இமாம் அபுல் ஹசன் அல்-அஷ்அரி (ரஹ்) அவர்களின் மூன்று வாழ்க்கை கட்டங்கள்

தர்காக்களில் மண்டியிட்டு, இறந்துபோன இறைநேசர்களிடம் கையேந்தி, இஸ்லாத்தின் அடிப்படை வேரான தவ்ஹீத்திற்கு முரணாகச் செயல்படும் சிலர், தங்களை தற்காத்துக் கொள்வதற்காக எழுப்பும் ஒரு பெரும் கோஷம் உண்டு. அதுதான்: "நாங்கள் சட்டக்கலையில் ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்; கொள்கையில் அஷ்அரி அகீதாவை பின்பற்றுபவர்கள்" என்பது!

ஆனால், வரலாற்று உண்மைகளை ஆழமாகப் புரட்டிப் பார்த்தால், இவர்கள் கூறுவதற்கும், 'நாஸிருஸ் ஸுன்னா' (சுன்னாவைக் காத்தவர்) என்று அழைக்கப்படும் மாபெரும் அறிஞர் இமாம் அபுல் ஹசன் அல்-அஷ்அரி (ரஹ்) அவர்களின் உண்மையான கொள்கைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண முடியும்.

இமாம் அபுல் ஹசன் அல்-அஷ்அரி (கி.பி. 874 - 936) அவர்கள் ஆரம்பம் முதலே அஹ்லுஸ் சுன்னாவின் அகீதாவில் இருந்தவர் அல்லர். அவரது ஆன்மீக மற்றும் அறிவுத் தேடல் மூன்று முக்கியக் கட்டங்களைக் கடந்துதான் முழுமை பெற்றது. இதை மறைத்துவிட்டுத்தான் இன்றைய தர்கா வழிபாட்டாளர்கள் பேசுகின்றனர்.

முதல் கட்டம் (முஃதஸிலா காலம்): தனது வாழ்நாளின் முதல் 40 ஆண்டுகளை, பகுத்தறிவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் 'முஃதஸிலா' கொள்கையில்தான் அவர் கழித்தார். தனது ஆசிரியர் அபுல் அலியின் வழிகாட்டுதலில் முஃதஸிலாக்களின் தலைசிறந்த தர்க்கவாதியாக அவர் திகழ்ந்தார்.

இரண்டாம் கட்டம் (குல்லாபியா - இடைக்காலச் சிந்தனை): ஒரு கட்டத்தில் முஃதஸிலாக்களின் தர்க்கங்கள் குர்ஆனுக்கும் சுன்னாவிற்கும் முரணாக இருப்பதை உணர்ந்து அங்கிருந்து வெளியேறினார். ஆனால், நேராக அஹ்லுஸ் சுன்னாவிற்கு வரவில்லை. மாறாக, 'இப்னு குல்லாப்' என்பவரின் தத்துவங்களைப் பின்பற்றி, குர்ஆன் சுன்னாவை 'இல்முல் கலாம்' (கிரேக்க தத்துவவியல் மற்றும் தர்க்கவியல்) மூலம் தற்காத்துப் பேசும் 'குல்லாபியா' கொள்கையை உருவாக்கினார்.

வரலாற்று உண்மை என்னவென்றால், இன்று தங்களை 'அஷ்அரிகள்' என்று மார்தட்டிக் கொள்ளும் தர்கா வழிபாட்டாளர்களும், தத்துவவாதிகளும் பின்பற்றுவது இமாம் அஷ்அரி அவர்களின் இந்த 'இடைக்கால குல்லாபியா' கொள்கையைத்தானே தவிர, அவரது இறுதி முடிவை அல்ல!

பல்லாண்டுகள் தத்துவங்களோடும், தர்க்கங்களோடும் மல்லுக்கட்டிய இமாம் அஷ்அரிக்கு இறுதியாக ஒரு பேருண்மை புரிந்தது. "இறைவனுடைய பண்புகளை மனித அறிவைக் கொண்டு அளக்கக் கூடாது; குர்ஆனும் சுன்னாவும் எப்படிச் சொல்கிறதோ அதை அப்படியே எவ்வித திரிபுமின்றி (தஃவீல்), மறுப்புமின்றி (தஃதீல்) ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்ற தூய்மையான முடிவுக்கு வந்தார்.

பஸ்ரா நகரின் மாபெரும் பள்ளிவாசலில் மிம்பரில் ஏறி நின்ற அவர், உலக வரலாற்றுக்கு ஒரு பிரகடனத்தைச் செய்தார்:

"நான் இதுவரை கொண்டிருந்த தத்துவார்த்தக் கொள்கைகளில் இருந்து விடுபடுகிறேன். குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில், அஹ்லுஸ் சுன்னாவின் இமாம்களில் ஒருவரான இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் எந்த அகீதாவில் இருந்தாரோ, அதுவே இனி என்னுடைய அகீதா!" என்று முழங்கினார்.

