அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும் முறை

இஸ்லாமிய மார்க்கத்தில் அகீதா என்றால் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய வானவர்கள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள் மற்றும் விதியின் நன்மை தீமை ஆகிய விசயங்களின் மீது நம்பிக்கை வைப்பதைக் குறிப்பிடும். இவையே ஈமான் எனும் நம்பிக்கையின் ஆறு தூண்கள்.
 
அகீதா என்பது தவ்கீஃபிய்யா ஆகும். அதாவது, இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களான குர்ஆனிலிருந்தும் நபிவழியிலிருந்தும் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டே நிரூபிக்க வேண்டும். அகீதாவானது இவ்விரண்டு ஆதாரங்களுக்கும் கட்டுப்பட்டதாகும். இவற்றைத் தாண்டி எதுவும் அகீதாவில் எடுக்கப்படாது என்பதே தவ்கீஃபிய்யா என்பதின் பொருளாகும்.
 
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதே ஈமானுடைய முதல் தூணாகும். இஸ்லாமிய நம்பிக்கைகளின் மையக்கருவே அல்லாஹ்வின் மீதான நம்பிக்கைதான். ஒருவர் இந்நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள “லா இலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) என்று உறுதிமொழி கூற வேண்டும். இதற்குப் பெயர்தான் அரபுமொழியில் தவ்ஹீது என்பார்கள்.
 
அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரேயொரு இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு எவனுமில்லை. (அல்குர்ஆன் 2.163)
 
அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை: இந்த நம்பிக்கை (ஈமான்) நான்கு விசயங்களை உள்ளடக்கியதாகும்.
1. அல்லாஹ் இருக்கிறான் என்ற நம்பிக்கை
2. அல்லாஹ்வின் இறைமை (படைத்தல், வளர்த்தல், ஆட்சிபுரிதல்) மீது நம்பிக்கை
3. அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்ற நம்பிக்கை
4. அல்லாஹ்வின் அழகிய பெயர்கள், பண்புகள் மீது நம்பிக்கை
 
இவற்றை பின்வரும் பொருளடக்கத்தில் விரிவாக பார்ப்போம்.

பொருளடக்கம்:

அல்லாஹ் இருக்கிறான் எனும் நம்பிக்கை
அல்ஃபித்ரா (உள்ளுணர்வு)
அல்அக்ல் (ஆராய்ந்து அறிகின்ற தர்க்கப்புத்தி)
அஷ்ஷரீஆ (மார்க்கம்)
அல்ஹிஸ் (புலன்களால் அறிதல்)
அல்லாஹ்வின் இறைமை குறித்த நம்பிக்கை
அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரியவன் எனும் நம்பிக்கை
அல்லாஹ்வின் அழகிய பெயர்கள், பண்புகள் மீது நம்பிக்கை
தஹ்ரீஃப் (மாற்றுதல்)
தஅதீல் (மறுத்தல்)
தம்ஸீல் (ஒப்பிடுதல்)
தக்யீஃப் (கேள்வி கேட்டல்)
ஆதாரக்குறிப்புகள்
 
அல்லாஹ் இருக்கிறான் என்ற நம்பிக்கை

முதல் கோணம்: அல்லாஹ் இருக்கிறான் என்ற நம்பிக்கையை பின்வரும் வழிகளில் நிறுவ முடியும்.
அல்ஃபித்ரா (இயற்கையாகவே உண்மையின் பக்கம் உள்ளுணர்வு ஈர்க்கப்படுதல்)
 
அல்அக்ல் (ஆராய்ந்து அறிகின்ற தர்க்கப் புத்தி)
 
அஷ்ஷரீஆ (இறைச்செய்தியும் வேதங்களும்)
 
அல்ஹிஸ் (புலன்களால் அறியும் உணர்வு)
 
1. அல்லாஹ் இருக்கிறான் என்பதை அவன் மனிதனுக்குள் விதைத்துள்ள உள்ளுணர்வின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இதற்கு மார்க்க ஆதாரங்களும் பல உள்ளன.
 
