நாற்பது நபிமொழிகள்
தொகுப்பு : இமாம் யஹ்யா ஷரஃபுத்தீன் அந்நவவி
(தமிழாக்கம் : எம்.குலாம் முஹம்மது)
இமாம் அன்-நவவி (ரஹ்) அவர்களின் முன்னுரை:
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம்.
அல்லாஹ்வின் தூதர் உங்களிடம் கொண்டு வந்திருப்பதை எடுத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 59:07)
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவனே அகிலத்தின் அதிபதி. ஆகாயம், பூமி இவைகளின் நிரந்தர பாதுகாவலன். படைக்கப்பட்டவர்களை பாதுகாப்பவன். பராமரிப்பவன். இறக்கச் செய்பவன். இறைவனின் வழிகாட்டுதலை வழங்குவதற்காகவும் இறைச் சட்டத்தை தாங்கள் வழிகாட்ட வந்த மக்களுக்கு எடுத்துச் சொல்லிடவும், தெளிவான அத்தாட்சிகளைத் தந்திடவும். இறை-தூதர்களை (அலலாஹ்வின் ஆசியும், அருளும், சாந்தியும் சமாதானமும் இறைத்தூதர்கள் அனைவர் மீதும் உண்டாவதாகுக) அனுப்பியவன். அல்லாஹ் அருளிய கிருபைகளுக்கு அவனையே புகழ்கிறேன். அவன் தனது அருட்கொடைகளை இன்னும் அதிகப்படுத்திட அவனிடம் இறைஞ்சுகிறேன்.
அல்லாஹ்வைத் தவித வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். அவன் ஒருவனே, அவனுக்கு இணையில்லை. அவனே படைத்தவன், பரிபாலிப்பவன், பாதுகாப்பவன், போஷிப்பவன், அவன் அருளாளன், மன்னிப்பவன். நமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் அந்த ஏக இறைவனின் நல்லடியாராவார்கள், அவனது தூதராவார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அன்புக்கும் அருளுக்கும், பாத்திரமானவர்கள். படைப்பினங்களிலெல்லாம் உயர்ந்தவராவார்கள். அவர்கள், வாழும் அற்புதமாகிய திருக்குர்அனால் பெருமைப்படுத்தப்பட்டவராவார்கள். நமது தலைவர் பெருமானார் (ஸல்) அவர்கள் சுருக்கமாகவும், விளக்கமாகவும் பேசுபவர்களாக இருந்தார்கள். (இறைவனின் ஆசியும், அருளும், சாந்தியும், சமாதானமும் இறைவனின் தூதர் அவர்கள்மீதும், இன்னும் ஏனைய இறைத்தூதர்கள் மீதும், இறைவனின் நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக!)
அலி இப்னு அபீதாலிப் (ரலி), அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி), முஆது இப்னு ஜபல் (ரலி), அபுதர்தா (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் இப்னு மாலிக் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) ஆகியோரின் ஆதாரங்களோடு பின்வரும் நபிமொழி நமக்குக் கிட்டியுள்ளது. அதாவது, பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் :
''என்னுடைய உம்மத்துக்களுக்காக மார்க்கம் சம்பந்தப்பட்ட நாற்பது ஹதீதுகளை எவர் மனனம் செய்துப் பாதுகாத்து வைக்கின்றாரோ அவரை அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் மார்க்க அறிஞர்கள் சட்ட வல்லுநர்கள் ஆகியோர்களின் கூட்டத்தில் எழச் செய்வான்"".
பிரிதொரு நபிமொழியில் ''அல்லாஹ் அவனை மார்க்க அறிஞனாகவும், மார்க்க சட்ட வல்லுநனாகவும் எழச் செய்வான்"" எனச் சொல்லப்பட்டுள்ளது.
அபுத்தர்தா அவர்களின் வார்த்தையில், ''இறுதித் தீர்ப்பு நாளில் நான் அவருக்கு (நாற்பது நபிமொழிகளை மனனம் செய்து ஏனையோருக்கு தெரிவிப்பவர்) சாட்சியாகவும், பரிந்துரை செய்பவராகவும் இருப்பேன்"", இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களின் வார்த்தையில், நாற்பது நபிமொழிகளை மனனம் செய்து எனது மக்களுக்காக சேகரித்து வைப்பவர்களிடம் ''சுவர்க்கத்தில் நீங்கள் விரும்பும் வாசல் வழியே நுழையுங்கள் என்றும் சொல்லப்படும்"". இப்னு உமர் (ரலி) அவர்களின் வார்த்தையில், ''அவர் (நாற்பது நபிமொழிகளை மக்களுக்கு சேகரித்து வைப்பவர்) மார்க்க அறிஞர்கள் கூட்டத்தில் குறித்து வைக்கப்படுவார், மேலும் அவர் இறைவனின் பாதையில் மடிந்த தியாகிகளின் வரிசையில் எழுப்பப்படுவார்"" என்றும் வருகிறது. (எனினும் இந்த கடைசி ஹதீதுக்கு ஆதாரங்கள் தரப்பட்டிருப்பினும் அது பலவீனமான ஹதீதுகளின் பட்டியலில் இடம் பெறுவதாக அறிஞர்கள் ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர்).
நபிமொழிகளை தொகுத்துத் தருவதில் எண்ணற்ற மார்க்க அறிஞர்கள் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கின்றார்கள். எனினும் எனக்குத் தெரிந்தவரை இந்தப் புனிதப்பணியை முதன் முதலாகச் செய்தவர்கள் அப்துல்லா இப்னு அல் முபாரக் ஆவார்கள். தொடர்ந்து இறைஞான அறிஞராக இப்னு அஸ்லாம் அத்-தூஸி, பின்னர் அல் ஹஸன் இப்னு சுஃப்யான்-அன் நஸயீ, அபூபக்ருல் ஆஜுரி, அபூபக்ரு முஹம்மத் இப்னு இப்ராஹீம் அல் அஸ்ஃபஹானி, அத்-தாரகுத்னீ, அல் ஹாக்கிம், அபூநுஐம், அபூஅப்துற்றஹ்மான் அஸ்சுலமீ, அபூ சயீதுல் மாலீனீ, அபூ உத்மான் அஸ்-சாபூனி, அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் அல் அன்சாரி, அபூபக்ரு அல்பைய்ஹக்கீ போன்ற முற்காலத்தவரும், பிற்காலத்தவருமான எண்ணற்றொரும் இப் பணியைச் செய்திருக்கிறார்கள்.
இந்த நாற்பது நபிமொழிகளையும் மார்க்க அறிஞர்கள், இஸ்லாத்தின் காவலர்கள் ஆகியோர் ஆக்கி வண்ணம், தொகுத்திட நான் இறைவனின் துணையைத் தேடியிருக்கிறேன். நல்லவைகளை செய்வதைப் பொறுத்தவரை பலவீனமான நபிமொழியை செயல்படுத்துவதும் அனுமதிக்கப்பட்ட ஒன்றேயென்று மார்க்க அறிஞர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இருந்த போதிலும் நான் மேலே குறிப்பிட்ட பலவீனமாக நபிமொழிகளில் முற்றாகச் சார்ந்திருக்கவில்லை.
''உங்களில் எவர் இங்கே என்னுடைய சாட்சியாக இருக்கின்றார்களோ அவர்கள் இங்கே இல்லாதவர்களுக்கு எடுத்துச் சொல்வீர்களாக"" என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் மொழியின் மீதும், ''நான் சொன்னவைகளைச் கேட்டு அவைகளை மனனம் செய்து, அவைகளை அப்படியே அடுத்தவர்களுக்குகம் சொல்லுகின்றவர்களின் முகத்தை இறைவன் பிரகாசம் மிக்கதாக ஆக்குவானாக!"" எனற நபிமொழியின் மீதும் ஆதரவு வைத்தே நான் இதனைத் தொகுத்திருக்கிறேன்.
இதைப் போலவே பல மார்க்க அறிஞர்கள் மார்க்கத்தில் பல்வேறு பொருள்கள் குறித்தும் நாற்பது நபிமொழிகளை தொகுத்துத் தந்துள்ளார்கள். உதாரணமாக, அறப்போர் (ஜிஹாத்), இறைநம்பிக்கை, நல்லொழுக்கம் இவைகள் ஒவ்வொன்றும் குறித்து நாற்பது நபிமொழிகள் கொண்ட தொகுப்புகள் வெளிவந்துள்ளதைக் குறிப்பிடலாம். இவைகள் அனைத்தும் இறைவனின் பாதையில் மேற்கொள்ளப்பட்ட அரிய முயற்சிகளேயாகும். இறைவன் இவர்கள் அனைவருக்கும் நற்கூலியைத் தந்தருள்வானாக.
