நோன்பாளி அல்லாஹ்வுடன் நேரடியாக பேச முடியுமா?

சமூக வலைத்தளங்களில் பரவிவரும் இச்செய்தி சரியானதா ? பதில் தரவும்..

ஒரு தடவை மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள் யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார் அதற்கு அல்லாஹு தஆலா மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன்  கூட்டத்தினரை அனுப்புவேன்.அவர்கள் காய்ந்த உதடுகளுடனும்; வரண்ட நாவுடனும், மெலிந்து, கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு; வயிற்றில் பசியுடன் என்னை அழைப்பர் (துஆ மூலம்) அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள். மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன... ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது. மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது. அதற்கான பொறுப்பை நானே ஏற்கிறேன், என்றான்.

பதில் - இந்த செய்தியை நம்பத்தகுந்த ஹதீஸ்கலை மேதைகளோ அறிஞர்களோ தமது எந்த  அடிப்படை ஹதீஸ் மூலாதார நூல்களிலும் பதிவு செய்யவில்லை.

அப்துர் ரஹ்மான் பின் அப்துஸ் ஸலாம் அஸ்ஸபூfரி அவர்களுடைய  நுஸ்ஹதுல் மஜாலிஸ் வமுன்தஹபுந் நஃபாயிஸ் என்ற புத்தகத்தில் 182,183 பக்கங்களிலும் இஸ்மாஈல் ஹக்கீ அல் ஹனபீ அல் ஹல்வதீ அவர்களுடைய தஃப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 8, பக்கம் 112 ம் இச்செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.. மேலும் இது போன்ற கட்டுக்கதைகள், புனைந்துரைக்கப்பட்ட செய்திகள் அதிகமாக பதிவாகியுள்ள சில நூல்களிலிலே இந்த செய்தி பதிவாகியுள்ளது. 

இது ஓர் அடிப்படை ஆதாரமற்ற, இட்டுக்கட்டப்பட்ட செய்தி மட்டுமல்லாது  உலுல் அஸ்ம்களில் ஒருவரான நபி மூஸா (அலை) அவர்களை விட இந்த உம்மத்திலுள்ள சாதாரண ஒருவரையும் இதன் மூலம் சிறப்புமிக்கவராகக் காட்டும் வகையில் இந்த செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது நேரடியாகவே முஃமினின் அகீதாவை பாழ்ப்படுத்தும் விதமாக வந்துள்ளதால் இதனை ஹதீஸ் என்றோ நபிகளாரோடு இணைத்தோ சொல்வது மிகப்பெரும் பாவமாகும். 

-முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி
Previous Post Next Post