ஸுஹுத் – زهد- என்ற அறபுப் பதத்திற்கு தமிழில் துறவறம், பற்றற்ற தன்மை மற்றும் சன்னியாசம் போன்ற அர்த்தங்களை தருகிறது. ஏழ்மையான வாழ்வை இஸ்லாம் வெறுக்கிறது. ஆனால் எளிமையான வாழ்வை இஸ்லாம் வரவேற்கின்றது. உலகை ஆளும் அரசனாலும், உலகமகா பணக்காரனாலும் எளிமையான வாழ்வு வாழ முடியும். நபிமார்கள் நல்லோர்கள் வாழ்ந்து காட்டிய அறநெறி வாழ்வும் இதுவாகும்.
இந்த எளிமையான வாழ்வமைப்பைத்தான் பற்றற்ற வாழ்வாக, வெற்றிக்கான வழியாக, பாதுகாப்பான மார்க்கமாக சன்மார்க்கம் அறிமுகப்படுத்துகிறது. பின்வரும் நபி போதனை அதற்கு சான்றாக உள்ளது.
நபிகளாரிம் ஒரு மனித வந்து கேட்டார் : அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு அறச்செயலை சொல்லித்தாருங்கள்! அதை நான் செய்தால் அல்லாஹ்வும் மனிதர்களும் என்னை விரும்ப வேண்டும்! என்றார். அதற்கு நபிகளார்: உலககை நீ துறந்து வாழ்ந்தால், அல்லாஹ் உன்னை விருப்புவான். மனிதர்களிடம் உள்ளவைகளை நீ துறந்து வாழ்ந்தால் மனிதர்கள் உன்னை விரும்புவார்கள் ” என்று பதில் கூறினார்கள்.
இறை நெருக்கத்தையும், மறுமை வெற்றியையும் ஊர்ஜிதப்படுத்தும் இந்த பற்றற்ற உன்னதமான வாழ்வியல் நெறிமுறை பற்றி முன்னோர்கள், சான்றோர்கள் பல்வேறு வரைவிளக்கணங்களை பதிந்து வைத்துள்ளனர். பெரும்பாலும் அவைகள் அனைத்துமே உலக வாழ்க்கை பற்றி இஸ்லாம் கூறும் யதார்த்தத்தின் பின்னணியில் அவர்களுக்குப் புலப்பட்ட கருத்துக்களாகும். அவைகளையே இந்தத் தொகுப்பில் காணலாம்.
“துறவறம் என்பது, எந்த சொத்து சுகத்தையும் நீ உன் கட்டுப்பாட்டில் சொந்தமாக வைக்கக் கூடாது என்பதல்ல! மாறாக, எதுவும் உன்னை கட்டுப்படுத்தி அவைகளுக்கு நீ சொந்தமாகி விடக்கூடாது என்பதாகும்.”
– அலி இப்னு அபீ தாலிப்
“உலக இன்னல்களை இலகுவாக பார்ப்பவன் எவனோ அவன்தான் துறவற வாழ்க்கை வாழ்பவனாவான்.”
– அலி இப்னு அபீ தாலிப்
“துன்யாவை துறந்து ஆகிராவை விரும்பி வாழ்வதே உண்மையான துறவரமாகும்.”
– இப்னு மஸ்ஊத்
“உலக பொருளாசைகளில் பற்றற்று வாழும் ஒருவனின் நாவிலிருந்து ஞானபோதனைகள் மாத்திரமே வெளிவரும்.”
– இமாம் மாலிக்
“பற்றற்ற வாழ்வு என்பது கைவசம் துன்யா இருந்தாலும் கல்புக்குள் துன்யாவை சுமக்காமல் இருப்பதாகும்.”
– இமாம் இப்னுல் கையிம்
“உலகில் பற்றற்று வாழ்வதென்பது அல்லாஹ்வை அஞ்சி வாழ்வதாகும், மனிதர்களிடம் பணிவாக, பக்குவமாக நடந்துகொள்வதாகும்.”
– சுப்யான் அஸ்சவ்ரி
“யாரைக் கண்டாலும் அவன் என்னை விட இறைவனிடம் தரமானவன், மார்க்கத்தில் சிறந்தவன் என்று யார் கருதுகிறானோ அவனே மெய்யான துறவியாகும்.”
– ஹஸனுல் பஸரி
“ஒருவன் லட்சாதிபதியாக இருக்கிறான். அவனால் பற்றற்ற வாழ்வு வாழ முடியுமா? என இமாம் அஹ்மத் பின் ஹம்பளிடம் கேட்கப்பட்டபோது:”ஆம், முடியும். அத்துனை கோடிகளும் அழியும் போது அவன் துக்கப்படாவிட்டால், அல்லது அத்துனை கோடியும் பல மடங்காக அதிகரிக்கும் போது ஆணவம் கொள்ளாமல் இருந்தாள் அவன் பற்றற்ற வாழ்வு வாழும் ஒரு துறவியே ” என பதிலளித்தார்கள்.”
