நபி (ஸல்) அவர்களை நேசிப்பதும்‌ கண்ணியப் படுத்துவதும்

- அஷ்ஷெய்க் ஸாலிஹ் இப்னு பெளஸான் அல் பெளஸான்


அல்லாஹ்வின்‌ மீது நேசம்‌ கொள்வதே அடியார்களின்‌ மீதுள்ள முதல்‌ கடமையாகும்‌. ஏனெனில்‌, அவ்வாறு நேசம்‌ கொள்வதை அல்லாஹ்‌ மகத்தான வணக்கமாக ஆக்கியிருக்கிறான்‌. அல்லாஹ்‌ கூறுகிறான்‌:

விசுவாசிகளோ, அல்லாஹ்வை நேசிப்பதில்‌ மிகக்‌ கடினமானவர்கள்‌. (2:165)

அல்லாஹ்வின்‌ மீது நேசம்‌ கொள்வது அவசியமானதாகும்‌. ஏனெனில்‌, அந்த இரட்சகனே தனது அடியார்கள்‌ மீது அந்தரங்கமாக மற்றும்‌ வெளிப்படையாக அனைத்து அருட்கொடைகளையும்‌ வழங்கியுள்ளான்‌.

அல்லாஹ்வின்‌ நேசத்திற்குப்‌ பிறகு அவனது தூதர்‌ முஹம்மத்‌ (ஸல்) அவர்கள்‌ மீது நேசம்‌ கொள்வது கடமையாகும்‌. ஏனெனில்‌ அவர்களே அல்லாஹ்வின்‌ பக்கம்‌ மக்களை அழைத்தார்கள்‌. அவனைப்‌ பற்றி தெரிவித்தார்கள்‌. அவனது ஷரியத்தை பிறருக்கு எடுத்துரைத்தார்கள்‌ மற்றும்‌ அவனது கட்டளைகளை தெளிவுபடுத்தினார்கள்‌. நபி முஹம்மத்‌ (ஸல்) அவர்களைப்‌ பின்பற்றுவதைக்‌ கொண்டே இறை நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகிலும்‌, மறுமையிலும்‌ நன்மைகள்‌ ஏற்படுகின்றன. நபி (ஸல்) அவர்களுக்கு கீழ்ப்படிந்தும்‌ அவர்களை பின்பற்றியுமே ஒருவரால்‌ சொர்க்கத்தில்‌ நுழைய முடியும்‌.

நபி (ஸல்) அவர்கள்‌ கூறினார்கள்‌: மூன்று தன்மைகள்‌ யாரிடம்‌ உள்ளதோ அவர்‌ ஈமானின்‌ சுவையை சுவைத்தவர்‌ ஆவார்‌. இவை! அல்லாஹ்‌வும்‌ அவனது தூதரும்‌ ஒருவருக்கு மற்ற அனைவரைவிடவும்‌ அதிக நேசத்திற்குரியவராக ஆவது. ஒருவர்‌ மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, இறைநிராகரிப்பிலிருந்து அல்லாஹ்‌ தம்மைக்‌ காப்பாற்றிய பின்‌ அந்த இறைநிராகரிப்பிற்கு திரும்பிச்‌ செல்வதை ஒருவர்‌ நெருப்பில்‌ வீசப்படுவதைப்‌ போன்று வெறுப்பது. (அறிவிப்பாளர்‌: அனஸ்‌ (ரலி), நூல்‌:புகாரி - 21)

அல்லாஹ்வின்‌ நேசத்திற்குப்‌ பிறகு அவனது தூதரை நேசிக்க வேண்டும்‌. அல்லாஹ்வை நேசிப்பதற்கு அவனது தூதரை நேசிப்பதும்‌ அவசியம்‌ வாய்ந்ததாக இருக்கிறது. மேலும்‌ நேசம்‌ கொள்வதில்‌ அல்லாஹ்விற்குப்‌ பிறகு வரிசையமைப்பில்‌ அவனது தூதரையே நேசிக்க வேண்டும்‌ என்று உள்ளது.

நேசம்‌ கொள்வதில்‌ அல்லாஹ்வைத்‌ தவிர்த்து மற்ற அனைவரையும்விட நபி (ஸல்) அவர்களை முற்படுத்துவது கடமையாகும்‌ என பிரத்யேகமாக, மார்க்கத்தில்‌ கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள்‌ கூறினார்கள்‌: உங்களில்‌ ஒருவருக்கு அவரின்‌ தந்தை, அவரின்‌ பிள்ளை, மற்ற அனைவரைவிடவும்‌ நான்‌ நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர்‌ ஈமான்‌ கொண்டவராக மாட்டார்‌. (அறிவிப்பாளர்‌: அனஸ்‌ (ரலி), நூல்‌: புகாரி - 15)

மற்றொரு ஹதீஸில்‌, ஒரு மனிதன்‌ தன்னைவிட நபி (ஸல்) அவர்களையே அதிகமாக நேசிக்க வேண்டும்‌ என வந்துள்ளது.

