சர்வதேச பிறை ஓர் பார்வை !!

- உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

சர்வதேச பிறை சில நாட்களாக நாம் சமூக வலைதளங்களில் காண்கிற ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது,

காரணம், பல நூற்றாண்டுகளாக அறிஞர்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகள் தான், இதற்கு முதன்மையான காரணம்.

ஃபிக்ஹு கலாசாலை நிபுணர்களான நான்கு சங்கையான மத்ஹப்களின் இமாம்களும் பிறை விடயத்தில் தங்களது கருத்து வேறுபாடுகளை தெரிவித்திருக்கிறார்கள்.  அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் ஒன்றே. ஆனால் ஒவ்வொருவரின் இஜ்திஹாதிய பார்வை வேறுபடுகிறது.

فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ 
"எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்." 
(அல்குர்ஆன் : 2:185)

இப்னு உமர்(ரலி) அவர்களின் அறிவிப்பில் வருகின்ற
"பிறையை
கண்டால் நோன்பு வையுங்கள். இன்னும் 
நோன்பை விட்டுவிடுங்கள். மேகமூட்டமாக இருந்தால் கணகிட்டு கொள்ளுங்கள்
(முப்பதாக)"
صحيح البخاري ( 1906, 1907 )
صحيح مسلم ( 1080 )
سنن أبي داود ( 2320 )
سنن النسائي ( 2120, 2121, 2122 )
سنن ابن ماجه ( 1654 )
موطأ مالك ( 781, 782 )
سنن الدارمي ( 1726, 1732 )
مسند أحمد ( 4488, 4611, 5294, 6323 )

மேல் காணும் ஆதாரங்களை முன்வைத்து இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன.  ஒன்று, இமாம் அபூஹனீபா, மாலிக், அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர், 
"ஒரு ஊரில் அல்லது நாட்டில் பார்க்கப்பட்ட பிறையை வைத்து, அனைவரும் நோன்பை நோற்பதும், விடுவதும் ஆகும்" என்று கூறுகிறார்கள்,

மற்றொன்று, இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களுடையது. 
"அருகில் இருக்கும் ஊர்களை தவிர்த்து, ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக பிறை பார்க்கப்பட வேண்டும்" என்று கூறுகிறார்கள்.

முதல் கருத்தை இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள், இந்த அடிப்படையில் ஆதரிக்கிறார்கள். அதாவது தங்களது மஜ்மூஃ அல்ஃபதாவா என்ற புத்தகத்தில்,
"ஒரு இடத்தில் பிறை பார்த்து, பல இடங்களில் அமல் செய்வதென்பது முடியாத ஒன்று. எங்கு பிறை தென்படுவதற்கு வாய்ப்பு இருக்குமோ, அந்த நாடுகள் ஓரிடத்தில் பார்த்தால், மற்ற இடங்களில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எங்கு பிறை உதிப்பு மாறுபடுமோ, அங்கு ஒன்றாக அமல் செய்ய முடியாது. உதாரணமாக குராசான் ( ஈரான்)நாட்டிற்கும் அந்தலுஸுக்கும்( ஸ்பெயின்) உள்ள வேறுபாட்டை போல".

ஷேக் நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களும், "முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வழிவகுத்து இஸ்லாமிய நாடுகள் ஒன்று திரண்டால் சிறந்தது. ஆனால், அதுவரை எனது கருத்து, ஒவ்வொரு நாட்டு மக்களும் தன்னுடைய நாட்டோடு நோன்பை மேற்கொள்வதும், நோன்பை விடுவதும் உகந்தது. காரணம் சிலர் வேறு நாட்டு பிறையை பின்பற்றி, தனது நாட்டை புறக்கணிப்பது, முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைத்து விடும்" என்று 
تمام المنة ص:398 தமாமுல் மின்னா- புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள்

இதன் காரணமாகத்தான், சவுதி அரேபியாவின் (هيية كبار العلماء) 
மூத்த உலமா சபை
தனது மார்க்க தீர்ப்பில், 
"இந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக, மிக மோசமான விளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. கடந்த 1400 வருடங்களாக, ஒரு பிறையை பார்த்து முழு உலகமும் நோன்பு நோற்றதாக நாம் காண முடியவில்லை. எனவே, கடந்த காலங்களில் நமது உம்மத் எந்த நிலையில் இருந்ததோ, அவ்வாறே விட்டு விடுவது சிறந்தது. இதில், எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த தேவையில்லை. ஒவ்வொரு நாடும், தனது அறிஞர்களின் ஊடாக, தனது தலைமையின் ஊடாக, தனித்தனியாக பிறை பார்த்துக் கொள்ளட்டும். அவர் அவருக்கு, அவருடைய ஆதாரங்கள் தெளிவாக இருக்கிறது."

