இஸ்லாமும் போதைப்பொருட்களும்

இஸ்லாத்தில் போதைப் பொருட்களை உட்கொள்வதும், அதைவிட அவற்றை விற்பனை செய்வதும் மிக மோசமான பாவங்களாகும்.

புத்தியை மழுங்கடிக்கும் அனைத்தும் போதைப் பொருட்களாகும். அனைத்துப் போதைப் பொருட்களும் ஹராமானவையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 
விசுவாசங்கொண்டோரே! நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், நடப்பட்டுள்ளவை(களான சிலை)களும் குறிபார்க்கும் அம்புகளும் (ஆகிய இவையாவும்) ஷைத்தானுடைய செயலிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும் - ஆகவே, இவைகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள், (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ‌  فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ‏ 
நிச்சயமாக ஷைத்தான் நாடுவதெல்லாம் மதுவிலும், சூதாட்டத்திலும் (அதாவது அவற்றின் மூலம்) உங்களுக்கிடையில் விரோதத்தையும், வெறுப்பையும் உண்டு பண்ணவும், அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும், தொழுகையை (நிறைவேற்றுவதை) விட்டும் உங்களை அவன் தடுப்பதையுமேயாகும். (ஆகவே, அவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்கிறீர்களா?

وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا‌  فَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ‏ 
அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள்,  (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்,  (மாறு செய்யாது) எச்சரிக்கையாகவுமிருங்கள், எனவே, (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், அப்போது நிச்சயமாக நம் தூதர் மீது கடமையெல்லாம் (நம் கட்டளைகளை உங்களுக்குத்) தெளிவாக எத்தி வைப்பது தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்,
(அல்குர்ஆன் : 5:90-92)

அல்லாஹ் மேற்படி ஆயத்களில் மது ஹராம் என்பதையும், அதனால் ஏற்படும் சில முக்கியமான விளைவுகளையும், அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்வது விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதையும் எடுத்துரைத்துள்ளான்.

இங்கு மது என்பதைக் குறிக்கும் சொல் خمر (கம்ர்) என்பதாகும். அச்சொல்லின் மொழி அர்த்தம் 'மூடுதல்', 'மறைத்தல்', 'திரையிடுதல்' என்பதாகும். அதாவது அது புத்தியை மறைக்கிறது. புத்தியில் தெளிவின்மையை ஏற்படுத்துகின்றது. மது தடை செய்யப்பட்டதற்கான முக்கியமான காரணம் அது போதையை ஏற்படுத்துகின்றது என்பதாகும். போதை புத்தியை மறைக்கின்றது; மழுங்கடிக்கின்றது; நீக்குகின்றது. போதையை ஏற்படுத்தும், புத்தியை மழுங்கடிக்கும் அனைத்து வகைப் பொருட்களும் எந்த வடிவத்தில் உட்கொள்ளப்படுபவையாக இருந்தாலும் அவை இஸ்லாத்தில் மேற்படி ஆயத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளன. சில போதைப்பொருட்கள் மதுவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. அவற்றில்  ஒவ்வொன்றினதும் பாதிப்பு அதிகமாக இருக்கும் அளவுக்கு ஹறாத்தின் தன்மையும் அதிகரிக்கும்.

நபி ﷺ அவர்கள் கூறியதாக, இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹுமா) கூறினார்கள்:
كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وكُلُّ مُسْكِرٍ حَرامٌ...
போதை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வொன்றும் மதுவாகும். போதை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வொன்றும் ஹராமானதாகும். 
مسلم 2003 عن ابن عمر مرفوعا.

நபி ﷺ அவர்கள் கூறியதாக, அபூ மூஸா (றழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்:
كُلُّ مُسْكِرٍ حَرامٌ
போதை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வொன்றும் ஹராமானதாகும். 
البخاري 6124، ومسلم 1733 عن أبي موسى.

இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹுமா) கூறினார்கள்:
عن عبدالله بن عمر: قامَ عُمَرُ على المِنْبَرِ، فقالَ: أمّا بَعْدُ، نَزَلَ تَحْرِيمُ الخَمْرِ وهي مِن خَمْسَةٍ: العِنَبِ والتَّمْرِ والعَسَلِ والحِنْطَةِ والشَّعِيرِ، والخَمْرُ ما خامَرَ العَقْلَ. 
(என் தந்தை) உமர் (றழியல்லாஹு அன்ஹு) மிம்பர் மேடையின் மீது நின்று, 'ஐந்து வகைப் பொருட்களினால் மது தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுத் தடை(ச் சட்டம்) இறங்கியது. அவையாவன: திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வாற்கோதுமை. ஆக, புத்திக்கு திரையிடுவதெல்லாம் மதுவேயாகும்' என்று கூறினார்கள்.
البخاري 5581، ومسلم 3032


சுவன இன்பத்தைத் தடுக்கும் போதைப்பொருட்கள்

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 
مَن شَرِبَ الخَمْرَ في الدُّنْيا، ثُمَّ لَمْ يَتُبْ مِنْها؛ حُرِمَها في الآخِرَةِ.
எவன் உலகத்தில் மது அருந்தி, பின்னர் அதிலிருந்து தவ்பஹ் செய்து மீளவில்லையோ, அவன் மறுமையில் (சுவனத்தின்) மதுவை அருந்தும் பாக்கியத்தை இழந்துவிடுவான்.
البخاري ٥٥٧٥، مسلم ٢٠٠٣، عن ابن عمر مرفوعا.

அல்லாஹ் சுவனத்தில் சுவனவாசிகளுக்காக புத்தியை மழுங்கடிக்காத, எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத, மிக இன்பமான மதுபானத்தை தயார்படுத்தி வைத்துள்ளான். (பார்க்க: அல்குர்ஆன் 37:46,47, 47:15, 52:23, 56:17-19)

உலகத்தில் ஒருவன் மது அருந்திவிட்டு, பாவமன்னிப்புக் கோருவதற்கு முன் அல்லது முறையாக பாவமன்னிப்புக் கோராமல் ஈமானுடன் மரணித்தால், அவன் தனக்குரிய தண்டனையைப் பெற்றுவிட்டு அல்லது அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு சுவனம் நுழைந்தாலும் கூட, அவனுக்கு சுவனத்தில் இருக்கும் மது அருந்தும் இன்பம் கிடைக்கமாட்டாது. சுவனத்தில் சிலவேளை மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு மறக்கடிக்கப்படலாம் அல்லது அதை அருந்த வேண்டும் என்ற ஆசை ஏற்படாமல் செய்யப்படலாம் அல்லது ஏதோ ஒரு வகையில் மது அருந்தாதவர்களுக்கும் அருந்தியவர்களுக்கும் இடையில் வித்தியாசம் ஏற்படுத்தப்படுவதற்காக சுவர்க்கத்தின் மதுவை அவன் சுவைக்கமாட்டான். அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற தண்டனையையும் கூலியையும் வைத்துள்ளான்.


எவரும் ஈமானுள்ள நிலையில் போதையை உட்கொள்வதில்லை.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 
لاَ يَزْنِي الْعَبْدُ حِينَ يَزْنِي وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ حِينَ يَشْرَبُ وَهْوَ مُؤْمِنٌ، وَلاَ يَقْتُلُ وَهْوَ مُؤْمِنٌ. 
அடியான் விபசாரம் புரியும்போது முஃமினாக இருந்து கொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடுகிறபோது முஃமினாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அருந்தும்போது முஃமினாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். மேலும் அவன் முஃமினாக இருந்துகொண்டு கொலை செய்யமாட்டான்". 

இந்த ஹதீஸை இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்களிடம் இருந்து கேட்ட  அவர்களது மாணவர் இக்ரிமஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 
قَالَ عِكْرِمَةُ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ كَيْفَ يُنْزَعُ الإِيمَانُ مِنْهُ قَالَ هَكَذَا ـ وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ ثُمَّ أَخْرَجَهَا ـ فَإِنْ تَابَ عَادَ إِلَيْهِ هَكَذَا وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ 
'இத்தகைய அடியானிடமிருந்து எவ்வாறு ஈமான் கழற்றப்படும்?' என்று நான் இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'இவ்வாறுதான்' என்று தம் விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காட்டிவிட்டு அவற்றை(ப் பிரித்து) வெளியிலெடுத்தார்கள். 'அவன் மனம் திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டால் அந்த ஈமான் அவனிடம் திரும்பவும் வந்து விடுகிறது' என்று கூறியவாறு தம் விரல்களை மீண்டும் கோத்துக் காட்டினார்கள். 
 البخاري 6809.