நாங்கள்‌ நபி (ஸல்) அவர்களுடன்‌ இருந்து கொண்டிருந்தோம்‌. அப்போது நபி (ஸல்) அவர்கள்‌ உமர்‌ பின்‌ கத்தாப் (ரலி) அவர்களின்‌ கையைப்‌ பிடித்துக் கொண்டிருந்தார்கள்‌. அப்போது உமர் (ரலி) அவர்கள்‌ நபி (ஸல்) அவர்‌களிடம்‌, அல்லாஹ்வின்‌ தூதரே! என்னைத்‌ தவிரவுள்ள எல்லாவற்றையும்‌ விட நீங்களே எனக்கு மிகவும்‌ பிரியமானவர்கள்‌ என்று சொன்னார்கள்‌. அதற்கு நபி (ஸல்) அவர்கள்‌, 'இல்லை' என்‌ உயிர்‌ எவன்‌ கையிலுள்ளதோ அவன்‌ மீது சத்தியமாக! உம்மை விடவும்‌ நானே உமக்கு மிகவும்‌ பிரியமானவனாக ஆகும்‌ வரை (நீர்)‌ உண்மையான இறைநம்பிக்கையாளர்‌ ஆக முடியாது! என்று கூறினார்கள்‌. உடனே நபி (ஸல்) அவர்களை நோக்கி உமர்‌ (ரலி) அவர்கள்‌, இப்போது அல்லாஹ்வின்‌ மீதாணையாக என்னைவிடவும்‌ தாங்களே எனக்கு மிகவும்‌ பிரியமானவர்கள்‌ என்றார்கள்‌. அதற்கு நபி (ஸல்) அவர்கள்‌ இப்போதுதான்‌ உமரே! (சரியாகச்‌ சொன்னீர்கள்‌) என்று கூறினார்கள்‌. (அறிவிப்பாளர்‌: அப்துல்லாஹ்‌ பின்‌ ஹிஷாம்‌ (ரலி), நூல்‌: புகாரி - 6643)

நபி (ஸல்) அவர்களை நேசிப்பது கடமையாகும்‌. நேசம்‌ கொள்வதில்‌ அல்லாஹ்வைத்‌ தவிர்த்து மற்ற அனைவரையும் விட நபி (ஸல்) அவர்களை முற்படுத்த வேண்டும்‌. ஏனெனில்‌, அவர்கள்‌ மீது நேசம்‌ கொள்வது அல்லாஹ்வின்‌ மீது நேசம்‌ கொள்வதோடு தொடர்புடையதாக உள்ளது.

அல்லாஹ்வை நேசிப்பதற்கு, நபி (ஸல்) அவர்கள்‌ மீது நேசம்‌ கொள்வது அவசியமானதாக உள்ளது. இறை நம்பிக்கையாளனின்‌ உள்ளத்தில்‌ அல்லாஹ்வின்‌ மீது நேசம்‌ அதிகமாகும் போது நபி (ஸல்) அவர்களின்‌ மீதுள்ள நேசமும்‌ அதிகமாகும்‌. அல்லாஹ்வின்‌ மீது நேசம்‌ குறையும்‌ போது நபி (ஸல்) அவர்களின்‌ மீதுள்ள நேசமும்‌ குறையும்‌. எவர்‌ அல்லாஹ்வை நேசிக்‌கிறாரோ அவர்‌ அல்லாஹ்விற்காக நபி (ஸல்) அவர்களையும்‌ நேசிப்பார்‌.

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதென்பது அவர்களை கண்ணியப்படுத்துவதும்‌ அவர்களுக்கு மதிப்பளிப்பதும்‌ அவர்களை பின்பற்றுவதும்‌ மற்ற மனிதர்களின்‌ சொல்லை விட நபி (ஸல்) அவர்களின்‌ சொல்லை முற்படுத்துவதும்‌ மற்றும்‌ அவர்களின்‌ சுன்னாவை மதிப்பதுமே ஆகும்‌.

அல்லாமா இப்னுல்‌ கய்யிம்‌ (ரஹ்) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: மனிதர்களை நேசிப்பதும்‌ கண்ணியப்படுத்துவதும்‌ அல்லாஹ்வின்‌ மீது கொள்ளும்‌ நேசம்‌, மரியாதைக்கு அடுத்து வருவதாக இருந்தால்‌ அது அனுமதிக்கப்பட்டதாகும்‌.

