அத்வைத ஸூஃபியிஸத்தின்‌ விபரீதக்‌ கொள்கைகள்‌!

வழிகெட்ட ஸூஃபியிஸத்தின்‌ தோற்றம்‌:

நபி (ஸல்‌) அவர்கள்‌ இஸ்லாத்தை எடுத்தோதுவதற்கு முன்னர்‌ அரபு மண்ணில்‌ வாழ்ந்த மக்கள்‌ பெரும்பாலோர்‌ எழுத்தறிவற்ற “உம்மி” களாக இருந்தனர்‌. மூதாதையர்‌ நெறியிலேயே வாழ்ந்தனர்‌.

மேலும்‌ அரபு நாடு பாலை நிலமாக இருந்ததால்‌ அம்மண்ணில்‌ வாழ்ந்தவர்கள்‌ நிரந்தரக்‌ குடியிருப்பை உடையவர்களாக இருக்கவில்லை. அவ்வப்போது வெவ்வேறு ஊர்களுக்குப்‌ போய்வரும்‌ நாடோடிப்‌ பிழைப்பை உடையவர்களாயிருந்தனர்‌. வேற்று நாட்டவர்‌ அதிகமாக அந்த மண்ணை விரும்பிப்போய்‌ அங்கு நிரந்தரமாக வாழ்ந்ததில்லை.

இந்நிலையில்‌, நபி (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ வாழ்க்கைச்‌ சட்டங்களை அம்மக்கள்முன்‌ எடுத்து வைத்தபோது, அவர்கள்‌ ஆரம்பக்‌ காலத்தில்‌ எதிர்த்த போதும்‌ பின்னர்‌ இஸ்லாத்தை முழுதுமாக ஏற்றுக்கொண்டனர்‌.

நபி (ஸல்‌) அவர்களது காலத்திலும்‌ - அலீ (ரலி) அவர்களைத்‌ தவிர்த்து - மூன்று குலஃபாயே ராஷிதீன்கள்‌ காலத்திலும்‌ மதீனாவே இஸ்லாத்தின்‌ தலைநகராயிருந்தது. மட்டுமின்றி ஆட்சித்‌ தலைமை யாரிடமிருந்ததோ அவர்களே சமயத்தலைமையும்‌ உடையவர்களாயிருந்தனர்‌.

அவர்களது காலத்துக்குப்‌ பிறகு உமைய்யாக்கள்‌ காலத்தில்‌ இஸ்லாமிய அரசின்‌ தலைநகரமாக டமாஸ்கஸ்‌ (சிரியா) திகழலாயிற்று.

அதைத்‌ தொடர்ந்த அப்பாஸிய கலீஃபாக்கள்‌ காலத்தில்‌ மெசபடோமியா, பாக்தாத்‌ ஆகிய நகரங்கள்‌ இஸ்லாமிய ஆட்சியின்‌ தலைநகர்களாக ஆயின.

அந்தலூசியா(ஸ்பெயின்‌), குராஸான்‌ (ஈரான்‌), பஸரா, கூஃபாஇராக்‌, இஸ்தன்புல் (துருக்கி) முதலிய பெரு நகரங்களிலும்‌ இஸ்லாம்‌ தழைத்தோங்கத்‌ தொடங்கியது.

மக்கா-மதீனா எல்லைகளிலிருந்து பரவத்தொடங்கிய இஸ்லாம்‌ இவ்வாறாக ஆசிய- ஆப்பிரிக்கக்‌ கண்டங்களின்‌ பல்வேறு நிலப்பரப்புக்களுக்கும்‌ விரிந்து வியாபித்தது. பல்வேறு மண்ணின்‌ மைந்தர்கள்‌ இஸ்லாம்‌ என்னும்‌ கோட்டைக்குள்‌ பிரவேசிக்கத்‌ தொடங்கினர்‌.

இஸ்லாத்தை ஏற்றுக்‌ கொள்வதற்கு முன்பு அவர்களிடம்‌ நிலவியிருந்த அந்தந்த நாட்டுச்‌ சமயங்களின்‌ தத்துவங்களிலிருந்து - மிகச்‌ சிலரைத்‌ தவிர முழுதுமாக அவர்கள்‌ விடுபட்டார்களில்லை.

அக்கால கட்டத்தில்‌ மேலே கண்ட எல்லாப்‌ பெரு நகரங்களிலும்‌ அரிஸ்டாட்டில்‌, பிளோட்டோ போன்றவர்களின்‌ கிரேக்கத்‌ தத்துவக்‌ கல்வி ஓஹோ என்று கொடிகட்டிப்‌ பறந்து கொண்டிருந்தது.

ஈரான்‌ போன்ற நிலப்பரப்புக்களில்‌ நிலவியிருந்த ஆரிய வேதாந்தக்‌ கலாச்சாரத்தையும்‌ இன்னமும்‌ அங்கங்கே காணப்பட்ட புத்த, ஜொராஸ்டிர, யூத, கிறித்துவ கலாச்சாரங்களையும்‌ இஸ்லாம்‌ எதிர்‌ கொள்ள வேண்டியிருந்தது.

இது ஒரு புறமிருக்க, உமைய்யாக்கள்‌ காலத்திலும்‌ அப்பாஸிகள்‌ காலத்திலும்‌ ஆட்சித்தலைமையை அனுபவித்தவர்கள்‌ சமயத்‌ தலைமைக்குரிய அருகதையுடையவர்களாகத்‌ திகழ்ந்தார்களில்லை. விதிவிலக்குகளாக ஒரு சிலரே இந்த இரண்டு தலைமைப்‌ பொறுப்புகளையும்‌ ஒருங்கே பெற்றிருந்தனர்‌.

பெரும்பாலான ஆட்சியாளர்கள்‌, ஆட்சித்‌ தலைமையை மட்டும்‌ ஏற்றுக்‌ கொண்டு சமயத்‌ தலைமையை முல்லாக்களிடம்‌ ஒப்படைத்து விட்டனர்‌. அதனால்‌ இஸ்லாமியச்‌ சமயத்‌ தொடர்பிலிருந்து விடுபட்ட அந்த ஆட்சியாளர்கள்‌ மனம்‌ போன போக்கில்‌ வாழத்தலைப்பட்டனர்‌. கேளிக்கை, களியாட்டங்கள்‌, சிற்றின்ப காம உணர்வைத்‌ தூண்டும்‌ கவிதைகள்‌ முதலியவற்றில்‌ அவர்கள்‌ இலயிக்கத்‌ தொடங்கினர்‌. சில ஆட்சியாளர்கள்‌, தாங்களே காமக்‌ களியாட்டக்‌ கவிதைகள்‌ புனைபவர்களாகவும்‌ திகழ்ந்தனர்‌.

இந்நிலையில்‌, ஆட்சியாளர்களின்‌ ஒழுக்கச்‌ சீர்கேட்டையும்‌ மக்களின்‌ நிலைகுலைந்த வாழ்கையையும்‌ கண்டு நொந்து போன இஸ்லாமிய அகீதாவிலும் ஸுன்னாவிலும் ஆழ்ந்த அறிவில்லாத முல்லாக்கள்‌ சிலர்‌ இதிலிருந்து விடுபடுவதற்கான உபாயத்தைத்‌ தேடலானார்கள்‌.

கிரேக்க, ரோமானிய, ஆரிய, யூத, கிறித்தவ கலாச்சாரங்களும்‌ தத்துவங்களும்‌ வேரோடிப்‌ போயிருந்த பெருநகரங்களின்‌ நாகரிகம்‌ ஒரு புறம்‌; சமய ஒழுக்கங்களைப்‌ பற்றிக்‌ கவலைப்படாத இஸ்லாமிய ஆட்சித்‌ தலைவர்களின்‌ ஆடம்பர வாழ்க்கை மறுபுறம்‌;

இவற்றைச்‌ சீர்திருத்த குர்‌ஆன்‌ ஹதீஸை மட்டுமே முல்லாக்கள் கைக்‌ கொண்டிருந்திருக்கலாம்‌.

மாறாக, இதற்கு அப்பாலும்‌ சென்று கிரேக்கத்‌ தத்துவங்களிலும்‌ ஆரிய வேதாந்தங்கள்‌ போன்றவற்றிலும்‌ அடைக்கலம்‌ தேடினார்கள்‌. 

பிறமதச்‌ சித்தாந்தங்கள்‌ கூறும்‌ கருத்துகள்‌ குர்‌ஆன்‌, ஹதீஸிலும்‌ கூறப்பட்டிருப்பதாகச்‌ சப்பைக்கட்டு கட்டினார்கள்‌.

ஒரு சில குர்‌ஆன்‌ வசனங்களையும்‌ ஹதீஸ்களையும்‌ தங்கள்‌ கருத்துக்கிசைய அவர்கள்‌ வளைத்துக்‌ கொண்டார்கள்‌. இதன்‌ விளைவாகப்‌ பிறந்த ஒரு புதிய வழிகேடுதான்‌ ஸூஃபிஸம்‌ ஆகும்‌.

அதாவது, கிரேக்கர்களின்‌ கவைக்குவதவாத தத்துவங்களும்‌ ஆரியர்களின்‌ வெற்று வேதாந்தமும்‌ திருச்சபை மடாலயங்கள்‌ அளித்த நன்கொடைகளும்‌ கலந்த ஒரு கலப்படச்‌ சரக்காக-மிக்ஸராக- அமர்க்களமாகத்‌ தயாரிக்கப்பட்ட ஒரு பழைய போதை மருந்தை, “ஸுஃபிஸம்‌” என்னும்‌ புதிய பாட்டிலில்‌ இட்டு நிரப்பினார்கள்‌. 

இந்த பாட்டிலின்‌ மீது “இஸ்லாமிய ஞானப்பாட்டை” என்னும்‌ போலி லேபில்‌ மிகச்‌ சாதுரியமாக ஒட்டப்பட்டது.



அடுத்து ஸூஃபிஸத்தின்‌ தோற்றத்துக்கு மற்றொரு காரணமும்‌ இருத்தது‌. அது,

ஸுூஃபியிஸம்‌ தோன்றுவதற்கு முல காரணம்‌ ஷியாக்களே:

அதாவது நபி (ஸல்‌) அவர்களுக்குப்‌ பிறகு இஸ்லாத்தின்‌ ஆட்சித்‌ தலைமையும்‌ சமயத்‌ தலைமையும்‌ அலீ (ரலி) அவர்களுக்கும்‌, அவர்களின்‌ வழித்தோன்றலாருக்கும்‌ மட்டுமே கிடைத்தல்‌ வேண்டும்‌ எனக்‌ கூறிக்‌ கொண்டு உதயமானது ஒரு கூட்டம்‌. இக்கூட்டத்தினர்‌ "ஷிஅத்து அலீ" என்னும்‌ அலீயின்‌ கட்சிக்காக உடல்‌ பொருள்‌ ஆவியைக்‌ கொடுக்கச்‌ சித்தமாயினர்‌. இன்றும்‌ ஷியாக்கள்‌ நிறைந்து வாழும்‌ நாடாகிய ஈரானிலிருந்து தான்‌ ஸூஃபிஸம்‌ ஊற்றெடுத்தது என்பதை நாம்‌ மறந்துவிடலாகாது.

ஆட்சித்‌ தலைமை உமையாக்களின்‌ கைகளுக்குப்‌ போனதும்‌ சமையத்‌ தலைமையையாவது தாங்களே தக்கவைத்துக்‌ கொள்ளுவதற்கு ஷியாக்கள்‌ சூழ்ச்சி செய்தனர்‌. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்‌ கொள்வதற்காக அலீ (ரலி) அவர்கள்‌ பெயரால்‌ பல புனைவுகளை இட்டுகட்டி, அவர்களுக்கு ஒப்புயர்வற்ற சிறப்பிடத்தை வழங்கத்‌ தலைப்பட்டனர்‌.

நபி (ஸல்‌) அவர்கள்‌ “பாத்தின்‌” ஆன - ரகசியமான அகமிய விஷயங்களை அலீ (ரலி) அவர்களுக்கு மட்டுமே கற்றுக்‌ கொடுத்தார்களாம்‌;

அவர்களைத்‌ தவிர மற்றவர்கள்‌ எல்லோரும்‌ வெளிரங்கமான இஸ்லாத்தைத்தான்‌ அறிந்திருந்தார்களாம்‌;

அலீ (ரலி) அவர்கள்தான்‌ உள்ரங்கமான இஸ்லாத்துக்குச்‌ சொந்தக்காரர்களாம்‌;

நபி (ஸல்‌) அவர்கள்‌ காட்டித்‌ தந்த இஸ்லாமியப்‌ பட்டணத்துக்குள்‌ பிரவேசிக்க வேண்டுமானால்‌ அலீ (ரலி) அவர்களுடைய ஞானப்பாட்டையின்‌ வழியாகத்தான்‌ நுழைய முடியுமாம்‌.

