இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை” என்று கூறுகிற (நிலை ஏற்படும்) வரை மக்களுடன் போரிடும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். “வணக்கத்திற்குரியவன் (இறைவன்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை” என்று கூறுகிறவர் தன் உயிரையும், உடமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொள்வார். நியாயமான காரணம் இருந்தாலே தவிர. அவரிடம் (அவரின் மற்ற செயல்களுக்கு) கணக்கு வாங்கு வது அல்லாஹ்வின் பொறுப்பாகும்”.
அறிவிப்பவர்: அபூஹுரைராஹ் (ரலி).
நூல்: புகாரி-2946.
இந்த நபிமொழியை பதிவு செய்த பின் இமாம் புகாரி அவர்கள் கூறுவது: “இதே நபி மொழியை உமர் (ரலி) அவர்களும் இப்னு உமர் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்”.
மட்டுமின்றி இந்த நபிமொழி முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெறுகிறது.
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது “லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் (இறைவன்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை)” என்பதை ஏற்காத மக்கள் அனைவரிடமும் போர் செய்ய வேண்டும் என்று கூறுவதாக தோண்றும்.
இப்படித் தோண்றுவதால் சிலர் இந்த ஹதீஸில் இடம் பெறும் ‘போரிடும்படி’ என்ற வார்த்தைக்கு ‘போராடும்படி’ என்று விளக்கம் கூறிகிறார்கள்.
இவர்கள் கூறும் இந்த விளக்கம் தவறாகும்.
ஏனென்றால் இந்த ஹதீஸின் அடுத்த பகுதி “லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகிறவர் தன் உயிரையும் உடமையையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொள்வார்” என்று உள்ளது.
இதன் படி பார்த்தால் நபி (ஸல்) இங்கு கூறுவது வெறும் போராட்டத்தை அல்ல ஆயுதத்தால் போரிடுவதைத்தான் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
அப்படியானால் ஆயுதம் தாங்கி போரிட்டு மக்களை ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ எனும் கொள்கையை ஏற்கச் செய்ய வேண்டும் என்று இந்த நபிமொழி கூறுகிறதா?
அப்படியும் கூறவில்லை. ஆனாலும் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’வை ஏற்காதவர்களையும் அவர்களின் ஆட்சியதிகாரத்தையும் இஸ்லாமிய அரசாட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறது.
ஏன் இப்படிக் கூற வேண்டும்?
பொதுவாக அசத்தியவாதிகள் சத்தியத்தில் இருப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதிலேயே குறியாக இருப்பார்கள். சத்தியக் கொள்கையில் இருக்கும் மக்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே முயற்சிப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னரும் அவர்களின் காலத்திலும் அவர்களுக்குப் பின்னரும் இது தான் நிலை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் சத்தியமான ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட மக்களை வைத்து அவர்கள் அமைத்த அந்த சிறிய இஸ்லாமிய அரசை அழிப்பதற்காக பலவித முயற்சிகளை மேற்கொண்டனர் அசத்தியவாதிகள். பல தடவை படைதிரட்டியும் வந்தனர்.
அவற்றையெல்லாம் பல்வேறு இழப்புகளுடன் பல போர்களுக்குப் பின் முறியடித்துத் தான் அந்த இஸ்லாமிய அரசை உறுதிப்படுத்தினார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
இன்றும் கூட இஸ்லாமிய அரசுகளை அழிக்க வேண்டும் அல்லது முஸ்லிம்களை தங்களின் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு இஸ்லாமிய நாடுகள் மிது அசத்தியவாதிகள் போர் தொடுத்துக் கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
பொதுவாகவே இஸ்லாத்திற்கு வெளியே உள்ளவர்கள் அவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் எந்த இனத்தவராக இருந்தாலும்-இதே நிலையில் தான் இருந்தார்கள், இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலைக்கு மாற்றமாக இறைவனின் வழியில் இருக்கும் முஸ்லிம்களின் அதிகாரத்தின் கீழ் மற்றவர்கள் இருப்பது தான் முறை. எனவே தான் இந்த நபிழொழியில் நபியவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
இதன் படி இந்த ஹதீஸில் போரிடுவது பற்றி கூறப்படுவதற்கான காரணம் ஒவ்வொரு வரையும் ஆயுத பலத்தால் முஸ்லிமாக மாற்றுவதற்காக அல்ல. மாறாக முஸ்லிம்களாக இல்லாவிட்டாலும் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் உலகிற்கு நன்மை என்ற அடிப்படையில் தான் போரிடுதல் கூறப்படுகிறது.
இது சரிதான் என்பதற்கான ஆதாரங்கள்:
இந்த ஹதீஸில் இவ்வாறு கூறப்படுவது நியாயமானதுதான் என்பதற்கு நாம் எங்கும் ஆதாரம் தேட வேண்டியதில்லை. நம் நாட்டின் வரலாற்றிலேயே அதற்கான ஆதாரம் உள்ளது.
ஏறத்தாழ முவ்வாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டின் மீது ஆரியர்கள் போர் தொடுத்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடிய இந்திய மக்களை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்கள்.
