலப்பகுதியில் கூட தூய ஸுன்னாவின் அடிப்படையிலான ஸலபு மன்ஹஜைக் கற்க பலர் மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்துக்கு சென்று பட்டப்படிப்பு முடித்து வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அன்று நாட்டிலிருந்த தவ்ஹீத் ஆதரவு உலமாக்கள்,மற்றும் ஆதரவாளர்களை ஒன்றுசேர்த்து தூய தவ்ஹீத் பிரச்சாரத்தை உத்வேகத்துடன் ஆரம்பித்திருந்தால் தென்னிந்திய மௌலவி சொல்லித்தான் நாம் தவ்ஹீதை அறிந்திட வேண்டிய நிலை அன்று ஏற்பட்டிருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
அக்காலத்தில் மதீனாவில் கற்று வந்த பலர் ஸலபு தஃவாவை தொடர இங்குள்ள ஷிர்க் பித்அத்தில் மூழ்கியிருந்த முஸ்லிம் சமூக நிலை பொருத்தமற்றதென அவர்கள் கருதியதாலோ என்னவோ அவர்களால் முடிந்த தஃவாவைச் செய்தார்கள். சமூக வழக்காறுகளுக்கேற்ப அனுசரித்துச் செல்லவேண்டியது தமக்குள்ள நிர்ப்பந்தம் எனக் கருதினார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியளிப்பானாக.
இருப்பினும் அம்மதனிகளில் ஒருசாராரும் உள்நாட்டில் கற்ற தவ்ஹீத் ஆதரவு உலமாக்கள் சேர்ந்து சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு தவ்ஹீத் பிரச்சாரம் செய்தார்கள். எனினும் நவீன ஊடகங்களின்மை, அவர்கள் பிரபலத்தை விரும்பாமை போன்ற காரணிகளால் அந்த தஃவா சமூகத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் சென்றடையவில்லை என்பதே எதார்த்தம்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் தென்னிந்திய அந்த மெளலவியின் காந்தக்குரல் தவ்ஹீத் முழக்கம் இலங்கையை எட்டியது. சமூகத்தில் ஆண்டாண்டு காலமாகப் புரையோடிப் போயிருந்த சிர்க் பித்அத்துக்களுக்கு எதிரான பிரச்சாரம் மார்க்க விரோத சம்பிராதாயவாதிகளை திக்குமுக்காடச் செய்ததோடு உண்மையான -சடங்குகளற்ற இஸ்லாம் விரும்பிகளையும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச்சென்று அங்கு காணப்பட்ட பித்அத்களற்ற தூய வணக்கவழிபாடுகளால் ஈர்க்கப்பட்டோரையும் இந்த மெளலவியின் ஆதரவாளர்களாக்கியது.
இவருக்கு அல்லாஹ் வழங்கிய பாமர்களுக்கு பரியும்படியான இனிய பேச்சாற்றலால் இவர் புகழ் ஓங்கியது. தமிழக மதனிகள் அமைப்பான jaqh ஜாக் இவரையும் தம்முடன் இணைக்க பிரச்சாரம் சூடுபிடித்தது.
நான் மத்ரஸாவில் 4ம் வருடத்தில் கற்கும் போதே இம்மெளலவியின் தீவிர அபிமானியாக மாறி இவரது உரைகளையும் நஜாத், முபீன் போன்ற சஞ்சிகைகளையும், நூல்களையும் ஒன்றும்விடாமல் வாசிக்க கேட்க ஆரம்பித்ததால், மாணவ மன்றங்களில் அப்படியே பேச ஆரம்பித்ததால் உஸ்தாதுமார்களால் கண்டிக்கப்பட்டும் இருக்கின்றேன்.
இவர் இயல்பிலேயே பகுத்தறிவுவாத, தர்க்கவியல் சிந்தனைப் போக்கு மிக்கவர்.
மதனிகளின் பாசறையில் அரசராக அரியணை பெற்றிருந்த அக்காலத்திலும் பகுத்தறிவுவாத கருத்துக்கள் சிலதை கூறிதுண்டு. இஸ்லாமிய சட்டங்கள் சிலதை இவர் மறுத்துதண்டு. பன்றியின் இறைச்சி தவிர்ந்த ஏனையவை ஹலாலென்றும், ஒரு பொருளுக்கு ஸக்காத் ஆயுளில் ஒரு தடவைதான் கொடுக்க வேண்டும் என்பன அவற்றில் சில...
