- உஸ்தாத் அபூ நஸீபா எம்.எப்.அலீ
ஹிஜ்ரி 11/14/1411. மாலை நேரம். ரியாத்தில் உள்ள அர்ராஜ்ஹீ மஸ்ஜிதில் மதிப்பிற்குரிய அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஓர் உரை ஆற்றினார்கள். தலைப்பு: உலகரீதியாகவும் மார்க்கரீதியாகவும் முஸ்லிம்கள் மீதுள்ள கடமைகள் (واجب المسلمين تجاه دينهم ودنياهم)
ஃபலஸ்தீன் விவகாரம் குறித்த அவர்களின் அறிவுரையும் தீர்ப்பும் பின்வரும் வார்த்தைகளாக இருக்கின்றன: (ஷெய்க் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையத்தின் சுட்டியையும் பகிர்ந்திருக்கிறேன். இப்பதிவில் கட்டுரை சுருக்கத்திற்காக இன்றைய ஃபித்னாவாதிகள் பற்றி எதுவும் எழுதாமல் விட்டிருக்கிறேன்.)
அல்இமாம், அல்அல்லாமா, அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
அதே போன்று ஃ.பலஸ்தீனிலே உள்ள நம்முடைய சகோதரர்கள் போர் செய்வதற்காக இஸ்லாமிய நாடுகளும் இஸ்லாமியச் செல்வந்தர்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பது கடமையாகும். அல்லாஹ்வுடைய எதிரிகளான யூதர்களிடமிருந்து அவர்கள் விடுபடும் வரை அவர்களோடு சேர்ந்து நிற்பது கடமையாகும். ஏனெனில், யூதர்களுடைய கெடுதி மிகவும் அபாயகரமானதாகும். ஃபலஸ்தீனிலே இஸ்லாமியச் சகோதரர்களுக்கு அவர்கள் கொடிய தீங்கையும் பெரிய தொல்லையையும் கொடுத்து வருகிறார்கள்.
அல்லாஹ்வுடைய எதிரிகளான யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் அல்லாஹ் உறுதியான தீர்ப்பை வழங்கும் வரை ஜிஹாத் செய்வதற்கு இஸ்லாமிய நாடுகளும் பலம் வாய்ந்த முஸ்லிம்களும் ஃபலஸ்தீனர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது கட்டாயக் கடமையாகும். அவன் தீர்ப்பு வழங்கக்கூடியவர்களில் மிகச் சிறந்தவன். அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு யூதர்களுக்கு எதிராகப் போராடுவதும் அவர்களை இஸ்லாமிய நாட்டை விட்டு வெளியேற்றுவதும் கடமையாகும். அல்லது முஸ்லிம்களுக்கு பலன் தருகின்ற ஒப்பந்தத்தை ஃபலஸ்தீனத்திற்கு மத்தியிலும் யூதர்களுக்கு மத்தியிலும் ஏற்படுத்த வேண்டும்.
ஃபலஸ்தீனர்களுக்கு அவர்களுடைய நாட்டிலே தொல்லை இல்லாமல் அநியாயம் இன்றி வாழக்கூடிய குடியுரிமை கிடைக்க வேண்டும். இஸ்லாமிய நாடுகள் இந்த விவகாரத்தைத் தங்களின் திறன் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கு ஏற்ப முடிந்த அளவிற்குச் செயல்படுத்த கவனம் செலுத்த வேண்டும். யூதர்களோடு போரிட்டு ஃ.ப.ல.ஸ்.தீ.னர்களைக் காக்க வேண்டும்.
وأما بقاؤهم في حرب مع اليهود، وفي أذى عظيم وضرر كبير على رجالهم ونسائهم وأطفالهم، فهذا لا يسوغ شرعا،
அதே சமயம் இன்னொன்றையும் அறிந்துகொள்ள வேண்டும். யூதர்களோடு போரில் நீடித்து நிலைப்பதால், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு அதில் கொடிய தொல்லையும் பெரும் சேதாரமும் ஏற்படும் என்றால், அ(ப்போரான)து மார்க்கத்தில் அனுமதிக்குரியதல்ல.
