குர்பானியின் சட்டம்

குர்பானி என்பது ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக வணக்கம் செய்யும் அடிப்படையில் அறுத்துப் பலியிட்டு அவற்றின் மாமிசத்தை தானும் உண்டு ஏழைகளுக்கும் தர்மம் செய்வதாகும். 

குர்பானி கொடுப்பது இஸ்லாமிய அடையாளங்களில் ஒரு அடையாளமாகும்.

குர்பானி கொடுப்பது சுன்னா முஅக்கதாவாகும்.

குர்பானியின் பின்னணி:

இப்ராஹீம் நபியவர்கள் தமது மகனைப் பலியிடுவதாகக் கனவு கண்டு அதை நிறைவேற்ற முயலும் போது, இறைவன் அதைத் தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டைப் பலியிடச் செய்தான். 

இந்த வரலாறு 37வது அத்தியாயம் 102 முதல் 108 வரையிலான வசனங்களில் கூறப்பட்டுள்ளது. 

அதன் இறுதி வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: 

“பின்வரும் மக்களிடையே இந்த நடைமுறையை நாம் விட்டு வைத்தோம்” 

ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் அத்தியாம் 37, வசனம் 108.

அல்லாஹ் குர்பானியைப் பற்றி பல இடங்களில் கூறுகின்றான்.

1. குர்பானி கொடுக்கும் வணக்கத்தை அல்லாஹ் முந்தைய சமூகத்தாருக்கும் ஏற்படுத்தியிருந்தான்:

மேலும், ஒவ்வொரு சமூகத்தார்க்கும் குர்பானி கொடுக்கும் நெறிமுறையை நாம் ஏற்படுத்தியிருந்தோம். அவர்களுக்கு அவன் வழங்கியுள்ள கால்நடைகளின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி (அறுக்க வேண்டும்) என்பதற்காக! எனவே, உங்கள் இறைவன் ஒரு இறைவன்தான்! அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள்!. (நபியே! நம்மை) பயந்து பணியக்கூடியவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!

சூரா அல் ஹஜ்: அத்தியாயம் 22, வசனம் 34.

2. அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு குர்பானி கொடுக்கும்மாறு கட்டளையிடுகின்றான்:

எனவே, நீர் உம் இறைவனுக்காக தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.

சூரா அல் கவ்ஸர்: அத்தியாயம் 108, வசனம் 2.

3. மக்களிடம் சொல்லுமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு இட்ட கட்டளை:

(நபியே) நீர் கூறுவீராக: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

சூரா அன்ஆம்: அத்தியாயம் 6, வசனம் 162.


குர்பானிப் பிராணிகள்:

ஒட்டகம், மாடு, ஆடு, இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களிலே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும்
வழங்குங்கள். (அல்குர்ஆன் 22 : 28)


எத்தனை பிராணிகள் கொடுக்க வேண்டும்?

அதா இப்னு யஸார் (ரஹ்) அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப் (ரளி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள்.
ஆதாரம்: ஸுனனுத் திர்மிதி: 1505

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களில் ஏழு பேர் ஓர் ஒட்டகத்திலும், ஏழு பேர் ஒரு மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து (பலியிட்டுக்)கொள்ள உத்தரவிட்டார்கள். ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்: 2325.

பயன்கள்:

ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும்.

ஒரு ஒட்டகம் அல்லது ஒரு மாட்டில் ஏழு நபர்கள் பங்கு சேரலாம்.

ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்குத் தடையேதும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.

அலி (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி: 1718


குர்பானி கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்:

குர்பான் கொடுப்பதற்கு மாட்டையோ, அல்லது ஆட்டையோ, வாங்குவதற்கு முன் அதனது வயதை சரியாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். 

ஐந்து வருடங்கள் பூர்த்தியான ஒட்டகம்.
இரு வருடங்கள் பூர்த்தியான மாடு.
ஒரு வருடம் பூர்த்தியான வெள்ளாடு.
ஆறு மாதங்கள் பூர்த்தியான செம்மரியாடு.

