நல்ல வார்த்தையும் பேச்சின் ஒழுக்குங்களும்

بسم الله الرحمن الرحيم

நல்ல வார்த்தை எவ்வாறு இருக்க வேண்டும்?

1. நல்ல வார்த்தை ஒருவரை சந்தோஷமடையச் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.

2. நல்ல வார்த்தை அடுத்தவர்களின் உள்ளங்களில் தூயதொரு தாக்கத்தை உண்டாக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

3. நல்ல வார்த்தை நலவின் வாசல்களைத் திறக்கக்கூடியதாகவும் தீங்கின் வாசல்களை மூடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

நல்ல வார்த்தையின் தனிச்சிறப்பம்சங்கள்

1. நல்ல வார்த்தை அழகானதாகவும் மென்மையானதாகவும் இருக்கும்.

2. நல்ல வார்த்தை கருத்திலும் மொழிச்சலிலும் அழகானதாக இருக்கும்.

3. நல்ல வார்த்தையை செவிமடுத்துக் கொண்டிருப்போர் விரும்புவர்.

நல்ல வார்த்தை குறித்து அல்குர்ஆன்

1. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நீங்கள் மனிதர்களுக்கு நல்லவற்றையே கூறுங்கள்.

- அல்பகறா: 83

2. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: நபியே! என்னுடைய அடியார்களுக்கு அவர்கள் நல்ல வார்த்தையே கூறவேண்டும் என நீங்கள் கூறுங்கள்.

- அல்இஸ்ரா: 53

3. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவர்களின் இரகசியங்களில் அதிகமானவற்றில் எந்த நலவுமில்லை. யார் ஸதகா அல்லது நல்ல விடயம் அல்லது மனிதர்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்தல் ஆகியவற்றை ஏவியவர்களைத்தவிர. இவைகளை யார் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியவராகச் செய்கிறாரோ அவருக்கு நாம் மகத்தான கூலியைக் கொடுப்போம்.

- அந்நிஸா: 114

நாம் பேசுகின்ற நல்ல வார்த்தைக்கு அல்லாஹ் கூலி வழங்குவதாயின் அது அல்லாஹ்வின் பொருத்தம் நாடப்பட்டு மொழியப்பட்ட வார்த்தையாக இருக்க வேண்டும் என்பதை இவ்வசனம் வேண்டிநிற்கின்றது.

4. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: அவன் பக்கமே நல்ல வார்த்தைகள் ஏறிச்செல்கின்றன. நற்செயல் அதனை உயர்த்தி வைக்கும்.

- அல்பாதிர்: 10

நல்ல வார்த்தை குறித்து அஸ்ஸுன்னாஹ்

1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பேரீத்தம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தாவது நரகத்தைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அதனையும் பெற்றுக்கொள்ளாவிட்டால் நல்ல வார்த்தையைக்கொண்டாவது நரகத்தைப் பயந்து கொள்ளுங்கள்.

-     புஹாரீ

நல்ல வார்த்தையைக் கொண்டாவது எம்மை நாம் நரகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதையே இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றது.

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஒர் அடியான் அல்லாஹ்வின் பொருத்தத்தைப்பெற்றுத்தரும் வார்த்தையை அதை பொருட்படுத்தாமல் பேசுகின்றான். அல்லாஹ் அதனைக்கொண்டு பல அந்தஸ்துக்களை உயர்த்துவான்.

- புஹாரீ

3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நல்ல வார்த்தை தர்மமாகும்.

- புஹாரீ

4. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்பவராக இருக்கின்றாரோ அவர் நல்லதையே பேசட்டும், அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

- புஹாரீ, முஸ்லிம்

நாம் அனைவரும் ஈமான் கொண்டிருக்கின்றோம். ஆனால், அவ்வாறு இருந்தும் நல்ல வார்த்தை பேசக்கூடியவர்களாக நாம் இருக்காவிட்டால் எமது ஈமான் குறையுள்ள ஈமானாகும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நல்ல வார்த்தையும்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நல்ல வார்த்தை மொழிவதில் மனிதர்களில் மிகச்சிறந்தவராகக் காணப்பட்டார்கள். எவ்விதத் தேவையுமின்றி அவர்கள் எந்த வார்த்தையையும் மொழியமாட்டார்கள். நற்குணமுடையவராகவும் கடுகடுப்பில்லாதவராகவும் அடுத்தவர்களை குறை கூறாதவர்களாகவும் உண்மையைப் பேசக்கூடியவராகவும் இருந்தார்.

அல்லாஹுத்தஆலா அவரைப்பற்றி பின்வருமாறு அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்: நிச்சயமாக நீர் மகத்தான குணத்தில் இருக்கின்றீர்கள்.

-     அல்கலம்: 4

நல்ல வார்த்தையின் பிரதிபலன்கள்

1. நல்ல வார்த்தை எம்மை நரகைவிட்டும் பாதுகாக்கும் ஒரு செயலாகும்.

2. நல்ல வார்த்தை எதிரியையும் நண்பனாக மாற்றும் மற்றும், குரோதங்களை நேசமாக மாற்றும் ஒரு செயலாகும்.

3. நல்ல வார்த்தை வானின் பக்கம் உயர்த்தப்பட்டு அதற்காக அதனுடைய வாசல்கள் திறக்கப்படும்.

4. நல்ல வார்த்தையின் கூலி ஸதகாவின் கூலியாகும்.

5. நல்ல வார்த்தை அடுத்தவர்களின் உள்ளங்களை தூய்மைப்படுத்துகின்றது. கவலையுடையவர்களின் கண்ணீர்களை துடைக்கின்றது.

6. நல்ல வார்த்தை தொடர்புபட்டிருப்பவர்களை ஒன்று சேர்த்துவிடுகின்றது.

மனிதர்களுடன் உரையாடும்போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்

1. நாம் கூறும் வார்த்தைகள் நலவை நோக்கமாக்கொண்ட பேச்சாக இருக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்பவராக இருக்கின்றாரோ அவர் நல்லதையே பேசட்டும், அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

-     புஹாரீ, முஸ்லிம்

நாம் யாருடன் உரையாடுகின்றோமோ அவருக்கு அல்லது பிறருக்கு நன்மை பயக்கும் வார்த்தைகளாக எமது வார்த்தைகள் இருக்க வேண்டும்.

2. தர்கிப்பதை விட்டும் தூரமாக இருக்க வேண்டும். தர்க்கம் புரிவதாக இருந்தால் அல்லாஹுத்தஆலா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்குர்ஆனில் பல இடங்களில் கட்டளையிட்டவாறு நல்ல முறையில் தர்க்கம் செய்ய வேண்டும்.

3. யாரிடமும் பொய் பேசக்கூடாது.

4. யாருடைய உள்ளத்தையும் நோகடிக்கும் பேச்சாக இருக்கக்கூடாது.

5. பரிகாசம் செய்யும் நோக்கில் நாம் ஒருவருடன் பேசுவதாக இருந்தால் அப்பரிகாசம் அவருடைய உள்ளத்தை நோகடிக்கக்கூடாது.

6. முஸ்லிம்களில் எவரையும் சந்தித்துப்பேச முன் அவருக்கு நாம் முதலில் ஸலாம் கூறவேண்டும்.

நல்ல வார்த்தையின் வகைகள்

நல்ல வார்த்தைகள் கணக்கிட முடியாதவாறு பல வகைகளைக்கொண்டதாக இருக்கின்றன. அவைகளில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்.

1. ஷஹாதா கலிமாவை மொழிதல்.

2. அல்குர்ஆன் ஓதுதல்.

3. திக்ர் செய்தல்.

4. ஸலவாத் கூறுதல்.

5. நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல்.

6. நல்லவற்றைப் பிறருக்குக் கற்றுக்கொடுத்தல்.

7. அதான் கூறுதல்.

8. துஆக்கேட்டல்.

எனவே, மேற்குறிப்பிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கமைய எமது வார்த்தைகளை அமைத்துக்கொள்வோமாக!

- அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்
Previous Post Next Post