உதாரணத்திற்கு, நபி (ஸல்) அவர்கள்‌ மீது நேசமும்‌ கண்ணியமும்‌, அவர்களைத்‌ தூதராக அனுப்பிய அல்லாஹ்வின்‌ மீது கொண்ட அன்பினாலும்‌, மரியாதையினாலும்‌ ஏற்பட்டதாகும்‌. நபி (ஸல்) அவர்களின்‌ உம்மத்தவர்கள்‌ அல்லாஹ்வின்‌ மீது கொண்டுள்ள நேசத்தாலேயே நபி (ஸல்) அவர்களை நேசிக்கிறார்கள்‌, அல்லாஹ்வின்‌ மீதுள்ள கண்ணியத்தாலேயே நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துகிறார்கள்‌. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள்‌ மீது கொள்ளும்‌ நேசமானது அல்லாஹ்வின்‌ மீது கொள்ளும்‌ நேசத்தால்‌ ஏற்பட்டதாகும்‌.

ஆக இதிலிருந்து அறிவது என்னவெனில்‌, நபி (ஸல்) அவர்களின்‌ நேசத்தையும்‌, மரியாதையையும்‌ நமது உள்ளத்தில்‌ அல்லாஹ்‌ ஏற்படுத்தியுள்ளான்‌. அதன்‌ காரணமாவே ஸஹாபாக்கள்‌ தனது உள்ளத்தில்‌ நபி (ஸல்) அவர்கள்‌ மீது அதிகமாக நேசமும்‌, மரியாதையும்‌ வைத்திருந்தார்கள்‌. அந்த நேசத்தையும்‌, மரியாதையையும்‌ எந்த ஒரு மனிதனும்‌ தன்‌ உள்ளத்தில்‌ மற்ற மனிதனின்‌ மீது கொள்ள முடியாது.

அமர்‌ பின்‌ அல்‌ஆஸ்‌ (ரலி) அவர்கள்‌ இஸ்லாமை ஏற்ற பிறகு கூறினார்கள்‌: இஸ்லாமை ஏற்பதற்கு முன்புவரை நபி (ஸல்) அவர்களை விட வெறுப்புக்குரியவர்‌ என்னிடத்தில்‌ வேறு யாரும்‌ இல்லை. ஆனால்‌ இஸ்லாமை நான்‌ ஏற்ற பிறகு என்னிடத்தில்‌ நபி (ஸல்) அவர்களைவிட விருப்பத்திந்குரியவர்‌ வேறு யாரும்‌ இல்லை. அதைப்‌ போன்றே என்‌ பார்வையில்‌ நபி (ஸல்) அவர்களைவிட கண்ணியத்திற்குரியவர்‌ வேறு யாரும்‌ இல்லை. என்னிடத்தில்‌ இந்த நபியின்‌ சிறப்பைக்‌ கூறக்‌ கேட்டால்‌ அதனை விவரிக்க நான்‌ சக்தி பெற மாட்டேன்‌. ஏனெனில்‌, இந்த நபியின்‌ சிறப்பை எனது பார்வையைக்கொண்டு முழுமையாக என்னால்‌ கணக்கிட முடியவில்லை.

உர்வா பின்‌ மஸ்வூத்‌ அஸ்ஸகஃபீ குறைஷிகளிடம்‌ கூறினார்கள்‌: எனது சமுதாயமே கிஸ்ரா, கைஸர்‌ அரசர்களிடத்திலே நான்‌ சென்றிருக்கிறேன்‌. முஹம்மத்‌ (ஸல்) அவர்களின்‌ தோழர்கள்‌ முஹம்மத்‌ (ஸல்) அவர்களுக்கு அளிக்கும்‌ கண்ணியத்தைப்‌ போன்று கைஸர்‌ கிஸ்ரா நாட்டின்‌ குடிமக்கள்‌ கூட தங்களது அரசனுக்கு அளிக்கவில்லை. அல்லாஹ்வின்‌ மீது ஆணையாகி முஹம்மத்‌ (ஸல்) அவர்களின்‌ தோழர்கள்‌ தங்களின்‌ பார்வையைக்கொண்டு முஹம்மதை நோக்கினாலும்‌ கண்ணியத்துடனே நோக்குகின்றனர்‌. முஹம்மத்‌ (ஸல்) அவர்கள்‌ எச்சிலைத்‌ துப்பினாலும்‌ அவர்களுடைய தோழர்களில்‌ யாரேனும்‌ ஒருவரின்‌ கையிலேயே அது விழும்‌. அதனை அந்த தோழர்‌ தன்‌ முகத்திலும்‌, மேனியிலும்‌ பூசிக்‌ கொள்வார்‌. முஹம்மத்‌ (ஸல்) ஒளு செய்தால்‌ அந்தத்‌ தண்ணீரை பெறுவதற்கு அவரின்‌ தோழர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ முந்திக்‌ கொள்கின்றனர்‌. (ஜலாஉல்‌ அஃப்ஹாம்‌, பக்கம்‌-120,121)

