ஷஹாதா லா இலாஹ இல்லல்லாஹ்வின் விளக்கம்

 - அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸின்தி حفظه الله تعالى 

[குறிப்பு: இது ஷைக் அவர்களின் உரையிலிருந்து சுருக்கமாக கருத்தாக்கம் செய்யப்பட்டதின் மொழிபெயர்ப்பாகும். இந்த கருத்தாக்கத்தை ஷைக் அவர்களின் மஃஹத் அஷ் ஷரீஆ வெளியிட்டுள்ளது].

(லா இலாஹ இல்லல்லாஹ் என்ற) ஷஹாதத்தின்(சாட்சியத்தின்) ஆதாரம் அல்லாஹ்வின் (பின்வரும்) கூற்றாகும். 

قوله تعالى: (شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولوا العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم) 
"(நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை." அவ்வாறே மலக்குகளும் (வேதத்தை ஆராய்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. " [3:18]

அதன் பொருளானது "உண்மையில்  வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை" என்பதாகும்.

"லா இலாஹ" என்பது அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுபவை யாவையும் மறுக்கின்றது.

"இல்லல்லாஹ்" என்பது தனது வணக்கத்தில் எந்த இணையும் இல்லாத அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் வணக்கத்தை உறுதிபடுத்துகின்றது.

அவனது ஆட்சியில் அவனுக்கு இணையில்லாதது போல (வணக்கவழிபாட்டிலும் அவனுக்கு எந்த இணையும் இல்லை). 

இதனைத் தெளிவிபடுத்தும் விரிவுரையாவது: (பின்வரும்)  அல்லாஹ்வின் கூற்றாகும். 

قوله تعالى: (وإذ قال إبرهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلّا الذي فطرني...)
' இப்ராஹீம் தன்னுடைய தந்தையையும், மக்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பாருங்கள். "நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும் நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன், “என்னை(யும் உங்களையும்) படைத்தவனைத் தவிர. (மற்ற அனைத்து பொய்யான தெய்வங்களை விட்டும் நான் முற்றிலும் நீங்கியவன்.) நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.” ' [43: 26,27] 

மேலும் (இதன் பொருளைத் தெளிவிபடுத்துவது) அல்லாஹ்வின் (பின்வரும்) கூற்று :

وقوله تعالى: « قل يأهل الكتب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا تشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأنا مسلمون. 
'(நபியே! பின்னும் அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். ' [3:64]

ஷைக் ஸாலிஹ் ஸின்தி அவர்களின் விளக்கம்:

(ஆசிரியர் அவர்கள்) பேச்சிலேயே அழகிய மற்றும் பொருள்களிலேயே மகத்தான (பொருளினைச் சுமந்த தவ்ஹீதின் கலிமாவைக்) கொண்டு ஆரம்பம் செய்திருக்கிறார்கள். இதுதான் மார்க்கம் முழுவதும் ஆகும்; மார்க்கத்தின் அடிப்படைகளும், அதன் கிளைகளும் இதுவே ஆகும்.

இதனைக் கொண்டு அல்லாஹ் தனக்கு சாட்சியம் கூறுவதே (இதன் சிறப்பினை அறிய) போதுமானதாகும்.

(شهد الله أنه لا إله إلا هو)
'(நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை." ' [3:18]

சாட்சியம் என்பது மூன்று விடயங்களைக் குறிக்கும்:

முதலாவது: (கலிமாவை நாவினால்) மொழிதல். எனவே, எவர் ஒருவர் "வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை" எனத் தனது உள்ளத்தில் மட்டும் நம்பிக்கைக் கொண்டு,
நாவினால் மொழிவதற்கு ஆற்றல் பெற்றிருந்தும் மொழியாதிருப்பாரோ, இவர் முஸ்லிமாக மாட்டார் என்பது முஸ்லிம்களுடைய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.

இரண்டாவது: எதைக் கொண்டு சாட்சியம் பகர்கிறாரோ அதனைப் பற்றி கண்டிப்பாக அறிந்தவராக இருக்க வேண்டும். அறியாத ஒருவர் சாட்சி கூறுபவராக ஆகுவது சாத்தியமற்றதாகும். மாறாக எந்த ஒன்றை மொழிந்தாரோ கண்டிப்பாக அதைப் பற்றி அறிந்தவராக இருக்கவேண்டும்.

மூன்றாவது: கண்டிப்பாக அதனை உள்ளத்தில் (சந்தேகமில்லாது) உறுதியாக நம்பியிருக்க வேண்டும். எனவே, சந்தேகத்தை உடையவராக இருப்பாரெனில், அவர் சாட்சியத்தை கொண்டுவரவில்லை. 

"நான் சாட்சி கூறுகிறேன்" என்பதன் பொருள்: "எந்த ஒன்றை நான் அறிந்து (உள்ளத்தில்) உறுதியாக நம்பியிருக்கின்றேனோ அதனை (நாவால்) மொழிகிறேன் " என்பதாகும்.

இதுவே "லா இலாஹா இல்லல்லாஹ்" என்ற சாட்சியத்தின் பொருளாகும். அதில் (சாட்சியத்தில்) இம்மூன்று விடயங்களும் ஒருசேர அமையப்பெறுவது அவசியமாகும்.

 இந்த கலிமாவை விளங்குவதிலும், புரிவதிலும் மற்றும் இதன் எல்லா அம்சங்களை அறிவதிலும் கவனம் கொள்வது ஒவ்வொரு முஸ்ஸிமின் மீதும் தனிப்பட்ட முறையில் கடமையாகும். மேலும் அதன் தூண்கள், அதன் நிபந்தனைகள், அதனை முறிப்பவைகளை அறிவதில் (கவனம் கொள்ள வேண்டும்). ஏனெனில், இதுதான் அவனது வாழ்விலேயே மிகவும் முக்கியமான விடயமாகும்.

இந்த மகத்தான கலிமாவின் சரியான புரிதல் என்பது இரண்டு விடயங்களை அழகிய முறையில் புரிந்து கொள்வதின் மீது கட்டி எழும்புகிறது:

முதல் விடயம்: "இலாஹ்" என்ற வார்த்தையின் (சரியான) பொருளாகும். (அரபியில் இந்த வார்த்தையின் சொல்லமைப்பு) 'ஃபிஆல்' (ஆகும்). அது 'மஃலூஹ்' என்ற பொருளை உடையது. அதாவது 'வணங்கப்படுவது'. அரபுகள் (இந்தச் சொல்லுக்கு) தங்களின் மொழியில் இது அல்லாத (வேறுபொருளை) அறியமாட்டார்கள். (எனவே) 'இலாஹ்' என்றால் 'வணங்கப்படுபவது' என்ற பொருள் ஆகும்.

யார் (இது அல்லாத) வேறு பொருளைத் தரும்படியாக இந்த ('இலாஹ்' என்ற) கலிமாவை ஆக்குவாரோ, அவர் நிச்சயமாக பிழைசெய்து விட்டார்.

