ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின்‌ பெயர்களும்‌ பண்புகளும்‌

அல்லாஹ்‌ கூறுகிறான்‌: “அவனே அல்லாஹ்‌, அவனைத்‌ தவிர வணக்கத்திற்குரியவன்‌ வேறு யாருமில்லை. அவன்‌ மறைவானதையும்‌ வெளிப்படையானதையும்‌ அறிபவன்‌. அவன்‌ அளவற்ற அருளாளன்‌, நிகரற்ற அன்புடையோன்‌. அவனே அல்லாஹ்‌, அவனைத்‌ தவிர வணக்கத்திற்குரியவன்‌ வேறு யாருமில்லை. அவன்‌ அரசன்‌, பரிசுத்தமானவன்‌, நிம்மதியளிப்பவன்‌, அடைக்கலம்‌ தருபவன்‌, கண்காணிப்பவன்‌, மிகைத்தவன்‌, ஆதிக்கம்‌ செலுத்துபவன்‌, பெருமைக்குரியவன்‌, அவர்கள்‌ இணை கற்பிப்பதை விட்டும்‌ அல்லாஹ்‌ தூயவன்‌. அவனே அல்லாஹ்‌, படைப்பவன்‌, உருவாக்குபவன்‌, வடிவமைப்பவன்‌, அவனுக்கு அழகிய பெயர்கள்‌ உள்ளன. வானங்களிலும்‌ பூமியிலும்‌ உள்ளவை அவனைத்‌ துதிக்கின்றன. அவன்‌ மிகைத்தவன்‌, ஞாமிக்கவன்‌.” (59:22-24)

“அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள்‌ உள்ளன. அவற்றின்‌ மூலமே அவனிடம்‌ பிரார்த்தியுங்கள்‌. அவனது பெயர்களைத்‌ திரித்துக்‌ கூறுவோரை விட்டு விடுங்கள்‌. அவர்கள்‌ செய்து வந்ததற்காக அவர்கள்‌ தண்டிக்கப்படுவார்கள்‌. (7:180)


1. “அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள்‌ உள்ளன.‌ யார் அவற்றைப்‌ பேணுபவர்‌ சொர்க்கம்‌ செல்வார்‌. அல்லாஹ்‌ ஒற்றையானவன்‌; ஒற்றையை அவன்‌ விரும்புகிறான்‌” என அண்ணல்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. அறிவிப்பவர்‌: அபூஹுரைரா (ரலி), நூல்‌: புகாரி-2736, முஸ்லிம்‌-2677

இந்நபிமொழியிலுள்ள கருத்துக்கள்‌: 

அல்லாஹ்வுடைய ஏகத்துவத்தின்‌ பூரணத்துவம்‌ இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவன்‌ ஒருவன்‌, அவனுக்கு இணை துணை எதுவுமில்லை. விரும்புதல்‌, நேசித்தல்‌ எனும்‌ பண்பு அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்பது நிரூபணமாகிறது.

அல்லாஹ்‌ பல வகையான மனிதர்கள்‌, சொற்கள்‌, செயல்கள்‌, இடங்கள்‌, காலங்கள்‌ ஆகியவற்றை விரும்புகிறான்‌.

எண்களில்‌ ஒற்றப்படையை அல்லாஹ்‌ விரும்புகிறான்‌.

ஷரீஅத்தில்‌ அதிகமான விஷயங்கள்‌ ஒற்றப்படையில்‌ தான்‌ உள்ளன. பகல்‌ தொழுகை ஒற்றப்படையில்‌ முடிகிறது. அது மக்ரிபாகும்‌. இரவுத்‌ தொழுகையில்‌ இறுதித்‌ தொழுகை வித்ரு ஒற்றைப்படையாகும்‌. தவாஃப்‌, ஸயீ இவற்றின்‌ சுற்றுக்கள்‌ ஏழு ஆகும்‌. சுப்ஹானல்லாஹ்‌ என்று தஸ்பீஹ்‌ கூறுவது 33 தடவையாகும்‌. அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌ 99.

2.  “அஸ்ஸலாம்‌ (சாந்தி) என்பது அல்லாஹ்வின்‌ பெயர்‌களில்‌ ஒன்றாகும்‌. இது இப்புவியில்‌ வைக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கிடையில்‌ ஸலாமைப்‌ பரப்புங்கள்‌” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (அல்‌அதபுல்‌ முஃப்ரத்‌, ஸில்ஸிலதுல்‌ அஹாதீதிஸ்‌ ஸஹீஹா-184)

இந்நபிமொழியிலுள்ள விஷயங்கள்‌ வருமாறு:

அஸ்ஸலாம்‌ என்னும்‌ பெயர்‌ அல்லாஹ்வுக்குரியதாகும்‌. அவனுக்குரிய பெயர்கள்‌ ஏராளம்‌ உள்ளன. அவை அனைத்தும்‌ குர்‌ஆன்‌, ஹதீஸ்‌ ஆதாரத்திற்கு உட்பட்டவை. அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌ மற்றும்‌ பண்புகள்‌ சமபந்தமான ஆதாரங்களை மனிதன்‌ அறிந்து அவற்றில்‌ தனக்குப்‌ பொருத்தமான பெயர்கள்‌, பண்புகளின்‌ தேட்டத்தின்படி அமல்‌ செய்வது அவசியமாகும்‌. உதாரணமாக அஸ்ஸலாம்‌ (சாந்தி அல்லது நிம்மதி அளிப்பவன்‌), அர்ரஹ்மான்‌ (அளவற்ற அருளாளன்‌, அல்கரீம்‌ (கொடையாளன்‌, சங்கைக்குரியவன்‌), அல்ஹலீம்‌ (சகிப்புத்‌ தன்மை மிக்கவன்‌) போன்ற பண்புகள்‌.

முஃமின்களுக்கிடையில்‌ ஸலாமைப்‌ பரப்புவது கடமையாகும்‌. ஏனெனில்‌ அதில்‌ சகோதரத்துவம்‌, நேசம்‌, பாசம்‌ இருக்கிறது. ஸலாம்‌ சொல்வதன்‌ நோக்கங்களில்‌ இதுவும்‌ ஒன்றாகும்‌. அதாவது அது நம்பிக்கையாளர்களுக்கிடையில்‌ நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்‌. ஷரீஅத்தின்‌ விருப்பமும்‌ அது தானே! எவருடைய நாவாலும்‌ கரத்தாலும்‌ பிற முஸ்லிம்கள்‌ அச்சமற்று இருக்கிறார்களோ அவரே முஸ்லிம்‌.