நான் இவைகளை விட முக்கியமான, இவையனைத்தையும் பிரதிபலிக்கும் நாற்பது நபிமொழிகளைத் தொகுத்துத் தருவது சிறப்பான செயலாகும் என்று கருதினேன். 'மார்க்கத்தின் அச்சாணி என்றும், இஸ்லாத்தின் பகுதி"என்றும் அதில் 'மூன்றிலொரு பகுதி" என்றும் இன்னும் இதுபோல மார்க்க அறிஞர்களால் உயர்ந்தனவாகக் கருதப்பட்ட நாற்பது நபிமொழிகளையே தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளேன். இந்த நாற்பது நபிமொழிகளையும் பலமான நல்ல நபிமொழிகள் என்றே கொள்ள வேண்டும்.
இவைகளில் பெரும்பாலானவை ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.
மனனம் செய்து கொள்வதற்கு எளிதாக இருக்கவும் நிறைவான பலன்களை அடைந்திடவும் ஆதாரங்களின் தொடர்ச்சியை சுருக்கமாகவும் தந்திருக்கிறேன்.
இறைவனுக்கு அடிபணிவது குறித்து இந்த நபிமொழிகள் தரும் வழிகாட்டுதல்களுக்காகவும், இந்த நபிமொழிகள் தரும் வழிகாட்டுதல்களின் முக்கியத்துவத்திற்காகவும் இவைகள் மறுமைப் பேற்றை விரும்பும் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இறைவனிடமிருந்தே நான் உதவி தேடுகின்றேன். அவனையே நான் சார்ந்திருக்கின்றேன். அவனிடமே நான் அடைக்கலம் தேடுகின்றேன். எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. வெற்றியும் பாதுகாவலும் அவனிடமே இருக்கின்றது.
நபிமொழி – 1
அபூ ஹப்ஸ் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாகச் சொல்கிறார்கள்.
செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான். ஆகவே ஒருவர் இறைவனுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும். ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக என்றால், அல்;லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார். (புகாரீ, முஸ்லிம்)
இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா (ஆட்சித்தலைவர்) ஆவார்கள்
ஏதேனும் ஒரு இலட்சியத்திற்காக ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்குச் செல்வது
நபிமொழி – 2
உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் :
ஒருநாள் நாங்கள் எல்லோரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார். அவருடைய ஆடைகள் மிகைத்த வெளுமையுடன் காணப்பட்டன. அவருடைய தலைமுடி மிகைத்த கருமை நிறத்துடன் காணப்பட்டது. பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று பெருமானர் (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை பெருமானார் (ஸல்) அவர்களின் முழங்கால்களுக்கு எதிராகவும் கைகளைக் கால்களின் மீதும் வைத்து அமர்ந்தார். பின்னர் பெருமானார் (ஸல்) அவர்களை நோக்கி 'முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது. ஜகாத் கொடுப்பது, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் (இறைவன் இல்லத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது) செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். நாங்கள் அவர் அப்படி வினவியது குறித்தும் அ வரே உண்மைப்படுத்தியது குறித்தும் ஆச்சரியம் கொண்டோம். பின்னரவர் ஈமான் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். ''அது அல்லாஹ்வின் மீதும் அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்று நம்புவதுமாகும்"" என்பதாக பெருமானார் (ஸல்) அவர்கள் பதில் தந்தார்கள். இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே பேசினீர்கள் என்றார். தொடர்ந்து அவர் இஹ்ஸான் (நல்ல செயல்கள்) பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்றார். “நீங்கள் அல்லாஹ்வை பார்க்காத போதும் அவனை நேரில் பார்த்து தொழுவது போல் தொழுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்" எனச் சொன்னார்கள். பின்னர் அவர் எனக்கு அந்த நேரம் (நியாயத் தீர்ப்பு நாள்) குறித்துச் சொல்லுங்கள் என்றார். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் 'இந்தக் கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்" என்றார்கள். (அல்லாஹ் அதை அறிவான் என்பது கருத்து). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாவது, ''அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். அப்போது காலணிகளில்லாத, ஆடைகளற்ற, ஆதரவற்ற கூட்டத்தினர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன். பிறகு பெருமானார் (ஸல்) அவாகள், 'உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா" எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்" என்றேன் நான். பெருமானார் (ஸல்) அவர்கள், அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்"" என்று கூறினார்கள். - முஸ்லிம்
அடிக்குறிப்புகள் :
உமர் : இஸ்லாத்தின் இரண்டாவது கலீபாவான உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களைக் குறிக்கும்.
ஜகாத் : இந்தச் சொல் ஏழைவரி என்று பொதுவாக தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றது. இஃது சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரியாகும். இந்த வரி ஏழைகளுக்கும பகிர்ந்திளிக்கப்பட வேண்டியதாகும்.
இந்தச் சொல் இஸ்லாத்தின் அடிப்படையோடு சம்பந்தப்பட்ட சொல்லாகும். ஆகவே இதனை தமிழில் மொழிபெயர்க்காமல் அரபி மூலத்தை அப்படியே கையாண்டிருக்கிறோம். இதற்கு 'அடிப்படை நம்பிக்கை" 'விசுவாசம்" 'உண்மை" என்ற பொருள்களும் உண்டு.
இஹ்ஸான் : இந்தச் சொல்லுக்கு ஒரு சிறப்பான முக்கியத்துவம் உண்டு. இந்தச் சொல்லை இங்கே ஒரே வார்த்தையில் மொழியாக்கம் செய்வது இந்தச் சொல்லின் நிறைவான பொருளைத் தராது. இந்தச் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் : நன்னடத்தை, நல்லமல்கள், நன்மைகள், நல்லவைகள், நல்ல தொண்டுகள், செயல்களின் சிறப்பு, செய்யும் செயல்களில் தேர்ச்சி என்பவைகளாகும்.
இச்சொல்லின் வேர்ச் சொல்லுக்கு, ஒரு செயலில் சிறந்த திறமையைப் பெறுதல் என்று பொருள். இந்த தொகுப்பின் 17 வது நபிமொழியல் இந்த பொருளில் தான் இந்தச் சொல்லை அணுக வேண்டும்.
அடிமைப் பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள் : என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருக்கின்றன. அன்-நவவி அவர்கள் தந்த விளக்கங்களில் ஒன்று அடிமைப்பெண்கள் மகன்களையும், மகள்களையும் பெற்றார்கள். அந்தக் குழந்தைகள் விடுதலை பெறுவார்கள் என்பதாகும். 'அமா" என்ற அரபிச் சொல்லைப் பொதுவாக 'அடிமைப் பெண்கள்" என்று மொழி பெயர்ப்பது வழக்கம். இஃது எல்லாப் பெண்களையும் கூட குறிக்கலாம். அதாவது நாமெல்லோரும் இறைவனின் அடிமைகள் என்ற முறையில், அடிமைப் பெண்கள் என்ற சொல் எல்லாப் பெண்களையும் குறிக்கலாம். இதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம் : ''ஒரு பெண் தனது எஜமானனை பெற்றெடுக்கின்ற நாள்"" அதாவது ஒருநாள் வரும் அதில் குழந்தைகள் தங்களைப் பெற்ற தாயை மதிக்க மாட்டார்கள். குழந்தைகள் தங்களைப் பெற்றெடுத்து தாயை ஏவலாட்கள் போலவே நடத்துவார்கள். இந்த நபிமொழிக்கு விளக்கம் தருகின்ற போது மார்க்க அறிஞர்கள் எஜமானி என்பது எஜமானன் என்றும் பொருள்படும் என்று கூறுகின்றார்கள்.
