மனித இனத்தில் "இடைப்பாலினம்" என்ற ஒரு இனம் காணப்படுவதாக பெரும்பாலானவர்களால் நோக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.
அதாவது ஆண் மற்றும் பெண் இனங்களைத் தாண்டி இரண்டுக்கும் இடைப்பட்ட மனித படைப்பு எனலாம். விஞ்ஞானத்தில் intersex (hermophrodite) என்று கூறுகின்றனர். இது முழுக்க முழுக்க உடலியல் ரீதியான இயற்கை மாற்றமாகும் உளரீதியான (உணர்வு) மாற்றம் கிடையாது.
இஸ்லாமிய அறிஞர்களைப் பொருத்தவரை
அன்றும், இன்றும் இந்த இடைப்பாலினத்தை மூன்றாவது பாலினமாகக் கருதாமல் ஆய்வின் பின்னர் ஆண் அல்லது பெண் என்ற இனத்துடன் சேர்க்கின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குர்ஆனிய வசனத்தைக் குறிப்பிடலாம்.
(ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.)
(அல்குர்ஆன் : 42:49)
முந்தைய பிக்ஹுதுறை அறிஞர்களின் பார்வையில் அக்கால மருத்துவ மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இருவகைகளாக நோக்குகின்றனர். (அரபியில் ஹுன்ஸா الخنثى என்று அழைக்கப்படும்)
1- குழப்ப நிலையற்ற இடைப்பாலினம் (ُالخنثى غير المشكل)
2- குழப்ப நிலை இடைப்பாலினம் (الخنثى المشكل)
பொதுவாக மேற்குறிப்பிடப்பட்ட இருவகை இடைப்பாலினம் பற்றிய வரைவிலக்கணங்கள் அக்காலத்து அறிஞர்களிடம் பெரும்பாலும் ஒன்றாகவே காணப்பட்டன. ஒரு சில கருத்து வேற்றுமைகளே இருந்துள்ளன. அதுவும் அவர்களது அனுபவம் மற்றும் மருத்துவ முறைமைகளில் காணப்பட்ட வித்தியாசங்களால் ஏற்பட்டவை எனலாம். அந்தவகையில் அவர்கள் வழங்கிய வரைவிலக்கணங்களை பொதுவாகப் பார்ப்போம்.
1- குழப்ப நிலையற்ற இடைப்பாலினம்.
"ஆண் மற்றும் பெண்ணுடைய இனப்பெருக்க உறுப்புக்களைக் கொண்டிருக்கும் நபர்," ஆனாலும் காலப்போக்கில் வயதுக்கு வரும் போது ஏற்படும் வெளிப்படையான மாற்றங்களை வைத்து அம்மாற்றங்கள் ஆணுக்குரியதாக இருப்பின் (தாடி முளைத்தல், இந்திரியம் வெளியாகுதல் போன்றன) ஆணாகவே கருதப்படுவார்.
பெண்ணுக்குரிய மார்பகங்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்பு இருந்தாலும் அவை மேலதிகமானவை.
அவ்வாறே ஏற்படும் மாற்றங்கள் பெண்ணுக்குரியதாக இருப்பின் (மாதவிடாய் ஏற்படுதல், மார்பகங்கள் பெரிதாகுதல் போன்றன) பெண்ணாகவே கருதப்படுவார். ஆணுக்குரிய இனப்பெருக்க உறுப்பு மற்றும் ஏனைய சில வெளித்தோற்றங்கள் இருப்பினும் அவை மேலதிகமானவை.
[அல்ஹிதாயா பீ ஷர்ஹி பிதாயதில் முப்ததி (4/546), நிஹாயதுல் மத்லப் பீ திராயதில் மத்ஹப் (9/304),
அல்ஹாவி அல்கபீர் (8/168) (போன்ற நூல்களிலிருந்து சுருக்கமாக)
இமாம் இப்னு குதாமா (ரஹ்) இது தொடர்பாகக் கூறுகையில் "ஆணின் அல்லது பெண்ணின் அடையாளங்கள் வெளிப்படும் போது ஆண் அல்லது பெண் என அறிந்து கொள்ள முடிகிறது, அத்துடன் குழப்ப நிலை நீங்கிவிடும், அந்த வகையில் (பெண்ணின்) மேலதிக உறுப்புகளை கொண்டிருக்கும் ஆணாக அல்லது (ஆணின்) மேலதிக உறுப்புகளை கொண்டிருக்கும் பெண்ணாக அடையாளம் கொள்ளலாம்.
