அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் (கேள்வி - பதில் வடிவில்)

بسم الله الرحمن الرحيم


நூலாசிரியர்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்


முன்னுரை:

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அவனுக்கே உயர்ந்த பண்புகள் உள்ளன. அவனுக்கு ஒப்பானவன் யாருமில்லை. அவனுடைய பண்புகளை எமக்கு எத்திவைத்த எம் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன்னுடைய இறைவன், நபி, மார்க்கம் ஆகியவைகளைப்பற்றித் தெரிந்து கொள்வது கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்வைப்பற்றித் தெரிந்து கொள்ளும்போது கட்டாயம் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி அவனை வணங்குவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அத்தாரியாத்: 56)

அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது மூன்று விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது.

1. அவனை வணங்குவதில் அவனை ஒருமைப்படுத்தல்

2. அவனுடைய செயல்களில் அவனை ஒருமைப்படுத்தல்

3. அவனுடைய பெயர்களிலும் பண்புகளிலும் ஒருமைப்படுத்தல்

உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்நூல் மூன்றாவது விடயத்தையே பேசுகின்றது. இந்த விடயத்தில் இஸ்லாத்தின் பெயரில் உள்ள அதிகமான பிரிவுகள் வழிகெட்டுள்ளார்கள். ஆகவே, முன் சென்ற இமாம்கள் இப்பிரிவுகளுக்கெதிராக மறுப்பளிக்கும் வகையில் பல நூற்களைத் தொகுத்துள்ளார்கள். மேலும், அந்த நூற்களில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் குறித்த கொள்கைகளைத் தெளிவுபடுத்தியுமுள்ளார்கள்.

ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால் தமிழ் மொழியில் இது குறித்து அதிகமான நூற்கள் எழுதப்படவில்லை. அல்லாஹ்வோடு சம்பந்தப்பட்ட இந்த அறிவை சிலர் சில்லறைப் பிரச்சினையாகக் கருதியுள்ளனர். இதனால் ஒரு சில பொதுமக்கள் இது விடயத்தில் வழிகெட்டுப் போயுள்ளார்கள்.

ஆகவே, நான் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் குறித்து ஒரு நூலை எழுத ஆசைப்பட்டேன். அதற்கு அல்லாஹ் எனக்கு அருள்புரிந்தான். யாவரும் இலகுவில் வாசித்து முடிக்க கேள்வி பதிலாகவே அனைத்து விடயங்களையும் தொகுத்துள்ளேன்.

அல்லாஹ்வின் பொருத்தம் நாடப்பட்டு எழுதப்பட்ட ஒரு நூலாக அல்லாஹ் இதனை ஆக்கி வைப்பானாக! வாசிப்பவர்களுக்கு இதன் மூலம் பயனும் அடையச் செய்வானாக!

அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் (கேள்வி - பதில் வடிவில்)


1. நாம் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் குறித்து ஏன் கவனமெடுக்க வேண்டும்?

விடை: தவ்ஹீத் என்றால் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். அவனை ஒருமைப்படுத்துவது மூன்று வகைப்படும்.

1. இபாதத் செய்வதில் அவனை ஒருமைப்படுத்த வேண்டும். அதாவது நாம் செய்யும் வணக்க வழிபாடுகள் யாவற்றையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும். அல்லாஹ்வுடன் எந்த ஒன்றையும் இணைவைக்கக்கூடாது.

2. அல்லாஹ்வுடைய செயல்களில் அவனை ஒருமைப்படுத்த வேண்டும். அதாவது படைத்தல், பரிபாலித்தல், ரிஸ்க் அளித்தல், மழை பொழியச் செய்தல் இது போன்ற விடயங்களில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்த வேண்டும். இந்த செயல்களை அல்லாஹ் மாத்திரமே செய்கிறான் என்ற விடயத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

3. அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளில் அவனை ஒருமைப்படுத்த வேண்டும். இம்மூன்றாவது விடயத்தைக் குறித்தே இந்த நூல் பேசுகின்றது. ஆகவே, தவ்ஹீத் என்ற வணக்கத்துடன் இத்தலைப்பு சம்பந்தப்படுவதாலே இதனை நாம் கவனமெடுக்க வேண்டும். அதேபோல், இந்த விடயத்தில் மாற்றுக் கருத்துக் கூறுவது சிலவேளை குப்ரின் பாலும் இட்டுச் செல்லும்.

2. அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் குறித்து எமது கொள்கை எப்படியிருக்க வேண்டும்?

விடை: அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் குறித்து எமது கொள்கை எப்படியிருக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்துள்ளார்கள். அல்லாஹ் தன்னை எதன் மூலம் வர்ணித்தானோ மேலும் ரஸூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதன் மூலம் அல்லாஹ்வை வர்ணித்தார்களோ அதைக்கொண்டே நாமும் வர்ணிக்க வேண்டும். அப்பெயர்களையும் பண்புகளையும் திரிவுபடுத்தல், வியாக்கியானம் செய்தல், முறைகற்பித்தல், ஒப்பாக்கிக்கூறல், இல்லாமல் செய்தல் போன்ற காரியங்களை உட்புகுத்தக்கூடாது.

3. அல்லாஹ்வின் பெயர்கள் அழகானவை என்பதற்கு ஆதாரம் என்ன?

விடை: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அல்லாஹ்வுக்கு அழகான பெயர்கள் உள்ளன. எனவே, நீங்கள் அவைகளைக் கொண்டு அவனை அழையுங்கள். (அல்அஃராப்: 18)

4. அல்லாஹ்வின் பெயர்கள் அனைத்தும் அழகானவை என்பதின் விளக்கம் என்ன?

விடை: அதாவது அழகிலும், சிறப்பிலும் மிக உச்சகட்டத்திலே அவைகள் அமைந்துள்ளன. அவைகளில் எந்தக் குறையுமில்லை.

5. உதாரணத்துடன் அதை எவ்வாறு தெளிவுபடுத்தலாம்?

விடை: உதாரணமாக அல்ஹய்யு என்ற பெயர் அல்லாஹ்வுக்கு உண்டு. அதன் கருத்து உயிரோடுள்ளவன் என்பதாகும். இந்தப்பெயர் அழகிலும், சிறப்பிலும் உச்சகட்டத்தில் உள்ளது. நாமும் உயிருள்ளவர்களாகத்தான் இருக்கிறோம். அல்லாஹ்வும் உயிருள்ளவனாக இருக்கின்றான். ஆனால், நாங்கள் உயிர்வாழ்வதில் குறையுண்டு. அது என்னவென்றால், நாம் இல்லாமையிலிருந்து உருவாகியுள்ளோம். சிறிது காலத்தில் மரணிக்க இருக்கின்றோம். ஆனால், அல்லாஹ் உயிர்வாழ்வதைப் பொருத்தவரையில் அவனுக்கு இல்லாமை என்பது இல்லை. மேலும், அழிவும் அவனுக்கு இல்லை. இதுவே உயிரோடுள்ளவன் என்ற பெயரின் அழகையும் சிறப்பையும் அது மிக உச்சகட்டத்திலே உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.

