நல்ல மனைவியின் பண்புநலன்கள் (صفات الزوجة الصالحة)

- ஆசிரியர்: ஷெய்க். அப்துர் ரஸ்ஸாக் இப்னு அப்துல் முஹ்ஸின் அல் பத்ர் (حفظه الله)


بسم الله الرحمن الرحیم

நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து அந்நிஸா அத்தியாயத்தில் வந்துள்ள வசனம்:

ஆரம்பமாக நான் கூறப்போவது அந்நிஸா அத்தியாயத்தில் நல்ல மனைவியின் இலக்கணங்கள் குறித்து வந்துள்ள வசனமாகும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

'ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக் காத்துக்கொள்வார்கள்.'
[அல் குர்ஆன், 4:34]

இது நீண்ட வசனத்தின் ஒரு பகுதியே. இத்தலைப்பில் நாம் பேசவுள்ள அனைத்தையும் இது உள்ளடக்கியதாகும். நல்ல மனைவிக்கு இருக்கவேண்டிய சிறப்புமிக்க பண்பு இதில் கூறப்பட்டுள்ளது. நல்ல மனைவியிடம் இரண்டு பண்புகள் ஒருங்கே அமையப் பெற்றிருக்க வேண்டும் என்ற இந்த வசனம் நமக்குச் சொல்லித்தருகிறது. முதல் பண்பு அவளின் இரட்சகனோடு உள்ள அவளின் தொடர்பு குறித்தது. இரண்டாவது பண்பு, அவளின் கணவனோடு உள்ள அவளின் தொர்பு குறித்தது.

நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து அந்நிஸா அத்தியாயத்தில் வந்துள்ள வசனம்:

முதல் பண்பு:

அவளின் இரட்சகனோடு அவள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையே 'பணிந்தே நடப்பார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. இதற்குக் குர்ஆனில் 'கானிதாத்' என்ற பதம் ஆளப்பட்டுள்ளது. இது 'குனூத்' என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. இதன் பொருளாவது, அல்லாஹ்வின் வழிபாட்டிலேயே நிலைத்திருப்பது, அவனை வணங்குவதில் பேணுதலாக இருப்பது, அவனுடைய வணக்கத்தை அவசியமாக்கிக்கொள்வது இஸ்லாமிய கடமைகளில் கவனம் செலுத்துவது, அவற்றைப் பாழாக்காமல் இருப்பது. இவை அனைத்தும் 'கானிதாத்' என்ற பதத்திற்குள் அடங்கும்.

இரண்டாம் பண்பு:

இந்த வசனத்தில் (04:34) நல்ல மனைவியின் இரண்டாவது பண்பாக கூறப்படுவது என்னவெனில், '(தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக் காத்துக் கொள்வார்கள்' என்பதாகும். அதாவது, அவளுடைய கணவன் மறைவாக உள்ள சமயத்திலும் அவளின் கடமைகளைப் பேணுதலாகச் செய்வாள். அதே போன்று அவன் முன்னிலையில் இருக்கும்போதும் நடந்துக்கொள்வாள். அவனுடைய பொருளைப் பாதுகாப்பாள். அவனது விரிப்பைப் பாதுகாப்பாள். (கற்பு விசயத்தில் அவனுக்குத் துரோகம் செய்யமாட்டாள்.) அவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் பேணுதலாக இருப்பாள் என்பதாகும்.

நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து அந்நிஸா அத்தியாயத்தில் வந்துள்ள வசனம்:

'பணிந்து நடப்பார்கள்' என்பதில் ஒரு பெண் இஸ்லாமின் கடமைகளை நிறைவேற்றுவதும் அடங்கும். இக்கருத்துள்ள பல நபிமொழிகள் வந்துள்ளன. நபி (ﷺ) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (رضی الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'ஒரு பெண்மணி ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுது, (ரமளான்) மாதத்தில் நோன்பு நோற்று, அவளுடைய மறைவுறுப்பை பாதுகாத்து, அவளுடைய கணவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தால் சுவனத்தின் வாயில்களில் விரும்பிய வாயில் வழியாக அவள் நுழைவாள்'.
[ஆதாரம்: இப்னு ஹிப்பான் 4163, ஸஹீஹுத் தர்ஙீப் வத்தர்ஹீப் 1931]