'இலாஹ்' என்றால் 'படைப்பதற்கு ஆற்றல் பெற்றவன்' என்று சிலர் கூறுகிறார்கள். இதனடிப்படையில் "லா இலாஹா இல்லல்லாஹ்" என்பதன் பொருள், "படைப்பதற்கு ஆற்றல் பெற்றவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" என்றாகிவிடும். (லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவிற்கு) இந்தப் பொருளானது அசத்தியம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஏனெனில், இந்தப் பொருளை அபூ ஜஹ்ல் மற்றும் அபூ லஹப் ஆகியோரும் கூட நம்பிக்கைக் கொண்டுதான் இருந்தனர். அவர்கள், "படைப்பதற்கு ஆற்றல் பெற்றவன் அல்லாஹ்தான் (மேலும் அவனைத் தவிர வேறு யாருக்கும் அந்த ஆற்றல் இல்லை)" என அவர்கள் நம்பிக்கைக் கொண்டுதான் இருந்தனர். அவ்வாரிருந்தும் அவர்கள் இஸ்லாத்தில் நுழையவில்லை.

அல்லாஹ் (அவர்களைப் பற்றிக்) கூறுகிறான்:

(قال تعالى:ولئن سألتهم من خلقهم ليقولن الله ، ولين سألتهم من خلق السموات والأرض ليقولن الله) 
 '(நபியே!) அவர்களை படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்பீராயின்அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.' [43:87] (மேலும் அல்லாஹ் கூறுகிறான்) '(நபியே!) வானங்களையும் பூமியையும், படைத்தவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீராயின், "அல்லாஹ்தான்" என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.' [39:38]

மேலும், "அவன் அல்லாத மற்ற எல்லாவற்றையும் விட்டும் அவன் தேவையற்றவன் மற்றும் அவன் அல்லாத மற்றவையாவும் அவன் பக்கம் தேவையுடைவையாக  இருக்கின்றன" என்பது 'இலாஹ்' என்ற வார்த்தையின் பொருளாகும் என்று சிலர் கூறுகின்றனர்.

எனவே இதனடிப்படையில், "லா இலாஹ இல்லல்லாஹ்" (வின் பொருள்) "அவன் அல்லாத மற்ற எல்லாவற்றையும் விட்டும் தேவையற்று மற்றும் அவன் அல்லாத மற்றவையாவும் அவன் பக்கம் தேவையுடையதாக இருப்பது, அவனைத் (அல்லாஹ்வைத்) தவிர வேறு யாருமில்லை" என்றாகிவிடும். இதுவும் முன்சென்றதிற்கு நெருக்கமாகவே உள்ளது. (எனவே இதுவும் பிழையானதாகும்).

(இம்மக்கள் கூறுவது போன்று) இது தான் அதனுடைய பொருளாக இருக்குமென்றால் இதையே (இப்பொருளையே) (அல்லாஹ்வுடன் வணக்கத்தில்) இணை வைத்த (அந்த அரபிகள்) (இச்சொல்லில் இருந்து) விளங்கியிருந்தால், நபியவர்கள் ﷺ, "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று கூறுங்கள், நீங்கள் வெற்றியடைந்து விடுவீர்கள்' என்று கூறிய பொழுது 

(أجعل الألهة إلها وجدا) 
'என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா?' [38:5] என்று கூறியிருக்க மாட்டார்கள்.

எனவே, 'இலாஹ்' (என்ற வார்த்தை) 'வணங்கப்படுவது' என்ற பொருளையே கொண்டுள்ளது. "லா இலாஹ" என்றால் 'வணங்கப்படுவது யாரும் இல்லை' என்ற பொருளைத் தரும்.

[குறிப்பு: இப்பொழுது கூறப்படும் சிலவற்றை முழுமையாக விளங்க வேண்டும் என்றால் அரபி மொழியின் இலக்கணத்ணைப் படித்திருக்க வேண்டும். படிக்காதவர்கள் சிலவற்றை விளங்க முடியும்]

(இந்தக் கலிமாவை சரியாகப் புரிந்து கொள்வதில்) இரண்டாவது விடயம்: அது அரபி மொழியில் (பயன்படுத்தப்படும்) மறைந்த லா(لا)வின் பயனிலையாகும்(خبر لا المقدر). அதுவே தவ்ஹீதின் கலிமாவின் முதலில் இருக்கும் லா(لا) ஆகும். தவ்ஹீதின் கலிமாவானது நான்கு பகுதிகளைக் கொண்டு அமைந்திருக்கிறது. (அவையே) லா(لا), இலாஹ்(إله), இல்லா(إلا), அல்லாஹ்(الله) ஆகும். (கலிமாவின்) முதலில் இருக்கும் லா(لا) ஆனது இன்ன(إن) உடைய அமலைச்(عمل) செய்யும், ஒரு விடையத்தின் மொத்த இனத்தையும்(جنس) மறுக்கும்(نافية) லா(لا) என்று அழைக்கப்படும். இவ்வாறான லா(لا)வின் பயனிலை (நன்றாக) அறியப்பட்டதாட இருக்குமாயின், அதை (வெளிப்படையாக்க கூறாமல்) விட்டுவிடுவது (அரபுகளிடம்) அதிகமாகக் காணப்படுகிறது. (இவ்வாறு விடுவதை) சிலர் (சில அரபுகள்) அவசியமானதாகக் கருதுகிறார்கள். இதற்கு குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வில் பல உதாரணங்கள் உள்ளன.

(உதாரணமாக பின்வரும் குர்ஆன் வசனம்) 'அதற்கவர்கள், "(அதனால் எங்களுக்கு) யாதொரு பாதகமுமில்லை( لا ضير )" (என்று கூறினார்கள்)' [26:50]. (மேலும்) நீங்கள் (பேச்சுவழக்கில்) "எந்த தவறும் இல்லை" (لا بأس). அதாவது உன்மீது எந்த தவறும் இல்லை. (இவ்வாறு கூறுவதும் மற்றொரு உதாரணம் ஆகும்). 

சில மக்கள் கூறுகிறார்கள்: இங்கு பயனிலையின் நிர்ணயமானது (تقدير الخبر) 'அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவது வேறு எதுவும் இல்லை'. இது இரண்டு காரணங்களுக்காக தவறானது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

முதலாவது (காரணம்): (மேற்கூறப்பட்டதின் அடிப்படையில்) வணங்கப்படும் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வே ஆகும். சூரியன், சந்திரன், மிருகங்கள், சிலைகள், மரங்கள் ஆகியவை வணங்கப்படுகின்றன என்பது (அனைவராலும்) அறியப்பட்டது ஆகும். 

எனவே, வணங்கப்படும் அனைத்து விடயங்களும் அல்லாஹ்வே ஆகும் என்று நாம் கூறினால், இது வஹ்ததுல் வுஜூத், இத்திஹாத், ஹுலூல் போன்ற நம்பிக்கைகளை நோக்கி வழிவகுத்துவிடும். 

(குறிப்பு: வஹ்ததுல் வுஜூத், இத்திஹாத், ஹுலூல் ஆகியவை இருப்பது எல்லாமே அல்லாஹ் மட்டும்தான், அல்லாஹ் படைப்பினங்களுடன் ஒன்றிணைந்து இருக்கின்றான் என்பது போன்ற வழிகெட்ட  கொள்கைகள் ஆகும்).

இது அல்லாஹ்வை நிராகரிப்பதிலிருந்து உள்ளதாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இரண்டாவது (காரணம்): (மேற்கூறப்பட்டதின் அடிப்படையில்) அவசியமாகும் இரண்டாவது விடயமாவது அல்லாஹ்வைத் தவிர பிற விடயங்கள் வணங்கப்படுகின்றன என்பது மறுக்கப்படுவது ஆகும். இக்கூற்றைக் கூறுபவர் அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் வணங்கப்படுவதில்லை என வாதிடுகிறார் போலும். (அதாவது) வணங்கப்படும் விடயம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றும் இல்லை (எனக் கூறுவது போலும்). 