3. திறந்த வெளியில்‌ வேட்டியின்றி குளிக்கின்ற ஒரு மனிதரை நபி (ஸல்‌) அவர்கள்‌ கண்டார்கள்‌. உடனே மிம்பரில்‌ ஏறி அல்லாஹ்வைப்‌ புகழ்ந்து பாராட்டி விட்டு, “அல்லாஹ்‌ நாணமிக்கவன்‌, மறைப்பவன்‌, நாணத்தையும்‌ மறைப்பதையும்‌ அவன்‌ விரும்புகிறான்‌. எனவே உங்களில்‌ ஒருவர்‌ குளித்தால்‌ மறைத்துக்‌ கொள்ளட்டும்‌” என்று கூறினார்கள்‌. அறிவிப்பவர்‌: யஃலா பின்‌ உமய்யா (ரலி), நூல்‌: அபூதாவூத்‌-4012, ஸஹீஹால்‌ ஜாமி.-1775

இந்நபிமொழியில்‌:

இரண்டு பெயர்கள்‌ அல்லாஹ்வுக்குரியவையாகும்‌. அவை ஹயிய்யுன்‌, ஸித்தீருன்‌(அதிகம்‌ நாணமுறுபவன்‌, மறைப்பவன்‌) அல்லாஹ்‌ கூறுகிறான்‌: “கொசுவையோ அதை விட அற்பமானதையோ உதாரணம்‌ கூற அல்லாஹ்‌ வெட்கப்பட மாட்டான்‌.” (2:26) ஆம்‌! அல்லாஹ்வுக்கு அவனுடைய கண்ணியத்திற்கும்‌ மகத்துவத்திற்கும்‌ ஏற்ற வகையில்‌ நாணம்‌ உண்டு. படைப்பினங்களின்‌ நாணத்திற்கு அது ஒப்பாகாது.

அல்லாஹ்வுக்கு விரும்புதல்‌ எனும்‌ பண்பு இருக்கிறது என்பது இந்நபிமொழியிலிருந்து நிரூபணமாகிறது.

ஒரு முஸ்லிம்‌ குளிக்கும்போதும்‌ மலஜலம்‌ கழிக்கும்‌ போதும்‌ மறைத்துக்‌ கொள்வது அவசியமாகும்‌. வெட்கமும்‌ மானத்தை மறைத்துக்‌ கொள்வதும்‌ நம்பிக்கையாளர்களின்‌ பண்புகளில்‌ உள்ளதாகும்‌. வெட்கம்‌ ஈமானின்‌ ஓர்‌ அம்சம்‌. வெட்கம்‌ முழுவதும்‌ நன்மையாகும்‌. 

ஒரு ஹதீஸில்‌ வந்துள்ளது: அன்ஸாரிப்‌ பெண்ணொருத்தி, “அல்லாஹ்வின்‌ தூதரே! அல்லாஹ்‌ சத்தியத்தைச்‌ சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை...” என்று கூறினாள்‌. அல்லாஹ்வுக்கு அவனுடைய மகத்துவத்திற்கு ஏற்ற வகையில்‌ வெட்கம்‌ உள்ளது என்பது ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

4. “ திண்ணமாக அல்லாஹ்‌ மிகவும்‌ வெட்கப்படுபவன்‌; வாரி வழங்குபவன்‌! ஒரு மனிதன்‌ அவனிடம்‌ கையேந்தும்‌ போது அவனை வெறுங்கையோடு திருப்பி அனுப்ப வெட்கப்‌படுகிறான்‌” என அண்ணல்‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. அறிவிப்பவர்‌: ஸல்மான்‌ ஃபாரிஸி (ரலி), நூல்‌: திர்மிதி-3556, அபூதாவூத்‌-1488, இப்னுமாஜா-3865, ஸஹீஹுல்‌ ஜாமிஃ-1757

இந்நபிமொழியில்‌:

அல்லாஹ்வின்‌ மகத்துவத்திற்கு ஏற்ற விதத்தில்‌ நாணமுறுதல்‌ மற்றும்‌ வாரி வழங்குதல்‌ ஆகிய இரண்டு பண்களும்‌ அல்லாஹ்வுக்கு இருப்பதாக நிரூபணமாகிறது. உண்மையில்‌ அல்லாஹ்‌ வெட்கப்படுகிறான்‌. ஆனால்‌ மனிதர்கள்‌ வெட்கப்‌ படுவதுபோல்‌ அல்ல. ஏனெனில்‌ அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ நம்முடைய பண்புகளைப்போல்‌ இருக்காது. 

பிரார்த்தனையின்‌ ஒழுங்குமுறைகளில்‌ கைகளை  ஏந்துவதும்‌ ஒன்றாகும்‌. பிரார்த்தனைக்கு பாக்கியம்‌ இருக்கிறது. பிரார்த்தனையின்‌ நன்மை எல்லோருக்கும்‌ பொதுவானது. அல்லாஹ்வின்‌ அருளில்‌ மனிதன்‌ நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. அல்லாஹ்‌வினுடைய வள்ளல்‌ குணம்‌ விசாலமனது. அதனுடைய நன்மை எல்லோருக்கும்‌ பொதுவானதாகும்‌. 

5. அனஸ்‌ (ரலி) அறிவிப்பதாவது: ஒரு முறை நபி (ஸல்‌) அவர்கள்‌ காலத்தில்‌ விலைவாசி உயர்ந்து விட்டது! அல்லாஹ்வின்‌ தூதரே! தாங்கள்‌ விலைவாசியைக்‌ கட்டுப்‌படுத்தக்‌ கூடாதா?” என்று மக்கள்‌ கேட்டார்கள்‌. அதற்கு நபி (ஸல்‌) அவர்கள்‌, “அல்லாஹ்வே படைப்பாளன்‌, குறைவாகவும்‌ வழங்குபவன்‌, தாரளமாகவும்‌ தருபவன்‌, உணவளிப்பவன்‌, விலைவாசியை உயர்த்தவோ குறைக்கவோ செய்பவன்‌. எவரது உயிருக்கும்‌ உடைமைக்கும்‌ நான்‌ அநீதம்‌ செய்து, பிறகு “எனக்கு இவர்‌ அநீதியிழைத்துவிட்டார்‌” என்று என்னை யாரும்‌ குற்றம்‌ சொல்லாத நிலையில்‌ நான்‌ அல்லாஹ்வை சந்திக்கவே விரும்புகிறேன்‌” எனக்‌ கூறினார்கள்‌. நூல்‌: அஹ்மத்‌, திர்மிதி-1314, அபூதாவூத்‌-3451, இப்னுமாஜா-3200, ஸஹீஹால்‌ ஜாமிஃ-1846

இந்நபிமொழியில்‌:

இங்கு கூறப்பட்ட தன்மைகள்‌ அல்லாஹ்வுக்கு அவனது மகத்துவத்திற்கு ஏற்ற விதத்தில்‌ உள்ளன என்பது நிரூபணம்‌, இத்தன்மைகளை நபி (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வுக்கு எவ்வாறு கொடுத்துள்ளார்களோ அவ்வாறே நாமும்‌ கொடுக்க வேண்டும்‌. ஏனெனில்‌ அவர்கள்‌ தாம்‌ படைப்பினங்களில்‌ தம்‌ இறைவனை அதிகம்‌ அறிந்தவர்கள்‌. அநியாயம்‌ செய்வது பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின்‌ உடைமைகள்‌, சொத்துக்களுக்குப்‌ பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. வியாபாரிகளின்‌ விலையும்‌ லாபமும்‌ மிகப்‌ பெரிய மோசடியாக இல்லாமல்‌ மக்களுக்கு அறிமுகமானதாக இருக்கும்போது அவர்களுக்கு நெருக்கடி தருவதிலிருந்து விலகியிருக்க வேண்டும்‌. நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்களின்‌ பரிபூரணமான இறையச்சமும்‌, தம்‌ இறைவனுக்கு அவர்கள்‌ அஞ்சியிருப்பதும்‌, அவர்களின்‌ நீதியும்‌ இந்நபிமொழியில்‌ சுட்டிக்‌காட்டப்பட்டுள்ளது.

