கவலை பற்றி ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யஹ் (றஹிமஹுமல்லாஹ்) கூறினார்கள்:
கவலைப்படுமாறு அல்லாஹ்வோ அவனது தூதரோ கட்டளையிடவில்லை. மாறாக அல்லாஹ் அதனைப் பல இடங்களில் தடை செய்திருக்கிறான்; அது மார்க்க விடயத்தோடு சம்பந்தப்பட்ட கவலையாக இருந்தாலும் சரியே!
பின்வருமாறு அல்லாஹ் கூறியிருப்பதைப் போல:
وَلَا تَهِنُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
{எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; *கவலையும் கொள்ளாதீர்கள்;* நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உயர்ந்தவர்களாக இருப்பீர்கள்.} [அல்குர்ஆன் 3:139]
لِّكَيْلَا تَأْسَوْا۟ عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا۟ بِمَآ ءَاتَىٰكُمْۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
உங்களை விட்டும் தப்பிப் போனதைப் பற்றி *நீங்கள் கவலைப்படாதிருக்கவும்* (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு நீங்கள் கர்வமாக மகிழாதிருக்கவும் (அல்லாஹ் இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை. [அல்குர்ஆன் 57:23]
இதற்கான உதாரணங்கள் (அல்குர்ஆனில்) இன்னும் அதிகமாக இருக்கின்றன.
இதற்கான காரணம் கவலை என்பது எந்த ஒரு பயனையும் கொண்டுவராது. மேலும் எந்த ஒரு கெடுதியையும் தடுக்காது. அதனால் அதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. எந்தப் பிரயோஜனமும் இல்லாததை அல்லாஹ் ஏவமாட்டான். ஆனால் கவலையோடு ஹராமான வேறு எதுவும் இணையவில்லை என்றால் கவலைப்படுபவர் குற்றம் இழைத்தவராகவுமாட்டார். உதாரணமாக சோதனைகள் வரும்போது கவலைப்படுபவரைப் போல.
பின்வருமாறு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாகக் கண்கள் கண்ணீர் சொரிவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை" - பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து, "எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான்" என்று கூறினார்கள்.
[பார்க்க: புகாரி 1304]
மேலும் நபி ﷺ அவர்கள் (தமது மகன் மரணித்தபோது) கூறினார்கள்:
“கண்கள் கண்ணீர் சொரிகின்றன; உள்ளம் கவலை கொள்கின்றது. எனினும் எம் இரட்சகன் விரும்புவதைத் தவிர வேறு எதனையும் நாம் கூறமாட்டோம்". [புகாரி 1303]
பின்வரும் அல்லாஹ்வின் வார்த்தையும் மேற்படி விடயத்தைக் குறிக்கின்றது:
وَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَٰٓأَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَٱبْيَضَّتْ عَيْنَاهُ مِنَ ٱلْحُزْنِ فَهُوَ كَظِيمٌ
(நபி யாகூப் அவர்கள்) அவர்களை விட்டு விலகிச் சென்று, “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) கவலையே!” என்று (கவலைப்பட்டுக்) கூறினார்; கவலையால் (அழுதழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன. மேலும், அவர் (தம் கவலையை மற்றவர்களுக்குக் காண்பிக்காது) விழுங்கி அடக்கிக் கொண்டவராக இருந்தார். [அல்குர்ஆன் 12:84]
சில வேளை கவலைப்படுபவருக்கு நன்மையை ஈட்டித்தரக் கூடிய சில விடயங்கள் கவலையுடன் இணையலாம். அந்த வகையில் அவர் புகழத்தக்கவராக (அதாவது கூலி கொடுக்கப்படுபவராக) மாறலாம். அதாவது கவலைக்காக வேண்டியல்ல; அதனுடன் இணைந்த விடயத்துக்காக வேண்டியே. உதாரணமாக தனது மார்க்க விடயத்தில் ஏற்பட்ட சோதனைக்காகக் கவலைப்படுபவரைப் போல, பொதுவாக முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகளுக்காகக் கவலைப்படுபவரைப் போல. இத்தகையவர்களுக்கு அவர்களது உள்ளத்தில் ஏற்பட்ட நல்லதை நேசித்தல், கெடுதியை வெறுத்தல் போன்றவற்றிற்காகக் கூலி வழங்கப்படும். (வெறும் கவலைக்காக அல்ல.)