ஆனால் நிதர்சனமானதோ, அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் விடயங்களும் உள்ளன என்பதாகும். இதற்கு முஷ்ரிகீன்களின் (அல்லாஹ்வுடன் இணைவைப்பவர்களின்) கூற்று ஆதாரம் ஆகும்:

(أجعل الالهة إلها واحداً) 
  "என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்" [ 38:5 ]

மேலும் சில மக்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக இங்கு பயனிலையின் நிர்ணயமானது 'எங்களுக்கு' என்பதாகும். (அதாவது) எங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவது வேறு எதுவும் இல்லை. இதுவும் தவறான நிர்ணயமே ஆகும். ஏனென்றால், எங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் கடவுள் எதுவும் இல்லை, என்றாலும் எங்கள் அல்லாதோர்களுக்கு அவனைத் தவிர வணங்கப்படும் கடவுள் இருக்கலாம் என இதிலிருந்து விளங்கக் கூடும். 

மாறாக கடமையாவது என்னெவென்றால், அல்லாஹ்வே அனைத்து மனிதர்கள் மற்றும் ஜின்களின் வணங்கப்படும் கடவுளாக இருக்க வேண்டும்.  

மேலும் சரியான கருத்தாவது: (நிர்ணயக்கப்பட்ட) பயனிலையாவது 'தகுதியுள்ள' அல்லது 'உண்மையான' என நீங்கள் கூறலாம். அதாவது 'வணக்கத்திற்குத் தகுதியுடையவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை' அல்லது 'உண்மையில் வணங்கப்படுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.' 

அல்லாஹ் கூறுகிறான்:

(ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل) 
' நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை யாவும் பொய்யானவை ஆகும் (என்பதும்) நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன் (என்பதும் இதற்குக் காரணமாகும்). ' [ 22:62 ]

எனவே, லா இலாஹா இல்லல்லாஹ் என்பதன் சரியான அர்த்தமானது: "உண்மையில் வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை" என்பதாகும். அதாவது அல்லாஹ்வைத் தவிர மற்ற அனைத்து விடயங்களையும் வணங்குவதிலிருந்து முழுமையாக விலகி, அவனை மட்டும் வணக்கத்தைக் கொண்டு ஒருமைப்படுத்துவது ஆகும்.

இதை இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிட்ட அல்லாஹ்வின் வார்த்தை பரிபூரணமாக தெளிவுபடுத்துகிறது. 

(وإذ قال إبرهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي قطري فإنه سيهدين) 
' இப்ராஹீம் தன்னுடைய தந்தையையும், மக்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பாருங்கள். "நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும் நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன், “என்னை(யும் உங்களையும்) படைத்தவனைத் தவிர. (மற்ற அனைத்து பொய்யான தெய்வங்களை விட்டும் நான் முற்றிலும் நீங்கியவன்.) நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.” ' [ 43:26,27 ]

இதிலிருத்து நாம் விளங்குவது என்னவென்றால் "லா இலாஹ இல்லல்லாஹ்" (என்ற கலிமாவானது) இரு தூண்களைக் கொண்டுள்ளது. எவர் இவ்விரண்டையும் ஈமான் கொண்டு, அவற்றை (நாவால்) மொழிந்து, (உடலுறுப்புகளால்) நடைமுறைப் படுத்தவில்லையோ, நிச்சயமாக அவர் "லா இலாஹா இல்லல்லாஹ்" என்பதைக் கொண்டு வரவில்லை. (அவ்விருத்தூண்களில்) முதலாவது: மறுத்தல், இரண்டாவது உறுதிப்படுத்துதல் ஆகும். 

மறுத்தல் என்பது 'லா இலாஹ' (வணக்கத்திற்கு தகுதியானது எதுவும் இல்லை) என்ற உங்களின் கூற்றில் வந்துள்ளது. உறுதிப்படுத்துதல் என்பது 'இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர) என்ற உங்களின் கூற்றில் வந்துள்ளது. 

அல்லாஹ் கூறுகிறான் :

قال تعالى: « وقضى ربك ألا تعبدوا إلا إياه »
 ' (நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று கட்டளை யிட்டிருக்கிறான் ' [17:23]. இந்த வசனமானது அந்த இரு பகுதிகளையும் கொண்டுள்ளது. மறுத்தல் என்பது "(மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று" ஆகும். மேலும் உறுதிப்படுத்துதல் என்பது "தன்னைத் தவிர" ஆகும்.

அல்லாஹ் கூறுகிறான்: 

قال تعالى: «فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى
'ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். ' [2:256]. மறுத்தல் என்பது "ஆகவே, எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு" ஆகும். மேலும் உறுதிப்படுத்துதல் என்பது "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ" ஆகும்.

ஸஹீஹ் முஸ்லிமில் (வந்துள்ள ஒரு ஹதீஸில்) நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "இஸ்லாம் என்பது ஐந்து விடயங்களின் மீது கட்டப்பட்டுள்ளது. (முதலாவது) அல்லாஹ்வை (வணக்கத்தால்) ஒருமைப்படுத்தப்படுவதும், அவனைத் தவிர மற்ற அனைத்தும் நிராகரிக்கப்படுவதும் ஆகும்." இந்த அறிவிப்பானது "லா இலாஹ இல்லல்லாஹ்" என்பதின் (சரியான) பொருளை நமக்கு விளக்குகிறது. 

அதேபோன்று அம்ரு இப்னு அபஸா رضي الله عنه (நபியவர்களிடம் ﷺ) நீங்கள் யார் என்று கேட்டபொழுது, (அதற்கு நபியவர்கள் ﷺ அளித்த) பதிலானது (லா இலாஹா இல்லல்லாஹ்வின்) பொருளை விளக்குகிறது. 

(நபியவர்கள் ﷺ) கூறினார்கள்: "(நான்) நபி ஆவேன்". 

அவர் கேட்டார்: "நபி என்றால் என்ன?". அவர்கள் ﷺ கூறினார்கள்: "அல்லாஹ் என்னை அனுப்பினான்".

 அவர் கேட்டார்: "எதனைக் கொண்டு உங்களை அனுப்பினான்". 

அவர்கள் ﷺ கூறினார்கள்: "அல்லாஹ்  ஒருமைப்படுத்தப்பட வேண்டுமெனவும் மேலும் அவனுடன் எந்த இணையும் வைக்கப்படக்கூடாது" என்பதைக் கொண்டு அனுப்பினான்.

"லா இலாஹா இல்லல்லாஹ்" என்பது, அதனை மொழிபவர் (அதற்குண்டான) குர்ஆனிலும், ஸுன்னாஹ்விலும் வந்துள்ள கனமான வறையறைகளைக் (கொண்டுவருவதை) விட்டுவிட்டு, வெறுமனை வாயால் மொழிவது மட்டும் அவருக்கு எந்த ஒரு பலனையும் அளிக்காது என்பதை அறிந்து கொள்வது உங்கள் மீது கடமையாக உள்ளது. 