இவைபற்றிய அவரின் உரைகளை நான் செவிகளால் கேட்டும் கூட அவர்மீதான அபிமானம் எனக்கு குறையவில்லை. மாறாக அவரை விமர்சிப்போர் மீதான ஆத்திரம்தான் அதிகரித்தது. இன்னிலையில் அவர் 2005 ஆண்டளவில் ஜாக் அமைப்பிலிருந்து முரண்பட்டு தனியாக செயற்பட ஆரம்பித்தார். ஜாக் அமைப்பை அழிப்பதில் அபூஜஹ்லை விட கெட்டவனாக இருப்பேன் என்றும் சூளுரைத்தார்.
அதன்பின்புதான் இந்திய மதனிகளுடன் கொண்டுள்ள ஆத்திரத்தால் ஸலபு அறபிகளின் நூல்களை வாசிப்பதில் புறக்கணித்து எகிப்திலுள்ள முஸ்லிம் பகுத்தறிவுவாதிகளின் நூல்களின் பக்கம் நாட்டம் கொண்டார். பகுத்தறிவு ஏற்காத விஞ்ஞானம் கண்டுபிடிக்காத மார்க்க விடயங்களை ஒவ்வொன்றாக மறுக்க ஆரம்பித்தார். கடைசியில் ஸஹீஹான ஹதீஸ் மறுப்புக்கொள்கையை தத்தெடுத்துள்ளார்
இந்த நேரத்தில்தான் ஷரீஆ துறையில் உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பை அல்லாஹ் எனக்கு அருளினான். அன்று நான் ஸுலூக்-நடத்தை விஷயத்தில் தப்லீக்கையும், கொள்கை அகீதா விடயத்தில் இந்த அறிஞரையும் ஆதரிப்பவனாக இருந்தேன்.
மதீனா சென்று அங்குள்ள உலமாக்களின் ஆழிய அறிவு சீரிய குணம், செல்வம் கொழிக்கும் நாட்டிலும் உலகப்பற்ற வாழ்க்கை, அர்ப்பணிப்பு, பணிவு , முற்கால இமாம்கள் அறிஞர்கள்களுக்கு அவர்கள் கொடுக்கும் மதிப்பு மார்க்கத்தை நடுநிலையில் குர்ஆன் ஸுன்னா ஒளியில் ஸஹாபாக்கள் வழியில் புரிந்து விளங்கிடும் வழிமுறை போன்றவற்றைக் கூர்ந்து அவதானிக்க முடிந்தது.
அதன்பின்னர்தான் அறிஞர் சொல்லும் அனைத்தையும் அப்படியே ஏற்க முடியாது என்று முடிவெடுத்து மதீனா மாணவர்களான நாம் இவரின் கருத்துக்களை மறுபரிசீலனை செய்யும் நிலைப்பாட்டுக்கு வந்தோம்.
தவ்ஹீதிலிருந்து பகுத்தறிவுவாதத்தை நோக்கி:
மேற்படி மண்ணடி அறிஞர் ஜாக் எனும் தென்னிந்திய தவ்ஹீத் உலமாக்கள் அமைப்பிலிருந்து முரண்பட்டு வெளியேறியமை, பின்னர் ஸலபு வழி தவ்ஹீத் அறிஞர்களின் நூல்களைப் புறக்கணித்து விட்டு எகிப்திய இக்வானிய ஆதரவு பகுத்தறிவு அறிஞர்களான செய்தித் குத்ப், ஹஸன் பன்னா, கர்ளாவி போன்றோரினதும், அவர்களின் பாசறையில் உருவான பகுத்தறிவுப் போக்கு அறிஞர்களின் நூல்களின் பக்கம் திரும்பியமையே இந்த சிந்தனைத் திருப்பத்தில் காரணம்.
