-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
மஹதி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் பல வேறுபட்ட கருத்துக்களை தங்கள் புத்தகங்களில் பதிவு செய்திருக்கிறார்கள் ,
அதிகப்படியான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் & அனைத்து ஷீஆக்களின் வாதமும் மறுமை நாளின் அடையாளத்தில் மஹதி அவர்களின் வருகையும் ஒன்று என்பதுதான்,
அதை ஷீஆக்கள் சற்றே மிகைப்படுத்தி தங்களிக்கே உரிய பொய்கள் கலந்தபாணியில் அவர்கள் கூறியிருப்பது நமக்கு ஆச்சரியமானது ஒன்றல்ல, அதே நேரத்தில் உண்மையை எதிர் கருத்தினர் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வதுதான் இறை நம்பிக்கையாளர்களின் பண்பும் கூட,
மஹதி தொடர்பாக தற்கால அறிஞர்களும் பல கருத்துக்களை கூறி இருப்பினும் அவரவர் முயற்சி அவரவர்களுக்கு நன்மையை தரும் என்று நாம் கடந்துச் சென்று அவர்களை விமர்சிப்பதில் நேரத்தை வீணாக்காமல் குர்ஆன் ஸுன்னாவிற்கு நெருக்கமான கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்,
மஹதி அவர்களின் தொடர்பாக பல நபிமொழிகள் ஆதாரபூர்வமாக வந்திருக்கிறது,
(அதை மிகவும் பலவீனம் என்று கருதும் சில உலமாக்களும் இருக்கின்றனர்)
இதோ ஒரு ஆதாரப்பூர்வமான நபிமொழி....
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்
மஹதி நமது குடும்பத்தில் இருந்து தோன்றுவார் அவரை அல்லாஹ் ஒரே இரவில் தகுதி உடையவராக ஆக்கிவிடுவான்.
நூல் - முஸ்னத் அஹ்மத்-2/58
(அல்லாமா அஹ்மத் ஷாகிர் ரஹிமஹுல்லாஹ் ஆதாரப்பூர்வமானது என்று சரி கண்டிருக்கிறார்கள்)
நூல் ஸுனன் இப்னு மாஜா-2/1367
ஸஹீஹுல் ஜாமிஃ அஸ்ஸஹீர் -6735
(அல்லாமா நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் ஆதாரப்பூர்வமானது என்று சரி கண்டிருக்கிறார்கள்)
وعن علي رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " المهدي منا أهل البيت يصلحه الله في ليلة " . مسند أحمد 2/58 ح 645 تحقيق أحمد شاكر وقال : إسناده صحيح وسنن ابن ماجه 2/1367 . والحديث صححه أيضاً الألباني في صحيح الجامع الصغير 6735
ஹம்பலி மத்ஹபின் பிரபலமான இமாம் முஹம்மத் பின் அஹ்மத் அஸ்ஸஃபாரீனி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் " லவாமிஃ அல்அன்வாரில் பஹிய்யா " என்ற தங்களது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்......
மஹதி தொடர்பாக பல அறிவிப்புகள் வந்து உள்ரங்கமான "தவாத்துரை ", (அங்கீகாரத்தை) பெறுகிறது, அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களிடம் இது பிரபலமானதாக காணப்படுகிறது, நபித்தோழர்கள் வாயிலாகவும் அவர்களின் மாணவர்களின் வாயிலாகவும் பெறப்பட்ட பல அறிவிப்புகளில் ஊடாக உறுதியான ஒரு விடயத்தை பெறமுடிகிறது எந்தளவுக்கு என்று சொன்னால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் மஹதி அவர்களின் வருகையை ஏற்றுக்கொள்வது வாஜிபான ஒன்றாக மாறிவிட்டது,
இமாம் ஷவ்கானி அவர்கள் தங்களது புத்தகத்தில் எதிர்பார்க்கப்படுகின்ற (சவுதி அரேபியாவைச்சேர்ந்த அல்லாமா உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் எதிர்பார்க்கப்பட்ட - المنتظر என்ற வார்த்தையை தவிர்த்துக்கொள்வது நல்லது என்று கூறுகிறார்கள், ஷீஆக்களின் அதிகப்படியான பயன்பாடுகளின் காரணமாக கூட இவ்வாறு கூறி இருக்கலாம்) மஹதி தொடர்பாக 50 நபிமொழிகள் வந்திருக்கிறது அவைகளில் ஆதாரம் மிக்கது ஆதாரமற்றது பலகீனமானது என்று பல தரங்களில் வந்திருக்கின்றன,
உசூலின் அடிப்படையில் இது எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் தவாத்துரின் (அங்கீகாரத்தை) அந்தஸ்தை பெற்றிருக்கிறது,
ஆனால் சில அறிஞர் பெருமக்கள்