6. எனவே, நீங்கள் அவைகளைக்கொண்டு அவனை அழையுங்கள் என்ற வசனத்தின் விளக்கம் என்ன?

விடை: அதாவது, நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க நாடினால் உடனடியாக அதைத்தந்துவிடு, இதைத்தந்துவிடு, பாவங்களை மன்னித்துவிடு, சுவனத்தில் நுழைத்துவிடு எனப்பிரார்த்திப்பது உகந்ததல்ல. எமது தேவைகளுக்கேற்ப அவனை அவனுடைய பெயர்களால் புகழ்ந்து பிரார்த்திக்க வேண்டும். உதாரணமாக ஒருவர் பாவமன்னிப்புத்தேட நாடினால் அத்தவ்வாப் (தவ்பா அளிப்பவன்), அல்கபூர் (பாவமன்னிப்புச் செய்பவன்) போன்ற அல்லாஹ்வின் பெயர்களை முன்வைத்து பிரார்த்திக்க வேண்டும். அதன்படி பின்வருமாறு துஆச்செய்யலாம். யா அல்லாஹ் நீயே பாவங்களை மன்னிப்பவன், தவ்பா அளிப்பவன், இரக்கமானவன் ஆகவே என் மீது இரக்கம்காட்டி என்னை மன்னிப்பாயாக!

7. அல்லாஹ்வின் பெயர்கள் அவனுடைய பண்புகளாக இருக்குமா?

விடை: அல்லாஹ்வின் பெயர்கள் அல்லாஹ்வை குறித்துக்காட்டும் விதத்தில் பெயர்களாக அமையும். ஆனால், அந்தப்பெயர்கள் அறிவிக்கக்கூடிய கருத்தை அடிப்படையாக வைத்து அவைகள் பண்புகளாக இருக்கும்.

உதாரணமாக, அல்லாஹ்வுக்கு உயிரோடுள்ளவன், மிக்க அறிந்தவன், சக்திவாய்ந்தவன், செவிமடுப்பவன், பார்க்கக்கூடியவன், இரக்கமானவன், தீர்ப்பளிப்பவன் என பல பெயர்கள் உள்ளன. பெயர்கள் பலதாக உள்ளதால் பல இறைவன்கள் உள்ளதாகக் கூறமுடியாது. மேற்குறிப்பிடப்பட்;ட பெயர்கள் பலதாக இருந்தாலும் அல்லாஹ் ஒருவனுக்கே அவைகள் சாரும். ஆனால் அவைகள் ஒவ்வொன்றினதும் கருத்து வித்தியாசமானதாகும்.

8. அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விடயத்தில் வழிகெட்ட பிரிவினர்கள் யாவர்? அவர்களின் கொள்கை என்ன?

விடை:

1. கராமிதா மற்றும் தத்துவவியலாளர்கள்: அல்லாஹ் என்ற ஒருவன் இல்லை, அவனுக்குப்பெயரும், பண்பும் இல்லை என்பது இவர்களின் கொள்கையாகும்.

2. ஜஹ்மிய்யாக்கள்: அல்லாஹ் உண்டு. ஆனால் அவனுக்குப் பெயரோ பண்போ இல்லை என்பது இவர்களின் கொள்கையாகும்.

3. முஃதஸிலாக்கள்: அல்லாஹ்வுக்குப் பெயர்கள் மாத்திரமே உள்ளன. பண்புகள் அவனுக்கு இல்லை என்பது இவர்களின் கொள்ளையாகும்.

4. அஷ்அரிய்யாக்கள்: அல்லாஹ்வின் பண்புகளில் ஏழு பண்புகளை மாத்திரம் உறுதிப்படுத்துகின்றனர். உயிரோடுள்ளவன், நாடுபவன், சக்தியுள்ளவன், அறிவுள்ளவன், செவிமடுக்கக்கூடியவன், பார்க்கக்கூடியவன், பேசக்கூடியவன் ஆகிய பெயர்களே இவர்கள் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்தும் பெயர்களாகும்.

5. மாத்துரூதீய்யாக்கள்: இவர்களும் அஷ்அரிய்யாக்களைப்போல் ஏழு பண்புகளோடு ஒரு பண்பை மாத்திரம் அதிகப்படுத்தினர். அது உருவாக்குதல் என்ற பண்பாகும்.

6. முமஸ்ஸிலாக்கள்: அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் வரம்புமீறியவர்களே இவர்கள். ஏனென்றால், அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக்கினார்கள்.

7. முபவ்விதாக்கள்: அல்லாஹ்வின் பண்புகளை அறிவிக்கக்கூடிய பெயர்களை இவர்கள் உறுதிப்படுத்தினர். அதன் கருத்து அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும் என இவர்கள் கூறினார்கள்.

9. அல்லாஹ்வுக்கு பண்புகள் உள்ளன என்பதற்கு ஆதாரம் என்ன? விடை: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனுக்கே உயர்ந்த பண்புகள் உள்ளன. (அந்நஹ்;ல்: 60)

10. அல்லாஹ்வின் பண்புகள் எத்தனை வகைப்படும்?

விடை: அல்லாஹ்வின் பண்புகள் 3 வகைப்படும்.

1. தாதிய்யத்தான பண்புகள்: அதாவது அல்லாஹ்வோடு எப்பொழுதும் சேர்ந்திருக்கக்கூடிய பண்புகள். உதாரணம்: அறிவுள்ளவன், சக்தியுள்ளவன்.

2. செயல்ரீதியான பண்புகள்: அதாவது அல்லாஹ் நாடினால் ஏற்படக்கூடிய பண்புகள். உதாரணம்: மழை பொழிவித்தல், கோபப்படல், வெறுத்தல். இப்பண்புகள் அனைத்தும் அல்லாஹ்வுடன் எப்பொழுதும் சேர்ந்திருக்கும். அல்லாஹ் நாடினாலே நடைபெறும்.

3. செய்தி ரீதியான பண்புகள்: உதாரணம்: கை, கண், முகம்.



11. அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் இல்லாத பெயர்களையும் பண்புகளையும் அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்தலாமா?

