ஜகாத் பெறுவது எவர்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளதோ, அவர்களே நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் ஆவார்கள். அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தார்கள், ஜஅஃபர் (ரலி) அவர்களின் குடும்பத்தார்கள், உகைல் (ரலி) குடும்பத்தார்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் குடும்பத்தார்கள். ஹாரிஸ் பின் அப்துல் முத்தலிபின் வாரிசுகள், நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாரிசுகள் ஆகியவர்களே நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஆவார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
(நபியுடைய!) வீட்டினரே அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் (சகல) அசுத்தத்தைப் போக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதையும் தான். (33:33)
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் (33:33) வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களில் அடங்குவார்கள் என்பதில் அல்குர்ஆனை ஆழ்ந்து படிப்பவர்களில் யாருமே சந்தேகம் கொள்ளமாட்டார்கள் என்கிறார்கள்.
ஏனெனில், இந்த வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களைப் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தான் அல்லாஹ் இந்த வசனங்களுக்குப் பிறகு கூறுகிறான்:
மேலும் உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும் ஹிக்மத் (எனும் சுன்னத்)தையும் நினைவு கூறுங்கள். (33:34)
நபியவர்களின் மனைவிமார்களே! நபி (ஸல்) அவர்கள் உங்கள் வீடுகளில் இருக்கும்போது அல்லாஹ் அவர்கள் மீது இறக்கிய அல்குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் செயல்படுங்கள். கதாதா மற்றும் சில அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் இந்த கருத்தையே குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களே! மற்ற மனிதர்களுக்கு மத்தியில் அல்லாஹ் உங்கள் மீது பிரத்யேகமாக செய்துள்ள அருளை நினைத்துப் பாருங்கள். மற்றவர்களை எல்லாம் தவிர்த்து நபி (ஸல்) அவர்கள் உங்கள் வீடுகளில் இருக்கும்போதுதான் அவர்கள் மீது வஹீ இறங்கியிருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் மீது பொதுவாக அல்லாஹ்வின் இந்த அருட்கொடை இருந்தாலும், ஆயிஷா (ரலி) அவர்களே பிரத்யேகமான முறையில் இந்த அருளுக்கு முதல் சொந்தக்காரர்.
ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர்த்து வேறு எந்த மனைவியிடத்திலும் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது அவர்களின் படுக்கை விரிப்பில் வஹீ வந்ததில்லை. இதனை நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்திக் கூறியுள்ளார்கள்.
ஆக, நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் அனைவருமே இந்த உயர்வான, சிறப்பான அந்தஸ்தைப் பெறுவதற்கு அதிக தகுதி வாய்ந்தவர்கள் ஆவார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியரே நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களில் வருவார்கள் என்றால் நபி (ஸல்) அவர்களின் உறவினர்கள் அவர்களைவிட அதிக தகுதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)
நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களை அஹ்லுஸ்சுன்னாக்கள் நேசிக்கின்றனர், கதீர் கம் என்ற இடத்தில் நபி (ஸல்) அவர்கள் உபதேசித்ததைப் பாதுகாத்து வருகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது குடும்பத்தார்கள் விஷயத்தில் அல்லாஹ்வை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன். (முஸ்லிம்)
அஹ்லுஸ்சுன்னாக்கள் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களை நேசிப்பார்கள், அவர்களைக் கண்ணியப்படுத்துவார்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களை நேசிப்பதும், அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் நபி (ஸல்) அவர்களை நேசிப்பதற்கும் கண்ணியப்படுத்துவதற்கும் அடையாளமாகும். நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் உள்ளவரை நேசிப்பதற்கும், அவரை கண்ணியப்படுத்துவதற்குமான நிபந்தனை அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளவராகவும், நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை பின்பற்றக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, அப்பாஸ் (ரலி) அவர்கள், அவர்களின் வாரிசுகள் அலீ (ரலி) அவர்களும் அவர்களின் வாரிசுகள் போன்று. எவர் சுன்னாவிற்கு மாற்றமாக, இஸ்லாமிய மார்க்கத்தில் நிலைத்திருக்காமல் இருக்கிறாரோ அவரை நேசிக்கக் கூடாது. அவர் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் உள்ளவராக இருந்தாலும் சரியே!