ஒவ்வொரு மனிதனும் தன்னைப் படைத்தவன் ஒருவன் உண்டு எனும் நம்பிக்கையோடுதான் படைக்கப்படுகிறார்கள். இதற்கு யாரும் பாடம் புகட்டத் தேவையில்லை. வெளியுலகில் உள்ள வழிகெடுக்கும் காரணிகளின் மூலம்தான் ஒருவர் தமது இந்த உள்ளுணர்வைக் கெடுத்துக்கொள்கிறார்.
 
“எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன.பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ 1358)
 
2. அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு அல்அக்ல் எனும் பகுத்தறிவின் ஆதாரங்களை நாம் கடந்த கால, நிகழ் கால விசயங்களைக் கொண்டு அறிய முடியும். அனைத்துக்கும் ஒரு படைப்பாளன் இருக்க வேண்டும். அவனின்றி எதுவும் வந்திருக்காது. எதுவும் தானாக படைத்துக்கொண்டிருக்காது. அதேபோல் எதுவும் தற்செயலாகவோ, எதிர்பாரா விதமாகவோ திடீரென்று தானாகத் தோன்றியிருக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு புதிய விசயமும் அது தோன்றுவதற்குப் பின்னணியாகச் சில காரணங்களைக் கொண்டுள்ளது. இன்னொருபுறம், படைப்புகளிடத்தில் ஆச்சரியப்படத்தக்க ஓர் ஒழுங்கு அமைந்துள்ளது. ஒன்றின் அமைப்பில் இன்னொன்றின் தாக்கம் இணைந்துள்ளது. இந்த அனைத்தும் இவை தானாகத் தோன்றியிருக்க முடியாது என்பதை உறுதியாகத் தெரிவிக்கின்றன.
 
எதுவும் தானாகத் தோன்றியிருக்க சாத்தியமில்லை என்பது உறுதியானால், அதன் பிறகு அல்லாஹ் ஒருவனால்தான் அவை படைக்கப்பட்டிருக்க முடியும் என்பது உறுதியாகிவிடுகிறது. அல்லாஹ்தான் எல்லா உலகங்களின் இறைவன். அல்லாஹ் இந்தப் பகுத்தறிவின் ஆதாரத்தைக் குர்ஆனின் அத்தூர் எனும் அத்தியாயத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:
அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டார்களா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டார்களா? (அல்குர்ஆன் 52.35)
 
இப்பிரபஞ்சம் நேர்த்தியாக இயங்கி வருகிறது. எந்த இடையூறும் இல்லை. கோள்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளவில்லை.
 
சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன்னுடைய வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் 36.40)
 
இதனால்தான் ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) அவர்கள்,“படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் படைக்கப் பெற்றார்களா? அல்லது தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? உண்மையாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. அல்லது உம் இறைவனின் கருவூலங்கள் இவர்களின் பிடியில் இருக்கின்றனவா? அல்லது அவற்றின் மீது இவர்களின் ஆதிக்கம்தான் நடைபெறுகிறதா?’’ எனும் அத்தூர் அத்தியாயத்தின் வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதிடக் கேட்டபோது, அப்போது இணைவைப்பாளராக இருந்த ஜுபைர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: “எனது இதயம் சிறகடிக்கத் தொடங்கியது; என் உள்ளத்தில் ஈமான் இடம்பிடித்ததன் ஆரம்பம் இதுதான்.” (ஸஹீஹுல் புகாரீ 4854)
 
3. இறைவன் இருக்கின்றான் என்பதற்குமார்க்கத்தின் ஆதாரங்கள்:
அல்லாஹ்இறக்கிய வேதங்கள் அனைத்தும் இந்த உண்மையக்கூறுகின்றன.
 