விடை: அவ்வாறு உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில், அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை குர்ஆனிலிருந்தோ அல்லது ஸுன்னாவிலிருந்தோ அன்றி எடுக்க முடியாது. அவ்வாறு இல்லாத பெயர்களை நாம் உறுதிப்படுத்தினால் அல்லாஹ் கூறாத ஒன்றைக்கூறிய பாவத்தில் நாம் ஆகிவிடுவோம். உமக்கு எது விடயத்தில் அறிவு இல்லையோ அதை நீ பின்பற்றாதே என அல்லாஹுத்தஆலா கூறுகிறான்.

- அல்இஸ்ரா: 36

12. தத்துவவியலாளர்கள் கூறுவதுபோல் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் அதிகமாக உள்ளதால் பல இறைவன்கள் உள்ளார்கள் என்று கூறலாமா?

விடை: அல்லாஹ்வுக்கு கேட்கக்கூடியவன், பார்க்கக்கூடியவன், ஆற்றலுடையவன், மன்னிக்கக்கூடியவன் என பல பெயர்கள் உள்ளன. ஆனால், இதன் மூலம் பல இறைவன்கள் உள்ளதாகக் கூறமுடியாது. ஒருவனுக்கு பல பண்புகள் இருக்கலாம். உதாரணமாக: முஹம்மத் திறமையானவன், கெட்டிக்காரன், அறிவுள்ளவன், பண்புள்ளவன் என நாம் கூறினால் இது பலரைக் குறிக்காது. மாறாக, இது ஒருவரையே குறிக்கும். அதேபோல் அல்லாஹ்வுக்கு பல பெயர்கள், பண்புகள் இருப்பதால் பல இறைவன்கள் உள்ளதாகக் கூறமுடியாது.

13. அல்லாஹ்வின் பண்புகள் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாகுமா?

விடை: நிச்சயமாக அவ்வாறு ஒப்பாக முடியாது. இது விடயத்தில் இரு சாரார் வழிகெட்டுள்ளனர்.

முதல் சாரார்: முமஸ்ஸிலாக்கள் ஆவார்கள். இவர்கள் அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக்கினார்கள்.

இரண்டாவது சாரார்: முஅத்திலாக்கள் ஆவார்கள். அல்லாஹ்வுக்குப் பண்புகளை நாம் உறுதிப்படுத்தினால் அப்பண்புகள் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாகிவிடும் என்ற காரணத்தால் அல்லாஹ்வுக்கு எந்தப் பண்பையும் இவர்கள் உறுதிப்படுத்தவில்லை.

இவர்கள் அனைவருக்கும் பின்வருமாறு மறுப்பளிக்கலாம். அல்லாஹ்வையும் அவனால் படைக்கப்பட்ட எங்களையும் எவ்வாறு ஒப்பாக்க முடியும்? என நாம் முதலில் அவர்களிடம் கேள்வி எழுப்புகிறோம். ஏனென்றால், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனைப்போல் எந்த ஒன்றும் இல்லை. அவன் கேட்கக்கூடியவன், பார்க்கக்கூடியவன் என அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். அல்லாஹ்வைப்போல் இந்த உலகில் எந்த ஒன்றும் இல்லை என்பதை இவ்வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இதுவே அவர்களுக்கு முதல் மறுப்பாகும்.

அல்லாஹ் கேட்கின்றான், பார்க்கின்றான், பேசுகின்றான். ஆனால் நாம் கேட்பதைப்போல் கேட்பதில்லை. நாம் பார்ப்பதைப்போல் பார்ப்பதில்லை. நாம் பேசுவதைப்போல் பேசுவதில்லை.

அதேபோல் அல்லாஹ்வுக்கு கண், கை, முகம், விரல், போன்றவைகள் இருப்பதாகக் குர்ஆனும் சுன்னாவும் பேசுகின்றன. ஆனால் எங்களுடைய கண், கை, முகம்,விரல்கள் போல் அவைகள் இல்லை.

மேலும், அல்லாஹ் கேட்கின்றானா? பார்க்கின்றானா? பேசுகின்றானா? என யாராவது கேட்டால் உடனடியாக ஆம் எனக்கூறிவிட்டு மௌனமாக இருப்பது சிறந்ததல்ல. மாறாக, எங்களைப் போல் கேட்பதில்லை, பார்ப்பதில்லை, பேசுவதில்லை. அது எவ்வாறு இருக்கும் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது எனவும் கூறவேண்டும்.

உதாரணமாக: எங்களுக்கும் கால்கள் உள்ளன. யானைக்கும் கால்கள் உள்ளன. நுளம்பிற்கும் கால்கள் உள்ளன. ஆனால் இம்மூன்று வகையினரினதும் கால்கள் ஒரேமாதிரியாகும் என யாருக்குத்தான் கூறமுடியும்? எமது கால்கள் எமக்குத் தகுந்தவாறும் யானையுடைய கால்கள் அதற்குத் தகுந்தவாறும் உள்ளன. படைப்பினங்களுக்கு மத்தியிலேயே இந்த வித்தியாசம் என்றால் படைத்த இறைவனுக்கும் படைப்பினங்களுக்கு மத்தியில் இந்த வித்தியாசம் இருக்கக்கூடாதா?

அதேபோல் அல்லாஹ்வுக்கும் கை உண்டு, எமக்கும் கைகள் உள்ளன. ஆனால், எமது கைகளும் அவனுடைய கைகளும் ஒரேமாதிரி எனக்கூறமுடியாது.

14. அல்லாஹ்வுடைய ஒவ்வொரு பண்பையும் நாம் எவ்வாறு அணுக வேண்டும்?

விடை: ஒவ்வொரு பண்பையும் நாம் மூன்று அடிப்படையில் அணுக வேண்டும்.

முதலாவாது: அல்இஸ்பாத் - உறுதிப்படுத்தல் - அதாவது அல்லாஹ்வுடைய பண்பை அறிவிக்கும் சொல்லை உறுதிப்படுத்த வேண்டும்.

இரண்டாவது: அல்இக்ரார் - ஏற்றுக்கொள்ளல் - அதாவது அப்பண்பின் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மூன்றாவது: அல்இம்ரார் - முறைகற்பிக்காமல் இருக்க வேண்டும் - அதாவது அப்பண்புகளை முறைகற்பிக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உதாரணம்: அல்லாஹ்வுக்கு பார்க்கக்கூடியவன் என்ற பெயர் உண்டு. அதை நாம் பின்வருமாறு மூன்று வகையில் அணுகலாம்.

முதலாவது: பஷீர் - பார்க்கக்கூடியவன் - என்ற பெயரை அல்லாஹ்வுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

இரண்டாவது: பார்க்கக்கூடியவன் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மூன்றாவது: அல்லாஹ்வின் பார்வை இன்னாரின் பார்வையைப்போல் என்று முறைகற்பிக்கக்கூடாது. அதன் முறை அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும் என நம்ப வேண்டும்.

