யார் தனது கண்பார்வையை ஹராமானதை விட்டும் தாழ்த்திக் கொள்கின்றாரோ, அவருடைய அகப்பார்வையை அல்லாஹ் விசாலமாக்குவான்.
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்களின் ‘ரவ்ழதுல் முஹிப்பீன்’ எனும் நூலிலிருந்து சுருக்கமாக.
1. உள்ளத்தை கைசேதம் எனும் வேதனையை விட்டும் பாதுகாக்கும். யார் தனது பார்வையை அதிகம் செலுத்துகின்றாரோ, அவரது கைசேதம் நீடிக்கும். உள்ளத்தை அதிகம் பாதிக்கும் அம்சம் பார்வையை அதிகம் செலுத்துவதாகும். ஏனெனில் அது அவருக்கு, தேடுவது கஷ்டமான, அதேநரம் அவருக்கு அதைவிட்டு பொறுமையாகவும் இருக்கமுடியாத, அடையவும் முடியாத ஒன்றையே காட்டும். அதுவே அவனது உச்ச நோவினையும் வேதனையுமாகும்.
வேட்டைப் பிராணியில் அம்பு எதை செய்யுமோ, அதைத் தான் பார்வை உள்ளத்தில் செய்யும். உள்ளத்தை அது கொன்றுவிடாவிட்டாலும், காயப்படுத்திவிடும். அது காய்ந்த புற்களில் எறியப்படும் தீச்சுவாலையைப் போல. முழுமையாக சாம்பாலாக்காவிட்டலும், ஒரு பகுதியையேனும் சாம்பலாக்கிவிடும்.
பார்ப்பவன் அவனது பார்வையின் மூலமாக சில அம்புகளை எறிகின்றான். அவற்றின் இலக்கு அவனது உள்ளமே. அவன் அதை அறியமாட்டான். அவன் எறிவது தன் உள்ளத்தை நோக்கியே.
2. உள்ளத்திற்கு ஒளியையும் கண்ணிலும், முகத்திலும், உறுப்புக்களிலும் பிரகாசத்தையும் தருகின்றது. மறுபுறம், அதிகம் பார்வையை செலுத்துவது உள்ளத்திற்கு இருளைத் தரும். அவ்விருளின் தாக்கம் முகத்திலும் உறுப்புக்களிலும் வெளிப்படும். இதனாலேயே அல்லாஹ் அல்குர்ஆனில், ‘ஆயதுன் நூர்’ எனப்படும், ‘அல்லாஹ் வானங்களினதும் பூமியினதும் ஒளி’ என்ற வசனத்தை ‘(நபியே!) முஃமின்களுக்கு தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறு கூறுங்கள்’ என்ற வசனத்திற்குப் பிறகு கூறுகின்றான். (அல்லாஹு அஃலம்), ஹதீஸும் இதற்கு நேர்பாடாக, இவ்வசனங்களிலிருந்து எடுக்கப்பட்டது போலவே வந்துள்ளது. நபியவர்கள் கூறினார்கள், ‘பார்வை iஷத்தானின் அம்புகளில் நஞ்சூட்டப்பட்ட ஓர் அம்பாகும். யார் ஒரு பெண்ணின் அழகான அங்கங்களை விட்டும் தன் பார்வையைத் தாழ்த்திக் கொள்கின்றாரோ, அவரது உள்ளத்திற்கு அல்லாஹ் ஒளியைக் கொடுப்பான்.’
3. சரியான ‘பிராஸத்தை’ (1) (الفراسة) அது தரும். ஏனெனில் ‘பிராஸா’ என்பது ஒளியில் இருந்து வரும் ஒன்றாகும். மேலும் அதன் ஒரு பயனுமாகும். உள்ளம் ஒளிர்ந்துவிட்டால் ‘பிராஸா’ சரியாக இருக்கும். ஏனெனில் அப்போது உள்ளம் தூய்மைப்படுத்தப்பட்ட கண்ணாடியைப் போன்று தகவல்களை அவற்றின் உண்மைத் தன்மையுடன் காட்டும். பார்வை என்பது அக்கண்ணாடியில் மூச்சு விடுவதைப் போல. ஒரு அடியான் தன் பார்வையை அதிகம் செலுத்தும் போது, மனம், உள்ளத்தின் கண்ணாடியில் மூச்சுவிட்டு, அதன் ஒளியை அழித்துவிடும்.
