மன்ஹஜூஸ் ஸலஃப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்

بسم الله الرحمن الرحيم 

பதிலளித்தவர் : ஸுலைமான் அர்-ருஹைலி ( ஹஃபிதஹுல்லாஹ்) மதீனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

கேள்வி : ஸலஃபி மன்ஹஜை பற்றிய தெளிவும், விளக்கமும் எனக்கு வேண்டும். ஏனென்றால், தற்போது நமக்கு மத்தியில் இருக்கின்ற ஒவ்வொரு கூட்டமும் (தான்தான்) சத்தியத்தில் இருப்பதாக உரிமை கொண்டாடுகின்றன.

அஷ்-ஷெய்க் ஸுலைமான் அர்-ருஹைலி பதிலளித்ததாவது :

மன்ஹஜுஸ் ஸலஃபானது, தெளிவான வழிமுறையாகும். அது ஒருபோதும் மற்ற வழிமுறைகளுடன் சேர்ந்து தெளிவற்றுப் போகாது. 

மன்ஹஜுஸ் ஸலஃபானது, அல்லாஹ்விற்கு ﷻ இஃக்லாஸ் செய்வதிலும் (அதாவது மனத்தூய்மையுடன் இருப்பதிலும்), மேலும் பெருமானார் நபி ﷺ அவர்களை (முழுமையாக) பின்பற்றுவதிலும் நிலைப்பெற்றுள்ள மன்ஹஜாகும். 

மன்ஹஜுஸ் ஸலஃபின் அடிப்படையானது : {ஆனால், உமதிரட்சகன்மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக ஆக்கி நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் பெறாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாத வரையில் அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள். (4:65)} எனும் உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் ﷻ கூற்றாகும். 

மன்ஹஜுஸ் ஸலஃப், {"நிச்சயமாக எனக்கு பின்பு உங்களில் வாழ்பவர் நிறைய கருத்து முரண்பாடுகளைக் காண்பார். எனவே, என்னுடைய ஸுன்னத்தையும் மேலும் குலஃபாஉ ராஃஸிதீன் அல்-மஹ்ஃதீயின் (நேர்வழிப்பெற்ற நான்கு கஃலீபாக்களுடைய) ஸுன்னத்தையும் பின்பற்றுவது  உங்கள் மீது கடமையாக இருக்கின்றது.  அவ்விரண்டையும் உங்களுடைய கடவாய்ப் பற்களால் பற்றிப் பிடியுங்கள். (மார்க்கத்தில்) புதுமையான விடயங்களை குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! ஏனெனில், நிச்சயமாக புதுமையான ஒவ்வொரு விடயமும் பித்ஃஅத்தாகும். ஒவ்வொரு பித்ஃஅத்தும் வழிகேடாகும். மேலும் ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு இட்டுச் செல்லும் காரியமாகும்"} எனும் நபி ﷺ அவர்களது ஹதீஸின் மீது நிலைப்பெற்றுள்ளது. 

மன்ஹஜுஸ் ஸலஃபானது, அல்லாஹ் ﷻ எதைக்கொண்டு இந்த உம்மத்துடைய முதற்பகுதியினரை (ஸஹாபாக்கள், தாபீயீன்கள் மற்றும் தபஉஃ தாபீயீன்கள்) சீர்செய்தானோ, அதன்மீது நிலைப்பெற்றுள்ளது. அதுவே, நபியும் ﷺ, அவர்களுடைய தோழர்களும் இருந்த வழிமுறையாகும். 

மன்ஹஜுஸ் ஸலஃபானது, பித்'அத்துகளையும், மனோஇச்சைகளையும், மேலும் அதைச் சார்ந்த மக்களையும் எதிர்ப்பதில் நிலைப்பெற்றுள்ளது. 

மன்ஹஜுஸ் ஸலஃபானது, வெளிப்படையாக/பகிரங்கமாக நபியுடைய ﷺ ஸுன்னத்திற்கு உதவியளிப்பதிலும், மேலும் பித்ஃஅத்திற்கு மறுப்பளிப்பது, அதைச் சார்ந்த மக்களை மற்றும் அவர்களின் நிலைகளை வெளிப்படுத்துவது, மேலும் அவர்களிடமிருந்து வெளிப்படக்கூடிய ஒவ்வொரு விடயத்திலிருந்தும் மக்களுக்கு எச்சரிக்கை செய்வது என்பனவற்றில் போராடுவதிலும் நிலைப்பெற்றுள்ளது. 