நபி (ஸல்) அவர்களை அளவுகடந்து, வரம்புமீறி புகழ்வதற்கு வந்துள்ள தடை:

வரம்பு மீறுதலுக்கு அரபியில்‌ ‘அல்குலு' என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்‌.

உங்கள்‌ மார்க்கத்தில்‌ நீங்கள்‌ அளவு கடந்து செல்லாதீர்கள்‌. (4:171)

ஒருவரை அளவுகடந்து புகழ்வதும்‌, அந்த புகழில்‌ பல பொய்யான தகவல்களை கூறுவதற்கும்‌ அரபியில்‌ அல்‌இத்ரா என்று சொல்லப்படும்‌.

நபி (ஸல்) அவர்களின்‌ உரிமையில்‌ வரம்பு மீறுவது என்பது, அல்லாஹ்வின்‌ அடிமை, தூதர்‌ என்ற அந்தஸ்தைவிட்டு அவர்களை உயர்த்தி அல்லாஹ்விற்கு மட்டுமே செய்யவேண்டிய வணக்க வழிபாடுகளை நபி (ஸல்) அவர்களுக்குச்‌ செய்வது. உதாரணத்திற்கு, நபி (ஸல்) அவர்களை பிரார்த்தித்து அழைப்பது, அவர்களிடத்தில்‌ துன்பங்களை நீக்கக்‌ கோருவது, அவர்கள்‌ மீது சத்தியம்‌ செய்வது.

நபி (ஸல்) அவர்களை அளவுகடந்து புகழ்வது: 

நபி (ஸல்) அவர்களை அளவுகடந்து புகழ்வதைப்‌ பற்றி நபி (ஸல்) அவர்கள்‌ கூறும்போது,

கிறித்தவர்கள்‌ மர்யமின்‌ மைந்தரை (கடவுள்‌ என்ற நிலைக்கு உயர்த்தி) அளவுகடந்து புகழ்ந்ததைப்போல என்னை நீங்கள்‌ புகழாதீர்கள்‌. நான்‌ அல்லாஹ்வின்‌ அடிமையாக இருக்கிறேன்‌. எனவே என்னை அல்லாஹ்வின்‌ அடிமை, அவனது தூதர்‌ என்றே சொல்லுங்கள்‌ என்று கூறினார்கள்‌ என மிம்பரின்‌ மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள்‌ சொல்ல நான்‌ கேட்டிருக்கிறேன்‌. (அறிவிப்பாளர்‌: இப்னு அப்பாஸ்‌ (ரலி),  நூல்‌: புகாரி - 3445)

ஆக அசத்தியமான வழிமுறைகளில்‌ நபி (ஸல்) அவர்களை புகழவும்‌ கூடாது, அவர்களை புகழ்வதில்‌ வரம்பு மீறவும்‌ கூடாது. ஏனெனில்‌, கிறித்தவர்கள்‌ ஈஸா (அலை) அவர்களை புகழ்வதில்‌ வரம்பு மீறியதின்‌ விளைவாகவே அவர்களை வணங்கும்‌ நிலைக்குக்‌ கொண்டுவந்துவிட்டார்கள்‌. 

எனவே தான்‌ நபி (ஸல்) அவர்கள்‌ அல்லாஹ்‌ என்னை எவ்வாறு புகழ்ந்துள்ளானோ அவ்வாறே நீங்களும்‌ புகழுங்கள்‌. அல்லாஹ்வின்‌ அடிமை, அவனது தூதர்‌ என்று மட்டுமே கூறுங்கள்‌ என்றார்கள்‌.