ஆகவே, அல்லாஹ் வாக்குக் கொடுத்துள்ள இந்த நன்மையும் மேன்மையும் இஸ்லாமியப் பெண்ணுக்மு நற்செய்தியாகும். ஒரு கைவிரலினாலேயே எண்ணிவிடி முடிகின்ற நான்குச் செயல்பாடுகள் இங்குக் கூறப்பட்டுள்ளன. இரண்டு கைகளின் விரல்களினால் எண்ணத் தேவையில்லை. இந்த நான்குச் செயல்களை அவள் கடைப்பிடித்து வந்தால் 'சுவனத்தி்ன் வாயில்களில் எதன் வழியாக நீ விரும்புகிறாயோ அதில் நுழைந்துகொள்' என்பதாக அவளிடம் மறுமைநாளில் சொல்லப்படும். நன்மை புரிய விரும்பும் பெண் இச்செயல்களை விரும்பிச் செய்து, முக்கியத்துவம் கொடுத்து, தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணமாட்டாளா?

1. தொழுகையைக் கடைபிடிப்பது

2. நோன்பு நோற்பது

3. அவளது மறைவுறுப்பைப் பாதுகாத்துக் கொள்வது

4. அவளுடைய கணவனுக்குச் செய்ய வேண்டிய கடைமைகளை நிறைவேற்றுவது

இவற்றை முறையாக நிறைவேற்றுபவளுக்கு 'சுவனத்தின் வாயில்களில் எதன் வழியாக நீ விரும்புகிறாயோ அதில் நுழைந்துகொள்' என்பதாக அவளிடம் மறுமைநாளில் சொல்லப்படும்.

நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய பண்புகள்:

பெண்ணிற்குரிய நன்மையின் அடிப்படை அவளுடைய இரட்சகனுக்குச் செய்ய வேண்டிய கடமையாகும். அவளின் இரட்சகனைச் சரியான முறையில் வணங்குவது, அவனிடம் அழகிய முறையில் நெருங்குவது, அவனைத் தொடர்ந்து வணங்கிவருவது இந்தச் சீரியபாதையும் அதில் நிலைத்திருப்பதும் அவளுடைய நற்பாக்கியத்தின் இரகசியமாகும்; அவளது வெற்றியின் இரகசியமாகும். அவளுடைய இல்லற வாழ்வு, குழந்தைகளின் சீர்திருத்தம் போன்ற அவளுடைய முழு வாழ்விலும் அவளுக்குக் கிடைக்கின்ற தவ்ஃபீக்கின் இரகசியமாகும்.

ஆகவேதான், தனக்கும் தன் பொறுப்பில் உள்ள பெண்பிள்ளைகளுக்கும் நன்மையை விரும்புகிற பெண்மணி, அவர்கள் அனைவரையும் இறைவழிபாட்டைப் பேணி நடப்பவர்களாகவும் இஸ்லாமியக் கடமைகளில் குறிப்பாக, ஐந்து நேரத் தொழுகைகளிலும், ரமளான் மாத நோன்பிலும், பெண்ணுடைய பத்தினித்தனத்திற்கும் சிறப்பிற்கும் இடையூராக உள்ள அனைத்தைவிட்டுத் தூரப்படுத்துவதிலும் கவனம் செலுத்துபவர்களாக உருவாக்குவாள். பெண்ணின் பத்தினித்தனத்திற்கும் சிறப்பிற்கும் இடையூராக உள்ள அனைத்தைவிட்டும் ஒதுங்கிக் கொள்வதைத்தான் மேற்கூறப்பட்ட நபிமொழியில் 'தன் மறைவுறுப்பை அவள் பாதுகாத்துக்கொள்வாள்' என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு பெண் தன் மறைவுறுப்பைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது அவளிடமும் அவளின் பொறுப்புதாரிகளிடமும் வேண்டப்படுகிற விசயமாகும். இதன் மூலம் அனைத்து குழப்பங்களையும் தடுத்துவிடலாம். பெண்ணின் மூலமே தீங்குகளும் பாவங்களும் ஏற்படுகின்றன. அல்லாஹ் காப்பானாக!

நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய பண்புகள்:

இதோ, இன்னொரு பிரச்சனையையும் நாம் உணர்ந்துகொள்வது கட்டாயமாகும். அதில்தான் தீங்குகளும் பாவங்களும் அதிகமாக நடக்கின்றன. அதுதான் இல்லற வாழ்வில் செலவினங்களில் நடக்கிற வீண்விரயம், ஊதாரித்தனம். இதன் தீங்கு அபாயகரமானது.

