அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான்

அல் அல்லாமா அஷ்ஷெய்க். ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் அவர்களின் வாழ்க்கை குறிப்பு! 

பெயரும் பிறப்பும்

அவர்களின் பெயர் ஸாலிஹ். தந்தை ஃபவ்ஸான் இப்னு அப்துல் லாஹ் ஆலு ஃபவ்ஸான். தவாஸிர் கோத்திரம். ஷமாசிய்யா ஊரைச் சேர்ந்தவர்கள். பிறப்பு ஹிஜ்ரீ 1354 (கி.பி.1933). [ஷெய்க் அவர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அறிஞர். அவர்களின் ஆயுளை அல்லாஹ் நீடிக்கச் செய்வானாக]

வளர்ப்பும் ஆரம்பக் கல்வியும்

சிறு வயதிலேயே தந்தை மரணம். குடும்பத்தார் வளர்த்தார்கள். பள்ளிவாசல் இமாம் ஒருவரிடம் குர்ஆன் ஓதவும், எழுதப் படிக்கவும் கற்றார்கள். குர்ஆன் ஓதலில் (கிராஅத்) திறமைவாய்ந்தவர் (காரீ) அந்த இமாம். பிற்காலத்தில் அவர் தரிய்யா நகரின் (ரியாழுக்கு அருகிலுள்ள தர்இய்யா அல்ல; கசீம் பகுதியில் உள்ள தரிய்யா) நீதிபதி பொறுப்பில் அமர்த்தப்பட்டார். அவர்தாம் ஷெய்க் ஹமூது இப்னு சுலைமான் அத்தலால் (رَحِمَهُ ٱللَّٰهُ)

ஷமாசிய்யாவில் ஹிஜ்ரீ1369 (கி.பி.1948)இல் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது. அதில் சேர்க்கப்பட்டார்கள் ஸாலிஹ். பிறகு ஹிஜ்ரீ1371 (1950)இல் புரைதாவிலுள்ள ஃபைசலிய்யா பள்ளியில் தொடக்கக்கல்வியை முடித்தார்கள். கொஞ்சக் காலம் மழலையர் பள்ளிக்கூடம் ஒன்றின் ஆசிரியராக பணிபுரிந்தார்கள். பிறகு புரைதாவில் இருந்த கல்வி நிறுவனத்தில், ஹி.1377 (1956)இல் பட்டப்படிப்பு முடித்தார்கள். பின்பு ஹி.1381 (1960) ரியாழிலுள்ள இமாம் முஹம்மது பல்கலைக் கழகத்தின் ஷரீஆ கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார்கள்.

மேற்படிப்பும் அவர்களின் கல்விப்பணியும்

ஃபிக்ஹ் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து, அதில் முனைவர் பட்டப் படிப்பையும் முடித்தார்கள். பிறகு ரியாழிலுள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் ஆசிரியர் பணி நியமனம் பெற்றார்கள். பின்பு ஷரீஆ கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்து, அங்கு உயர்கல்வித்துறையில், மார்க்க அடிப்படைகளை (உசூலுத்தீன்) போதிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார்கள்.

பிறகு ஹிஜ்ரீ 1396இல் உச்சநீதி மன்ற நீதித்துறையின் தலைமை இயக்குநராக பொறுப்பேற்று, பொறுப்புக் காலம் நிறைவடைய வரை அப்பணியைத் தொடர்ந்தார்கள்.

ஹிஜ்ரீ1407இல் மூத்த அறிஞர்கள் குழுவில் சேர்க்கப்பட்டார்கள். ஹிஜ்ரீ1411இல் சஊதி அரசின் இஸ்லாமிய ஆய்வு மற்றும் ஃபத்வா ஆணையத்தின் (லஜ்னா அத்தாயிமா) அறிஞர்கள் குழுவில் உறுப்பினராகப் பணியமர்த்தப்பட்டு, இன்று வரை அப்பொறுப்பில் உள்ளார்கள். இது தவிர,

மக்காவிலுள்ள ராபிதத்துல் ஆலமில் இஸ்லாம் அமைப்பின் அங்கமாகவுள்ள ஃபிக்ஹ் கமிட்டியின் உறுப்பினர்,

ஹஜ்ஜுக்காலத்தில் இஸ்லாமிய வழிகாட்டல்களைப் போதிக் கும் அழைப்பாளர்கள் குழுவின் மேற்பார்வையாளர்,

. தற்போது ரியாழிலுள்ள மல்ஸர் பகுதியின் இளவரசர் முத்இப் இப்னு அப்துல் அஸீஸ் மஸ்ஜிதின் இமாம், கதீப், ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் இருக்கிறார்கள். மேலும்,

சஊதிவானொலியின் நூர் அலத்தர்ப் (பாதையின்மீது வெளிச்சம்) நிகழ்ச்சியில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள்.