15. உறுதிப்படுத்தல் என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் பண்புகள் எத்தனை வகைப்படும்?

விடை: உறுதிப்படுத்தல் என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் பண்புகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1.    பூரணமான பண்புகள்: இப்பண்புகளில் எந்தவிதக் குறையும் காணப்படமாட்டாது. அல்லாஹ்வை இவ்வாறான பூரணமான பண்புகளால் எந்தவிதக் குறிப்பாக்கலுமின்றி பொதுவாகவே வர்ணிக்கலாம். உதாரணம்: யாவற்றையும் அறிந்தவன், சக்திமிக்கவன், பார்ப்பவன், கேட்பவன், இரக்கமுடையவன்.

2.    குறையை அறிவிக்கக்கூடிய பண்புகள்: அதில் எந்தவிதப் பூரணமும் இருக்காது. இவ்வாறான பண்புகளைக் கொண்டு அல்லாஹ்வை ஒருபோதும் வர்ணிப்பது கூடாது. உதாரணம்: தூக்கம், இயலாமை, அநியாயம், மோசடி.

3.    பூரணமாகவும் குறையுள்ளதாகவும் உபயோகிக்கப்படும் பண்புகள்: ஒவ்வோர் இடத்திற்கேற்ப அப்பண்புகள் பூரணத்தையோ அல்லது குறையையோ அறிவிக்கும். எனவே, இவ்வாறான பண்புகளைக் கொண்டு பொதுவாகவே அல்லாஹ்வை வர்ணிப்பது கூடாது. இன்னும், பொதுவாகவே அல்லாஹ்வுக்கு இவ்வாறான பண்புகள் இல்லை என்றும் கூற முடியாது. உதாரணம்: சூழ்ச்சி செய்பவன், ஏமாற்றுபவன், பரிகாசம் செய்பவன். இவ்வாறான பண்புகளை உடையவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்று பொதுவாகக் கூறவும் முடியாது. இவ்வாறான பண்புகள் அல்லாஹ்வுக்கு இல்லை எனவும் கூறமுடியாது. அல்லாஹ் அவனுடைய எதிரிகளாகிய காபிர்கள், நயவஞ்சகர்கள் போன்றவர்களுக்கு சூழ்ச்சி செய்வது, அவர்களை ஏமாற்றுவது, அவர்களுடன் பரிகாசம் செய்வது அல்லாஹ்வுடைய பூரண பண்பை அறிவிக்கக்கூடியதாகும். விசுவாசிகளுக்கு அல்லாஹ் சூழ்ச்சி செய்வது, அவர்களை ஏமாற்றுவது, அவர்களுடன் பரிகாசம் செய்வது அல்லாஹ்வுக்கு இல்லாத பண்பை அறிவிக்கக்கூடியதாகும். ஏனென்றால், அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் அவன் காபிர்களுக்கு சூழ்ச்சி செய்ததாகவும், நயவஞ்சகர்களை ஏமாற்றியதாகவும், அவர்களுடன் பரிகாசம் செய்கின்றான் என்பதாகவும் கூறியிருக்கின்றான்.

16. அல்லாஹ்வுக்கு தூக்கமும் இயலாமையும் ஏற்படாது என்பதற்கு ஆதாரம் என்ன?

விடை: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனை சிறு துயிலும் உறக்கமும் பீடிக்காது.

-     அல்பகறா: 255

மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: இன்னும், திட்டமாக வானங்களையும் பூமியையும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறு நாட்களில் நாம் படைத்தோம். - அதனால் - எவ்வித களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.

-     காப்: 38



16. சூழ்ச்சி செய்பவர்களுக்கு அல்லாஹ் சூழ்ச்சி செய்பவன் என்பதற்கு ஆதாரம் என்ன?

விடை: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சி செய்பவர்களில் மிகச்சிறந்தவன்.

- ஆலஇம்ரான்: 54

17. அல்லாஹ்வுக்கு எத்தனை பெயர்கள் உள்ளன?

விடை: அல்லாஹ்வுக்கு எத்தனை பெயர்கள் உள்ளன என்பதை யாருக்கும் வரையறுக்க முடியாது. அதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வே! உனக்குள்ள அனைத்துப் பெயர்களையும் கொண்டு நான் உன்னிடம் கேட்கின்றேன். அவை நீ உனக்கு வைத்த பெயர்களாகவோ அல்லது உமது வேதத்தில் நீ இறக்கிய பெயர்களாகவோ அல்லது உமது படைப்பினங்களில் எவருக்காவது நீ கற்றுக்கொடுத்த பெயர்களாகவோ அல்லது உன்னிடத்தில் மறைவான அறிவில் நீ தேர்ந்தெடுத்த பெயர்களாகவோ இருக்கலாம்.

-     இப்னு ஹிப்பான், அஹ்மத், ஹாகிம்

உன்னிடத்தில் மறைவான அறிவில் நீ தேர்ந்தெடுத்த பெயர்கள் என்ற வார்த்தையின் மூலம் அல்லாஹ்வின் பெயர்களில் எமக்குத் தெரியாத அவனுக்கு மாத்திரமே தெரிந்த பெயர்கள் நிறைய உண்டு என்பது தெளிவாகின்றது. ஆகவே, யாருக்கும் அல்லாஹ்வின் பெயர்களை வரையறுக்க முடியாது.

18. அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன என்ற ஹதீஸின் விளக்கம் என்ன?

விடை: நிச்சயமாக அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன. யார் அவைகளை கணக்கிட்டுக்கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைவார்.

-     புஹாரீ, முஸ்லிம்

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ் அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் மாத்திரமே உள்ளன என்பதை அறிவிப்பது போல் இருந்தாலும் உண்மையான விளக்கம் அதுவல்ல. மாறாக, அல்லாஹ்வுடைய பெயர்களில் 99 உள்ளன. அவைகளை கணக்கிடுபவர் சுவனம் நுழைவார் என்பதே அதன் விளக்கமாகும்.

உதாரணமாக ஒருவர் என்னிடத்தில் 1000 ரூபாய் உள்ளது. அதை நான் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வைத்துள்ளேன் எனக்கூறினால் இதன் மூலம் அவரிடம் 1000 ரூபாய் மாத்திரமே உள்ளதாக நாம் விளங்க முடியாது. மாறாக, அவரிடம் மேலதிகமான பணம் உண்டு. அதில் 1000 ரூபாவை அவர் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வைத்துள்ளார் என்பதே அதன் விளக்கமாகும். அதேபோல் அல்லாஹ்வுக்கு நிறைய பெயர்கள் உள்ளன. ஆனால், அவற்றில் 99 ஐக் கணக்கிட்டுக் கொள்பவர் சுவனம் நுழைவார்.