நான்‌ பனு ஆமிர்‌ கூட்டத்தினருடன்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ அவர்களிடம்‌ சென்றேன்‌. நபி (ஸல்) அவர்களிடம்‌ நீங்களே எங்களின்‌ எஜமானாக இருக்கின்றீர்கள்‌ என்று நாங்கள்‌ கூறினோம்‌. அதற்கு நபி (ஸல்) அவர்கள்‌ அல்லாஹ்வே நம்‌ அனைவருக்கும்‌ எஜமானாக இருக்கிறான்‌ என்றார்கள்‌. நாங்கள்‌ நபி (ஸல்) அவர்களிடம்‌ நீங்களே எங்களில்‌ அதிக சிறப்புடையவராகவும்‌, பெரும்‌ மதிப்புடையவராகவும்‌ இருக்கிறீர்கள்‌ என்றோம்‌. அதற்கு நபி (ஸல்) அவர்கள்‌ இவ்வாறு நீங்கள்‌ கூறுவதில்‌ தவறில்லை, எனினும்‌ ஷைத்தான்‌ உங்களை என்‌ விஷயத்தில்‌ வரம்பு மீற செய்துவிட வேண்டாம்‌ என்று எச்சரித்தார்கள்‌. (நூல்‌: அபூதாவூத்‌ - 4808)

ஒரு மனிதர்‌ நபி (ஸல்) அவர்களிடத்தில்‌ முஹம்மதே, எங்களில்‌ சிறந்தவரே, எங்களில்‌ சிறந்தவரின்‌ மகனே, எங்களின்‌ எஜமானே, எங்கள்‌ எஜமானின்‌ மகனே என்றார்‌. அப்போது நபி (ஸல்) அவர்கள்‌ மனிதர்களே என்‌ விஷயத்தில்‌ ஷைத்தான்‌ உங்களை வரம்புமீறச்‌ செய்யாத விதத்தில்‌ நீங்கள்‌ கூறுங்கள்‌. முஹம்மதாகிய நான்‌ அல்லாஹ்வின்‌ அடிமையாகவும்‌, தூதராகவும்‌ இருக்கிறேன்‌. எனவே அல்லாஹ்‌ எனக்கு வழங்கியிருக்கும்‌ தகுதிக்கு மேல்‌ என்னைப்‌ புகழ்வதை நான்‌ விரும்பவில்லை என்றார்கள்‌.(அறிவிப்பாளர்‌: அனஸ் (ரலி), நூல்‌: அஹமத்‌ - 13946 ஸஹீஹ்‌)

நபி (ஸல்) அவர்கள்‌ படைப்பினங்களில்‌ சிறந்தவர்‌ மதிப்பிற்குரியவர்‌ என்பதற்கு பல சான்றுகள்‌ இருந்தும்கூட, நீங்களே எங்களின்‌ எஜமான்‌, எங்களில்‌ சிறந்தவர்‌, மேன்மையானவர்‌ போன்ற வார்த்தைகளைக்கொண்டு புகழ்வதைக்கூட நபி (ஸல்) அவர்கள்‌ வெறுத்துள்ளார்கள்‌.

இவ்வாறான வார்த்தைகளைக்கொண்டு புகழ்வதால்‌ தனது உரிமையில்‌ வரம்பு மீறுதல்‌ ஏற்பட்டுவிடக்‌ கூடாது என்பதற்காகவும்‌, தவ்ஹீத்‌ கொள்கையைப்‌ பாதுகாப்பதற்காகவுமே நபி (ஸல்) அவர்கள்‌ இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்துவதைவிட்டு நபித்தோழர்களை தடுத்தார்கள்‌.

தனது அந்தஸ்தில்‌ உயர்வை ஏற்படுத்தும்‌ அந்த இரண்டு வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தும்படி மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்‌. அந்த இரு வார்த்தைகளால்‌ வரம்பு மீறுதலோ, அகீதாவில்‌ பிரச்சனையோ ஏற்படுவதில்லை. அல்லாஹ்வின்‌ அடிமை மற்றும்‌ அவனது தூதர்‌ என்பதே அந்த இரு வார்த்தைகளாகும்‌. அல்லாஹ்வே விரும்பி நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்படுத்தித்‌ தந்த அந்தஸ்தைவிட கூடுதலானதை நபி (ஸல்) அவர்கள்‌ என்றுமே விரும்பியதில்லை.

ஆனால்‌ உண்மை இப்படியிருக்க இன்று பெரும்பாலான மக்கள்‌ நபி அவர்களின்‌ கட்டளைக்கு மாற்றமாக அவர்களைத்‌ தங்களின்‌ தேவைக்கு அழைக்கின்றனர்‌. அவர்களிடம்‌ துன்பங்களை நீக்க வேண்டுகின்றனர்‌. அவர்கள்‌ மீது சத்தியம்‌ செய்கின்றனர்‌. அல்லாஹ்விடம்‌ மட்டுமே கேட்டுப்‌ பெறவேண்டிய காரியங்களையெல்லாம்‌ நபி (ஸல்) அவர்களிடம்‌ கேட்கின்றனர்‌. மீலாது விழாக்களில்‌ செய்யப்படுவதையும்‌ மவ்லிது பாடல்களிலும்‌, கவிதை வரிகளிலும்‌ இருப்பதை நாம்‌ கண்கூடாக காண்கிறோம்‌. ஆக இப்படியாக அல்லாஹ்விற்கும்‌ அவனது தூதரான முஹம்மத்‌ (ஸல்) அவர்களுக்கும்‌ மத்தியில்‌ எந்த வேறுபாடும்‌ இல்லாமல்‌ ஆக்கிவிட்டார்கள்‌.