மார்க்க விடயங்களைக் கற்க 10 வருடங்களுக்கும் மேலாக செலவழித்து தொடர்ச்சியாக உயர்கல்வியையும் தொடருமளவுக்கு உள்ளவர்களுக்கே உணரக்கூடிய மேற்படி மண்ணடி அறிஞரின் தவ்ஹீத் பெயரிலான திசைமாறிய இப்படியான தவறான கருத்துக்களை சாதாரண பாமர ஆதரவாளர்களாலோ, அந்த அறிஞர் சொல்வதுதான் தவ்ஹீத் என்ற பிடிவாதத்தில் - தக்லீதில் மூழ்கியவர்களாலோ, சாதாரண நிலை தவ்ஹீத் ஆலிம்களாலோ கண்டுபிடிக்க முடியாமல் போனது ஒன்றும் ஆச்சரியமில்லை.
பாவம் அவர்கள் என்னதான் செய்வார்கள். அவர்கள் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தால்தான் இந்த பஸ்ஸில் ஏறினார்கள். பஸ் றைவர் றூட் மாறிச் செல்வதற்கு இவர்கள் என்ன செய்ய முடியும்.?
ஆனால் கவலைக்குரிய விடயம் யாதெனில் அறிஞரின் அதே பாணியில் அதே வழியில் மக்களை வழிநடத்திச் செல்லும் அறிஞர்கள் கூட்டமொன்றும், மற்றும் அறவே முறையான மார்க்கல் கல்வி பெறாத லெப்டேப் நபர்கள் கும்பலொன்றும் இந்திய அறிஞரின் கிளையாகவும், தனிப் பெயர்களிலும் பயணிக்க ஆரம்பித்ததன் விளைவு.. தூய தவ்ஹீத் சிந்தனை கோஷ்டி வாதமாக, குழு மோதலாக, தனிநபர் வசைபாடும் வெறுப்புக்குரிய சிந்தனையாக பாமர பொதுமக்களின் மனதில் பதிவானது.
இன்று இலங்கை தென்னிந்திய தவ்ஹீத் அமைப்புக்களை இரு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.
1- ஸலப் சிந்தனைக்கு (குர்ஆன் ஹதீஸை ஸஹாபா, தாபியீன்களின்) புரிதலுக்கேற்ப ஏற்று உலகெங்கிலுமுள்ள ஸலப் அறிஞர்களின் வழிகாட்டல்களுக்கேற்ப நடக்கும் தவ்ஹீத் ஜமாஅத்கள். (இவர்கள் ஒரே தலைமைத்துவத்துக்குக் கீழ் இணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும்).
2- நேரடியாகவோ மறைமுகமாகவோ தென்னிந்திய அறிஞர் ஜைனுலாபிதீனின் சிந்தனைகளால் கவரப்பட்டு அவரின் வழிமுறையை ஒழுகி நடக்கும் ஜமாஅத்துக்கள்.
என்னைப் பொறுத்த வரைக்கும் இவர்கள் நபியவர்கள், ஸஹாபாக்கள் ஸலபுகள் காட்டிய தூய தவ்ஹீத் பக்கம் மீள வேண்டும், அல்லது தவ்ஹீத் என்ற பெயரை விட்டுவிட்டு இவர்கள் வேறு பெயர்களை தமக்கு சூட்டிக்கொள்வதுதான் பொருத்தமானதாகும். ஸுன்னத் வல் ஜமாத் என்ற புனித நாமத்தை கப்ர் , மெளலூது கும்பல் எடுத்துக் கொண்டதைப் போன்ற ஒரு ஆக்கிரமிப்பு போலத்தான் உள்ளது இது.
தவறாகப் புரியப்பட்ட தவ்ஹீதின் சில பக்கங்கள்:
(நான் இக்கட்டுரையை ஆலிம்கள்,மத்ரஸா மாணவர்கள், பழைய தவ்ஹீத் வாதிகளுக்காக நல்ல புரிதல் நோக்கில் எழுதிவருகிறேன். இதை புரிவதில் சிரமமுள்ளளோர் வாசிக்காதிருப்பது நலம்.)
