பெருநாள் தொழுகை நிறைவேற்றப்படவேண்டிய இடம் மஸ்ஜிதா? மைதானமா?

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகைகளைத் திடலில்தான் தொழுதுவந்துள்ளார்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. எனவே திடலில் தொழுவதுதான் நபி வழியாகும் என்பதில் ஷாஃபிஈ மத்ஹபைத் தவிர உள்ள ஏனைய மூன்று மத்ஹபுகளினதும், நான்கு மத்ஹபுகளுக்கு வெளியிலுள்ள ஏனைய அறிஞர்களினதும் கருத்தாகும். ஷாஃபிஈ மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களில் பெரும்பாலானவர்களோ ஒரு மஸ்ஜிதில் ஊர் மக்களுக்கு பெருநாள் தொழுகையை நிறைவேற்றப்போதுமான இடவசதி இருந்தால் மைதானத்தில் தொழுவதை விட அந்த மஸ்ஜிதில் தொழுவது சிறந்தது என்றும் மைதானத்தில் தொழுதாலும் தவறில்லை என்றும் கருதுகின்றனர். அதே போன்று ஷாஃபிஈ மத்ஹபின் சில அறிஞர்கள் பெரும்பாலான அறிஞர்களைப் போன்றே திடலில் தொழுவது சிறந்தது என்று கருதுகின்றனர்.

பெருநாள் தொழுகை திடலில் நிறைவேற்றப்படுவது சிறந்தது என்ற பெரும்பாலான அறிஞர்களின் கருத்து பலமானதா? அல்லது பெருநாளில் ஒன்றுகூடுவதற்கு மஸ்ஜிதில் போதிய வசதி இருந்தால் அந்த மஸ்ஜிதில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது சிறந்தது என்ற ஷாஃபிஈ மத்ஹபின் கருத்துப் பலமானதா? என்பதை சுன்னாவின் அடிப்படையில் ஆய்வு செய்து பின்பற்றுவதே மக்களை வழிநடத்தும் தாஈகளின் கடமையாகும். இவ்விரு கருத்துக்களின் ஆதாரங்களை இப்போது கவனிப்போம்.

திடலில் தொழுவதுதான் நபிவழி என்பவர்களின் ஆதாரம்:-
-------------------
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை மைதானத்தில் தான் தொடர்ந்து தொழுது வந்துள்ளார்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அது சம்பந்தமான பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் உட்பட பல ஹதீஸ் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளன.

பெருநாள் தொழுகையை மஸ்ஜிதில் நிறைவேற்றுவது சிறந்தது என்பவர்களின் ஆதாரம்:-
--------------------
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் திடலில் தொழுதது ஊர் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூட வேண்டும் என்பதினாலாகும். அந்த நோக்கம் மஸ்ஜிதில் கைகூடி விட்டால் அங்கு தொழுவதே சிறந்தது. பைஹகியில் இடம்பெரும் பின்வரும் செய்தி இதற்கு ஆதாரமாகும். உமர் (றலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் மழைபெய்த போது பெருநாள் தொழுகயை மஸ்ஜிதில் நிறைவேற்றிவிட்டு பின்வருமாறு கூறினார்கள். “மக்களே, அல்லாஹ்வின் தூதர்  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்களை திடலுக்கு அழைத்துச் சென்று தொழுகை நடத்தக்கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில் திடலே மக்களுக்கு இலகுவானதாகவும் விசாலமானதாகவும் (போதுமானதாகவும்) இருந்தது. மஸ்ஜிதோ அவர்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை. எனவே மழை பெய்துவிட்டால் மஸ்ஜிதே மக்களுக்கு இலகுவானதாகும் (வசதியானதாகும்).”