இவ்வாறு போர் தொடுத்த அந்த ஆரியர்கள் இறைவன் ஒருவனை மட்டும் வணங்கி வழிபட்டு அவன் வழியில் நடக்கும் நல்லோராக இருந்திருக்க வேண்டும். (பிற்காலத்தில் அவர்களிடத்திலும் சிலைவணக்கமும் பிற வழிகேடுகளும் ஏற்பட்டிருக்க வேண்டும்.)
அதனால் தவறான பாதையில் சென்று கொண்டிருந்த இந்தியமக்கள் மீது போர் தொடுத்து தமது காட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள். இப்படி நடந்திருந்தால் தான் அவர்கள் தரப்பில் நியாயம் இருக்கும்.
இதற்கு மாற்றமாக, அவர்களும் சிலை வணக்கம் உள்ளிட்ட வழிகேட்டில் இருந்து கொண்டு இந்திய மக்கள் மீது போர் தொடுத்திருந்தால் அவர்கள் வெறும் நாடு பிடிக்கும் ஆசையில் தான் போர்தொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் நியாயமில்லை.
இவ்வாறு ஆரியர்கள் நியாயமின்றி போர் தொடுத்தார்கள் என்றிருந்தாலும் இந்த ஹதீஸில் சொல்லப்படுவது மிக மிகச் சரியானதே என்றாகும்.
மேலும் இறைவனை மட்டும் வணங்கி வழிபட்டு நல்வழியில் நடப்போர் தவறான பாதையில் செல்வோரை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக போர் தொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதென்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருகிறது.
பழங்காலத்தில் இஸ்ரவேலர்களின் நபியாகவும் அரசராகவும் இருந்த சுலைமான் (அலை) அவர்கள் இவ்வாறு நடந்துள்ளார்கள்.
தமது காலத்தில் தமது ஆட்சிப் பகுதியிலிருந்து தூரத்தில் இருந்த ஸபஉ நாட்டு அரசி பலதெய்வ நம்பிக்கை உடையவராக இருப்பதை அறிந்த அவருக்கு சுலைமான் (அலை) அவர்கள் நேர் வழிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்கள். ஆனால் அந்த அரசி அவ்வழைப்பை ஏற்கவில்லை என்று அறிந்ததும் நான் உங்களுக்கு எதிராக படை நடத்தி வருவேன் என்று சுலைமான் நபியவர்கள் எச்சரிக்கை விடுத்தார்கள் .
இதன் பின்பு அந்த அரசி சுலைமான் நபியை சந்தித்து இறைவனுக்கு மட்டும் வணக்கம் செய்து வாழும் இறைமார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்.
இது குறித்து திருகுர்ஆனில் 27 வது அத்தியாயத்தில் வசனம் 19 முதல் 44 வரை உள்ள பகுதியில் கூறப்பட்டுள்ளது.
ஆக நாம் படித்துக் கொண்டிருக்கும் இந்த நபிமொழி முஸ்லிமல்லாத ஒவ்வொருவரையும் முஸ்லிமாக ஆக்குவதற்காக போரிட வேண்டும் என்று கூறவில்லை. மாறாக இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்காக போரிடுவது பற்றியே கூறுகிறது. இதற்கு சரியான நியாயம் உள்ளது என்பது குறித்த விளக்கங்களை பார்த்தோம்.
இப்போது ஒரு கேள்வி எழ வேண்டும். “அப்படியானால் இப்போதும் அவ்வாறு போர் செய்ய வேண்டுமா?” என்பது தான் அந்தக் கேள்வி!
கூடாது என்பது தான் பதில். ஏனென்றால் இரண்டு நாடுகள் ஒன்றையொன்று அங்கீகரித்து சமாதான உடன் படிக்கை செய்து கொண்டால் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஒருவர் மிது ஒருவர் போர் தொடுக்கக் கூடாது.
திருகுர்ஆன் கூறுகிறது: (உங்களுடன் போரிடும்) அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து இணங்கி வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக – நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:61).
இக்காலத்தில் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒன்றை உருவாக்கியுள்ளன. அதில் இனைந்துள்ள நாடுகள் ஒன்றை ஒன்று அங்கீகரித்துள்ளன. இது ஒருவித சமாதான உடன்படிக்கைதான். ஆகவே ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது போர் தொடுக்கக் கூடாது.
இஸ்லாமிய விரோதம் கொண்ட ஆட்சியாளர்கள் இந்த சமாதான உடன்படிக்கையை அவ்வப்போது மீறி சில இஸ்லாமிய நாடுகள் மீது வேண்டுமென்றே போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் இறைநிராகரிப்பாளர்கள் தான் சமாதான உடன் படிக்கைகளை மீறி போர்களை ஆரம்பித்து வைப்பவர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆக இதுவரை நாம் பார்த்த விளக்கங்களின் மூலம் மேற்கண்ட புகாரியின் 2946 வது ஹதீஸின் கருத்தை சிக்கலின்றி புரிந்து கொள்ளமுடிகிறது.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்!.
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ, MA. ,M.phil