ஸலபு தவ்ஹீத் என்றால் என்ன? அதற்கும் மண்ணடி தவ்ஹீதுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகள், உப வேறுபாடுகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
பி . ஜைனுலாபிதீன் உலவி அவர்கள் கூறும் பகுத்தறிவுவாதத் தெளஹீத் சிந்தனை ஸஹாபாக்கள், தாபியீன்கள் நபிகளாரிடமிருந்து கற்ற தூய தவ்ஹீதிலிந்து பல விடயங்களில் வேறுபட்டுள்ளது. இப்பகுத்தறிவு வாதத் தெளஹீத் பாசறையில் அன்று பயின்று இன்று விலகிக் கொண்ட எமது நாட்டில் உள்ள சில தவ்ஹீத் அமைப்புக்களும் இன்றும் அதே பகுத்தறிவுவாத சிந்தனையில் பகுதியளவில் சிக்குண்டுள்ளன என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.
அவர்களின் பகுத்தறிவுவாத சிந்தனைகளாவன...
1- தமது பகுத்தறிவுவாதத்திற்கு குறுக்கே நிற்கும் அல்குர்ஆன் வசனங்களுக்கு தன்னிச்சையாக தவறான வியாக்கியானம் செய்தல். உதாரணம் சூனியம் பற்றிய குர்ஆன் வசனங்கள்,
2- தமது பகுத்தறிவு சிந்தனைக்கு எதிராகத் தோன்றும் ஆதாரப்பூர்வமான -புகாரி, முஸ்லிமில் இடம்பெறும் ஹதீஸ்களைக்கூட பல்வேறு அடிப்படையற்ற காரணங்களுக்காக நிரிகரித்தல் இவ்வாறு காரணமின்றி நிராகரிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பலநூறுகளைத் தாண்டிவிட்டன. ஆனால் நிராகரிப்பு அலைகள் இன்னும் ஓயாத தொடர்கதையாகவே உள்ளது.
சுருங்கக்கூறின் அவர்களுக்குப் பிடிக்காத ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுவதால் மறுக்கின்றோம் என்பர். குர்ஆன் வசனத்தின் கருத்து பிடிக்காவிட்டால் அதன் அர்த்தம் அப்படியல்ல.. இப்படித்தான் என அர்த்தத்தை திரிபுபடுத்துவர்.
மக்களிடம் தமக்கு ஆதரவு அற்றுப்போகும் என்ற பயத்தால்தான் பிடிக்காத வசனத்தின் விடயத்தில் "குறித்த குர்ஆன் வசனத்தை மறுப்பதாகச் சொல்ல மாட்டார்கள். ஆனால் உண்மையில் நடப்பது அதுவே! இப்பகுத்தறிவுவாத ஹதீஸ் மறுப்புக்கொள்கை அன்றைய முஃதஸிலாக்களிடமிருந்து வாழையடி வாழையாக வரும் சிந்தனை. இதன் ஸ்தாபகர்கள் இவர்களல்ல. இவர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டவர்களேயன்றி வேறில்லை.
இல்முல் கலாம் - பகுத்தறிவுவாதம், இல்முல் ஜதல்- தர்க்கவியல் கலைகளுக்குள் மூழ்கி அன்றே பலர் மார்க்கத்தை கோட்டைவிட்டதால் ஸலப் அறிஞர்கள் இக்கலைகளைக் கற்கும் விடயத்தில் எச்சரிக்கையாக இருந்துள்ளனர். தர்க்கரீதியாகவே இஸ்லாத்தை அணுகுவோம் என்ற எகிப்து, தூனுசியா போன்ற நாடுகளிலுள்ள ஒருசாராரின் நூல்களினாலே மண்ணடி அறிஞர் தாக்கம் பெற்றுள்ளார் போல் விளங்குகின்றது. அவர்கள் பாலின சமத்துவம் எனும் போர்வையில் பெண்கள் ஆண்களுக்கு ஜும்ஆ குத்பா நடத்தலாம், தொழுவிக்கலாம், இருபாலரும் அருகருகே நின்று தொழலாம், பெண்கள் காழி நீதிபதியாக, மஸ்ஜித் இமாம்களாக வரலாம் என்று மேற்கத்தேய பெண்ணியல் வாதத்தால் கவரப்பட்டு மார்க்க சட்டங்களை ஒவ்வொன்றாக வில்லாக வளைத்து மேற்கில் சிந்தனைக்கு முட்டுக் கொடுக்கின்றனர். இது வெறும் ஆர்வக்கோளாரா? அல்லது இவர்கள் அவர்களின் ஏஜன்ட்களா என்றும் ஐயமுள்ளது.