இப்படியாகச்‌ சொல்லிக்‌ கொண்ட ஷியாக்கள்‌ ஈரானிலிருந்து ஒரு ஞானப்பாட்டைத்‌ தீட்டினார்கள்‌. ஏற்கனவே ஸூஃபிஸச்‌ “சரக்கை"ப்‌ போட்டுக்‌ கொண்டவர்களுக்கு இந்த ஞானப்பாட்டையில்‌ உருளுவது பேரானந்தத்தைக்‌ கொடுத்தது.



தர்ஹாக்களைத்‌ தோற்றுவித்தது ஸூஃபிகளே: 

இந்த ஞான போதையைப்‌ பெறுவதற்குக்‌ கண்டிப்பாக “பீர்‌” இருக்க வேண்டும்‌. “பீர்‌” என்னும்‌ ஃபார்ஸிச்‌ சொல்லுக்குக்‌ குருநாதர்‌ என்பது பொருளாகும்‌.

இவர்களை “தர்வேஷ்‌' என்றும்‌ அழைத்தனர்‌. இந்த பீர்‌ அல்லது தர்வேஷ்‌ தங்கியிருந்த இடத்துக்கு ஒரு புனிதம்‌ சேர்ந்தது, அது “தக்யா” எனப்பட்டது. இந்த ஃபார்ஸிச்‌ சொல்‌ தமிழில்‌ தைக்கா என மருவியது.

“தக்யா” வில்‌ இருந்த “தர்வேஷ்‌” தைக்கா சாயிபு எனப்பட்டார்‌. இந்த தர்வேஷ்‌ செத்துப்போன பிறகு அந்தத்‌ தைக்கா “தர்கா” ஆனது. இவ்வாறாக, ஸுூஃபிஸம்‌ தொடர்புடைய சொற்கள்‌ எல்லாவற்றுலும்‌ ஃபார்ஸி மொழியின்‌ ஆதிக்கம்தான்‌.

செத்துப்‌ போன ஸூஃபியின்‌ தைக்காவில்‌ கல்லைறகளைக்‌ கட்டி, கப்ரு பூஜைகள்‌ நடத்தும்‌ தர்காக்‌ கலாச்சாரத்தை இஸ்லாமிய உலகுக்கு அளித்த பெருமையும்‌ ஸூஃபிஸத்தையே சேரும்‌. பிறமதச்‌ சித்தாந்தங்களின்‌ தாக்கம்‌, ஆட்சியாளர்களின்‌ அலங்கோலம்‌ ஆகியவை இந்த ஸுூஃபிகளை வேறொரு பாதைக்கும்‌ இட்டுச்‌ சென்றன. அது துறவுப்‌ பாதையாகும்‌.

ஸூஃபிஸம்‌ வலியுறுத்தும்‌ துறவு வாழ்க்கைக்கு, உண்மையான இஸ்லாத்தில்‌ இடமே இல்லை. மோட்சம்‌ பெறுவதற்கு சம்சாரத்திலிருந்து விடுபட்டு சன்னியாச வாழ்வை மேற்கொள்ள வேண்டும்‌ என்பது வேதாந்தக்‌ கருத்தாகும்‌.

இப்படி சன்னியாசி ஆனவர்களை, சம்சாரிகள்‌ கடவுளுடைய இடத்தில்‌ வைத்துக்‌ கொண்டாடினார்கள்‌. சன்னியாசிகளுடைய வாக்கை, வேதவாக்காகக்‌ கருதி அதற்குக்‌ கட்டுப்‌ பட்டார்கள்‌.

அதைப்‌ பார்த்த நம்முடைய ஆசாமிகளும்‌ இஸ்லாத்தில்‌ இதுபோல ஒரு சன்னியாச நெறியை ஸூஃபிஸத்தின்‌ மூலம்‌ அரங்கேற்றினார்கள்‌. இந்த ஸூஃபிச்‌ சன்னியாசிகள்‌- தர்வேஷ்கள்‌ வழியாகத்தான்‌ சொர்க்கத்துக்கு நுழைவுச்‌ சீட்டுப்‌ பெற முடியும்‌ என்ற எண்ணத்தைப்‌ பாமரர்களிடம்‌ பரப்பி வைத்தார்கள்‌.

இவர்களுடைய வாக்கை வேத வாக்காகக்‌ கொள்ளும்‌ முஸ்லிம்களும்‌ பெருகினார்கள்‌. ஸூஃபியான ரூமி யின்‌ “மஸ்னவி எனும்‌ நூலை, ஃபார்ஸீ‌ மொழியில்‌ அமைந்தக்‌ குர்‌ஆன்‌ எனச்‌ சொல்லலானார்கள்‌.

இத்தகையப்‌ பிஸ்தாக்களும்‌ பிஸ்தாமிகளும்‌ நாளடைவில்‌ இஸ்லாத்தில்‌ பெருகலானார்கள்‌.

அடுத்து இந்த வழிகேட்டு சித்தாந்தத்தின்‌ விபரீத கொள்கைகளைப்‌ பற்றி பார்ப்போம்‌!



ஸூஃபிகள்‌ போதிக்கும்‌ அத்வைதம்‌:

துறவு நெறியில்‌ வாழும்‌ ஞானிகளின்‌ வாயிலாகத்தான்‌ மறைஞானத்‌ தத்துவமாகிய இறையிணைவு (Mysticism) இரகசியத்தைப்‌ பெறமுடியும்‌ என்றனர்‌ ஸூஃபிகள்‌.

இந்த இறையிணைவு இரகசியம்‌ என்பது இவர்களுக்கு முன்பு யாருமே அறியாத பெரிய விஷயமன்று! கிரேக்கர்கள்‌ கூறிய “இயல்வன யாவும்‌ இறையுருவே' என்ற Pantheism தான்‌ அது.

வேதாந்தத்தின்‌ உட்பொருளாகிய “அத்துவைதம்‌” என்பதும்‌ அதுவே இதையெல்லாம்‌ மாற்றாரிடமிருந்து தத்தெடுத்துக்‌ கொண்ட ஸுஃபிகள்‌, மாற்றாரைப்‌ பார்த்து, "உங்களிடம்‌ வெறும்‌ அத்துவைதம்‌ மட்டும்தானே இருக்கிறது!

எங்களிடமோ அத்துவைதத்துடன்‌ ஏகத்துவமும்‌ இருக்கிறதே" என்று மார்‌ தட்டினர்‌. அது எப்படி அத்துவைதமும்‌ ஏகத்துவம்‌ எனும்‌ துவைதமும்‌ சேர்ந்திருக்க முடியும்‌?

இரண்டுமே வெவ்வேறான, ஒன்றுக்கொன்று முரண்பட்ட எதிரெதிர்‌ சமயக்‌ கோட்பாடுகளாயிற்றே! எனக்‌ கேட்டால்‌, "பாமரர்களாகிய உங்களுக்கு அப்படித்தான்‌ தெரியும்‌.

அத்துவைதமாகிய அனேகத்‌ துவத்தில்‌ ஏக ஒருத்துவத்தைப்‌ பார்ப்பதற்கு உள்ளொளி பெற்றிருந்தால்தான்‌ முடியும்‌” என்பார்கள்‌. உள்ளொளியாகிய அறிவைப்‌ பெறுவது

ஸுஃபிஸத்தின்‌ முதற்படி என்றனர்‌. அதாவது, “ஒருவன்‌ தன்னை அறியவேண்டும்‌” என்றும்‌ “தன்னை அறிந்தவன்‌ தன்‌ ரப்பை (இறைவனை), அறிந்தவனாவான்‌” என்றும்‌ கூறினர்‌.

இந்தத்‌ “தன்னை அறியும்‌” கடுந்தவ முயற்சியில்‌, மனைவி, மக்கள்‌, குடும்பம்‌, சமுதாயம்‌ முதலியவை குறுக்கே நிற்பதால்‌ உலகப்‌ பற்றை விட்டு நீங்கித்‌ துறவறம்‌ மேற்கொண்டு தியான நிஷ்டையில்‌ மூழ்க வேண்டும்‌ என்றனர்‌.

அப்படி மூழ்கி முக்குளித்துத்‌ “தன்னிடத்தில்‌ தன்‌ ரப்பைக்‌ கண்டவன்‌ எவனோ அவனுக்குக்‌ காண்பவை எல்லாம்‌ ரப்புடைய திருக்காட்சியாகவே ஆகிவிடுகின்றன என்பதும்‌

“எல்லாப்‌ பொருளுமே அல்லாஹ்வைத்‌ தவிர வேறல்ல” என்னும்‌ கண்ணோட்டத்தில்‌ எல்லாவற்றின்‌ மீதும்‌ அன்பு செலுத்த வேண்டும்‌ என்பதும்‌ ஸூஃபிஸத்தின்‌ நெறியாகும்‌.

இங்ஙனம்‌ அறிவு, துறவு, அன்பு என்னும்‌ மூன்றும்‌ ஸூஃபிஸத்தின்‌ முக்கியப்‌ பண்புகள்‌ எனப்பட்டன. இப்படியாக, “இயல்வன யாவும்‌ இறையுருவே”

என்னும்‌ அத்துவைதக்‌ கோட்பாட்டைத்‌ தன்மயமாக்கிக்‌ கொண்ட ஸுஃபிஸம்‌, அதற்கு ஒரு அரபுப்‌ பெயரைச்‌ சூட்டி அழகு பார்த்தது. அப்போதுதானே இது இஸ்லாத்தோடு தொடர்புடையது எனப்‌ பறைசாற்ற முடியும்‌?

ஸூஃபிகள்‌ தம்‌ கோட்பாட்டுக்குச்‌ சூட்டிய அரபுப்‌ பெயர்‌ “வஹ்தத்துல்‌ உஜூது” என்பதாகும்‌. அதாவது, “உள்ளவை எல்லாம்‌ ஒன்றே” என்பது இதன்‌ பொருளாகும்‌.

அடுத்து‌ இவர்கள்‌ குர்‌ஆன்‌ ஹதீஸை எப்படியெல்லாம்‌ திரித்து தங்களின்‌ வழிகேட்டுத்‌ தத்துவங்களுக்கு முட்டுக்கொடுக்கின்றனர்‌ என்பதைப்‌ பற்றி பார்க்கலாம்‌!



வஹ்தத்துல்‌ உஜூத்‌ கொள்கைக்கு குர்‌ஆனிலிருந்து முட்டுக்கொடுக்கும்‌ ஸுஃபிகள்‌:

இந்த வஹ்தத்துல்‌ உஜூதுக்‌ கோட்பாட்டுக்கு நியாயம்‌ கற்பிப்பதற்காக அவர்கள்‌ மேற்கோள்‌ காட்டிய இறைவசனம்‌:

(முஸ்லிம்களே! பத்ருப்‌ போரில்‌ எதிரிகளான) அவர்களை நீங்கள்‌ வெட்டவில்லை; அல்லாஹ்வே அவர்களை வெட்டினான்‌. (நபியே! பகைவர்‌ மீது மண்ணள்ளி, நீர்‌ வீசியபோது நீர்‌ வீவில்லை; அல்லாஹ்வே வீசினான்‌” (அல்குர்‌ ஆன்‌ 8:17).

இந்த வசனத்தை வைத்துக்‌ கொண்டு,

“அல்லாஹ்‌ தான்‌ ரஸூல்‌ (ஸல்‌) அவர்களாக புவியில்‌ அவதரித்தான்‌” என்று கூறினார்கள்‌ ஸூஃபிகள்‌.

“இப்புவியில்‌ ஊனுருவாய்‌ நீ அஹ்மத்‌ ஆனவனே!” (ஞானப்‌ புகழ்ச்சி - பாடல்‌ 134).

“நீயே உனக்கு ஸுஜுது செய்தாய்‌ பின்‌ நினைந்துருவாய்‌:

“நீயே புவிக்குள்‌ ரஸுலாக வந்தவன்‌” (ஞானப்‌ புகழ்ச்சி - பாடல்‌ 118).

என்றெல்லாம்‌ பீரப்பாவும்‌ தன்‌ பங்குக்கு இதனைப்‌ பாடி வைத்தார்‌. ஆனால்‌, அந்த 8:17 இறைவசனம்‌ அறிவித்திடும்‌ உண்மையான பொருள்‌ அதுவன்று!

அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு உள்ளச்சத்தோடு கட்டுப்பட்டு, அவனுடைய மார்க்கத்தை இவ்வுலகில்‌ நிலைநாட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு முஸ்லிம்‌ கூட்டத்தினர்‌ நிற்கின்றனர்‌.

அப்போது, அந்தக்‌ கூட்டத்தினருக்குத்‌ தலைமை வகித்த நபி (ஸல்‌) அவர்கள்‌ இறைவனிடம்‌ கையேந்தி,

"யா அல்லாஹ்‌! எங்கள்‌ இச்சிறுபான்மைக்‌ கூட்டம்‌ தகர்க்கப்‌ படுமானால்‌ உன்னை வணங்கி வழிபட இவ்வுலகில்‌ எவருமே இல்லாமல்‌ போய்விடுவார்களன்றோ? என்று நெஞ்சுருக, கண்களில்‌ நீர்மல்கப்‌ பிரார்த்தித்து இறைவனின்‌ உதவியை இறைஞ்சினார்கள்‌.