6. ஹானிஉ பின்‌ எஸீத் (ரலி) அறிவிப்பதாவது: இவர்‌ தமது கூட்டாத்தாருடன்‌ நபி (ஸல்‌) அவர்களிடம்‌ வந்தபோது அந்த மக்கள்‌ ஹானியை “அபுல்‌ ஹகம்‌' (தீர்ப்பு வழங்குபவரின்‌ தந்‌தை) என்றழைப்பதை நபி (ஸல்‌) அவர்கள்‌ செவியுற்றனர்‌. உடனே நபி (ஸல்‌) அவர்கள்‌ ஹானிஉ பின்‌ எஸீத்‌ (ரலி) யை அழைத்து, “உண்மயில்‌ அல்லாஹ்‌ தான்‌ “ஹகம்‌” (தீர்ப்பு வழங்குபவன்‌), அவனிடம்‌ தான்‌ தீர்ப்பு உள்ளது. அவ்வாறிருக்க நீர்‌ ஏன்‌ “அபுல்‌ ஹகம்‌” என்றழைக்கப்படுகிறீர்‌?” என வினவினார்கள்‌. அதற்கு ஹானி அவர்கள்‌, ‘எனது கூட்டத்தினர்‌ ஏதாவது ஒரு விஷயத்தில்‌ கருத்து வேறுபாடு கொண்டால்‌ என்னிடம்‌ வருவார்கள்‌. நான்‌ அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன்‌. அதை இரு தரப்பாரும்‌ பொருந்திக்‌ கொள்வர்‌' எனக்‌ கூறினார்கள்‌. அதற்கு நபி (ஸல்‌) அவர்கள்‌, “ஆகா! இது என்னே அற்புதம்‌! உமக்குக்‌ குழந்தை இருக்கிறதா?” என்று கேட்டார்கள்‌. ஹானி, “எனக்கு .ஷுரைஹ்‌, முஸ்லிம்‌, அப்துல்லாஹ்‌ என (மூன்று) குழந்தைகள்‌ உள்ளன” என்றார்‌. “அவர்களில்‌ யார்‌ மூத்தவர்‌?” என நபி (ஸல்‌) கேட்டார்கள்‌. அதற்கு ஹானி, “ஷுரைஹ்‌' என்றார்‌. “அப்படியானால்‌ நீர்‌ அபூஷுரைஹ்‌” (ஷுரைஹின்‌ தந்‌தை) என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (அபூதாவூத்‌-4955, நஸயீ, இர்வாஃ-615)

இந்நபிமொழியில்‌:

தீர்ப்பு வழங்குதல்‌ எனும்‌ தன்மை அல்லாஹ்வுக்கு இருக்கிறது என நிரூபணமாகின்றது. அவன்‌ தீர்ப்பு வழங்கு பவர்களில்‌ மிகச்‌ சிறந்தவன்‌.“உறுதியாக நம்புகிற மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பு வழங்குபவன்‌ யார்‌?”(5:50)

அல்லாஹ்‌ தீர்ப்பு வழங்குபவனும்‌, அவனது சொல்லிலும்‌, செயலிலும்‌ அவன்‌ விதித்த விதிகளிலும்‌ நீதியாளனும்‌ ஆவான்‌. தீர்ப்பு அவனிடமே உள்ளது. காரியங்கள்‌ யாவும்‌ அவனிடமே திரும்புகின்றன. பிரச்சனைகளின்‌ முடிவு அவனிடம்‌ உள்ளது. மறுமை நாளில்‌ அவனே மக்களிடையே தீர்ப்பு வழங்குவான்‌. அநீதியிழைக்கப்பட்டவனுக்கு அநீதியிழைத்தவனிடமிருந்து நியாயம்‌ வழங்குவான்‌. யாருக்கும்‌ அநீதி இழைக்காமல்‌, எவரது நன்மையையும்‌ பறித்து விடமால்‌ மக்களிடம்‌ விசாரணை நடத்துவான்‌. அவனது வார்த்தைகள்‌ உண்மையானவை. அவனுடைய சட்டங்கள்‌ நீதிமிக்கவை. “உமது இறைவனின்‌ வார்த்தை உண்மையாலும்‌ நீதியாலும்‌ முழுமை பெற்றுள்ளது” (6:115)

ஒரு நபிமொழியில்‌ இவ்வாறு வந்துள்ளது: “உனது உதவி கொண்டே (எதிரிகளுடன்‌), வழக்காடினேன்‌. உன்னிடமே தீர்ப்புக்காக முறையிட்டேன்‌.” (புகாரி-1120, முஸ்லிம்‌-769) 

தீர்ப்பு வழங்குபவன்‌ (அல்லாஹ்‌) தூய்மையானவன்‌! அவனுடைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்பவர்‌ யாருமில்லை! அவன்‌ யாவற்றையும்‌ செவியுறுபவன்‌! நன்கு அறிபவன்‌!

7. “(நியாயத்‌) தராசு ரஹ்மானின்‌ கையில்‌ இருக்கிறது.(அதன்‌ மூலம்‌) மறுமை நாள்‌ வரை சிலரை உயர்த்துகிறான்‌, சிலரைத்‌ தாழ்த்துகிறான்‌” என நபி (ஸல்‌) கூறினார்கள்‌. அறிவிப்பாளர்: நவாஸ்‌ பின்‌ ஸம்‌ஆன்‌ ரலி), (இப்னுமாஜா-199) (இதன்‌ அறிவிப்புத்‌ தொடர்‌ ஸஹீஹானது என ஸவாயிதில்‌ இப்னுமாஜா அவர்கள்‌ குறிப்பிட்டுள்ளார்கள்‌.)