அஹ்லுஸ்சுன்னாக்கள் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் விஷயத்தில் நடுநிலையில் உள்ளனர். அவர்களில் மார்க்கத்தில் நிலைத்திருப்பவரை நேசிப்பார்கள், நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமாக நடப்பவர்களை மற்றும் மார்க்கத்தில் இல்லாதவரை விட்டும் தங்களை விலக்கிக் கொள்வார்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாராகவும், உறவினராகவும் இருப்பதால் மட்டுமே ஒருவருக்கு பலன் ஏற்பட்டு விடாது. அவர் இஸ்லாமிய மார்க்கத்தில் நிலைத்திருப்பதின் மூலமாக மட்டுமே பலன் ஏற்படும்.
உங்களின் நெருங்கிய உறவினர்களை எச்சரியுங்கள் என்ற வசனம் இறங்கிய போது நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளே! உங்களை நீங்களே (அல்லாஹ்வின் வேதனையை விட்டு) காத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்விடமிருந்து நேரும் எந்த ஒன்றையும் விட்டு உங்களை நான் காக்க முடியாது. அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபே! அல்லாஹ்விடமிருந்து நேரும் எந்த ஒன்றையும் விட்டு உங்களை நான் காக்க முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மாமியே அல்லாஹ்விடமிருந்து நேரும் எந்த ஒன்றையும் விட்டு உங்களை நான் காக்க முடியாது. முஹம்மதின் மகளாகிய பாத்திமாவே இவ்வுலகில் எனது பொருட்களில் இருந்து எதை விரும்புகிறாயோ அதனைக் கேள். ஆனால் மறுமையில் அல்லாஹ்விடமிருந்து நேரும் எந்த ஒன்றையும் விட்டு உன்னை நான் காக்க முடியாது என்றார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி - 2753)
நற்செயல்களில் பின்தங்கியவரை குலப்பெருமை முன்னுக்கு கொண்டு வருவதில்லை (முஸ்லிம்)
நபி (ஸல்) வர்களின் குடும்பத்தார்களில் சிலர் விஷயத்தில் வரம்பு மீறி அவர்களை பாவங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக சித்தரிக்கும் ராஃபிழாக்களின் வழியை விட்டும், நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களில் மார்க்கத்தில் நிலைத்திருப்பவர்களோடு விரோதம்கொண்டு அவர்களை இழிவுபடுத்தும் நவாஸிபுகளின் வழியை விட்டும், நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களைக்கொண்டு வஸீலா தேடும், அல்லாஹ்வை தவிர்த்து அவர்களை பாதுகாவலர்களாக ஆக்கிக்கொண்டு இருக்கும் குராபிகளை விட்டும் அஹ்லுஸ் ஸுன்னா தங்களை விலக்கியும், பரிசுத்தப்படுத்தியும் கொள்கின்றனர்.
அஹ்லுஸ் ஸுன்னாக்கள் இந்த விஷயத்திலும், மார்க்கத்தின் மற்ற விஷயங்களிலும் வரம்பு மீறுதல் மற்றும் குறைவோ இல்லாத நேரான பாதையிலும் நடுநிலையான பாதையிலும் உள்ளனர். நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களுக்குத் தரவேண்டிய உரிமையிலும்கூட கூடுதலோ, குறைவோ ஏற்படுத்தாமல் நடுநிலையான பாதையிலேயே இருக்கின்றனர்.
நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களில் மார்க்கத்தில் நிலைத்திருந்தவர்கள் கூட தங்களின் விஷயத்தில் வரம்பு மீறுதலை தடுத்திருக்கிறார்கள். அவ்வாறு வரம்பு மீறுபவர்களை விட்டு தங்களை விலக்கி கொண்டிருக்கிறார்கள்.
அமீருல் முஃமீனின் அலீ (ரலி) அவர்கள் தன் விஷயத்தில் வரம்பு மீறியவர்களை நெருப்பிலே எரித்துள்ளார்கள். அதை நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையின் மகனான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆதரித்தார்கள். ஆனால் வரம்பு மீறியவர்களை நெருப்பிலே எரித்து இருக்காமல் வாளைக்கொண்டு கொன்றிருக்கலாம் என்றார்கள். வரம்பு மீறுபவர்களின் தலைவனான அப்துல்லாஹ் பின் சபாவை, அலீ (ரலி) அவர்கள் கொன்றுவிட நாடினார்கள், ஆனால் அவன் ஓடி ஒழிந்துகொண்டான்.