குர்பானி கொடுப்பதற்குத் தகுதியற்றவை:

குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். 

பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

அல்பரா பின் ஆசிப் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தெளிவாகத் தெரியும் நொண்டி, 
தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறை, 
தெளிவாகத் தெரியும் நோய், 
எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக்
குர்பானி கொடுப்பது கூடாது.
ஆதாரம்: ஸுனனுத் திர்மிதி: 1497.

சிறிய அளவில் வெளிப்படையாகத் தெரியாத குறையுள்ள ஆட்டை குர்பானிக் கொடுப்பதில் குற்றமில்லை. 

குர்பானி பிராணிகளை கொழுக்க வைத்தல்:

உமாமா பின் சஹ்ல் (ரளி) அவர்கள் கூறுகின்றார்கள்: நாங்கள் மதீனாவில் குர்பானிப் பிராணிகளை (நன்றாகத் தீனிபோட்டு) கொழுக்க வைத்து வந்தோம். முஸ்லிம்கள் அனைவருமே (பொதுவாகக் குர்பானிப் பிராணிகளை) கொழுக்கவைத்து வந்தார்கள். 
ஆதாரம் ஸஹீஹுல் புகாரி : ஹதீஸ் எண் இல்லாமல் பாடத் தலைப்பில் பதிவு செய்துள்ளார்கள்


குர்பானி கொடுக்கப்படும் நேரம்:

குர்பானி கொடுக்கப்படும் நேரம் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்ததிலிருந்து ஆரம்பமாகிறது.

பெருநாள் தொழுகைக்கு முன்னால் குர்பானி கொடுப்பது கூடாது.

பராஉ பின் ஆஸிப் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஈதுல் அள்ஹா பெருநாளன்று) “இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில்,

முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்.

பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம்.

இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியை அடைந்து கொண்டவர் ஆவார்.

(பெருநாள் தொழுகைக்கு முன்பே) யார் குர்பானிப் பிராணியை அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்.

அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று சொன்னார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 3965.

ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய பிறை 11, 12, 13 ஆகிய நாட்களிலும் குர்பானி கொடுக்காலாம்.

பிறை 13 அன்று சூரியன் மறைவதுடன் குர்பானி கொடுக்கும் நேரம் முடிந்துவிடுகிறது.

ஜுபைர் இப்னு முத்இம் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும்.
ஆதாரம் : தாரகுத்னீ 4756.

குர்பானி கொடுக்கப்படும் நாட்கள் நான்கு நாட்களாகும்:

பெருநாள் பிறை 10
அய்யாமுத் ததஷ்ரீக் பிறை 11
அய்யாமுத் ததஷ்ரீக் பிறை 12
அய்யாமுத் ததஷ்ரீக் பிறை 13 சூரியன் மறையும் வரை.


குர்பானி கொடுப்பவர் குர்பானிப் பிராணியை தன் கையால் அறுப்பது மிகச் சிறந்தது

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போது குர்பானிப் பிராணியை தமது கையால் தாமே அறுத்துள்ளார்கள். 

அனஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள், கொம்புள்ள கறுப்பு வெள்ளை கலந்த இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் பெயர் (“பிஸ்மில்லாஹ்”) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள். 
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 3975.

மார்க்கமும், பொறுப்பை சரியாக நிறைவேற்றும் தன்மையும் கொண்ட மனிதரிடம் குர்பானிப் பிராணியை அறுக்கும் பொறுப்பை ஒப்படைப்பதால் குற்றமேதும் இல்லை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள்.
ஆதாரம் ஸஹீஹுல் புகாரி : 5559

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு எஞ்சிய (முப்பத்தேழு) ஒட்டகங்களை அலீ (ரளி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச்செய்)தார்கள்.
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் : 2334
Previous Post Next Post