இந்நபிமொழியில்‌:

(நன்மை தீமைகளை நிறுக்கும்‌) தராசு உண்டு என்பதும்‌, திருக்குர்‌ஆன்‌ மற்றும்‌ நபிமொழியில்‌ கூறப்பட்டுள்ளவாறு அல்லாஹ்வுக்கு கை இருக்கிறது என்பதும்‌ நிரூபணமாகிறது. ஆனால்‌ அல்லாஹ்வின்‌ கை மனிதனின்‌ கைக்கு ஒப்பாகாது.

பொய்‌, அவதூறு சொல்வோரின்‌ கூற்றை விட்டும்‌ அல்லாஹ்‌ தூய்மையானவன்‌. உயர்வும்‌, தாழ்வும்‌ அல்லாஹ்வின்‌ புறத்‌திலிருந்து ஏற்படுகிறது. உண்மையில்‌ யாரை அல்லாஹ்‌ உயர்த்தி, கண்ணியம்‌ அளித்திருக்கிறானோ அவனே உயர்ந்‌தவன்‌! மக்கள்‌ அவனைப்‌ புறக்கணித்தாலும்‌ சரி. யாரை அல்லாஹ்‌ தாழ்த்தி, அவனது மரியாதையைக்‌ குலைத்துவிட்டானோ அவன்‌ தான்‌ தாழ்ந்தவன்‌! மக்கள்‌ அவனைக்‌ கொண்டாடினாலும்‌ சரியே!

8. நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “அல்லாஹ்வின்‌ வலது கை நிரம்பி இருக்கிறது. வாரி வழங்குவதால்‌ அது வற்றிவிடாது. இரவிலும்‌ பகலிலும்‌ அவன்‌ அள்ளித்‌ தருபவன்‌. நீங்கள்‌ சிந்நித்துப்‌ பார்த்ததுண்டா? வானங்கள்‌ மற்றும்‌ பூமியைப்‌ படைத்த நாள்‌ முதல்‌ அவன்‌ வாரிக்‌ கொடுத்தது அவனது வலது கையிலுள்ளதை வற்றச்‌ செய்துவிடவில்லை. (வானம்‌, பூமியை அவன்‌ படைப்பதற்கு முன்‌) அவனுடைய அர்ஷ்‌ தண்ணீரில்‌ இருந்தது. அவனுடைய மற்றொரு கையில்‌ குறைத்துத்‌ தரும்‌ தன்மை இருக்கிறது. (எனவே) அவன்‌ (ரிஸ்கை) உயர்த்தவும்‌ செய்வான்‌ குறைக்கவும்‌ செய்வான்‌.” அறிவிப்பவர்‌: அபூஹுரைரா (ரலி), நூல்‌: புகாரி-7419, முஸ்லிம்‌-993

இந்நபிமொழியில்‌:

அல்லாஹ்வுக்கு அவனது மகத்துவத்திற்கு ஏற்ற விதத்தில்‌ இரண்டு கைகள்‌ இருக்கின்றன என்பது நிரூபணமாகின்றது. அவற்றை இன்ன விதத்தில்‌ என்று விவரித்துக்‌ கூறவோ, உதாரணம்‌ கூறவோ, ஒப்பாக்கவோ, மறுக்கவோ கூடாது. அவ்விரண்டு கைகளும்‌ நன்மையிலும்‌ நற்பாக்கியத்திலும்‌ வலது கையாகத்‌ திகழ்கின்றன. அல்லாஹ்வுடைய விசாலமான ஈகைக்‌ குணமும்‌ மகத்தான வள்ளல்‌ குணமும்‌ இங்கு சுட்டிக்‌ காட்டப்பட்டுள்ளது. அவனது கருவூலம்‌ நன்மையால்‌ நிரம்பி இருக்கிறது; அது காலியாகிவிடாது. 

அல்லாஹ்வுக்கு அர்ஷ்‌ இருப்பது நிரூபணம்‌. (ஆரம்பத்தில்‌) அது தண்ணீரில்‌ இருந்தது. 

செயல்கள்‌, அந்தஸ்துகள்‌, நன்மை, தீமைகள்‌ யாவற்றையும்‌ நிறுக்கக்கூடிய தராசு அவனிடம்‌ உண்டு. அவன்‌ மனிதர்கள்‌, சமுதாயங்கள்‌ மற்றும்‌ செயல்களில்‌ தான்‌ நாடியவற்றை உயர்த்துகிறான்‌. தான்‌ நாடியவற்றைத்‌ தாழ்த்துகிறான்‌. குறைத்தல்‌, தாழ்த்தல்‌, உயர்த்தல்‌ ஆகியவை. அவன்‌ செயல்களில்‌ உள்ளவையாகும்‌. அவை அவனது மகத்துவத்திற்கு ஏற்ற வகையில்‌ இருக்கும்‌. “அல்லாஹ்‌ குறைவாகவும்‌ வழங்குகிறான்‌, தாராளமாகவும்‌ வழங்குகிறான்‌. அவனிடமே திரும்பக்‌ கொண்டு வரப்படுவீர்கள்‌.” (2:245)

9. நபி(ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌: “நரகில்‌ போடப்பட வேண்டியவை போடப்பட்டுக்‌ கொண்டேயிருக்கும்‌. நரகமோ இன்னும்‌ இருக்கிறதா? இன்னும்‌ இருக்கிறதா? என்று கேட்டுக்‌ கொண்டே இருக்கும்‌. இறுதியில்‌ அகில உலகின்‌ அதிபதி தனது பாதத்தை அதில்‌ வைப்பான்‌. அவை ஒன்றோடொன்று சேர்ந்து “உனது கண்ணியம்‌ மற்றும்‌ ஈகை மீது சத்தியமாக! போதும்‌, போதும்‌' எனக்‌ கூறும்‌. ஆனால்‌ சொர்க்கத்தில்‌ இடங்கள்‌ காலியாகவே இருக்கும்‌. அவற்றுக்காக அல்லாஹ்‌ மனிதர்களை உருவாக்கி அந்தக்‌ காலி இடங்களில்‌ தங்க வைப்பான்‌.” அறிவிப்பவர்‌: அனஸ்‌ (ரலி), நூல்‌: புகாரி-7384, முஸ்லிம்‌-2848

இந்நபிமொழியில்‌:

அல்லாஹ்வுக்கு பாதம்‌ இருக்கிறதென நிரூபணமாகிறது. அது அவனது மகத்துவத்திற்கு ஏற்ற விதத்தில்‌ இருக்கும்‌. படைப்பினங்களின்‌ பாதங்களுக்கு அது ஒப்பாகாது. “அவனைப்‌ போல்‌ எதுவும்‌ இல்லை. அவன்‌ செவியுறுபவன்‌, பார்ப்பவன்‌.” (42:11)

இந்நபிமொழியில்‌ அல்லாஹ்வினுடைய மகத்துவம்‌ மற்றும்‌ அடக்கியாளும்‌ தன்மை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவனுடைய பிடி கடுமையாக இருக்கும்‌. அல்லாஹ்வின்‌ அனுமதியுடன்‌ நரகம்‌ பேசும்‌. அல்லாஹ்வின்‌ கருணை அவனுடைய கோபத்தை மிஞ்சி இருக்கிறது. எந்த அளவுக்கு எனில்‌ நரகில்‌ அதிகப்படுத்தப்படுவதை நிறுத்திவிடுவான்‌. சொர்க்கத்திலுள்ள அதிகப்படியான இடங்களுக்கு வேறு மனிதர்களை உருவாக்குவான்‌. நரகத்தின்‌ பயங்கரம்‌ இதில்‌ சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (அதிலிருந்து அல்லாஹ்‌ நம்மைக்‌ காப்பானாக!)

