உண்மையாளனை நண்பனாக்கு!

பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.

حَدَّثَنَا عَبْدُ اللهِ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ أَبَانَ بْنِ صَالِحِ بْنِ عُمَرَ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ عَنْ رَجُلٍ مِنْ سَدُوسٍ عَنْ أَبِي مُوسَىٰ قَالَ جَلِيسُ الصِّدْقِ مِثْلُ الْعَطَّارِ إِنْ لَمْ يُصِبْكَ عَبَقَكَ مِنْ رِيحِهِ

உண்மையான நண்பன் நறுமண வியாபாரியைப் போலாவான். அவர் உனக்கு (நறுமணத்தை) கொடுக்கவில்லை என்றாலும் அவருடைய நறுமணத்தால் அவர் உன்னை நறுமணப்படுத்தி விடுவார்.

இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸுஹ்து நூலில் இருந்து இமாம் ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று, எண் : 1563

கருத்து: நாம் யாரோடு நட்பு வைக்கிறோம் என்பது மிக முக்கியம். நல்ல நண்பர்களோடு நாம் நட்பு வைக்கும்போது அவர்களின் நற்பண்புகளாலும் நல்லமல்களாலும் நமக்குள் நல்ல மாற்றங்கள் வரும். கெட்டவர்களோடு நட்பு வைப்பவர் கண்டிப்பாக அவர்களின் கெட்ட குணத்தால் அல்லது கெட்ட அமல்களால் ஒரு நாள் பாதிக்கப்படுவார். இவரிடமும் அவர்களின் கெட்ட குணத்தில் ஒரு சில குடிகொள்ள வாய்ப்பிருக்கிறது. அல்லது அவர்களை பின்பற்றி அவரும் கெட்ட செயல்களை செய்பவராக மாறிவிடலாம்.

விளக்கம்: அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா இவ்வுலக வாழ்க்கையில் மனிதனை, பழகக் கூடியவனாகவும் நட்புறவு கொள்பவனாகவும் தோழமையை தேடுபவனாகவும் படைத்திருக்கிறான்.

வாழ்க்கையில் நட்பு என்பது ஓர் உறவாகும். வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நட்பு இல்லாமல் நல்லது நடக்காது. அந்தளவு அவசியமான ஓர் உறவுதான் நட்பினால் ஏற்படுகிற உறவு. இரத்த உறவு, சம்பந்த உறவு என்று பல உறவுகளுக்கு இடையில் நட்பு என்பதும் அல்லாஹ் ஏற்படுத்திய உறவுகளில் ஒன்றாகும். இந்த உலகத்தில் மனிதனுக்கு வெளி பழக்க வழக்கங்களில் நட்பு வட்டாரம் இருப்பது அவசியமானது என்றும், தவிர்க்க முடியாதது என்றும்   கூட சொல்லலாம்.

நட்பினால் நமக்கு நமது தேவைகள் எளிதாகின்றன. நண்பர்களினால் தூரமான காரியங்கள் சமீபமாகி விடுகின்றன. சிரமமான தேவைகள் இலகுவாகி விடுகின்றன. நம்மால் செய்ய முடியாத காரியங்களை நமது நண்பர்கள் நமக்கு செய்து தருகிறார்கள்.

பல நேரங்களில், பல இக்கட்டான தருணங்களில், பல சோதனைகளில் நாம் சிக்கி இருக்கும்போது நமது உறவுகள் கூட நமக்கு தயங்குவார்கள். அந்த நேரத்தில் நண்பர்கள் பலர் எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நமக்கு உதவுவதையும் ஒத்துழைப்பு தருவதையும் நம்மில் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம்.

நமது மார்க்கம் பரவியதும், வளர்ந்ததும், உறுதிபெற்றதும் நபி ﷺ அவர்களின் நல்ல நண்பர்கள் மூலமகாத்தான்.