மேற்படி ஆதாரத்திற்கான விமர்சனங்கள்:-
------------------
ஷாஃபிஈ மத்ஹபினர் முன்வைக்கும் உமர்  (றலியல்லாஹு அன்ஹு) அவர்களின் கூற்றாக பைஹகியின் அஸ்ஸுனனுல் குப்ராவில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியானது பலவீனமானதாகும். அந்த அறிவிப்பில் முஹம்மத் இப்னு அப்துல் அஸீஸ் என்ற ஒரு அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமான ஒரு அறிவிப்பாளர். இமாம்களான புகாரி, அபூஹாதிம், நஸாயீ, உகைலி, இப்னு ஹிப்பான், தாரகுத்னி, தஹபி ஆகிய அறிஞர்கள் இவரை பலவீனப்படுத்தியுள்ளனர். எனவே இத்தகவலை ஆதாரமாக எடுக்க முடியாது. ‘‘முன்கருல் ஹதீஸ்”, ‘‘மத்ரூகுல் ஹதீஸ்” போன்ற கடும் பலவீனத்தைக் குறிக்கும் வார்த்தைகளால் இவ்வறிவிப்பாளர் விமர்சிக்கப்பட்டுள்ளார். ஹதீஸ் கலையின் விதிகளின் அடிப்படையில் மிகப் பலவீனமான ஒருவரின் அறிவிப்பை ஆதாரமாக எடுக்க முடியாது. அது மாத்திரமன்றி மிக பலவீனமான ஒரு அறிவிப்பு வேறு அறிவிப்புக்களால் பலமடையக்கூட  முடியாது, அது வேறு அறிவிப்புக்களைப் பலப்படுத்தவும்  கூட உதவாது. எனவே இடப்பற்றாக்குறையால்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் திடலில் தொழுதார்கள் என்ற வாதம் தவறானதாகும்.

அதே போன்று நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் பெருநாள் தினத்தில் மஸ்ஜிதில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்குமாயின் ஜும்மஹ் தொழுகையிலும் அது ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் ஜும்மஹ் தொழுகையும் திடலில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனனில் நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஜும்மஹ் தொழுகைக்குக் கூடும் மக்களின் எண்ணிக்கைக்கும் பெருநாள் தொழுகைக்கு கூடும் மக்களின் எண்ணிக்கைக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்க முடியாது. 

அதே போன்று இடப்பற்றாக்குறைதான் காரணமாக இருந்தால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மஸ்ஜிதை விசாலப்படுத்தியிருப்பார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மஸ்ஜிதில் தொழுவது ஏனைய மஸ்ஜிதுகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். ஆனாலும் நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகையை அங்கு நிறைவேற்றாமல் திடலில் தொழுவதைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அதற்கு இடப்பற்றாகுறைதான் காரணமாக இருந்திருக்குமாயின் அந்த மஸ்ஜிதின் சிறப்பை பெற்றுக்கொள்வதற்காக அதனை விசாலப்படுத்தி பெருநாள் தொழுகையையும் அங்கே நிறைவேற்றியிருப்பார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவ்வாறு செய்யாததினால் பெருநாள் தொழுகையை திடலில் தொழுவதே சிறந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே பெருநாளில் ஒன்று கூடுவதற்கு மஸ்ஜிதில் போதியளவு இடம் இருந்தாலும் திடலில் தொழுவதே சுன்னஹ்வாகும்.

மழைபெய்த ஒரு சந்தர்பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகையை மஸ்ஜிதில் தொழுதார்கள் என்று அபூ ஹுறைறஹ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி உள்ளது. இதனையும் சிலர் மஸ்ஜிதில் பெருநாள் தொழுவதற்கு ஆதாரம் காட்டுகின்றனர்.

இந்த செய்தி பலமானது என்று வைத்துக்கொண்டாலும் மழை பெய்ததற்காக - ஒரு நிர்பந்தத்திற்காகத் தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மஸ்ஜிதில் தொழுதார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியும். அவ்வாறாயின் நிர்பந்தம் இல்லாத போது திடலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதே நபிவழி என்பதையும் விளங்க முடியும். பொதுவாக நிர்பந்தமான நேரத்தில் மஸ்ஜிதில் தொழுது கொள்ளலாம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

