அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையை இலங்கை முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் தங்களது மார்க்க விடயங்களில் தங்களை நேரான வழியில் நடத்தும் ஒரு உயர்ந்த சபையாக கருதிக்கொண்டிருக்கின்றர்.
“இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எல்லா தரப்பினரையும் இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில் ஆன்மீக ரீதியாக வழிநடாத்துவதை” தங்கள் இலக்காக கூறிக்கொள்ளும் இச்சபையினர் இஸ்லாமிய போதனைகளின் மூலாதாரங்களான அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவையும் விட்டுவிட்டு அவை இரண்டையும் புரிந்து கொள்ளும் வழிமுறையான அல்லாஹ்வால் பொருந்திக்கொள்ளப்பட்ட ஸஹாபாக்களின் வழிமுறையையும் புறக்கணித்துவிட்டு பிற்காலத்தில் வந்த அஷ்அரிய்யா அகீதா மற்றும் ஷாபி மத்ஹப் நூல்களிலிருந்து அடிப்படையான மார்க்க போதனைகளையும் வழிகாட்டல்களையும் பெரும்பாலாக வழங்கி வருகின்றனர். இது இவர்கள் தங்களை நேரான வழியின்பால் வழிகாட்டி சுவனம் கொண்டுபோய் சேர்ப்பிப்பார்கள் என நம்பி இவர்களின் வழிகாட்டல்களை பின்பற்றிக்கொண்டிருக்கும் பாமர மக்களுக்குச் செய்யும் அமானித மோசடியாகும்.
நாம் பின்பற்ற வேண்டியது உலமா சபை வழியா?
இறைத் தூதர் வழியா?
உலமா சபையோடு சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தின் இருப்பு கருதி நல்ல காரியங்களில் ஒத்துழைக்க முடியுமானாலும் மார்க்கத்தில் முரண்பாடானவைகளில் அந்த சபையின் வழிகாட்டலை உதறித் தள்ளிவிட வேண்டும் என்பதே அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ அல்லது அஹ்லுல் ஹதீதுகளாகிய எமது பார்வையும் அதனைச் சார்ந்த இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்றுமாகும்.
அதாவது
إذا صح الحديث فهو مذهبي
"ஹதீஸ் ஸஹீஹ்தான்" என முடிவானால் அதுவே எனது மத்ஹப் என அறிவித்த இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்களின் கூற்றுக்கு முரணாக நடப்பது இந்த சபையின் நடைமுறையாக இருந்தால் நாம் அதனைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
இவர்களோடு அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆவாகிய நாம் முரண்படுவதற்கான காரணங்களில் சில:
1) அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆவைச் சார்ந்த மார்க்க மேதையான இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அகீதா என்ற அடிப்படைக் கோட்பாடுகளில் இமாம் ஷாஃபிஈ அவர்களை முழுமையாக ஒதுக்கி விட்டு இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ என்ற அறிஞர் வாபஸ் பெற்ற அவரது பழைய அகீதா கருத்துக்களை அகீதாவில் இறைத்தூதர் வழி போல பின்பற்றுவதுடன், சாதாரண ஃபிக்ஹ் விஷயங்களில் இமாம் அவர்களைப் பின்பற்றிக் கொண்டு ஃபத்வாக்களை வெளியிடுதல்.
2) நாட்டில் நிலவும் சமகால ஃபிக்ஹ் பிரச்சினைகள் சிலவற்றைத் தீர்க்க இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்களின் போதனைகள் உள்ளடங்கிய மூல நூலான الأم அல் உம்முவில் இருந்து ஃபத்வாக்களை எடுப்பதை தவிர்த்து பிற்கால நூல்களை முன்னிலைப்படுத்துதல்.
3) உலமா சபையில் அங்கத்துவம் வகிப்போர் பெரும்பாலானவர்கள் தப்லீக் ஜமாத்தைச் சார்ந்தோராக இருப்பதனால் அந்த ஜமாத்தை முன்னிலைப் படுத்தி நடந்து கொள்ளுதல்.
4) நபி வழியில் ஆதாரமற்ற தெளிவான பித்அத்துக்களையும் அநாச்சாரங்களையும் உலமா சபையின் அங்கத்தவர்கள் பலர் முன் நின்று வழி நடத்துதல்.
5) உலகில் பல மத்ஹபுகள் இருக்க அவற்றின் ஊர்ஜிதமான கருத்துக்களோடு ஷாஃபிஈ மத்ஹப் கருத்தையும் சேர்த்து எடுக்காமல் ஷாஃபிஈ மத்ஹப் மாத்திரம் உலகில் பின்பற்றத் தகுதியான மத்ஹப் போல அறிமுகம் செய்வது ஷாஃபிஈ மத்ஹப் அனைத்திலும் பூரணம் பெற்றது என்ற பொருளில் நடைமுறைப்படுத்துதல்.
6) அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ அல்லது ஸலஃப் மன்ஹஜ் வழி நடப்போரை அந்த வழியில் இருந்து திசை திருப்ப கப்ரு வணங்கிகள் வஹ்ஹாபி நாமம் சூட்டி சத்தியத்தை அறியாத பாமர முஸ்லிம்களைத் திசை திருப்புவதை மறைமுகமாக ஒப்புக் கொள்வதுடன், மீலாத் விழா, புகாரி ஓதுதல், நாரிஸா கந்தூரி, கத்தம் ஃபாத்திஹா, கூட்டுதுஆ, இருட்டு திக்ர் போன்றன உட்பட நபிவழிக்கு முரணான பித்அத்தான செயல்களைச் செய்கின்ற தமது உறுப்பினர்களைக் கூட கண்டு கொள்ளாது அதற்கு பகிரங்க ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குவது,
7) மாதத்தின் 29ம் நாள் பிறைபார்க்கச் சொல்லி மக்களை ஏவி விட்டுவிட்டு பின்னர் அந்நாளில் பிறை பார்த்ததாக பலர் சாட்சி சொன்னாலும் கூட இன்று பிறை தென்பட விஞ்ஞான அடிப்படையில் சாத்தியமில்லையே அல்லது நீங்கள் பார்த்தது வீனஸ் கிரகமாக இருக்கலாம் என கூறி பிறை சாட்சியங்களை மனமுரண்டாக நிராகரிப்பது
போன்ற இன்னோரென்ன விஷயங்களைக் கோடிட்டுக் காட்டலாம்.
ஆகவே இவ்வாறாக இறைதூதர் வழிகாட்டலுக்கு முரணாக செயல்படும் இவர்களோடு மார்க்க விடயங்களில் உடன்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்பதே இவர்கள் பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் இமாம் ஷாபி (ரஹி) அவர்களினது மார்க்க தீர்ப்பாகும். விரிவாக அறிய மத்ஹபுகள் பகுதியை பார்க்கவும்.
والله أعلم