சுவர்க்கம் மற்றும் நரகம் குறித்து இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் நிலைப்பாடு என்ன?


சுவர்க்கம் மற்றும் நரகம் ஆகியன என்றும் நிலைத்திருக்கும், அவை அழியாது என்பதே அஹ்லுஸ்ஸுன்னாத் வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடாகும். மேலும், நரகம் அழியும் என்ற கருத்தை இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாக அவர்களுடைய எதிரிகள் அவர்கள் மீது பொய்யையும் அவதூறையும் பரப்பியுள்ளார்கள்.

உண்மையிலே நரகம் எப்பொழுதும் நீடித்திருக்கும் என்பதே இமாமவர்கள் சரிகண்ட கருத்தாகும். அவர்கள் தர்உ தஆருதில் அக்லி வந்நக்ல் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள். இஸ்லாத்திற்கு சொந்தக்காரர்களான அனைவரும் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் முடிவு இல்லை. அவை இரண்டும் தொடர்ந்து நிலைத்திருக்கும், அவ்வாறே சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் இன்பங்களை சுவைத்தவர்களாகத் தொடர்ந்திருப்பார்கள். நரகவாசிகள் நரகத்தில் வேதனை செய்யப்படுவார்கள். அதற்கு முடிவு இல்லை என்று கூறியுள்ளார்கள்.

மேலும், அவர் பயானு தல்பீஸில் ஜஹ்மிய்யா என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: இந்த உம்மத்தின் ஸலபுகள் அதன் இமாம்கள் ஏனைய அஹ்லுஸ்ஸுன்னாத் வல்ஜமாஅத்தினர்கள் ஆகிய அனைவரும் சுவர்க்கம், நரகம், அர்ஷ் போன்ற மொத்தமாகவே அழியாதவைகள் படைப்பினங்களில் உள்ளன என்பதில் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளார்கள். அனைத்துப் படைப்பினங்களும் அழிந்துவிடும் என்று ஜஹ்ம் இப்னு ஸப்வான் மற்றும் முஃதஸிலாக்களில் அவனுக்கு உடன்பட்டவர்கள், மேலும் இவர்கள் போன்ற பித்அத்வாதிகளாகிய தத்துவயியலாளர்களைத் தவிர வேறுயாரும் கூறவில்லை. இந்தக்கருத்து அசத்தியமான கருத்தாகும். இது அல்லாஹ்வின் வேதத்திற்கும் அவனுடைய தூதரின் வழிமுறைக்கும் இந்த உம்மத்தின் ஸலபுகள் மற்றும் இமாம்களின் ஏகோபித்த கருத்திற்கும் முரணான ஒன்றாகிறது.

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நரகம் அழியும் என்று கூறியதாக சிலர் கூறுவதற்குக் காரணம் என்னவென்றால், இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹாதீ அல்அர்வாஹ் என்ற அவர்களுடைய நூலில் நரகத்தைப் பற்றி கூறியுள்ளார்கள். அந்நூலில் அவர்கள் நரகம் அழியுமா? அழியாதா? என்ற விடயத்தைப்பற்றிக் கூறும்போது இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிய ஒரு சிலருடைய கருத்துக்களையும் கூறியுள்ளார்கள். அவ்வாறு இமாமவர்கள் கூறிய கருத்துக்களில் ஒன்றே நரகம் அழியும் என்பதாகும். இது இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்தல்ல. மாறாக, நரகம் அழியும் என்பது பற்றிக் கூறியவர்களின் கருத்தையே அவர்கள் கூறியுள்ளார்கள். அக்கருத்தை அவர்கள் சரிகாணவில்லை.

இமாமவர்கள் நரகம் அழியாது என்பது பற்றிக் கூறிய கருத்துக்களை நாம் மேலே குறிப்பிட்டிருக்கின்றோம். ஆகவே, இமாமவர்களின் கருத்து நரகம் எப்பொழும் நிலைத்திருக்கும் என்பதேயாகும்.


அறபியில்: இஸ்லாம் வெப் மர்கஸுல் பத்வா

தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்


أحدث أقدم