கல்வி சார்ந்த பத்திரிகைகளில் வெளிவரும் ஆய்வுகள், கடிதங்கள், மார்க்கத் தீர்ப்புகளை மேற்பார்வை செய்யும் குழுவிலும் அங்கம் வகிக்கிறார்கள்.

ஆய்வேடுகளைச் சமர்ப்பிக்கும் மாணவர்களின் முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை மேற்பார்வை செய்பவர்களா கவும் இருக்கிறார்கள்.

அவர்களின் சொற்பொழிவுகள், வகுப்புகளில் கலந்துகொண்டு அறிஞர்களும் மாணவர்களும் பெரும்பலனை அடைகிறார்கள்.

அவர்களின் ஆசிரியப் பெருந்தகைகள்

அவர்களின் ஆசிரியர்களில் மிக முக்கியமானவர், பிரபலமானவர் இமாம் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ்(رَحِمَهُ ٱللَّٰهُ)  . நமது ஷெய்க் ஸாலிஹின் கல்வித்திறனைப் பாராட்டுபவர்களாக, மிக முக்கிய விசயங்களில் அவர்களிடம் கருத்துக் கேட்பவர்களாக இப்னு பாஸ் இருந்தார்கள். சில புத்தகங்களை மதிப்புரைக்காக அனுப்பியும் வைப்பார்கள்.

இன்னொரு ஆசிரியர் ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஹுமைது (رَحِمَهُ ٱللَّٰهُ) புரைதாவில் ஷெய்க் ஸாலிஹ் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அங்குள்ள பெரிய பள்ளிவாசலில் இமாமாக இருந்தார் இப்னு ஹுமைது. அவர்களின் வகுப்புகளில் தவறாமல் கலந்துகொள்வார்கள் ஸாலிஹ். இவர்கள் அல்லாமல், இன்னும்

ஷெய்க் முஹம்மது அல்அமீன் அஷ்ஷன்கீத்தீ (رَحِمَهُ ٱللَّٰهُ) ஷெய்க் அப்துர் ரஸ்ஸாக் அல்அஃபீஃபீ (رَحِمَهُ ٱللَّٰهُ),

ஷெய்க் ஸாலிஹ் இப்னு அப்துற் றஹ்மான் அஸ்ஸுகைத்தீ ஷெய்க் ஸாலிஹ் இப்னு இப்றாஹீம் அல்புலை(رَحِمَهُ ٱللَّٰهُ)

ஷெய்க் முஹம்மது இப்னு சுபையல்

ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு ஸாலிஹ் அல்குலைஃபீ

ஷெய்க் இப்றாஹீம் இப்னு உபைது அல்அப்த் அல்முஹ்சின் ஷெய்க் ஸாலிஹ் அல்அலீ அந்நாசிர்

இவர்களிடமும் எகிப்திலுள்ள அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் அறிஞர்களில் ஹதீஸ், தஃப்சீர் மற்றும் அறபுமொழி துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடமும் சென்று கற்றார்கள்.

அவர்கள் எழுதிய புத்தகங்கள்

ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார்கள். அவற்றில் பிரபலமானவை:

1. அத்தஹ்கீகாத் அல்மர்திய்யா ( I) - வாரிசுரிமைச் சட்டங்கள் குறித்த முதுகலை ஆய்வேடு

2. அஹ்காம் அல்அத்இமா ஃபீ அஷ்ஷரீஆ அல்இஸ்லாமியா - இஸ்லாமிய மார்க்கத்தில் உணவுகள் குறித்த சட்டங்கள் எனும் முனைவர் ஆய்வேடு

3. அல்இர்ஷாத் இலா ஸஹீஹ் அல்இஃதிகாத் - சரியான நம்பிக்கைக்கான நேர்வழி

4. ஷரஹ் அல்அகீதா அல்வாசித்தியா - இப்னு தைமிய்யாவின் அல்அகீதா அல்வாசித்தியா விரிவுரை