அல் முஃனி (6/336)
2- குழப்ப நிலை இடைப்பாலினம்.
"ஆண் மற்றும் பெண்ணுடைய இனப்பெருக்க உறுப்புகள் வெளிப்படாமல் இருக்கும் நபர்" (ஒரேயொரு துவாரம் மாத்திரம் இருக்கும் அதன் மூலம் மலசலம் வெளியாகும்), அல்லது "இருபாலினங்களின் உறுப்புகள் மற்றும் வெளிப்படையான தோற்றங்களை சரிசமமாக கொண்டுள்ளவர்." (உறுப்புக்களின் தொழிற்பாடுகள் கூட சமமாக இருக்கலாம்)
ரவ்ழதுத் தாலிபீன் வ உம்ததுல் முப்திய்யீன் (1/78)
முஃனில் முஹ்தாஜ் இலா மஃரிபதி மஆனி
அழ்பாலில் மின்ஹாஜ் (4/51)
அந்தவகையில் இவ்வகை இடைப்பாலினத்தை எவ்வகை பாலினத்தோடு சேர்ப்பது என்பதில் குழப்ப நிலை காரணமாக அக்கால அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகளும் நிலவின. இங்கே அதை விரிவாகக் கூற அவசியம் இருக்காது என்றாலும் சில வழிமுறைகளைக் கூறுகிறேன். (இவ்வழிமுறைகள் அனைத்தும் அக்கால சூழலுக்கேற்ப கையாளப் பட்டவை என்பதை மனதிற் கொள்ள வேண்டும்)
பாலின தீர்மானம் (குழப்ப நிலை இடைப்பாலினம்)
1- இருபாலினங்களின் அடையாளங்கள் மற்றும் உறுப்புகள் ஒரே நபரில் இருக்கும் போது அவர் சிறுநீர் கழிக்கும் உறுப்பைக் கருத்திற் கொள்ளப்படும். ஆணுறுப்பாக இருப்பின் ஆணாகவும் பெண்ணுறுப்பாக இருப்பின் பெண்ணாகவும் கருதப்படுவர். இதற்கு பின்வரும் அலி (ரழி) அவர்களது கூற்றை ஆதாரமாகக் கொள்கின்றனர்.
இது தொடர்பாக அவர்களிடம் கேட்கப்பட்ட போது (ஆணுறுப்பு மூலம் சிறுநீர் கழித்தால் ஆண், பெண்ணுறுப்பால் சிறுநீர் கழித்தால் பெண்" என தீர்ப்பு வழங்கினார்கள்.
அஸ்ஸுனனுல் குப்றா (12515), ஸுனனுத் தாரமி (3013), ஷெய்க் அல்பானி ஆகியோர் இது ஸஹீஹான செய்தி என கூறியுள்ளனர் (6/152)
இந்த வழிமுறை தொடர்பாக விரிவான விளக்கங்கள் காணப்படுகின்றன.
2- பருவ வயதை அடையும் போது ஏற்படும் மாற்றங்களை ஆழமாக ஆராய்ந்து மேலோங்கிக் காணப்படும் அடையாளங்களை வைத்து தீர்ப்பு வழங்கப்படும்.
3- (அடையாளங்கள் சமமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு அடையாளமும் இல்லாத நிலையில்) விலா எலும்புகளின் எண்ணிக்கையை வைத்து தீர்ப்பு வழங்கப்படும்.
மேற்கூறப்பட்ட வழிமுறைகளை விட இன்னும் பல பாலின தீர்மான வழிமுறைகள், முற்கால அறிஞர்களினால் பிக்ஹு நூல்களில் எழுதப்பட்டுள்ளன.
நவீன மருத்துவம் இது தொடர்பாக என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
வரைவிலக்கணம் :
"இடைப்பாலினம் என்பது இனப்பெருக்க உறுப்புகள் ஒருவருக்கு மூடலாக தெளிவற்ற நிலையில் காணப்படுவது எனலாம்"
அதாவது இனப்பெருக்க உறுப்புகள் என்பதன் அர்த்தம் வெளிப்புறமாக இருக்கும் உறுப்புகள் மாத்திரமல்ல உடலின் உட்புறமாக இருக்கும் சூலகம் மற்றும் விதை (Gonads) என்பனவும் உள்ளடங்கும்.