மக்கள் நலன்களை உள்ளடக்கிய சட்டங்களை அந்த வேதங்கள் வழங்கியிருப்பது,நுண்ணறிவாளனும் மக்களின் நலன்களை நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்விடம்இருந்துதான் அவ்வேதங்கள் அருளப்பட்டன என்பதற்கு ஆதாரமாகும்.மேலும் பிரபஞ்சத்தைப்பற்றி என்னென்ன செய்திகளை அவ்வேதங்கள் அளித்துள்ளனவோ அவை உண்மையானவைதான் என்று யதார்த்தம்சாட்சியாக உள்ளது.அவ்வேதங்கள் இறைவனால் இறக்கியருளப்பட்டவைதான் என்பதற்கும், தான் அறிவித்தவற்றை உண்டாக்கிட அவன் ஆற்றல் பெற்றவன்தான் என்பதற்கும் ஆதாரமாக உள்ளது.
 
4. அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குப் புலன்கள் அளிக்கும் ஆதாரங்கள் இரண்டு கோணங்களிலாகும்.ஒன்று, பிரார்த்தனை செய்பவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதையும் துன்பத்திற்குள்ளானோர் காப்பாற்றப்படுவதையும் நாம் கேள்விப்படுகிறோம்; கண்கூடாகக் காண்கிறோம்.
 
அல்லாஹ் கூறுகிறான்:“(இதே அருட்பேற்றினை) நூஹுக்கும் நாம் வழங்கினோம். முன்னர் அவர் நம்மிடம் பிரார்த்தனை செய்ததை நினைவுகூரும். நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்.’’   (அல்குர்ஆன் 21:76)
 
மேலும் கூறுகிறான்:“உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி கேட்டு முறையிட்டுக் கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள்.அப்போது அவன் அதற்குப் பதிலளித்தான்.’’  (அல்குர்ஆன் 8:9)
 
இரண்டாவது,நபிமார்களுக்கு வழங்கப்பட்ட சான்றுகள். அவை முஃஜிஸாத் என்று சொல்லப்படுகின்றன; மக்கள் அவற்றை நேரடியாகக் காண்கிறார்கள்; அல்லது கேள்விப்படுகிறார்கள். இத்தகைய சான்றுகள், அந்நபிமார்களை அனுப்பி வைத்த அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு உறுதியான ஆதாரங்களாகும்.ஏனெனில் அந்த முஃஜிஸாக்கள் மனித சக்திக்க அப்பாற்பட்ட விஷயங்களர் இருக்கின்றன. அல்லாஹ் தன்னடைய தூதர்களுக்கு உதவியும் ஊக்கமும் அளிப்பதற்காக அவற்றை நிகழ்த்திக் காட்டுகின்றான்.
 
உதாரணத்திற்குமூஸா நபிக்கு வழங்கப்பட்ட சான்று. தனது கைத்தடியைக் கொண்டு கடலினை அடிக்குமாறு மூஸா நபியை அல்லாஹ் ஏவினான். அவ்வாறே மூஸா நபி கடலினை அடித்தார்கள். அது பன்னிரண்டு உலர்ந்த பாதைகளாகப் பிளந்தது. அவற்றிற்கிடையே தண்ணீர் மலை போன்று நின்றது.
 
அல்லாஹ் கூறுகின்றான்:“நாம் மூஸாவுக்கு வஹியின் மூலம் கட்டளையிட்டோம், உமது கைத்தடியினால் கடலை அடியும் என்று! உடனே கடல் பிளந்தது. மேலும் அதன் ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்றதாகிவிட்டது!’’ (அல்குர்ஆன் 26:63)
 
இன்னோர் உதாரணம், ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட சான்று. மரணம் அடைந்தோரை அல்லாஹ்வின் அனுமதி கொண்டுஉயிர்ப்பிக்கக்கூடியவராகவும் அடக்கத்தலங்களில்இருந்து வெளிக்கொணர்பவராகவும் அவர்கள் இருந்தார்கள்.இதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்:
மேலும் ஈஸா கூறினார்:இறந்தவர்களை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உயிர் பெற்றெழச் செய்வேன். (அல்குர்ஆன் 3:49)
 
அல்லாஹ்வின் படைத்து பரிபாலிக்கும் ஆற்றலை நம்புவது (அதாவது, படைத்துப் பரிபாலிப்பவன் அவன் ஒருவனே; அவனுக்கு இணையாகவோ துணையாகவோ யாரும் இல்லை என்று நம்புவது)
 
ரப்பு என்றால்படைப்பாற்றல், ஆட்சியதிகாரம், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் ஆகியன உடையவன்என்று பொருள். எனவே, அல்லாஹ்வைத் தவிர வேறு படைப்பாளன் இல்லை. ஆட்சியதிபதி அவனைத்தவிர வேறில்லை. கட்டளை பிறப்பிக்கும் அதிகாரி அவனைத்தவிர வேறு யாரும் இல்லை. அவன் அனைத்தையும் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தான்.
 