(அதனை) வெறுமனை நாவால் மொழிவது மட்டும் பயனளிக்கும் என்றிருந்தால் , நிச்சயமாக அது அதனை மொழிந்த முனாஃபிகீன்களுக்கு பயனளித்திருக்கும். ஆனால், அவர்களோ நரகத்தின் மிகக் கீழ் அடித்தட்டில் இருப்பவர்கள். இதற்குக் காரணம் என்னவென்றால் அவர்கள் அதனின் வறையறைகளையும், உரிமைகளையும் கொண்டுவரவில்லை. இந்த வறையறைகள் மற்றும் உரிமைகளை '(லா இலாஹா இல்லல்லாஹ்வின்) நிபந்தனைகள்' என உலமாக்கள் கூறி வருகிறார்கள். 

லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவின் ஏழு நிபந்தனைகள் - ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி حفظه الله تعالى 

"லா இலாஹா இல்லல்லாஹ்" என்பது, அதனை மொழிபவர் (அதற்குண்டான) குர்ஆனிலும், ஸுன்னாஹ்விலும் வந்துள்ள கனமான வறையறைகளைக் (கொண்டுவருவதை) விட்டுவிட்டு, வெறுமனை வாயால் மொழிவது மட்டும் அவருக்கு எந்த ஒரு பலனையும் அளிக்காது என்பதை அறிந்து கொள்வது உங்கள் மீது கடமையாக உள்ளது. 

(அதனை) வெறுமனை நாவால் மொழிவது மட்டும் பயனளிக்கும் என்றிருந்தால் நிச்சயமாக அது அதனை மொழிந்த முனாஃபிகீன்களுக்கு பயனளித்திருக்கும். ஆனால், அவர்களோ நரகத்தின் மிகக் கீழ் அடித்தட்டில் இருப்பவர்கள். இதற்குக் காரணம் என்னவென்றால் அவர்கள் அதனின் வறையறைகளையும், உரிமைகளையும் கொண்டுவரவில்லை. இந்த வறையறைகள் மற்றும் உரிமைகளை '(லா இலாஹா இல்லல்லாஹ்வின்) நிபந்தனைகள்' என உலமாக்கள் கூறி வருகிறார்கள்.

இவற்றை "நிபந்தனைகள்" என அழைக்கப்படுவதன் காரணம், 
இவையே அதைக் (அக்கலிமாவைக்) கொண்டு பயன்பெறுவதற்கு உரிய நிபந்தனைகளாக இருப்பதாகும்.

உஸூலின் உலமாக்களிடத்தில் (உஸூலிய்யூன்) 
"எந்த ஒன்று இல்லாது போவதால் (ஒரு அமல்) இல்லாமல் போவது அவசியமாகுமோ, மேலும் எந்த ஒன்று இருப்பதால் அது இருப்பதென்பதற்காக மட்டும் அது (அந்த அமல்) இருக்கின்றது அல்லது இல்லை என்று அவசியமாகாதோ" அதுவே நிபந்தனை ஆகும்.

எனவே, எப்பொழுதெல்லாம் நிபந்தனை என்பது இல்லாமல் போகுமோ, அப்பொழுதெல்லாம் எதற்கு (எந்த அமலுக்கு) அது நிபந்தனையாக உள்ளதோ அது இல்லாமல் ஆகிவிடும்.
நீங்கள் உளு செய்யாத நிலையில் தொழுவதைப் போல. [அத்தொழுகையில் உளு என்ற நிபந்தனை தவறுவதால் அந்தத் தொழுகைக் கூடாது. என்றாலும் உளு செய்த பிறகு அவ்வுளூ இருக்கிறது என்பதற்காக தொழுகையும் இருக்க வேண்டுமெனவோ அல்லது இல்லாமல் போய் விடுவதோ அவசியமாகாது].

பிரபல்யமான உமவிய்யக் கவிஞர் ஃபரஸ்தக் உடைய மனைவியின் ஜனாஸாவில் அல் ஹஸன் அல் பஸரீ மற்றும் ஃபரஸ்தக் ஒன்று கூடினார்கள். பின்னர் ஃபரஸ்தக் கூறினார், "இந்த ஜனாஸாவில் மக்களிலேயே சிறந்தவரும் மக்களிலேயே தீயவரும் பங்கு பெற்றுள்ளனர்" என்று மக்கள் கூறுகின்றனர். அதற்கு தாபியீன் ஆகிய அல் ஹஸன் அல் பஸரீ அவர்கள் "நான் மக்களிலேயே சிறந்தவரும் அல்ல, மேலும் நீங்கள் அவர்களிலேயே தீயவரும் அல்ல" என்று கூறினார்கள். பின்னர் (அல் ஹஸன் அல் பஸரீ) அவர்கள் ஃபரஸ்தக்கிடம் "இந்த (மரணத்தின்) நாளுக்காக எதை நீங்கள் தயார்படுத்தி வைத்துள்ளீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு ஃபரஸ்தக் "லா இலாஹ இல்லல்லாஹ், எழுபது வருடங்களாக (இக்கலிமாவை) எனது மரணத்தின் நாளுக்காக தயார்படுத்தி வைத்துள்ளேன்" என (பதில்) கூறினார்.

பின்னர் அல் ஹஸன் அவர்கள் "என்ன ஒரு அழகான முன்னேற்பாடு! என்றாலும் லா இலாஹ இல்லல்லாஹ்விற்கு நிபந்தனைகள் உள்ளன. மேலும் பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்" எனக் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் "இது (இக்கலிமா) கம்பம் ஆகும். எனவே கூடாரத்தைக் கட்டிவைக்கப் பயன்படும் கயிறு எங்கே?!" என்று கேட்டார் (என வந்துள்ளது). 

மேலும் ஹஸன் அவர்களிடம் "எவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவாரோ, அவர் சுவனம் நுழைவார் என சிலர் கூறுகிறார்கள்" என்று கூறப்பட்டது.

அதற்கு அவர்கள் "எவர் லா இலாஹ இல்லல்லாஹ் எனக் கூறி, அதன் உரிமையையும், கடமையையும் நிறைவேற்றுவாரோ, அவர் சுவனம் நுழைவார்" எனக் கூறினார்கள்.

 வஹ்ப் இப்னு முனப்பிஹ் அவர்களிடம், "சில மக்கள் லா இலாஹ இல்லல்லாஹ் சுவனத்தின் திறவுகோள் என்கின்றனர்" எனக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், "ஆம், அது சுவனத்தின் திறவுகோள் தான், என்றாலும் ஒவ்வொரு திறவுகோளுக்கும் பற்கள் உண்டு. எனவே, பற்கள் உடைய ஒரு திறவுகோளை நீங்கள் கொண்டு வந்தால் உங்களுக்குத் திறக்கப்படும் (அவ்வாறு) இல்லை என்றால் உங்களுக்குத் திறக்கப்படாது" என்று கூறினார்கள்.

 உலமாக்கள் லா இலாஹ இல்லல்லாஹ்விற்கு ஏழு நிபந்தனைகள் உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நிச்சயமாக (இக்கலிமா) ஏழு நிபந்தனைகளைக் கொண்டு  வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் வஹியின் ஆதாரங்களில் (அவை ஏழும்) உண்மையாகவே வந்துள்ளன. எனவே, நிச்சயமாக இதனைக் (இக்கலிமாவைக்) கூறியவர் அதனை (அந்த ஏழு நிபந்தனைகளைப்) பரிபூரணப்படுத்தும் வரை (அக்கலிமாவை) மொழிவதைக் கொண்டு பயன்பெறமாட்டார்.

