அல்லாஹ்வுக்குக்‌ கொடுக்கக்‌ கூடாத தன்மைகள்‌



1. “அல்லாஹ்வுக்கு இணை கிடையாது” என நபி(ஸல்‌) கூறினார்கள்‌. அறிவிப்பவர்‌: உஸாமா பின்‌ உமைர்‌ (ரலி), (அபூதாவூத்‌-3933, ஸஹீஹுல்‌ ஜாமிஃ-5423)

இந்நபிமொழியில்‌:
இந்தச்‌ சொற்றொடர்‌ வேதங்களும்‌ தூதர்களும்‌ எதனைக்‌ குறித்து எச்சரித்தார்களோ அதன்‌ சாரமாகும்‌. அது இதுதான்‌:
அல்லாஹ்‌ ஒருவன்‌; அவனுக்கு இணை துணை எதுவும்‌ கிடையாது. “லாஇலாஹ இல்லல்லாஹ்‌' வுடைய அர்த்தமும்‌ இதுதான்‌. அல்லாஹ்‌ வணக்கத்திற்குத்‌ தகுதியானவன்‌; இறைமையில்‌ அவன்‌ தனித்தவன்‌; படைத்துப்‌ பரிபாலிப்பதில்‌ அவன்‌ ஒத்த ஒருவன்‌; அவனது பெயர்களிலும்‌ தன்மைகளிலும்‌ (குறைகளை விட்டும்‌) பரிசுத்தமானவன்‌. அல்லாஹ்‌ கூறுகிறான்‌: “அவனுக்கு நிகரானவனை நீர்‌ அறிவீரா?” (19:65)


2. மனிதன்‌ என்னைப்‌ பொய்ப்படுத்தி விட்டான்‌. அது அவனுக்கு அவசியமில்லாதது. மனிதன்‌ என்னைத்‌ திட்டி விட்டான்‌. அது அவனுக்குத்‌ தேவையில்லாதது. அவன்‌ என்னைப்‌ பொய்ப்படுத்துவது என்பது அவனை முன்பு இருந்தது போல மீண்டும்‌ படைப்பதற்கு என்னால்‌ இயலாது என்று அவன்‌ கருதுவதாகும்‌. அவன்‌ என்னைத்‌ திட்டுவ தென்பது எனக்கு சந்ததி இருப்பதாக அவன்‌ கூறுவதாகும்‌. நான்‌ மனைவியையோ பிள்ளையையோ ஏற்படுத்திக்‌ கொள்வதை விட்டும்‌ பரிசுத்தமானவன்‌” என்று அல்லாஹ்‌ கூறுவதாக நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌. அறிவிப்பவர்‌: இப்னு அப்பாஸ்‌ (ரலி), நூல்‌: புகாரி-4482

இந்நபிமொழியில்‌:
அடியார்கள்‌ மீது அல்லாஹ்வுடைய விசாலமான
கருணையும்‌, அவர்கள்‌ மீது அவனுக்குள்‌ பொறுமையும்‌ இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆதாரப்பூர்வமான ஹதீஸில்‌ வந்துள்ளது போல, தான்‌ செவியுறுகிற துன்பத்தை மிகவும்‌ சகித்துக்‌ கொள்பவன்‌ அல்லாஹ்வை விட வேறு எவனும்‌ இல்லை. அல்லாஹ்வுக்கு மனைவி மக்கள்‌ இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மாறாக அவன்‌ ஏகன்‌! தேவையற்றவன்‌! அவன்‌ (யாரையும்‌) பெறவுமில்லை! (யாருக்கும்‌) பெறக்கவும்‌ இல்லை! அவனுக்கு நிகர்‌ எவனுமில்லை! முஃமினான அடியான்‌ மனிதர்களின்‌ துன்பங்களைப்‌ பொறுத்துக்‌ கொள்ள வேண்டும்‌. இதோ (யாவற்றையும்‌) படைத்து வாழ்வாதாரம்‌ வழங்கக்கூடிய இறைவன்‌ மனிதர்களால்‌ பொய்ப்படுத்தப்‌பட்டும்‌ ஏசப்பட்டும்‌ (அவர்களுக்கு) வாரி வழங்குபவனாக இருக்கிறான்‌. அவ்வாறாயின்‌ பாவம்‌ செய்கின்ற பலவீனமான அடியான்‌ எப்படி நடந்து கொள்ள வேண்டும்‌?


