பாவங்களுக்குப் பரிகாரமாகும் நோன்பு



இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். நோன்பு பாவங்களிலிருந்தும், நரக வேதனையிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகத் திகழ்கின்றது. நாம் நோற்கும் நோன்பின் மூலம் எமது பாவங்கள் அழிக்கப்படுகின்றன. பாவங்களை அழிக்கும் விஷேட அம்சம் நோன்பில் உள்ளடங்கியிருப்ப தால்தான் பல்வேறுபட்ட குற்றங்களுக்குப் பரிகாரமாக நோன்பு பரிந்துரைக்கப்படுகின்றது. இந்த வகையில் நோன்பைக் குற்றப் பரிகாரமாகப் பரிந்துரைக்கும் சில குர்ஆனின் சட்டங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கலாம் என நினைக்கின்றேன்.

‘அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவு செய்யுங்கள். (அதனை நிறைவு செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டால் பலிப்பிராணியில் சாத்திய மானதுதான் (அதற்குப்) பரிகாரமாகும். பலிப் பிராணி தனது எல்லையை அடைகின்ற வரையில் உங்கள் தலைகளை சிரைக்க வேண்டாம். ஆனால், உங்களில் எவரேனும் நோயாளியாக அல்லது தனது தலையில் தொந்தரவு தரும் பிணி உள்ளவராக இருந்தால் (அவர் தலையை சிரைக்கலாம்). ஆனால் அதற்காக நோன்பு நோற்பது அல்லது தர்மம் செய்வது, அல்லது அறுத்துப் பலியிடுதல் (ஆகியவை) பரிகாரமாகும். நீங்கள் பாதுகாப்பாக (மக்காவை) அடைந்து உம்ராவை முடித்து விட்டு ஹஜ்ஜு வரை (தடுக்கப்பட்டவைகளில் ‘தமத்துஃ’ முறையில்) சுகத்தை அனுபவித்தால் பலிப் பிராணியிலிருந்து சாத்தியமானது பரிகாரமாகும். (உங்களில் எவர்) அதைப் பெற்றுக்கொள்ளவில்லையோ அவர் ஹஜ் காலத்தில் மூன்று நாட்களும் (ஊர்) திரும்பியதும் ஏழு(நாட்களு)மாக நோன்பு நோற்கட்டும். இவை பூரணமான பத்து (நாட்)களாகும். இ(ச் சட்டமான)து எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் அருகில் வசிக்கவில்லையோ அவருக் குரியதாகும். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.’ (2:196)

    ஹஜ் அல்லது உம்றாவுக்காக இஹ்றாம் அணிகின்றவர்கள் தமது கடமையை நிறைவு செய்ய முடியாமல் தடுக்கப்பட்டால் ஆடு, மாடு, ஒட்டகம் ஏதேனும் ஒன்றை அறுத்த பின்னர்தான் தலை முடி கத்தரித்து அல்லது சிரைத்து இஹ்ராத்தைக் களைய வேண்டும். நோய் காரணமாக அதற்கு முன்னர் இறக்கினால் அதற்குப் பகரமாக நோன்பு நோற்க வேண்டும் அல்லது ஸதகா கொடுக்க வேண்டும் அல்லது ஒரு பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.

அத்துடன் தமத்துஃ அடிப்படையில் ஹஜ் செய்பவர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் ஏதேனும் ஒன்றை பலியிட வேண்டும். அப்படி பலியிட வசதியில்லாத, மக்காவில் வசிக்காத, வெளியூர்வாசிகள் ஹஜ்ஜில் மூன்று நோன்புகளும் ஊர் திரும்பிய பின்னர் ஏழு நோன்புகளுமாக பத்து நோன்புகள் நோற்க வேண்டும் என்றும் இந்த வசனம் கூறுகின்றது.

தவறுதலாக நடந்த கொலைக் குற்றத்திற்காக….

