அழைப்புப் பணியில் பேணப்பட வேண்டிய நளினம்

-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

மார்க்கத்தை பிரச்சாரம் செய்பவர்களுக்கும் , அழைப்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இருக்க வேண்டிய அடிப்படையான பண்பு நலன்களில் ஒன்று சகிப்புத்தன்மை, நளினமான சொல்லாடல்கள் அது குன்றும் பொழுது விமர்சனங்களும் தேவையில்லாத குழப்பங்களும் சமூகத்தில் அரங்கேறுகின்றன.

பின்வரும் வசனம் அழைப்பாளர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கியமான மூன்று அம்சங்களை தருகிறது

1-சகிப்புத்தன்மை, மன்னிக்கும் பழக்கம்.

2-சத்தியத்தை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைத்தல்.

3-அறிவீனர்களை புறந்தள்ளுதல்

خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِيْنَ‏
(நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைகொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வாருங்கள்.
(அல்குர்ஆன் : 7:199)

மேலே கூறப்பட்டிருக்கும் மூன்று விடயங்களில் எது குறைந்தாலும் அது ஒரு ஆக்கபூர்வமான அழைப்பு பணியாக இருக்காது.

அழைப்புப் பணியை மேற்கொள்ள முற்படும் இரண்டு நபிமார்களுக்கு அல்லாஹ் செய்த உபதேசத்தை பாருங்கள்.....

فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى‏

நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்" என்றும் கூறினோம்.
(அல்குர்ஆன் : 20:44)

பிஃர்அவுனைவிடவா நமது மாற்று கருத்துடையவர் கீழ்த்தரமானவர் நபி மூசா அலைஹிஸ் ஸலாமை விடவா அழைப்பு பணி செய்யக்கூடிய நாம் உயர்ந்தவர்கள் ??

அழைப்புப் பணியில் நளினம் தேவை சகிப்புத்தன்மை தேவை சொல்லடக்கம் தேவை, மாற்றுக் கருத்து உடையவர் இறையச்சம் கொள்ள வேண்டும் தன்னை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் சரி செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அழைப்பு பணி செய்தால் அது வாய்மையாகவும் சிறப்பான முறையில் இறையருளால் வெற்றி பெறும்!!

இறைத்தூதர் ﷺ அவர்கள் பாவமான காரியங்களில் ஈடுபடுபவர்களை மாற்று கருத்து உடையவர்களை விளக்கம் அற்ற மனிதராக இரக்கத்துடன் பார்த்தார்கள் !!!

அதனால் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்று வாலை உருவி வந்தவர்கள் தாங்கள் நடந்து கொண்ட நற்பண்புகளால் தலை தொங்கி வெட்கித்து, தங்கள் தவறை உணர்ந்து இஸ்லாத்திற்கு வந்தார்கள்....

இன்று நமது வாலிபர்களிடம் குர்ஆன் சுன்னாவை பின்பற்றுகின்றோம் என்ற ஆர்வம் மிகைத்து இருந்தாலும் விழிப்புணர்வுகள் அதிகமாக இருந்தாலும், தன்னை மூஸாவாகவும் (அலைஹிஸ் ஸலாம்) மாற்று கருத்து உடையவரை ஃபிர்அவ்னாக மட்டுமே
பார்க்கிறார்கள்,

விளைவு தங்கள் முன்வைக்கும் அந்த அழைப்பு பணியில் உயிரோட்டம் இல்லாமல் தாக்கம் இல்லாமல் அந்த அழைப்பு பணியே இஸ்லாத்திற்கு முரணாகவும் வேலியாகவும் ஆகிவிடுகிறது.
Previous Post Next Post