அல்லாஹு தஆலா கூறுகிறான்:

هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ

அவன், தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் உம்மை பலப்படுத்தி இருக்கிறான். (அல்குர்ஆன் 8 : 62)

நபியின் அந்த நல்ல நண்பர்கள் இந்த மார்க்கத்தை தமது வாழ்க்கையிலும் பாதுகாத்து உலகமெங்கும் இந்த மார்க்கம் பரவ காரணமாக திகழ்ந்தார்கள். 

நபி ﷺ அவர்களோடு நட்பு பாராட்டி, அவர்களின் நல்ல நட்பில் அல்லாஹ்வின் நல்லடியார்களாக, உலக இறுதி நாள் வரை வரக்கூடிய முஸ்லிம்களுக்கு நல்ல அழகிய முன்மாதிரிகளாக விளங்கினார்கள். அந்த தோழர்கள் தங்கள் நபியை உயிருக்கு உயிராக நேசித்தது மட்டுமல்லாமல் அந்த நபிகளுடைய ஒவ்வொரு சிறிய பெரிய கட்டளைகளை பின்பற்றி நடந்தார்கள். இந்த உம்மத்திற்கு நபியை தேர்ந்தெடுத்து அனுப்பிய ரப்பாகிய அல்லாஹு தஆலா அந்த தோழர்களின் சமுதாயத்தை சிறந்த சமுதாயம் என்று வாழ்த்தி கூறுகிற அளவிற்கு அந்த மக்கள் நபி ﷺ அவர்களின் நட்பினால் உயர்வும் மேன்மையும் சிறப்பும் பெற்றார்கள்.

அல்லாஹு தஆலா கூறுகிறான்:

كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ

(நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (அல்குர்ஆன் 3 : 110)

 هُوَ اجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ وَفِي هٰذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَاعْتَصِمُوا بِاللهِ هُوَ مَوْلَاكُمْ فَنِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِير

அவன்தான் உங்களைத் தேர்ந்தெடுத்தான். இன்னும், உங்கள் மீது (உங்கள்) மார்க்கத்தில் எவ்வித நெருக்கடியையும் அவன் வைக்கவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பற்றிப் பிடியுங்கள். அவன் இதற்கு முன்னரும் (-முந்தைய வேதங்களிலும்) இதிலும் (-குர்ஆனிலும்) உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என்று பெயர் வைத்தான்.


காரணம், தூதர் (-முஹம்மத்) உங்கள் மீது சாட்சியாளராக இருப்பதற்காகவும் நீங்கள் மக்கள் மீது சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும் (அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்து, முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்). ஆக, தொழுகையை நிலைநிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தைக் கொடுங்கள்! இன்னும், அல்லாஹ்வை உறுதியாக பற்றிப்பிடிங்கள்! அவன்தான் உங்கள் பொறுப்பாளன் ஆவான். ஆக, அவனே சிறந்த பொறுப்பாளன். இன்னும், அவனே சிறந்த உதவியாளன் ஆவான்.  (அல்குர்ஆன் 22 : 78)

இப்படியாக பல வசனங்கள் உள்ளன. அதாவது, அந்த அரபுகள் அல்லாஹ்வின் தூதரை நம்பிக்கை கொண்டு, அந்த நபி ﷺ அவர்களின் நல்ல நட்பையும் உயர்வான தோழமையையும் தேர்ந்தெடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதரை தங்கள் உற்ற நண்பராகவும், தோழராகவும், வழிகாட்டியாகவும், தலைவராகவும் ஆக்கி கொண்டார்கள்.

அந்த அழகிய நட்பை விட்டு அவர்கள் பிரியவில்லை. உள்ளூர், வெளியூர், பயணம், வழிபாடு, போர், சமாதானம், கல்வி சபைகள், மார்க்க பிரச்சாரங்கள், சொற்பொழிவுகள் என அனைத்திலும் அந்த நபியோடு தங்களை ஐக்கியமாக்கி கொண்டார்கள்.

உலக வரலாற்றில் உயர்ந்த நண்பருக்கும் அந்த உயர்ந்த நண்பரின் சிறப்பான தோழர்களுக்கும் உதாரணம் கூறுவது என்றால் நபி  அவர்களையும் அவர்களின் தோழர்களையும்தான் நாம் கூற முடியும்.