மேற்படி பெரும் பாவங்களில் ஒன்றில் ஈடுபடும் நிலையில் ஒருவன் ஈமானில் இருந்து விலகி இருக்கின்றான்; அந்த நேரத்தில் அவனுக்கு மரணம் ஏற்பட்டால் அவனுடைய நிலைமை மிகவும் ஆபத்தானதாகும்.


உலகில் போதைப்பொருட்களை உட்கொள்பவர்கள் மறுமையில் நரகவாசிகளின் சீழை உட்கொள்வார்கள்

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள்:
யமன் நாட்டின் ஜைஷான் என்ற பிரதேசத்திலிருந்து ஒரு மனிதர் வந்தார். அவர்களது பிரதேசத்தில் அவர்கள் அருந்தும் சோளத்தினால்  தயாரிக்கப்படும் 'மிzஸ்ர்' எனும் ஒரு பானத்தைப் பற்றி அவரிடம் நபி ﷺ அவர்கள் விசாரித்தார்கள். அது போதையை ஏற்படுத்தக் கூடியதா? என்று நபி ﷺ அவர்கள் கேட்க, அவர், ஆம் என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: *போதையை ஏற்படுத்தக்கூடிய அனைத்தும் ஹறாமாகும். நிச்சயமாக கண்ணியமான அல்லாஹ், எவன் போதை ஏற்படுத்தக்கூடியதை பருகுகின்றானோ அவனுக்கு 'தீனதுல் கபால்' என்பதில்  இருந்து பருகக் கொடுப்பதாக உறுதி பூண்டுள்ளான்.* அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே 'தீனதுல் கபால்' என்றால் என்ன என்று கேட்டார்கள். அதற்கு நபி ﷺ அவர்கள், *'அது நரகவாசிகளின் வியர்வை' அல்லது 'நரகவாசிகளின் உடலிலிருந்து வெளிப்படும் திரவம்'* என்று கூறினார்கள்.
 عن جابر بن عبدالله رضي الله عنهما: أنَّ رَجُلًا قَدِمَ مِن جَيْشانَ -وَجَيْشانُ مِنَ اليَمَنِ- فَسَأَلَ النَّبيَّ ﷺ عن شَرابٍ يَشْرَبُونَهُ بأَرْضِهِمْ مِنَ الذُّرَةِ، يُقالُ له: المِزْرُ، فَقالَ النَّبيُّ ﷺ: أَوَمُسْكِرٌ هُوَ؟ قالَ: نَعَمْ، قالَ رَسولُ اللهِ ﷺ: كُلُّ مُسْكِرٍ حَرامٌ، إنَّ على اللهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَن يَشْرَبُ المُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِن طِينَةِ الخَبالِ، قالوا: يا رَسولَ اللهِ، وَما طِينَةُ الخَبالِ؟ قالَ: عَرَقُ أَهْلِ النّارِ، أَوْ عُصارَةُ أَهْلِ النّارِ.
📚 صحيح مسلم ٢٠٠٢

அனைத்து போதைப் பொருட்களும் ஹறாமானவை என்பதையும், உலகில் போதையை அருந்தியவன் அல்லாஹ்வின் மன்னிப்பையும் பெறாவிட்டால் அவன் நரகில் நுழைவான் என்பதையும், நரகில் கடுமையான வேதனையின் விளைவாக நரகவாசிகளின் உடம்பிலிருந்து வடியும் அருவருப்பான திரவம் அவனுக்கு குடிப்பதற்காக வழங்கப்பட்டு இழிவாக்கப்படுவான்; தண்டிக்கப்படுவான் என்பதையும் இந்த ஹதீஸ் எடுத்துக்காட்டுகின்றது.