அவர்களுக்கு உதவுவதாக அல்லாஹ்‌ நபிக்கு வாக்களித்தான்‌.

"வாக்களிக்கப்பட்ட உதவி நமக்கு வந்து விட்டது!" என்று அருகிலிருந்த அபூபக்ரு (ரலி) அவர்களைப்‌ பார்த்துக்‌ கூறிய நபி (ஸல்‌), "இந்த எதிரிகள்‌ புறமுதுகிட்டு ஓடப்‌ போகிறார்கள்‌" எனச்‌ சொல்லிக்‌ கொண்டே, குனிந்து ஒருபிடி மண்ணை அள்ளினார்கள்‌. குறைஷிக்‌ காஃபிர்கள்‌ நின்றிருந்த திசையை நோக்கித்‌ தன்‌ கையை விரித்து மண்ணை ஊதிவிட்டு, “உங்கள்‌ முகங்கள்‌ கருகி விட்டன” எனக்‌ கூறினார்கள்‌.

அம்மண்‌, எதிரிகளின்‌ திசையில்‌ சிதறியது. எதிரிகளும்‌ சிதறிப்போவதற்கு அல்லாஹ்‌ பத்ருப்போரில்‌ அற்புதமாக முஸ்லிம்களுக்குப்‌ பேருதவி புரிந்தான்‌; முஸ்லிம்கள்‌ வென்றார்கள்‌.

அல்லாஹ்வை அஞ்சி, அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து, அவனிடமே தவக்குல்‌ வைத்து, அவனை நோக்கிக்‌ கைகள்‌ விரிகின்றபோது அந்தக்‌ கைகளை வெறுமனே திருப்பி விடுவதற்கு நாணமுறுகிறவனாயிற்றே அவன்‌!

அப்படிப்பட்ட அல்லாஹ்‌, தன்னுடைய மார்க்கம்‌ நிலைநிறுத்தப்‌ படுவதற்கான ஓர்‌ இக்கட்டான காலகட்டத்தில்‌ தன்னுடைய தூதர்‌ கையேந்துகின்றபோது கண்டு கொள்ளாமல்‌ இருந்து விடுவானா?

ஆகவே, தனது அடியார்களுக்குத்‌ தனது உதவியைத்‌ தங்கு தடையின்றி வழங்கி வெற்றியடையச்‌ செய்தான்‌.

பத்ரில்‌ பெற்ற இந்த வெற்றி, தூதருடைய - தூதரின்‌ வீரர்களுடைய சாகசத்தால்‌ கிடைத்ததன்று; என்னுடைய உதவியைக்‌ கொண்டு கிடைத்தது"

என்பதை இந்த முக்கியக்‌ கட்டத்தில்‌ எல்லாருக்கும்‌ நினைவு படுத்துவதற்காக அல்லாஹ்‌,

(முஸ்லிம்களே! பத்ருப்‌ போரில்‌ எதிரிகளான) அவர்களை நீங்கள்‌ வெட்டவில்லை; அல்லாஹ்வே அவர்களை வெட்டினான்‌. நபியே! பகைவர்‌ மீது மண்ணள்ளி) நீர்‌ வீசியபோது நீர்‌ வீவில்லை; அல்லாஹ்வே வீசினான்‌” (அல்குர்‌ ஆன்‌ 8:17) என்று கூறுகிறான்‌.

இதன்‌ மூலம்‌ "என்னை நம்பி, என்னிடம்‌ அபயம்‌ வைத்து, என்னை அஞ்சி வாழும்‌ பொறுமையுடைய அடியாருக்குச்‌ சோதனை ஏற்படும்போது, யாரும்‌ எதிர்பாராத விதத்தில்‌ நான்‌ மகத்தான உதவி புரிந்து அவனை கவுரவிப்பேன்‌" என்ற பாடத்தைப்‌ புகட்டுகிறான்‌.

வஹ்தத்துல்‌ உஜூதுக்காரர்கள்‌, நேரடியாகப்‌ பொருள்‌ தரும்‌ குர்‌ஆன்‌ வசனங்களுக்கெல்லாம்‌, "இதனுடைய உட்பொருள்‌ வேறு இருக்கிறது” எனத்‌ திசை திருப்புவார்கள்‌.

ஆனால்‌, மேற்காணும்‌ 8:17 வசனத்துக்கு மட்டும்‌ Literal meaning ஐ அப்படியே எடுத்துக்‌ கொள்வார்கள்‌.

விளக்கம்‌ தேவையே இல்லாத தெளிவான வசனங்களுக்கு வேறு அர்த்தம்‌ கற்பிப்பவர்கள்‌, உவமித்துக்‌ கூறும்‌ இந்தக்‌ குறிப்பிட்ட வசனத்தில்‌ உணர்த்தப்‌படும்‌ படிப்பினையைப்‌ புறக்கணித்து விட்டு, அல்லாஹ்வே ஒவ்வொரு முஸ்லிம்‌ வீரராக பத்ரில்‌ வந்தான்‌ என்பது போல அர்த்தம்‌ கற்பிப்பார்கள்‌.

"எல்லாமே அல்லாஹ்தான்‌" என்ற இவர்களுடைய கோட்பாட்டின்படிப்‌ பார்த்தால்‌, அபூஜஹ்ல்‌ முஸ்லிம்களை வெட்டியபோது அபூஜஹ்ல்‌ வெட்டவில்லை; அல்லாஹ்தான்‌ முஸ்லிம்களை வெட்டினான்‌ எனக்‌ கூறினாலும்‌ கூறுவார்கள்‌.

இந்த வஹ்தத்துல்‌ உஜூது எவ்வளவு பெரிய வழிகேட்டுக்கு இட்டுச்‌ செல்கிறது பார்த்தீர்களா?

இனி, வஹ்தத்துல்‌ உஜுூதுக்காரர்கள்‌ தங்கள்‌ கோட்பாட்டுக்குச்‌ சாதகமாக எடுத்து வைக்கும்‌ ஒரு முக்கியமான ஹதீஸைப்‌ பார்ப்போம்‌.

புகாரீயில்‌ இடம்‌ பெறும்‌ கீழ்க்காணும்‌ முழு ஹதீஸில்‌ தங்களுக்குச்‌ சாதகமான பகுதியை மட்டும்‌ அவர்கள்‌ மேற்கோளாக எடுத்துப்‌ பேசி, அத்துவைதக்‌ கொள்கைக்கு வக்காலத்து வாங்குவார்கள்‌. அந்த முழு ஹதீஸையும்‌ நாம்‌ பார்ப்போம்‌:

"என்னுடைய தோழன்‌ ஒருவனோடு பகைமை பாராட்டுபவனோடு நான்‌ பகையாகவே இருப்பேன்‌. என்னுடைய அடியான்‌ என்பவன்‌, நான்‌ அவன்‌ மீது கடமையாக்கி இருக்கின்ற கடமைகளை நிறைவேற்றுவதன்‌ மூலமாகவே அல்லாமல்‌ வேறெதையும்‌ கொண்டு என்னை நெருங்க முடியாது. இன்னும்‌ நஃபிலான செயல்களைச்‌ செய்வதன்‌ மூலம்‌ நான்‌ அவனை உவக்கும்‌ காலமெல்லாம்‌ அவன்‌ என்னை நெருங்கிக்‌ கொண்டே இருப்பான்‌. நான்‌ அவன்‌ மீது அன்பு கொண்டு விட்டால்‌ அவன்‌ செவியுறும்‌ செவியாக, பார்க்கின்ற கண்ணாக, பிடிக்கின்ற கையாக நான்‌ ஆகிவிடுகின்றேன்‌. அவன்‌ என்னிடம்‌ கேட்பானேயானால்‌ அதனை நிச்சயம்‌ அவனுக்குக்‌ கொடுக்கின்றேன்‌. அவன்‌ என்னிடம்‌ அடைக்கலம்‌ தேடினால்‌ அதை நான்‌ அவனுக்கு நிச்சயம்‌ கொடுக்கின்றேன்‌" என்று அல்லாஹ்‌ கூறுவதாக நபி (ஸல்‌) அவர்கள்‌ எடுத்துச்‌ சொன்ன செய்தியை அபூஹுரைரா (ரலி) வழியாக புகாரீ (6502) பதிவில்‌ பார்க்கிறோம்‌.

இந்த ஹதீஸின்‌ முன்‌-பின்‌ பகுதிகளை மறைத்து விட்டு,

"அல்லாஹ்வே அடியானின்‌ காதாக, கண்ணாக, கையாக ஆகிவிடுகிறான்‌ அல்லவா? எனக்‌ கேட்கும்‌ ஸூஃபிகள்‌, "அல்லாஹ்வும்‌ அடியானும்‌ ஒன்றிக்‌ கலந்து விட்டதைத்தானே இது காட்டுகிறது?" எனக்‌ கேட்டு இணைவைப்புக்‌ கொள்கைக்கு நியாயம்‌ கற்பிப்பார்கள்‌.

மேற்காணும்‌ ஹதீஸில்‌ துண்டுப்‌ பார்வை செலுத்தியதால்‌ வந்த வினை இது.

இதன்‌ மீது முழுப்‌ பார்வையைச்‌ செலுத்தி இருந்தால்‌ இந்த விபரீதம்‌ ஏற்பட்டிருக்காது.

அதே பத்ருப்‌ போர்‌ நிகழ்ச்சிகளுடன்‌ இந்த ஹதீஸைப்‌ பொருத்திப்‌ பார்ப்போம்‌.

இஸ்லாத்தின்‌ விரோதிகள்‌ அல்லாஹ்வின்‌ நேசர்களாகிய முஸ்லிம்‌ வீரர்களுடன்‌ பகைமை பாராட்டுகிறார்கள்‌. தன்னுடைய நேசர்கள்‌ மீது எவர்‌ பகைமை பாராட்டுகிறாரோ அவர்களுக்கு அல்லாஹ்வே பகைவனாக ஆகிவிடுகின்றான்‌.

பத்ரு வீரர்கள்‌ அல்லாஹ்வின்‌ நேசர்களானது எப்படி என்பதையும்‌ மேற்காணும்‌ ஹதீஸ்‌ வரிசையாகச்‌ சொல்லி வருகிறது. அல்லாஹ்‌ அந்த முஸ்லிம்‌ வீரர்கள்‌ மீது எவற்றையெல்லாம்‌ கடமைகளாக ஆக்கினானோ அவற்றையெல்லாம்‌ அவர்கள்‌ நிறைவேற்றி இருக்கின்றனர்‌.

அல்லாஹ்வுக்காகத்‌ தங்கள்‌ பிறந்த மண்ணையே பிரிந்து வந்திருக்கின்றனர்‌. இவ்வாறாக அல்லாஹ்‌ இட்ட கட்டளைகளை நிறைவேற்றித்தான்‌ அவர்கள்‌ அல்லாஹ்வுக்கு நெருங்கிய நேசர்களானார்கள்‌.

அதுமட்டுமின்றி, மென்மேலும்‌ உபரி (நஃபில்‌, ஆன நற்செயல்களையும்‌ செய்து அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ முழுப்‌ பொருத்தத்தையும்‌ பெற்றிருந்தார்கள்‌.

எல்லாவற்றுக்கும்‌ மேலாக, இப்படிப்‌பட்ட இறைப்‌ பொருத்தத்தைப்‌ பெறுவதில்‌ முதலிடம்‌ வகித்த நபி (ஸல்‌) அவர்கள்‌ பத்ருப்‌ போர்‌ வீரர்களுக்குத்‌ தலைமை தாங்கி, வெற்றிக்காக இறைவனிடம்‌ கையேந்தினார்கள்‌.

அவர்கள்‌ எந்த வெற்றிக்காகக்‌ கையேந்தினார்களோ அந்த வெற்றியை இறைவன்‌ அவர்களுடைய கைகளில்‌ வாரிக்‌ கொடுத்தான்‌.

பகைவர்கள்‌ தோற்று, அவல ஓலமிட்டபோது அந்த ஓசையைத்‌ தன்‌ தோழர்களின்‌ செவிகளுக்கு விருந்தாக அல்லாஹ்‌ ஆக்கி வைத்தான்‌; எதிரிகள்‌ புறமுதுகிட்டு ஓடிய காட்சியைத்‌ தன்‌ நேசர்களைக்‌ கொண்டு கண்ணாரக்‌ காண வைத்தான்‌:

தன்னுடைய நேசர்களின்‌ சிறிய கூட்டமொன்று பெரியதொரு வெற்றியைப்‌ பெறுவதற்கு உறுதுணையாக இருந்து அந்தச்‌ சின்னஞ்‌ சிறிய கூட்டத்தினரின்‌ கைகளுக்கும்‌ கால்களுக்கும்‌ ஓர்‌ அற்புத ஆற்றலை வழங்கினான்‌.