பாலின தீர்மானம் :
தற்கால நவீன மருத்துவ முறையில் வைத்தியர்கள் பாலினத்தை வரையறை செய்யும் போது இழையவியல் பரிசோதனைகள் (histological tests) மூலம் இனப்பெருக்க கலங்களை (cells) பரிசோதனை செய்து, சூலகமாக இருப்பின் (வெளிப்புற தோற்றங்கள் ஆணாகவே இருந்தாலும்) பெண் போலி-இருபாலியாகவும் (female pseudo hermophrodite), விதையாக இருப்பின் (வெளிப்புற தோற்றங்கள் பெண்ணாகவே இருந்தாலும்) ஆண் போலி-இருபாலியாகவும் (male pseudo hermophrodite) முடிவுக்கு வருவர்.
அவ்வாறே ஒரே நபருக்கு கருமுட்டை மற்றும் விதை காணப்பட்டால் அல்லது இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்து காணப்பட்டால் அவரே நிஜ இருபாலி (True hermophrodite) என்று கருதப்படுவார். இந்நிலையில் வெளிப்படையான உறுப்புகளை மாத்திரம் வைத்து ஆண் அல்லது பெண் என்று வரையறுக்க முடியாது. மாறாக அவரது உட்புற உறுப்புக்கள் பரிசோதனை மற்றும் உணர்வு ரீதியான பாலினத விருப்பு போன்றவற்றை வைத்து பாலின தீர்மானத்தை மேற்கொள்வர்.
இந்நிலைக்குக் காரணம்(நிஜ இடைப்பாலினம்), ஆணின்(தந்தை) விந்தில் காணப்படும் X அல்லது Y மற்றும் பெண்ணின்(தாய்) கருமுட்டையில் காணப்படும் X நிறமூர்த்தங்கள் (chromosomes) சீரற்ற நிலையில் இணைவதேயாகும்.
விந்து மற்றும் கருமுட்டை இணையும் சீரான நிலை
ஆரோக்கியமான ஆணின் விந்தில் 23 chromosome கள் காணப்படும் . அதில் ஒன்று Y அல்லது X ஆக இருக்கும், இதுவே புதிதாக உருவாகும் குழந்தையின் பாலினத்தை (sex) தீர்மானிக்கும். ஆனால்,
பெண்ணின் கருமுட்டையில் பாலினத்தை தீர்மானிக்கும் ஒரேயொரு X chromosome காணப்படும்.
ஆகவே, ஆணின் Y chromosome உம் பெண்ணின் X chromosome உம் இணையும் போது ஆண் சிசு (XY) உருவாகும். அதே போன்று ஆணின் X chromosome உம் பெண்ணின் X chromosome உம் இணையும் பெண் சிசு (XX) உருவாகும்.
இதே sex chromosomeகள் இதுவல்லாத வேறு முறைகளில் இணையுமாயின், அல்லது இணையும் போது ஏதும் குளறுபாடுகள் ஏற்படுமாயின் அதுவே உண்மையான இருபாலின சிசு (true hermophrodite) உருவாகக் காரணமாக அமைந்துவிடும்.
நவீன மருத்துவ முறையில் இடைப்பாலின வகைகள் மூன்று
1- ஆண் போலி-இருபாலி (male pseudo hermophrodite)
ஒரு குழந்தைக்கு வெளிப்புற உறுப்புகள் பெண்களின் உறுப்புகளைப் போன்று இருந்தாலும் உட்புறமாக இருக்கும் உறுப்புகள் ஆணுக்குரியதாக இருக்கும். இரு விதைகள் உடையதாக இருக்கும், மற்றும் XY chromosome களால் உருவானதாக இருக்கும். அக்குழந்தை, வெளிப்புற உறுப்புக்கள் ஆணைப்போல மாற்றப்பட்டு ஆணாகவே வளரும்.