رقم الفتوى:3686، 10/103
رابط المادة: http://iswy.co/e5etd

இந்த அளவு, தெளிவான ஆதாரமுள்ள ஹதீஸ்கள் இருந்தும், 
"நட்சத்திர கணக்கை கையாண்டும், கிரிகோரியன் காலண்டர் கணக்கை கையாண்டும், 
உலக முஸ்லிம்களை ஒன்றிணைத்து
பரஸ்பரத்தை வலுப்படுத்துவோம்" என்பன போன்ற அணுகுமுறைகள் அனைத்தும், விசுவாசிகளுக்கு
அழகல்ல....!!!

சமூக ஒற்றுமை என்பது ஃபர்ளு ஆகும். ஒவ்வொரு வருடமும், இந்த பிறை சர்ச்சையினால் சமூகம் - ஒன்றல்ல, பல குழுக்களாக, பல நாட்களில், ஈது தொழுகையை தொழுகிறார்கள்.

اختلاف المطالع 
பிறையின் மாறுபட்ட உதிப்பு சரியே !!! எந்த நாடுகளில் பிறை தென்படுகிறதோ, அங்கு முடிவெடுக்கப்படவேண்டும் - "நோன்பு உண்டா? இல்லையா?" என்று .

எவ்வாறு தொழும் நேரம், ஒவ்வொரு நாடுகளிலும் மாறுபடுகின்றனவோ,
அதை நாம் ஏற்று 
கொள்கின்றோமோ, அது போன்றுதான் ஏற்க வேண்டும்.

ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் பொழுது 
"
நட்சத்திர கணக்கீடு இஸ்லாத்தில் அனுமதிக்கபடவில்லை. இதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. இது தான் ஆதாரபூர்வமான 
நபிமொழிகளின் மூலம் இன்னும், ஸஹாபாக்களின் வழி முறையும் ஆகும்."
மஜ்மஉல் பதவா -
207/25.

முஸ்லிம் கிரந்தத்தில் உள்ள குரைப் பின் அபூமுஸ்லிம் (ரலி)அவர்களின் சம்பவத்தில், மதீனாவிலிருந்து ஷாம் தேசத்திற்கு, அவர்கள் ஒரு பணி நிமித்தமாக, முஆவியா (ரலி) அவர்களை சந்திக்க செல்கின்றார்கள். அங்கு, ஜும்மா இரவில் பிறை பார்க்கப்பட்டு, நோன்பு நோற்று விட்டு, அந்த ரமலானின் இறுதியில், மதீனா வருகின்றார்கள் .
அங்கு, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை சந்தித்து, ஷாம் தேசத்தில் அவர்கள் நோன்பு 
நோற்ற தினமாக, ஜும்மா இரவை அவர்கள் குறிப்பிட, அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நீங்கள் பிறையை ஜும்மா இரவு கண்டீர்களா?" என கேட்க, "ஆம். அங்கு மக்கள் அனைவரும் கண்டனர். எனவே, முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தனர்" என்று கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நாங்கள் சனி இரவு தான் கண்டோம். ஆதலால், நாங்கள் ஒரு நாளில் நோன்பை தொடர்ந்து, முப்பதை பூர்த்தி செய்வோம் அல்லது பிறையை பார்த்து விடுவோம்" என்றார்கள். குரைப் (ரலி) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை கேட்கிறார்கள், "ஏன் முஆவியா (ரலி) அவர்கள் கண்டு நோன்பு பிடித்தது போதாதா?" என்று.
அதற்கு, இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (தெளிவு படுத்துகின்றார்கள் ) "இல்லை. இவ்வாறு நமக்கு (கண்ணால் காண ) இறை தூதர் (ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள்."

صحيح مسلم ( 1087, 1088 )
سنن أبي داود ( 2327, 2332 )
‎سنن الترمذي ( 688 )
‎سنن النسائي ( 2111, 2124, 2125, 2129, 2130, 2189 )
موطأ مالك ( 783 )
سنن الدارمي ( 1725, 1728 )
‎مسند أحمد 
( 1931
, 1985, 2335, 2789, 3021, 
3208,3515 )

இந்த ஹதீஸிருந்து விளங்கும் சில வழிகாட்டல்கள் :-

இந்த ஹதீஸை அறிவித்த இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள், "இந்த ஸஹீஹான அறிவிப்பு, ஒவ்வொரு நாட்டிற்கும் பிறை பார்க்க வேண்டும்
என்பதற்கு வலு ஊட்டுகின்றது" என்றும், "எந்த ஊரில் அதிகப்படியான மக்கள், ஜமாத்தாக ஒரு முடிவினை பிறை விடயத்தில் எடுகின்றார்களோ, அதையே, மற்றவர்களும் பின்பற்ற வேண்டும்" என்றும் தங்கள் கிரந்ததில் குறுப்பிடுகிறார்கள்.