(அந்த ஏழு நிபந்தனைகள் பின்வருமாறு:) அறிதல், உறுதிகொள்ளல், ஏற்றுக்கொள்ளுதல், கீழ்ப்படிதல் - நான் கூறுவதை தெரிந்துகொள் -

மேலும் உண்மைத்தன்மை, மனத்தூய்மை மற்றும் நேசித்தல் - அல்லாஹ் உனக்கு அவன் விரும்புவவற்றை நோக்கி ஈடேற்றம் அளிப்பானாக.

இந்நிபந்தனைகள் யாவும் ஒரு கவிதை வரியில் தொகுக்கப்பட்டுள்ளது:

அறிதல், உறுதிகொள்ளல், மனத்தூய்மை மேலும் நீ உண்மையாய் இருப்பது, அத்துடன் நேசித்தல், கீழ்படிதல் மற்றும் அதை ஏற்றுக்கொள்ளுதளாகும்.

முதலாவது நிபந்தனை: லா இலாஹ இல்லல்லாஹ்வின் (சரியான) பொருளை அறிவது.

قال تعالى: فاعلم أنه لا إله إلا الله

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே (வேறு யாரும்) இல்லை என்பதை நன்கறிந்து கொள்வீராக!

وقال تعالى: إلا من شهد بالحق وهم يعلمون

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் (ஹக் எனும்) உண்மையை அறிந்தவர்களாக சாட்சி கூறினார்களோ (அவர்களுக்கு நல்லவர்கள்) சிபாரிசு செய்வார்கள்.

தஃப்சீர் அறிஞர்களில் ஒரு பெரும் கூட்டத்தினர், இங்கு (இந்த வசனத்தில் வந்துள்ள) 'அல்-ஹக்' என்பது லா இலாஹ இல்லல்லாஹ் ஆகும் என்கின்றனர்.

இரண்டாவது நிபந்தனை: சந்தேகத்திற்கு முரணான உறுதியான நம்பிக்கை.

قال تعالى: «إنما المؤمنون الذين ءامنوا بالله ورسوله، ثم لم يرتابوا

அல்லாஹ் கூறுகிறான்: '(உண்மையான) நம்பிக்கையாளர்கள் எவர்களென்றால், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, பின்னர் எவ்வித சந்தேகமும் கொள்ளமாட்டார்கள்.' [49:15]

وعند مسلم قال صلى الله عليه وسلم: (من قال لا إله إلا الله مستيقنا بها قلبه دخل الجنة)،

இமாம் முஸ்லிம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் 'யார் தனது உள்ளத்தால் உறுதியாக நம்பிக்கை கொண்டவராக லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவாரோ அவர் சொர்க்கம் நுழைவார்' என்று நபியவர்கள் ﷺ கூறினார்கள். எனவே, நபியவர்கள் ﷺ "லா இலாஹ இல்லல்லாஹ்" கூறியவர் சுவனத்தில் நுழைவதற்கு, அவரது உள்ளம் அதைக் கொண்டு உறுதியான நம்பிக்கைக் கொண்டிருப்பதை நிபந்தனை ஆக்கியுள்ளார்கள்.

மூன்றாவது நிபந்தனை: ஷிர்க்கிற்கு முரணான மனத்தூய்மை.

 (அதாவது) நீங்கள் வேறெதையும் நாடாமல் அல்லாஹ்வின் திரு முகத்தை (மட்டும்) நாடி இதை (இக்கலிமாவை) கூறுவதாகும்.

قال صلى الله عليه وسلم: (فإن الله حرم على النار من قال: لا إله إلا الله يبتغي بذلك وجه الله) 

நபியவர்கள் ﷺ கூறினார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ்வின் திரு முகத்தை (மட்டும்) நாடியவராக யார் லா இலாஹ இல்லல்லாஹ் எனக் கூறுகிறாரோ நரக நெருப்பின் மீது (அது அவரைத் தீண்டுவதை) அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான்.'

நான்காவது நிபந்தனை: பொய்யிற்கு முரணான உண்மைத்தன்மை.

 அதாவது அவர் இந்தக் கலிமாவைக் கொண்டுவரும் பொழுது, (மொழியும்பொழுது) அவர் நாவினால் கூறுவது அவர் உள்ளத்தில் உள்ளவற்றிற்கு ஒப்பாக இருக்க வேண்டும். 

قال تعالى : يقولون بأفواههم ما ليس في قلوبهم

அல்லாஹ் கூறுகிறான்: '(நயவஞ்சகர்கள்) தங்கள் மனதில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள்.' [3:167]

ஐந்தாவது நிபந்தனை: நேசம்.

 அதாவது லா இலாஹ இல்லல்லாஹ் (எனும் கலிமா) சுட்டிக்காட்டும் பொருளை அவர் நேசிக்க வேண்டும். 

قال صلى الله عليه وسلم: (لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين)

நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:  'ஒருவரின் தந்தை, குழந்தைகள், மக்கள் அனைவரை விடவும், நான் அவருக்கு மிகவும் நேசத்திற்குரியவராக ஆகும் வரை உங்களில் எவரும் (முழுமையான) ஈமான் கொண்டவராக ஆகமாட்டார்.' தூதரை நேசிப்பது என்பது அல்லாஹ்வை நேசிப்பதற்குப் பின்பு வரும். 

மேலும் இந்த நிபந்தனையின் கிளைகளிலிருந்து உள்ளவையானது: அவர் ஈமான் கொண்ட மக்களை நேசிப்பதும், நிராகரிக்கும் மக்களை வெறுப்பதும் ஆகும். அவர் நபி ﷺ அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் நேசிக்க வேண்டும். ஏனெனில், நிச்சயமாக இஸ்லாத்தை முறிக்கும் காரியங்களில் ஒன்றானது, ஒருவர் நபி ﷺ அவர்கள் கொண்டு வந்த விடயங்களில் ஏதேனும் ஒன்றை வெறுப்பதாகும். 

ஒருவர் தன் தாடியை வளர விடுகிறார். என்றாலும் "நான் இந்தத் தோற்றத்தை வெறுக்கின்றேன்" எனக் கூறுகிறார். மற்றாருவரோ தன் தாடியை சிரைக்கிறார். என்றாலும் அவர் இந்த ஸுன்னாஹ்வை நேசிக்கின்றார். நிச்சயமாக தன் தாடியை சிரைத்தவர், என்றாலும் அதை (தாடியை வளர்ப்பதை) நேசித்தவர் (என்ற காரணத்தினால்) இறை நிராகரிப்பாளராக ஆக மாட்டார். (மாறாக) பாவம் செய்யும் ஒரு முஸ்லிமாக மட்டுமே கருதப்படுவார். ஆனால், மற்றவரோ இந்தச் செயலைச் செய்கிறார் (தாடியை வளர்க்கிறார்). என்றாலும் அவரின் உள்ளத்தில் (தாடியை வளர்ப்பது நோக்கிய) வெறுப்பு உள்ளது. அதன் காரணத்தினால், நிச்சயமாக இவருக்கு இஸ்லாமிலிருந்து எந்த ஒரு பங்கும் கிடையாது.  

எவர் நபி ﷺ அவர்கள் (மார்க்கமாக) கொண்டு வந்த விடயங்களில் இருந்து ஏதேனுமொன்றை வெறுப்பாரோ, அவர் அந்த விடயத்தை நடைமுறைப்படுத்தினாலும் கூட, அவர் நிச்சயமாக நிராகரித்து விட்டார் என்பதில் மார்க்க அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் இருக்கின்றார்கள்.

