இறுதித்தூதரை உறுதியாகப் பின்பற்றுவதின் முக்கியத்துவம்

நபிவழியைப் பின்பற்றுவதின் முக்கியத்துவம் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் ஓர் அங்கம். முற்கால அறிஞர்களில் ஒருவரான இமாம் மாலிக், ‘நபிவழி (சுன்னா) என்பது நூஹின் கப்பல் போல. யார் அதில் ஏறிக்கொண்டார்களோ அவர்கள் ஈடேற்றம் அடைவார்கள். யார் அதை மறுத்துவிட்டாரோ அவர் மூழ்கடிக்கப்படுவார்’ என்று கூறியுள்ளார். இதை இமாம் இப்னு தைமிய்யா தமது ஃபதாவா (4/57) தொகுப்பில் மேற்கோள் காட்டியுள்ளார். நபி முஹம்மது (ஸல்) அவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: யார் எனக்குக் கட்டுப்பட்டாரோ அவர் சொர்க்கம் நுழைவார். யார் எனக்கு மாறுசெய்தாரோ அவர் நரகம் நுழைவார். (புகாரீ)
 
 
முஹம்மது நபிகளாரின் தூதுத்துவ அந்தஸ்தை நம்பிக்கைகொள்தல்

ஒரு முஸ்லிமின் இறைநம்பிக்கையில் அவர் முஹம்மது நபிகளாரின் தூதுத்துவ அந்தஸ்தை நம்பிக்கைகொள்வதும் அடங்கும்.
 
நபியவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் ஐந்தின் மீது கட்டப்பட்டுள்ளது. (அவற்றில் முதலாவது) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவதாகும்.. (புகாரீ, முஸ்லிம்)
 
நபிகளாரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்தல்

நபிவழியையும் நபிகளாரின் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்வதும் இறைநம்பிக்கையின் அங்கமாகும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்கின்ற தீர்ப்பை தங்கள் உள்ளங்களில் எவ்வித அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள், அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள். (அல்குர்ஆன்4: 65)
 
நபிவழியைப் பின்பற்றுவதின் மூலம் அல்லாஹ்வின் நேசத்தை அடைதல்

அல்லாஹ்வின் நேசம் என்பது நபிவழியைப் பின்பற்றுவதைக்கொண்டே அடைய முடியும். அல்லாஹ் கூறுகிறான்:
(நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான்;  உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்துவிடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 3: 31)
 
நற்செயல்கள் ஏற்கப்பட நிபந்தனைகள்

நற்செயல்கள் அல்லாஹ்விடம் ஏற்கப்படுவதற்கு அது நபிவழிப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனையாகும்.

நபியவர்கள் கூறினார்கள்: யார் நாம் கட்டளையிடாத ஒன்றைச் செய்கிறாரோ அச்செயல் நிராகரிக்கப்படும். (புகாரீ, முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பில்: நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் ஏற்படுத்துகிறாரோ அவருடைய அச்செயல் நிராகரிக்கப்படும். (முஸ்லிம்)
 
நபிவழியை எதிர்ப்பதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்

அல்லாஹ் கூறுகிறான்:
எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்தோ, தங்களைத் துன்புறுத்தக்கூடிய வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கட்டும்.(அல்குர்ஆன்24: 63)
 
நபிவழியை எதிர்ப்பதுதான் வழிகேடுகளுக்குக் காரணம்

அல்லாஹ்கூறுகிறான்: அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விசயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அந்த விசயத்தில் (அதனை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விசயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். (அல்குர்ஆன்33: 36)
 
நபிவழியை எதிர்ப்பதுதான் சமுதாயத்திலுள்ள கருத்துவேறுபாடுகளுக்கும் பிரிவினைகளுக்கும் முக்கிய காரணம்

அல்லாஹ்கூறுகிறான்:
நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும். அதனையே நீங்கள் பின்பற்றுங்கள்; மற்ற வழிகளைப் பின்பற்றிவிடாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமுடையவர்களாய் ஆவதற்காகவே அவன் இவற்றை உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.(அல்குர்ஆன் 6: 153)
 
நபிவழியை எதிர்ப்பது இம்மை மறுமை இரண்டிலும் இழிவைக் கொண்டு வரும்

அல்லாஹ் கூறுகிறான்:
எவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்எதிர்க்கின்றார்களோ, அவர்கள் இழிவுக்குள்ளாவார்கள்.(அல்குர்ஆன் 58: 20)
 
நபிகளாரும் கவ்ஸர் நீர்த்தொட்டியும்

நபிவழியை எதிர்ப்பவர்கள் கவ்ஸர் நீர்த்தொட்டியிலிருந்து நபிகளாரிடம் நீர் பருகுவதிலிருந்து துரத்தப்படுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு துரத்தப்படுவார்கள். உடனே நான் "இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்பேன். அதற்கு இறைவன் "உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்'' என்று சொல்வான்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புகாரீ 6585)
 
நபிவழியை எதிர்ப்பதுதான் நரகத்திற்கு வழிவகுக்கிறது

அல்லாஹ் கூறுகிறான்:
எவர் நேரான வழி இன்னதென்று தமக்குத் தெளிவான பின்னரும் அல்லாஹ்வுடைய இத்தூதரை விட்டுப் பிரிந்து அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்க(ளான நபித்தோழர்க)ஜன் வழி அல்லாததில் செல்கின்றாரோ அவரை நாம் அவர் செல்கின்ற (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்பு) அவரை நரகத்தில் சேர்த்துவிடுவோம். செல்கின்ற இடங்களில் அதுவே மிகக் கெட்டது.(அல்குர்ஆன்4: 115)
 
இதன் காரணமாவது: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (மிகக் கடினமாக) எதிர்த்தார்கள் என்பதுதான். (இவ்வாறு) எவன் அல்லாஹ்வை எதிர்க்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாக இருக்கின்றான்.  (அல்குர்ஆன்59: 4)
 
Previous Post Next Post