‘நம்பிக்கையாளரான ஒருவர் நம்பிக்கையாளரான மற்றொருவரை தவறுதலாகவே தவிர கொல்லலாகாது. எவர் தவறுதலாக நம்பிக்கையாளர் ஒருவரைக் கொன்று விடுகின்றாரோ (அவருக்குரிய பரிகாரம்) நம்பிக்கையாளரான ஓர் அடிமையை விடுதலை செய்வதும், (கொல்லப்பட்ட) அவரின் குடும்பத்தினர் தருமமாக விட்டுக் கொடுத்தாலே தவிர, அவர்களுக்கு நஷ்டஈட்டுத் தொகையைக் கொடுத்து விடுவதுமாகும். கொல்லப்பட்டவர் உங்களுக்கு பகைமையுள்ள சமூகத்தைச் சேர்ந்த நம்பிக்கையாளராக இருந்தால் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (அவர்) உங்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், (இறந்த)   அவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கொடுப்பதுடன் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை விடுதலையும் செய்ய வேண்டும். இவ்வாறு (பரிகாரம் செய்வதற்கு) அவருக்குச் சக்தி இல்லையெனில், அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பைப் பெற இரண்டு மாதங்கள் தொடராக நோன்பிருக்கட்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.’ (4:92)

போர்க்களங்களில் தமது பக்கத் தரப்பினரைக் கூட தவறுதலாகக் கொன்றுவிடும் சாத்தியம் உள்ளது. சில வேளை எம்மில் உள்ள முஸ்லிமையும் மற்றும் சில வேளை எதிர்க் கூட்டத்தில் இருக்கும் முஸ்லிமையும் மற்றும் சில வேளை சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட முஸ்லிம் அல்லாதவரையும் தவறுதலாகக் கொன்றுவிடும் சாத்தியம் உள்ளது. இப்படித் தவறுதாகக் கொன்று விட்டால் பரிகாரம் காண வேண்டும். பரிகாரம் காண வழியோ, வசதியோ இல்லையென்றால் பாவத்திலிருந்து விடுபடுவதற்காக தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் என இந்த வசனம் கூறுகின்றது.

சத்தியத்தை முறித்தல்:

சத்தியம் செய்தால் அதை முறிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இது தொடர்பாக அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

‘உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான். எனினும், நீங்கள் உறுதியாகச் செய்த சத்தியங்களுக்காக அவன் உங்களைக் குற்றம் பிடிப்பான். எனவே, (சத்தியத்தை முறித்தால்) அதற்கான பரிகாரம், நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு வழங்கும் உணவில் நடுத்தரமானதை பத்து ஏழைகளுக்கு வழங்குவதாகும். அல்லது அவர்களுக்கு ஆடை வழங்குவதாகும். அல்லது ஒர் அடிமையை விடுதலை செய்வதாகும். யார் (இவற்றில் எதையும்) பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்கட்டும். நீங்கள் சத்தியம் செய்து (முறித்து) விட்டால், இதுதான் உங்கள் சத்தியங்களுக்கான பரிகாரமாகும். எனினும், உங்கள் சத்தியங்களை நீங்கள் பேணிக்கொள்ளுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறு தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.’ (5:89)

    சத்தியத்தை முறித்தவர், தான் தனது குடும்பத்திற்கு அளிப்பது போல் தடுத்தரமான உணவை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் அல்லது பத்து ஏழைகளுக்கு உடை வழங்க வேண்டும் அல்லது ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதற்கான வசதி வாய்ப்பு இல்லாத போது மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என இந்த வசனம் கூறுகின்றது.

இஹ்ராமுடன் வேட்டையாடினால்:

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் நிலையில் வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள். உங்களில் யார் வேண்டுமென்றே அதனைக் கொன்றாரோ (அவருக்கு) கால்நடைகளில் அவர் கொன்றதைப் போன்றதே அதற்குரிய பரிகாரமாகும். உங்களில் நீதமுடைய இருவர் இது குறித்து தீர்ப்பளிக்கட்டும். (அது) கஃபாவைச் சென்றடைய வேண்டிய பலிப் பிராணியாகும். அல்லது ஏழைகளுக்கு உணவளித்தல் பரிகாரமாகும். அல்லது அதற்குச் சமமாக நோன்பு நோற்பதாகும். அவர் தனது செயலின் விளைவை அனுபவிப்பதற்காக (இவ்வாறு விதிக்கப் பட்டுள்ளது). முன்பு நடந்தவைகளை அல்லாஹ் மன்னித்து விட்டான். (இதனை) யார் மீண்டும் செய்கின்றாரோ அல்லாஹ் அவரைத் தண்டிப்பான். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்ளூ  தண்டிப்பவன்.’ (5:95)