எனவே, தூரமாக இருந்த ஷாம் தேச பிறையை (சர்வதேசமயமாக்கல் பிறையை ), 
ஹிஜாஸ் பகுதியில் உள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், ஏன் எடுத்து கொள்ள வில்லை? 
முஆவியா (ரலி) அவர்களின் கிலாபத்தில், 
ஷாம் அப்பொழுது ஒரே சாம்ராஜியத்தில் இருந்தது என்பதையும் - ஏன் இந்த சர்வதேச பிறைவாதிகள் சிந்தனை கொள்ளவில்லை ?!!

அது போன்று, சர்வதேச பிறையை போதிப்பவர்கள், மக்களை இந்த விடயத்தில் குழப்பத்தில் இட்டு விடுகின்றனர். அதாவது, நீங்கள் கண்டது பிறை அல்ல - பிழை - மிகப் பெரியது பாருங்கள். அறிவிற்கும் பொருந்தவில்லை - நீங்கள் கண்ட பிறை" என்று கூறுகிறார்கள்.

சரியான பிறையின் அளவுகோல், "பிறையின் அளவு சிறியதா ? அல்லது பெரியதா ? என்பதை வைத்தும் அல்ல" என்பதை கீழ் உள்ள அறிவிப்பை, தலைப்பாகவே இமாம் நவவி (ரஹ்) அவர்கள் முஸ்லிம் கிரந்தத்தில் சுட்டி காட்டியுள்ளனர்.

மற்றும் ஒரு ஆதாரபூர்வமான அறிவிப்பு, முஸ்லிம் கிரந்தத்தில் அபுல் பக்தரி என்ற சயீது பின் அல் புரோஸ் அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சம்பவம் உள்ளது.
"
நாங்கள் உம்ரா செய்வதற்காக சென்றோம். "நக்லா" என்ற இடத்தை அடைந்த பொழுது பிறை காண சிரமப்பட்ட பொழுது, 'சிலர், மூன்றாம் நாள் என்றனர். சிலர், இல்லை இரண்டாம் நாள்' என்றனர். அதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை வைத்து கேட்டோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வினவினார்கள், 'எந்த இரவில் கண்டீர்கள்?' என்று. நாங்கள் கூறினோம், "இந்த இந்த இரவென்று". 
அதற்கு, அவர்கள், "இறை தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள். அதாவது, உங்கள் பார்வைக்காக, அல்லாஹ் அதை நீட்டி கொடுத்தான். எந்த இரவில் நீங்கள் கண்டீர்களோ, அது தான் பிறை" என்று.
صحيح مسلم 
‎8 ( 29 ) (المجلد : 3 الصفحة : 127)

அன்று, இன்று போல், ஒரே வீட்டில், இரண்டு பெருநாட்களை (சர்வதேசமயமாக்கல் பிறையின் தாக்கதால்) அவர்கள் - நம்மை போல் கொண்டாட வில்லை. ஆதலால், அடித்துக் கொண்டு, நமது ஒற்றுமையை குலைக்க வில்லை !!

எனவே, பிரச்சினை நாடுகளின் எல்கைகள் அல்ல. பிறை தென்பட்டு, அதை பார்ப்பது தான்.

"ஒரே இறைவன், ஒரே தூதுவர், ஒரே மார்க்கம். ஒரே சர்வதேச பிறை" என்பது கேட்பதற்கு, அழகாக உள்ளது. இந்த சிந்தனையின் வெளிப்பாடு தான், இன்று, பல ஈத் தொழுகையை, அடுத்தடுத்த நாட்களில் தொழ வைத்து, நம் ஒற்றுமையை கூறு போட்டு விட்டது. முஸ்லீம்களின் ஒற்றுமையை பேணுவது பர்ள் அல்லவா !!

மகாஸிதுஷ் ஷரீஆவின் அடிப்படையிலும், சமூக நலனை முன்வைத்து - முஸ்லிம்களின் ஒற்றுமையை பேணி, கருத்து வேறுபாடுகளை களைந்து, எவ்வாறு நாம் கடந்த காலங்களில், ஈதை ஒன்றாக தொழுதோமோ, அதே போன்று வரும் காலங்களிலும் தொழுவதற்கு, அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!!

அல்லாஹ் மிக அறிந்தவன்.

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌ 

"நீங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள்."
(அல்குர்ஆன் : 3:103)
أحدث أقدم