ஆறாவது நிபந்தனை: ஏற்றுக்கொள்ளுதல்.

 அதாவது அவர் லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருளை அறிந்து, அப்பொருளை நேசித்து, அதனை உண்மைப்படுத்தி, 'லா இலாஹ இல்லல்லாஹ்' என உளத்தூய்மையுடன் கூறினால் நிச்சயமாக அவர் மீது அவசியமாகுவது என்னவென்றால் அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை அல்லாஹ்வின் சட்டங்களை ஏற்று நடக்க ஒரு ஒப்பந்தம் மற்றும் உறுதிமொழியாகவே அவர் அதை (அந்தக்கலிமாவை) மொழிந்திருக்க வேண்டும்.

ஏனென்றால், யூதர்கள் மற்றும் கிருஸ்துவர்களிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைப் படித்த பல ஓரியண்டலிஸ்டுகள் இந்த மார்க்கம் சத்தியமாகும் என்பதை அறிந்துள்ளார்கள். என்றாலும் (இம்மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள) மறுக்கின்றார்கள். 

قال تعالى: «الذين ءاتينهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم. 

அல்லாஹ் கூறுகிறான்: 'எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அதை (இஸ்லாமிய மார்க்கம்தான் சத்தியம் என்பதை) அறிவார்கள்.' [2:146]

மேலும், நபி ﷺ அவர்களின் பெரிய தந்தையாகிய அபூ தாலிப் தன் சகோதரனின் மகன் (முஹம்மது ﷺ), அல்லாஹ்விடம் இருந்து (வந்த) ஒரு இறைத்தூதர் (என்று கூறுவதில்) உண்மையாளர் என்பதை அறிந்திருந்தார். 

அதை அறிந்திருந்த போதிலும் அவர் கூறியதாவது:

முஹம்மதின் மார்க்கமானது படைப்புகளின் மார்க்கங்களிலேயே சிறப்பான மார்க்கமாகும் என்பதை நான் நிச்சயமாக அறிந்துள்ளேன். 
(மக்கள் என்னைக்) குறைக்கூறுதல் மற்றும் (என்னை அவர்கள்) இழிவுபடுத்துதலை விட்டு (நான்) எச்சரிக்கையாக இருப்பது மட்டும் இல்லையென்றால் (நான்) இதற்கு (இம்மார்க்கத்திற்குக்) கீழ்ப்படிந்தவனாக என்னைத் தெளிவாகக் கண்டிருப்பீர்கள். 

எனவே, ஈமான் என்பது (இஸ்லாமிய மார்க்கத்தை) வெறுமனையாக உண்மைப்படுத்துதல் அல்லது (அது சத்தியம் என) அறிந்து அல்லது தெரிந்துகொள்வது மட்டும் ஆகாது. (மாறாக) நிச்சயமாக (அம்மார்க்கத்தின் படி நடப்பதைக்) கடமையாக்கிக் கொள்ளுதல், (அதைப்) பொருந்திக்கொள்ளுதல், மேலும் (அதை முழுமையாக) ஏற்றுக்கொள்ளுதலும் ஆகும். 

ஏழாவது நிபந்தனை: கீழ்ப்படிவது.

 ஒருவர் லா இலாஹா இல்லல்லாஹ் என்பதை கல்வி, நேசம், உண்மைத்தன்மை, உளத்தூய்மை ஆகியவற்றோடு மொழிந்து, மேலும் இந்த மார்க்கத்தை (அதில் வந்துள்ள) அதன் செய்திகள் மற்றும் சட்டங்களை (நம்பிக்கைக் கொண்டு, அவற்றை ஏற்று) தன்மீது அவசியமாக்கிக்கொண்டாலும், பின்னர் அவர் (இம்மார்க்கத்திற்கு) கீழ்ப்படிந்து, அமல் செய்வது அவர் மீது மீதமுள்ளது. 

قال تعالى: « ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور» 

அல்லாஹ் கூறுகிறான்: 'எவர் தன்னுடைய முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டார். எல்லா காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது' [31:22]. 

உலமாக்கள் விளக்கம் கொடுத்ததைப் போன்று '(அறுபடாத) மிக்க பலமானதொரு கயிறு' என்பதானது "லா இலாஹ இல்லல்லாஹ்" ஆகும். "நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ" என்பது ஷரீயத்தின் சட்டங்களைக் கொண்டு அமல் செய்வதின் மூலம் உள்ள கீழ்ப்படிதலைக் குறிக்கும். 

எனவே, கீழ்ப்படிதல் என்னும் நிபந்தனையானது இரண்டு மனிதர்களின் விடயத்தில் முறிந்துவிட்டது. முதலாவது (மனிதர்) அல்லாஹ்வுடன் இணைக்கற்பித்தவர் ஆவார். இரண்டாவது (மனிதர்) கீழ்ப்படிதலை விட்டு புறம் திரும்பியவர் ஆவார். 

ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் கீழ்ப்படிதல் (ஆகிய இரண்டு நிபந்தனைகளுக்கு) மத்தியில் உள்ள வேறுபாடாவது: ஏற்றுக்கொள்ளுதல் என்பது அடிப்படையும், கீழ்ப்படிதல் என்பது கிளையும் ஆகும். ஏனென்றால், ஒரு மனிதன் (இந்த மார்க்கத்தை) ஏற்றுக்கொண்டு, (அதை) தன்மீது அவசியமாக்கினால் அதன் பின்பு அவர் மீது கடமையாகுவது, அமல் செய்வதைக் கொண்டு கீழ்ப்படிவதாகும். (ஐவேளைத்) தொழுகைகளைத் தவிர்த்து கடமையான மற்ற விடயங்களில் அவரிடம் குறைபாடு இருந்தாலும் சரியே, அவர் நிச்சயமாக முஸ்லிம் ஆவார். ஆனால் (இம்மார்க்கத்தைக் கொண்டு அமல் செய்வதை) முற்றிலுமாக அவர் விட்டுவிட்டால், இவ்வாறானவருக்கு அவர் லா இலாஹா இல்லல்லாஹ்வை மொழிவது பயனளிக்காது.

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற சாட்சியத்திற்கு ஆதாரமாவது அல்லாஹ்வுடைய (பின்வரும்) கூற்றாகும் :

« لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتُم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم» [التوبة: ١٢٨]. 

'(நம்பிக்கையாளர்களே! நம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவ்வளவு தூரம் உங்கள் மீது அன்புடையவர்) அன்றி உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார்.' [9:128]

மேலும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற சாட்சியத்தின் பொருளாவது: 

(நபி ﷺ):

அவர்கள் ஏவியவற்றில் அவருக்குக் கீழ்ப்படிவது, 

அவர்கள் அறிவித்தவற்றில் அவரை உண்மைப்படுத்துவது, 

அவர்கள் எதை விட்டும் தடுத்து, விலக்கினாரோ அவற்றை விட்டு தவிர்ந்துகொள்வது, 

மேலும் அவர்கள் மார்க்கம் ஆக்கிய விடயங்களைக் கொண்டு மட்டுமே தவிர அல்லாஹ்வை வணங்காது இருப்பது. 

நம்முடைய நபி முஹம்மதிற்கு ﷺ தூதுத்துவத்தைக் கொண்டு சாட்சியம் கூறுவது "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்ற சாட்சியத்துடன் இணைந்த சாட்சியமாகும். ஏனெனில், மற்றொன்றுடனேயே தவிர, இரண்டில் ஒன்று (மட்டும் தனியே) பயனளிக்காது.