அல்லாஹ் தஆலா அடியானின் செயல்களுக்கு அவற்றை ஒத்த கூலிகளையே வழங்குவான். யார் தனது கண்பார்வையை ஹராமானதை விட்டும் தாழ்த்திக் கொள்கின்றாரோ, அவருடைய அகப்பார்வையை அல்லாஹ் விசாலமாக்குவான். அவன் அல்லாஹ்வுக்காகத் தன் பார்வையை தடுத்துக்கொண்ட போது, அல்லாஹ் அவனது அகப்பார்வையை திறந்துகொடுக்கின்றான். யார் தனது பார்வையை ஹராமானதில் செலுத்துகின்றாரோ, அவரது அகப்பார்வையை அல்லாஹ் தடுத்துவிடுவான்.
4. அது அறிவின் வாயில்களையும், வழிகளையும் திறந்துகொடுக்கின்றது. அதன் காரணிகளை இலகுபடுத்துகின்றது. உள்ளத்தில் உள்ள ஒளியே அதற்கான காரணமாகும். ஏனெனில் உள்ளம் பிராகசமடைந்தால், அதில் தகவல்களின் யதார்த்தங்கள் விரைவாக வெளிப்பட்டுவிடும். மேலும் சில யதார்த்தங்களை வைத்து வேறு சில யதார்த்தங்களையும் அடைந்துகொள்வார். யார் பார்வையை அதிகம் செலுத்துகின்றாரோ, அவரது உள்ளம் கலங்கமடைந்து, இருண்டுவிடும். அறிவின் வாயில்களும் பாதைகளும் அடைபட்டுவிடும்.
5. உள்ளத்திற்கு சக்தியையும், உறுதியையும், வீரத்தையும் தருகின்றது. ‘ஆதாரம்’ எனும் பலத்துடன், ‘அகப்பார்வை’ எனும் பலத்தையும் தருகின்றது. முன்னோர்களில் ஒருவர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ‘யார் தனது மனோஇச்சைக்கு மாற்றம் செய்கின்றாரோ, அவரது நிழலைப் பார்த்தும் iஷத்தான் பயப்படுவான்’ இதனாலேயே, அல்லாஹ்வின் பொருத்தத்தை விட, தனது மனோஇச்சையை முற்படுத்தி, அதைப் பின்பற்றுபவனுடைய உள்ளத்தை அல்லாஹ் இழிவானதாகவும், பலவீனமானதாகவும், அற்பமானதாகவும் ஆக்கிவிடுகின்றான்.
6. பார்வையை செலுத்துவதால் உள்ளத்திற்கு கிடைக்கும் சந்தோசம், இன்பம் என்பவற்றை விட மகத்தான மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும், இன்பத்தையும் பார்வையைத் தாழ்த்துவது தருகின்றது. ஏனெனில், அவன் தனது எதிரியை, அவனுக்கும், மனதிற்கும், மனோஇச்சைக்கும் மாறுசெய்வதுகொண்டு அடக்குகின்றான். மேலும், பாவத்தை ஏவும் அவனது மனதின் சந்தோசம் இச்சையை அடைவதில் தான் இருக்கின்ற போதும், அவனது அவ்விச்சையையும், இன்பத்தையும் தவிர்ந்துகொண்ட போது, அதற்குப் பகரமாக, அதனை விட முழுமையான சந்தோசத்தையும், இன்பத்தையும் அல்லாஹ் அவனுக்குக் கொடுக்கின்றான். அதானாலேயே ஒரு அறிஞர், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! பேணிப்பின் இன்பம் பாவத்தின் இன்பத்தை விட மகத்தானது’ என்று கூறுகின்றார்.
உள்ளம் தனது மனோஇச்சைக்கு நேர்படுவதில் அடையும் இன்பத்தை விட பன்மடங்கு முழுமையான இன்பத்தையும் சந்தோசத்தையும் அது மனோஇச்சைக்கு மாறுசெய்யும் போது அடைந்துகொள்கின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இங்கு தான் புத்தி மனோஇச்சையிலிருந்து வேறுபடுகின்றது.
