பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்,
இயற்கையைப் படைத்தவனான, அல்லாஹ்வால் வகுக்கப்பட்ட வாழ்க்கை முறை இஸ்லாம். அதனால், இஸ்லாம் தான் மிகவும் சுற்றுச்சூழலுடன் நட்புடன் இருக்கும் வாழ்க்கை முறை என்ற வாதம் பொருத்தமாக இருக்கும். இந்த எண்ணத்தின் அடிப்படையில் நாம் சில அம்சங்களைப் பார்க்கலாம்.
1. இயற்கையைப் பாதுகாத்தல்
அல்லாஹ் அஸ்ஸவஜல் இந்த பிரபஞ்சத்தை மிகவும் சரியான, குறைகளற்ற விதத்தில் படைத்திருக்கிறான். எல்லாம் சம விகிதத்தில் படைக்கப்பட்டுள்ளதுடன், இப்பிரபஞ்சம் இயங்குவதற்கு படைப்புகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. மிகச் சிறிய எறும்புக்கூட அதற்கென்று ஒரு இடம் இருக்கிறது. அல்லாஹ் (சுபஹ்) குர்’ஆனில் கூறுகிறான்:
பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம். [15:19]
(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் – (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. [55:5-8]
மேலும்,
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. [36:38-40]
அல்லாஹ் (சுபஹ்) சூரியனும், சந்திரனும், மற்ற எல்லா படைப்புகளும் அல்லாஹ்வுக்கு ஸுஜுது செய்கின்றன என கூறியுள்ளதற்கு அறிஞர்கள் கூறும் விளக்கங்களில் ஒன்று, இந்த படைப்புகள் பிரபஞ்சத்தில் தங்களுடைய இடத்தை அறிந்திருப்பதோடு, அவை தாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் தான் செய்கின்றன. கற்பனை செய்து பாருங்கள், ஒரு நாள் காலை சூரியன் கண் விழித்து, சோம்பேறித்தனமாக உணர்கிறது. அதனால், அது இன்னும் ஒரு மணி நேரம் உறங்க முடிவு செய்து, தன் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் கூடுதலாக உறங்குகிறது என்றால், உலகத்திற்கு என்ன ஆகும்? எல்லாமே குழப்பமாக இருக்கும். உலகம் முழுதின் சமநிலை தடுமாறி பாதித்து விடும்.
வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? … [22:18]
இந்த இயற்கையின் சமநிலையில் மனிதன் என்ன வேலை செய்ய வேண்டும்? அவன் இவ்வுலகிற்கு ‘கலீஃபா’வாக நியமிக்கப் பட்டிருக்கிறான். அல்லாஹ்வால் அருளப்பட்டுள்ள பல்வகையான வளங்களையும் அவன் அனுபவிக்கலாம். ஆனால், அவனுக்கும் இயற்கையின் சமன் நிலையை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது. அவன் வரம்பு மீறும்போது, ஒரு கலீஃபா என்ற பொறுப்பை அலட்சியமாக கையாள்வதற்கு சமம். மேலும், அவன் அந்த சமன் நிலையை சிதைக்கிறன். மனிதனையும், ஜின்களையும் தவிர, வானிலும், பூமியிலும் உள்ள அனைத்தும், அல்லாஹ்வுக்கு அடிபணிகின்றன. அதனால், நம்முடைய தவறான காரியங்கள் தவிர வேறெதனாலும் இயற்கை சிதைக்கப்படுவதில்லை.. அல்லாஹ் (சுபஹ்) கூறுகின்றான்:
அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான். [42:30]
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-. [99:2] மறுமை நாளன்று, பூமி, தன் மீது மனிதன் செய்த அநியாயத்திற்கெல்லாம் சாட்சி கூறும்.
பூமியில் உள்ள சமன்பாட்டை பராமரிப்பது நம்முடைய பொறுப்பு, ஏனென்றால், அல்லாஹ் (சுபஹ்) மற்ற எல்லா படைப்புகளுக்கும் மேலான அந்தஸ்த்தை நமக்கு அளித்துள்ளான். மேலும், பெரும் அதிகாரத்துடன் பெரும் பொறுப்பும் வருகிறது.