பெரும்பான்மையான பெண்கள் மணமுடித்துக்கொள்ள தயாராகிவிட்டால் சடங்கு சம்பிரதாயங்களின் பக்கமே அவர்களுடைய கவனம் திரும்புகிறது. அவர்களுக்கு நிகரான வசதிகள் கொண்ட பெண்மணிகள் செய்த சடங்கு சம்பிரதாயங்களின் பக்கம் இவர்களுடைய கவனம் திரும்புகிறது. 'இன்ன பெண்மணி இவ்வாறு செய்தாள், இன்ன திருமணத்தில் இவ்வாறு செய்தார்கள்' என்பதாக அடுத்தவர்கள் வீட்டுத் திருமணங்களை இவள் கவனித்து, வீண்விரயம் செய்கிறாள். பாவக் காரியங்களையும் ஹறாமான காரியங்களையும் நிகழ்த்திப் பொருளாதாரத்தை வீணடிக்கிறாள். திருமணத்திற்கு முன்பாகவே நடக்கிற இந்தச் சடங்குகளால் பரக்கத் (அருள்வளம்) குறைந்து, நன்மையின் வாயில்கள் குறைந்து விடுகின்றன.

அதேசமயம், இவை அனைத்திலிருந்தும் ஒரு பெண்மணி விலகி, அவளுடைய குடும்பத்தாரும் ஒதுங்கிக்கொண்டு, வீண்விரயத்தையும் பாவங்களையும் விட்டு அவர்கள்  அனைவரும் விலகிக்கொண்டு, செலவும் வீண்விரயமும் இன்றி நடந்து கொண்டால் நன்மையும் பரக்கத்தும் அவளுக்குக் கிடைக்கும்.

நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய பண்புகள்:

நபி (ﷺ) அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர் (رضی الله عنه) அவர்கள் கூறுகிறார்கள்:

'சிறந்த திருமணம் என்பது எளிமையாகச் செய்யப்படுகின்ற திருமணமாகும்.'
[அபூ தாவூது 2117, ஸஹீஹ் ஜாமிஃ 3300]

இன்னொரு நபிமொழியில், 

'பெண்களில் பரக்கத் நிறைந்தவர்கள் சிக்கனமாகச் செலவு செய்பவர்கள்' என்பதாக வந்துள்ளது. [அறிவிப்பாளர்: ஆயிஷா (رضی الله عنها), நூல்: அஹமது - 25119, ஷுஐப் அல் அர்னாவூத் : ளயீஃப்]

மணப்பெண், அவளின் தந்தை, தாயார் ஆகிய அனைவரும் திருமணத்திலும் திருமணத்தின் சடங்குகளிலும் எளிமையைக் கையாளுவது அவசியம். கடினமாக்கிக் கொள்ளுதல் கூடாது. திருமணத்தில் தன்னடக்கம் பேணுதல் அவசியம். பணிவை மேற்கொள்ள வேண்டும். பெருமை காட்டக் கூடாது. கனிவோடும் பொறுமையோடும் நடந்து கொள்ள வேண்டும். வீண்விரயம் கூடாது. திருமணத்தில் இவ்வாறு நடந்துகொண்டால்தான் மணவாழ்வில் நல்ல தாக்கம் ஏற்படும்.

திருமணம் எளிமையாகவும் விரயமின்றியும் நடத்தப்பட்டால் அதனால் பலவிதமான பரக்கத்துகளும் தொடர் நன்மைகளும் ஏற்படும். மணவாழ்வை ஆரம்பிக்கும்போது வீண்விரயம், பாவக் காரியங்கள், இறைமறுப்புச் செயல்கள் போன்றவை மேற்கொள்ளப்பட்டால் அது பரக்கத் அகன்றுவிடப் பெரும் காரணமாக ஆகிவிடும். அல்லாஹ் காப்பானாக!

விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் நல்ல மனைவி விலகியிருக்க வேண்டும்.

நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய இரண்டாவது பண்பு, அவள் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் விலகியிருக்க வேண்டும். உலக வாழ்வில் ஷைத்தானின் முக்கிய நோக்கம், கலகம் விளைவிப்பதே. மார்க்கத்திலும் குணங்களிலும் கொடுக்கல் வாங்கலிலும் குடும்ப வாழ்விலும் சகோதரர்களுக்கு இடையேயும், அனைத்து நன்மையான காரியங்களிலும் குழப்பம் ஏற்படுத்துவதே அவனுடைய நோக்கமாகும். அவனது இந்த நோக்கங்களைச் செயல்படுத்த ஒவ்வொரு நாளும் படைகளை அனுப்புவான்.