தொழுகைகளின் நன்மைகளை அழிக்கும் போதைப் பொருட்கள். நான்கு தடவைகள் போதையை உட்கொண்டவன் பெரும் ஆபத்தில்

1- இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள்: நபி ﷺ அவர்கள் பின்வருமாறு கூறுவதை நான் செவிமடுத்திருக்கிறேன்: 
*"யார் இந்த உலகத்தில் போதையை அருந்துகிறானோ அவனது நாற்பது நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் மனம் திருந்தி மன்னிப்பு வேண்டினால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். ஆனால், மீண்டும் அவன் அதனை செய்தால் (மீண்டும்) அவனது 40 நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் மனம் திருந்தி மன்னிப்பு வேண்டினால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். ஆனால், மீண்டும் அவன் அதனை செய்தால் (மீண்டும்) அவனது 40 நாட்களின் தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் மனம் திருந்தி மன்னிப்பு வேண்டினால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். எனினும், நான்காவது தடவையும் அவன் அதனை அருந்தினால், 'தீனதுல் கபால்' என்பதிலிருந்து அவனைப் பருகச்செய்வது அல்லாஹ் மீது கடமையாகிவிட்டது."* 
'தீனதுல் கபால்' என்றால் என்ன என்று வினவப்பட்ட போது, *"அது நரகவாசிகளின் சீழ்"* என்று பதிலளித்தார்கள்.
عن ابن عمر رضي الله عنهما، قال: سمعت رسول الله ﷺ يقول: مَن شَرِبَ الخَمرَ لم تُقبَلْ له صَلاتُه أربَعينَ لَيلَةً، فإنْ تابَ تابَ اللهُ عليه، فإنْ عادَ عادَ اللهُ له، فإنْ تابَ تابَ اللهُ عليه، فإنْ عادَ، كان حَقًّا على اللهِ تَعالى أنْ يُسقِيَه من نَهَرِ الخَبالِ، قيل: وما نَهَرُ الخَبالِ؟ قال: صَديدُ أهْلِ النّارِ.
 الترمذي (١٨٦٢)، وأحمد (٤٩١٧) عن عطاء بن السائب، عن عبد الله بن عبيد بن عمير، عن ابن عمر.
وأخرجه الطبراني (١٣٤٤٨) واللفظ له، والبيهقي في الشعب (٥٥٨٠) من طريق حماد بن زيد، عن عطاء به.
- صححه الألباني وحسنه ش الأرناؤوط. 

2- இதே போன்ற ஒரு ஹதீஸை நபி ﷺ அவர்களிடம் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.
عن عبد الله بن عمرو، قال: سمعت رسول الله ﷺ يقول: «من شرب من الخمر شربة لم تقبل له صلاة أربعين صباحا، فإن تاب تاب الله عليه، فإن عاد لم تقبل له صلاة أربعين صباحا، فإن تاب تاب الله عليه، فإن عاد - قال: فلا أدري في الثالثة أو في الرابعة - فإن عاد كان حقا على الله أن يسقيه من ردغة الخبال يوم القيامة.
أحمد 6644، والنسائي 5670.
- صححه الألباني، وش الأرناؤوط.

3- அப்துல்லாஹ் இப்னு அம்ர் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கும் மற்றுமொரு ஹதீஸ்:  அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
*எவன் ஒரே ஒரு முறை போதையின் காரணமாக தொழுகையை விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு இந்த உலகமும் அதிலுள்ளவைகளும் சொந்தமாக இருந்து, அவை அவனிடம் இருந்து பறிக்கப்பட்டதைப் போன்ற நிலைமையாகும். எவன் போதையின் காரணமாக நான்கு தடவைகள் தொழுகையை விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு  'தீனதுல் கபால்' என்பதிலிருந்து அருந்தச்செய்வது கண்ணியமிக்க அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது...*
عن عبد الله بن عمرو، عن رسول الله ﷺ، أنه قال:  "من ترك الصلاة سكرا مرة واحدة فكأنما كانت له الدنيا وما عليها، فسلبها، ومن ترك الصلاة سكرا أربع مرات كان حقا على الله عز وجل أن يسقيه من طينة الخبال". قيل: وما طينة الخبال يا رسول الله؟ قال: "عصارة أهل جهنم".
أحمد 6659 والحاكم 7233 واللفظ لهما، والطبراني في الأوسط 6371.
- حسنه الألباني، وش الأرناؤوط.

