-அப்துல்லாஹ உவைஸ் மீஸானி
தாங்கமுடியாத பெரும் நெருக்கடிகள் ஏற்படும் போது அதற்குக் காரணம் யார்? என்பது சம்பந்தமாக பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களைக் கூறுவதோடு அவர்களில் பலர் தாம் கூறும் காரணமே சரியானது மற்றவர்கள் கூறுவது தவறு என வாதிடுகின்றனர்.
இவ்வாறான முரண்பாட்டுக்குக் காரணம் என்னவெனில் ஒரு பிரச்சினைக்கு குறிப்பிட்ட ஒரு விடயம் மாத்திரமே காரணம் என்ற எண்ணமாகும்.
ஆனால் உண்மையில் ஒரு பிரச்சினைக்குப் பின்னால் குறிப்பிட்ட ஒரு காரணம் மாத்திரம் இருப்பது மிகவும் குறைவாகும். பெரும்பாலும் பல காரணங்களுடன் பின்னிப் பிணைந்ததாக இருப்பதே அதிகமாகும்.
ஜும்மா குத்பாக்களில் பிரச்சினைக்குக் காரணம் நமது பாவங்கள்தான் எனக் கூறப்படும் போது இப்பிரச்சினை தோன்றுவது வழக்கம்.
இவ்வாறான குத்பாக்களை நிகழ்த்துவோரும் அதனை விமர்சிப்போரும் மேலுள்ள விடயத்தைக் கவனிக்கத் தவறியமையே இவ்வாறான முரண்பாட்டுக்குக் காரணமாகும்.
குத்பாக்களை நிகழ்த்துவோரும், பாவங்களை மாத்திரம் காரணமாகக் குறிப்பிடாமல் அவற்றுடன் இணைத்து மற்றைய காரணங்களையும் குறிப்பிட வேண்டும். அதே நேரம் குறித்த குத்பாக்களை விமர்சிப்போரும் பிரச்சினைக்கு வெளிரங்கமாகத் தெரியும் காரணிகள் மாத்திரமின்றி நமது பாவங்கள், இறைவனின் கோபப் பார்வை போன்ற மறைமுக காரணங்களும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
லௌகீக சடரீதியான காரணிகள் இருப்பதனால் மறைமுகமான காரணிகள் இல்லையென நாம் புரிந்து கொள்வது நமது இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணாகும்.
சூரிய சந்திர கிரகணத்தை இறைவனின் எச்சரிக்கையின் அறிகுறி என நபியவர்கள் குறிப்பிடுவதன் மூலம் இதனைப் புரிந்துகொள்ளலாம். கிரகணம் ஏற்படுவதற்கு பல்வேறு விஞ்ஞான காரணிகள் கூறப்பட்டாலும் அது இறைவனின் எச்சரிக்கை என்பதும் ஒரு காரணமாகும்.
மறைமுகமான காரணிகளின் மீதான இந்த நம்பிக்கையே முஸ்லிம்களின் சிறப்பம்சமாகும். ஏனெனில் மற்றவர்கள் வெளிரங்கமான காரணங்களை மாத்திரம் நம்பியிருக்கும் நிலையில் நாம் மறைமுக காரணங்களும் இருக்கலாம் என நம்பும் போது பிரச்சினைகளைக் கையாள்வதில் பாரிய வித்தியாசம் அவர்களுக்கும் நமக்குமிடையில் ஏற்படுகின்றது.