எண்ணமும் செயலும்!

உமர் (ரலி )அவர்கள் கூறியது : இறை தூதர்( ஸல்) அவர்கள் கூறினார்கள், செயல்கள் எல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன .ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல் ) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தி படுத்துவதை ) நோக்கமாக கொண்டு அமைகிறதோ அவர் ஹிஜ்ரத் (தின் பலனும்) அவ்வாறே அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக ஆதாயத்தை அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாக கொண்டுள்ளதோ அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாக தான் இருக்கும். (நூல் : புஹாரி 1, 54, 2529, 5070)

இந்த நபிமொழி மூலம் ஒரு வணக்கத்தை அல்லது நற்செயலை அல்லாஹ்வின் திருப்திக்காக என்ற எண்ணத்துடன் செய்தால்தான் அதற்குரிய நன்மை கிடைக்கும் என்பதையும் உலக நன்மையையும் நோக்கமாக கொண்டு அவற்றை செய்தால் அவற்றுக்குரிய நன்மை கிடைக்காது என்பதையும் அறிந்து கொள்கிறோம்.

இந்த நபிமொழியில் நாம் புரிந்து கொள்ளக்கூடிய இன்னொரு விசயமும் இருக்கிறது. ஒரு தீமையை அதை செய்வதற்கு விருப்பமும் நாட்டமும் இன்றி நிர்பந்த சூழ்நிலையில் செய்தால் அதற்கு தீமை எழுதப்படாது. ஏனென்றல் செயல்கள் எல்லாம் எண்ணத்தைப் பொறுத்துதான் அவற்றுக்கான பிரதிபலன்கள் கொடுக்கப்படும். உதாரணத்திற்கு குர்ஆனில் சில பாவங்களைப் பேசும்போது அவற்றை நிர்பந்த சூழ்நிலையில் செய்துவிட்டால் குற்றமாகாது என்று அல்லாஹ் கூறுவதைப் பார்க்கலாம். 

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் மறுப்பவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும் என்றும் அத்தகையவர்களுக்கு கடும் வேதனை உண்டும் என்றும் சொல்லும் அல்லாஹ் இறை நம்பிக்கையில் உள்ளம் அமைதி கொண்ட நிலையில் நிர்பந்தத்தின் காரணமாக இறை நிராகரிப்பு வார்த்தையை சொல்லி விட்டால் குற்றமில்லை என்று அல்லாஹு தஆலா அனுமதி அளிக்கிறான். (பார்க்க அல்  குர்ஆன்16:106)
அதே போல் உண்ண தடை செய்ய பட்டவற்றை  நிர்பந்த சூழ்நிலையில் உண்டு விட்டால் பாவம் இல்லை என்றும் அல்லாஹ் கூறி உள்ளான். (அல்குர்ஆன்  2 : 171)

அடுத்து, ஒரு பொதுவான செயல் எண்ணத்தைப் பொறுத்து எப்படி மறுமை நன்மை பெற்று தரக்கூடியதாகவும் பெற்று தராததாகவும் ஆகிறது என்பதையும் இங்கு நபியவர்கள் விளக்குகிறார்கள்.

குடி பெயர்தல் – ஹிஜ்ரத்

                    ஹிஜ்ரத் என்பது அல்லாஹ்வுக்காகவும் நடக்கிறது சுய தேவைக்காகவும் நடக்கிறது. ஒரு சிற்றூரில் இஸ்லாத்தை ஏற்கும் ஒருவர் பிற மதத்திலுள்ள சுற்றத்தார் தொல்லை கொடுக்கிறார்கள் என்பதற்காக சென்னையில் இஸ்லாமிய சூழலுள்ள ஒரு பகுதிக்கு வந்து குடியேறுகிறார். அதே சிற்றூரில் இருந்து இன்னொரு முஸ்லிம் அதே பகுதியில் தொழில் செய்வதற்காக வந்து குடியிருக்கிறார். இருவரும் ஒரே பகுதியில் இருந்து ஒரே பகுதிக்கு தான் ஹிஜ்ரத் செய்திருக்கிறார்கள். ஆனால் முதலாமவரின் நோக்கம் அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக என்ற நிலையில் இருக்கிறது. அதற்கு சிறப்பான மறுமை நன்மை உள்ளது. இரண்டாமவரின் நோக்கம் உலக நன்மையை பெறுதல் என்ற நிலையில் உள்ளது .அவருக்கு அவர் எதிர் பார்க்கும் உலக நன்மை தான் கிடைக்கிறது. இந்த நபிமொழி படி வணக்க வழிபாடுகள் ஏற்கப்படுவதற்கு நிய்யத் எனும் எண்ணம் அவசியமாகும். நிய்யத் நடை பெற வேண்டிய இடம் நெஞ்சம் ஆகும். நிய்யத்தை வாயினால் மொழிவது நபிவழி அல்ல. ஹஜ்ஜு உம்ராவுக்காக நிய்யத் செய்யும் போது மட்டும் அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜ தன்  என்றும் அல்லாஹும்ம லப்பைக்க உம்ரத்தன் என்றும் நபி (ஸல் ) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இன்று சிலரிடம் நடைமுறையில் இருப்பது போல் இன்ன தொழுகையை இத்தனை ரக்காத்துகள் கிபுலாவை முன்னோக்கி என்று நிய்யத்து சொல்வது நபி மொழியில் இல்லை. மட்டுமின்றி இவர்கள் உருவாக்கியுள்ள இந்த வாசகங்களை அப்படியே மனதில் கொண்டு வரவேண்டும் என்பதும் இல்லை. மாறாக ஒரு வணக்கத்தை செய்ய ஆரம்பிக்கும் போது அந்த வணக்கத்தை செய்யும் நாட்டம் மனதில் இருப்பது தான் நிய்யத். தொழுகை ஜக்காத்து  நோன்பு உள்ளிட்ட வணக்கங்களுக்கும் நற்செயல்களுக்கும் இதுதான் நிலை.  ஆகவே வாயால் சொல்லும் பித்அத்தை நிய்யத்தை தவிர்க்க வேண்டும்.

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil 
Previous Post Next Post