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் அல்லாஹ்வின் பெயர்கள் நூறையும் தாண்டியுள்ளன. அவைகளை ஆதாரத்துடன் அஷ்ஷெய்ஹ் யஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரி என்ற யெமன் நாட்டைச் சேர்ந்த அறிஞர் தன்னுடைய அல்மபாதிஉல் முபீதா பித்தவ்ஹீதி வல்பிக்ஹி வல்அகீதா என்ற நூலில் ஒன்று சேர்த்துள்ளார்.

19. அல்லாஹ்வின் பெயர்களை எமக்குப் பெயராக வைக்கலாமா?

விடை: அல்லாஹ்வின் பெயர்களை இரண்டு வகைப்படுத்தலாம்.

முதல் வகை: அல்லாஹ்வுக்குமாத்திரமே உரித்தான பெயர்கள். உதாரணமாக அஹத் - ஒருவன் -, ஹாலிக் - படைப்பாளன் -, ரஸ்ஸாக் - ரிஸ்க் அளிப்பவன் -, ஜப்பார் - அடக்கியாள்பவன் - ஆகிய பெயர்களைக் குறிப்பிடலாம். இந்தப் பெயர்களை படைப்பினங்களில் யாருக்கும் வைக்க முடியாது. ஆனால்  عبد - அடிமை - என்ற வார்த்தையை சேர்த்து இப்பெயர்களை வைக்கலாம். உதாரணமாக அப்துர்ரஸ்ஸாக்  - ரிஸ்க் அளிப்பவனின் அடிமை - எனப்பெயர் வைக்கலாம்.

இரண்டாவது வகை: பிறருக்கும் உபயோகிக்க முடியுமான பெயர்கள். உதாரணமாக அஸீஸ் - கண்ணியமானவன் -, ரஹீம் - இரக்கமானவன் -, ஷாகிர் - நன்றி செலுத்துபவன் - ஆகிய பெயர்களைக் குறிப்பிடலாம்.

20. அல்லாஹ் ஒவ்வொரு நாளும் அடிவானத்திற்கு இறங்குகின்றானா?

விடை: ஆம், அவன் ஒவ்வொரு நாளும் அடிவானத்திற்கு இறங்குகின்றான். அதற்கு ஆதாரம் பின்வரும் ஹதீஸாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எங்கள் இறைவன் ஒவ்வொரு இரவும் அடிவானத்திற்கு இறங்குகின்றான்.

- புஹாரீ, முஸ்லிம்

21. அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கினால் அர்ஷ் காலியாகிவிடுமா?

விடை: இது விடயத்தில் அறிஞர்களிடம் மூன்று வகையான கருத்துக்கள் உள்ளன.

முதல் கருத்து: அர்ஷ் காலியாகிவிடும்

இரண்டாவது கருத்து: அர்ஷ் காலியாகிவிடாது

மூன்றாவது கருத்து: எக்கருத்தும் தெரிவிக்காமல் மௌனமாக இருத்தல்.

இதில் இரண்டாவது கருத்தே மிகவும் சரியானதாகும். ஏனெனில் அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அர்ரஹ்மான் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான்.

- தாஹா: 5

22. உலகில் எப்பொழுதும் ஏதாவது ஓர் இடத்தில் இரவு நேரம் இருந்துகொண்டே இருக்கும். ஆகவே, அல்லாஹ் எப்பொழுதும் அடிவானத்தில் இருந்தால் அல்லாஹ் அர்ஷில் எவ்வாறு இருக்க முடியும்?

விடை: இந்த வாதத்தை முஃதஸிலாக்கள் முன்வைக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து தற்காலத்தில் தமிழ் நாட்டைச்சேர்ந்த பீ.ஜெய்னுலாப்தீன் அவர்களும் இந்த வாதத்தை முன்வைத்து அல்லாஹ் இறங்குகின்றான் என்ற ஹதீஸை மறுக்கின்றார் அல்லது மாற்றுவிளக்கம் கொடுக்கின்றார். இவர்களுடைய வாதம் அல்லாஹ் ஒவ்வொரு இரவும் இறங்கினால் அர்ஷில் யார் இருப்பது? ஆகவே, அல்லாஹ் ஒவ்வொரு இரவும் அடிவானத்திற்கு இறங்குவதில்லை என்பதாகும்.

இவர்களுக்கு குர்ஆன், ஸுன்னாவிலிருந்தும் புத்திரீதியாகவும் நாம் மறுப்பளிக்கின்றோம்.

குர்ஆனிலோ சுன்னாவிலோ ஓர் ஆதாரம் தெளிவாகினால் அதற்கு சரணடைவது கட்டாயமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்னிலையில் நீங்கள் முந்தாதீர்கள்.

-     அல்ஹுஜுராத்: 1

மேலும் கூறுகின்றான்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்தால் அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கம், எந்தப்பெண்ணுக்கும் உரிமையில்லை.

-     அல்அஹ்ஸாப்: 36

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் சுவனம் நுழைவார்.

-     புஹாரீ

அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கமாட்டான் எனக்கூறுபவர்கள் நிச்சயமாக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய விடயத்தில் முரண்பட்டுவிட்டனர். மேலும் புஹாரீயிலே வரக்கூடிய ஹதீஸை மறுத்துவிட்டனர்.

அனைத்து அறிஞர்களும் புஹாரீயிலே பலவீனமான மற்றும் மறுக்கப்பட வேண்டிய ஹதீஸ்கள் இல்லையெனவும் குர்ஆனுக்குப்பின் மிகச்சிறந்த நூல் புஹாரீயென்பதிலும் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.

இது விடயத்தில் பித்அத்வாதிகள் இத்தவறான நிலைப்பாட்டிற்கு வரக்காரணம் அவர்கள் அல்லாஹ்வைப் படைப்பினங்களுக்கு ஒப்பாக்கியுள்ளதாகும். ஏனென்றால், ஒரு மனிதனுக்கு ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்தான் இருக்க முடியும். மாறாக, ஒரு மனிதனுக்குப் பல இடங்களில் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. இந்த முறையையே அல்லாஹ்வுடைய இருப்பிலும் அவர்கள் கையாண்டுள்ளனர். அல்லாஹ் அர்ஷில் இருந்தால் அடிவானத்திலும் அவன் இருக்க முடியாது என அவர்கள் கூறுகின்றனர்.

அல்லாஹ் அனைத்து விடயங்களுக்கும் ஆற்றல்பெற்றவன் என்பதை இவர்களை அறியாமலே இவர்கள் மறுக்கின்றனர். - அவன் அனைத்து விடயங்களின் மீதும் ஆற்றல்பெற்றவன். - அல்முல்க்: 1 - என அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்.