அல்லாமா இப்னுல்‌ கய்யிம்‌ (ரஹ்) தனது நூனிய்யா என்ற கவிதை நூலில்‌ கூறுகிறார்கள்‌:

அல்லாஹ்விற்கு பிரத்யேகமாக உரிமை உள்ளது. அது அவனைத்‌ தவிர மற்றவர்களுக்கு இல்லை. அவனது அடியானுக்கு உரிமை உள்ளது. அவை இரண்டும்‌ தனித்தனியான உரிமைகள்‌. இந்த இரண்டு உரிமைகளையும்‌ ஒரே உரிமையாக ஆக்கிவிடாதீர்கள்‌ இவைகளுக்கு மத்தியில்‌ எந்த வேறுபாடும்‌, பிரிவினையும்‌ இல்லாமல்‌.



நபி (ஸல்) அவர்களின்‌ அந்தஸ்து பற்றிய விளக்கம்‌:

அல்லாஹ்‌ நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து கூறியதற்கேற்ப அவர்களை புகழ்ந்தும்‌, அல்லாஹ்‌ அவர்களை சிறப்பித்து கூறியதற்கேற்ப அவர்களை சிறப்பித்தும்‌ அவர்களின்‌ அந்தஸ்தை விவரிப்பதில்‌ எந்தக்‌ குற்றமுமில்லை.

அல்லாஹ்‌ நபி (ஸல்) அவர்களை உயர்வான அந்தஸ்தில்‌ வைத்துள்ளான்‌. நபி (ஸல்) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ அடிமையாகவும்‌, அவனது தூதராகவும்‌, அவனது படைப்புகளில்‌ மேன்மைக்குரியவராகவும்‌ மற்றும்‌ அவனது அனைத்து படைப்புகளிலும்‌ மிகச்‌ சிறந்தவராகவும்‌ இருக்கிறார்கள்‌. மேலும்‌ ஜின்‌ மற்றும்‌ மனித வர்க்கம்‌ முழுவதிற்கும்‌ தூதராகவும்‌, தூதர்களிலேயே மிகவும்‌ சிறப்பிற்குரியவராகவும்‌ இருக்கிறார்கள்‌.

அவர்களுக்குப்‌ பிறகு வேறு நபி வரப்போவது இல்லை. அவர்களே இறுதி நபியாக இருக்கிறார்கள்‌. அல்லாஹ்‌, அவர்களின்‌ இதயத்தை விசாலமாக்கினான்‌. அவர்களின்‌ புகழை அகிலமெங்கும்‌ பரவச்‌ செய்தான்‌. அவர்களின்‌ கட்டளைக்கு மாறுபட்டவர்களுக்கு அல்லாஹ்‌ இழிவான நிலையை ஏற்படுத்தினான்‌. நபி (ஸல்) அவர்களுக்கு மறுமையில்‌ மகாமே மஹ்மூத்‌ என்ற உயர்ந்த அந்தஸ்தையும்‌ வழங்கியிருக்கிறான்‌.

(மகாமே மஹ்மூத்‌ என்னும்‌ மிக்க புகழ்பெற்ற இடத்தில்‌ உம்மை உமதிரட்சகன்‌ (மறுமையில்)‌ எழுப்பப்‌ போதுமானவன்‌. (17:79)

இந்தத்‌ தகுதியில்தான்‌ மறுமையில்‌ நபி (ஸல்) அவர்கள்‌ மனிதர்களுக்காக சிபாரிசு செய்வார்கள்‌. நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்படும்‌ இந்த அந்தஸ்‌தைக்கொண்டு அல்லாஹ்‌ மக்களுக்கு நிம்மதியளிக்கிறான்‌. 

மற்ற எந்த நபிக்கும்‌ வழங்கப்படாத இந்தத்‌ தகுதி பிரத்யேகமாக நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகும்‌. ஏனெனில்‌, நபி (ஸல்) அவர்கள்தான்‌ மனிதர்களிலேயே அதிகமாக அல்லாஹ்வை அஞ்சக்‌ கூடியவர்களாகவும்‌, பயபக்தியுடையவர்களாகவும்‌ இருக்கிறார்கள்‌. 