அல்லாஹ் கூறுகிறான்:அவனேவானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றியே படைத்தவன்.(அல்குர்ஆன் 2.117)
 
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும் பூமியையும் அவனே படைத்தான்.(அல்குர்ஆன் 35.1)
 
அறிந்து கொள்ளுங்கள்! படைக்கும் ஆற்றலும் கட்டளைப் பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவை. (7:54)
 
(நபியே!) நீர் (அவர்களை நோக்கி), ‘வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? (உங்களுடைய) செவிப்புலனுக்கும் பார்வைகளுக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (உலகின்) எல்லா விவகாரங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்?” என்று கேட்பீராக! அதற்கவர்கள், ‘அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். அப்படியானால் (அந்த) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக!(10.31)
 
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள எல்லா விசயங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். (ஒவ்வொன்றின் முடிவும்) ஒரு நாளன்று அவனிடமே சென்றுவிடும்.(32.5)
 
மேலும் கூறுகிறான்:“அந்த அல்லாஹ்தான் உங்களின் இறைவன். ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியதாகும். அவனை விடுத்து நீங்கள் யார் யாரை அழைக்கிறீர்களோ அவர் ஓர் இம்மியளவுப் பொருளுக்கும் உரிமையாளர்கள் அல்லர். (35:13)
 
இந்த வகையான ஏகத்துவ நம்பிக்கையை மட்டும் ஏற்றுக்கொள்கிறவர் இஸ்லாமில் நுழைந்தவராகமாட்டார். அவருக்கு நரகத்தை விட்டுப் பாதுகாப்பும் கிடைக்காது. இஸ்லாமை ஏற்க மறுத்தவர்களும் கூட அல்லாஹ்வின் இறைமை, வல்லமை மீது நம்பிக்கை வைத்திருக்கவே செய்தார்கள். என்றாலும் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைந்தவர்களாகக் கருதப்படவில்லை. அவர்களை இணைவைப்பாளர்கள் என்றும் காஃபிர்கள் (இறைமறுப்பாளர்கள்) என்றுமே அல்லாஹ் குறிப்பிடுகிறான். அவர்கள் என்றென்றும் நரகில் இருப்பார்கள் என்றும் உறுதிசெய்கிறான்.
 
எனவே ஓர் இறையடியார் தவ்ஹீது ருபூபிய்யா எனும் அல்லாஹ்வின் இறைமை மீது நம்பிக்கை வைப்பதுடன், அவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன் எனும் தவ்ஹீது உலூஹிய்யாவின் மீதும் நம்பிக்கை வைத்து அதை நிலைநாட்டினால்தான் அவர் ஏகத்துவக்காரர் ஆவார்.
 
தவ்ஹீது ருபூபிய்யா (அல்லாஹ்வின் இறைமை மீதான நம்பிக்கை), தவ்ஹீது உலூஹிய்யாவை வலியுறுத்துகிறது. அதாவது, ஒருவர் அல்லாஹ்தான் படைப்பவன், வளர்ப்பவன், அனைத்தையும் ஆட்சி செய்பவன் என்று நம்பிவிட்டால், அவர் அந்த அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பது தெளிவாகிவிடுகிறது. வணங்கத்தகுதியானவன் அவன் மட்டுமே என்றும் அவனைத் தவிர யாரும் வணங்கப்படக் கூடாது என்றும் அது உறுதிசெய்கிறது. எல்லா வகை வணக்கங்களும் அவனுக்கே உரித்தானது. நேர்ச்சையாக இருந்தாலும், அறுத்துப் பலியிடலாக இருந்தாலும் அனைத்துமே அந்த அல்லாஹ்வுக்குத்தான்.
 