அல்லாஹ்வின்‌ பெயர்கள்‌, தன்மைகள்‌ மற்றும்‌ மறைவான விஷயங்கள்‌ பற்றிய நபிமொழிகளை நபித்தோழர்கள்‌ செவி யேற்று, அவற்றை நம்பி, ஏற்றுக்‌ கொண்டார்கள்‌; அவற்றை மெய்ப்படுத்தினார்கள்‌. நபிமொழிகளில்‌ வந்துள்ளது போலவே அவற்றைக்‌ கையாண்டார்கள்‌. அவற்றை ஒப்பாக்காமல்‌, இன்ன விதத்தில்‌ என்று விவரிக்காமல்‌, உதாரணம்‌ கூறாமல்‌, மறுக்காமல்‌ அப்படியே அல்லாஹ்வுக்குக்‌ கொடுத்தார்கள்‌.

10. “உங்களில்‌ யாராயினும்‌ அவருடைய இறைவன்‌ அவரிடம்‌ பேசத்தான்‌ போகிறான்‌. அவருக்கும்‌ அவருடைய இறைவனுக்கும்‌ இடையில்‌ மொழிபெயர்ப்பாளர்‌ யாரும்‌ இருக்க மாட்டார்‌. அப்போது அவர்‌ தனது வலது பக்கம்‌ பார்ப்பார்‌; தான்‌ செய்த செயல்களைத்‌ தவிர வேறு எதையும்‌ (அங்கு) காண மாட்டார்‌. தனது இடது பக்கம்‌ பார்ப்பார்‌; தான்‌ செய்த செயல்களைத்‌ தவிர எதையும்‌ (அங்கு) காணமாட்டார்‌. தனக்கு முன்னால்‌ பார்ப்பார்‌; (அங்கே) தனக்கு நேராக நரகத்தைத்‌ தவிர வேறு எதையும்‌ காண மாட்டார்‌. எனவே பாதி ஈத்தம்‌ பழம்‌ அளவுக்கேனும்‌ தர்மம்‌ செய்து நரகிலிருந்து (உங்களைக்‌) காத்துக்‌ கொள்ளுங்கள்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (புகாரி-1016, முஸ்லிம்‌-7512) அறிவிப்பவர்‌: அதீ பின்‌ ஹாதிம்‌ (ரலி).

இந்நபிமொழியில்‌:

அல்லாஹ்வுக்கு அவனது மகத்துவத்திற்கு ஏற்ற விதத்தில்‌ பேச்சு இருக்கிறது என்பது நிரூபணமாகின்றது. மறுமையில்‌ மொழிபெயர்ப்பாளர்‌ யாருமின்றி தன்‌ அடியாரிடம்‌ அவன்‌ பேசுவான்‌. மறுமையில்‌ விசாரணையின்போது அடியானுக்கு முன்னால்‌ நரகம்‌ எடூத்துக்‌ காட்டப்படும்‌. நரக வேதனையை விட்டும்‌ தடுப்பதில்‌ மிக முக்கியமானது தர்மம்‌ ஆகும்‌. தர்மம்‌ நரகத்தை விட்டும்‌ பாதுகாக்கக்கூடியது. மனிதன்‌ எந்த நன்மையையும்‌ அற்பமாகக்‌ கருதக்‌ கூடாது, உண்மையில்‌ நற்செயல்கள்‌ ஈடேற்றத்திற்குக்‌ காரணமாக இருக்கின்றன. ஆம்‌! அங்கு நற்செயல்களைத்‌ தவிர வேறெதுவும்‌ பலன்‌ தராது. “(இது) மிகைத்தவனும்‌ ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதமாகும்‌” (85:2)

11. “அல்லாஹ்வின்‌ தூதரே! லைலதுல்‌ கத்ர்‌ இரவை நான்‌ அடைந்தால்‌ எதைப்‌ பிரார்த்திப்பது?” என (நபி (ஸல்‌) அவர்களிடம்)‌ நான்‌ கேட்டேன்‌. அதற்கு நபி (ஸல்‌) அவர்கள்‌, “அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன்‌ துஹிப்புல்‌ அஃப்வ ஃபஅஃபு அன்னீ” என்று கூறு எனக்‌ கூறினர்கள்‌.

(பொருள்‌: இறைவா! நீ மன்னிப்பவன்‌! மன்னிப்பதை விரும்புபவன்‌! என்னை மன்னிப்பாயாக!) அறிவிப்பவர்‌: ஆயிஷா (ரலி) நூல்‌: அஹ்மத்‌, இப்னு மாஜா-3850, அஸ்ஸஹீஹா-அல்பானி

இந்நபிமொழியில்‌:

அல்லாஹ்வுக்கு அவனது மகத்துவத்திற்கு ஏற்ற விதத்தில்‌ மன்னிக்கும்‌ தன்மையும்‌ விரும்புகின்ற குணமும்‌ உண்டு என்பது நிரூபணமாகிறது. மக்களை மன்னிப்பவர்களை அவன்‌ விரும்புகிறான்‌. அல்லாஹ்‌ விரும்புகின்ற குணங்களை அடியான்‌ மேற்கொள்வது அவசியமாகும்‌. செயல்களைப்‌ பொறுத்தே கூலியும்‌ இருக்கும்‌. மக்களை மன்னிக்கிறவனை அல்லாஹ்‌ மன்னிப்பான்‌. அடியான்‌ தன்‌ இறைவனின்‌ மன்னிப்பை ஆதரவு வைக்க வேண்டும்‌. தனது பாவங்களை மன்னித்து பிழைகளை பொருத்தருள அவனிடம்‌ இறைஞ்ச வேண்டும்‌.

12. “மறுமையில்‌ இறைவன்‌ முஃமின்களுக்கு சிரித்தவாறு காட்சி தருவான்‌” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (முஸ்லிம்‌-191)

இந்நபிமொழியில்‌:

மறுமையில்‌ காட்சி தரும்‌ தன்மை அல்லாஹுவுக்கு உண்டு. அது அவனுடைய மகத்துவத்திற்கு ஏற்ற விதத்தில்‌ என்பது நிரூபணமாகிறது. ஸஹீஹான ஹதீஸில்‌ வந்துள்ளது போல்‌ சிரிக்கும்‌ பண்பும்‌ அல்லாஹ்வுக்கு உண்டு என்பதும்‌ நிரூபணம்‌. அவன்‌ சிரிப்பது அவனது நேசர்களை அவன்‌ கண்ணியப்படுத்துவதற்குச்‌ சான்றாகும்‌. அல்லாஹ்‌ தனது நேசர்களுக்குக்‌ காட்சி தரும்போது சிரிப்பான்‌. தன்னுடைய பகைவர்களை விட்டும்‌ தன்னை மறைத்துக்‌ கொள்வான்‌. அவர்களால்‌ அவனைக்‌ காண முடியாது.