அரேபிய பாலைவனத்தில் ஆடுகளையும் ஒட்டகங்களையும் மேய்த்துக்கொண்டிருந்த, ஆடலும் பாடலும், மதுவும் மங்கையும்தான் வாழ்க்கை என்றிருந்த, வேட்டையாடுவதும், கொள்ளையடிப்பதும்தான் வாழ்வாதாரமும் பொழுதுபோக்கும் என்றிருந்த, கல்லிலும் மரத்திலும் செதுக்கப்பட்ட சிலைகளை ஆராதனை செய்து கொண்டிருந்த, அறிவாளிகளாக இருந்தும் சிலை வணக்க மூட நம்பிக்கைகளால் கடும் முட்டாள்களாக, மூடர்களாக, முரடர்களாக, உலக மக்களுக்கு முன்னால் நாகரீகம் அற்ற காட்டுவாசிகள் என்று அறியப்பட்டிருந்த அந்த அரேபிய சமுதாயத்தை உலகத்திலேயே நம்பர் ஒன் சமுதாயம் என்று சிறப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது அந்த உண்மையான நட்புதான். 

ஆம், அந்த உண்மையாளருடன் உண்மையான நட்பினால் அல்லாஹ் அவர்களை அப்படி மாற்றினான். அல்லாஹ்வின் பயம், உண்மை, நீதம், நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, இறை வழிபாடு, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை என அனைத்திலும் சிறப்பான முன்மாதிரியாக அந்த சமுதாயம் உலக அரங்கில் திகழ்கிறது என்றால் அதற்கு காரணம் நபி  அவர்களின் அந்த சிறப்பான நட்புதான். 

புத்தகங்களும் எழுத்துகளும் மனிதனுக்கு அறிவை கொடுக்க முடியுமே தவிர, ஒரு மனிதனை உருவாக்கவோ மாற்றவோ முடியாது. ஒரு மனிதனை மாற்றுகிற ஆற்றலை ஒரு மனிதனுக்குத்தான் அல்லாஹ் தந்திருக்கிறான். புத்தகங்களோடு சேர்த்து நல்ல ஆசிரியரும் தேவை. ஆகவேதான் அல்லாஹு தஆலா வேதங்களையும் இறக்கினான், தூதர்களையும் அனுப்பினான்.

நல்ல நூல்களும் தேவை, சிறந்த ஆசிரியரும் தேவை.

நூல்களிலேயே மிக உயர்வான நூல் குர்ஆன், ஆசிரியர்களின் மிக சிறந்த ஆசிரியர் நபி ﷺ அவர்கள். இந்த இரண்டையும் கிடைக்கப்பெற்ற ஸஹாபாக்கள் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்டார்கள். குர்ஆனை ஓதுவதும், மனனமிடுவதும், அதை சிந்திப்பதும், ஆராய்வதும், அதனைக் கொண்டு படிப்பினை பெறுவதும் அவர்களின் வாழ்க்கையில் முக்கிய வேலையாக இருந்தது.

பிறகு, தங்கள் உயிரினும் மேலான நண்பராகிய நபி ﷺ அவர்களின் தோழமையில் இருந்து அவர்களின் ஒவ்வொரு அமைதியையும் அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டார்கள் அந்த தோழர்கள். 

நபி ﷺ அவர்களுக்கும் அவர்களின் தோழர்களாகிய ஸஹாபாக்களுக்கும் இருந்த அந்த நட்பை பற்றி பல ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும் அது குறைவுதான்.

இதை பற்றி சிந்தித்து அறிய இந்த ஒரு வசனம் போதுமானதாக இருக்கும்.

அல்லாஹு தஆலா கூறுகிறான்:

مُـحَمَّدٌ رَسُولُ اللهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذٰلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْـجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَىٰ عَلَىٰ سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

முஹம்மத் (அவர் மீது அல்லாஹ்வின் அருள் நிலவுக!) அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்கள் மீது கடினமானவர்கள், தங்களுக்கு மத்தியில் கருணையாளர்கள் ஆவர். (தொழுகையில் குனிந்து) ருகூஃ செய்தவர்களாக; (சிரம் பணிந்து) சுஜூது செய்தவர்களாக அவர்களை நீர் காண்பீர். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் விரும்புகிறார்கள். அவர்களின் தோற்றம் அவர்களின் முகங்களில் சுஜூது (-சிரம் பணிந்து வணங்குவது) உடைய அடையாளமாக இருக்கும். இது தவ்ராத்தில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாகும்.