அல்லாஹ்வே வணக்கத்திற்குரியவன் (உலூஹிய்யா) எனும் நம்பிக்கை

அல்லாஹ்தான் உண்மையில் வணக்கத்திற்குரிய இறைவன். அவனது வணக்கத்தில் யாரும் பங்கு பெற முடியாது. ஒரு வானவராக இருந்தாலும் நபியாக இருந்தாலும் யாரும் அதில் உரிமை பெற முடியாது. ஆகவே எல்லா இறைத்தூதர்களின் ஒரே அழைப்பும் முதல் அழைப்பும் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) என்பதாகவே இருந்தது.
 
உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், ‘நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் ‘வஹ்யி’ அறிவிக்காமலில்லை.(21.25)
 
(பூமியின் பல பகுதிகளிலும் வசித்திருந்த) ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் நிச்சயமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி,) ‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (அவனை வணங்குவதிலிருந்து உங்களை வழிகெடுக்கிற ஷைத்தான்களாகிய எல்லா) ‘தாகூத்’தைவிட்டும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்” என்(று கூறிச் சென்)றார்கள்.(16.36)
 
உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரேயொரு இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு எவனுமில்லை. (2.163)
 
(நபியே!) நீதியாளனாகிய அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் இல்லவே இல்லை.” இவ்வாறே வானவர்களும் (வேதத்தை அறிந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றார்கள்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை. (3.18)
 
ஜின்களையும், மனிதர்களையும் (அவர்கள் எனக்குக் கட்டுப்பட்டு) என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் நான் எந்த ஒரு பொருளையும் கேட்கவில்லை. மேலும், எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை. (51.56,57)
 
எனவே தவ்ஹீது உலூஹிய்யாதான் எல்லா இறைத்தூதர்களாலும் தங்கள் சமுதாயங்களுக்கு அளிக்கப்பட்ட செய்தியாகும். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்கிற இந்த வகை தவ்ஹீதுதான் அந்தத் தூதர்களுக்கும் அவர்களின் சமுதாயங்களுக்கும் இடையே சர்ச்சையை உருவாக்கியது. இந்த வகை தவ்ஹீதுக்காகவே அத்தூதர்கள் அந்த இணைவைப்பாளர்களிடம் போர் புரிந்தார்கள். அம்மக்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை விட்டுவிடும்வரை தொடர்ந்து போராடினார்கள். இதுவே லா இலாஹ இல்லல்லாஹ் என்ற ஏகத்துவ உறுதிமொழியின் அர்த்தமும் ஆகும்.
 
அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் நம்பிக்கை கொள்தல்

அஸ்மா வஸ்ஸிஃபாத் என்றால் பெயர்கள் மற்றும் பண்புகள் என்று பொருள். அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் நம்பிக்கைகொள்வது தவ்ஹீதின் மிக முக்கிய அம்சமாகும். அல்லாஹ் தன்னுடைய குர்ஆனிலும் அவனுடைய தூதர் தமது சொற்களிலும் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளாக என்னவெல்லாம் குறிப்பிட்டுள்ளார்களோ, அவை அனைத்தும் அப்படியே ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்துவதே இவ்வகை தவ்ஹீதின் நோக்கமாகும். அப்பெயர்களையும் பண்புகளையும் அல்லாஹ்வின் மகத்துவத்திற்கு ஏற்ப ஏற்றுக்கொண்டு அவற்றை மாற்றாமலும், மறுக்காமலும், விவரிக்காமலும், ஒப்பிடாமலும் நம்பிக்கைகொள்ள வேண்டும்.
 
நமக்கு முன்சென்ற நல்லோர்களான நபித்தோழர்கள் இவ்வாறே அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் அவனுக்குக் கீழ்ப்படிந்த நிலையில் ஏற்று நம்பிக்கைகொண்டார்கள். அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.) அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக்கூறுபவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் அடைவார்கள். (7.180)
 
அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் தனக்கென அழகிய பெயர்களைக் கொண்டுள்ளான் என்று இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது.
 
வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (வர்ணனையும் பரிசுத்தப்) பண்பும்தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைப்பவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.(30.27)
 
முழுமை பெற்ற பண்புகள் அல்லாஹ்வுக்கே உரியன என்பதை இவ்வசனம் ‘அவனுடைய பண்புதான் மிக்க மேலானது’ எனும் வார்த்தையால் தெளிவுபடுத்துகிறது.
 
இந்த இரண்டு வசனங்களும் இரண்டு விசயங்களை உறுதிப்படுத்துவது குறித்து பொதுவாக பேசுகின்றன.
அல்லாஹ்வின் பெயர்கள்.
 
அல்லாஹ்வின் பண்புகள்
 
இவை குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள குர்ஆனிலும் நபிமொழியிலும் நிறைய செய்திகள் உள்ளன.
 
அல்லாஹ் கூறுகிறான்: அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். (42.11)
 
தவ்ஹீதின் வகைகளில் இந்த வகைதான் சமுதாயத்தில் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்துள்ளது. அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் குறித்த அறிவில் கருத்துவேறுபாடு கொண்டு சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. இவ்விசயத்தில் நம்முடைய அணுகுமுறை என்பது அல்லாஹ்வின் பின்வரும் வசனத்தின் அடிப்படையிலாகும். அவன் கூறுகிறான்:
ஏதேனும் ஒரு விசயத்தில் உங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டால், உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அ(து பற்றி தீர்ப்பளிக்கின்ற அதிகாரத்)தை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் திருப்பி (ஒப்படைத்து)விடுங்கள். (4.59)
 
நாம் இவ்விசயத்தில் வரும் கருத்துவேறுபாடுகளை அல்லாஹ்வின் வேதத்தைக்கொண்டும் அவனது தூதரின் வழிமுறை கொண்டும் தீர்த்துக்கொள்வோம். இப்படித்தான் நமது முன்சென்ற நல்லோர்களான நபித்தோழர்கள், தாபிஈன் மற்றும் அவர்கள் வழிவந்தவர்கள் அணுகினார்கள். அவர்கள் குர்ஆனுடைய வசனங்களையும் நபிமொழிகளையும் புரிந்துகொள்வதில் இச்சமுதாயத்தைச் சேர்ந்த யாரைக் காட்டிலும் ஆழமான அறிவுள்ளவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் என்ன குறிப்பிடுகிறார்கள் என்பதில் தெளிவாக இருந்தார்கள்.
 
நபித்தோழர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள்: “யாரெல்லாம் ஒரு பாதையைப் பின்பற்றிச் செல்ல விரும்புகிறாரோ, அவர் இறந்துவிட்டவர்களின் பாதையைப் பின்பற்றட்டும். உயிரோடு இருப்பவர்கள் சோதனைக்கு உள்ளாகமாட்டார்கள் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. அந்த இறந்துவிட்டவர்கள் என்பவர்கள் நபி முஹம்மதின் தோழர்களாவர். இந்தச் சமுதாயத்தில் அவர்கள்தாம் மிகவும் தூய்மையான இதயங்களைக் கொண்டிருந்த பயபக்தியாளர்கள். மிகச் சிறந்தவர்கள். மிக ஆழமான கல்வி உள்ளவர்கள். அல்லாஹ் அவர்களைத் தனது மார்க்கத்தை நிலைநாட்டவும், தன் நபிக்குத் தோழர்களாகவும் தேர்ந்தெடுத்துள்ளான். எனவே அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். அவர்களின் அந்தஸ்தைத் தெரிந்துகொண்டு அவர்களின் பாதையில் நடைபோடுங்கள். அவர்கள்தாம் உண்மையில் நேரான பாதையில் இருந்தவர்கள்.”
 