7. உள்ளத்தை இச்சையின் கைதிலிருந்து விடுவிக்கின்றது. உண்மையான கைதி தன் மனோஇச்சையினதும், ஆசையினிதும் கைதியே.
எப்போதாவது உள்ளத்தை மனோஇச்சை கைதுசெய்துவிட்டால், அவ்வுள்ளத்தின் எதிரி(யாகிய ஷைத்தான்) அதனைக் கட்டுப்படுத்தி, கடுமையாக வேதனை செய்வான்.
8. பார்வையைத் தாழ்த்துவது நரக வாயில்களில் ஒரு வாயிலை அடைக்கின்றது. ஏனெனில் பார்வை அதற்கடுத்த செயலைச் செய்யத் தூண்டும் இச்சையின் வாயிலாகும். அல்லாஹ்வின் தடையும், மார்க்கமும் அதை அடைவதை விட்டும் தடுக்கின்றது. எனவே இத்திரையை கிழித்துவிட்டால், தடுக்கப்பட்டவற்றை செய்யத் துணிந்துவிடுவான். அதில் அவனது மனம் தீர்ச்சை ஒன்றை அடையவும் மாட்டாது. ஏனனில் இந்த வாயிலில் உள்ளம் ஓர் எல்லையுடன் நின்றுவிடாது. அதன் இன்பம் புதியவைகளிலேயே இருக்கும். புதியதை அடைபவன் பழையதில் திருப்திகாணமாட்டான். பழையது அழகான தோற்றமும், நல்ல உள்ளமும் கொண்டதாக இருந்தாலும் சரியே.
எனவே பார்வையைத் தாழ்த்துவது மன்னர்களுக்குக் கூட தங்கள் எதிர்பார்ப்புகளை முழுமையாக அடையமுடியாது போன இந்த வாயிலை மனிதனை விட்டும் அடைத்துவிடும்.
9. பார்வையைத் தாழ்த்துவது அவரது புத்தியைப் பலப்படுத்தவும், அதிகரிக்கவும், உறுதிப்படுத்தவும் செய்யும். ஏனெனில், பார்வையை அதிகம் செலுத்துவதென்பது, புத்திக் குறைபாடு, புத்திக் கோளாறு, பின்விளைவுகளை சிந்திக்காமை என்பவற்றாலே நிகழ்கின்றது. ஏனெனில் புத்தியின் சிறப்பம்சம் பின்விளைவுகளை சிந்திப்பதாகும். பார்வையை அதிகம் செலுத்துபவர், அவரது பார்வையின் பின்விளைவுகள் கொண்டுவரும் பாதிப்புக்களை அறிந்திருந்தால், அவரது பார்வையை செலுத்தியிருக்கமாட்டார்.
10. அது உள்ளத்தை இச்சை எனும் போதை மற்றும் பராமுகம் எனும் தூக்கம் என்பவற்றை விட்டும் பாதுகாக்கின்றது. ஏனெனில் பார்வைகளை அதிகம் செலுத்துவது அல்லாஹ்வையும் மறுமையையும் விட்டு உள்ளத்தை முழுமையாக பராமுகமாக்கிவிடும். மேலும், காதல் எனும் போதையில் வீழ்த்திவிடும். பார்வை என்பது ஒரு மதுக்குவளை. காதல்தான் அப்பானத்தின் போதை. காதல் போதை மதுப் போதையை விட கொடியது. ஏனெனில் மதுப் போதையில் இருப்பவன் விழித்துக் கொள்வான். காதல் போதையில் இருப்பவன் மரணித்த பின்னரே தவிர, மிக அரிதாகவே விழித்துக்கொள்வான்.
(11) மனித உடலின் வெளித்தோற்றங்களை வைத்து, அவனது மறைவான குணங்கள், இயல்புகள் பற்றி அறிதல். இது பலவகைப்படும். ஒவ்வொரு வகைக்கும் தனியான சட்டங்கள் உண்டு.