3- ஸஹாபாக்களின் இஜ்மாஃ - ஏகமனதான தீர்மானம், மற்றும் குர்ஆன் ஹதீஸ்களுக்கு ஸஹாபாக்கள் வழங்கும் வியாக்கியானங்கள் அனைத்தையும் இவர்கள் நிராகரிக்கின்றனர். ஸஹாபாக்களிடம் இஜ்மா இருந்ததா? அதற்கு உதாரணம் காட்ட முடியுமா? என உரையாற்றி பிஜே சூளுரை விடுக்கின்றார். ஸஹாபாக்களைப் பின்பற்றுவதற்கு என்ன ஆதாரம்? .. யாராவது ஆதாரம் காட்ட முடியுமா என சவால்விடுகின்றார். (இவருக்கு மறுப்பளிக்கும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை விரிவாகக் குறிப்பிடுவேன்.)
4- கியாஸ்- ஒப்பீட்டு முறையிலான சட்டவாக்கத்தை முற்றாக மறுக்கின்றார். உதாரணமாக வட்டி முறை வியாபாரம் ஹராம் என்பது குர்ஆனில் உள்ளது. இதன் அடிப்படையில் வட்டித் தொடர்புள்ள புதிய தற்கால லீசிங் போன்ற முறையும் ஹராம் என்று சட்டம் எடுப்பதற்கே கியாஸ் எனப்படும். கியாஸ் இல்லையெனில் வட்டி என்ற பெயரைக் குறிப்பிடாதது வேறு பெயர்களில் செய்யப்படும் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் ஆகுமென்று சொல்லவேண்டி ஏற்படும்.
5- மத்ஹபுகள் அனைத்தும் வழிகேடு, மத்ஹபுகளைப் பின்பற்றுவதும் வழிகேடு என்று இப் பகுத்தறிவுவாதிகள்? வாதிடுகின்றனர். இக்கருத்து மிகப் பாரதூரமான தவறும் அநியாயமும், முட்டாள்தனத்தின் வெளிப்பாடுமாகும்.
பிக்ஹு மத்ஹபுகள் எனப்படுவது குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை வைத்து மார்க்கச் சட்டங்களை உருவாக்கும்போது அறிஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வேறுபட்ட கருத்துக்களின், ஆய்வுகளின், இஜ்திஹாத்களின் தொகுப்பாகும்.
இவ்ஆய்வுகளை மேற்கொண்டோர் அறிவிலும், ஈமான் இறையச்சத்திலும் எம்மைவிட பலமடங்கு உயர்ந்த, நபியவர்கள் சிறந்த தலைமுறையினர் என சிறப்பித்துக் கூறிய தாபியீன்களும் தபஉத் தாபியீன்களுமாவார்கள். மத்ஹபுகளைப் பின்பற்றுவது அறிஞர்களைப் பொறுத்தவரைக்கும் கட்டாயமில்லை. பாமர நிலையிலுள்ளோர் மார்க்க அறிஞர் ஒருவரிடத்தில் ஒருவிடயத்தைக் கேட்டு அதன்படி நடந்தால் அதுவும் ஒரு வகையில் மத்ஹபைப் பின்பற்றுவதுதான்.
சுருங்கக் கூறின் மத்ஹபு சட்டங்களில் ஹதீஸுக்கு மாற்றமானற்றை நாம் பின்பற்றக்கூடாது. மத்ஹபு சட்டங்கள் இஜதிஹாத் -ஆய்வுகளாகும். அவை ஹதீஸுக்கு உடன்படின் சரியான ஆய்வு. இல்லாவிடில் தவறான ஆய்வு. ஒரு ஹதீஸிலிருந்து எப்படியெல்லாம் புரிதல்கள் உள்ளன என்ற சட்ட நுணுக்கங்களை மத்ஹபு நூல்களை ஆய்வுசெய்யும் போதே அறிந்து ஆச்சரியம் அடைகின்றனர் அறிஞர்கள். அன்று அவர்கள் ஆய்வு செய்திருக்கக் கூடாது என்று சொல்ல இவர்களுக்கு என்ன அதிகாரமுள்ளது. இதைவிடப் பெரிய முட்டாள்தனம் வேறேதுள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....