இவ்விசயத்தில் யாரெல்லாம் நமது நல்ல முன்னோர்களின் பாதையிலிருந்து தடம்புரண்டு செல்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொருவரும் வழிகெட்டுப் போவார்கள். தவறு செய்வார்கள். முஃமின்களின் பாதை அல்லாத வேறு பாதையில் போவது குறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தில் எச்சரிக்கை செய்துள்ளான்:
எவர் நேரான வழி இன்னதென்று தமக்குத் தெளிவான பின்னரும் அல்லாஹ்வுடைய இத்தூதரை விட்டுப் பிரிந்து அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்க(ளான நபித்தோழர்க)ஜன் வழி அல்லாததில் செல்கின்றாரோ அவரை நாம் அவர் செல்கின்ற (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்பு) அவரை நரகத்தில் சேர்த்துவிடுவோம். செல்கின்ற இடங்களில் அதுவே மிகக் கெட்டது. (அல்குர்ஆன் 4.115)
 
இன்னொரு வசனத்தில் நேர்வழியில் செலுத்தப்பட நபியின் தோழர்களைப் போல் நம்பிக்கைகொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்திடுவார்கள்.(அல்குர்ஆன் 2.137)
 
அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விசயத்தில் உண்மையான, சரியான நம்பிக்கையை ஒருவர் அடைய வேண்டும் என்றால் அவர் நான்கு விசயங்களை அவர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் நான்கில் ஒன்றில் விழுந்தாலும் அவர் சரியான நம்பிக்கையை அடைய முடியாது. அவை:
தஹ்ரீஃப் (மாற்றுதல்)
 
தஅதீல் (மறுத்தல்)
 
தம்ஸீல் (ஒப்பிடுதல்)
 
தக்யீஃப் (எப்படி என்று விவரித்தல்)
 
ஆகவேதான் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விசயத்தில் நாம் இவ்வாறு கூறுகிறோம்: “அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதையெல்லாம் உறுதிப்படுத்தினார்களோ, அவற்றை அவனது தகுதிக்கு ஏற்ப ஏற்றுக்கொள்வோம். அவற்றை மாற்றமாட்டோம், அவற்றின் பொருளை மறுக்கமாட்டோம், அவை எப்படி என்று விவரிக்கமாட்டோம், அவற்றைப் படைப்பின் பண்புகளுடன் ஒப்பிடமாட்டோம்.”
 
இந்த நான்கு விசயங்கள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்:
1. தஹ்ரீஃப் (மாற்றுதல்)
மாற்றுதல் என்றால் குர்ஆன் மற்றும் நபிமொழியின் கூற்றுகளை அவற்றின் உண்மையான அர்த்தத்திலிருந்து மாற்றுவதாகும். இதன் மூலம் அல்லாஹ் தனக்கு உண்டு என உறுதிப்படுத்திய பெயர்களையும் உயர்ந்த பண்புகளையும் அவனுக்கே உரித்தாக்குகிறோம். இது அல்லாஹ் எந்தப் பண்பைத் தனக்கு உரியதென நாடியுள்ளானோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதாகும். உதாரணமாக, அல்லாஹ் தனக்குக் கரம் உண்டு என்று கூறியிருக்க, அதன் அர்த்தத்தை மாற்றி அதனை அல்லாஹ்வின் அருள் என்றும், சக்தி என்றும் கூறுகின்றனர்.   
 
2. தஅதீல் (மறுத்தல்)
இதன் பொருள் என்னவெனில், அல்லாஹ்வின் அழகிய பெயர்களையும் உயர்ந்த பண்புகளையும் மறுப்பதாகும். அவற்றில் அனைத்தையுமோ அல்லது சிலவற்றையோ அல்லாஹ்வுக்கு இல்லை என்று மறுப்பதை இது குறிப்பிடும். யார் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளாகக் குர்ஆனும் நபிமொழியும் கூறியுள்ளவற்றை மறுக்கிறாரோ, அவர் உண்மையில் அவனது பெயர்கள், பண்புகளை நம்பிக்கை கொண்டவராகமாட்டார்.
 