2- பெண் போலி-இருபாலி (female pseudo hermophrodite)
ஒரு குழந்தைக்கு வெளிப்புற உறுப்புகள் ஆணின் உறுப்புக்களைப் போன்று இருந்தாலும் உள்புறமாக இருக்கும் உறுப்புகள் பெண்ணுக்குரியதாக இருக்கும். கருமுட்டை மற்றும் சூலகம் இருக்கும். அக்குழந்தை, வெளிப்புற உறுப்புகள் பெண்ணைப் போல மாற்றப்பட்டு முழுப் பெண்ணாகவே வளரும்.
3- நிஜ இருபாலி (true hermophrodite)
ஒருவர், பெண்ணின் முழுமையான இனப்பெருக்க உறுப்புகளை( சூலகம், பெண்குறி) கொண்டிருக்கும் அதே சமயம் ஆணின் முழுமையான இனப்பெருக்க உறுப்புகளையும்(விதை, ஆண்குறி) கொண்டிருப்பார்.
முன்னைய காலத்து அறிஞர்களின் நிலைபாடு மற்றும் நவீன மருத்துவ முறைமை ஒப்பீடு.
வரைவிலக்கணத்தைப் பொருத்தவரை நவீன மருத்துவ முறையோடு சில இடங்களில் இணைந்து போவதை அவதானிக்க முடிகின்றது. (வெளிப்புற அடையாளங்கள் தொடர்பானவை) இருந்தாலும் நவீன மருத்துவ வரைவிலக்கணம் மிகத் துல்லியமாக இருப்பதாக தற்கால நவீன இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகின்றனர்.
நவீன மருத்துவ பரிசோதனை முறைமைகள் அக்காலத்தில் காணப்படாததால் முழுக்க முழுக்க அனுபவம் மற்றும் சூழலுக்கு ஏதுவான மருத்துவ முறைகளைக் கையாண்டமை.
பாலினத்தை தீர்மானிப்பதில் அவர்கள் பெரும்பாலும் வெளிப்புற மாற்றங்களை மாத்திரம் கவனித்தனர்.
அதன் பொருட்டு அதிக தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருந்திருக்கும். தற்காலத்தில் பல வகையான வசதிகள் மற்றும் மருத்துவ வளர்ச்சி காரணமாக தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு.
இடைப்பாலின பிரச்சினையை அக்காலத்து அறிஞர்கள் நோயாகக் கருத்திற் கொள்ளாமல் மாற்றத்தை நோக்கி வரும் என்ற எதிர்பார்ப்பில் தனது தீர்வுகளை வழங்கியமை. நவீன மருத்துவத்தைப் பொருத்தவரை அதை ஒருவகை பாலின அடையாளக் கோளாறாக (நோயாக)க் கருதியமை.(Gender identity disorder)
அந்தவகையில் இடைப்பாலினம் என்பது தற்காலிகமானது என்பதுடன் அது ஆண் அல்லது பெண் இனத்துடன் சேர்க்கப்படல் வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கின்றது.
தீர்வு....! (இஸ்லாம்)
சமூகத்தில் இவ்வாறான சவால்களை எதிர்நோக்கும் நபர்களைக் கண்டறிந்தால் பொறுமையாக இருங்கள் இறைவன் உங்களுக்கு நற்கூலி வழங்குவான் என்று கூறிவிட்டு தப்பித்து விடாமல் அவர்களுக்கான உதவிகளை வழங்க வேண்டும். அது சமூகப் பொறுப்பும் கூட.
இஸ்லாமிய நாடுகளாக இருப்பின் அங்குள்ள நீதிமன்றங்களில் அதற்கான வழிமுறைகள் காணப்படும். அதாவது பாலின தீர்மானம் மற்றும் சிகிச்சை தொடர்பான முன்னெடுப்புகள் போன்றன.
அதுவே இலங்கை போன்ற நாடுகளாக இருப்பின் அதற்கான வாய்ப்புகளும் வழிகாட்டல்களும் மிகக்குறைவாக காணப்படும். எனவே அவர்களுக்கான வசதிகளை வழங்கி தேவைகளை நிறைவு செய்து வைக்க வேண்டியது சமூகப் பொறுப்பாகும்.