2. விலங்குகளைப் பராமரித்தல்
உணவுக்காக அல்லது, ஒரு விலங்கினால் தாக்கப்பட்டால் தவிர, தேவையில்லாமல் விலங்குகளைக் கொல்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. ‘ஒரு உயிரை தன்னுடைய (அம்பெரியும்) இலக்காக வைத்துக் கொள்பவர் சபிக்கப்பட்டவர்.’ [திர்மிதி] உணவுக்காக ஒரு விலங்கைக் அறுக்கும்போது கூட, அதை ‘இஹ்சான்’ (மிக அழகிய முறையில்) செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதன் முன்னால் கத்தியைக் கூர்மையாக்குவதோ, முனை மழுங்கிய கத்தியுடன் அதை அறுப்பதோ வெறுக்கத்தக்கது. அதை நாம் கருணையுடன் செய்ய வேண்டும். ஒரு மனிதன், தான் ஒரு ஆட்டை அறுக்கும்போது, அதனிடம் கருணையுடன் நடந்து கொள்வதாக, நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘ஒரு ஆட்டின் மீது கூட நீர் கருணை காட்டினால், அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டுவான்.’ என கூறினார்கள். [புகாரி]
உணவில் கூட நாம் ஊதாரித்தனமாக இருக்கக்கூடாது என கட்டளையிடப் பட்டுள்ளோம். ஒரு முஸ்லிம் தான் உயிர் வாழ தேவையானதைத் தான் உண்ணுவான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘ஒரு நம்பிக்கையாளர் ஒரு குடலோடு உண்ணுகிறார், ஒரு நிராகரிப்பாளர், ஏழு குடல்களுடன் உண்ணுகிறார்.’ [இப்னு மாஜா]
விலங்குகளுக்கு கருணை காட்டுவதைப் பற்றி வேறு சில ஹதீஸ்கள்:
‘ஒரு குருவியை அறுக்கும்போது கூட கருணை காட்டும் ஒருவர் மீது அல்லாஹ் (சுபஹ்) மறுமை நாளன்று கருணை காட்டுவான்.’ [புகாரி]
‘ஈரமான ஈரலை உடைய [எல்லா உயிரினங்களும்] அனைத்திற்கும் (சேவை செய்வது) நற்கூலி உண்டு.’
தேவையான நேரத்திற்கு மேலாக குதிரை அல்லது ஒட்டகத்தின் மீது அமர்ந்திருப்பதை அவர்கள் தடை செய்திருந்தார்கள்.
இவ்விஷயத்தில் நபி (ஸல்) அவர்களுடைய போதனைகள் இப்படித்தான் இருந்தன. சத்திய ஸஹாபாக்கள் இந்த கருணையான போக்கைத் தங்கள் வாழ்வில் கடைபிடித்தார்கள். ஒரு ஒட்டகத்தின் மீது அதன் சக்திக்கு மேல் சுமையை ஏற்றிச் சென்ற ஒருவரை உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அடித்தார்கள்.
3. தாவரங்களைப் பேணுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான மனிதர் ஒரு மரத்தை நட்டுவைத்து, அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு வனவிலங்கோ அல்லது ஒரு பறவையோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ உண்டால், அதனால் அவருக்கு ஒரு (தர்மம் செய்ததற்கான) நன்மை கிடைக்காமல் இருப்பதில்லை. இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [புகாரி]
அபு பக்கர் ஸித்திக் (ரலி) அவர்கள், ஒரு படையை போருக்காக அனுப்பும்போது, அதன் தளபதிகளிடம், மற்ற அறிவுரைகளுடன், பின்வருபவற்றையும் உபதேசித்தார்கள்:
‘காய்க்கும் மரங்களை வெட்டாதீர்கள். மக்கள் வாழும் பகுதிகளை தாக்காதீர்கள். ஆடுகளையும், ஒட்டகங்களையும், உணவிற்காகத் தவிர வெட்டாதீர்கள். தேனீக்களுக்கு நெருப்பிட்டு அவற்றைச் சிதற வைக்காதீர்கள்.’ [முவத்தா]
4. இயற்கை வளங்களைக் கவனமாக பயன்படுத்துவது
அல்லாஹ் கூறுகிறான்:
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. [7:31]
நீர் ஒரு மிக முக்கியமான இயற்கை வளம். ஒருபுறம் தேவைக்கதிகமாக நீரை வீணாக்குகிறோம். மறுபுறம், தாகத்திற்கு கூட நீர் கிடைக்காமல் மக்கள் உயிரை விடுகிறார்கள்!
நபி (ஸல்) அவர்கள் இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார்கள். அவர் மிகக் குறைந்த அளவு நீரைக் கொண்டே உது செய்தார்கள்.
நபி (ﷺ) அவர்கள் ஒரு ஸா’(3 லிட்டர் நீர்)வைக் கொண்டே குளித்தார்கள், ஒரு ‘முத்’ (சுமார் 750 மில்லி லிட்டர்) நீருடன் உது செய்தார்கள். [அபு தாவூது]
-தபஸ்ஸும் முஸ்லெஹ்