13. “இரு மனிதர்களைப்‌ பார்த்து அல்லாஹ்‌ சிரிக்கிறான்‌. அவ்விருவரில்‌ ஒருவர்‌ மற்றொருவரைக்‌ கொலை செய்தார்‌. அவ்விருவருமே சொர்க்கத்தில்‌ இருக்கிறார்கள்‌” என அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. அறிவிப்பவர்‌: அபூஹுரைரா(ரலி), நூல்‌: புகாரி-2826, முஸ்லிம்‌-1890, இப்னுமாஜா-191, நஸயீ, அஹ்மத்

இந்நபிமொழியில்‌:

சிரிக்கும்‌ பண்பு அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்பது நிரூபணம்‌. இது அதன்‌ வெளிப்படையான அர்த்தத்திலும்‌ அவனது மகத்துவத்திற்கு ஏற்ற விதத்தில்‌ ஆகும்‌. ஏனெனில்‌ அவனது பெயர்கள்‌ (குறைகளை விட்டும்‌) பரிசுத்தமானவை! அவனது அருட்கொடைகள்‌ மகத்தானவை! நபித்தோழர்கள்‌

இவற்றை நம்பி ஏற்றுக்‌ கொண்டனர்‌. குர்‌ஆன்‌, ஹதீஸில்‌ வந்துள்ளது போலவே இவற்றை கையாண்டனர்‌. அவற்றில்‌ அவர்கள்‌ தடுமாறவில்லை; அது பற்றி அவர்கள்‌ யாரிடமும்‌ கேட்கவில்லை; அவற்றிற்கு எந்த வியாக்கியானமும்‌ கூறவில்லை. இந்தச்‌ சிரிப்பு மனிதர்களின்‌ சிரிப்பைப்போல்‌ அல்ல. அதை விட்டும்‌ அல்லாஹ்‌ உயர்ந்தவன்‌. “அவனைப்‌ போல்‌ எதுவுமில்லை. அவன்‌ (யாவற்றையும்‌) செவியேற்பவன்‌, பார்ப்பவன்‌!” (42:11)

அல்லாஹ்வுடைய விசாலமான கருணையும்‌ தவ்பா செய்பவர்களின்‌ தவ்பாவை அவன்‌ ஏற்றுக்‌ கொள்வதும்‌ இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொலைக்‌ குற்றம்‌ புரிந்தவன்‌ தவ்பா செய்துவிட்டு நன்னடத்தையை மேற்கொண்டால்‌ அவனது தவ்பாவை அல்லாஹ்‌ ஏற்று அவனை மன்னிப்பான்‌. மேலும்‌ அவனை சொர்க்கத்தில்‌ நுழைவிப்பான்‌.

14. “சில மக்கள்‌ சங்லிகளால்‌ பிணைக்கபட்டு சொர்க்‌கத்திற்கு இழுத்துச்‌ செல்லப்படுவதைப்‌ பார்த்து அல்லாஹ்‌ வியப்படைகிறான்‌” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்‌. நூல்‌: புகாரி-3010, அபூதாவூத்‌-2677, அஹமத்‌

இந்நபிமொழியில்‌:

வியப்படையும்‌ தன்மை அல்லாஹ்வுக்கு இருப்பது நிரூபணமாகின்றது. அது அவனுடைய மகத்துவத்திற்கு ஏற்ற விதத்திலாகும்‌. இத்தன்மை மனிதர்கள்‌ வியப்படையும்‌ தன்மைக்கு ஒத்ததாக இருக்காது. “அவனைப்‌ போல்‌ எதுவுமில்லை. அவன்‌ செவியேற்பவன்‌, பார்ப்பவன்‌!” (42:11)

உண்மையில்‌ மனிதன்‌ அவனுடைய பார்க்கும்‌ திறன்‌ குறைபாடுடையதாக இருப்பதால்‌ சில போது நல்லதைத்‌ தேர்வு செய்வதில்லை. எந்த அளவுக்கு எனில்‌ அதனை இன்னொருவன்‌ அவனுக்கு வழி காட்ட வேண்டியிருக்கிறது. மனிதன்‌ சில சமயம்‌ சத்தியத்தை ஏற்றுக்‌ கொள்வதற்கும்‌ அசத்தியத்திலிருந்து விலகிக்‌ கொள்வதற்கும்‌ தனக்கு யார்‌ முயற்சி செய்கிறாரோ அவரிடமிருந்து பயன்‌ பெறுகிறான்‌.

அவருக்கு அவன்‌ துன்பம்‌ தந்தாலும்‌ சரியே! உள்ளம்‌ தீமையை அதிகம்‌ தூண்டக்கூடியதாக இருக்கின்றது. நல்ல நண்பன்‌, நலம்‌ நாடக்கூடிய தோழர்‌ மற்றும்‌ நன்மைக்கு உதவுபவனுடைய சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“ நன்மையான காரியத்திலும்‌ இறைச்சமுள்ள காரியத்திலும்‌ ஒருவருக்கொருவர்‌ உதவியாக இருங்கள்‌. பாவத்துக்கும்‌ வரம்புமீறலுக்கும்‌ ஒருவருக்கொருவர்‌ உதவாதீர்கள்‌ ” (5:2)

சிலர்‌ நன்மை செய்வதற்கு மற்றவர்களால்‌ நிர்ப்பந்திக்கப்‌படுகிறார்கள்‌. பிறகு அவர்களுடைய உள்ளம்‌ (அதற்குப்‌) பணிந்து (அதை ஏற்றுக்கொள்வதற்கு) இலகுவாகிவிடுகிறது.

சொர்க்கம்‌ துன்பங்களால்‌ சூழப்பட்டுள்ளது. ஆரம்பத்தில்‌ நற்செயல்‌ சிலவேளை உள்ளத்திற்கு கஷ்டமாகத்தான்‌ இருக்கும்‌. ஒரு முஸ்லிம்‌ அல்லாஹ்வின்‌ அடியார்களை நரகிலிருந்து காப்பாற்றுவதற்காக சத்தியத்தை ஏற்பதற்கு அவர்களை நிர்ப்பந்திக்க வேண்டும்‌. மக்கள்‌ தீமையைத்‌ தேர்வு செய்யும்போது அவர்கள்‌ இஷ்டத்திற்கு விடப்பட மாட்டார்கள்‌. இந்த நபிமொழியில்‌ இந்தச்‌ சமுதாயத்தின்‌ சிறப்பு உணர்த்தப்பட்டுள்ளது. அவர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ சுவர்க்கத்திற்கு இழுத்துச்‌ செல்வார்கள்‌. 