நபிமொழி – 3
இஸ்லாத்தின் தூண்கள்
உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களின் மகன் அபூஅப்துர் ரஹ்மான் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள் :
ஒருமுறை இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :
''இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. அவை, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் ஆவார்கள் என்றும் சான்று பகர்தல், தொழுகையை நிலைநாட்டுதல், ஜகாத் கொடுத்தல், ஹஜ் செய்தல், ரமலான் மாத நோன்பு நோற்றல் ஆகியவையாகும்"". - புகாரி, முஸ்லிம்
தூண்கள் என்ற சொல் அரபு மூலத்தில் இடம் பெறவில்லை. தூண்கள் என்ற பொருள்படக் கூடிய ''அர்கான்"" என்ற சொல் இதை விளக்கக் கூடிய ஒன்றாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
நபிமொழி – 4
அபூஅப்துர் ரஹ்மான் அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன்னதாவது : இறைவனின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எங்களுக்கு இவ்வாறு அறிவித்தார்கள் :
''நிச்சயமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் விதையின் வடிவிலும், பின்னர் இதே கால அளவிற்கு ஒரு துண்டு சதையாகவும் இருந்தீர்கள். பின்னர் உங்களுள் ஆவியை ஊதி உயிர் தரக் கூடிய வானவர் அனுப்பப்படுகிறார். அவர் நான்கு விஷயங்கள் குறித்து கட்டளையிடுகின்றார். உங்களது வாழ்க்கைத் தேவைகளை தேடிக் கொள்ளும் வழிகள், உங்களது ஆயுட்காலம், உங்களது செல்கள், உங்களது வாழ்க்கை நல்ல முறையில் அமையுமா அல்லது துன்பகரமாக அமையுமா? எவனையன்று வணக்கத்திற்குரியவர் எவருமில்லையோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக உண்மையிலேயே உங்களில் ஒருவர் சுவர்க்கத்திற்கும் அவருக்குமிடையில் ஒரு கை அளவு தூரமே இருக்கின்ற வகையில் சுவர்க்க வாசியைப் போல் நடந்து கொள்வார். ஆனால் அவருக்காக எழுதப்பட்டிருப்பது அவரை முந்திக் கொள்கிறது. ஆதலால் அவர் நரக வாசியைப் போல் நடந்து கொள்ள ஆரம்பித்து, அதனால் அவர் நரகத்தில் நுழைகின்றார்.
இன்னும் உங்களில் ஒருவர் நரகத்திற்கும் அவருக்குமிடையில் ஒரு கையளவு தூரமே இருக்கும் வகையில் நரக நெருப்புக்கு இரையாகும் விதத்தில் நடந்து கொள்கிறார். ஆனால் அவருக்காக எழுதப்பட்டிருப்பது அவரை முந்திக் கொள்கிறது. இதனால் அவர் சுவர்க்கவாசியைப் போல் நடக்க ஆரம்பித்து அவர் சுவர்க்கத்தில் நுழைகின்றார். - புகாரி, முஸ்லிம்
நபிமொழி - 5
பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக நம்பிக்கையாளர்களின் தாயான உம்மு, அப்துல்லா ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.
நம்முடைய விஷயத்தில் (தீனில்) அதில் இல்லாததை நுழைப்பவர்களின் செயலானது நிராகரிக்கப்படுவதாகும்.
இந்த நபிமொழி புகாரீ, முஸ்லிம் ஆகய இரு நபிமொழி தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது.
முஸ்லிம் என்ற நபிமொழி தொகுப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
நம்முடைய விஷயத்தோடு (மார்க்கப் போதனைகளோடு) ஒத்துப் போகாத ஒரு செயலை எவராவது செய்யின் அது ஏற்றுக் கொள்ளப்படாது ஒதுக்கப்படும்.
பெருமானார் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு தரப்படும் சிறப்புப் பெயராகும்.
நபிமொழி - 6
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஅப்துல்லாஹ் அன்நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்.
ஹலாலும் (ஆகுமானவை) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்) தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே இவை ஹலாலானவையா, அல்லது ஹராமானவையா என்ற சந்தேகத்திற்கிடமான காரியங்களுமுண்டு. அவற்றை அநேகர் அறிந்து கொள்ள மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கிடமான காரியங்களிலிருந்து ஒதுங்கி இருக்கின்றாரோ, அவர் தனது தீனையும், கண்ணியத்தையும், மரியாதையையும் காப்பாற்றிக் கொண்டவராவார். மேலும் எவர் சந்தேகத்திற்கிடமானவற்றில் வீழ்ந்து விடுகிறாரோ அவர் ஹராமில் வீழ்ந்து விட்டவராவார். அனுமதிக்கப்படாத ஒரு மேய்ச்சல் நிலத்தின் அருகில் தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் அவை தடுக்கப்பட்ட அம்மேய்ச்சல் நிலத்தில் சென்று மேய்ந்து விடக் கூடிய அச்சத்திற்கு எந்நேரமும் ஆளாகிக் கொண்டிருக்கும் ஓர் மேய்ப்பவனுக்கு அவர் ஒப்பாவார். ஒவ்வோர் அரசனுக்கும் சொந்தமான ஒரு மேய்ச்சல் நிலம் உண்டு. அல்லாஹ்வுக்குச் சொந்தமான மேய்ச்சல் நிலம் (ஹிமா), அவன் (அனுமதிக்காத) (ஹராமான) காரியங்களாகும்.
உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால் உடல் முழுவதும் செம்மையாகி விடுகின்றது. அது கெட்டு விடுமாயின் உடல் முழுவதும் கெட்டு விடுகின்றது. அந்த சதைப் பகுதி இதயமாகும்.
நபிமொழி - 7
பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்ததாக அபூ ருக்கையா தமீம் இப்னு அவ்ஸ் அத்-தாரீ (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் :
மார்க்கம் என்பது உண்மையுடையதாகும். யாரிடம்? என வினவிய போது பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : அல்லாஹ், அவனது வேதம், அவனது தூதர், முஸ்லிம்களின் தலைவர் இன்னும் முஸ்லிம் பொதுமக்கள் ஆகியோரிடம் உண்மையுடன் இருத்தலாகும். - முஸ்லிம்
1. உண்மையுடைமை ('நஸீஹா") என்ற அரபிச் சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் இருக்கின்றன. அவைகளில் வழக்கமாகக் கொள்வது 'நற்போதனை" என்பதாகும். இங்கே இந்தப் பொருளை கொள்வது பொருத்தமாக அமையாது.
குறிப்பிட்ட ஒரு மனிதனுக்கு அல்லது சூழ்நிலையில் நியாயத்தை நிலைநாட்டுதல் என்றும் பொருள்படும்.
நாணயம், 'விசுவாசம்" என்பவை இதன் இதர பொருள்களாகும்.
நபிமொழி - 8
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக உமர் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் :
அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் உறுதி கூறும் வரையிலும் தொழுகையை நிலைநாட்டி ஜகாத்தை கொடுக்கும் வரையிலும் நான் (இறைமறுப்பாளர்களை) எதிர்த்துப் போராடும்படி கட்டளையிடப்பட்டுள்ளேன். இவைகளை நிறைவேற்றுபவர்கள் இஸ்லாத்தின் சட்டப்படி தண்டனைக்குரிய செயல்களைச் செய்யாதவரை அவர்கள் தங்களது உயிர், உடமை ஆகியவைகளுக்கு என்னிடம் பாதுகாப்பு பெறுவார்கள். அவர்களைப் பற்றி கணிப்பு எல்லாம் வல்ல அல்லாஹ்வினிடத்தே இருக்கின்றது.
இஸ்லாத்தை நன்றாகப் புரிந்து கொண்டு அதனை தங்களது வாழ்வின் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும்படி பிறருக்கு மனதில் பதியச் செய்ய வேண்டிய முயற்சிகளை மேற்கொள்வது பற்றியே குறிப்பிடப்படுகின்றது. புனித திருமறை 'மார்க்கத்தில் கட்டாயமில்லை" என அறிவிக்கின்றது.
பிரிதோர் இடத்தில் இறைவன் சொல்லுகின்றான். 'அறிவார்ந்த விவாதத்தைக் கொண்டும், இறைவனின் எச்சரிக்கைகளை எடுத்துச் சொல்லியும் இறைவனின் பாதையில் மக்களை அழையுங்கள்". சில குறிப்பிட்ட மக்களை மட்டும் தான் எதிர்த்துப் போராடும்படி முஸ்லிம்கள் பணிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் : இஸ்லாமிய நாட்டைத் தாக்கிடுவோர், இஸ்லாத்தை அமைதியான வழியில் போதிப்பதையும், பரப்புவதையும் தடுப்பவர்கள்.