அல்லாஹ்வே அவர்களுக்கு உற்ற துணையாயிருந்து வெற்றி புரிந்திருக்கிறான்‌. இந்த வெற்றி முழுக்க முழுக்க பத்ரு வீரர்களுடைய அவயங்களின்‌ ஆற்றலால்‌ ஈட்டியதன்று என்பதைச்‌ சுட்டிக்‌ காட்டுவதாகத்தான்‌ "அவனுடைய காதாக, கண்ணாக, கரமாக நான்‌ ஆகி விடுகிறேன்‌" என்றான்‌ அல்லாஹ்‌.

"நம்மோடு காதாக, கண்ணாக, கரமாக அல்லாஹ்‌ இரண்டறக்‌ கலந்து விட்டான்‌; இனி நாம்‌ வேறு அவன்‌ வேறு என்றில்லை. நாம்தான்‌ அல்லாஹ்‌; அல்லாஹ்தான்‌ நாம்‌” என்று அந்த முஸ்லிம்‌ வீரர்கள்‌ எண்ணினார்களா?

அப்படி எண்ணத்தான்‌ முடியுமா? அப்படிப்‌பட்ட எண்ணத்துக்கு இடமேயில்லை என்பதை அதே ஹதீஸின்‌ பிற்பகுதி தெளிவு படுத்துகிறது.

அல்லாஹ்வுடைய கையாக ஆகிவிட்ட பிறகு, அந்தக்‌ கை இனி யாரிடம்‌ போய்‌ துஆக்‌ கேட்பது? கேட்பவனும்‌ அவனே! கேட்கப்‌படுபவனும்‌ அவனே! என்று ஆகிவிடவில்லையா?

அப்படித்தான்‌ ஆகிவிட்டது வஹ்தத்துல்‌ உஜூதாரிடம்‌. 

ஆனால்‌ அப்படி ஆகிவிடக்‌ கூடாது;

அது ஏகத்துவத்துக்கே உலை வைப்பதாகிவிடும்‌ என்பதை உணர்த்திக்‌ காட்டுவதாகவே அதே ஹதீஸின்‌ பிற்பகுதி அமைந்திருக்கிறது.

பிற்பகுதி ஹதீஸ்‌ என்ன சொல்கிறது?

"அந்த அடியார்கள்‌ இனியும்‌ அவர்களுக்கு எவை தேவையோ அவற்றை என்னிடமே கேட்க வேண்டும்‌.

அப்போது நான்‌ அவர்களுக்குக்‌ கொடுப்பேன்‌. என்னிடமே பாதுகாப்புக்‌ கோர வேண்டும்‌. அப்போது அவர்களை நான்‌ பாதுகாப்பேன்‌" என்கிறான்‌ இறைவன்‌. இப்படியாக, அல்லாஹ்‌ தன்‌ அடியானைத்‌ தன்னிலிருந்து வேறாக்கி வைத்து, "நீ என்‌ அடியான்‌ எனும்‌ நிலையிலிருந்து, என்‌ நேசன்‌ எனும்‌ நிலையிலிருந்து என்னிடம்‌ கேள்‌" எனக்‌ கூறுகிறான்‌.

ஆக, ஸுஃபிஸவாதிகள்‌ அல்லாஹ்வின்‌ வசனத்தையும்‌ அவன்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்களின்‌ ஹதீஸையும்‌ எப்படியெல்லாம்‌ ஞானப்(!) பாட்டைக்குத்‌ தள்ளிக்‌ கொண்டு போய்‌ பங்கு வைத்து விட்டனர்‌ என்பதை அவர்கள்‌ செய்திருக்கும்‌ தகிடுதத்தங்களால்‌ தெரிந்து கொள்ளலாம்‌.



அடுத்து ஸுஃபியிஸத்திற்கு முட்டுக்கொடுக்க, ஸூஃபிஸம்‌ பற்றியும்‌ அதன்‌ படித்தரங்கள்‌ பற்றியும்‌ நபி (ஸல்‌) அவர்களே கூறியிருப்பதாகப்‌ பொய்ச்‌ செய்திகளை வழிகேட்டில்‌ உழன்ற ஸூஃஃபிகள்‌ எவ்வாறு உண்டு பண்ணினார்கள்‌ என்பதைப்‌ பார்ப்போம்‌!

“எவன்‌ என்‌ மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டிப்‌ பொய்‌ சொன்னானோ அவன்‌ தனது இருப்பிடத்தை நரகில்‌ தேடிக்‌ கொள்ளட்டும்‌.” (புகாரி‌, முஸ்லிம்‌, அபூதாவூது, நஸயீ)

முதலிய ஹதீஸ்‌ நூல்களில்‌ காணப்படும்‌ நபிமொழிகளின்‌ கடும்‌ எச்சரிக்கையையும்‌ புறக்கணித்து விட்டு, நபி (ஸல்‌) அவர்களது பெயராலேயே பொய்ச்‌ செய்திகளைப்‌ பாடினார்கள்‌ ஸூஃபிகள்‌:

ஆதியை அறிய வேண்டில்‌ அழகிய நிலைமை நாலாம்‌

ஓதிய ஷரீஅத்‌ தென்றும்‌ உவந்திடூ தரீக்கத்தென்றும்‌

நீதி சேர்‌ ஹகீகத்‌ தென்றும்‌ நெறியுள்ள மஃரிபத்தால்‌

ஆதியைக்‌ காணலாமென்‌ றகுமதர்‌ அருளிச்‌ செய்தார்‌. (ஞான மணிமாலை, பாடல்‌ 11)

“ஷரீஅத்‌, தரீகத்‌, ஹகீகத்‌, மஃரிபத்‌ எனும்‌ நான்கு நிலைகளின்‌ ஊடாகத்தான்‌ இறைவனை அறிய முடியும்‌ என நபி (ஸல்‌) அவர்களே கூறியுள்ளதாக, பீரப்பா பாடுகின்றார்‌.

ஆனால்‌, நபி (ஸல்‌) அவர்கள்‌ அருளிய ஹதீஸ்களில்‌ எதிலும்‌ இப்படி ஒரு செய்தி காணப்படவேயில்லை.



ஸூஃபித்துவக்‌ கோட்டிபாட்டிற்கு ஸூஃபிகள்‌ கொடுக்கும்‌ விளக்கம்‌:

ஷரீ அத்தைத்‌ தாண்டி, தரீக்கத்தைக்‌ கடந்து, ஹகீக்கத்தில்‌ எவர்‌ காலூன்றி விடுகிறாரோ அவர்‌ இறைவனோடு ஃபனா ஆகி, மஃரிஃபாவுடைய ஞானத்தைப்‌ பெற்று விடுகிறாராம்‌.

அதாவது இறைவனோடு இரண்டறக்‌ கலந்து விடுகிறாராம்‌.

இதை ஓர்‌ உதாரணம்‌ மூலம்‌ விளக்குவர்‌ ஸூஃபிகள்‌. அதாவது, இஸ்லாம்‌ என்பது ஒரு வட்டம்‌. அதன்‌ வெளிவிளிம்பு தான்‌ வெளிரங்கமான ஷரீஅத்‌. வட்டத்தின்‌ மையப்‌ புள்ளியே உள்ரங்கமான ஹகீக்கத்தாம்‌.

ஷரீ அத்‌ எனும்‌ வெளிவிளிம்பிலிருந்து ஹகீக்கத்‌ எனும்‌ மையப்‌ புள்ளியை நோக்கிச்‌ செல்லும்‌ ஆரமே தரீக்கத்‌ எனும்‌ ஞானப்‌ பாட்டையாம்‌.

இந்தத்‌ தரீக்கத்‌ எனும்‌ கோடு எந்த அளவுக்கு ஹகீக்கத்‌ எனும்‌ மையப்‌ புள்ளியை நோக்கி நெருங்கி, நெருங்கிச்‌ செல்கிறதோ, அந்த அளவுக்கு மனிதன்‌ இறைவனை நெருங்குகின்றானாம்‌. நெருங்கி, நெருங்கி, இறுதியில்‌ இந்த‌ நான்‌ கடைசியாக அந்த மையப்‌ புள்ளியைப்‌ போய்த்‌ தொடுமன்றோ? அப்போது இந்த ஞானவான்‌, இறைவனோடு ஒன்றிக்‌ கலந்து விடுகிறானாம்‌.

இவ்வாறு கலந்த நிலையே மஃரிஃபத்தாம்‌. மஃரிஃபாவுடைய நிலயை எய்தி, இறைவனோடு ஃபனாவாகி ஒன்றிக்‌ கலந்து விட்ட ஸூஃபிக்கு உலகிலுள்ள அனைத்துப்‌ பொருள்களும்‌ இறைவனாகவே காட்சி வழங்குமாம்‌. அவனும்‌ இறைவன்தானாம்‌.

இந்த வழிகெட்ட கோட்பாட்டை ஸூஃபிஸத்தின்‌ ஆரம்ப நிலையில்‌ அனுபவித்த பக்த கோடிகள்‌ அதைத்‌ தம்‌ உள்ளத்துக்குள்ளேயே வைத்துக்‌ கொண்டார்கள்‌.

"சொல்லத்‌ தகுமல்ல இப்பொருளை சுருட்டி மறைக்கிறேன்‌ ஷரஹுக்காக"

என்று பீரப்பா பாணியில்‌ ஆரம்பகால ஸூஃபிகள்‌ மஃரிஃபா ஞானத்தை வெளிப்‌படுத்தினார்களில்லை.

இவ்வாறு ஒளிவு-மறைவாக மஃரிஃபா ஞானம்‌ அடைந்து கிடந்தபோது அதை வெளிப்படுத்தி ஆன்மீக உலகில்‌ ஒரு பெரும்‌ பரபரப்பை ஏற்படுத்தினார்‌ ஒரு “புரட்சித்‌ தலைவர்‌”

"நேசனும்‌ நேசிக்கப்‌ பட்டவனும்‌ ஒருவனே! என்னைக்‌ காணும்போது அவனைக்‌ காணுகின்றீர்கள்‌. நாங்கள்‌ இருவரும்‌ ஒரே உருவில்‌ ஒன்றிவிட்ட இரு ஆன்மாக்களாகும்‌"

என்று அந்தப்‌ புரட்சியாளர்‌ பகிரங்கமாகப்‌ பறை சாற்றினார்‌.

"அனல்‌ ஹக்‌ - நானே அல்லாஹ்‌” என்பது இவருடைய ஆன்மீக கோஷமாயிற்று. உடனே, அப்போதிருந்த ஷரீஅத்‌ கோர்ட்‌ உஷாராயிற்று. அந்தப்‌ புரட்சித்‌ தலைவரான ஹுஸைன்‌ இப்னு மன்ஸூர்‌ ஹல்லாஜ்‌ என்ற ஸூஃபியை, காஃபிர்‌ எனத்‌ தீர்ப்புரைத்தது.

அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிகழ்வு ஹிஜ்ரீ 309ஆம்‌ ஆண்டு இராக்கில்‌ நடந்ததாகும்‌.



வஹ்தத்துல்‌ உஜூதை வகுத்த இப்னு அரபி: 

அதற்குப்‌ பின்னரும்‌ ஸூஃபிஸம்‌ உயிரோடுதான்‌ இருந்தது. அதற்குப்‌ புத்துயிர்‌ ஊட்டியவர்களுள்‌ குறிப்பிடத்‌ தக்கவர்‌ ஹிஜ்ரீ 450முதல்‌ 505 வரை ஈரானில்‌ வாழ்ந்திருந்த கஸ்ஸாலீ ஆவார்‌.

அவருக்கும்‌ பின்னர்‌ ஹிஜ்ரீ 560 இல்‌ வருகிறார்‌ இப்னு அரபி எனும்‌ ஸூஃபி. இந்த இப்னு அரபி தான்‌, தன்‌ காலத்துக்கு முன்‌ இருந்த ஸுஃபிக்‌ கோட்பாடுகளை எல்லாம்‌ நெறிப்படுத்தி, அதை ஒரு பேரியக்கமாகக்‌ கட்டியெழுப்பினார்‌.

“வஹ்தத்துல்‌ உஜூது” (இயல்வன யாவும்‌ இறையுருவே) எனும்‌ நாமகரணமும்‌ இவரால்தான்‌ சூட்டப்பட்டது. இப்னு அரபியை ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்றெல்லாம்‌ ஸூஃபிக்‌ கட்சியினரால்‌ ஆஹா, ஓகோ எனப்‌ பாராட்டப்படும்‌.

இவர்‌ எந்த அளவுக்கு வழிகேட்டில்‌ ஊறித்‌ திளைத்தார்‌ என்பதை அவருடைய கவிதைகளைப்‌ படித்த மாத்திரத்தில்‌ நாம்‌ புரிந்து கொள்ளலாம்‌.