மன்ஹஜுஸ் ஸலஃபானது, ஒருபோதும் மற்ற வழிமுறைகளுடன் சேராத மன்ஹஜாகும். அதுவே குர்ஆன் மற்றும் ஸுன்னாவுடைய மன்ஹஜ் ஆகும், அறிவும் மற்றும் தெளிவான ஆதாரங்கள் உள்ள மன்ஹஜாகும்,  பின்பற்றக்கூடிய மற்றும் வழிகாட்டக் கூடிய மன்ஹஜாகும். 

ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் மன்ஹஜாவது, எவருக்கெல்லாம் பார்வையில் அல்லாஹ் ﷻ ஒளியை அளித்திருக்கின்றானோ, அவர்கள் அனைவரும் கண்டுகொள்ளக்கூடிய மன்ஹஜாகும்.

ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் மன்ஹஜிற்கு முரணான கூட்டங்களாவது, நாம் மன்ஹஜுஸ் ஸலஃப் எனக் குறிப்பிட்ட ஒவ்வொன்றிலும் மாறுபடக் கூடியவைகளாக இருக்கின்றன. 

ஒரு ஸலஃபியினுடைய பண்பாவது : அவர் ஷரீஅத்தை கொண்டு மக்களைப் பார்க்கக் கூடியவராக இருப்பாரே அன்றி, மக்களைக் கொண்டு ஷரீஅத்தையல்ல. 

மக்களின் விருப்பங்களுக்கு அப்பாலாக, ஷரீஅத்தினுடைய சட்டங்களை முதன்மைப்படுத்துவார். இதனால், அவரை மக்களில் அதிகமானோர் எதிர்த்த போதிலும், மேலும் குறைவானவர்களைத் தவிர வேறு எவரும் அவரின் பக்கம் வராமல் இருந்த போதிலும் சரியே. பெரும்பான்மைக்கு அப்பாலாக, நபியுடைய ﷺ ஸுன்னத்திற்கும், மற்றும் அல்லாஹ்வுடைய வேதத்திற்கும் முதன்மையளிப்பவராக இருப்பார். 

 ஆனால் பல்வேறு வகைப்பட்ட இயக்கவாதிகளோ, நிச்சயமாக மக்களுடைய பார்வைக்கு ஏற்றவாறு ஷரீஅத்தின் சட்டங்களைக் காணக் கூடியவர்களாக இருப்பர். எதனை மக்கள் விரும்புவார்களோ, மேலும் எதனைக் கொண்டு அவர்களுடைய எண்ணிக்கைகளை அதிகப்படுத்த முடியுமோ அதனைத் தவிர்த்து வேறு எதனையும் மக்களுக்கு முற்படுத்தக் கூடியவர்களாக இருக்க மாட்டார்கள். 

மக்கள் வலப்புறத்தை விரும்புவதைக் கண்டால், அவர்களும் வலப்புறம் செல்வர். மேலும் அதிலே தீவிரத்தையும் காட்டுவார்கள். 

மக்கள் இடப்புறத்தை விரும்பினால், அவர்களும் இடப்புறம் செல்வர். மேலும் அதிலே தீவிரத்தையும் காட்டுவார்கள்.

மக்கள் தாமதத்தை விரும்புவதைக் கண்டால், அவர்களும் தாமதிப்பர். மேலும் அவர்கள் பின்தங்குவதை விரும்பக் கண்டால், அவர்களும் பின்வாங்குவர். 

எது மக்களை ஆச்சரியப்படுத்துமோ அதனையும், மேலும் எது அவர்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்துமோ, அதனையே அவர்கள் காண்பார்களன்றி குர்ஆன், ஸுன்னாவை அல்ல. 

எது எவ்வாறு இருப்பினும்; இந்த விஷயமானது (நடைமுறையில்) இருக்கின்றது, மேலும் (புத்தகங்களில்) எழுதப்பட்டும் உள்ளது. (கூடுதல் விபரங்கள் கூற) அதிக நேரம் தேவைப்படுகிறது,(ஆனால் நேரமின்னையால்) நான் குறிப்பிட்டவற்றைக் கொண்டு போதுமாக்கிக் கொள்கிறேன், தவிர (உண்மையில்) இதைப்பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.


Previous Post Next Post