இன்னும், இன்ஜீலில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாவது, (நெல், கோதுமை போன்ற) ஒரு விளைச்சலைப் போலாகும். அது (-அந்த விளைச்சல்) தனது (செடியின்) காம்பை வெளியாக்கியது. இன்னும், அதைப் பலப்படுத்தியது. பிறகு அது தடிப்பமாக ஆனது. அது தனது தண்டின் மீது உயர்ந்து நின்று, விவசாயிகளை கவர்கிறது. (இப்படித்தான் நம்பிக்கையாளர்களை) அவர்கள் மூலமாக நிராகரிப்பாளர்களுக்கு ரோஷமூட்டுவதற்காக (அல்லாஹ் ஓங்கி உயரச் செய்வான்). நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்த அவர்களுக்கு அல்லாஹ் (தனது) மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களித்தான்.  (அல்குர்ஆன் 48 : 29)

அப்படித்தான் தாபியீன்கள், ஸஹாபாக்களின் நட்பையும் தோழமையையும் பெற்று உயர்வடைந்தார்கள். உலக வரலாற்றில் யாரெல்லாம் சிறந்த முன்னோடிகளாக உருவானார்களோ அவர்களின் உருவாக்கத்தில் அவர்களின் ஆசிரியர் முக்கிய பங்கு வகிப்பார். அதாவது அந்த ஆசிரியரின் நட்பினால் அல்லாஹ் அவர்களை அ ப்படி உருவாக்கினான். அப்படித்தான் அல்லாஹ் உலக நியதியை ஆக்கி இருக்கிறான்.

கண்டிப்பாக நல்ல நட்பு சிறந்த பலனை கொடுக்கும்.

நல்ல நட்பு நம்மை உருவாக்கும்.

நல்ல நட்பு நம்மிடம் நல்ல பழக்கங்கள் உருவாகவும் வளரவும் காரணமாக இருக்கும்.

நல்ல நட்பினால் நாம் நம்மில் நிறைய நல்ல மாற்றங்களை கொண்டு வரலாம்.

நல்ல நண்பர்கள் மூலம் நமக்கு நல்ல ஆலோசனைகள் கிடைக்கலாம். நமது தேவைகளுக்கு நல்ல உதவிகளை அவர்கள் மூலம் நாம் அடைய பெறலாம். நாம் சோர்வுறும்போது அவர்கள் நம்மை உற்சாகப்படுத்துவார்கள். நாம் கவலையுறும்போது அவர்கள் நமக்கு ஆறுதல் சொல்வார்கள். நாம் வழி பிசகும்போது அவர்கள் நம்மை நல்வழிபடுத்துவார்கள். நமக்கு நெருக்கடிகள் ஏற்படுகிறபோது அவர்கள் நமக்கு உதவுவார்கள்.

நல்ல நண்பர்கள் நமது அறியாமையை போக்குவார்கள்!

நல்ல நண்பர்கள் நமக்கு நல்லொழுக்கத்தை சொல்லி தருவார்கள்.

நல்ல நண்பர்கள் நாம் அல்லாஹ்வை மறக்கும்போது நமக்கு அல்லாஹ்வை நினைவூட்டுவார்கள்.

நல்ல நண்பர்கள் நாம் நீதம் தவறும்போது நமக்கு நீதத்தை ஏவுவார்கள்.

நல்ல நண்பர்கள் நாம் மார்க்கத்தை மீறும்போது நம்மை கரம்பிடித்து தடுத்து நேர்வழியின் பக்கம் அழைத்து செல்வார்கள்.

நல்ல நண்பர்களின் நட்பு நம்மை கெட்ட பழக்கங்களில் இருந்து தடுக்கிறது.