இபுனு அரபி பாடுகிறார்‌:

வெவ்வேறு படிமங்களுக்கு என்‌ இதயம்‌ திறந்தே கிடக்கிறது. இது கிறித்துவ சந்நியாசிகளின்‌ துறவுமடம்‌;

சிலைகள்‌ கொலுவிருக்கும்‌ கோயில்‌;

அரபு நாட்டு மான்களின்‌ மேய்ச்சல்‌ வெளி:

ஹஜ்‌ பயணிகளுக்கு இது கஃபாப்‌ பள்ளி;

தவ்ராத்தின்‌ வரைபலகையும்‌ இதுவே;

குர்‌ ஆன்‌ வேதமும்‌ இதுவே;

நான்‌ அன்பு எனும்‌ மதத்தையே அனுஷ்டிக்கிறேன்‌.

அதன்‌ பயணம்‌ எத்திசையை நோக்கி அடியெடுத்தாலும்‌ சரியே.

அன்பு எனும்‌ மதமே என்னுடையது;

அதுவே என்‌ நம்பிக்கை.

சமயங்களின்‌ பெயரால்‌ பிரிவினை பேசுவதை ஸூஃபிகள்‌ வெறுத்தனர்‌. எல்லாச்‌ சமயங்களும்‌ மூலநிலையில்‌ ஒரே உண்மையைச்‌ சொல்கின்றன என்பது ஸுஃபிகளின்‌ நம்பிக்கையாகும்‌. அந்த நம்பிக்கையின்‌ வெளிப்பாடுதான்‌ இப்னு அரபியிடம்‌ இப்படிக்‌ கவிதையாக உருவெடுக்கிறது.



அடுத்து இப்னு அரபியின்‌ மேலும்‌ சில வழிகேடான நம்பிக்கையைப்‌ பற்றி பார்ப்போம்‌!

“இறைவன்‌ மனிதனாக அவதரிக்கிறான்‌” என்பதும்‌

“மனிதனில்‌ இறைவனைக்‌ காணலாம்‌” என்பதும்‌ இப்னு அரபியின்‌ கோட்பாடாகும்‌. “இறைவன்‌, தன்னை அறிந்து கொள்வதே மனிதன்‌ வாயிலாகத்தான்‌” என்கிறார்‌ இப்னு அரபி:

அவன்‌ என்னுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்தி அவனுடைய சாயலில்‌ என்னைப்‌ படைத்து என்னைப்‌ புகழ்கிறான்‌.

நான்‌ அவனுடைய பரிபூரணத்தை எடுத்தியம்பி அவனுக்குக்‌ கீழ்ப்படிந்து அவனைப்‌ புகழ்கிறேன்‌.

அவன்‌ எப்படி என்னிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்க முடியும்‌? இதற்காகவேதான்‌ நான்‌ படைக்கப்‌ பட்டிருக்கிறேன்‌. நான்‌ அவனை அறிகிறேன்‌;

அவனுடைய உள்ளமையைக்‌ கொணர்கிறேன்‌.

“இஸ்லாத்தில்‌ மட்டுமில்லாமல்‌ ஏனைய மதங்களிலும்‌ தெய்வீக உண்மைகள்‌ பொதிந்திருக்கின்றன; அவற்றை நாம்‌ ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌” என்பது இப்னு அரபியின்‌ கருத்தாகும்‌.

எல்லாப்‌ பொருட்களும்‌ இறைவனின்‌ குடும்பத்தைச்‌ சார்ந்தவையே மனிதர்கள்‌ உருவ வழிபாடு-தெய்வீக நிந்தனையால்‌ ஒருவரையொருவர்‌ பழித்துக்‌ கொள்கின்றனர்‌

காரணம்‌, அவர்கள்‌ வெளித்தோற்றத்தோடு நின்று விடுகின்றனர்‌ அவர்கள்‌ தங்களிடம்‌ குறைபாடுடைய கோட்பாடுகளைக்‌ கொண்டிருக்கின்றனர்‌ ஆனால்‌, இறைவனுக்கு எல்லா வடிவமும்‌ உண்டு;

மேலும்‌ அவனுக்கு எந்த வடிவமும்‌ இல்லை

அவன்‌ வடிவத்துக்கு அப்பாற்பட்ட யதார்த்தம்‌

மனிதர்கள்‌ மாறுபட்ட கடவுள்‌ கொள்கைகளைப்‌ பின்பற்றிக்‌ கொண்டனர்‌

ஆனால்‌, நானோ ஒரே நேரத்தில்‌ எல்லாவகையான கடவுள்‌ கொள்கைகளையும்‌ கொண்டிருக்கிறேன்‌.

“வெவ்வேறு மதத்தினரையும்‌ அன்பினால்‌ தழுவிக்‌ கொள்வதற்கேற்ற வகையில்‌ சயமப்‌ பொறுமையையும்‌ அனுசரித்துப்‌ போதலையும்‌ கைக்கொள்ள வேண்டும்‌” என்கிறார்‌ இப்னு அரபி.

"ஒரே உண்மைப்‌ பொருளின்‌ ஒப்பற்ற ஜோதிதான்‌ பள்ளிவாசலிலும்‌ கிறித்துவ திருச்சபைகளிலும்‌ கோவிலிலும்‌ எரிகிறது” என்பது இப்னு அரபி போன்ற ஸுூஃபிக்‌ கவிஞர்களின்‌ கருத்தாகும்‌.

இன்று வாழும்‌ ஸூஃபிகள்‌, இபுனு அரபியின்‌ கோட்பாடுகளுக்குக்‌ கட்டுப்பட்டவர்களேயாவர்‌.



குணங்குடி மஸ்தானின்‌ அத்வைதக்‌ கொள்கை:

இவர்‌ காதிரிய்யா தரீக்காவைச்‌ சேர்ந்த ஸூஃபிக்‌ கவிஞர்‌ எனச்‌ சுட்டப்படுகிறார்‌. இறைவனையும்‌ நபி (ஸல்‌) அவர்களையும்‌ பற்றியும்‌ முஹ்யித்தீன்‌ அப்துல்காதிர்‌ ஜீலானி (ரஹ்‌), நாகூர்‌ ஷாஹுல்‌ ஹமீது (ரஹ்‌) ஆகியோரைப்‌ பற்றியும்‌ இவர்‌ பாடல்கள்‌ பல பாடியுள்ளார்‌.

முஹ்யித்தீன்‌ அப்துல்காதிர்‌ ஜீலானீ (ரஹ்‌) அவர்களைத்‌ தம்‌ ஆன்மீக குருவாகக்‌ கொண்டிருந்தார்‌ குணங்குடி.

இவருக்குக்‌ “குணங்குடியார்‌” என்ற பெயர்‌ ஏன்‌ வந்தது? இவர்‌ அதை ஒரு குறிச்சொல்போல்‌ தமது பாடல்களில்‌ கூறுகிறார்‌.

அல்லாஹ்வைப்‌ பற்றிச்‌ சொல்லும்போது குணங்குடி ஆண்டவன்‌ என்கிறார்‌!

ஆண்டவன்‌ என்செய்வானோ - குணங்குடி

ஆண்டவன்‌ என்செய்வானோ

ஆண்டவன்‌ அணைத்து என்னை அருகில்‌ வைத்திடுவானோ

தீண்டியும்‌ பார்க்காமல்‌ தெருவில்‌ விட்டிடுவானோ

எனப்‌ பாடுகிறார்‌.



நற்குணங்குடி கொண்ட பாதுஷாவான குரு

நாதன்‌ முஹ்யித்தீனே!

எனப்‌ போற்றும்போது முஹ்யித்தீன்‌ அப்துல்‌ காதிர்‌ அவர்களுக்குக்‌ குணங்குடி என்ற அடைமொழியைக்‌ கொடுக்கிறார்‌.

சற்குணங்குடி கொண்ட ஷாஹுல்‌ ஹமீதரசரே! எனச்‌ சொல்லும்போது நாகூர்‌ ஷாஹுல்‌ ஹமீது அவர்களோடும்‌ குணங்குடியை இணைத்துப்‌ பேசுகின்றார்‌.

இனி, தன்னைப்‌ பற்றிப்‌ பாடும்போதும்‌ குணங்குடியான்‌ எனச்‌ சுட்டுகிறார்‌!

ஐயன்‌ குணங்குடியானை அன்றி வேறு

உண்டென்று உள்ளாய்ந்து பார்த்தேன்‌

ஐயன்‌ குணங்குடியானை யன்றி வேறொன்றும்‌

என்னுள்ளாய்க்‌ காணேன்‌

ஐயன்‌ குணங்குடியானே யானே

என்று அறிந்த பின்பு, என்‌ அறிவாய்‌ நின்ற ஐயன்‌

குணங்குடியானே யதிமோகத்‌ திருநடன மாடுவானே

என அமைகிறது பாடல்‌.

ஆக, இவருடைய பார்வையில்‌ அல்லாஹ்‌, முஹைதீன்‌ அப்துல்‌ காதிர்‌ ஜீலானி, நாகூர்‌ ஷாஹுல்‌ ஹமீது ஆகியோரும்‌ இவரும்‌ குணங்குடியார்கள்தாம்‌.

இவருடைய பாடல்‌ போக்கைப்‌ பார்த்து, இந்த நால்வருள்‌ யாரைக்‌ குணங்குடியான்‌ எனச்‌ சுட்டுகிறார்‌ என்பதை, படிப்பவர்கள்‌ புரிந்து கொள்ள வேண்டியதுதான்‌.

ஒரு சோற்றுப்‌ பதமாக இங்குத்‌ தரப்பட்டுள்ள பாடல்களையும்‌ இவரது நூலிலுள்ள இன்னபிற பாடல்களையும்‌ ஒருங்கு நோக்கிப்‌ பார்க்கும்போது,

"எல்லாரும்‌ அல்லாஹ்வே” என்ற கொள்கையை - வஹ்தத்துல்‌ உஜூத்‌ - எனும்‌ அத்துவைதக்‌ கொள்கையை உடையவராகக்‌ குணங்குடி மஸ்தான்‌ இருந்துள்ளார்‌ எனும்‌ முடிவுக்கு வருகின்றோம்‌.

இதன்படி முஹ்யுத்தீன்‌ அப்துல்‌ காதிர்‌ ஜீலானி அவர்களும்‌ நாகூர்‌ ஷாஹுல்‌ ஹமீது அவர்களும்‌ இவருடைய பார்வையில்‌ அல்லாஹ்வாகவே படுகின்றனர்‌.

இவருடைய உள்ளத்தில்‌ அல்லாஹ்‌ இருக்கிறானாம்‌. அதனால்‌ இவரும்‌ அல்லாஹ்‌ ஆகிவிடுகின்றார்‌.

"ஐயன்‌ குணங்குடியானே யானே என்று அறிந்த பின்பு ...

எனும்‌ வரியில்‌ குணங்குடியாகிய அல்லாஹ்‌ நானே என்பதைத்தானே சுட்டுகிறார்‌.

காண்கின்ற பொருள்‌ எல்லாமே இறைவன்தான்‌ என்பதைப்‌ பறைசாற்றும்‌ குணங்குடி மஸ்தானின்‌ இன்னொரு பாடலைப்‌ பார்ப்போம்‌:

ஊனாகி ஊனில்‌ உயிராகி எவ்வுலகுமாய்‌ ஒன்றாய்‌ இரண்டுமாகி

உள்ளாகி வெளியாகி ஒளியாகி இருளாகி ஊருடன்‌ பேருமாகிக்‌

கானாகி அலையாகி அலைகடலுமாகி மலை கானக விலங்குமாகிக்‌

கங்குல்‌ பகலாகி மதியாகி ரவியாகி வெளிகண்ட பொருள்‌ எவையுமாகி

நானாகி நீயாகி அவனாகி அவளாகி நாதமொடுூ பூதமாகி

நாடும்‌ ஒளிபுரிய அடியெனும்‌ உமை நம்பினேன்‌ நன்மை செய்து ஆளுதற்கே

வானோரும்‌ அடிபணிதலுள்ள நீர்‌ பின்தொடர வள்ளல்‌ இரசூல்‌ வருகவே

வளரும்‌ அருள்‌ நிறை குணங்குடி வாழும்‌ என்‌ இரு கண்மணியே முகியித்தினே!

"ஊனாகி, ஊனில்‌ உயிராகி ..." எனத்‌ தொடங்கும்‌ பாடலில்‌ வானாகி, கானாகி என்றெல்லாம்‌ யாரைச்‌ சொல்கிறார்‌ குணங்குடி மஸ்தான்‌?

- அல்லாஹ்வைச்‌ சொல்கிறாரா?

- நபி (ஸல்‌) அவர்களைச்‌ சொல்கிறாரா?

- முஹ்யித்தின்‌ அப்துல்‌ காதிரைச்‌ சொல்கிறாரா?

அல்லாஹ்வுக்கே வெளிச்சம்‌.