ஆனாலும், அதற்காகக் கவலைப்படுவதானது, பொறுமை செய்தல், ஜிஹாத், பயனளிக்கும் ஒரு விடயத்தைச் செய்தல், தீங்கு விளைவிக்கும் ஒரு விடயத்தைத் தவிர்த்தல் போன்ற (மார்க்கத்தில்) ஏவப்பட்ட ஒரு விடயத்தை விட்டுவிடும் அளவுக்கு இட்டுச் செல்லுமானால் அத்தகைய கவலை தடைசெய்யப்பட்டதேயாகும். கவலையோடு நன்மைதரும் விடையங்கள் இணையாவிட்டால், கவலைப்பட்டவர் கவலைப்பட்டதற்காகக் குற்றம் பிடிக்கப்படமாட்டார் என்பது அவருக்கு போதுமானது.
ஆனாலும் கவலையானது, உள பலவீனத்தின் பக்கமும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏவிய விடயங்களைச் செய்வதை விட்டுவிட்டு தொடர்ந்தும் கவலையில் உள்ளம் மூழ்குவதின் பக்கமும் இட்டுச்செல்லுமேயானால், அந்த வகையில் அது இகழப்பட்டதாக (அதாவது பாவமானதாக) இருக்கும்; வேறொரு கோணத்தில் புகழத்தக்கதாக இருந்தாலும் சரியே!
قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى:
وأما {الحزن} فلم يأمر الله به ولا رسوله بل قد نهى عنه في مواضع وإن تعلق بأمر الدين.
كقوله تعالى :
{وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ}
وقوله :
{لِّكَيْلَا تَأْسَوْا عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ ۗ}... وأمثال ذلك كثير.
وذلك لأنه لا يجلب منفعة ولا يدفع مضرة فلا فائدة فيه، وما لا فائدة فيه لايأمر الله به نعم! لا يأثم صاحبه إذا لم يقترن بحزنه محرّم كما يحزن على المصائب.
كما قال النبي صلى الله عليه وآله وسلم : «إن الله لا يؤاخذ على دمع العين ولا على حزن القلب ولكن يؤاخذ على هذا أو يرحم وأشار بيده إلى لسانه.»
وقال ﷺ : «تدمع العين و يحزن القلب ولا نقول إلا ما يرضي الرب.»
ومنه قوله تعالى : {وَتَوَلَّىٰ عَنْهُمْ وَقَالَ يَا أَسَفَىٰ عَلَىٰ يُوسُفَ وَابْيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيم.ٌ}
وقد يقترن بالحزن ما یُثاب صاحبه عليه ويُحمد عليه فيكون محمودا من تلك الجهة لا من جهة الحزن كالحزين على مصيبة في دينه وعلى مصائب المسلمين عموما فهذا يُثاب على ما في قلبه من حب الخير وبغض الشر وتوابع ذلك.
ولكن الحزن على ذلك إذا أفضى إلى ترك مأمور من الصبر والجهاد وجلب منفعة ودفع مضرة نهي عنه وإلا كان حسب صاحبه رفع الإثم عنه من جهة الحزن.
وأما إن أفضى إلى ضعف القلب واشتغاله به عن فعل ما أمر الله ورسوله به كان مذموما عليه من تلك الجهة وإن كان محمودا من جهة أخرى.
مجموع الفتاوى (١٠\١٦-١٧)
-ஸுன்னா அகாடமி