15. ஒரு மனிதர்‌ நபி(ஸல்‌) அவர்களிடம்‌ வந்து, “நீங்கள்‌ குறைஷிகளின்‌ தலைவரா?” என்று கேட்டார்‌. அதற்கு நபி(ஸல்‌) அவர்கள்‌, “தலைவன்‌ அல்லாஹ்‌ தான்‌” என்றார்கள்‌. பிறகு அவர்‌, “(அப்படியானால்‌) நீங்கள்‌ சொல்லால்‌ அவர்களில்‌ சிறந்தவர்கள்‌. அந்தஸ்தால்‌ அவர்களில்‌ உயர்ந்தவர்கள்‌” என்றார்‌. அதற்கு நபி (ஸல்‌) அவர்கள்‌, “உங்களில்‌ ஒருவர்‌ (என்னைப்‌ பற்றி) இவர்‌ சொன்னதைச்‌ சொல்லட்டும்‌. ஷைத்தான்‌ அவரை மிகைத்து விட வேண்டாம்‌” என்று கூறினார்கள்‌. (அஹ்மத்‌, ஸஹீஹுல்‌ ஜாமிஃ-3700,)

இதே கருத்தில்‌ அமைந்த மற்றொரு ஹதீஸ்‌ அபூதாவூதில்‌ (4806) இடம்‌ பெற்றுள்ளது. அறிவிப்பவர்‌: அப்துல்லாஹ்‌ பின்‌ ஷிக்கீர்‌ (ரலி)

இந்நபிமொழியில்‌:

ஸையித்‌- தலைவர்‌ எனும்‌ வார்த்தை அல்லாஹ்வுக்குச்‌ சொல்லப்படும்‌. எவனுடைய சிறப்பும்‌ மேன்மையும்‌ பரிபூரணமடைந்து விட்டதோ எவனுடைய அருள்‌ முழுமை பெற்று, கருணை எல்லோருக்கும்‌ பொதுவாகிவிட்டதோ, மக்களுடைய உள்ளங்களில்‌ எவனைப்‌ பற்றிய பயம்‌ அதிகரித்து விட்டதோ அவனே தலைவன்‌ ஆவான்‌. அல்லாஹ்வுடைய தலைமைத்‌ தகுதி மனிதனுடைய தலைமைத்‌ தகுதியைப்‌ போல்‌ அல்லாமல்‌ அவனுடைய மகத்துவத்திற்கு ஏற்ற விதத்தில்‌ இருக்கும்‌. ஏனெனில்‌ மனிதனுடைய தலைமைத்‌ தகுதி குறையள்ளதாகும்‌.

16. “அல்லாஹ்‌ தான்‌ மேகத்தை உற்பத்தி செய்கிறான்‌. அது அழகாகப்‌ பேசும்‌; அழகாகச்‌ சிரிக்கும்‌” என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. (அஹ்மத்‌, ஸஹீஹுல்‌ ஜாமிஃ-1920)

இந்நபிமொழியில்‌:

இதுபோன்ற நபிமொழிகளை: அவை எவ்வாறு வந்துள்‌ளனவோ அவ்வாறே நாம்‌ கையாள வேண்டும்‌. அந்நபி மொழிகளை உண்மைப்படுத்தியவர்களாய்‌, அந்நபிமொழிகள்‌ எந்தக்‌ கருத்தைச்‌ சொல்கின்றனவோ அதனை எவ்வித ஊகத்திற்கும்‌, கற்பனைக்கும்‌ மற்றும்‌ சந்தேகத்திற்கும்‌ இடம்‌ தராமல்‌ நம்பியவர்களாய்க்‌ கையாள வேண்டும்‌. மேகத்தை உருவாக்குவதும்‌, அந்த மேகம்‌ பேசுவதும்‌, சிரிப்பதும்‌ அதனை முன்மாதிரியின்றிப்‌ படைத்து, உருவாக்குபவனின்‌ ஆற்றலுக்கும்‌ அவனது நுண்ணறிவின்‌ பூரணத்துவத்திற்கும்‌ சான்றாகும்‌. சிலர்‌, இடியை மேகத்தின்‌ பேச்சாகவும்‌, மின்னலை மேகத்தின்‌ சிரிப்பாகவும்‌ கருதுகிறார்கள்‌.

அல்லாஹ்‌ கூறுகிறான்‌: “பளுவான மேகத்தையும்‌ அவன்‌ உருவாக்குகிறான்‌. இடியும்‌ அவனைப்‌ புகழ்ந்து போற்றுகிறது. அவனைப்‌ பற்றிய அச்சத்தினால்‌ வானவர்களும்‌ (புகழ்ந்து போற்றுகின்றனர்‌). இடி முழக்கங்களையும்‌ அவனே அனுப்புகிறான்‌. தான்‌ நாடுகின்றவர்களை அவற்றின்‌ மூலம்‌ தண்டிக்கிறான்‌. அவர்களோ அல்லாஹ்வைப்‌ பற்றி தர்க்கம்‌ செய்கின்றனர்‌. அவன்‌ வலிமை மிக்கவன்‌.” (13:12,13)

17. “அல்லாஹ்விடம்‌ ஏதேனும்‌ ஒப்படைக்கப்பட்டால்‌ அதனை அவன்‌ பாதுகாப்பான்‌” என பேரறிஞர்‌ லுக்மான்‌ கூறுவார்கள்‌ என்று நபி(ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. அறிவிப்பவர்‌: இப்னு உமர்‌(ரலி), நூல்‌: அஹ்மத்‌, ஸஹீஹுல்‌ ஜாமிஃ-1708

இந்நபிமொழியில்‌:

அல்லாஹ்வின்‌ செயல்களில்‌ பாதுகாத்தலும்‌ ஒன்று. அவன்‌, ஒவ்வொரு மனிதனும்‌ செய்ததைப்‌ பாதுகாப்பவன்‌ ஆவான்‌. மனிதன்‌ தனது தீனையும்‌, அமானிதங்களையும்‌ செயல்களின்‌ முடிவுகளையும்‌ தன்‌ இறைவனிடம்‌ ஒப்படைத்து விட வேண்டும்‌. ஆதாரப்பூர்வமான ஹதீஸில்‌ வந்துள்ளது போல, பயணம்‌ செல்பவர்‌ விடைபெறும்போது “உம்முடைய தீனையும்‌, அடைக்கலப்‌ பொருட்களையும்‌, பொறுப்புகளையும்‌ செயல்களின்‌ முடிவுகளையும்‌ அல்லாஹ்விடம்‌ ஒப்படைக்‌கிறேன்‌” என்று நாம்‌ அவரிடம்‌ கூறவேண்டும்‌. அல்லாஹ்‌வுடைய அறிவு மற்றும்‌ ஞானத்தின்‌ பரிபூரணத்துவம்‌ இதில்‌ சுட்டிக்‌ காட்டப்பட்டுள்ளது. திண்ணமாக அவனிடம்‌ எந்தப்‌ பொருளும்‌ மறைந்ததல்ல. அல்லாஹ்‌ கூறுகிறான்‌: “(நபியே!) நீர்‌ உரக்கச்‌ சொன்னாலும்‌ இரகசியத்தையும்‌ (அதை விட) மறைவானவற்றையும்‌ அவன்‌ அறிகிறான்‌.” (20:7)