அல்லாஹ்‌ அந்த நபியின்‌ முன்னிலையில்‌ மக்கள்‌ தங்கள்‌ சப்தத்தை உயர்த்துவதைக்கூட தடை செய்துள்ளான்‌. மேலும்‌ அந்த நபியிடம்‌ தனது சப்தத்தை தாழ்த்திக்‌ கொள்பவர்களை புகழ்ந்து கூறியுள்ளான்‌.

விசுவாசிகளே! நபியின்‌ சப்தத்திற்குமேல்‌ உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள்‌. மேலும்‌ உங்களில்‌ சிலர்‌ மற்ற சிலருடன்‌ உரக்கப்‌ பேசுவதைப்போல்‌, அவரிடம்‌ பேசுவதில்‌ (சப்தத்தை உயர்த்தி நீங்கள்‌ உரக்கப்‌ பேசாதீர்கள்‌. (ஏனெனில்‌ இதை நீங்கள்‌ உணர்ந்துகொள்ள முடியாத நிலையில்‌ உங்களுடைய (நன்மையான!) செயல்கள்‌ அழிந்துவிடும்‌. நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடத்தில்‌ (பேசும்போது) தங்களுடைய சப்தங்களைத்‌ தாழ்த்திக்கொள்கிறார்களே அத்தகையோர்‌ அவர்களுடைய இதயங்களை பயபக்திக்காக அல்லாஹ்‌ பரிசுத்தமாக்கி வைத்தானே அத்தகையோராவர்‌. அவர்களுக்கு மன்னிப்பும்‌, மகத்தான கூலியும்‌ உண்டு. (நபியே!) நிச்சயமாக (உம்முடைய) அறைகளுக்குப்‌ பின்னாலிருந்து சப்தமிட்டு உம்மை அழைக்கின்றார்களே அத்தகையோர்‌ அவர்களில்‌ பெரும்பாலோர்‌ (உம்மை அழைத்துப்‌ பேசும்‌ முறையை) விளங்கமாட்டார்கள்‌. நிச்சயமாக அவர்கள்‌ அவர்களிடம்‌ நீர்‌ வெளியேறி வரும்வரையில்‌ பொறுமையோடு இருந்திருப்பார்களானால்‌, அது அவர்களுக்கு மிகச்‌ சிறந்ததாக இருந்திருக்கும்‌. இன்னும்‌ அல்லாஹ்‌ மிக்க மன்னிப்பவன்‌, மிகக்‌ கிருபையுடையவன்‌. (49:2,5)

இமாம்‌ இப்னு கஸீர்‌ (ரஹ்) அவர்கள்‌ கூறுகிறார்கள்‌: இந்த வசனங்களில்‌ அல்லாஹ்‌ தனது இறை நம்பிக்கைகொண்ட நல்லடியார்களுக்கு நபி (ஸல்) அவர்களோடு மரியாதையுடனும்‌, கண்ணியத்துடனும்‌ மற்றும்‌ பெரும்‌ மதிப்புடனும்‌ நடந்துகொள்ள வேண்டும்‌ என்ற ஒழுக்கத்தை கற்றுக்‌ கொடுத்துள்ளான்‌. நபி (ஸல்) அவர்களின்‌ சப்தத்தைவிட தன்‌ சப்தத்தை உயர்த்தக்‌ கூடாது என்கிறான்‌. மேலும்‌ மற்ற மனிதர்களின்‌ பெயரைச்‌ சொல்லி அழைப்பதுபோல்‌ நபி (ஸல்) அவர்களின்‌ பெயரைச்‌ சொல்லி முஹம்மதே என்று அழைக்காதீர்கள்‌ என்றும்‌ தடை செய்கிறான்‌. அல்லாஹ்வின்‌ தூதரே, அல்லாஹ்வின்‌ நபியே என்று தூதுத்துவம்‌, நபித்துவம்‌ ஆகியவற்றுடன்‌ இணைத்து அழைக்க வேண்டும்‌ என்கிறான்‌.

உங்களுக்கு மத்தியில்‌ சிலர்‌ சிலரை(ப்‌ பெயர்‌ கூறி) அழைப்பது போன்று அல்லாஹ்வின்‌ தூதரின்‌ அழைப்பை (முஹம்மதே) என்று கூறி ஆக்கி கொள்ளாதீர்கள்‌. (24:63)

அல்லாஹ்‌ நபி (ஸல்) அவர்களை அழைப்பது போல நபியே, ரஸுலே என்று அழைக்க வேண்டும்‌ என்று கூறுகிறான்‌.