ஆகவே, அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான். ஆனால், அடிவானத்திற்கும் இறங்குகின்றான். அதை அப்படியே நாங்கள் நம்ப வேண்டும். அதற்கு அல்லாஹ் ஆற்றலுடையவன்.

மனிதர்கள் ஒரே நேரத்தில் பல இடங்களைப் பார்க்க முடியாது. ஒரு இடத்தை மாத்திரமே பார்க்க முடியும். அதற்காக வேண்டி அல்லாஹ்வால் உலகில் உள்ள அனைவரையும் பார்க்க முடியாது எனக்கூற எவ்வாறு முடியாதோ அதேபோல்தான் அல்லாஹ் அர்ஷில் இருந்துகொண்டு அல்லாஹ்வுக்கு அடிவானத்தில் எல்லா நேரங்களிலும் இருக்க முடியாது எனவும் கூறமுடியாது.

எமது புத்தியை ஆதாரத்தைவிட முற்படுத்துவது கூடாது. அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். மார்க்கம் என்பது அபிப்பிராயத்தைக் கொண்டு அமையுமென்றால் காலுறைகளின் கீழே மஸ்ஹு செய்வதே மிக ஏற்றமானதாக இருக்கும். - அபூதாவூத் - அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏனென்றால், காலுறை அணிந்தவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வுழூ செய்யும்போது அதன் மேல்பகுதியில் மஸ்ஹு செய்யுமாறே ஏவினார்கள். ஆனால், காலின் அடிப்பகுதியிலே அழுக்குகள் படிவதால் கீழ்ப்புறத்தை மஸ்ஹு செய்வதே சரியான ஒரு கருத்தாகத் தோன்றும். ஆனால், புத்தியை ஆதாரத்தைவிட முற்படுத்துவது கூடாது என்பதற்காக நாம்  வுழூச் செய்யும்போது நபிவழி அடிப்படையில் காலுறைகளின் மேல்பகுதியில்தான் மஸ்ஹு செய்ய வேண்டும்.

23. அல்லாஹ் எங்களுடன் இருக்கின்றானா?

விடை: அல்லாஹ் எங்களுடன் அவனுடைய அறிவைக்கொண்டுதான் இருக்கின்றான். அதாவது, நாம் செய்கின்றவற்றைப் பார்த்துக்கொண்டும் பேசுகின்றவற்றை செவிமடுத்துக்கொண்டும் இருக்கின்றான். ஆனால், அவனுக்குரிய இடம் அர்ஷேயாகும். அவன் உயர்வாகவே இருக்கின்றான். அல்லாஹ் தூணிலும் துரும்பிலும் இருப்பதாகக் கூறுவது ஒரு வழிகெட்ட கொள்கையாகும்.

24. அல்லாஹ் உயர்வாக உள்ளான் என்பதற்கான ஆதாரங்கள் என்ன?

விடை: அல்குர்ஆன் ஆதாரங்கள் பின்வருமாறு:

1. அவன் பக்கமே நல்ல வார்த்தைகள் ஏறிச்செல்கின்றன.

- அல்பாதிர்: 10

உயர்வாக உள்ள ஒன்றின் பக்கமே ஏறிச்செல்ல முடியும். இதன் மூலம் அல்லாஹ் உயர்வாக உள்ளான் என்பதை எமக்கு விளங்க முடிகின்றது.

2. அல்லாஹுத்தஆலா ஈஸா - அலைஹிஸ்ஸலாம் - அவர்களுக்கு - மேலும், என் பக்கம் உன்னை நான் உயர்த்துபவனாக இருக்கின்றேன். - எனக்கூறினான்.

- ஆலஇம்ரான்: 55

3. பின்பு அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.

- அல்அஃராப்: 54

ஹதீஸ் ஆதாரங்கள் பின்வருமாறு:

1. இஸ்ரா மிஃராஜுடைய ஆதாரங்கள் அல்லாஹ் உயர்வாக உள்ளான் என்பதற்கு தெளிவான ஆதாரங்களாகும்.

2. நீங்கள் என்னை நம்பமாட்டீர்களா? நானோ வானத்தில் உள்ளவனுக்கு நம்பிக்கையாளனாக இருக்கின்றேன்.

- புஹாரீ, முஸ்லிம்

3. ஓர் அடிமைப் பெண்ணிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் எங்கு உள்ளான்? என வினவினார்கள். அப்பெண் வானத்திலே என பதில் கூறியதும் அவளை விடுதலை செய்யுங்கள் ஏனென்றால், அவள் ஒரு முஃமினான பெண்ணாவாள்  எனக் கூறினார்கள்.

- முஸ்லிம்

புத்திரீதியான ஆதாரங்கள்:

1. தனது படைப்பினங்களைவிட்டும் உயர்வாக இருப்பதே இறைவனுக்குத் தகுதிவாய்ந்ததாகும்.

2. யாராவது பிரார்த்தித்தால் கையை உயர்த்தியே பிரார்த்தனை செய்வார். யாரும் கையை கீழ் நோக்கிப் பிரார்த்திப்பதில்லை.



25. நிச்சயமாக அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் உள்ளன. யார் அதைக் கணக்கிட்டுக் கொள்கிறாரோ அவர் சுவனம் நுழைவார் என்ற ஹதீஸின் விளக்கம் என்ன?

விடை: இது மூன்று படித்தரங்களை உள்ளடக்கியுள்ளது.

முதல் படித்தரம்: அவைகளின் சொற்களையும் எண்ணிக்கையையும் கணக்கிடல்.

இரண்டாவது படித்தரம்: அதன் கருத்துக்களையும் அவை அறிவிக்கக்கூடியவைகளையும் விளங்கிக்கொள்ளல்.

மூன்றாவது படித்தரம்: அவைகளைக்கொண்டு துஆச்செய்தல்.

26. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் மாற்றுக்கருத்து கூறுவது எத்தனை வகைப்படும்?

விடை: இவ்வாறு மாற்றுக் கருத்துக் கூறுவது ஐந்து வகைப்படும்.

1. அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் அனைத்தையும் மறுத்தல் அல்லது சிலதை மறுத்தல்.

2. அவைகளைப் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக்குதல்.

3. அல்லாஹ்வின் பெயர்களில் இல்லாத ஒன்றை அவனுக்குப் பெயராக வைத்தல்.

4. அல்லாஹ்வின் பெயர்களிலிருந்து சிலைகள் போன்றவற்றிற்குப் பெயர் வைத்தல்.

5. அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அறிவிக்கக்கூடிய சொற்களை மாத்திரம் உறுதிப்படுத்தி அவை உள்ளடக்கியுள்ள கருத்துக்களை மறுத்தல்.