    ஹஜ் அல்லது உம்றாவுக்காக இஹ்ராம் அணிந்து நிய்யத்து வைத்தவர் கடலில் மீன் பிடிக்கலாம். ஆனால், தரையில் வேட்டையாட முடியாது. அப்படி வேட்டையாடினால் வேட்டையாடப்பட்ட பிராணிக்குச் சமமான உயிர் பலியிட வேண்டும். எதை வேட்டையாடினால் எந்தப் பிராணியை பலியிட வேண்டும் என்பதை நீதமுடைய இருவர் தீர்ப்புக் கூற வேண்டும். அல்லது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது தான் பலியிட வேண்டிய பிராணிக்குத் தகுதியான அளவு நோன்பு நோற்க வேண்டும் என இந்த வசனம் கூறுகின்றது.

மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்:

‘உங்களில் எவர்கள் தமது மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்களோ, அவர்கள் இவர்களது தாய்மார்கள் இல்லை. இவர்களின் தாய்மார்கள் இவர்களைப் பெற்றெடுத்தவர்களே, நிச்சயமாக இவர்கள் வெறுக்கத்தக்க பேச்சையும், பொய்யையுமே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவன்ளூ  மிக்க மன்னிப்பவன்.’

‘எவர்கள் தமது மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டு, பின்னர் (தாம்) கூறியதிலிருந்து மீண்டு விடுகின்றார்களோ அவர்கள், (கணவன், மனைவியாகிய இருவரும்) ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.
    
‘எவர் (அடிமையைப்) பெற்றுக் கொள்ள வில்லையோ அவர், ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். (இதற்கு) எவர் சக்திபெறவில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதற்காகவே (விதியாக்கப்பட்டுள்ளது.) இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். நிராகரிப்பாளர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.’ (58:2-4)

ஜாஹிலிய்யாக் காலத்தில் மனைவியை தாய்க்கு ஒப்பிட்டால் அவர்கள் பின்னர் கணவன்-மனைவியாகச் சேர்ந்து வாழ முடியாது என்ற விதி இருந்தது. இஸ்லாம் மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுவதைக் கண்டிக்கின்றது. அப்படி ஒருவர் ஒப்பிட்டால் மீண்டும் மனைவியுடன் சேர்வதற்கு முன்னர் பரிகாரம் காண வேண்டும். தகுந்த பரிகாரம் கண்ட பின்னர் அவர்கள் கணவன்-மனைவியாக இணைந்து இல்லறம் நடாத்தலாம் என்று கூறுகின்றது.

இந்த வசனத்தில் இதற்கான பரிகாரம் பற்றி விபரிக்கப்படுகின்றது. மனைவியைத் தாயிற்கு ஒப்பிட்டால் அவர்கள் மீண்டும் இணைவதற்கு முன்னர் பின்வருவனவற்றை செய்ய வேண்டும் என இந்த வசனம் கூறுகின்றது.

1.    ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

2.    அதற்கு முடியாவிட்டால் இரண்டு மாதங்கள் தொடராக நோன்பு நோற்க வேண்டும்.

3.    அதற்கும் முடியாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

இஃதல்லாமல் பல குற்றச் செயல்களுக்கு நோன்பு பரிகாரமாக அமையும் என நபிமொழிகளும் கூறுகின்றன. இந்த சட்டங்களிலிருந்து, நோன்பு பாவங்களுக்குப் பரிகாரமாக அமையத்தக்க அற்புத வழிபாடாக இருப்பதை அறியலாம். அத்துடன், இஸ்லாம் அடிமைகளை விடுதலை செய்தல், ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற பண்புகளைப் போற்றுவதையும் உணரலாம்.

எனவே, நோன்பு என்பது எமது பாவங்களை அழிக்கும் முக்கியமானதொரு இபாதத் என்பதை உணர்ந்து அதன் மூலம் எமது பாவக் கறைகளை அகற்றிப் பரிசுத்தமாக முயல்வோமாக!
Previous Post Next Post