நல்ல நண்பர்களின் நட்பு நம்மை அனாச்சாரங்களில் இருந்தும் பாவங்களில் இருந்தும் தடுக்கிறது.

நல்ல நண்பர்களின் நட்பு நமக்கு அமல்களில் உற்சாகத்தையும் மார்க்கத்தில் பற்றையும் ஸுன்னாவில் பிடிப்பையும் ஏற்படுத்துகிறது.

மேற்கூறப்பட்ட நன்மைகளுக்கு எதிராக என்னென்ன தீமைகள் இருக்கின்றனவோ அவை அனைத்தும் தீய நட்பின் விளைவுகளாகும் என்பதை மறந்து விட வேண்டாம்.

நட்பை பற்றி அல்லாஹ் கூறுகிற ஒரு வசனத்தையும், ஒரு நபிமொழியையும், இமாம் ஷாஃபியி அவர்களின் ஒரு கவிதையையும் எடுத்துக் கூறி இந்த அமர்வை நிறைவு செய்வோம்.

அல்லாஹு தஆலா கூறுகிறான்:

الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ

இறையச்சமுள்ளவர்களைத் தவிர நண்பர்கள் எல்லாம் அந்நாளில் அவர்களில் சிலர், சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள்.  (அல்குர்ஆன் 43 : 67)

நபி  அவர்கள் கூறினார்கள்:

مَثَلُ الْـجَلِيسِ الصَّالِحِ والْـجَلِيسِ السَّوْءِ كَمَثَلِ صَاحِبِ الْمِسْكِ وكِيرِ الْـحَدَّادِ لَا يَعْدَمُكَ مِنْ صَاحِبِ الْمِسْكِ إِمَّا تَشْتَرِيهِ أوْ تَـجِدُ رِيـحَهُ وَكِيرُ الْـحَدَّادِ يُـحْرِقُ بَدَنَكَ أوْ ثَوْبَكَ أوْ تَجِدُ مِنْهُ رِيـحًا خَبِيثَةً

நல்ல நண்பனுக்கும் கெட்ட நண்பனுக்கும் உதாரணமாவது, கஸ்தூரி வியாபாரி இன்னும் கொல்லனின் துருத்தியின் உதாரணமாகும். கஸ்தூரி வியாபாரியிடமிருந்து உனக்கு இழப்பு இல்லை. நீ அவனிடமிருந்து அ(ந்த நறுமணத்)தை வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தை நீ அடையலாம். கொல்லனின் துருத்தியோ உனது உடலை அல்லது உனது ஆடையை எரித்து விடும். அல்லது கெட்ட துருவாடையை நீ அவனிடமிருந்து அடைவாய்.

இமாம் ஷாஃபியி   கூறுகிறார்கள்:

أُحِبُّ الصَّالِـحِينَ وَلَسْتُ مِنْهُم *** لَعَلِّي أَنْ أَنَالَ بِهِمْ شَفَاعَةً

وَأَكْرَهُ مَنْ تِـجَارَتُهُ الْمَعَاصِي *** وَلَوْ كُنَّا سَوَاءً فِي الْبِضَاعَةِ

நான் நல்லவர்களோடு இருக்க விரும்புகிறேன். நான் அவர்களில் உள்ளவன் இல்லை என்றாலும். அவர்களின் வாயிலாக நான் சிபாரிசை அடையலாம். யாருடைய வியாபாரம் பாவங்களாக இருக்கிறதோ அவரோடு இருப்பதை நான் வெறுக்கிறேன். நாங்கள் எல்லாம் சாமான்களில் சமமானவர்களாக இருந்தாலும் சரியே.

அல்லாஹ்வே! எங்களுக்கு நல்லோர், உண்மையாளர்கள், வணக்கசாலிகள், தக்வா உடையோர், மார்க்க பற்றுடையவர்கள், ஸுன்னாவின் நேசர்கள் உடைய நல்ல நட்பை தா! எங்களையும் நல்லவர்களாக ஆகி வை! எங்களை நல்லவர்களுடன் ஆக்கிவை! ஆமீன்.

Previous Post Next Post