தனது இந்த இறுதி முடிவை உலகிற்குச் சொல்வதற்காக அவர் எழுதிய வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகம்தான் "அல்-இபானா அன் உஸூலித் தியானா". மேலும், "மகாலாத்துல் இஸ்லாமிய்யீன்" என்ற நூலையும் எழுதினார்.

இந்த நூல்களில் அவர் மிகத் தெளிவாகப் பதிவு செய்தார், அல்லாஹ்வைப் பற்றி "குர்ஆன் எதை சொல்கிறதோ அதன் எதார்த்த அர்த்தத்தில் எவ்வித தத்துவ விளக்கங்களுமின்றி நாங்கள் ஏற்கிறோம்." இதுதான் சஹாபாக்களின் கொள்கை, இதுவே இமாம் அஹ்மதின் கொள்கை, இதுவே தனது இறுதி கொள்கை என்று ஆணித்தரமாக எழுதி வைத்தார். ஆனால், இன்றைய போலி அஷ்அரிகள் இந்தப் புத்தகத்தை இமாம் அஷ்அரி எழுதவே இல்லை என்று இருட்டடிப்புச் செய்யும் அளவுக்குச் சென்றுவிட்டனர்!

இஸ்லாமிய அகீதா என்பது எந்த ஒரு தனிநபரின் தத்துவ மூளையிலிருந்தும் பிறந்ததல்ல. அது ஒரு தூய்மையான, பொன்னான சங்கிலித் தொடரைக் கொண்டது.

அபுல் ஹசன் அஷ்அரி அவர்கள் தனது அகீதா யாருடைய அகீதா என்று பிரகடனம் செய்தாரோ அந்த இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் புதிதாக எந்த அகீதாவையும் உருவாக்கவில்லை.

அவர் எந்த அகீதாவில் இருந்தாரோ... அதுதான் இமாம் ஷாஃபி மற்றும் இமாம் மாலிக் ஆகியோரின் அகீதா!

அவர்கள் எந்த அகீதாவில் இருந்தார்களோ... அதுதான் சிரியாவின் மாபெரும் அறிஞர் இமாம் அல்-அவ்ஸாயி மற்றும் ஹதீஸ்கலை மாமேதை இமாம் இப்னு ஷிஹாப் அஸ்-ஸுஹ்ரி ஆகியோரின் அகீதா!

அவர்கள் எந்த அகீதாவில் இருந்தார்களோ... அதுதான் இஸ்லாத்தை நபிகளாரிடம் நேரடியாகக் கற்ற ஸஹாபாக்களின் அகீதா!

அதுதான் அகிலத்தின் அருட்கொடையான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே தூய்மையான அகீதா!

இன்று தர்காக்களில் கபுருகளை முத்தமிட்டுக் கொண்டும், இறந்தவர்களிடம் உதவி தேடிக்கொண்டும், இஸ்லாமிய ஏகத்துவத்திற்குச் சவக்குழி தோண்டும் இவர்கள் கூறுவது எப்பேர்ப்பட்ட வரலாற்று முரண் தெரியுமா?

எந்த இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள், "கபுருகளின் மீது கட்டடங்கள் எழுப்புவதையும், அதை வணங்குமிடங்களாக ஆக்குவதையும் நான் கடுமையாக வெறுக்கிறேன்" என்று தனது 'அல்-உம்' நூலில் எழுதினாரோ... அந்த இமாமின் பெயரைச் சொல்லிக்கொண்டு கபுருகளின் மீது தர்காக்களைக் கட்டுகிறார்கள்!

எந்த இமாம் அபுல் ஹசன் அல்-அஷ்அரி (ரஹ்) அவர்கள், தனது இடைக்காலத் தத்துவக் குப்பைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, "இமாம் அஹ்மதின் வழியே என் வழி" என்று தூய்மையான சஹாபாக்களின் வழியைத் தேர்ந்தெடுத்தாரோ... அந்த இமாமின் பெயரைச் சொல்லிக்கொண்டு, அவர் தூக்கி எறிந்த குல்லாபியா கொள்கையைக் கட்டியழுது கொண்டிருக்கிறார்கள்!

அகீதா (கொள்கை) என்பது மார்க்கத்தின் ஆணிவேர். அதில் தத்துவங்களுக்கும், தர்க்கங்களுக்கும், கிரேக்க சிந்தனைகளுக்கும் இடமே இல்லை. "நாம் எப்படி நம்ப வேண்டும்" என்பதை அல்லாஹும் அவனது தூதரும் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள்; அதை சஹாபாக்கள் செயல்படுத்திக் காட்டிவிட்டார்கள்.

இமாம் ஷாஃபி, இமாம் மாலிக், இமாம் அவ்ஸாயி, இமாம் ஸுஹ்ரி ஆகியோர் எந்தத் தூய்மையான வழியில் பயணித்தார்களோ, நபித்தோழர்கள் எந்த வழியில் பயணித்தார்களோ அந்த நபிவழிமில் வழியில் பயணிப்பதே மறுமை வெற்றிக்கு ஒரே உத்திரவாதமாகும்! இதுவே வரலாற்று உண்மை; இதுவே நிதர்சனம்!

أحدث أقدم