5. அல்பயான் ஃபீமா அக்தஃஃபீஹி ஃபஅள் அல்குத்தாப்  - எழுத்தாளர்கள் சிலரின் தவறுகள் குறித்த விளக்கம்

6. அல்முலக்கஸ் அல்ஃபிக்ஹீ  - ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்த சுருக்கமான விளக்கங்கள்

7. மஜ்மூஆ முஹாளராத் ஃபீல் அகீதா வத்தஅவா - அகீதா, தஅவா குறித்த உரை தொகுப்பு

8. மின் அஃலாமில் முஜ்ஜத்திதீன் ஃபில் இஸ்லாம்  - இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்கள் குறித்து

9. அல்முலக்கஸ் ஃபீ ஷரஹ் கிதாப் அத்தவ்ஹீது  - ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் எழுதிய கிதாப் அத்தவ்ஹீதுக்கு விரிவுரை

10. ஷரஹ் மசாஇலுல் ஜாஹிலிய்யா - ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் இ எழுதிய அறியாமைக் கால வழக்கங்கள் நூலின் விரிவுரை

11. ஷரஹ் லும்அத்துல் இஃதிகாத்  இமாம் இப்னு குதாமா அகீதா நூல் விரிவுரை

12.ஷரஹ் அல்கவாஇத் அல்அர்பஆ  - ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் எழுதிய நான்கு சட்டங்கள் நூல் விரிவுரை

13. நக்த் கிதாப் அல்ஹலால் வல்ஹறாம் ஃபில் இஸ்லாம்  - யூசுஃப் கர்ளாவீயின் இஸ்லாமில் ஹலால் ஹறாம். குறித்த சட்ட நூலுக்கு மறுப்பு

14. அல்அஜ்விபத் அல்முஃபீதா அன்அஸ்இலத்தில் மனாஹிஜ்ஜில் ஜதீதா  - புதுமையான கொள்கைகள் குறித்த கேள்விகளுக்குப் பயனுள்ள பதில்கள்

15. துரூஸ் மினல் குர்ஆனில் கரீம் - கண்ணியமிகு குர்ஆன் பாடங்கள்

16. பயான் மா யஃப்அலுஹு அல்ஹஜ்ஜு வல்முஅதமிர் - ஹஜ்ஜிலும் உம்றாவிலும் ஒருவர் செய்ய வேண்டியவை குறித்த விளக்கம்

17. இத்திஹாஃப் அஹ்லில் ஈமான் பிதுரூஸ் ஷஹ்ரி றமளான்  - றமளான் மாதம் குறித்து ஈமான்தாரிகள் பெற வேண்டிய பாடங்கள்

18. அகீதத்துத் தவ்ஹீது  - தவ்ஹீது குறித்த நம்பிக்கை

இவையும் இன்னும் பல நூல்களும் எழுதியுள்ளார்கள். அவர்களின் எழுத்துகளும் பேச்சுகளும் புதிய தலைமுறைக்கு வழிகாட்டுபவை. குழப்பங்களுக்குத் தெளிவு தருபவை. வழிகேடர்களையும் வழிகேடான கொள்கைகளையும் அம்பலப்படுத்துபவை. அறபுச் செய்தித்தாள் ஒன்றுக்கு அவர்கள் அளித்த பேட்டியைக் கவனியுங் கள்: 'என்னை அறிஞர்களில் ஒருவனாக நான் கருதமாட்டேன். இப்போதும் நான் கல்வி தேடும் மாணவன்தான்; ஆரம்ப நிலையில் உள்ளவன்தான். என் இரட்சகனிடம், 'என் இரட்சகா! என் கல்வி ஞானத்தை அதிகப்படுத்து' என்று பிரார்த்திக்கிறேன். 'எவன் தன்னை அறிஞன் என்கிறானோ, அவன்தான் மூடன்' என்று எல்லாரும் அறிந்த ஞானமிக்க வாசகம் ஒன்று உண்டு. என்னை அறிஞன் என்று சொல்லிக்கொள்வதை விட்டு நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். 

【குறிப்புகள் உதவி: ஷெய்க் ஜமால் இப்னு ஃபுரைஹான் அல்ஹாரிஸீ அவர்கள் ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸானின் அல்அஜ்விபாத் அல்முஃபீதா நூலின் ஆசிரியர் அறிமுகத்தில் தொகுத்துள்ளவை.】
Previous Post Next Post