27. அல்லாஹ் அர்ஷின் மீது எவ்வாறு உயர்ந்தான்?

விடை: இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்தது அறியப்பட்ட விடயமாகும். அதன் முறை அறியப்படாததாகும். அதை நம்புவது கட்டாயமாகும். அது குறித்து வினா எழுப்புவது பித்அத்தாகும். பைஹகீ: அல்அஸ்மா வஸ்ஸிபாத், இமாம்களான தஹபீ, இப்னு ஹஜர், இப்னு தைமிய்யா ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் இதனை ஸஹீஹான அறிவிப்பு எனக்கூறியுள்ளனர்.

28. அல்லாஹ்வின் பண்புகள் எப்படியிருக்கும்?

விடை: அல்லாஹ்வின் பண்புகள் கருத்து ரீதியாக அறிந்து கொள்ளப்படும். ஆனால், அவைகளின் அமைப்பை அறிந்துகொள்ள முடியாது. உதாரணமாக: அல்லாஹ்வுக்கு ஸமீஃ - செவிமடுக்கக்கூடியவன் - என்ற பெயர் உண்டு. ஆகவே, செவிமடுக்கக்கூடியவன் என்ற கருத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவன் எவ்வாறு செவிமடுக்கின்றான் என்ற அமைப்பை எம்மால் கூறமுடியாது. அதை அல்லாஹ் மாத்திரமே அறிவான்.

29. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் பண்புகளை எவ்வாறு வர்ணித்தார்கள்?

விடை: அவர்கள் மூன்று முறையில் வர்ணித்தார்கள்.

முதல் முறை: சொல் ரீதியாக வர்ணித்தார்கள். உதாரணம்: எமது இறைவன் ஒவ்வொரு நாளும் அடிவானத்திற்கு இறங்குகின்றான். - புஹாரீ, முஸ்லிம் - என அவர்கள் கூறினார்கள். இந்த அவருடைய வார்த்தையின் மூலம் அல்லாஹ்வுக்கு இறங்குதல் என்ற பண்பு உண்டு என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

இரண்டாவது முறை: செயல் ரீதியாக வர்ணித்தார்கள். உதாரணம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குத்பா செய்துகொண்டிருக்கும் போது ஒரு மனிதர் வந்து மழையின் காரணமாக சொத்துக்கள் அழிந்துவிட்டதாகக் கூறினார். அப்போது அவர்கள் தன் இரு கரங்களையும் உயர்த்தி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

-     புஹாரீ

அவர்களுடைய இந்த செயல் மூலம் அல்லாஹ் உயரத்தில் உள்ளான் என்பதை புரிந்துகொள்ளலாம்.

மூன்றாவது முறை: அங்கீகார ரீதியாக வர்ணித்தார்கள். உதாரணம்: அல்லாஹ் எங்கே உள்ளான்? என ஒரு அடிமைப் பெண்ணிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவினார்கள். அதற்கு அப்பெண் வானத்திலே எனக்கூற அதை அவர்கள் அங்கீகரித்து அவளை விடுதலை செய்யுமாறு ஏவினார்கள்.

- முஸ்லிம்

30. அல்லாஹ் பேசுகிறான் என்பதில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் கொள்கை என்ன?

விடை: அல்லாஹ் நாடியபோது, நாடியவாறு, நாடியவற்றை எழுத்துடனும் படைப்பினங்களின் சத்தத்திற்கு ஒப்பாகாத சத்தத்துடனும் யதார்த்தமான பேச்சைக்கொண்டு பேசுகின்றான்.

31. அல்லாஹ்வுக்கு முகம் உண்டு என்பதற்கு ஆதாரம் என்ன?

விடை: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவனுடைய முகத்தைத் தவிர அனைத்தும் அழியக்கூடியதே.

- அல்கஸஸ்: 88

32. அல்லாஹ்வுக்கு இரு கைகள் உள்ளன என்பதற்கு ஆதாரம் என்ன?

விடை: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: என் இரு கைகளாலும் படைத்தவற்றுக்கு ஸுஜூது செய்ய உம்மை எது தடுத்தது?

- ஸாத்: 75

33. அல்லாஹ்வுக்கு கண்கள் உள்ளன என்பதற்கு ஆதாரம் என்ன?

விடை: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: உமதிரட்சகனின் தீர்ப்புக்காக பொறுமை செய்வீராக. நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கிறீர்.

- அத்தூர்: 48

34. அல்லாஹ்வுக்கு கால் உண்டு என்பதற்கு ஆதாரம் என்ன?

விடை: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நரகத்தில் - நரகவாசிகள் - போடப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். மேலும் அதிகம் உள்ளதா? என அது கேட்கும். அப்போது கண்ணியத்தின் இறைவன் தன் காலை அதிலே வைப்பான்.

- புஹாரீ, முஸ்லிம்

35. அல்லாஹ்வுக்கு விரல்கள் உள்ளன என்பதற்கு ஆதாரம் என்ன?

விடை: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அனைத்து ஆதமுடைய மக்களின் உள்ளங்களும் ரஹ்மானுடைய விரல்களில் இரண்டு விரல்களுக்கு மத்தியில் உள்ளன.

- முஸ்லிம்

36. அல்லாஹ் அழகானவன் என்பதின் விளக்கம் என்ன?

விடை: அல்லாஹ் அழகானவன் என்பது நான்கு படித்தரங்களாகும்.

1. அவனுடைய வடிவம் அழகானது.

2. அவனுடைய பண்புகள் அழகானவை.

3. அவனுடைய செயல்கள் அழகானவை.

4. அவனுடைய பெயர்கள் அழகானவை.

37. அல்லாஹ்வுடைய பண்புகளில் ஸுபூதிய்யா என்றால் என்ன?

விடை: ஸுபூதிய்யா என்றால் அல்லாஹ் தனக்கு உறுதிப்படுத்திய பண்புகளாகும். உதாரணம்: பார்ப்பவன், கேட்பவன், அறிந்தவன்.

38. அல்லாஹ்வுடைய பண்புகளில் ஸல்பிய்யா என்றால் என்ன?

விடை: ஸல்பிய்யா என்றால் அல்லாஹ் தனக்கு இல்லாமல் செய்த பண்புகள். உதாரணம்: தூக்கம், மரணம், இயலாமை.

39. அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா?

விடை: ஆம், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. அது அவனுக்கு ஏற்ப அமையும். அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பதற்கான ஆதாரம் பின்வரும் ஹதீஸாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் ஆதமை தன் உருவத்தில் படைத்தான்.

- புஹாரீ, முஸ்லிம்

40. அல்லாஹ்வின் அமைப்பைப்பற்றி சிந்திக்கலாமா?