ஆக, முஸ்லிம்களில் இருக்கக்கூடிய பொறுப்புதாரிகளும் செல்வந்தர்களும் இஸ்லாமிய நாடுகளும் தங்களால் முடிந்த அளவிற்கு அல்லாஹ்வுடைய விரோதிகளான யூதர்களோடு போரிடுவதற்கு முயற்சி செய்வது கட்டாயக் கடமையாகும். அல்லது ஜிஹாத் செய்ய முடியாவிட்டால் சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் ஃபலஸ்தீனியர்கள் தங்களின் நாட்டில் அல்லாஹ்வுடைய எதிரிகளான யூதர்களுடைய தொல்லை இல்லாமல் குடியுரிமை பெற முடியும். உதாரணமாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவாசிகளிடத்தில் சமாதானம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.
மக்காவாசிகள் அந்த நேரத்தில் யூதர்களைவிட அதிகமாக இருந்தார்கள். சிலை வணங்கிகளான முஷ்ரிக்குகள் வேதக்காரர்களைவிட பெரும் இறைமறுப்பாளர்கள் ஆவார்கள். ஏனெனில், வேதக்காரர்களின் உணவை அல்லாஹ் ஆகுமாக்கியுள்ளான். அவர்களுடைய பெண்களில் பத்தினித்தனமாக இருக்கக்கூடிய பெண்களை அல்லாஹ் ஆகுமாக்கியுள்ளான். ஆனால், இணைவைப்போரின் உணவையோ அவர்களில் உள்ள பெண்களையோ அல்லாஹ் ஆகுமாக்கவில்லை. மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவும், சிலர் சிலருக்கு உதவியாக இருப்பதற்காகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்து ஆண்டுகள் இணைவைப்பாளர்களோடு சமாதான ஒப்பந்தம் செய்திருந்தார்கள். இந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்குப் பெரும் நலன் அடங்கி இருந்தது. அந்த ஒப்பந்தத்தின் சில ஷரத்துகள் (நிபந்தனைகள்) முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தபோதிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொது நலனைக் கருதி அதை ஏற்றுக் கொண்டார்கள்.
இறைமறுப்பாளர்களுக்கு எதிராக ஓங்கிச் செயல்படுவதற்கு முடியாத பட்சத்தில் முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்வது அனுமதிக்கப்பட்டதே ஆகும். ‘முழுமையாக அடைந்து கொள்ள முடியாவிட்டால், முழுமையாக விட்டுவிடவும் கூடாது’ (ما لا يُدرك كلُّه لا يترك كلُّه) என்பது பொதுவான விதியாகும். ஆகவேதான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பத்து ஆண்டுகள் சமாதான ஒப்பந்தம் செய்திருந்தார்கள். சில பாதகமான அம்சங்களில் முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டு பொறுமையோடு இருந்தார்கள். பிறகு நபி ஸல்லல்லாஹு அவர்களுடைய கருத்தில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுவிட்டார்கள்.
ஆகவே, இதன் மூலம் அல்லாஹ் பலன் தருகின்ற பெரும் வெற்றியாக, ஒப்பந்தமாக அது அமைந்துவிட்டது. மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடும் ஸஹாபா பெருமக்களோடும் சேர்ந்து கொண்டார்கள். இந்தச் சமாதான ஒப்பந்தத்தின் காரணமாக பெரும் கூட்டத்தினர் இஸ்லாமில் நுழைந்துவிட்டார்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே புகுந்துவிட்டார்கள். அல்லாஹ்வை மறுப்பதை அவர்கள் விட்டுவிட்டார்கள்.
முஸ்லிம்கள் அனைவரும் நன்மைக்கும் இறையச்சத்திற்கும் உதவியாக இருப்பதும் சத்தியத்திற்கும் அதில் நிலைத்திருப்பதற்கும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொள்வதும் தங்களுடைய மார்க்கத்தை கற்றுக் கொள்வதும் அதை விளங்குவதும் கட்டாயக் கடமையாகும். அப்போதுதான் அவர்களின் ஜி.ஹா.த் குறித்தும் ஒப்பந்தம், போர் குறித்தும் முழுமையான ஒரு தெளிவு ஏற்படும். இவ்வாறு முஸ்லிம்கள் கல்வி கற்பது கட்டாயக் கடமையாகும். ஏனெனில், மனிதன் அனைத்தையும் அறிந்தவனாகப் படைக்கப்படவில்லை. ஏதும் அறியாதவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்களின் தாய்மார்களுடைய வயிறுகளிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். உங்களுக்குச் செவிப்புலனையும் கண்களையும் இதயங்களையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துங்கள். (குர்ஆன் 16:78)
..............
ஆதாரம்: مجموع فتاوى ومقالات الشيخ ابن باز 8/ 219