யாரைச்‌ சொல்வதாக இருந்தாலும்‌ இஸ்லாமியக்‌ கொள்கைப்படி இது மாபெரும்‌ முரணுடையதாகும்‌. “இப்பாடலில்‌ இறைவனைத்தான்‌ ஊனாகி, உயிராகி ... என்றெல்லாம்‌ குணங்குடி மஸ்தான்‌ பாடியுள்ளார்‌ என எஸ்‌. எம்‌. சுலைமான்‌ ஐ.ஏ.எஸ்‌. தமது “இசுலாமியத்‌ தமிழ்‌ இலக்கியம்‌ - ஓர்‌ அறிமுகம்‌” எனும்‌ நூலில்‌ “ஞான இலக்கிய வளர்ச்சியில்‌ முஸ்லிம்களின்‌ பங்கு” எனும்‌ தலைப்பில்‌ குறிப்பிடுகிறார்‌.

ஊனாக இருப்பவனும்‌ இறைவன்தான்‌; உயிராக இருப்பவனும்‌ அவன்தான்‌; ஒன்றாக இருப்பவனும்‌ அவனே; இரண்டாக உள்ளவனும்‌ அவனே; உள்‌, வெளி, ஒளி, இருள்‌, ஊர்‌, பேர்‌, காடு, மலை, கடல்‌ ஆகிய எல்லாமாகவும்‌ அவனே இருக்கிறான்‌. காட்டு விலங்குகளாக இருப்பவனும்‌ அவன்தான்‌. இரவு, பகல்‌, சூரியன்‌, சந்திரன்‌ மட்டுமின்றி, காணும்‌ பொருட்கள்‌, நான்‌, நீ அவன்‌, அவள்‌, நாதம்‌, பூதம்‌ இவை ஒவ்வொன்றாக இருப்பவனும்‌ அவன்தானாம்‌.

இதன்படி சூரியனை, சந்திரனை, மலையை, கடலை, ஒளியை, இருளை, ஒன்றை, இரண்டை, யாரோ ஓர்‌ அவனை அல்லது அவளை, நாதத்தை, பூதத்தை, காட்டிலுள்ள யானை, புலி, சிங்கம்‌ முதலிய விலங்குகளை, கல்லை, மண்ணை, கண்ட கண்ட பொருட்களை எதை வணங்கினாலும்‌ அல்லாஹ்வை வணங்கியதுபோல்தான்‌ என்று ஆகவில்லையோ?

"அஷ்ஹது அன்‌ லாயிலாக இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ

“வணக்கத்திற்குரியவன்‌ அல்லாஹ்வையன்றி யாருமில்லை; எதுவுமில்லை. அவன்‌ ஏகன்‌,

அவனுக்கு இணையாக யாருமில்லை; எதுவுமில்லை எனச்‌ சான்றுரைக்கிறேன்‌

எனும்‌ இந்த உயிரினும்‌ இனிய உறுதிப்‌ பிரமாணத்தை நெஞ்சில்‌ நிலைநிறுத்தி வெளிப்படையாக ஒத்துக்‌ கொண்ட எவரும்‌ இப்படிக்‌ கூறத்‌ துணிவார்களா?

நபியே) நீர்‌ கூறும்‌: அல்லாஹ்‌ ஒருவன்தான்‌. ... மேலும்‌ அவனுடன்‌ ஒப்பிடத்‌ தக்கது எதுவுமேயில்லை" (அல்குர்‌ ஆன்‌ 112:1-4).

"அவனே வானங்களையும்‌ பூமியையும்‌ படைத்தான்‌.

உங்களிலிருந்தே (உங்கள்‌) ஜோடிகளையும்‌ அவன்‌ உங்களுக்காகப்‌ படைத்தான்‌. கால்நடைகளையும்‌ ஜோடி-ஜோடியாகப்‌ படைத்தான்‌. உங்களைப்‌ பூமியின்‌ பல பாகங்களிலும்‌ பரவிப்‌ பெருகச்‌ செய்கிறான்‌. அவனுக்கு ஒப்பானது ஒன்றுமேயில்லை. அவன்‌ செவியுறுவோனாகவும்‌ உற்று நோக்குபவனாகவும்‌ இருக்கிறான்‌" (அல்குர்‌ ஆன்‌ 042:011).



இறைவனைத்‌ தவிர உள்ள மற்றெல்லாமும்‌ அவனது படைப்புகளே:

அவனே படைப்பாளன்‌. மற்றவை அனைத்தும்‌ இறைவனின்‌ படைப்புகள்‌. அவனைப்போல எதுவுமில்லை. தன்னுடைய எல்லாப்‌ படைப்புகளின்‌ எல்லா இயக்கங்களையும்‌ படைத்தவனாகிய அந்த அல்லாஹ்‌ அனைத்தையும்‌ உற்று நோக்குகின்றான்‌; நன்கு செவியுறுகிறான்‌. இஃது இங்ஙனமிருக்க,

குணங்குடி மஸ்தானோ படைப்புகள்‌ யாவும்‌ அல்லாஹ்வாகவே இருப்பதாகப்‌ பிதற்றுகிறார்‌.

அவனே சூரியனாக, சந்திரனாக, ஒன்றாக, இரண்டாகவெல்லாம்‌ இருப்பதாகக்‌ கூறி இஸ்லாத்தைப்‌ பரிகசிக்கிறார்‌.

மஸ்தான்‌ எனும்‌ இந்தப்‌ பித்தருடைய இப்பிதற்றல்களுக்கு வேறுபல சுவையான பின்னணிகள்‌ இருக்கின்றன.

குணங்குடி மஸ்தானுடைய ஆன்மீகக்‌ குருநாதர்‌ முஹையித்தின்‌ அப்துல்‌ காதிர்‌ ஜீலானி (ரஹ்‌) ஆவார்‌. முஹையித்தீன்‌ அப்துல்‌ காதிர்‌ ஜீலானியை இவர்‌ அல்லாஹ்வுக்கு இணையானவர்‌ என்றே கருதுகிறார்‌, கதை விடுகிறார்‌.

இவருடைய பாடல்களில்‌ பெரும்பாலானவற்றில்‌ “குணங்குடி ஆண்டவன்‌” என்று இவர்‌ முஹையித்தீன்‌ அப்துல்‌ காதிர்‌ ஜீலானியையே சுட்டுகிறார்‌.

“குணம்‌” என்பதை அல்லாஹ்வாகவும்‌ அந்த அல்லாஹ்வாகிய குணம்‌ முழுவதையும்‌ தன்னுள்‌ குடியிருத்திக்‌ கொண்டவர்‌ முஹைதீன்‌ அப்துல்‌ காதிர்‌ எனவும்‌ கருதுகின்றார்‌ குணங்குடி மஸ்தான்‌.

எனவேதான்‌ “குணங்குடி வாழும்‌ முஹையித்தினே!" என, பாட்டுக்குப்‌ பாட்டுப்‌ பாடிச்‌ செல்கிறார்‌.

அதாவது, முஹையித்தீன்‌ அப்துல்‌ காதிரிடம்‌ அல்லாஹ்வே குடியிருந்தான்‌ என்ற அத்துவைதக்‌ கோட்பாடுடையவர்‌ இந்த கவிஞர்‌.

இனி ஸூஃபித்துவத்தின்‌ பிரிவுகளைப்‌ பற்றியும்‌ அவற்றின்‌ அடிப்படைக்‌ கோட்பாடுகளைப்‌ பற்றியும்‌ சுருக்கமாகப்‌ பார்ப்போம்‌!



சூஃபித்துவக்‌ கோட்பாடுகள்‌:

பொதுவாக ஸூஃபிகள்‌ கொண்டிருந்த இறைவனைப்‌ பற்றிய நம்பிக்கையின்‌ அடிப்படையில்‌ அவர்களின்‌ கொள்கையினை மூன்று வகைப்படுத்தலாம்‌:

1) இல்லுமினிஸ்ட்‌ (Illuminist) தத்துவக்‌ கோட்பாடு!

2 ஹூலூால்‌ - அவதாரக்‌ கொள்கை!

3) இத்திஹாத்‌ - வஹ்தத்துல்‌ உஜூது

மேற்கண்ட மூன்று வகை ஸூஃபியினர்களுமே இஸ்லாத்தின்‌ அடிப்படைக்‌ கொள்கைகளுக்கு மாற்றமான நம்பிக்கைகளைத்‌ தான்‌ கொண்டிருந்தனர்‌.

ஸூஃஃபிகளின்‌ இந்த மூன்று பிரிவினர்களை ஒவ்வொன்றாகப்‌ பார்ப்போம்‌!

1) இல்லுமினிஸ்ட்‌ (Illuminist) தத்துவக்‌ கோட்பாடு:

இந்தக்‌ கோட்பாடுடையவர்களைப்‌ பொறுத்தவரை துறவறம்‌ பூணூவதைவிட தத்துவங்கங்களுக்கு அதிக முக்கியத்துவம்‌ அளிப்பார்கள்‌!

ஒருவர்‌ தன்‌ உடலை வருத்தி அதன்‌ மூலம்‌ தன்‌ ஆன்மாவுக்கு பயிற்சியளித்து அந்த ஆண்மாவைத்‌ தூய்மைப்படுத்தினால்‌ இறைவனின்‌ ஒளி அவருடைய உயிருடன்‌ கலந்து அவருடைய உள்ளத்தில்‌ ஊடூருவுகிறது என்பது இவர்களின்‌ நம்பிக்கை!

படைத்தவன்‌ வேறு! படைப்பினம்‌ வேறு! ஆயினும்‌ இறைவன்‌ எல்லா இடத்திலும்‌ இருக்கின்றான்‌ என்பதும்‌ இவர்களது நம்பிக்கை! இது அல்‌-குர்‌ஆன்‌ சுன்னாவிற்கு முற்றிலும்‌ முரண்பட்ட கருத்தாகும்‌.

அல்லாஹ்‌ ஏழு வானங்களுக்கும்‌ மேலாக அர்ஷிற்கு மேலாக இருக்கிறான்‌ என்பது குர்‌ஆன்‌ சுன்னாஹ்‌ போதிக்கும்‌ அடிப்படை நம்பிக்கையாகும்‌.



2 ஹூலூால்‌ - அவதாரக்‌ கொள்கை:

அல்லாஹ்‌ மனிதர்களின்‌ மீது இறங்கி சஞ்சரிக்கின்றான்‌ அல்லது மனிதனாக அவதரிக்கின்றான்‌ என்பது இந்தக்‌ கோட்பாடுடையவர்களின்‌ நம்பிக்கை.!

அதாவது, பிற மதங்களில்‌ தங்களின்‌ கடவுளர்கள்‌ மனித அவதாரம்‌ எடுத்து இப்பூவுலகிற்கு வருகை தந்தனர்‌ என்று நம்பிக்கை கொண்டிருப்பது போன்றதாகும்‌.

கிறிஸ்தவர்களில்‌ பலர்‌ கர்த்தரே (இறைவனே) இயேசுவாக ஈஸா அலை) அவர்களாக இப்புவியில்‌ அவதரித்தான்‌ என்ற நம்பிக்கை கொண்டிருப்பதைப்‌ போன்றதாகும்‌.

மன்சூர்‌ ஹல்லாஜ்‌ போன்ற சூஃபிகள்‌ இந்தக்‌ கொள்கையுடையவர்கள்‌ தான்‌! இவர்‌ தன்னுடைய கொள்கையை பகிரங்கமாகவே வெளியில்‌ கூறினார்‌.

மனித உருவில்‌ தோன்றிய அவனுக்கே புகழனைத்தும்‌!

அவன்‌ தன்னுடைய பிரகாசத்தை மறைத்திருந்தான்‌

அவனுடைய படைப்புகள்‌ அவனை திறந்த வெளியில்‌ காணும்‌ வரை உண்ணும்‌ பருகும்‌ மனித வடிவில்‌

(தவாசீன்‌ அல்‌-ஹல்லாஜ்‌ பக்கம்‌ 130)



மன்சூர்‌ ஹல்லாஜ்‌ மேலும்‌ உளறுகின்றார்‌:

நேசிப்பவனும்‌ நானே! நேசிக்கப்படுபவனும்‌ நானே!

நாங்கள்‌ ஒருடலில்‌ தங்கியிருக்கும்‌ ஈருயிர்கள்‌!

எனவே நீ என்னைக்‌ கானும்‌ போது அவனையே காண்கிறாய்‌!

நீ அவனைக்‌ காணும்‌ போது எங்கள்‌ இருவரையும்‌ காண்கிறாய்‌!

இக்கொள்கையின்‌ காரணமாகவே மன்சூர்‌ ஹல்லாஹ்‌,

"அனல்‌ ஹக்‌ - நானே அல்லாஹ்‌" என தன்னைப்‌ பிரகடனப்படுத்திக்‌ கொண்டார்‌.

மன்ஸூர்‌ ஹல்லாஜியின்‌ மடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில்‌,

அளவற்ற அருளாளனும்‌ நிகரற்ற அன்புடையோனுமாகிய மன்ஸூர்‌ ஹல்லாஜியிடமிருந்து

என எழுதப்பட்டிருந்தது! இது குறித்து அவரிடம்‌ அரசு விசாரிக்கும்‌ போது,

இக்கடிதம்‌ எனக்குரியதே! அதே வேளை இதை எழுதியவனும்‌ அல்லாஹ்வே என்றார்‌!