விடை: அல்லாஹ்வின் அமைப்பைப்பற்றி சிந்திப்பது கூடாது. அவனின் படைப்புக்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும். படைப்புக்களிலே சிந்தியுங்கள். அல்லாஹ்விலே நீங்கள் சிந்திக்காதீர்கள். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். - தபராணீ - அஷ்ஷெய்க் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹாவில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.



41. அல்லாஹ்வின் உயர்வு எத்தனை வகைப்படும்?

விடை: அது மூன்று வகைப்படும்.

1. தன்னளவில் அவன் உயர்வானவன்.

2. சக்தி மற்றும் பண்புகள் ரீதியாக அவன் உயர்வானவன்.

3. மிகைத்தல் மற்றும் அடக்கியாள்வதில் அவன் உயர்வானவன்.

42. அல்லாஹ்வின் நாட்டம் எத்தனை வகைப்படும்?

விடை: இரண்டு வகைப்படும்.

1.    அமைப்பு ரீதியான நாட்டம்: இது கட்டாயமாக நடைபெறும். மேலும், இந்நாட்டத்தை அல்லாஹ் சிலவேளை விரும்புவான். இன்னும் சிலவேளைகளில் விரும்பமாட்டான்.

2.    மார்க்க ரீதியான நாட்டம்: இது சிலவேளை நடைபெறலாம். இன்னும், சிலவேளை நடைபெறாமலிருக்கலாம். மேலும், இந்நாட்டத்தை அல்லாஹ் விரும்புகிறான்.

அமைப்பு ரீதியான நாட்டத்திற்கு உதாரணம்: அபூஜஹ்ல், அபூதாலிப், அபூலஹப், பிர்அவ்ன், இப்லீஸ் ஆகியோர் காபிர்களாக இருந்தமையாகும். மார்க்க ரீதியான நாட்டத்தில் அல்லாஹ் இவர்களுக்கு குப்ரை நாடவில்லை.

மார்க்க ரீதியான நாட்டத்திற்கு உதாரணம்: அபூபக்ர், உமர், உஸ்மான், அலீ ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றமையாகும்.

43. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் நடுநிலைப் போக்கை எவ்வாறு தெளிவுபடுத்தலாம்?

விடை: முஅத்திலாக்கள் அல்லாஹ்வின் பண்புகளை இல்லாமல் செய்தனர். முஷப்பிஹாக்கள் அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக்கினர். அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் அல்லாஹ்வின் பண்புகளை இல்லாமல் செய்யவுமில்லை, ஒப்பாக்கவுமில்லை. அவை அனைத்தையும் ஒப்புவமையின்றி, முறை கற்பித்தலின்றி நம்பினர்.

44. அல்லாஹ் எங்களுடன் இருப்பது எத்தனை வகைப்படும்?

விடை: இரண்டு வகைப்படும்.

1.    பொதுவானது: அதாவது தனது அறிவோடும் அவதானிப்போடும் எல்லாப் படைப்பினங்களுடன் அல்லாஹ் இருப்பதாகும். உதாரணம்: நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடன் இருப்பான்.

- அல்ஹதீத்: 4

2. குறிப்பானது: அதாவது தனது உதவியோடும் ஒத்தாசையோடும் தனக்கு விருப்பமுள்ள அடியார்களுடன் இருத்தல்.  இது இரண்டு வகைப்படும்.

முதல்வகை: தனிநபரைக் குறிக்கக்கூடியது. உதாரணம்: அல்லாஹுத்தஆலா மூஸா மற்றும் ஹாரூன் அலைஹிமஸ்ஸலாம் ஆகியவர்களைப் பார்த்து கேட்டவனாகவும் பார்த்தனாகவும் நான் உங்களிருவருடனும் இருக்கின்றேன் எனக் கூறினான்.

இரண்டாம் வகை: ஒரு பண்பைக் குறிக்கக்கூடியது. உதாரணம்: நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

45. அல்லாஹ் எம்முடன் இருக்கின்றான் என்பதில் மனிதர்களில் எத்தனை கருத்துக்கள் உள்ளன?

விடை: மூன்று கருத்துக்கள் உள்ளன.

முதல் கருத்து: அல்லாஹ் படைப்பினங்களுடன் இருப்பது அறிவு, சூழ்ந்துகொள்ளல் மற்றும் முஃமின்களுக்கு உதவியாக இருத்தல் என்ற அடிப்படையிலாகும். இதுவே சரியான கருத்தாகும்.

இரண்டாம் கருத்து: அல்லாஹ் பூமியிலே இருக்கின்றான். அவன் அர்ஷிலே இருப்பதில்லை. இது ஹுலூலிய்யாக்களின் கருத்தாகும்.

மூன்றாம் கருத்து: அல்லாஹ் பூமியிலும் இருக்கின்றான், இன்னும், அர்ஷிலும் இருக்கின்றான்.

46. அல்லாஹ்வுக்கு ஆத்மா உண்டா?

விடை: ஆம், அல்லாஹ்வுக்கு ஆத்மா உண்டு. என் ஆத்மாவில் உள்ளதை நீ அறிவாய். உன் ஆத்மாவில் உள்ளதை நான் அறியமாட்டேன். - அல்மாஇதா: 116 - என ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்விடம் கூறுவதாக அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்.

47. அல்லாஹ்வின் இரு கைகளும் வலதும் இடதுமா?

விடை: அல்லாஹ்வின் இரு கைகளும் வலதாகும். அவனின் இரு கைகளும் வலதேயாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

- முஸ்லிம்

48. அல்லாஹ்வுக்கு கெண்டைக்கால் உண்டா?

விடை: அல்லாஹ்வுக்கு கெண்டைக்கால் உள்ளது என்பதை பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். எங்கள் இறைவன் அவனுடைய கெண்டைக்காலைவிட்டும் - திரையை - நீக்குவான்.

49. அல்லாஹ் சிரிக்கின்றானா?

விடை: அல்லாஹ் சிரிப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹுத்தஆலா இரு மனிதர்களைப் பார்த்து சிறிக்கிறான். அவர்களில் ஒருவர் மற்றவரை கொலை செய்கிறார்.

- புஹாரீ, முஸ்லிம்

50. அல்லாஹ் ஆச்சரியப்படுகின்றானா?

விடை: அல்லாஹ் ஆச்சரியப்படுகின்றான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் விருந்தாளியுடன் நேற்றிரவு நீங்கள் இருவரும் நடந்துகொண்ட முறையின் காரணமாக ஆச்சரியப்பட்டான் என ஒரு அன்ஸாரித் தோழருக்குக் கூறினார்கள். -     முஸ்லிம்

Previous Post Next Post