18. “மிகைத்தல்‌ அவனுடைய கீழாடை! பெருமை அவனது மேலாடை!” அல்லாஹ்‌ கூறுகிறான்‌: “இதில்‌ யாரேனும்‌ என்னுடன்‌ போட்டிக்கு வந்தால்‌ அவனை நான்‌ வேதனை செய்வேன்‌” என நபி(ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. அறிவிப்பவர்‌: அபூஸயீத்‌ (ரலி), அபூஹுரைரா(ரலி), (முஸ்லிம் 2620‌)

இந்நபிமொழியில்‌:

எல்லாவற்றிலும்‌ மிகைத்தலும்‌ எல்லாப்‌ பெருமையும்‌ அல்லாஹ்வுக்குரியது என நிரூபணமாகின்றது. பொதுவாக மிகைத்தலும்‌ பெருமையும்‌ அல்லாஹுவுக்குரியதாகும்‌. இவ்விரு தன்மைகளில்‌ மனிதன்‌ தன்‌ இறைவனுடன்‌ போட்டி போடுவது ஹராமாகும்‌. ஏனெனில்‌ இவ்விரு பண்புகளும்‌ அவனுக்கு மட்டுமே உரியன. மேலும்‌ இவ்விரண்டின்‌ மூலம்‌ அவன்‌ தனித்துவம்‌ பெற்றுள்ளான்‌. அவனுடைய படைத்துப்‌ பரிபாலிக்கும்‌ தன்மை, இறைத்‌ தன்மை மற்றும்‌ அடக்கியாளும்‌ தன்மையின்‌ தேட்டம்‌ இதுதான்‌: “அவன்‌ யாவற்றையும்‌ மிகைத்தவனாக இருக்க வேண்டும்‌. அவன்‌ எவராலும்‌ மிகைக்கப்படக்கூடாது. அவன்‌ பெருமைக்குரியவனாக இருக்க வேண்டும்‌. அவனை யாரும்‌ மிஞ்சிவிடக்‌ கூடாது.” இவ்விரு பண்புகளையோ அல்லது இவ்விரண்டில்‌ ஒன்றையோ மனிதன்‌ தனதாக்கிக்‌ கொண்டால்‌ இறைத்தன்மையில்‌ தன்னுடைய இறைவனுடன்‌ போட்டி போட்டவனாவான்‌. தன்‌ இறைவனின்‌ மகத்துவத்தில்‌ இணை கற்பித்தவனாவான்‌.

ஆகவே மனிதன்‌ தன்‌ இறைவனுக்குத்‌ தாழ்வதையும்‌ தன்‌ எஜமானுக்குப்‌ பணிவதையும்‌ மேற்கொள்வது கடமையாகும்‌. இந்த அடிமைத்தனத்தைத்தான்‌ தன்‌ அடியார்களிடம்‌ அல்லாஹ்‌ எதிர்பார்க்கிறான்‌. இதைத்தான்‌ அவர்கள்‌ மீது கடமையாக்கி இருக்கின்றான்‌. பெருமையடிப்பவர்களுக்கும்‌ அடக்கியாள்பவர்களுக்கும்‌ இந்நபிமொழியில்‌ உறுதியான எச்சரிக்கையும்‌ கடுமையான கண்டனமும்‌ இருக்கிறது.

19. “தான்‌ செவியுறும்‌ துன்பத்தை மிகவும்‌ பொறுத்துக்‌ கொள்பவன்‌ அல்லாஹ்வை விட வேறு யாரும்‌ கிடையாது. அவர்கள்‌ அவனுக்கு இணை கற்பிக்கின்றனர்‌; அவனுக்கு சந்ததியை ஏற்படுத்துகின்றனர்‌. அப்படியிருந்தும்‌ அவர்களுக்கு அவன்‌ உணவளிக்கின்றான்‌, அவர்களை மன்னிக்கின்றான்‌, அவர்களுக்கு (தேவையானதை)க்‌ கொடுக்கின்றான்‌” என அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌.  அறிவிப்பவர்‌: அபூமூஸா (ரலி), புகாரி-7378, முஸ்லிம்‌-2804

இந்நபிமொழியில்‌:

அல்லாஹ்‌ துன்பத்தைப்‌ பொறுத்துக்‌ கொள்கின்றான்‌.

இது படைப்பினங்களின்‌ பொறுமைக்கு ஒப்பாகாத விதத்தில்‌ அவனுடைய மகத்துவத்திற்கு ஏற்ற வகையிலாகும்‌. தனது அடியார்கள்‌ மீது அவன்‌ கொண்டிருக்கும்‌ மிகப்‌ பெரும்‌ பொறுமை இதில்‌ கூறப்பட்டுள்ளது. அவ்வாறிருந்தும்‌ அவன்‌ சக்திமிக்கவன்‌! கடுமையாகத்‌ தண்டிப்பவன்‌! ஆயினும்‌ அவன்‌ கருணை அவனது கோபத்தையும்‌ மிகைத்‌ திருக்கிறது. மிகப்‌ பெரும்‌ பாவம்‌ அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்‌, அவனுக்கு மனைவி, சந்ததியைக்‌ கற்பிப்பதும்‌ ஆகும்‌.

ஒரு காஃபிர்‌ அல்லாஹ்வை நிராகரித்தும்‌ கூட அவனுக்கு அல்லாஹ்‌ ரிஸ்க்‌- வாழ்வாதாரம்‌ அளிக்கின்றான்‌. அவனை மன்னிக்கின்றான்‌. அவன்‌ செய்த பாவங்களுக்கு மறுமையில்‌ முழுமையான கூலியை வழங்கும்‌ வரை அவனைத்‌ (தண்டிக்காமல்‌) விட்டு விடுகின்றான்‌. இந்த ஹதீஸில்‌ அடியார்களின்‌ பேச்சுக்களை அல்லாஹ்‌ செவியேற்பது நிரூபணமாகின்றது. அதற்கு ஒப்பு, உவமை கிடையாது. “அவனைப்‌ போல்‌ எதுவும்‌ இல்லை. அவன்‌ யாவற்றையும்‌ செவியேற்பவன்‌ பார்ப்பவன்‌.” (42:11)


Previous Post Next Post