இதன்‌ காரணமாகவே இஸ்லாமிய அரசு அவருக்கு மரண தண்டனை விதித்தது.

ஹிந்து மத, கிறிஸ்தவ மத மற்றும்‌ மன்ஸூர்‌ ஹல்லாஜியின்‌ அவதாரக்‌ கொள்கையைப்‌ பிரதிபலிக்கும்‌ விதமாகத்‌ தான்‌ தற்காலத்திய ஸூஃபிகளும்‌, “அல்லாஹ்தான்‌ ரளலுல்‌ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக புவியில்‌ அவதரித்தான்‌” என்று கூறுகின்றனர்‌.

நீயே உனக்கு ஸுஜுது செய்தாய்‌ பின்‌ நினைந்துருவாய்‌” நீயே புவிக்குள்‌ ரஸுலாக வந்தவன்‌” (ஞானப்‌ புகழ்ச்சி - பாடல்‌ 118) என்று பீரப்பாவின்‌ பாடல்களையும்‌ பாடி மகிழ்கின்றனர்‌!

நவூதுபில்லாஹ்‌ - இவர்களின்‌ கூற்றைவிட்டும்‌ அல்லாஹ்‌ பரிசுத்தமானவன்‌.



3) இத்திஹாத்‌ - வஹ்தத்துல்‌ உஜூத்‌ கொள்கை:

ஸுூஃபிகளின்‌ மூன்றாவது வகையினர்‌ தான்‌ நாம்‌ இக்கட்டுரைத்‌ தொடரின்‌ ஆரம்பத்திலிருந்து பார்த்து வருகின்ற வஹ்தத்துல்‌ உஜூத்‌ என்று சொல்லப்படக்கூடிய அத்வைத கொள்கையுடையவர்கள்‌ ஆவர்‌.

இக்கொள்கையாளர்களின்‌ நம்பிக்கையின்‌ பிரகாரம்‌ இயல்வன யாவும்‌ இறையுறுவே என்பதையும்‌ அதாவது அல்லாஹ்வே இப்பிரபஞ்சத்தின்‌ அனைத்துப்‌ பொருள்களுமாக இருக்கின்றான்‌ என்பதையும்‌ பார்த்தோம்‌.

இக்கொள்கையை நெறிப்படுத்திய இப்னு அரபி அல்‌-ஹாத்திமி அத்‌-தாயீ என்பவர்‌ ஹிஜ்ரி 638 ஆம்‌ ஆண்டு மரணித்து சிரியாவின்‌ டமாஸ்கஸில்‌ அடங்கியிருக்கிறார்‌.

தற்காலத்திய ஸுஃபிகளில்‌ மிகப்‌ பெரும்பாண்மையோர்‌ இந்த அத்வைத கோட்பாட்டையே பின்பற்றுகின்றனர்‌. தமிழகமும்‌ அதற்கு விதிவிலக்கல்ல!

வழிகேட்டின்‌ உச்சத்தைத்‌ தொட்ட இவரது உளறல்களில்‌ சிலவற்றைப்‌ பார்ப்போம்‌:

மனிதனே கடவுள்‌! கடவுளே மனிதன்‌!

இப்படியிருக்க யார்‌ யாருக்குக்‌ கட்டளையிடுவது?

நீ மனிதனென அழைத்தாலும்‌ கடவுளென அழைத்தாலும்‌

இரண்டுமே ஒன்றுதான்‌ இப்படியிருக்க

யார்‌ யாரை வணங்குவது?

(அல்புதூஹாத்துல்‌ மக்கிய்யா 213)

இப்னு அரபி மேலும்‌ கூறுகிறார்‌:

மேலும்‌ இப்னு அரபி மூசா (அலை) அவர்களின்‌ உம்மத்துகள்‌ காளைக்‌ கன்றின்‌ சிலையை வணங்கிய நிகழ்வைப்‌ பற்றிக்‌ கூறும்‌ போது

காளைக்‌ கன்றை வணங்கியவர்கள்‌ அல்லாஹ்வைத்‌ தவிர வேறு யாரையும்‌

வணங்கவில்லை என்கிறார்‌. காரணம்‌ என்னவெனில்‌,

இப்பிரபஞ்சமும்‌ அதிலுள்ள அனைத்தும்‌ அல்லாஹ்‌ தான்‌ என்ற வஹ்தத்துல்‌ உஜூத்‌

கொள்கையுடைய ஸூஃபிகளின்‌ நம்பிக்கையின்‌ பிரகாரம்‌ சிலைகளும்‌ அல்லாஹ்‌ என்பதே தான்‌!

அன ரப்புக்குமுல்‌ அஃலா - நானே மிகப்‌ பெரிய இறைவன்‌

என்று கூறி மூசா நபிக்கும்‌ அவருடைய உம்மத்துக்களுக்கும்‌ கொடுமை செய்த

ஃபிர்‌அவ்னைப்‌ பற்றிக்‌ குறிப்பிடும்‌ போது இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்‌:

ஃபிர்‌அவ்ன்‌ மரணிக்கும்‌ தருவாயில்‌ அல்லாஹ்‌ அவனுக்கு ஈமானைத்‌ தந்தான்‌! எனவே

அவனுடைய ஆன்மாவைக்‌ கைப்பற்றும்‌ வேளையில்‌ அது மிக தூய்மையடைந்ததாகவும்‌

எவ்வித அசுத்தங்களும்‌ இல்லாததாகவும்‌ இருந்தது (அல்‌-ஃபுளமூஸ்‌ பக்கம்‌ 201)

ஆனால்‌ அல்லாஹ்வோ பிர்‌அவ்ன்‌ கடும்‌ தண்டனையை அனுபவித்துக்‌ கொண்டிருப்பதாகக்‌ கூறுகின்றான்‌.

ஆகவே, மூஸா அவனுக்கு (பிர்‌அவ்னுக்கு) பெரும்‌ அத்தாட்சியை காண்பித்தார்‌. ஆனால்‌, அவனோ அதைப்‌ பொய்ப்பித்து, மாறு செய்தான்‌. பிறகு அவன்‌ (அவரை விட்டுத்‌) திரும்பி (அவருக்கெதிராய்‌ சதி செய்ய) முயன்றான்‌. அன்றியும்‌ (அவன்‌ தன்‌ சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்‌.

“நான்தான்‌ உங்களுடைய மாபெரும்‌ இறைவன்‌ - ரப்புக்குமுல்‌ அஃலா”

என்று (அவர்களிடம்‌) கூறினான்‌. இம்மைக்கும்‌ மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ்‌ அவனை பிடித்துக்‌ கொண்டான்‌. (அல்‌-குர்‌ஆன்‌ 79:21-25)

பிர்‌அவ்னைப்‌ பற்றிக்‌ கூறும்‌ போது மேலும்‌ அல்லாஹ்‌ கூறுகின்றான்‌:

“காலையிலும்‌, மாலையிலும்‌ அவர்கள்‌ நரக நெருப்பின்‌ முன்‌ கொண்டுவரப்படுவார்கள்‌; மேலும்‌ நியாயத்‌ தீர்ப்பு காலம்‌ நிலைபெற்றிருக்கும்‌ நாளில்‌ “ஃபிர்‌அவ்னுடைய கூட்டத்தாரைக்‌ கடினமான வேதனையில்‌ புகுத்துங்கள்‌” (என்று கூறப்படும்‌)” (அல்‌-குர்‌ஆன்‌ 40:46)

எல்லாமே அல்லாஹ்‌ தான்‌ என்றால்‌ எல்லா வழிகேடுகளையுமே ஆதரிக்க வேண்டிய அவல நிலை தான்‌ வரும்‌ என்பதற்கு இது உதாரணமன்றோ? இதைத்‌ தான்‌ இந்த வழிகேடுகளைத்‌ தான்‌ ஸூஃபிகள்‌ ஆண்மீக இரகசியம்‌ என்று பற்றிப்பிடித்துக்‌ கொண்டிருக்கின்றனர்‌.

நவூதுபில்லாஹ்‌ - இவர்களின்‌ கூற்றைவிட்டும்‌ அல்லாஹ்‌ பரிசுத்தமானவன்‌!

மூசா (அலை); அவர்களுக்கும்‌ அவரது உம்மத்துக்களுக்கும்‌ கொடுமை செய்த ஃபிர்‌அவ்னை புகழந்துப்‌ பேசி “அவன்‌ மரணிக்கும்‌ போது ஈமானோடு தான்‌ மரணித்தான்‌” என்று கூறிய இப்னு அரபி மூசா நபியின்‌ சகோதரரான ஹாரூன்‌ (அலை) அவர்களை சாடுகின்றார்‌. காரணம்‌ என்னவெனில்‌ மூசா (அலை) அவர்கள்‌ 40 நாட்கள்‌ இறைக்கட்டளையை மேற்கோண்டு சென்றிருந்த வேளையில்‌ ஹாரூன்‌ (அலை) அவர்களின்‌ மேற்பார்வையில்‌ தான்‌ மூசா (அலை) அவர்களின்‌ உம்மத்துகள்‌ இருந்தார்கள்‌.

அந்த சமயத்தில்‌ சாமிரி என்பவன்‌ செய்த காளைக்‌ கன்றை மூசா நபியின்‌ உம்மத்துக்கள்‌ வணங்கவே அதை ஹாரூன்‌ (அலை) அவர்கள்‌ கண்டித்தார்கள்‌! இதைப்‌ பற்றிய செய்தியை திருமறையும்‌ கூறுகிறது!

ஆதனால்‌ தான்‌ காளைக்‌ கன்றை வணங்கியவர்கள்‌ அல்லாஹ்வையே வணங்கினார்கள்‌ என்ற கொள்கையைக கொண்டிருந்த இப்னு அரபி சிலை வணக்கத்தைக்‌ கண்டித்த ஹாரூன்‌ (அலை) அவர்களை சாடுகிறார்‌.

சிலைகளைக்‌ குறித்து இப்னு அரபியின்‌ நிலைப்பாடு என்னவெனில்‌, ஆரிப்‌ (எ:ஃபி ஞானி) என்பவர்‌ எல்லா வஸ்த்துக்களிலும்‌ அல்லாஹ்வையே காண்பார்‌.

ஒவ்வொரு பொருளுமே அவருக்கு அல்லாஹ்‌ வாகத்தான்‌ தென்படும்‌.

முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு (ஞானிக்கு) பிற மத மக்கள்‌ வணக்கம்‌ செலுத்தும்‌ ஏனைய சிலைகள்‌, விக்ரகங்கள்‌ அனைத்துமே அல்லாஹ்வின்‌ தஜல்லி - வெளிப்பாடாகவே தெரியும்‌. இதனாலேயே அவர்கள்‌ பிற மதத்தவர்களால்‌ வணங்கப்படும்‌ அனைத்து மதத்து சிலைகளையும்‌ இலாஹ்‌ - அல்லாஹ்‌ என்றே அழைத்தார்கள்‌.

அந்த ஒவ்வொரு சிலைக்கும்‌ கற்சிலை, பொற்சிலை, வெங்கலச்‌ சிலை என தனிப்பட்ட பெயர்கள்‌ இருப்பினும்‌ கடவுள்‌ - அல்லாஹ்‌ எனும்‌ பொதுப்‌ பெயர்‌ கூறியே அவர்கள்‌ அவற்றை அழைத்தார்கள்‌. (புஸூஸூல்‌ ஹிகம்‌ - இப்னு அரபி ப: 192)

அடுத்ததாக கிறிஸ்தவர்களை இறை நிராகரிப்பாளர்கள்‌ என்று கூறுவதற்கான காரணத்தை இப்னு அரபி இவ்வாறு கூறுகின்றார்‌: கிறிஸ்தவர்கள்‌ ஈஸா (அலை) அவர்களுக்கு மட்டும்‌ கடவுள்‌ தன்மையைக்‌ கொடுத்ததனால்‌ தான்‌ அவர்கள்‌ இறை நிராகரிப்பாளானார்கள்‌!

அவர்கள்‌ அந்த இறைத்‌ தன்மையை பொதுவாக அனைத்துப்‌ பொருள்களுக்கும்‌ கொடுத்திருப்‌பார்களேயானால்‌ அவர்கள்‌ இறை நிராகரிப்பாளர்களாகி இருக்கமாட்டார்கள்‌!

எல்லாமே அல்லாஹ்‌ என்ற கொள்கையுடைய இப்னு அரபி பிற மதக்‌ கடவுள்களையும்‌ இறைவனாகவே கருதியால்‌ பின்வருமாறு உளறுகின்றார்‌!

“என்‌ மதமும்‌ என்‌ மாற்றுமத நண்பனின்‌ மதமும்‌ ஒரே மதமே என்றில்லாவிட்டால்‌ என்னால்‌ தூங்க முடியாது.