மர்யமின் குமாரரான ஈஸாவைத் தவிர மஹதி என்பவர் யாருமில்லை என்ற இப்னு மாஜா, ஹாகிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பை வைத்து மஹதி அவர்களின் வருகையை மறுக்கின்றனர், ஆனால் இந்த அறிவிப்பு பலவீனமானது என்று ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
قال السفاريني في لوامع الأنوار البهية ( وقد كثرت بخروجه الروايات، حتى بلغت حد التواتر المعنوي، وشاع ذلك بين علماء السنة، حتى عُدّ من معتقداتهم" إلى أن قال: "وقد روي عمن ذُكر من الصحابة وغير من ذُكر منهم رضي الله عنهم، بروايات متعددة، وعن التابعين من بعدهم، ما يفيد مجموعه العلم القطعي ، فالإيمان بخروج المهدي واجب كما هو مقرر عند أهل العلم ، ومدون في عقائد أهل السنة والجماعة" انتهى.وقال الشوكاني: "والأحاديث في تواتر ما جاء في المهدي المنتظر ، التي أمكن الوقوف عليها ، منها خمسون حديثاً، فيها الصحيح والحسن والضعيف المنجبر، وهي متواترة بلا شك ولا شبهة، بل يصدق وصف التواتر على ما هو دونها في جميع الاصطلاحات المحررة في الأصول..." انتهى.وقد أنكر جماعة خروج المهدي محتجين بحديث "ولا مهدي إلا عيسى ابن مريم" وهو حديث رواه ابن ماجه والحاكم، لكنه ضعيف كما جزم بذلك جماعة منهم شيخ الإسلام ابن تيمية وغيره.
சவுதி அரேபியாவின் முன்னாள் தலைமை முஃப்தியான இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ், மஹ்தி அலைஹிஸ்ஸலாம் தொடர்பாக வழங்கிய மார்க்க தீர்ப்பு, பின் வருமாறு :
எதிர்பார்க்கப்பட்ட மஹ்தி அவர்களின் வருகை உண்மைதான். கியாமத் தினம் வருவதற்கான கால அடையாளங்கள் தோன்றும் சமயத்தில், தஜ்ஜால் தோன்றுவதற்கு அருகிலும், ஈஸா (இயேசுவின் ) அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானில் இருந்து இறங்குவதற்கு அருகிலும், ஒரு கலீஃபாவின் மரணத்தில் மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போது, மஹ்தி வெளிப்படுவார். (ஒரு மனதுடன் இந்த உம்மத்தின் கலிஃபாவாக ஏற்கப்பட்டு) அவர் பைஅத் செய்யப்படுவார். ஏழு அல்லது ஒன்பது ஆண்டுகளாக, மக்களிடையே நீதியை நிலைநாட்ட பாடுபடுவார். மர்யமின் மகன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வர இருக்கின்ற காலத்தில், இவர் இறங்குவார். இதைத்தான் ஆதாரமான நபிமொழிகள் கூறுகின்றன.
ராபிஃழியாக்கள் என்ற ஷீஆக்கள் கூறும் சுரங்கப்பாதையில் இருந்து வெளிப்படும் மஹ்தியின் வருகை , நமது அஹ்லுஸ் ஸுன்னாவைச் சார்ந்த அறிஞர்களின் கூற்றுப்படி, அதற்கு எந்த அடிப்படையும் இல்லை. மாறாக, அது எந்த அடிப்படையும் இல்லாத ,செல்லுபடியாகாத ஒரு கட்டுக்கதை.
நம்பகமான ஹதீஸ்கள் மூலம் கொண்டு வரப்பட்ட, "எதிர்பார்க்கப்பட்ட மஹ்தியைப் பொறுத்தவரை, அவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் பரம்பரையில், பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் சந்ததியில் இருந்து தோன்றுவார். அவருடைய பெயர் இறைத் தூதரின் பெயரைப் போன்றது. (முஹம்மது/ அஹ்மத்) மற்றும் அவரது தந்தை பெயர் அப்துல்லாஹ்வாக இருக்கும், இது உண்மையான ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது காலத்தின் முடிவில் நடக்கும், அது அவரது தோற்றத்தின் காரணமாக நடக்கும். அவர் தோன்றிய பிறகு, மக்களின் நலனிலும், இஸ்லாமிய ஷரீஅத்தை நிலை நாட்டுவதிலும், நீதத்தை நிலை நாட்டுவதிலும் மிகவும் பங்களிப்பார்.
அவர் காலத்தில், அநியாயத்தால் நிரம்பிய பிறகு, பூமி நீதியால் நிரம்பிவிடும் என்றும், இருக்கும் கலீஃபாவின் மரணத்தைத் தொடர்ந்து மக்களிடையே சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, அவர் தோன்றுவார்" என்றும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
கண்ணியத்திற்குரிய ஷேக் அப்துல் அஜிஸ் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ்
நூல் - "ஃபதாவா நூர் 'அலத்-தர்ப்" (1/354).