வைத்திய ஆலோசனைகளின் படி அறுவை சிகிச்சை இன்றி ஏனைய சிகிச்சைகள் (குறித்த பாலின ஹோமோன்களை அதிகரிக்கச் செய்யும் வழிமுறைகள் மூலம்) நிவர்த்தி செய்ய முடியுமானால் அவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அறுவைச்சிகிச்சையை தவிர வேறு வழிமுறை இல்லாதபோது இவ்வாறான ஒருவர் ஆணாகக் கருதப்படின் அவரிடம் காணப்படும் (பெண்ணுக்குறிய) மேலதிக உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி சீர்படுத்த, தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதே போன்றுதான் பெண்ணிற்கும் பொருந்தும். இது இறைவன் படைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற அமைப்பில் உள்ளடங்காது. மாறாக அது நோய்க்கான சிகிச்சையாகக் கருதப்படும். இது தொடர்பாக பல மாநாடுகளில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பல இஸ்லாமிய தீர்ப்பு வழங்கும் அமைப்புக்கள் இதனையே வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.
அத்துடன் இஸ்லாம் வரையறுத்த உரிமைகள், (உதாரணமாக சொத்துரிமை) மற்றும் சமூக உரிமைகள் கடமைகள் அனைத்தும் அவர்கள் எந்த பாலினமாக கருத்தில் கொள்ளப் படுகின்றனரோ அந்த வகையில் நோக்கப்படல் வேண்டும்.
சுருங்கக் கூறினால் (தற்காலிக) இடைப்பாலினத்தில் மனிதர்களை ஆண் அல்லது பெண் என்ற இனத்தில், மருத்துவ மற்றும் மார்க்க வழிகாட்டலின் அடிப்படையில் சேர்க்க முடியும்.
அவர்களுக்கான சமூக அங்கீகாரம் அவர்களது பாலினத்திற்கேற்ப வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அவர்களது சுயமரியாதை பேணப்பட வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
மேல் குறிப்பிட்ட இடைப்பாலினம் ஆரம்பத்தில் கூறியவாறு முழுக்க முழுக்க உடலியல் ரீதியான இயற்கை மாற்றமாகும். இது குறித்த நபரின் கட்டுப்பாட்டை மீறியது. ஆகவேதான் இஸ்லாமும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அறுவைசிகிச்சை வரை அனுமதி வழங்கியுள்ளது, மேலும் அது பாலின மாற்றமாக கருதப்படுவதில்லை, மாறாக மேலதிக உறுப்புகளை நீக்குதல், அடிப்படை பாலினத்தின் பால் திரும்புதல் என்று கூறலாம்.
எதிர் பாலின (transsexuel) சுபாவம் கொண்டவர்கள். (ஆண்/பெண்)
மற்றுமொரு சாரார் (biologically) உடலமைப்பில் முழுமையான ஆணாக அல்லது பெண்ணாக இருப்பர். ஆனால் உள ரீதியாக (உணர்வு) தன் பாலினத்திற்கு எதிர் நிலையை கொண்டிருப்பர் (Transsexual)
தான் விரும்பும் பாலினத்தின் பால் தன்னை வேண்டுமென்றே மாற்றிக் கொள்ளவும் முயல்வர்.
Biologically ஆணாக பிறந்த நபர் தன்னை ஓர் பெண்ணாக உணர்ந்து அல்லது biologically பெண்ணாக பிறந்து பின்னர் தன்னை ஆணாக உணர்ந்து உடலியல் ரீதியான மாற்றத்தையும் செயற்கையாக அறுவை சிகிச்சை மூலம் அமைத்துக்கொள்ள முயல்வர். தன்னை ஒரு transgender ராக காட்ட முனைவர். இதுவே இறைவனின் படைப்பை மாற்றுதல் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.
அதாவது பாலின மாற்றம்.
மேற்கத்தேய சிந்தனையைப் பொருத்தவரை சுதந்திரம் உரிமை என்ற வகையில் விரும்பியவர் செய்து கொள்ளலாம், அது அவரவரது உரிமை, அதில் யாரும் தலையீடு செய்ய முடியாது என்று கருதுவர். இதன் மூலமாக சமூகத்தில் ஏற்படும் விளைவுகள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதுமில்லை. (மதங்கள் மற்றும் சமூக கட்டுப்பாடுகள் கலாசாரங்களைப் பொருத்தவரை மேற்கத்தேயவாதிகள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை)
இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறான உணர்வு ரீதியான பாலின மாற்றத்தை வெளிக் காட்டுபவர்கள் பற்றி சில நபிமொழிகளும் வந்திருக்கின்றன.
1- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்களைப் போன்று (பேச்சு, நடை, அசைவு) பாவனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று பாவனை செய்து கொள்ளும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். மேலும், அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள்.
நூல் : புகாரி (5886)
2- நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
நூல்: புகாரி (5885)
• இப்படிப்பட்டவர்களின் சூழலைப் புரிந்து கொண்டு அவர்களுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கி, முடியுமான வரை இது மிகப்பெரும் பாவமான காரியம் என புரிய வைத்து நல்வழிப்படுத்த வேண்டும். அதுவே மனநோய் (mental disorder) காரணமாக ஒருவர் எதிர் பாலின மாற்றத்தை வேண்டி நின்றால் அவருக்கான உளவியல் ஆலோசனைகளை வழங்கி நிபுணத்துவம் பெற்ற உளவியல் மருத்துவரை அடையாளம் காட்டிவிட வேண்டும்.
இமாம் நவவி (ரஹ்) இதுபற்றி கூறுகையில்
"பெண் சுபாவம் கொண்டவர்கள் (இவ்வாறான ஆண்களே அதிகம் காணப்படுகின்றனர்) இருவகைப்படுவர்.
1- இயற்கையில் (ஆணாக இருந்தாலும்) பெண்ணின் நளினத் தன்மையோடு படைக்கப்பட்டவர்கள். வேண்டுமென்றே பெண்ணின் சுபாவத்தை எடுத்துக் கொள்வதில்லை......!
2- இயற்கையாக அவ்வாறு படைக்கப்பட்டவர்கள் வேண்டுமென்றே பெண்ணின் சுபாவத்தை எடுத்துக் கொள்வர். இச்செயலை எச்சரித்து வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தும் இவர்களையே சாரும். முதல் வகையைச் சேர்ந்தவர்கள் ஹதீஸில் வந்த சபிக்கப்பட்டவர்கள் கிடையாது". எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஷர்ஹு முஸ்லிம் (14/337)
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) முதலாவது வகையினர் பற்றி கூறுகையில் "இமாம் நவவி போன்றோர் பொதுவாக இவர்களுக்கு (இயற்கையில் பெண் சுபாவம் கொண்டவர்கள்) எச்சரிக்கை சேராது என்று கூறியது, யாருக்கு சிகிச்சையின் பின்னரும் பெண் சுபாவத்தை விட முடியாதுள்ளதோ அவர்களுக்காகும். எப்பொழுது விட முடியும் என்று வருகிறதோ அவர்களும் எச்சரிக்கையில் நுழைந்து கொள்வர்.." எனக் குறிப்பிட்டுள்ளார்.
பத்ஹுல் பாரி (10/332)
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறிய முதல் வகையைச் சார்ந்தவர்கள் உருவாகக் காரணம், கருவிலேயே மூளையின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் என தற்கால நவீன மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் அதிகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய விடயம், பிள்ளைகளை வளர்க்கும் போது ஆணாக இருந்தால் பெண் பிள்ளையின் பழக்க வழக்கங்களையும், பெண்ணாக இருந்தால் ஆண்பிள்ளையின் பழக்க வழக்கங்களையும் விளையாட்டிற்கு கூட பழக்காமல் இருக்க வேண்டும், இவ்வாறான நகர்வுகள்,அவர்களது எதிர்பாலின மாற்ற உணர்வை தூண்டிவிட காரணமாக அமையலாம்.
ஆக என்னால் முடியுமான அளவு intersex, transsexuel சார்ந்த விடயங்களை அதிலிருக்கும் வேறுபாடுகளோடு முன்வைத்து மார்க்கத்தின் நிலைபாடுகள் மற்றும் வழிகாட்டல்களையும் எழுதியுள்ளேன்.
இதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அவை என்னைச் சாரும் அத்துடன் அவற்றை தெளிவுபடுத்தி தாராளமாக முன்வைக்கலாம்.
அல்லாஹ் நன்கறிந்தவன்.
ஆக்கம் ; Ahsan Ibnu Asman Muhajiri