بسم الله الرحمن الرحيم
இதுவிடயம் குறித்து ஒரு ஹதீஸ் அபூமூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பின்வருமாறு பதிவாகியுள்ளது: நபியவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹுத்தஆலா ஷஃபானுடைய நடுப்பகுதி இரவில் வெளியாகி, இணைவைப்பாளன் அல்லது தனது சகோதரனுடன் விரோதம் கொள்ளக்கூடியவனைத் தவிர அவனுடைய அனைத்துப் படைப்புக்களையும் மன்னிப்பான்”. (ஆதாரம்: இப்னு மாஜா)
இந்த ஹதீஸ் குறித்து அஸ்ஸவாஇத் என்ற நூலில் இடம்பெற்றுள்ளதாவது: "இதனுடைய அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது. (காரணம், இதன் அறிவிப்பாளர் தொடரில்) அப்துல்லாஹ் இப்னு லஹீஆ என்ற பலவீனமான நபர் இடம்பெற்றிருப்பதும், வலீத் இப்னு முஸ்லிம் என்பவரின் இருட்டடிப்பு நடவடிக்கையுமாகும். மேலும், இந்த ஹதீஸில் குளறுபடி உள்ளது. அதனை இமாம் தாரகுத்னி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அல்இலல் எனும் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அவர் குறித்த ஹதீஸ் தொடர்பாகக் கூறும் போது: “இந்த ஹதீஸ் உறுதியான ஹதீஸ் அன்று” என்கிறார்.
மேலும் இச்செய்தி முஆத், ஆயிஷா, அபூஹுரைரா, அபூ ஸஃலபா அல்ஹுஷனி மற்றும் இவர்களல்லாதோரைத் தொட்டும் பதிவாகியுள்ளது. ஆயினும், அச்செய்திகள் அனைத்தும் பலவீனம் என்ற வட்டத்திற்குள்ளேயே வலம் வருகின்றன. மேலும், அவற்றுள் சில செய்திகள் கடுமையான பலவீனம் என்ற நிலையில் காணப்படுகின்றன.
இன்னும், அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குவதென்பது ஷஃபானின் மத்திய இரவில் மாத்திரமல்ல மாற்றமாக, ஒவ்வோர் இரவிலும் முதல் வானத்திற்கு இறங்குவதாக புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளன.
எனவே, ஷஃபானுடைய இரவும் அதனுள் உள்ளடங்குகின்றது. அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷஃபானின் நடுப்பகுதி இரவில் அல்லாஹ் இறங்குவது தொடர்பாக வினவப்பட்ட போது, வினாத்தொடுத்தவரை நோக்கி: “பலவீனமானது, நடுப்பகுதி இரவிலா?! (மாற்றமாக,) ஒவ்வோர் இரவிலும் இறங்குகிறான்” என்றார்கள்.
இச்செய்தியை அபூ உஸ்மான் அஸ்ஸாபூனி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இஃதிகாது அஹ்லிஸ் ஸுன்னா எனும் நூலில் அறிவிப்புச் செய்கின்றார்கள்.
- தொகுப்பு: அபூ ஹுனைப்