இரு சாட்சியங்களுக்கு இடையில் உள்ள பிரிக்க முடியாத  தொடர்பினை நீங்கள் ஆழமாக சிந்தித்தால், பல மார்க்க ஆதாரங்களில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற சாட்சியத்துடன் சேர்ந்து இல்லாமல், "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்ற சாட்சியம் மட்டும் (தனியாக) குறிப்பிடப்பட்டு வந்திருக்கும் காரணத்தை நீங்கள் அறிவீர்கள்.

(இதற்குக்) காரணம்: இந்த இரண்டு சாட்சியங்களும், ஒன்று மற்றொன்டோடு இணைந்த பிரிக்க முடியாதவையாகும். இந்த பிரிக்க முடியாத (தொடர்பை) உங்களுக்குத் தெளிவாக்குவது:" லாயிலாஹ இல்லல்லாஹ்" (என்ற கலிமாவானது), உண்மையில் வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற பொருளைத்தரும். (எனவே அத்தகைய) வணக்கத்தை நபியவர்களின் ﷺ பாதை அல்லாது வேறு எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முடியும்?! எனவே, "லாயிலாஹ இல்லல்லாஹ்" என்பது" முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற சாட்சியத்தை உள்ளடக்குகின்றது என்பது இதைக் கொண்டு தெளிவாகின்றது. 

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற சாட்சியத்தின் பொருளானது:

குரைஷிய கோத்திரம் மற்றும் ஹாஷிமிய வம்சத்தைச் சேர்ந்த, அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது ﷺ அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதர் என்றும், 

அவரின் ﷺ தூதுத்துவமானது மனித மற்றும் ஜின் வர்கத்தினருக்குப் பொதுவானதென்றும், 

மேலும் அவர் ﷺ (எல்லா) நபிமார்கள் மற்றும் தூதர்களின் முத்திரை (இறுதி நபி) என்றும் நம்பிக்கை கொள்வதாகும்.

இதனால் (இந்நம்பிக்கையால்) அவசியமாவது: (நபி ﷺ) அவர்கள்  ஏவியவற்றில் அவருக்குக் கீழ்ப்படிவது, அவர்கள் அறிவித்தவற்றில் அவரை உண்மைப்படுத்துவது, அவர்கள் எதை விட்டும் தடுத்து, விலக்கினாரோ அவற்றை விட்டு தவிர்ந்துகொள்வது, மேலும் அவர்கள் மார்க்கம் ஆக்கிய விடயங்களைக் கொண்டு மட்டுமே தவிர அல்லாஹ்வை வணங்காது இருப்பது.

(அவர்) ﷺ அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதர் (என்பதற்குரிய ஆதாரம்), அல்லாஹ் கூறுகிறான்:

قل يأيها الناس إني رسول الله إليكم جميعا 
'(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்.' [7:158]

அவரின் ﷺ தூதுத்துவம், மனித மற்றும் ஜின் வர்கத்திற்குப் பொதுவானது (என்பதற்கு ஆதாரம்),

 அல்லாஹ் கூறுகிறான்: '(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! (நீங்கள் எந்த நாட்டவர் ஆயினும் எவ்வகுப்பாராயினும்) நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்.' [7:158].

 (மேலும்) நபியவர்கள் ﷺ கூறினார்கள்:

قال صلى الله عليه وسلم: (أعطيت خمسا لم يعطهن أحد قبلي، قال: ومنها بعثت إلى الأحمر والأسود)
'எனக்கு முன்னர் எந்த ஒருவருக்கும் (எந்த நபிக்கும்) வழங்கப்படாத ஐந்து விடயங்களை நான் வழங்கப்பட்டுள்ளேன். அவற்றுள் ஒன்று, நான் சிவப்பு மற்றும் கருநிற மக்கள் (என எல்லோருக்கும்) நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்.'

(மேலும்) அல்லாஹ் கூறுகின்றான்: 

«تبارك الذي نزل الفرقان على عبده، ليكون للعلمين نذيرا »
'(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கின்றது.' [25:1]. இப்னு அப்பாஸ் அவர்கள் உலகத்தார் (அல்-ஆலமூன்) என்றால் மனிதர்கள் மற்றும் ஜின்கள் ஆவார்கள் என்று கூறியுள்ளார்கள். 

அவர் ﷺ (எல்லா) நபிமார்கள் மற்றும் தூதர்களின் முத்திரை (இறுதி நபி என்பதற்கு ஆதாரம்), அல்லாஹ் கூறுகின்றான்:

(ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين) 
'(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்க வில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார்.' [33:40]. 

மேலும், தனக்குப்பின் நபி என்று வாதிடுகின்ற முப்பது பொய்யர்களான தஜ்ஜால்கள் தோன்றுவார்கள் என நிச்சயமாக நபியவர்கள் ﷺ (முன்) அறிவிப்புச் செய்தார்கள். 

ஷைக் அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்த விளக்கமானது, (ஒன்றை நம்பிக்கை கொள்வதால், அதனால்) அவசியமாகும் (மற்ற விடயங்களைக் கொண்டு) அமைந்த விளக்கமாகும்.

முஹம்மது அவர்கள் ﷺ அல்லாஹ்வுடைய தூதராவார் என்று நம்பிக்கை கொள்வதால் அவசியமாகுவது, இந்த நான்கு விடயங்களாகும்: (நபி ﷺ) அவர்கள்  ஏவியவற்றில் அவருக்குக் கீழ்ப்படிவது, அவர்கள் அறிவித்தவற்றில் அவரை உண்மைப்படுத்துவது, அவர்கள் எதை விட்டும் தடுத்து, விலக்கினாரோ அவற்றை விட்டு தவிர்ந்துகொள்வது, மேலும் அவர்கள் மார்க்கம் ஆக்கிய விடயங்களைக் கொண்டு மட்டுமே தவிர அல்லாஹ்வை வணங்காது இருப்பது.

[இந்த நான்கு அம்சங்களுக்குரிய ஆதாரங்களைத் தற்பொழுது இங்கு நாம் காண்போம்]

அவர்கள் ஏவியவற்றில் அவருக்குக் கீழ்ப்படிவது (என்றால்): 

(நபியவர்கள் ﷺ ஏவிய விடயங்களில்) நீங்கள் (அவற்றை செய்யக்) கடமைப்பட்டிருப்பவர் (அவற்றைச் செய்யும்படி) அணுகப்பட்டவர் என்று நம்பிக்கை கொள்வதாகும். மேலும் நபியவர்களைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாகும்.

 அல்லாஹ் கூறுகின்றான்: 

وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله

'அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை.' [4:64]

அவர்கள் அறிவித்தவற்றில் அவரை உண்மைப்படுத்துவது (என்றால்): 

நபியவர்கள் ﷺ தன்னுடைய ஹதீஸ்களில் பல அறிவிப்புகளை அறிவித்துள்ளார்கள்: அவற்றுள் சில தற்காலத்துடன் தொடர்புடையதாகவும் மற்றும் சில கடந்த காலத்துடன் தொடர்புடையதாகவும் மற்றும் சில எதிர்காலத்துடன் தொடர்புடையதாகவும் உள்ளது.

