மனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல் (அல்குர்ஆன் விளக்கம்)



‘தமது மனைவியருடன் உறவு கொள்வதில்லை என சத்தியம் செய்வோருக்கு நான்கு மாதங்கள் அவகாசமுண்டு. (அதற்குள்) அவர்கள் திரும்பிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’
‘அவர்கள் விவாகரத்து செய்வதையே தீர்மானமாகக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்ளூ நன்கறிந்தவன்.’
(2:226-227)

மனைவி மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லது மனைவியைத் திருத்துவதற்காக உன்னைத் தீண்ட மாட்டேன் என சத்தியம் செய்வதுண்டு. இதற்கு ‘அல் ஈழா’ என்று கூறப்படும். இதை நல்லதற்குப் பயன்படுத்துவது போலவே சிலர் தவறான முறையிலும் பயன்படுத்தி வந்தனர்.

உன்னைத் தீண்ட மாட்டேன் என சத்தியம் செய்து, வருடக்கணக்கில் மனைவியை உடல் சுகத்தை விட்டும் ஒதுக்கி வைத்தனர். அதே நேரம் ஆண்கள், பிற மனைவியர் மூலம் தமது உடல் தேவையை நிறைவு செய்து கொண்டு குறித்த பெண்களைப் பட்டினி போட்டு பழி தீர்த்து வந்தனர்.

இஸ்லாம் இந்த நடைமுறையைத் தடுக்காமல் வரையறை செய்தது. ஒரு ஆண் தனது மனைவியைத் தீண்டுவதில்லை என்று சத்தியம் செய்து ஒதுங்கியிருப்பதாக இருந்தால் அதிகபட்சமாக நான்கு மாதங்கள் வரை ஒதுங்கியிருக்கலாம். அதற்கு மேல் ஒதுங்கியிருக்க ஆணுக்கு அனுமதியில்லை. அப்படி மனைவியுடன் இல்லறம் நடாத்தாமல் நான்கு மாதங்களுக்கு மேல் ஒதுக்கி வைத்தால் மனைவி இது குறித்து முறையிட்டு விவாகரத்துப் பெற்று வேறு வாழ்க்கையைத் தேடிக் கொள்ளலாம் என இஸ்லாம் கூறி பெண்கள் வஞ்சிக்கப்படுவதைத் தடுத்தது.

இதே வேளை நான்கு மாதங்கள் வரை ஒருவர் ஒதுக்கி வைத்தால் நான்கு மாதங்கள் முடிவதற்கு முன்னர் மனைவியுடன் சேர்ந்து இல்லறம் நடாத்த வேண்டும். இல்லையென்றால் நல்ல முறையில் விவாரத்து செய்துவிட வேண்டும். இது ஆண்களின் கடமையாகும்.

நபி(ச) அவர்கள் தமது மனைவியரை ஒரு மாத காலம் ஈழா செய்துள்ளார்கள் என்பது நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

காலம் முழுவதும் உன்னைத் தீண்ட மாட்டேன் என ஒரு கணவர் மனைவி குறித்து சத்தியம் செய்ய உரிமை அற்றவர். அப்படிச் செய்தாலும் நான்கு மாதங்களுக்குள் அவளுடன் சேர்ந்து விட வேண்டும் அல்லது பிரிந்துவிட வேண்டும்.

நான்கு மாதங்களுக்குள் சத்தியம் செய்தவர்; அந்த சத்தியத்தை அவர் முறிக்க நாடினால் முறிக்கலாம். உதாரணமாக, ஒரு மாத காலம் உன்னைத் தீண்டமாட்டேன் என சத்தியம் செய்தவர் மறு நாளே மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடலாம். ஆனால், சத்தியத்தை முறித்ததற்காக பரிகாரம் காண வேண்டும். இந்த வசனம் பெண்கள் அடம்பிடிக்கும் போது அவர்களை அடக்குவதை அனுமதியளிக்கும் அதே வேளை பெண்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமையையும் தடுக்கின்றது.

இந்த வசனத்தை வைத்து சில தலைவர்கள் தவறாக குடும்பங்களைப் பிரிப்பதுண்டு. நான்கு மாதங்களுக்குள் வாழ்வு கொடுக்காவிட்டால் அதையே விவாகரத்தாக அறிவிக்கும் கடமை ஜமாஅத்துக்கு உண்டு எனக் கூறி நான்கு மாதங்களுக்குள் சேராவிட்டால் அதுவே தலாக்தான் என பிரித்துவிட முற்படுகின்றனர். இது தவறாகும். நான்கு மாதம் சேராவிட்டால் அதுவே தலாக்தான் என்றால், அடுத்த வசனத்தில், ‘அவர்கள் விவாகரத்துச் செய்வதையே தீர்மானமாகக் கொண்டால்…’ என அல்லாஹ் கூற வேண்டிய தேவை இல்லை.

எனவே, இது போன்ற நிலையில் பெண் ஜமாஅத்திடம் நான்கு மாதம் தாண்டிவிட்டால் முறையிடலாம். அப்படி முறையிட்டால் இருவரையும் அழைத்து ஜமாஅத் விசாரித்து சேர்ந்து கொள்ளும்படி கணவனுக்கு அறிவுரை கூற வேண்டும். அவன் நான்கு மாதங்களை விட அதிகமாக ஒதுக்கி வைக்கும் உரிமை இல்லை என்பதை உணர்ந்து சேர்ந்து வாழ நினைத்தால் சேர்ந்து வாழலாம். அல்லது அதில் விருப்பம் இல்லையென்றால் தலாக் சொல்லலாம். நான்கு மாதங்கள் ஒதுங்கினாலே அது தலாக்தான் என்பது தவறான கருத்தாகும்.

தலைவர்கள் இதைத் தவறாகப் புரிந்து கொண்டு குடும்பங்களைப் பிரித்துவிடக் கூடாது என்பதற்காக இங்கு இது குறிப்பிடப்படுகின்றது.
Previous Post Next Post