அல்லாஹ்வும்‌ அவனது மலக்குகளும்‌ நபி (ஸல்) அவர்கள்‌ மீது ஸலவாத்து கூறுகின்றனர்‌. மேலும்‌ அல்லாஹ்‌ தனது அடியார்களுக்கு இந்த நபியின்‌ மீது ஸலவாத்தும்‌, ஸலாமும்‌ கூற கட்டளையிடுகிறான்‌.

நிச்சயமாக அல்லாஹ்வும்‌, அவனுடைய மலக்குகளும்‌ நபியின்‌ மீது ஸலவாத்து(அருள்‌, பிரார்த்தனை)ச்‌ செய்கிறார்கள்‌. (ஆகவே) விசுவாசிகளே! நீங்கள்‌ அவர்‌ மீது ஸலவாத்துச்‌ சொல்லுங்கள்‌, ஸலாமும்‌ கூறுங்கள்‌. (33:56)

நபி (ஸல்) அவர்களை அல்குர்‌ஆன்‌, சுன்னாவின்‌ ஆதாரங்களின்‌ அடிப்படையிலேயே புகழ வேண்டும்‌. அதையும்கூட குறிப்பிட்ட நேரத்திலும்‌, குறிப்பிட்ட முறையிலும்‌ ஏற்படுத்திக்கொள்ளக்‌ கூடாது. உதாரணத்திற்கு, நபி (ஸல்) அவர்கள்‌ பிறந்த நாள்‌ என்று ஒரு நாளை தேர்ந்தெடுத்து மீலாது விழாவை கொண்டாடி புகழ்பவர்களைப்‌ போன்று புகழக்‌ கூடாது. இது தடுக்கப்பட வேண்டிய பித்‌அத்‌ ஆகும்‌.

நபி (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவதென்பது அவர்களின்‌ சுன்னாவைப்‌ பேணுவதும்‌, அதனடிப்படையில்‌ செயல்படுவது அவசியமானது என்று நம்புவதே ஆகும்‌. 

கண்ணியப்படுத்தப்படுவதிலும்‌, பின்பற்றப்படுவதிலும்‌ அல்குர்‌ஆனுக்கு அடுத்ததாக நபி (ஸல்) அவர்களின்‌ சுன்னாவே இருக்கிறது. ஏனெனில்‌ அல்குர்‌ஆனைப்‌ போன்று நபி (ஸல்) அவர்களின்‌ ஹதீஸ்களும்‌ அல்லாஹ்விடம்‌ இருந்து வந்த வஹீயாகும்‌.

அவர்‌ தன்‌ மனஇச்சையின்படி (எதையும்)‌ பேசுவதில்லை. இது அறிவிக்கப்‌ படும்‌ (வஹீயாகிய)! அறிவிப்பே தவிர (வேறு) இல்லை. (53:3,4)

ஆகவே, நபி (ஸல்) அவர்களின்‌ ஹதீஸ்களில்‌ சந்தேகதத்தையோ, அதனுடைய அந்தஸ்தில்‌ குறையையோ ஏற்படுத்தக்‌ கூடாது. மேலும்‌ அந்த ஹதீஸ்‌களின்‌ அறிவிப்பாளர்தொடரை ஸஹீஹானது அல்லது பலவீனமானது என்று கூறுவது அல்லது அந்த ஹதீஸின்‌ விளக்கம்‌ இதுவாகும்‌ என்று எதைப்பற்றியும்‌ கூறுவதாக இருந்தால்‌ ஞானம்‌ மற்றும்‌ நினைவுடன்‌ கூறவேண்டும்‌. ஏனெனில்‌ நாம்‌ வாழும்‌ காலத்திலே சில அறிவிலிகள்‌ குறிப்பாக கல்வி கற்பதில்‌ ஆரம்ப நிலையில்‌ இருக்கும்‌ சில இளைஞர்கள்‌ இந்த ஹதீஸ்‌ ஸஹீஹானது, அந்த ஹதீஸ்‌ பலவீனமானது என்று தீர்ப்பளித்து வருகின்றனர்‌.

மேலும்‌ முழுமையான கல்வி இல்லாமல்‌ மேலோட்டமாக படித்ததை வைத்து அறிவிப்பாளர்களை பற்றிக்‌ குறைகூறியும்‌ வருகின்றனர்‌. இந்த வகையிலான போக்கு மிகக்‌ கடுமையான விபரீதத்தை அவர்களுக்கு ஏற்படுத்துவதோடு சமுதாயத்திற்கும்‌ ஏற்படுகிறது. ஆகவே இந்த மாணவர்கள்‌ அல்லாஹ்விற்கு அஞ்ச வேண்டும்‌. தங்களது எல்லையை விட்டு வரம்பு மீறாமல்‌ தங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்‌.
Previous Post Next Post