ஆனாலும் மேற்படி அறிவிப்பு பலவீனமானதாகும். ஏனெனில் ஈஸா இப்னு அப்தில் அஃலா என்ற நம்பகத்தன்மை அறியப்படாத அறிவிப்பாளரும், உபைதுல்லாஹ் அத்தைமி என்ற தனித்து அறிவிக்கும் போது பலவீனமான நிலையில் உள்ள ஒரு அறிவிப்பாளரும் அந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

சுன்னஹ்வைப் பின்பற்ற வேண்டும் என்பதிலும் மத்ஹபுகளில் பிடிவாதமாக இருக்கக் கூடாது என்பதிலும் இன்று மக்கள் மத்தியில் விழிப்புனர்வு ஏற்பட்டிருப்பதால் பல ஊர்களில் பெருநாள் தொழுகை திடலில் நிறைவேற்றப்படுகிறது. சிலர் இதனை எதிர்பதற்குக் களமிறங்கியிருப்பது வேதனைக்குறியதாகும். இவர்கள் உமர் (றலியல்லாஹு அன்ஹு)  அவர்கள் கூறியதாக பைஹகியில் இடம்பெற்றுள்ள மிகப்பலவீனமான அறிவிப்பை மக்கள் மத்தியில் பரப்புகின்றனர். இதன் மூலம் மக்களைக் குழப்பி சுன்னஹ்வைத் தடுக்க முயற்சிக்கின்றனர்.

இன்று அதிகமாக ஒரே ஊரில் பல மஸ்ஜிதுகளில் பெருநாள் தொழுகை நிறைவேற்றப்படுகிறது. இது சுன்னஹ்விற்கு மாற்றமானது மாத்திரமின்றி ஷாஃபிஈ மத்ஹபுக்கே மாற்றமானதாகும். ஏனெனில் ஊர் மக்கள் ஒன்று கூடுவதற்கு ஊரில் இருக்கும் ஒரு மஸ்ஜித் போதுமானதாக இல்லாதிருந்தால் அவர்கள் அனைவரும் சேர்ந்து திடலில் தொழுவதே சிறந்தது என்பது ஷாஃபிஈ மத்ஹபின் கருத்தாகும்.

இன்னும் சில ஊர்களில் பல மஸ்ஜிதுகளில் ஜும்மஹ் தொழுகையை நிறைவேற்றக்கூடிய மக்கள் பெருநாளில் ஒரே திடலில் கூடி தொழுகையை நிறைவேற்றுகின்றனர். இதுவே சுன்னஹ்விற்கும் ஒற்றுமைக்கும் உகந்ததாகும். அதுமாத்திரமின்றி ஷாஃபிஈ மத்ஹபின் கருத்துக்கும் ஏற்புடையதாகும்.

எனவே பெருநாளில் ஊர் மக்கள் அனைவரும் ஒரே திடலில் கூடி தொழுகையை நிறைவேற்றுவதே சுன்னாவாகும். தொழுகை கடமையில்லாத மாதவிடாய் பெண்கள் கூட இந்த திடலுக்கு சமூகமளித்து தொழும் இடத்தில் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வலியுருத்தினார்கள். இஸ்லாமிய முறைப்படி தன்னை மறைத்துக்கொள்ளும் ஆடை ஒரு பெண்ணிடம் இல்லாவிட்டால் வேறு ஒரு பெண் அவளுக்கு ஒரு ஆடையை இரவலாகக் கொடுத்து அவள் பெருநாளின் ஒன்று கூடலில் கலந்து கொள்வதற்கு உதவ வேண்டும் என்பதை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  அவர்கள் வலியுருத்தியிருக்கிறார்கள். இந்த சுன்னஹ்வை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் எம்மணைவருக்கும் அணுகூலம் புரிவானாக!

குறிப்பு:-மேலதிக விளக்கத்திற்கு ‘ஸலாதுல் ஈதைன் பில் முஸல்லா ஹியஸ்ஸுன்னஹ்'
 (صلاة العيدين في المصلى هي السنة)
 என்ற இமாம் அல்பானி (றஹிமஹுல்லாஹ்)
 அவர்களின் நூலைப் பார்க்கவும்.


ஸுன்னாஹ் அகாடமி
Previous Post Next Post