நபிமொழி - 9
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா அப்துர் ரஹ்மான் இப்னு ஸக்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். நான் உங்களிடம் எதைச் செய்யுங்கள் என்று பணித்திருக்கின்றேனோ அதில் உங்களால் எவ்வளவு அதிகமாகச் செய்ய முடியுமோ அவ்வளவு அதிகமாகச் செய்யுங்கள். அளவுக்கு அதிகமான கேள்விகளைக் கேட்டதும், தங்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்களோடு ஒத்துப் போகாததுமே உங்களுக்கு முன்னால் இருந்தவர்களை அழிவுக்கு ஆட்படுத்தியது. - புகாரி, முஸ்லிம்
நபிமொழி - 10
பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் தூயவன், அவன் தூயவைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் தனது தூதர்களிடம் எதைச் செய்யும்படி பணித்தானோ, அதையே நம்பிக்கையாளர்களையும் செய்யும்படி கட்டளையிட்டுள்ளான். ''தூதர்களே! தூயவைகளிலிருந்தே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்"". எல்லாம் வல்ல அல்லாஹ் ''நம்பிக்கையாளர்களே! நான் உங்களுக்குத் தந்துள்ள தூயவைகளிலிருந்து உண்ணுங்கள்"" என்றும் கூறியுள்ளான். பின்னர் பெருமானர் (ஸல்) அவர்கள் அதிக தூரம் பயணம் செய்த ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். தலைவிரிகோலமாக – மாசு படிந்தவராக அவர் தனது கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தி ''இறைவனே இறைவனே!"" என கதறுகிறார். ஆனால் அவர் தனது உணவைப் பெறும் வழி தடுக்கப்பட்டதாக (ஹராமானதாக) இருக்கின்றது, அவர் அருந்தும் பானம் தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது உடை தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது மொத்த வாழ்க்கையே ஹராமான வழியில் தான் இருக்கின்றது. இந்த நிலையில் அவர் எவ்வாறு இறைவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்க முடியும். - புகாரி, முஸ்லிம்
அல்குர்ஆன் அத்தியாயம் எண் 23, வசன எண்:51
அல்குர்ஆன் அத்தியாயம் எண் 2, வசன எண்:172
நபிமொழி - 11
பெருமானார் (ஸல்) அவர்களின் பேரரும் பெருமானார் (ஸல்) அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவருமான அலி இப்னு அபூதாலிப் அவர்களின் மகன் அபூ முஹம்மது அல் ஹஸன் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.
நான் இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டு நினைவில் இருத்திக் கொண்டேன் :
உங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றை விட்டு விட்டு அதற்குப் பதிலாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்
அத்திர்மிதி, அன்-நசயீ1, இஃதொரு ஆதாரப்பூர்வமான சிறப்புமிகு நபிமொழி என்று அத்திர்மிதீ கூறினார்கள்.
1. அத்திர்மிதி, அன்நசயீ, இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நபிமொழித் தொகுப்பாளர்களில் இடம் பெறுவோராவர். நபிமொழிகளில் இதர தொகுப்பாளர்கள் அல்புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், இப்னு மாஜா ஆகியோராவர்.
நபிமொழி - 12
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஒருவர் நல்ல முஸ்லிமாய் இருப்பதன் ஒரு பகுதி அவர் தனக்குச் சம்பந்தமில்லாததை விட்டு விடுவதாகும்.
அத்திர்மிதி (ரஹ்) அவர்களும் இன்னும் பல நபி மொழி தொகுப்பாளர்களும் இதே போல் அறிவித்துள்ளார்கள்.
நபிமொழி - 13
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹம்ஸா அனஸ் இப்னு மாலிக்1 (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
தனக்கென விரும்புவதை, தனது சகோதரருக்கும் விரும்பாவரை உங்களில் எவரும் உண்மையான நம்பிக்கையாளராக மாட்டார். - அல் புகாரீ, முஸ்லிம்.
1. அன்ஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் தனது இளம் வயதிலேயே பெருமானார் (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்து வந்தார்கள். இந்த வகையில் எண்ணற்ற நபி மொழிகளுக்கு இவர் ஆதாரமாக விளங்குகிறார்.
இவரை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பணியாள் என்றும் தோழரென்றும் குறிப்பிடப்படுவதுண்டு.
நபிமொழி - 14
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
திருமணமாகியும் விபச்சாரத்தில் ஈடுபடக் கூடிய மனிதன், ஒரு உயிருக்கு உயிர், மார்க்கத்தைத் துறந்து விட்டு சமுதாயத்தை புறக்கணித்து விடுபவர் ஆகிய மூன்று சூழ்நிலைகளைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் ஒரு முஸ்லிமின் இரத்தம் சட்டபூர்வமாக சிந்தப்படலாகாது. - புகாரீ, முஸ்லிம்
1. ஒரு முஸ்லிமின் உயிரை அநியாயமாகப் பறித்து விடுபவரின் உயிர்.
நபிமொழி - 15
இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் நல்லவற்றையே பேசட்டும் அல்லது எதையும் பேசாமலிருப்பாராக. அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறவர் தனது அண்டை வீட்டாருடன் மிகவும் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறவர் தனது விருந்தினரோடு மிகவும் தாராளமாக நடந்து கொள்ளட்டும். - முஸ்லிம், புகாரீ
நபிமொழி - 16
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்களிடம் 'எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்" என ஒரு மனிதர் சொன்னார். இறைவனின் தூதர் அவர்கள், 'கோபப்படாதீர்கள்" என பதில் தந்தார்கள். அம்மனிதர் மீண்டும், மீண்டும் முறையிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் 'கோபப்படாதீர்கள்" என்றே கூறினார்கள். - அல்-புகாரீ
1. இமாம் நவவீ தமது விளக்கவுரையில், 'கோபம் கொள்வது இயற்கையான மனித சுபாவம் என்பதால், 'கோபமாக இருக்கும் நிலையில் ஒருவர் செயல்படுவது கூடாது" என்றே இந்த நபிமொழிக்குப் பொருள் கொள்ளப்பட வேண்டும்" என்று கூறுகிறார்கள்.
நபிமொழி - 17
அபு யஃலா ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் :
நிச்சயமாக அல்லாஹ், செய்வனவற்றை திருந்தச் செய்யும்படி பணித்திருக்கின்றான். ஆகவே நீங்கள் கொன்றால், நன்றாகக் கொல்லுங்கள். நீங்கள் அறுத்தால் நன்றாக அறுங்கள். உங்களில் ஒவ்வொருவரும் தங்களது கத்தியை கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்குங்கள் (குறையுங்கள்). - முஸ்லிம்
நபிமொழி - 18
அபூதர் ஜுன்துப் இப்னு ஜுனாதா (ரலி) அவர்கள் அபூ அப்துற் ரஹ்மான் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களும் பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்ததாக அறிவிக்கின்றார்கள்.
நீங்கள் எங்கே இருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சுங்கள். தீய செயல் ஒன்றைச் செய்து விட்டால் தொடர்ந்து நல்ல செயல் ஒன்றையும் செய்து விடுங்கள். இந்த நல்ல செயல் அந்த தீய செயலைத் துடைத்து விடும். இன்னும் மக்களிடம் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள்.
- அத்-திர்மதியின் நபிமொழித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இது ஒரு சிறப்பு மிக்க ஹதீது என அத் தொகுப்பாளராலேயே வர்ணிக்கப்பட்டுள்ளது.
நபிமொழி - 19
அபுல் அப்பாஸ் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் :
ஒருநாள் நான் பெருமானார் (ஸல்) அவர்களன் பின்னால் அமர்ந்திருந்தேன்.! அப்போது அவர்கள் என்னிடம் இளைஞனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று சொன்னார்கள் :
அல்லாஹ்வை நீ மனதிற் கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வை மனதிற் கொள். நீ அவனை உன் முன் காண்பாய். நீ இறைஞ்சும் போது அல்லாஹ்விடமே இறைஞ்சு. நீ உதவி தேடுவதாக இருந்தால் இறைவனிடமே தேடு. இந்த உலகமே ஒன்று திரண்டு வந்து உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் அது உனக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் செய்திட முடியாது. இன்னும் இந்த உலகமே ஒன்று திரண்டு வந்து எதையேனும் கொண்டு உனக்கு ஊறுவிளைவித்திட முயன்றாலும், அது அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் கெடுதலையும் செய்திட முடியாது. (உனக்கு உரியவற்றை) விதிப்பதற்காக எழுதுகோல்கள் எடுக்கப்பட்டு விட்டன. எழுதப்பட்ட பக்கங்கள் உலர்ந்தும் விட்டன.
இந்த நபிமொழி அத்-திர்மிதி எனும் நபிமொழித் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ஆதாரப்பூர்வமானதும் சிறப்புமிக்கதும் ஆகும்.
திர்மிதி அல்லாத பிறிதொரு நபிமொழித் தொகுப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது :
அல்லாஹ்வை மனதிற் கொள்ளுங்கள். நீங்கள் அவனை உங்கள் முன் காண்பீர்கள். நீங்கள் செழிப்பாக இருக்கும் போது அல்லாஹ்வை நினையுங்கள். அவன் நீங்கள் கஷ்டத்தில் இருக்கும் போது உங்களை நினைவு கூர்வான். அறிந்து கொள்வீர்களாக : உங்களுக்குக் கிட்டாமல் சென்றவைகள் உங்கள் மீது உங்களுக்கு விதிக்கப்படவில்லை. உங்களுக்குக் கிட்டியவைகள் உங்களைக் கடந்து சென்று விடும்படி விதிக்கப்படவில்லை.
பொறுமைக்குப் பின் தான் வெற்றி. துன்பத்திற்குப் பின் தான் இன்பம். கடின உழைப்பிற்குப் பின் தான் ஓய்வு என்று அறிந்து கொள்ளுங்கள்.
பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து சவாரி செய்து கொண்டிருந்தார்.
அதாவது ஏற்கனவே இறைவன் விதித்து விட்டதை வேறு எவரும் மாற்றி அமைக்க முடியாது.
நபிமொழி - 20
அபூமஸ்ஊத் உக்பா இப்னு அம்ர் அல்-அன்ஸாரீ அல்-பத்ரி (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக கூறுகின்றார்கள்.
முந்திய இறைதூதர்களிடமிருந்து பெற்ற வசனங்களில் ஒன்று, 'உங்களுக்கு வெட்கம் ஏற்படவில்லையென்றால் நீங்கள் விரும்புவது போல் செயல்படலாம்". - அல்-புகாரீ
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வந்த இறைத்தூதர்களைக் குறிக்கும்
இந்த நபிமொழிக்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
· ஒருவர், தான் வெட்கப்படாதவரை தனது மனசாட்சிப்படி செயல்படலாம்.
· ஒருவர் எதைப் பற்றியும் வெட்கப்படவில்லையென்றால் அவர் மனம் போனபடி தீய செயல்களைச் செய்வதிலிரந்து அவரைத் தடுப்பது எதுவுமில்லை.
நபிமொழி - 21
அபூ அம்ரு (அபூ அம்ரா என்றும் குறிப்பிடப்படுகிறார்). சுப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
''அல்லாஹ்வின் தூதரவர்களே! இனி வேறு யாரிடத்தும் கேட்கத் தேவையில்லாத வகையில் இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்"" என்று நான் கேட்டேன்.
''அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறேன் என்று மொழிந்து அதன் மீதே நிலைத்திருப்பீராக!"" என அவர்கள் கூறினார்கள். - முஸ்லிம்
நபிமொழி - 22
அப்துல்லா-அல்-அன்ஸாரி (ரலி) அவர்களின் மகன் அபூ அப்துல்லாஹ் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஒரு மனிதர் இறைவனின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
''நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றுகின்றேன், ரமலானில் நோன்பு நோற்கின்றேன், சட்டப்படி அனுமதிக்கப்பட்டவைகளை ஏற்று நடக்கிறேன், சட்டப்படி தடுக்கப்பட்டவற்றை வெறுத்து ஒதுக்குகின்றேன். இதற்கு மேல் நான் எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?""
பெருமானார் (ஸல்) அவர்கள் ''ஆம்!"" என்று பதில் தந்தார்கள். - முஸ்லிம்
நபிமொழி - 23
பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றதாக, அபூ மாலிக் அல் ஹாரித் இப்னு ஆசிம் அல்-அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
தூய்மை ஈமானின் ஒரு பாதியாகும். 'அல்-ஹம்துலில்லாஹ்" (எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ்வுக்கே) என்பது மீஸானின் நன்மையின் தட்டை நிறைக்கின்றது. 'சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் குறைகளுக்கு அப்பாற்பட்டவன்) 'அல்ஹம்துலில்லாஹ்" (எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அலல்hஹ்வுக்கே) ஆகிய இரண்டுமோ அல்லது ஒவ்வொன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகம், பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும். தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை பேரத்தில் ஈடுபடுத்துகிறான். ஒன்று அதன் விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றான் அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றான். - முஸ்லிம்
நபிமொழி - 24
அபூதர் அல்-கிஃபாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். மாட்சிமை பொருந்திய இறைவனிடமிருந்து அறியப் பெற்றதாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
என்னுடைய அடியார்களே, மக்களுக்கு அநீதி இழைப்பதை எனக்கு நானே தடை செய்திருக்கின்றேன். (அதுபோலவே) அதை உங்களுக்கும் தடை செய்திருக்கின்றேன். எனவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்காதீர்கள்.
என்னுடைய அடியார்களே, நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, மற்றுமுள்ள நீங்கள் எல்லோரும் வழி தவறியவர்களாகவே இருக்கின்றீர்கள். எனவே, என்னிடம் நேர்வழிகாட்டக் கோருங்கள், நான் நேர்வழி காட்டுவேன். என்னுடைய அடியார்களே, என்னால் உணவளிக்கப்பட்டவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் பசியால் வாடியிருப்பீர்கள். ஆகவே என்னிடம் வேண்டுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கின்றேன். என்னுடைய அடியார்களே! என்னால் ஆடை அளிக்கப்பட்டவர்களைத் தவிர நீங்கள் எல்லோரும் ஆடையற்றவர்களே. ஆகவே என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு ஆடை அளிக்கின்றேன். என்னுடைய அடியார்களே! நீங்கள் இரவும் பகலும் பாவம் செய்கின்றீர்கள். நானே பாவங்களை மிகவும் மன்னிப்பவன். ஆகவே என்னிடம் மன்னிப்புத் தேடுங்கள், நான் உங்களை மன்னிக்கின்றேன்.
என்னுடைய அடியார்களே! நீங்கள் எத்துணை முயன்றாலும் எனக்குத் தீங்கு செய்கின்ற நிலையை நீங்கள் எய்திட முடியாது. இன்னும் நீங்கள் எத்துணைதான் முயன்றாலும் எனக்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது.
என்னுடைய அடியார்களே! உங்களுக்கு மன சென்றவர்களும், உங்களுக்குப் பின்னால் வருபவர்களும் உங்களுள் மனிதர்களும், ஜின்களும் ஆகிய நீங்கள அனைவரும் என்னை வணங்குவதில் மிகவும் இறையச்சம் மிக்கவர்களாகவும், பக்திமிக்கவர்களாகவும் இருந்து என்னை வணங்கினாலும், அது எந்த விதத்திலும் என்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவடையச் செய்வதில்லை. என்னுடைய அடியார்களே! உங்களுக்குப் பின்னால் சென்றவர்களும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களும், உங்களுள் மனிதர்களும் ஜின்களும் ஆகிய அனைவரும் எத்தனை தான் கெட்டவர்களாக இருந்து குழப்பங்களை விளைவித்தாலும், அது என்னுடைய ஆட்சியின் எல்லையை எள்ளளவும் குறைத்து விடாது.
என்னுடைய அடியார்களே! உங்களுக்கு முன் சென்றவர்களும், உங்களுக்கு பின்னால் வருபவர்களும் மனிதர்களும், ஜின்களும் ஒரே இடத்தில் கூடி நின்று என்னிடத்தில் வேண்டியதெல்லாம் கேட்டகவும், அவ்வாறு நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தந்தாலும் அது என்னிடமிருப்பதை, ஒரு ஊசி முனையைக் கடலில் முக்கி எடுப்பதால் ஏற்படும் அளவிற்குக்2 கூட குறைத்து விடுவதில்லை.
என்னுடைய அடியார்களே! உங்களுடைய செயல்களைக் கொண்டே நான் உங்களை கணிக்கின்றேன். அவைகளை வைத்துக் கொண்டு தான் நான் உங்களுக்கு பின்னர் கூலி தருகின்றேன். ஆகவே உங்களில் நல்லதைக் காண்பவர்கள்3 அல்லாஹ்வைப் புகழட்டும். நல்லது அலலாதவற்றைக் காண்பவர்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் குறைகூற வேண்டாம். - முஸ்லிம்
இது 'ஹதீஸ் குத்ஸி" எனப்படும். அதாவது இறைவன் சொன்னதாக பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்தது. ஆனால் அவை அப்படியே இறைவனின் வாக்குகள் ஆக மாட்டா. எனவே தான் ஹதீஸ் குத்ஸி என்பது திருக்குர்ஆனின் ஒரு பகுதியாகாது.
அதாவது, அல்லாஹ் தன் அருள் கொடைகளிலிருந்து எவ்வளவு தான் அள்ளித் தந்தாலும் அதனால் அவனுக்கு எதுவும் குறைந்து விடுவதில்லை.
இது மறுமைப் பயன்களைக் குறிக்கும்.
நபிமொழி - 25
அபூதர் (ரலி) அவர்கள் இதையும் அறிவிக்கின்றார்கள்.
இறைவனின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள்.
''இறைவனின் தூதரவர்களே! செல்வச் செழிப்புள்ளவர்கள் இறைவனிடம் மிகுந்த நற்கூலியை சம்பாதித்துக் கொண்டார்கள். அவர்கள் நாங்கள் தொழுவது போலவே தொழுகிறார்கள். அவர்கள் நாங்கள் நோன்பிருப்பது போலவே நோன்பிருக்கின்றார்கள். அவர்கள் தங்களது தேவைக்குப் போக மிகுதியாயுள்ள செல்வத்திலிருந்து தர்மம் செய்கிறார்கள்"".
பெருமானார் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உங்களுக்கும், தானதர்மங்கள் செய்திட தேவையானவைகளைத் தரவில்லையா? எனக் கேட்டார்கள். உண்மையிலேயே ஒவ்வொரு 'தஸ்பீஹும்" ஒரு தர்மமேயாகும். ஒவ்வொரு தக்பீரும் ஒரு தர்மமேயாகும். ஒவ்வொரு தஹ்மீதும் ஒரு தர்மமேயாகும். ஒவ்வொரு தஹ்லீலும் ஒரு தர்மமேயாகும். ஒரு நல்ல செயலைச் செய்யத் தூண்டுவது ஒரு சிறந்த தர்மமேயாகும். ஒரு தீய செயலைத் தடுப்பது ஒரு தர்மமேயாகும்.
நீங்கள் உங்கள் மனைவியரோடு வீடு கூடுவதும் ஓர் அறச் செயலே ஆகும்.
தோழர்கள், ''பெருமானார் (ஸல்) அவர்களே, எங்களில் ஒருவர் தன் மனைவியிடம் தன் இச்சையை நிறைவு செய்து கொள்ளும்போது அதற்காகவும் அவருக்கு நற்கூலி உண்டா"" எனக் கேட்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : 'இதில் தடுக்கப்பட்டதை செய்பவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீகளா? அதுபோலவே இதில் ஆகுமான முறையில் நடந்து கொள்பவர்களுக்கு நற்கூலி உண்டு"". - முஸ்லிம்
'சஹாபி" என்ற அரபிச் சொல்லுக்கு நாயகத் தோழர்கள் என்று பொருள். பெருமானார் (ஸல்) அவர்களைச் சந்தித்து, நம்பி முஸ்லிம்களாகவே இறந்தவர்களுக்கு தரப்படும் சிறப்புப் பெயராகும்.
சுபுஹானல்லாஹ். அல்லாஹ் குறைகளுக்கு அப்பாற்பட்டவன் (தூய்மையானவன்) என்று சொல்வதாகும்.
அல்லாஹுஅக்பர், இறைவன் மாபெரியோன் என்று சொல்வதாகும்
அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொல்வதாகும்.
லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறுவதாகும்.
நபிமொழி - 26
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கின்றார்கள்.
மனிதர்களின் ஒவ்வொரு மூட்டும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தர்மத்தை செய்தாக வேண்டும்.
இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - புகாரி, முஸ்லிம்
நபிமொழி - 27
அன் நவ்வாஸ் இப்னு சம்ஆன் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்ததாக அறிவிக்கின்றார்கள் :
நேர்மை ஒரு சிறந்த ஒழுக்கமாகும். இன்ன செயலைச் செய்யலாமா, கூடாதா என்று உங்களை அலைக்கழிப்பதும், எதனைச் செய்யும் போது மக்கள் அதனைத் தெரிந்து கொள்ளக் கூடாது என்று நீங்கள் நினைப்பீர்களோ அதுவும் தவறான செயல்களாகும். (இதை அறிவித்தவர் : முஸ்லிம்). வாபிஸா இப்னு மஃபது (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நான் பெருமானார் (ஸல்) அவர்களின் சமூகம் சென்றேன். அவர்கள் என்னிடம், ''நேர்மை என்பது என்ன என்று கேட்க வந்திருக்கின்றீரா?"" என்றார்கள். நான் ஆம் என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள், உம்முடைய இதயத்தை கேட்டுப் பாரும் என்றார்கள். ''நேர்மையான செயல் என்பது அதனைப் பற்றி நமது ஆன்மா அமைதி பெறுவதாகும். அதனைக் குறித்து நமது உள்ளம் திருப்தியானது தான் என்று பிறர் தீர்ப்பளித்து விட்ட பிறகும் கூட உங்கள் ஆன்மாவை அலைக்கழிப்பதும் உள்ளத்தில் ஊசலாடுவதுமான ஒன்றாகும்."" இந்த ஹதீஸ் சிறப்பான ஒன்று. இமாம் அஹ்மது இப்னு ஹம்பல், இமாம் தாரிமீ ஆகியோரின் தொகுப்புகளிலிருந்து மிகச் சரியான ஆதாரங்களைக் கொண்டதெனக் கண்டு எடுக்கப்பட்டதாகும் இது.
இந்த இரு நபிமொழிகளையும் ஒன்றாகத் தந்திருப்பதன் காரணம், இரண்டு நபிமொழிகளின் கருத்துக்களும், வார்த்தை அமைப்புகளும் ஒன்றாக இருப்பதால் என்று கருதலாம்.
நபிமொழி - 28
அபூ நஜீஹ் இர்பாள் இப்னு சாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் பிரசங்கமொன்றை நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த எங்களது இதயங்கள் அச்சத்தினால் நிரம்பின. எங்களது கண்களில் கண்ணீர் ததும்பியது. நாங்கள், ''இறைவனின் தூதரவர்களே, இஃது நீங்கள் செய்யும் இறுதி பிரசங்கமாக அல்லவா தென்படுகின்றது. ஆகவே எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்"" என்று கூறினோம். பெருமனாhர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பகர்ந்தார்கள் :
நான் உங்களுக்கு கூறுகிறேன் : அல்லாஹ்வை அஞ்சுங்கள். ஒரு அடிமையே உங்களது தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு முழுமையாகக் கட்டுப்படுங்கள். நிச்சயமாக உங்களில் அதிக நாட்கள் வாழ்பவர்கள் பெரும் வேறுபாடுகளைச் சந்திப்பீர்கள். ஆகவே நீங்கள் என்னுடைய நடைமுறைகளையே பின்பற்றுங்கள். அதுபோலவே நேர்வழிகாட்டப்பட்ட (ராஷிதீன்)1 கலீபாக்களின் நடைமுறைகளையும் பின்பற்றுங்கள். உறுதியுடன் இவற்றில் நிலைத்திருங்கள்.
மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்படுபவைகள் குறித்து கவனமாக இருங்கள். மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்டவைகள் அனைத்தும் நூதன கிரியைகளாகும். ஒவ்வொரு நூதன கிரியையும் வழிகேட்டில் ஆழ்த்துவதாகும். வழிகேட்டில் விழுவது நரக நெருப்பில் தள்ளும். - அபூதாவூத், அத்-திர்மிதி
1. ராஷிதீன் கலீபாக்கள் என்பது முதல் நான்கு கலீபாக்களை (இஸ்லாமிய ஆட்சியாளர்களையும்) குறிக்கும்.
நபிமொழி - 29
முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
அல்லாஹ்வின் தூதரவர்களே, என்னை நரக நெருப்பலிருந்து காப்பாற்றி, சுவர்க்கத்தின் பால் இட்டுச் செல்லும் ஒரு செயல்பற்றி சொல்லித் தாருங்கள் என நான் கேட்டேன். பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பதில் தந்தார்கள். நீங்கள் மிகவும் பெரிய விஷயம் ஒன்று குறித்து வினவி இருக்கின்றீர்கள். இருந்தாலும் அது அல்லாஹ் யாருக்கு எளிதாக ஆக்கி வைத்திருக்கின்றானோ அவர்களுக்கு மிகவும் எளியதாகும். நீங்கள் அல்லாஹ்வுக்கே அடிமை செய்யுங்கள். அவனுக்கு இணை எதுவும் வைக்கக் கூடாது. கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நீங்கள் நிலைநாட்ட வேண்டும். நீங்கள் 'ஜகாத்" கொடுக்க வேண்டும். ரமளான் மாதத்தில் நோன்பிருக்க வேண்டும். நீங்கள் இறைஇல்லத்திற்கு புனித பயணம் மேற்கொள்ள வேண்டும். (ஹஜ் செய்ய வேண்டும்).
பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு நன்மையின் வாசல்களை காண்பிக்க வேண்டாமா? என வினவி விட்டுச் சொன்னார்கள். நோன்பு ஒரு கேடயம், நீர் நெருப்பை அணைப்பது போல்; தர்மம் பாவங்களை அழித்தொழிக்கின்றது. அதுபோலவே இரவின் ஆழத்தில் ஒருரின் தொழுகையும், பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வரும் இறைவசனத்தை ஓதினார்கள்.
''அவர்கள் (இரவில்) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, (எழுந்து அப்புறப்பட்டு) தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும், (அவனைப்) பிரார்த்தனை செய்வாhகள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்த அவர்கள் (தானமாகச) செலவு செய்வார்கள்"". அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக, அவர்களுக்காக (ச் சித்தப்படுத்தி) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிரக் கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்து கொள்ள முடியாது"" (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ளன.) அல்குர்ஆன் (32:16-17)
பின் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு இந்த விஷயத்தின் உச்சம் பற்றியும், தூண் பற்றியும், தலையாயது பற்றியும் சொல்ல வேண்டாமா?"" என்றார்கள். ''இறை தூதரவர்களே, ஆம்! சொல்லுங்கள் என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள், இந்த விஷயத்தின் உச்சி இஸ்லாம், தூண் என்பது தொழுகை, அதன் தலையாயது ஜிஹாத் ஆகும் என்றார்கள். பிறகு அவர்கள், இவைகள் எல்லாவற்றையம் கட்டுப்படுத்துவது குறித்து நான் சொல்ல வேண்டாமா? என வினவினார்கள். நான் 'இறைவனின் தூதரவர்களே, ஆமாம் சொல்லுங்கள்"" என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களது நாவை கரத்தால் பற்றிக் கொண்டு, ''இதைக் கட்டுப்படுத்துங்கள்"" என்று சொன்னார்கள்.
இறைவனின் தூதரவர்களே, நாம் பேசுவது நமக்கு எதிராகத் திருப்பப்படுமா? என்று நான் கேட்டேன். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், ''உம் தாய் உம்மை காணடித்தார். மனிதர்கள் தங்கள் நாவால் அறுவடை செய்தவைகளைத் தவிர அவர்களை நரக நெருப்பில் முகங்குப்புற தள்ளக் கூடியது வெறெதுவும் உண்டா?"" என்று கேட்டார்கள். - திர்மிதி
1.ஜிஹாத் : ஜிஹாத் என்பதற்கு அறப்போர் அல்லது புனிதப்போர் எனப் பொதுவாக பொருள் கொள்ளப்படுகின்றது. அதற்கு இன்னும் விரிவான பொருள்கள் உண்டு. இதில் இஸ்லாத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளும் அடங்கும். ஆகவே தான் 'ஜிஹாத்" என்ற அரபிச் சொல் அப்படியே இங்கு கையாளப்பட்டிருக்கின்றது.
2. ஃதகிலத்க உம்முக. ''தவறான பயனற்ற பேச்சைப் பேச வேண்டாம்!"" என்று கூறுவதற்கு அரபி மொழியில் இச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
நபிமொழி - 30
அபூதஃலபா அல் குஷனீ ஜுர்தூம் இ ப்னு நாஷிர் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்ததாக அறிவிக்கின்றார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா மார்க்கக் கடமைகளை விதித்திருக்கின்றான். ஆகவே அவைகளை புறக்கணிக்காதீர்கள். அவன் நமக்கு எல்லைகளை நிர்ணயித்திருக்கின்றான். ஆகவே அவைகளைக் கடந்து செல்லாதீர்கள். அவன் நமக்கு சிலவற்றை தடை செய்திருக்கின்றான். ஆகவே அவற்றை மீறாதீர்கள். சில விஷயங்களில் அவன் மௌனமாக இருக்கின்றான். இது அவன் மறந்து விட்டதனால் அல்ல, அவன் நம் பால் கொண்ட அன்பினால். ஆகவே அவைகளைக் குறித்து தர்க்கத்தில் ஈடுபட வேண்டாம்.
நபிமொழி - 31
அபுல் அப்பாஸ் ஸஹ்லு இப்னு ஸஃதுஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.
இறைவனின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் ஒருவர் வந்து ''இறைவனின் தூதரவர்களே, நான் எதைச் செய்தால் அல்லாஹ்வும், மனிதர்களும் என்னை நேசிப்பார்கள் என்பதை எனக்குப் போதியுங்கள்"" என்று கூறினார். பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பதில் தந்தார்கள் : இந்த உலகத்தை (உலக ஆசைகளை) விட்டு விடுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மக்கள் எதன்மீது சொந்தம் கொண்டாடுகின்றார்களோ அதனை விட்டு விடுங்கள். மக்கள் உங்களை நேசிப்பார்கள்.
இப்னு மாஜா அவர்களாலும், இன்னும் பல நபிமொழித் தொகுப்பாளர்களாலும் தொகுக்கப்பட்ட ஒரு சிறப்பான நபிமொழி
நபிமொழி - 32
பெருமானார்(ஸல்) அவர்கள் நவின்றதாக அபூஸஈத் ஸஃது இப்னு மாலிக் சினான் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
''தீங்கிழைக்கவும் கூடாது. தீங்கிற்குப் பழி வாங்கவும் கூடாது"".
இந்த நபிமொழி சிறப்பான நபிமொழிகளின் வரிசையிலே இடம் பெறுகின்றது. இப்னு மாஜா, அத்-தாரகுத்னீ இன்னும் பலராலும் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நபிமொழி 'முஸ்னத்" ஆன நபிமொழிகளின் வரிசையில் இடம் பெறுகின்றது. இது மாலிக் அவர்களின் ''அல்முவத்தா" வில் ''முர்ஸல்"" ஆன நபிமொழியாக இடம் பெற்றுள்ளது. பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக, அம்ரு இப்னு யஹ்யா, தம் தந்தையார் சொன்னதாக தொடரான ஆதாரங்களுடன் தரப்பட்டிருக்கிறது. இங்கு அபூ ஸஈதின், பெயர் விடப்பட்டிருப்பினம், ஒருவருக்கொருவர் ஆதாரமாக உள்ள வேறு பெயர்கள் தொடராக உள்ளன.
முஸ்னத் என்பது, கூறுபவரிலிருந்து பெருமானார் வரை உள்ள பெயர்கள் தொடராக உள்ள நபிமொழியாகம்.
இமாம் மாலிக் இப்னு அனஸ் அவர்களின் பிரசித்தி பெற்ற நபிமொழித் தொகுப்பாகும்.
''முர்ஸல்"" பெருமானாரின் தோழர்களுக்கு அடுத்த தலைமுறையினராக ''தாபியீன்"" களுடன் ஆதாரத் தொடர் முடிவது. வேறு தொடர் கொண்ட முஸ்னத் ஹதீது ஒன்றினால் உறுதிப்படுத்தப்பட்டால் அது சரியானதென்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
நபிமொழி - 33
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்ததாகக் கூறினார்கள்.
மனிதர்கள், தம்முடையவை என்று உரிமை கொண்டாடுவதையெல்லாம் கொடுப்பதாக இருந்தால் அவர்கள் அடுத்தவர்களின் செல்வத்தையும் உயிரையும் (இரத்தத்தையும்) கோருவார்கள். உரிமையை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உரிமை கோருபவர் மீதாகும். அதனை மறுப்பவர் மீது சத்தியப் பிரமாணம் செய்வது கடமையாகும். - அல் பைஹக்கீ, புகாரீ, முஸ்லிம்
நபிமொழி - 34
அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கின்றார்கள் :
உங்களில் எவர் ஒரு தீய செயலைக் காண்கிறாரோ அவர் அததை; தனது கரங்களால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால், அதை அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர் தனது மனதால் வெறுக்கட்டும். இது நம்பிக்கையின் (ஈமானின்) மிகவும் பலவீனமாக நிலையாகும். - முஸ்லிம்
நபிமொழி - 35
பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ள வேண்டாம். ஒருவருக்கொருவர் போட்டியாக விலைகளை உயர்த்திக் கேட்க வேண்டாம். ஒருவரையொருவர் வெறுக்க வேண்டாம். ஒருவரின் தொழிலைக் கெடுப்பதற்காக விலைகளைக் குறைக்கவும் வேண்டாம். அல்லாஹ்வின் அடியார்களே, நீங்கள் சகோதரர்களாகி விடுங்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். ஆகவே ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்க மாட்டார். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைக் கைவிட மாட்டார். ஒருவர் மற்றவரிடம் பொய்யுரைக்க மாட்டார். ஒருவரை ஒருவர் தாழ்வுபடுத்த மாட்டார். இறையச்சம் இங்கே உள்ளது என்று மூன்று முறை தங்கள் நெஞ்சைத் தொட்டுக் காட்டினார்கள்.
ஒரு முஸ்லிம் தன்னுடைய சகோதர முஸ்லிமை இழிவாகக் கருதி நடத்துவது தீய செயலாகும். ஒரு முஸ்லிமின் மீது சகோதர முஸ்லிமின் இரத்தமும், உடைமையும், கண்ணியமும் ஹராம் ஆக்கப்பட்டுள்ளன. (அவற்றிற்கு ஊறுவிளைவிக்கக் கூடிய எச்செயலும் விலக்கப்பட்டதாகும்). - முஸ்லிம்
நபிமொழி - 36
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கின்றார்கள்.
இவ்வுலகில் உங்களில் ஒருவர் சகோதர நம்பிக்கையாளரின் துன்பமொன்றை நீக்குவாரேயானால், அல்லாஹ் தீர்ப்பு நாளில் அவருடைய துன்பமொன்றை நீக்குவான். உங்களில் ஒருவர் தேவையுள்ள ஒருவரின் தேவைகளை நிறைவு செய்வாரேயானால் அல்லாஹ் அவருடைய துன்பங்களை இம்மையிலும் மறுமையிலும் நிவர்த்தி செய்வான். ஒரு முஸ்லிமை பாதுகாப்பவரை அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் பாதுகாக்கின்றான். அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் தன் சகோதரனான அல்லாஹ்வின் அடியாருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அல்லாஹ் அந்த அடியாருக்கும் உதவி செய்து கொண்டே இருப்பான். இவ்வுலகில் அறிவைத் தேடும் வழிகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு இறைவன் சுவர்க்கத்திற்கான வழியை எளிதாக்கி வைப்பான். இறை இல்லத்தில் மக்கள் ஒன்று கூடி இறைமறையை ஓதவும் ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுக்கவும் செய்தால், அவர்கள் மீது அமைதி இறங்கும், இறையருள் சூழும், வானவர்கள் நெருங்குவார்கள். அவர்களைக் குறித்து அல்லாஹ் அவனருகில் இருப்போரிடம் குறிப்பிட்டுக் கூறுவான். நற்செயல்கள் புரிவதில் பின்னடைபவர் அவர் மூதாதையரின் சிறப்பு பெருமை காரணமாக விரைந்து முன்னேறி விட மாட்டார். - முஸ்லிம்
நபிமொழி - 37
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் இறைவனிடமிருந்து பெற்ற அறிவிப்புக்களில் ஒன்று என (பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றதாக), அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் (ஒருவர் செய்யும்) நல்ல செயல்களையும், தீய செயல்களையும் எழுதிக் கொள்கிறான். அதற்கு மேல் அவன் அதனை விளக்கியும் இருக்கிறான்.
ஒருவர் நல்ல செயலை செய்ய நினைத்தார், ஆனால் அவர் அதை செய்து முடிக்கவில்லை. இருந்தாலும் இறைவன் அதை ஒரு முழுமையான நல்ல செயலாக எழுதிக் கொள்கின்றான். ஒருவர் ஒருவர் ஒரு நல்ல செயலைச் செய்ய நினைத் அதைச் செய்தும் முடிப்பாரேயானால் அல்லாஹ் அதை பத்து முதல் எழுநூறு தடவை அல்லது அதற்கும் பன்மடங்கு அதிகமானதாக குறித்துக் கொள்கிறான்.
ஒருவர் ஒருதீய செயலைச் செய்ய நினைத்தார். ஆனால் அதை அவர் செய்யவில்லையென்றால் அரல்லாஹ் அதை ஒரு நல்ல செயலாகவே எழுதிக் கொள்கின்றான்.
ஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய நினைத்த அதை செய்தும் முடித்தால் அல்லாஹ் அதை ஒரு திய செயலாக மட்டுமே எழுதிக் கொள்கின்றான். - புகாரி, முஸ்லிம்
நபிமொழி - 38
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கின்றார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் சொல்கின்றான். என்னுடைய தோழன் ஒருவனோடு எவனொருவன் பகைமை பாராட்டுகின்றானோ அவனோடு நான் பகைமையாகவே இருப்பேன். என்னுடைய அடியான் நான் அவன் மீது கடமையாக்கி இருக்கின்ற கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமாகவே அல்லாமல் வேறெதையும் கொண்டு என்னை நெருங்க முடியாது. இன்னும் கட்டாயமில்லாத அதிகப்படியான (நஃப்லு) செயல்களைச் செய்வதன் மூலம் நான் அவனை உவக்கும் வரை அவன் என்னை நெருங்கிக் கொண்டே இருப்பான்.
அவன் மீது நான் அன்பு கொண்டு விட்டால், நான் அவன் எதைக் கொண்டு கேட்கிறானோ அதுவாக ஆகிவிடுகின்றேன். அவன் எதைக் கொண்டு பார்க்கின்றானோ அதுவான நான் ஆகிவிடுகின்றேன். அவன் எதைக் கொண்டு தட்டுகின்றானோ அந்தக் கையாக நான் ஆகிவிடுகின்றேன். அவன் அதைக் கொண்டு நடக்கின்றானோ அந்தக் கால்களாக நான் ஆகிவிடுகின்றேன். அவன் என்னிடம் எதையாவது கேட்பானோயானால் அதனை அவனுக்க நிச்சயமாகக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் அடைக்கலம் தேடினால் அதை நான் அவனுக்கு நிச்சயமாகக் கொடுக்கின்றேன். - அல் புகாரி
நபிமொழி - 39
பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
என்னைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு அல்லாஹ் அவர்களது தவறுகளையும், மறதியினாலும், கட்டாயத்தினாலும் அவர்கள் செய்பவற்றையும் எனக்காக மன்னித்து விட்டான். - இப்னு மாஜா, அல் பைஹக்கீ, இன்னும் பலர்
நபிமொழி - 40
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் என் தோளைப் பற்றிக் கொண்டவர்களாக சொன்னார்கள் :
இந்த உலகில் ஒரு அன்னியனைப் போல அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல இருப்பீராக!
இப்னு உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு அடிக்கடி சொல்வார்கள் :
மாலை நேரமாகும் போது அடுத்த நாள் காலை வரை இறவாமல் இருப்போம் என எதிர்பார்க்க வேண்டாம். காலையில், மாலை வரையில் உயிருடன் இருப்போம் என எதிர்பார்க்க வேண்டாம். நீங்கள் நோயுற்று இருக்கும் போ இழப்பதை (மார்க்கக் கடமைகளில் நிறைவேற்ற முடியாமல் போகின்றவைகளை) நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும் போதும் உங்களின் இறப்புக்குப் பின் செய்ய முடியாமல் போகக் கூடியவைகளை நீங்கள் உயிருரோடு இருக்கும் போது ஈடு செய்து கொள்ளுங்கள். - அல் புகாரீ
நபிமொழி - 41
அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் மகனார் அபூ முஹம்மது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கின்றார்கள் :
நான் கொண்டு வந்ததை (இறை செய்தியை முழுமையாக)ப் பின்பற்ற வேண்டும் என்ற பேராவல் உங்களில் ஒவ்வொருவருக்கும் ஏற்படாத வரை அவர் உண்மையான நம்பிக்கையாளராக மாட்டார்.
இந்த நபிமொழி கிதாபுல்-ஹஜ்ஜா என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்டது. இதற்கு ஆதாரப்பூர்வமான தொடர்ச்சி உள்ளது.
1. அபுல் காசிம் இஸ்மாயீல் இப்னு முஹம்மத் அல்-அஸ்ஃபஹானி அவர்கள் (இவர் ஹி 535 ல் இறந்தார்) தொகுத்த நூலின் பெயராகும்.
நபிமொழி - 42
பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
எல்லாம் வல்ல இறைவன் சொல்கிறான் : ''ஆதமின் மகனே, நீ எதுவரை என்னிடம் கோரிக் கொண்டு, என்மீது நம்பிக்கை வைத்துக் கொண்டு இருப்பாயோ அதுவரை நீ எந்த நிலையில் இருப்பினும் நான் உன்னை மன்னித்துக் கொண்டிருப்பேன். அதை நான் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஆதமின் மகனே, உன்னுடைய பாவங்கள் வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டாலும் பின்னரும், நீ என்னிடம் மீண்டு மன்னிப்புக் கோருவாயானால், நான் உன்னை மன்னிக்கவே செய்வேன். ஆதமின் மகனே, நீ பூமியை நிறைத்திடும் அளவிற்கு பாவங்கள் செய்து விட்ட பிறகும் கூட, எனக்கு இணை வைக்காத நிலையில் என்னிடம் மீளுவாயானால் அப்போதும் உன்னுடைய அந்த அளவிற்கான பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கவே செய்வேன். - அத் திர்மிதி