போதை அருந்தியவனுக்குக் கிடைக்கின்ற தண்டனைகளில் ஒன்று: அவன் ஒரு முறை உட்கொள்ளும் போதையின் காரணமாக நாற்பது நாட்கள் அவன் தொழுத தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதாகும். 40 நாட்களில் அவன் தொழுத அனைத்து தொழுகைகளுக்குமுரிய நன்மைகளை இழந்துவிடுவான். அவனது கடமை நிறைவேறுமே தவிர அதற்குரிய நன்மை கிடைக்காது. பலன் கிடைக்காது என்பதனால் தொழாமல் இருக்கவும் முடியாது. ஏனெனில், தொழாவிட்டால் கடமையைச் செய்யாததற்கான தண்டனையும் கிடைக்கும். 

இந்த உலகத்தையும் அதிலுள்ள சொத்து செல்வங்களையும் கணக்கிட்டு விலை மதிக்கமுடியாது; அவை அனைத்துக்கும் ஒரு மனிதன் இந்த உலகத்தில் உரிமையாளனாகுவதும் சாத்தியமில்லை. அவை அனைத்துக்கும் ஒரு மனிதன் உரிமையாளனாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பின்னர் அவை அனைத்தும் அவனிடமிருந்து பறிக்கப்பட்டால் அவனுடைய நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனைசெய்து பாருங்கள். போதையின் காரணமாக ஒரே ஒரு தொழுகையை விட்டவன் இத்தகைய ஒரு கைசேதத்திற்கு ஆளாக இருக்கின்றான்.

நான்கு முறைகள் போதையை உட்கொண்டவன் 'தீனதுல் கபால்' மற்றும் 'றத்கதுல் கபால்' என்றழைக்கப்படும் நரகவாசிகளின் சீழில் இருந்து உருவான அழிவு தரும் சேற்றிலிருந்து பருகுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவான். நரகத்தில் வழங்கப்படும் பயங்கரமான தண்டனையின் விளைவாக நரகவாசிகளின் உடல்களில் இருந்து ஊனமும் சீழும் வெளியேறி ஆறாக ஓடும். அவ்வாற்றின் பெயர் 'நஹ்ருல் கபால்' என்பதாகும். அல்லாஹ் எம்மை நரகத்தில் இருந்து பாதுகாப்பானாக!

இப்னு உமர் அவர்கள் கூறினார்கள்: 
எவன் போதையை அருந்தி அவனுக்குப் போதை ஏற்படவில்லையோ, அப்போதையில் இருந்து சிறிதளவேனும் அவனது வயிற்றில் அல்லது நரம்பு நாளங்களில் இருக்கும் காலமெல்லாம் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (இந்நிலையில்) அவன் மரணித்தால் நிராகரிப்பாளனாக மரணிப்பான். அவன் அருந்திய போதையால் போதை ஏற்பட்டால், அவனது நாற்பது நாட்களுக்குரிய தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (இந்த நிலையில்) அவன் மரணித்தால் நிராகரிப்பாளனாக மரணிப்பான்.
عن مجاهد، عن ابن عمر موقوفا، قال: من شرب الخمر فلم ينتش لم تقبل له صلاة ما دام في جوفه أو عروقه منها شيء، وإن مات مات كافرا، وإن انتشى لم تقبل له صلاة أربعين ليلة، وإن مات فيها مات كافرا. 
 النسائي 5668.
- صححه الألباني، وقوى إسناده ش الأرناؤوط.

இது இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் கூற்றாக இருந்தாலும், அவர்கள் இதனை சுயமாக கூறியிருக்க மாட்டார்கள். ஏனெனில், இது ஆய்வு செய்து கூற முடியுமான ஒரு விடயமல்ல. அவர்கள் நபி ﷺ  அவர்களிடமிருந்து கேட்ட தகவல்களின் அடிப்படையில்தான் கூறியிருக்கமுடியும்.

ஸின்தி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் மேற்படி இப்னு உமர் (றழியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் கூற்றைப் பற்றி விளக்கும் போது பின்வருமாறு கூறியுள்ளார்கள்: இத்தகையவன் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கும் விடயத்தில் காஃபிரைப் போன்றவன். ஏனெனில், குஃப்ருடன் ஒரு காஃபிர் தொழுதால் அவனது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அவனைப் போன்றே தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாமல் இருக்கும் விடயத்தில் போதையை அருந்துபவனும் மாறுகின்றான். மேலான அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
حاشية السندي على النسائي

-ஸுன்னஹ் அகாடமி

Previous Post Next Post