“பற்றற்ற வாழ்வு என்பது மறுமையில் பயனளிகாதவைகளை உலகில் துறந்து வாழ்வதாகும்.”
– இமாம் இப்னு தைமியா
“பேணுதல் என்பது மறுமையில் சேதத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதக்கூடியவைகளை உலகில் துறந்து வாழ்வதாகும்.”
– இமாம் இப்னு தைமியா
“பற்றற்ற வாழ்வு என்பது ஆசைகளை அடக்குவதாகும். உணவு, உடை, வாகனம், தங்குமிடம் போன்றவைகளில் அநாவசியமற்ற, மற்றும் ஆரவாரமற்ற எதுவும் அற்ற எளிமையான நுகர்வு முறையாகும்.”
– சுஃப்யான் அஸ்ஸவ்ரி
“உயிருக்கும் உடலுக்கும் ஆனந்தம் கிடைத்தால் அதுவே பற்றற்ற தன்மையாகும்.”
– ஹஸன் அல்பஸரி
“ஆத்துமாவின் ஆரோக்கியத்தில் ஆர்வம் உள்ளவனுக்கு உலக ஆசைகளிலில் ஆர்வம் இருக்காது.”
– இப்னுல் ஹனபிய்யா
“பொருளாசை யாரிடம் இல்லையோ அவர்கள்தாம் மெய்யான சன்னியாசிகள், அல்லாஹ்வின் நேசர்கள்.”
– சிர்ரி சிக்தி
(நிஜமான துறவி யாரெனில், அவன் உலகில் கிடைப்பதை வைத்து பெருமிதம் கொள்ளமாட்டான். இழப்பதை வைத்து வருத்தப்படமாட்டான்.”
– ஜுனைத் அல்பக்தாதி
“துறவறம் என்பது நீ இந்த யுகத்தை அழிந்து போகும் யுகமாக பார்க்க வேண்டும், அதனூடாக துன்யாவை அற்பமாக பார்க்க வேண்டும், அதன்படி அதனை புறக்கணித்து வாழ உனக்கு வசதியாக வேண்டும்.”
– இப்னுல் ஜலா
“ஆட்சி அதிகாரம், பட்டம் பதவிகளை துறந்து வாழ்வதில் சுகம் காணுவதே பற்றற்ற வாழ்வாகும்.”
– சகீக் அல்பல்கி
“பற்றற்ற வாழ்வு என்பது அளவுக்கதிக சொத்து சுகங்களை விட்டும் கையைக் கழுவுவதாகும், மேலதிக ஆசைகள், தேவைகளை விட்டும் உள்ளம் வெறுமையாகிவிடுவதாகும்.”
– இப்னு ஹபீஃப்
“பற்றற்ற வாழ்வு என்பது, மனவிருப்பத்தோடு துன்யாவை துறந்து வாழ்வதாகும்.”
– மாலிக் பின் தீனார்
“கைக்குக் கிட்டாதவைகளை மனதில் போட்டுக் கொண்டு அலட்டிக் கொள்ளாமல் இருப்பதே பற்றற்ற வாழ்வாகும்.”
– ஜுனைத் அல்பக்தாதி
“பற்றற்ற வாழ்வு என்பது, ஆசைப்பாடு அற்ற வாழ்வாகும். போதுமென்ற மனமாகும்.”
– இமாம் அஹ்மத்
“பற்றற்ற வாழ்வு என்பது துன்யா போகுதே என்று வருந்தாமல் இருப்பதாகும். துன்யா வருகுதே என்று ஆணவம் கொள்ளாமல் இருப்பதாகும்.”
– இமாம் அஹ்மத்
“பற்றற்ற வாழ்வு என்பது, பொருளாசை அற்ற வாழ்வாகும், அல்லாஹ் போதும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையாகும்.”
– சகீக் அல்பல்கி
“பற்றற்ற வாழ்வு என்பது, இறை நினைவை மறக்கடிக்கும் யாவற்றையும் விட்டொதுங்கி வாழ்வதாகும்.”
– இப்னுல் முபாரக்
“பற்றற்ற வாழ்வு என்பது, இம்மை வாழ்வை பொய்யாக பார்ப்பதாகும். மறுமை வாழ்வை மெய்யாக பார்ப்பதாகும்.”
– ருவைம் அல்ஜுனைத்
“உலக ஆசைகளை துறக்கும் வரை ஈமானின் சுவையை ருசிக்க உங்களால் முடியாது.”
– புளைல் பின் இயால்
– ஆக்கம், மொழியாக்கம்:இம்ரான் ஃபாருக் மதனி(இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை)