கணவனின் பொருத்தமில்லாமையின் காரணத்தால் உங்களின் மனைவி நரகம் செல்கின்றார்

ஒரு நாள் மஸ்ஜிதுன் நபவியில் ஒரு பெண்ணின் ஜனாஸா வந்து விட்டது.

நபி ஸல் அவர்கள் இமாமாக நின்று தொழ வைக்க தக்பீர் சொல்ல கையை உயர்த்துகிறார்கள்.

அந்த சமயம் வானவர் கோமான் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் நேரில் வந்து, 

"அந்த பெண்ணின் ஜனாஸாவை தாங்கள் தொழ வைக்க வேண்டாம்.

அப்படி தொழ வைக்க வேண்டுமானால் அந்த பெண்ணின் கபுரை சென்று பார்த்து விட்டு பிறகு தொழுகை நடத்த அல்லாஹ் சொல்கிறான் "
என்று உத்திரவிடுகிறார்.

நபி ஸல் அவர்கள் நேராக சென்று கபுரை காண்கின்றார்கள்.

''சுப்ஹானல்லாஹ்'' கப்ரு குழிக்குள்
பாம்பும், தேளும், விஷ ஜந்துக்களும் நிறைந்து காணப்பட்டது.

அதைக்கண்டு பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அன்னவர்கள் கவலையே உருவாக வருகின்றார்கள்.

ஈமான் கொண்ட பெண்ணே என்று எண்ணி மீண்டும் தொழ வைக்க நினைக்கையில் மீண்டும் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலா அவர்கள் நபி ஸல் அவர்களை தடுத்து மீண்டும் அந்த பெண்ணின் கபுரை சென்று பார்த்து விட்டு பிறகு தொழுகை நடத்த அல்லாஹ் சொல்கிறான் " என்று உத்திரவிடுகிறார்.

மீண்டும் நபி ஸல் அவர்கள் சென்று பார்க்கையில், கபுர் அக்னி ஜுவாலையாக, நெருப்பு குண்டமாக மாறி எரிகிறது.

விஷ ஜந்துக்கள் அனைத்தும்
நெருப்பு கங்குகளாக நெளிகின்றன.

அதைக் கண்டு கருணை நபி அன்னவர்கள் கண்களில்
கண்ணீர் வடித்து இந்தப்பெண் என்ன பாவங்கள் செய்தவளாக இருக்கும் என எண்ணி, அந்த
பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்தார்.

அவர் இந்த பெண் பற்றி கூறுகையில்... 

"இவர் ஒரு நாள் விட்டு ஒருநாள்
நோன்பு பிடிப்பார்.

பேணுதலாய் தொழக்கூடியவர். 

தவறாமல் தஹஜ்ஜுத் தொழுவார்.

சதாநேரமும் குர்ஆன் திலாவத்துடன் இருப்பார் என சொன்னார்.

அந்த பெண்ணின் கபுருக்கும் இவர்
சொல்லுவதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று எண்ணிய நபி ஸல் அவர்கள் அவரது கணவன் எங்கு என்று விசாரித்தார்.

அதற்கு அங்கு உள்ளவர்கள் இவரது கணவர் இங்கு வரவில்லை என்று சொல்ல, நபி ஸல் அவர்கள் அவரை அழைத்து வர ஆள் அனுப்பினார்.

பின்னர் வந்த அந்த பெண்ணின் கணவரிடம்....

"உங்கள் மனைவியின் ஜனாஸாவிற்கு ஏன் வரவில்லை என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள்.

அதற்க்கு அந்த மனிதன் 

யாரசூலுல்லாஹ் !
ஒரு மனிதன் தலாக் விடுவானேயானால் அல்லாஹ்வின் அர்ஸ்  ஆடுகின்றது என தாங்கள் பகிர்ந்தீர்கள். 

அந்த ஒரு வார்த்தையை நீங்கள்
சேர்த்து சொல்லாமல் இருந்திருப்பீர்கள் என்றால், அவளை எப்போதோ தலாக் விட்டிருப்பேன் என்று தனது மனைவியின் செயல் பற்றி மனம்
குமுற சொன்னார்.

மேலும் அவர் தனது மனைவி
பற்றி கூறுகையில்...

யா ரசூலுல்லாஹ்...!

தாகத்திற்கு என் மனைவியிடம் தண்ணீர் கேட்பேன்...

போய் எடுத்து குடித்துக் கொள் நான் குர்ஆன் ஓதுகிறேன் என்பாள்.

வேலை செய்துவிட்டு களைத்து வந்து பசியுடன் உணவு கேட்பேன். 

நான் நோன்பு வைத்துள்ளேன்
என்னிடம் வந்து உணவு கேட்க்கிறாய்...?

எங்காவது போய் சாப்பிடு என்பாள். 
எது கேட்டாலும் எரிந்து விழுவாள். 

நான் பொறுத்துக்கொண்டு
வாழ்ந்துவிட்டேன்.
யா ரசூலுல்லாஹ்...

அதனால் என்னால் என் மனைவியை மன்னிக்க முடியாது யா ரசூலுல்லாஹ்...! என்றார் அழுது கொண்டே.

அதற்கு நபி ஸல் அவர்கள் உங்களின் மனைவி எல்லா நல் அமல்களும் புரிந்தார்.

ஆனால் உங்களின்
பொருத்தத்தை இழந்துவிட்டார். 

கணவனின் பொறுத்தமில்லாமையின் காரணத்தால் உங்களின் மனைவி நரகம் செல்கின்றார். 

எனவே, எனக்காக வேண்டி உங்களின் மனைவியை மன்னித்து விடுங்கள் என்று தாடி நனைந்து நீர் தாரைகள் நெஞ்சை நனைக்கும்
அளவு அழுது கொண்டே அந்த பெண்ணின் கணவரிடம் நபி ஸல் அவர்கள் கேட்டார்கள்.

அவ்வாறு நபி ஸல் அவர்கள் சொன்னவுடன் அந்த மனிதர், அன்னவர்களின் கரங்களைப்பற்றி கதறி அழுதார்.

பின்னர் பெருமானார் அன்னவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தி நல் அடக்கம் செய்த போது...

கபுர் சொர்க்க பூங்காவாக காட்சி அளித்ததாம்...

''சுப்ஹானல்லாஹ்''....

அதன் பின்பு அங்குள்ளவர்களிடம் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்...

"யார் ஒரு பெண்மணி தன் கணவரின் பொருத்தத்துடன் இந்த
உலகத்தை விட்டு மறைவாளேயானால் அவள் நாடிய வழியில் சொர்க்கம் செல்லட்டும்'' என்று திரு வாக்களித்தார்கள்.

மேலுள்ள இந்த செய்தி ஆதாரபூர்வமானதா ? 

பதில் - இந்த செய்தியை நம்பத்தகுந்த ஹதீஸ்கலை மேதைகளோ அறிஞர்களோ தமது எந்த  அடிப்படை ஹதீஸ் மூலாதார நூல்களிலும் பதிவு செய்யவில்லை.

இது ஓர் அடிப்படை ஆதாரமற்ற, இட்டுக்கட்டப்பட்ட, பொய்யான செய்தியாகும். இதனை ஹதீஸ் என்றோ நபிகளாரோடு இணைத்தோ சொல்வது மிகப்பெரும் பாவமாகும். 

எவர் என்மீது மனமுரண்டாகப் பொய்யுரைக்கின்றாரோ, அவர் தனக்குரிய இடத்தை நரகமாக ஆக்கிக்கொள்ளட்டும் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி 1291) 

முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி
أحدث أقدم