என்னுள்ளம்‌ எல்லா மதங்களையும்‌ ஒன்றாகவே நோக்கும்‌ நிலைக்கு வந்து விட்டது. அதிலே கிருஷ்த்தவப்‌ பாதிரிகளுக்கும்‌ இடமுண்டு! சிலை வணங்கிகளுக்கும்‌ இடமுண்டு! கஃபாவுக்கும்‌ இடமுண்டு! அது ஒரே நேரத்தில்‌ தெளராத்தாகவும்‌, குர்‌ஆனாகவும்‌ இருக்கின்றது. (ஸுபிய்யா 17)

இதே கருத்தையே இப்னு அரபின்‌ கொள்கையை அப்படியே பின்பற்றிய ஜலாலுத்தீன்‌ ரூமி என்பவர்‌ கூறுகிறார்‌:

நான்‌ ஒரு முஸ்லிம்‌ ஆனாலும்‌ நான்‌ கிருஷ்த்தவனும்தான்‌! பிராமணனும்‌ தான்‌!

நான்‌ பள்ளியிலும்‌ தொழுவேன்‌! கோயிலிலும்‌ கும்பிடுவேன்‌! சிலைகளையும்‌ வணங்குவேன்‌! ஏனெனில்‌ எல்லாமே ஒன்றுதான்‌! (ஸூபிய்யா பக்கம்‌ 45)

நவூதுபில்லாஹ்‌ - இவர்களின்‌ கூற்றைவிட்டும்‌ அல்லாஹ்‌ பரிசுத்தமானவன்‌!

இவர்களின்‌ வழிகேடுகளை இவ்வாறு பக்கம்‌ பக்கமாக அடுக்கிக்‌ கொண்டே போகலாம்‌!

அந்த அளவிற்கு வண்டி வண்டியாக இருக்கிறது ஸூஃபித்துவத்தைப்‌ பின்பற்றியவர்களின்‌ உளறல்கள்‌!

எனவே நாம்‌ இத்துடன்‌ நிறுத்திக்‌ கொண்டு,

அத்வைதம்‌ என்றால்‌ என்ன? அவை எவ்வாறு குர்‌ஆன்‌ மற்றும்‌ சுன்னாவுக்கு முரண்படுகிறது? என்பதைப்‌ பற்றி அடுத்தடுத்த பதிவுகளில்‌ பார்ப்போம்‌!



“துவைதம்‌” என்பதன்‌ எதிர்ச்‌ சொல்லே “அத்துவைதம்‌” ஆகும்‌. 

ஆண்டவன்‌ (பரமாத்மா) வேறு; அடியான்‌ (ஜீவாத்மா) வேறு; இவையிரண்டும்‌ தனித்தனியானவை. ஒன்றோடொன்று எக்காலத்திலும்‌ கலக்க முடியாதவை என்னும்‌ கொள்கையே “துவைதம்‌” எனப்படும்‌.

இந்தக்‌ கொள்கையின்படி, ஆண்டவன்‌, எப்போதும்‌ ஆண்டவனேதான்‌! அடியான்‌, எப்போதுமே அடியானேதான்‌!

அடியான்‌ எவ்வளவுதான்‌ புண்ணியங்களைச்‌ சேர்த்துக்‌ கொண்டு எம்பிக்‌ குதித்தாலும்‌ - அதிகபட்சம்‌ - ஆண்டவனுக்கு மிகமிக நெருக்கமான அடியானாகத்தான்‌ ஆகமுடியுமே தவிர ஆண்டவனுக்கு இணையானவனாக, ஆண்டவனோடு கலந்துவிட்டவனாக ஆகவே முடியாது!

ஆனால்‌, இதற்கு நேர்‌ மாற்றமான கொள்கையைக்‌ கொண்டுள்ளது அத்துவைதம்‌ ஆகும்‌. ஆண்டவனும்‌ (பரமாத்வாவும்‌) அடியானும்‌ (ஜீவாத்மாவும்‌) வெவ்வேறானவை அல்ல; இரண்டும்‌ ஒன்றேதான்‌ என்பதே அத்துவைதக்‌ கோட்பாடாகும்‌.

இந்த அத்துவைதக்‌ கோட்பாட்டுக்காரர்கள்‌ ஆண்டவனுக்கு உகந்தவர்களாக இவர்கள்‌ நம்பும்‌ அடியார்களையும்‌ ஆண்டவனாகவே காண்பார்கள்‌.

நபி (ஸல்‌) அவர்களுக்குப்‌ பன்னெடுங்‌ காலத்துக்கு முன்பிருந்தே இந்த அத்துவைதக்‌ கோட்பாடு, பல வடிவங்களில்‌ பாரெங்கும்‌ பரவியிருந்தது.

பழமையான கிரேக்க, ஃபார்ஸித்‌ தத்துவங்களும்‌ நம்‌ நாட்டு சைவ-வைணவச்‌ சித்தாந்தங்களும்‌ இந்த அத்துவைதக்‌ கோட்பாடுகளையே மொத்தக்‌ குத்தகைக்கு எடுத்துக்‌ கொண்டிருந்தன.

ஒவ்வொரு காலகட்டங்களிலும்‌ அல்லாஹ்வால்‌ அனுப்பி வைக்கப்பட்ட நபிமார்களை அவர்கள்‌ காலத்துக்குப்பின்‌ மக்கள்‌ கடவுளாகக்‌ கருதி வழிபடலாயினர்‌.

அதற்கு அடிப்படையான காரணம்‌, இந்த அத்துவைதக்‌ கொள்கைதான்‌.

அல்லாஹ்‌ வேறு, அடியார்‌ வேறு என்பதல்ல!

அல்லாஹ்வும்‌ அடியாரும்‌ ஒருவரேதான்‌! என்று அம்மக்கள்‌ எண்ணலாயினர்‌.

எனவே, திசைமாறிய மானுடர்கள்‌ ஏகத்துவ விதையை வீசியெறிந்து விட்டு, பலதெய்வ வழிபாட்டுக்‌ கொள்கைளை விளைத்தெடுத்துக்‌ கொண்டார்கள்‌.

நபி (ஸல்‌) அவர்களுக்கு முன்னர்‌ இறைவனால்‌ அனுப்பப்பட்ட ஈஸா நபி (அலை) அவர்களைக்கூட இந்த ஸூபிக்கள்‌ அத்துவைதச்‌ சிலுவையில்‌ அறையத்‌ தவறவில்லை. அவரையும்‌ கடவுளாக, கர்த்தராக வழிபடுபவர்கள்தாம்‌ இன்று பெரும்பான்மை ஜனத்‌ தொகையினராவர்‌.



இனி‌ இஸ்லாம்‌ அந்த அத்வைதத்தை எவ்வாறு தகர்த்தெரிகின்றது? என்பதைப்‌ பார்க்கலாம்‌!

அத்துவைதக்‌ கோட்பாட்டை அடித்துத்‌ தகர்த்துவிட்டு, இறுதி நாள்வரை ஏகத்துவ வழிபாடு ஒன்றை மட்டுமே இவ்வுலகில்‌ நிலைநாட்டுவதற்காக இறைவனால்‌ நபியாக அனுப்பப்‌ பட்டவர்கள்தாம்‌ நபி (ஸல்‌) அவர்களாவார்‌.

அவர்கள்‌ தம்‌ காலத்திலேயே இந்தத்‌ தூய பணியை நிலை நிறுத்தி, அதில்‌ மகத்தான பெருவெற்றியும்‌ கண்டார்கள்‌. அத்துவைதத்துக்கு அடிகோலக்‌ கூடிய சிலைகள்‌ தகர்ந்தன.

தரை மட்டத்துக்கு மேலாக உயர்ந்திருந்த சமாதிகள்‌ தவிடு பொடியாயின.

அல்லாஹ்‌ ஒருவனே வணக்கத்திற்குரியவன்‌ எனும்‌ கொள்கை ஒங்கி வளர்ந்தது.

நபி (ஸல்‌) அவர்களைப்‌ போல அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார்‌ எவருமிலர்‌.

இருப்பினும்‌ அவர்கள்கூட அல்லாஹ்வின்‌ அடிமையாகிய அடியார்தாம்‌ என்பதை இஸ்லாம்‌ மிக அழுத்தந்‌ திருத்தமாக வரையறுத்து வலியுறுத்திக்‌ கூறியுள்ளது.

நம்முடைய ஈமானைப்‌ பறை சாற்றும்‌ உயிர்க்‌ கலிமாவின்‌ உன்னத வாசகங்களைப்‌ பாருங்கள்‌:

அஷ்ஹது அன்‌ லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ

வ அஷ்ஹது அன்ன முஹம்மதன்‌ அப்துஹூ வ ரஸூலுஹூ!

வணக்கத்திற்குரியவன்‌ அல்லாஹ்வைத்‌ தவிர வேறில்லை என்று நான்‌ சாட்சியுரைக்கிறேன்‌. அவன்‌ ஏகன்‌; அவனுக்கு இணை கிடையாது.

முஹம்மது (ஸல்‌) அவர்கள்‌ நிச்சமாக அவனுடைய அடியாரும்‌ தூதருமாவார்‌ எனவும்‌ சாட்சியுரைக்கிறேன்‌.

இதுதான்‌ நமது மூல மந்திரத்தின்‌ முழுப்‌ பொருளாகும்‌. இந்தக்‌ கலிமாவில்‌, அல்லாஹ்‌ யார்‌? நபி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம்‌ யார்‌?

என்பது மிகத்‌ தெள்ளத்‌ தெளிவாக அடையாளம்‌ காட்டப்‌ பட்டுள்ளனர்‌.

அல்லாஹ்வுக்குரிய சிறப்பான தன்மைகள்‌ இரண்டும்‌, நபி (ஸல்‌) அவர்களின்‌ சிறப்பான தன்மைகள்‌ இரண்டும்‌ இங்குப்‌ பளிச்செனக்‌ காணக்‌ கிடக்கின்றன.

(1) அல்லாஹ்‌ ஒரே ஒருவன்தான்‌!

(2) அவனுக்கு எத்தகைய கூட்டும்‌ இல்லை

என்பது அல்லாஹ்வுக்குரிய சிறப்பியல்புகளாகும்‌.



(1) நபி (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ அடியார்தாம்‌!

(2) அவர்கள்‌ அவனுடைய தூதராயிருக்கிறார்கள்‌

என்பது நபிகளாரின்‌ சிறப்பியல்புகளாகும்‌.

இந்தக்‌ கலிமா, அத்துவைதக்‌ கோட்பாட்டைப்‌ புதை குழிக்கு அனுப்புவதற்காகவே புறப்பட்டு வந்தது போல்‌ இல்லையா?

ஆம்‌. அதற்காகத்தான்‌ நபி (ஸல்‌) அவர்களும்‌ அவர்களின்‌ ஆருயிர்த்‌ தோழர்களுமான ஸஹாபாப்‌ பெருமக்களும்‌ தங்களுடைய உடல்‌, பொருள்‌, ஆவி அனைத்தையும்‌ தியாகம்‌ செய்தார்கள்‌ என்பது இஸ்லாமிய வரலாறாகும்‌.

நபி (ஸல்‌) அவர்களைவிட அல்லாஹ்வுக்கு நெருங்கிய மனிதர்‌ வேறு யார்‌ இருக்கிறார்கள்‌?

அவர்களே அல்லாஹ்வின்‌ அடியார்தாம்‌ என்பதை நாம்‌ சாகும்‌ தறுவாயிலுங்கூட நினைவில்‌ இருத்தத்‌ தவறக்‌ கூடாது! இந்த நபி (ஸல்‌) அவர்களிடத்தில்‌ அல்லாஹ்‌ வந்து குடியிருந்து கொண்டான்‌ என்றும்‌ எனவே, நபி (ஸல்‌) அவர்களும்‌ அல்லாஹ்‌ தான்‌ அல்லது அல்லாஹ்வின்‌ ஒரு கூறுதான்‌ என்றும்‌ எவராவது கருதுவாரானால்‌ அவர்‌ கலிமாவைச்‌ சரியாக விளங்காத பித்தராகத்‌ தான்‌ இருக்க வேண்டும்‌.

நபி (ஸல்‌) அவர்களோடு அல்லாஹ்வை இணைத்து அத்துவைதம்‌ பேசுவதே மாபெரும்‌ பாவ காரியமாக இருக்கும்போது, வேறொரு மனிதரைக்‌ கொண்டு அல்லாஹ்வுடன்‌ கூட்டாக்கி அத்துவைத அவியல்‌ சமைப்பது எவ்வளவு தவறான செயல்‌?

எனவே, ஸூஃபிஸமாயிருந்தாலும்‌ அத்துவைதமாக இருந்தாலும்‌ அல்லது வேறெந்தத்‌ தத்துவமாக இருந்தாலும்‌ அவற்றை குர்‌ஆன்‌ ஹதீஸுடன்‌ ஒப்பிட்டுப்‌ பார்த்து, குர்‌ஆன்‌- ஹதீஸுக்கு முரண்படுபவற்றைத்‌ தூக்கித்‌ தூர எறிவோமாக!

குர்‌ஆன்‌ ஹதீஸை மட்டுமே பின்பற்றி, உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாகவே மரணிப்போமாக!

முற்றும்‌.

Previous Post Next Post