இமாம் புகாரி மற்றும் முஸ்லிம் அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 

أن النبي صلى الله عليه وسلم قال مرة لأصحابه: (إن رجلا ركب بقرة، فالتفتت إليه، وقالت: إني لم أخلق لهذا، إنما خلقت للحراثة)، فقال الناس: سبحان الله بقرة تتكلّم، فقال النبي صلى الله عليه وسلم: (فإني أؤمن به وأبو بكر وعمر)، ولم يكن أبو بكر ولا عمر رضي الله عنهما في الحاضرين 

நபியவர்கள் ﷺ ஒரு முறை தன்னுடைய தோழர்களிடத்தில் 'ஒரு மனிதர் ஒரு பசுமாட்டின் மீது சவாரி செய்தார். எனவே அது அவரை நோக்கித் திரும்பி "நான் இதற்காகப் படைக்கப்படவில்லை (மாறாக) நான் (நிலத்தை) உழுவதற்கு மட்டுமே படைக்கப்பட்டுள்ளேன்" என்று கூறியது. எனவே (இதைக் கேட்ட) மக்கள் "அல்லாஹ் மிகத் தூய்மையானவன். பேசக்கூடிய ஒரு மாடா!?" என்று கேட்டார்கள். பின்னர் நபியவர்கள் ﷺ "நிச்சயமாக நான் இதை நம்பிக்கை கொள்கிறேன். மேலும் அபூபக்ரும், உமரும் இதை நம்பிக்கை கொள்கிறார்கள்" எனக் கூறினார்கள். அச்சமயத்தில் அபூபக்கர் அவர்களோ அல்லது உமர் அவர்களோ (அச்சபையில்)  இருந்தவர்கள் மத்தியில் இல்லை. 

அவர்கள் எதை விட்டும் தடுத்து, விலக்கினாரோ அவற்றை விட்டு தவிர்ந்துகொள்வது (என்றால்): 

தடுக்கப்பட்ட விடையங்கள் பற்றிய பேச்சானது ஏவப்பட்ட விடையங்களைப் பற்றிய பேச்சைப் போன்றதே. எனவே, எவர் ஒருவர் பெருமையடித்தவராக நபி அவர்கள் ﷺ தடுத்த விடயங்களை விட்டு தவிர்ந்துகொள்ளவில்லையோ, அவர் நிச்சயமாக நிராகரித்து விட்டார். 

ஆனால், எவர் ஒருவர் நபி ﷺ அவர்களின் ஹதீஸ்களில் வந்த அனைத்தையும் கொண்டு தான் அணுகப்பட்டவர் என நம்பிக்கைக் கொண்டு, என்றாலும் அவருடைய மனோஇச்சை மற்றும் ஷைத்தான் அவரை மிகைத்த காரணத்தினால் , அவர் நபி ﷺ அவர்கள் தடுத்த விடயங்களில் விழுந்தவர் என்றால் நிச்சயமாக அவர் பாவம் செய்த (முஸ்லிம்) ஆவார். 

மேலும், அவர்கள் மார்க்கம் ஆக்கிய விடயங்களைக் கொண்டு மட்டுமே தவிர அல்லாஹ்வை வணங்காது இருப்பது (என்றால்):

முஹம்மது ﷺ அவர்களின் வழியைத் தவிர அல்லாஹ்வை நோக்கிய மற்ற அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. எனவே, அவனுடைய தூதரின் வழியைக் கொண்டே தவிர, அல்லாஹ் வேறு எதைக் கொண்டும் வணங்கப்படக்கூடாது. 

அல்லாஹ் கூறுகிறான்: 

﴿ يأيها الذين امنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم ، ) 

'நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள்.' [8:24 ]. 

எனவே, நபி ﷺ அவர்களுக்கு பதிலளிப்பதன் மூலம் எவரின் உள்ளத்திற்கு அல்லாஹ் உயிர் கொடுத்தானோ அவர்களைத் தவிர அனைத்து மக்களும் மரணித்தவர்களே. 

அல்லாஹ் கூறுகிறான்: 

فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل  ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدى القوم الظالمين 
'உங்களுக்கு அவர்கள் பதில் சொல்லாவிடில், நிச்சயமாக அவர்கள் தங்கள் சரீர இச்சையையே பின்பற்றுகிறார்கள் என்று உறுதியாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வினுடைய நேரான வழியை விட்டுத் தன்னுடைய சரீர இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டோ! நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.' [28:50].

(எனவே), இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. இவற்றுக்கு மூன்றாவது என்பது கிடையாது. ஒன்று நீங்கள் நபி ﷺ அவர்களுக்குப் பதில் அளிக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் உங்கள் மனோஇச்சையைப் பின்பற்ற வேண்டும்.

இமாம் மற்றும் தாபியீயான சயீத் இப்னு முஸய்யீப் அவர்கள் பஜ்ர் தொழுகையின் ஸுன்னத்தைத் தொழும் ஒரு மனிதரைப் பார்த்தார்கள். பின்பு அவர்  இரண்டு ரக்அத்துகளைத் அதிகப்படுத்தித் தொழுது, பல ரக்அத்துகளைத் தொடர்ந்து தொழ ஆரம்பித்தார்.

எனவே, ஸயீத் அவர்கள் அவரைத் தடுத்துவிடடு, '(இவ்வாறு) செய்யாதீர்கள்' எனக் கூறினார்கள்.  அதற்கு அந்த மனிதர் "அபூ முஹம்மதே! (கூடுதலாக) தொழுததன்  காரணமாக அல்லாஹ் என்னைத் தண்டிப்பானா!?" எனக் கேட்டார். (அதற்கு) அவர்கள், "இல்லை. ஆனால் (நபியின் ﷺ) ஸுன்னாஹ்வை விட்டதற்காக (அதாவது அதற்கு மாற்றம் செய்தமைக்காக அல்லாஹ்) உங்களைத் தண்டிப்பான்" எனக் கூறினார்கள். 

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

قال صلى الله عليه وسلم: (من عمل عملا ليس عليه أمرنا فهو رد)

"நம் கட்டளை இல்லாத (மார்க்கத்தில் இல்லாத) ஒன்றை ஒருவன் செயல்படுத்தினால், அது நிராகரிக்கப்பட்டதாகும்". 

மேலும் அவர்கள் ﷺ கூறினார்கள்: 

وقال عليه الصلاة والسلام: (كل أمتي يدخلون الجنة، إلا من أبى)، قالوا: ومن يأبى يا رسول الله؟ قال: (من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى).

'மறுத்தவர்களைத் தவிர, என்னுடைய உம்மத்திலிருந்து அனைவரும் சொர்க்கம் நுழைவார்கள்'. (அதற்கு ஸஹாபாக்கள்) கேட்டார்கள் 'அல்லாஹ்வின் தூதரே மறுப்பவர்கள் யார்?' (அதற்கு) அவர்கள் ﷺ, 'யார் எனக்குக் கீழ்ப்படிகிறாரோ, அவர் சொர்க்கம் நுழைவார். மேலும் யார் எனக்கு மாறு செய்கிறாரோ, அவர் நிச்சயமாக மறுத்துவிட்டார்' . 

"லாஇலாஹ இல்லல்லாஹ்" என்ற சாட்சியத்தின் நிபந்தனைகளே 
"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற சாட்சியத்தின் நிபந்தனைகளும் ஆகும். எனவே, முன் சென்ற ஏழு நிபந்தனைகளுடன் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற சாட்சியத்தை ஒருவர் கொண்டு வருவது அவசியமாகும்.


-மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.

أحدث أقدم