ஸஹீஹ் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பில் வந்துள்ள ஒரு நபிமொழியை என்னோடு சேர்த்து நீங்களும் சிந்தனை செய்யுங்கள். நபி (ﷺ) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (رضی الله عنه) அறிவிக்கிறார்கள்:

'இப்லீஸ் தனது ஆட்சிக்கட்டிலைத் தண்ணீரின்மீது அமைத்து, பிறகு தன் படைகளை (பூமியில் குழப்பம் விளைவிக்க) அனுப்புகிறான். அப்போது அவனுடைய படைகளில் அவனுக்கு மிக நெருக்கமானவன் யாரெனில், (மக்களுக்கிடையே) மிக அதிகமாக குழப்பம் ஏற்படுத்தியவனே ஆவான். அந்தப் படையினரில் ஒருவன் (இப்லீஸிடம்) வந்து, 'நான் இன்னின்னவாறு செயல்பட்டேன்' என்று கூறுவான். அதற்கு இப்லீஸ், 'நீ எதையும் (பிரமாதமாகச்) செய்துவிடவில்லை' என்று கூறுவான். பிறகு அவர்களில் இன்னொருவன் வந்து, 'ஒருவனை அவனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரித்து வைக்கின்றவரை நான் அவனை விடவில்லை' என்று கூறுவான். அப்போது இப்லீஸ் அவனைத் தன் பக்கம் நெருக்கி வைத்துக்கொண்டு, 'நீதான் நல்லவனாக உள்ளாய்' என்று கூறுவான். (இப்லீஸின் படையைச் சார்ந்த ஒருவன் ஒரு பெண்ணுக்கும் அவளுடைய கணவனுக்கும் இடையே பிரித்து வைத்துவிட்டதால் அவனைத் தன் பக்கம் நெருக்கமாக அமர வைத்து) கட்டியணைத்துக் கொள்வான்.'[முஸ்லிம் 2813]

அவளின் தோற்றம் அவனுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்த வேண்டும்:

இவ்வாறே இன்னொரு நபிமொழி தப்ரானீ அவர்களின் அல் முஃஜமுல் அவ்ஸத் என்ற தொகுப்பில் வந்துள்ளது. அனஸ் இப்னு மாலிக் (رضی الله عنه) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் (ﷺ) கூறினார்கள்:

'உங்கள் மனைவிகள் சுவனவாசிகளாக ஆகுவது பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கவா?"

அதாவது, உங்கள் மனைவிகள் புகழுக்குரிய நற்பண்புகளையும் அருள்வளம் வாய்ந்த குணங்களையும் கடைப்பிடித்து சுவன வாசிகளாக ஆகுவது குறித்து உங்களுக்கு அறிவிக்கவா என்பதாக நபியவர்கள் வினவினார்கள். பிறகு அவர்களே பதிலும் கூறினார்கள்:

'மிக்க அன்புள்ள, அதிகம் குழந்தை பெற்றெடுக்கிற ஒவ்வொரு பெண்ணும் அவள் கோபமடைந்தாலோ, அவளுக்குத் தீங்கிழைக்கப்பட்டாலோ அல்லது அவளுடைய கணவன் கோபப்பட்டாலோ அப்போது அவள் (கணவனிடம்), 'இதோ, என் கரம் உங்களின் கரத்தில் உள்ளது; நீங்கள் திருப்தியுறும் வரை கண்மூடி நான் சுர்மா போடமாட்டேன்' என்று கூறுவாள்.

அறிவிப்பாளர்: கஅப் இப்னு உஜ்ரா (رضی الله عنه)

ஆதாரம்: தப்ரானீ - 307, ஸஹீஹ் ஜாமிஃ 2604

அதாவது, என்னை நீங்கள் பொருந்திக்கொள்ளும் வரை நான் என் கண்ணை மூடவுமாட்டேன்; தூங்கி நான் மகிழ்வுறவுமாட்டேன்; எனது கண் குளிர்ச்சி பெறாது என்பதாக அவள் கூறுவாள்.

- ஆதாரம் நூல்: صفات الزوجة الصالحة (தமிழில் - நல்ல மனைவியின் பண்புநலன்கள்)


Previous Post Next Post