3. தம்ஸீல் (ஒப்பிடுதல்)
அல்லாஹ்வின் பண்பினை ஒரு மனிதனின் பண்புடன் ஒப்பிடுவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அல்லாஹ்வின் கரத்தை மனிதனின் கரம் போன்றது என்றோ, மனிதனைப் போலவே அல்லாஹ்வும் செவியுறுகிறான் என்றோ, ஒரு மனிதன் ஆசனத்தில் அமர்ந்திருப்பது போன்று அல்லாஹ் தனது அர்ஷ் மீது அமர்ந்துள்ளான் என்றோ கூறுவதாகும். அல்லாஹ்வின் பண்புகளை அவனது படைப்புகளின் பண்புகளுடன் ஒப்பிடுவது தவறும், பொய்யானதுமாகும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: அவனுக்கு ஒப்பானது எதுவுமில்லை. அவன் நன்கு செவியுறுபவன், நன்கு பார்ப்பவன். (அல்குர்ஆன் 42.11)
 
4. தக்யீஃப் (எப்படி என்று விவரித்தல்)
அதாவது, அல்லாஹ்வின் பண்புகள் எப்படிப்பட்டவை என்று விவரிப்பதாகும். ஒரு மனிதன் அவற்றை கற்பனையின் மூலமோ அல்லது சில வார்த்தைகள் மூலமோ எப்படி என்று விவரிப்பதாகும். நிச்சயமாக இது கூடாத வழிமுறையாகும். மனிதனால் இப்படி அறிய முடியாது. “அவர்கள் அவனை முழுமையாக அறிந்துகொள்ள முடியாது” என்று (20.110) அல்லாஹ் கூறுகிறான்.
யார் இந்த நான்கு விசயங்களில் கவனமாக இருந்துகொண்டார்களோ அவர்களே அல்லாஹ்வை உண்மையாக நம்பிக்கை கொண்டவர்களாக ஆவார்கள்.
 
இமாம் மாலிக்கின் பிரபல சம்பவம்:
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம், “அளவற்ற அருளாளன் அர்ஷ்க்கு மேல் உயர்ந்துவிட்டான்” எனும் (20.5) வசனத்திலுள்ள இஸ்தவா (உயர்தல்) என்ற பண்பு குறித்து கேட்கப்பட்டது. அல்லாஹ் எப்படி உயர்ந்தான் என்று ஒருவர் கேட்டார்.
 
இதைக் கேட்டவுடன் இமாம் மாலிக் அவர்கள் தமது தலையைக் குனிந்தவாறு அமைதியாகி, அக்கேள்வி குறித்து சிந்தித்தார்கள். அதற்குச் சரியான பதிலைக் கூற நினைத்த அவர்கள் அதனால் வியர்த்துப் போனார்கள். பிறகு தம் தலையை உயர்த்தி பின்வரும் அந்தப் பிரபலமான பதிலைக் கூறினார்கள்: “இஸ்திவா என்றால் அதன் பொருள் தெரியும். அது எப்படி என்று தெரியாது. அதனை நம்பிக்கை கொள்வது (வாஜிப்) கட்டாயமாகும். அது பற்றி கேள்வி எழுப்புவது பித்அத் (புதுமை) ஆகும்.”
 
எனவே நாமும் அல்லாஹ்வின் ஏதேனும் ஒரு பண்பு குறித்து கேள்வி கேட்கும் ஒவ்வொரு மனிதரை நோக்கியும் இவ்வாறே கூறுவோம்: “நீ ஒரு பித்அத்வாதி. உன்னிடம் வந்த செய்தியை நம்பிக்கைகொள்வதுதான் உனக்குரிய பணி. எது குறித்து உனக்குத் தெரியப்படுத்தப்படவில்லையோ அவ்விசயத்தில் வாய்மூடி இரு.”
 
நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக. அவன் நமக்குச் சரியான நம்பிக்கையை வழங்கி, அதிலேயே மரணிக்கச் செய்வானாக. அல்லாஹ் மிக அறிந்தவன்.
 
ஆதாரக்குறிப்புகள்

The Explanation of the Fundamentals of Islamic Belief By the Late Eminent Scholar, Sheikh Muhammad ibn Salih Al‐Uthaymeen,
Previous Post Next Post