3. நபி (ஸல்‌) அவர்கள்‌ எங்களிடையே ஒரு உரையில்‌ ஐந்து விஷயங்களைக்‌ கூறினார்கள்‌. அதாவது “அல்லாஹ்‌ தூங்குவதில்லை; அது அவனுக்கு அவசியமும்‌ இல்லை. துலாக்‌ கோலை அவன்‌ தாழ்த்தவும்‌ செய்கிறான்‌, உயர்த்தவும்‌ செய்கிறான்‌. பகலில்‌ செய்யப்படும்‌ செயல்களுக்கு முன்‌ இரவில்‌ செய்யப்பட்ட செயல்கள்‌ அவனிடம்‌ உயர்த்தப்‌படுகின்றன. (அதுபோல) இரவில்‌ செய்யப்படும்‌ செயல்களுக்கு முன்‌ பகலில்‌ செய்யப்பட்ட செயல்கள்‌ அவனிடம்‌ உயர்த்தப்‌படுகின்றன. அவனுடைய திரை ஒளியாகும்‌. அதை அவன்‌ நீக்கினால்‌ அவன்‌ முகத்தின்‌ பேரொளி, அவனது பார்வை சென்றடையும்‌ வரை உள்ள அவனுடைய படைப்பினங்கள்‌ அனைத்தையும்‌ எரித்துவிடும்‌” என்று கூறினார்கள்‌.
அறிவிப்பவர்‌: அபூமூஸா (ரலி),
நூல்‌: முஸ்லிம்‌-179, இப்னுமாஜா-195, அஹ்மத்‌
 
 
இந்நபிமொழியில்‌:
அல்லாஹ்வுடைய நிர்வகிக்கும்‌ ஆற்றலின்‌ பூரணத்துவம்‌ இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவன்‌ நித்திய ஜீவன்‌, (பேரண்டம்‌ முழுவதையும்‌) நன்கு நிர்வகிப்பவன்‌, அசதியோ, தூக்கமோ அவனுக்கு ஏற்படுவதில்லை. தூக்கம்‌ ஒரு பலவீனமாகும்‌. அதை விட்டும்‌ அல்லாஹ்‌ பரிசுத்தமானவன்‌. ஒளி எனும்‌ திரை அல்லாஹ்வுக்கு இருப்பது இங்கு நிரூபணமாகின்றது. அவனிடம்‌ (படைப்பினங்களின்‌ வாழ்வாதாரத்தின்‌) துலாக்கோல்‌ உள்ளது. அவன்‌ நாடியவாறு அதைக்‌ கூட்டிக்‌ குறைத்துக்‌ கொள்கிறான்‌. ஒவ்வொரு பகலிலும்‌ இரவிலும்‌ அடியார்களின்‌ செயல்கள்‌ அவனிடம்‌ உயர்த்தப்படுகின்றன. அவனுடைய மகத்துவத்தின்‌ பரிபூரணத்துவமும்‌, அவனுடைய பேரொளியும்‌, பெருமையும்‌ இங்கு சொல்லப்பட்டுள்ளது. அவன்‌ ஒவ்வொரு பொருளையும்‌ கண்காணிப்பவன்‌. ஒவ்வொரு ஆன்மாவும்‌ செய்தவற்றைப்‌ பாதுகாப்பவன்‌.
அல்லாஹ்‌ கூறுகிறான்‌: “உண்மையில்‌ அல்லாஹ்‌ தான்‌ வானங்களையும்‌ பூமியையும்‌ விலகிவிடாமல்‌ தடுத்து வைத்துள்ளான்‌. அப்படி அவை விலகிவிட்டால்‌ அவனன்றி எவரும்‌ அவற்றைத்‌ தடுத்து நிறுத்த முடியாது. அவன்‌ மிகவும்‌ சகிப்புத்‌ தன்மையுடையவனாகவும்‌ மன்னிப்பவனாகவும்‌ இருக்கிறான்‌. (35:41) 

அல்லாஹ்வுடைய குண அம்சங்கள்‌ என ஹதீஸ்களில்‌ வந்துள்ள அனைத்தையும்‌ ஹதீஸ்களில்‌ எப்படி வந்துள்ளதோ அப்படியே நாம்‌ ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌. அவற்றை மறுக்கவோ, ஒப்பாக்கவோ, உவமைப்படுத்தவோ, எந்த விதத்தில்‌ என விவரிக்கவோ கூடாது. அவை எந்தக்‌ கருத்தில்‌ அல்லாஹ்விடமிருந்தும்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்களிடமிருந்தும்‌ வந்திருக்கின்றனவோ அந்தக்‌ கருத்தில்‌ அவற்றை அப்படியே நாம்‌ நம்ப வேண்டும்‌.
Previous Post Next Post